மார்கழி மலர்கள் – சிரித்து வாழ்வேன்!
இசைக்கவி ரமணன்
நம்புவோர்க்கு விளக்கங்கள் தேவையில்லை
நம்பார்க்கு விளக்கத்தால் பயனே இல்லை
அன்பிருந்தால் ஐயங்கள் வாழ்வதில்லை
அன்பிலையம் சேர்ந்துவிட்டால் வாழ்வே இல்லை
தும்பியெலாம் தேவாரம் பாடிக் கொண்டு
துள்ளிவரும் மயிலைவளர் தூய அன்பே!
நம்பியுன்னை நாடிவந்தேன் ! நீயும் என்னை
நம்புகின்றாய் என்றுநன்கு நம்பி வாழ்வேன்!
பொங்குவதும் மங்குவதும் நெஞ்சியல்பு
பூரணனே! காத்தருளல் நின்னியல்பு
தங்காமல் பறப்பதுதான் வாழ்வியல்பு
தாள்பொருந்தித் தங்கிடவே தழைத்த வாய்ப்பு
எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருந்தும்
என்னைக்கரை சேர்க்கின்ற கருணையாலே
பொங்குகடல் ஓரத்தே புடைத்திருக்கும்
பூரிப்பே! உன்னடியே பொருந்திக் கொண்டேன்!
மந்தைவெளி அடுத்திருக்கும் மயிலாப்பூரில்
மயில்நாணும் ஒயிலோடு மலர்ந்திருக்கும்
சிந்தைவளர் கற்பகத்தின் சிரிப்பைக் கண்டு
சிலிர்த்திருக்கும் காபாலி! சிரத்தைத் தாழ்த்தி
வந்தனைகள் பலவிதமாய் வாழ்த்துகின்றேன்
வாழ்வெல்லாம் நீயென்றே வாழுகின்றேன்
தந்திக்கும் கந்தனுக்கும் தந்தையான
தான் தோன்றி! நீயே என் தலைவனென்பேன்!
சிவன்மகனைக் கவலைகள் சீந்தலாமோ?
சீயென்றே இகழ்ந்தென்ன? புகழ்ந்தாலென்ன?
சிவனே! உன் சித்தமென்றே சிரிக்க வேண்டும்
சிரம்தாழ்த்தி நன்றிசொல்லி வாழ்த்த வேண்டும்
தவமுனிவோர் மிகவுவந்து தங்கி வாழும்
தமிழோங்கும் நன்மயிலை தழைக்கும் கோவே
அவன்சொன்னான் இவள்சொன்னாள் என்றில்லாமல்
சிவன்சொன்னான் என்றுசெல்வேன் தெருவினூடே!
கல்வியெதும் ஒருதுளியும் கற்கவில்லை
கடுகளவும் கையிலொரு திறமையில்லை
நல்லழகு முகமுமில்லை ; செல்வமில்லை
நல்லவர்கள் மெச்சுமெந்த நலமுமில்லை
பல்விதமாய் உனைப்பாடும் சொல்லும், கொஞ்சும்
பசுமழலை நெஞ்சுமல்லால் பாவி எனக்கு
வல்லவனே! நீயேதும் வழங்கவில்லை
வழங்கியதை வழங்கிவிட்டே வருவேன் ஐயே!
ஊர்புகழும் ; பார்புகழும் ; உள்வீட்டுக்குள்
உற்றவர்கள் நமைக்காறி உமிழக் கூடும்
தேர்நடந்து தேர்நடந்து தெரு நொறுங்கிப்
போனாலும் தெருவுக்கோர் போக்கும் உண்டோ!
சீர்குலவும் மயிலையிலே சிந்தை யெங்கும்
சிறகடிக்கும் பரஞானக் குயிலே! உன்றன்
சீரடியின் ஓரடிக்கீழ் சிரசே ஒற்றைச்
சிறுதெருவாய் விரித்தபடிச் சிரித்து வாழ்வேன்!
ரமணன்
23.12.2014 / செவ்வாய் /9.40