-எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

நெஞ்சுவலி என்று சொல்லி
நீர் கேட்டு அருந்தியவர்
அரை நிமிடம் பேசிவிட்டு
அப்படியே தூங்கி விட்டார்!

தூங்கியவர் எழும்ப வில்லை
துக்கத்தைக் கொடுத்து விட்டு
ஏங்கி நின்று அழுதிடவே
எமனுலகை சென் றடைந்தார்!

தாயோடு பிள்ளைகளும்
தலைதலையாய் அடித்திட்டு
சஞ்சலமாம் கடலினுள்ளே
தாம் மூழ்கிக் கிடந்தனரே!

மூத்தபிள்ளை மணியாக
குடும்பத்தில் இருந்தமையால்
முழுப்பேரும் மணியினையே
முதலாகக் கொண்டுநின்றார்!

தந்தையில்லாக் குடும்பமதில்
தங்கைமார் ஐவருடன்
தாயுமே சேர்ந்து அவன்
தயவினையே பார்த்திருந்தார்!

மணிகுடும்ப நிலைகண்டு
மாதவனும் மனமிரங்கி
மருந்துக் கடைதன்னில்
மணிக்கு வேலைகொடுத்தனனே!

மணிவீட்டில் யாவருமே
வயிராற உண்பதற்கு
மருந்துக் கடைவேலை
மாமருந்தாய் ஆகியதே!

மணியனது வேலைகண்டு
மலைத்து நின்ற மாதவனும்
மானேஜர் பதவியிலே
மணியையுமே அமர்த்தினரே!

மணியறிவு மணியழகு
மாதவனைக் கவர்ந்தமையால்
மாப்பிள்ளை ஆக்கிவிட்டான்
மணிதன்னை மாதவனும்!

மணியினது மனத்தினிலே
பணத்தாசை பிடித்ததனால்
மனம்போன போக்கினிலே
பணம்பண்ணத் தொடங்கிவிட்டான்!

மருந்துக்கடை இப்போது
மணிவசத்தில் வந்தமையால்
கலப்படத்தைக் கையாண்டு
காசுழைக்கத் தொடங்கிவிட்டான்!

காசுவந்த காரணத்தால்
கடவுளையே மறந்தான்
கஷ்டப்பட்டு வந்ததையும்
கவனத்தில் கொள்ளவில்லை!

கலப்பட மருந்தினாலே
கணக்கின்றி நுடங்கிவிட்டு
கவலைப்பட்டு நிற்போரை
கருத்திலும் கொள்ளவில்லை!

நாட்பட்ட மருந்தையெல்லாம்
நல்லமருந்த தோடிணைத்து
மேல்பட்ட விலைக்குவிற்று
விரைவாகப் பணம்சேர்த்தான்!

பப்பாளிவிதை தன்னை
பக்குவமாய் பதப்படுத்தி
மிளகோடு சேர்த்துஅவன்
வெகுலாபம் ஈட்டிநின்றான்!

நாட்பட்ட பால்மாவை
நல்லமாவுடன் கலந்து
நம்பவைத்து எல்லோர்க்கும்
நயமாக விற்றுவந்தான்!

பணம்பணமாய் அவன்குவித்தான்
பண்பையவன் இழந்துநின்றான்
பத்துமாதம் சுமந்ததாய்
பதைபதைத்து நின்றிருந்தாள்!

பெண்கொடுத்த மாதவனும்
பித்துப்பிடித்து நின்றான்
கைபிடித்த மனையாளும்
கதிகலங்கி அங்குநின்றாள்!

காசுகாசாய் உழைத்தவனின்
கண்களிலே வியாதிவந்து
ஏறாதபடி இடமெல்லாம்
இறைத்தானே காசையெல்லாம்

சத்திரசிகிச்சை செய்தால்
சரியாக வருமென்றெண்ணி
முத்திரைபதித்த டாக்டர்
மூலமாய் செய்துநின்றான்!

சிகிச்சையின் போதுஅங்கு
கொடுத்திட்ட மருந்துயாவும்
சிக்கலை உண்டுபண்ணி
சிதைத்ததே வாழ்வுதன்னை

காசுழைத்தை மணிகண்கள்
காட்சிகாண மறுத்ததனால்
காசுகளை மணிகண்கள்
காணவே முடியவில்லை!

முத்திரை பதித்தடாக்டர்
மூச்சுவிடும் இடத்திலெல்லாம்
மணியினது கலப்படமே
மலிந்துமே இருந்ததுவே!

கலப்படத்தை கைக்கொண்ட
மணியினது மருந்திப்போ
கலப்பட மன்னனது
கண்களையே கலக்கியது!

மணியினது குடும்பத்தார்
மனம்நொந்து டாக்டரிடம்
மணிபார்வை வருவதற்கு
வழியுண்டா எனக்கேட்டார்!

கலப்பட மருந்தெல்லாம்
கண்டபடி உலவுவதால்
சிகிச்சையின் போதுஅது
சிக்காலாய் போச்சுயிங்கே!

இப்படி மருந்துவிற்கும்
எளியவரின் கூட்டத்தை
இறக்கும்வரை தூக்கிலிட
வேண்டுமென்றார் டாக்டருமே!

வீட்டிற்கு வந்தவுடன்
விவரத்தைச் சொன்னார்கள்
மெளனமாய் அவனிருந்தான்
மனமங்கே அழுததுவே!

கலப்படத்தால் கண்ணிழந்தோர்
காதிழந்தோர் எத்தனைபேர்
கலப்படத்தால் காலனிடம்
கட்டுண்டார் எத்தனைபேர்!

நாளாந்தம் கலப்படங்கள்
நாட்டில் உலாவருவதற்கு
நல்லதொரு பாடத்தை
நானறிந்தேன் எனநினைந்தான்!

மணிபோல எத்தனைபேர்
அணிவகுத்து நிற்கின்றார்
இனிமேலும்பொறுக்காமல்
எதிர்த்திடுவோம் கலப்படத்தை!

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “எதிர்த்திடுவோம் கலப்படத்தை!

  1. அடுத்தொரு தலைப்பு கலப்படம்..அதை நாம் எதிர்ப்போம் என்றொரு முத்தாய்ப்பு.. தொடுத்திட்ட கருத்தின் ஓட்டம் கதையாய் ஓடிடும் பாங்கு.. கவிதையெனும் வழியால் எதுகை மோனைகள் தாங்கி.. எண்ணிய கதையை எழுத்தில்வடிக்க.. எடுத்துக்கொள்ளும் முயற்சி!  அங்கே அவ்விடம் நாமும் பாத்திரமாக சேரவைப்பதே உமது வெற்றி!! தன்வினை தன்னைச்சுடும் என்பதை மறந்த சுயநலக்கூட்டங்கள் இவ்வுலகில் ஒன்றிரண்டல்ல.. ஓராயிரமே இன்று காண்கின்றோம்!  நல்லது அல்ல என்பது தெரிந்தும் தான் வாழ்ந்தால் போதுமென்கிற மனப்பான்மை பிறரது வீட்டில் கொள்ளிவைக்கத் துணிந்தவராகவே உலா வருகிறார்!  

    அடிமனம் சுடுகிற அநியாயம் இதுவென்று இருந்தாலும் அவர் வாழ்வில் உயரங்கள் தொடுகின்றார்!  இறுதியில் வருகின்ற தீர்ப்பதில் மாற்றமில்லை.. என்றாலும் இதனால் இடையினில் எத்தனை எத்தனை உயிர்கள் பலிவாங்கப்படுகின்றன என்பதை ஏனோ மறக்கின்றார்?  தன்னுயிர்.. தம் மக்கள் என்று வரும்போது தவிக்கின்ற தவிப்புதான் ஏனைய உயிர்தம் பிரிவிலும் ஏற்படும் என்பதை உணர்ந்தால் மட்டுமே மருந்திலும் கலப்படம் செய்கின்ற மாந்தர் திருந்திட வழிகளுண்டு!  சட்டங்கள் ஆயிரம் ஜகத்தினில் இருந்தும்.. சம்பளம் தவிர..கிம்பளம் கிடைப்பதால் காவலரும்கூட அவரோடு கைகோர்க்கின்றார்!  

    கொடுமையின் உச்சங்கள் கொடிகட்டிப் பறப்பதால் அடிமையாய் பொதுமக்கள் வாழ்கின்ற அவலங்கள் நேருதே!  உரிமையை நிலைநாட்டி உயிர்கள் வாழ்ந்திட உலகம் முழுவதும் ஒரு நிலை வரட்டுமே!!

    அன்புடன்..

    காவிரிமைந்தன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *