நாகேஸ்வரி அண்ணாமலை
ஜெயலலிதாவின் வழக்கில் தீர்ப்புக் கூறப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டதை அடுத்து அ.தி.மு.க.வினர் நடத்திய போராட்டங்கள் எல்லாம் ஓரளவு அடங்கிவிட்டதாகத் தெரிகிறது. தமிழ்நாட்டில் சகஜநிலை திரும்பியதாக பத்திரிக்கைச் செய்திகள் கூறுகின்றன. ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள் பல வகையான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டதைப் பார்த்துத் தமிழக மக்கள் இவ்வளவு அறிவிலிகளா என்ற கேள்வி எழுகிறது. அதுவும் தந்தை பெரியார் தொடங்கிய பகுத்தறிவு இயக்கம் தமிழக மக்களிடம் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லையா என்று எண்ணும்போது மனதில் பெரிய ஆயாசம் ஏற்படுகிறது.
பெரியார் பிராமண ஆதிக்கத்தை ஒழிக்கவும் எல்லோர் மனத்திலும் சுயமரியாதை எண்ணத்தை வளர்க்கவும் பக்குத்தறிவு இயக்கத்தைத் தோற்றுவித்தார். அவர் ஆரம்பித்த இயக்கத்திற்கு இன்று அர்த்தமே இல்லாமல் போயிற்று. அவர் மறுபடி பிறந்துவந்து தமிழ்நாட்டில் நடக்கும், அவர் போதனைகளுக்கு நேர் மாறாக நடக்கும் அராஜகச் செயல்களைக் கண்டிக்க மாடாரா என்ற ஏக்கம் பிறக்கிறது. அவருடைய பக்குத்தறிவு இயக்கத்தில் தோன்றிய கட்சிகளான தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் மக்களை எவ்வளவு முட்டாள்கள் ஆக்கியிருக்கின்றன என்பதை எண்ணிப் பார்த்தால் அவர் செய்ததெல்லாம் விழலுக்கு இறைத்த நீரா என்று மனம் பதறுகிறது.
பிராமண ஆதிக்கத்தை ஒழிக்க அவர் எவ்வளவு பாடுபட்டார்? மனித இனத்தில் ஜாதிகளுக்கு இடமில்லை, பிறப்பில் எல்லோரும் சமம், கடவுளின் பெயரைச் சொல்லி பிராமணர்கள் தங்களை உயர்ந்தவர்கள் என்று கூறிக்கொள்வது, ‘உயர்ந்த ஜாதி’ மக்களின் கால்களில் ‘கீழ் ஜாதி’ மக்கள் விழுவது எவ்வளவு இழிவான செயல் போன்றவற்றை எவ்வளவு எதிர்த்தார்? இந்துக் கடவுள்கள் எல்லாம் மனிதனின் சிருஷ்டிகள்தான், அப்படிச் சிருஷ்டிக்கப்பட்ட கடவுள்களின் பெயரால் பிராமணர்கள் செய்த அட்டுழியங்கள், அவர்கள் தங்களை கடவுகளின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டு மற்ற ஜாதிகளைச் சேர்ந்தவர்களை முட்டாளாக்கியது ஆகியவற்றை எல்லாம் பாமர மக்களுக்கு உணர்த்த என்னென்ன செய்தார்? விக்கிரக ஆராதனை கூடாது என்பதற்காக பிள்ளையார் சிலைகளைத் தெருவில் போட்டு உடைத்தார். இப்போது அவர் ஆரம்பித்த இயக்கத்திலிருந்து பிறந்த கட்சிகளின் உறுப்பினர்கள் செய்யும் காரியங்கள் அவர் போதனைகளுக்கு எந்த மதிப்பும் கொடுப்பதாகத் தெரியவில்லை. அவர் விக்கிரக ஆராதனை கூடாது என்றார். இவர்கள் மனிதர்களையே ஆராதனை செய்கிறார்கள். பெரியார் தெய்வங்களே மனிதனின் சிருஷ்டி என்றார். இவர்கள் மனிதர்களையே தெய்வமாக்கிவிட்டார்கள்.
நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்ட ஜெயலலிதாவை தெய்வம் என்று கூறுகிறார்கள். தெய்வத்தைத் தண்டிக்க மனிதனால் முடியாது என்று போஸ்டர்கள் வேறு. தெய்வமே இல்லை என்று சொன்ன பெரியார் எங்கே, ஒரு சாதாரண மனிதப் பிறவியை அதிலும் ஊழலிலேயே ஊறிப்போன ஒரு அரசியல்வாதியை தெய்வம் என்ற ஸ்தானத்திற்கு உயர்த்திய இந்த அறிவிலிகள் எங்கே? பெரியார் பிள்ளையாரைப் போட்டு உடைத்தார். இந்த அறிவிலிகள் பிள்ளையாருக்கும் முருகனுக்கும் பால்குடம் எடுக்கிறார்கள். எதற்காக? நாட்டில் சுபிட்சம் நிலவ வேண்டும், மக்கள் எல்லாம் கல்வி அறிவு பெற வேண்டும், எல்லோரும் பிணியின்றி வாழ வேண்டும் என்ற நற்செயல்களுக்காக இப்படி எல்லாம் செய்கிறார்கள் என்றால் அதையாவது பொறுத்துக்கொள்ளலாம். இவர்கள் செய்வதோ சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிமன்றம் பல ஆவணங்களைப் பரிசீலித்துப் பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளி என்று தீர்மானித்தவரைக் காப்பாற்ற. இறைவன் இருக்கிறான் என்று இவர்கள் நம்பினால் அவன் நல்லவர்களுக்கு நன்மை செய்வான், நல்லவர் அல்லாதவர்களைத் தண்டிப்பான் என்பதையும் நம்ப வேண்டும் அல்லவா? அப்படிப்பட்ட இறைவன் தவறு செய்த அவர்கள் ‘அம்மாவை’ எப்படி மன்னிப்பான்? எப்படி அவனிடம் அவர்களுடைய ‘அம்மாவை’ நீதிமன்றம் விடுவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்? இவர்கள் செய்யும் யாகங்களையும் பூஜைகளையும் இறைவன் எப்படி ஏற்றுக்கொள்வான்?
மக்களின் பக்குதறிவை வளர்க்கப் பெரியார் எவ்வளவு பாடுபட்டார்? இப்போது அ.தி.மு.க. தொண்டர்களுக்கு பகுத்தறிவே இல்லை என்பது போல் நடந்துகொள்கிறார்கள். ‘கர்நாடகமே, காவிரியை வச்சுக்கோ, எங்கள் அம்மாவை எங்களுக்குத் திருப்பிக் கொடுத்துவிடு’ என்ற போஸ்டர்கள். எங்கள் ‘அம்மாவை’ விடுவிக்காவிட்டால் தமிழகத்தில் வாழும் கன்னடியர்கள் எல்லோரையும் சிறை பிடிப்போம் என்று இன்னொரு போஸ்டர். ‘அம்மா’ சிறைவாசம் அனுபவிப்பதற்கும் கர்நாடகத்திற்கும் என்ன சம்பந்தம்? அ.தி.மு.க. தலைவர்களே இப்படி இருந்தால் தொண்டர்களைப் பற்றி என்ன சொல்ல? 75 பேர் தர்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். தாங்கள் என்ன செய்கிறோம் என்று தெரிந்துதான் இவர்கள் அப்படித் தற்கொலை செய்துகொண்டார்களா?
நான் போனவாரம் எழுதிய கட்டுரைக்கு வாசகர் ஒருவர் பதில் அளித்திருக்கிறார். ஜெயலலிதாவின் ஆட்சிக்காலம் முடியும் வரை இரண்டு ஆண்டுகள் காத்திருந்து இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்க வேண்டுமாம்! நீதி யாருக்காக காத்திருக்கவேண்டும்? பதினெட்டு ஆண்டுகள் வழக்கை இழுத்தடித்ததே பெரிய தவறு. இப்போது எதற்காக இன்னும் இரண்டு ஆண்டுகள் காத்திருந்திருக்க வேண்டும் என்பது அவருக்கே வெளிச்சம். ஜெயலலிதாவிற்கு மாற்றுத் தலைமை தமிழ்நாட்டில் இல்லையாம்! உச்சநீதிமன்றம் ஜெயலலிதாவின் ஜாமீன் பற்றி முடிவெடுக்கும்வரை அவரைப் பற்றி எதுவுக் கூறக் கூடாதாம்! ஆங்கிலத்தில் எழுதுமளவிற்கு படித்த இவரைப் போன்றவர்களே இப்படி நினைக்கும்போது படிப்பறிவில்லாத, ஜனநாயகம் என்றால் என்ன, அதில் நீதிமன்றங்களின் பங்கு என்ன என்பது பற்றி எல்லாம் அரசியல் அறிவு ஒன்றுமே இல்லாத பாமர மக்களைப் பற்றி என்ன சொல்வது?
பெரியாரின் எந்தக் கருத்தும் தமிழக மக்களின் மனத்தில் எந்த விதப் பாதிப்பையும் உண்டாக்கவில்லையா? எந்த விதமான பகுத்தறிவையும் கொடுக்கவில்லையா? பெரும்பான்மை மக்கள் இன்னும் அறியாமையில்தான் உழலுகிறார்களா? தமிழக மக்களின் இந்த அறியாமையைப் போக்கத் தலைவர்கள் யாரும் தோன்றவில்லையா? தோன்றியிருக்கும் சில தலைவர்களாலும் தமிழகத்தை மாற்ற முடியவில்லையா? என்னவென்று புரியவில்லை; நெஞ்சு பொறுக்கவில்லை, பாரதி பாடியதைப் போல.
பி.கு. இந்தக் கட்டுரை முழுக்க முழுக்க கட்டுரை ஆசிரியர் திருமிகு நாகேஸ்வரி அண்ணாமலை அவர்களின் தனிப்பட்ட கருத்து மட்டுமே. வல்லமை இதழுக்கும் இதன் கருத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஆசிரியர் – வல்லமை இணைய இதழ்


Leave a Reply