-செண்பக ஜெகதீசன்

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா வன்னா
ருயிர்நீப்பர் மானம் வரின். (திருக்குறள்-969: மானம்)

புதுக் கவிதையில்…

கவரிமானின் குணமிது-                      sunday malar template
உடலில் மயிரிழப்பிற்கு
உயிரையே விட்டுவிடும்…

மனிதரிலும் இருக்கிறார்கள்
இப்படி-
மானத்தை இழக்கநேர்ந்தால்,
வாழமாட்டார்கள்
அதற்குமேலும்…!

குறும்பாவில்…

மயிரிழந்தால் உயிரிழக்கும்
கவரிமான் போன்ற மனிதரும்
உயிரிழப்பர், மானமிழந்தால்…!

மரபுக் கவிதையில்…

காட்டில் வாழும் கவரிமானும்
கணத்தில் உயிரை விட்டிடவே,
வேட்டை யாடி வீழ்த்தவேண்டாம்
விழுந்திடும் ஒருமயிர் போதுமன்றோ,
நாட்டி லுள்ள மாந்தரிலே
நாமும் தெரிந்து கொண்டிடலாம்,
காட்டு மானைப் போல்வாழார்
கொண்ட மானம் போனபின்னே…!

லிமரைக்கூ…

கவரிமான் வாழாது, இழந்துவிட்டால் மயிரை,
இதுபோன்ற மாந்தரும்
மானமதை இழந்துவிட்டால், விட்டிடுவர் உயிரை…!

கிராமிய பாணியில்…

வாழாது வாழாது
கவரிமானு வாழாது,
மயி ரொண்ணு போனாலே
உயிர்தானாப் போயிருமே..

இதுபோல மனுசனுந்தான்
ஒலகத்தில இருக்கானே,
அவுனும்
மானம்போனா வாழமாட்டான்
மானுபோலச் செத்திருவான்,
வாழாது வாழாது
கவரிமானு வாழாது…!

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “குறளின் கதிர்களாய்…(43)

  1. இந்த கவரிமான் ஜாதியினரை இன்று எங்கு தேடினும் கான்பது அரிதாகிவிட்டது. குறும்பா மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது.

  2. கருத்துரை வழங்கிச் சிறப்பித்த
    நண்பர் அமீர் அவர்களுக்கு,
    மிக்க நன்றி…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *