-செண்பக ஜெகதீசன்
குப்பை பொறுக்கும் சிறுவனுக்குக் 
காகிதத்தில் தெரிவதில்லை
கவிதை…
தெரிந்தது அவனுக்கு,
காகிதமே கவிதையாக-
அறிவுப் பசிக்கு அல்ல,
வயிற்றுப் பசிக்கு…!
-ர. ஸ்டெல்லா தமிழரசி
1. என்னுளிருந்து
உனக்காகத் துடிக்கிறது
இதயம்…
2. விசியெறிந்தாய்
ஓடிவந்து
ஒட்டிக்கொண்டது
முத்தம்…
3. தலை நனைகிறது
துவட்டிவிடுகிறாள்
ஆடை நனைவதை
மறந்த
அம்மா…
4. எல்லா ஆசைகளையும்
உரிமை பாராட்டுகிறது
குழந்தை!
5. உன்
உருவத்தை வரையும்
ஓவியத் தூரிகை
எனது இமைகள்…
நினைத்தவுடன்
ஓவியம் திட்டி
விடுகிறது
விழிகளுக்குள்…
6. அனாதை
இல்லத்தையும்
முதியோர்
விடுதியையும்
தேடி அலைகிறது!
மரங்களைச்
சாய்த்தபின்
உறவுகளைத் தேடும்
பறவைகள்…
7. நிலவின்
சின்னச் சின்ன
ஆசைச் சிதறல்
நட்சத்திரம்…
8. தற்கொலை செய்துகொண்ட
நிலா…
தாங்கிப் பிடித்துக் காப்பாற்றிய
குளம் குட்டை
விடியும் வரை
உயிர்பெற்ற அதிசயம்
யாருக்கும் தெரிவதில்லை…
9. சண்டையில்
சமரசம் செய்கிறது
புறாக்களுக்குப்
பதிலாய்
குறுஞ்செய்தி…
10. தூக்கி எறிந்த போதும்
கோபப் படாமல்
திரும்ப வந்தது
சுவறில் அடித்த
பந்து…
11. மழையும்
வெயிலும்
ஒரே நேரத்தில்
சந்திக்கிறது
அன்று
நீயும் நானும்
சந்தித்தது போல…
12. நம்
இருவரின்
காதலையும்
உளவு பார்க்கப்
போகிறது
செவ்வாய் கிரகத்தில்
மங்கள்யான்!
13. நின்ற இடத்திலேயே
மீண்டும்
நிற்கிறது
விட்டுச் சென்ற
பறவைகள்
திருப்பி வருமென்ற
நம்பிக்கையில்
சில மரம்!
14. நீ
ஊருக்குப் போகிறாய்
காற்றடைத்த தலையணையில்
உயிரடைத்து
அனுப்பி
வைக்கிறேன்!
15. வெட்கம்
கொண்டது
மரம்,
காற்றின்
கிசு கிசுவால்!
16. தட்டிக் கொடுக்க
யாருமில்லாப்
போதும்
தழுவிக் கொடுக்கிறது
காற்று…
17. வாசல் வரை
வந்து விட்டுப்
போகிறாய்…
சுவாசக் குழாயில்
புகுந்த காற்று
நுரையீரல்
தீண்டாமல்
வெளியேறுகிறதைப் போல!
18. நீ
மல்லிகை வாங்கித்
தரும் போதெல்லாம்
ரோஜா ரத்தக் கண்ணீர்
வடித்தே
சிவப்பாகிறது…
எம்.ஜெயராமசர்மா
பாட்டிகளும் தாத்தாக்களும் பகுத்தறிவு இல்லாதவர்கள் என்று எண்ணிவிடுதல் ஏற்றதல்ல. பகுத்து அறிந்து இருந்தபடியால் தான் அவர்கள் புத்தி சொல்ல வருகிறார்கள். இளமையில் உள்ளோர் அதனை ஏற்றுவிட மறுக்கிறார்கள். காரணம் பகுத்து அறிவதற்கு அவர்கள் விரும்புவதில்லை. அதனை அவசியமானது என்றும் எண்ணுவதும் இல்லை. இளமையின் வேகம் எதையும் ஏற்க விரும்புவதில்லை. இந்த நிலை தொடர்ந்து கொண்டே வருகிறது. இதனைப் பற்றி கட்டாயம் சிந்தித்துப் பார்க்கவே வேண்டும்.
இளமையும் — முதுமையும் மோதக்கூடாது. இளமையென்பதும் தேவை. அதே வேளை முதுமையும் தேவையானதே. எந்த ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் அங்கே இவை இரண்டும் இணைந்து இருப்பதைக் காணமுடியும். அனுபவமும் வேகமும் தான் அவைகள்.
எங்களது சைவசமய வரலாற்றை எடுத்துக்கொண்டால் இது நன்கு புலப்படும். சம்பந்தர் இளமையில் இருக்கிறார். அப்பர் பெருமானோ முதுமையில் இருக்கிறார். இவர்கள் இருவரும் எந்தப் பிணக்குமின்றி இணைந்த காரணத்தால்தான் சைவம் என்பது பேரெழுச்சி பெற்றது எனலாம். சம்பந்தர் இறைவனது அருளை இளம் வயதிலேயே பெற்றுக் கொண்டவர். உயர் வகுப்பைச் சேர்ந்தவர். அப்பரோ சமயம் விட்டுச் சமயம் வந்தவர். ஆனால் சம்பந்தரின் பல்லாக்கை சுமந்துவந்த வேளை சம்பந்தர் அதனை அறிந்து ” அப்பரே ” என அழைத்து உயர்ந்த கெளரவத்தை வழங்கினார் என்று வரலாற்றின் வாயிலாக அறிகின்றோம்.
அப்பரோடு சம்பந்தர் இணையாவிட்டால் இன்று சைவசமயமே கேள்விக் குறியாகத் தானிருந்திருக்கும். ஆனால் இங்கே இளமையான சம்பந்தர் அப்பரை மதிக்கின்றார். அதேவேளை அனுபவத்தில் முதிர்ந்த அப்பரோ சம்பந்தர் சொல்லைப் பெரிதும் போற்றுகின்றார். இருவரும் இணைய அவர்களுடன் மக்களும் இணைய சைவ பக்தி இயக்கம் வீறுகொண்டு எழுந்து வருகிறது.
இது சமய எழுச்சி. இதே மாதிரி சமூக எழுச்சியிலும் இளமையும் முதுமையும் இணைந்து நின்றதையும் நாம் மறந்து விடக்கூடாது. இந்திய சுதந்திரப் போரில் மகாத்மா முதுமையானவர். அவருடன் நேரு என்னும் இளமை கைகோர்க்கிறது. அங்கே சுதந்திரப் போராட்டம் முன்னேறுகின்றது. காந்தி என்னும் முதுமையுள் பல லட்சக்கணக்கான இளமைகள் இணைகின்றன. சில வேளைகளில் முரண்பாடுகள் தென்பட்டாலும் காந்தி என்னும் முதுமை தனது பொறுமை என்னும் குணத்தைக் கடைப்பிடித்து முரண்பட்ட இளமைகளையும் தன்னோடு இழுத்தணைத்து நின்றுவிடுகின்ற பக்குவத்தைக் காண்கிறோமல்லவா? காந்தியுடன் பல முதுமைகளும், இளமைகளும் இணைந்த காரணத்தால் அன்னிய ஆதிக்கம் அகன்றுவிடுவதைக் கண்டோமல்லவா?
ஸ்ரீ ராமகிருஷ்ணர் முதுமை. நரேந்திரன் என்னும் இளமை அங்கே இணையும் வேளை அற்புதமான சிருஷ்டி ஏற்படுகிறதல்லவா? நரேந்திரன் என்னும் இளமை ஸ்ரீ ராமகிருஷ்ணரைப் புறந்தள்ளி விடவில்லை. உதாசீனப் படுத்தவில்லை. மூலையில் படுக்க வைக்க எண்ணவில்லை. விவேகத்துடன் செயலாற்றி விவேகானந்தராக வீறுகொண்டு எழுந்து நிற்பதைக் காண்கிறோம் அல்லவா?
ஞானானந்தர் என்னும் மகானால் உருவாக்கப் பட்ட ஆன்மீக அமைப்புத்தான் ஞானானந்த சமாஜம். ஞானானந்தர் என்னும் முதுமையுடன் ஆங்கிலம் படித்த விஞ்ஞானச் சிந்தனைமிக்க ஹரிதாஸ் என்னும் இளமை இணைகின்றது. குரு முதுமையானவர் என் அந்த இளமை நினைக்கவில்லை. குருவின் பாதத்தைப் பற்றிக்கோண்டு சுவாமி ஹரிதாஸ் என்னும் பெயருடன் நாம சங்கீர்த்தத்தால் உலகம் முழுவதும் சென்று ஆன்மீகம் தழைக்கச் செய்ததை நாடே அறியும்.
கவிஞர் காவிரிமைந்தன்
கவிக்குயில் திரைப்படத்தில் .. சிவகுமார்.. ஸ்ரீதேவி நடிப்பில்.. இளையராஜா நடத்தியிருக்கும் இசை மழை.. பஞ்சு அருணாசலம்.
பிரபல கர்நாடக சங்கீத வித்வான் பத்மஸ்ரீ பாலமுரளி கிருஷ்ணா பாடிய பாடலை ஒரு முறையும் எஸ். ஜானகி குரலில் மற்றொரு முறையும் ஒலிக்கும் இப்பாடல் கேட்டு உருகாதார் எவரிங்கே? 72 மேளகர்த்தா ராகங்களில் நெஞ்சினில் உள்ளாடும் ராகம் இதுவோ?
கதையின்படி.. நாயகியின் மனதில் உள்ள ராகத்தை நாயகன் கண்டுபிடிக்க வேண்டும். முதல் முறை சரியாக நாயகன் கண்டுபிடிக்கவில்லை. மறுமுறை.. நாயகின் முனகல் அவன் காதுகளுக்கு எட்டிவிட ஏகாந்தமாய் தொடங்குகிறான்… அவள் மனதில் குடி கொண்டிருந்த ரீதிகௌளை ராகத்தை..
சுகமான ஸ்வரங்களின் லய நயங்கள்.. கூடிவர உணர்ச்சியின் மைய மண்டபம் உஷ்ணமாகிறது.
அழகு மயில் ஸ்ரீதேவி .. ராதை வேடம் அணிந்து ஆடி வர…கண்ணன் வேடத்தில் சிவகுமார் புல்லாங்குழல் முழங்க..
பாடலில் அங்கிருக்கும் ஜீவராசிகளும் மயங்கிக் கிடக்க .. காற்றினில் அந்த கானம் வருகிறது.. கண்ணன் பாடும் பாடல் என்பதால் காதல் வண்ணம் படுவதில் ஒன்றும் வியப்பில்லை!
சின்னக் கண்ணன் அழைக்கிறான்!
சின்னக் கண்ணன் அழைக்கிறான்!
ராதையை, பூங் கோதையை,
அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தைப் பாடிச்
சின்னக் கண்ணன் அழைக்கிறான்!
சின்னக் கண்ணன் அழைக்கிறான்!
கண்கள் சொல்கின்ற கவிதை
இளம் வயதில் எத்தனை கோடி?
என்றும் காதலைக் கொண்டாடும் காவியமே
புதுமை மலரும் இனிமை!
அந்த மயக்கத்தில் இணைவது உறவுக்குப் பெருமை!
(சின்னக் கண்ணன்)
நெஞ்சில் உள்ளாடும் ராகம்
இது தானா கண்மணி ராதா?
உன் புன்னகை சொல்லாத அதிசயமா?
அழகே இளமை ரதமே!
அந்த மாயனின் லீலையில் மயங்குது உலகம்!
(சின்னக் கண்ணன்
பொன்நகை ஆயிரம் தந்தாலும் வேண்டேன்
புன்னகை வேண்டியே தவமிருப்பேன்
போற்றிப்பாட வார்த்தைகள் தேடினேன்
வசப்படவில்லையேதும் திருமால் திருப்புகழும்
வெண்பாக்களும் அள்ளிச்சென்றன அனைத்தையும்
வரைய முனைந்தேன் உன் வரைவிலக்கணத்தை
கபடமற்ற நகையாய் கலகலவென கொட்டித்தீர்ந்தது
கிரேசியாய் இல்லாமல் கிலுகிலுப்பையாய் (சாக்லேட்)
கிருஷ்ணாவுக்கே கிச்சுகிச்சு மூட்டும் மோகனமாய்
பாசத்தைப் பனித்துளிக்குள் மறைத்து வைத்தாலும்
பதறாமல் அதை பதவிசாய்ப் படைக்கும் ஆற்றலும்
கள்ளமில்லாச் சிரிப்பும் கலகலப்பான பேச்சும்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாமையும்
உனக்கு மட்டுமே சாத்தியம் நீவிர் வாழிய வாழியவே!
அன்புடன்
பவளா திருநாவுக்கரசு
கிரேசி மோகன்
பாண்டு மகன்போல, பின்வாங்கும் அஸ்வத்தை,
தூண்டிட தாடை தடவிவிட்டு, -ஆண்டவன்
HORSEக்(கு) உரைப்பு ,ஹயக்ரீவ கீதையை,
WAR-SICKNESS போக்கிட வே ….கிரேசி மோகன்….
(கட்டுரை: 2)
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
பேரழிவுப் போராயுதம்
உருவாக்கி
மனித இனத்தின்
வேரறுந்து
விழுதுகள் அற்றுப் போக,
விதைகளும் பழுதாக
ஹிரோஷிமா நகரைத் தாக்கி
நரக மாக்கி
நிர்மூல மாக்கியது,
முற்போக்கு நாடு !
நாகசாகியும்
நாச மாக்கப் பட்டது !
இப்போது தோன்றின
புதுயுகத்து நியூட்ரான் குண்டுகள் !
கதிரியக்கம் பொழியும்
புழுதிக் குண்டுகள் !
புத்தர் பிறந்த நாட்டிலே
புனிதர் காந்தி வீட்டிலே
மனித நேயம்
வரண்டு போன
வல்லரசுகள் பின் சென்று
பாரத அன்னைக்குப்
பேரழிவுப்
போரா யுதத்தை
ஆரமாய்
அணிவிக்க லாமா ?
உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன் நான் !
கிருஷ்ண பரமாத்மா (பகவத் கீதை)
“ஹைடிரஜன் குண்டு அணு ஆயுதச் சோதனைகள் ஆரம்பமாகி விட்டால் இனி பூமியில் வாழும் உயிரினங்கள் அழிவுக்கும், சூழ் மண்டலத்தில் கதிரியக்க நச்சுப் பொழிவுக்கும் விஞ்ஞான யந்திரம் பாதை விரித்து விட்டது என்று அர்த்தம் !”
ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்
“எதிர்கால உலக யுத்தத்தில் இன்னும் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டால், மனித இனம் தொடர்ந்து வாழ முடியாதபடி, பல்லாண்டு காலம் அபாயம் விளையப் போகின்றது ! அதை அகில நாடுகள் உணர வேண்டும் ! அபாயங்களை அனைவரும் அறியப் பிறகு உலக நாடுகள் வெளிப்படுத்த வேண்டும் ! உடனே அப்பணியைச் செய்யுமாறு, நாங்கள் உலக அரசுகளை வலியுறுத்தி விரைவு படுத்துகிறோம். நாடுகள் இடையே எழும் தீராச் சச்சரவுகள் போரிடுவதால் ஒருபோதும் தீரப் போவதில்லை ! உலக நாடுகள் தமக்குள் இருக்கும் பிரச்சனைகளை நீக்கிக் கொள்ள, வேறு சமாதான வழிகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்”.
பெர்டிரண்டு ரஸ்ஸல் (ஏப்ரல் 16, 1955)
நியூட்ரான் கணைகள் தாக்கும் புதுயுக அணுக்குண்டுகள்
நியூட்ரான் குண்டு (Neutron Bomb) என்பது “மிகைப்பட்டக் கதிர்வீச்சுக் குண்டு” (Enhanced Radiation Weapon -ERW) என்று அழைக்கப்படுவது. இந்த அணுவியல் குண்டு பெரும்பான்மையான எரிசக்தியை வெடிப்புச் சக்தியாக வெளிப்படுத்தாமல் சக்தி ஊட்டப் பட்ட நியூட்ரான் கணைகளாக ஏவுகிறது. இம்முறையில் நியூட்ரான் குண்டு சாதாரண அணுகுண்டு ஆற்றலில் பத்தில் ஒரு பங்கு வல்லமையே கொண்டுள்ளது. வெடிப்பும், வெப்ப சக்தியும் முழுமையாகத் தவிர்க்கப் படாமல் மிகையான நியூட்ரான்களின் தீவிரம் உயிரினத் தாக்குதலாய் விளைந்து வீடுகள், மாட மாளிகைகள், பாலங்கள், வாகனங்கள், கட்டடங்கள் எதுவும் தகர்க்கப்படா. மேலும் நகரின் தொழில்வளத் துறைகள் (Infrastructure) எவையும் அழிக்கப்படா !
1958 இல் முதன்முதலாக அமெரிக்காதான் நியூட்ரான் குண்டுகளைத் தயாரித்தது ! நியூட்ரான் குண்டுகளின் பிதாவாகக் கருதப்படுபவர் : லாரென்ஸ் லிவர்மோர் தேசீயச் சோதனைக் கூடத்தின் சாமுவேல் கோஹென் (Samuel Cohen – Lawrence Livermore National Laboratory) என்பவர். முதல் சோதனை நெவேடா பாலைவன அடித்தளத்தில் 1963 இல் நடத்தப்பட்டது. 1978 இல் ஜனாதிபதி ஜிம்மி கார்டருக்கு ஏற்பட்ட எதிர்ப்புகளால் மேற்கொண்டு நியூட்ரான் குண்டுகள் விருத்தியும் பெருக்கமும் நிறுத்தமாகி, பிறகு ஜனாதிபதி ரோனால்டு ரேகன் காலத்தில் மீண்டும் 1981 இல் தொடரப் பட்டன.
மூன்று விதமான ERW நியூட்ரான் குண்டுகளை அமெரிக்கா விருத்தி செய்தது. அவை W66, W70 & W79 (Nuclear Warheads) என்னும் இராணுவக் குறி ஆயுதங்களாக அழைக்கப்பட்டன. W66 ஆயுதங்கள் 1970 ஆண்டுகளின் மத்தியில் தயாரிக்கப்பட்டுப் பின்னர் ஓய்வாகி விட்டன. W70 ஆயுதங்கள் சிறு தூரக் கட்டளை ஏவுகணைகளிலும் (Short-Range Missile System) W79 பீரங்கிக் குண்டுகளாகவும் (Artillary Shells) உபயோகமாயின. அவை இரண்டும் ஜனாதிபதி மூத்த ஜார்ஜ் புஷ் காலத்தில் ரஷ்ய அமெரிக்க “ஊமைப் போர்” (Cold War) முடிவில் (1992) ஓய்வாகின. இறுதி W70 ஆயுதம் 1996 ஆண்டிலும் & W79 ஆயுதம் 2003 ஆண்டிலும் முழுமையாக நீக்கம் அடைந்தன.
1980 இல் பிரான்ஸ் தனது முதல் நியூட்ரான் குண்டை பசிபிக் கடலில் உள்ள முரோரா அடோல் (Mururoa Atoll) தீவில் சோதித்தது ! 1980 ஆண்டுகளில் பிரான்ஸ் மேலும் சில நியூட்ரான் குண்டுகளை ஆக்கியதாக அறியப்படுகிறது. அதற்குப் பிறகு அவற்றை எல்லாம் பிரான்ஸ் முடக்கி முறித்ததாக கூறப்பட்டுள்ளது. 1999 இல் சைனா நியூட்ரான் குண்டுகள் ஆக்கும் திறனைப் பெற்றதாகத் தெரிகிறது. 1997 ஆம் ஆண்டில் நடந்த நேர்முக உரையாடலில் சாமுவேல் கோஹென் “ரஷ்யா, சைனா & இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஏராளமாக நியூட்ரான் குண்டுகள் அடுக்கை (Stockpile of Neutron Bombs) வைத்திருக்க வாய்ப்புள்ளன,” என்று கூறியிருக்கிறார்.
நியூட்ரான் குண்டு ஒருவித பிளவு-பிணைவுக் குண்டுதான் (Fission-Fusion Bomb). அது ஒரு வெப்ப அணுக்கரு யுத்த ஆயுதமே (Thermonuclear Weapon) ! அதில் வெடித்து மிகையாகி மீறிப் பெருகும் நியூட்ரான்கள் வெளியேறித் தாக்கும்படி ஏவப்படுகின்றன. நியூட்ரான் குண்டுக்கு ஏராளமான கொள்ளளவு (Volume) டிரிடியம் (ஹைடிரஜன் வாயுவின் ஏகமூலம்) (Tritium – An Isotope of Hydrogen Gas) தேவை. டிரிடியத்தின் “அரை ஆயுள்” சுமார் 12 ஆண்டுகள் (Half-Life). அதாவது டிரிடியத்தின் நிறை (Mass) 12 ஆண்டிகளில் பாதியாகத் தேயும். அதாவது அடிக்கடி நியூட்ரான் குண்டுகளில் மறையும் டிரிடியம் வாயு நிரப்பப் படவேண்டும்.
கதிரியக்கப் பொழிவுக் குண்டுகள் (புழுதிக் குண்டுகள்)
கதிரியக்கப் பொழிவுகளை வீசும் அணுவியல் குண்டுகள் புழுதிக் குண்டுகள் (Radioactive Dirty Bombs) OR (Radiological Dispersion Bombs) என்று பெயரிடப்பட்டுள்ளன. இவ்வகை அணுவியல் குண்டுகள் சாதாரண ரசாயன வெடிகளைப் பயன்படுத்திக் கதிரியக்கப் பொழிவுகளைச் சிறிதளவு தரைமீது (200 சதுர மைல்) பரப்பச் செய்யும். புழுதிக் குண்டுகளில் பொதுவாக இருப்பவை : ஸ்டிரான்சியம்-90 (Strontium-90), கோபால்ட்-60 (Cobalt-60) அல்லது சீஸியம்-137 (Cesium-137). புழுதிக் குண்டுகள் வீரிய கதிரியக்கமுள்ள காமாக் கதிர்வீச்சைத் தளமெங்கும் பரப்பும். இந்தப் புழுதிக் குண்டுகளை எளிதாக யாரும் தயாரிக்க முடியும். தேவையானவை : சாதாரண வெடி மருந்து அடுத்து கதிரியக்க உலோகம் ஏதாவது ஒன்று : ஸ்டிரான்சியம்-90 (Strontium-90), கோபால்ட்-60 (Cobalt-60) அல்லது சீஸியம்-137 (Cesium-137). இவற்றைக் காமாக் கதிர்ப் படங்கள் எடுக்கும் (Radio-graphy) தொழிற் கூடங்களில் அல்லது அணு உலைக் கூடங்களில் களவாட வேண்டும்.
2002 மே மாத அறிக்கை ஒன்றில் அகில நாட்டு அணுசக்தி ஆணையகம் (International Atomic Energy Agency -IAEA) வெளியிட்ட புகார்த் தகவல் இது : ஆண்டுக்கு சராசரி 300 முறை கதிரியக்க உலோகங்கள் கணாமல் போன புகார்கள் ஆணையகத்துக்கு அனுப்பப்படுகின்றனவாம். மேலும் 1993 முதல் 2002 வரை IAEA பெற்ற புகார்கள் : 10 ஆண்டுகளில் காணாமல் போனக் கதிரியக்க உலோகங்கள் எண்ணிக்கை சுமார் 400 ! அமெரிக்காவில் மட்டும் 1986 முதல் 2002 வரை 15 ஆண்டுகளாக கதிரியக்க உலோகங்கள் காணாமல் போன 1700 நிகழ்ச்சிகள் நேர்ந்துள்ளன ! இவ்விதம் உலகில் பல நாடுகளில் கதிரியக்கக் களவுப் புகார்கள் குவிந்துள்ளன.
1. 1995 இல் ரஷ்யாவில் செச்சென் தீவிரவாதிகள் களவாடிய 30 பவுண்டு சீஸியம்-137 & டைனமைட் வெடி மருந்து.
2. 1987 இல் ஈராக் ஒரு டன் புழுதிக் குண்டை வெடித்துச் சோதனை செய்தது.
3. 1987 இல் பிரேஸில் 20 கிராம் சீஸியம்-137 யைக் களவாடி வெடிப்பு ஆற்றலைக் காட்டியது. அந்த சோதனையில் நால்வர் மரித்தனர். 249 நபர் கதிர்த்தீட்டை (Radioactive Contamination) அடைந்தனர்.
அணு ஆயுதங்கள் உண்டாக்கிய முதல் பிரளயம் !
“உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன், நான் !” என்று கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையில் அர்ஜூனனுக்கு அருளிய ஓர் வேத மொழியை, நியூ மெக்ஸிகோ சோதனைத் தளமான டிரினிடியில் [Trinity], 1945 ஜூலை 16 நாள் சரித்திரப் புகழ் பெற்ற முதல் ஆய்வு அணுகுண்டு, பயங்கர வெடிப்பை உண்டாக்கிய போது, ராபர்ட் ஓப்பன்ஹைமர் [Robert Oppenheimer] கூறினார். அவர்தான் அணுகுண்டின் பிதா ! யுத்த சமயத்தில் பல நாட்டு விஞ்ஞான நிபுணர்களைத் தன்கீழ் இணைத்து, ஆணையிட்டு, ஆட்டிப் படைத்து, முதன் முதல் அணு ஆயுதங்களை ஆக்கிய தலைமை அதிபதி! ஒப்பற்ற விஞ்ஞான வல்லுநர், ஓப்பன்ஹைமர்! அணுகுண்டு புதுயுக மரண யந்திரம் ! வெடிக் கோளம் ! விஷக் கோளம்! கதிர்க் கோளம் ! கனல் கோளம் ! ஒளிக் கோளம் ! அழிவுக் கோளம் ! அவற்றின் அசுரப் பிடியில் நசுங்கி மடிவது பாமர மக்கள்! அணுகுண்டு வெடிப்பின் விளைவு, முடிவற்றுத் தொடரும் மரணக் கோலம் !’
இரண்டாம் உலக மகா யுத்தத்தின் இறுதியில் 1945 ஆகஸ்டு 6, அடுத்து 9 ஆம் தேதிகளில் ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா, நாகசாகியில் முதன் முதல் அமெரிக்கா தீவிரச் சக்தி பெற்ற அணு ஆயுதக் குண்டுகளைப் போட்டு, யுத்த அழிவுச் சரித்திரத்தில் ஒரு மாபெரும் புரட்சியை உண்டாக்கியது! ‘எநோலா கே’ [Enola Gay] என்னும் B-29 வெடி விமானத்திலிருந்து, காலை 9:14 மணிக்கு ‘லிட்டில் பாய்’ [Little Boy] என்னும் யுரேனியக் குண்டு [Uranium -235] ஹிரோஷிமாவை நோக்கி விழுந்தது. பத்தரை அடி நீளமும், இரண்டரை அடி விட்டமுடன், 9700 பவுண்டு எடையுள்ள 15 கிலோ டன் TNT வெடிச்சக்தி கொண்ட அணுக்குண்டு 2000 அடி உயரத்தில் ஹிரோஷிமா நகரின் மையத்திலே வெடித்தது! சில நிமிடங்கள் கழித்து, பரிதிபோல் ஒரு பேரொளிச் சிவப்புக் கோளம் பொங்கி எழுந்தது! அதைத் தொடர்ந்து பயங்கர வெடிச் சத்தம் வானைப் பிளந்து, ஒரு பிரளயமே உண்டானது! பதினொன்று மைல் தூரத்தில் திரும்பிச் சென்ற எநோலா கே வால் புறத்தை வெடி அதிர்ச்சி அலைகள் தாக்கி விமானத்தை ஆட்டியதாம்! நூறு மைல் தூரம் சென்ற பின்னும், கோள முகில் விமானியின் கண்களுக்குத் தெரிந்ததாம்! பிரம்மாண்டமான முகில் காளான் [Mushroom Cloud] தோற்றத்தில் பொங்கிக் குமுறி எழும் புகை மண்டலம்! நடுவே சிவப்பு நிறக் கோளம்! கோளத்தின் உட்கருவில் பொருட்கள் எரியும் கோரமான அனல் பிழம்பு! எங்கெங்கு பார்க்கினும், குவியல் குவியலாய்த் தீப்பற்றி அழிக்கும் கோரக் காட்சிகள்!
ஹிரோஷிமாவில் மட்டும் 160,000 பேர் உயிர் இழந்தனர்! அதில் 60,000 பேர் பயங்கரமாகத் தீப்பற்றி எரிந்து கரிந்து போயினர். 130,000 பேர் காயமுற்றனர். இதில் 43,500 பேர் படு காயப்பட்டனர். குண்டு வெடிப்புக்குப் பிறகு ஐந்து வருட மரண எண்ணிக்கை மொத்தம் 200,000 ஆக ஏறியது. மரணக் கணக்குப்படி, இரண்டு நகரிலும் 20%-30% அனல் வீச்சில் மாண்டனர். 50%-60% மற்ற அபாயத்தால் செத்தனர். 15%-20% கதிரியக்க நோயால் காலமானார்கள். நான்கு சதுர மைல் பரப்பில் 68% நகரக் கட்டிடங்கள் மற்றும் 24% பகுதிகள் சில நிமிடங்களில் தூள் தூளாகித் தரை மட்டமாயின! எண்ணிக்கையில் 70,000 கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்தன! நகர மாளிகை, தீயணைப்பு நிலையம், போலீஸ் நிலையம், தபால் நிலையம், ரயில்வே நிலையம், பள்ளிக் கூடங்கள், மருத்துவக் கூடங்கள், தெரு மின்சார வண்டிகள், மின்சக்தி நிலையங்கள் முழுவதும் தரைமட்டமாயின! 13,000 அடித் தொலைவில் இருந்த தொலை பேசிக் கம்பங்கள் கரிந்து போயின! நகரின் மருத்துவ டாக்டர்கள் 200 பேர் [90%] செத்து மாண்டனர்; அல்லது முடமாகிப் போயினர்! நகரில் இருந்த 1780 நர்ஸ்களில் 1654 பேர் கொல்லப் பட்டார்கள்: அல்லது காய மடைந்தார்கள். இருந்த 45 ஆஸ்பத்திரிகளில் 44 முழுமையாகவோ, அன்றிப் பகுதியாகவோ தகர்க்கப் பட்டன.
‘ஃபாட் மான்’ [Fat Man] என்னும் 22 கிலோ டன் TNT அழிவுச் சக்தி கொண்ட புளுட்டோனியக் குண்டு [Plutonium239] நாகசக்கியில் விழுந்து, 1945 ஆண்டு முடிவு எண்ணிக்கைப்படி 70,000 பேர் செத்து மடிந்தார்கள்! 33% நகரப் பகுதி தரை மட்டமானது! வெடி அதிர்விலும், வெடிப்பு அலையிலும், வெப்பக் கனலிலும் அழிந்தவர் போக, மற்றும் ஊடுருவிப் பாய்ந்த அணுக் கதிரியக்கம் தாக்கிப் பல்லாயிரம் பேர் பட்ட தொடர் வேதனைதான் எல்லாவற்றிலும் மிக முக்கியமானது! மூர்க்கமானது! முடிவில்லாதது! ஹிரோஷிமா, நாகசாகி நகர்களில் வெடியும், வெப்பக் கனலும் தாக்காமல் கடவுள் புண்ணியத்தில் தப்பியவர்கள், கடைசியில் கதிரியக்கம் தாக்கப்பட்டு, ‘கதிர் எமன்’ கையில் மெதுவாகச் செத்து மடிந்தார்கள்!
ஜப்பானுக்குச் சென்று ‘அமெரிக்க வெடிவீச்சுத் திட்டப் பதிவுக்குழு’ [The United States Strategic Bombing Survey Team] 1946 ஜூன் 30 இல் வெளியிட்ட, ‘ஹிரோஷிமா, நாகசாகியில் போட்ட அணுகுண்டுகளின் விளைவுகள்’ [The Effects of Atomic Bombs on Hiroshima & Nagasaki] என்னும் தகவல் கூறுகிறது: முக்கியமான விளைவு ஒரே சமயத்தில் நிகழும் மித மிஞ்சிய மரண எண்ணிக்கை! அடுத்து மூன்று வித உருவில் அணு ஆயுதம் பேரழிவுச் சக்தியாய் கோரக் கொலை புரிகிறது! முதலில் அளவற்ற வெப்பம்! இரண்டாவது பயங்கர வெடிப்பு அல்லது வாயு அழுத்தம்! மூன்றாவது தீவிரக் கதிரியக்கம்! பாதிக்கப் பட்டவர்களில் (20-30)% தீக்காய மரணங்கள்! அதிர்ச்சி, வெடிப்பு, வேறு விதங்களில் (50-60)% மரணங்கள்! மற்றும் (15-20)% கதிரியக்கக் காய்ச்சலில் பாதிப்பு [Radiation Sickness]! மூன்றிலும் மிக மிகக் கொடியது, கதிரியக்கத் தாக்குதல்! கதிரியக்கம் நொடிப் பொழுதில் சித்திரவதை செய்து மக்களைக் கொல்வதோடு, தொடர்ந்து உயிர் பிழைத்தோரையும், அவரது சந்ததிகளையும் வாழையடி வாழையாகப் பல்லாண்டுகள் [Acute (Lethal) & Long Term Effects] பாதித்துக் கொண்டே இருக்கும்! பிறக்கும் குழந்தைகள் கண்கள் குருடாகி, கால்கள் முடமாகி, கைகள் சிறிதாகி அங்க ஈனமாய் பிறக்கும்! மேலும் பலவிதப் புற்று நோய்கள் தாக்கி மக்கள் மரண எண்ணிக்கை அதிகமாகும்!
மாபெரும் நகரம், நிமிடத்தில் மானிட நரகம் ஆனது !
குண்டு வெடித்தபின் உஷ்ணம் 1 மில்லியன் ஏறும் என்றும், ஒளித் தீக்கோளம் 800 அடி விட்டம் விரியும் என்றும், ‘முகில் காளான்’ [Mushroom Cloud] 9 மைல் மேலே உயரும் என்றும், பின்பு உஷ்ணம் 15,000 F ஆகக் குறையும் என்றும், அணுகுண்டு விஞ்ஞானிகள் கணக்கிட்டனர். வெடிமையத்தைச் [Hypocenter] சுற்றி 2 மைல் ஆரச் சுற்றளவில் உஷ்ணம் 5400 F ஆகித் தீயில் எரிந்து கூடான மனிதரும், தீப்புண்களில் கரிந்து போனவர்களும் பலர்! வெடி அலைகள் வினாடிக்கு 2 மைல் வேகத்தில் அடித்து மனிதர்களைக் குப்புறத் தள்ளியது! மானிடரின் முகம் தீய்ந்து கருத்து, தலை மயிர் யாவும் எரிந்து பலர் புத்த பிச்சுக்கள் போல் காணப் பட்டனர்! அவர்கள் மேனியில் தோலுரிந்து, கரும் பிசாசுகள் நகர்ந்து செல்வது போல் நடமாடி, பாதையில் செத்துக் கிடந்தார்கள்!
பாடிப் பறந்து கொண்டிருந்த பறவை இனங்கள் அந்தரத்திலே எரிந்து சாம்பலாயின! ஓடிய அணில்கள், வீட்டுப் பூனைகள், நாய்கள் மாயமாய் மறைந்து போயின! நகர் முழுவதும் ஒளி மயத்தில் பளிச் சென்று ஒளிர்ந்து, தீக்கோளம் எழுப்பி அணு ஆயுத மரண யந்திரம் வினை விதைத்தது போல் தோன்றியது! மரங்கள் யாவும் எரிந்து பாலை வனக் கரும் நிழற் படங்களாய் நின்றன! தொலைபேசி, மின்சாரக் கம்பங்கள் யாவும் கரிந்து வளைந்து போயின! காணும் இடமெல்லாம் மயானக் காடுகள் போல் எரியும், மாண்டு மடிந்த மனிதச் சடலங்கள் கணக்கில் அடங்கா!
விமானத்தையும், ஒளிக் கோளத்தையும் உற்று நோக்கியோர் கண்கள் அவிந்து போய்க் குருடாயின! ஒரு குமரிப் பெண் கூறினாள், ‘ஒரு பெரும் சுத்தியலால் அடிபட்டு, அதிர்ச்சி அடைந்து, கொதிக்கும் எண்ணையில் தள்ளப் பட்டது போல் உணர்ந்தேன்! எங்கேயோ தூக்கி எறியப்பட்டு திசை யெல்லாம் மாறிப் போனதாய்த் திக்கு முக்காடினேன்!’ ஒரு இளம் பெண்ணின் அவலக் குரல் கேட்டது. அவள் முதுகு பூராவும் எரிந்து, கூனிப் போய்க் கதறிக் கொண்டிருந்தாள். உதவி ஆட்கள் அவளுடைய தாயைத் தூக்கிக் கொண்டு வந்தனர். தாயின் முகமும், உதடுகளும் வீங்கிப் போய், கண்கள் மூடியபடி இருந்தன! இரு கைகளிலும் தோல்கள் உரிந்து, ரப்பர் கையுறை போல் தொங்கின! அவள் இடுப்புக்கு மேல் உடம்பில் எல்லா இடங்களும் கோரமாய் எரிந்து போயிருந்தன!
மனிதர்களின் உடம்பு பூதம்போல் பயங்கரமாய் வீங்கிப் போயிருந்தது! ஒரு மனிதன் கண்ணில் ஈட்டி போல் ஏதோ குத்தி, உதிரம் கொட்டி அலறிய வண்ணம் குருடனாய் அங்கு மிங்கும் ஓடிக் கொண்டிருந்தான்! எரியும் உடம்போடு ஓடி வந்து, ஒருவன் குளத்தில் குதித்தான்! குளத்தின் நீர் சூடாக இருந்தது. ஏற்கனவே, அந்தக் குளத்தில் எரிந்து போன சடலங்கள் பல மிதந்து கொண்டிருந்தன! அனலில் கரிந்த மாது ஒருத்தி, எரிந்த கைப் பிள்ளையை இறுகக் கட்டிய வண்ணம் சாய்ந்து செத்துக் கிடந்தாள்! ஒரு மின்சார வண்டி எரிந்து போய் வெறும் கூடாரம் போல் நின்று கொண்டிருந்தது! உள்ளிருந்த மாந்தர் அத்தனை பேரும் உருவம் தெரியாமல் கரிக் கூடுகளாய் உயிரற்றுக் கிடந்தனர்! ஓரிடத்தில், கரிந்து போன தாய் முலைக் காம்பிலிருந்து, பால் பருகக் குழந்தை வாய் வைத்துக் கொண்டிருந்தது! அணு ஆயுதம் ஹிரோஷிமாவில் நடத்திய அவல நாடகக் காட்சிகள் எல்லாவற்றையும் எழுத இங்கே இடம் போதாது!
வெடி விளைவை நேரில் கண்ட இரு ஜப்பானியரின் நிஜக் கதை!
Dr. மிச்சிஹிகோ ஹசியா [Dr. Michihiko Hachiya]: ‘பொழுது புலர்ந்து எழிலுடன் இலைகள் சலசலக்க, காலை இளம் பரிதி முகிலற்ற கீழ் வானில் மெதுவாய் எழுந்தது. மருத்துவக் கூடத்திற்குப் போக உடை அணிந்து கொண்டு புறப்படும் சமயம், யுத்த அபாயச் சங்கு ஊதியது! பறக்கும் விமானச் சத்தம் கேட்டது. திடீரென மாபெரும் மின்னல் ஒளிமயம் வெட்டிக் கண்ணொளியைப் பறித்தது! அடுத்து ஓர் பேரொளி! தோட்டத்தில் இருந்த லாந்தல் உலோக விளக்கு என்று மில்லாத பிரகாசத்தில் ஓளிர்ந்தது! வெளிச்ச மயமாய் இருந்த வானத்தில் விரைவில் இருள் கவ்வியது. சட்டென அருகில் நின்ற தூண் ஒன்று சாய்ந்து, வீட்டுக் கூரை சரிந்து அபாய நிலையில் தொய்ந்தது! வீட்டிலிருந்து தப்பி ஓட முயலும் போது, மரக் கம்பங்களும், இடிந்த கட்டிடக் குப்பைகளும் வீதியில் நிறைந்து, பாதையில் தடையாயின! எப்படியோ தாண்டிப் போய் தோட்டத்தினுள் நுழைந்தேன். ஏதோ தாங்க முடியாத ஓர் பெருங் களைப்பு என்னை ஆட்கொண்டது! திடீரென நான் அமணமாய்ப் போனது எனக்குத் தெரிந்தது! என் கோட்டும், சூட்டும் என்ன வாயின ? என்ன நடந்து கொண்டிருக்கிறது ? என்னுடலின் வலது புறம் யாவும் வெட்டுப் பட்டு, உதிரம் பீரிட்டது! கூரிய ஒரு நீண்ட இரும்பு ஆணி என் தொடையைக் குத்தி வலியை உண்டாக்கியது! என் கன்னம் கிழிந்து வாயில் இரத்தக் குளமானது! கழுத்தில் குத்திய ஓர் உடைந்த கண்ணாடி பீங்கானைக் கையால் எடுக்க, மேனி முழுதும் இரத்தக் குளிப்பில் நான் நடுங்கினேன்! முதல் அணு குண்டால் தாக்கப் பட்ட இந்த டாக்டர்தான், தன் காயத்துடன் காயம் பட்ட நூற்றுக் கணக்கான ஜப்பானியர்களுக்குச் சிகிச்சை செய்திருக்கிறார்!
சுடோமு யமகூச்சி [Tsutomu Yamaguchi]: திடாரென மெக்னீஷியம் தீப்பிழம்பு போல் ஓர் ஒளிமயமான மின்னல் வெட்டியது! தொடர்ந்தது ஒரு பேரிடிச் சத்தம்! பூமிக்கு மேல் 2 அடி தூக்கப் பட்டேன்! அடுத்து பயங்கரக் காற்று என் மீது வீசிச் சென்றது. பேயடித்தது போல் வீதியில் எவ்வளவு நேரம் கிடந்தேன் என்று எனக்கே தெரியாது! எழுந்த போது, இருள் சூழ்ந்து, கண்ணுக்கு எதுவும் தென் படவில்லை. வெக்கை யுள்ள பட்டப் பகல் திடாரென நள்ளிராப் பொழுது போல் ஆனது. என் கண்கள் இருட்டுக்கு இணங்கிப் போனபின், தூசிக் குப்பைகள் தொடர்ந்து வேகமாய் வீசின! தூசி குறைந்த பின், சூழ்வெளி தெரிந்தது. எங்கெங்கு நோக்கினும், உடைந்த பொருட்களின் குவியல்! எரியும் தீமயம்! நகர்ப் புறம் பார்த்தால், பிரம்மாண்டமான ஒரு ராட்சதக் காளான் [Mushroom] தோற்றத்தில் வானுயர்ந்த முகில் பூதம்! அந்த முகில் கோளம் பார்ப்பதற்கு பயமூட்டும் ஒரு பேயுருத் தூணாகத் தோன்றியது! அது சுற்றியுள்ள எல்லா பொருட்களின் நிறத்தையும் மாற்றிக் கொண்டே இருந்தது. மிக்க வலுவில்லாமல், முகத்திலும் கையிலும் பற்றிய நெருப்புடன், தீராத வேதனையோடு அருகே இருந்த உருளைக் கிழங்கு வயலை நோக்கித் தடுமாறிக் கொண்டு சென்றேன். சில சமயம் என்னால் ஊர்ந்து செல்லத்தான் முடிந்தது! பிறகு எனக்குப் பயங்கரத் தாகம் உண்டானது. எதிரே ஐந்து வாலிபப் பையன்கள் அமணமாகக் கிழிந்த துணிகளுடன் இருந்தனர். அருகில் வந்ததும் அவர்கள் யாவரும் வெளுத்துப் போய், நடுங்கிக் கொண்டிருந்தார்கள். நான் இத்தகையக் கோரக் காட்சியை இதுவரைக் கண்டதில்லை! மேனி எங்கும் வெட்டுக் காயத்தால் உதிரம் ஆறாக ஓடிக் கொண்டி ருந்தது! கொதிக்கும் எண்ணெயில் வெந்தது போல் சிவந்து, தோலுரிந்து வேர்வை சொட்டச் சொட்ட வேதனையில் துடித்துக் கொண்டிருந்தார்கள்! வெடி அதிர்வால் தீய்ந்த புண்களில் பச்சைப் புல் கொத்தாய் ஒட்டிக் கொண்டிருந்தது. முதுகில் எல்லா இடங்களிலும் சாட்டையால் அடித்தபோல் காயங்கள்!
உயிர் பிழைத்தோர் பெற்ற கதிரியக்க நோய்கள்
உயிர் தப்பியவர்கள் பலர் புதுவிதக் கதிர் நோய்கள் [Radiation Sickness] தம்மைத் தாக்குவதை உணர்ந்தார்கள். தலைச்சுற்று, மயக்கம், வயிற்று வலி, வாந்தி, பசியில்லாமை, வயிற்றாலை, மலத்தில் இரத்தம், கடுஞ் சுரம், வலுவின்மை, தோலில் சிவப்புப் பொட்டுகள், மேனியில் வீக்கம், வாய் கழுத்து பல்லணை [Gum] இவற்றில் அல்ஸர், இரத்தக் கசிவு, மலத் துவாரம், சிறுநீர்த் துவரங்களில் இரத்தக் கசிவு, தலை மயிர் உதிர்ப்பு போன்ற உடற் பழுது அறிகுறிகள் தோன்றி, நோய் வருகையை முன்னறி வித்தன! மிகையான கதிரடி [Radiation Dose] வாங்கியோர் உதிரத்தில், வெள்ளை செல் [White Blood Cells] எண்ணிக்கை, மிகக் கீழாக குறைந்தது! அதிகமான ‘மரண அடிக்’ [Lethal Dose] கதிரியக்கம் தாக்கப் பட்டோர் சில மணி நேரத்தில், அல்லது சில நாட்களுக்குள் செத்து மடிந்தனர். மரண அடிக்கும் குறைந்த அளவு கதிரடி பட்டோர், சிறுகச் சிறுகச் சாவை அண்டி வந்தனர்.
வெடிப்பிளவின் நேரடிக் காமாக் கதிரடி [Direct Gamma Radiation] பட்டோர், பட்ட இடத்தில் தசைகள் சமைக்கப்பட்டு ஆறாத கதிர்ப் புண்களாகி வேதனையில் துடித்தனர். இவ்விதத் தாக்குதலால், இறுதியில் ஆழமான தசை அழிவு ஏற்பட்டு, மாபெரும் இரத்தக் கசிவு [Hemorrhage] தொடர்ந்து, அவர்கள் யாவரும் மரணத்தைப் போய்த் தழுவிக் கொண்டார்கள்! போர் முடிந்த பின்பு, ஹிரோஷிமா, நாகசாகியில் தப்பினோர்களின் மார்பு எக்ஸ்ரேயைச் சோதித்த போது, ஆயிரக் கணக்கான பேர் புற்றுநோயிலும் [Cancer], லுக்கீமியாவிலும் [Leukemia], முலைப் புற்றுநோயிலும் சாகப் போகி றார்கள் என்று அறியப் பட்டது. டாக்டர் நார்மன் கென்ட்நர் [Dr. Norman Gentner, Senior Scientist, Health and Environmental Sciences, Atomic Energy of Canada Ltd] விஞ்ஞானி வெளியிட்ட 1997 கணக்கிதழ் அறிக்கைப்படி, இரண்டு நகரிலும் மொத்தம் 15405 பேர் [1950-1990] புற்றுநோயில் செத்திருக்கிறார்கள். லுக்கீமியாவில் இறந்தவர் எண்ணிகை இதுவரை 249 பேர். புற்றுநோய் மரணங்கள் இன்னும் பல்லாண்டுகள் தொடரும்!
கதிரடிக் காயம் [Radiation Injury] பெறும் கர்ப்பிணிப் பெண்களின் கருவைக் காமாக் கதிர்கள் பாதித்துப் பெருமளவில் முரண்பாடுகளை உண்டு பண்ணுகிறது. ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அணு ஆயுதக் கதிரியக்கம் தாக்கிய கர்ப்பிணிப் பெண்கள் பெற்ற பிள்ளைகள், நரம்பு அமைப்பாட்டில் பழுதுகள் ஏற்பட்டு, சிறிய தலைவுடன் மூளை சிறுத்துப் போய், கண்கள் குறுகி வளர்ச்சி அடையாது, அங்க ஈனமுடன், மனக் கோளாறுகள் [Mental Retardation] நிரம்பிப் பிறந்ததாக அறியப்படுகிறது!

உலக அணு ஆயுத வல்லரசுகளுக்கு ஓர் வேண்டுகோள்!
அணுகுண்டு ஆயிரம், ஆயிரம் உயிர் இனங்களைத் தாக்கிச் சித்திரவதை செய்து அழிக்கும் ஓர் அபாய ஆயுதம்! அதன் கோரக் கொடுமைகள் தப்பியோரையும், தப்பினோர் சந்ததிகளையும் விடாது பற்றிக் கொண்டு, பல்லாண்டு காலம் நிழல் போலத் தொடர்ந்து பாதிப்பவை! ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, 1955 ஏப்ரல் மாதம் பிரிட்டிஷ் மேதை, பெர்டிரண்டு ரஸ்ஸல் [Bertrand Russell] தயாரித்த ‘அணு ஆயுதப் போர்த் தடுப்பு’ விண்ணப் பத்தில் தானும் கையெழுத்திட்டு மற்ற உலக விஞ்ஞானி களோடு சேர்ந்து கொண்டு ஒன்றாகக் குரல் எழுப்பினார்! ‘எதிர்கால உலக யுத்தத்தில் இன்னும் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டால், மனித இனம் தொடர்ந்து வாழ முடியாதபடி, பல்லாண்டு காலம் அபாயம் விளையப் போகிறது ! அதை அகில நாடுகள் உணர வேண்டும் ! பிறகு அபாயங்களை அனைவரும் அறிய வெளிப்படுத்த வேண்டும்! அப்பணியை உடனே செய்யுமாறு, நாங்கள் உலக அரசுகளை விரைவு படுத்துகிறோம். நாடுகளின் தீராச் சச்சரவுகள் உலகப் போர்களால் ஒருபோதும் தீரப் போவதில்லை! தமக்குள் இருக்கும் பிரச்சனைகளை நீக்கிக் கொள்ள, வேறு சாமாதான வழிகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்’. அணு ஆயுத வல்லரசுகளே ! உங்கள் அறிவுக் கண்கள் திறக்கட்டும் ! ஜப்பானில் முதன் முதல் போட்ட அணுகுண்டுகளே, உலகின் இறுதியான அணுகுண்டுகளாக இருக்கட்டும்!
(கட்டுரை தொடரும்)
*****************************
தகவல் :
Picture Credit : 1. Scientific American (December 2001) & (November 2007) 2. Time Magazine (Feb 14, 2005) 3. National Geographic (August 2005)
1. Scientific American Magazine : India, Pakistan & the Bomb By : M.V. Ramana & A. H. Nayyar (December 2001)
2 http://www.thinnai.com/?
3 http://www.thinnai.com/?
4. The Making of the Atomic Bomb, By: Richard Rhodes
5. Oppenheimer, By: James Kunetka
6. Hand Book of World War II, Abbeydale Press
7. The Deadly Element, By: Lennard Bickel
8. Canadian Nuclear Society Bulletin, June 1997
9. Grolier Online : Nuclear Weapons From Grolier’s The New Book of Knowledge By : Benoit Morel Garnegie Melton University (2003)
10. Time Magazine : The Merchant of Menace – A. Q. Khan Became the World’s Most Dangerous Nuclear Trafficker By : Bill Powell & Tim McGrirk (February 14, 2005)
11. National Geographic Magazine : Living With the Bomb By : Richard Rhodes (August 2005)
12. Scientific American Magazine : Do We Need New Nukes ? A Special Report on the Nuclear Arsenals & Replacing Warheads (November 2007)
13. The Dirty Bombs (Radiological Dispersion Bombs) MSN Broadcasting -Dirty Bombs Biggest Hazard : Panic Experts Say Radiation Would Play on Public Fears (June 10, 2002)
14. Nuclear Weapons – Wikipedia Report (December 6, 2009)
15. Neutron Bombs – Wikipedia Report (December 15, 2009)
******************
S. Jayabarathan (jayabarat@tnt21.com) December 16, 2009
இசைக்கவி ரமணன்
[mixcloud]http://www.mixcloud.com/Vallamai/%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%B2/[/mixcloud]

வனத்தினிலே முள்ளும் மலரும்
வழியினிலே தென்றலும் புயலும்
வாழ்வினிலே இன்பமும் துன்பமும்
வழக்கமன்றோ கண்ணே! இதை
மறந்துவிட்டால் மனதில் என்றும்
மயக்கம்தான் கண்ணே!
கலக்கங்கள் நிலைப்பதுமில்லை
உறக்கங்கள் நிரந்தரமில்லை
கடல்மீது அமைதியுமில்லை
அதன்மடியில் சலனமுமில்லை
பழக்கம்தான் குழப்பம் என்றால்
பழக்கம்தான் ஞானமும் அன்றோ?
நிலையில்லா வாழ்வில் இங்கே
நிலையானது ஏதும் இல்லை
உண்டென்றால் ஒன்றே ஒன்று
ஊ/றிவரும் உயிரின் அன்பு!
உன்னுயிரை அன்பில் செய்தான்
உன்மனதைக் கருணையில் நெய்தான்
என்னையவன் எதில்செய்தானோ? இதை
என்றும் காணும் விழியைத் தந்தான்
அருகினிலோ தொலைவில் நின்றோ
அன்பே உனைப் பாடி மகிழ்வேன்
அரைநொடி நீ உனைமறந்தாலும்
அனுமதிக்க மாட்டேன் மாட்டேன்
கண்ணே நீ உன்னை என்றும்
கைவிடாமல் உன்னைக் காப்பேன்
எதுவந்தும் எது போனாலும்
பதறாமல் நின்றே வாழ்வாய்
நேசம்தான் ஞானம் கண்ணே
ஈசனுக்கும் மறுபெயர் அன்பே!
பாடலிலே பாதை விரித்தேன்
பனிமலராய்க் கவிதை தெளித்தேன்
பாதங்களை ஏந்தி ஏந்திப்
பயணமெல்லாம் துணையாய் வருவேன்…
கிரேசி மோகன்
மூளைக் குதிரை முதலில் மிரளும்,பின்,
ஆளைக் கவிழ்த்திடும் , ஆகவே, -நாளை,
குதிராது இன்றே, குதிரையில் ஏறி
குதிஇறை கண்ணனின் கால் ….கிரேசி மோகன்….
கழுவுதலும் நழுவுதலும்
எஸ் வி வேணுகோபாலன்

நாளிதழ் ஒன்றில், அக்டோபர் 15, உலக கை கழுவும் தினமாக அனுசரிக்கப் படுகிறது என்று வாசித்ததும் எனக்கு பல்வேறு விஷயங்கள் ஒரு சேர ஒரே நேரத்தில் நினைவுக்குத் தட்டுப்பட்டன. வீட்டுக்குள் நுழைந்ததும் முதல் வேலையாக கை, கால்கள், முகம் எல்லாம் கழுவிக் கொண்டபிறகு தான் அடுத்த வேலை பார்ப்பது, உணவு உட்கொள்ளுமுன் கைகளைக் கழுவுவது போன்றவை பண்பாட்டின் கூறுகள். வேலைகளின் தன்மை, வாழ்க்கை முறை, நாகரீக அடையாளமாகத் தவறாகப் பழகிக் கொண்டது அல்லது பழக்கத்தைக் கை விட்டது போன்ற பல காரணங்களால் இவை மாறிவிட்டன. நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ள இப்போது, உலக அளவில் ஒரு கூட்டம் போட்டு, ‘யெப்பா, திருந்துங்கடா சாமிகளா, கும்பலோட காணாம போயிரப் போறோம்… கைகளைக் கழுவிட்டு சாப்பிட போங்கடா என் ராசா…” என்று அறைகூவல் விட வேண்டி வந்திருக்கிறது.
போகட்டும், என் பயம் அது மட்டுமல்ல….கை கழுவுதல் என்றால் நாம் புரிந்து வைத்திருப்பதே வேறு ஆயிற்றே…பட்டிக்காடா பட்டணமா திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பட்டிக்காடு பிடிக்காமல் கோபித்துக் கொண்டு பட்டணம் போய்விட்ட மனைவியைத் திருப்பி அழைத்து வர முயற்சி எடுத்து தோற்றுப் போய் வீடு திரும்பி இருப்பார். அப்பத்தாள் கேட்பாள், மூக்கையா, போன காரியம் என்ன ஆச்சு என்று. நம்ம நடிகர் திலகம் பதில் சொல்ல மாட்டார். அந்த நாட்களில் சிம்பாலிக் ஷாட் என்று சொல்லப்படும் காட்சி ரீதியாக உணர வைக்கும் உத்தி மிகவும் பிரசித்தம். சொம்பிலிருந்து தண்ணீரை எடுத்துக் கைகளைக் கழுவிக் கொள்வார். பின்னணியில் எம் எஸ் வி கொடுக்கிற இசை அதிர்ச்சியும், கிழவியின் முக பாவமும் ரசிகர்களையும் சேர்த்து அழ வைத்துவிடும்.
இப்படி கை கழுவும் வருத்தமும், பொறுப்பிலிருந்து நழுவும் கை கழுவுதலும்தான் எனக்கு இப்போது உள்ளே புகுந்து வாட்டி எடுத்துக் கொண்டிருப்பது. இந்தப் பட்டியல் உண்மையில் மிகப் பெரியது.
நவீன தாராளமய கொள்கை வந்தவுடன், வர்த்தகம் தொடர்பான கவலைகள், மேற்பார்வை, கேள்விக்கு உட்படுத்துதல் இவையெல்லாம் அரசாங்கத்தின் வேலையே இல்லை என்று ஆட்சியாளர்கள் கை கழுவத் துடித்தனர். அப்புறம், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதற்கான கட்டுப்பாடுகள் பலவும் கை கழுவி விடப்பட்டன. அவ்வளவு ஏன், கல்வி, சுகாதாரம் எதுவுமே என் பொறுப்பில்லை என்று அரசாங்கங்கள் இப்போதும் கை கழுவித் தான் நாடாளுமன்றத்திலேயே பேசுகின்றன.
அடுத்த கட்சியின் ஊழல்களை நீட்டி முழக்குகிற கட்சிகள் பலவும் தாங்கள் அதிலிருந்து விடுபட்டு ஊழலைக் கை கழுவ மறுக்கின்றன. ஜனநாயகத்திற்கான குரலை ஓயாது பேசும் அவர்கள், தங்களுக்கென்று வரும்போது அந்த சிந்தனையைக் கை கழுவி விட்டுப் பேசுகின்றனர்.
சாலை விபத்துக்களின் எண்ணிக்கை ஆண்டுக்காண்டு கூடி வருகிறது எதனால்? சாலை விதிகளைக் கூசாமல் கை கழுவும் மனிதர்களால்தான்! தாங்கள் பார்க்கும் வேலையில் கவனத்தை, முன்னெச்சரிக்கையை, பாதுகாப்பைக் கை கழுவும் ஒவ்வொருவரும் தவிர்க்கக் கூடிய இழப்புகளுக்குப் பொறுப்பாகின்றனர்.
பள்ளிக்கூடங்களில், வீடுகளில் தங்களது பொறுப்பைக் கை கழுவும் யாரும் அடுத்தடுத்த தலைமுறைகளைப் பறிக கொடுப்பதாகவே கருத முடியும். மாணவர்கள், இளைஞர்கள் திசை தவறிப் போவதும், மனம் நொறுங்கிப் போவதும் கணக்கிட முடியாத சோகக் கதைகளை உருவாக்குகின்றன. குடும்பங்களின் ஒத்திசைவு கூட, இருவரில் ஒருவர் தமது வேலைப் பங்கீட்டைக் கை கழுவும் போது எத்தனையோ சிக்கல்கள் தோன்றுகின்றன.
நியாயம், நீதி, நேர்மை கை கழுவப்படும் சமூகத்தில் எல்லா அறங்களும் தலை குனிந்து நடக்கின்றன. இயற்கை வளங்களைக் கை கழுவி விலை பேசும் உலுத்தர்கள் தேச பக்தி பற்றி பாடம் நடத்தும் அராஜகம் சகிக்க முடியாதது.
வாசிப்பைக் கை கழுவுவோர், புதிய வாழ்வியல் அனுபவங்களை மறுத்துககொள்வதாகவே தோன்றுகிறது. சக மனிதர்களிடம் பேசாது சமூக ஊடகங்களில் பேசிக் கொண்டிருப்பதான பாவனையில் சந்திப்புகளின் தருணங்களைக் கை கழுவுவோர் எத்தனையோ இன்பங்களை நழுவ விடவே செய்கின்றனர்.
தண்ணீர் என்பதே ஓர் அரிய பொருளாக மாற்றப் பட்டுவரும் உலகில், கை கழுவதைப் பற்றி யோசிக்கக் கூட முடியாது. இலவசமாகக் கிடைக்க வேண்டிய தண்ணீரை விலை குறைத்து விற்பதாலேயே யாரும் பொறுப்பிலிருந்து நழுவ முடியாது. மூன்றாம் உலகப் போர் தண்ணீருக்காகத் தான் நடக்கும் என சொல்லிக் கொண்டிருப்பதையும் மறந்துவிடக் கூடாது.
உலகக் கை கழுவும் நாள் இருக்கட்டும், கொஞ்சம் ஏமாந்தால் உலகையே கை கழுவி விட்டுப் போக ஏகாதிபத்திய சிந்தனையோட்டம் துடிப்பதையும் மறந்துவிடக் கூடாது. உலக அளவில் ஏற்றத் தாழ்வுகளையும், நாடுகளிடையே பரஸ்பரம் மோதல்களையும் தூண்டிவிட்டு அமைதியைக் குலைத்து வருவது அவர்களது பங்களிப்புதான்.
கை கழுவுதல் என்பது தூய்மை குறித்தது. புறந்தூய்மை நீரால் அமையும் என்ற வள்ளுவர், அகத் தூய்மை குறித்தும் அறிவுறுத்தி இருக்கிறார். சாதிய, மதவாத அழுக்குகளும், சுயநலமும் மண்டிக் கிடக்கும் உள்ளங்களைக் கழுவும் நாள் எப்போது ?
*********************
நன்றி: தீக்கதிர் (அக்டோபர் 15, 2014)
— தேமொழி.
கிறிஸ்டோஃபர் கொலம்பஸ் ஸ்பெயின் நாட்டு அரசி இசபெல்லா, அரசர் ஃபெர்டினாண்ட் ஆகியோரின் நன்னம்பிக்கையையும் பண உதவியையும் பெற்று, ஸ்பெயின் நாட்டிற்காக இந்தியாவுடன் வணிகம் செய்ய ஒரு புதிய கடல்வழித்தடத்தை கண்டுபிடிக்க கடற்பயணம் மேற்கொண்டார். பொது ஆண்டு 1492 இல் தொடங்கி தொடர்ந்து பத்து ஆண்டுகளில் நான்கு முறை ஐரோப்பாவில் இருந்து மேற்கு நோக்கிப் பயணம் செய்து இந்தியப்பெருங்கடலை அடைய விரும்பினார். ஆனால் அவர் ஒரு முறை கூட வெற்றியடையவில்லை என்பதுடன், அமெரிக்கக் கண்டத்தை வந்தடைந்து அதுதான் இந்தியா என்று நம்பி, அங்கு வாழ்ந்த பழங்குடி மக்களை இந்தியர்கள் எனவும் அழைக்கத் துவங்கினார். இந்தியாவிற்குப் புதிய கடல்வழிப்பாதையைக் கண்டுபிடிக்கும் போட்டியில் போர்ச்சுகீசியர்களிடம் ஸ்பெயின் தோல்வி அடைய நேர்ந்தது. வாஸ்கோடகாமா பொது ஆண்டு 1498 மே, 17ல் இந்தியாவில் கோழிக்கோடு கப்பாட்டு என்ற இடத்தில் வந்திறங்கினார்.
இருப்பினும் ஸ்பெயின் நாடு அமெரிக்கக் கண்டத்தில் வலுவாகக் காலூன்றிவிட்டதற்கு கொலம்பஸ் செய்த உதவியே காரணம். அமெரிக்கக் கண்டத்தில் உள்ள எத்தனையோ நாடுகளுக்கு ஸ்பெயின் ஏற்படுத்திய தாக்கத்தின் காரணமாக ஸ்பானிஷ் மொழிதான் இந்நாட்களில் தேசியமொழி. கொலம்பஸ் செய்தது தவறான கணிப்பாக இருந்தாலும் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகளுக்கு அமெரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளில் குடிபுக, ஆட்சி செய்ய ஒரு வழி வகுத்துக் கொடுத்து கடற்பயண வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியவர் கொலம்பஸ் என்பதை மறுப்பதற்கில்லை. கொலம்பஸ் அட்லாண்டிக் கடலைக் கடந்து அமெரிக்க கண்டத்தில் பஹமாஸ் பகுதியில் கரையேறிய நாள் 1492 ஆம் ஆண்டு அக்டோபர் 12 வது நாள். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 12 ஆம் நாள் கொலம்பஸ் நாளாக அமெரிக்காவில் கொண்டாடப்படுகிறது.
கொலம்பஸ் தினமான அக்டோபர் 12, 2014 க்கு சில தினங்களுக்கு முன்னர் அக்டோபர் 8, 2014 அன்று நிகழ்ந்த முழுச்சந்திரகிரகணமும் தொடர்ந்து அடுத்தடுத்து வந்ததில் பலருக்கு சந்திரகிரகணத்தையும் கொலம்பசையும் இணைக்கும் ஒரு சுவையான நிகழ்ச்சியையும் நினைவிற்குக் கொண்டு வந்தது.
தனது இந்தியப் பயணங்களில் மூன்று முறை தோல்வியடைந்திருந்த கொலம்பஸ் தனது கடலோடிக் குழுவினரையும், பழங்குடி மக்களையும் கொடுமைப்படுத்திய காரணத்திற்காக கைகால்களில் விலங்கிடப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார். கரீபிய தீவுகளில் ஆளுநர் பதவியும் அவரிடம் இருந்து பறிக்கப்பட்டது. ஆனால் ஸ்பெயின் மன்னரும் அரசியும் மனமிரங்கி அவரை மன்னித்து மீண்டும் ஒருமுறை பயணம் செய்து இந்தியாவிற்கு வழி கண்டுபிடிக்க உதவ முன் வந்தனர். நான்காவது முறையாக தனது கடற்பயணத்தை 1502 ஆம் ஆண்டு மே 12 ஆம் நாள் துவக்கினார் கொலம்பஸ். இப்பயணத்தில் அவருடைய சகோதரேகள் பார்த்தலோமோ, டியாகோ மேண்டேஸ், கொலம்பஸின் 13 வயது மகன் ஃபெர்னாண்டோ ஆகியோரும் உடன் பயணித்தனர்.
‘காப்டியானா’, ‘கல்லீகோ’, ‘விஸ்கைனா’, ‘சாண்டியாகோ டி பாலோஸ்’ என்ற நான்கு கப்பல்களில் மேற்கு நோக்கிப் பயணம் செய்தனர். கடற்புழுக்கள் கப்பலின் மரத்தை கரையான் போல அரித்துவிட இரு கப்பல்களில் துளைகள் விழுந்து நீர் உள்ளே வரத் துவங்கிய காரணத்தினால் கொலம்பஸ் அந்தக் கப்பல்களைக் கைவிட நேர்ந்தது. கரீபியன் கடல் பகுதியை அடைந்து, அங்கு தீவுகளையும் மத்திய அமெரிக்க பகுதிகளையும் சுற்றிவரும்பொழுது கியூபா நாட்டின் பகுதியில் ஏற்பட்ட புயலில் சிக்கி அடுத்த இரு கப்பல்களும் சேதமடைந்து 1503 ஆம் ஜூன் மாதம், ஜமைக்காவின் வடகரையில் ‘செயின்ட் ஆன்’ வளைகுடாப் பகுதியில் கரைதட்டி நின்றன. சென்ற முறை அங்கு வந்திருந்த பொழுது ஏற்படுத்திய ஸ்பானிஷ் குடியிருப்புகளின் உதவியை நாடித் தகவல் அனுப்ப சிறு படகொன்றில் சிலரை அனுப்பிவிட்டு தனது குழுவினருடன் ஜமைக்காவில் கொலம்பஸ் காத்திருந்தார். இவ்வாறு சற்றொப்ப ஓராண்டு காலம் போல அப்பகுதியில்தங்கும் நிலை ஏற்பட்டது.
அப்பகுதியில் வாழ்ந்த ‘அராவாக்’ (Arawak Indians) பழங்குடியினர் நட்புள்ளம் கொண்டவர்கள் என்றாலும், கொலம்பஸும் அவர் குழுவினரும் செய்யும் அடாவடிகள், கலவரம், கொள்ளை ஆகியவற்றில் மிகவும் வெறுத்துப் போயிருந்தார்கள். முதலில் அன்புடன் உதவியவர்கள், பின்னர் கொலம்பஸ் கேட்ட அளவிற்கு அவர்குழுவினருக்கு உணவு அளித்துப் பராமரிக்க மறுத்துவிட்டனர். கடற்பயணிகள் வழங்கிய பண்டமாற்றுப் பொருள்கள் யாவும் அவர்களுக்கு உதவும் வகையிலும் இல்லாமல் (தகர ஊதுகுழல்கள் போன்றவை) அவர்கள் ஆர்வத்தையும் கவரவில்லை. இதன் விளைவாக கொலம்பஸ் குழுவினர் பசி பட்டினியில் நொந்து போனார்கள். தங்களுக்கு உதவி வரும் வரை எப்படித் தாக்குப் பிடிப்பது என்று யோசித்துக் கொண்டிருந்த கொலம்பஸிற்கு, நூல்களைப் புரட்டியதில் ஒரு யோசனையும் கிடைத்தது.
அக்காலத்தில் கடற்பயணம் செய்பவர்கள் மிகத் தடித்த வானியல் குறிப்புக்கள் கொண்ட நாட்குறிப்பு நூல்களை தங்கள் பயணத்திற்குத் துணையாகக் கொண்டு செல்வார்கள். இது ‘அல்மனக்’ (Almanac) என்றழைக்கப்படும். இந்திய மக்கள் வானின் கோள்களைக் கணித்துப் பயன்படுத்தும் பஞ்சாங்கம் போன்றே சூரியன், சந்திரன், மற்ற பிற கோள்களின் நிலையையும், பயணத்திற்கு வழிகாட்டி உதவும் விண்மீன் கூட்டங்களையும், தட்பவெட்ப நிலைக் குறிப்புகளையும் கொண்ட நிரல்களும் அட்டவணைகளும் கொண்டது இந்த அல்மனக். அக்காலத்தில் புகழ் பெற்றிருந்த ஜெர்மன் நாட்டு கணிதமேதையும் வானியல் வல்லுனருமான ‘ரிஜியோமாண்ட்டனஸ்’ கோள்களைக் கணித்து வழங்கிய நாட்குறிப்பில் (Ephemeris of the German astronomer Regiomontanus) கொலம்பஸிற்கு ஒரு தகவல் கிடைத்தது. அந்த1504 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 29 ஆம் நாள் ஜமைக்கா பகுதில் முழுசந்திரகிரகணம் தோன்றும் என்ற குறிப்பு அந்நூலில் அவருக்குக் கிடைத்தது.
இத்தகவல் தெரிந்ததும் கொலம்பஸ் அராவாக் பழங்குடியினருடன் ஒரு சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தார். தங்களை வெறுத்து சரிவர நடத்தாமல், உணவும் வழங்காத பழங்குடியினர் மீது அவருடைய கிறிஸ்துவக் கடவுள் மிகக் கோபமான இருக்கிறார். தான் கோபம் கொண்டதை உணர்த்த இரு நாட்களில் நிலாவை மறையச் செய்து அதனை செந்நிறமாக்கி தனது கோபத்தை பழங்குடியினருக்கு உணர்த்துவார். அவர்களது நடவடிக்கை மாறாவிட்டால் பழங்குடியினருக்கு கேடு காலம்தான் என்று மொழிபெயர்ப்பாளர் உதவியுடன் கொலம்பஸ் கதைகட்டினார். பழங்குடியினர் அதை நம்பவில்லை, சிலர் பகடி செய்தும் நகர்ந்தனர். ஆனால் கொலம்பஸ் குறிப்பிட்ட நாளில் கீழ்வானில் நிலா வழக்கம் போலத் தோன்றினாலும், சிறிது நேரத்தில் கிரகணம் துவங்கி, இருள் சூழத் துவங்கியது. பழங்குடியினர் அச்சமடைந்து கொலம்பஸ்ஸிடம் ஓடிவந்தார்கள்.
“பழங்குடியினர் அச்சத்தில் அலறியடித்துக் கொண்டு பல திசைகளில் இருந்தும் கப்பலை நோக்கி ஓடிவந்தார்கள். தங்களுக்காக கொலம்பஸ் கடவுளிடம் பேசி கடவுளை அமைதிப்படுத்த வேண்டும், இனி தவறாது உணவு தர சம்மதம் என்று உடன்பட்டார்கள்” என்று கொலம்பஸின் மகன் ஃபெர்னாண்டோ தனது குறிப்பில் எழுதியுள்ளார். கொலம்பஸ் தனது அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டு மணற்கடிகாரத்தை நிமிர்த்தியும் கவிழ்ந்தும் காலத்தைக் கணக்கிட்டுக் கொண்டிருந்தார். கிரகணம் முடியும் சில நிமிடங்களுக்கு முன் வெளிவந்து கடவுள் இனி அவர்களுக்கு ஒரு தீங்கும் செய்ய மாட்டார், தனது கோபத்தை மறந்து அவர்களுக்கு ஒரு தீங்கும் செய்யப்போவதில்லை என்பதற்கு அடையாளமாக நிலா சில நிமிடங்களில் மீண்டும் பழைய நிலையை அடையும் என்று அறிவித்தார். பின்னர் பழங்குடியினர் ஒத்துழைப்பு அவருக்குத் தவறாது கிடைத்தது.
கொலம்பஸ் ஜமைக்கா பகுதியில் வந்து சேர்ந்த ஓராண்டு கழித்து 1504 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அவருக்கு உதவிக் கப்பல் வந்து சேர்ந்தது. அந்த ஆண்டு நவம்பர் மாதம் ஸ்பெயின் திரும்பினார், பின்னர் தனது 54 ஆவது வயதில், முடக்குவாதம் கொடுத்த மூட்டுவலியின் காரணமாகவும், உணவு ஒவ்வாமையின் காரணமாக இரு ஆண்டுகளில் (மே 20, 1506) அவர் மரணமடைந்தார்.
இந்த நிகழ்ச்சியை ஒவ்வொருவரும் அவரவர் பின்னணியின் காரணமாக கொலம்பஸ் செய்தது புத்திசாலித்தனம் என்றும், அவர் செய்தது அறநெறிக்கு மீறிய சூழ்ச்சி, பழங்குடியினரை ஏமாற்றியது சரியல்ல என்றும் கருத்தில் வேறுபடுவர். ஆனால் இது அறிவிப்பது ‘அறிவே சக்தி’ (Knowledge is Power) என்பதைத்தான். ஆர்வமூட்டும் இந்த நிகழ்வு சில எழுத்தாளர்கள் கவனத்தைக் கவர, இதை அடிப்படையாக வைத்து கதைகள் எழுதத் துவங்கினர். சிலர் சூரியகிரகணம் என்று மாற்றியும் கதைபுனைந்தனர். அவற்றில் குறிப்பிடத்தக்கன, எச். ரைடர் ஹாகர்ட் எழுதிய ‘கிங் சாலமான்ஸ் மைன்ஸ்’ (H. Rider Haggard’s King Solomon’s Mines) என்ற கதையும், மார்க் டுவைன் எழுதிய ‘எ கனிக்ட்கட் யாங்கீ இன் கிங் ஆர்தர்ஸ் கோர்ட்’ (Mark Twain’s A Connecticut Yankee in King Arthur’s Court) என்ற கதையும், டின் டின் படக்கதையான, ‘ப்ரிசனர்ஸ் ஆஃப் தி சன்’ (Hergé’s Tintin adventure Prisoners of the Sun) என்ற கதையுமாகும். தங்கள் கதைகளில் அவர்கள் குறிப்பிடப்பட்ட நாட்களில் எந்த கிரகணமும் நிகழவில்லை என்பதையும் சில ஆசிரியர்கள் கவனமின்றி கையாண்டும் உள்ளார்கள்.
படங்கள் உதவி:
http://en.wikipedia.org/wiki/File:Emanuel_Gottlieb_Leutze_-_Columbus_Before_the_Queen.JPG
http://en.wikipedia.org/wiki/File:Eclipse_Chistophe_Colomb.jpg
http://zoroastrian.ru/files/star2/regiomontanus%20(6).jpg
http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/eb/Tablas_alfonsies.jpg/1024px-Tablas_alfonsies.jpg
சந்தர் சுப்ரமணியன்
சொல்லுக்குள் கருத்தில்லை; சுவைசேர் பேச்சில்
.. சொற்கோத்த முழுஅடியே சொல்லும் சேதி;
கல்லுப்பு புளிமிளகாய் காரம் சேர்த்துக்
.. காண்க ருசி; தனித்தனியாய் ருசி ஏதங்கு?
பல்லுக்குப் புரியாத பண்டம் யாவும்
.. பட்டவுடன் பகுத்தறியும் பழகும் நாவே;
எல்லைக்குள் அடங்காத இனிக்கும் நல்ல
.. இலக்கியத்தைச் சுவைஞருளம் இயல்பாய் ஏற்கும்.
இன்றரங்கின் தலைப்பாக ‘ஏடா தம்பி
.. எடடாபேனா’ என்றோர் தொடரைக் கொண்டோம்
அன்றவரின் கருத்துகளை அள்ளித் தந்த
.. அண்ணாவின் சொற்றொடரே; அதனால் இன்றும்
மன்றமமர் அன்பர்தம் செவியைச் சேர்ந்து
.. மதிக்கின்ற கருத்தாக மாறி உள்ளம்
சென்றமரும் விதமாக செய்தி சேர்த்து
.. செழுமியதாய்த் தமிழ்க்கவிதை சேர்க்க வேண்டும்!
(தலைமைக்கவிதை):-
கற்கொண்டான் கண்ணகிக்காய்; கப்பல் ஏறி
.. கடற்கடந்து போர்வென்று கடாரம் கொண்டான்;
விற்கொண்டான் வேற்கொண்டான் வேந்தன் மண்ணை
.. விந்தியத்தை எல்லையாக்கி விரித்துக் கொண்டான்;
கற்கண்டாய்ப் பாவமைத்து காலம் வென்றான்;
.. கருத்தமைந்த காவியங்கள் காத்துத் தந்தான்;
நிற்கின்றோம் இவையிழந்தே, ஏடா தம்பி
.. நிலையதனை இன்றியம்ப எடடா பேனா (1)
பட்டதெலாம் போதுமிந்த பாழும் வாழ்வில்,
.. பழங்கதைகள் இனிவேண்டாம்; பழமை தன்னை
வெட்டிடுவோம்; அன்பென்னும் விதையை மண்ணில்
.. விதைத்தன்பை விளைவாக வேண்டி நிற்போம்;
கொட்டறைந்து முரசதனை, கூடும் வையம்
.. கொள்ளுமிதைக் கொள்கையாக, கொண்ட பின்னர்
எட்டும்வான் அதன்புகழே; ஏடா தம்பி
.. எழுதிடுவாய் அந்நிலையை; எடடா பேனா (2)
கரையில்லாக் கடலொத்தத் தமிழைக் கற்க
.. கற்பவர்க்கு மொழியறிவு நிறைய வேண்டும்;
உரையின்றிப் புரியாத உயர்ந்த நூல்கள்
.. உளபோதும் விளங்கிடுமோ உதவி இன்றி?
வரையறையை உடைக்கின்ற வடிவம் தன்னில்
.. வளமான தமிழ்சேர்த்து வனப்பாய் அண்ணா
உரைநடையாய் அன்றுரைத்தார்; ஏடா தம்பி
.. உணர்ந்தவரின் புகழெழுத எடடா பேனா (3)
ஆங்கிலமே அறிவென்ற அகந்தை கொண்ட
.. அளவற்ற மோகத்தின் அணைப்பில் முன்பு
தூங்கிநின்ற தமிழகத்தின் துயரம் தீர
.. தெருவெல்லாம் தமிழோசை சேர்த்தார் அண்ணா;
தேங்கு மது தானுருகி சொட்டச் சொட்ட
.. தெளிவான தமிழ்நதியாய் தெருவில் ஓட
ஏங்கிடுவார் தமிழரெலாம் ஏடா தம்பி
.. இன்றந்தப் புகழ்பாட எடடா பேனா (4)
ஆதிவழி அதையின்றும் அணைத்து வாழ்தல்
.. அறியாமை எனவுணர்ந்த அண்ணா நான்கு
சாதிவழி முறையதனைச் சாடிச் சாடி
.. சரித்திரத்தின் சரித்திரத்தை சரியாய்ச் செய்யும்
போதனையை வாழும்வரை போதித் தன்பே
.. பொதுவென்னும் பொருட்தந்தார்; பாரில் சாதி
ஏததனை விலக்கவழி ஏடா தம்பி
.. இயன்றிடவே இன்றேனும் எடடா பேனா (5)
ஆயினகாண் வருடங்கள் ஆயும் என்ன?
.. அவரெதிர்த்தப் பழக்கமதன் அவலம் யாவும்
போயினவா எனும்கேள்வி புதைந்து நிற்க
.. பொய்யான போலியதே பொலியும் இன்றும்;
சாயுங்காண் நீதியின்றும் சாதி போற்றும்
.. சங்கங்கள் அரசியலைச் சார்ந்து நிற்பின்;
ஏயமவை இனியெதற்கோ ஏடா தம்பி
.. இவ்வெண்ணம் ஒழித்திடவே எடடா பேனா (6)
(ஏயம் – தேவை இல்லாதது)
அகத்திரையில் ஆயிரமாய் ஆன சிந்தை
.. அகமுடைத்து புறநிஜத்தை அடைய வேண்டும்
சகத்திலினி எழுச்சிவொன்றே, சரிவே இல்லாச்
.. சரித்திரத்தை சமுதாயம் தேட வேண்டும்
பகுத்தறிவின் பயன்பாட்டால் பாரில் யார்க்கும்
.. பலனனைத்தும் பெற்றுவக்கும் பங்கு வேண்டும்
இகத்திலினி இவைவேண்டும் எடா தம்பி
.. இவைகாணும் வழிகாட்ட எடடா பேனா (7)
தவணைமுறை தொழுகைமுறை தேவை இன்று
.. தலமனைத்தும் சமத்துவமே தவழ வேண்டும்;
குவளைமுறை இன்னுமிங்கே குறையவில்லை,
.. கொடிபிடித்தே இதைத்தடுப்பார் யாரு மில்லை;
அவலநிலை அடிதடிகள் அனைத்தும் இன்றும்
.. அடங்காது தொடர்கையிலே அமைதி யேது?
துவளுமவர் துயர்துடைக்க ஏடா தம்பி
.. துணிச்சலுடன் திரைகிழிக்க எடடா பேனா (8)
இடைக்கவிதைகள் (எல்லோரும் இந்நாட்டு மன்னர்):-
தம்பிக்கு அண்ணாவின் கடிதங்களில் ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ எனும் கட்டுரையில் அண்ணா எழுதிய ஒரு கதையின் கவி வடிவம்:
மன்னவன்றன் உள்ளத்தில் கவலை போலும்
.. மலையாகி அமர்ந்திருந்தான் மன்றம் ஓர்நாள்
கன்னியர்கள் ஆடல்மேல் கவனம் இல்லை
.. காதல்விளை யாட்டிலிலும் கண்கள் இல்லை
முன்குழுமி முத்தமிழால் முனைந்து பாவை
.. முழங்குகின்ற கவிஞரினால் மாற்றம் இல்லை
என்னவழி செய்யமன்னன் எண்ணில் மீண்டும்
.. இன்பமது சேருமென்றே அமைச்சன் சொன்னான் (1)
முன்னோர்நாள் போர்க்களத்தின் முன்னர் நின்ற
.. மூவைந்து தளபதிகள் தலைகள் கொய்தோன்
முன்னின்ற பதினாறு வீரர் கைசேர்
.. வேல்தட்டி அவர்பற்கள் வீழச் செய்தோன்
தன்னாட்டின் போர்வீரர் தழைக்கச் செய்த
.. தரம்வாய்ந்த குருவைமண் தழுவச் செய்தோன்
பின்னிற்கும் கரிப்படையின் தலைவன் கண்ணை
.. பிடுங்கியவன் வந்துள்ளான் காண வென்றான் (2)
என்னஇது விந்தையன்றோ இத்திரு நாட்டில்
.. இத்தகைய வீரனவன் இருந்த போதும்
முன்னர்யாம் கண்டதில்லை; முரட்டு வீரர்
.. முன்னிற்கும் எம்படையை வென்ற வீரன்
இன்றவனை யாம்காண யாவும் செய்வீர்
.. என்றதுமே அமைச்சரவர் சென்றார்; வந்தார்
மன்றமெலாம் வீரன்றன் வரவை நோக்க
.. வரவேற்கும் பணியாளர் வாழ்த்தும் பாராக் (3)
கரைகண்ட வீரன்றன் காட்சி காண
.. காத்திருந்த மன்னன்தன் கையால் மெல்லத்
திரைநீக்க திடுக்கென்று கழுதை ஒன்று
.. தெரிந்திடவே சபையோடு சிரித்து விட்டான்
சரியிதுதான் முன்னோர்நாள் சாயும் வேளை
.. தலைப்படையை உதைத்தெடுத்தச் சரிதம் தானே
சிரித்தபடி வினவுகின்ற மன்னன் தன்னை
.. சிரித்தசபை பார்த்ததுகாண் சிந்தை யோடே (4)
இடைக்கவிதைகள் (அண்ணாவின் வாழ்க்கை):-
கல்வியென்றும் வளர்ந்தோங்கும் காஞ்சி ஈந்த
.. கலைச்செல்வம் பன்னோக்குக் கலைஞன் அண்ணா
கல்லூரி நாட்களிலே கல்வி ஒன்றே
.. கடமையென்று கற்றுவந்த கர்ம வீரர்
செல்வமாக அவர்படித்துச் சேர்த்த தொன்றே
.. சீர்மிகுந்த பொருளியலில் சிறந்த பட்டம்
இல்லறத்தைக் கடைபிடிக்க ஏற்ற நேரம்
.. இணையாக வந்தவர்தான் இராணி அம்மை (1)
மொழியாக்க செயற்றனையே முதலில் கற்றார்
.. முயற்சியதன் விளைவாலே முன்னர் நின்றார்
தொழிற்சங்கத் துறைதன்னில் தொடர்ந்தார் வாழ்வை
.. தோழர்கள் பலரோடு தொண்டும் செய்தார்
விழைவாக பொதுவாழ்வை விரும்பிப் பின்னர்
.. விடுதலையின் ஆசிரியப் பணியும் ஏற்றார்
அழியாத புகழ்பெற்றார் அண்ணா அன்றே
.. அவர்காலம் கடந்தாலும் அதுகாண் வாழும் (2)
ஓரிரவு வசனத்தால் உலகை ஈர்த்தார்
.. உரைநடையால் உணர்வென்னும் உலையை ஊதி
காரிருளில் பெரும்வெப்பக் கதிரைப் பாய்ச்சி
.. கருத்தமைந்த கனவுகளைக் காணச் செய்தார்
போரொத்த பகுத்தறிவுக் கொள்கை யோடே
.. பொதுவுடமைக் கொள்கையையும் போற்றிக் காத்தார்
பேரறிஞர் எனும்மொழியால் புகரப் பட்டு
.. பொதுசனத்தின் நிஜமனத்தில் பொதிந்து நின்றார் (3)
-எம். ஜெயராம சர்மா – மெல்பேண்
அடியார்களின் இலக்கோ
ஆண்டவனை அடைவது
அரசுள்ளார் இலக்கோ
அனைத்தையும் அள்ளுவது!
ஆணவத்தின் இலக்கோ
அனைத்தையுமே அழிப்பது
ஆதலால் இலக்குதனை
ஆராய்ந்து தேர்ந்திடுவீர்!
வள்ளுவனார் இலக்கோ
வாழ்வை வளமாக்குவது
தெள்ளுதமிழ் பாரதிக்கோ
தேசமதின் விடுதலையே!
உள்ளமதில் நல்லவெண்ணம்
ஊற்றெடுத்து நின்றுவிடின்
நல்லநல்ல இலக்குகளை
நாம்பெற்று நிற்போமே!
கத்தியின்றி ரத்தமின்றி
யுத்தம்செய்யும் இலக்கு
காந்திமகான் உள்ளமதில்
தோன்றி நின்றதன்று!
வெற்றியென்னும் பெயரைக்கொண்டு
வீழ்த்தல் வீரமன்று
சத்தியத்தைக் கையில்கொண்டு
சாதித்தாரே காந்தி!
உத்தமரின் இலக்கைக்கண்டு
உயிர்ப்புப் பெற்றவுலகு
உண்மையான இன்பம்பெற்று
உதிர்த்ததே நல்லுவகை!
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
ஒருவரை ஒருவர் நெருங்கி
நெருக்கமாய் நம்மிரு ஆத்மாக்கள்
நேருக்கு நேர், மௌனமாய்
நெஞ்சுறுதி யோடு
நிமிர்ந்து நிற்கும் போது,
என்ன கொடுமை எல்லாம்
கசப்பாய் எமக்கு இழைக்குமோ
இவ்வுலகம் ?
வளைவுத் திருப்பங்களில் தீப்பற்றி
முறிந்து போகும்
விரிந்திடும் எமது இறக்கைகள் !
எம்மைத் திருப்தி யுடன்
இங்கே நீண்ட காலம் வாழ விடுமா ?
சிந்திப்பாய் !
மென்மேல் ஏறிடும் தேவதைகள்
நம்மேல் வலுவாய்த் தூவிடும்
உன்னத மாகப்
பொன்னிசைப் பாடல் சிமிழை,
ஆழ்ந்த நமது
அருமை மௌனத் திடையே !
என்னினியவனே,
தகுதி யற்ற மனிதரின்
முரண்பட்ட மன முடக்கம்
விரட்டித்
தூய நம் ஆன்மாக்களைத்
துண்டிக்கும் இந்த
மண்ணில் வசிக்க வேண்டும் நாம் !
காரிருள் வெளிக்குள்ளே
ஒரே ஒரு நாள்
காதலித்து நிற்க எனக்கு நீ
ஓரிடத்தை அனுமதி
மரிப்பு நேரச் சுழியிட்டு !
********************
Poem -22
Sonnets from the Potuguese
By: Elizabeth Browning
When our two souls stand up erect and strong,
Face to face, silent, drawing nigh and nigher,
Until the lengthening wings break into fire
At either curved point,–what bitter wrong
Can the earth do to us, that we should not long
Be here contented? Think. In mounting higher,
The angels would press on us and aspire
To drop some golden orb of perfect song
Into our deep, dear silence. Let us stay
Rather on earth, Beloved,–where the unfit
Contrarious moods of men recoil away
And isolate pure spirits, and permit
A place to stand and love in for a day,
With darkness and the death-hour rounding it.
**********
— கவிஞர் காவிரிமைந்தன்.
பொற்காலப் பாடல்களில் பல பாடல்கள் எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் கேட்கத் தூண்டும் வகையானவை. அப்படி என்ன இருக்கிறது அந்தப் பாடல்களில் என்று கேட்பவர்கள் இல்லை. காரணம் ரம்மியமான இசை, இதமான சொற்கலவை, பதமான குரல்கள் இவைகளின் கதம்பம்! ‘பிராப்தம்’ என்கிற திரைப்படம் – திரைத்துறையில் பெண் இயக்குனர்கள் அருகியிருந்த அந்த நாட்களில், நடிகையர்திலகம் சாவித்திரி அவர்கள் தயாரித்து இயக்கிய படமிது! இந்தப் படம் எந்த அளவு வெற்றி பெற்றது என்பதைவிட இந்தப்பாடல் வெற்றி பெற்ற பாடல் என்பதில் மறுகருத்தில்லை.
அன்பில் மலரும் ஆனந்த உறவுதனில்
இன்பங்களுக்கு எல்லைகள் இல்லை!
எனவேதான் சொந்தம் எப்போதும் தொடர்கதை என்று பல்லவி தந்திருக்கிறார் கண்ணதாசன். இசை மெட்டுக்கு ஏற்ற வார்த்தை மொட்டுக்களை அவிழ்த்திருக்கிறார். பல்லவி முதலாய் சரணம்வரையில் சுகமான ஜீவநதி வெள்ளமாய் உருகிவர, மெல்லிசை மன்னரின் இன்னிசை நம் காதுகளில் என்றைக்கும் பாய்கின்ற இன்பத்தேன் வார்க்கும் அற்புதத்தை இன்னொரு முறை கேளுங்கள்!
சந்தம் இசையோடு நடைபோட..
சொந்தம் உறவோடு நடத்தும் இன்பவிழா இது!!
http://youtu.be/uLmsuXcID7U
காணொளி: http://youtu.be/uLmsuXcID7U
சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்
முடிவே இல்லாதது
எங்கே சென்றாலும் தேடி இணைக்கும்
இனிய கதை இது
என்னை உன்னோடு சேர்த்த தெய்வம்
எழுதும் புதுக்கதை இது(சொந்தம்)
விளக்கின் ஒளியில் சிரிக்கும் முகத்தை
ஜாடையில் நான் காண
வெள்ளிய நிலவு பன்னீர் தெளிக்கும்
கோலத்தை நான் காண
இளமையை நினைப்பது சுகமோ
முதுமையை ரசிப்பது சுகமோ
செந்தூரம் சிவக்கும் சிங்கார முகத்தை
முந்தானை துடைப்பது சுகம்தானோ(சொந்தம்)
நிலத்தில் படரும் பனிப்பூங்கொடிகள்
ஆற்றில் நீந்தி வர
நிறத்தில் மஞ்சள் முகத்தில் மோதி
காவியம் பாடி வர
சூரியன் ஒளியில் மின்ன
தோகையின் விழிகள் பின்ன
பொன் வண்ணக் கலசம் பூவண்ணக் கவசம்
கண்ணோடு கலப்பதும் சுகம்தானோ(சொந்தம்)
—————————————————————————–
படம் : பிராப்தம்
பாடல் : கண்ணதாசன்
இசை : எம். எஸ். விஸ்வநாதன்
குரல் : டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
நடிகர்கள் : சிவாஜி, சாவித்திரி
இயக்கம்: சாவித்திரி