கிரேசி மோகன்
ராதைக்காய் நின்றவன், ராஜ்ஜியத்தை வேண்டிட,
தூதைவர்க் காய்நடந்தோன் ,தன்பொழுது , -போதுக்காய்,
கைவேக கேசவ்வால் , தெய்வீக நாட்டியத்தில்,
மைமேக வண்ணன் மகிழ்வு”….கிரேசி மோகன்….
கிரேசி மோகன்
ராதைக்காய் நின்றவன், ராஜ்ஜியத்தை வேண்டிட,
தூதைவர்க் காய்நடந்தோன் ,தன்பொழுது , -போதுக்காய்,
கைவேக கேசவ்வால் , தெய்வீக நாட்டியத்தில்,
மைமேக வண்ணன் மகிழ்வு”….கிரேசி மோகன்….
(கட்டுரை: 3)
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
பேரழிவுப் போராயுதம்
உருவாக்கி
மனித இனத்தின்
வேரறுந்து
விழுதுகள் அற்றுப் போக,
விதைகளும் பழுதாக
ஹிரோஷிமா நகரைத் தாக்கி
நரக மாக்கி
நிர்மூல மாக்கியது,
முற்போக்கு நாடு !
நாகசாகியும்
நாச மாக்கப் பட்டது !
இப்போது தோன்றின
புதுயுகத்து நியூட்ரான் குண்டுகள் !
கதிரியக்கம் பொழியும்
புழுதிக் குண்டுகள் !
புத்தர் பிறந்த நாட்டிலே
புனிதர் காந்தி வீட்டிலே
மனித நேயம்
வரண்டு போன
வல்லரசுகள் பின் சென்று
பாரத அன்னைக்குப்
பேரழிவுப்
போரா யுதத்தை
ஆரமாய்
அணிவிக்க லாமா ?
++++++++++++++
உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன் நான் !
கிருஷ்ண பரமாத்மா (பகவத் கீதை)
“முஸ்லீம்களாகிய நாம் வல்லவராகவும், நம் நாடு மற்ற நாடுகளுக்கு இணையாகவும் இருக்க வேண்டும். அதனால்தான் சில நாடுகள் வல்லமையோடு இருக்க நான் உதவி செய்ய விரும்புகிறேன்,”
அப்துல் காதீர் கான் (Abdul Qadeer Khan, Maker of Pakistan Atomic Bomb)
“இந்தியா ஓர் அணு ஆயுதத்தைத் தயாரித்தால் பாகிஸ்தான் புல்லைத் தின்றோ, இலைகளைத் தின்றோ, பட்டினி கிடந்து அதைத் தானும் பின்பற்றிச் செய்யும்.”
ஸுல்ஃபிகார் அலி புட்டு (Zulifikhar Ali Bhuttu) முன்னாள் பாகிஸ்தான் வெளிநாட்டு /பிரதம அமைச்சர்.
“இப்போது நிகழ்ந்தது போல் (1945 இரண்டாம் உலகப் போர்) நீண்ட காலம் உலக நாடுகள் போரிடுமே யானால், ஒவ்வொரு தேசமும் தன்னைக் காத்துக் கொள்ளவே நவீன விஞ்ஞான ஆயுதங்களைப் படைக்கவோ அன்றிப் பயன்படுத்தவோ செய்யும் ! இந்தியா தனது விஞ்ஞான ஆராய்ச்சிகளை ஆரம்பித்து விருத்தி செய்ய முற்படும் என்பதில் எனக்குச் சிறிதும் ஐயம் இல்லை ! அணுசக்தியை இந்திய விஞ்ஞானிகள் ஆக்க வினைகளுக்கு மட்டுமே பயன்படுத்துவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன். ஆனால் இந்தியப் பாதுகாப்புக்குப் பங்கம் நேரும்படி, அது பயமுறுத்தப் பட்டால், தன்னிடம் இருக்கும் எல்லா விதமான ஆயுதங்களையும் இந்தியா தயங்காமல் பயன்படுத்தி எதிர்த்துப் போராடும் !”
பண்டிட் ஜவஹர்லால் நேரு (முதல் பிரதமர்) (1946 ஜூன் 26)
“அரசாங்கம் ஆணையிட்டால் இந்தியாவும் 18 மாதங்களில் இது (சைனா அணு ஆயுத வெடிப்பு) போன்று அணு ஆயுத சோதனை செய்ய முடியும்.”
டாக்டர் ஹோமி ஜெ. பாபா (அணுசக்திப் பேரவை முதல் அதிபர்) (1964)
பாகிஸ்தானின் முதல் அணு ஆயுதத் தயாரிப்புக்கு ஏற்பாடு
1948 இல் பண்டித நேரு அணுசக்தி ஆராய்ச்சிக்கு அடிகோலி, டாக்டர் ஹோமி பாபா அணுசக்திப் பேரவையின் தலைவராகி, மொம்பையில் அணு ஆராய்ச்சிக் கூடத்தை நிறுவி 1954 ஆம் ஆண்டில் முதல் ஆராய்ச்சி அணு உலை சைரஸ் (CIRUS Research Reactor) கட்ட ஆரம்ப வேலைகள் நிகழ்ந்த போது, பாகிஸ்தான் தனது அணுசக்தி ஆணையகத்தை நிறுவியது. அதன் தலைவர் நாஸீர் அஹமத் (Nazir Ahmad). அவர் அதற்கு முன்பு நூலிழைத் தொழிற்குழு (Textile Committee) அதிபராகப் பணியாற்றியவர். 1960 ஆண்டுகளில் பாகிஸ்தான் அணுவியல் ஆணையகத்தின் விஞ்ஞான ஆலோசகராக முக்கியப் பங்கேற்று டாக்டர் அப்துஸ் ஸலாம் (Dr. Abdus Salam) (1926 -1996) (Pakistani Theoretical Physicist, Astrophysicist and Nobel Laureate in Physics for his work in Electro-Weak Theory.) பணியாற்றினார். பின்னால் அவரது “வலுவிலா மின்னியல் நியதிக்கு” அவர் நோபெல் பரிசு (1979) அளிக்கப்பட்டார். டாக்டர் அப்துஸ் ஸலாமின் மாணவரான ரியாஸுத்தீன் (Riazuddin) என்பவரே 1977 ஆண்டில் முதல் அணு ஆயுதச் சாதனத்தின் அமைப்பு டிசைனைத் தயாரித்தவர். பாகிஸ்தானின் முதல் ஆராய்ச்சி அணு உலை 1965 ஆண்டில் இயங்க ஆரம்பித்தது. பாகிஸ்தானின் முதல் அணுமின் சக்தி நிலையம் 1970 இல் பூரணம் அடைந்தது.
1965 பாகிஸ்தான் பாரதத்தோடு புரிந்த போரில் தோற்ற பிறகு பல பாகிஸ்தானி அரசியல்வாதிகளும், விஞ்ஞானிகளும் அரசாங்கம் அணு ஆயுதத் தயாரிப்பில் முழுமையாக இறங்க வேண்டும் என்று அழுத்தமாக வற்புறுத்தல் செய்தனர். அப்போது வெளிநாட்டு அமைச்சராக இருந்த ஸுல்ஃபிகார் அலி புட்டு (Zulifikhar Ali Bhuttu) “இந்தியா ஓர் அணு ஆயுதத்தைத் தயாரித்தால் பாகிஸ்தான் புல்லைத் தின்றோ, இலைகளைத் தின்றோ, பட்டினி கிடந்து அதைத் தானும் பின்பற்றிச் செய்யும்.” என்று கூக்குரலிட்டார். 1971 டிசம்பரில் இந்தியாவோடு நடந்த போரில் பெற்ற அடுத்த தோல்விக்குப் பிறகு புட்டு பாகிஸ்தான் பிரதம மந்திரியாக ஆக்கப் பட்டார். அந்த ஆதிக்க ஆணையில் ஜனவரி 1972 பிரதமர் புட்டு பாகிஸ்தான் விஞ்ஞானிகள் குழுவைக் கூட்டி அவருடன் உரையாடி அணு ஆயுதத் தயாரிப்புக்கு முதன்முதலாக விதையிட்டார்.
அணு ஆயுதத் தரமுள்ள அணுவியல் எருக்கள் தயாரிப்பு
முதல் பிரச்சனை. அணு ஆயுதத்துக்கு வேண்டிய மூல வெடி உலோகம் புளுடோனியம் -239 அல்லது அணு ஆயுதத் தரமுள்ள யுரேனியம்-235 (Weapon Grade Uranium -235) தயாரிப்பு. புளுடோனியம் -239 என்பது யுரேனியம் -238 போல் இயற்கையாகக் கிடைக்கும் சாதாரண உலோகமில்லை. இயல் யுரேனியத்தை (Natural Uranium) எரி உலோகமாய்ப் பயன்படுத்தும் அணு உலைகளைப் பல மாதங்கள் இயக்கிக் கிடைக்கும் கதிரியக்கக் கழிவு மிச்சத்தில் புளுடோனியம் -239 இரசாயன முறையில் பிரித்தெடுக்கப் பட வேண்டும். அது நீண்ட கால அணு உலை இயக்கம். முக்கியமாக புளுடோனியம் -239 எரி உலோகத்தை ஆக்க இயங்கும் அணு உலையும், கதிரியக்கக் கழிவுகளைக் கையாண்டு கடின முறையில் சிறிதளவு புளுடோனியத்தைப் பிரிக்கும் சிக்கலான ஓர் இரசாயனத் தொழிற் சாலையும் அமைக்க வேண்டும். நாளொன்றுக்கு ஒரு மெகா-வாட் சக்தியை ஓர் அணு உலை உற்பத்தி செய்தால் ஒரு கிராம் புளுடோனியம் -239 கிடைக்கும். அணு ஆயுதத் தரமுள்ள (> 93%) புளுடோனியம் -239 தயாரிக்கப் அணு உலையின் ஆற்றலைப் பொருத்துப் பல மாதங்கள் அல்லது ஆண்டுகள் ஆகலாம். இந்தியா ஆரம்பத்திலேயே கதிரியக்கக் கழிவுகளைச் சுத்தீகரித்துப் புளுடோனியத்தைப் பிரித்தெடுக்கும் அணுவியல் துறை நுணுக்கத்தில் பயிற்சிகள் செய்து பல்லாண்டு அனுபவம் பெற்றது. ஆனால் பாகிஸ்தானில் அவ்விதம் புளுடோனியம் -239 எருவை அணுப்பிளவுக் கழிவுகளில் (Fission Product Wastes) சேகரித்துப் பயிற்சி பெறச் சில ஆண்டுகள் பிடித்தன.
அடுத்த கடினமான முறை அணு ஆயுதத் தரமுள்ள யுரேனியம் -235 உலோகத்தைச் சேகரிப்பது. பூமியில் கிடைக்கும் இயல் யுரேனியத்தில் பெருமளவு யுரேனியம் -238 உலோகமும் மிகச் சிறிதளவு (0.714%) யுரேனியம் -235 உலோகமும் கலந்துள்ளன. அணு ஆயுதத் தரமுள்ள எருவுக்கு (Weapon Grade Nuclear Fuel) சுத்தீகரித்துச் சேமிப்பான (> 90%) யுரேனியம் -235 தேவைப்படுகிறது ! அதாவது இயல் யுரேனியத்தைச் சுத்தீகரித்துப் பொடியாக்கிச் (Yellow Cake Powder UF6 ) சூடாக்கி வாயுவாக்க (UF6 Gas) வேண்டும். அந்த வாயு யுரேனியக் கலவைத் (Mixure of U-238 + U-235) திரும்பத் திரும்ப 1500 “சுழல்வீச்சு வடிகட்டி” யந்திரங்களில் (Separation By 1500 Centrifuge Machines) புகுத்தப்பட்டுப் படிப்படியாய் யுரேனியம் -235 திரட்டிச் சேமிக்கப் பட வேண்டும். முடிவில் யுரேனியம் ஆக்ஸைடாகி (UO2 Powder) அணு ஆயுதத் தரமுள்ள யுரேனியம் -235 உலோகமாகத் தயாரிக்கும் இந்த முறையும் அத்தனை எளிதில்லை.
பாகிஸ்தான் எப்படி அணு ஆயுதத் தரமுள்ள எருக்களைப் பெற்றது ?
பாகிஸ்தான் விஞ்ஞானிகள் முதலில் புளுடோனியம் -239 உலோகத்தைப் பிரான்ஸ் அடுத்து பெல்ஜியம் நாடுகளிடமிருந்து வாங்க முயற்சி செய்தார்கள். முதலில் விற்க ஒப்புக் கொண்ட பிரான்ஸ் அமெரிக்காவின் தூண்டுதலால் மனம் மாறிப் பின்வாங்கி விற்க மறுத்து விட்டது. ஆனால் பெல்ஜியத்தில் மீள் சுத்தீகரிப்புத் தொழில் நுணுக்கப் (Fuel Reprocessing Technology) பயிற்சி பெறச் சில பாகிஸ்தான் பொறி நுணுக்க நிபுணர் சென்றனர். 1980 ஆண்டுகளில் அந்த அனுபவத்தை வைத்துப் பாகிஸ்தானில் புளுடோனியம் மீள் சுத்தீகரிப்பு முன்னோடித் தொழிற்கூடம் ஒன்றை நிறுவிட ஆரம்பித்தார். அந்தத் தொழிற்கூடம் 1998 இல் இயங்கத் தொடங்கி புளுடோனியம் பிரித்தெடுக்கப் பட்டு இரண்டு அல்லது நான்கு அணுக்குண்டுகள் தயாரிக்கும் ஆற்றல் பெற்றது.
நெதர்லாந்தில் அடுத்து ஒரு விஞ்ஞானக் குழு யுரேனியம் -235 செழிப்பாக்கும் தொழிற்துறை நுணுக்கத்தைப் (Uranium Enrichment Plant) பயில முயன்றது. 1975 இல் நெதர்லாந்து யுரேனியச் செழிப்புத் தொழிற்சாலையில் அப்போது வேலை பார்த்த வந்த பாகிஸ்தான் உலோகத் துறையியல் நிபுணர் (Metallurgist) அப்துல் காதீர் கான் (Abdul Qadeer Khan) பாகிஸ்தான் பயிற்சிக் குழுவோடு சேர்ந்தார். அவரே வெகு சாமர்த்தியமாக நெதர்லாந்தின் யுரேனியச் செழிப்பூட்டும் தொழிற்துறையகத்தின் இரகசிய டிசைன், கட்டமைப்பு விளக்கத் தகவல், யந்திர சாதனக் குறிப்புகள், வரை படங்கள், யந்திரங்கள் தயாரிக்கும் நாடுகளின் பெயர்கள் அனைத்தையும் களவாடிப் பாகிஸ்தானுக்குக் கொண்டு வந்து விட்டார். 1979 ஆண்டு பாகிஸ்தானில் வெற்றிகரமாக நிறுவப் பட்டு இயங்கிய யுரேனியம் -235 செழிப்பூட்டும் தொழிற்கூடம் ஒன்று முதன்முதல் சிறிதளவு தயாரித்தது. அந்த ஆண்டுமுதல் அத்தொழிற்சாலை 20 முதல் 40 அணுக்குண்டுகள் தயாரிக்கும் தகுதியைப் பெற்றது.
இந்திய அணு ஆயுதச் சோதனையில் புத்தர் புன்னகை செய்தாரா ?
“உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன் நான்!” என்று கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையில் பார்த்திபனுக்கு ஓதிய ஒரு வேத மொழியை, நியூ மெக்ஸிகோ டிரினிடி (Trinity) பாலை வனத்தில் சரித்திரப் புகழ் பெற்ற முதல் சோதனை அணுகுண்டை 1945 ஜூலை 16 ஆம் தேதி வெடித்த போது, ராபர்ட் ஓப்பன்ஹைமர் (Robert Oppenheimer) உதாரணம் காட்டினார் ! அவர்தான் “ஓப்பி” (Oppie) என்று அழைக்கப்பட்டு அணுகுண்டு ஆக்கத் திட்டதுக்குத் தலைமை வகித்த ஒப்பற்ற விஞ்ஞான மேதை ! 1964 அக்டோபர் 21 இல் சைனாவின் முதல் அணு ஆயுதச் சோதனைக்குப் பிறகு, இந்திய அணுவியல்துறை அதிபர் டாக்டர் ஹோமி ஜெ. பாபா, “அரசாங்கம் ஆணையிட்டால் இந்தியாவும் 18 மாதங்களில் இது (சைனா அணு ஆயுத வெடிப்பு) போன்று அணு ஆயுத சோதனை செய்ய முடியும்” என்று வெளிப்படையாகவே அறிவித்தார்!
1974 மே மாதம் 18 ஆம் தேதி இந்தியாவில் மாபெரும் ரயில்வே வேலை நிறுத்தம் உச்ச நிலையில் நாட்டை அமர்க்களப் படுத்திக் கொண்டிருந்த போது, விஞ்ஞானி டாக்டர் ராஜா ராமண்ணா இந்தியப் பிரதம மந்திரி இந்திரா காந்திக்கு, “புத்தர் புன்னகை செய்கிறார்” (The Buddha is Smiling) என்னும் குறிமொழியில் (Code Language) ஓர் அவசரத் தந்தியை அனுப்பினார்! அதன் உட்பொருள், பாரதம் தனது முதல் அணு ஆயுதச் சோதனையை ராஜஸ்தானின் பொக்ரான் பாலை வனத்தில் அடித்தள வெடிப்பாகச் செய்து வெற்றிகரமாக முடித்துள்ளது ! அந்த இனிய சொற்றொடர் அதன் பின் வந்த பல வெளியீடுகளின் தலைப்பாக எழுதப் பட்டு புகழ் பெற்றது ! இந்திய முதல் அணுகுண்டு சுமார் 8-12 கிலோ டன் டியென்டி (TNT) வெடிப்பு ஆற்றல் பெற்று, ஜப்பான் ஹிரோஷிமாவில் போட்ட முதல் அணு குண்டை விடச் சிறிதளவு ஆற்றல் குன்றியதாக இருந்தது ! அந்த அணு ஆயுதச் சோதனையை வெறும் “சாமாதான அணுகுண்டு வெடிப்பு” (Peaceful Nuclear Explosion) என்று இந்தியா பறை சாற்றி னாலும், உலகில் எந்த நாடும் அதை ஏற்றுக் கொள்ள வில்லை ! அழிவு சக்தியின் தீவிரத்தைச் சோதிக்கப் பயன்படும் அணுகுண்டு எங்கே, எப்படி அமைதியைப் பரப்பிட முடியும் ?
இந்திய அணுகுண்டை ஆக்கிய அணுக்கரு ஆய்வுக் குழுவின் தலைமை விஞ்ஞானி டாக்டர் ராஜா ராமண்ணா ! இரண்டாம் உலகப் போரின் சமயம் அணு ஆயுத மன்ஹாட்டன் திட்டத்தின் (Manhattan Project) விஞ்ஞான அதிபதியாய்ப் பணிசெய்து முதல் அணுகுண்டு படைத்த ராபர்ட் ஓப்பன்ஹைமர் (Robert Oppenheimer), ரஷ்யாவின் முதல் அணு ஆயுதங்களைத் தோற்றுவித்த பீட்டர் கபிட்ஸா [Peter Kapitsa] ஆகியோர் வரிசையில், பாரதத்தின் அணுவியல் விஞ்ஞானி ராஜா ராமண்ணாவையும் அணு ஆயுதப் படைப்பு மேதையாய் நிற்க வைக்கலாம் !
இந்தியா அணு ஆயுத ஆக்கத்தில் இறங்கக் காரணங்கள் என்ன?
ஐந்து காரணங்களைக் கூறலாம்! முதல் காரணம், 1962 இல் சைனா இந்தியாவுடன் போரிட்டு வடகிழக்குப் பகுதியில் சில பரப்பு மலைப் பிரதேசங்களைப் பிடுங்கிக் கொண்டு போனது! இரண்டாவது, பிரதமர் நேரு 1964 மே 27 இல் காலமானது ! நேரு ஆக்க வினைகளுக்கு அணுசக்தி வளர வாய்ப்புக்களை ஏற்படுத்தினாலும், பாரதம் அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபடுவதை அறவே எதிர்த்தார். மூன்றாவது காரணம், சைரஸ் அணு ஆராய்ச்சி உலை (CIRUS Research Reactor) 1960 முதல் இயங்க ஆரம்பித்து, அணு ஆயுத எரு புளுடோனியம் அணுப்பிளவுக் கழிவு விளைவுகளில் உண்டானது ! அடுத்து பிளவு விளைவுகளில் புளுடோனியத்தைப் (Plutonium in Fission Products) பிரித்தெடுக்கும் தொழிற்சாலை (Nuclear Spent Fuel Reprocessing Plant) ஓட ஆரம்பித்து, அணுகுண்டுக்கு வேண்டிய புளுடோனியம் திரளாகச் சேகரித்தது ! நான்காவது காரணம், சைனா 1964 அக்டோபர் 21 இல் தனது முதல் அணுகுண்டு வெடிப்புச் சோதனையைச் செய்து, அண்டை நாடான இந்தியாவின் நெஞ்சைத் துடிக்க வைத்தது ! ஐந்தாவது காரணம், அப்போது டாக்டர் ஹோமி ஜெ. பாபா, “அரசாங்கம் ஆணையிட்டால் இந்தியாவும் 18 மாதங்களில் இது போன்று (சைனா அணு ஆயுத வெடிப்பு) அணு ஆயுத சோதனை செய்ய முடியும்” என்று வெளிப்படையாகவே அறிவித்தது !
ஐந்து காரணங்களிலும் முக்கியமானது, ஐந்தாவது காரணம் ! டாக்டர் ஹோமி ஜெ. பாபா, “அரசாங்கம் ஆணையிட்டால், இந்தியாவும் 18 மாதங்களில் இது போன்று அணு ஆயுத சோதனைச் செய்ய முடியும்” என்று அரசாங்கத்தைத் தூண்டியது ! நேருவுக்குப் பின் வந்த பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அணு ஆயுதத் தயாரிப்பை அவ்வளவாக வரவேற்க வில்லை. 1966 ஜனவரியில் அடுத்துப் பிரதமராய் வந்த இந்திரா காந்தி காலத்தில் ஹோமி பாபாவின் எண்ணம் தொடரப் பட்டிருக்கலாம்! அதே சமயம் டாக்டர் ஹோமி பாபா அகால மரணம் அடைந்து, அடுத்து டாக்டர் விக்ரம் சாராபாய் அணுசக்தித் துறையின் அதிபர் ஆனார். சாராபாயும் அணு ஆயுத ஆக்கத்தை ஆதரிக்க வில்லை ! இறுதியில் அவரது மர்ம மரணத்திற்குப் (1971 டிசம்பர் 30) பின், ஹோமி சேத்னா அணுசக்தி ஆணையகத்துக்கு அதிபரானார். இந்திரா காந்தி, ஹோமி சேத்னா கண்காணிப்பின் கீழ், திறமை மிக்க அணுக்கரு பௌதிக (Nuclear Physicist) விஞ்ஞானி டாக்டர் ராஜா ராமண்ணாவின் நேரடிப் படைப்பில் இந்திய அணு ஆயுதங்கள் உருவாகின!
அணுக்குண்டு ஆக்குவதற்கு வேண்டிய புளுடோனியம், வேக நியூட்ரான் இயக்க (Fast Neutron Reactions) விளக்கங்களை அறிந்து கொள்வதற்குப் பூர்ணிமா-I (Purnima-I) ஆராய்ச்சி அணு உலை நிறுவப் பட்டு 1972 மே மாதம் 18 இல் இயங்க ஆரம்பித்தது ! இந்த அணு உலையின் எரு 43 பவுண்டு புளுடோனியம் -239 ! வெளிவரும் வெப்ப சக்தி 1 வாட் (watt). ஸைரஸ் ஆராய்ச்சி அணு உலை [CIRUS] 40 மெகா வாட் & துருவா ஆய்வு அணு உலை [Duruva] 100 மெகா வாட் வெப்ப சக்தியும் உண்டாக்கி அணு ஆயுத எரு புளுடோனியத்தைத் தொடர்ந்து உற்பத்தி செய்கின்றன ! துருவா 1985 ஆகஸ்டு 8 இல் இயங்கத் துவங்கியது ! ஆய்வு அணு உலை நாளன்றுக்கு 1 மெகா வாட் (One Mega Watt for One Day) வெப்ப சக்தி ஈன்று இயங்கினால், பிளவு விளைவுகளில் (Fission Products) 1 கிராம் புளுடோனியம் -239 சேரும் ! 100 மெகாவாட் ஆற்றல் உடைய துருவ அணு உலை ஒரு நாள் இயங்கினால் (100 mwd), 100 கிராம் புளுடோனியம் கிடைக்கும் !
அணு ஆயுதச் சோதனைகளைப் பற்றி டாக்டர் ராமண்ணாவின் கருத்துக்கள்
“பொக்ரான் பாலை வனத்தில் 1998 மே மாதம் பாரதம் இரண்டாம் தடவை செய்த, ஐந்து அடித்தள அணு ஆயுதச் சோதனைகள் இந்திய துணைக் கண்டத்தின் பொருளாதாரம், சூழ்வெளி, பாதுகாப்பு, அரசியல், பொறியல் துறை போன்றவற்றை, ஏன் வாழ்க்கையைப் பற்றிய நமது எண்ணத்தைக் கூட மிகவும் பாதித்துள்ளது ! பல நாடுகள் இதற்கு முன் பல தடவைச் சோதனைகள் செய்து, உலகப் பெரு நகரங்கள் யாவற்றையும் அழிக்க வல்ல பேரளவில் அணு ஆயுதங்களைச் சேமித்து வைத்துள்ளன !
இந்த ஐந்து சோதனைகளால் உலக வல்லரசுகள் அதிர்ச்சி அடைந்து, அவை இந்தியாவுக்கு தீவிர எச்சரிக்கை விடுத்து, பயமுறுத்தியும் இருக்கின்றன ! இந்தியா நீண்ட காலப் போராட்டத்திற்குப் பின்பு எழுந்து நிற்கும் தனிச் சுதந்திர நாடு. இந்த நாள்வரை இந்தியா எந்த விதியையும் மீறியதும் இல்லை ! அகில நாட்டு உடன்படிக்கை எதையும் முறித்ததும் இல்லை ! உலக நாடுகள் தயாரித்த அணு ஆயுதப் பெருக்கத் தடுப்பு உடன்படிக்கை (Non-Proliferation Treaty NPT), அணு ஆயுதத் தகர்ப்பு (Nuclear Disarmament) ஆகியவற்றில் இந்தியாவுக்கு நம்பிக்கை இருக்கிறது.
இந்த உடன்படிக்கையைத் தயாரித்த நாடுகள்தான் தமக்குச் சாதகமாகத், தமக்குப் பாதுகாப்பாக அணு ஆயுதங்களைப் பெருக்கிக் கொண்டும், அவற்றைச் சோதித்துக் கொண்டும் அதன் விதி முறைகளை முறித்துள்ளன! இந்தியா ஒரு நாடு மட்டுந்தான் அம்மாதிரிச் செயல்களை எதிர்த்து நிமிர்ந்து நிற்கிறது !
பழைய வரலாற்றை நினைவில் வைத்திருப்பவர்கள், இப்போது ஐக்கிய நாடுகளின் பேரவை (United Nations Organization) ஒரு பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டிருப்பதை நன்கு அறிவர் ! அதை ஐம்பெரும் வல்லரசுகள் ஆட்டி படைத்து, ஆக்கிரமித்துக் கைப்பிடிக்குள் வைத்துள்ளன! நல்வினைகள் புரிந்துள்ள அகில நாடுகளின் அணுசக்திப் பேரவையும் (International Atomic Energy Agency) இப்போது உலக நாடுகளின் அணுஉலை எருக்கள் உளவுகளைச் (Fissile Material Inspections) செய்வதிலும், அணுப்பிளவு எருக்கள் (Fissile Material Safeguards) பாதுகாப்பிலும் சிரமப் பட்டு வருகிறது !”
அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லும் ஏவுகணைத் திட்டம்
1983 இல் ஒருங்கிணைந்த கட்டளை ஏவுகணை வளர்ச்சித் திட்டம் (Integrated Guided Missile Development Program) உருவாகி, அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் கட்டளை ஏவுகணைகள் விருத்தி செய்யப் பட்டன ! அத்திட்டப்படி, ஐந்து வித ஏவுகணைகள் இந்தியாவில் அமைக்கப் பட்டன! சிறு தூர பிருதிவி (Short Range Prithvi), இடைத் தூர அக்னி (Intermediate Range Agni), தளத்திலிருந்து வானுக்குத் தாவும் ஆகாஷ் & திரிசூல் (Surface to Air Missiles, Akash & Trishul), கட்டளைப் பணியில் டாங்க்கைத் தாக்கும் நாகம் (The Guided Anti-Tank Nag). முதல் ஏவுகணை பிருதிவி, அணு ஆயுத மாடல் குண்டைச் சுமந்து 1988 பிப்ரவரி 25 இல் ஏவப்பட்டு, சோதனை வெற்றி கரமாக முடிந்தது !
இந்திய ஏவுகணைத் திட்டத்தின் அமைப்பாளி (Architect of the Indian Missile Program) டாக்டர் அப்துல் கலாம் (2002 இல் இந்திய ஜனாதிபதி), இந்தியப் பாதுகாப்பு, ஆய்வு வளர்ச்சி நிறுவகத்தின் (Indian Defence & Research Development Organization) தலைவர். அவர் கூறியது: “கட்டளை ஏவுகணை ஆயுத மயமாக்கல் (Weaponization) முழுமை யாக முடிக்கப் பட்டது. பிருதிவி, அக்னி ஆகிய ஏவுகணைகள் தூக்கிச் செல்ல இருக்கும் அணு ஆயுதப் போர்க் குண்டுகளின் (Nuclear Warheads) அளவு, எடை, தூண்டும் முறை, இயங்கும் ஒழுங்கு, அதிர்வுகள் (Performance, Vibrations) யாவும் சோதிக்கப் பட்டு விட்டன!”
1998 மே மாதம் பிரதமர் பாஜ்பாயி வெளிப்படையாகப் பறை சாற்றினார்: “இந்தியா இப்போது ஓர் அணு ஆயுத நாடு (Nuclear Weapon State) ! மனித இனத்தின் ஆறில் ஒரு பங்கான பாரத மக்களின் உரிமைக்குரிய ஆயுதங்கள்! இவை யாவும் சுயப் பாதுகாப்புக்கு (Self Defence) மட்டுமே பயன்படும் ஆயுதங்களே தவிர முன்னடியாக யாரையும் தாக்குவதற்குப் பயன்படுத்தப் பட மாட்டா !”
இந்தியா பன்முகக் கலாச்சார நாடாக, பல்வேறு மதச் சார்பான தேசமாக, எண்ணற்ற இனங்களின் சங்கமமாக இருந்து, வகுப்புக் கலவரங்கள் அடிக்கடி எழும்போது கட்டுப்படுத்த இயலாத கூட்டரசினர் கைவசம் இருப்பதாலும், பாகிஸ்தான், சைனா போன்ற பகை நாடுகளுக்கு இடையே பாரதம் நெருக்கப் படுவதாலும் என்றாவது ஒருநாள், யாராவது ஒரு பிரதமர், எந்த நாட்டின் மீதாவது அணு ஆயுதத்தை வீசிக் கதிரியக்கப் பொழிவுகளை உலகில் பரப்பப் போகும் பயங்கரக் காலம் ஒருவேளை வரலாம் ! அந்த காட்டுப் பாதைக்குப் பாரதத்தில் சிவப்புக் கம்பளம் விரித்த விஞ்ஞானி, டாக்டர் ராஜா ராமண்ணா என்னும் ஓர் வன்மொழி வாசகம் கால வெள்ளம் அழிக்க முடியாதபடி, உலக வரலாற்றில் கல்வெட்டு போல் எழுதப்பட்டு விட்டது !
உலக விஞ்ஞானிகளுக்கும், அரசுகளுக்கும் ஓர் வேண்டுகோள்!
1955 ஆகஸ்டு 25 ஆம் தேதி பிரிட்டிஷ் விஞ்ஞானி, டாக்டர் ஜெ. பிரனோஸ்கி (Dr. J. Bronowski) அகில நாடுகளின் அமைதி நிலைநாட்டுப் பேரவையில் பேசும் போது, “எனது ஆணித்தரமான கொள்கை இது ! ஒவ்வொரு விஞ்ஞானியும் தனது தனித்துவ மனச்சாட்சியைப் பின்பற்ற வேண்டும். அது அவரது கடமை. இதில் அரசாங்கத்தின் கடமை என்ன? ஒரு விஞ்ஞானி தன் மனச்சாட்சிக்கு எதிராகப் பணி செய்ய மறுத்தால், அவரை அரசாங்கம் தண்டிக்கக் கூடாது! விஞ்ஞானிகள் தமக்கு விருப்பம் இல்லா ஆராய்ச்சில் இறங்க மாட்டோம் என்று மறுத்தால் விட்டுவிடும் ஒரு சூழ்நிலையை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும் !” என்று பறை சாற்றினார்.
1957 மே மாதம் நோபெல் பரிசு விஞ்ஞானி லினஸ் பாலிங் (Linus Pauling) அமெரிக்க விஞ்ஞானிகளின் ஒரு கோரிக்கையில் உலக அரசுகளையும், நாட்டு மக்களையும் வலியுறுத்தி ஓர் உடன்படிக்கை மூலம், எல்லா அணு ஆயுதச் சோதனைகளையும் உடனே நிறுத்தும்படி விரைவு படுத்தினார். 1957 ஜூன் மாதத்திற்குள் 2000 அமெரிக்க விஞ்ஞானிகள் சேர்ந்து கையெழுத்திட்டு ஓர் விண்ணப்பத்தை ஜனாதிபதி ஐஸன்ஹோவருக்கு அனுப்பினார்கள்! “ஒவ்வோர் அணுகுண்டுச் சோதனையும் உலகின் எல்லா மூலை முடுக்கிலும் கதிரியக்கப் பொழிவுகளை அடுக்கிக் கொண்டே போகிறது! அதிமாகும் ஒவ்வோர் அளவு கதிர்வீச்சும் மனித இனத்திற்கு ஆரோக்கியக் கேடுகளை உண்டாக்கிக் கொண்டே போகிறது! முடிவில் அங்க ஈனமான குழந்தைகள் எதிர்காலத்தில் பிறந்து, அவர்களின் எண்ணிக்கை பெருகப் போகிறது!”
அத்தனைக் கூக்குரல் அறிவிப்புகள் உலக விஞ்ஞானிகளுக்கும், அரசாங்கத்திற்கும் முறையிடுவது என்ன ? அழுத்தமான இந்த உபதேசம்தான் ! போதும் நிறுத்துவீர், அணு ஆயுதச் சோதனைகளை! போதும் நிறுத்துவீர், அணு ஆயுத உற்பத்திகளை! போதும் தகர்த்து ஒழிப்பீர், கைவசமுள்ள அணு ஆயுதக் குண்டுகளை ! உலக ஒலிம்பிக்கில் அணு ஆயுதப் பெருக்குப் பந்தயப் போட்டி இனிமேல் தொடரக் கூடாது.
(கட்டுரை தொடரும்)
*****************************
தகவல் :
Picture Credit : 1. Scientific American (December 2001) & (November 2007) 2. Time Magazine (Feb 14, 2005) 3. National Geographic (August 2005)
1. Scientific American Magazine : India, Pakistan & the Bomb By : M.V. Ramana & A. H. Nayyar (December 2001)
2 http://www.thinnai.com/?
3 http://www.thinnai.com/?
3. (a) http://jayabarathan.wordpress.
4. The Making of the Atomic Bomb, By: Richard Rhodes
5. Oppenheimer, By: James Kunetka
6. Hand Book of World War II, Abbeydale Press
7. The Deadly Element, By: Lennard Bickel
8. Canadian Nuclear Society Bulletin, June 1997
9. Grolier Online : Nuclear Weapons From Grolier’s The New Book of Knowledge By : Benoit Morel Garnegie Melton University (2003)
10. Time Magazine : The Merchant of Menace – A. Q. Khan Became the World’s Most Dangerous Nuclear Trafficker By : Bill Powell & Tim McGrirk (February 14, 2005)
11. National Geographic Magazine : Living With the Bomb By : Richard Rhodes (August 2005)
12. Scientific American Magazine : Do We Need New Nukes ? A Special Report on the Nuclear Arsenals & Replacing Warheads (November 2007)
13. The Dirty Bombs (Radiological Dispersion Bombs) MSN Broadcasting -Dirty Bombs Biggest Hazard : Panic Experts Say Radiation Would Play on Public Fears (June 10, 2002)
14. Nuclear Weapons – Wikipedia Report (December 6, 2009)
15. Neutron Bombs – Wikipedia Report (December 15, 2009)
16 Wikipedia Report on Dr. Abdus Salam –http://en.wikipedia.org/wiki/
******************
S. Jayabarathan (jayabarathans@gmail.com) December 24, 2009
இங்கிலாந்து மான்செஸ்டரில் மருத்துவராகப் பணிபுரியும் சி. வீரப்பன் அவர்கள் “மதிப்புமிகு உறுப்பினர்” (Honorary Member) என்று செப்டம்பர் 2014 இல் பார்சிலோனாவில் நடந்த ஐரோப்பிய தீவிர சிகிச்சை மருத்துவக் கழக (European Society of Intensive Care Medicine) மாநாட்டில் விருது பெற்றவர். இந்நாள்வரை இவ்விருது பெற்றோர் பதின்மூவர் மட்டுமே, இவ்விருது பெற்ற முதல் ஆசியர்/இந்தியர்/தமிழர் என்பது கூடுதல் சிறப்புச் செய்தி. மருத்துவர் வீரப்பன் சிறப்பு விருது பெற்றமையைப் பாராட்டியும், மருத்துவத்துறை அறிவியல் கல்விக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காகப் பாராட்டியும் வல்லமைக் குழுவினர் அவரை வல்லமையாளர் என்று அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
தமிழகத்தில் பிறந்து தேவக்கோட்டை, தூத்துக்குடி, பாளையங்கோட்டை நகர்களில் தனது பள்ளிப்படிப்பை முடித்து, 1974 ஆம் ஆண்டு மதுரை மருத்துவக்கல்லூரியில் மருத்துவப் பட்டம் பெற்றவர் மருத்துவர் வீரப்பன் அவர்கள். இங்கிலாந்திற்கு 1977 இல் குடிபெயர்ந்த வீரப்பன் முதியோர் நல மருத்துவம், உணர்வகற்றும் மருத்துவம் (geriatric medicine & anaestheticmedicine) ஆகிய துறைகளில் பணியாற்றிய பிறகு, 1985 ஆம் ஆண்டு முதல் தீவிர சிகிச்சை (Intensive Care Medicine) மருத்துவத் துறையில் பணியாற்றத் துவங்கினார். வெகு விரைவில் அத்துறை மருத்துவத்தின் பயிற்சியாளராகவும் உயர்ந்து ராயல் ஓல்தாம் மருத்துவமனையில் ( Royal Oldham Hospital) அரும்பணியாற்றி வருகிறார்.
தான் பணியாற்றும் இடர்நல மருத்துவத்துறையின் சிறந்த சிகிச்சை முறைகள் யாவையும் அத்துறையில் பணிபுரியும் மருத்துவர்கள் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டால் மருத்துவத்துறை பயன்பெறும் என்ற நோக்கில் 2004 ஆண்டில் தனது சொந்த முயற்சியில் ஒருநாள் கருத்தரங்கு (Annual Critical Care Symposium) ஒன்றை நடத்தினார். அதற்குக் கிடைத்த வரவேற்பின் காரணமாக தொடர்ந்து கருத்தரங்கு நிகழ்சிகளை இருநாட்களுக்கு விரிவுபடுத்தி இன்று வரை கருத்தரங்கங்களை நடத்தி வருகிறார். முதலில் சிறு முயற்சியாக துவக்கப்பட்ட கருத்தரங்கங்கள் நல்ல வரவேற்பு பெற்று, பத்தாவது கருத்தரங்கில் உலகளாவிய மருத்துவர்கள் பங்குபெறும் கருத்தரங்காக, அதில் 425 மருத்துவர்களும், 50 வல்லுநர்களும் கலந்துகொள்ளும் அளவிற்கு வளர்ச்சி பெற்றது. இந்தக் கருத்தரங்கை 2010 ஆம் ஆண்டில் வீரப்பன் சென்னையில் கூட்டினார். இவ்வாறு நடத்தப்படும் கருத்தரங்கங்கள் நடத்தும் செலவிற்கு போக மிஞ்சிய தொகையை தான் பணிசெய்யும் ஓல்தாம் மருத்துவமனைக்கு தனது நன்கொடையாகவும் அளித்துள்ளார்.
இவரது கல்விநோக்கம் கொண்ட இடர்நல மருத்துவக் கருத்தரங்கங்கள் நடத்தும் முயற்சியைப் பாராட்டி, 2013-இல் பிரிட்டனின் தீவிர சிகிச்சை மருத்துவக்கழகம் இவருக்கு “சிறப்புமிகு உறுப்பினர்” (Distinguished Member of the Intensive Care Society of UK) என்ற விருது வழங்கியது. இதுவரை இந்த விருது 2006-ஆம் ஆண்டு வரை 11 உறுப்பினர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது என்பதும், பிறகு 7 ஆண்டுகளுக்குப்பின் வீரப்பன் அவர்களுக்கு வழங்கப்பட்டது என்பது இவரது சிறப்பிற்குச் சான்று.
மருத்துவத் துறையில் பயிற்சியாளர் என்ற அனுபவத்தில் இக்கால மருத்துவத் துறை மாணவர்களுக்கு அவர் வழங்கும் அறிவுரைகள்:
– தொழில் நுட்பத்தையும் மின்னணுக் கருவிகளின் முடிவுகளையும் அடிப்படையாகக் கொண்டு செய்யும் மருத்துவத்தைத் தவிர்த்து, நோயாளியின் உடற்பரிசோதனைக்கு முக்கியத்துவம் கொடுத்து அச்சோதனை முடிவிற்கேற்ப மருத்துவம் செய்ய வேண்டும்
– நோயாளி உங்கள் உறவினர் என்ற கோணத்தில் அவரை அணுகி மருத்துவம் செய்ய வேண்டும்
– சட்டம் சார்ந்த மருத்துவ ஆய்வுகளைச் செய்வது சிறந்தது என்ற எண்ணத்தையும், தற்கால தொழில்நுட்பம் வழங்கும் கருவிகளைப் பயன்படுத்தி வழங்கும் மருத்துவமே சிறந்தது என்ற எண்ணத்தைக் கைவிடுதல் நல்லது
இடர்நல மருத்துவக்கல்வியை முன்னிட்டு மருத்துவத்துறையில் சீர்மையாளராக (Vocational Excellence) பணியாற்றிவரும் வீரப்பன் அவர்களுக்கு வல்லமையாளர் விருது வழங்கிப் பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி கொள்கிறோம்.
Info From:
http://gmccn.org.uk/
http://www.esicm.org/upload/542e6aa7a1d48-citations-chithambaram.pdf
http://www.akaramuthala.in/
http://www.devakottainagarathar.org/newsctv.php
**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!
**************************************************************************************
[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம்http://www.vallamai.com/?p=43179 ]
-மலர் சபா
மதுரைக் காண்டம் – 03: புறஞ்சேரி இறுத்த காதை
புகாரில் நிகழ்ந்தவற்றைக் கௌசிகன் அறிவித்தல்
கௌசிகன் புகார் நகரில் கோவலன் பிரிவால்
வருத்தத்தில் இருப்பவர்கள் பற்றிப் பேச வந்த 
தன் கொள்கையுடன் பேசத் தொடங்கினான்.
“கோவலன் நகரை விட்டு நீங்கியதால்
பெருவாணிகனாம் கோவலன் தகப்பன் மாசாத்துவானும்
அவன் தம் இல்லக்கிழத்தியும்
அரிய மணியைக் கிடைக்கப்பெற்ற நாகம்
அதை இழந்ததைப் போல வருந்துகின்றனர்.
இனிய உயிரை நீத்த உடல் போல
சுற்றத்தார் எல்லாம் செயலற்றுப் போய்த்
துன்பக்கடலில் வீழ்ந்தனர்.
‘நான்கு திசைகளிலும் சென்று கோவலனைத் தேடுக’ என
ஏவலர்க்கிட்ட பணியின் பொருட்டு
அவர்கள் உன்னைத் தேடிச்சென்றுள்ளனர்.
‘தந்தை தந்த பணியைச் செய்வதே மேலானது
அவ்வாறு அன்றி அரசாள்வது இழிந்தது’ என்று
அரசு துறந்து கொடுமையான காட்டுக்குச் சென்ற
இராமனைப் பிரிந்த அயோத்தி மக்கள் போலப்
புகார் மக்களும் உன்னைப் பிரிந்து
பெருந்துயர் அடைந்துள்ளனர்.
நீ பிரிந்ததையும் உன் வீட்டில் நிகழ்ந்ததையும்
தன் திருமுகம் மறுத்ததையும்
வசந்தமாலை மூலம் கேட்டுத் தெரிந்து கொண்ட மாதவி
பசலையுற்ற மேனியளாய் நினைவுகளால் நோயுற்று
உயர்ந்த நிலைகளையுடைய மாளிகையின் நடுமாடம் தன்னில்
உன்னை நினைத்தபடியே
ஒரு பள்ளியறைப்படுக்கையில் வீழ்ந்தாள்.
துயருற்றுத் தனித்திருந்த
மாதவியைக்காண நான் சென்றேன்.
என்னிடம் அவள்,
‘உன் திருவடி தொழுது நிற்கிறேன்.
என் துயரம் நீக்குவாயாக’ என வேண்டினாள்.
‘என் கண்ணின் கருமணி போன்றவனுக்கு
இதைக் காட்டுவாயாக’ என்று கூறித்
தம் மலர்க்கரங்களால் எழுதிய
மடல் ஒன்றைத் தந்தாள்.
அம்மடலை மண் இலச்சினையிட்டுத்
தன் கூந்தலால் ஒற்றி என்னிடம் தந்தாள்.
அவள் தந்த அந்த ஓலையை எடுத்துக்கொண்டு
பல வழிகளில் அலைந்து திரிந்து
இப்போதுதான் நான் உன்னைக் கண்டேன்” என்று
கௌசிகன் கோவலனிடம்
நடந்தேறிய நிகழ்வுகளை நடந்தவாறே கூறினான்.
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 56 – 79
http://ilakkiyam.com/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1135-purancheriyirthakathai–
படத்துக்கு நன்றி: கூகுள்
கவிஞர் காவிரிமைந்தன்
மெல்லப்போ.. மெல்லப்போ…
‘மெல்லிசை மன்னர்’ என்கிற பட்டம் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கு எப்படிப் பொருந்துகிறது என்பதற்கு இந்த ஒரு பாடல் ஒன்றே போதும் கட்டியங்கூற! பாடலின் இடையே பயன்படுத்தப்பட்டிருக்கும் வயலின் சோலோ.. பிரத்யேகமாக உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் வண்ணம் உச்சிமுகந்து பாராட்டச் சொல்கிறது!
மென்மையான வார்த்தைகளைத் தந்து மெல்லிய பூங்காற்றுபோல இசையம் தொடர மென்மை என்பது என்ன என்பதை இப்பாடலில் கேட்டுத்தெரிந்து கொள்ளலாம். கவிதையில் இன்பம் இருக்கிறது என்கிறார்களே.. அது என்ன.? இப்பாடல் வரிகளைப் பார்த்தாலே சுகம் கிடைக்கிறது! கேட்டாலே பூரணம் பிறக்கிறது!
தங்கத்தை அள்ளித்தர ஒரு மன்னனும் அதை வண்ணமுற ஆக்கித்தர ஒரு பொற்கொல்லனும் அமைந்துவிட்டால் வகைவகையாய் ஆபரணங்கள் வந்து சேராதா? அதுபோல் வார்த்தைகளை வரிவரியாய் வழங்கிட ஓர் வள்ளலும் அவற்றை ரகம்பிரித்து சுகம் சேர்க்கத் தெரிந்த மெல்லிசை மன்னரும் இணையும்போது இதுபோன்ற பாடல்கள் வந்திடுவதில் வியப்பென்ன?
இனிவரும் காலங்களிலும் இதயங்கள் நெருங்கிடும் இனிய காதலர்கள் சுகம்பெற வேண்டுமெனில் சுவைத்துப்பாருங்கள் இப்பாடலை!
-எம். ஜெயராம சர்மா- மெல்பேண்
கற்பனைக் கடலுள் மூழ்கி
கணக்கில்லா முத்தெடுத்து
அற்புதக் கவிதை தந்து
அனைவரின் கவிஞன் ஆனாய்!
சொற்சுவை அனைத்தும் சேர்த்து
சுந்தரத் தமிழில் தந்த
பொற்புடைக் கவிதையாலே
புவியெலாம் புகழுதுன்னை!
காவியம் செய்து நின்ற
கவி கண்ணதாசனே நீ
கவிதையால் உலகையாண்டு
காவியம் ஆகி விட்டாய்!
ஓவியம் போல நீயும்
ஒவ்வொரு கவிதை தந்தாய்
பாவிடைத் தோய்ந்தாய் நாளும்
பாட்டுக்கே அரசனானாய்!
ஊரெலாம் உன்னைப் போற்ற
உன்கவி உதவிற்றன்றோ
வாரிநீ தந்து நின்றாய்
வளமுடைத் தமிழை நாளும்!
கார்முகில் போல நீயும்
கவிமழை பொழிந்து நின்றாய்
கவி கண்ணதாசனே நீ
கவிதையில் வாழுகின்றாய்!
கிரேசி மோகன்
சாகரம்சூழ் பாரம், சரிகட்ட வந்தவன்முன்,
வ்யாகரணம் விட்டு வணங்கிநில், -மாகன,
சம்சாரப் பானையை, சுக்குநூ றாக்கிடும்,
அம்ஸா வதாரன் அவன்”….கிரேசி மோகன்….
வ்யாகரணம் -இலக்கணம்..
நந்த வனத்து நவனீத ஆண்டியவன்,
மந்திரத்தால் ஆய்ச்சி மயங்கவைத்து, -அந்தரத்தில்
தொங்கும் அகந்தையை தூரக் கடாசியதில்,
தங்குவெண்ணை ஆன்மனைத் துய்ப்பு’’….கிரேசி மோகன்….
நந்த வனத்து நவநீத ஆண்டி-நந்தகோபன் குமாரன்….
துய்ப்பு -நுகர்தல்
கவிஞர் காவிரிமைந்தன்
வான் நிலா நிலா அல்ல.. உன் வாலிபம் நிலா..
கவிதாலயா நிறுவனத்தின் சார்பில் கே.பாலச்சந்தர் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் பல. அவற்றுள் பட்டிணப்பிரவேசமும் ஒன்று! கவிதையும் இசையும் கைகுலுக்கும்! தரமான பாடல்கள் விருந்தாய் ரசிகர்களுக்குக் கிடைக்கும்! பாலச்சந்தர் அவர்களே பலமுறை சொன்னதுபோல் பாலச்சந்தரின் படங்கள் ஒருவேளை தோல்வி அடைந்திருக்கலாம். ஆனால், திரைப் பாடல்கள் எப்போதுமே வெற்றியடைந்திருக்கின்றன! அந்த வரிசையில் இதோ பட்டிணப்பிரவேசம்! பாலச்சந்தர் அவர்களுக்காகப் பாடல் எழுதுவதென்பது – தனி அலாதி! கண்ணதாசன் – ஒவ்வொரு முறையும் தேர்வினைச் சந்திப்பது போலிருக்கும் என்பார்! புதுமை, யுக்தி, அர்த்தங்கள்..ஆழங்கள்.. இவை யாவும் முத்திரை பதித்த பாடல்கள் பல நாம் கேட்டிருக்கிறோம். அவை உருவாகிடும் கட்டங்கள் எத்தனை சுவையானவை தெரியுமா?
இயக்குனரும் இசை அமைப்பாளரும் அமர்ந்து பாடலின் பின்னணி பற்றிச் சொல்லி மெட்டமைக்கத் தொடங்குவார்கள். இதோ மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுடன் கே. பாலச்சந்தர். கதையின் சூழல், பாத்திரங்களின் பின்னணி இவை கதையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வலிமையான சாதனம் பாடல் என்கிற அடிப்படையில்.. உருவாக்கம் தொடங்குகிறது. சையின் வலிமை என்னவென்று அந்த இறைவனுக்கும் தெரியும் என்பார்! விஸ்வநாதன் விரல்கள் ஆர்மோனியத்தில் நர்த்தனமாட பிறக்கிறது ஒரு புதிய மெட்டு! அடடா.. அடடா.. என்றே அதை ஆமோதிக்கிறார் இயக்குனர் பாலச்சந்தர். இதற்கு அப்படியே வார்த்தைகளை இன்று கவிஞரிடம் பெற்றுவிட வேண்டும் என்று முடிவு செய்கின்றனர். அதே நேரத்தில் கவிஞரும் வந்து சேர்கிறார்! தானமைத்த மெட்டை எம்.எஸ்.வி. (M – Stands for MUSIC, S – Stands for Sound and V – Stands for Voice) பாடிக்காட்டுகிறார்!
நா..ந..ந..ந..ந..நன்னா.. நா..நா..நா..நா..
நா..ந..ந..ந..ந..ந… நன்னா நன்னா..
இப்படிப் போகிறது மெட்டு! கவிஞர் கேட்டுக்கொள்கிறார். என்னடா நீ பாட்டுக்கு நா.. நா.. என்று இழுத்துக் கொண்டே போறே.. என்ன அர்த்தம்? சரியா சந்தம் கொடு என்கிறார். இயக்குனரும் இசையமைப்பாளரும் தங்கள் நிலையில் இருந்து மாறாமல்.. பாட்டுக்கிடைக்கவில்லையே என்கிற அவஸ்தையில்.. கவிஞரை சீண்டிவிட்டாவது.. பாட்டு எழுதி வாங்கிவிட வேண்டுமென .. என்ன கவிஞரே..இந்த மெட்டுக்கெல்லாம் பாட்டெழுதிடலன்னா.. நீயெல்லாம் ஒரு கவிஞரா? எனத் தூண்டி விடுகிறார் மெல்லிசை மன்னர்.
கவிஞர் சந்தத்தை மாற்றிக் கேட்டபடி.. ‘நா’ என்பதற்குப் பதிலாக..
‘ல’ என மாற்றிப் பாடிக் காட்டுகிறார். அவ்வளவுதான்..
வான் நிலா.. நிலா.. அல்ல.. உன் வாலிபம் நிலா..
பாடல் முழுவதும் உருப்பெறுகிறது .. கங்கை வெள்ளம் போல..
கட்டிலா .. தொட்டிலா.. மொட்டிலா..
எண்ணிலா ஆசைகள் கொண்டதே அதைச் சொல்வாய் வெண்ணிலா!
பம்மலில் நடைபெற்ற கண்ணதாசன் தமிழ்ச்சங்கத்தின் இரண்டாம் ஆண்டுவிழாவில் 11.07.1993 அன்று முதல் முறையாக ‘கண்ணதாசன் விருது’ பெற்ற மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் வழங்கிய ஏற்புரை.. முக்கனி விருந்தைப்போல் இனிப்பானது! ஆம்.. அவர் ஏற்புரையை மட்டும் வழங்கவில்லை.. அதனை இசையுரையாய் அமைத்துத் தந்தார்! மக்கள் வெள்ளம் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியது!
அப்போது இந்தப் பாடல் பிறந்த கதைபற்றி (மேலே குறிப்பிட்ட விஷயத்தைப் பகிர்ந்தார்) முன்னுரை தந்து இந்தப் பாடலை மேடையில் வழங்கினார்.
மேலும்.. இப்பாடலில் Father in law, Mother in law, Sister in law மட்டும்தான் இல்லை என்று நயமாக குறிப்பிட்டார்.
எந்தப் பாடலையும் தன் சொந்தப்பாடலாக்கும் வல்லமை கொண்ட எஸ்.பி.பால சுப்பிரமணியம் குறிப்பாக இந்தப் பாடலைக் கொஞ்சியபடி பாடும் விதம் அசத்தலானது! அருமையானது! ஒவ்வொரு மேடைநிகழ்ச்சியிலும் இந்தப் பாடல் அனைவரது விருப்பப்பாடலாய்! ஆம் .. இன்றைக்கும் நமக்கான நேயர் விருப்பமாய் ஒலிக்கிறது!
பாடல் பிரபலமான சமயம்.. மறைந்த ஆந்திரமுதல்வர் என்.டி.ராமாராவ் அவர்களுக்கு இந்தப் பாடல் மிகவும் பிடித்துப்போக .. அவர் நடித்த தெலுங்கு திரைப்படம் ஒன்றில் இதே இசைக் கோர்வையோடு இடம்பெற்ற செய்தியும் உண்டு!ள
வான் நிலா நிலா அல்ல – உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா – என் தேவியின் நிலா
நீயில்லாத நாளெல்லாம் – நான் தேய்ந்த வெண்ணிலா
மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா?
பூவிலாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா?
(வான் நிலா நிலா அல்ல)
தெய்வம் கல்லிலா? – ஒரு தோகையின் சொல்லிலா?
பொன்னிலா? பொட்டிலா? புன்னகை மொட்டிலா?
அவள் காட்டும் அன்பிலா?
இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா?
தீதிலா காதலா ஊடலா கூடலா?
அவள் மீட்டும் பண்ணிலா?
(வான் நிலா நிலா அல்ல)
வாழ்க்கை வழியிலா? ஒரு மங்கையின் ஒளியிலா?
ஊரிலா? நாட்டிலா? ஆனந்தம் வீட்டிலா?
அவள் நெஞ்சின் ஏட்டிலா?
சொந்தம் இருளிலா? ஒரு பூவையின் அருளிலா?
எண்ணிலா ஆசைகள் என்னிலா கொண்டது ஏன்?
அதைச் சொல்வாய் வெண்ணிலா!
(வான் நிலா நிலா அல்ல)
படம்: பட்டிணப் பிரவேசம்
இசை: M.S.விஸ்வநாதன்
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்: S.P.பாலசுப்ரமணியம்
கிரேசி மோகன்
வாயுள்ள புள்ளையா ! , வாயுள்ளே புள்ளையா !
தாயுள்ளம் கொண்டது திக்பிரமை !, -போயள்ளி
மண்சப்பி பூபாரம் மாற்ற முயல்கின்றான்,
INCEPTION பூமிக்(கு) இவன்’’….கிரேசி மோகன்….
ஓவியம் பார்த்தவுடன் தோன்றியது….
கண்ணன் மண்ணையுண்டது முடிந்தவரை பூபாரம் குறைக்க….
INCEPTION(BEGINING)- திவ்யதர்ஷனுக்கு மட்டுமல்ல தூரதர்ஷனுக்கும்(டிவிக்கும்) இவன்தான் முன்னோடி….
கண்ணன் வாய்க்குள் கண்ணனையே கண்டாள் அன்னை யசோதை…
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
“அகலாது அணுகாது தீக்காய்வார் போல”
நுகராது வாழ்தல் அறிவு.
அணுவின் உட்கருப் பரமாணுக்களைப் புலன்கள் உணராது போயினும் அவை புரிந்திடும் வினைத் திரிபுப் பலன்களைக் காண முடிகிறது! அண்ட வெளியில் விண்மீன்களின் வடிவ மாற்றங்களைத் தூண்டி விடுபவை, பரமாணுக்கள்! பூ மண்டலத்தின் சூழ்நிலையைப் பாதித்து மாற்றி விடுபவை, பரமாணுக்கள்! நாம் உட்பட வாழும் உயிரினங்கள் அனைத்தும் இயற்கைக் கதிரியக்கத்தால் எப்போதும் தாக்கப் படுகின்றன!
விக்டர் கில்லிமின் [Victor Guillemin]
கதிரியக்கம் தாக்காது மாந்தரைக் காக்க முடியுமா?
உலகில் கதிரியக்கமே படாத, கதிர்ப் பொழிவுகளை இதுவரை நுகராத, மருத்துவச் சாலைகளில் கதிர்வீச்சில் உடல்நலம் ஆராயப் படாத, புற்று நோயிக்குக் கதிரூட்டிக் குணப்படுத்தப் படாத, இயற்கைக் கதிரியக்கத்தில் என்றுமே தாக்கப்படாத மாந்தர்கள் எங்கேயாவது வாழ்ந்து வருகிறார்களா ? நாம் எல்லோருமே ஏதாவது ஒரு வழியில் கதிரியக்கத்தின் பாசக்கயிற்று வலையில் கட்டப் பட்டு அறிந்தோ, அறியாமலோ மாட்டிக் கொண்டிருக்கிறோம்! கதிரியக்கத்தின் கைவசப் படாமலே காலம் தள்ளி விடலாம் என்று கனவு காண்பவர், அதற்கு அஞ்சி ஒளிபவர் கண்களைத் திறந்து மெய்யுலகுக்கு வாருங்கள் !
கதிரியக்கத்தைக் கண்களால் காண முடியாது! மூக்கால் நுகர முடியாது! உடம்புத் தோலால் உணரவும் முடியாது! அறிந்தோ, அறியாமலோ உடம்புக்குள் நுழைந்து, அது கரையான் போல் உறுப்புகளைச் சிதைக்கும் போதுதான், அதன் தாக்குதலைப் புரிந்து கொள்ள முடியும்! கற்கால மனிதன் முதன் முதலில் தீயின் கோரக் குணங்களை அறிந்து கொண்டது போல், நமக்கு உதவும் கதிரிக்கத்தின் தீவிரப் பண்புகளை நாமும் தெரிந்து கொள்ள வேண்டும் !

இயற்கைக் கதிரியக்கம் கண்டு பிடித்து நோபெல் பரிசு பெற்ற மேரி கியூரியும், செயற்கைக் கதிரியக்கம் உண்டாக்கி நோபெல் பரிசு பெற்ற அவரது புதல்வி ஐரீன் கியூரியும் தீவிரக் கதிரடி வாங்கி புற்று நோய் தூண்டிய இரத்த நோயில் [Leukemia] முதன் முதல் கதிரியக்க தீங்குக்குப் பலி யானவர்கள்! அது போல் நூறாண்டுகளுக்கு முன்பு சுரங்கங்களில் வேலை பார்த்த தொழிலாளிகள் பலர் புற்று நோயில் மரண மடைந்ததற்கு, தாதுக்களில் வெளியேறிய கதிர்வீச்சுகளே காரணம் !
பலனும், பாதகமும் ஒருங்கே கொண்ட கதிரியக்க ஏகமூலங்கள் கடந்த 50 ஆண்டுகளாக உலகெங்கும் மருத்துவச் சாலைகள், தொழிற் கூடங்கள், விஞ்ஞானப் பொறியியல் ஆய்வுத் துறைகள், மின்கலன்கள் [Batteries] உற்பத்தி, வேளாண்மை ஆய்வுச் சாலைகள், அணு உலைகள் போன்ற இடங்களில் பயன் பட்டு வருகின்றன! கோடான கோடி ஆண்டுகளாய் மலைப் பிரதேசங்களில் வாழையடி வாழையாக வாழ்ந்து வரும் மலை யினத்தவர், பலவிதப் பின்புல இயற்கைக் கதிர்வீச்சால் [Background Natural Radiation], பல ஆண்டுகள் சிறுகச் சிறுகத் தாக்கப் பட்ட போதிலும், அவர்களுக்கு எவ்வித நோயும் வந்ததாகத் தெரிய வில்லை! “அகலாது அணுகாது தீக்காய்வார் போல”, கவசங்களை அணிந்து கொண்டு, நமக்குப் பயன் அளிக்கும் கதிரியகத்தைக் கட்டுப் படுத்திக் கையாளுவதைத் தவிர வேறு வழியில்லை !
கதிரியக்கம் தாக்கும் உலோகத் தனிமங்கள் எங்குள்ளன ?
இயற்கையாகவே நம்மைச் சுற்றி வாழும் இடத்திற்கு ஏற்றபடி, எல்லாத் திசைகளிலும் உலவி உள்ள “பின்புலக் கதிரியக்கம்” [Background Radiation] ஓரளவு எப்போதும் நம்மைத் தாக்கி வருகிறது! விண்வெளியிலிருந்து விண்மீன்கள் உமிழும் அண்டவெளிக் கதிர்கள் [Cosmic Rays] நம்மை எப்போதும் தாக்குகின்றன! நாமுண்ணும் உணவு, குடிக்கும் நீர், நுகரும் காற்று, விளையும் பயிர்கள், நடமிடும் தளங்கள், உல்லாச மலைச் சிகரங்கள், சுரங்கப் பண்டங்கள் ஆகிய எல்லாவற்றிலும் மிகச் சிறிய அளவு கதிர்வீச்சு இருக்கவே செய்கிறது! பூமியில் கிடைக்கும் யுரேனியம், தோரியம், ரேடியம், போலோனியம் போன்ற நிலையற்ற மூலகங்கள் [Unstable Elements], அணு உலைகளில், விரைவாக்கி யந்திரங்களில் ஆக்கப்படும் புளுடோனியம்-239, யுரேனியம்-233 போன்ற செயற்கை மூலகங்கள், ஏகமூலங்கள் கதிரியக்கம் எழுப்புபவை.

பொது நபர்கள் வாங்கும் கதிர்வீச்சில் 80% பின்புலக் கதிரியக்கமே மிகுதிப் பங்கு பெறுகிறது! வீட்டின் கீழ்த்தளப் பிளவுகளிலிருந்து கசிந்து எழும் ரேடான் வாயு [Radon Gas] தீவிரக் கதிர்வீச்சை உண்டாக்குகிறது! ரேடான் வாயுவைக் காண முடியாது! அதை உணர முடியாது ! நுகரவும் முடியாது! வட அமெரிக்க வீடுகள் எல்லாம் குளிரைத் தடுக்கக் காற்றடைப்பு இல்லங்களாய்க் கட்டப் படுவதால், கசியும் ரேடான் வாயு வெளியேறாமல் வீட்டுக் குள்ளே சுற்றிக் கொண்டிருக்கிறது! ரேடான் தேய்வில் வெளிவிடும் ஆல்·பா துகள்கள், அதைச் சுவாசித்து உட்கொள்ளும் வீட்டு நபர்கள் செல்களைச் சிதைத்துப் புப்புசங்களில் புற்று நோயை உண்டாக்கும் !
இருபதாம் நூற்றாண்டில் எண்ணற்ற புதிய கதிர்வீச்சு சுரப்பிகள் [Radiation Sources] தோன்றின! எக்ஸ்ரே ஆய்வுச் சாதனம், கதிர்ப்படவியல் [Radiography], அணு உலைகள், விரைவாக்கி யந்திரங்கள், அணு உலை விபத்துகள், அணு ஆயுத வெடிப்புகள் சோதனைகள், அணு உலை எரிக்கோல்கள் தயாரிக்கும் யுரேனியம், தோரியம், புளுடோனிய தொழிற்சாலைகள், அணு ஆயுதத் தயாரிப்புக் கூடங்கள் போன்ற ஏராளமான துறைகள் உலகெங்கும் காளான்கள் போல் தோன்றிச் சூழ் மண்டலத்தில் கதிரிக்கத் தீங்குகளும், நோய்களும் பெருகிக் கொண்டே போகின்றன! மனிதன் செயற்கையாக உண்டாக்கும் கதிர்வீச்சால் 18% பங்கு கதிரியக்கத்தை உயிரினங்கள் பெறுகின்றன!

கதிர்வீச்சு, கதிரியக்கம் என்றால் என்ன ?
ஜெர்மன் விஞ்ஞானி வில்லியம் ராஞ்சன் 1895 ஆம் ஆண்டு ஊடுறுவும் எக்ஸ்ரே கதிர்களைக் கண்டு பிடித்தார்! அவரைப் பின் தொடர்ந்து, 1896 ஆம் ஆண்டில் ·பிரென்ச் விஞ்ஞானி ஹென்ரி பெக்குவரல் பூமியில் கிடைக்கும் தாது யுரேனியம் கதிர் வீசுவதைக் கண்டு அதற்குக் “கதிர்வீச்சு” [Radiation] என்று பெயரிட்டார். அடுத்து அவரைப் பின் தொடர்ந்த மேரி, பியரி கியூரி தம்பதிகள் ரேடியம், போலோனியம் ஆகியவை யுரேனியத்தை விடத் தீவிரக் கதிர் வீசுவதைக் கண்டு பிடித்து, “கதிரியக்கம்” [Radioactivity] என்று பெயரிட்டனர்! அணுவியல் விஞ்ஞானத்தில் புரட்சி செய்த மகத்தான அந்த கண்டு பிடிப்புக்கு, அம்மூவரும் 1903 இல் நோபெல் பரிசு பெற்றார்கள்! 1934 இல் பெற்றோரைப் பின்பற்றிச் செயற்கைக் கதிர் ஏகமூலங்களை [Artificial Radioisotopes] உண்டாக்கி, அவரது புதல்வி ஐரீன் கியூரி அவையும் தேய்ந்து கதிர் வீசுவதைக் கண்டு பிடித்தார்! அதற்குப் பிறகு பிரிட்டிஷ் விஞ்ஞானி ஜேம்ஸ் சாட்விக் 1932 ஆம் ஆண்டு அணுக்கருவினுள் இருக்கும் நியூட்ரான் பரமாணுவைக் கண்டு பிடித்து மற்றும் ஓர் புரட்சியை உண்டாக்கினார்! ஐரீன் கியூரியும், ஜேம்ஸ் சாட்விக்கும் அவரது அரிய சாதனைகளுக்கு நோபெல் பரிசு அளிக்கப் பட்டனர்!

இயற்கையில் சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட மூலகங்கள், அவற்றின் ஏகமூலங்கள் [Elements & Isotopes] கதிர்வீசிப் பளு குறைந்து, குறைந்து தேய்வடைகின்றன. அத்துடன் அணு உலைகளிலும், விரைவாக்கி யந்திரங்களிலும் [Accelerators] செயற்கையாக 200 மேற்பட்ட மூலகங்களும், ஏகமூலங்களும் உண்டாக்கப் பட்டு, அவ்விதமே அவையும் தேய்ந்து கதிர் வீசுகின்றன. கதிர் மூலகங்களும், ஏகமூலங்களும் உமிழும் கதிர்வீச்சில் ஆல்·பாத் துகள், பீட்டாத் துகள், காமாக் கதிர்கள் [Alpha Particle, Beta Particle, Gamma Rays] என்பவைச் சேர்ந்தோ, அன்றித் தனித்தோ எழுகின்றன! அவற்றுடன் அணுக்கருவின் உள்ளே இருக்கும் நியூட்ரான் பரமாணுவும், செயற்கையாக உண்டாக்கப் படும் எக்ஸ்ரே கதிர்களும் கதிரியக்கம் புரிபவை! அவற்றில் ஊடுறுவும் திற முடைய எக்ஸ்ரேயும், தீவிர சக்தி கொண்ட காமாக் கதிர்களும் மின்காந்த அலைகள் [Electro magnetic Waves] என்று அறியப் பட்டன. ஆல்·பா, பீட்டா, நியூட்ரான் ஆகிய மூன்றும் வெறும் துகள்கள் [Particles]. இங்கு விளக்கப் படும் துகள்கள், கதிர்கள் யாவும் மின்னிகளை ஆக்கும் கதிர்வீச்சுகள் [Ionizing Radiations]. மேலும் அவை யாவும் உயர் சக்திக் கதிர்வீச்சுகள் [High-energy Radiations] எனப்படுபவை. சூழ் மண்டலத்தில் நிரம்பியுள்ள காற்றையும், நீரையும், மண்ணையும் நாச மாக்குவது, கதிரியக்கம்! முளைக்கும் பயிரினங்களைச் சிதைப்பது, கதிரியக்கம் ! வாழும் மாந்தருக்கும், உயிரினங்களுக்கும் தீங்குகளை விளைவிப்பது கதிரியக்கம்!

கதிர்வீச்சுகளின் போக்கும், தடுப்புக் கவசங்களும்
நேர் மின்கொடையுள்ள [Positive Charge] ஆல்ஃபா அணுக்கரு இரு புரோட்டான், இரு நியூட்ரான் கொண்டு, மிகையான பளுக் கொண்டதால், மனிதத் தோலைக் கடக்க முடியாது. ஒரு தாள் காகிதம் அதைத் தடுத்து நிறுத்தி விடும்! ஆனால் மூக்கின் வழியாகவோ, வாய் மூலமாகவோ ஆல்ஃபாத் துகள், மனித உடம்புக்குள் நுழைந்து விட்டால், அது பெருந் தீங்கிழைக்கும் !
வேகமாய்ப் பாய்ந்து செல்லும் பீட்டாத் துகள், அணுக்கருவைச் சுற்றி வரும் எதிர் மின்கொடை யுள்ள [Negative Charge] ஓர் எலக்டிரான்! அவை மனிதத் தோலுக்குள் நுழைந்து விடும் சக்தி பெற்றவை! தாளைக் கடந்து செல்லும் பீட்டாவை, ஒரு தகடோ, பலகையோ தடுத்தி நிறுத்தி விடும் ! பீட்டாத் துகள்கள் வாய், மூக்கு வழியாக மனித உடம்பை அண்டி விட்டால், தீங்குகள் உண்டாக்கும் !

ஊடுறுவும் சக்தி மிகுந்த காமாக் கதிர்களைத் தடுக்க ஈயத் தகடோ அல்லது தடித்த காங்கிரீட் சுவரோ தேவைப் படுகிறது! எல்லாக் கதிர்வீச்சுகளிலுல் காமாக் கதிர்களே தீவிரத் தீங்குகளை மனித இனத்துக்கும், உயிரினத்துக்கும் விளைவிக்கின்றன! கதிர்வீச்சுத் துணுக்குகள் மூக்கு, வாய் வழியாகச் சென்று உடம்பினுள் ஒட்டிக் கொண்டால், செல்கள் சிதைக்கப் பட்டு புற்று நோய் உண்டாகக் காரண மாகிறது !
எக்ஸ்ரே கதிர்கள், மருத்துவச் சாலைகளில் செயற்கை முறையில் உண்டாக்க படும் மின்காந்த அலைகள். பொதுவாக அவற்றை நிபுணர்கள் அளவாகக் கையாளுவதால், தவறுகள் ஏற்பட்டு உடம்பில் அளவு மீறிச் செலுத்துதல் என்பது குறைந்த எண்ணிக்கைச் சம்பவங்களே !
நியூட்ரான்கள் அணு உலைகளிலும், அணுப்பிளவு விளைவுகளிலும், அணு ஆயுத வெடிப்புகளிலும் வெளியேறும் துகள்கள். நியூட்ரான் மின்கொடை யில்லாத [Neutral Charge] பரமாணு ! அவை உடம்பை ஊடுறுவும் போது, உடம்பிலுள்ள ரசாயனப் பொருட்கள் தாக்கப் பட்டுக் கதிரியக்கத்தை எழுப்பி, அடுத்துக் கேடுகள் விளையலாம் !

பாதுகாப்பு அளவுக்கு மீறிய கதிரடியால் விளையும் தீங்குகள்:
முதன் முதல் இயற்கைக் கதிரியக்கம் கண்டு பிடித்து நோபெல் பரிசு பெற்ற மேரி கியூரியும், செயற்கைக் கதிரியக்கம் உண்டாக்கி நோபெல் பரிசு பெற்ற அவரது புதல்வி ஐரீன் கியூரியும் தீவிரக் கதிரடி வாங்கி புற்று நோய் தூண்டிய இரத்த நோயில் [Leukemia] முதன் முதல் கதிரியக்க தீங்குக்குப் பலி யானவர்கள்! நூறாண்டுகளுக்கு முன்பு சுரங்கங்களில் வேலை பார்த்த தொழிலாளிகள் பலர் புற்று நோயில் மரண மடைந்ததற்கு, தாதுக்களில் வெளியேறிய கதிர்வீச்சுகளே காரணம்!
அண்டவெளிக் கதிர்கள், பொட்டாஸியம்40, ரேடான் வாயு ஆகியவற்றால் இயற்கையாகப் பெறும் கதிரியக்கம்: 200-300 m.rem. [milli rem. 100 rem = 1 sievert].
அணு ஆயுதச் சோதனை கதிர்ப் பொழிவுகள்: 1.0 m.rem.
உடல் நல மருத்துவ ஆய்வுகள்: 50 m.rem.
வீட்டுச் சாதனங்கள் [புகை உளவிகள், ஒளிக் கடிகாரங்கள்]: 2.0 m.rem.

அணு உலைத் தொழிலாளி: ஆண்டுக்கு 200-300 m.rem.
பொதுவான இயற்கைப் பின்புலக் கதிர்வீச்சால் பெறும் 200-300 m.rem கதிரடியால், 10,000 பேரில் ஒரு நபருக்குப் புற்று நோய் வரலாம்!
ஒரு நபரை 10 rem கதிரடி ஒரே சமயம் தாக்கினால், 1000 இல் 1 நபருக்குப் புற்று நோய் வரலாம்! [மற்ற நச்சுப் பொருள்களால் புற்று நோயில் தாக்கப் படுபவர், 1000 இல் 160-200 பேர்கள்].
100 rem கதிரடி வாங்கும் நபர்கள் வாந்தி மயக்கம் அடைவர். அவர்கள் 1000 பேரில் 10 பேர் அடுத்த ஆண்டே புற்று நோயில் தாக்கப் படுவார்!
300-600 rem கதிரடி பெறுவோர் சில மணி நேரத்திலே வாந்தி மயக்க மடைந்து, இரத்த செல்கள் பாதிப்பை அடைவர்! ஓரிரு வாரங்களில் சிலர் மரண மடைவர்! மருத்துவச் சிகிட்சை மரண எண்ணிக்கையைக் குறைக்கலாம். 450 rem கதிரடி பெற்றவர்களில் 50% நபர்கள் இறந்து போவார்!
1000 rem வாங்கிய நபர்கள் உடனே நோய்வாய்ப் பட்டு, மருத்துவச் சிகிட்சை அளிப்பினும் சில வாரங்களில் இறந்து போவார்!
5000-10,000 rem கதிரடி வாங்குவோர் உடனே மாண்டு போவார்!

கதிரியக்க தாக்குதலால் மனிதருக்கு விளையும் தீங்குகள்!
கதிர்வீச்சுகளால் நேரும் தீங்குகளை இரு வகையாகப் பிரிக்கலாம்! ஒன்று உடல் விளைவு [Somatic Effect]; மற்றொன்று சந்ததி மூலவிகள் விளைவு [Genetic Effect]. உடல் விளைவுகளில் சோர்வு, வாந்தி, மயக்கம், தலை மயிர் உதிர்தல், புற்று நோய், அல்லது மரணம் ஆகியவை 1000 rem கதிரடி வாங்கிய மாந்தருக்கு நேர்ந்திடலாம்!
கதிர்வீச்சுத் துணுக்குகள் மனித உடலுக்குள் நுழைந்து செல்களை மின்னிகளாக்கி [Ionizing Body Cells] பாதிக்கின்றன. சில சமயம் உடம்பே பழுதைச் சரிப்படுத்துகிறது! பழுதுகள் தீவிர மானால் உயிரியல் தீங்குகள் [Biological Damages] பெருகும்! கதிரியக்கத் துணுக்குகளின் அரை ஆயுளுக்கு [Half Life (Time taken to become half by Decay Process)] ஏற்ப, அவை நீண்ட காலங்கள் தீங்கு விளவிக்கலாம்! அல்லது குன்றிய காலம் வரைத் துன்புறுத்தலாம்!

அணு உலைகளிலும், அணு ஆயுத வெடிப்புகளிலும் வெளிவரும் ஐயோடின்-131 ஏகமூலத்தின் [Isotopes] அரை ஆயுள்: 8 நாட்கள்! ஸ்டிரான்சியம்-90 இன் அரை ஆயுள்: 29 ஆண்டுகள்! சீஸியம்-137 இன் அரை ஆயுள்: 30 ஆண்டுகள்! இவற்றில் ஸ்டிரான்சியம்90 உடம்பின் எலும்பைத் தேடி அங்கு போய் குடி கொண்டு அதைச் சிதைக்கிறது! ஐயோடின்-131 தொண்டையில் உள்ள தைராய்டு சுரப்பியைப் பற்றிக் கொண்டு பாதிக்கிறது! சீஸியம்-137 உடம்பில் பல்லாண்டு காலம் ஒட்டிக் கொண்டு புற்று நோய் உண்டாக்குகிறது! இவற்றை உடம்பிலிருந்து அகற்றுவது மிகவும் கடினமான செயல்!
ஆனால் இதற்கு முரணாகக் கதிர்களால் மூலவிகள் துண்டிக்கப்படும் [Genes Mutations] போது, தாக்கப் பட்டோருக்குப் பிறக்கும் சந்ததிகள் பாதகம் அடைகின்றன! ஹிரோஷிமா, நாகசாகியில் மிகையான கதிரடி வாங்கியோர் சந்ததிகள் பாதிக்கப் படவில்லை! ஆனால் குறைவான அளவில் கதிரடி பட்டோரின் சந்ததிகள் அங்க ஈனமுடன் பிறந்துள்ளன! புற்று நோய் வருவதும், சந்ததிப் பாதிப்புகளும் அங்கு மிங்கும் எங்கோ நிகழும், ஒழுங்கற்ற [Random] விளைவுகளே! கதிரடி அளவுகள் அதிக மாகும் போது, அவ்விளைவுகளின் எண்ணிக்கையும் மிகைப்படுகிறது!

செர்நோபிள் அணு உலை விபத்தில் பரவிய கதிரியக்கப் பொழிவுகள்
1986 ஏப்ரல் 26 ஆம் தேதி சோதனையின் போது விபத்தில் வெடித்த செர்நோபிள் ரஷ்ய அணு உலை வெளியாக்கிய கதிர்ப் பொழிவுகள் நார்வே, சுவீடன், பிரிட்டன் நாடுகளில் பரவி, மற்றும் பல்லாயிரம் மைல் கடல் கடந்து, கனடாவிலும் அதன் கதிரியக்கம் உளவின் போது அறியப்பட்டது! நார்வேயில் வாழும் ரெயின்டியர் மான்கள், கனடாவில் சுற்றும் கரிபு மான்கள் ஆகியவற்றின் இறைச்சியைத் தின்றவர் உடம்பில் கதிரியக்கம் முதன் முதலில் கண்டு பிடிக்கப் பட்டது! அணு உலை விபத்தில் யுரேனியம் எரிக்கோல்கள் எரிந்து உருகி, ஏராளமான அளவு கதிர்வீச்சு உலகெங்கும் பரவி விட்டது! மூன்று மைல் உயரத்தில் எழும்பிய கதிரியக்க முகில், காற்றில் கலந்து சூழ் மண்டலத்தில் நஞ்சைப் பரப்பி விட்டது! 20 மைல் சுற்றளவில் வாழ்ந்த 135,000 மக்கள் ராணுவ பஸ்களில் ஏற்றப் பட்டு வேறோர் ஊரில் குடிபுக ஏற்பாடானது! ஓரிரு நாட்களில் 31 மாந்தர் மாண்டனர்! அணு உலைக் கருகில் வாழ்ந்த 700,000 மக்கள் கதிரியக்கத்தால் தாக்கப் பட்டு, அடிக்கடி ஒழுங்காகச் சோதிக்கப் பட்டு வருகிறார்கள்! அவர்களில் மூன்றில் ஒரு பங்கு சிறு குழந்தைகள்!

கதிர்வீச்சுக் குறைப்பு! கதிர்வீச்சுப் பாதுகாப்பு!
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய உயிரினங்கள், மனித இனங்கள் இயற்கையில் பரவிய கதிர்வீச்சுக் கடலில் வாழையடி வாழையாய் நீந்தி வந்து, இன்னும் அவற்றின் சந்ததிகள் தொடர்கின்றன! கதிரியக்கம் என்பது, இயற்கையாகவே மனித வாழ்க்கையுடன் பின்னிக் கொண்ட, தவிர்க்க முடியாத சூழ்நிலை நிகழ்ச்சி யாகும்! மனிதர் படைத்த அணு உலைகளும், அணு ஆயுதங்களும் நம் அருகில் இருந்து கொண்டு பல்லாண்டுகள் பயமுறுத்தி வருவதை யாராலும் தடுக்க முடியாது! ஆனால் மனித இனம், உயிரினம், பயிரினம் கதிரியக்கத் தீங்குகளிலிருந்து உறுதியாகப் பாதுகாக்கப் பட வேண்டும்! அவை நுகரும் காற்றில் கதிர்வீச்சுத் துணுக்குகள் கலக்காமல் தூயதாக அமைந்திட யாவரும் ஒருங்கே பாடுபட வேண்டும்!
அதற்குக் கட்டுப்பாடுகள், வழி முறைகள் உண்டா? ஆம், அகில நாட்டு அணுசக்திப் பேரவை [I.A.E.A International Atomic Energy Agency, Vienna, Austria] தயாரித்துள்ள கட்டுப்பாடுகள் பல உள்ளன! அவற்றைக் கடைப் பிடிக்க வழி முறைகள் உள்ளன! ஆனால் அவை போதா! கதிர்வீச்சுக் கழிவுகளைக் காங்கிரீட் சமாதிகளில் புதைக்கலாம்! கதிர்வீச்சு உயிரினங்களைச் சிதைக்கா திருக்க கவசங்களை [Radiation Shieldings] அணிந்து கொள்ளலாம்! சிறுவர், சிறுமியர், கர்ப்பக் கரு கதிர்வீச்சுப் படாமல் மறைந்து நிற்கலாம்! “அகலாமல், அணுகாமல் தீக்காய்வார் போல” என்று திருவள்ளுவர் கூறியது போல், மாந்தர் நெருப்புடன் பழகுவது போன்று கதிர்வீச்சுடனும் தொடர்பு கொள்ள வேண்டிய கட்டாயம் நேரிடுகிறது! மனிதர் ஆக்கிய கதிரியக்க விளைவுகளின் தீங்குகளைக் கட்டுப் படுத்திப் பொது மக்களைப் பாதுகாக்க மத்திய அரசாங்கம், மாநில அரசாங்கம், நகர ஆட்சி நிறுவனம், அணுவியல் துறையகம், கல்லூரிகள், பள்ளிக் கூடங்கள், கோயில் நிர்வாகங்கள் போன்றவை பொது மக்கள் அறிய வேண்டியவற்றை அடிக்கடி உபதேசித்து, பயிற்சி அளித்துப் பாதுகாப்பு முறைகளைக் கையாள உதவ வேண்டும் !

(தொடரும்)
***********************
தகவல்:
1. http://www.npcil.nic.in/
2. http://pib.nic.in/release/
3. http://www.stratmag.com/
[Russia Breaches Nuclear Blockade against India By: C. Raja Mohan (Nov 16, 2001)]
4. World Nuclear Association – WNA Radiological Protection Working Group – RPWG (Official List – July 20, 2006)
http://www.world-nuclear.org/
5. World Nuclear Association – WNA Waste Management and Decommissioning Working Group – WM&DWG
(Official List – July 25, 2006) http://www.world-
6. http://www.candu.org/npcil.
7. Safety of Nuclear Power Reactors, [www.uic.com.au/nip14.htm] (July 2007)
8. Nuclear Power Plants & Earthquakes [www.uic.com.au/nip20.htm] (Aug 2007)
9. http://www.thinnai.com/?
10. http://www.wano.org.uk/
11 IAEA Incident Reporting System Using Operational Experience to Improve Safety (IAEA Instruction)
12 http://www.thinnai.com/?
மின்சக்தி நிலையங்கள்)
13 http://www.thinnai.com/?
14 National Geographic Magazine Radiation Effects [April 1989]
15 Facts About Radiation by Ontario Hydro Nuclear Division
16 Ascent Magazine By Atomic Energy of Canada Ltd. [Summer 1989]
17 Understanding Ionizing Radiation [August 1992]
18 Radiation is Part of Life [March 1985]
19. <http://www.thinnai.com/?
20. <http://www.thinnai.com/?
21. <http://www.thinnai.com/?
******************
S. Jayabarathan [jayabarathans@gmail.com] October 18, 2007
சக்தி சக்திதாசன்
எனது மனதில் நிலைபெற்றிருக்கும் அன்புக் கவியரசரின் நினைவுநாள் நினைவாக அவரது ஆக்கங்கள் சிலவற்றை இங்கே அணிவகுக்கின்றேன்.
ரசிப்பீர்கள் என்பது எனது திடமான நம்பிக்கை.
காசைவிட எது பெரிது?
“தாசியுள வீட்டிலே தவறாத குலமகள்
தான்போய்க் குடியி ருந்தால்
தட்டுகிற கை அங்கு தாசிஎன் றறியுமா
சம்சாரி என்றறியுமா?
நீசரோடு கூடினால் நீதிமான் தன்னையும்
நீசரென் றேயழைப் பார்;
நிகழ்கால நட்பிலே எதிர்காலம் ஒளிவிடும்
நெருங்குமுன அறிய வேண்டும்!
காசு பெரிதல்லநல் நண்பர்பெரி தாமென்று
கருத்தினில் இருத்து வாயே!
கனிவுடைய சிறுகூடற்பட்டியில் வதிகின்ற
கன்னிமலை யரசி துணையே!”
-கவியரசர் க்ண்ணதாசன்-
தன்னுடைய சிறுகூடற்பட்டி மலையரசித் தாயிடம் தனது மனதில் காசைவிச தனது நண்பர்கள் தான் பெரிதென்ற எண்ணத்தை நிலைநிறுத்துமாறு எத்தனை பவ்வியமாக வேண்டுகிறார் பார்த்தீர்களா?
கண்ணதாசன் அவர்கள் நண்பர்கள் பலரென்று நம்பியவர்களாலே ஏமாற்றப்பட்டவர். வெளுத்ததெல்லாம் பால் எனும் எண்ணம் கொண்டவர். ஆயினும் அவரது மனதில் நட்பை அதாவது உண்மையான் நட்பை பெரிதாக எண்ணும் சிந்தை எப்படி ஆழமாக வேரூன்றி இருக்கிறது பார்த்தீர்களா?
காதல் என்னும் அந்த இனிய உணர்வினால் தாக்கப்பட்டோர் அனைவருமே என்றுகூடச் சொன்னால் தவறாகாது.
அந்தக் காதல் உணர்வு மனதில் கொடுப்பதோ இன்பவேதனை. அந்த வேதனையைச் சொல்லில் வடிப்பது அதைவிட வேதனை.
அத்தகைய ஒரு இன்பவேதனையை எமது இனிய கவியர்சர் எத்தனை இதமாகத் தந்திருக்கிறார் பாருங்கள் !
விருத்தம்:
“நூறுமுறை பிறந்தாலும், நூறுமுறை இறந்தாலும்
உனைப் பிரிந்து வெகுதூரம் – நான் ஒருநாளும்
போவதில்லை, உலகத்தின் கண்களிலே –
உருவங்கள் மறைந்தாலும், ஒன்றான உள்ளங்கள்
ஒருநாளும் மறைவதில்லை!’
பாடல்:
ஓராயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி ஓசையிலே
உன் காதலை நான் அறிவேன்
(ஓராயிரம்)
இந்த மானிடக் காதலெல்லாம்
ஒரு மரணத்தில் மாறிவிடும்
அந்த மலர்களின் வாசமெல்லாம்
ஒரு மாலைக்குள் வாடிவிடும்
நம் காதலின் தீபம் மட்டும்
எந்த நாளிலும் கூட வரும்
(ஓராயிரம்)
இந்தக் காற்றினில் நான் கலந்தேன்
உன் கண்களைத் தழுவுகின்றேன்
இந்த ஆற்றினில் ஓடுகின்றேன்
உன் ஆடையை நாடுகின்றேன்
நான் போகின்ற பாதையெல்லாம்
உன் பூமுகம் காணுகின்றேன்
(ஓராயிரம்)”
ஒன்றான உள்ளங்கள் ஒருபோதும் மறைவதில்லையாம். எத்துணை உண்மை இது.
இப்போது உங்கள் மனங்களிலே ஒரு கேள்வி எழலாம், அப்போ ஏமாற்றும் காதலெல்லாம் என்ன? என்று.
இங்கேதான் கவியரசரின் வார்த்தைகளின் உண்மை புரிகிறது. அப்படிப்பட்ட ஏமாற்றும் உள்ளங்கள் ஒருபோதுமே ஒன்றாவதில்லை.
மானைடர் காதலையும், மலர்களின் வாசத்தையும் தாண்டி ஒரு சரித்திரம் படைக்கும் காதலைக் கையோடு கூட்டிவருகிறார் கவியரசர்.
சாந்திநிலையம் என்னும் படத்தில் குழந்தைகளை வைத்து மறைந்த நடிகர் திரு.நாகேஷ் அவர்கள் பாசுவதாக அமைந்த ஒரு பாடல்.
ஒவ்வொருவருடைய வாழ்க்கையும் அவரவர் கைகளில் தான் தங்கியுள்ளது என்பதனை இத்தனை எளிதாகச் சொல்லக்கூடியவர் நமது கவியரசர் தான்.
படம்: சாந்தி நிலையம் – வருடம் 1969
இசை: M.S. விஸ்வநாதன்
நடிப்பு: ஜெமினி கணேசன், காஞ்சனா,மஞ்சுளா, நாகேஷ்
பாடல் வரிகள: கவியரசர் கண்ணதாசன்
“பூமியில் இருப்பதும்
வானத்தில் பறப்பதும்
அவரவர் எண்ணங்களே
இருக்குமிடம் எதுவோ?
நினைக்குமிடம் பெரிது
போய்வரும் உயரமும்
புதுப்புது உலகமும்
அவரவர் உள்ளங்களே!
நெஞ்சினில் துணிவிருந்தால்
நிலவுக்கும் போய்வரலாம்
உலகம் போகின்ற வேகம்
உருவமும் இனிமேல் மாறும்
நடக்கும் கதைகளைப் பார்த்தால்
நமக்கே சிறகுகள் முளைக்கும்
ரஷ்யர்கள் அனுப்பிய கூடு
ராக்கெட் என்பது பேரு
சிஷ்யர்கள் அனுப்பிய கூடு
தெரியுது வானத்தில் பாரு!
பாடலைக் கேட்டதுமே நாமும் வானத்தில் கைகளை விரித்துக் கொண்டு பறக்கலாம் போல ஒரு புத்துணர்ச்சி பிறக்கிறது.
அப்பப்பா ! இந்தக் காதல் வந்து படுத்தும் பாடு இருக்கிறதே ! அதை எப்படி வீளக்க முடியும்?
மனம் என்பது மேடையாம், அந்த மேடையிலே ஒரு ஆட்டம் நடக்கிறதாம் போங்கள். அது யாரென்று நினைக்கிறீர்கள் அவனுடைய/அவளுடைய மனதைக் கொள்ளை கொண்டவருக்குரிய முகமாம்.
மற்றொரு வகையில் சொன்னால் காதல் வயப்பட்டவர் தூங்க முடியாமல் தவிப்பார் என்கிறார் கவியரசர்.
அந்தப் பெண் என்ன செய்கிறாளாம்….. தமிழழென்பது காவ்இரி போல வற்றாது ஓடிக்கொண்டிருக்கும் நதிதானே ! இவள் தமிழ்மகள் எப்படியான தமிழ் மகள்?காவிரி போன்ற வற்றாத தமிழ் நதிய்இல் நீராடி வந்த தமிழ்மகள்.
அது மட்டுமா?
இயற்கை வனத்தில் காதல் மலர் பறித்து தனது விழிகளில் சூடிவிட்டாளாமே போங்கள் …..
ஒருபூச்சரம் எப்படி வளைந்து, வளைந்து ஆடுமோ ? அப்படி அவளது அழகிய உடல் ஆடுகிறதாம், அந்த உடலுடன் ஓடி ஆடி விளையாடுவது அவனுக்கு பொன்னுடன் விளையாடுவது போல பெருமையளிக்கிறதாம்….
என்ன கற்பனை கவியரசருக்கு ?
அவள் அவனோடு வந்து பேசுவது சிலை உயிர் பெற்று வந்து பேசுவது போலல்லவா இருக்கிறது.
விழி, விழியுடன் கலப்பதும்… இதழ் இதழுடன் கலப்பதும்…. இஅவர்களின் காதல் களியாட்டத்தைக் கண்டதும் இரவு ராணியான நிலவின் உறவாடலில் கூட சுவை சேர்ந்து விடுகிறதாம்…..
சரி இனி பாடலைப் பார்ப்போமா ?
படம் : வல்லவனுக்கு வல்லவன் – 1965
குரல் : டி.எம்.எஸ்., சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : வேதா
நடிகர்கள் : ஜெய்சங்கர், அசோகன், மணிமாலா
“மனம் என்னும் மேடையின் மேலே
முகம் ஒன்று ஆடுது குயில் ஒன்று பாடுது
யார் வந்தது.. அங்கே யார் வந்தது..
மனம் என்னும் மேடையின் மேலே
முகம் ஒன்று ஆடுது இசை ஒன்று பாடுது
யார் வந்தது.. அங்கே யார் வந்தது..
(மனம்)
தமிழ்க் காவிரி நீராடி இருவிழியில்
காதல் மலர் சூடி
வண்ணப் பூச்சரம் போலாடி உடலழகில்
பொன்னுடன் விளையாடி
சிலை ஒன்று நேரில் வந்து உயிர் கொண்டு பேசுது
கலைத் தென்றல் வீசுது
யார் வந்தது.. அங்கே யார் வந்தது..
(மனம்)
விழி மேலொரு விழி சேர்த்து பருவக்கலை
மேனியில் கை சேர்த்து
கனி இதழுடன் இதழ் சேர்த்து வெண்ணிலவின்
இரவுக்கு சுவை சேர்த்து
சிலை ஒன்று தேரில் வந்து எனைக் கொண்டு சென்றது
துணை தென்றல் ஆனது
யார் வந்தது.. அங்கே யார் வந்தது..
(மனம்) “
அன்பு நெஞ்சங்களே கவியர்சரின் நினைவு தினத்தில் அவரின் நினைவுகளோடு உங்களுடன் உறவாட நினைத்ததின் பலனே இப்படைப்பு.
அன்புடன்
சக்தி சக்திதாசன்
கிரேசி மோகன்
மோகரேகை ராதைக்கு, யோகரேகை பார்த்தனுக்கு,
சோகரேகை நீக்கும் சுதாமர்க்கு, -ஏகரேகை,
பூமத்ய பாரத்தைப் போக்க வ்ரஜம்புகுந்த,
சாமர்த் தியமான சேய்”….கிரேசி மோகன்….
வ்ரஜம்-வ்ரஜகுலம் பிறந்த கண்ணன்….
–சு.கோதண்டராமன்.

பிற்காலத்துக் கதைகளிலே அதிதியின் உண்மைப் பொருள் மறைந்து விட்டது. அநந்த சக்தியை ஒரு ரிஷி பத்தினியாக்கிவிட்டார்கள். அதிதி என்பது எல்லையில்லாத பரமாத்ம சக்தி. – பாரதி
அதிதி:
அதிதி என்ற சொல் எல்லையற்றது என்று பொருள்படும். இது பிரபஞ்சத்தின் எல்லையற்ற தன்மையைக் குறிப்பது. பரம்பொருளின் சிறப்புகளுள் இதுவும் ஒன்று. வேதத்தில் இது பல வகையாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சில இடங்களில் தேவர்களின் தாயாகவும் சில இடங்களில் பூமியைக் குறிப்பதாகவும் அதிதி என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
பூஷன்:
இவர் உண்மையில் தேவர் தானா அல்லது தேவப் பதவியை அடையும் நிலையில் உள்ள மனிதரா என்பது தெரியவில்லை. ஏனெனில் இவர் மனிதர்களை விட மேலானவராகவும், புகழில் தேவர்களுக்குச் சமமானவராகவும் கூறப்படுகிறார்.(6.48.19) மற்ற தேவர்களைப் போல இவரும் ருதத்தை அனுசரிக்கிறார், ருதத்தின் ரதீ (தேரோட்டி) எனப்படுகிறார். ஸ்வதாவை அனுசரிக்கும் ஸ்வதாவா என்றும் போற்றப்படுகிறார். உணவு, பசுக்கள், குதிரைகள், ரயி என்னும் செல்வம் ஆகியன தருகிறார்.
சூரியனின் தூதராக வேலை செய்பவர் பூஷன். இவர் சூரியனின் ஒரு அம்சம் என்கின்றன புராணங்கள்.
செல்வத்தைக் காக்கிறார். களவு போன செல்வத்தை மீட்டுத் தருகிறார். கவிதையைத் தூண்டுகிறார். பாதைகளைக் காப்பவர். பணி எனப்படும் கஞ்சர்களின் இதயத்தில் நுழைந்து அதை மென்மையாக்கி அவர்களைக் கொடையாளியாக மாற்றுகிறார். இவர் சோதிடம் சொல்பவர்களுக்குப் பிரியமான தெய்வம்.
இவரது வாகனம் ஆடு. இவருக்குப் பிடித்த உணவு யவை (பார்லி)யும் நெய்யும் சேர்ந்த கரம்பம்.
விண்ணும் மண்ணும்:
விண் ஒளியுடையது என்பதால் அதை த்யௌஸ் என்றும் அங்கு உலவும் ஒளிமயமான பொருள்களைத் தேவர்கள் (ஒளியுடையவர்கள்) என்றும் அழைத்தனர். விண்ணை அடைவதுதான், தானும் ஒரு தேவனாக ஆவதுதான் வாழ்வின் லட்சியம் என ரிஷிகள் நினைத்தனர்.
மண் மனிதரையும் பிற உயிர்களையும் தாங்குவது. உயிர் வாழத் தேவையான உணவு மண்ணிலிருந்து தான் கிடைக்கிறது. இது மிக நீண்டது என்பதால் உர்வீ என்றும், மிக அகன்றது என்பதால் ப்ருத்வீ என்றும் அழைக்கப்பட்டது.
மழை பொழிந்து பயிர்கள் விளையக் காரணமாக இருப்பதால் விண்ணைத் தந்தை என்றும் உயிரினங்களை வளர்க்கும் பயிரினங்களை விளைவிப்பதால் மண்ணைத் தாய் என்றும் அழைத்தனர். விண்ணையும் மண்ணையும் சேர்த்து த்யாவா ப்ருத்வீ என்றும் ரோதஸீ என்ற பெயராலும் அழைத்து வேத ரிஷிகள் பல மந்திரங்களைப் பாடியுள்ளனர்.
ரோதஸீ உணவு தருகிறார்கள். தேவர்களைப் பெற்றுத் தந்தவர்கள் இவர்களே. அதனால் இவர்கள் தேவபுத்ரே எனப்படுகின்றனர். புகழ் உடையவர்கள். என்றும் குறைவு இல்லாதவர்கள் (அம்ருத்ரே), உயிர்களின் புகலிடம் (புவனானாம் அபிச்ரிய: ), நீர்வளம் உடையவர்கள் (க்ருதவதீ, பயஸ்வதீ, பூரிதாரா).
இவர்கள் வருணனின் தர்மத்தால் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர். மழை தருவது, ஒளி தருவது என விண்ணின் தர்மம் வேறு. மழையைப் பெற்று பயிர்களை விளைவிப்பது, உயிர்களைத் தாங்குவது என மண்ணின் தர்மம் வேறு. என்றாலும் இருவரும் இணைந்து செயல்படுவது ரிஷிகளுக்கு வியப்பை மூட்டும் ஒரு நிகழ்வு.
தர்மத்தை நிலைநாட்டும் தேவர்களைப் பிறப்பித்த இவர்களும் தர்மத்தை (ருதத்தை) அனுசரிப்பவர்கள் என்பதால் ருதத்தின் தாய்கள், ருதாவரீ, ருதஜாத ஸத்யே எனப்படுகின்றனர். உங்களுடைய ருதம் என்றும் ஸத்யமாக இருக்கட்டும் என்று வேண்டுகிறது ரிக் (3.54.3.) இருவருமே இனிமை நிரம்பியவர்கள் என்பதால் ரிஷிகள் அவர்களை மதுச்சுதே, மதுதுகே, மதுவ்ரதே எனப் புகழ்கின்றனர்.
இவர்களை வேண்டினால் என்ன கிடைக்கும்? எல்லாத் தேவர்களிடமும் எவை வேண்டப்படுகின்றனவோ அந்த உணவு, புகழ், ஆயுள், மக்கட்பேறு, ரயி எனப்படும் ஆனந்தச் செல்வம் ஆகியவை கிடைக்கும்.
நீர்:
தெய்வம் நல்லதே செய்யும் என்பதும், நல்லது செய்யும் எல்லாமே தெய்வம் தான் என்பதும் வேதக் கொள்கை. அந்த அடிப்படையில் நமக்கு நன்மை செய்யும் நீரைத் தெய்வமாக்கி நன்றியுடன் போற்றுகிறார்கள் ரிஷிகள்.
நீர் என்பதற்கான வேதச் சொல் ஆப:. இது எப்பொழுதும் பன்மையிலேயே பேசப்படும். நீர்த்துளிகள் என்று கொள்ளலாம். நீர் மனிதனை போர் நடக்கும்போதும் சமாதான காலத்திலும் காக்கிறது. மருத்துவர்களுக்குள்ளே சிறந்த இது தாய் போன்றது. நிற்கின்ற தாவரங்களுக்கும் நடக்கின்ற பிராணிகளுக்கும் இது தாயும் தந்தையுமாக உள்ளது. இது இந்திரனின் விரதங்களை மீறுவதில்லை. தன் போக்கில் ஓடுவதில் மகிழ்ச்சி கொள்கிறது. சூரியன் இதை ஆவியாக்குகிறார். இந்திரன் இது ஓடுவதற்குப் பாதை அமைத்துக் கொடுக்கிறார்.
தண்ணீரின் வகைகளை வேதம் குறிப்பிடுகிறது. 1 விண்ணிலிருந்து பொழிவது, 2 நதிகளில் ஓடுவது, 3 வெட்டப்பட்ட கால்வாய்கள் மூலம் செல்வது, 4 பூமியிலிருந்து தானே பீறிட்டுக் கிளம்புவது என நான்கு வகை உண்டு.
நீரின் தலைவர் வருணன். வடவாக்னி என்ற வடிவத்தில் அக்னி நீருக்குள் நுழைந்து வாழ்கிறார்.
நீரைக் குறித்த ஒரு தோத்திரப் பகுதியின் மொழிபெயர்ப்பு இது (1.23.16 – 23). இதில் நீரின் நலம் செய்யும் தன்மையைத் தியானிக்கும் நிலையில் ரிஷி பரவச நிலை அடைந்து நீரைத் தெய்வமாகக் கருதிப் போற்றுவதை அறியலாம்.
யக்ஞம் செய்வோரின் பந்துக்களும் எங்களுடைய தாய்மார்களுமாகிய நீர் பசுவின் பாலை இனிமையாக்கிக் கொண்டு தன் வழியே செல்கிறது.
சூரியன் அருகில் உள்ள நீரும் சூரியனோடு சேர்ந்துள்ள நீரும் எங்கள் வேள்விக்கு நலம் சேர்ப்பதாக.
எங்கள் பசுக்கள் பருகும் நீரைப் போற்றுகிறேன். நீருக்கு ஹவிஸ் அளிக்கப்பட வேண்டும்.
நீரில் அமிர்தம் உள்ளது. நீரில் மருந்துகள் உள்ளன. எனவே நீரைப் புகழ்வதற்காக தேவர்கள் விரையட்டும்.
நீரில் எல்லா மருந்துகளும் உள்ளன. உலகிற்கு நலம் செய்யும் அக்னியும் உள்ளது.
நீரே, நான் நீண்ட காலம் சூரியனைக் காணுமாறு என் உடலில் எல்லா மருந்துகளையும் நிரப்புக.
நீரே, என்னிடத்தில் என்ன குற்றம் இருந்தாலும், நான் என்ன துரோகம் செய்திருந்தாலும், என்ன பொய் சொல்லி இருந்தாலும் அவற்றை நீக்குக.
நான் இன்று நீரில் நுழைந்துள்ளேன். நாங்கள் அதன் ரஸத்தோடு கலந்துள்ளோம். நீரிலுள்ள அக்னியே வா, என்னைத் திடப்படுத்து.
படம் உதவிக்கு நன்றி: http://www.cambodia-picturetour.com/banteay-srei-the-citadel-of-the-beauty/
— சக்தி சக்திதாசன்.
அன்பினியவர்களே !
புதியதோர் மடல், புதியதோர் வாரம், புதியதோர் கருத்து.
மேலைநாடுகள் மிகவும் செழிப்பானவை. இங்கு வாழும் மக்களின் வாழ்க்கை வசதிகள் நிறைந்தது. அடிப்படை வாழ்க்கைத் தேவைகள் அனைத்தும் அனைவருக்கும் கிடைக்கக்கூடிய வசதிகள் இங்கே காணப்படுகின்றன. இதுவே பொதுவாக மேலைநாடுகளைப்ப் பற்றி கீழைத்தேச நாடுகளின் அபிப்பிராயமாகும்.
இது ஒருவகையில் சரியான அபிப்பிராயமாக இருந்தாலும் முற்றிலும் உண்மையான கருத்து என்று எடுத்துக் கொள்ள முடியாது.
சாதரணக் குடிமக்களுக்கிடையில் எந்த வித பாரபட்சமுமின்றிக் கிடைக்கின்றன என்றும் கூறி விட முடியாது. வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்கான வசதிகள் இருந்தாலும் அனைத்தும் அனைவர்க்கும் பொதுவாகக் கிடைக்கின்றன என்றும் கூறி விட முடியாது.
நான் முதன் முதலில் இங்கிலாந்தில் கால் எடுத்து வைத்த போது கொண்ட அபிப்பிராயத்திற்கும், நாற்பது வருடங்களின் பின் கொண்டிருக்கும் அபிப்பிராயத்திற்கும் பல இடைவெளி உண்டு.
அதற்கான காரணங்கள் பல. அப்போதைய எனது தேவைகளும் இப்போதைய எனது தேவைகளும் அதிக அளவில் வித்தியாசப்படுவது ஒரு காரணம்.
அன்று நான் பிறந்து வளர்ந்த எனது தாய்மண்ணின் வளர்ச்சிக்கும் இன்றைய வளர்ச்சிக்கும் இடையில் காணப்படும் வித்தியாசமும் மற்றொரு காரணம்.
மாணவனாக அன்று எனக்கிருந்த உடனடித் தேவை எனது எதிர்கால வாழ்வின் உத்தரவாதத்திற்கான கல்வித்தகமை மட்டுமே. கல்வித்தகமையை அடைந்ததும் நான் வாழ்ப்போவது இங்கிலாந்திலா? அன்றி எனது தாய்மண்ணிலா என்று முடிவு எடுத்திராத ஒரு நிலையில் இங்கிலாந்து வாழ் மக்களின் அடிப்படைத் தேவைகளோடு எனது அடிப்படைத் தேவைகள் ஒன்றிப்போகாத ஒரு நிலை.
தேசியச் சுகாதாரச் சேவை பற்றியப் பூரண புரிந்துணர்வோ அன்றி வேலை வாய்ப்புகள் பற்றிய அறிதலோ எனக்குத் தேவைப்படாத ஒரு காலமாக அது இருந்தது.
ஆனால் இன்றோ நிலைமை முற்றிலும் மாறுபட்டது. கல்வியை முடித்து ஏறத்தாழ 35 வருடங்களுக்கு மேலாக இங்கிலாந்தில் பணிபுரிந்து ஒரு இங்கிலாந்து குடியுரிமை பெற்றவனாக வாழும் போது வாழ்வின் மற்றைய அனைத்துத் தேவைகளும் அத்தியாவசியமாகிறது.
என்னடா இந்த மடல் எங்கே எம்மை இழுத்துச் செல்கிறது எனும் எண்ணம் உங்களுக்கு எழுவது இயற்கை.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பி.பி.ஸி தொலைக்காட்ச்சிச் சேவையில் ஒரு நிகழ்ச்சியை காணும் சந்தர்ப்பம் ஏற்பட்டபோது அதில் கண்ணுற்ற ஒரு செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஆவல் ஏற்பட்டது.
இதற்கான முக்கியக் காரணம் எமது பின்புல நாடுகளில் மட்டும் தான் வாழ்க்கை வசதிக்குறைவுகள் உண்டு எனும் கருத்துக்குப் புறம்பாக இங்கிலாந்து போன்ற முன்னேற்றமடைந்த நாடுகள் என்று கருதப்படும் நாடுகளில் கூட அவைகளின் அளவுகளிலும் மக்களின் வாழ்க்கை வசதிகளில் வேறுபாடுகள் காணப்படுகின்றன எனும் செய்தியைப் பகிர்ந்து கொள்வதே !
உங்களில் பலர் “அல்சைமர்ஸ்” (Alzheimer’s) எனும் ஒரு நோயைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
இது ஒருவகையில் ஞாபகமறதியோடு சம்மந்தப்பட்ட ஒரு வியாதியாகும். ஆனால் சரியான சமயத்தில் கண்டுபிடிக்கப்பட்டு உரியவகையில் பாதுகாக்கப்படாவிட்டால் மிகவும் மோசமான நிலையை நோயாளிகள் விரைவில் அடைந்து விடுவார்கள்.
இதனைப் பூரணமாக குணமாக்கும் மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை, ஆனால் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகள் இது தீவிரமாகும் துரிதத்தை மட்டுப்படுத்தவே உபயோகிக்கப்படுகின்றன.
இங்கிலாந்து அரசினால் எடுக்கப்பட்ட ஒரு கணிப்பீட்டின் படி 2015ம் ஆண்டில் இங்கிலாந்தில் இவ்வியாதியால் பாதிக்கப்பட்டவர்களின் தொகை சுமார் 520,000 ஆக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இத்தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இவ்வியாதியில் பீடிக்கப்பட்ட இருவரை உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டார்கள். ஒருவர் இங்கிலாந்தின் ஒரு பகுதியிலும், மற்றொருவர் இங்கிலாந்தின் மற்றொரு பகுதியிலும் வாழ்கிறார்கள். ஆனால் ஒரு பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு இந்நோய் இருப்பது விரைவில் கண்டு பிடிக்கப்பட்டு அதற்கான சிகிச்சையும் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டது.
ஆனால் மற்றவருக்கோ இவ்வியாதி இருப்பதைக் கண்டுப்பிடிப்பதற்கே மூன்று அண்டுகள் பிடித்தது. அதன் காரணமாக அவரது நோய் மேலும் மூன்று ஆண்டுகளுக்குண்டான தீவிரத்தை எட்டி விட்டது.
சரி இங்கே எழுப்பப்பட்ட முக்கியமான கேள்வி என்ன ?
ஒரே நாடு, ஒரே அரசாங்கத்தின் கீழே இயங்கும் நாடு, வெவ்வேறு பகுதிகளில் வசிப்பவர்களின் தேசிய சுகாதரச் சேவையின் நிர்வாகங்களின் கீழ் ஒரே வியாதிக்கான நிவாரணங்கள் மட்டும் ஏன் வித்தியாசப்படுகின்றன ?
அப்படிப்பார்க்கும் போது, அவர்களது அடிப்படை வாழ்க்கைத் தேவைகளின் தாக்கம் வித்தியாசப்படுவது இத்தகைய முன்னேற்றமடைந்த , ஜனநாயகத்தின் உச்சம் என்று கருதப்படும் பாராளுமன்ற முறையக் கொண்ட நாட்டில் நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கக் கூட முடிகிறதா ?
ஒரு மனிதன் ஒரு நாட்டின் எந்தப் பகுதியில் வாழ்கிறான் என்பது அவனது வாழ்க்கைக் காலத்தை நிர்ணயிக்கிறதா ? எனும் கேள்வி எழுகிறது.
இப்படியான நிகழ்வுகள் எமது பின்புல நாடுகளுக்கு மட்டுமல்ல, புலம்பெயர்ந்து வாழும் வசதிகள் நிறைந்த நாடு என்று கருதப்படும் நாடுகளிலும் நடைபெறுகிறது என்பதுவே யதார்த்தம்.
ஏன் இதைப்பற்றி அதிகம் அலட்டிக் கொள்கிறேன் ? ஓ …நானும் ஐம்பதுகளின் முடிவில் நிற்கிறேனோ ?
மீண்டும் அடுத்த மடலில் சந்திக்கும் வரை…
அன்புடன்
சக்தி சக்திதாசன்
http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan
கே.ரவி
புயல் வந்ததா, முயல் வந்ததா?
ஒன்றும் வரவில்லை தம்பி. காத்துக் கொண்டிருக்கிறேன். காலம் மட்டும் நிற்காமல் ஓடிக் கொண்டே இருக்கிறது. நான் காத்துக் கொண்டுதான் இருக்கிறேன். எதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்? தெரியாது. ஆனால், காத்துக் கொண்டே இருக்கிறேன்.
சுருதி நாயகன் வரும் வரும் என்பதோர் துணிவால்
கருதி மாதிரம் அனைத்தையும் அளக்கின்ற கண்ணாள்
என்று கம்பன் சொன்னது போல், நானும் ஓர் அசோக வனத்தில்….!
என் நூல்களைப் பொதுவாக நான் விரைவில் எழுதி முடித்து விடுவேன். “நமக்குத் தொழில் கவிதை” என்ற நூலை ஒரு மாதத்துக்குள் எழுதி முடித்ததாக ஞாபகம். ஆங்கிலத்தில் எழுதிய சட்ட நூல்கள் இரண்டும் அப்படித்தான். ஆனால் “இருபதாம் நூற்றாண்டு இயல்பியல் வரலாறு” என்ற நூல் எழுதி முடிக்கச் சில ஆண்டுகள் ஆயின. காரணம், பாடமாக நான் படிக்காத அறிவியல் பற்றிய நூல் அது. பல ஆங்கில நூல்கள் படித்துப் பயின்று நான் எழுத வேண்டியிருந்தது. அதே போல், “வெர்ஸஸ் ஆஃப் விஸ்டம்” (Verses of Wisdom) என்ற ஆங்கில நூல் எழுதவும் பல ஆண்டுகள் ஆயின. அது நான் என் போக்கில் சிந்தித்து எழுதிய நூல் இல்லை. அதன் ஒவ்வொரு பகுதியையும் எழுதும் போதும், சிந்தனை முயற்சி அதிகம் குறுக்கிடாமல், உள்ளூக்கம் என்னைத் தூண்டக் காத்திருந்து, காத்திருந்து எழுதிய நூல் அது. அப்படித்தான் “ப்ரும்ம சூத்ரா த காஸ்மிக் கோட்” (Brahma Sutra, the Cosmic Code) என்ற ஆங்கில நூலைக் கடந்த பத்து ஆண்டுகளாக மேற்சொன்னவாறு காத்திருந்து, காத்திருந்து எழுதி வருகிறேன். அதை எழுதி முடிக்கும் பணியை இறைவன் எனக்குத் தந்திருந்தால், என் உடலும், மனமும் தளர்ந்து போவதற்குள், என் உலக வாழ்க்கை ஒரு முடிவுக்கு வருவதற்குள், அந்த நூலை எழுதி முடித்து விடுவேன் என்று நம்புகிறேன்.
நான் எதற்காக எழுதுகிறேன்? ஒரே பதில். எதை என்னால் எழுதாமல் இருக்க முடியவில்லையோ அதை எழுதுகிறேன். அதை எழுதாமல் என்னால் இருக்க முடியவில்லை என்பதுதான் நான் அதை எழுத ஒரே காரணம்; நானறிந்த ஒரே காரணம்.
‘ப்ரும்ம சூத்ரம்’ என்ற மிகப் பழைய சமஸ்க்ருத நூலுக்கு ஆங்கிலத்தில் ஒரு விளக்கவுரை எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்கேன் ஏற்பட்டது? தெரியாது என்பதுதான் சரியான விடை.
நூல்கள் எழுதி அதன் மூலம் பேரும், புகழும் பெற்று வாழ வேண்டும் என்பது என் நோக்கம் இல்லை. என்னுடைய எந்த நூலையும் ஓரிருவருக்கு மேல் எவரும் முழுமையாகப் படித்திருக்க வாய்ப்பில்லை என்பது என் ஆழ்ந்த நம்பிக்கை. இருந்தும், நான் தொடர்ந்து எழுதுகிறேன். என் ஆயுட்காலத்துக்குள் இந்த நூல்களை நிறைய பேர் படிக்க வேண்டும் என்ற ஆசையோ, அவசரமோ எனக்கில்லை. இந்த நூல்களை ஈன்றெடுத்த காலமே அவை எங்கே, எப்போது போயடைய வெண்டும் என்பதை நிர்ணயம் செய்யும்.
ஆங்கிலத்தில் நான் எழுதிய ஒரு சட்ட நூலின் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு மேடையில் பேசும் போது என் இனிய நண்பர், திரு.ப.சிதம்பரம் ஒரு கேள்வி கேட்டார். அவர் ஆங்கிலத்தில் கேட்ட அந்தக் கேள்வியை அப்படியே ஆங்கிலத்தில் இங்கே தருகிறேன்: Ravi, how do you find time to write such books ? என் ஏற்புரையில், ஆங்கிலத்தில் நான் சொன்ன பதில்:
I do not find time, but, Time finds me.
தமிழில், கிட்டத்தட்ட, இப்படிச் சொல்லிப் பார்க்கலாமோ?
காலத்தை நான் தேடிப் போவதில்லை. காலமே என்னைத் தேடி வந்து பற்றிக் கொள்கிறது.
எத்தனையோ அடியார்கள் இறைவனைத் தேடி அலைபாய்ந்திருக்கும் வரலாறுகளுக்கு இடையில் ஃபிரான்ஸிஸ் தாம்ஸன் என்ற ஆங்கிலக் கவிஞன் மட்டும் வேறுவிதமாகச் சொல்கிறான். அவனைத் தேடிவந்து துரத்துகிறதாம், சொர்க்கத்தின் வேட்டை நாய். அதிலிருந்து தப்பித்துக் கொள்ள அவன் அலைபாய்கிறான். எங்கெங்கோ ஓடுகிறான். நட்சத்திர மண்டலங்களுக்கெல்லாம் சென்று புகலிடம் கேட்கிறான். எல்லாமே அவனை ஒளித்து வைத்துக் கொள்ள முன்வராத நிலையில், “ஐயோ, நான் தோற்றேன்” என்று அவன் வீழ்கிறான்! அவனைத் துரத்தி வந்த சொர்க்கத்தின் வேட்டை நாயான இறைவனே தன் உண்மையான புகலிடம் என்பதைக் கடைசியில் உணர்கிறான். “The Hound of Heaven” என்ற அந்த அருமையான ஆங்கிலக் கவிதை என்னை மிகவும் தாக்கிய படைப்புகளில் ஒன்று. அதன் தொடக்க வரிகளே அந்தக் கவிதையின் விறுவிறுப்புக்கும், ப்ரும்மாண்டமான அரங்க அமைப்புக்கும் கட்டியம் கூறுகின்றன:
I fled Him, down the nights and down the days;
I fled Him, down the arches of the years;
I fled Him, down the labyrinthine ways
Of my own mind; and in the midst of tears
I hid from Him, and under running laughter.
Up vistaed hopes I sped;
And shot, precipitated,
Adown Titanic glooms of chasmed fears,
From those strong Feet that followed, followed after.
But with unhurrying chase,
And unperturbèd pace,
Deliberate speed, majestic instancy,
They beat—and a Voice beat
More instant than the Feet—
‘All things betray thee, who betrayest Me’
இரவு பகலாக அவனிடமிருந்து தப்பிக்க நான் ஓடிக்கொண்டிருக்கிறேன். காலச் சந்திகளின் ஊடே, என் மனத்தின் நெறியற்ற குறுக்குப் பாதைகளின் ஊடே …. கண்ணீர்த் துளிகளுக்கிடையில் ஒளிந்து கொண்டேன்; ஏதோ ஒரு நம்பிக்கைத் தோற்றம் காட்டிச் சலசலக்கும் சிரிப்பலைகளினூடே விரைந்தேன். எதிர்பாராமல், திடீரென்று அச்சம் என்ற அதல பாதாளத்தில் வீழ்ந்தேன். ஆனால், நிதானமான விரட்டலில், நிலைகுலையாத கதியில், கணிக்கப்பட்ட விரைவோடு, கம்பீரமான அவசரத்தோடு என்னைத் துரத்தித் துரத்தி வரும் அந்த வலிமையான பாதங்கள்; அவற்றைக் காட்டிலும் ஓர் அவசர அருகாமையில் ஒலிக்கிறது ஒரு குரல்: ‘என்னை விட்டு ஓடும் உன்னை எல்லாமே கைவிட்டு விடும்.’
அடாடா! மலைக்க வைக்கும் சொல்லோவியம்!
அந்தக் கவிஞனைத் துரத்திய சொர்கத்தின் வேட்டை நாய் போல், காலம் என்னைத் துரத்தித் துரத்திப் பிடித்து எழுத வைக்கிறது என்று நான் சொன்னால் அது கொஞ்சம் அதிகப்பிரசங்கமாகத் தோன்றலாம்; ஆனால், வேறு விதமாக அதை என்னால் எண்ணிப் பார்க்க முடியவில்லை.
எழுத்தாளன் தான் வாழும் காலத்திலேயே புகழ் பெற வேண்டும் என்று விரும்புவதில் தவறெதுவும் இல்லை. ஆனால், புகழ் என்று நான் கருதுவதே வேறு.
பிரபலமாக இருப்பது வேறு. புகழ் என்பது வேறு.
இருவே(று) உலகத்(து) இயற்கை திருவேறு
தெள்ளியர் ஆதலும் வேறு
ஒருவருடைய பிராபல்யம் அவர் முகம் ஊடகங்களில், திரையில் தினம் வந்து கொண்டிருக்கும் வரைதான். 1940-களில், எம்.கே.தியாகராஜ பாகவதர் புகைவண்டியில் பயணம் செய்தால், ஒவ்வொரு நிறுத்தத்திலும் பாகவதரைப் பார்க்க நூற்றுக் கணக்கான ரசிகர்கள் முண்டியடித்துக் கொண்டு அலைமோதுவார்கள்; அந்தப் புகைவண்டி, ஏழெட்டு மணிநேரம் தாமதமாகத்தான் இலக்கைச் சென்றடையும்; ஆனால், அவரே திரையில் தோன்றாமல் ஏழெட்டு ஆண்டுகள் சிறை சென்று வந்த பிறகு, அவர் ரிக்க்ஷாவில் சென்றால் கூடப் பார்க்க ஆளற்ற நிலையும் உருவானது. திரையுலகின் முடிசூடா மன்னனாக இருந்தே நாட்டின் மன்னனாக முடிசூட்டிக் கொண்ட நாடோடி மன்னன் எம்.ஜி.ஆரை இப்பொழுது ஏழெட்டு வயதான தமிழ்ச் சிறுவர்களுக்குத் தெரியவில்லை.
ஒரு வேடிக்கையான சம்பவத்தை இங்கே குறிப்பிட வேண்டும். 1972-ஆம் ஆண்டு நடந்த சம்பவம் அது. அப்போது, நான் ‘மாணவரிஸம்’ என்ற பத்திரிகை நடத்திக் கொண்டிருந்தேன். அந்தப் பத்திரிகைக்குப் பல ஊர்களில் மாணவப் பிரதிநிதிகள் இருந்தார்கள். ‘இதெல்லாம் ஒண்ணும் கொறச்சலில்லை’ என்று யாரோ முணுமுணுப்பது கேட்கிறதே! சரி, சம்பவத்துக்கு வருகிறேன். டில்லி நகரத்துக்கான பிரதிநிதியாக இருந்த ராஜா என்ற நண்பர் அப்போது சென்னைக்கு வந்திருந்தார். அவர் சென்னையில் இருப்பதாகவும், என்னைப் பார்க்க விரும்புவதாகவும் தொலைபேசியில் சொன்ன போது, நான் ஏ.வி.எம். படப்பிடிப்பு நிலையத்துக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தேன். மாணவரிஸத்துக்குப் பேட்டி எடுக்க வேண்டும் என்ற என் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு, இயக்குநர் ஶ்ரீதர் என்னை அங்கே அழைத்திருந்தார். அப்போது அவர் “ஹீரோ 72” என்ற படம் எடுத்துக் கொண்டிருந்தார். அது சில ஆண்டுகளுக்குப் பிறகு ‘வைர நெஞ்சம்’ என்ற தலைப்போடு வெளியாகியது.
ஶ்ரீதர் சொன்னபடியே நான் அந்தப் படப்பிடிப்பு நிலையத்துக்குச் செல்லத் தயாரான போதுதான் ராஜாவின் அழைப்பு வந்தது. ராஜாவையும் அங்கேயே வரச் சொன்னேன். நான் போய்ச் சேரவும் அங்கே ராஜா எனக்காகக் காத்திருந்தான். அவனுக்குத் தமிழ் கொஞ்சம் தடுமாற்றம்தான். ஆங்கிலம், ஹிந்தி பேசுவான். டில்லியிலேயே பிறந்து, வளர்ந்தவன். அவனும், நானும் ஸ்டூடியோவுக்குள் நுழைந்ததும் அங்கே ஒரு தளத்தின் வெளி வாயிலில் இருவர் அமர்ந்திருந்தனர். ஒருவர் இயக்குநர் ஶ்ரீதர். அவர் அருகில் அறிமுகமே தேவையில்லாத ஒரு பிரபலமான பிரமுகர் அமர்ந்திருந்தார். என்னைச் சுட்டிக் காட்டி, “தயாரிப்பாளர் கல்யாணராமனின் புதல்வர்” என்று என்னை அந்த பிரபலமானவருக்கு ஶ்ரீதர் அறிமுகம் செய்து வைத்தார். ‑அவரும், வணக்கம் சொல்லிவிட்டு என்னைப் பார்த்து, “வாத்யார் செளக்கியமா?” என்று என் தந்தை விஸ்வம் பற்றி விசாரித்தார். நான் அவருக்கு பதில் சொல்லிவிட்டு, அருகில் இருந்த ராஜாவிடம் ஶ்ரீதரைக் காட்டி, “இவர்தான் இயக்குநர் ஶ்ரீதர்” என்றேன். அவன் உடனே அருகில் முழு மேக் அப்பில் அமர்ந்திருந்த பிரபலமானவரைச் சுட்டிக்காட்டி அவர் யார் என்று கேட்டு விட்டான். எனக்கு பகீர் என்றது. இயக்குநர் ஶ்ரீதரோ எழுந்து நின்று கைகொட்டிச் சிரிக்க ஆரம்பித்து விட்டார். தன்னைத் தெரியாத ஒரு தமிழன் இருப்பது அந்தப் பிரபலமானவருக்கே, அதாவது நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கே வியப்பாக இருந்தது. நான் ராஜாவிடம் மெதுவாக “டேய், இவர்தாண்டா சிவாஜி” என்றதும், அவன் இன்னும் சத்தமாக “ஓ, நான் இவர் நடித்து ஒரு படம் ரொம்ப நாட்களுக்கு முன் பார்த்திருக்கிறேனே, பாசமலர் என்று நினைக்கிறேன்” என்றதும் இயக்குநர் ஶ்ரீதர் இன்னும் அடக்க முடியாமல் சிரித்ததை நினைத்துக் கொள்கிறேன். பிரபலத்தின் பலம் அவ்வளவுதான்!
அதே சமயத்தில், நாம் இன்னொன்றைக் கருதிப் பார்க்க வேண்டும். எந்தப் புலவனின் நூலைத் தமிழ்ச்சங்கம் அங்கீகரிக்கத் தயங்கியதோ, அந்தப் புலவனின் நூலை உலகப் பொதுமறை என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் கொண்டாடி வருகிறோம்; எந்தக் கவிஞனின் இறுதி யாத்திரையில் இருபதுக்கும் குறைவானவர்களே கூடச் சென்றனர் என்று நாம் இன்னும் குறைப்பட்டுக் கொண்டிருக்கிறோமோ, அந்தக் கவிஞனின் கவிதைகளைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் லட்சக் கணக்கான மாணவர்கள் ஆண்டுதோறும் பயில்வதுடன், அவனுடைய வரிகளைச் சொல்லாமல் எந்த மேடைப் பேச்சும் நிறைவு பெறுவதில்லை என்ற நிலையும் உருவாகி விட்டது. பூமியைச் சுற்றிக் கதிரவன் வருவதாகச் சொல்லப்பட்ட புவிமையக் கருத்தோட்டத்தை மறுத்துக் கதிர்மையப் படிவத்தை முன்மொழிந்ததற்காக யார் சித்திரவதை செய்யப் பட்டானோ, அவனைத்தான் தற்கால அறிவியலின் தந்தை என்று பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு உலகம் கொண்டாடுகிறது.
பிரபலமாக இருப்பது கொஞ்ச காலத்துக்குத்தான். புகழோ காலம் கடந்தது. இன்னும் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் இசை வாழ்ந்து கொண்டிருக்கும்; விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையும் வாழ்ந்து கொண்டிருக்கும். ரவிவர்மன், சில்பி போன்ற மேதைகளின் ஓவியங்களும், கோபுலுவின் கோட்டோவியங்களூம் எத்தனை ஆண்டுகளானாலும் ரசிக்கப் படும். கல்கி, நா.பா., இந்திரா பார்த்தசாரதி போன்ற வல்லுநர்களின் எழுத்தோவியங்கள் என்றைக்கும் நிலைத்து நிற்கும். இசைக்கவி ரமணன், வ.வே.சு., சு.ரவி ஆகியோர் கவிதைகள் போல் என் கவிதைகளும் காலம் கடந்து நிற்கும். ஒரு நம்பிக்கைதான்!
என் மூலமாக என்னென்ன படைப்புகள் உருவாக வேண்டும் என்பது இறைவன் திட்டமோ அவை உருவாகியே தீரும். காத்திருப்பது மட்டுமே என் பணி. கொக்குத் தவத்தில் காத்திருக்கிறேன். தக்க நேரத்தில் அதன் குத்தொக்கச் செயல்படுவேன்.
போதும் நிறுத்துவே. கொஞ்சம் வுட்டா ஒரேடியா அளந்து கொட்டிடுவீகளே! சிகாமணி அதட்டுகிறான். மனோன்மணி புன்முறுவல் பூக்கிறாள்.
ஏன், நான் காத்திருப்பதில் என்ன தவறு? எத்தனையோ ஆண்டுகளுக்கு முன், மன்னிக்கவும், எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன், ஏன், பல யுகங்களுக்கு முன் நிகழ்ந்து முடிந்த பிறகும், கோடானு கோடி ஒளியாண்டுகள் தொலைவிலுள்ள ஆகாச கூடத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் அனுபவக் களங்கள் தம்முள் பிரவேசிக்க மீண்டும் ஒரு கவிஞன் வரும்வரைக் காத்திருக்க முடியும் என்றால், நான் காத்திருக்கக் கூடாதா? மனோன்மணி முணுமுணுக்கிறாள், 36 ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய ஒரு பாடலை:
வார்த்தைகளால் ஓர் உலகம் படைத்தேன்
வாழ்க்கை என்றேன் அதில் மூழ்கி விட்டேன்
அந்த
உலகத்திலே நான் எனக்கொரு வடிவம்
செய்ய நினைத்தேன் செயலிழந்தேன்
நிலவொளி கொண்டு கதிரவனைத்
தேடுகின்றேன் எங்கும் ஓடுகின்றேன்
வார்த்தைகளால் ஓர் உலகம் படைத்தேன்
நினைவுத் திரையில் நிழல் தெரிந்ததும்
நீரில் வண்ணங்களைக் குழைத்தேன்
தூரிகையால் அதைத் தீண்டிய போது
திரையே நிழலென்று தெரிந்து கொண்டேன்
வானவில் போல நானிங்கே
வளைகின்றேன் பின்பு கலைகின்றேன்
வார்த்தைகளால் ஓர் உலகம் படைத்தேன்
கனவுக் கடலின் நடுவினிலே நான்
காகிதப் படகாய் மிதந்திருந்தேன் – என்
கலங்கரை விளக்கங்கள் மூழ்கியதாலே
காற்றின் கருணையைப் பார்த்திருந்தேன்
கரைவரும் என்று காத்திருந்தேன்
காத்திருந்தே மெல்லக் கரைகின்றேன்
வார்த்தைகளால் ஓர் உலகம் படைத்தேன்
வாழ்க்கை என்றேன் அதில் மூழ்கி விட்டேன்
கூட்டிக் கழித்துப் பார்த்தால் வார்த்தைகள், வெறும் வார்த்தைகள்! இதைத்தானே சொன்னான் விட்ஜென்ஸ்டைன்! ஆனால் சொல் என்பது என்ன, அவ்வளவு எளிதானதா? ஆதியில் சொல் இருந்தது என்றுதானே விவிலியம் தொடங்குகிறது!
தோழமை என்றவர் சொல்லிய சொல் ஒரு சொல் அன்றோ
இதுதானே கம்பராமாயண சாரம்!
சொல் ஒன்று வேண்டும்
இதுதானே பாரதியின் பிரார்த்தனை!
சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை
இதுதானே நம் அருமைக் கவிஞர் கண்ணதாசனின் கணிப்பு.
ம்! என் சொற்களுக்குள் ஏறிக்கொள்!
(தொடரும்)