கவிஞர் காவிரிமைந்தன்

 

வான் நிலா நிலா அல்ல.. உன் வாலிபம் நிலா..

கவிதாலயா நிறுவனத்தின் சார்பில் கே.பாலச்சந்தர் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் பல. அவற்றுள் பட்டிணப்பிரவேசமும் ஒன்று! கவிதையும் இசையும் கைகுலுக்கும்! தரமான பாடல்கள் விருந்தாய் ரசிகர்களுக்குக் கிடைக்கும்! பாலச்சந்தர் அவர்களே பலமுறை சொன்னதுபோல் பாலச்சந்தரின் படங்கள் ஒருவேளை தோல்வி அடைந்திருக்கலாம். ஆனால், திரைப் பாடல்கள் எப்போதுமே வெற்றியடைந்திருக்கின்றன! அந்த வரிசையில் இதோ பட்டிணப்பிரவேசம்! பாலச்சந்தர் அவர்களுக்காகப் பாடல் எழுதுவதென்பது – தனி அலாதி! கண்ணதாசன் – ஒவ்வொரு முறையும் தேர்வினைச் சந்திப்பது போலிருக்கும் என்பார்! புதுமை, யுக்தி, அர்த்தங்கள்..ஆழங்கள்.. இவை யாவும் முத்திரை பதித்த பாடல்கள் பல நாம் கேட்டிருக்கிறோம். அவை உருவாகிடும் கட்டங்கள் எத்தனை சுவையானவை தெரியுமா?

இயக்குனரும் இசை அமைப்பாளரும் அமர்ந்து பாடலின் பின்னணி பற்றிச் சொல்லி மெட்டமைக்கத் தொடங்குவார்கள். இதோ மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுடன் கே. பாலச்சந்தர். கதையின் சூழல், பாத்திரங்களின் பின்னணி இவை கதையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வலிமையான சாதனம் பாடல் என்கிற அடிப்படையில்.. உருவாக்கம் தொடங்குகிறது. சையின் வலிமை என்னவென்று அந்த இறைவனுக்கும் தெரியும் என்பார்! விஸ்வநாதன் விரல்கள் ஆர்மோனியத்தில் நர்த்தனமாட பிறக்கிறது ஒரு புதிய மெட்டு! அடடா.. அடடா.. என்றே அதை ஆமோதிக்கிறார் இயக்குனர் பாலச்சந்தர். இதற்கு அப்படியே வார்த்தைகளை இன்று கவிஞரிடம் பெற்றுவிட வேண்டும் என்று முடிவு செய்கின்றனர். அதே நேரத்தில் கவிஞரும் வந்து சேர்கிறார்! தானமைத்த மெட்டை எம்.எஸ்.வி. (M – Stands for MUSIC, S – Stands for Sound and V – Stands for Voice) பாடிக்காட்டுகிறார்!

நா..ந..ந..ந..ந..நன்னா.. நா..நா..நா..நா..
நா..ந..ந..ந..ந..ந… நன்னா நன்னா..
இப்படிப் போகிறது மெட்டு! கவிஞர் கேட்டுக்கொள்கிறார். என்னடா நீ பாட்டுக்கு நா.. நா.. என்று இழுத்துக் கொண்டே போறே.. என்ன அர்த்தம்? சரியா சந்தம் கொடு என்கிறார். இயக்குனரும் இசையமைப்பாளரும் தங்கள் நிலையில் இருந்து மாறாமல்.. பாட்டுக்கிடைக்கவில்லையே என்கிற அவஸ்தையில்.. கவிஞரை சீண்டிவிட்டாவது.. பாட்டு எழுதி வாங்கிவிட வேண்டுமென .. என்ன கவிஞரே..இந்த மெட்டுக்கெல்லாம் பாட்டெழுதிடலன்னா.. நீயெல்லாம் ஒரு கவிஞரா? எனத் தூண்டி விடுகிறார் மெல்லிசை மன்னர்.

கவிஞர் சந்தத்தை மாற்றிக் கேட்டபடி.. ‘நா’ என்பதற்குப் பதிலாக..
‘ல’ என மாற்றிப் பாடிக் காட்டுகிறார். அவ்வளவுதான்..
வான் நிலா.. நிலா.. அல்ல.. உன் வாலிபம் நிலா..
பாடல் முழுவதும் உருப்பெறுகிறது .. கங்கை வெள்ளம் போல..

கட்டிலா .. தொட்டிலா.. மொட்டிலா..
எண்ணிலா ஆசைகள் கொண்டதே அதைச் சொல்வாய் வெண்ணிலா!
பம்மலில் நடைபெற்ற கண்ணதாசன் தமிழ்ச்சங்கத்தின் இரண்டாம் ஆண்டுவிழாவில் 11.07.1993 அன்று முதல் முறையாக ‘கண்ணதாசன் விருது’ பெற்ற மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்கள் வழங்கிய ஏற்புரை.. முக்கனி விருந்தைப்போல் இனிப்பானது! ஆம்.. அவர் ஏற்புரையை மட்டும் வழங்கவில்லை.. அதனை இசையுரையாய் அமைத்துத் தந்தார்! மக்கள் வெள்ளம் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியது!

அப்போது இந்தப் பாடல் பிறந்த கதைபற்றி (மேலே குறிப்பிட்ட விஷயத்தைப் பகிர்ந்தார்) முன்னுரை தந்து இந்தப் பாடலை மேடையில் வழங்கினார்.
மேலும்.. இப்பாடலில் Father in law, Mother in law, Sister in law மட்டும்தான் இல்லை என்று நயமாக குறிப்பிட்டார்.
எந்தப் பாடலையும் தன் சொந்தப்பாடலாக்கும் வல்லமை கொண்ட எஸ்.பி.பால சுப்பிரமணியம் குறிப்பாக இந்தப் பாடலைக் கொஞ்சியபடி பாடும் விதம் அசத்தலானது! அருமையானது! ஒவ்வொரு மேடைநிகழ்ச்சியிலும் இந்தப் பாடல் அனைவரது விருப்பப்பாடலாய்! ஆம் .. இன்றைக்கும் நமக்கான நேயர் விருப்பமாய் ஒலிக்கிறது!

பாடல் பிரபலமான சமயம்.. மறைந்த ஆந்திரமுதல்வர் என்.டி.ராமாராவ் அவர்களுக்கு இந்தப் பாடல் மிகவும் பிடித்துப்போக .. அவர் நடித்த தெலுங்கு திரைப்படம் ஒன்றில் இதே இசைக் கோர்வையோடு இடம்பெற்ற செய்தியும் உண்டு!ள

வான் நிலா நிலா அல்ல – உன் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா – என் தேவியின் நிலா
நீயில்லாத நாளெல்லாம் – நான் தேய்ந்த வெண்ணிலா
மானிலாத ஊரிலே சாயல் கண்ணிலா?
பூவிலாத மண்ணிலே ஜாடை பெண்ணிலா?

(வான் நிலா நிலா அல்ல)

தெய்வம் கல்லிலா? – ஒரு தோகையின் சொல்லிலா?
பொன்னிலா? பொட்டிலா? புன்னகை மொட்டிலா?
அவள் காட்டும் அன்பிலா?
இன்பம் கட்டிலா அவள் தேகக் கட்டிலா?
தீதிலா காதலா ஊடலா கூடலா?
அவள் மீட்டும் பண்ணிலா?

(வான் நிலா நிலா அல்ல)

வாழ்க்கை வழியிலா? ஒரு மங்கையின் ஒளியிலா?
ஊரிலா? நாட்டிலா? ஆனந்தம் வீட்டிலா?
அவள் நெஞ்சின் ஏட்டிலா?
சொந்தம் இருளிலா? ஒரு பூவையின் அருளிலா?
எண்ணிலா ஆசைகள் என்னிலா கொண்டது ஏன்?
அதைச் சொல்வாய் வெண்ணிலா!

(வான் நிலா நிலா அல்ல)

படம்: பட்டிணப் பிரவேசம்
இசை: M.S.விஸ்வநாதன்
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்: S.P.பாலசுப்ரமணியம்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *