ஸ்டெல்லா தமிழரசி கவிதைகள்!

-ர. ஸ்டெல்லா தமிழரசி

1. என்னுளிருந்து
உனக்காகத் துடிக்கிறது
இதயம்…

2. விசியெறிந்தாய்
ஓடிவந்து
ஒட்டிக்கொண்டது
முத்தம்…

3. தலை நனைகிறது
துவட்டிவிடுகிறாள்
ஆடை நனைவதை
மறந்த
அம்மா…

4. எல்லா ஆசைகளையும்
உரிமை பாராட்டுகிறது
குழந்தை! 

 5. உன்
உருவத்தை வரையும் 
ஓவியத் தூரிகை
எனது இமைகள்…

நினைத்தவுடன்
ஓவியம் திட்டி
விடுகிறது
விழிகளுக்குள்…

 6. அனாதை
இல்லத்தையும்
முதியோர் 
விடுதியையும் 
தேடி அலைகிறது!

மரங்களைச்
சாய்த்தபின் 
உறவுகளைத் தேடும் 
பறவைகள்…

7. நிலவின்
சின்னச் சின்ன
ஆசைச் சிதறல்
நட்சத்திரம்…

8. தற்கொலை செய்துகொண்ட
நிலா…
தாங்கிப் பிடித்துக் காப்பாற்றிய
குளம் குட்டை

விடியும் வரை 
உயிர்பெற்ற அதிசயம்
யாருக்கும் தெரிவதில்லை…

9. சண்டையில்
சமரசம் செய்கிறது
புறாக்களுக்குப்
பதிலாய்
குறுஞ்செய்தி…

 10. தூக்கி எறிந்த போதும்
கோபப் படாமல்
திரும்ப வந்தது 
சுவறில் அடித்த 
பந்து…

11. மழையும்
வெயிலும் 
ஒரே நேரத்தில் 
சந்திக்கிறது

அன்று
நீயும் நானும் 
சந்தித்தது போல…

 12. நம்
இருவரின் 
காதலையும் 
உளவு பார்க்கப்
போகிறது 
செவ்வாய் கிரகத்தில்
மங்கள்யான்!

13. நின்ற இடத்திலேயே
மீண்டும் 
நிற்கிறது
விட்டுச் சென்ற
பறவைகள் 
திருப்பி வருமென்ற
நம்பிக்கையில் 
சில மரம்!

14. நீ
ஊருக்குப் போகிறாய்
காற்றடைத்த தலையணையில்
உயிரடைத்து
அனுப்பி 
வைக்கிறேன்!

15. வெட்கம்
கொண்டது
மரம்,
காற்றின்
கிசு கிசுவால்!

16. தட்டிக் கொடுக்க
யாருமில்லாப்
போதும்
தழுவிக் கொடுக்கிறது
காற்று…

17. வாசல் வரை
வந்து விட்டுப்
போகிறாய்…
சுவாசக் குழாயில்
புகுந்த காற்று
நுரையீரல் 
தீண்டாமல்
வெளியேறுகிறதைப் போல!

18. நீ
மல்லிகை வாங்கித்
தரும் போதெல்லாம்
ரோஜா ரத்தக் கண்ணீர் 
வடித்தே 
சிவப்பாகிறது…

 

About admin

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க