எஸ்.வி. வேணுகோபாலன்

அன்பானவர்களுக்கு

மிகவும் தற்செயலாக சனிக்கிழமை மாலை அழைத்துப் பேசுகையில், மறுமுனையில் எழுத்தாளர் சமஸ், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை தமது நூல் வெளியீடு நிகழ்வு நடக்க இருப்பதைத் தெரிவித்து அழைக்கவும் செய்தார்.

நல்லவேளையாக, தமுஎகச கே கே நகர் கிளையில் நிகழ்ந்த ஒரு கூட்டத்திற்குப் பிறகு அருகேயே டிஸ்கவரி புத்தக நிலைய அரங்கில் நடந்து கொண்டிருந்த நூல் வெளியீட்டுக்குச் சற்று தாமதமாகப் போய்ச் சேர்ந்துவிட முடிந்தது.

யாருடைய எலிகள் நாம் என்கிற தலைப்பில் 384 பக்கங்கள், துளி வெளியீடு என்ற முறையில் அவரது வாழ்க்கை இணை ரேகா அவர்கள் முயற்சியில் வெளிவந்திருக்கும் நூலின் ரூ 300/-

நான் உள்ளே நுழைகையில், தி இந்து தமிழ் சிறப்புப் பகுதிகளின் பொறுப்பாசிரியர் அரவிந்தன் பேசி நிறைவு செய்திருந்தார். ஞாநி அவர்களது பேச்சை முழுமையாகக் கேட்டேன்.

ஞாநி பேசியவற்றிலிருந்து:

என் வயது 61. எனக்கும் சமஸ் அவர்களுக்கும் வயது வித்தியாசம் 26. நான் இதழியலுக்கு வந்த ஆண்டு 1974. எனக்கு அப்போதைய வயது 20. இந்த விஷயங்களை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டிருந்தேன். எங்களுக்கு அப்போது இத்தகைய ஸ்பேஸ் கிடையாது. இப்போது சூழல் உதவுவதில்எழுத ஆட்கள் கிடையாது. அதில் வாராது போல வந்த மாமணி என்பதால், சமஸ் பங்களிப்பு போற்றவேண்டியது. அது இன்னும் தழைக்கவேண்டும்.

படைப்பாளி வேறு, செய்தியாளன் வேறு என்கிற சாதியம் இதழியல் உலகில் நிலவுகிறது. படைப்பாளிகளுக்குள்ளேயே கூட சிறுகதை, கவிதை, நாவல் என்கிற வகைக்கேற்ப சாதிப் பிரிவினைகள். ஆனால், புனைவு படைப்பாளியைப் போலவே செய்திக்கட்டுரை அளிப்பவரும் மதிக்கத் தக்கவர்.

ஆனால் நடைமுறையில் அது நிகழ்வதில்லை. நானே தொலைகாட்சி விவாதங்களுக்குப் போகையில் ஒரு சிறுகதையாளரும் கூட இடம்பெற்றால் அவருக்கு எழுத்தாளர் என்றும், எனக்கு பத்திரிகையாளர் என்றும்தான் பெயரோடு இணைத்துப் போடப்படுகிறது. எழுத்தாளன் என்று செய்திக் கட்டுரையாளரை ஏற்பதில் உடன்பாடு இல்லாத நிலைமை.

இரண்டு நிலையிலும் இயங்கிய உலகப் படைப்பாளி என்று சொல்வதானால், கேப்ரியேல் மார்க்வெஸ் அவர்களைத் தான் சொல்லவேண்டும். ஒருமுறை அவர் சொன்ன பதில் அருமையானது. அவர் சொன்னார், புனைவுகளில் எங்காவது ஓரிடத்தில் வாழ்வியல் உண்மை இருந்துவிடுமானால் அது அதற்குரிய கனத்தோடு மக்களைப் போய்ச்சேரும். அதே நேரம் செய்திக்கட்டுரைகளில் ஒரே ஓர் இடத்தில் தகவல் பொய்யாகப் போய்விடுமானால் அந்தப் படைப்பு அழிந்தே போகும்.

அப்படியான பணிகளில் நெறி பிறழாது, நேர்மை தவறாது இயங்கவேண்டும். இந்த அம்சம் மிகவும் முக்கியமானது.

விகடன் எஸ் எஸ் பாலன் அவர்களுக்கு இந்த நேரத்தில் அஞ்சலி தெரிவிக்க வேண்டியது அவசியம். அவரது குழுமத்தில் பணியாற்றியது முக்கியமான அனுபவம். அவரோடு பணியாற்றுவதில் இருந்த நல்ல அம்சம் என்னவெனில், அவரோடு கருத்து மாறுபாடு கொள்ளலாம். வாதிடவும் செயலாம். உங்கள் கருத்து தவறு என்று அவரிடம் சொல்ல முடியும். உங்கள் கருத்து முட்டாள்தனமானது என்று கூட சொல்லலாம். அவர் அதையெல்லாம் பொருட்படுத்தியதில்லை. ஆனால் அவர் சொல்வார், என்னை ‘கன்வின்ஸ்’ பண்ணு! அதற்கு நேரம் அவகாசம் அவரே கொடுப்பார். நாளைக்கு நாலு மணிக்கு நாம உட்கார்ந்து பேசுவோம் என்பார். மறுநாள் அவர் தனது கருத்துக்கு ஏற்ற ஆதாரங்களோடு வந்து விடுவார். நீங்கள் உங்கள் தரப்புக்கு நியாயங்கள் என்ன உண்டோ அவற்றோடு போய் உட்கார்ந்து வாதிட வேண்டும்.

பல பிரச்சனைகளில் நான் அவரோடு இப்படி தர்க்கம் செய்திருக்கிறேன். அணு ஆற்றல் பிரச்சனையில் நான் அவரோடு மாறுபட்டேன். அவர் அது அவசியம் என்றார். அணு குண்டு மற்றுமல்ல அணு ஆற்றல் கூட ஆபத்தானதுதான் என்று நான் அவரோடு முரண்பட்டேன். அவர் ஒதுக்கிய நேரத்தில் பேச்சு இரண்டு மணி நேரம், மூன்று மணி நேரம் என்று தொடர்ந்தது. அவர் பொறுமையோடு பேசிக் கொண்டிருந்தார். கேட்டுக் கொண்டிருந்தார். பின்னர், சரி, ஜூவியில் முப்பது வாரத் தொடர் ஒன்றை நீ எழுது என்றார். அதில் உன் வாதங்களை அடுக்கு என்றும் இடம் ஒதுக்கத் தயாரானார். அவரிடம் என்ன நிபந்தனை என்றால், முப்பது வாரம் என்ன எழுதப் போகிறோம் என்பதற்கான synopsis நீங்கள் முதலிலேயே எழுதிக் கொடுத்துவிட வேண்டும். நான் 32 வாரத்துக்கு எழுதிக் கொடுத்தேன். ஆனால் எனக்கு இதழ் பொறுப்பு என்பதால் வேறு வேறு கமிட்மெண்ட்ஸ் இருப்பதால் எழுத இயலாது என்றும் அவரிடம் தெரிவித்தேன். ஆர்கியு பண்ணிட்டு எழுதல என்றால் என்ன அர்த்தம் என்றார். பிறகு ஏ எஸ் பன்னீர்செல்வம் அவர்களை கேட்டுக் கொண்டேன். அவர் எழுத அந்தத் தொடர் ஜூவியில் வெளியானது.

வாசன் காலத்தில் தொடங்கிய ஜெமினி ஸ்டூடியோ, திரைப்பட உலகம் இவற்றைப் பார்த்துக் கொண்டிருந்தாலும், பாலன் அவர்கள் இதயம் பத்திரிகை உலகத்தில் இருந்தது.

நான் பல நிறுவனங்களில் பணியாற்றியவன். இந்தியன் எக்ஸ்பிரசில் இருந்தேன். பின்னர் விகடன் நிறுவனத்தில் ஜூவி பொறுப்பில், ஜூனியர் போஸ்ட் பொறுப்பில், சுட்டி விகடன் பொறுப்பில் என பணியாற்றியவன். எங்கும் பணியில் இல்லாதும் பழகி இருக்கிறேன்.

அதனால்தான் அரவிந்தன், சமஸ் போன்றவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது, நாம் யாருக்கு விசுவாசமாக இருக்கவேண்டும் என்பதில் தெளிவு இருக்கவேண்டும். வாசகருக்குச் சொல்லவேண்டிய உண்மைகளைச் சொல்பவனாக அவர்களுக்கே நமது விசுவாசம் – நிறுவனத்திற்கு அல்ல. அதற்காக, நிறுவனத்தை betray செய்யவேண்டும் என்றல்ல. நமது எழுத்தின் நேர்மை நம்மை கறாராக வழிநடத்தும்.

ஏற்புரை: சமஸ்:

இந்தப் புத்தகம் கொண்டுவரும் தகுதி உண்டா என்று யோசித்தேன். ஆனால் இது வந்திருப்பதன் பின்னணி, பல அன்பர்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கின்றனர். பேப்பர் கட்டிங்க்ஸ் எடுத்து வைத்திருக்கிறோம். எத்தனை நாள் முடியும், தொகுப்பாகக் கொண்டு வாருங்களேன் என்றனர். முதல் புத்தகம், சாப்பாட்டுப் புராணம் வந்தபோது உடனே விற்றுப் போனது. அதற்காக வெளியீட்டு விழா எல்லாம் நடத்தவில்லை.

இந்த தொகுப்பை யாரிடம் கொடுக்கலாம் என்று யோசித்தோம். வாசகரும் அதிக விலை கொடுக்கக் கூடாது. நமக்கும் கையைக் கடிக்கக் கூடாது. என் மனைவியே வெளியிட முன்வந்தார். நண்பர் வேடியப்பன் இந்த விழாவை நடத்தலாம் என்றார்.

இந்தத் தொகுப்பில் உள்ள கட்டுரைகள் பலவும் வெவ்வேறு கால கட்டங்களில் எழுதப் பட்டவை. ஆனால் எப்போதும் பொருத்தப்பாடு உடையவை என்று தொகுத்திருக்கிறோம். தமிழ் இதழியலில் உள்ள சாதியம் குறித்து ஞாநி சொன்னார். குறிப்பிட்ட துறைக்குள்ளும் சாதியம் உண்டு. எனக்கு ஆங்கிலத்தில் ஒரு கடிதம் எழுதக் கூடத் தெரியாது. இங்கே உயரம், நிறம், அது, இது என்று ஏகப்பட்ட பிரச்சனைகள் உண்டு. எழுதி எழுதிக் கொடுத்தாலும் குப்பைக் கூடைக்குத் தான் போகும் செய்திக் கட்டுரைகள். ஆனாலும் நான் சளைக்காமல் தொடர்ந்தேன். என் நண்பன் கேட்பான், ஏண்டா மாப்ள, அவனுங்க போடமாட்டாங்க என்றாலும் எதுக்கு ஓயாம எழுதிக் கொடுக்கிறன்னு. நடக்கற விஷயங்களைப் பார்த்தா என்னால் எழுதாம இருக்க முடியாது. என் இயல்பு அப்படி. எங்கும் பிரச்சனை. எல்லா இடத்திலும் கலகம். கேள்வி கேள்வி. ஒண்ணு நான் இதையெல்லாம் எழுதணும், இல்ல செத்துப் போயிரணும். என் மனைவிக்குத் தெரியும். இப்படி பல இதழ்கள் மாறி வந்தாயிற்று.ஞாநி சார் கிட்ட ஆலோசனை கேட்பேன்.எனக்கு எத்தனையோ ஆசிரியர்கள். அவரும் ஒருவர். அப்படித் தான் வளர்ந்து வந்திருக்கிறேன். அவர் ஒருமுறை சொன்னார். இடம் மாறிப் போகும்போது, புதிய இடத்தில் கூடுதல் சம்பளம் கிடைத்தால், இப்போ வாங்கற சம்பளத்தில் குடும்பம் நடத்தப் பழகிக்கணும். கூடுதல் தொகையை சேமிக்கக் கத்துக்கணும். ஏன்னா உன்ன மாதிரி, நம்ம மாதிரி ஆளுங்களுக்கு எப்போ வேலை போகும் என்பது தெரியாது. அப்போ அவஸ்தைப் படக் கூடாது என்றார். இப்போது வரை அதை நான் செய்து கொண்டிருக்கிறேன்.

இந்தத் தொகுப்பு பல்வேறு கட்டங்களில் எழுதியது. அந்தந்த ஆண்டு போடப்பட்டிருக்கிறது. ஆனாலும் இன்னும் அவை பொருத்தம் உள்ளவை. உதாரணமாக, இதில் மம்தா பானர்ஜி குறிப்பிட்ட சாலைகளில் சைக்கிள் ஓட்டத் தடை கொண்டுவந்ததைப் பற்றிய கட்டுரை இருக்கிறது. எந்த விமர்சனமும் இன்றி இருப்பதை அப்படியே கொடுத்திருந்த கட்டுரை. திருணாமூல் என்றால், புல்லின் வேர்-அடிப்பாகம் என்று பொருள். அப்படி கடைசியில் உள்ள மனிதருக்கான இயக்கம் என்று பேரை வைத்துக் கொண்டு, சாதாரண மனிதர்கள் சைக்கிள் ஓட்டத் தடை, மீறினால் அது வேக வாகனங்கள் செல்ல பிரச்சனை ஏற்படுத்துகிறது என்று அதற்கு ரூ 500 அபராதம் என்று ஓர் அரசு சொல்லுமானால் என்ன ஜனநாயகம் இது?

ஏற்புரைக்குப் பிறகு கலந்துரையாடல் தொடங்கியது.
வந்திருந்தோர் .பேசலாம் என்றனர். முதல் பார்வையாளராக எனது கருத்துக்களை அங்கே தெரிவித்தேன்:

அதன் சுருக்கம்:

அழகிய பெரியவன் கவிதை ஒன்று, மரணப் படுக்கையில் இருக்கும் பாட்டி குறித்துப் பேசுகிறது. அவள் சாவு வராது இழுத்துக் கொண்டிருப்பதை,

காலப் பூனையிடம்
சுண்டெலி போல
ஆட்டம் காட்டிக் கொண்டிருக்கிறது
பாட்டியின் உயிர்

என்று தொடங்குகிறது. பிறகு,
பாட்டியிடம் கற்றுக் கொள்கிறோம்
அடங்க மறுத்தலை…

என்று முடிகிறது. சம காலத்தில் என்ன நடக்கிறது. அமெரிக்க சிந்தனையாளர் நோம் சாம்ஸ்கி சொல்வதுபோல், சம்மதத்தை உற்பத்தி செய்ய வைக்கின்றனர். (MANUFACTURING THE CONSENT ). நாமே ஏற்றுக் கொள்வதுபோல் அத்தனை அநியாயங்களும் நடக்கின்றன. அடங்க மறுப்பது, எதிர்ப்பது, கேள்விகளை எழுப்புவது இவற்றை இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய காலமிது.

சுதேசி இயக்கத்தில் முகிழ்த்தது இந்தியன் வங்கி. பாரதி நவம்பர் 1906ல் இந்தியா பத்திரிகையில் செட்டி நாட்டு சீமான்களே என்று தொடங்கி உள்நாட்டு முதலாளிகள் ஏன் வங்கி தொடங்கக் கூடாதென்றார். 1907 ஆகஸ்ட் 15 அன்று இந்தியன் வங்கி பிறந்தது. இன்று எல்லாவற்றையும் விற்கத் துடிக்கின்றனர் ஆட்சியாளர்கள். கோயில் பூசை செய்வோன் சிலையைக் கொண்டு விற்றல் போலும் என்றார் மகாகவி.

சொத்துக்களை மட்டுமல்ல, விழுமியங்களை, பண்பாட்டின் கூறுகளை, கருத்துக்களை, எத்தனையோ அம்சங்களைப் பறிகொடுக்கும் அபாயமான காலம் இது.

மக்களுக்கு செய்தி சொல்பவர்கள் மட்டுமல்ல, புலம்புவது அல்ல, எதிர்ப்பின் குரலை எழுப்பும் செய்தியாளர்கள் தேவை. அரிதான வரிசையில் சமஸ் அற்புதமாக நமக்குக் கிடைத்திருக்கிறார். இன்னும் இன்னும் பரந்துபட்ட தளங்களில் மேலும் மேலும் கூர்மையான எழுத்துக்களை எதிர்பார்ப்போம் என்று சொல்லி வாழ்த்தி மகிழ்கிறேன்.

அன்புடன்

எஸ் வி வேணுகோபாலன்

***************

சமஸ் எழுதும் வலைப்பூ முகவரி:

http://writersamas.blogspot.in/

***********

யாருடைய எலிகள் நாம்
நூலுக்கு ஜெயமோகன், ஞாநி, எஸ் வி ராஜதுரை, அ முத்துலிங்கம் நால்வரும் அணிந்துரை எழுதி உள்ளனர்.

சமஸுடைய மொழிநடை அபூர்வமானது……
அ முத்துலிங்கம்

இந்தத் தொகுப்பு வெளிவந்ததும் பல நோக்கிலிருந்து எதிர்வினைகள் வரலாம். ஆனால் கட்டுரைகளில் உள்ள தரவுகளின் ஆதாரங்களை யாரும் கேள்விக்குட்படுத்த முடியாது – எஸ் வி ராஜதுரை

சாமர்த்தியமான எழுத்தினால் தன்னை வித்தியாசமாகக் காட்டிக் கொண்டால் போதுமென்று நினைப்பவர் அல்ல சமஸ். மெய்யாகவே எது சரிஎன்று தான் நம்புபவரோ
அதன் பக்கம் நிற்பவர்.
– ஞாநி

மேலும் மேலும் வணிகமயமாகி நுகர்வுமயமாகி வரும் உலகில் ஜனநாயகம், மனிதாபிமானம், சமத்துவம் போன்ற விழுமியங்களின் இடமென்ன என்ற கேள்வியையும், ஐயத்தையும் எழுப்புகின்றன சமஸின் கட்டுரைகள் – ஜெயமோகன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *