கிரேசி மோகன்
சொந்தப்பாக்(கு) ஆரணம் தந்தப்பா தென்பழனி
கந்தப்பா சோணை கிரிநாதர் -சந்தப்பா ,
அப்பப்பா போதும் அகந்தையின் ஆர்பாட்டம்;
எப்பப்பா ஞானம் எமக்கு”….கிரேசி மோகன்….
ஆரணம் -வேதம்….
கிரேசி மோகன்
சொந்தப்பாக்(கு) ஆரணம் தந்தப்பா தென்பழனி
கந்தப்பா சோணை கிரிநாதர் -சந்தப்பா ,
அப்பப்பா போதும் அகந்தையின் ஆர்பாட்டம்;
எப்பப்பா ஞானம் எமக்கு”….கிரேசி மோகன்….
ஆரணம் -வேதம்….
இசைக்கவி ரமணன்
[mixcloud]http://www.mixcloud.com/Vallamai/%E0%AE%92%E0%AE%B0-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE/[/mixcloud]
ஒருமனம் உன்னைப் பாடும்
ஒருமனம் உலகை நாடும்
இருமனம் என்னும் அவலம்
என்று தீரும்?
என்று தீரும்?
திருவளர் மயிலைக் குடிலில்
தினம் வளர் அழகே தேனே
கருவளர் முன்பே உன்னைக்
கண்டும் மறந்தேனே (ஒருமனம்)
ஒன்றும் அறியாத கன்று
ஊரெங்கும் தாயைத் தேடும்
நின்று யாரைக் கேட்கும்?
நெஞ்செலாம் துன்பம் தாக்கும்
கன்றும் தாயைப் பிரிந்தால்
தாயும் மறந்திடப் போமோ?
இன்றும் வருவாய் என்றே
என்றும் உருகி நின்றேனே! (ஒருமனம்)
19.12.2014 / வெள்ளி / கபாலீஸ்வரர் கோயிலில் / காலை 10.30?
-கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
சாதி மத பேத மின்றி
சரி சமமாய் மனிதர் நாம்
மேதினியில் ஒரு குடியாய் 
மிடுக்காய் நிமிர்ந்து வாழ்வோம்….!
சிறிய குருவிக் கூட்டமெல்லாம்
சேர்ந்து இனிதே வாழ்கையில்
அறிவிற் சிறந்த மனிதர் நாமும்
அழிவுப் பாதை செல்வதா….?
உலகில் வாழும் மனிதர்க்கெல்லாம்
ஓடும் குருதி ஒரே நிறம்
கழகம் பண்ணிக் கடிந்து வாழ்தல்
காட்டு விலங்கின் இழி குணம்…..!
பிறப்பில் மனிதர் எவருமிங்கு
பெரிது சிறிது இல்லையே
சிறக்கும் வாழ்வில் செயலில் நேசச்
சிந்தையாலே உயருவார்….!
பலிகள் செய்து பாவியாகப்
பாரில் வாழ்வோர் சிறியவர்
தெளிந்த அறிவு அன்பினோடு
சேர்ந்து இனிது வாழுவோம்……!
-எம். ஜெயராம சர்மா – மெல்பேண்
நெஞ்சுவலி என்று சொல்லி
நீர் கேட்டு அருந்தியவர்
அரை நிமிடம் பேசிவிட்டு
அப்படியே தூங்கி விட்டார்!
தூங்கியவர் எழும்ப வில்லை
துக்கத்தைக் கொடுத்து விட்டு
ஏங்கி நின்று அழுதிடவே
எமனுலகை சென் றடைந்தார்!
தாயோடு பிள்ளைகளும்
தலைதலையாய் அடித்திட்டு
சஞ்சலமாம் கடலினுள்ளே
தாம் மூழ்கிக் கிடந்தனரே!
மூத்தபிள்ளை மணியாக
குடும்பத்தில் இருந்தமையால்
முழுப்பேரும் மணியினையே
முதலாகக் கொண்டுநின்றார்!
தந்தையில்லாக் குடும்பமதில்
தங்கைமார் ஐவருடன்
தாயுமே சேர்ந்து அவன்
தயவினையே பார்த்திருந்தார்!
மணிகுடும்ப நிலைகண்டு
மாதவனும் மனமிரங்கி
மருந்துக் கடைதன்னில்
மணிக்கு வேலைகொடுத்தனனே!
மணிவீட்டில் யாவருமே
வயிராற உண்பதற்கு
மருந்துக் கடைவேலை
மாமருந்தாய் ஆகியதே!
மணியனது வேலைகண்டு
மலைத்து நின்ற மாதவனும்
மானேஜர் பதவியிலே
மணியையுமே அமர்த்தினரே!
மணியறிவு மணியழகு
மாதவனைக் கவர்ந்தமையால்
மாப்பிள்ளை ஆக்கிவிட்டான்
மணிதன்னை மாதவனும்!
மணியினது மனத்தினிலே
பணத்தாசை பிடித்ததனால்
மனம்போன போக்கினிலே
பணம்பண்ணத் தொடங்கிவிட்டான்!
மருந்துக்கடை இப்போது
மணிவசத்தில் வந்தமையால்
கலப்படத்தைக் கையாண்டு
காசுழைக்கத் தொடங்கிவிட்டான்!
காசுவந்த காரணத்தால்
கடவுளையே மறந்தான்
கஷ்டப்பட்டு வந்ததையும்
கவனத்தில் கொள்ளவில்லை!
கலப்பட மருந்தினாலே
கணக்கின்றி நுடங்கிவிட்டு
கவலைப்பட்டு நிற்போரை
கருத்திலும் கொள்ளவில்லை!
நாட்பட்ட மருந்தையெல்லாம்
நல்லமருந்த தோடிணைத்து
மேல்பட்ட விலைக்குவிற்று
விரைவாகப் பணம்சேர்த்தான்!
பப்பாளிவிதை தன்னை
பக்குவமாய் பதப்படுத்தி
மிளகோடு சேர்த்துஅவன்
வெகுலாபம் ஈட்டிநின்றான்!
நாட்பட்ட பால்மாவை
நல்லமாவுடன் கலந்து
நம்பவைத்து எல்லோர்க்கும்
நயமாக விற்றுவந்தான்!
பணம்பணமாய் அவன்குவித்தான்
பண்பையவன் இழந்துநின்றான்
பத்துமாதம் சுமந்ததாய்
பதைபதைத்து நின்றிருந்தாள்!
பெண்கொடுத்த மாதவனும்
பித்துப்பிடித்து நின்றான்
கைபிடித்த மனையாளும்
கதிகலங்கி அங்குநின்றாள்!
காசுகாசாய் உழைத்தவனின்
கண்களிலே வியாதிவந்து
ஏறாதபடி இடமெல்லாம்
இறைத்தானே காசையெல்லாம்
சத்திரசிகிச்சை செய்தால்
சரியாக வருமென்றெண்ணி
முத்திரைபதித்த டாக்டர்
மூலமாய் செய்துநின்றான்!
சிகிச்சையின் போதுஅங்கு
கொடுத்திட்ட மருந்துயாவும்
சிக்கலை உண்டுபண்ணி
சிதைத்ததே வாழ்வுதன்னை
காசுழைத்தை மணிகண்கள்
காட்சிகாண மறுத்ததனால்
காசுகளை மணிகண்கள்
காணவே முடியவில்லை!
முத்திரை பதித்தடாக்டர்
மூச்சுவிடும் இடத்திலெல்லாம்
மணியினது கலப்படமே
மலிந்துமே இருந்ததுவே!
கலப்படத்தை கைக்கொண்ட
மணியினது மருந்திப்போ
கலப்பட மன்னனது
கண்களையே கலக்கியது!
மணியினது குடும்பத்தார்
மனம்நொந்து டாக்டரிடம்
மணிபார்வை வருவதற்கு
வழியுண்டா எனக்கேட்டார்!
கலப்பட மருந்தெல்லாம்
கண்டபடி உலவுவதால்
சிகிச்சையின் போதுஅது
சிக்காலாய் போச்சுயிங்கே!
இப்படி மருந்துவிற்கும்
எளியவரின் கூட்டத்தை
இறக்கும்வரை தூக்கிலிட
வேண்டுமென்றார் டாக்டருமே!
வீட்டிற்கு வந்தவுடன்
விவரத்தைச் சொன்னார்கள்
மெளனமாய் அவனிருந்தான்
மனமங்கே அழுததுவே!
கலப்படத்தால் கண்ணிழந்தோர்
காதிழந்தோர் எத்தனைபேர்
கலப்படத்தால் காலனிடம்
கட்டுண்டார் எத்தனைபேர்!
நாளாந்தம் கலப்படங்கள்
நாட்டில் உலாவருவதற்கு
நல்லதொரு பாடத்தை
நானறிந்தேன் எனநினைந்தான்!
மணிபோல எத்தனைபேர்
அணிவகுத்து நிற்கின்றார்
இனிமேலும்பொறுக்காமல்
எதிர்த்திடுவோம் கலப்படத்தை!
-சி. ஜெயபாரதன், கனடா
புத்தம் புதிய கலைகள், பஞ்சப்
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;
மெத்த வளருது மேற்கே, அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை! …
சொல்லவும் கூடுவ தில்லை! அவை
சொல்லும் திறமை தமிழ்மொழிக் கில்லை! ….
என்றந்தப் பேதை உரைத்தான், ஆ!
இந்த வசையெனக் கெய்திட லாமோ ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச்
செல்வங்கள் யாவும் கொண்ர்ந் திங்கு சேர்ப்பீர்!
மகாகவி பாரதியார் (தமிழ்த் தாய்)
தலைமுறை ஒரு கோடி கண்ட, என்
தமிழ் விடுதலை ஆகட்டும்! ….
தேனால் செய்த என் செந்தமிழ்தான்
திக்கெட்டுமே தொழ நிற்கட்டும்!
பாரதிதாசன் (தமிழ் விடுதலை ஆகட்டும்)
மின்னல் வேகத்தில் மாறும் விஞ்ஞானத் துறைகள்
உலகிலே தற்போது தூய ஆங்கிலம் மொழி, தூய பிரெஞ்ச் மொழி, தூய ஜெர்மன் மொழி என்பவை இல்லாதது போல், தூய தமிழ்மொழி உலகில் எங்கும் நிலவி வருவதாக எனக்குத் தெரியவில்லை! 5000 ஆண்டுகளாகக் கால வெள்ளம் அடித்து, அடித்துத் தமிழ் உள்பட அனைத்து மொழிகளும் வடிவமும் கூர்மையும் மழுங்கிப் போய், கூழாங் கற்களாய் உருண்டு திரண்டு மாறிக் கொண்டிருக்கின்றன. இருபதாம் நூற்றாண்டு முதல் மின்னல் அடிப்பது போல் விஞ்ஞானம், பொறியியல், மருத்துவம், கணிதம் ஆகியவை விரைவாக முன்னேறிச் சமூக நாகரீகம், கலாசாரம் எல்லாம் மாறிவந்த சமயத்தில், அவற்றை வரலாறாய் ஏந்திச் செல்லும் மொழி வாகனங்களும் வடிவம் வேறுபடுதை யாராலும் தடுக்க முடியாது. மாறுபாடுகளுக்கு ஏற்றபடித் தமிழ்மொழி வளைந்து கொடுத்து மாந்தருக்குப் புரியும்படி உடனுக்குடன் அந்த விஞ்ஞானப் பொறியில், மருத்துவ முன்னேற்றங்களைத் தெரிவிக்க வேண்டும்.
தமிழ் மொழி ஒரு கருவி. கருத்துக்களை ஏந்திச் சென்று பரிமாறும் ஒரு வாகனம். மாறும் உலகத்துக்கு ஏற்ப, படைக்கும் விஞ்ஞானத்துக்கு உகந்தபடித் தமிழ் மாற வேண்டுமே தவிர, தமிழுக்கு ஏற்றபடி கருத்தோ, விஞ்ஞானமோ மாற முடியாது ! அப்பணிகளுக்குப் பயன்படுத்தத் தமிழ்மொழியில் தகுதியான மாற்றங்கள் தமிழ் வல்லுநர் செய்ய முயல வேண்டும். அவ்விதம் ஏற்படும் மாறுபாடுகளைத் தமிழ் உலக மக்கள் உவப்புடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்! அவற்றைத் தமிழ் நிபுணர்கள் தமிழர் புரியும்படி அறிவிக்க வில்லையானால், தமிழில் விஞ்ஞான வளர்ச்சி குன்றிப்போய், நாளடைவில் தமிழ் பிற்போக்கு மொழியாகிவிடும். உலக மொழிகளைப் போல, மற்ற இந்திய மொழிகளைப் போல தமிழில் Sa(ஸ), Sha(ஷ), Ja(ஜ), Ha(ஹ), Ga( ?), Da( ?), Ba( ?), Dha( ?) போன்ற மெல்லோசை எழுத்துக்களைத் தமிழ்மொழியில் தமிழர் எழுதும் உரிமையை அனுமதித்துப் புதிய சொற்களை ஆக்கும் முறைகளுக்கு வழி வகுக்க வேண்டும். அந்த மாற்றத்தைத் தூய தமிழர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
தூய தமிழரும், தூய தமிழும்
ஹ, ஸ, ஷ, ஜ போன்ற கிரந்த எழுத்துக்கள் கொண்ட சொற்கள் கலப்படம் இல்லாத தூய தமிழில் விஞ்ஞானப் பொறியியற் துறைகளை விளக்குவது மிகக் கடினமானது. அந்த கிரந்த எழுத்துக்களைக் கலந்து எழுதினால் ‘தூய தமிழர் ‘ எனப்படும் ஒரு சாரார் அதை வெறுக்கிறார். அவற்றை அறவே புறக்கணிக்கிறார். ‘தூய தமிழர் ‘ என்று குறிப்பிடப் படுவோர் யார் என்பதை நான் முதலில் விளக்கியாக வேண்டும். கட்டுரையில் நான் சுட்டிக் காட்டும் ‘தூய தமிழர் ‘ என்பவர், நூறு சதவீதத் தூய தமிழை உரையாடியும், அனுதினம் எழுதியும், படைப்புக் காவிங்களில் அவற்றைத் துருவிக் கண்டுபிடித்து ஆதரித்தும் வருபவர்! கலப்படமற்ற தூய தமிழைக் கவிதை, கட்டுரை, கதை ஆகியவற்றில் பயன்படுத்தி வருபவர். தூய தமிழில் எழுதுவது தவறு என்பது எனது வாதமன்று! தூய தமிழில் மட்டும்தான் எழுத வேண்டும் என்பது தவறு! அதாவது திசை எழுத்துக்களான ஹ, ஸ, ஷ, ஜ, ஸ்ரீ ஆகியவற்றை அறவே புறக்கணிப்பது தமிழின் திறமையைக் குன்றச் செய்துவிடும். கலப்படமற்ற தூய தமிழைப் பேசுவோர் எங்கே வாழ்கிறார் ? கலப்படமற்ற தூய தமிழில் அனைத்தையும் எழுதி வருபவர் எத்துறையில் பணி செய்து வருகிறார் ?
அன்னியர் படையெடுப்புக்கு முன்பு தமிழ் பிறந்த மண்ணிலே ஒரு காலத்தில் தூய தமிழர் வாழ்ந்ததை நாம் நம்பலாம். அதுபோல எழுத்து வடிவங்கள் உண்டான ஆதி காலத்தில் தூய தமிழ்ச் சொற்களைத் தூய தமிழர் பேசியிருக்கலாம்! திசைச் சொற்கள் எதுவும் கலப்படம் ஆகாத தூய தமிழ்ச் சொற்கள் ஒரு காலத்தில் வழக்கில் நடமாடி வந்திருக்கலாம். ஆனால் ஆரியர் புகுந்த பிறகு, மற்ற பாரத மொழிகளில் பின்னிக் கொண்ட ஆரியம் தமிழிலும் கலந்ததை நாம் யாரும் தடுக்க முடியவில்லை. முகலாயர் படையெடுப்புக்குப் பிறகு உருதுச் சொற்கள் பாரத மொழிகளில் கலந்தன. அதுபோல் ஆங்கிலேயர் புகுந்த பிறகு ஆங்கிலச் சொற்கள் அநேகம், தமிழ் உள்பட பாரத மொழிகளில் பின்னிக் கொண்டன.
2500 ஆண்டுகளுக்கு முன்பு தலைச் சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்று முச்சங்கம் வைத்துத் தமிழ் மன்னர்கள் சங்கப் புலவர்கள் ஆதரவில் தமிழ் மொழி வளர்த்ததை நாம் அறிவோம். சங்கம் என்பதே தமிழ்ச் சொல்லன்று! அப்படியென்றால் சங்க காலத்திலிருந்தே தமிழ்மொழியில் கலப்படம் சேர்ந்து விட்டது என்று வைத்துக் கொள்ளலாம்! நாம் தினமும் பயன்படுத்தும் பொருட்கள், வாகனங்கள், உரையாடிப் பழகும் மாந்தர்கள், புரியும் பணிகள், வணிகத் துறைகள், படிக்கும் பள்ளிக் கல்லூரி நூல்கள் அனைத்திலும் எத்தனை தூய தமிழ்ச் சொற்கள் உள்ளன என்று சற்று சிந்தித்துப் பாருங்கள், தூய தமிழர்களே! பிரெட், பட்டர், ஜாம், பவுடர், பஸ், ரயில், டிரெயின், காலேஜ், அல்ஜீப்ரா, ஜியாமெட்ரி, கால்குலஸ், ஷேக்ஸ்பியர், பெர்னாட்ஷா, சூரியன், சந்திரன், பூமி, ஆகாயம், அக்கினி, சக்தி, இதயம், முகம் போன்ற அனுதினச் சொற்கள் எல்லாம் தூய தமிழ்ச் சொற்கள் அல்ல!
தூய தமிழில் என் பெயரை எழுதிய தூய தமிழர்!
நண்பர் கிரிதரன் நடத்திவரும் பதிவுகள் என்னும் அகிலவலை மின்னிதழில் நண்பர் திரு நாக. இளங்கோவன் எழுதிய தனது எதிர்மறைக் கட்டுரையில் என் பெயரைச் செயபாரதன் என்று தூய தமிழில் எழுதினார்! என் பெயரைச் சிதைவு செய்து தூய தமிழில் எழுதியதாக இளங்கோவன் நினைத்துக் கொண்டார்! அது அவரது எழுத்துரிமை என்று கருதி அவரோடு வழக்காடாது அவரை விட்டு விடுகிறேன்! வங்காளிகள் வகரத்தைப் பகரமாக எழுதுவார்கள்! வங்காள நாடு, பெங்கால் என்று அழைக்கப் படுகிறது. வங்காள தேசம், பங்களா தேசமாகியது. வங்காளி ஒருவர் திரு இளங்கோவன் பெயரை ‘இளங்கோபன் ‘ என்று எழுதினால், அவருக்குக் கோபம் வருமா அல்லது சிரிப்பு வருமா என்பது எனக்குத் தெரியாது. அவரது பெயரை இலங்கோவன் என்று நான் எழுதினால் அவர் சகித்துக் கொள்வாரா ? நண்பர் இளங்கோவன் போன்ற தூய தமிழர்கள் காஷ்மீர், ஆஸ்திரேலியா, ஆஸ்டிரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, யுகோஸ்லாவியா, ஹங்கேரி, கிரீஸ், ஹாங்ஹாங், மிஸ்ஸிஸிப்பி, மிஸ்ஸெளரி, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், ராஜஸ்தான், ஹிந்துகுஷ், பலுஜிஸ்தான், ஸ்காட்லாந்து, ஜப்பான், இஸ்லாம், பாஸ்கரன், புஷ்பா, குஷ்பூ, ஷைலஜா, கஸ்தூரி, சரஸ்வதி, ஸ்டாலின், ஸ்டிரான்சியம், ஸ்புட்னிக், ஸ்டீஃபென் ஹாக்கிங், ஃபாஸ்ஃபரஸ், ஜியார்ஜ் புஷ், ஷேக்ஸ்பியர், வஷிஸ்டர் போன்ற பெயர்களை எப்படித் தனித் தமிழில் எழுதுவார் என்று காட்டினால், நானும் கற்றுக் கொள்வேன். அதுவரை என் பெயரை என் தந்தை எனக்கு வைத்தபடி ஜெயபாரதன் என்று தூய தமிழர் எழுதினால் பூரிப்படைவேன். விடுதலை இந்தியாவில் அல்லது வெளி நாடுகளில் பிறந்த தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயர்தான் வைக்க வேண்டுமென்று யாரும் கட்டளையிட உரிமையில்லை.
தமிழில் ஸ, ஷ, ஹ, ஜ, ஸ்ரீ போன்ற கிரந்த எழுத்துக்குகளை தமிழ்மொழி சுவீகாரம் எடுத்துக் கொள்வதால், தமிழின் ஆற்றல் பன்மடங்கு மிகையாகி வலுக்குமே தவிர, தமிழின் பயன்பாடு, செழுமை சிறிதும் பழுதுபடாது! மேலும் க,ச,ட,த,ப போன்ற வல்லின எழுத்துக்களின் மெல்லோசை எழுத்துக்கள் தமிழ்மொழி தவிர பிற இந்திய மொழிகளிலும், உலக மொழியிலும் உள்ள போது, ஏன் தமிழும் அவற்றைச் சுவீகாரம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பது என் கேள்வி. உலகெங்கும் மின்னல் வேகத்தில் விஞ்ஞானமும், அதை ஒட்டிச் சமூகமும், கலாசாரமும், நாகரீகமும் இணைந்து முன்னேறுகின்றன. தூய தமிழர்களே! நீங்கள் தமிழ் அன்னைக்குக் கைவிலங்கு, கால்விலங்கு, வாய்விலங்கு போட்டு, கொலுப் பொம்மையாக கண்ணாடிப் பேழையில் வைத்துப் பூட்டிப் பின்னோக்கிக் போக வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன்! தமிழ்மொழி விடுதலை ஆகட்டும்!
பாரதியார் இருபதாம் நூற்றாண்டில் வளர்ச்சி அடைந்த நுட்ப விஞ்ஞானப் பொறியியற் திறங்களையும், புத்தம் புதிய கலைகளையும் தமிழ்மொழியில் படைத்திடப் பின்வரும் பாடலில் நமக்கெல்லாம் கட்டளை யிட்டுச் சென்றிருக்கிறார்.
புத்தம் புதிய கலைகள், பஞ்சப்
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;
மெத்த வளருது மேற்கே, அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை
சொல்லவும் கூடுவ தில்லை! அவை
சொல்லும் திறமை தமிழ்மொழிக் கில்லை!
மெல்லத் தமிழினிச் சாகும், அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்!
என்றந்தப் பேதை உரைத்தான், ஆ!
இந்த வசையெனக் கெய்திட லாமோ ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச்
செல்வங்கள் யாவும் கொண்ர்ந் திங்கு சேர்ப்பீர்!
ராஜஸ்தான் அணுமின் நிலையத்தில் எட்டாண்டுகள் பணியாற்றிய பிறகு மாற்றலாகி 1978 ஆம் ஆண்டு கல்பாக்கம் சென்னை அணுமின் நிலையத்தில் வேலை செய்ய வந்தேன். ராஜஸ்தான் பள்ளிகளில் எல்லாவற்றையும் ஹிந்தியில் படித்த என் புதல்விகள் இருவரையும், கல்பாக்கத்தில் இருக்கும் கேந்திரிய வித்தியாலயா உயர்நிலைப் பள்ளியில் சேர்த்தேன். இதுவரை வீட்டிலே தமிழ் கற்ற புதல்வியர், இனியாவது சென்னையில் தமிழ்மொழியைக் கற்கலாம் என்று எதிர்பார்த்த எனக்குப் பெருத்த ஏமாற்றம் காத்துக் கொண்டிருந்தது! தமிழ் நாட்டிலே பணம் கொடுத்துப் படிக்கும் கல்பாக்கம் கேந்திரிய வித்தியாலயத்தில் எந்த வகுப்பிலும் சுத்தமாகத் தமிழ் கிடையாது! ஆங்கிலத்தைத் தவிர முழுக்க முழுக்க அனைத்துப் பாடங்களும் ஹிந்தியில் சொல்லித்தரப் படுகின்றன! இதே போல் தமிழகத்தின் பள்ளிக்கூடங்களில் சிறுவர், சிறுமிகளுக்குத் தமிழ்மொழி கட்டாயப் பாடமாக வைக்கப்பட்டுப் பயிலப் படுவதில்லை! புகாரி கவிதை வெளியீட்டு விழாவில், தமிழுக்குக் கிடைத்துள்ள இப்பெரும் அவமான நிலையைத் திரைப்படப் பெயரைத் தமிழாக்கப் போராடும் தூய தமிழ்த் தொண்டர் அனைவர் காதிலும் படும்படி நான் ஓங்கிப் பறைசாற்றினேன்! திரு. இளங்கோவன் சாமர்த்தியமாக அதை மட்டும் ஒதுக்கிவிட்டு, அவரது தூய நண்பர்கள் மீது தூசி படாமல் பார்த்துக் கொண்டார்!
இதைக் குறிப்பிட்டுத்தான் அடிப்படைப் பிரச்சனைகளை விட்டு, திரைப்படப் பெயர் மாற்றம் போன்ற வெளிமுலாம் பூசும் பணிகளில் தமிழ்த் தொண்டர் முனைவது முறையா என்று கேட்டிருந்தேன். அரைகுறையாய்க் கட்டிய ஆடைகளில் அந்தரங்க உறுப்புகளைக் காட்டிக் கொண்டு ஆடவரும், பெண்டிரும் தப்புத் தாளங்கள் போட்டுப் பணம் சுரண்டும் தரங்கெட்ட நூறு திரைப்படங்களின் பெயரைத் தூய தமிழில் மாற்றினால், அது தமிழுக்குத்தான் அவமானம்! ஆயினும் அது ஒற்றைப் பணிதான்! நூறு பணிகள் அல்ல! அகஸ்திய முனிவர் தமிழுக்கு ஓர் உன்னத இலக்கண நூலை ஆக்கித் தந்தார்! இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் என்னும் காவியத்தைப் படைத்துத் தமிழ் அன்னைக்கு ஆரமாக அணிவித்தார். கவிஞர் கண்ணதாசன் ஏசுநாதர் திருப்பணியைக் கவிதை நூலாகப் படைத்தார்! ஆனால் தமிழ்த் தொண்டர்கள் தமிழை வளர விடாமல் முடக்கிச் சிறையில் வைக்க முற்படுகிறார்கள்! தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்!
போலித் தமிழர்கள் ! தாய்மொழி தமிழ் ! வாய்மொழி ஆங்கிலம் !
தமிழ் நாட்டில் பிறந்து, தாய்மொழி தமிழாக இருந்தும், தமிழ் படிக்க வாய்ப்பிருந்தும், தமிழே படிக்காமல், சமஸ்கிருதத்தையும், ஆங்கிலத்தையும் மட்டும் கல்லுரியில் படித்துப் பட்டம் பெற்று உத்தியோகம் பார்க்கும் நபர்கள், நாரீமணிகள் தமிழ்நாட்டைத் தவிர, வேறு உலகில் எங்கும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அவர்களுக்குத் தாய்மொழி தமிழ் ! வாய்மொழி ஆங்கிலம் !
தமிழ் நாட்டில் சட்டப்படி தாய்மொழி தமிழ் படிக்க வேண்டும் என்று கட்டாயம் கிடையாது! வெளி நாடுகளில் வாழும் தமிழர்க்குத் தமிழை முறையாகக் கற்க அதிக வசதி இல்லை. “எங்க பெண்ணுக்குத் தமிழ் புரியும். ஆனால் எழுதப் படிக்க பேசச் சரியாகத் தெரியாது!” என்று தமிழ்த்தாய் ஒருத்தி சொன்னதாக, கனடாவிலிருந்து சென்ற வருடம் சென்னையில் தன் மகனுக்குப் பெண் பார்க்கப் போன என் நண்பர் ஒருவர் கூறினார். வீட்டில் தமிழ் கற்ற கனடா மாப்பிள்ளை தமிழில் உரையாடிக் கேள்வி கேட்கும் போது, சென்னையில் பிறந்து வளர்ந்த தமிழ்ப் பெண் ஆங்கிலத்திலே பதில் கூறி இருக்கிறாள். இது வெட்கப்பட வேண்டிய கூத்து! இப்படி ஆங்கிலத் தோல் போர்த்திய, போலித் தமிழர்கள் பலர் தமிழ் நாட்டில் இன்று இருக்கிறார்கள்! தமிழே பாடத் திட்டத்தில் இல்லாது ஆங்கிலம், சம்ஸ்கிருதம், ஹிந்தி மட்டும் சொல்லிக் கொடுக்கும் ‘கேந்திரிய வித்தியாலங்கள்’ பல இன்னும் தமிழகத்தில் உள்ளன! இது போன்று வங்காளத்தில் உண்டா ? பஞ்சாபில் உண்டா ? மகாராஷ்டிராவில் உண்டா ? தமிழ்நாட்டில் ஹிந்தியை வெறுக்கும் ஒரு சிலரைப் போல், தமிழை ஒதுக்கும் தமிழர்களும் உண்டு! அவர்கள்தான் போலித் தமிழர்கள்!
இரவீந்திரநாத் தாகூர் ஒரு சமயம் சென்னைக்கு வருகை தந்தபோது தமிழர் ஒருவர் அவரை வரவேற்றுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். ஆங்கிலத்தில் ஆரம்பித்ததும், தாகூர் அவரைத் தடுத்து, “தயவு செய்து ஆங்கிலத்தில் வேண்டாம்; உங்கள் தாய்மொழியில் பேசுங்கள்; எனக்காகப் பேசாமல், அதோ ஆங்கு அமர்ந்து கேட்கும் பொது மக்களுக்குப் புரியும்படியாகப் பேசுங்கள்” என்றாராம்.
சலுகை போனால் போகட்டும்! என்
அலுவல் போனால் போகட்டும்!
தலைமுறை ஒருகோடி கண்ட, என்
தமிழ் விடுதலை ஆகட்டும்!
என் உயிர் போனால் போகட்டும்!
என் புகழ் உடல் மட்டும் நிலைக்கட்டும்!
தேனால் செய்த என் செந்தமிழ்தான்
திக்கெட்டுமே தொழ நிற்கட்டும்!
என்று பாரதிதாசன் திக்கெட்டும் வளரும் தமிழைத் தடுக்காதே என்று ‘தமிழ் விடுதலை ஆகட்டும்‘ என்னும் கவிதையில் தமிழை முடக்கிப் பெட்டிக்குள் மூடும் தூய தமிழ் மேதாவிகளுக்குக் கூறுகிறார்.
காவிரி மைந்தன்
நீ..
இயக்குனர் சிகரம் மட்டுமல்ல..
இயக்குனர்களில் சிகரம்!
அகரமுதல எழுத்தெல்லாம் என்று ஆரம்பிக்கும் உன் திரைப்பட ஒலி..
ஆண்டுகள் பலவாய் தமிழகத்தில் வலம்வந்த திருப்பெயர் பாலச்சந்தர்!
சூப்பர் ஸ்டாரையே உருவாக்கிய பிரம்மா நீதான்!
உலக நாயகனின் விஸ்வரூபத்திற்கு மூலம் நீதான்!
மனதில் உறுதி வேண்டும் என்று எங்கள் மனதில் விதைத்தவன் நீதான்!
வறுமையின் நிறம் சிவப்பு என்று திரையில் கவிதை எழுதியவன் நீதான்!
மன்மதலீலை என்னும் திரைப்படத்தை மறக்கத்தான் முடியுமா?
சொல்லத்தான் நினைக்கிறேன் என்று சொன்னால் அங்கும் நீதான்!
நினைத்தாலே இனிக்கும் என்கிற பல்லவி உனக்கல்லவா பொருந்தும்!
அவள் ஒரு தொடர்கதை என்று ஒரு பெண்ணின் அவலத்தைத்
திரையில் சொன்னவன் நீயல்லவா? மூன்று முடிச்சு .. அவர்கள்
என்று எதிர்நீச்சலிட்டவன் நீதானே! நாடகத்துறையில் தடம்பதித்து
திரைத்துறையில் சாதனைகளை எட்டியவன் நீ! தமிழ்த்திரையில் ஒரு இயக்குனருக்காக ரசிகர்கள் உருவானது முதலில் உனக்குத்தானே!
பாமா விஜயம்.. தில்லுமுல்லு என்று நகைச்சுவையோடு நல்லபடங்கள்
தந்தவன் நீ என்பதால் .. எங்களுக்குத் தீபாவளி உன் படம்வந்தால்தான்!
சிந்துபைரவி முதலான முத்திரைபதித்த படங்களின் மூலகர்த்தாவே..
உன் அனேக கதைகள் அபூர்வ ராகங்கள்.. தப்புத்தாளங்கள் என்றாலும் அரங்கேற்றம் ஆனவுடன் அவை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவையே!
‘தெய்வத்தாய்’ திரைப்படத்தில் எழுதத் தொடங்கிய திரைச் சரித்திரமே!
நீர்க்குமிழியில் தொடங்கிய உன் இயக்குனர் பயணம்.. வெற்றிகளின் விலாசம் என்றால் கவிதாலயா என்றும்.. அதற்கு முன்னர் கலாகேந்திரா என்றும்தானே அறியப்பட்டது! நெற்றிக்கண் வரை நீ தொட்ட பாத்திரங்கள் இன்றும் எங்கள் மனதில் நிலைநிறுத்தப்பட்டிருக்க.. இந்தச் சமுதாயத்தில் பிறர் சொல்லத் தயங்குகிற விஷயத்தையே கதையின் கருவாக்கி.. அதையே திரைப்படமாய் உருவாக்கி நிழல்களை எல்லாம் நிஜமாய் காட்டியவனே!
உனது பயணத்தில் மிளிராத நடிகரும் இல்லை.. நடிகையும் இல்லை..
எத்தனையோ பேர்களை அறிமுகம் தந்தாய்.. இல்லை அவதாரம் தந்தாய்! அதில் ஒருவர்கூட சோடைபோனதில்லை! எங்களின் பிதாமகன் நீ என்றுதான் இயக்குனர்கள் வரிசையில் நின்று உன்னை தரிசித்தனர்!
கவியரசு கண்ணதாசன் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
இருவருமே உனக்கு இரு கண்கள்.. இவர்களோடு கூட்டணியமைத்து
எத்தனை முறை மக்கள் சபையில் அமோக வெற்றி பெற்றாய்!
தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு முதல் வான் நிலா..நிலா.. அல்ல..
உன் வாலிபம் நிலா வரை நீங்கள் தொட்ட பாடல்கள் எல்லாம் சூப்பர்ஹிட்!
சிப்பியிருக்குது முத்துமிருக்குது.. பாடல் இசையும் கவிதையும் எப்படி இணைசேருகின்றன என்பதை பாமரனுக்குப் புரியவைத்ததும்..
அபூர்வ ராகங்களில் இறுதிக்காட்சியையே பாடலாக்கித் தந்ததும்
அடுத்த பிறவியிலா இனி நீ செய்துகாட்டப் போகிறாய்?
நீ வாழ்ந்த நாட்களில் உனது ரசிகனாக திரைக்கொட்டகையில் அமர்ந்து கைதட்டி ரசித்து.. அறிவுபூர்வமான இயக்குனர் ‘டச்’களை அனுபவித்தோமே.. எதை எண்ணி இன்று அழ! இன்று உன் இறுதிமூச்சு அடங்கியது என்றார்கள்..
தமிழ்திரையில் நீ போட்டுவைத்திருக்கும் கோலங்கள் சினிமா என்பது இருக்கும்வரை பேசப்படும்! நாளைய இயக்குனர்களுக்கு பாதைவகுத்தவன் நீ என்பதை வரலாறு எழுதிவைத்திருக்கிறது! விண்ணுலகம் செல்லும் நீ கவியரசோடு கலந்து கதை சொல்லிக் காட்டு! அவர் கவிதையெழுதி நீட்டுவார்!
உம்மை நாங்கள் நடத்திய இருபெரும்விழாக்களில் பங்கேற்கச் செய்த பெருமை இப்பிறவியில் யாம் பெற்ற பேரின்பமாய் கருதுவோம்! (1994 & 2003)..
கவியரசு கண்ணதாசன் விருது உங்களுக்கு யாம் தந்ததும் உண்டு.. 1994..
உன் கையால் கே.ஜே.யேசுதாஸுக்கும்.. சரோஜாதேவிக்கும்..
டி.ஆர்.பாப்பாவிற்கும் கண்ணதாசன் விருதுகள் வழங்கியதும் உண்டு (2003)
இதுவெல்லாம் தெய்வ சங்கல்பம்! இறைவனின் விருப்பம்!
இமைகளை நனைக்கிற விழிநீரை நிறுத்திட இன்று இயலவில்லை..
திரைமொழி எங்களுக்குச் சொல்லித்தந்தவனே.. உன் ஆன்மா நிம்மதியின் சன்னதியில் சேரட்டும்! ஆத்மதிருப்தியுடன் விடைபெற்றாய்.. இந்த உலகில் பிறந்ததன் பயனை பொன்னெழுத்துக்களில் எழுதிவிட்டு!!
அன்புடன்
காவிரிமைந்தன் எம்.கே.மணி.. ஏ.கே. நாகராஜன் அ.நாகப்பன்
ந.கோபி.. அப்துல்சலாம் செ.ரவீந்திரன்.. வே.முரளி.. கே.ஜெகன்னாதன்
வித்யா ஜெகன்னாதன்.. கண்ணன் சேகர்.. கே. சுந்தர்
மற்றும் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் (பம்மல்)
சென்னை 600 075
காவிரி மைந்தன்
அன்பின் பரிவர்த்தனை காதல் எனச் சொன்னால்… அங்கு நினைவின் அலைகளுக்கு என்றைக்கும் ஓயவில்லை. தன்னை நினைந்துருகும் இன்னொரு நெஞ்சத்திடம் தஞ்சம் அடைவதையே என்றும் விரும்பி நிற்கும்! யுகங்கள் பல மாறினாலும் இதயங்கள் இடம் மாறி இப்படித் துடிப்பது காதலிலே மட்டும் என்பதில் மாற்றமில்லை!
என்னை நினைத்தீர்களா என்று அவள் கேட்டதற்கு .. மறந்தால்தானே நினைப்பதற்கு என்று கவிஞர்கள் வரிந்துகட்டி வென்று விடுவார்கள்! திரைப்பட்டிலே சொல்வதென்பதும் இசையமைப்போடு சொல்ல வருவதும் சுகமானது அல்லவா? நெஞ்சத்தின் வலியோடு பிரிவைத் தாளாமல் காதலன் பாடுவதோ.. காதலி பாடுவதோ நம் உள்ளத்தைத் தொடாமல் எப்படிப் போகும்? ஒரே பாடல் நான்கு வகையான மேட்டுக்களோடு ஒரே திரைப்படத்தில் இடம்பெற்ற வரலாறு இப்பாடலுக்கே உண்டு.. ஆம்.. கவிஞர் வாலி அவர்கள் இயற்றி அமரர் எஸ்.எம்.சுப்பையா நாய்டு இசை அமைத்த மன்னிப்பு.. திரைப்படப் பாடலிது!
டி எம்.எஸ். பி.சுசீலா குரல்களில் தனித்தனியாக நம் அடிமனதை வருடிச் செல்லும் ஜீவனுள்ள பாடலாய் காலங்களை வென்று நிற்கிறது…
பாடல்: நீ எங்கே என் நினைவுகள் அங்கே
திரைப்படம்: மன்னிப்பு
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: வாலி
இசை: எஸ். எம். சுப்பையா நாயுடு
ஆண்டு: 1969
நீ எங்கே என் நினைவுகள் அங்கே என் நினைவுகள் அங்கே
நீ எங்கே என் நினைவுகள் அங்கே நீ எங்கே என் நினைவுகள் அங்கே
நீ ஒரு நாள் வரும் வரையில் நீ ஒரு நாள் வரும் வரையில்
நான் இருப்பேன் நதிக்கரையில் நீ எங்கே என் நினைவுகள் அங்கே
பிறப்பிடம் வேறாய் இருந்தாலும் என் இருப்பிடம் உனது மனமல்லவா?
பிறப்பிடம் வேறாய் இருந்தாலும் என் இருப்பிடம் உனது மனமல்லவா?
ஆயிரம் காலம் ஆனபின்னாலும் வாழும் காதல் உறவல்லவா?
நீ எங்கே என் நினைவுகள் அங்கே
நீ ஒரு நாள் வரும் வரையில் நான் இருப்பேன் நதிக்கரையில்
நீ எங்கே என் நினைவுகள் அங்கே
நிலவுக்கும் ஒரு நாள் ஓய்வு உண்டு மாதத்தில் ஒரு முறை மறைவதுண்டு
நிலவுக்கும் ஒரு நாள் ஓய்வு உண்டு மாதத்தில் ஒரு முறை மறைவதுண்டு
ஆசை நிலவும் காதல் மலரும் காலங்கள் தோறும் வளர்வதுண்டு
நீ எங்கே என் நினைவுகள் அங்கே
நீ ஒரு நாள் வரும் வரையில் நான் இருப்பேன் நதிக்கரையில்
நீ எங்கே என் நினைவுகள் அங்கே
கிரேசி மோகன்
ஏனிந்த மாயை, எதற்கெப் படியென்னுள்
நானென்(று) அகந்தை நிலைப்பாடு, -வானன்று
ஓங்கி உலகளந்த உத்தமன் போலளவில்,
வீங்கிய வா’மனனின்’ வீம்பு ….கிரேசி மோகன்….
இசைக்கவி ரமணன்
இசைக்கவியாரின் இசையில் இலயிக்க இதோ..
https://soundcloud.com/vallamai/mp3

இதுதான் இதுதான் அதுவா
இதயம் முழுதும் மதுவா
இகமும் பரமும் சுகமா
இதற்கொரு பெயர்தான் சிவமா
உருவில் மயங்கிடும் உள்ளம், அதை
உருவால் மயக்கும் கள்ளம்
அருவே அறியா நெஞ்சம், அதன்
அருமை கவிதையில் கொஞ்சும்
அகமும் புறமும் ஆனந்தம், அது
அலையலையலையாய்ப் புரளும்
உருவும் அருவும் பிரியும் தருணம்
ஒருவித மர்மம் புரியும், அங்கு
உமையின் உயிரின் ஒளிமுகம் விரியும் (இதுதான்)
இளமை நிலையாய் வளரும், சிறு
இதயம் லஹரியில் இளகும்
உளமுழுதும் ஒரு புளகம், அதில்
உயரிய நிலைபல குலவும்
குளமாய் விழிகள் பொங்கும், ஒரு
துளியில் உலகே தங்கும்
சிவமே லயமே உயிரே எனவே
சின்னச் சின்ன வார்த்தைகள் மிளிரும், அந்தச்
சித்திரக் கணங்களிலென் சிவன்முகம் ஒளிரும் (இதுதான்)
22.12.2014 / 8.40 / ஹைதராபாத் விமான நிலையம்
காவிரி மைந்தன்
எண்ணங்களைப் பதிவு செய்ய எழுத்து கைகொடுக்கிறது! அதைப்பல வண்ணம்கலந்து சொல்வதுதான் கவிதை! இது மொழியின் நாகரீக அடையாளம்! வரம்பில்லாத உச்சம்! காலம் காலமாக.. எழுதப்பட்டு வந்தாலும் இன்னுமிருக்கிறது மிச்சம்! அன்றுதொட்டு அழகுணர்வு கவிதையின் அச்சாரமாய் விளங்கி வருகிறது! சொல்லும் பாவனையும் சொற்களின் பயன்பாடும் ஒன்றிணையும்போது வித்தகமாய் விளைந்துவிடுகிறது கவிதை! அதைச் செப்புகின்ற பாவலனின் மனவளம், கற்பனா சக்தி, கவித்துவத்திறன் இவைகளால் கவனரதம் நகர்கிறது!
பெண்களின் கண்களிலே விழுந்து.. அதைக் கடந்து செல்ல முடியாத கவிஞர்களுக்கு மத்தியில் பல்லவியிலேயே ‘தாமரைக் கன்னங்கள்’ என்று அசத்தியிருக்கிறாரே.. வாலி! தமிழின் இனிமையெல்லாம் தாரளாமாக்கி – தன்வசப்படுத்தும் வித்தை அறிந்த ஞானி! எப்படி இப்படி எனக்கேட்டால் தான் ஒரு தமிழ்த்தோணி என்று இயைபுநலம் காட்டிய பெருந்தகை! ஆழ்மனதிலும் அடிநாதமாய் அற்புதத் தமிழ்ச்சுரங்கம் கொண்டுவிளங்கிய கவிஞரின் கைவண்ணத்தில் எதிர்நீச்சல் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலிது!
இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்களின் இயக்கத்தில் நகைச்சுவை நடிகர் நாகேஷ் கதாபாத்திரம் ஏற்று நடித்த இப்படமும்.. இப்பாடலும் மக்கள் மனதில் என்றும் நிலைத்தவை! அன்றைக்கே கறுப்பு வெள்ளையில் கிராபிக்ஸ் யுக்தியைக் கொண்டு பதிவான படப்பாடல்!!
ஆ..ஆ… ம்ம்….ம்ம்ம்ம்…
ஆ…ஆ… ம்ம்… ம்ம்ம்ம்….
தாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள்
தாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள்
எத்தனை வண்ணங்கள் முத்தமாய் சிந்தும்போது
பொங்கிடும் எண்ணங்கள்..
மாலையில் சந்தித்தேன் மையலில் சிந்தித்தேன்
மாலையில் சந்தித்தேன் மையலில் சிந்தித்தேன்
மங்கை நான் கன்னித்தேன்
காதலன் தீண்டும்போது கைகளை மன்னித்தேன்
கைகளை மன்னித்தேன்
மாலையில் சந்தித்தேன்…..
கொத்து மலர் குழல் பாதம் அளந்திடும் சித்திரமோ
ஆ..ஆ..ஆ…
முத்து நகை தரும் மெல்லிய செவ்விதழ் ரத்தினமோ
ஆ..ஆ…
கொத்து மலர் குழல் பாதம் அளந்திடும் சித்திரமோ
ஆ..ஆ..ஆ..
முத்து நகை தரும் மெல்லிய செவ்விதழ் ரத்தினமோ
ஆ..ஆ…..ஆ..
துயில் கொண்ட வேளையிலே குளிர் கண்ட மேனியிலே
துணை வந்து சேரும்போது சொல்லவோ இன்பங்கள்
மாலையில் சந்தித்தேன் மையலில் சிந்தித்தேன்
மாலையில் சந்தித்தேன் மையலில் சிந்தித்தேன்
மங்கை நான் கன்னித்தேன்
காதலன் தீண்டும்போது கைகளை மன்னித்தேன்
கைகளை மன்னித்தேன்
ஆலிலை மேலொரு கண்ணனைப்போல் இவன் வந்தவனோ
நூலிடை மேலொரு நாடகம் ஆடிட நின்றவனோ
ஆலிலை மேலொரு கண்ணனைப்போல் இவன் வந்தவனோ
நூலிடை மேலொரு நாடகம் ஆடிட நின்றவனோ
சுமை கொண்ட பூங்கொடியின் சுவை கொண்ட தேன் கனியை
உடை கொண்டு மூடும்போது ..
உறங்குமோ உன்னழகு..
தாமரை கன்னங்கள் தேன் மலர் கிண்ணங்கள்
எத்தனை வண்ணங்கள் முத்தமாய் சிந்தும்போது
பொங்கிடும் எண்ணங்கள்..
மாலையில் சந்தித்தேன் மையலில் சிந்தித்தேன்
மாலையில் சந்தித்தேன் மையலில் சிந்தித்தேன்
மங்கை நான் கன்னித்தேன்
காதலன் தீண்டும்போது கைகளை மன்னித்தேன்
கைகளை மன்னித்தேன்
வி.குமார் இசையில் கவிஞர் வாலியின் பாடல்! பி.பி.சீனிவாஸ் மற்றும் பி.சுசீலாவின் குரல்களில் ஒரு தேனமுதம்!!
எஸ்.வி. வேணுகோபாலன்
அன்பானவர்களுக்கு
மிகவும் தற்செயலாக சனிக்கிழமை மாலை அழைத்துப் பேசுகையில், மறுமுனையில் எழுத்தாளர் சமஸ், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை தமது நூல் வெளியீடு நிகழ்வு நடக்க இருப்பதைத் தெரிவித்து அழைக்கவும் செய்தார்.
நல்லவேளையாக, தமுஎகச கே கே நகர் கிளையில் நிகழ்ந்த ஒரு கூட்டத்திற்குப் பிறகு அருகேயே டிஸ்கவரி புத்தக நிலைய அரங்கில் நடந்து கொண்டிருந்த நூல் வெளியீட்டுக்குச் சற்று தாமதமாகப் போய்ச் சேர்ந்துவிட முடிந்தது.
யாருடைய எலிகள் நாம் என்கிற தலைப்பில் 384 பக்கங்கள், துளி வெளியீடு என்ற முறையில் அவரது வாழ்க்கை இணை ரேகா அவர்கள் முயற்சியில் வெளிவந்திருக்கும் நூலின் ரூ 300/-
நான் உள்ளே நுழைகையில், தி இந்து தமிழ் சிறப்புப் பகுதிகளின் பொறுப்பாசிரியர் அரவிந்தன் பேசி நிறைவு செய்திருந்தார். ஞாநி அவர்களது பேச்சை முழுமையாகக் கேட்டேன்.
ஞாநி பேசியவற்றிலிருந்து:
என் வயது 61. எனக்கும் சமஸ் அவர்களுக்கும் வயது வித்தியாசம் 26. நான் இதழியலுக்கு வந்த ஆண்டு 1974. எனக்கு அப்போதைய வயது 20. இந்த விஷயங்களை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தேன். எங்களுக்கு அப்போது இத்தகைய ஸ்பேஸ் கிடையாது. இப்போது சூழல் உதவுவதில்எழுத ஆட்கள் கிடையாது. அதில் வாராது போல வந்த மாமணி என்பதால், சமஸ் பங்களிப்பு போற்றவேண்டியது. அது இன்னும் தழைக்கவேண்டும்.
படைப்பாளி வேறு, செய்தியாளன் வேறு என்கிற சாதியம் இதழியல் உலகில் நிலவுகிறது. படைப்பாளிகளுக்குள்ளேயே கூட சிறுகதை, கவிதை, நாவல் என்கிற வகைக்கேற்ப சாதிப் பிரிவினைகள். ஆனால், புனைவு படைப்பாளியைப் போலவே செய்திக்கட்டுரை அளிப்பவரும் மதிக்கத் தக்கவர்.
ஆனால் நடைமுறையில் அது நிகழ்வதில்லை. நானே தொலைகாட்சி விவாதங்களுக்குப் போகையில் ஒரு சிறுகதையாளரும் கூட இடம்பெற்றால் அவருக்கு எழுத்தாளர் என்றும், எனக்கு பத்திரிகையாளர் என்றும்தான் பெயரோடு இணைத்துப் போடப்படுகிறது. எழுத்தாளன் என்று செய்திக் கட்டுரையாளரை ஏற்பதில் உடன்பாடு இல்லாத நிலைமை.
இரண்டு நிலையிலும் இயங்கிய உலகப் படைப்பாளி என்று சொல்வதானால், கேப்ரியேல் மார்க்வெஸ் அவர்களைத் தான் சொல்லவேண்டும். ஒருமுறை அவர் சொன்ன பதில் அருமையானது. அவர் சொன்னார், புனைவுகளில் எங்காவது ஓரிடத்தில் வாழ்வியல் உண்மை இருந்துவிடுமானால் அது அதற்குரிய கனத்தோடு மக்களைப் போய்ச்சேரும். அதே நேரம் செய்திக்கட்டுரைகளில் ஒரே ஓர் இடத்தில் தகவல் பொய்யாகப் போய்விடுமானால் அந்தப் படைப்பு அழிந்தே போகும்.
அப்படியான பணிகளில் நெறி பிறழாது, நேர்மை தவறாது இயங்கவேண்டும். இந்த அம்சம் மிகவும் முக்கியமானது.
விகடன் எஸ் எஸ் பாலன் அவர்களுக்கு இந்த நேரத்தில் அஞ்சலி தெரிவிக்க வேண்டியது அவசியம். அவரது குழுமத்தில் பணியாற்றியது முக்கியமான அனுபவம். அவரோடு பணியாற்றுவதில் இருந்த நல்ல அம்சம் என்னவெனில், அவரோடு கருத்து மாறுபாடு கொள்ளலாம். வாதிடவும் செயலாம். உங்கள் கருத்து தவறு என்று அவரிடம் சொல்ல முடியும். உங்கள் கருத்து முட்டாள்தனமானது என்று கூட சொல்லலாம். அவர் அதையெல்லாம் பொருட்படுத்தியதில்லை. ஆனால் அவர் சொல்வார், என்னை ‘கன்வின்ஸ்’ பண்ணு! அதற்கு நேரம் அவகாசம் அவரே கொடுப்பார். நாளைக்கு நாலு மணிக்கு நாம உட்கார்ந்து பேசுவோம் என்பார். மறுநாள் அவர் தனது கருத்துக்கு ஏற்ற ஆதாரங்களோடு வந்து விடுவார். நீங்கள் உங்கள் தரப்புக்கு நியாயங்கள் என்ன உண்டோ அவற்றோடு போய் உட்கார்ந்து வாதிட வேண்டும்.
பல பிரச்சனைகளில் நான் அவரோடு இப்படி தர்க்கம் செய்திருக்கிறேன். அணு ஆற்றல் பிரச்சனையில் நான் அவரோடு மாறுபட்டேன். அவர் அது அவசியம் என்றார். அணு குண்டு மற்றுமல்ல அணு ஆற்றல் கூட ஆபத்தானதுதான் என்று நான் அவரோடு முரண்பட்டேன். அவர் ஒதுக்கிய நேரத்தில் பேச்சு இரண்டு மணி நேரம், மூன்று மணி நேரம் என்று தொடர்ந்தது. அவர் பொறுமையோடு பேசிக் கொண்டிருந்தார். கேட்டுக் கொண்டிருந்தார். பின்னர், சரி, ஜூவியில் முப்பது வாரத் தொடர் ஒன்றை நீ எழுது என்றார். அதில் உன் வாதங்களை அடுக்கு என்றும் இடம் ஒதுக்கத் தயாரானார். அவரிடம் என்ன நிபந்தனை என்றால், முப்பது வாரம் என்ன எழுதப் போகிறோம் என்பதற்கான synopsis நீங்கள் முதலிலேயே எழுதிக் கொடுத்துவிட வேண்டும். நான் 32 வாரத்துக்கு எழுதிக் கொடுத்தேன். ஆனால் எனக்கு இதழ் பொறுப்பு என்பதால் வேறு வேறு கமிட்மெண்ட்ஸ் இருப்பதால் எழுத இயலாது என்றும் அவரிடம் தெரிவித்தேன். ஆர்கியு பண்ணிட்டு எழுதல என்றால் என்ன அர்த்தம் என்றார். பிறகு ஏ எஸ் பன்னீர்செல்வம் அவர்களை கேட்டுக் கொண்டேன். அவர் எழுத அந்தத் தொடர் ஜூவியில் வெளியானது.
வாசன் காலத்தில் தொடங்கிய ஜெமினி ஸ்டூடியோ, திரைப்பட உலகம் இவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தாலும், பாலன் அவர்கள் இதயம் பத்திரிகை உலகத்தில் இருந்தது.
நான் பல நிறுவனங்களில் பணியாற்றியவன். இந்தியன் எக்ஸ்பிரசில் இருந்தேன். பின்னர் விகடன் நிறுவனத்தில் ஜூவி பொறுப்பில், ஜூனியர் போஸ்ட் பொறுப்பில், சுட்டி விகடன் பொறுப்பில் என பணியாற்றியவன். எங்கும் பணியில் இல்லாதும் பழகி இருக்கிறேன்.
அதனால்தான் அரவிந்தன், சமஸ் போன்றவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது, நாம் யாருக்கு விசுவாசமாக இருக்கவேண்டும் என்பதில் தெளிவு இருக்கவேண்டும். வாசகருக்குச் சொல்லவேண்டிய உண்மைகளைச் சொல்பவனாக அவர்களுக்கே நமது விசுவாசம் – நிறுவனத்திற்கு அல்ல. அதற்காக, நிறுவனத்தை betray செய்யவேண்டும் என்றல்ல. நமது எழுத்தின் நேர்மை நம்மை கறாராக வழிநடத்தும்.
ஏற்புரை: சமஸ்:
இந்தப் புத்தகம் கொண்டுவரும் தகுதி உண்டா என்று யோசித்தேன். ஆனால் இது வந்திருப்பதன் பின்னணி, பல அன்பர்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கின்றனர். பேப்பர் கட்டிங்க்ஸ் எடுத்து வைத்திருக்கிறோம். எத்தனை நாள் முடியும், தொகுப்பாகக் கொண்டு வாருங்களேன் என்றனர். முதல் புத்தகம், சாப்பாட்டுப் புராணம் வந்தபோது உடனே விற்றுப் போனது. அதற்காக வெளியீட்டு விழா எல்லாம் நடத்தவில்லை.
இந்த தொகுப்பை யாரிடம் கொடுக்கலாம் என்று யோசித்தோம். வாசகரும் அதிக விலை கொடுக்கக் கூடாது. நமக்கும் கையைக் கடிக்கக் கூடாது. என் மனைவியே வெளியிட முன்வந்தார். நண்பர் வேடியப்பன் இந்த விழாவை நடத்தலாம் என்றார்.
இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரைகள் பலவும் வெவ்வேறு கால கட்டங்களில் எழுதப் பட்டவை. ஆனால் எப்போதும் பொருத்தப்பாடு உடையவை என்று தொகுத்திருக்கிறோம். தமிழ் இதழியலில் உள்ள சாதியம் குறித்து ஞாநி சொன்னார். குறிப்பிட்ட துறைக்குள்ளும் சாதியம் உண்டு. எனக்கு ஆங்கிலத்தில் ஒரு கடிதம் எழுதக் கூடத் தெரியாது. இங்கே உயரம், நிறம், அது, இது என்று ஏகப்பட்ட பிரச்சனைகள் உண்டு. எழுதி எழுதிக் கொடுத்தாலும் குப்பைக் கூடைக்குத் தான் போகும் செய்திக் கட்டுரைகள். ஆனாலும் நான் சளைக்காமல் தொடர்ந்தேன். என் நண்பன் கேட்பான், ஏண்டா மாப்ள, அவனுங்க போடமாட்டாங்க என்றாலும் எதுக்கு ஓயாம எழுதிக் கொடுக்கிறன்னு. நடக்கற விஷயங்களைப் பார்த்தா என்னால் எழுதாம இருக்க முடியாது. என் இயல்பு அப்படி. எங்கும் பிரச்சனை. எல்லா இடத்திலும் கலகம். கேள்வி கேள்வி. ஒண்ணு நான் இதையெல்லாம் எழுதணும், இல்ல செத்துப் போயிரணும். என் மனைவிக்குத் தெரியும். இப்படி பல இதழ்கள் மாறி வந்தாயிற்று.ஞாநி சார் கிட்ட ஆலோசனை கேட்பேன்.எனக்கு எத்தனையோ ஆசிரியர்கள். அவரும் ஒருவர். அப்படித் தான் வளர்ந்து வந்திருக்கிறேன். அவர் ஒருமுறை சொன்னார். இடம் மாறிப் போகும்போது, புதிய இடத்தில் கூடுதல் சம்பளம் கிடைத்தால், இப்போ வாங்கற சம்பளத்தில் குடும்பம் நடத்தப் பழகிக்கணும். கூடுதல் தொகையை சேமிக்கக் கத்துக்கணும். ஏன்னா உன்ன மாதிரி, நம்ம மாதிரி ஆளுங்களுக்கு எப்போ வேலை போகும் என்பது தெரியாது. அப்போ அவஸ்தைப் படக் கூடாது என்றார். இப்போது வரை அதை நான் செய்து கொண்டிருக்கிறேன்.
இந்தத் தொகுப்பு பல்வேறு கட்டங்களில் எழுதியது. அந்தந்த ஆண்டு போடப்பட்டிருக்கிறது. ஆனாலும் இன்னும் அவை பொருத்தம் உள்ளவை. உதாரணமாக, இதில் மம்தா பானர்ஜி குறிப்பிட்ட சாலைகளில் சைக்கிள் ஓட்டத் தடை கொண்டுவந்ததைப் பற்றிய கட்டுரை இருக்கிறது. எந்த விமர்சனமும் இன்றி இருப்பதை அப்படியே கொடுத்திருந்த கட்டுரை. திருணாமூல் என்றால், புல்லின் வேர்-அடிப்பாகம் என்று பொருள். அப்படி கடைசியில் உள்ள மனிதருக்கான இயக்கம் என்று பேரை வைத்துக் கொண்டு, சாதாரண மனிதர்கள் சைக்கிள் ஓட்டத் தடை, மீறினால் அது வேக வாகனங்கள் செல்ல பிரச்சனை ஏற்படுத்துகிறது என்று அதற்கு ரூ 500 அபராதம் என்று ஓர் அரசு சொல்லுமானால் என்ன ஜனநாயகம் இது?
ஏற்புரைக்குப் பிறகு கலந்துரையாடல் தொடங்கியது.
வந்திருந்தோர் .பேசலாம் என்றனர். முதல் பார்வையாளராக எனது கருத்துக்களை அங்கே தெரிவித்தேன்:
அதன் சுருக்கம்:
அழகிய பெரியவன் கவிதை ஒன்று, மரணப் படுக்கையில் இருக்கும் பாட்டி குறித்துப் பேசுகிறது. அவள் சாவு வராது இழுத்துக் கொண்டிருப்பதை,
காலப் பூனையிடம்
சுண்டெலி போல
ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கிறது
பாட்டியின் உயிர்
என்று தொடங்குகிறது. பிறகு,
பாட்டியிடம் கற்றுக் கொள்கிறோம்
அடங்க மறுத்தலை…
என்று முடிகிறது. சம காலத்தில் என்ன நடக்கிறது. அமெரிக்க சிந்தனையாளர் நோம் சாம்ஸ்கி சொல்வதுபோல், சம்மதத்தை உற்பத்தி செய்ய வைக்கின்றனர். (MANUFACTURING THE CONSENT ). நாமே ஏற்றுக் கொள்வதுபோல் அத்தனை அநியாயங்களும் நடக்கின்றன. அடங்க மறுப்பது, எதிர்ப்பது, கேள்விகளை எழுப்புவது இவற்றை இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய காலமிது.
சுதேசி இயக்கத்தில் முகிழ்த்தது இந்தியன் வங்கி. பாரதி நவம்பர் 1906ல் இந்தியா பத்திரிகையில் செட்டி நாட்டு சீமான்களே என்று தொடங்கி உள்நாட்டு முதலாளிகள் ஏன் வங்கி தொடங்கக் கூடாதென்றார். 1907 ஆகஸ்ட் 15 அன்று இந்தியன் வங்கி பிறந்தது. இன்று எல்லாவற்றையும் விற்கத் துடிக்கின்றனர் ஆட்சியாளர்கள். கோயில் பூசை செய்வோன் சிலையைக் கொண்டு விற்றல் போலும் என்றார் மகாகவி.
சொத்துக்களை மட்டுமல்ல, விழுமியங்களை, பண்பாட்டின் கூறுகளை, கருத்துக்களை, எத்தனையோ அம்சங்களைப் பறிகொடுக்கும் அபாயமான காலம் இது.
மக்களுக்கு செய்தி சொல்பவர்கள் மட்டுமல்ல, புலம்புவது அல்ல, எதிர்ப்பின் குரலை எழுப்பும் செய்தியாளர்கள் தேவை. அரிதான வரிசையில் சமஸ் அற்புதமாக நமக்குக் கிடைத்திருக்கிறார். இன்னும் இன்னும் பரந்துபட்ட தளங்களில் மேலும் மேலும் கூர்மையான எழுத்துக்களை எதிர்பார்ப்போம் என்று சொல்லி வாழ்த்தி மகிழ்கிறேன்.
அன்புடன்
எஸ் வி வேணுகோபாலன்
***************
சமஸ் எழுதும் வலைப்பூ முகவரி:
http://writersamas.blogspot.in/
***********
யாருடைய எலிகள் நாம்
நூலுக்கு ஜெயமோகன், ஞாநி, எஸ் வி ராஜதுரை, அ முத்துலிங்கம் நால்வரும் அணிந்துரை எழுதி உள்ளனர்.
சமஸுடைய மொழிநடை அபூர்வமானது……
அ முத்துலிங்கம்
இந்தத் தொகுப்பு வெளிவந்ததும் பல நோக்கிலிருந்து எதிர்வினைகள் வரலாம். ஆனால் கட்டுரைகளில் உள்ள தரவுகளின் ஆதாரங்களை யாரும் கேள்விக்குட்படுத்த முடியாது – எஸ் வி ராஜதுரை
சாமர்த்தியமான எழுத்தினால் தன்னை வித்தியாசமாகக் காட்டிக் கொண்டால் போதுமென்று நினைப்பவர் அல்ல சமஸ். மெய்யாகவே எது சரிஎன்று தான் நம்புபவரோ
அதன் பக்கம் நிற்பவர்.
– ஞாநி
மேலும் மேலும் வணிகமயமாகி நுகர்வுமயமாகி வரும் உலகில் ஜனநாயகம், மனிதாபிமானம், சமத்துவம் போன்ற விழுமியங்களின் இடமென்ன என்ற கேள்வியையும், ஐயத்தையும் எழுப்புகின்றன சமஸின் கட்டுரைகள் – ஜெயமோகன்
பி. சுவாமிநாதன்
1987-ல் துவங்கி 2009 வரை 22 வருடங்கள் இங்கே பணி புரிந்தேன் என்பதை விட பயின்றேன் என்றுதான் சொல்ல வேண்டும். ப்ரூஃப் ரீடராக பணியைத் துவக்கி, இதழாசிரியர் வரை நான் இங்கே உயர்ந்தேன் என்றால், அதற்கு ஆசிரியர் திரு. எஸ். பாலசுப்ரமணியன் அவர்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். என்னை அடையாளம் கண்டு, என் உயர்வுக்கு வித்திட்டவர் அவர்.
அத்தகைய பள்ளியின் ஆசான் திரு எஸ். பாலசுப்ரமணியன் அவர்கள் இறை ஜோதியில் கலந்து விட்டார்.
திறமை உள்ள பலரையும் கண்டுபிடித்து அவரை மென்மேலும் ஊக்குவிக்கும் குணம் கொண்டவர் திரு. பாலசுப்ரமணியன். அந்த வகையில் விகடன் பட்டறையில் ஜொலித்தவர்கள் அதிகம்.
விகடன் பவழ விழா மலர் (1926-2002), விகடன் தீபாவளி மலர் 2003, அமரர் எஸ்.எஸ். வாசன் நூற்றாண்டு மலர் போன்ற சவால் நிறைந்த மலர்களைத் தயாரிக்கும் மாபெரும் பொறுப்பை ஆசிரியர் எஸ். பாலசுப்ரமணியன் அவர்கள் எனக்கு வழங்கினார். இந்த மூன்று மலர்களையும் அவரது மேற்பார்வையில் தயாரித்தேன்.
இதில் குறிப்பாக பவழ விழா மலர் மற்றும் அமரர் எஸ்.எஸ். வாசன் நூற்றாண்டு மலர் தயாரிப்புகளின்போது ஆசிரியர் அவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. தினமும் ஒவ்வொரு நாள் காலையிலும் இந்த மலர் தயாரிப்புப் பணிகள் எந்த அளவில் இருக்கின்றன என்பது பற்றி அவருக்கு நான் ரிப்போர்ட் செய்ய வேண்டும்.
அமரர் எஸ்.எஸ். வாசன் மலர் தயாரிப்பின்போது சில பேட்டிகளைத் தயார் செய்ய ஆசிரியரின் அனுமதியின்பேரில் மும்பை செல்லும் வாய்ப்பு கிடைத்தது. பிரபல இந்தி நடிகர் திலீப்குமார், இயக்குநர் ராமானந்த் சாகர், டாக்டர் சுசீலா ராணி படேல் (‘மதர் இந்தியா’ இதழின் ஆசிரியர் பாபுராவ் படேலின் மனைவி), எடிட்டர் உமாநாத் போன்ற பிரபலங்களை மும்பையில் பேட்டி கண்ட நாட்கள் என் நெஞ்சில் இருந்து நீங்காதவை.
பிரபல இந்தி நடிகர் திலீப்குமாருடன் அப்போது நாங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணைத்துள்ளேன். எங்களுக்கென ஸ்பெஷலாக சாம்பார் சாதம், தயிர் சாதம் போன்றவற்றை வரவழைத்து விருந்து தந்தார்.
அமரர் எஸ்.எஸ். வாசன் மலரில் வெளியாவதற்கென்று பிரபலமான மூத்த பத்திரிகையாளர் ஒருவர் கட்டுரை தந்திருந்தார். பிரபல எழுத்தாளரான அவர் தந்த கட்டுரை ஆசிரியர் தீர்மானித்திருந்த பக்க அளவைத் தாண்டி விட்டது. அந்தக் கூடுதல் பக்கங்களை நானே எடிட் செய்து ஆசிரியரிடம், ‘சார்… இந்தக் கட்டுரைக்கு இத்தனை பக்கம் என்று தீர்மானித்துள்ளோம். ஆனால், இது ஒரு சில பக்கங்கள் கூடுதலாகப் போகிறது. எனவே, இதை எடிட் செய்துள்ளேன்’ என்றேன் பவ்யமாக.
ஆசிரியருக்குக் கோபம் வந்து விட்டது. ‘பிரபலமான அந்த எழுத்தாளரின் எழுத்திலே நீங்கள் எப்படிக் கை வைக்கலாம்? மிகவும் சீனியர் அவர். அவருடைய எழுத்தை எடிட் செய்யக் கூடாது’ என்று சொன்னவர் அடுத்த விநாடி என்ன தோன்றியதோ தெரியவில்லை… ‘அந்த ஆசிரியரின் எடிட் செய்யாத பேட்டியையும், நீங்கள் எடிட் செய்த பேட்டியையும் எனக்குக் கொடுங்கள்’ என்றார்.
ஆசிரியர் சொன்னபடியே அவற்றை அவரது டேபிளுக்கு அனுப்பினேன். இரண்டு மணி நேரம் கழித்து என்னை அழைத்தார். ‘நீங்கள் கச்சிதமாக எடிட் செய்திருக்கிறீர்கள். இப்போது இந்தப் பேட்டி நன்றாக உள்ளது’ என்று என்னைப் பாராட்டினார்.
கோபத்தைக் காட்ட வேண்டிய நேரத்தில் கோபத்தைக் காட்டினாலும், பாராட்ட வேண்டிய நேரத்தில் பாராட்டத் தயங்காதவர் எங்கள் ஆசிரியர் – ஆசான் எஸ். பாலசுப்ரமணியன் அவர்கள்.
அவரது மறைவைக் கேட்டதும் அவருடன் பழகிய நாட்கள் நினைவுக்கு வந்து, பல சம்பவங்கள் என் நெஞ்சில் நிழலாடின.
மனிதருள் ஒரு மாணிக்கமாக விளங்கியவர் அவர்.
அன்புடன்,
பி. சுவாமிநாதன்
கிரேசி மோகன்
திருப்பாவை
புள்ளுக்கும் தோழனவன், பாம்புக்கும் காவலவன்,
சொல்லுக்(கு) அடங்காத சித்திரம், -வில்லுக்(கு)
இரையாக நூறை இரதம் செலுத்தியவன்,
இறையவன் தாளில் இரு’’….கிரேசி மோகன்….