அக்டோபர்  20, 2014

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு  மருத்துவர் சி. வீரப்பன் அவர்கள்

Dr Chithambaram Veerappan

இங்கிலாந்து மான்செஸ்டரில் மருத்துவராகப் பணிபுரியும் சி. வீரப்பன் அவர்கள் “மதிப்புமிகு உறுப்பினர்” (Honorary Member) என்று செப்டம்பர் 2014 இல் பார்சிலோனாவில் நடந்த ஐரோப்பிய தீவிர சிகிச்சை மருத்துவக் கழக (European Society of Intensive Care Medicine) மாநாட்டில் விருது பெற்றவர்.  இந்நாள்வரை இவ்விருது பெற்றோர் பதின்மூவர் மட்டுமே, இவ்விருது பெற்ற முதல் ஆசியர்/இந்தியர்/தமிழர் என்பது கூடுதல் சிறப்புச் செய்தி. மருத்துவர் வீரப்பன் சிறப்பு விருது பெற்றமையைப் பாராட்டியும், மருத்துவத்துறை அறிவியல் கல்விக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காகப் பாராட்டியும் வல்லமைக் குழுவினர் அவரை வல்லமையாளர் என்று அறிவிப்பதில்  மகிழ்ச்சி அடைகிறோம்.

awardto_Dr.veerappan02-600x450

தமிழகத்தில் பிறந்து தேவக்கோட்டை, தூத்துக்குடி, பாளையங்கோட்டை நகர்களில் தனது பள்ளிப்படிப்பை முடித்து, 1974 ஆம் ஆண்டு மதுரை மருத்துவக்கல்லூரியில் மருத்துவப் பட்டம் பெற்றவர் மருத்துவர் வீரப்பன் அவர்கள். இங்கிலாந்திற்கு 1977 இல் குடிபெயர்ந்த வீரப்பன் முதியோர் நல மருத்துவம்,  உணர்வகற்றும் மருத்துவம் (geriatric medicine & anaestheticmedicine) ஆகிய துறைகளில் பணியாற்றிய பிறகு, 1985 ஆம் ஆண்டு முதல் தீவிர சிகிச்சை  (Intensive Care Medicine) மருத்துவத் துறையில் பணியாற்றத் துவங்கினார். வெகு விரைவில் அத்துறை மருத்துவத்தின்  பயிற்சியாளராகவும்  உயர்ந்து ராயல் ஓல்தாம் மருத்துவமனையில் ( Royal Oldham Hospital) அரும்பணியாற்றி வருகிறார்.

தான் பணியாற்றும் இடர்நல மருத்துவத்துறையின் சிறந்த சிகிச்சை முறைகள் யாவையும் அத்துறையில் பணிபுரியும் மருத்துவர்கள் தங்களுக்குள் பகிர்ந்துகொண்டால் மருத்துவத்துறை பயன்பெறும் என்ற நோக்கில் 2004 ஆண்டில் தனது சொந்த முயற்சியில் ஒருநாள் கருத்தரங்கு (Annual Critical Care Symposium) ஒன்றை நடத்தினார்.  அதற்குக் கிடைத்த வரவேற்பின் காரணமாக தொடர்ந்து கருத்தரங்கு நிகழ்சிகளை இருநாட்களுக்கு விரிவுபடுத்தி இன்று வரை கருத்தரங்கங்களை நடத்தி வருகிறார். முதலில் சிறு முயற்சியாக துவக்கப்பட்ட கருத்தரங்கங்கள் நல்ல வரவேற்பு பெற்று, பத்தாவது கருத்தரங்கில் உலகளாவிய மருத்துவர்கள் பங்குபெறும் கருத்தரங்காக,  அதில்  425 மருத்துவர்களும், 50 வல்லுநர்களும் கலந்துகொள்ளும் அளவிற்கு வளர்ச்சி பெற்றது. இந்தக் கருத்தரங்கை 2010 ஆம் ஆண்டில் வீரப்பன் சென்னையில் கூட்டினார். இவ்வாறு நடத்தப்படும் கருத்தரங்கங்கள் நடத்தும் செலவிற்கு போக மிஞ்சிய தொகையை  தான் பணிசெய்யும் ஓல்தாம் மருத்துவமனைக்கு தனது நன்கொடையாகவும் அளித்துள்ளார்.

 12

இவரது கல்விநோக்கம் கொண்ட இடர்நல மருத்துவக் கருத்தரங்கங்கள் நடத்தும் முயற்சியைப் பாராட்டி, 2013-இல் பிரிட்டனின் தீவிர சிகிச்சை மருத்துவக்கழகம் இவருக்கு “சிறப்புமிகு உறுப்பினர்” (Distinguished Member of the Intensive Care Society of UK) என்ற விருது வழங்கியது. இதுவரை இந்த விருது 2006-ஆம் ஆண்டு வரை 11 உறுப்பினர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது என்பதும், பிறகு  7 ஆண்டுகளுக்குப்பின் வீரப்பன் அவர்களுக்கு வழங்கப்பட்டது என்பது இவரது சிறப்பிற்குச் சான்று.

மருத்துவத் துறையில் பயிற்சியாளர் என்ற அனுபவத்தில் இக்கால மருத்துவத் துறை மாணவர்களுக்கு அவர் வழங்கும் அறிவுரைகள்:

– தொழில் நுட்பத்தையும் மின்னணுக் கருவிகளின் முடிவுகளையும் அடிப்படையாகக் கொண்டு செய்யும் மருத்துவத்தைத் தவிர்த்து, நோயாளியின் உடற்பரிசோதனைக்கு முக்கியத்துவம் கொடுத்து அச்சோதனை முடிவிற்கேற்ப மருத்துவம் செய்ய வேண்டும்

– நோயாளி உங்கள் உறவினர் என்ற கோணத்தில் அவரை அணுகி மருத்துவம் செய்ய வேண்டும்

– சட்டம் சார்ந்த மருத்துவ ஆய்வுகளைச் செய்வது சிறந்தது என்ற எண்ணத்தையும், தற்கால தொழில்நுட்பம் வழங்கும் கருவிகளைப் பயன்படுத்தி வழங்கும் மருத்துவமே சிறந்தது என்ற எண்ணத்தைக் கைவிடுதல் நல்லது

இடர்நல மருத்துவக்கல்வியை முன்னிட்டு மருத்துவத்துறையில் சீர்மையாளராக (Vocational Excellence) பணியாற்றிவரும் வீரப்பன் அவர்களுக்கு வல்லமையாளர் விருது வழங்கிப் பாராட்டுவதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி கொள்கிறோம்.

 

 

Info From:
http://gmccn.org.uk/
http://www.esicm.org/upload/542e6aa7a1d48-citations-chithambaram.pdf
http://www.akaramuthala.in/
http://www.devakottainagarathar.org/newsctv.php

 

 

 

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம்https://www.vallamai.com/?p=43179 ]

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.