திங்கள்மேல் காட்டியே தித்திக்கச் சோற்றினில்
தேன்கொஞ்சம் ஊற்றியன்பைச்
… சேர்த்தென்றன் தாய்தரும் சேய்மைக்குள் இன்புறும்
… சேய்நெஞ்சம் வேண்டுமென்பேன்
செங்குன்றின் மேலொரு தீப்பந்தம் போலெழும்
சீர்வண்ணச் சூரியன்றன்
… செவ்வண்ணஞ் சேர்கடற் செந்நீர்கண் டின்புறச்
… சேய்நெஞ்சம் வேண்டுமென்பேன்
தெங்கங்காய் சீவிநீள் கோல்சேர்த்துச் செய்தொரு
தேய்வண்டி வீதியோட்டிச்
… செல்கின்ற போதினிற் சிந்திக்கா தின்புறும்
… சேய்நெஞ்சம் வேண்டுமென்பேன்
சங்கொன்றில் நீரினைக் கொண்டூத வாய்வழிச்
சத்தங்கள் கொப்பளிக்கச்
… சாமத்தின் தேரைவாய்ச் சந்தத்தில் இன்புறும்
… சேய்நெஞ்சம் வேண்டுமென்பேன்

 

தென்றல்கண் டாடிடும் தொய்ந்துப்பின் ஏறிடும்
செவ்வானின் கண்கயல்போல்
… செல்லுங்காற் றாடியின் நூல்பற்றி இன்புறும்
… சேய்நெஞ்சம் வேண்டுமென்பேன்
தென்னம்பூ வீழ்ந்திட தோட்டத்தின் வேலியைச்
சேர்ந்தோங்கும் மாமரத்தின்
… சில்லென்ற நீழலில் தீயிலிட் டின்புறும்
… சேய்நெஞ்சம் வேண்டுமென்பேன்
தென்மாட வீதியில் சேர்ந்தாட மாமயில்
சென்றீந்த தோகையொன்றின்
… சேய்வேண்டி புத்தகத் தேயிட்டுக் காத்திடும்
… சேய்நெஞ்சம் வேண்டுமென்பேன்
தின்கின்ற போதெலாம் தன்பங்கி லேதுளி
தெய்வத்தின் பாகமென்றே
… தின்னாமல் பிள்ளையார் சீர்பாதம் சேர்த்திடும்
… சேய்நெஞ்சம் வேண்டுமென்பேன்

 

செக்கொன்றைச் சுற்றிடும் செங்காளை மாடெனச்
செல்வண்டிச் சக்கரத்தைத்
… தேய்த்துந்திச் சுற்றியே தோட்டத்தில் இன்புறும்
… சேய்நெஞ்சம் வேண்டுமென்பேன்
திக்கெங்கும் பார்வையில் சட்டென்று தோன்றிடச்
சென்றென்றன் தந்தையின்தோள்
… தொட்டென்னைத் தூக்கிடச் செய்தின்பம் கண்டிடும்
… சேய்நெஞ்சம் வேண்டுமென்பேன்
துக்கங்கள் சேர்ந்துளம் துன்புற்ற போதெலாம்
தூக்கித்தன் தோளமர்த்தும்
… தூய்நெஞ்சத் தாயவள் தோயன்பில் இன்புறும்
… சேய்நெஞ்சம் வேண்டுமென்பேன்
சிக்கல்கள் ஆயிரம் சேர்ந்தென்னைத் தாக்கியும்
சேதங்கள் யாவினையும்
… சீர்செய்யும் சற்குரு சேய்மைக்குள் இன்புறச்
… சேய்நெஞ்சம் வேண்டுமென்பேன்

 

முட்டுங்கள் வாழ்வெலாம் முன்செல்ல என்றெனை
முட்டித்தான் முன்னெழுந்தே
… முன்னேறும் என்மகள் கால்பற்றி இன்புறும்
… சேய்நெஞ்சம் வேண்டுமென்பேன்
பட்டங்கள் பெற்றுமென் பல்லக்கில் வந்துமென்
பாரெங்கும் சென்றுமென்ன
… பாசத்தைப் பிள்ளைகள் பாற்கொட்டி இன்புறும்
… சேய்நெஞ்சம் வேண்டுமென்பேன்
திட்டங்கள் தீட்டியென் செல்வத்தைத் தேடியென்
தேடற்கண் தேய்வதற்கோ
… சின்னப்பெண் வாயெழும் தேன்சொல்லி லின்புறச்
… சேய்நெஞ்சம் வேண்டுமென்பேன்
கட்டங்கள் வென்றுமென் கைவிட்டுப் போயுமென்
காலத்தின் வீதியெங்கும்
… கால்தத்தும் என்மகள் கால்பற்றி இன்புறும்
… சேய்நெஞ்சே வேண்டுமென்பேன்

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *