நீ.. இயக்குனர் சிகரம் மட்டுமல்ல.. இயக்குனர்களில் சிகரம்!
காவிரி மைந்தன்
நீ..
இயக்குனர் சிகரம் மட்டுமல்ல..
இயக்குனர்களில் சிகரம்!
அகரமுதல எழுத்தெல்லாம் என்று ஆரம்பிக்கும் உன் திரைப்பட ஒலி..
ஆண்டுகள் பலவாய் தமிழகத்தில் வலம்வந்த திருப்பெயர் பாலச்சந்தர்!
சூப்பர் ஸ்டாரையே உருவாக்கிய பிரம்மா நீதான்!
உலக நாயகனின் விஸ்வரூபத்திற்கு மூலம் நீதான்!
மனதில் உறுதி வேண்டும் என்று எங்கள் மனதில் விதைத்தவன் நீதான்!
வறுமையின் நிறம் சிவப்பு என்று திரையில் கவிதை எழுதியவன் நீதான்!
மன்மதலீலை என்னும் திரைப்படத்தை மறக்கத்தான் முடியுமா?
சொல்லத்தான் நினைக்கிறேன் என்று சொன்னால் அங்கும் நீதான்!
நினைத்தாலே இனிக்கும் என்கிற பல்லவி உனக்கல்லவா பொருந்தும்!
அவள் ஒரு தொடர்கதை என்று ஒரு பெண்ணின் அவலத்தைத்
திரையில் சொன்னவன் நீயல்லவா? மூன்று முடிச்சு .. அவர்கள்
என்று எதிர்நீச்சலிட்டவன் நீதானே! நாடகத்துறையில் தடம்பதித்து
திரைத்துறையில் சாதனைகளை எட்டியவன் நீ! தமிழ்த்திரையில் ஒரு இயக்குனருக்காக ரசிகர்கள் உருவானது முதலில் உனக்குத்தானே!
பாமா விஜயம்.. தில்லுமுல்லு என்று நகைச்சுவையோடு நல்லபடங்கள்
தந்தவன் நீ என்பதால் .. எங்களுக்குத் தீபாவளி உன் படம்வந்தால்தான்!
சிந்துபைரவி முதலான முத்திரைபதித்த படங்களின் மூலகர்த்தாவே..
உன் அனேக கதைகள் அபூர்வ ராகங்கள்.. தப்புத்தாளங்கள் என்றாலும் அரங்கேற்றம் ஆனவுடன் அவை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவையே!
‘தெய்வத்தாய்’ திரைப்படத்தில் எழுதத் தொடங்கிய திரைச் சரித்திரமே!
நீர்க்குமிழியில் தொடங்கிய உன் இயக்குனர் பயணம்.. வெற்றிகளின் விலாசம் என்றால் கவிதாலயா என்றும்.. அதற்கு முன்னர் கலாகேந்திரா என்றும்தானே அறியப்பட்டது! நெற்றிக்கண் வரை நீ தொட்ட பாத்திரங்கள் இன்றும் எங்கள் மனதில் நிலைநிறுத்தப்பட்டிருக்க.. இந்தச் சமுதாயத்தில் பிறர் சொல்லத் தயங்குகிற விஷயத்தையே கதையின் கருவாக்கி.. அதையே திரைப்படமாய் உருவாக்கி நிழல்களை எல்லாம் நிஜமாய் காட்டியவனே!
உனது பயணத்தில் மிளிராத நடிகரும் இல்லை.. நடிகையும் இல்லை..
எத்தனையோ பேர்களை அறிமுகம் தந்தாய்.. இல்லை அவதாரம் தந்தாய்! அதில் ஒருவர்கூட சோடைபோனதில்லை! எங்களின் பிதாமகன் நீ என்றுதான் இயக்குனர்கள் வரிசையில் நின்று உன்னை தரிசித்தனர்!
கவியரசு கண்ணதாசன் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்
இருவருமே உனக்கு இரு கண்கள்.. இவர்களோடு கூட்டணியமைத்து
எத்தனை முறை மக்கள் சபையில் அமோக வெற்றி பெற்றாய்!
தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு முதல் வான் நிலா..நிலா.. அல்ல..
உன் வாலிபம் நிலா வரை நீங்கள் தொட்ட பாடல்கள் எல்லாம் சூப்பர்ஹிட்!
சிப்பியிருக்குது முத்துமிருக்குது.. பாடல் இசையும் கவிதையும் எப்படி இணைசேருகின்றன என்பதை பாமரனுக்குப் புரியவைத்ததும்..
அபூர்வ ராகங்களில் இறுதிக்காட்சியையே பாடலாக்கித் தந்ததும்
அடுத்த பிறவியிலா இனி நீ செய்துகாட்டப் போகிறாய்?
நீ வாழ்ந்த நாட்களில் உனது ரசிகனாக திரைக்கொட்டகையில் அமர்ந்து கைதட்டி ரசித்து.. அறிவுபூர்வமான இயக்குனர் ‘டச்’களை அனுபவித்தோமே.. எதை எண்ணி இன்று அழ! இன்று உன் இறுதிமூச்சு அடங்கியது என்றார்கள்..
தமிழ்திரையில் நீ போட்டுவைத்திருக்கும் கோலங்கள் சினிமா என்பது இருக்கும்வரை பேசப்படும்! நாளைய இயக்குனர்களுக்கு பாதைவகுத்தவன் நீ என்பதை வரலாறு எழுதிவைத்திருக்கிறது! விண்ணுலகம் செல்லும் நீ கவியரசோடு கலந்து கதை சொல்லிக் காட்டு! அவர் கவிதையெழுதி நீட்டுவார்!
உம்மை நாங்கள் நடத்திய இருபெரும்விழாக்களில் பங்கேற்கச் செய்த பெருமை இப்பிறவியில் யாம் பெற்ற பேரின்பமாய் கருதுவோம்! (1994 & 2003)..
கவியரசு கண்ணதாசன் விருது உங்களுக்கு யாம் தந்ததும் உண்டு.. 1994..
உன் கையால் கே.ஜே.யேசுதாஸுக்கும்.. சரோஜாதேவிக்கும்..
டி.ஆர்.பாப்பாவிற்கும் கண்ணதாசன் விருதுகள் வழங்கியதும் உண்டு (2003)
இதுவெல்லாம் தெய்வ சங்கல்பம்! இறைவனின் விருப்பம்!
இமைகளை நனைக்கிற விழிநீரை நிறுத்திட இன்று இயலவில்லை..
திரைமொழி எங்களுக்குச் சொல்லித்தந்தவனே.. உன் ஆன்மா நிம்மதியின் சன்னதியில் சேரட்டும்! ஆத்மதிருப்தியுடன் விடைபெற்றாய்.. இந்த உலகில் பிறந்ததன் பயனை பொன்னெழுத்துக்களில் எழுதிவிட்டு!!
அன்புடன்
காவிரிமைந்தன் எம்.கே.மணி.. ஏ.கே. நாகராஜன் அ.நாகப்பன்
ந.கோபி.. அப்துல்சலாம் செ.ரவீந்திரன்.. வே.முரளி.. கே.ஜெகன்னாதன்
வித்யா ஜெகன்னாதன்.. கண்ணன் சேகர்.. கே. சுந்தர்
மற்றும் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் (பம்மல்)
சென்னை 600 075