சொந்தம் எப்போதும் தொடர்கதைதான் …

கவிஞர் காவிரிமைந்தன்.

 

savitri

 

சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்…

பொற்காலப் பாடல்களில் பல பாடல்கள் எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் கேட்கத் தூண்டும் வகையானவை.  அப்படி என்ன இருக்கிறது அந்தப் பாடல்களில் என்று கேட்பவர்கள் இல்லை.  காரணம் ரம்மியமான இசை, இதமான சொற்கலவை, பதமான குரல்கள் இவைகளின் கதம்பம்!  ‘பிராப்தம்’ என்கிற திரைப்படம் – திரைத்துறையில் பெண் இயக்குனர்கள் அருகியிருந்த அந்த நாட்களில், நடிகையர்திலகம் சாவித்திரி அவர்கள் தயாரித்து இயக்கிய படமிது!  இந்தப் படம் எந்த அளவு வெற்றி பெற்றது என்பதைவிட இந்தப்பாடல் வெற்றி பெற்ற பாடல் என்பதில் மறுகருத்தில்லை.

அன்பில் மலரும் ஆனந்த உறவுதனில்
இன்பங்களுக்கு எல்லைகள் இல்லை!

எனவேதான் சொந்தம் எப்போதும் தொடர்கதை என்று பல்லவி தந்திருக்கிறார்   கண்ணதாசன்.  இசை மெட்டுக்கு ஏற்ற வார்த்தை மொட்டுக்களை அவிழ்த்திருக்கிறார்.  பல்லவி முதலாய் சரணம்வரையில் சுகமான ஜீவநதி வெள்ளமாய் உருகிவர, மெல்லிசை மன்னரின் இன்னிசை நம் காதுகளில் என்றைக்கும் பாய்கின்ற இன்பத்தேன் வார்க்கும் அற்புதத்தை இன்னொரு முறை கேளுங்கள்!

சந்தம் இசையோடு நடைபோட..
சொந்தம் உறவோடு நடத்தும் இன்பவிழா இது!!

http://youtu.be/uLmsuXcID7U
காணொளி: http://youtu.be/uLmsuXcID7U

சொந்தம் எப்போதும் தொடர்கதைதான்
முடிவே இல்லாதது
எங்கே சென்றாலும் தேடி இணைக்கும்
இனிய கதை இது
என்னை உன்னோடு சேர்த்த தெய்வம்
எழுதும் புதுக்கதை இது

(சொந்தம்)

விளக்கின் ஒளியில் சிரிக்கும் முகத்தை
ஜாடையில் நான் காண
வெள்ளிய நிலவு பன்னீர் தெளிக்கும்
கோலத்தை நான் காண
இளமையை நினைப்பது சுகமோ
முதுமையை ரசிப்பது சுகமோ
செந்தூரம் சிவக்கும் சிங்கார முகத்தை
முந்தானை துடைப்பது சுகம்தானோ

(சொந்தம்)

நிலத்தில் படரும் பனிப்பூங்கொடிகள்
ஆற்றில் நீந்தி வர
நிறத்தில் மஞ்சள் முகத்தில் மோதி
காவியம் பாடி வர
சூரியன் ஒளியில் மின்ன
தோகையின் விழிகள் பின்ன
பொன் வண்ணக் கலசம் பூவண்ணக் கவசம்
கண்ணோடு கலப்பதும் சுகம்தானோ

(சொந்தம்)
kannadasan2tmsps2praptham
—————————————————————————–
படம் : பிராப்தம்
பாடல் : கண்ணதாசன்
இசை : எம். எஸ். விஸ்வநாதன்
குரல் : டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா
நடிகர்கள் : சிவாஜி, சாவித்திரி
இயக்கம்: சாவித்திரி

 

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *