Blog

  • கம்பனும் வால்மீகியும் – இராமாயண இலக்கிய ஒப்பீடு – 4

    கம்பனும் வால்மீகியும் – இராமாயண இலக்கிய ஒப்பீடு –  4

    ஒரு அரிசோனன்

    kamban valmiki 4b

    சீதை அப்பழுக்கற்றவள் என்று அறிந்தும் அவளை தீக்குளிக்கும் நிலைக்கு இராமன் ஏன் தள்ளினார் என்று இன்றுவரை பலவிதமான வாதங்கள், ஆராய்ச்சிகள், பாத்திரப் பகுப்புகள் (character analysis) செய்யப்பட்டுக் கொண்டுதான் வருகின்றன. இராமாயணம் இவ்வையகத்தில் உள்ளவரை இவை ஓயப்போவதில்லை. அதில் அதிக நேரம் செலவிடாது, அந்நிகழ்ச்சியைக் கவிமுனி வால்மீகியும், கவிச்சக்கரவர்த்தி கம்பனும் எப்படிக் கையாண்டிருக்கிறார்கள் என்பதைக் காண்போம்.

    பள்ளி இறுதி ஆண்டில் நான் வடமொழி வகுப்பில் பயின்ற பகுதிதான் வால்மீகி இராமாயணத்தில் யுத்த காண்டத்தில் வரும் இராம-சீதை வாக்குவாதம். இதையே இராமாயணத்தின் மிகச் சிறந்த பகுதியாக நான் எண்ணுகிறேன். சீதையின் வாதத் திறமையும், அவளது கற்பின் சீரிய மென்மையும் இங்குதான் புலப்படுத்தப் படுகிறது. என்னைப் பொறுத்தவரையில் இப்பகுதி சீதையின் பொற்பை, கற்பை, சிறப்பை, உலகுக்கு எடுத்துக் காட்டவே வடிவமைக்கப்பது என்றே தோன்றுகிறது.

    …இராவணன் போரில் வீழ்ந்து படுகிறான். அனுமன் சீதாப்பிராட்டிக்கு இந்த நற்செய்தியைக் கூறி, அவளை, இராமன் இருக்குமிடம் அழைத்து வருகிறான். அண்ணலும், அன்னையும் மீண்டும் ஒன்று சேரும் நன்நிகழ்ச்சியைக் காண மன்னவரும், விண்ணவரும், தானவரும் ஒருசேர அங்கு குழுமி இருக்கின்றனர்…

    வால்மீகியின் யுத்தகாண்டத்தின் 115வது சர்க்கத்தில் துவங்குவோம்:

     

    இருபத்திமூன்று சுலோகங்களில் இராமன் சீதையிடம் சொன்ன வார்த்தைகளை மொழிமாற்றம் செய்யும் பொது என் விரல்கள் தடுமாறுகின்றன. என் கண்கள் குளமாகின்றன.  கற்பில் சிறந்த சீதைக்கா இந்நிலை ஏற்பட்டது என்று என் மனம் கலங்குகிறது. என் மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு தொடர்கிறேன்.

    तां तु पार्श्वे स्थितां प्रह्वां रामः संप्रेक्ष्ये मैथिलीम् |

    हृदयान्तर्गतं भावं व्याहर्तुमुपचक्रमे || ६-११५-१

    தாம் து பார்ச்வே ஸ்திதாம் ப்ரஹ்வாம் ஸம்ப்ரேக்ஷ்யே மைதிலீம் |

    ஹ்ருதய அந்தர்கதம் பாவம் வ்யாஹர்த்தும் உபசக்ரமே || 6-115-1

    एषासि निर्जिता भद्रे शत्रुं जित्वा रणाजिरे |

    पौरुषाद्यदनुष्ठेयं मयैतदुपपादितम् || ६-११५-२

    ஏஷாஸி நிர்ஜிதா பத்ரே சத்ரும் ஜித்வா ரணாஜிரே |

    பௌருஷாது  யத் அனுஷ்ட்டேயம் மயை: தது உபபாதிதம் || 6-115-2

    गतोऽस्म्यन्तममर्षस्य धर्षणा संप्रमार्जिता |

    अवमानश्च शत्रश्च युगपन्निहतौ मया || ६-११५-३

    கதோஅஸ்ம்யந்தமமர்ஷஸ்ய தர்ஷணா ஸம்ப்ரமார்ஜிதா ||

    அவமானச்ச சஸ்த்ரச்ச யுகபன்னிஹதௌ மயா || 6-115-3

    अद्य मे पौरुषं दृष्टमद्य मे सफलः श्रमः |

    अद्य तीर्णप्रतिज्ञोऽहं प्रभवाम्यद्य चात्मनः || ६-११५-४

    அத்ய மே பௌருஷம் திருஷ்டம் அத்ய மே ஸபல: ஸ்’ரம: |

    அத்ய தீர்ணப்ரதிஞோ அஹம் பிரபவாம்யத்ய சாத்மன: || 6-115-5

    தன் அருகில் தலை குனிந்து நின்ற மைதிலியை நன்றாகப் பார்த்த இராமனோவேன்றால், தன் இதயத்தினுள் சென்ற உணர்ச்சிகளைச் சொல்ல ஆரம்பித்தார்.

    நல்லாளே! ஆண்மையால் எதைச் செய்யவேண்டுமோ, என்னால் அது போர்க்களத்தில் எதிரியை வென்று (வெல்வதன் மூலம்) செய்யப்பட்டதால், (நீ) மீட்கப்ப்பட்டு இருக்கிறாய். தாக்குதல் முடிந்து, கோபத்தின் முடிவை அடைந்து இருக்கிறேன்.

    என்னால் எதிரிகளும், அவச்சொல்லும் உடனே அழிக்கப்பட்டார்கள். இப்பொழுது என்னுடைய ஆண்மை (அனைவராலும்) பார்க்கப்பட்டது. இன்று என் முயற்சி வெற்றி அடைந்தது.

     இன்று நான் வாக்குறுதியைக் காப்பாற்றி உள்ளேன்.  இப்பொழுது என் ஆத்மாவுக்கே மன்னனாகி இருக்கிறேன். — 6.115.1-4

    … இப்படிச் சொன்ன இராமன், அனுமன் முதல் விபீஷணன் வரை தனக்கு உதவி செய்த ஒவ்வொருவரையும் குறிப்பிட்டு, அவர்களின் முயற்சி பயனளித்தது, தன் மானத்தையும், தனது குலத்திற்கு அவப்பெயர் ஏற்படாதவாறு காத்துக்கொள்ளவும், இராவணனை வதைத்து உன்னை மீட்டேன் என்று சீதையிடம் சொல்லுகிறார்…

    पश्यतस्तां तु रामस्य समीपे हृदयप्रियाम् |

    जनवादभयाद्राज्ञो बभूव हृदयं द्विधा || ६-११५-११

    பஸ்யதஸ்தாம் து ராமஸ்ய சமீபே ஹ்ருதயப்ப்ரியாம் |

    ஜனவாத பயாது ராஜோ பபூவ ஹ்ருதயம் த்விதா || 6-115-11

    அருகில் (இருந்த) நெஞ்சிற்கு இனியவளான அவளைப் பார்த்தும், மக்களின் தூற்றத்தால் (நேரும்) அச்சத்தால் அரசர் இராமனுடைய நெஞ்சம் இரண்டாகியது. – 6.115.11

    …தன் மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு, நல்லாள் சீதையை நோக்கிக் கடும் சொற்களை வீச ஆரம்பித்தார்…

    यत्कर्तव्यं मनुष्येण धर्षणां प्रतिमार्जता |

    तत्कृतं रावणं हत्वा मयेदं मानकाङ्क्क्षिणा || ६-११५-१३

    யத்கர்த்தவ்யம் மனுஷ்யேண தர்ஷணாம் ப்ரதிமார்ஜதா |

    தத்க்ருதம் ராவணம் ஹத்வா மயேதம் மானகாங்விக்ஷணா || 6-115-13

    இந்த மானக் கேட்டினால் (ஏற்பட்ட) இழிவைத் துடைக்க, மனிதனால் எக்கடமை (செய்யப்பட) வேண்டுமோ, அது இராவணனைக் கொன்று என்னால் செய்யப்பட்டது – 6.115.13

    विदितश्चास्तु भद्रं ते योऽयं रणपरिश्रमः |

    सुतीर्णः सुहृदां वीर्यान्न त्वदर्थं मया कृतः || ६-११५-१५

    விதிதச்சாஸ்து பத்ரம் தே யோஅயம் ரணபரிச்ரம: |

    ஸுதீர்ண: ஸுஹ்ருதாம் வீர்யான்ன த்வதர்த்தம் மயா க்ருத:|| 6-115-15

    रक्षता तु मया वृत्तमपवादम् च सर्वतः |

    प्रख्यातस्यात्मवंशस्य न्यङ्गं च परिमार्जता || ६-११५-१६

    ரக்ஷதா து மயா வ்ருத்தமபவாதம் ச ஸர்வத: |

    ப்ரக்யாதஸ்யாத்மவம்சஸ்ய ந்யங்கம் ச பரிமார்ஜதா || 6-115-16

    प्राप्तचारित्रसंदेह मम प्रतिमुखे स्थिता |

    दीपो नेत्रातुरस्येव प्रतिकूलासि मे दृढम् || ६-११५-१७

    ப்ராப்த சாரித்ர சந்தேஹ மம ப்ரதிமுகே ஸ்த்திதா |

    தீபோ நேத்ராதுரஸ்யேவ ப்ரதிகூலாஸி மே த்ருடம் || 6-115-17

    तद्गच्छ त्वानुजानेऽद्य यथेष्टं जनकात्मजे |

    एता दश दिशो भद्रे कार्यमस्ति न मे त्वया || ६-११५-१८

    தத்கச்ச த்வாநுஜானே அத்ய யதேஷ்டம் ஜனகாத்மஜே |

    ஏதா தச திசோ பத்ரே கார்யமஸ்தி ந மே த்வயா || 6-115-18

    कः पुमांस्तु कुले जातह् स्त्रियं परगृहोषिताम् |

    तेजस्वी पुनरादद्यात् सुहृल्लेख्येन चेतसा || ६-११५-१९

    க: புமாம்ஸ்து குலே ஜாதஹ ஸ்த்ரியம் பரக்ருஹோஷிதாம் |

    தேஜஸ்வீ புனராதத்யாது ஸுகல்லேக்யேன சேதஸா || 6-115-19

    எந்தப் போர் முயற்சி சிறப்பாக வீரமிக்க என் நண்பர்களின் உதவியுடன் என்னால் செய்யப்பட்டதோ, அது உன் பொருட்டு அல்ல என்று தெரிந்து கொள்).  நீ நன்றாக இருப்பாயாக!

    நற்பெயருக்கு எல்லா இடத்திலிருந்தும் (வரும்) இழுக்கையும், புகழ்வாய்ந்த என் குலத்தின் (மீது ஏற்படும்) குற்றச்சாட்டையும் துடைத்தெறிய என்னால் காப்பாற்றிக் கொள்ளப்பட்டது.

    நடத்தையில் சந்தேகம் அடைந்தவளாக  என் முன் நிற்கும் (நீ) கண் பார்வை அற்றவன் முன் இருக்கும் விளக்கைப் போல என் (மனதைப்) புண்படுத்துகிறாய்.

    ஜனகரின் மகளே! நல்லாளே! எனக்கு உன்னால் ஒரு காரியமும் ஆக வேண்டியதில்லை. இப்பொழுது உன் விருப்பப்படி பத்துத் திசைகளில் எங்கும் செல்ல (உன்னை) அனுமதிக்கிறேன்.

    அந்நியன் வீட்டில் இருந்த பெண்ணை நற்குலத்தில் பிறந்த உயர்ந்தவன் எவன் ஆவலுடன் திரும்ப ஏற்றுக்கொள்வான்? – 6.115.15-19.

    இவ்வாறு சீதையைப் பார்த்துக் கடும் சொற்களை அள்ளி வீசிய இராமன், வெந்த புண்ணில் வேலைச் சொருகுவது போன்ற வார்த்தைகளைச் சொன்னார்….

    तदद्य व्याहृतं भद्रे मयैतत् कृतबुद्धिना |

    लक्ष्मणे वाथ भरते कुरु बुद्धिं यथासुखम् || ६-११५-२२

    ததத்ய வ்யாஹ்ருதம் பத்ரே மையைதது க்ருதபுத்தினா |

    லக்ஷ்மணே வாத பரதே குரு புத்திம் யதாஸுகம் || 6-115-22

    நல்லவளே! ஆகையால், தீர்மானமான நெஞ்சுடன் என்னால் இவ்விதம் விளக்கப்பட்டது.  எது நலம் அளிக்குமோ, (அவ்வாறு) இலக்குவனையோ, பரதனையோ, உன் மனதில் கொள்.  – 6.115.22

    … அதோடு விடவில்லை. “சத்ருக்னனையோ, சுக்ரீவனையோ, அரக்கன் விபீஷணனையோ, உன் மனத்திற்கு இசைந்தவனையோ, நீ கொள்ளலாம்; மனதுக்கு இனியவளாகவும், மிகுந்த அழகுடனும் உள்ள உன்னைத் தன்னிடத்தில் சிறை வைத்திருந்த இராவணன் உன் பிரிவை அதிக நாள் பொறுத்து இருந்திருக்கமாட்டான்.” என்றும் கூரிய அம்புகளை அள்ளி வீசினார்…

    ततः प्रियार्हश्रवणा तदप्रियं प्रियादुपश्रुत्य चिरस्य मैथिली |

    मुमोच बाष्पं सुभृशं प्रवेपिता गजेन्द्रहस्ताभिहतेव वल्लरी || ६-११५-२५

    தத: ப்ரியார்ஹச்ரவணா தது அப்ரியம் ப்ரியாது உபஸ்’ருத்ய சிரச்ய மைதிலீ |

    முமோச பாஷ்பம் ஸுப்ருசம் ப்ரவேபிதா கஜேந்த்ரஹஸ்தாபிஹதேவ வல்லரீ || 6-115-25

    தனக்குப் பிரியமானவரிடமிருந்து அன்பான சொற்களையே கேட்டுவந்த மைதிலி, இப்படிப்பட்ட நேசமற்ற சொற்களைக் (கேட்டு), நெடுநேரம் மிகவும் நடுங்கினாள். யானையின் துதிக்கையால் பிய்த்தெறியப்பட்ட கொடியைப்போல (ஆகி) கண்ணீரைச் சொரிந்தாள்.  – 6.115.25

    இதற்கு அடுத்த சர்க்கம் முழுவதையும் சீதை, இராமனுக்கு அளிக்கும் பதிலாகப் பதிவு செய்திருக்கிறார் மாமுனி வால்மீகி. கொண்டவனால் எந்தவிதமான குற்றச்சாட்டைக் கேட்கக் கூடாதோ, அதையே பெருங்கூட்டத்திற்கு முன் கேட்டவுடன், அவமானத்தால் கூனிக் குறுகிய சீதை, கண்ணீரால் குளிப்பாட்டப்பட்ட தன் முகத்தை துடைத்துக்கொண்டு, தடுமாறும் குரலில் பதில் கூறினாள் என்று எழுதுகிறார்…

    किं मामसदृशं वाक्यमीदृशं श्रोत्रदारुणम् |

    रूक्षं श्रावयसे वीर प्राकृतः प्राकृताम् इव || ६-११६-५

    கிம் மாமஸத்ருஸ’ம் வாக்யமீத்ருஸ’ம் ஸ்ரோத்ரதாருணம் |

    ருக்ஷம் ச்ராவயசே வீர ப்ராக்ருத: ப்ராக்ருதாம் இவ || 6-116-5

    पृथक्स्त्रीणां प्रचारेण जातिं त्वं परिशङ्कसे |

    परित्यजेमां शङ्कां तु यदि तेऽहं परीक्षिता || ६-११६-७

    ப்ருதக்ஸ்த்ரீணாம் ப்ரசாரேண ஜாதிம் த்வம் பரிசங்கசே |

    பரித்யஜே மாம் சட்காம் து யதி தே அஹம் பரீக்ஷிதா || 6-116-5

    यद्यहं गात्रसंस्पर्शं गतास्मि विवशा प्रभो |

    कामकारो न मे तत्र दैवं तत्रापराध्यति || ६-११६-८

    யத்யஹம் காத்ர ஸம்ஸ்பர்ஸ’ம் கதாஸ்மி விவசா ப்ரபோ |

    காமகாரோ ந மே தத்ர தைவம் தத்ராபராத்யதி || 6-116-5

    मदधीनं तु यत्तन्मे हृदयं त्वयि वर्तते |

    पराधीनेषु गात्रेषु किं करिष्याम्यनीश्वरा || ६-११६-९

    மததீனம் து யத்தன்மே ஹ்ருதயம் த்வயி வர்த்ததே |

    பராதீனேஷு காத்ரேஷு கிம் கரிஷ்யாமயனீஸ்வரா || 6-116-9

    सहसंवृद्धभावाच्च संसर्गेण च मानद |

    यद्यहं ते न विज्ञाता हता तेनास्मि शाश्वतम् || ६-११६-१०

    ஸஹஸம்வ்ருத்தபாவாச்ச ஸம்ஸர்கேன ச மானத |

    யத்யஹம் தே ந விஞ்ஞாதா ஹதா தேனாஸ்மி  சாஸ்வதம் || 6-116-10

    வீரரே! இழிந்தவன் (ஒருவன்) இழிந்தவளிடம் (பேசுவதைப்) போல, கேட்பதற்குக் தகாத, இப்படிப்பட்ட கடும் சொற்களை ஏன் என்னைக் கேட்க வைக்கிறீர்?

    தீநடத்தை கொண்ட பெண்களைப் பற்றிக் கேள்விப்பட்டு, பெண் குலத்தையே நீர் நம்ப மறுக்கிறீர்! உம்மால் தேர்வு செய்யப்பட்ட என்னை ஒருவேளை நீர் சந்தேகப்பட்டால், (அதை) விட்டுவிடும்.

    பிரபுவே! ஒருவேளை நான்  (இராவணனின்) உடலின் தொடுதலை அடைந்திருந்தால்  அது வேறுவழியில்லாமல் ஏற்பட்டது. என் விருப்பத்தினால் அல்ல. அங்கு விதிதான் குற்றவாளிவாகும்.

    என்னுடையதான இதயம் என் வசமானது. அது உம்மிடமே உள்ளது. உதவியற்றவளும், அன்னியன் வசத்தில் இருந்த என் உடலை நான் என்ன செய்ய இயலும்?

    கௌரவத்தை அளிப்பவரே! உடன் வளர்ந்த உணர்வினாலும், உடன் பழகியும், நான் உம்மால் அறிந்து கொள்ள இயலாதவள் ஆனாது போனால் (என் நடத்தையைப் பற்றி உம்மால் அறிந்துகொள்ள இயலாது போனால்), அதனால் நிரந்தரமாக அழிந்துபோனேன். – 6.116.5-10

    …”என்னைத் தேடி இலங்கைக்கு அனுமனை அனுப்பினீரே, அப்பொழுதே என்னை விட்டுவிட்டதாக ஏன் தெரிவிக்கவில்லை. அப்படிச் செய்தி அனுப்பி இருந்தால், வானரர் தலைவனான அனுமனின் கண் எதிரேயே என் உயிரை விட்டிருப்பேனே! நீரும், உமது நண்பர்களும் உங்கள் உயிரைப் பணயம் வைத்து இந்த தேவையில்லாத போரை நடத்தி இருக்க வேண்டியதில்லையே!” என்று வாதிடுகிறாள்…

    त्वया तु नरशार्दूल क्रोधमेवानुवर्तता |

    लघुनेव मनुष्येण स्त्रीत्वमेव पुरस्कृतम् || ६-११६-१४

    த்வயா து நரசார்தூல க்ரோதமேவ அனுவர்த்ததா |

    லகுனேவ மனுஷ்யேண ஸ்த்ரீத்வமேவ புரஸ்க்ருதம் || 6-116-14

    மாந்தரில் புலிக்கு நிகரானவரே!  வலிமையற்ற மனிதனைப்போல பெண்மைக்கே முக்கியத்துவம் அளித்து, உம்மால் கோபமே கைக்கொள்ளப்பட்டது. – 6.116.14

    …ஜனகர் தன்னை வளர்த்தாலும், தான் நிலத்திலேயே பிறந்ததாகவும், அப்படிப்பட்ட சிறந்த பிறப்பையும் மதிக்காமல், இளமையிலேயே தன்னைக் கைப்பிடித்தும், தனது பக்தியையும், கற்பையும் புறக்கணித்ததாக இராமனைக் குற்றம் சாட்டுகிறாள் சீதை.,.

    चितां मे कुरु सौमित्रे व्यसनस्यास्य भेषजम् |

    मिथ्यापवादोपहता नाहं जीवितुमुत्सहे || ६-११६-१८

    சிதாம் மே குரு ஸௌமித்ரே வ்யஸனஸ்யாஸ்ய பேஷஜம் |

    மித்யாபவாதோபஹதா நாஹம் ஜீவிதும்  உத்ஸஹே || 6-116-18

    अप्रीतेन गुणैर्भर्त्रा त्यक्ता या जनसंसदि |

    या क्षमा मे गतिर्गन्तुं प्रवेक्ष्ये हव्यवाहनम् || ६-११६-१९

    அப்ரீதேன குணைர்பர்த்ரா த்யக்தா ஜான்ஸம்ஸதி |

    யா க்ஷமா மே கதிர்கந்தும் ப்ரவேக்ஷ்யே ஹவ்யவாஹனம் || 6-116-19

    …”சுமித்திரையின் மகனே (இலக்குவா)! இந்த துயரத்திற்கான அருமருந்தான சிதையை எனக்காகச் செய். பொய்க்குற்றம் சாட்டப்பட்ட நான் வாழ விரும்பவில்லை. மக்கள் சபை முன்னால், என் குணங்களால் நிறைவு பெறாத, கணவரால் கைவிடப்பட்ட நான் செல்லக்கூடிய (ஒரே) வழியான நெருப்பில் புகுவேன்”. – 6.116.18&19

     हि रामं तदा कश्चित्कालान्तकयमोपमम् |

    अनुनेतुमथो वक्तुं द्रष्टुं वा प्यशकत्सुहृत् || ६-११६-२२

    ஹி ராமம் ததா கஸ்சித்காலாந்தகயமொபமம் |

    அனுனேதுமதோ வக்தும் த்ருஷ்டும் வா ப்யசகத்ஸுஹ்ருது || 6-116-22

    அப்பொழுது  காலனைப்போன்று (தோன்றிய) இராமனையோ அங்கு யாரும் சொல்லவோ, பார்க்கவோகூட திறனற்றவர் ஆயினர். – 6.116.22

    यथा मे हृदयं नित्यं नापसर्पति राघवात् |

    तथा लोकस्य साक्षी मां सर्वतः पातु पावकः || ६-११६-२५

    யதா மே ஹ்ருதயம் நித்யம் ந அபஸர்ப்பதி ராகவாது |

    ததா லோகஸ்ய ஸாக்ஷீ மாம் ஸர்வத: பாது பாவக: || 6-116-5

    எப்பொழுது என் இதயம் இராகவனிடமிருந்து அனுதினமும் நகர(பிரிய)வில்லையோ அப்பொழுது உலகத்தின் சாட்சியான அக்னி என்னைப் பாதுகாக்கட்டும்.  – 6.116.25

    …எப்படிச் சொல்லிவிட்டு சீதை கொழுந்துவிட்டு எரியும் தீயில் புகுந்து விடுகிறாள்.  அதைக்கண்டு மனிதர், வானரர், வானவர், அரக்கர் அனைவரும் கூக்குரல் இடுகிறார்கள்…

    ततो हि दुर्मना रामः श्रुत्वैवम् वदतां गिरः |

    दध्यौ मुहूर्तं धर्मात्मा बाष्पव्याकुललोचनः || ६-११७-१

    ததோ ஹி துர்மனா ராம: ஸ்’ருத்வைவம் வததாம் கிர: |

    தத்யௌ முஹூர்த்தம் தர்மாத்மா பாஷ்பவ்யாகுலலோசன: || 6-117-1

    அப்பொழுது இப்படிப்பட்ட  கூக்குரலிட்ட சொற்களைக் கேட்டு, அறநெறி உள்ளத்தவரான (தர்மாத்வான) இராமன் நீர் நிறைந்த கண்களுடனும், கலங்கிய மனத்துடனும் சற்று சிந்தித்தார். – 6.117.1

    …சிதையைச் சிதற அடித்துக்கொண்டு, சீதையுடன் தீக்கடவுளான அக்னி தோன்றினான்…

    नैव वाचा न मनसा नैव बुद्ध्या न चक्षुषा |

    सुवृत्ता वृत्तशौण्डीर्यं न त्वामत्यचरच्छुभा || ६-११८-६

    நைவ வாசா ன மனஸா நைவ புத்யா ந சக்ஷுஷா |

    ஸுவ்ருத்தா வ்ருத்தஸௌண்டீர்யம் ந த்வாமத்யசரச்சுபா || 6-118-6

    சொற்களாலோ, மனதாலோ, நடத்தையாலோ, கண்களாலோ, நன்னடத்தையுள்ள, நல்லொழுக்கமுள்ள (இந்த) மங்கலச் செல்வி (சீதை) உன்னை விட்டு விலகவில்லை. – 6.118.6

    kamban valmiki 4a

    … சீதை அப்பழுக்கற்றவள் என்று அக்கினித் தேவன் ஏழு சுலோகங்களில் இராமனுக்கு எடுத்து இயம்புகிறான். அதைச் செவியுற்ற இராமன் தீக்கடவுளுக்கு பதில் அளிக்கிறார்…

    अनन्यहृदयां भक्तां मचत्तपरिवर्तिनीम् |

    अहमप्यवगच्छामि मैथिलीं जनकात्मजाम् || ६-११८-१५

    அனன்யஹ்ருதயாம் பக்தாம் மசத்தபரிவர்த்திநீம் |

    அஹமப்யவகச்சாமி மைதிலீம் ஜனகாத்மஜாம் || 6-118-15

    इमामपि विशालाक्षीं रक्षितां स्वेन तेजसा |

    रावणो नातिवर्तेत वेलमिव महोदधिः || ६-११८-१६

    இமாமபி விசாலாக்ஷீம் ரக்ஷிதாம் ஸ்வேன தேஜஸா |

    ராவணோ நாதிவர்த்தேத வேலமிவ மஹோததி: || 6-118-16

    प्रत्ययार्थं तु लोकानां त्रयाणाम् सत्यसंश्रयः |

    उपेक्षे चापि वैदेहीं प्रविशन्तीं हुताशनम् || ६-११८-१७

    ப்ரத்யயார்த்தம் து லோகானாம் த்ரயாணாம் ஸத்யஸம்ஸ்’ரய: |

    உபேக்ஷே சாபி வைதேஹீம் ப்ரவிஸ’ந்தீம் ஹுதாஸ’நம் || 6-118-17

    ஜனகரின் மகளான மைதிலியை மாற்றாரிடம் நெஞ்சத்தை (செல்ல விடாதவளும்), பக்தி உள்ளவளும், என் நினைவில் சுற்றிவருபளுமாக நானும் அறிகிறேன்.

    பெருங்கடல் (தன் கரையை எப்படித்) தாண்டமுடியாதோ, (அதேபோல) இந்த அகண்ட கண்களை உடையவளும், தன் (கற்பின்) வலிமையால் (தன்னை) காத்துக்கொள்பவளுமான (சீதை), இராவணனால் பலவந்தப் படுத்த முடியாதவள்.

    சத்தியத்தில் தஞ்சம் புகுந்த மூன்று உலகங்களையும் நம்பவைப்பதற்காகவே நெருப்பில் புகுந்த வைதேகியை அலட்சியம் செய்தேன். – 6.118.15-17

    … பிரம்மாவும், சிவனும், மற்ற எல்லா தேவர்களும் இராமனுக்கு அவர் யார் என்பதைச் சொல்லி, சீதை இலக்குமி என்றும், அவளது கற்பு நிகரில்லாதது என்றும், அவளை ஏற்கவேண்டும் என்றும் உரைக்கிறார்கள்.  இராமனின் தந்தை தயரதனும் வந்து மகனுக்கும், மருமகளுக்கும் வாழ்த்துத் தெரிவிக்கிறார். புஷ்பக விமானத்தில் இராமன் சீதையுடன் அயோத்தியை அடைகிறார்…

     sri-sita-rama-lakshmana-han a

    கம்பராமாயணத்தில், யுத்தகாண்டத்தில், மீட்சிபடலத்தில் துவங்குவோம்:

    … இராவணன் அழிந்ததும், சீதையை அலங்கரித்து அழைத்து வா என்று இராமன் ஆணையிடவே, அனுமன் அசோகவனத்தில் கற்புக்கரசி சீதையைக் கண்டு விவரம் தெரிவிக்கிறான். அசோகவனத்தில் எப்படி இருந்தேனோ, அதைத்தான் தன் கணவரும், விண்ணவரும், முனிவர்களும், மற்றவரும் காண வேண்டும், அலங்கரித்துக்கொண்டு செல்வது முறையாகாது என்று சீதை மறுக்கிறாள்.  விபீடணும் இது இராமபிரானின் கட்டளையாகும் என்று எடுத்துரைக்கவே, சீதை சம்மதிக்கிறாள். அரம்பை, திலோத்தமை முதலான தேவமங்கையர் சீதையை நன்கு அலங்கரிக்கின்றனர்.  வீடணனும், சீதையை இராமனிடம் அழைத்துச் செல்கிறான்…

    சீலமும் காட்டி என் கணவன் சேவகக்

    கோலமும் காட்டி என் குலமும் காட்டி இஞ்

    ஞாலமும் காட்டிய கவிக்கு நாள் அறாக்

    காலமும் காட்டும்கொல் என் கற்பு என்றாள்.  – 9.3948

    நல் ஒழுக்கமும் காட்டி, என் கணவருக்கு (இராமனுக்கு) பணி செய்த விதத்தையும் தெரிவித்து, என் குலத்தையும் (வழக்கமான கற்பு நெறிப்படி நான் ஒழுகுவதையும் இராமனுக்குத்) எடுத்துச் சொல்லி, (சிறைப்பட்டிருந்த எனக்கு) இந்த (வெளி) உலகையும் காண்பித்த வானரப் பெருந்தகைக்கு (அனுமனுக்கு) எனது கற்பின் (வலிமை) நாள் இறுதி இல்லாத காலத்தையும் (சிரஞ்சீவித் தன்மையையும்) கொடுக்கும் என்றாள் (சீதை). 

    … இவ்வாறு அனுமனைச் சிரஞ்சீவியாக இருக்கும்படி ஆசீர்வதித்த சீதை, சிறை நீங்கிய மகிழ்ச்சியுடனும், நெடுநாள் பிரிந்திருந்த கணவரைக் காணும் ஆவலுடனும் வந்து, இராமனை வணங்கி நின்றாள்…

    அணங்குறு நெடுங் கண்ணீர் ஆறு வார்வுற

    வணங்கு இயல்மயிலினை கற்பின் வாழ்வினை

    பணம் கிளர் அரவு என எழுந்து பார்ப்புறா. – 9.3953

    நீண்ட கண்ணீர் ஆறு பெருக, கற்பின் உறைவிடமான, மயிலுக்கு இணையான, (தன்னை) வணங்கும் பெண்ணை (சீதை) படம் எடுத்து எழுந்து நிற்கும் பாம்பைப் போல எழுந்து (சீற்றத்துடன்) பார்த்தான் (இராமன்).

    ஊன் திறம் உவந்தனை ஒழுக்கம் பாழ்பட

    மாண்டிலை முறை திறம்பரக்கன் மாநகர்

    ஆண்டு உறைந்து அடங்கினை அச்சம்தீர்ந்து இவண்

    மீண்டது என் நினைவு எனை விரும்பும் என்பதோ – 9.3954

    இறைச்சியின் சுவையை விரும்பினாய். (உன்) கற்புநெறி கெட்டபின்பும் (நீ) இறக்க வில்லை. நீதிநெறி தவறி (வாழ்ந்த) அரக்கனின் (இராவணன்) பெரிய நகரத்தில் (இலங்கையில், அவனுக்கு) அடங்கி வாழ்ந்து வந்தாய். (அவன் அழிந்ததால்) பயம் நீங்கி எந்த நினைப்பில் இங்கு மீண்டும் வந்தாய்? (நான்) உன்னை விரும்பி ஏற்றுக்கொள்வேன் என்பதாலோ?

    உன்னை மீட்பான் பொருட்டு உவரி தூர்த்து ஒளிர்

    மின்னை மீட்டுறு படை அரக்கர் வேர் அற

    பின்னை மீட்டு உறு பகை கடந்திலேன் பிழை

    என்னை மீட்பான் பொருட்டு இலங்கை எய்தினேன். – 9.3955

    “உன்னை மீட்டுச் செல்வதற்காக கடலின்மீது பாலம் கட்டி, மின்னலைப் போன்ற ஒளி பொருந்திய (வஜ்ராயுதத்தை உடைய இந்திரனை) தோற்கடித்த அரக்கனை (இந்திரஜித்தை) வேரோடு அழிக்கவில்லை. அப்படியானால் எதற்காக என்றால், என்மீது ஏற்பட்ட பழியைப் போக்குவதற்காகவே, இலங்கைக்கு வந்தேன்.

    மருந்தினும் இனிய மன்னுயிரின் வான் தசை

    அருந்தினையே நறவு அமைய உண்டியே

    இருந்தனையே இனி எமக்கு என்பன

    விருந்து உளவோ உரை வெறுமை நீங்கினாய் – 9.3956

    “(என்பால் கொண்டிருந்த) அன்பை நீக்கினாய். சுவர்க்கத்தின் அமுதை விடச் சிறந்தது என்று இவ்வுலகத்து உயிர்களின் சதையை (இறைச்சியை) உண்டாயே. மது அருந்தினாயே. இனிமேல் எனக்கு என்ன விருந்து படைக்கப் போகிறாய்? சொல்.

    பெண்மையும் பெருமையும் பிறப்பும் கற்பு எனும்

    திண்மையும் ஒழுக்கமும் தெளிவும் சீர்மையும்

    உண்மையும் நீ எனும் ஒருத்தி தோன்றலால்

    வண்மை இல் மன்னவன் புகழின் மாய்ந்தவால். – 9.3958

    “பெண்ணாகப் பிறப்பதனால் உள்ள பெருமையும், கற்பு என்ற வலிமையையும், ஒழுக்கமும், தெளிந்த குணமும், புகழும், உண்மையாக (நடந்து கொள்ளுதலும்) (சீதை) என்ற நீ ஒருத்தி பிறந்ததால், வலிமை இல்லாத மன்னவனின் புகழ் மறைத்து போவது போல மறைத்து போய்விட்டன.

    அடைப்பர்  ஐம் புலன்களை ஒழுக்கம் ஆணியாச்

    சடைப் பரம் தகைந்ததூர் தகையின் மாதவம்

    படைப்பர் வந்து இடை ஒரு பழி வந்தால் அது

    துடைப்பார் தம் உயிரோடும் குலத்தின் தோகையார். – 9.3959

    “நற்குலத்தில் பிறந்த மங்கையர் தனது ஐந்து புலன்களையும் அடக்கி வாழ்வார். கற்பொழுக்கம் சிதையா வண்ணம், தலை முடியை வாராது, சடையைத் திரித்து பெரிய தவத்தில் ஈடுபடுவர். இடையில் ஒரு பழி வந்து நேர்ந்தால் தமது உயிரைக் கொடுத்தாவது அதைப் போக்கிக் கொள்வார்கள்.

    யாது யான் இயம்புவது உணர்வை ஈடு அறச்

    சேதியாநின்றது உன் ஒழுக்கச் செய்தியால்

    சாதிஆல் அன்று எனின் தக்கது ஓர் நெறி

    போதிஆல் என்றனன் புலவர் புந்தியான். – 9.3960

    “இனி நான் சொல்ல என்ன இருக்கிறது? உன்னுடைய (தீய)ஒழுக்கச் செயல் (என்) உள்ளத்தை ஈடு கட்டமுடியாத அளவுக்கு அறுத்துத் தள்ளுகிறது.. (நீ) சாவாயாக!  இல்லாவிட்டால் உனக்கு எது நல்லது என்று படுகிறதோ, அங்கு போவாயாக!” என்று ஆன்றோர் நினைவில் (குடியிருக்கும் இராமன்) சொன்னான்.

    அதைக்கேட்ட அனைவரும் கதறி அழுதனர். தன் கணவருடன் சேரப் போகிறோம் என்ற ஆவலுடனும், மகிழ்ச்சியுடன் ஓடோடியும் வந்த சீதையின் கண்களில் நீர் ஆறாகப் பெருகியது…

    இற்றது போலும் யான் இருந்து பெற்ற பேறு

    உற்றதால் இன்று அவம் என்றென்று ஓதுவாள். – 9.3964

    எத் தவம் எந் நலம் என்ன கற்பு நான்

    இத்தனை காலமும் உழந்த ஈது எலாம்

    பித்து எனல் ஆய் அவம் பிழைத்ததாம் அன்றே

    உத்தம நீ மனத்து உணர்ந்திலா மையால். – 9.3966

    நான் (கற்புடன்) இருந்து பெற்ற பயன் இவ்வளவுதான். (அது) அழிந்தது போலும்.  இன்று எனக்கு பழி ஏற்பட்டது என்று (மேலும்) சொன்னாள்.

    “உத்தமரே! இத்தனை காலமாக நான் மிகவும் வருத்தி எத்துணை தவம், எத்தனை நற்செயல்கள், சிறந்த கற்பறங்கள் செய்தும், உம மனம் அதை உணர்ந்து பார்க்க இயலாது போனதால், (அவை) பைத்தியக்கரச் செயல்கள் என்று ஆகிப் பயனின்றிப் போயினவே.

    ஆதலின் புரத்தின் யாருக்காக என்

    கோது அரு தவத்தினைக் கூறிக் காட்டுகேன்

    சாதலின் சிறந்தது ஒன்று இல்லை தக்கதே

    வேத நின் பணி அது விதியும் என்றானள். – 9.3969

    இளையவன்தனை அழைத்து இடுதி தீயென

    வளை ஒலி முன் கையாள் வாயின் கூறினாள்

    உளைவறு மனத்தவன் உலகம் யாவுக்கும்

    களைகணைத் தொழ அவன் கண்ணின் கூறினான். – 9.3970

    “வேதத்தின் உருவே! எனவே, வெளியார் யாருக்காக எனது குற்றமற்ற சிறந்த தவத்தினை (கற்பு நெறியை) உரைத்துக் காட்டப் போகிறேன்? இறப்பை விடச் சிறந்தது ஒன்றும் இல்லை. உமது கட்டளையும் (எனக்குப்) பொருத்தமானதே! அது (என்) விதியும் (ஆகும்)” என்றாள்.

    முன் கைகளில் (மணிக்கட்டில்) ஒலி எழுப்பும் வலைகளை அணிந்த (சீதை), இளையோனான (இலக்குவனை) அழைத்து, தீயை மூட்டு என்று (அனைவருக்கும் கேட்கும்படி) வாயால் சொன்னாள்.  (இதைக் கேட்டு) மன உளைச்சல் கொண்ட (இலக்குவன்), உலகம் அனைத்துக்கும் புகலிடம் அளிக்கும் (இராமனைத்) வணங்கி (நோக்க), அவனும் தன் கண்களாலேயே (பதில்) கூறினான்.

    … எனவே, வீரம் மிகுந்த இலக்குவன், விம்மி வரும் அழுகையுடன், சாத்திரங்கள் சொல்லிய விதிப்படி சிதை அமைத்து நெருப்பை மூட்டினான்…

    தீயிடை அருகுறச் செண்டு தேவர்க்கும்

    தாய் தனிக் குருகலும் தரிக்கிலாமையால்

    வாய் திறந்து அரற்றின மறைகள் நான்கொடும்

    ஒய்வு இல் நல் அறமும் மற்று உயிர்கள் யாவையும். – 9.3972

    (மன்னுயிர்கள் அனைத்துக்கும் மட்டுமல்லாது) விண்ணவர்களுக்கும் தாயான (சீதை) அந்த நெருப்பின் அருகில் தாயகச் சென்றதைக் தாங்க இயலாது நான்கு வேதங்களும், (என்றுமே) ஓய்ந்து போகாத நன்னெறிகளும், மற்ற உயிர்கள் எல்லாமும் தங்கள் வாயைத் திறந்து கதறின.

    மனத்தினால் வாக்கினால் மறு உற்றேனெனின்

    சினத்தினால் சுடுதிஆல் தீச் செல்வா என்றாள்

    புனத் துழாய்க் கணவற்கும் வணக்கம் போக்கினாள். – 9.3976

    நீந்த அரும் புனலிடை நிவந்த தாமரை

    ஏய்ந்த தன் கோயிலே எய்துவா ளெனப்

    பாய்ந்தனள் பாய்தலும்  பாலின் பஞ்சு எனத்

    தீய்ந்தது அவ் எரி அவள் கற்பின் தீயினால். – 9.3977

    “நெருப்புக் கடவுளான அக்னியே! உள்ளத்தினாலோ, சொல்லாலோ, நான் களங்கப் பட்டவள் என்றால், கோபம் கொண்டு (என்னைச்) சுட்டு எரிப்பாயாக!” என்று சொல்லி, துழாய் மாலையை அணிந்திருக்கும் தந்து கணவருக்கும் வணக்கம் செலுத்தினாள்.

    நீந்திச் செல்லுவதற்கும் கடினமான நீரின் நடுவில் விழித்து மலர்ந்திருக்கும் தாமரை பொருந்திய தனது கோவிலை (இலக்குமியான சீதை) அடைவோம் என்று (நெருப்பில்) பாய்ந்தாள்.  அப்படிப் பாய்ந்தவுடன், அவளுடைய கற்புத் தீயினால் அந்த நெருப்பும் பாலின் (நிறத்தை ஒத்த) பஞ்சாகப் பற்றி எரிந்தது.

    … சீதையின் கற்புக் கனலைத் தாங்க இயலாத கனல் தேவன், இரு கரங்களையும் கூப்பி, மாசற்ற சீதையைத் தன் கனல் பிழம்புகலான கையினால் தூக்கி வெளி வந்தான்.  சீதை மேல்தான் உனக்குச் சினம்.  என்மேல் உனக்கு என்ன கோபம்?  நான் உனக்கு என்ன செய்தேன்? இந்தக் கற்புக்கரசியின் கற்புக் கனலால் என்னை எரிக்க முற்படுகிறாயே?” என்று இராமனிடம் முறையிட்டான்.  “நீ யார்? தீய நெறி உள்ள இவளை எரிக்காது ஏன் பாது காத்தாய்?” என்று இராமன் கேட்டதும்,….

    அங்கி யான் என்னை இவ் அன்னை கற்பு எனும்

    பொங்கு வெந் தீச்சுடப் பொறுக்கிலாமையால்

    இங்கு அணைந்தேன் உறும் இயற்கை நோக்கியும்

    சங்கியா நிற்றியோ எவர்க்கும் சான்றுளாய். – 9.3983

    ஐயுறு பொருள்களை ஆக இல் மாசு ஒரீஇக்

    கையுறு நெல்லியம் கனியின் காட்டும் என்

    மெய்யுறு கட்டுரை கேட்டும் மீட்டியோ

    பொய் உறா மாருதி உறையும் போற்றலாய். – 9.3985

    “அனைவருக்கும் சாட்சியானவனே! நான் தீக்கடவுள் (அக்னி பகவான்).  இந்த அன்னையாம் (சீதையின்) கற்பு என்ற கொழுந்து விட்டு எரியும் கனல் என்னைச் சுட்டெரிக்கவே, அதைப் பொறுத்துக்கொள்ளும் தன்மை இல்லாததால் நான் அணைந்து போன தன்மையை இங்கு பார்த்த பின்னும், நீ (சீதாப் பிராட்டியிடம்) ஐயம் கொண்டு நிற்கலாமா?

    சந்தேகம் கொண்ட பொருள்களின் (நிலையை) அறிந்து, (அந்த சந்தேகம்) என்னும் குற்றத்தை நீக்கி, உண்மை இது என்று (உள்ளங்)கையின் மீது இருக்கும் நெல்லிக்கனியைப் போலச் சுட்டிக்காட்டும் என் உரையைக் கேட்டும் (சீதையைத்) திரும்பப் பெற்றுக்கொள்ள மாட்டாயா? பொய்யே பேசாத அனுமனின் சொல்லையும் மதிக்க மாட்டாயா?

    பெய்யுமே மழை புவி பிளப்பதன்றியே

    செய்யுமே பொறை அறம் நெறியில் செல்லுமே

    உய்யுமே உலகு இவள் உணர்வு சீறினால்

    வய்யுமேல் மலர்மிசை அயனும் மாயுமே. – 9.3987

    இவள் (கற்பிற் சிறந்த சீதை) மனதில் (துன்பமடைந்து) சீற்றத்தில் சபித்தால், மழை பெய்யுமா? இந்த பூமி பிளந்து (எல்லாவற்றையம் விழுகி விடுவதைத் தவிர) வேறு எதையும் செய்யுமா?  தர்மம் நன்னெறியில் செல்லுமா? உலகு உய்யுமா? தாமரை மலர்மேல் வீற்றிருக்கும் பிரம்மனும் இறந்துபடுவானே?

    …சீதையின் பெருமைகளையும், அவளது கற்பையும் புகழ்ந்து அவளை ஏற்றுக்கொள்ளும்படி சொல்லி, அக்னி, அவளை இராமனின் அருகின் கொண்டு வந்து சேர்த்தான்…

    அழிப்பு இல சான்று நீ உலகுக்கு ஆதலால்

    இழிப்பு இல சொல்லி நீ இவளை யாது ஓர்

    பழிப்பு இலள் என்றனை பழியும் இன்று இனிக்

    கழிப்பிலள் என்றனன் கருணை உள்ளத்தான். – 9.3989

    கருணை உள்ளம் கொண்டவன் (இராமன்), தீக் கடவுளைப் பார்த்து), “அழிவே இல்லாத நீ உலகிற்கே சாட்சியாக ஆனபடியால், அவதூறு இல்லாதா சொற்களைச் சொல்லி, நீ இவளை ஒரு குற்றமும் இல்லாதவள் என்று கூறினாய். (சீதை) இனிமேல் (என்னால்) நீக்க முடியாதவள் என்றான்.

    …ஏனைய விண்ணவர்கள் அனைவரும், நான்முகனும், முக்கண்ணனும் இராமனிடம், அவன் பரம்பொருள் என்ற உண்மையை விளக்குகின்றனர்.

    ஒப்பீடு:

    இராமன் சீதையின் மீது வீசிய கடும் சொற்களை கம்பர், வால்மீகி இருவரும, விவரித்ததைப் கண்ணுறும் பொது நமக்கே மேனி சிலிர்த்து, உள்ளம் நடுங்குகிறது என்றால், சீதாப்பிராட்டி எப்படிக் கலங்கி விதிர்விதிர்த்துப்போய் இருப்பாள் என்பதை அவர்கள் இருவருமே நமக்கு நன்கு படம் பிடித்துக் காட்டி இருக்கிறார்கள்.

    இராமனின் நேர்மையையும், அறநெறியைக் காக்கத் தன் உயிருக்கு உயிரானவளையுமே துறக்க முடிவு செய்து, அவளை அப்பழுக்கு அற்றவள் என்று உலகுக்குக் காட்ட விழையும் அவர் உள்ளத்தையும் அறியாதவர்கள் மட்டுமே இராமனின் மீது காழ்ப்புணர்வு கொள்வார்கள்.  இரக்கமற்றவன் என்று தூற்றுவார்கள்.  பெண்ணடிமை செய்த பெரும்பாவி என்று ஏசுவார்கள்.

     இராமாயணம் முழுவதையும் படித்துப்பார்க்காமல், ஒருசில வரிகளை மட்டுமே எடுத்துக்கொண்டு, பல்லாயிரம் ஆண்டுகள் முன்பு இருந்தவர்களை, இக்காலத்தைய அளவுகோல் கொண்டு அளப்பவர்களே! என்ன சொன்னால் சீதை தன்னைக் குற்றமற்றவள் என்று நிரூபிப்பாள், அவள் கற்புக்கரசி என்று உலகம் போற்றும் என்பதை நன்கு அறிந்துதான், தன் இதயத்தில் குருதி பொங்க அச் செயலைச் செய்தார் என்று அறியாதவர்களே!

    மன்னனுக்கு மக்கள் நலனும், மக்களின் நல்லெண்ணமுமே மனைவியைவிட மேல் என்பதை அறியாதவர்கள் என்று எண்ணி அவர்களின் பழிச் சொற்களை விட்டுவிடவேண்டியதுதான். அவற்றை மறந்துவிட வேண்டியதுதான்.

    அதைக் கம்பர் எப்படி வெளிப்படுத்துகிறார்?  தானே, சீதையை நன்கு அலங்கரித்துக் கூட்டி வருமாறு அனுமனுக்கும் வீடணனுக்கும் கட்டளை இட்டுவிட்டு, விண்ணழகிககளால் அலங்கரிக்கப்பட்டு தன் எதிரில் நின்ற சீதையைப் பார்த்து, “நன்னெறியுடன் ஒழுகும் பெண்டிர் கற்பொழுக்கம் சிதையா வண்ணம், தலை முடியை வாறாது, சடையைத் திரித்துப் பெருந்தவத்தில் ஈடுபடுவர்” என்று இராமன் சாடுவதாக எழுதியுள்ளார்.

    வால்மீகியோ, ”நெஞ்சிற்கு இனியவளான அவளைப் பார்த்ததும், மக்களின் தூற்றத்தால் நேரும் அச்சத்தால் இராமனுடைய நெஞ்சம் இரண்டாகியது.” என்கிறார்.

    இராமனுக்கு சீதையைப் பற்றி என்ன நினைப்பு இருந்தது என்பதை உள்ளங்கை நெல்லிக்கனி ஆக்கி விட்டு, மாற்றான் இடத்தில் இருந்தவளை மீண்டும் ஏற்றால் உலகம் என்ன அவதூறு செய்யும் என்பதை நினைத்து உள்ளம் உடைந்தான் என்று இராமனின் நெஞ்சக் கிளர்ச்சியை விவரிக்கிறார்.

    ஆக, இருவருமே இராமனுக்கு சீதையின் பால் உள்ள பாசத்தையும், அசையா நம்பிக்கையையுமே நமக்கு உணர்த்துகிறார்கள்.

    இருப்பினும், எதைச் சொன்னால் சீதை உயிரைத் துறந்தாவது தனது தூய்மையை உணர்த்த முற்படுவாள் என்பதில்தான் சிறிது வேறுபடுகிறார்கள்.

    “இலக்குவனையோ, பரதனையோ, இன்னும் வேறு எவரை வேண்டுமானாலும் உன் மனதில் கொள்!  மனதுக்கு இனியவளாகவும், மிகுந்த அழகுடனும் உள்ள உன்னைத் தன்னிடத்தில் சிறை வைத்திருந்த இராவணன் உன் பிரிவை அதிக நாள் பொறுத்து இருந்திருக்கமாட்டான்.” என்று சொன்னதாக வால்மீகி கூறுகிறார். இப்படிச் சொன்னால் சீதை உயிரையும் ஒரு பொருட்டாகக் கருதமாட்டாள் என்று உணர்த்துகிறார்.

    “நீ சாவாயாக!  இல்லாவிட்டால் உனக்கு எது நல்லது என்று படுகிறதோ, அங்கு போவாயாக!” சீதையைச் செத்து மடி என்று, சந்தேகத்திற்கு இடமில்லாமல் என்ன செய்யவேண்டும், என்ன செய்தால் அவளது கற்பு நிரூபணம் ஆகும் என்று தெரிவிப்பதாகக் கம்பர் கவி புனைகிறார்.

    இதைக் கேட்டதும் சீதையின் எதிர்ச் செயல் எப்படி இருக்கிறது என்பதில் இருவரும் நன்றாகவே மாறுபடுகிறார்கள்.

    சீதை மனம் சோர்வுற்று, நொந்துபோய், தனது கற்பும், பொற்பும், சீலமும், பித்துப்பிடித்த செயலுக்கு ஒப்பானதே என்று வருந்தி, “நான் உள்ளத்தினாலோ, சொல்லாலோ, நான் களங்கப் பட்டவள் என்றால், என்னைச் சுட்டு எரிப்பாயாக!” என்று தீப் புகுவதாக கம்பர் கசிந்து கவி நவின்றிருக்கிறார்.

    வால்மீகியின் சீதை, தன்னைக் குளிப்பாட்டிய கண்ணீரைத் துடைத்துக்கொண்டு வீராங்கனையாகச் சீறி எழுகிறாள்.

    அதை மிகவும் சிறப்பாக சீதையின் பதிலின் முதல் சுலோகத்திலேயே தந்திருக்கிறார் மாமுனி வால்மீகி. “வீரரே! இழிந்தவன் ஒருவன் இழிந்தவளிடம் பேசுவதைப் போல, கேட்பதற்குக்தகாத, இப்படிப்பட்ட கடும் சொற்களை ஏன் என்னைக் கேட்க வைக்கிறீர்? தீநடத்தை கொண்ட பெண்களைப் பற்றிக் கேள்விப்பட்டு, பெண் குலத்தையே நீர் ஏன் நம்ப மறுக்கிறீர்!”

    ஆகா!  எப்படிப்பட்ட பதில் அது! கனவிலும், நினைவிலும், சதா சர்வகாலமும் தன் நினைப்பில் நீக்கமற நினைந்திருக்கும் தன் அன்புக் கணவரே சொல்லத் தகாத சொற்களைக் சொல்கிறாரே என்று நிலை குலைந்து போகவில்லை. “இழிந்தவன் ஒருவன், இழிந்தவள் ஒருத்தியிடம் பெசுவதைப்போலப் பேசுகிறீரே!” என்று சிலிர்த்து எழுகிறாள்.

    இந்த நேரத்தில் இராமனின் வீரத்தையும் மீறிக்கொண்டு, சீதையின் கற்புச் செருக்கே சிறந்து மிளிர்கிறது.

    அதுமட்டுமல்ல, “வலிமையற்ற மனிதனைப்போல பெண்மைக்கே முக்கியத்துவம் அளித்து, உம்மால் கோபமே கைக்கொள்ளப்பட்டது.” என்று சொல்லி, முப்பத்திமுக்கோடி தேவர்களையும் அடக்கி ஆண்ட இராவணனை அழித்த மாவீரனையே, தன் கற்பைச் சந்தேகித்த கணவனையே, “வலிமையற்றவன், பெண் குணம் கொண்டவன்” என்று சொற்கணைகளால் துளைத்து எடுத்து விடுகிறாள். வீரலட்சுமியாகத் திகழ்கிறாள்.

    கடைசியாக, தீப்புகும்போது, “என் இதயம் இராகவனிடமிருந்து என்றும் பிரியவில்லையோ, அப்பொழுது உலகத்தின் சாட்சியான அக்னி என்னைப் பாதுகாக்கட்டும்!” என்று தீக் கடவுளுக்கே சவால் விடுகிறாள்.

    வால்மீகியின் இந்த சீதை உலகத்தின் எல்லாப் பெண்களுக்கும் இலக்கணமாக, தன்னிகரற்ற வீராங்கனையாத் திகழ்ந்து, விளங்கி நிகற்கிறாள்.

    இராமன் பெண்ணடிமை செய்தான் என்று பேசுபவர்களின் முகத்தில் கரியைப் பூசிவிடுகிறாள், வால்மீகியின் சீதை. புதுமைப் பெண்ணுக்கும் புதுமைப் பெண்ணாகவும், பழமையின் உயர்வைப் பறைசாற்றும், கற்பின் பொற்பை நிலைநாட்டும் வீரச் செல்வியாகவும் திகழ்கிறாள்.

    இப்படிப்பட்ட வீரம் சிறு வயதிலிருந்து ஒன்றாகப் பழகிய இராமனிடமிருந்து பெற்றதுதானே!  எனவே, இராமன்தான் சீதைக்குத் தனது வீரத்தையும், தீரத்தையும், தர்மத்தை நிலைநாட்ட தன்னையே பழிக்கும் கணவனையே சாடும் திறனையும் கொடுத்தான் என்று கூறி, உலகம் உள்ளவரை நிலைத்து நிற்கும் இதிகாசமான, இராமன்-சீதையின் வரலாறும், அவர்கள் நமக்கு விட்டுச் சென்ற நீதியும், நம்மை வழி நடத்தும் என்று கூறி என் ஒப்பீட்டை நிறைவு செய்கிறேன்.

    நீரை நீக்கிப் பாலை அருந்தும் அன்னப் பறவையைப் போல, என் முயற்சியில் எவ்வளவுதான் குறைகள் இருப்பினும், அதை நீக்கி, இருக்கும் ஒருசில நிறைவுகளை எடுத்துப் பருகுமாறு ஆன்றோர்களையும் சான்றோர்களையும், தாள் பணிந்து வேண்டிக் கொள்கிறேன்.

    சிறுவயதிலிருந்து நான் பருகிய இராமாயணப் பாலை எனக்குப் புகட்டிய கம்பனும், வால்மீகியும் என் தாய் தந்தையர்கள். எனவே, இது மகன் பாடும் பெற்றோரின் புகழ்!

    வாழிய கம்பன், வாழிய வால்மீகி, வாழிய அவர்தம் இராமகாதை!

    வணக்கம்.

    ****************************************************************************************************

    Share
  • வெட்கக்கேடு

    நாகேஸ்வரி அண்ணாமலை

    sc

    ஜெயலலிதாவின் வழக்கில் தீர்ப்புக் கூறப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டதை அடுத்து அ.தி.மு.க.வினர் நடத்திய போராட்டங்கள் எல்லாம் ஓரளவு அடங்கிவிட்டதாகத் தெரிகிறது. தமிழ்நாட்டில் சகஜநிலை திரும்பியதாக பத்திரிக்கைச் செய்திகள் கூறுகின்றன. ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள் பல வகையான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதைப் பார்த்துத் தமிழக மக்கள் இவ்வளவு அறிவிலிகளா என்ற கேள்வி எழுகிறது. அதுவும் தந்தை பெரியார் தொடங்கிய பகுத்தறிவு இயக்கம் தமிழக மக்களிடம் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லையா என்று எண்ணும்போது மனதில் பெரிய ஆயாசம் ஏற்படுகிறது.

    பெரியார் பிராமண ஆதிக்கத்தை ஒழிக்கவும் எல்லோர் மனத்திலும் சுயமரியாதை எண்ணத்தை வளர்க்கவும் பக்குத்தறிவு இயக்கத்தைத் தோற்றுவித்தார். அவர் ஆரம்பித்த இயக்கத்திற்கு இன்று அர்த்தமே இல்லாமல் போயிற்று. அவர் மறுபடி பிறந்துவந்து தமிழ்நாட்டில் நடக்கும், அவர் போதனைகளுக்கு நேர் மாறாக நடக்கும் அராஜகச் செயல்களைக் கண்டிக்க மாடாரா என்ற ஏக்கம் பிறக்கிறது. அவருடைய பக்குத்தறிவு இயக்கத்தில் தோன்றிய கட்சிகளான தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் மக்களை எவ்வளவு முட்டாள்கள் ஆக்கியிருக்கின்றன என்பதை எண்ணிப் பார்த்தால் அவர் செய்ததெல்லாம் விழலுக்கு இறைத்த நீரா என்று மனம் பதறுகிறது.

    பிராமண ஆதிக்கத்தை ஒழிக்க அவர் எவ்வளவு பாடுபட்டார்? மனித இனத்தில் ஜாதிகளுக்கு இடமில்லை, பிறப்பில் எல்லோரும் சமம், கடவுளின் பெயரைச் சொல்லி பிராமணர்கள் தங்களை உயர்ந்தவர்கள் என்று கூறிக்கொள்வது, ‘உயர்ந்த ஜாதி’ மக்களின் கால்களில் ‘கீழ் ஜாதி’ மக்கள் விழுவது எவ்வளவு இழிவான செயல் போன்றவற்றை எவ்வளவு எதிர்த்தார்? இந்துக் கடவுள்கள் எல்லாம் மனிதனின் சிருஷ்டிகள்தான், அப்படிச் சிருஷ்டிக்கப்பட்ட கடவுள்களின் பெயரால் பிராமணர்கள் செய்த அட்டுழியங்கள், அவர்கள் தங்களை கடவுகளின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டு மற்ற ஜாதிகளைச் சேர்ந்தவர்களை முட்டாளாக்கியது ஆகியவற்றை எல்லாம் பாமர மக்களுக்கு உணர்த்த என்னென்ன செய்தார்? விக்கிரக ஆராதனை கூடாது என்பதற்காக பிள்ளையார் சிலைகளைத் தெருவில் போட்டு உடைத்தார். இப்போது அவர் ஆரம்பித்த இயக்கத்திலிருந்து பிறந்த கட்சிகளின் உறுப்பினர்கள் செய்யும் காரியங்கள் அவர் போதனைகளுக்கு எந்த மதிப்பும் கொடுப்பதாகத் தெரியவில்லை. அவர் விக்கிரக ஆராதனை கூடாது என்றார். இவர்கள் மனிதர்களையே ஆராதனை செய்கிறார்கள். பெரியார் தெய்வங்களே மனிதனின் சிருஷ்டி என்றார். இவர்கள் மனிதர்களையே தெய்வமாக்கிவிட்டார்கள்.

    நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்ட ஜெயலலிதாவை தெய்வம் என்று கூறுகிறார்கள். தெய்வத்தைத் தண்டிக்க மனிதனால் முடியாது என்று போஸ்டர்கள் வேறு. தெய்வமே இல்லை என்று சொன்ன பெரியார் எங்கே, ஒரு சாதாரண மனிதப் பிறவியை அதிலும் ஊழலிலேயே ஊறிப்போன ஒரு அரசியல்வாதியை தெய்வம் என்ற ஸ்தானத்திற்கு உயர்த்திய இந்த அறிவிலிகள் எங்கே? பெரியார் பிள்ளையாரைப் போட்டு உடைத்தார். இந்த அறிவிலிகள் பிள்ளையாருக்கும் முருகனுக்கும் பால்குடம் எடுக்கிறார்கள். எதற்காக? நாட்டில் சுபிட்சம் நிலவ வேண்டும், மக்கள் எல்லாம் கல்வி அறிவு பெற வேண்டும், எல்லோரும் பிணியின்றி வாழ வேண்டும் என்ற நற்செயல்களுக்காக இப்படி எல்லாம் செய்கிறார்கள் என்றால் அதையாவது பொறுத்துக்கொள்ளலாம். இவர்கள் செய்வதோ சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றம் பல ஆவணங்களைப் பரிசீலித்துப் பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளி என்று தீர்மானித்தவரைக் காப்பாற்ற. இறைவன் இருக்கிறான் என்று இவர்கள் நம்பினால் அவன் நல்லவர்களுக்கு நன்மை செய்வான், நல்லவர் அல்லாதவர்களைத் தண்டிப்பான் என்பதையும் நம்ப வேண்டும் அல்லவா? அப்படிப்பட்ட இறைவன் தவறு செய்த அவர்கள் ‘அம்மாவை’ எப்படி மன்னிப்பான்? எப்படி அவனிடம் அவர்களுடைய ‘அம்மாவை’ நீதிமன்றம் விடுவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்? இவர்கள் செய்யும் யாகங்களையும் பூஜைகளையும் இறைவன் எப்படி ஏற்றுக்கொள்வான்?

    மக்களின் பக்குதறிவை வளர்க்கப் பெரியார் எவ்வளவு பாடுபட்டார்? இப்போது அ.தி.மு.க. தொண்டர்களுக்கு பகுத்தறிவே இல்லை என்பது போல் நடந்துகொள்கிறார்கள். ‘கர்நாடகமே, காவிரியை வச்சுக்கோ, எங்கள் அம்மாவை எங்களுக்குத் திருப்பிக் கொடுத்துவிடு’ என்ற போஸ்டர்கள். எங்கள் ‘அம்மாவை’ விடுவிக்காவிட்டால் தமிழகத்தில் வாழும் கன்னடியர்கள் எல்லோரையும் சிறை பிடிப்போம் என்று இன்னொரு போஸ்டர். ‘அம்மா’ சிறைவாசம் அனுபவிப்பதற்கும் கர்நாடகத்திற்கும் என்ன சம்பந்தம்? அ.தி.மு.க. தலைவர்களே இப்படி இருந்தால் தொண்டர்களைப் பற்றி என்ன சொல்ல? 75 பேர் தர்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரிந்துதான் இவர்கள் அப்படித் தற்கொலை செய்துகொண்டார்களா?

    நான் போனவாரம் எழுதிய கட்டுரைக்கு வாசகர் ஒருவர் பதில் அளித்திருக்கிறார். ஜெயலலிதாவின் ஆட்சிக்காலம் முடியும் வரை இரண்டு ஆண்டுகள் காத்திருந்து இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்க வேண்டுமாம்! நீதி யாருக்காக காத்திருக்கவேண்டும்? பதினெட்டு ஆண்டுகள் வழக்கை இழுத்தடித்ததே பெரிய தவறு. இப்போது எதற்காக இன்னும் இரண்டு ஆண்டுகள் காத்திருந்திருக்க வேண்டும் என்பது அவருக்கே வெளிச்சம். ஜெயலலிதாவிற்கு மாற்றுத் தலைமை தமிழ்நாட்டில் இல்லையாம்! உச்சநீதிமன்றம் ஜெயலலிதாவின் ஜாமீன் பற்றி முடிவெடுக்கும்வரை அவரைப் பற்றி எதுவுக் கூறக் கூடாதாம்! ஆங்கிலத்தில் எழுதுமளவிற்கு படித்த இவரைப் போன்றவர்களே இப்படி நினைக்கும்போது படிப்பறிவில்லாத, ஜனநாயகம் என்றால் என்ன, அதில் நீதிமன்றங்களின் பங்கு என்ன என்பது பற்றி எல்லாம் அரசியல் அறிவு ஒன்றுமே இல்லாத பாமர மக்களைப் பற்றி என்ன சொல்வது?

    பெரியாரின் எந்தக் கருத்தும் தமிழக மக்களின் மனத்தில் எந்த விதப் பாதிப்பையும் உண்டாக்கவில்லையா? எந்த விதமான பகுத்தறிவையும் கொடுக்கவில்லையா? பெரும்பான்மை மக்கள் இன்னும் அறியாமையில்தான் உழலுகிறார்களா? தமிழக மக்களின் இந்த அறியாமையைப் போக்கத் தலைவர்கள் யாரும் தோன்றவில்லையா? தோன்றியிருக்கும் சில தலைவர்களாலும் தமிழகத்தை மாற்ற முடியவில்லையா? என்னவென்று புரியவில்லை; நெஞ்சு பொறுக்கவில்லை, பாரதி பாடியதைப் போல.

    பி.கு. இந்தக் கட்டுரை முழுக்க முழுக்க கட்டுரை ஆசிரியர் திருமிகு நாகேஸ்வரி அண்ணாமலை அவர்களின் தனிப்பட்ட கருத்து மட்டுமே. வல்லமை இதழுக்கும் இதன் கருத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

    ஆசிரியர் – வல்லமை இணைய இதழ்

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy

    ”மரணக் கிணற்றில் முராரியவன் குட்டிக்
    கரணமிடு கின்றான் குஷியாய், -சரணமென்று,
    கன்றாய்த் துரத்தியவன் , காலைப் பிடித்திட,
    வென்றாய் ஜனன வழக்கு’’….கிரேசி மோகன்….

    சிறு வயதில் அப்பாவோடு ‘’எக்ஸிபிஷன்’’ போகையில் ,மரணக்கிணற்றில் மோட்டார் சைக்கிள் விடும் வீரன் நினைவுக்கு வந்தான்….
    ‘’புனரபி ஜனனம் புனரபி மரணம்…பாஹி முராரே…. பஜ கோவிந்தம்’’….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    கிரேசி மோகன்

    crazy

    ”அகலாத அன்போ(டு) அரிமீ(து) அமர்ந்து
    ப்ரகலாத பக்தியைப் பண்ண , -துகளாகும்
    நெஞ்சக் கனகல்லு, பஞ்சப் படைமுகுந்தன்,
    கொஞ்சிக் குலாவும்சிங் கம்’’….கிரேசி மோகன்….

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    அக்டோபர்  13, 2014

    இவ்வார வல்லமையாளர்

    வல்லமைமிகு  பேராசிரியர் பிரியம்வதா நடராஜன் அவர்கள்

    Prof. Priyamvada Natarajan

    சென்ற வாரம் உலகப்புகழ் பெற்ற நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டிருக்கும் வேளையில், எதிர்காலத்தில் இவருக்கும் நோபல் பரிசு வழங்கப் பெறும் என ஆவலுடன் எதிர்பார்க்கப்படும்  நம்பிக்கை நட்சத்திரம் ஒருவர் இவ்வார வல்லமையாளர் என வல்லமை குழுவினரால் பாராட்டப்படுகிறார். அமெரிக்காவின் புகழ்பெற்ற  “ஐவீ லீக்” பல்கலைக் கழகமான யேல் பல்கலைக் கழகத்தில், வானியல் மற்றும் இயற்பியல் பேராசிரியராகப் பணிபுரியும் பேராசிரியர் பிரியம்வதா நடராஜன் அவர்களை வல்லமையாளர் விருதிற்குப் பரிந்துரைத்திருப்பவர் வல்லமையின் அறிவியல் எழுத்தாளரான திரு. ஜெயபாரதன் அவர்கள்.

    பேராசிரியர் பிரியா கருத்தைக்கவரும் கல்வி மற்றும் ஆய்வுப் பின்னணியைக் கொண்டவர்.  இந்தியத் தமிழ்க் குடும்பத்தைச் சேர்ந்தவரான பிரியா கோயம்புத்தூரில் பிறந்தவர்.   பெற்றோருடனும் உடன்பிறப்புகளுடனும் டெல்லியில் வாழ்ந்து கல்வி பயின்றவர்.  பள்ளிப்படிப்பை இந்தியாவில் முடித்த பின்னர் மேற்படிப்பிற்காக அறிவியல், பொறியியல், தொழில் நுட்பம் ஆகியவற்றில் உலகளாவிய நிலையில் முதலிடம் வகிக்கும் அமெரிக்காவின் எம்.ஐ.டி (M.I.T – Massachusetts Institute of Technology, Cambridge, Mass, USA)  பல்கலைகழகத்தில் பயின்று இயற்பியலிலும் கணிதத்திலும் என இரு இளநிலைப் பட்டங்கள் பெற்றுள்ளார்.

    தொடர்ந்து மேல்நிலைக் கல்வியையை மற்றொரு உலகப்புகழ் பெற்ற பல்கலைக்கழகமான இங்கிலாந்தின் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில்  (Institute of Astronomy, University of Cambridge in England) பயின்றார். வானியற்பியல் கோட்பாடுகளில் (Theoretical Astrophysics ) முதுநிலைக் கல்வி மற்றும் முனைவர் ஆய்வை மேற்கொண்டார்.  அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் மற்றும் வானியல் பேராசிரியாகப் பொறுப்பேற்கும் முன்னர், கனடாவின் டொரோண்டோவிலும் முதுநிலை முனைவராக (Postdoctoral Fellow at the Canadian Institute for Theoretical Astrophysics in Toronto, Canada) பயிற்சி பெற்றுள்ளார்

    வானியற்பியல் பேராசிரியர் பணியுடன் தொடர்ந்து வானியற்பியல் கோட்பாடுகள், விண்மீன்கள் கூட்டம், பால்வெளி மண்டலம் அதன் கருந்துளைகள் ஆகியவற்றினைப் பற்றிய ஆய்வினைத் தொடர்ந்தார்.  இத்துறையில் இதுவரை நூற்றுக்கும் அதிகமான ஆய்வறிக்கைகளையும் பிரியா வெளியிட்டுள்ளார்.

    இவருடன்  இணைந்து  ஆய்வு மேற்கொண்ட  ‘எசிக்குயல் ட்ரைஸ்ட்டர்’  (Ezequiel Treister) என்பாருடன் இவர் வெளியிட்ட  ஆய்வின் முடிவு இயற்பியல் துறையில் ஓர் இன்றியமையாத்  திருப்புமுனையாகும்.  “தொடர்ந்து வளரும் பெரும் கருந்துளைகளின் நிறைக்கும் அவற்றின் வளர்ச்சியில் ஓர் உச்ச வரையறை உண்டு” என்ற இவரது கண்டுபிடிப்பு கருந்துளைகள் பற்றிய புதிய, இயற்பியல் துறைக் கண்டுபிடிப்பாகும். விண்மீன் கூட்டங்களின் தோற்றம் பற்றிய ஆய்வுக்கு பெரும்பங்கு அளித்துள்ளது இவரது இந்தக் கண்டுபிடிப்பு. இவரது  “கருந்துளை நிறையின் உச்சவரையறைக் கோட்பாடு” சர் சி வி இராமனின் “இராமன் விளைவு”, சந்திரசேகரின் “சந்திரசேகர் வரையறை” ஆகியவற்றிற்கு ஒப்பானது.

    இவர் ஆய்வின் சுருக்கமான விளக்கம்: விண்மீன் கூட்டங்களின் மையத்தில் இருக்கும் கருந்துளை தனது ஈர்ப்பு விசையின் காரணத்தினால் அதனருகில் அகப்படும் சக்திகுறைந்த விண்மீன்களையும், கோள்களையும் தன்னுள் விழுங்கி வளர்கிறது.  தொடர்ந்து வளரும் கருந்துளையின் நிறையின் உச்ச எல்லையானது  அந்தகோள்களின் கூட்டத்திலிருக்கும்  சூரியனின் நிறையைப் போன்று பத்து பில்லியன் மடங்குவரைதான் அதிகரிக்கும், இந்த நிறையின் அளவு  கருந்துளை இருக்கும் விண்மீன் கூட்டத்தின் மொத்தநிறையின் ஒரு விழுக்காடு ஆகும் (the ultra-massive black holes, which lurk in the centers of huge galaxy clusters, seem to have an upper mass limit of about 10 billion times that of the Sun or about one percent of the total mass of the giant galaxies in which these black holes are found).  இவ்வாறு வளரும் கருந்துளை புதிய விண்மீன்கள் தோன்றும் அண்டமாகவும் விளங்குகிறது.

    இந்த வானியற்பியல் கோட்பாட்டின் திருப்புமுனையான கண்டுபிடிப்பின் காரணத்தினால் இவருக்கு இயற்பியல் நோபல் பரிசு வழங்கப்படலாம் என்று கணிக்கப்பட்டு, அப்பரிசு பெறத் தகுதியானவர் பட்டியலில் தொடர்ந்து இடம் பெற்றும் வருகிறார்.   இவரது அறிவியல் சாதனையின்  முக்கியத்துவம் அங்கீகரிக்கப்பட்டு  இவருக்கு எதிர்காலத்தில் நோபல் பரிசு கிடைக்க வேண்டும் என்று வல்லமைக் குழுவினர் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    Contact Info:
    Professor Priyamvada Natarajan
    Departments of Astronomy & Physics
    Yale University
    New Haven, CT 06511
    phone: +1-203-436-4833 (office)
    email: priyamvada.natarajan@yale.edu
    webpage: http://www.astro.yale.edu/priya

    கட்டுரைக்கான சான்றுகள்:
    Professor Priyamvada Natarajan’s Research Articles
    http://arxiv.org/find/astro-ph/1/au:+Natarajan_P/0/1/0/all/0/1
    Showing results of 115 total for all:natarajan

     

    Priyamvada Natarajan
    http://www.astro.yale.edu/priya/index.html
    http://en.wikipedia.org/wiki/Priyamvada_Natarajan

     

    நோபல் பரிசை நோக்கி முதல் தமிழ்ப் பெண் – தி இந்து
    http://tamil.thehindu.com/general/education/article6411847.ece

     

    இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி
    http://jayabarathan.wordpress.com/first-indian-tamil-woman-scientist/

     

    Astronomers Discover Upper Limit for Mass of Giant Black Holes
    http://www.ifa.hawaii.edu/info/press-releases/Treister9-08/UMBHs.html

     

    Astrophysics: Is there an upper limit to black hole masses?
    Priyamvada Natarajan, Ezequiel Treister
    (31 Aug 2008)
    http://arxiv.org/abs/0808.2813
    http://arxiv.org/pdf/0808.2813v2.pdf

     

     

    **************************************************************************************
    வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
    தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
    வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

    **************************************************************************************

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம்http://www.vallamai.com/?p=43179 ]

     
    Share
  • அறிவில் ஓங்கி இவ்வையம் தழைக்கட்டும்

    — எஸ். வி. வேணுகோபாலன்.
    tiny tots

    வையம்பட்டி முத்துசாமி என்னும் ஓர் அற்புதக் கவிஞரின்,
    ‘பொண்ணு பொறக்குமா ஆணு பொறக்குமா
    பத்து மாதமா போராட்டம்,  இதுவும்
    பொண்ணாப் பொறந்தா கொன்னுப்புடுவேன்னு
    புருஷன் பண்ணுறான் ஆர்ப்பாட்டம்’

    எனும்  பாடல் நெஞ்சைப் பிழிந்தெடுக்கும். அந்தப் பாடலின் இறுதியில் வருவதுபோலவே, இன்றும் ‘பொண்ணாப் பிறந்தா’, அரளியை அரைப்பதும், உமியை நுணுக்குவதும், கண்களை மூடிக் கொண்டு பெற்ற குழந்தைக்கே அதைப் பாலாகக் கொடுப்பதும் நடக்கத்தான் செய்கிறது.

    மிகவும் படித்த உயர் நடுத்தர வர்க்க ஆண்களிடையேகூட இன்றும் பலர், பெண் குழந்தை பிறந்தால் இனிப்பு வழங்கிக் கொண்டாட விரும்புவதில்லை. பிரசவ காலத்து உடல் நிலை, உளவியல் தன்மை எதையும் பற்றிக் கவலையின்றி அப்போதும் பெண் பிள்ளை பெற்றவளைக் கரித்துக் கொட்டும் மனிதர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். ‘குழந்தைக்கு என்ன பெயர்?’ என்று கேட்டால், ‘ஆமாம் பெயர் வைக்கிறாங்க..’ என்று அலுத்துக் கொள்வோரும் உண்டு.

    நவீன கண்டுபிடிப்புக் கருவியை வைத்து பழமையான கண்ணோட்டத்தோடு பெண் சிசுவை பிறக்க விடாது செய்வதும் இன்றைக்கும் தொடரவே செய்கிறது. தப்பித் தவறி பிறக்கும் பெண் குழந்தைகளும் ஒவ்வொரு கட்டத்திலும் தப்பிப் பிழைத்து வளர்ந்து, வாழ்ந்து, மறைய வேண்டியிருக்கிறது. உடை, படிப்பு, விளையாட்டுப் பொருள்….என ஒவ்வொரு விஷயத்திலும் புறக்கணிப்பை, இரண்டாம் இடத்தை, கசப்பை சந்திக்கும் பெண் குழந்தை இளமையிலிருந்தே   மரபார்ந்த பாகுபாடுகளைத் தின்றுதான் வளர்கிறாள்.

    இன்று உலக பெண் குழந்தைகள் தினம்! நாகரிக உலகத்திற்கு இப்படி ஒரு தினத்தைக் கொண்டாட வேண்டி இருப்பது அதன் பெருமையா, பெருந்தன்மையா, துயரமான உண்மை நிலவரங்களுடைய அபாய அறிவிப்பின் வசீகர வடிவமா தெரியாது.
    ‘தினங்களைக் கொண்டாடுவதை விட்டுக்
    குழந்தைகளை எப்போது கொண்டாடப் போகிறீர்கள்?’
    என குழந்தைகள் தினம் குறித்த சாட்டையடி கவிதை வழங்கினார் அப்துல் ரகுமான். இப்போது அதைவிடவும் கவன ஈர்ப்பான தினமாக மலர்கிறது உலக பெண் குழந்தை தினம்.

    பெண் குழந்தைகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த அக்கறையில் ஐக்கிய நாடுகள் அவை 2011ல் எடுத்த முடிவின்படி அக்டோபர் 11, 2012 முதலாவது சர்வதேச பெண் குழந்தைகள் தினம் அனுசரிக்கப் பட்டது. இதோ இந்த ஆண்டின் பெண் குழந்தைகள் தினம் உதிக்கிறது. 18 வயது நிறைவதற்குமுன் திருமண வாழ்க்கைக்குள் தள்ளப்படும் பெண் குழந்தைகள் குறித்து – ஆமாம் அவர்கள் குழந்தைகள்தான்! – மிகப் பெரிய கவலையை உலகம் கவனிக்க வேண்டி இருக்கிறது. உலக நாடுகளில் இதிலும் நமது நாட்டுக்கு முதலிடம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. சதவீதக் கணக்கு குறைந்து வருகிறது என்றாலும், நிம்மதி பெருமூச்சு விடும் அளவு குறையவில்லை. வல்லரசு பற்றி பிளந்து கட்டும் மேதாவிகளுக்கு இந்த மாதிரி செய்திகள் எல்லாம் ஒரு பொருட்டே கிடையாது.

    ஐந்து வயதில் மணமுடிக்கப்பட்டு ஆறரை வயதிற்குள் கணவனை இழந்து பிறகு தொண்ணூறு வயதுக்குமேல் வாழ்ந்து(!) மறைந்த ஒரு மூதாட்டி எங்கள் குடும்பத்திலேயே இருந்ததைப் பார்த்திருக்கிறேன். ‘நான் வாழ்க்கைப்பட்ட இடம் (ஊர்) சுமங்கலி, ஆனாலும் நான் அமங்கலி’ என்று பட்டம்மாள் என்ற பட்டா சித்தி சொல்லிக் கொண்டிருந்ததை இன்றும் என் தந்தை வேதனையோடு நினைவுகூர்வதுண்டு.

    பால்ய விவாகம் நடத்த உகந்த தினமாகக் கருதப்படும் நாள்தான் அட்சய திருதியை. அதைத்தான் இப்போது தங்கம் வாங்கும் திருவிழா நாளாக உருமாற்றி விட்டனர் தாராளமய காலத்தில் எல்லாவற்றையும் விற்கத் தெரிந்திருப்பவர்கள். அட்சய திருதியை தினத்தன்று குழந்தைகள் திருமணத்திற்கு எதிராகப் போய்க் குரல் கொடுத்து நிறுத்த முயன்ற பல பெண்கள், சமூகப் போராளிகள் கடுமையாகத் தாக்கப்படும் நிகழ்வுகளை ஊடகங்கள் அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து விவாதிப்பதில்லை.  அதற்கெல்லாம் யார் டி ஆர் பி ரேட்டிங் போடுவார்கள் என்பதாக இருக்கக் கூடும்.

    இளவயது திருமணம் மோசமானது. பக்குவமான உடலும், உளவியலும் அமையுமுன் மணவாழ்க்கைக்கு விரட்டப்படுவது கொடுமை. அதைவிடவும் கொடிய விஷயம், பெண் குழந்தைகளை வெறி பிடித்த  ஆண்கள் தங்களது காம இச்சைக்கு உட்படுத்தும் அராஜகம். கடந்த வாரம் கூட பிஞ்சுக் குழந்தை ஒன்றிடம் பாலியல் வக்கிரம் புரிந்த மனிதனைப் பற்றிய செய்தி வந்திருந்தது. வீட்டுக்குள்ளேயே, சுற்றுப் புறத்திற்குள்ளேயே, நெருங்கிய உறவினரிடையே,  ஏன், பெற்ற தகப்பனிடமிருந்துகூட இத்தகைய அச்சுறுத்தலை பெண் குழந்தைகள் பலரும் எதிர்கொள்கின்றனர். பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் பிரச்சனைகளுக்குப் பொறுப்பையும், பழியையும் அவர்களது உடையணியும் முறை, நவீன பாணி பழகும் தன்மை என்று எதன்மீதாவது போட்டுவிட்டு யாரும் தப்பிக்க முடியாத புகார்கள் கணக்கற்றவை.

    சக மனிதரிடம் மோசமாக நடப்பதற்கு முதற்காரணத்தை பாதிக்கப்பட்டவரிடம் தேடுவதை விடுத்து, அந்தச் செயலைச் செய்தவரிடமிருந்து எப்போது நாம் தேடத் தொடங்கப் போகிறோம்? நினைத்த நாடுகள் மீதெல்லாம் குண்டுபோட்டுத் தாக்கிவிட்டு அவற்றின் நடத்தை பற்றிப் பேசும் வல்லரசு நாடுகளின் ஆதிக்க மன நிலைதானே பெண்களிடம் கேவலமாக நடந்து கொள்ளும் ஆண்கள் மனத்திலும், சமூக பொது புத்தியிலும் நிறைந்திருக்கிறது?

    கேளிக்கையின் சாலை வழியெங்கும் பெண்களை எப்படியும் பார்க்க, ரசிக்க, மலினப்படுத்த உள்நெஞ்சில் பொங்கி வழியும் ஆர்வத்தை, உயிரியல் வேட்கையை விடாது தூண்டிக் கொண்டிருக்கிறது நவீன சந்தை பொருளாதாரம். அதன்வழி சிந்தனையைப் போக்குபவர்களுக்கு பெண்கள் உடலியல் ரீதியாக எப்போதும் தங்களுக்கானவர்கள் என்ற வெறி மிகுந்து விடுகிறது. பெண்களுக்கும் அவஸ்தைகள் உண்டு, வலியும் வேதனையும் மிகுந்த நாட்கள் உண்டு, சோர்வாகக்  கடக்க நேரும் பருவமொன்று உண்டு என்பதெல்லாம் சராசரி ஆண்மனத்தில் பதிவாவதில்லை. மண வாழ்க்கையிலும், பொதுவெளியிலும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கான விதைகள் அவர்களது குழந்தைப் பருவத்திலேயே ஊன்றப் படுகின்றன.

    உலகப் பெண் குழந்தை தினம் இவற்றுக்கு நேரெதிராக ஆரோக்கியமான பார்வையை முன்வைக்கத் துடிக்கிறது. இயற்கையின் இயல்பான மலர்ச்சியோடு பெண் குழந்தைகளைக் கொண்டாடக் கேட்கிறது. சமத்துவக் கண்ணோட்டத்தோடு அணுகக் கற்றுக் கொள்ளத் தூண்டுகிறது. மாசற்ற அன்பின் பார்வையை, களங்கமற்ற அரவணைப்பை, உள்ளார்ந்த நெகிழ்ச்சியுறுதலை பழகிக் கொள்ள அறைகூவல் விடுக்கிறது.  பெண்மையை புனிதப் படுத்துவதாகச் சொல்லி கீழ்மைப் படுத்திய காலங்களுக்கு விடை கொடுத்து, அறிவில் ஓங்கி இவ்வையம் தழைக்கும் வண்ணம் ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறது.

    *****************
    நன்றி: தமிழ் இந்து (அக்டோர் 12, 2014)

    Share
  • அருவி!

    -எம். ஜெயராம சர்மா – மெல்பேண்

    வள்ளுவரின் குறள் படித்தால்
    மனமாசு அகன்று விடும்                                  kural
    தெள்ளுதமிழ் மூலம் அவர்
    தேடி எமக் களித்துள்ளார்
    அள்ள அள்ளக் குறையாத
    அத்தனையும் தந்த அவர்
    அருவி எனப் பாய்ந்தோடி
    அனைவரையும் விழிக்கச் செய்தார்!

    ஆண்டவனை நினைப்பதற்கும்
    அமைதியாய் வாழ்வதற்கும்
    வேண்டுகின்ற கருத்தெல்லாம்
    விதம்விதமாய்த் தந்த குர்ஆன்                                                            Jesus
    நீண்டதொரு அருவியென
    நீள்புவியில் ஓடிநிதம்
    ஆண்டவனின் குரலாக
    அனைவருக்கும் இருக்கிறது!

    பைபிள் எனும் வேதநூல்
    பலமொழியில் வந்துளது
    உள்ளமெலாம் ஒளிஊட்ட
    உரமாக நிற்கிறது
    தெள்ளுதமிழ் பைபிளிப்போ
    சிறப்பான அருவியென                                                                          Lord-Krishna
    கள்ளமெலாம் கரைந்திடவே
    காத்திரமாய் ஓடுதிப்போ!

    கண்ணனது கீதையினால்
    கசடரெலாம் விழிப்புற்றார்
    எண்ணமெலாம் சிறப்படைய
    எல்லோரும் படிக்கின்றார்
    கீதையெனும் அருவியிலே
    கிடந்தெழுந்து வந்துவிடின்                                                                 mosque
    போதையெலாம் தெளிந்துவிடும்
    பொறிபுலனும் ஒடுங்கிவிடும்!

    சமயங்கள் பல அருவி
    சாத்திரங்கள் பல அருவி
    சன்மார்க்கம் குலைந்துவிடின்
    சகதியாய் ஆகிவிடும்
    அருவிகள் ஓடவேண்டும்
    ஆணவம் அழியவேண்டும்
    உணர்விலே நல்லெண்ணம்
    ஓடிடட்டும் அருவிகளாய்!

    கண்ணனும் அருவியானார்
    கர்த்தரும் அருவியானார்
    எண்ணியே பார்க்கும்போது
    எம்நபியும் அருவியானார்
    மண்ணிலே உள்ளாரெல்லாம்
    மாண்புறவே வாழ்வதற்கு
    புண்ணியர்கள் யாவருமே
    புனிதநீர் அருவியானார்!

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 139

    -மலர் சபா

    மதுரைக் காண்டம் – 03: புறஞ்சேரி இறுத்த காதை

    கோவலனது உருவ மாறுபட்டால் ஐயுற்ற கௌசிகன், உண்மை   தெளிய, மாதவிப்பந்தரை நோக்கிக் கூறுதல்

    காதலி தன்னுடன் கானகம் புகுந்த கோவலன்,
    கொல்லன் உலைத் துருத்தி போல்
    பெருமூச்சுவிட்டு உள்ளம் கலங்கி
    உடலின் நிறமும் கறுத்துக் காணப்பட்டதால்,
    மாதவியின் தூதுவனாய் வந்த கௌசிகன்
    இவன் கோவலன்தானோ? என ஐயமுற்றான். Madhavi

    “கோவலன் தன்னைவிட்டுப் பிரிந்ததால்
    கொடிய துயரினை அடைந்த
    கரிய நெய்தல் மலர் போல்
    நெடிய கண்களையுடைய மாதவியைப்போல்
    நீயும் அல்லவா
    பொறுக்க இயலாத இவ்வேனிற்வெயிலால்
    வாடி வதங்குகிறாய்” என்று
    கௌசிகன் அருகிருந்த
    மாதவிக்கொடியை நோக்கிக் கூறினான்.

    அதைக் கேட்டகோவலன் கௌசிகனை அடுத்துக் கூறுதல்

     இங்ஙனம் கௌசிகன் உரைக்கக் கேட்ட கோவலன்
    அவனிடம் சென்று,
    “நீ இப்போது இங்கு உரைத்ததன் பொருள் யாது?”
    எனக் கேட்டான்.

    கௌசிகனும் “இவன் கோவலன்தான்
    எந்த ஒரு ஐயமுமின்றி
    அவன் அடையாளம் அறிந்தேன்”
    எனத் தெளிவுற்றான்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 44 – 55
    http://ilakkiyam.com/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanak/ettuthogai/pura-nanooru/1135-purancheriyirthakathai–

    படத்துக்கு நன்றி: கூகுள்

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(43)

    -செண்பக ஜெகதீசன்

    மயிர்நீப்பின் வாழாக் கவரிமா வன்னா
    ருயிர்நீப்பர் மானம் வரின். (திருக்குறள்-969: மானம்)

    புதுக் கவிதையில்…

    கவரிமானின் குணமிது-                      sunday malar template
    உடலில் மயிரிழப்பிற்கு
    உயிரையே விட்டுவிடும்…

    மனிதரிலும் இருக்கிறார்கள்
    இப்படி-
    மானத்தை இழக்கநேர்ந்தால்,
    வாழமாட்டார்கள்
    அதற்குமேலும்…!

    குறும்பாவில்…

    மயிரிழந்தால் உயிரிழக்கும்
    கவரிமான் போன்ற மனிதரும்
    உயிரிழப்பர், மானமிழந்தால்…!

    மரபுக் கவிதையில்…

    காட்டில் வாழும் கவரிமானும்
    கணத்தில் உயிரை விட்டிடவே,
    வேட்டை யாடி வீழ்த்தவேண்டாம்
    விழுந்திடும் ஒருமயிர் போதுமன்றோ,
    நாட்டி லுள்ள மாந்தரிலே
    நாமும் தெரிந்து கொண்டிடலாம்,
    காட்டு மானைப் போல்வாழார்
    கொண்ட மானம் போனபின்னே…!

    லிமரைக்கூ…

    கவரிமான் வாழாது, இழந்துவிட்டால் மயிரை,
    இதுபோன்ற மாந்தரும்
    மானமதை இழந்துவிட்டால், விட்டிடுவர் உயிரை…!

    கிராமிய பாணியில்…

    வாழாது வாழாது
    கவரிமானு வாழாது,
    மயி ரொண்ணு போனாலே
    உயிர்தானாப் போயிருமே..

    இதுபோல மனுசனுந்தான்
    ஒலகத்தில இருக்கானே,
    அவுனும்
    மானம்போனா வாழமாட்டான்
    மானுபோலச் செத்திருவான்,
    வாழாது வாழாது
    கவரிமானு வாழாது…!

     

    Share
  • காற்று வாங்கப் போனேன் (48)

    கே.ரவி

    என் நூல்களை அனுப்பியதுமே படித்து விட்டுத் தம் கருத்துகளைக் கடிதங்களாக எனக்கு அனுப்பிய சான்றோர் பெருமக்களில், லலிதா பாரதி அம்மையாரையும், நான் பெரிதும் மதிக்கும் இலக்கியப் படைப்பாளர்களான அமரர் தொ.மு.சி.ரகுநாதனையும், அமரர் தி.க.சிவசங்கரனையும், பாரதி கலைக் கழக நிறுவனர் பாரதி சுராஜ் அவர்களையும், முனைவர் தெ.ஞானசுந்தரம் அவர்களையும், டாக்டர் பிரேமா நந்தகுமார் அவர்களையும், குறிப்பிடாமல் இருக்க முடியாது.

    லலிதா பாரதி அம்மையாரின் வாழ்த்தை அவருடைய தாத்தாவின் வாழ்த்தாகவே, அதாவது, என்றைக்குமே இளமையாகவே நம் நெஞ்செல்லாம் நிறைந்துவிட்ட பாரதியின் வாழ்த்தாகவே எண்ணிப் பரவசப் பட்டேன்.

    பாட்டினிலே சொல்வது பராசக்தி சொல் என்றால் ஏட்டினிலே சொல்வது எழுத்தாளன் கவிஞன் ரவியின் சொல் அல்லவா? …………… உங்கள் மனத்தில் பாரதியின் கவிதைகள் ஆழ்ந்த சிந்தனைகளைத் தோற்றுவித்து, கருத்து அலைகளோடு மோதி ஒரு வியப்பான, நயமான விமரிசனத்தை ஏற்படுத்தியிருக்கிறது….. வாழ்க உங்கள் பாரதி பக்தி.

    தம்மால் நடமாட முடிந்த வரை வானவில் பண்பாட்டு மையம் நடத்தும் பாரதி திருவிழாவில் தவறாமல் கலந்து கொண்ட அந்த அம்மையாரின் உள்ளூக்கம் வியக்கத் தக்கது. அவர் கவிஞர் வாலிக்கு பாரதி விருது வழங்கிய புகைப்படத்தில்தான் அவர் முகத்தில் எத்தனைப் பொலிவு, கம்பீரம்!

    as1

    as2தொ.மு.சி.ரகுநாதன் அவர்களுடைய கடிதம் படித்துக் கண்கலங்கினேன்:

    நூலைப் படித்து முடித்து விட்டேன். என்றாலும் …. Arthritis நோயினால் வலது கையும், விரல்களும் பாதிக்கப்பட்டு, கடிதம் எழுதுவது கூடச் சிரமமாகி, என் எழுத்துப் பணியே முடங்கிவிட்ட நிலையில், தங்கள் நூலைப் பற்றிச் சற்று விரிவான கருத்துரை கூற இயலாமைக்கு வருந்துகிறேன்………. தங்கள் பாரதி ஆய்வுப்பணி தொடர என் இதயம் நிறைந்த வாழ்த்துகள்.

    தி.க.சி.யின் இரண்டு கடிதங்கள் என் கோப்பில் பாதுகாக்கப்பட்டுள்ள பொக்கிஷங்கள். முதல் கடிதம், “நமக்குத் தொழில் கவிதை” என்ற என் நூலைப் படித்துவிட்டு, 1997-ல் அவர் கைப்பட எழுதிய கடிதம். 73 வயதில் கண்புரை நோயின் தொல்லைக்கிடையே நூலைப் படித்து முடித்த செய்தியைச் சொல்லிவிட்டு அவர் எழுதியிருந்த வரிகள் மறக்க முடியாதவை:

    சொல்புதிது; பொருள் புதிது; சுவை புதிது என்ற பாரதியின் திறனாய்வு இலக்கணம், இந்நூலுக்குப் பொருந்துகிறது. அதுவேas3 – கருத்து வேற்றுமைக் கிடையிலும் – இந்நூலின் சிறப்பு. இந்நூல் பரவலாகப் படிக்கப்பெற வேண்டும்; விவாதிக்கப் பெற வேண்டும் என்பது என் அவா. இந்த விவாதத்தில், நா.சீ.வரதராஜன், சுராஜ் போன்ற என் நண்பர்களோடு, வல்லிக்கண்ணன், ச.செந்தில்நாதன், திருப்பூர் கிருஷ்ணன், இன்குலாப், அப்துல் ரகுமான், பழமலய், ஈரோடு தமிழன்பன் முதலிய படைப்பாளிகளும் ஆய்வாளர்களும் பங்கேற்க வேண்டும் என்பது என் விழைவு. வாஸந்தி, ராஜம் கிருஷ்ணன், ப.சிவகாமி, திலகவதி முதலியோரும் பங்கேற்றால் நல்லது. குறைந்த பட்சம், ‘இலக்கியச் சிந்தனை’க் கூட்டத்திலாவது, இந்நூல் ஆராயப்பெற வேண்டும்; முயல்க! வெல்க! …….

    இரண்டாவது கடிதம், சில ஆண்டுகள் கழித்து, ‘மின்னற் சுவை’ என்ற என் நூல் கிடைக்கப் பெற்றவுடன் அவர் எழுதியது. “மகாகவி பாரதி பக்தர்/பித்தர்” என்று என்னை விளித்துவிட்டுக் கண்புரை நோயின் கடுமையாலும், இதயநோயின் காரணமாகவும் தாம் உடல்நலம் குன்றியிருந்த வேதனைச் செய்தியைச் சொல்லி, “பாரதி பாதையில் புதுயுகம் படைப்போம்” என்ற நல்வாக்குடன் கடிதத்தை நிறைவு செய்திருந்தார்.

    தி.க.சி. விழைந்த வண்ணம் என் நூல்கள் அவர் குறிப்பிட்ட பெருமக்களால் அவருடைய ஆயுட்காலத்தில் ஆய்வு செய்யப்படவில்லை. அனால், அதற்கான வாய்ப்பு இப்பொழுது, ஒரு மாமாங்கக் காலத்துக்குப் பிறகு உருவாகியிருக்கிறது. ஆம், அடுத்த ஆண்டு, 2015, பிப்ரவரி மாதம் 21-ஆம் தேதியன்று சென்னை, எத்திராஜ் மகளிர் கல்லூரியில் என் நூல்கள் குறித்த முழுநாள் கருத்தரங்கம் ஒன்றை, திரு.பி.எஸ்.ராகவன், முனைவர் ஒளவை நடராஜன் போன்ற பல நல்ல பெருமக்கள் துணையுடனும், வழிகாட்டுதலோடும் நடத்தப் பாலக்காடு பேராசிரியர் திரு.கே.ஏ.ராஜாராம், முனைவர் அ.அறிவுநம்பி, முனைவர் உலகநாயகி பழனி ஆகியோர் பெருமுயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    as4இந்தியாவைப் பொறுத்தவரை, இலக்கியத் திறனாய்வின் முன்னோடி என்று கருதப்படுபவர் கே.ஆர்.சீனிவாச ஐயங்கார். அவருடைய மகளும், மிகச் சிறந்த இலக்கியப் படைப்பாளரும் ஆன முனைவர் பிரேமா நந்தகுமார் என் நூல்களைப் படித்துவிட்டு ஒரு நல்ல திறனாய்வுக் கடிதமே வரைந்திருந்தார். என் நூல்கள் ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு அதில் தம்மைக் கவர்ந்த அம்சங்களையெல்லாம் எடுத்துக்காட்டும் போக்கில், என் இனிய நண்பர் கவிமாமணி மீ.விஸ்வநாதனின் அற்புதமான இரண்டு வரிகளை நான் ஒரு கட்டுரையில் எடுத்தாண்டிருந்ததை உன்னிப்பாகக் கவனித்து, அந்த வரிகளை மனம்திறந்து பாராட்டியிருந்தார். அந்த வரிகள்:

    குருவை எண்ணிக் கோலம் போட்டால்

    திருவே வீட்டில் திருவிளக் கேற்றுவாள்

    என் கவிதைத் தொகுப்பில் உள்ள ‘குருமந்திரம்’ என்ற நூறு பாடல்களை மறக்காமல் குறிப்பிட்டிருந்தார். குருபக்தி எந்த அளவு டாக்டர் பிரேமா நந்தகுமாரின் இதயத்தை ஆட்கொண்டுள்ளது என்பதை உணர முடிகிறதே!

    கவிதை விமர்சனத்தில் மிகக் கறார் பேர்வழியான பாரதி சுராஜ், என்னுடைய கவிதைத் தொகுப்பை ‘இன்னொருas5 கீதாஞ்சலி’ என்று எழுதியிருந்ததை முன்பே சொல்லிவிட்டேன். அவர், ‘முரண்பாடுகளும் முண்டாசுக் கவிஞனும்’ என்ற என் கட்டுரையைப் படித்து விட்டு ஒரு நீண்ட விமர்சனக் கடிதம் எழுதியிருந்தார். நான் நல்ல நூலாசிரியனாக உருவாகி வருவது பற்றி மகிழ்ச்சி தெரிவித்து விட்டு நிறைவாக இப்படி எழுதியிருந்தார்:

    இந்தப் பேனா இனி ஓயாமல் எழுதிக் கொண்டேயிருக்க வாழ்த்துகிறேன்

    அவர் வாழ்த்துப் பாதி பலித்தது. ஆம் அதன் பிறகு நான் நிறையவே எழுதிக் கொண்டிருக்கிறேன். அதுவும் ஓயாமல். அதாவது, என் வக்கீல் பணியில் இருந்து ஓய்வு பெறாமலேயே, எழுதிக் கொண்டிருக்கிறேன். ஏன் பாதிதான் பலித்தது என்று சொன்னேன் தெரியுமா? இப்பொழுதெல்லாம் நான் பேனாவால் எழுதுவதே இல்லை. எல்லாவற்றையும் நேரடியாகக் கணினியில் மின்னச்சு செய்து விடுகிறேன், இதோ, இப்பொழுது இந்தக் கட்டுரை உட்பட! பாரதியின் “எழுதுகோல் தெய்வம்” இனி என்னாகும்? அந்தத் தெய்வத்தின் கல்கி அவதாரம்தான் கணினி என்று சிகாமணி முணுமுணுக்கிறான். எப்படியோ!

    as6போற்றுதலுக்குரிய பேராசிரியர் முனைவர் தெ.ஞானசுந்தரம், ‘மின்னற்சுவை’ என்ற என் நூலைப் படித்துவிட்டு மிக நல்லதோர் ஆய்வுக் கடிதம் எழுதியிருந்தார். அவர் கம்பராமாயணத்தில் ஆழ்ந்த புலமையுடையவர் என்பதை நாடறியும். கம்பன் என்றதும் நீதிபதி மகராஜனும், நீதிபதி இஸ்மாயிலும் நினைவுக்கு வருவது இயல்பே. தெ.ஞா. அவர்கள் தம் கடிதத்தில், என் நூலில் உள்ள ஒவ்வொரு கட்டுரையையும் பற்றி விரிவாகத் தம்முடைய பாராட்டைச் சொல்லிவிட்டு, என் நூலைப் படித்த போது சில இடங்களில் நீதிபதி மகராஜன் பேசுவது போன்ற உணர்ச்சி உண்டாயிற்று என்று குறிப்பிட்டுவிட்டுப் பின்வருமாறு அக்கடிதத்தை முடித்திருந்தார்:

    நீதித்துறை தமிழுக்குக் குறிப்பிடத்தக்க தொண்டாற்றியுள்ளது. அம்மரபு தங்களால் மேலும் தொடரப் படுகிறது.

    இதையெல்லாம் நான் இங்கே குறிப்பிட மூன்று காரணங்கள் உண்டு.

    எந்த நூலை யார் படித்தாலும் தமக்கென உள்ள தனிப்பார்வையோடுதான் அந்த நூலின் உள்ளடக்கத்தை அணுகுகிறார்கள் என்ற இயல்பான உண்மையையும், அதே நேரத்தில் தம் கருத்துக்கு உட்படாத அல்லது உடன்படாத கருத்தானாலும், அதைக் கருதிப் பார்த்துப் பாராட்டும் பண்பு மேலே நான் குறிப்பிட்ட பெரியவர்களிடம், அவர்களைப் போன்ற உண்மையான இலக்கிய ஆய்வாளர்களிடம் உண்டு என்பதை நான் உணர்ந்து கொண்டதையும் இங்கே பதிவு செய்ய விரும்பியது முதற் காரணம்.

    மாங்கு மாங்கென்று கைவலிக்க நான் எழுதிய நூல்களை யாருமே படிப்பதில்லையோ என்று நான் சிலசமயம் உள்ளுக்குள் குறைபட்டுக் கொண்டது தவறு என்று, இக்கடிதங்களை இப்பொழுது மறுவாசிப்புச் செய்த போது, நான் உணர்ந்து கொண்டதைப் பதிவு செய்ய விரும்பியது இரண்டாவது காரணம்.

    தெரிந்தோ, தெரியாமலோ சுயசரிதை போல நான் எழுதத் தொடங்கிவிட்ட இந்தச் சுயபுராணத் தொடரில் என்னைப் பற்றிச் சற்றேனும் புகழுரையாகச் சொல்லிக் கொள்ள என் நூல்களையும், இந்தக் கடிதங்களையும் விட்டால் வேறு சான்றுகள் எதுவுமில்லை என்ற அப்பட்டமான உண்மையை ஒப்புதல் வாக்குமூலமாகப் பதிவு செய்ய நினைத்தது மூன்றாவது காரணம்.

    ஆனாலும் எனக்கொரு குறை. 1962-63-ல், நான் சரிவரத் தமிழ் பயில்வதற்க முன்பே, அப்போது ஜனாதிபதியாக இருந்த டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளன்று ஆசிரியர் தின வாழ்த்தாக அவருக்கு எழுதி அனுப்பியிருந்த ஆங்கிலக் கவிதையும், அதைப் படித்துவிட்டுப் பாராட்டி அவரிடம் இருந்து வந்த கடிதமும் எங்கு தேடியும் கிடைக்கவில்லை, நினைவிலும் இல்லை.

    இவ்வளவு பாராட்டுகளையும் இத்தனைப் பெரிய மனிதர்களிடம் பெற்ற பின்னும், அதை உள்வாங்கிக் கொள்ளாமல், இன்னும் நான் என்ன எழுத வேண்டுமோ அதை எழுதிவிடவில்லை என்ற தாகத்தோடு தவித்துக் கொண்டிருப்பதைத்தான் “முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது வேதாளம்” என்ற கவிதையில் சொல்ல முயல்கிறேனோ? என்ன முயலோ அது! புயல் வரும் என்பதை முயல் வரும் என்பதுபோல் புரிந்து கொண்டு, ஆறு வயதில் குழந்தை ஷோபனா காத்திருந்ததைப் போல, நான் இந்த அறுபது வயதிலும், ஏதோ முயல் வரும் என்று காத்துக் கொண்டிருக்கிறேனோ! புயலா, முயலா? விடிந்தால் தெரியும் கதை!

    (தொடரும்)

    Share
  • மலரே குறிஞ்சி மலரே…

    கவிஞர் காவிரிமைந்தன்.

     

     

    dr siva

    அழகிய பூக்கள் இயற்கையின் எழிலை தினம்தோறும் கொட்டித் தீர்க்கின்றன!  மலையில் பிறக்கும் மலரிது!  அதுவும் பன்னிரு ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும் மலர் எனும்போது அதன் மகத்துவம் கூடுகிறது!  தொடங்கிடும் பல்லவியே இந்த மலரை ஏந்திவருகிறது!  பாடல் பிறக்கிறது!

    கவிஞர் வாலியின் கரங்களிலே.. மெல்லிசை மன்னரின் இன்னிசையோடு மலையோரம் வீசுகின்ற மந்தகாசக் காற்றுபோல நம்மைநோக்கி நடைபோடும் தென்றலிது!  மலரைப்  பெண்ணுக்கு உவமையாக்கிவிடும் கவிஞர்களின் வரிசையில் வாலியின் கரம்பட்டு இந்தக் குறிஞ்சிமலர் பூக்கிறது!

    குடகுமலையில் பிறக்கும் காவிரியின் கருவறையில் தொடங்கி குளிர்த் தென்றல் தாலாட்டும் மலையோரம் தழுவி எதிரொலிக்கும் இப்பாடல் எத்தனை இனிமையானது!  பெண்மையின் மேன்மையை தன்னுடைய வார்த்தைச் சரங்களால் பின்னி மாலை தொடுக்கிறார் பாருங்கள் கவிஞர் வாலி!

    பத்மஸ்ரீ கே.ஜே.யேசுதாஸ் குரலுடன் எஸ்.ஜானகி இணைந்து பாடும் இனிய பாடல்!  இதைக் கேட்பது இன்பம்!  மீண்டும் கேட்பது பேரின்பம்!  டாக்டர் சிவா என்னும் திரைப்படத்தில் ‘நடிகர் திலகத்துடன்’ மஞ்சுளா இணைந்தளித்த காதல் பாடலிது!  நயமிக்க வரிகளால் நங்கையைப் பாராட்டி, நல்லதோர் வீணைபோல் விரல்களால் அதனை மீட்டி, உள்ளம்தொடும் பாடலொன்று தந்துள்ளார்கள் .. காவியக் கவிஞருடன் மெல்லிசை மன்னருமே!..

    http://youtu.be/4YCm11DX3wg

    காணொளி: http://youtu.be/4YCm11DX3wg

    படம்:  டாக்டர் சிவா (1975)
    பாடல்: வாலி
    இசை: எம். எஸ். விஸ்வநாதன்
    குரல்: கே. ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி
    …………………………………………………………………………….

    மலரே குறிஞ்சி மலரே
    மலரே குறிஞ்சி மலரே
    தலைவன் சூட நீ மலர்ந்தாய்
    பிறந்த பயனை நீ அடைந்ததை

    (மலரே)

    யார் மடி சுமந்து தான் பிறந்தாலும்
    தாய் மடி மறந்து தலைவனை சேரும்
    பெண்ணென்னும் பிறப்பள்ளவோ

    கொடியரும்பாக செடியினில் தோன்றி
    கோவிலில் வாழும் தேவனை சேரும்
    மலரே நீ பெண்ணல்லவோ

    (தலைவன்)

    நாயகன் நிழலே நாயகி என்னும்
    காவியம் சொல்லி கழுத்தினில் மின்னும்
    மகளே உன் திருமாங்கல்யம்

    தாய் வழி சொந்தம் ஆயிரம் இருந்தும்
    தலைவனின் அன்பில் விளைவதுதனே
    உறவென்னும் சாம்ராஜ்ஜியம்

    (தலைவன்)

    பாடிடும் காற்றே பறவையின் இனமே
    பணி மாலை தொடரே பாய்ந்திடும் நதியே
    ஓடோடி வருங்களேன்

    பால் மனம் ஒன்று பூ மனம் ஒன்று
    காதலில் இன்று கலந்து கண்டு
    நல்வாழ்த்து கூறுங்களேன்

    (தலைவன்)

    வாலிMSVயேசுதாஸ்janaki

    Share
  • 2015 ஆண்டில் இந்தியா அமைக்கப் போகும் இந்து மாக்கடல் சுனாமி எச்சரிக்கை ​​ கருவி ஏற்பாடு

     

    jay

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=DraGujBk2Ns

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ehczW4KxWeU

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=GAq6ecjeGZA

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=apv5p-bpBH0

    http://www.noaa.gov/features/03_protecting/tsunami5.html

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

    முடுக்கி விட்ட பம்பரக் கோளம்! கடற்தளம்

    உடுக்க டித்துப் போடுமே தாளம்! சுனாமி

    அடுத்த டுத்துச் சீறிடும் நாகம்! உயிர்களை

    எடுத்துச் செல்லும் மீறிடும் வேகம்!

    பொறிநுணுக்கத்தில் முன்னேறிய இந்த 21 ஆம் நூற்றாண்டிலும், இயற்கை அன்னையின் மிகக் கொடிய சுனாமி இன்னலின் பாதிப்புக்கு நாம் உட்பட்டுள்ளோம் .   2015 இல் அமைக்கப் போகும் நமது புதிய அபாய எச்சரிப்புச் சாதனமானது, இந்திய அரசுடன் இணைந்து விருத்தி செய்யப்பட்டு, சுனாமி தாக்குதலால் உயிரிழப்பு  நேராமல் எதிர்காலத்தில் தடுக்கும்.

    ஸொஃபியா  ஸாலினியஸ் [RegPoint European Company Chief Executive] [அக்டோபர் 10, 2014]

    கடந்த ஆறு மாத காலங்களாக நாங்கள் எதிர்ப்பட்ட பொறிநுணுக்கச் சவால்களைக் கடந்து வெளி வந்துள்ளோம்.    தற்போது கிடைத்துள்ள ஹைதிராபாத் பொறிநுணுக்க நிறுவக உதவி யோடு, பல நூறு உயிர்களைப் பாதுகாக்கப் போகும் ஓர் உன்னத சாதனத்தை மேலும் துல்லிய நுணுக்கக் கருவியாக்கப் போகிறோம்.

    சித்தார்த்த தாஸ்  [Director, RegPoint Indian Operations, UK]  [அக்டோபர் 10, 2014]

    Wave watchdog

    2015 ஆண்டில் இந்தியா இயக்கப் போகும் புதிய சுனாமி எச்சரிப்பு ஏற்பாடு

    இந்தியா 2015 ஆண்டு ஆரம்ப மாதங்களில் சுனாமி அபாயத்தைத் தடுக்க முற்போக்கான ஓர் எச்சரிக்கை  ஏற்பாடைத் தென்னிந்தியாவில் ஹைதிராபாத் நகரில் அமைக்கப் போகிறது.   அந்த நூதன சாதனக் கருவியை விருத்தி செய்யும் ஐரோப்பிய நிறுவகம் : ரெஜ்பாயின்ட் [RegPoint] என்பது.  அதைச் செய்து முடிக்க அதிபர் சித்தார்த்த தாஸ் நியமிக்கப் பட்டிருக்கிறார்.   அந்த சுனாமி எச்சரிக்கைச் சாதனம் அபாய முன்னறிப்பை குறிப்பிட்ட கடல் அரங்கத்தின் அத்தனை மொபைல் ஃபோன்களுக்கும் விரைவில் அனுப்பும் தகுதி பெற்றது.   அந்த முன்னறிவிப்பு சுனாமி வரும் கால நேரம், கடற்கரைப் பகுதிகளைக் குறிப்பிடுவதோடு பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய  விதி முறைகளையும் எடுத்துக் கூறும்.  2004 டிசம்பர் 26 ஆம் தேதி சுனாமிப் பேரலை அடிப்பில் சுமார் 230,000 பேர் தெற்காசிய இந்து மாக்கடல்  கடற்கரை ஓரங்களில் உயிரிழந்தனர்.   ஏறக்குறைய 2 மில்லியன் நபர்கள் இடப் பெயர்ச்சி செய்ய நேர்ந்தது.  சுனாமி நேர்ந்து பத்து வருடங்கள் கடந்த பின்னும் உயிரிழப்புகளைத் தடுக்கக் கூடிய ஓர் உன்னத நவீன எச்சரிக்கை ஏற்பாடு இன்னும் முறையாக இந்து மாக்கடல் கரையோர நாடுகளில்  அமைப்பாக வில்லை என்பது வருந்தத் தக்கது.   பசிபிக் கடற்கரை நாடுகளுக்குப் பாதுகாப்பு முன்னறிவிப்பு செய்ய ஹவாயி தீவில் ஏற்பாடு உள்ளது போல் இந்து மாக்கடல் நாடுகளுக்கு செம்மையான ஏற்பாடு எதுவும் முழுதாக இல்லை.   இந்திய தேசீய கடற் தகவல் பணி மையம் [INCOIS : Indian National Centre for Ocean Information Service] சுனாமி முன்னறிவிப்புத் தேவையை உணர்ந்து, பிரிட்டன் ரெஜ்பாயின்ட் நிறுவகத்தோடு பணிசெய்து ஓர் புதிய எச்சரிக்கை ஏற்பாட்டை அமைக்க இப்போது முன்வந்துள்ளது.

     Early warning system

    ‘சுனாமி எச்சரிக்கை அனுப்பச் சீரான, விரைவான ஒலிபரப்புச் சாதனத் துணை ஏற்பாடுகள், பயிற்சி முறைபாடுகள் நாடெங்கும் நிலவப்படாமல், ஏராளமான நிதியைச் செலவழித்து நவ நாகரீகக் கருவிகளும், புதுவித அதிர்வு உளவு அறிவிப்புகளும் நிறுவகம் செய்வதில் ஏது பயனுமில்லை! அவ்வித ஏற்பாடுகளை நாட்டில் அமைத்துக் கண்காணிப்பது மாபெரும் நெறிமுறைப் பணியாகும். சுனாமி வருகையை அறிவிக்கும் சமயத்தில், கடற்கரைப் பகுதியில் திரியும் ஒவ்வொரு தனி மனிதன் காதிலும் பலமாகத் தெளிவாக ஒலிக்க வேண்டும். அதுதான் மெய்யாக மிகவும் கடினமானது. ‘

    ‘இந்து மாக்கடல் அரங்கு அனைத்திலும் சுனாமி எச்சரிக்கை செய்ய சுமார் 30 நிலநடுக்க வரைமானிகளும் [Seismographs], 10 அலை உயர அளப்புக் கருவிகளும் [Tidal Gauges], 6 சுனாமி உளவுச் சமிக்கை அனுப்பும் ஆழ்கடல் மிதப்பிகளும் [Deep-Ocean Assessment & Reporting of Tsunami (DART) Buoys] தேவைப்படும். இந்து மாக்கடல் எச்சரிக்கை அறிவிப்பு ஏற்பாடுகளை நிறுவ, 2005 ஆண்டு நாணய மதிப்பில் சுமார் 20 மில்லியன் டாலர் செலவாகலாம். அந்தச் சாதனங்களைக் கட்டி முடிக்க ஓராண்டு ஆகும். ‘

    பிரதம விஞ்ஞானி பிலிப்ஸ் மெக்ஃபாடன் [இந்து மாக்கடல் சுனாமி எச்சரிக்கை அமைப்பாளர், பூதளவியல் கூடம், ஆஸ்திரேலியா]

    Tsunami Monitoring centre

    ‘இந்து மாக்கடலில் சுனாமி தாக்கிய போது (டிசம்பர் 26, 2004), கடற்பகுதி அரங்குகளில் மாந்தர் கேட்டதும் கண்டதும் இயற்கை விட்ட ஒரே ஓர் எச்சரிக்கை, அனைவரையும் நோக்கிப் பூத வடிவில் ஏறிவந்தப் பேரலை ஒன்றுதான்! ‘

    பிபிசி தகவல் நிருபர்

    ‘125 கோடி ரூபாய்ச் செலவில் பாரதம் அமைக்கப் போகும் முற்போக்கான சுனாமி எச்சரிக்கை ஏற்பாடு, மற்ற தென் கிழக்காசிய நாடுகளுக்குச் சிறிதளவு பயனே அளிக்கும் என்று அறியப்படுகிறது! 75 தளங்களில் ஊன்றப் போகும் பூதள அதிர்ச்சி உளவிகள், மூன்று அல்லது நான்கு மையங்களுக்கு அனுப்பப்பட்டு, 10-15 நிமிடங்களில் தகவல் அறிவிக்கும் தகுதி உடையவை. அவற்றின் மூலம் அதிர்வு மையத்தை [Epicenter] அறிவது அதிக நேரம் ஆகாது. அத்தள உளவிகள் அணு ஆயுதச் சோதனையும் உணர்த்தும் தன்மை உடையதால், பாரதம் அந்த ஏற்பாட்டின் சமிக்கைகளைப் பிற தென்னாசிய நாடுகளுக்குப் பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை! 28 இந்து மாக்கடல் கரையோர நாடுகளில் பாரதம், இந்தோனேசியா, ஆஸ்திரேலியா ஆகியவை மட்டுமே தனித்தனியான எச்சரிக்கை ஏற்பாடுகளை அமைத்துக் கொள்கின்றன. ஆழ்கடல் உளவுத் தகவல் ஏற்பாடு [Deep-Ocean Assessment & Reporting System (DART)] அமைப்பில் நாடுகளின் பங்கீட்டு அளவு இன்னும் முடிவாக வில்லை. ‘

    டாக்டர் ஹார்ஷ் குப்தா, முந்தைய செயலாளர் [Dept of Ocean Development]

    Australian Warning System

    நாகபட்டினத்தில் மெதுவான ஓராண்டு முன்னேற்றம்

    2004  ஆண்டில் பாரதத்தில் சுனாமி விளைத்த பேரளவுச் சேதங்கள், தென் கிழக்குக் கடற்கரையில் உள்ள 38 மீன்பிடிப்புக் கிராமங்களைப் பாதித்தன. சுமார் 17,500 குடும்பங்களின் வாழ்வும், வசதியும், வீடும், வேலையும் சுனாமின் வெறித் தாக்கலில் நிரந்தரமாய்ப் பறிபோயின! நாகபட்டினத்தில் மட்டும் 6065 பேர் உயிரிழந்தனர்! இந்தியாவின் சுனாமி மரணத் தொகையில் மிகையாக [மொத்தத்தில் மூன்றில் இரு பாகம்] நாகையில்தான் நேர்ந்துள்ளது! கட்டப்பட்டுப் பூர்த்தியான வீடுகள் இதுவரை: 1850. ஆனால் இன்னும் 14,000 வீடுகளில் கட்டுமான வேலைகள் நடந்து கொண்டிருக் கின்றன. அப்பணிகள் அடுத்த ஆண்டு ஏப்ரலில் முடியலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது. பாதிக்கப் பட்டவர் மறுவாழ்வுச் சீரமைப்புப் பொறுப்புக்கு நிதித் தொகைத் தனியார் [NGO] கைவசம் கொடுக்கப்பட்டு உள்ளது. பராமரிப்புப் பணிகள் நடத்தும் பொறுப்பு மீனவரின் தலைமை நாட்டாமைக்காரர் மேற்பார்வைச் சார்ந்தது. அந்தப் பழைய முறையில் முன்னேற்றம் சீராகச் செல்லாது, பல வேலைகள் இன்னும் ஆரம்ப நிலையில் ஆமை வேகத்தில்தான் நகர்ந்து வருகின்றன. ஆதலால் பாதிக்கப் பட்டவர் பலர் இன்னும் தற்காலிகக் கூடாரங்களில் வாழ்ந்து வருவது வருந்தத் தக்கது!

    Flow Chart

    வீடுகள் கட்ட நிலங்களை அரசாங்கம் பணம் கொடுத்து வாங்குவதில்தான் பல மாதங்கள் தேவையாகித் தாமதம் உண்டாகிறது! அறநெறி நிலைப்பகங்கள் [Charity Organizations] முன்வந்து கட்டும் வீடுகளும், நில ஆக்கிரமிப்புக்கு நீண்ட காலம் எடுப்பதால், தாமதப் படுகின்றன! நான்கு கிராமங்களில் அறிநெறி நிலைப்பகம் கட்டும் 535 வீடுகளின் நிலங்களை வாங்கவே பல மாதங்கள் ஆனதாய் அறியப் படுகிறது. தென்னிந்திய மீனவர் கூட்டுறவுக் குழுவின் [South Indian Federation of Fishermen Society] திட்ட அதிகாரி, சேவியர் ஜோஸஃப் தன் குழுவினரைப் பற்றிக் கூறுகிறார்: தரங்கம்பாடியில் 1500 வீடுகள், மீனவர் கூட்டுறவு முறையில் கட்டுமான மாகி வருகின்றன! அங்கே சுனாமியால் 291 பேர் உயிரிழந்தார். மீனவர் அனைவரும் ஒன்று கூடிப் ‘பணிப்பங்கீடு முனைப்பாடில் ‘ [Participatory Approach] முற்பட்டுச் சிறப்பாகச் செய்து வருகிறார்கள். புதிய மீன் வாங்கும் வாகனத்தில் தன் பங்கை ஏற்றி விட்டு 22 வயது வீரன் என்பவர் சொல்கிறார்: ‘சுனாமிக்கு முன்னதாக இருந்ததை விடச் சீராகவே வாழ்ந்து வருகிறேன். புதிய படகு கிடைத்துள்ளது! ஆனால் குடி யிருக்க வீடுதான் இல்லை எனக்கு. ‘

    N OAA System

    தமிழக அரசின் சுனாமிப் பாதிப்பு நிவாரணப் பணிகள்

    தமிழக அரசு டிசம்பர் 26, 2005 இல் வெளியிட்ட ‘சுனாமியின் மேலேறி ‘ [Tiding over Tsunami] என்னும் கைச்சுவடியில், கடந்த 12 மாதங்களில் சுனாமி தாக்கிய பகுதிகளில் தமிழ் நாட்டரசு செய்த நிவாரணப் பணிகளைப் பின்வரும் பத்திகளில் காணலாம்:

    1. சுனாமி நிவாரணப் பணிகளுக்கு ஒதிக்கியுள்ள நிதித் தொகை 1138 கோடி ரூபாயில் 12 மாதச் செலவு 880 கோடி ரூபாய். அத்தொகையில் ஆக்கிய பணிகள் பின்வருமாறு:
    2. வீடுகளை இழந்தோருக்குத் தற்காலீகக் கூடாரங்கள் 32,378 அமைப்புக்கு மட்டும் செலவு: 32 கோடி ரூ.
    3. நிரந்தர வீடுகள் கட்ட 26 கோடி ரூபாய்ச் செலவில் 1210 ஏக்கர் நிலங்கள் கைவசம் செய்யப் பட்டன. தேவையான 45,892 இல்லங்களின் எண்ணிக்கையில் இதுவரை கட்டி முடித்தவை: 5135 வீடுகள். அதாவது தமிழ் நாட்டில் சுமார் 10% குடும்பங்களுக்கு வீடுகள் கிடைத்துள்ளன! இன்னும் 90% குடும்பங்கள் நிரந்தர வீடுகள் இன்றி தவித்துக் கொண்டு வருகின்றன! இந்த வீதத்தில் எல்லாருக்கும் வீடு கிடைக்க ஐந்தாண்டுகள் கூட நீடிக்கலாம்!
    4. இடிந்த 3957 வீடுகள் பழுதுகள் நீக்கமாகிச் செப்பனிடப் பட்டன. இன்னும் 3713 வீடுகள் பராமரிப்புப் பணிகளில் திறம்பட்டு வருகின்றன.
    5. கடல்நீர் சீரழித்த 8560 ஹெக்டா ஏக்கர் வயல் நிலங்களைச் சீர்ப்படுத்த 4.10 கோடி ரூபாய் செலவு செய்யப் பட்டது. மேலும் 670 ஹெக்டா ஏக்கர் தோட்டப் பயிர் நிலங்களும் 67 லட்சம் ரூபாய்ச் செலவில் சீரமைக்கப் படும்.
    6. பாதிக்கப் பட்ட மீனவருக்கு மறுவாழ்வு தரும் வகையில் சேதமடைந்த வல்லங்கள், கட்டுமரங்கள், மீன் வலைகள், மோட்டார் படகுகள் ஆகியவற்றின் பழுதுகள் செப்பனிட 143 கோடி ரூபாய்ச் செலவானது.

    GPS System

    1. பாதிக்கப் பட்ட பகுதிகளில் சாலை அமைப்பு, குடிநீர் வசதி, தெரு விளக்கு சீரமைப்பு, பாலங்கள் செப்பணிடல், (தொலைபேசி வடம், கம்பம் சீரமைப்பு) ஆகியவற்றுக்கு 88 கோடி 40 லட்சம் ரூபாய்ச் செலவு.
    2. நாகப்பட்டின மாவட்டத்தில் உள்ள அக்கரைப் பேட்டையில் 10 கோடி ரூபாய்ச் செலவில் கட்டப்படும் மேல்பாலம் முடிவுறும் தறுவாயில் உள்ளது.
    3. கன்னியாகுமரி மாவட்டம் மேலமணக்குடி, கீழமணக்குடி ஆகிய இரண்டையும் இணைக்கும் தற்காலிகப் பாலம் 1 கோடி 40 லட்சம் ரூபாய்ச் செலவில் முடிந்து, மாநில முதலமைச்சர் மாண்புமிகு ஜெயலலிதா 2005 டிசம்பர் 26 இல் திறந்து வைத்தார்.
    4. சுனாமி பாதிக்கப் பட்டுள்ள பகுதிகளில் இதுவரை 121 பள்ளிகள் அமைக்கப் பட்டுள்ளன. பள்ளி மாணவர் நலனைப் பேணும் பல்வேறு திட்டங்களுக்கு 14 கோடி, 40 லட்சம் வழங்கப் பட்டது. 100 மேற்பட்ட பள்ளிகள் பராமரிக்கப் பட்டுப் புதிய பள்ளிக்கூடங்கள் கட்டப் பட்டன. சுமார் 37000 மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு இணைச் சீருடைகள் அளிக்க மொத்தம் 2 கோடி 91 லட்சம் செலவானது. நிதி அடிப்படையில் நடக்கும் பள்ளிகளில் முதல்-பனிரெண்டு வகுப்பு மாணவர்கள் 5264 பேருக்கு இலவச நூல்கள், மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்கப் பட்டன.
    5. சுனாமி தாக்கிய பகுதிகளில் அனாதிக் குழந்தைகளுக்காக கடலூர், நாகப்பட்டினம், கன்னியா குமரி ஆகிய மாவட்டங்களில் மறுவாழ்வு இல்லங்கள் அமைக்கப் பட்டன.

    Tsunami zone

    தென் கிழக்காசிய நாடுகளில் நிவாரணப் பணிகள்

    2004 டிசம்பர் 26 இல் தாக்கிய சுனாமியில் தென் கிழக்காசிய நாடுகள் இந்தோனேசியா, தாய்லாந்து, இலங்கை, இந்தியா, அந்தமான், நிகோபார், மால்தீவ் தீவுகள் ஆகிய அனைத்துப் பகுதிகளில் மாண்டவர் மொத்தம் 216,000 பேர் என்று தற்போது கருதப் படுகிறது. 500 சுனாமி பாதித்த அரங்குகளில் வாழும் சுமார் 350,000 பேருக்கு 13 மில்லியன் டாலர் நிதி செலவழித்து ஆரோக்கிய, சமூக மனோவியல் உதவி, மருத்துவம், நோய்த் தடுப்பு, கல்வி, கூடார அமைப்பு, குடிநீர் வசதி, உணவளிப்பு, அனாதைப் பிள்ளைகள் இல்லம் ஆகிய பொதுப் பணிகளுக்குச் செலவானது என்று அறியப் படுகிறது. பொதுவாக உதவிகள் செய்யப் பட்ட அனாதைக் குழந்தைகள் அகில நாட்டு ஊழியரின் உளவுக்கும், உரையாடலுக்கும் ஆட்பட்டுச் சோதிக்கப் பட்டனர்.

    கடந்த ஆறு மாதங்களாக அபாய மீட்சிப் பணிகளை விட்டு, நீண்ட காலப் பணிகளுக்குத் திட்டங்கள் உருவாகி வடிவம் பெற்றன. நிரந்தர வீடுகள், பள்ளிக் கூடங்கள், மருத்துவச் சாலைகள், சுகாதார முறைகள், ஊதிய வசதிகள், மறுவாழ்வு மீட்சி உதவிகள் போன்றவை விருத்தி செய்யப் பட்டன. தமிழ் நாட்டில் அனாதைச் சிறுவருக்குக் காப்பகங்கள் அமைக்கப் பட்டன! சென்ற செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நாகபட்டின மாவட்டத்தில் உள்ள 10 கிராமங்களில் 36 குழந்தைகளின் காப்பு முறைகள் சமூகச் சிறப்பாளரால் உளவுக்கு ஆளாகிச் சோதனைக் குட்பட்டனர்! போன ஆறு மாதங்களில் நான்கு நாட்டைச் சேர்ந்த காப்பகங்களின் 8 முதல் 18 வயதுள்ள 330 சிறுவர், சிறுமிகள் கேள்விக்குள்ளாகி உளவு செய்யப் பட்டனர்.

    Tsunami Instruction

    ஆழ்கடல் உளவுத் தகவல் சுனாமி அறிவிப்பு (DART)

    சுனாமியால் பாதிப்பான தென் கிழக்காசிய கடற்கரை நாடுகளில் எல்லாம், சுனாமி எச்சரிக்கைச் சங்குகள் அமைப்பாகி, மக்களுக்குப் பயிற்சி அளித்து வருகின்றனவா என்பது விளக்கமாகத் தெரிய வில்லை. சுனாமி எச்சரிக்கை ஏற்பாடுகளுக்கு இருவித அமைப்பாடுகள் மிக்க அவசியம். கடற்தட்டில் நில அதிர்ச்சி உண்டாகி, தற்போது இயங்கி வரும் பசிபிக் சுனாமி எச்சரிக்கை ஏற்பாடுகள் தூண்டி, தென்னாசிய நாடுகளின் கடற்கரைப் பகுதிகளில் அபாயச் சங்குகள் அலறி மக்களை மேட்டுத் தளங்களுக்கு அனுப்புவது அல்லது ஏற்றிக் கொண்டு போவது அவசியம். அந்த ஏற்பாடுகளை அனைத்து தென்னாசிய நாடுகளும் முறையாக அமைப்பதற்கு வேண்டிய நிதி வசதிகள் ஏராளமாய்க் கைவசம் உள்ளன. சமீபத்தில் தாய்லாந்து, இந்தோனேசியா ஆகிய நாடுகள் அத்தகைய ஏற்பாடுகளை அமைத்துப் போலி அபாயப் பயிற்சிகள் மக்களுக்கு அளிக்கப் பட்டன! அதுபோல் பாரதத்தில் சுனாமி தாக்கிய தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மாநிலங்களில் அபாயச் சங்குகள் அமைக்கப் பட்டதும், போலி அபாயப் பயிற்சிகள் நடத்தியதும் செய்திகள் மூலம் வெளியிடப் படவில்லை!

    அடுத்த முக்கியமானது, இந்து மாக்கடல் கடற்தட்டு அதிர்வு உணரும் உளவியும், அது அனுப்பும் சமிக்கையை ஏற்று மைய அரங்குகளுக்கு ஊட்டும் துணைக்கோள் ஏவுதலும் ஆகும். பசிஃபிக் கடல் அரங்குகளில் உள்ளது போல், இந்து மாக்கடல் அரங்கிலும் தொடர்ந்து பணி செய்யும் ஓர் நிரந்தர அமைப்பு அவசியம்! இந்து மாக்கடலில் 27 கடற்கரை நாடுகளுக்கு அவ்விதச் சுனாமி அபாய உளவுச் சாதனக் கூட்டு ஏற்பாடுகள் அவசியம். தாய்லாந்து, பாரதம், இந்தோனேசியா ஆகிய நாடுகள் தனித்தனி வழியில் கடற்தளப் பூவதிர்ச்சியை உளவு செய்யப் போகின்றன! ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய மூன்று நாடுகளும் எச்சரிக்கை ஏற்பாடை மட்டும் விருத்தி செய்ய முயற்சி செய்கின்றன. தாய்லாந்து ஹவாயி, ஜப்பான் ஆகிய இரு நாடுகள் அனுப்பும் சமிக்கையை வாங்கி, சுனாமி அபாய அறிவிப்பு மையத்தை நிர்மாணம் செய்துள்ளது. தற்போது தாய்லாந்தில் 76 ஊதுசங்குக் கம்பங்கள் கடற்பகுதிகளில் நிறுவி, போலிப் பயிற்சி முறைகளையும் மக்களுக்குக் கற்றுத் தந்து வருகிறது.

    Warning Posters

    இந்தியா சுனாமி அறிவிப்புக்கு 11 கடலலை மானிகளை [Tide Gauges] அமைத்து, அவற்றின் சமிக்கையும், பூகம்ப அதிர்வு சமிக்கையும் உளவு செய்ய மையம் ஒன்றை நிறுவி, அபாய எச்சரிக்கை அனுப்பும் ஆற்றல் கொண்டுள்ளது. ஆனால் எத்தனை [75 ?] கடற்தளங்களில் ஊதுசங்குக் கம்பங்கள் நிறுத்தப் பட்டுள்ளன என்பது தெளிவாகத் தெரியவில்லை! இன்னும் 2 வருடத்தில் பாரதத்தின் முழு எச்சரிக்கை ஏற்பாடுகளும் இயங்கி வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. ஜெர்மன் பொறியியல் நிபுணர் உதவியுடன் இந்தோனேசியா 125 மில்லியன் டாலர் செலவழித்துத் தனது அறிவிப்பு ஏற்பாடுகளைத் தயாரிக்கப் போவதாய் அறியப் படுகிறது.

    இந்து மாக்கடலில் எழும் சுனாமி எச்சரிக்கை ஏற்பாடுகள் முழு மூச்சில் பணிபுரிவதற்கு முன்பாக, இடைநிலை அமைப்பாக ஜப்பான், ஹாவாயி ஆகிய இரண்டு நாடுகளும் அனைத்து தெற்காசிய நாடுகளுக்கு எச்சரிக்கைத் தூண்டு சமிக்கையை அறிவிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளன! அந்த ஏற்பாட்டிற்குத் தற்போது 25 நாடுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டிருக் கின்றன. கடற்தள நில அதிர்வுச் சமிக்கை கிடைத்தவுடன், அதைத் தம்தம் கடற்கரை பகுதிகளுக்கு அனுப்பும் பொறுப்பு, ஒவ்வொரு நாட்டையும் சார்ந்தது! ஐக்கிய நாடுகள் பேரவை [United Nations (UNESCO)] தெற்காசிய நாடுகளுக்குச் சுனாமி பாதிப்புகள், எச்சரிக்கை, பாதுகாப்புகள், பயிற்சிகள் ஆகியவற்றில் அனுபவம் பெறுவதற்கு உதவி செய்யப் போவதாய் முடிவு எடுத்துள்ளது.

    Tsunami warning buoy

    [தொடரும்]

    தகவல்:

    1. Chennai Online News Service [Dec. 8, 2005]
    2. Relief Website [www.reliefweb.int/rw…./openDocument] (Dec.14, 2005)
    3. The Slow Process of Rebuilding Lives By: Indrani Sen [www.Newstoday.com/news/nationworld] (Dec 26, 2005)
    4. Tsunami Adalats get 1.88 lakhs Complaints By: G. Jagannath [www.newstodaynet.com] (Dec 24, 2005)
    5. Buzz of Relief in Worst-hit Nagapattinam By Ganesh Nadar [www.rediff.com/cms] (Jan 5, 2005)
    6. Nagapattinam Pays Homage to Tsunami Dead, Press Trust of India (Dec 26, 2005)
    7. Shri Dasanudas Charies Activities- Tsunami Relief Efforts (Dec 30, 2004)
    8. Tsunami Anniversary: Indians Remember Those Lost with Prayers & Vigil, DPA New Delhi [www.taipeitimes.com/News/World (Dec 27, 2005)
    9. Tributes Mark Tsunami Anniversary in Tamil Nadu, Managing Tsunami – Lessons of Dec 26, 2004 [http://ww1.mid-day.com/news/nation/2005/december]

    10 Tsunami Relief Works – Tsunami Relief & Rehabilitation in Progress, Order of Ramakrishna [www.sriramakrishanamath.org/news/tsunami.shtml]

    11 Rebuilding The Lives & Livelihoods, Indian Tsunami Response- SEEDS Press Release, Reuters Alertnet.

    12 Tamil Nadu Chief Minister Releases Booklet on Tsunami Relief, ‘Tiding over Tsunami ‘ [Dec 26, 2005]

    13 Managing Tsunami Workshop – Lessons of December 26, 2004 Organised By: M.S. Swaminathan Research Foundation, Chennai (Dec 26, 200).

    14 Indian Ocean Tsunami Warning System -BBC News [http://news.bbc.co.uk/go/] (Dec 23, 2005)

    15 India Unlikely to Share Seismic Data By: Kalyan Ray, Deccan Herald (Dec 25, 2005)

    16 Indian Ocean Tsunami Warning Group Meeting, Indian National Centre for Ocean Information Service (INCOIS), Hydrabad, India.

    17 Deep Ocean Assessment & Reporting of Tsunami System (DART System)

    18 UNICEF Releases Tsunami Relief Update, India Info News (Dec 22, 2005)

    19.  http://nationmultimedia.com/national/Tsunami-warning-system-finally-ready-after-8-years-30196748.html  [December 25, 2012]

    20. http://ngm.nationalgeographic.com/2012/02/tsunami/folger-text  [February 2012]

    21.  http://timesofindia.indiatimes.com/india/Andaman-tsunami-warning-system-can-alert-in-3-minutes-Scientist/articleshow/20551705.cms [June 12, 2013]

    22.  http://en.wikipedia.org/wiki/Indian_Ocean_Tsunami_Warning_System   [September 6, 2014]

    23.  http://wcatwc.arh.noaa.gov/?page=history  [October 9, 2014]

    ****

    jayabarathans@gmail.com [S. Jayabarathan]  (October 11, 2014)]

    Share
  • படமும் பாடலும்

    கிரேசி மோகன்

     


    crazy

    “கந்தா கணினியில் கண்ணன் வரும்முன்னே
    வந்தாய் வருக வருகவே ; -உன்தாய்
    முறைமாமன் கொஞ்சும் முகம்காண அல்லில்
    வரைகேசவ் வண்ணத்தில் வாழ்”….கிரேசி மோகன்….

    அல்லில் -இரவில்….

    Share
  • படமும் பாடலும்

    கிரேசி மோகன்

    crazy

    Bhagavan with Laskhmi – the cow

     

    “வெங்கட் ரமணர் விவேகபசு லஷ்மியை
    தங்கக் கைகளால் தடவிஅன்பு -பொங்கிடும்
    கண்ணால் நவநீத கைவல்யம் காட்டுகிறார்;
    கண்ணன்போல் ரமணார்வம் COW”….கிரேசி மோகன்….

    Share
  • ஆண்டாண்டு போற்றிடுவோம்!

        -எம். ஜெயராம சர்மா- மெல்பேண்

        muvaஇலக்கியத்தை இலக்கணத்தை
        இங்கிதத்தை நானறிய
        நிலைத்தவொரு அறிஞரென
        நின்றிருந்தார் ’முவ’வே !

        தலைக்கனமும் இல்லாமல்
        தனதுநிலை பிறழாமல்
        எடுத்தபணி செய்தனரே
        எங்களது ’முவ’வும்!

        தனித்தமிழால் கதைகள் சொன்னார்
        தரமுடைய நாவல் தந்தார்
        பொறுப்புடனே தமிழ் படித்தார்
        பொறுமைநிறை ’முவ’வும்!

        மொழிநூலை நான்கற்க
        முன்னானார் ’முவ’வும்
        தெளிவாகத் தமிழெழுத
        சிறந்தகுரு ஆனாரே!

        எங்கள்தமிழ் இலக்கியத்தை
        எல்லோரும் அறிவதற்காய்
        எழுதுகின்ற பணிதன்னை
        ஏற்றவரும் ’முவ’வே!

        பாரததத்தின் பிரதமரே
        பணிகொடுத்து நின்றாரே
        ’முவ’வின் முயற்சியினால்
        முத்தமிழைப் பலர்பார்த்தார்!

        அமுதத் தமிழ்மொழியை
        அரவணைக்க வழிசெய்த
        அறிஞராம்  ’முவ’வை
        ஆண்டாண்டு போற்றிடுவோம் !

        ’முவ’வின் பெயர்கேட்டால்
        யாவருமே தமிழ்படிப்பார்
        தாமாகக் கற்றுணர்ந்து
        தலைநிமிர்ந்து நின்றாரே!

        சாவாத மருந்தெனவே
        தரமுடைய நூல்களெலாம்
        ’முவ’வின் மதியினின்று
        முகிழ்த்தெழுந்து வந்தனவே!

        ஆலமரமாக அவரிருந்தாரப்போது
        அவருடைய நிழலினிலே
        அறிஞரெலாம் இருந்தனரே
        ஞாலமெலாம் சென்றுஅவர்
        நம்பெருமை சொன்னாரே
        சீலநிறை ’முவ’வை
        சிந்திப்போம் எந்நாளும்!

       {இன்று (அக்டோபர் 10) மு.வரதராசனாரின் நினைவு நாள்.}

    Share