மெல்லப்போ.. மெல்லப்போ…
கவிஞர் காவிரிமைந்தன்
மெல்லப்போ.. மெல்லப்போ…
‘மெல்லிசை மன்னர்’ என்கிற பட்டம் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கு எப்படிப் பொருந்துகிறது என்பதற்கு இந்த ஒரு பாடல் ஒன்றே போதும் கட்டியங்கூற! பாடலின் இடையே பயன்படுத்தப்பட்டிருக்கும் வயலின் சோலோ.. பிரத்யேகமாக உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் வண்ணம் உச்சிமுகந்து பாராட்டச் சொல்கிறது!
மென்மையான வார்த்தைகளைத் தந்து மெல்லிய பூங்காற்றுபோல இசையம் தொடர மென்மை என்பது என்ன என்பதை இப்பாடலில் கேட்டுத்தெரிந்து கொள்ளலாம். கவிதையில் இன்பம் இருக்கிறது என்கிறார்களே.. அது என்ன.? இப்பாடல் வரிகளைப் பார்த்தாலே சுகம் கிடைக்கிறது! கேட்டாலே பூரணம் பிறக்கிறது!
தங்கத்தை அள்ளித்தர ஒரு மன்னனும் அதை வண்ணமுற ஆக்கித்தர ஒரு பொற்கொல்லனும் அமைந்துவிட்டால் வகைவகையாய் ஆபரணங்கள் வந்து சேராதா? அதுபோல் வார்த்தைகளை வரிவரியாய் வழங்கிட ஓர் வள்ளலும் அவற்றை ரகம்பிரித்து சுகம் சேர்க்கத் தெரிந்த மெல்லிசை மன்னரும் இணையும்போது இதுபோன்ற பாடல்கள் வந்திடுவதில் வியப்பென்ன?
இனிவரும் காலங்களிலும் இதயங்கள் நெருங்கிடும் இனிய காதலர்கள் சுகம்பெற வேண்டுமெனில் சுவைத்துப்பாருங்கள் இப்பாடலை!