மார்கழி மலர்கள் – இதுதான் இதுதான் அதுவா (பாடல்)
இசைக்கவி ரமணன்
இசைக்கவியாரின் இசையில் இலயிக்க இதோ..
https://soundcloud.com/vallamai/mp3
இதுதான் இதுதான் அதுவா
இதயம் முழுதும் மதுவா
இகமும் பரமும் சுகமா
இதற்கொரு பெயர்தான் சிவமா
உருவில் மயங்கிடும் உள்ளம், அதை
உருவால் மயக்கும் கள்ளம்
அருவே அறியா நெஞ்சம், அதன்
அருமை கவிதையில் கொஞ்சும்
அகமும் புறமும் ஆனந்தம், அது
அலையலையலையாய்ப் புரளும்
உருவும் அருவும் பிரியும் தருணம்
ஒருவித மர்மம் புரியும், அங்கு
உமையின் உயிரின் ஒளிமுகம் விரியும் (இதுதான்)
இளமை நிலையாய் வளரும், சிறு
இதயம் லஹரியில் இளகும்
உளமுழுதும் ஒரு புளகம், அதில்
உயரிய நிலைபல குலவும்
குளமாய் விழிகள் பொங்கும், ஒரு
துளியில் உலகே தங்கும்
சிவமே லயமே உயிரே எனவே
சின்னச் சின்ன வார்த்தைகள் மிளிரும், அந்தச்
சித்திரக் கணங்களிலென் சிவன்முகம் ஒளிரும் (இதுதான்)
22.12.2014 / 8.40 / ஹைதராபாத் விமான நிலையம்