”கீதாவைச் சொன்னவரைக் கன்றோடு கங்கை
பாதாதி கேசம் பணிய-சீதாவின்
நாயகர் பின்வந்த நந்தசேய் நாட்டமோ
தாயக ஆச்சியின்பக் தி’’….கிரேசி மோகன்….!
Blog
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
-
கவிதை என்னும் அழகியல் : வாசிப்புச் சமூகத்தை முன்வைத்து
பிரதீப் குமார்.பி. முனைவர் பட்ட ஆய்வாளர் (தமிழ்), தமிழ்த்துறை, அரசுக் கல்லூரி சித்தூர்.
நெறியாளர் : ப.முருகன்
நவீன கவிதை என்னும் சொல்லாடல் கொண்டிருக்கும் பொருள் உண்மையில் கவிதையில் சொல்லிய முறையை மையமிட்ட ஒன்றானதாகவே இதுவரை கருதப்பட்டு வருகிறது. அது யாரை நோக்கிச் சொல்லப்படுகின்றது என்பதைப் பற்றியோ, வாசகன் என்ற ஒரு வெளி குறித்த அறிவுப் பரம்பரையைப் பற்றியோ ஆன விவாதங்கள் முற்காலங்களில் நிகழவில்லை. ஆனால் தொல்காப்பியம், கூற்றுக் கோட்பாடும், கேட்போன் பயில்வோன் என்ற தன்மைகளைப் பற்றிய வாசக மையைச் சிந்தனையும் ஆங்காங்கே குறித்துச் செல்கிறது. இந்நிலையில் புரிந்து கொள்ளுதல் என்ற தன்மையைக் கொண்டும் கவிதையை அணுக வேண்டும் என்ற முன்னறிவோடு, வாசக ஏற்பியல் கோட்பாடு (Reader Reception Theory) எங்ஙனம் கவிதைக்கான அழகியலைத் தீர்மானிக்கின்றது என்பதைப் பற்றிய உரையாடலை இக்கட்டுரை மேற்கொள்கிறது. காரணம் கவிதை என்ற ஒழுங்கியல் தான் புழங்குகின்ற தளத்தைச் சுற்றிலும் புதுமாதிரியான அர்த்தப்படுத்தல்களை தரவல்லது. விளக்குமுறையும், வைப்பு முறையும் இதற்கு சான்றுகள். அதேவேளை கருத்தாக்கம் பெறும் புதிய ஊடாட்டங்கள், குறிப்பாக பெண் கவிஞர்களின் எழுச்சி, கவிதை எனும் அரங்கு உலகமயமாக்கப்பட்டதின் விளைவு, குறியீடுகளைக் கடந்து மேலெழுந்து வந்த பின்னோக்க சமுதாய மக்களின் ஆக்ரோஷமான பதிவுகள், மொழியின் இலகு தன்மை போன்றவை கவிதை என்னும் இயல்பு உணர்ச்சியை மொழியைக் கடந்த பரவுதலுக்கு காரணமாக்கியது.
நவீன கவிதையின் இயங்குமுகம் அழகியல் என்ற சூழலியல் தத்துவத்தையோ, மேற்கு உலகத்தின் அமைப்பியல்வாதம் முதலியவற்றையோ முற்றிலும் நிராகரிக்கவும் இல்லை; தனதாக்கிக் கொள்ளவும் இல்லை. கவிதை தன் மையத்திலிருந்து புதிய புதிய பொருண்மை சார்ந்த அடையாளங்களையோ, ஏன் மற்றுமொரு கவிதையையோ தான் தர முயற்சிக்கிறது; தந்திருக்கிறது. ஒவ்வொரு பிரதியும் படைப்பாக்கம் பெறும்போதே மற்றொரு பனுவலை தன்னோடு ஒட்டுண்ணியாய் கொண்டிருப்பது போல ஒவ்வொரு கவிதையும் வாசிப்பு மற்றும் ரசனைச் சமூகத்தைப் பொறுத்து மறுகட்டமைக்கப்படுகிறது அல்லது அதோடு நிறுத்தப்படுகிறது.
கவிதைக்கான ஏற்றுக்கொள்ளபடுதலின் அழகியல் (Aesthetics Reception) அதன் திறனாய்வுக் களமென்றாலும் கூட அறிவுப் புலத்தைத் தாண்டிய ஒரு உளவியல் இணைப்பும் இதோடு காணப்படுகிறது. கவிஞன் செயல்படுத்த நினைக்கின்ற அல்லது சொல்லத் தயாரெடுக்கின்ற காட்சிப் படிமம், அதன் யதார்த்தங்களையும் கடந்து வாசகனின் அறிவுப் பாரம்பரியத்தோடு கொள்ளும் வாதப் பிரதிவாதங்களில் மற்றுமொரு பிரதியை மீள்கண்டுபிடிப்பு செய்கிறது. இந்தச் சூழமைவில் செயல்படுகின்ற வாசக உளவியல், கவி உளவியலையும் தாண்டிய பிம்பங்களை பனுவலின் (பிரதி) மீது கட்டமைக்க முனைகிறது. ஆக திறனாய்வு என்னும் அளவுகோல் வாசக உளவியலையும், படைப்பாக்க உளவியலையும் முன்னிறுத்திக் கொண்டே செயல்பட வேண்டியது அவசியமாகிறது.
கவிதையோடு மறைந்திருக்கின்ற படைப்பாக்க உளவியலின் இடையிட்டுரைத்தலானது (Interpellation) வாசகத் தளத்தில் நிகழும் வாசிப்பு முறை, பொருள் எடுத்தாளும் முறை, மீள் உருவாக்கம் (Re-Productive) முதலியவற்றில் வாசக உளவியலோடு சரிவிகித அளவில் செல்வாக்கு செலுத்துகிறது. ஒருவகையில் கூறினால் மேலாதிக்கம் செய்யும் தலைமையில் (Hegemony) படைப்பாக்க உளவியல் செயல்படுகிறது எனலாம். உலக இலக்கியங்களில் கவிதைக்கு மனித நாகரீகத்தின் அளவிற்கான காலப்பழக்கம் உண்டு. இருப்பினும் நீண்ட வரலாறு கொண்ட ஓர் இலக்கிய வகைமை (Literary Genre) இத்தனை ஆண்டுகால பரிணாமங்களில் சரியாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறதா என்ற கேள்வியை முன்வைத்தால், கவிதை வெறும் ரசனைக்கான பண்டமாகவே நுகரப்பட்டிருக்கிறது என்பதைத் தான் பதிலாகத் தர வேண்டியிருக்கும். கவிதை இதுவரையிலும் அதன் படைப்பாளியை முன்னிறுத்தியே தான் விமர்சிக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் இன்றைய பின்நவீனத்துவச் சூழலில், கவிதையின் அர்த்தத் தாண்டுதலுக்குத் தன் மரபார்ந்த கட்டமைப்புகளை மீறி, வாசகப் புரிதலின் இயங்கியலோடு கொண்டிருக்கின்ற உறவை தெளிவுபடுத்த வேண்டியிருக்கிறது. அதற்கு முக்கிய வெளியாக இருப்பது, வாசக அறிவுப் புலமே.
பல்கோணத் தன்மை : புரிதலும் – முரண்களும்
கவிதை மனித உழைப்பின் பிறிதொரு விளைவான மொழியினை மூலப் பொருளாகக் கொண்டு விளைந்த ஒரு செயல்பாடாகும். ஆதலால் ‘கவிதை மனித உழைப்பிலிருந்து விளைந்தது’ என்கிறார் ஜார்ஸ் தாம்சன். மனித உடலானது தான் பரிச்சயப்படுத்திக் கொண்ட பொருட்களைக் குறியிட்டு, பெயரிடுவதன் மூலம், பொருட்களின் மீதான விரிவான அதிகாரக் களத்தைக் கட்டமைத்துக் கொள்கிறது. இந்நிகழ்வின் உடனிகழ்வாக மொழியும் மொழி சார்ந்த சொல்லாடல்களும் மனித இருப்பை நிர்ணயம் செய்வதற்கான ஒரு வெளியை (Space) உற்பத்தி செய்து கொள்கிறது. இந்நிலையில் பொருட்களின் ‘தானேயான அம்சம்’ இருப்பழிந்து ‘அங்கீகரிக்கப்பட்ட அம்சம்’ – பெயர் அல்லது குறியீடு மட்டுமே எஞ்சுகிறது. சான்றாக, ‘மரம்’ என்ற பொருளைக் குறிக்க உருவான ‘மரம்’ என்ற சொல், ‘ம-ர-ம்’ என்ற ஒலி குறிப்பதே மரம் என்ற பொருளை குறிக்கும் சொல்லாக மாற்றியமைக்கப்படுகிறது. அதேவேளை, ‘மரம்’ என்ற ஒலிக்குறிப்பு இல்லாதவிடத்தும் ‘மரம்’ என்ற பொருண்மை இருக்கும். ஆனால் ‘மரம்’ என்பது பற்றியான கருத்துகள், அதன் இருப்பு போன்றவை மனிதப் பிரபஞ்சத்திற்குள் இருக்காது. அதனால் மரம் குறித்த புனைவுகள், அறிவுகள் உருவாகி இருக்காது. ஆக ஒரு பொருண்மை இருந்த போதும், அது குறித்த பொதுக்கருத்து (Concept) இல்லாத போது அப்பொருண்மை மனித உடலின் வெளியே இயக்கமற்ற, இருத்தலற்ற ஒன்றாகவே கருதப்படும். எனவே இங்கு பொருளின் மீதான அதிகாரக் களம், அறிவுருவாக்கத்தின் மூலம் கருத்துகளின் அதிகாரக் களமாக விரிவடைகிறது.
படைப்பு மனம் உருவாக்கித் தருகின்ற மொழி அல்லது சொல்லுருவங்கள் அதற்கேயான புழங்குதள அரசியலை தன் பின்னணியில் கொண்டிருக்கின்றது. இதைப் புரிந்து கொள்ளும் படியான பிரதி சார்ந்த உரையாடல்களும் விமர்சனங்களும் அதிகாரத்தின் மற்றொரு கருத்து நிலையை வாசிப்பின் ஊடே கண்டடைகிறது. “மனம் சார்ந்தும் X உடல் சார்ந்தும் பிளவுண்ட மொழியானது உடல் X மனம் என்கிற முரணை முன்னுக்குக் கொண்டு வந்து மனதை, உடல் மீது ஆதிக்கம் செய்யும் தொழில் நுட்பமாகக் கட்டமைத்த மூலகங்களின் ஒன்றாகவே கவிதையின் செயல்பாட்டை அறிய முடிகிறது” (ஜமலான்:ப.62). ஸ்விஸ் மொழியியல் அறிஞரான ஃபெர்டினன்ட் சசூர், மொழி என்பது வேறுபாடுகளின் அமைப்புமுறை என்கிறார். அதுமட்டுமல்லாது மொழிக்குறி பற்றி, ‘அதன் மிகத் துல்லியமான சிறப்புப் பண்பு என்பது, மற்றவை எப்படி இல்லையோ அப்படி இருப்பது தான்’ என்கிறார். இந்தக் கோட்பாடு வாசகப் புரிதலுக்கும் பொருந்தும். ஆனால் இந்த வேறுபாட்டை வாசனும், படைப்பாளனும் தனித்தனி அலகுகளைக் கொண்டு பரிச்சயப்படுத்திக் கொள்கிறார்கள். அவ்வளவே. இதன் விளைவாகக் கவிதை என்னும் பனுவல் பல்கோணத் தன்மை அடைகிறது.
கவிதைக்கான நுகர்வின் வீச்சைப் பற்றிப் புரிந்து கொள்ள, வாசகனின் மனம் கவிதையின் மனத்தோடு பிணைக்கப்படுவதால் ஏற்படும் உணர்வெழுச்சிகளைக் கொண்டு கவிதை அளந்தறியப்பட்டது. இதனூடே இரசனை முறை என்கிற நாகரீகம் சார்ந்த கருத்துப் புனைவு, பின்னப்படுத்தப்பட்டு; வளர்த்தெடுக்கப்பட்டு, அதனைப் பொதுமைப்படுத்துவதன் மூலமாக அழகியல் போன்ற சமூக ஒழுங்குமுறை சார்ந்த வன்முறைக் கருவிகள் கட்டமைக்கப்படுகிறது. இதுவே கலாச்சாரம், நாகரீகம் என்பதாக பிற்பாடு அமைப்பாக்கம் பெறுகிறது. மதம் எவ்வாறு அறவியலைத் தன் நனவிலி தள ஒழுங்கமைவாகக் கொண்டிருக்கிறதோ அதுபோல கவிதை, ‘அழகியலை’க் கொண்டிருக்கிறது.
சமூக அனுபவத்தை தனிமனிதன் என்னும் ஒழுங்கமைப்பைக் கொண்டு அளந்து, அர்த்தப்படுத்துவதே கவிதை அழகியல் கோட்பாடாகும். தனக்கான அனுபவக் கிடங்காக கவிதை பற்றிய மதிப்பீடுகள் உருவாவதில் இதுபோன்ற ஒழுங்கமைவின் சாரங்கள் மிகுந்துள்ளதை மறுக்க இயலாது. மேலும் இது மனதின் சுய அனுபவமென்னும் அதிகாரத்தின் நிகழ் தகவுக்கு உட்பட்டு தேர்ந்து கொள்ளக் கூடிய ஒன்றாக உள்ளது. கவித்துவம் என்று சொல்லப்படும் ஒரு புனைவு வெளியை இது கட்டமைக்கின்றது. இவ்வெளியுடன் தன்னை இணைத்துக் கொள்ளும் படைப்பாக்க மனது, ஒரு கற்பனாவயப்பட்ட உன்மத்த நிலையை அடைகிறது. மனித அக உணர்வுகளை இந்த உன்மத்த நிலையிலிருந்து கொண்டு பிரதியாக்கம் நிகழ்த்துகையில் மொழியின் இலகு தன்மை நெகிழ்வுறுகிறது. இது சில வேளைகளில் ஆகச்சிறந்த (Masterpiece) படைப்பாக மாறவும் செய்கிறது.
கவிதை ‘அனுபவம்’ என்கிற சுதந்திரமற்ற இருப்பையே பேசுபொருளாகக் கொண்டு இயங்குகிறது. இதன் வழி உருப்பெறும் ‘தனிமனிதன்’ என்கிற பிம்பமானது ஒப்பிடற்கரிய நிலையை அடைகிறது. சமூக வரையறைகளுக்கு அப்பால் இருக்கும் இத்தனிமனிதன் – தனது இருப்பை காத்துக் கொள்ள வேண்டி உருவாக்கும் துணை பிம்பங்களின் ஊடாக அது பேசப்படும் கவிதையை சாகாத்தன்மையான ஒன்றாக மாற்றுகிறது. “இன்றைய அகவுணர்வு சார்ந்த கவிதைகளில் ‘தனி மனிதன்’ என்பவனின் சுயம், பிரக்ஞை பற்றிய ஒருவகை அதீத, நுட்பமான சித்தரிப்புகளைக் காணலாம். இவை பேசும் மனிதத் தன்னிலையானது ‘நுண்ணுணர்வு’ பிரக்ஞை, உள்ளுணர்வு, பொறி போன்ற நுட்பமான கருத்திய மொழிகளால் பின்னப்படுவையே.” (ஜமாலன்:பக்.64-65)
கவிதையின் அறிதல் (Familiarization) ஏற்படுத்தும் புதிய உணர்வுகள் கவிதையின் புதிய சொல்லாக்கங்களினால் ஏற்படுகிறது. நமக்கு ஏற்கனவே அறிமுகமான, அர்த்தப்படுத்தப்பட்டுவிட்ட ஒரு பொருளின் மீது புதிய வகை உணர்வு ஆக்கங்களை உள்ளடக்கியபடி எழுதப்படும் கவிதையானது இதுவரை பரிச்சயமான ஒரு பொருண்மையை மற்றொரு பரிணாமத்திலிருந்து பார்க்க வகை செய்கிறது. இந்தப் புதிய நுவல் முறையால் கிளர்ந்தெழும் வாசகன், புதிய அனுபவத்தால் ஈர்க்கப்படுகிறான். ஆனால் ஏற்கனவே தனக்கான அணுகுமுறைகளுடன் / தன்னிலை இயல்புடன் ஒரு கவிதையை வாசகன் அணுகுகையில் முரண்களின் மோதல் களமாக வாசகத் திறனாய்வு அமைகிறது.
“பிரதியின் அர்த்தம் பற்றிய எந்த விவாதமும் கேட்பது / படிப்பது என்ற செயற்பாங்கினால் தான் சாத்தியம் ஆகிறது. ஏனெனில் ஒரே பிரதி பலவிதமாகப் படிக்கப்பட முடியும். ஆனால் உண்மையில் இந்தச் செயலைப் புரிபவன் வாசகன் தான். பிரதியின் மொழி ஒழுங்கமைவில் புகுந்து பிரதியின் அர்த்தத்தை இருப்பு நிலைக்குக் கொண்டு வருபவன் வாசகனே. அவன் அர்த்தத்தை வெளியே கொண்டு வராவிட்டால் அர்த்தம் பிரதிக்கு உள்ளே மறைந்து தான் இருக்கும் என்பது குறிப்பு” (கோபிசந்த் நாரங்: ப.272). ஆக பிரதிக்குள் காலியாக இருக்கும் சில இடங்களை வாசகன் தான் இட்டு நிரப்ப முடியும் என்பது முடிவாகிறது. வெற்றிடங்களை நிரப்ப வாசகன் தேர்ந்தெடுக்கும் பதிலீடுகள் எவை என்பது குறித்த விவாதங்களின் வழி வாசக விமர்சனக் கோட்பாடு உருவாகிறது. ஆனால் சட்டதிட்டமான ஒரு வகுப்பினுள் இதை அடக்க இயலாது. ஏனெனில் இந்த விமர்சனத்தில் பல்திறப்பட்ட மனப்பான்மைகள் செயல்புரிவதால் இந்தச் சிக்கல் ஏற்படுகிறது.
கவிதைக்களம் : வாசிப்பின் ஊடுபாவுகள்
உலகின் எந்த மொழியாயினும் அது சொல்லினது பொருள் மாறுபாடுகளின் (Differences) அடிப்படையிலேயே கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பது அமைப்பியல்வாதிகளின் கருத்து. மனிதர்கள் மொழிக்குள் வாழ்கிறார்கள். அவர்களது மொழி என்னவாக இருக்கிறதோ அதுவாக அவர்கள் ஆகிறார்கள். இதன் பொருள் உலக யதார்த்தங்கள் (Reality) மொழியின் மூலமாகத்தான் அவர்களுக்குள் கலக்கின்றன என்பதுதான். தான் இயங்குகின்ற தளத்தோடு சேர்ந்த இணைவுகளோடு வாழப் பழகிக் கொண்ட ஒரு மனிதன் தன்னுடைய முன் அனுபவங்களின் வாயிலாக தனக்கு முன் வருகின்ற கருத்துக்களை எதிர்கொள்கிறான். ஆனால் மொழியோ எந்த விதிகளுக்குள்ளும் அடக்க முடியாதபடி காட்டு விலங்காய் மனிதர்கள் உலகில் வினைபுரிகிறது. இதன் விளைவாக வரலாறு, பண்பாடு எல்லாமே மனிதர்களின் அறிவால் புரிந்து கொள்ள முடியாத புதிர்களாய் நின்று, அவர்களுக்குள் வலியையும் பயத்தையும் பெருக்குகின்றன. இந்த வலிகளையும் பயங்களையும் எதிர்கொள்ளுகிற தளத்தில் தான் மனிதர்களுக்கான இலக்கிய உற்பத்தி நடந்திருக்கிறது. யதார்த்தங்களை மீறீய பதிவுகளை இலக்கிய ஆக்கங்களின் உள்ளீடாகப் நிறுத்துவதின் வழி வாழ்வியலுக்கும் மொழியின் அடைவுகளுக்குமான இணக்க நிலை என்றும் சரிவிகிதமின்றியே இருந்து வந்திருக்கிறது. இந்தப் பின்புலத்தில், ஒரு பிரதியை அணுகும் வாசகனுக்கு ஏற்படுகின்ற முரணியக்கங்கள் மற்றுமொரு பிரதியை உருவாக்குகின்றது. இந்தப் பிரதி மூலப் பிரதியின் வாசிப்பினை ஒத்திருக்க வேண்டிய ஒரு அவசியமுமில்லை.
மொழி காலந்தோறும் தனக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொண்டே வந்திருக்கிறது. அவ்வகையில் தொண்ணூறுகளில் தமிழ்க் கவிதைகளில் இடம்பிடித்த தலித்தயம் சார்ந்த பார்வைகள், மாற்றுச் சாதியம் என்ற தளம் நோக்கி நகர்ந்தது. ஈ.வே.ரா. பெரியாரின் மாற்றுச் சிந்தனை, இதற்கு அடிப்படையாகியது. தனித் திராவிடக் கருத்துநிலைகளிலிருந்து விலகி நின்று ஒட்டுமொத்தச் சமூக இணைவிற்கான தனிமனிதச் சிந்தனை மாற்றம், அதன் வழியான சமச்சீரான சமூக உருவாக்கம் என்பவற்றைப் பதிவு செய்ய முயலுகின்ற நிலை தோற்றம் கொண்டது. கணையாழி, புதிய பார்வை, சுபமங்களா போன்ற சிற்றிதழ்கள் இதனைக் கையெடுத்தன. வர்க்க மற்றும் மனுதர்ம சாஸ்திரங்கள், கோட்பாடுகளாக்கப்பட்ட ஆதிக்க மேலாண்மைகள் ஆகியவற்றினால் விலங்கிடப்பட்ட மனித இனம் குறித்தும் (இதனுள் பால்பேதம் இல்லை என்பது இங்கு நினைவு கொள்ள வேண்டும்); அதன் இருப்பு குறித்தும் தொண்ணூறுகளின் கவிதைகள் பேசின. பிற்பாடான தமிழ் சிற்றிதழ் வளர்ச்சி இந்த உரையாடலை மேலை நாட்டுக் கோட்பாடுகளோடு இணைத்துக் காண முயன்றதன் விளைவாக சில பின்நவீன உணர்வுநிலைக் கவிதைகள் உருவாகின. மேற்கத்தியக் கோட்பாடுகள் முன் வைக்கின்ற கட்டுடைப்பு மற்றும் மையம் தகர்த்தல் ஆகிய கருத்தாக்கங்களைப் பேச முயலுகின்ற கவிதைத் தளங்கள் உருவாக்கப்பட்டன; உருவாயின. “மற்றெந்த இந்திய மொழிகளைவிடவும் தமிழில் நவீனத்துவத்தின் தடத்திலான பாதிப்பு அதிகமானது. யதார்த்தவியல் சார்ந்த எழுத்துகளுக்கும் மொழி ரீதியாக இறுக்கமான படைப்புகளுக்குமாக பழகிப் போனது நம் வாசிப்பு” (க.மோகனரங்கன்: ப.63). கட்டிதட்டிப் போன வாசிப்பு நிலைகளிலிருந்து கொண்டு கவிதையின் வேறொரு பரிணாமத்தை அடையாளப்படுத்தும் உரையாடல் களங்களும் / வாசகனை மையமிட்ட திறனாய்வு அணுகுமுறைகளும் தமிழ் சூழலில் அன்று உருவாக்கப்பட்டது.
நவீனம் தாண்டிய கவிதை, படைப்பாளியின் சட்டகத்தை மீறி படைப்பாளி, படைப்பு, வாசகன் என முப்பரிமாண நிலைப்பாட்டில் உயிர்ப்புமிக்க மொழியின் செயல்பாடாக மாறுகிறது. ஒற்றை அர்த்தம் என்பதைத் தாண்டி வாசகனின் அர்த்தப்படுத்தல்களில் மிக அதிக கவனத்தை குவிக்கிறது. நுகர்விய சந்தைப் பொருளாக மட்கிப்போகாமல், பயன்பாட்டுக்கு பின்பும், புதுப்புது உலகங்களை அவனிடம் கொண்டு வந்து சேர்க்கிறது. பிரதியின் பின்னணியில் கவிதையின் மேற்பரப்புத்தளம் ஆழ்நிலைத் தளத்தோடு, இருதள இயக்கமாகவும், பிரதியின் சூழல் பின்னணியில் பல்வித அர்த்தப் பரிமாணங்களோடு பன்னொலிமப் பண்பினையும் சொல்வெளியில் அது படைக்கிறது. ஆதலால் இங்கு ஒற்றைப் பிரதிகூட பல்விதக் குரல்களுடன் வெவ்வேறு அலகுகளின் ஊடிழைப்பனுவலாக மாறிவிடுகிறது.
இருப்பின் (Existence) குரலை, ஒற்றைப்போக்காக அல்லாமல் பன்மைத்துவ அடையாளமாக அணுகுதல் அதன் சூழல் சார்ந்த படைப்பின் அடையாள அரசியலாக கருதலாம். இதுவே அடையாளம் ததும்பும் புதுவெளிகளை கவிதைப் படைப்புலகில் பல மட்டங்களில் உருவாக்கிக் காட்டுகிறது. உயர்குடி மனோபாவமும், நகர்புற நடுத்தர வர்க்கத்தின் முணுமுணுப்புகளும் விலக்கப்பட்டு அடித்தள மக்கள் மொழியும் தொன்ம, வழக்காறுகளும், குறிமப் பண்புகளோடு நவீன கவிதையில் விகசிக்கிறது. நவீனத்துவத்தில் மிகத் தீவிரமாக ஒலித்த தனிமனித பிரக்ஞை நவீனம் தாண்டிய கவிதைவெளியில் கூட்டுமனப் பிரக்ஞையாக முகிழ்க்கிறது. இந்த மீள்பரிணாமம் (Transformation) வாசிப்பின் ஊடே பிரதி கடந்து செல்கையில் நிகழ்கிறது.
படைப்பாளியின் ஆதிக்கத்தை நிராகரிக்கும் வாசக மைய விமர்சனம் (Reader oriented criticism) பன்முகத் தன்மை கொண்ட விளக்கங்களுடன் பிரதியின் வாசிப்பில் வாசகனைத் தனது பங்காளியாக்கிக் கொள்கிறது. அதுமட்டுமல்ல, வாசிப்பின் சில கணங்களில் படைப்பாளிக்கு மாற்றாக வாசகனை ஆளுமை மிக்க பதிலியாக முன்வைக்கிறது. அதாவது நிரந்தரமான ஆளுமையாக, அதீதமான அர்த்தத்தின் பிறப்பிடமாக வாசகனை நிலைநாட்டுகிறது.
“வால்டர் ஜே.ஸ்லாடோஃப், With Respect to Readers என்ற நூலில் இவ்வாறு எழுதுகிறார் : வரலாற்றின் வெவ்வேறு காலங்களில் வாசகர்கள் எவ்வாறு பிரதியை வாசிக்க வேண்டும் என்ற எந்தக் கட்டுப்பாடும் கொண்டு வர முடியாது. பிரதியின் உருவம் சார்ந்த சிறப்புத் தன்மைகள், தம்மீதான எதிர்வினைகள் இவ்வாறு தான் இருக்கும் அல்லது விளக்கங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு உத்திரவாதம் அளிக்க முடியாது. ஏனெனில் வாசகனுக்கு அதன் அர்த்தத்தை தன் போக்கில் கிரகித்துக் கொள்ள உரிமை உண்டு. ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னுடையதான இயல்பு, அனுபவம், பயிற்சி, முற்சார்புகள் மற்றும் மதிப்பு சார்ந்த முன்னுரிமைகள் உண்டு.” (கோபிசந்த நாரங்க்: ப.266) சரியாகச் சொன்னால் புரிதலின் செயல்பாடு பார்வையாளன் (இங்கு வாசகன்) பார்க்கிற கோணத்தைப் பொறுத்தது. பார்க்கும் கோணம் மாறுவதால் புரிதலின் அர்த்தமும் மாறுகிறது.
கவிதை முதலில் தன் வடிவத்துடன் புற உலகோடு தொடர்பு கொள்கிறது. தனது வகைமை இத்தகையது என்ற வியாக்கியானத்தோடு தன்னை வெளிப்படுத்தத் தயாராகிறது. தன்னை நிறுவிக் கொள்கிறது. கவிஞன் அல்லது வாசகன் அல்லது உலகம் பற்றிய மற்ற பொருள்களுடனான உறவு பிறகு தான் ஏற்படும். “கவிதை பிற இலக்கிய வகைமைகளிலிருந்து தன்னை மையப்படுத்துவதில் அதன் வடிவம் மிக முக்கியமானதாக அமைகிறது. உரை நடையோடு ஒப்பு நோக்குகையில் கவிதை காலம் சார்ந்தும் இயல்பூக்கம் பெறுவதற்கு இதுவே காரணமாகிறது. காலத்திற்கொத்த வடிவம் கவிதையின் இருப்பை தக்கவைத்துக் கொள்ளவதில் காரணியாகிறது.” (ஆனந்த்: பக். 10)
முடிவுரை
கோட்பாடுகள் என்ற சொல்லாடலும் அதைச் சுற்றிய விவாத விமர்சனங்களும் அய்ரோப்பிய இலக்கியங்களின் பரிச்சயத்தாலே தான் தமிழகச் சூழலில் அறிமுகமானது. குறிப்பாக 80களுக்குப் பிறகு. நவீனத்துவத்தின் இயலாமைகளைக் கேள்விக்குள்ளாக்கும் பின் நவீனத்துவ சிந்தனைகள் இங்கு விவாதங்களுக்கு ஆளானதும் மேற்சொன்ன அறிமுகத்திற்குப் பிற்பாடான இலக்கியச் சூழலில்தான் எனலாம். இதன் வழி, கவிதை என்ற இலக்கிய வகைமை தனக்கு முந்தைய மரபிலிருந்தும் யாப்பு முறையிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டது. இலக்கியங்கள் மேலார்ந்த வாழ்வியலைப் பேசுவன என்ற பொதுவான கருத்து நிலையிலிருந்து விலகி, இலக்கியம் ஒதுக்கி வைத்திருப்பவற்றைப் பேசுவதற்கான களத்தை பின்நவீனத்துவக் கோட்பாடுகள் ஏற்பாடு செய்தன. ஒழுங்கான இலக்கியத்திலிருந்தே ஒழுக்கமற்றவைகளைக் கண்டுபிடித்தது இவ்வகையான விமர்சனப் போக்குகள் என்பதே அதன் முரண்.
தமிழ்கவிதைச் சூழலில், ‘சமூகவெளி’ பரவலான பொது அனுபவ வெளியைச் சார்ந்து இயங்கியது. நேரடிப் பிரகடனம், ஒற்றைத் தள புரிதல், வாழ்வியலின் புறப்பிரச்சனைப்பாடுகளை மையப்படுத்துதல், புனைவியல் சொல்லடுக்குகளை உற்பத்தி பண்ணுதல், நிறுவனம் சார் அரசின் ஒடுக்குமுறை மீது எதிர்ப்புணர்வை காட்டுதல் என்பதான வெவ்வேறு வகைப்பட்ட தளங்களில் இதன் போக்குகள் வெளிப்பட்டன. மற்றுமொரு முக்கியப்போக்காக வெளிப்பட்ட ‘தன் அனுபவவெளி’ பிறருக்கு தட்டுப்படாத தனித்த மாறுபட்ட படைப்புலகமாகத் தென்பட்டது. பிரபஞ்சம் சார்ந்த எல்லா உயிர்களிடத்தோடும், பொருட்களோடும் உறவாடும் மர்மத்தன்மை பொருந்திய நுண் அனுபவங்கள் படைப்பில் பிரதியாக்கம் செய்யப்பட்டன. குழந்தைகளின் உலகத்தோடும், காதலோடும், தாய்மையின் பரிதவிப்போடும், தொலை தூரமாகிவிட்ட உறவுகளின் சிதைவுகளோடும் உரையாடலை நிகழ்த்தின.
காட்சிப்பதிவுகளின் ஊடே தன் உள்ளக்கிடக்கையை பதிவு செய்தல் தான் கவிதையின் இயல்பு. கவிதை செயல்படுகின்ற காட்சித் தளத்தில் நிறுத்தப்படுகின்ற காட்சிப் படிவங்கள், கவிதைப் பொருள் மீறின ஒன்றை அடையாளப்படுத்துகையில் வாசகனுக்குத் தகுந்தபடி மீள் பொருண்மைகள் பகிர்ந்து அளிக்கப்படுகின்றன. ஒவ்வொரு காலகட்டத்திலும் எப்படிப்பட்ட சொல்லாடல்கள் உருவாக்கப்படுகின்றன என்பதே அச்சூழலின் படைப்புச் சக்திக்கான அடையாளமாக இருக்கிறது. கவிதையில் வாசகர் இயங்கிக்கொண்டிருக்கும் போது இது போன்ற பல மாறுபட்ட தளங்கள் வந்து கொண்டேயிருக்கும். உதாரணமாக வாசகர், ‘அலை’ என்ற சொல்லை தேர்வு செய்யும் போது குறிப்பானுக்கும் குறியீடுக்கும் வேறுபாடிருக்கும் என்பதன் அடிப்படையில் கவிதை இயங்கத் துவங்குகிறது.
நவீனம் தாண்டிய கவிதை, படைப்பாளியின் சட்டகத்தை மீறி படைப்பாளி, படைப்பு, வாசகன் என முப்பரிமாண நிலைப்பாட்டில் உயிர்ப்புமிக்க மொழியின் செயல்பாடாக மாறுகிறது. ஒற்றை அர்த்தம் தாண்டி வாசகனின் அர்த்தப்படுத்தல்களில் மிக அதிக கவனத்தை குவிக்கிறது. நுகர்விய சந்தைப் பொருளாக மட்கிப்போகாமல், பயன்பாட்டுக்கு பின்பும், புதுப்புது உலகங்களைக் கொண்டு வந்து சேர்க்கிறது. பிரதியின் பின்னணியில் கவிதையின் மேற்பரப்புத்தளம் ஆழ்நிலைத்தளத்தோடு, இருதள இயக்கமாகவும், பிரதியின் சூழல் பின்னணியில் பல்வித அர்த்தப் பரிமாணங்களோடு பன்னொலிமப் பண்பினையும் சொல்வெளியில் படைக்கிறது. இங்கு ஒற்றைப் பிரதிகூட பல்விதக்குரல்கள் வெவ்வேறு அலகுகளின் ஊடிழைப்பனுவலாக மாறிவிடுகிறது. பிரதி கட்டமைக்கின்ற படைப்பாளி – வாசகன் இருவருக்குமிடையேயான பொருந்தாமையின் வெற்றிடம் (Vacuum of Dissonance) தான் ஒவ்வொரு பிரதியினுடையவும் / பனுவலினுடையவும் யதார்த்தமான அகமி எனலாம்.
படைப்புகளின் வழி நின்று தோற்றம் கொள்ளுகின்ற சமீபகால ஆய்வுகள் காலங்காலமாக படைப்பு நோக்கில் செயல்படவில்லை. மாற்றாக அது படைப்பாளனை குருபிம்பமாக்கும் செயல்பாட்டின் ஊடுவிளைவாக இயங்குகிறது. இதிலிருந்து விலகி, பிரதியின் மீதான வாசிப்பும் அதன் அடுத்த கட்டமான திறனாய்வும் பிரதி உருவாக்குகின்ற யதார்த்த பிரதியினை அடையாளம் காட்ட முனைந்தால் மட்டுமே வாசக ரசனைச் சுழற்சி முழுமையடையும்.
துணை நின்றவை :
- ஜமாலன், மொழியும் நிலமும்,
- க.மோகனரங்கன், சொல் பொருள் மௌனம், யுனைட்டெட் ரைட்டர்ஸ், சென்னை.
- கோபிசந்த நாரங்க்,அமைப்பு மைய வாதம் மற்றும் கீழைக்காவிய இயல், சாகித்ய அகாதமி, சென்னை.
- ஆனந்த், கவிதை எனும் வாள்வீச்சு, காலச்சுவடு, சென்னை.
-
மனிதர்கள் எதனால் வாழ்கிறார்கள்?—(What Men Live By) (8)
லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)
தமிழாக்கம்- சற்குணா பாக்கியராஜ்வருடங்கள் வந்து மறைந்தன. மைக்கேல், சைமன் வீட்டிற்கு வந்து ஆறு வருடங்களாகி விட்டன. மைக்கேலின் வாழ்க்கையில் ஒரு மாற்றமும் இல்லை. அவசியத்திற்கு மாத்திரம் பேசினான். இந்த ஆறு வருடங்களில் இரண்டு முறைதான் புன்னகைத்திருந்தான். முதல் முறை மெட்ரீனா உணவு கொடுத்த போதும், இரண்டாவது செல்வந்தர் பூட்ஸ் தைக்க வந்த போதும்தான். சைமன் மைக்கேலிடம் எங்கிருந்து வந்தாயென்று கேட்பதேயில்லை. அவன் தன் வீட்டிலிருந்து போய் விடக்கூடாதே என்றுதான் கவலைப்பட்டான்.
ஒரு நாள் காலை, என்றும் போல் மைக்கேலும் சைமனும் சன்னல் அருகிலிருந்து செருப்புத் தைத்துக் கொண்டிருந்தனர். சைமனின் பிள்ளைகளும் அருகேயிருந்து விளையாடிக் கொண்டிருந்தனர். தீடிரென்று ஒரு மகன், விளையாடுவதை நிறுத்தி விட்டு, மைக்கேலை அணுகி, “மாமா, கொஞ்சம் வெளியே பாருங்கள். ஒரு அம்மா இரண்டு சிறுமிகளைக் கூட்டிக் கொண்டு நம் வீட்டை நோக்கி வருகிறார்கள். ஒரு சிறுமி நொண்டிக் கொண்டு வருகிறாள்”, என்றான். உடனே மைக்கேல் செய்து கொண்டிருந்த வேலையை விட்டு விட்டுச் சன்னல் வழியாகத் தெருவைப் பார்த்தான். சைமனுக்கு ஒரே ஆச்சரியம். இத்தனை ஆண்டுகளும் மைக்கேல் தெருவைப் பார்த்ததில்லை. சைமனும் தெருவைப் பார்த்தான். ஒரு பெண்மணி இரண்டு சிறுமிகளின் கைகளைப் பிடித்துக் கொண்டு அவர்களின் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தாள். ஒரு சிறுமி நொண்டிக் கொண்டு நடந்ததைத் தவிர இரண்டு பேரும் பார்வைக்கு ஒன்று போலிருந்தனர். இரண்டு சிறுமிகளும் உரோமக் கோட்டுகளும் சால்வைகளும் அணிந்திருந்தனர்.
அந்தப் பெண்மணி, இரண்டு சிறுமிகளோடு சைமனின் குடிசைக்குள் நுழைந்து, மேசை அருகில் உட்கார்ந்தாள். இரண்டு சிறுமிகளும் புதிய மனிதர்களைக் கண்டு பயந்து அந்தப் பெண்மணியின் முழங்கால்களின் அருகே நின்று கொண்டனர். சைமன் அந்தப் பெண்மணியை வாழ்த்தி விட்டு “நான் உங்களுக்கு என்ன உதவி செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.
“இந்தச் சிறுமிகளுக்கு வசந்தக் காலத்திற்கு அணியச் சப்பாத்துகள் வேண்டும்” என்றாள்.
“நாங்கள் இதுவரையிலும் இவ்வளவு சிறிய சப்பாத்துகள் தைத்ததில்லை. ஆனால் தைக்க முடியும். எனக்கு உதவி செய்யும் மைக்கேல் இந்தச் சிறுமிகளின் சப்பாத்துகளைத் தைப்பானென்று கூறி விட்டு மைக்கேலைத் திரும்பிப் பார்த்தான். மைக்கேல் அந்தச் சிறுமிகளையே பார்த்துக் கொண்டிருந்தான். இரண்டு சிறுமிகளும் அழகாகவும் ஆரோக்கியமாகவும் காணப்பட்டார்கள். ஆனால் அவன் அந்தச் சிறுமிகளைப் பார்த்துக் கொண்டிருந்த விதம் அவர்களை அவனுக்கு முன்பே தெரிந்திருக்கக் கூடும் போலிருந்தது. சைமனுக்குப் புதிராக இருந்தது. அவன் அதை வெளிக்காட்டாமல் அந்தப் பெண்மணியிடம் சிறுமிகளின் காலளவு எடுக்க வேண்டுமென்றான். அவள் ஊனமுற்ற சிறுமியை மடியில் இருத்தி, இவளுடைய கால்களின் அளவுகள் போதும். ஒரு அளவு ஊனமுற்ற காலுக்கும், மற்ற கால் அளவில் மூன்று சப்பாத்துகள் தைக்கலாம். ஏனென்றால் இவர்கள் இரட்டைக் குழந்தைகள். இரண்டு பேருடைய காலளவுகளும் ஒன்றுதான் என்றாள். சைமனும் காலளவுகளை எடுத்துக் கொண்டு “இந்த அழகிய சிறுமி பிறக்கும் போதே இப்படித்தான் பிறந்தாளா?”என்று கேட்டான்.
“இல்லை, இவள் தாய் காலை நசுக்கி விட்டாள்”.
இதுவரையிலும் அமைதியாக இருந்த மெட்ரீனா “அப்படியானால் இவர்கள் உன்னுடைய குழந்தைகளில்லையா?” என்று கேட்டாள்.
“நான் இவர்களின் தாய் அல்ல, சொந்தமுமல்ல”, நான் இவர்களைத் தத்து
எடுத்திருக்கிறேன்”.“அப்படியா, நீ இந்தக் குழந்தைகளிடம் இத்தனைப் பிரியம் வைத்திருக்கிறாயே!”, என்றாள் மெட்ரீனா.
“எப்படி அன்பு வைக்காமல் இருக்க முடியும்? நான்தான் இவர்களுக்குப் பாலூட்டி வளர்த்தேன். எனக்கு ஒரு மகன் இருந்தான். அவன் இறந்து விட்டான். என் மகனை விட நான் இவர்களை நேசிக்கிறேன்”.
“அப்படியானால் இவர்கள் யாருடைய குழந்தைகள்?”
தொடரும்
-
நான்காமவத்தையும் அகநானூறும் – உரையாசிரியர்களின் உரைகளை முன்வைத்து ஓர் ஆய்வு
-பேரா. பீ.பெரியசாமி
1:0. முன்னுரை
நான்காமவத்தையாவன, பாராட்டெடுத்தல், மடந்தபவுரைத்தல் ஈரமில் கூற்றம், ஏற்றலர் நாணல், கொடுப்பவை கோடல் எனும் நான்குமென தொல்காப்பியர் கூறியுள்ளார். (தொல்.மெய்.16) இதனை விளக்க உரையாசிரியர்களின் உரையும் அகநானூற்றுப் பாடல்களும் குறித்து இப்பகுதி ஆரயவுள்ளது.
1:1 பாராட்டெடுத்தலும் அகநானூறும்
பாராட்டெடுத்தலாவது, “தலைமகள் நின்றநிலையுங் கூறிய கூற்றையும் தனித்த வழியும் எடுத்துமொழிதல்”. (இளம். மெய்.16) எனவும், “புணர்ச்சி நிகழ்ந்த பின்னர்த் தலைமகனை இயற்பட நினைவுங் குறிப்பும்; இது பாராட்டென்னாது எடுத்தலென்றதனால் அதனை உள்ளமெடுத்தன் மேற்கொள்க. இது தலைமகற்கும் ஒக்கும்.”( பேரா. மெய்.15) எனவும், “புணர்ந்த பின் தலைமக்கள் ஒருவர் மற்றவரின் நல்லியல்பினை வியப்பதாகும்.”( பாரதி. மெய்.16) எனவும், “புணர்ச்சி நிகழ்ந்த பின்னர்த் தனது ஆராக்காதலுணர்வு மாறாமை விளங்கத் தலைவியின் நலம் முதலியவற்றையும் தலைவியின் பண்பு முதலியவற்றைப் புனைந்து தனது மீளா வேட்கையைத் தலைவன் விதந்து கூறலின் பாராட்டல் என்னாது பாராட்டு எடுத்தல் என்றார். இஃது இருவர்க்கும் ஒக்குமாயினும், “காமத் திணையிற் கண்ணின்று வழுஉம் நாணு மடணும் பெண்மைய வாகலின் குறிப்பினும் இடத்தினும் அல்லது வேட்கை நெறிப்பட வாரா அவள்வயி னான” (கள.18) என்பது மரபு பற்றிய விதியாகலின் தலைவி பாராட்டுதல் அவள் உள்ளத்தே நிகழுமென அறிக. தலைவன் பாராட்டுதல் வெளிப்படையாக நிகழும் என்க.” (பாலசுந். மெய்.16)எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர்.
பாராட்டெடுத்தலென்பது, இயற்கைப் புணர்ச்சி நடந்தபின் தலைவனைத் தலைவியும் தலைவியைத் தலைவனும் பாராட்டுதல் இயல்பு. தலைமக்களின் அழகு, அறிவு, செய்கை, இயல்பு என ஒருவருக்கொருவர் பாராட்டிக் கொள்ளுதல் அவர்களின் காதல் பரிமாற்றத்தில் ஒன்று. இது காதல் அன்பைப் புலப்படுத்துவது. இதனை விளக்க பாரதி குறுந்.3, 193, குறள்.1130 ஆகிய பாடல்களையும்; பாலசுந்தரம், குறுந்.2, 3 ஆகிய பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.
1:2 மடந்தபவுரைத்தலும் அகநானூறும்
மடந்தபவுரைத்தலென்பது, “பெண்டிரது இயல்பாகிய மடப்பங்கெடச் சில கூறுதல். அது தலைமகன் கூற்று நிகழும் வழியதற்கு மாற்றங் கொடுத்தலன்றித் தன் வேட்கை தோன்றக் கூறுஞ் சொல்” (இளம். மெய்.16) எனவும், “விளையாடும் பருவத்து நிகழ்ந்த அறிமட நீங்கக் காமப் பொருட்கண்ணே சிறிதளவு தோன்றுதலும்; உரைத்த லென்றதனால் அக்காலத்துப் பாங்கிக்குச் சில கூற்றுமொழி கூறவும் பெறுமென்பது கொள்க. அவை மேலை யோத்துக்களுட் கூறப்பட்டன. மடந்தபவுரைத்தற்கு ஏதுவாகிய கருத்து ஈண்டு மெய்ப்பாடெனப்படும்.” (பேரா. மெய்.16) எனவும், “பேதைமை யொழியப் பேசுதல் முன் காமஞ்சாலாக் காலமெல்லாம் களவறியாத் தலைவி களவிற் றலைவனை மணந்தபின் முன்னைய குழவி நீர்மை கழிய தேர்ந்துரையாடத் தேறுதலியல்பு. அந்நிலைதான் மடம் தபுதல் (மடம்=கள்ளமற்ற பிள்ளைத் தன்மை. தபுதல் =கெடுதல், நீங்குதல்) அவ்வறிமடநிலையிற் றேர்த் துரையாடலே மடம்தப உரைத்தலெனக் குறிக்கப்பட்டது.” (பாரதி. மெய்.16) எனவும். உரையாசிரியர்கள் உரைகொள்வர்.
தலைவி புணர்ச்சிக்குமுன் இருந்த நிலையிலிருந்து மாறிப் பேச்சில் ஒரு முதிர்ச்சி வெளிப்படல்; அவளுடைய மடப்பம் கெடச் சிலவற்றை வெளிப்படுத்துதல். அதாவது தன்னுடைய புணர்ச்சி வேட்கையைத் தலைவனிடம் தன் மடங்கெடக் கூறுதலே மடந்தபவுரைத்தலாகும். இதனை விளக்க பாலசுந்தரம், ஐங்.20, 144 ஆகிய பாடல்களை எடுத்தாண்டுள்ளார். இதனை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடல் எதனையும் எடுத்தாளவில்லை.
1:3 ஈரமில் கூற்றம் ஏற்றலர் நாணலும் அகநானூறும்
ஈரமில் கூற்றம் ஏற்றலர் நாணலென்பது, “ஊராருஞ் சேரியாருங் கூறும் அருளில்லாத கூற்றைக் கேட்டு அவர் ஆயிற்றென நாணுதல்.”( இளம். மெய்.16) எனவும், “அங்ஙனம் அறிமடங்கெடச் சொற்பிறந்தவழி இன்றளவுந் தமராற் கூறப்படாத கடுஞ்சொல் உளவாமன்றே, அவற்றை முனியாது ஏற்றுக்கொண்டு புறத்தார்க்கு இது புலனாங்கொலென்று நாணுதலும்.” (பேரா. மெய்.16) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர்.
களவுக்காலத்தின்போது தலைவியின் ஒழுக்கம் குறித்து ஊராரும் சேரியாரும் அருளில்லாத வார்த்தைகளைப் பேசுவதைக் கேட்டு நாணமடையும் தலைவியின் நிலையினை எடுத்துக் கூறுவதே ‘ஈரமில் கூற்றம் ஏற்றலர் நாணல்’. இதனை விளக்க பாரதியும் பாலசுந்தரமும் குறுந்.97ஆம் பாடலையும்; மேலும், பாலசுந்தரம்,
“கௌவை தூற்றும் வெவ்வாய்ச் சேரி
அம்பல் மூதூர் அலர்நமக் கொழியச்
சென்றனர் ஆயினும் செய்வினை யவர்க்கே
வாய்க்கதில் வாழி தோழி…… ” (அகம்.347)எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளார். இதில், நம் ஊரிலுள்ள கொடிய வாயுடைய பெண்களது பழிச்சொல்லும் நமக்கு உண்டாக்கச் செய்துவிட்டு அவர் நம்மைப் பிரிந்து சென்றார். இருப்பினும் அவர் மேற்கொண்ட செயல் கைகூடுக எனத் தலைவி தோழிக்குச் சொல்லினாள், என்பதில் இம்மெய்ப்பாடு வெளிப்பட்டுள்ளது.
1:4 கொடுப்பவை கோடலும் அகநானூறும்
கொடுப்பவை கோடலென்பது, “கண்ணியாயினுந் தழையாயினும் பிறவாயினும் தலைமகன் கொடுத்தவற்றைக் கோடல். மனத்தினான் உரிமை பூண்டாலல்லது பிறன்பொருள் வாங்காமையின் இதுவுமோர் மெய்ப்பாடாக ஓதப்பட்டது.”( இளம். மெய்.16) எனவும், “தலைமகனாற் கொடுக்கப்பட்ட தழையுங் கோதையுங் தாரும் கண்ணியுந் தோண் மாலையு முதலாயின கொண்டு கையுறை பாராட்டுதல்” (பேரா. மெய்.16) எனவும் உரையாசிரியர்கள் உரை கொள்வர்.
கொடுப்பவை கோடலென்பது தலைமகன் தலைமகள்பால் தனக்குள்ள அன்பினைப் காதலினைப் புலப்படுத்தும் நோக்கோடு தலைவிக்குக் கொடுக்கும் கண்ணி, தழை, தார், கோதை முதலியவற்றை மறுக்காமல் ஏற்றுக்கொள்ளுதல். இதனை விளக்க பாரதி, குறுந்.214ஆம் பாடலையும்; பாலசுந்தரம் நற்.80 ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடலை எடுத்தாளவில்லை.
1:5 கையுறை மறுதல்
நான்காம் அவத்தையினை விளக்கப் பேராசிரியரும் குழந்தையும்,
“ஒருநாள் வந்து பலநாள் வருத்து
நின்னையே போலுநின் றழையே யென்வயின்
னிற்பா ராட்டியுஞ் சொற்கொள லின்றியும்
யாயெதிர் கழறலிற் போலர் நாணியு
மயல்கூர் மாதர்க்குத் துயர்மருந் தாயினு
நோய்செய் தன்றாற் றானே
நீதொடக் கரிதலி னோரிடத் தானே” (இ.வி.ப.௫௩௩)இது கையுறை மறுத்தது. இதனுள் ‘நிற்பாராட்டி’ என்பது பாராட்டெடுத்தல், ‘சொற்கொளலின்றி’ என்பது மடந்தபவுரைத்தல்; என்னை? கொளுத்தக் கொள்ளாதுவிடின் அது மடனாகாமையின். ‘யாயெதிர் கழறலிற் பேரலற் நாணி’ என்பது ஈரமில் கூற்ற மேற்றலர் நாணல், ‘துயர்மருந்தாயினும்’ என்பது கொடுப்பவை கோடல். இத்தழை நின்கைப்பட்டவழிக் கரிந்து காட்டி நின்மெய்வெப்பங் கூறுதலின் இதனை அவள் காணின் ஆற்றாளாமெனப் பின்னொடுகாலத்து மறுத்தாளென்பது.”(பேரா. குழந்தை, மெய்.16)
இதில், ஒருநாள் போலப் பலநாளும் வந்து வருத்தும், நின்னை யொக்கும் நினது தழையும் என்னிடத்து நின்னைப் பாராட்டியும் யான் சொல்லுஞ் சொல்லை ஏற்றுக் கொள்ளாதும் தாய் எதிரே கழறி யுரைத்தலினாலே பெரிய அலருக்கு நாணியும் மயக்கமடைகின்ற மாதினுக்கு அவள் துயரை நீக்கும் மருந்தாயினும்; ஓரிடத்து நீ தொடக்கரிதலினாலே (அவளுக்கு) நோயைச் செய்தற்கேதுவாயது. நோய் செய்தது அதனால் நின்றழையும் நின்னையொக்கும் என முடிக்க என்பதில் கையுறை மறுத்தல் வெளிப்படுள்ளது.
1:6. முடிவுரை
நான்காமவத்தையாவன, பாராட்டெடுத்தல், மடந்தபவுரைத்தல், ஈரமில் கூற்றம் ஏற்றலர் நாணல், கொடுப்பவை கோடல் எனும் நான்குமாகும். இவற்றுள் ஈரமில் கூற்றம் ஏற்றலர் நாணல் என்பதனை விளக்க மட்டும் உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இது சரியாகப் பொருத்தியாளப்பட்டது. ஏனையவற்றை விளக்க உரையாசிரியர்களால் அகநானூற்றுப் பாடல் எடுத்தாளப்படவில்லை.
*****
கட்டுரையாசிரியர்,
தமிழ்த்துறைத்தலைவர்,
D.L.R. கலை மற்றும் அறிவியல் கல்லூரி
விளாப்பாக்கம், ஆற்காடு -
இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . ( 262 )
அன்பினியவர்களே!
அன்பின் இனிய வணக்கங்கள். இதோ அடுத்த மடலுடன் உங்களுடன் உறவாட முனைகிறேன். நாம் விரும்பியோ விரும்பாமலோ எமது வாழ்க்கை ஓடிக் கொண்டேயிருக்கிறது. ஓடும் வேகத்தை எமது வசதிக்கு ஏற்ப குறைக்கவோ அன்றி கூட்டவோ எம்மால் முடிகிறதா? தானே தன்வழிக்கு ஓடிக் கொண்டிருக்கும் வாழ்வினை எமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது போன்ற ஒரு பிரமையில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றுக்கு எதிர்த்திசையில் நடந்து அடுத்த கரைக்குப் போவது மிகவும் சிரமமானது அதேபோல ஆறு ஓடும் திசையிலே அதன் போக்கிலே போய் அடுத்தகரைக்குப் போவது இலகுவானதும் எம்மால் அனுபவித்து பயணிக்கக் கூடியதுமாகும். அதுபோல ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கையின் திசையில் அதற்கேற்ப எமது இலட்சியங்களை வகுத்துக் கொண்டு வாழ்வது எமது வாழ்க்கைப் பயணத்தை இலகுவாக்குகிறது.
எனது இவ்வார மடல் எதற்காக இத்தகைய பாதையினூடு தனது பயணத்தை ஆரம்பிக்கிறது எனும் ஐயம் ஏற்படுவது இயற்கையே! இன்றைய வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் பலரும் தம் வாழ்வின் நிலைபற்றிச் சலித்துக் கொள்பவர்களாக இருக்கிறார்களேயன்றி வாழ்வினை எண்ணி மகிழ்வுடன் அதைப்பற்றிப் பிரஸ்தாபிப்பவர்கள் மிகவும் சொற்பமானவர்களே! எதிர்பார்ப்பவை எல்லாம் எதிர்பார்க்கும் வேளையில் எதிர்பார்க்கும் வகையில் நடந்து விட்டால் இன்றைய உலகு இத்தகைய ஒரு வளர்ச்சியைக் கண்டிருக்குமா என்பது சந்தேகமே! எத்தனையோ விஞ்ஞானிகளும், அவர்களின் கண்டுபிடிப்புகளும் எதிர்பாராத வகையிலேயே நிகழ்ந்திருக்கின்றன. பாடசாலையிலிருந்து நீக்கப்பட்ட ரிச்சார்ட் பிரான்சன் இன்று வெர்ஜின் எனப்படும் பல்துறை நிறுவனத்தின் முகவராகவும், ப்ரித்தானிய தொழிலதிபர்கள் வரிசையில் முன்னணியில் இருப்பதுவும் அவரால் திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டதொன்றல்ல. இன்றைய முன்னணி சப்ட்வெயர் கம்பெனியான மைக்ரோசாப்ட் பற்றி “Accidental Empire ஆக்ஸிடென்டல் எம்பயர் ” எனும் நூலே வெளிவந்துள்ளது.
எமது கண்முன்னாலேயே இத்தகைய சலிப்பான வாழ்வாகத் தொடங்கிப் பின்னர் மாபெரும் வெற்றிக்கதைகளை உருவாக்கியவர்களை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இத்தகைய நிலையில்தான் இன்று நான் வாழும் இந்த இங்கிலாந்து நாட்டிலும் பலரின் பேச்சுக்களிலும் ஒரு சலிப்புணர்வு தட்டுப்படுகிறது. “ப்ரெக்ஸிட்” என்று பிரித்தானிய மக்களால் எடுக்கட்ட முடிவின் மீதான முன்னுக்குப்பின்னான, முரணான வாதங்கள் ஓய்ந்த பாடில்லாமல் ஊடகங்களில் அலைமோதிக் கொண்டிருப்பதே மக்களை இத்தகைய ஒரு சலிப்பினை நோக்கித் தள்ளிவிடுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேற வேண்டுமா எனும் சர்வஜன வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா நிலைத்திருக்க வேண்டும் என்றே வாக்களித்தவர்களில் நானும் ஒருவன். என் போன்றவர்களுக்கு அச்சர்வஜனவாக்கெடுப்பின் முடிவு ஒரு மாபெரும் ஏமாற்றமாக இருந்தது என்பது உண்மையே. இவ்வேமாற்றம் கொஞ்ச காலத்துக்கு ஒரு கசப்புணர்வாக இருந்ததும் உண்மையே! ஆனால் ஜனநாயக முறையில் மக்கள் எடுத்த பெரும்பான்மை முடிவுக்குக் கட்டுப்படுவதே ஒவ்வொரு நல்ல குடிமக்களின் கடமையாகும். பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து 2019ஆம் ஆண்டு மே மாதம் வெளியேறுவது தவிர்க்கப்பட முடியாத உண்மை.
இதை ஒரு பகுதியினருக்கு மற்றைய பகுதியினரின் மீதான வெற்றி என்று கூச்சலிடுவதையோ அன்றி நாம் தோற்று விட்டோம் எனும் வகையில் ஒதுங்கிக் கொள்வதையோ விடுத்து எமது நாடு தனது அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தை நோக்கி எடுக்க வேண்டிய ஒரு முக்கியமான முடிவினைச் சரியான வகையில் எடுக்க நாமனைவரும் எவ்விதம் எம்மாலான முழுப் பங்களிப்பையும் செய்வது எனும் வகையில் ஆக்கபூர்வமாகச் சிந்தித்துச் செயல்படுவதே இன்றைய காலகட்டத்தின் முக்கிய தேவையாகிறது. எடுக்கும் முடிவு சரியானதாக இருக்க எமது கருத்துக்களை ஆணித்தரமாக முன்வைக்க வேண்டியது எத்தனை முக்கியமோ, அரசு எதிர்நோக்கும் இடர்களை தீவிரப்படுத்துவதன் மூலம் இவ்வரசைக் கவிழ்த்து மீண்டும் ஒரு தேர்தலை உருவாக்கி நாம் பதவிக்கு வரவேண்டும் எனும் நோக்கில் எதிர்க்கட்சிகள் செயற்படுவது எமது நாட்டு முன்னேற்றத்துக்கு குந்தகம் விளைவிப்பதாகவே அமையும்.
ஒரு தேர்தல் ஏற்பட்டு எதிர்க்கட்சியாக இருக்கும் லேபர் கட்சி ஆட்சியைக் கைப்பற்றுகிறது என்று ஒரு பேச்சுக்கு எடுத்துக் கொள்வோம். அதுவும் இந்த “ப்ரெக்ஸிட்” எனும் சிக்கலான தீர்வுக்கு விடைகாண வேண்டிய நிலையையே எதிர்நோக்கும். மக்களின் ஆணையை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஜனநாயக அரசியலை முன்னெடுக்கும் அனைத்துக் கட்சிகளினதும் கடமையாகும். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுமுன் அதிர்ச்சிகரமான தாக்கத்தின் விளைவை எவ்வகையில் மிகவும் குறைந்த அளவுக்கு எதிர்கொள்ளலாம் என்தற்கான ஆலோசனைகளை ஆக்கபூர்வமாக வழங்குவதே இன்றைய எதிர்க்கட்சிகளின் புத்திசாலித்தனமான முன்னெடுப்புகளாக இருக்கும். இன்றும் இந்த இருபக்க வாதங்களிலும் மிகவும் தீவிரவாதப் போக்குகளைப் பிரஸ்தாபிக்கும் அரசியல்வாதிகளும், அரசியல் விமர்சகர்களும் இருக்கிறார்கள். இத்தகையோர் தமது சுயவிளம்பரத்துக்காகவும், தமது கொள்கைமீதான முரட்டு ஆதரவினாலும் சமுதாயத்தில் ஒன்றிணைந்து வாழும் பல்லின மக்களுக்கிடையிலான பேதங்களை விரிவாக்குகிறார்கள், விரிவான பேதங்களை மீண்டும் ஓர் இணைவான கோட்டிற்குக் கொண்டுவருவது எத்தனை சிரமம் என்பதனை இவர்களுக்கு வரலாறு எடுத்துக்காட்டும் துரதிர்ஷ்ட நிலை வந்து விடக்கூடாது.
ஆற்று வெள்ளத்தின் திசைக்கு எதிர்த்திசையில் அல்லல்பட்டு அடுத்தகரையை நோக்கி நடக்கப் போகிறோமா? அன்றி வெள்ளத்தின் போக்கோடு போய் எமது பயணத்தை இலகுவாக்கப் போகிறோமா? என்பதைத் தீர்மானிக்க வேண்டியது துரதிர்ஷ்டவசமாக அரசியல்வாதிகள் கைகளிலே . . .
மீண்டும் அடுத்த மடலில்…
அன்புடன்
சக்தி சக்திதாசன் -
எங்கும் எதிலும்!
-பெருவை பார்த்தசாரதி
எந்திரசக்தி அறிந்திராத அந்தக் காலத்திலேயே
…….எழும்பி நின்ற விண்ணைமுட்டும் கோபுரமுண்டு..!
மந்திரசக்தியால் நல்மழையும் காற்றும் பெற்று
…….மண்நீர்வளம் காத்ததாகவும் சரித்திரமும் உண்டு..!
தந்திரசக்தி ஏதுமின்றியே விண்ணும் மண்ணும்
…….தரும் கொடைக்குத்தான் காரணம் ஏதுமுண்டா..?
இந்திரிய மைந்தையடக்கி வாழ்நாளை நீட்டிக்கும்
…….எங்கும் எதிலும் ஓர்சக்தியிருப்பதை உணர்வீரா.!அண்டத்தில் அனைவரிடமும் மறைந் திருக்கும்
…….அற்புத சக்தியறிய இறையருளும் வேண்டும்..!
கண்டம்விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையை
…….கருத்தாகக் கணபதியை வழிபட் டெழச்செய்வர்.!
கொண்டவற்றை வைத்துக் கொண்டு குவலயமே
…….கொண்டாடும் சாதனை ஆக்குமோர் சக்திதான்.!
உண்டதெலாம் இரைப்பையுனுள் செல்வது முதல்
…….எங்கும் எதிலுமோர் உந்துசக்தி ஒளிந்திருக்கும்..!ஆயகலைகள் அறுபத்து நான்கையும் அறிகின்ற
…….ஆவி பொருள் தேகமூன்றும் கொடுத்தவனவனே.!
மாயசக்தியாய்த் தாயின் கருப்பையில் கருவாகும்
…….மகத்தான உயிருக்கு உருக் கொடுப்பவனவனே.!
நாயகனாய் நின்றிவ் வையத்து வாழுமுயிர்களின்
…….நெஞ்சத்தினுள் நண்ணுகின்ற நின்னருள் வடிவே.!
மாயவனாக மறைந்து மண்தலமும் விண்தலமும்
…….எங்கும் எதிலும் நிறைகின்ற மறைப் பொருளே.!*****
நன்றி:: தினமணி கவிதைமணி வெளியீடு::25-02-18
நன்றி:: கூகிள் இமேஜ் -
’’பெருமாள் புகழ்’’….!
அடியேன் ஃபேவரைட் திருமிழிஸை பிரானின் ‘’திருச் சந்த விருத்தம்’’….கல்லூரி நாட்களில் எழுதியது ‘’பெருமாள் புகழ்’’…உங்கள் மேலான பார்வைக்கு….!
பெருமாள் புகழ்
——————–பொன்மகள் அமர்ந்து பாத பங்கயம் பிடித்திட
பொன்னிசூழ் அரங்கில் ஆதி சேடனார் படுக்கையில்
தென்னிலங்கை வென்ற சோர்வில் கண்துயின்றவன் புகழ்
பண் சிறக்க பாரதம் வடித்த வாரணம் சரண்….(1)கயல் ஆமை பன்றியோடு கோர சிம்ம வாமனம்
புயல் பரசுராம ராம பலராமக் கண்ணனாய்
அயக்ரீவ கல்கியென அவதரித்து அதர்மநாள்
துயர் துடைக்கும் நாரணன் தூய தேசு பூரணன்….(2)பஞ்ச பூத சேர்க்கையில் பிரபஞ்சமாய் விரிந்தவன்
செஞ்சரண் பணிந்த அன்பர் நெஞ்சகம் நிறைந்தவன்
அஞ்சு புலன் ஆண்டவர்க்கு ஆத்மஞான தேசிகன்
மஞ்சு வண்ண முழுமுதற்ப் பொருள் அனாதி கேசவன்….(3)சொல்லவன் சொலப்படும் சொல் அருத்தமானவன்
அல்லுபகல் அந்திமாலை அர்த்த சாமமானவன்
புல்லவன் கல்லவன் பல்லுயிர் புகுந்துவாழ்
தொல்பொருள் தொடர்ச்சியாய் துலங்கு தாமோதரன்….(4)உண்ட அன்னமாகி அதை உதரமிருந்து உண்பவன்
உண்டை செரித்து உபரி ஒதுக்கும் உந்திகனலவன்
மண்டையேறி ஐம்புலன் ஆடுமாடு மேய்ப்பவன்
அண்டவாணர் பண்டைமுனிகள் அடியுறைகொள் அச்சுதன்….(5)விழியிரெண்டின் ஜோதிகண்டு வெட்கும்சோம சூரியன்
பொழியும்தேன் மலரோவென மதுகரம்மருள் பதயுகம்
மொழிவாணியை மெளனமாக்கும் மதுரமான சொல்அதரம்
தொழில்தவம் அரன்தழுவு எழில்வடிவ மோகனன்….(6)ஈவிரக்கமற்ற கம்சன் காவலுற்ற தாய்வசு
தேவகிக்குடல் விளக்க ஆவாகனித்து ஓர்
ரேவதியில் அட்டமிநாள் ராத்திரியில் உதித்தபின்
ஆவலோடு ஆயர்பாடி அசோதைபால் புகுந்தவன்….(7)தன்னையே மறந்துநாளும் தவமியற்றும் நாரதாதி
புண்ணியர்கள் பார்த்திராத ப்ரபஞ்சமாய தத்துவம்
இன்னதென்ற உண்மையை இடைச்சி அன்னைமட்டும் காண
மண்னையுண்ட செம்பவளச் சின்னவாய் திறந்தவன்….(8)நஞ்சு காளியன் சிரத்தில் பிஞ்சுகால் பதித்தவன்
தஞ்சமென் றுஒடுங்க ஒயில் தாண்டவம் புரிந்தவன்
வஞ்சபேய் முலைச்சி தந்த நஞ்சு பாலினோடவள்
சஞ்சலங்கள் ஏதுமின்றி நெஞ்சுயிர் சுவைத்தவன்….(9)சூறைவாயு போலவந்த சகடரக்கன் அச்சிலே
பாறையாய் அமர்ந்துஅவன் ஆரவாரம் அடக்கிவான்
கூரைதாண்டி கொண்டுபோய் குப்பையாய் எறிந்தவன்
நூறைஐந்து வென்றுஆள பாரதம் வகுத்தவன்….(10)அங்கைநான்கில் ஆழிசங்கு அபயவரம் மாரில்பார்
நங்கையும் நறுந்துழாய் நலிந்தநாதர் செங்கண்மால்
இங்குளான் என்றுஈன் றதையிகழ் இரண்யன்முன்
அங்குஉள்ள தூண்பிளந்து சிங்கமாய் குதித்தவன்….(11)அங்கைநான்கில் ஆழிசங்கு அபயவரம் மாரில்பார்
நங்கையும் நறுந்துழாய் நலிந்தநாதர் செங்கண்மால்
இங்குளான் என்றஈன் றதைஇகழ் இரண்யன்முன்
அங்குஉள்ள தூண்பிளந்து சிங்கமாய் குதித்தவன்….(11)பரந்தமார் தனில்துழாய் பூவிருந்த கோமளை
சிரங்கள்நான்கு கொண்டஅயன் சிவந்தநாபி தாமரை
இருந்தவாறு பாற்கடல் அனந்தன்மேல் கிடந்துநீள்
அருந்தவம் புரிந்திடும் நிரந்தரப் பரம்பொருள்….(12)இராம வென்றிறைஞ்சி வந்த இராக்கதன் விபீடணன்
தராதரம் விசாரியாது அவர்க்கடைக் கலத்தையும்
இராவணன் தொலைத்திலங்கை ஆட்சியும் அளித்தவன்
அண்ட சராசரங்கள் ஆள்பவன்….(13)மூவடிக்கு மண்நயத்த மாணிக் குறளன்தனை
தேவுஎன்று அறியாமல் ஆவலோடு தாரைவார்
மாவலி விதிர்க்க மூ உலகளந்த விக்ரமன்
சேவடி கோன் சென்னிவைத்து சிரஞ்சீவி ஆக்கினன்….(14)கரிராஜன் கஜேந்திரன் கால்கராம் வயப்பட
”அரிமுகுந்த அச்சுதா” அபயம்என்று பிளிறிட
துரிதமாய்ப் பருந்திலே தடாகம் ஏகிகாத்தவன்
பரிமுகத்து தேசிகன் பரிவில்தாய் நிகர்த்தவன்….(15)வேதம்நாலும் வேதியர் ஆகமங்கள் சாத்திரம்
பூதமைந்தும் ஆதிசங் கரர்அமைத்த ஷண்மதம்
தீதுகொல் தீர்த்தமேழும் தகவுசேர் யோகமெட்டும்
ஓதுயாகம் ஒன்பதும் பாதம்கொள் பவித்திரன்….(16)போர்களம் புகமறுத்து பார்த்தனன்று வேர்த்ததும்
தேர்தளம் அமர்ந்துதிவ்ய கீதைசொல்லி தேற்றிபின்
ஆர்ப்பு பாஞ்சசைன்யம் ஊதிஅகைப்பு செய்தபாரதம்
நேர்த்தியாய் நடத்திநல் தர்மம்வெல்ல வைத்தவன்….(17)திரிதராட்டினன் போல பெரிய பாட்டனார்களும்
துரியோதனன் செயலை தூசனித்து விழிமூட
அரிவை பாஞ்சாலி துகிலை உரித்த துச்சாதனன்
சரியசோர்வில் சேலைபெய்து தையல்மானம் காத்தவன்….(18)துருவனுக்கு வானமும், துரோபதைக்கு மானமும்
தருமனுக்கு ஆட்சியும், கர்ணனுக்கு காட்சியும்
திருவை சுதாமனுக்கும் தோழமையை மாருதிக்கும்
சிறுமைக்கும் பெருமைசேர கருமைகாயம் கொண்டமால்….(19)வனிதைபொன் மடந்தையும் வையகத்து மங்கையும்
புனிததுயில் அணங்கையும் பரமபதம் கொண்டுவாழ்
வினதைமகன் வாகனன் விண்ணளந்த வாமனன்
மனிதஜென்மம் எடுத்து மனுதர்மம் நாட்டும்மாதவன்….(20)ஊழிதோறும் பாலனகி உலகனைத்தும் உண்டுஅலை
ஆழிமேல் ஆலிருந்து ஏழ்பிறப்பு லோகசிருஷ்டி
நாழிகைப் பொழுதிலே நினைப்பிலே படைப்பவன்
ஆழிசங்கு ஏந்துகின்ற ஆழிவண்ண ஊழியன்….(21)சோவென்று இடிமின்னலோடு தேவேந்திர மாரிபெய்ய
கோவர்த்தன குடைபிடித்து கோகுலஇடர் தீர்த்தவன்
நாவனர்த்த சிசுபாலன் உவலைநகுதல் நூறுமீற
கோவமுற்று அவன்சிரத்தை சீவதிகிரி விடுத்தவன்….(22)விருப்புடை உருப்பினிக் கரம்பிடித்து ஊர்தியில்,
இருத்திவாயு வல்லைகொள்ள துரத்திவந்த தமையனார்
உருப்பனை விரட்டிஊர் திருத்தலம் துவாரையில்
வரித்தவள் கழுத்தினில் தெரியலிட்ட திண்புயன்….(23)கலநேமி வக்கிரன் கேசிகம்ச பவுண்டிரன்
மாலிகன் கரன்முரன் மதுகைடப தேனுகன்
கேலிசெய்த இரணியன் கோதைகள்வ ராவணன்
காலனோடு கூடவைத்து ஞாலஇடர் தீர்த்தவன்….(24)கூடுகவிச் சேனையோடு கடல்கடந்து ராவணன்
நாடிலங்கை யோடவனை நசித்தசோக வனத்தினில்
வாடு சீதையோடு கூடி வான ஊர்தி வாயிலாய்
ஆடுவாகை சூடிசீர் அயோத்திபுக்கு ரகுவரன்….(25)கேசவன் நாராயண மாதவன் குறள் இருடீ
கேசவன் சீதரன் குறையிலா கோவிந்தன்
வாசபத்ம நாபவிஷ்ணு விண்ணளந்த விக்கிரமன்
பாசதா மோதரன் மாசிலா மதுசூதனன்….(26)தாதைவாக்கு மந்த்ரமென்ற தொன்மைசொல் தழைத்திட
சீதையோ டிலக்குவன் சேரதண்ட காவனம்
பாதம் நோகபுக்க மூலராம சந்த்ரமூர்த்தியே
வேதம்வந்து எதிரொலிக்கும் வடவேங்கட கீர்த்தியே….(27)ஒருவனுக்கு ஒருத்தியென்ற நெறிதனைப் புகட்டினாய்
திருமுகத்து ஜனகமகள் அரவணைத்திண் புயத்தினாய்
கருநிறத்து அண்ணலே கவிமாருதி நண்பனே
வருபவர்க்கு அன்பனே வடவேங்கட இன்பமே….(28)ஆசையோ டளித்தது அழுகலாய் இருப்பினும்
கூசமின்றி அமுதமாய் கொள்ளல்தகவு சொல்லவே
பாசமோடு சபரியுண்ட பழமிச்சம் உண்டவா
வீசுதென்றல் தேசுபாடும் வடவேங்கட ஈசனே….(29)நிராயுதன் நசித்தல்போர் நீதியல்ல என்றுணர்த்த
இராவணா இன்றுபோய் நாளைஇகல் வாஇயம்பு
இராமனே இறைவனே இரவிகுலத் தோன்றலே
முராரியே முகுந்தனே மலைவேங்கட மாலனே….(30)இரவிசோம சந்தியில் இடைகழி படிவாயிலில்
நரசிங்க உருவினில் நின்றதூண் பிளந்துஅயில்
கரநகமால் இரணியன் குடலுரித்து மாலையாய்
உரமார் பகமணிந்து உம்பரிடர் தீர்த்தவா….(31)….கிரேசி மோகன்….!
———————————————————————- -
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

180228 – Kamsa -fear – lr 24×32 cms (The krishna within) Krishna leela series பயமாசை கோபம் பசிதாகம் தூக்கம்
மயமான கம்ஸ மனமே -அயலாம்
இவைதவிர்த்து ஆழ இதயத்தில் கண்ணன்,
சுவைசுகித்து வாழ சுகம்….கிரேசி மோகன்….!எல்லோர் நெஞ்சிலும் கண்ணன் உள்ளான்….குசேலர் நெஞ்சில் குபேரன் கண்ணன் பக்தி அவலுக்கு அளித்தார் செல்வம்….!
———————————————————————————————————————————————————————————————————————————————
’’கஞ்சனின் நெஞ்சில் குபேரனாய்க் குந்தினோய்
அஞ்சலென்(று) அறிவித்தும் அச்சத்தால் -மஞ்செழில்
வண்ணனை வாள்கொண்டு வெட்டும் வெகுளியே!(கோபிஷ்டா)
கண்ணனை நெஞ்சால் கருது’’…. -
திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் -50
க. பாலசுப்பிரமணியன்
இறைவனின் திருவருளைப் பெற வழிதான் என்ன?
“அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை” என்பது வள்ளுவம். வாழ்க்கையில் பல இன்பங்களையும் துன்பங்களையும் அனுபவித்து பொருள் சேர்த்து உயரிய நிலையை அடைந்ததாக நமக்கு நாமே அறிவித்துக் கொண்ட பின்னும் மனம் ஒரு நிலையில் இருப்பதில்லை. இவையெல்லாம் இறைவன் திருவருளை நமக்குத் பெற்றுத்தறுமா என்றால் “நிச்சயமாக இல்லை’ என்ற பதிலே கிடைக்கின்றது. அப்படியென்றால் அவனிடமே சென்று முறையிட்டாலென்ன? அவனை எங்கே காண முடியும்? இந்தக் கேள்விகளெல்லாம் நம் மனதில் எழுகின்றது. இதற்கு பதில் அளிக்கும் வகையில் திருஞான சம்பந்தர் கூறுகின்றார்; “நினைப்பவர் மனத்துள்ளான்” என்று.
பூசலாரின் மனக்கோயிலிலே அவன் வாசம் செய்யவில்லையா?
திருமூலர் தன்னுடைய அனுபவ அறிவின் மூலம் நமக்கு விளக்குகின்றார் :
விண்ணிலும் வந்த வெளியிலன் மேனியன்
கண்ணிலும் வந்த புலனல்லன் காட்சியன்
பண்ணினில் வந்த பயனல்லன் பான்மையன்
எண்ணிலா னந்தமும் எங்கள் பிரானே
எங்கும் நிறைந்து எல்லா விதமான ஆனந்தத்திருக்கும் காரணமாக இருப்பவனன்றோ அவன்?
“என் மனத்துள் உள்ளே வரும் பெருமான்” என்று கூறி மாணிக்கவாசகரோ தன் மனக்கதவுகளை எப்பொழுதும் இறைவனுக்காகத் திறந்து வைத்திருந்தார்.
நாம் இறைவனை நினைத்து வாழ்ந்தாலும், நினைக்கவிட்டாலும் அவன் நிச்சயமாக நம்மை ஏற்று அருள்புரிபவனே என்ற அசையாத நம்பிக்கை திருநாவுக்கரசருக்கு இருந்தது. அந்த நம்பிக்கையை இந்தப் பாடல் மூலமாக நமக்கு வெளிப்படுத்த்துகின்றார்
தொழுது தூமலர் தூவி துதித்து நின்று
அழுது காமுற்று அரற்று கின்றாரையும்
பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும்
எழுத்தும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே
இறைவனுடைய இந்த அளவில்லாக் கருணை நம்மை காத்துக்க்கொண்டிருக்கும் பொழுது நாம் நல்ல நினைவுகளோடும் அறம் போற்றும் மனத்தோடும் வாழவேண்டாமா? அவன் அளவில்லாக் கருணையை நமக்கு விளக்கும் திருமூலர் கூறுகின்றார் :
இங்குநின் றானங்கு நின்றனன் எங்குளன்
பொங்கிநின் றான்புவ னாபதி புண்ணியன்
கங்குல்நின் றான்கதிர் மாமதி ஞாயிறு
எங்குநின் றான்மழை போலிறை தானே .
திருமூலர், மாணிக்க வாசகர், திருஞான சம்பந்தர், காரைக்கால் அம்மையார், பட்டினத்தார், பத்திரகிரியார் போன்ற பல அடியார்களின் பாதைகள் வெவ்வேறாக இருந்தாலும் அவர்களின் இறை சிந்தனையின் அடிப்படை இறைவனை நம்முடைய இதயத்தின் உள்ளேயே அறிந்து, அவனை அங்கேயே நிறுத்தி, போற்றி, அவன் சிந்தனையிலேயே இடைவிடாத நிலையான இன்பத்தையும் ஆனந்தத்தையும் காண்பதாகும். இதனால்தான் காரைக்கால் அம்மையார் சொல்கின்றார் “என்போல்வார் சிந்தையிலும் இங்குற்றான்; காண்பார்க்கு எளிது.”
ஆகவே இந்த அடியார்களின் கருத்தை நாமும் மனதில் கொண்டு அகத்திலும் புறத்திலும் எங்கும் நிறைந்தவனாக இருக்கும் இறைவனை உணர்ந்து போற்றி பயன்பெறுவோம்.
“ஒருவனே போற்றி ஒப்பில் அப்பனே போற்றி வானோர்
குருவனே போற்றி எங்கள் கோமளக் கொழுந்து போற்றி “
(நிறைவு)
-
அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவான மெய்ப்பாடுகளும் அகநானூறும் – உரையாசிரியர்களின் உரைகளை முன்வைத்து ஓர் ஆய்வு – 2
-பீ.பெரியசாமி
1:1:23. விரைவு
விரைவென்பது, “ஒரு பொருளைச் செய்ய நினைத்தான் அது தாழ்க்கில் அப்பயன் எய்தான்; கடிதின் முடித்தல் வேண்டுமெனக் குறித்த மனநிகழ்ச்சி”( இளம்., இராசா., மெய்.12) எனவும், “இயற்கைவகையானன்றி ஒரு பொருட்கண் விரைவு தொழில்பட உள்ள நிகழும் கருத்து.” (பேரா, குழந்தை., மெய்.12) எனவும், “வேகம், ஆர்வமிகுதியாலெழுவது” (பாரதி., மெய்.12) எனவும், “காலத்தையும் இடத்தையும் சுருக்கி மேற்செல்லக் கடிதுவிழையும் உள்ள எழுச்சி. இஃது உவகைக்குப் பொருளாக அமையும்.” (பாலசுந்., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் உரை கொள்வர். விரைவு என்பது எதனையும் விரைவாக அடைதலாகும். இதனை விளக்க இளம்பூரணரும் பாலசுந்தரமும், புறம்.275, 82 ஆகிய பாடல்களையும்; பாரதி, குறுந்.250, 189 ஆகிய பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.
1:1:24. உயிர்ப்பு
உயிர்ப்பென்பது, “முன்புவிடும் அளவினன்றிச் சுவாசம் நீளவிடுதல்.” (இளம், இராசா, தாசன்., மெய்.12) எனவும், “வேண்டிய பொருளைப் பெறாதல்வழிக் கையறவெய்திய கருத்து; அது, நெட்டுயிர்ப்பிற்கு முதலாகலின் அதனையும் உயிர்ப்பென்றானென்பது.” (பேரா., குழந்தை., மெய்.12) எனவும், “ஆனாக் காதலின் நெட்டுயிர்த்தல்” (பாரதி., மெய்.12) எனவும், “ஆற்றாமை காரணமாக எழும் நெடுமூச்சு. இஃது இளிவரலுக்குப் பொருளாக அமையும்.” (பாலசுந்., மெய்.12)எனவும் உரையாசிரியர்கள் பொருள் கொள்வர். உயிர்ப்பென்பது விரும்பியது கிடைக்காத பொழுது வெளிப்படும் நீண்ட சுவாசமாகும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறுந்.142-ஆம் பாடலையும்; பாரதி, குறுந்.142, 359, நற்.253 ஆகிய பாடல்களையும்; பாலசுந்தரம் புறம்.44-ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.
1:1:25. கையாறு
கையாறென்பது, “காதலர் பிரிந்தால் வரும் துன்பம் அந்நிகரனவும் வருவது.” இளம், (இராசா, தாசன், மெய்.12)எனவும், “அவ்வுயிர்ப்புமின்றி வினையொழ்தயர்தல்” (பேரா., குழந்தை, மெய்.12) எனவும், “வசமழிவு, அதாவது செயலறிவு; இதுவும் காழ்த்த காதனோயால் வருவது (பாரதி, மெய்.12) எனவும், “விருப்பிற்குரிய பொருளைப் பிரிதலும் இழத்தலும் பற்றி வரும் செயலறவு. இஃது அழுகைக்குப் பொருளாக அமையும்.” (பாலசுந்., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் பொருள் கொள்வர். கையாறு என்பது தனக்குரிமையுடைய பொருளோ உறவுகளோ பிரியுமிடத்து தோன்றும் துன்பமாகும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், கலி.24 ஆம் பாடலையும்; பாரதி, குறுந்.169, 391, 48 ஆகிய பாடல்களையும்; பாலசுந்தரம், புறம்.240 ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.
1:1:26. இடுக்கண்
இடுக்கணென்பது, “துன்பமுறுதல்” (இளம்., தாசன், இராசா, மெய்.12) எனவும், “மலர்ந்த நோக்கமின்றி மையனோக்கம்பட வரும் இரக்கம்” (பேரா., குழந்தை, மெய்.12) எனவும், “காதலால் வருந்தும் துன்பம்” (பாரதி., மெய்.12) எனவும், “இடையூறு காரணமாக வரும் துன்பம் இஃது அழுகைக்குப் பொருளாக அமையும்.” (பாலசுந்., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் பொருள் கொள்வர். இடுக்கணென்பது ஏதேனும் ஓர் இடையூறு காரணம் பற்றி வரும் துன்பமாகும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.625-ஐயும்; பாரதி, குறுந்.240, 48, நற்.299, குறள்.1175, 1229 ஆகிய பாடல்களையும்; பாலசுந்தரம் புறம்.210-ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.
1:1:27. பொச்சாப்பு
பொச்சாப்பென்பது, “மறத்தல்”( இளம், குழந்தை, பாரதி, இராசா, தாசன்., மெய்.12) எனவும், “அற்றப்படுதல்; அஃதாவது, பாதுகாத்துச் செல்கின்ற பொருட்கண் யாதானும் ஓரிகழ்ச்சிரியான இடையறவுபடுதல்”(பேரா., மெய்.12) எனவும், “மறத்தல் கூடாதவற்றை மறந்திருத்தல். இஃது இளிவரலுக்குப் பொருளாக அமையும்.”( பாலசுந்., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். பொச்சாப்பென்பது மறக்கக் கூடாதவற்றை மறத்தலால் ஏற்படும் உணர்வாகும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.199-ஐயும்; பாலசுந்தரம் புறம்.149-ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.
1:1:28. பொறாமை
பொறாமையென்பது, “பிறர்க்கு ஆக்க முதலாயின கண்ட வழியதனைப் பொறாது நடக்கும் மன நிகழ்ச்சி. அழுக்காறு என்ப” (இளம், இராசா, தாசன், மெய்.12)எனவும், “அழுக்காறு; அஃதாவது பிறர் செல்வங்கண்டவழி வேண்டாதிருத்தல்.” (பேரா., மெய்.12)எனவும், “காதலர் ஒருவர் பழி ஒரு ஆனாமை, ஒல்லாமை, இயற்பழிக்கும் தோழி கூற்றும், ஏனோர் தூற்றும் பழியும் தாங்காது தலைவி வெறுத்தல் காதலியல்பாம்.” (பாரதி., மெய்.12) எனவும், “செருக்கும் திறலும் காரணமாக ஒன்றைப் பொறுத்தலாற்றாத பண்பு. இது பெருமிதத்திற்குப் பொருளாக அமையும். அழுக்காறு என்னும் பொறாமை வேறு; இதுவேறு என உணர்க. அழுக்காறு அறனில் குணமாகலின் அதனை மெய்ப்பாட்டிற்குரிய பொருளாகக் கூறுதல் ஒவ்வாதென அறிக.” (பாலசுந்., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் பொருள் கூறுவர். பொறாமையென்பது, பிறரது வளார்ச்சிகளைக் கண்டு மனதில் எழுவதோர் எரிச்சலாகும். அழுக்காறு எனினும் ஒக்கும். கழகத் தமிழகராதி அழுக்காறு என்பதற்கு “பொறாமை; பொய்; தீயநெறி.” (க.த.அ.ப.56) என பொருள் கூறுவதால் இதனை அறியலாம். இம்மெய்ப்பாட்டினை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.168-ஐயும்; குறுந்.181, 187, 288, ஐந்.எழுபது.2-ஆகிய பாடல்களையும்; பாலசுந்தரம் புறம்.8-ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.
1:1:29. வியர்த்தல்
வியர்த்தலென்பது, “தன் மனத்தில் வெகுட்சி தோன்றிய வழிப்பிறப்பதோர் புழுக்கம்,” (இளம்., தாசன், இராசா, மெய்.12) எனவும், “பொறாமை முதலாயினபற்றி மனப்புழுக்கம்” (பேரா., குழந்தை, மெய்.12) எனவும், “நாணாலும் நடுக்கத்தானும் வேர்த்தல், இது காதலரியல்பாதலை. ‘பொறிநுதல் வியார்த்தல்’ என இதன் பின் சூத்திரத்து வருதலானுமறிக.” (பாரதி., மெய்.12)எனவும், “இகல் காரணமாக வரும் உள்ளப்புழுக்கம், மெய்ப்புழுக்கம் சிறுபான்மை வரினும் கொள்க. இது வெகுளிப் பொருளாக வரும் “பெயர்த்தனென் முயங்கயான் வியர்த்தனென் என்றனள்.” என்பது மெய்ப்புழுக்கம். இஃது இளிவரல் பற்றி வரும்.” (பாலசுந்., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் உரை கொள்வர். வியர்த்தலென்பது மனப்புழுக்கமாகும். இது காமம், வெகுளி, சினம் போன்றவற்றால் ஏற்படும். இதனை விளக்க இளம்பூரணர், தாசன், பாலசுந்தரம் ஆகியோர் குறள்.487-ஐயும், பாரதி
“நின் பிறைநுதற் பொறிவியல்
உறுவளியாற்றச் சிறுவரை திற” அகம்.136எனும் அகப்பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். மேற்கூறிய அகப்பாடலில், நான் அவளை நெருங்கி அவள் முகத்தைக் காண விரும்பி மிக்க புழுக்கத்தால் உனது நெற்றியில் அரும்பிய வியர்வையைக் காற்று நீக்குமாறு சிறிதுதிற என்று கூறி அன்பின் மிகுதியால் போர்வையை நீக்கினேன் என தலைமகன் தன் நெஞ்சிற்குக் கூறியது. இதில் காம உணர்வினால் தலைவியின்பால் வியர்வை உண்டாகியது என்பது புலப்பட்டுள்ளமையால். இது வியர்த்தலின் பாற்படும்.
1:1:30. ஐயம்
ஐயமென்பது, “ஒரு பொருளைக் கண்டவழி யிதுவெனத் துணியாத நிலைமை” (இளம்., தாசன், இராசா, மெய்.12)எனவும், “ஒரு பொருண்மேல் இருபொருட்டன்மை கருதி வரும் மனத் தடுமாற்றம்.” (பேரா., குழந்தை., மெய்.12) எனவும், “காதல் மிகையாற் கடுத்தல் இது முதற்காட்சியினிகழும் ஐயமன்று; அது தெறிந்தபின் எழாதாதலின், ஈண்டு ஊடலில் எழுமையவுணர்வைக் குறிக்கும்.” (பாரதி., மெய்.12)எனவும், “ஒரு பொருளை இன்னது என வரைந்துணர்தற் காகாத மனத்தடுமாற்றம். ஈண்டு இஃது உவகைக்குப் பொருளாக நின்றது. இது பிற மெய்ப்பாட்டிற்குரிய பொருளாகவும் வரும்.” (பாலசுந்., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். ஐயமென்பது ஒன்றனைக் கண்டு அதுவோ, இதுவோ என துணிய இயலாத நிலையாகும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.1081-ஐயும்; பாலசுந்தரம், புறம்.257, 49 ஆகிய பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.
1:1:31. மிகை
மிகையென்பது, “ஒருவனை நன்கு மதியாமை” (இளம்., மெய்.12)எனவும், “கல்லாமையுஞ் செல்வமும் இளமையும் முதலாக வரும் உள்ளமிகுதி” (பேரா., குழந்தை, மெய்.12) எனவும், “கைம்மிகு காதலான் வரும் நிறையழிவு” (பாரதி, மெய்.12) எனவும், “பழிவழிச் செல்லும் செருக்கு – குற்றம். இஃது வெகுளிப் பொருளாக அமையும்.” (பாலசுந். மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் உரை கொள்வர். மிகையென்பது உள்ளச் செருக்காகும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.158-ஐயும்; பாலசுந்தரம், குறுந்.292-ஐயும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.
1:1:32 நடுக்கம்
நடுக்கமென்பது, “யாதானும் ஒரு பொருளை இழக்கின்றோமென வரு மனநிகழ்ச்சி” (இளம்., தாசன், இராசா, மெய்.12) எனவும், “அன்பும் அச்சமும் முதலாயின உடம்பிற் புலப்படுமாற்றான் உள்ள நடுங்குதல்; புதல்வர்க்குப் பிணி இல்வழியும் எவனாங்கொலன்று நடுங்குதல் அன்பான் நடுங்குதலுமாம், அச்சமென்னுஞ் சுவை பிறந்ததன் பின்னர் அதன் வழித் தோன்றிய நடுக்கம் அச்சத்தாற்றோன்றிய நடுக்கமென்பது.”(பேரா., குழந்தை, மெய்.12) எனவும், “காதலர்க்கு உணர்வு மிகையானாம் பனிப்பு” (பாரதி, மெய்.12) எனவும், “துயர் நேருங்கொல் என்னும் உளக்கலக்கத்தான் உடம்பு அதிர்தல். இஃது அச்சத்திற்குப் பொருளாக அமையும்.” (பாலசுந். மெய்.12)எனவும் உரைகொள்வர். நடுக்கமென்பது தமக்கும் தம்மைச் சார்ந்தோர்க்கும் துன்பம் நேரும் என நினைக்கும்வழி தோன்றுவதோர் உணர்வு. இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், கலி.13-ஆம் பாடலையும்; பாரதி, குறுந்.178, 53 ஆகிய பாடல்களையும்; பாலசுந்தரம்,
“வெம்மை தண்டா எரியுடு பறந்தலை
கொம்மை வாடிய இயவுள் யானை
நீர்மருங் கறியாது தோர்மருங் கோடி
அறுநீ ரம்பியின் நெறிமுதல் உணங்கும்
உள்ளுநர்ப் பனிக்கும் ஊக்க ருங்கடன்” (அகம்.29)எனும் அகப்பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். மேற்கூறிய அகப்பாடலில், கொடிய வெம்மையால் தலைமையுடைய வலிமையற்ற யானை நீர் உண்பதற்காகக் கானல் நீரை நீர் என்று கருதி ஓடுகின்ற, நினைப்பவர்கள் நடுங்கும் அரிய பாலைநிலம் பெருவழியைக் கடந்து பொருளீட்டும் விருப்பத்தோடு நான் அங்குச் சென்றாலும் என் உடம்பு அங்கிருந்ததே தவிர என் உள்ளம் உன்னிடம் தானே இருந்தது எனத் தலைவன் தலைவியிடம் கூறினான். இதில் யானைகளை நினைக்கும்போது நடுக்கம் உண்டாயிற்று என்பதில் நடுக்கம் எனும் மெய்ப்பாடு வெளிப்பட்டுள்ளது.
1:2. உரையாசிரியர்களின் மாறுப்பட்ட உரைகளும் தீர்வும்
உரையாசிரியர்கள் இந்நூற்பாவினை பல்வேறு விதமாக பொருள் கொண்டுள்ளனர். அவை,
“மேற்சொல்லப்பட்டன ஒருபக்கமாக, ஒருக்கமுடைமை முதலாகச் சொல்லப்பட்ட முப்பத்திரண்டும் உள, அவையல்லாத விடத்து என்றவாறு. எனவே, ஆமிடத்து இவை யங்கம் ஆகும். இத்தனையும் கூறப்பட்ட அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவென்று கொள்க.”( இளம்.மெய்.12 )
என இளம்பூரணர் கூறியுள்ளார். இதனை நோக்குமிடத்து மேற் சொல்லப்பட்ட முப்பத்திரண்டு போல இங்கே சொல்லப்படும் முப்பத்திரண்டும் அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவானது எனவும் இவை மெய்ப்பாட்டிற்குரியவை என்பதும் இளம்பூரணரின் கருத்தாகும். இதனைப் பேராசிரியர் கூறுமிடத்து,
“மேற்கூறிவந்த எண்ணான்குமன்றி இவை முப்பத்திரண்டும் அவை போல்வன மெய்ப்பாடென்ப துணர்த்துதல் நுதலிற்று. ………..சொல்லப்பட்ட முப்பத்திரண்டும் ஒரு கூறாக; ஒரு பாலென்பது இனிச் சொல்லுகின்ற ஒருகூறென்றவாறு; பின்னர் அவற்றையெல்லாம் எண்ணி ‘இவையுமுளவே அவையலங் கடையே’ யென்றார். ஈண்டெண்ணப்பட்டவையே ஆண்டடங்குவனவும் உள.அப் பொருண்மைய வல்லாதவிடத்து இவை முப்பத்திரண்டும் ஈண்டு மெய்ப்பாடாகும்.” (பேரா,மெய்.12 )
எனக் கூறியுள்ளார். இதனை நோக்குமிடத்து மேற் சொல்லப்பட்ட முப்பத்திரண்டு போல இங்கே சொல்லப்படும் முப்பத்திரண்டும் அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவானது எனவும், இவை மெய்ப்பாட்டிற்குரியவை என்பதும் இவை மேற்சொல்லப்பட்ட முப்பத்திரண்டில் அடங்காதவிடத்து தோன்றும் என்பதும் பேராசிரியர் கருத்து. மேலும், பாரதி கூறுமிடத்து,
“…………….. ஆங்கவை ஒருபாலாக பிரித்து நிறுத்தி, “ஒருபால்” என வேறுதொடங்கி எவ்வெட்டாய் வகுத்து இச்சூத்திரத் தெண்ணப் பெறும் உணர்வு முப்த்திரண்டும் புறக்குறிச் சுட்டின்றி வாளா கூறப்பெறுதலாலும், நகை முதலிய புறக்குறி பெறும் பான்மைய எண்ணான் குணர்வின் மெய்ப்பாடு எட்டே எனக் குறித்து விலக்கிதாலும் இதில் நாலெட்டும் முன் எண்ணான்கென்ற மெய்பாட்டு வகைகளின் வேறாய்ச் செய்யுட் பொருள் சிறக்க வரும் உணர்வுகளாதல் தேற்றமாகும். இன்பான்மை வேறுபாடு விளங்க, இச்சூத்திரத் துவக்கத்தில் இவ்வுணர்வுகளை எண்ணத் தொடங்குமுன் “ஆங்கவை ஒரு பாலாக, ஒருபால்” என நிறுத்த சொற்பெய்த குறிப்புமறிக. இவை புறக்குறிச்சுட்டுப் பெறாமையால் மெய்ப்பாடாகச் சிறவாவெனினும் மெய்ப்பாடுகள் போலச் செய்யுட்பொருள் சிறக்கவரும். உள்ளுணர்வுகளாதலின் இவ்வியலில் ஒப்பமுடித்துக் கூறப்பெற்றன. இனி இவ்வாறு எண்ணான்கும் நாலெட்டுமாய் வகைபெறலொன்று புறக்குறிச் சார்புடைமையும் இன்மையும் ஒன்று, ஆக இவ்விருதிற வேறுபாட்டையுமன்றி, இவற்றிடை இன்னுமொரு தன்மை வேறுபாடுமுளது. மெய்ப்பாடுவகை எண்ணான்கும் அகப் புறப் பொருட் பகுதிகளிரண்டிற்கு மொப்ப வருபவை. இதிற் குறிக்கும் உணர்வுவகை நாலெட்டும் அகத்துறைக்குச் சிறப்புரிமை பெறுவன. இவை எவ்வெட்டாய் முறையே “இயற்கைப் புணர்ச்சியும் இடந்தலைப்பாடும் பாங்கொடுதழாஅலும் தோழியிற் புணர்வு மென்றாங்கந்நால் வகையினு மடைந்த சார்பொடு” கண்ணிய நால்வகைக் கேற்பத் தொகுக்கபட்டுள.” (பாரதி, மெய்.12 )எனக் கூறியுள்ளார். இவை புறக்குறிச் சுட்டு பெறாமையால் மெய்பாடாகாது. ஆனாலும் செய்யுட் பொருள் சிறக்க வரும் உள்ளுணர்வாகும் என்பதும், புறக்குறிச் சார்பின்மை என்பதும், மேற்கூறப்பட எண்வகை மெய்ப்பாடுகளும் அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவானவை. இங்கே சொல்லப்படும் முப்த்திரண்டும் அகத்திற்குச் சிறப்புடையவை, இவை எட்டு எட்டாக பிரிக்கப்படுபவை என்பது பாரதியின் கருத்து. இது மேற்கூறிய இளம்பூரணர் மற்றும் பேராசிரியரின் கருத்துக்கு மாறுபட்டது. அவர்கள் இம்முப்பத்திரண்டும் மேற்கூறிய முப்பத்திரண்டுபோல அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவானவை என்றும் அவை மெய்ப்பாடுகள் என்றும் உரை கொள்கின்றனர். மேலும், குழந்தை கூறுமிடத்து,
“ ‘ஆங்கவை ஒருபாலாக ஒருபால்’ என்றதனால், பால் அல்லது கூறு எனப்படுவன தம்மின் ஒத்த எண்ணாதல் வேண்டுமாகலின், அவை 4-11 முப்பத்திரண்டெனவே, இவையும் முப்பத்திரண்டெனத் தொகை கொள்ளப்பட்டது. அவை ஒருபால் ஆக, இவை ஒருபால் என்க. பால் – கூறு. ஆங்கவை – அங்குக் கூறியவை, முன் கூறியவை. எனா – எண்ணிடைச் சொற்கள்.” குழந்தை., மெய்.12
என்கிறார். இவை முப்பத்திரண்டும் மேற் கூறியதைப் போல அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவானவை என்பது பாரதியின் கருத்து. மேலும், பாலசுந்தரம்,
“இவை முப்பத்திரண்டும் எள்ளல் முதலியவற்றைப் போல வரையறைப்பட்டு அடங்காமல் எண்வகை மெய்ப்பாட்டினுள் விரவி வருதலானும் புறத்திணைக்குச் சிறந்துரிமை பெற்று நிற்றலானும் வேறாகத் தொகுத்து ஓதப்பெற்றன. மற்று ஈண்டுக் கூறப்பெற்றுள்ள வியர்த்தல், தன்மை, விரைவு, வாழ்த்தல், நாணுதல், உயிர்ப்பு, கையாறு, முனிதல், ஆராய்ச்சி, ஐயம் முதலியவாக வருவனவற்றொடு பின்னர்; அகத்திணைக்குரியவாக ஓதப் பெற்றனவற்றுள் வரும், பொறிநுதல் வியர்த்தல், இல்வலியுறுத்தல், பாராட்டெடுத்தல், அலர், நாணல், புலம்பித் தோன்றல், கையறவுரைக்தல், இன்பத்தை வெறுத்தல், ஏதமாய்தல், ஐயஞ் செய்தல் முதலியவை ஒத்தனவாக உள்ளமையின் இங்ஙனம் ஈரிடத்துங் கூறியது என்னை யெனின்? அவ்வாறு வருவன ஒருபுடை ஒக்குமாறும் அகத்தினைச் செய்யுட்டு மெய்ப்பாட்டுறுப்புக் கூறுங்கால் உடைமை, இன்புறல் முதலிய பொருள்பற்றிக் கூறாமல் புகுமுகம்புரிதல் முதலாய சிறப்புப் பொருள் பற்றியும் எள்ளல் முதலாய பொதுப்பொருள் பற்றியும் எள்ளல் முதலாய பொதுப்பொருள் பற்றியும் கூறல் வேண்டுமென்பதும் புறத்திணைச் செய்யுட்கு மெய்ப்பாட்டுறுப்புக் கூறுங்கால் புகுமுகம்புரிதல் முதலாய அகத்திணைக்கே உரிபொருள் பற்றிக்கூறாமல் உடைமை, இன்புறல் முதலாய சிறப்புப்பொருள் பற்றியும் எள்ளல் இளமை முதலாய பொதுப்பொருள் பற்றியும் கூறல் வேண்டும் என்பதும் அறிவித்தற்கென்க. அது பெறுமாறியாங்ஙனமெனின்? ஈண்டு வியர்த்தல், நாணல் எனவும் ஆண்டுப் பொறிநுதல் வியர்த்தல், ஈரமில் கூற்றம், ஏற்றலர் நாணல் எனவும் வேறுபடுத்துக் கூறுதலான் பெறிவது மென்க.” (பாலசுந்.மெய்.12)
என கூறியுள்ளார். இதில் எள்ளல் முதலாய மெய்ப்பாடுகள் பொதுமெய்ப்பாடுகள் எனவும்; உடைமை முதலானவை சிறப்புக்குரிய மெய்ப்பாடுகள் எனவும் கூறப்பட்டுள்ளது. எள்ளல் முதலாய மெய்ப்பாடுகள் முதனிலை மெய்ப்பாடுகள் இவை பொருந்தாதவிடத்து, உடைமை முதலாய துணைநிலை மெய்ப்பாடுகள் தோன்றும் என்பதே பொருத்தமுடையதாகும். ஏனெனில், இரண்டும் ஒருவகையாகுமெனில் இம்முப்பத்திரண்டையும் முன் கூறிய எண்வகை மெய்ப்பாடுகளைப் போல கூறியிருக்கலாம். அவ்வாறு அல்லாமல் அவற்றை முன்னர் வைத்து இம்முப்பத்திரண்டைப் பின்னர் உணர்த்துதலின் மேற்கூறியவாறேஅமையும்.
1:3. பழைய உரையாசிரியர்கள் உரைகளைப் பின்னை உரையாசிரியர்கள் மறுப்பு
பழைய உரையாசிரியர்களான இளம்பூரணர் மற்றும் பேராசிரியரின் உரைகளைப் பின்னைய உரையாசிரியர்களான பாரதி, பாலசுந்தரம் ஆகியோர் மறுத்துரைத்துள்ளனர். அவர்களுள் பாரதி,
“இவ்வாறு அகத்துறைகளுக்குச் சிறந்துரிய இவற்றையும் முன் “எட்டே மெய்ப்பாடு” என வகுத்துப் பிரித்த எண்ணான் குணர்வு போலவே, அகத்துக்கும் புறத்துக்கும் ஒப்பவருவன எனக் கருதுவர் பழையவுரைக்காரர். நானான்காய் எட்டுவகை பெற்றுப் புறந்தோன்றவால் மெய்ப்பாடாமெனச் சுட்டி அவற்றை ஒருபால் எனப்பிரித்து நிறுத்தி, பின் மற்றொரு பாலெனக் குறிக்கப்பெற்ற இவை முப்பத்திரண்டையும் தனித்தும் நானான்காயும் எண்ணாமல், எவ்வெட்டாய் நான்குவகை யிற்றொகுத்த தன் குறிப்பும் பயனும் அவருரையில் விளக்கப் பெறாமையானும், இவை முன் முப்பத்திரண்டின் வேறுபட்ட பான்மைய எனச் சூத்திரச் சொற்றொடர் சுட்டுதலானும், அவருரை பொருந்தாமையுணர்க. அன்றியும், இவையும் முன்னவை போலப் பொருட் பகுதிகளிரண்டிற்கும் பொதுவாய் வருமெனில் பொது உணர்வு பலவிருக்க இவற்றை இவ்வாறு ஈண்டுத் தொகுத்துக் கூறுதலிற் சிறப்பின்மையோடு இவற்றுட் சில முன் மெய்ப்பாடு வகையில் வந்தனவால் ஈண்டு மீண்டுங் கூறுதல் மிகையுமாகும். இதில் வெரூஉதலும் நடுக்கமும் முன் அச்சமாகும்; அரற்றல் முன் அழுகையினடங்கும்; இன்புறல் முன் உவகையாகும்; மடிமை முன் அசைவிலடங்கும்; இடுக்கண் முன் வருத்தமாகும்; இதனாலும் இவர் கருத்து இச்சூத்திரப் பொருளன்மை தேறப்படும். பிறிதொரு பான்மைத்தாம் இவை முப்பத்திரண்டும் நான்காயும் தனித்தும் எண்ணப்படாமல் எவ்வெட்டாய் நான்கு வகையுற்றொகுத்த தன் குறிப்பு அவர் கூறாமையானும், இவை முன்னவற்றின் வேறுபட்ட பான்மைய என இதில் தெளிக்கப்பட்டமையானும், அவர் கூற்றுப் பொருந்தாமை ஒருதலை.” (பாரதி, மெய்.12)
என கூறியுள்ளார். இவர் கூற்றுப்படி இங்கே சுட்டப்படும் முப்பத்திரண்டு மெய்ப்பாடுகளும் மேற்சொன்ன முப்பத்திரண்டில் அடங்கும் என்பதாகும். பாலசுந்தரம்,
“இனி இளம்பூரணரும் பேராசிரியரும் இக்கூறிய முப்பத்திரண்டினையும் நகை முதலாய எண்வகை மெய்ப்பாடுகட்குரிய பொருளெனக் கருதாமல் இவற்றையே மெய்ப்பாடு என்று கருதி உரை விளக்கம் செய்து போந்தனர். நாவலர் சோமசுந்தர பாரதியார், இவை முப்பத்திரண்டும் மெய்ப்பாடு போன்று செய்யும் பொருள் சிறக்க வரும் உணர்வுகள் என்றும் களவிற்குரிய இயற்கைப் புணர்ச்சி முதலிய நான்கற்கும் முறையே எட்டெட்டாக உரிமை பெற்று வரும் என்றும் வலிந்தும் நலிந்தும் பொருள் கூறிச் சென்றனர். அவர் கருத்து நூல்நெறிக்கு ஒவ்வாமையை விளக்கப்புகின் விரயுமாதலின் பின் வரும் உரைக்குறிப்புகளை நோக்கி உணர்ந்து கொள்க. எண்வகை மெய்ப்பாடுகட்கும் அடிப்படையாக எள்ளல் முதலிய முப்பத்திரண்டு பொருளும் ஒரு பகுப்பாகி அமைய அவையல்லாதவிடத்துப் பிறிதொரு பகுப்பாக உடைமை, இன்புறல் முதலியனவாக வரும் இவை முப்பத்திரண்டும் பொருளாதற்கு உளவாகும். இவை, உடைமையின்புறல், நடுவுநிலையருளல் என்றாற் போல ஒருங்கு எண்ணுதற்கு ஏற்ப நிற்றலான் இவற்றை முப்பத்திரண்டாக எண்ணிக் கோடல் வேண்டுமென உணர்ந்த ஆங்கவை ஒருபாலாக் ஈங்கிவை ஒருபால் எனக்கூறினார் ஆசிரியர் என்க. அவையும் என்னும் எச்சவும்மை அவற்றின் சிறப்பின்மை தோன்ற நின்றது. உயிர்ப்பெனாஅ, நடுக்கெனாஅ என்பவை செய்யுளின் நிறைக்க வந்த அளபெடை எனா என்பவை எண்ணின்கண் வந்தன. இவை முப்பத்திரண்டும் இடத்திற்கேற்பப் பிற மெய்ப்பாடுகளுக்கும் பொருளாக வருமென அறிக. உரையாசிரியன்மர் இவற்றிற்கு அகப்பொருள் பற்றிய செய்யுட்களையும் உதாரணமாகக் காட்டியுள்ளனர். ஆசிரியர் அகத்திணைக்குரிய பொருள்களை வகுத்து விதந்து பின்னர் ஓதுதலான் அங்ஙனங் காட்டுதல் மயங்கவைத்தலாம் என்க.” (பாலசுந். மெய்.12) எனக் கூறியுள்ளார். மேற்சொன்ன முப்பத்திரண்டு மெய்ப்பாடுகளும் பொருந்தாதவிடத்து, பிறிதொரு பகுப்பாக உடைமை, இன்புறல் முதலியனவாக வரும் இவை முப்பத்திரண்டும் பொருளாதற்கு உளவாகும் என்பது பாலசுந்தரம் கருத்தாகும். இங்கே பாலசுந்தரம் கூற்றுப்படி இங்கே சுட்டப்படும் முப்பத்திரண்டு மெய்ப்பாடுகளும் மேற்சொன்ன முப்பத்திரண்டில் அடங்குமென்பது பொருந்தாது. அவை முதன்மையானவை இவை துணைமையானவை என்பதே பொருந்தும்.
1:4. முடிவுரை
நடுவுநிலையென்பது எவற்றின் மீதும் பற்றில்லாத உணர்வுநிலை. இதனை சமநிலை என பேராசிரியரும் குழந்தையும் கூறுமிடத்து; பாலசுந்தரமும் பாரதியும் இதனை மறுத்துரைக்கின்றனர். இவர்களின் கருத்துப்படி, நடுவுநிலையென்பது அறநெறிதவறாமை. இதுவே சரியானது. சமநிலையும், நடுவுநிலைமையும் வெற்வெறானவை. வரைதலென்பது நாணம் ஏற்படும்வரை மகிழ்ந்த பலவும் நாணம் வந்தவழி விலகும் மனநிலை எனவும்; காதலுக்குரியது எனவும்; செய்யத்தகுவனவும் செய்யதகாதனவும் உணர்ந்து ஒழுக்கத்தோடு வாழும் நிலையெனவும் இருவேறு கருத்துக்களை முன் வைக்கின்றனர் உரையாசிரியர்கள். இவற்றுள், வரைவு என்பது திருமணத்தை உணர்த்துவது எனவே வரைதலென்பது காதலுக்குரிய ஒழுக்கமாகக் கொள்வதே பொருந்தும். பிறனை வாழ்த்துதல் – பிறரால் வாழ்த்தப்படுதல் – தெய்வம் போற்றுதல் எனும் மூன்று வேறுபட்ட கருத்துக்கள் உரையாசிரியார்களிடையே காணப்படுகிறது. இவை மூன்றுமே வாழ்த்துதலின் பாற்படும். ஏனெனில், தான் பிறரை வாழ்த்துதலும், பிறர் தன்னை வாழ்த்தினாலும், தெய்வத்தை மக்கள் போற்றினாலும் அது வாழ்த்துதலின் பாற்படும். கருதலென்பது, குறிப்பு – ‘மனக்குறிப்பு’ ஆகும். மனதில் தோன்றும் ஆழ்ந்த சிந்தனையே மனக்குறிப்பு எனவே இவைகள் இங்கே பொருத்தமுடையன. ஆனால், பேராசிரியரும் குழந்தையும் ‘மறந்ததனை நினைத்தல்’ என்கின்றனர். ஏற்கனவே, நினைத்தல் என்பதற்கு இவ்வாறுபாடம் கொண்டுள்ளதாலும், அதுவே பொருத்தியுள்ளதாலும் இங்கு இது பொருந்தாது. எள்ளல் முதலாய மெய்ப்பாடுகள் முதனிலை மெய்ப்பாடுகள் இவை பொருந்தாதவிடத்து, உடைமை முதலாய துணைநிலை மெய்ப்பாடுகள் தோன்றும் என்பதே பொருத்தமுடையதாகும். ஏனெனில், இரண்டும் ஒருவகையாகுமெனில் இம்முப்பத்திரண்டையும் முன் கூறிய எண்வகை மெய்ப்பாடுகளைப் போல கூறியிருக்கலாம். அவ்வாறு அல்லாமல் அவற்றை முன்னர் வைத்து இம்முப்பத்திரண்டைப் பின்னர் உணர்த்துதலின் மேற்கூறியவாறே அமையுமென்க. அகத்திற்கும் புறத்திற்குமான முப்பத்திரண்டு மெய்ப்பாடுகளில், கனவு, வெரூஉதல், மடிமை, வியர்த்தல், நடுக்கம் எனும் ஐந்து மெய்ப்பாடுகளை விளக்க மட்டுமே உரையாசிரியர்களால் அகநானூற்றுப் பாடல் எடுத்துக்காட்டாக எடுத்தாளப்பட்டுள்ளது. ஏனைய இருபத்து ஏழு மெய்ப்பாடுகளுக்கும் உரையாசிரியர்கள் அகநானூறறுப் பாடலை எடுத்துக்காட்டாக எடுத்தாளவில்லை.
*****
கட்டுரையாளர்
தமிழ்த்துறைத்தலைவர்
D.L.R. கலை மற்றும் அறிவியல் கல்லூரி
விளாப்பாக்கம், ஆற்காடு -
தலைமக்கட்கு உரித்தான மெய்ப்பாடுகளும் அகநானூறும் – உரையாசிரியர்களின் உரைகளை முன்வைத்து ஓர் ஆய்வு
-பேரா. பீ.பெரியசாமி
1:0. முன்னுரை
தலைமக்கட்கு உரித்தான, உரித்தாகாத குணங்களைத் தொல்காப்பியர் மெய்ப்பாட்டியலில் கூறியுள்ளார். (தொல்.மெய்.25-26) அவற்றையும் அவற்றை விளக்க உரையாசிரியர்கள் எடுத்தாண்டுள்ள அகநானூற்றுப் பாடல்களையும் குறித்து இவ்வியலில் ஆராயப்படவுள்ளது.
1:1. தலைமக்கட்குரித்தான குணங்களும் அகநானூறும்
தலைமக்கட்குரித்தான குணங்களாகத் தொல்காப்பியர், பிறப்பு, குடிமை, ஆண்மை, ஆண்டு, உருவு, நிறுத்த காமவாயில், நிறை, அருள், உணர்வு, திரு என்னும் பத்தையும் கூறியுள்ளார். (தொல்.மெய்.25) அவற்றையும் அவற்றை விளக்க உரையாசிரியர்கள் எடுத்தாண்டுள்ள அகநானூற்றுப் பாடல்களையும் குறித்து இப்பகுதி ஆராயவுள்ளது.
இவ்விடத்துக் கூறப்படும் மெய்ப்பாடுகளனைத்தும் தலைமக்களிடத்து அமைய வேண்டுமென்பதையும் அவையெல்லாம் எவ்வாறமையும் என்பதையும் பேராசிரியர்,
”இவையெல்லாம் இருவர்க்குந் தம்மின் ஒக்கும் பகுதியெனவும் இவைபற்றி மெய்ப்பாடு பிறக்குமெனவுங் கூறியவாறு ‘வகை’ யென்றதனான் ஆண்மைவகை பெண்மை வகையெனவுங், குடிமைவகை யென்பது இருவர்க்கும் இளமைப் பருவத்தே தங்கிய ஒழுக்கமெனவும், பிறப்பினது வகை யென்பது அந்தணர்க்கு நான்கும் அரசர்க்கு மூன்றும் வணிகர்க்கு இரண்டும் வேளாளர்க்கு ஒன்றுமெனவுங் கூறுக. இனி, ‘ஏவன்மரபின் ஏனோர்’ (தொல்.பொருள்.24) பாங்கினும் ‘அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்’ (தொல்.பொருள்.23) தம்மின் ஒத்த பிறப்புக் காரணமாக உள்ளத்து வருங் காமக்குறிப்பு முதலாயினவுங் கொள்க. இவ்வெண்ணப்பட்டன ஒத்துவரினன்றி அறிவுடையார்கட் காமக்குறிப்பு நிகழாமையின் இவற்றையும் ஈண்டு மெய்ப்பாடென்றோதினானென்பது, அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும் வரும் இக்குறிப்பு முதலாயினவற்றை இலேசினாற் கொண்டான்; அவை பிறழ்ந்து வருமாகலினென்பது” (பேரா.மெய்.25) எனக் கூறியுள்ளார். மேலும் பாரதி,
”ஈற்றேகாரம் அசை மற்றைய ஏயும் ஒடுவும் எண்ணிடைச் சொற்கள் முன் களவியலில், ”ஒன்றே வேறே என்றிரு பால்வயின், ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப” எனும் சூத்திரத்தில், தலைக்காட்சியில் முளைத்த காதல் நிலைத்து வளர்தற் கின்றியமையாதது தலைமக்களின் ஒப்பு என வாளா சுட்டியதால், இங்கு அவ்வொப்பின் வகை விரித்து விளக்கப்பட்டது. இது, களவியலிலேனும் அன்றித் தகவுபெற அகப்பகுதியிலேனும் கூறின் அமையும் ஆண்டுக் கூறாமையால் ஒத்தக் காதலை வெளிப்படுத்தும் மெய்ப்பாடுகள் கூறி முடித்து, அவை நிலைத்த மெய்க்காதற்கே யுரியலாதலின், அக்காதல் நிலைக் குரியதென முன்தொகுத்துக் கூறிய ஒப்பு இங்கு வகுத்து விளக்கப்பட்டது இவை தாமே மெய்ப்பாடாகாமை இவற்றின் தன்மையில் தெளியப்படும்” (பாரதி, மெய்.25) எனக் கூறியுள்ளார். களவியலில் காதலர்களின் இயல்பைக் கூறிய தொல்காப்பியர், இவ்விடத்தே அவர்களுக்கான ஒப்புமையை விளக்கியுள்ளார். மேலும் குழந்தை,
தலைமகனது பிறப்பு முதலாயின தன் பிறப்பு முதலியவற்றோடு ஒத்ததாயின் தலைமகட்குக் காமக்குறிப்புத் தோன்றும். பிறப்பு முதலியன பற்றி மனத்தின்கட் பிறக்கும் தருக்குணர்ச்சி மெய்ப்பாடெனப்படும். இது, தலைமகற்கும் உண்டேனும், ‘ஒப்பினது வகை’ என்றதனால், தலைமகட்கே உரிமை கொள்ளப்படும். ஒருவர்க்குள்ள பிறப்பு முதலியன மற்றவர்க்கும் இருக்கின் அவ்வொப்பினால் இருவர்க்கும் காமக் குறிப்புத் தோன்றுமேனும், தலைமகனே தலைமகளைக் காண்பானாகையால் தலைமகள்பாலே இவ்வொப்புமைக் கேதுவாகிய உள்ள வுணர்ச்சி தோன்றித் தலைமகனைக் காதலிக்க வேண்டுதலின் அவளுக்கே சிறப்புடையன இவையென்பதாம். இப்பத்தில் குடிமை, ஆண்டு, உரு, அன்பு, அருள் என்பன இருவரும் எதிர்ப்பட்டதும் ஒத்துப் பார்க்கப்படும் மற்றவை பின்னர் வெளிப்படும். இப்பத்தினுள், உருவும், அவற்றுவழித் தோன்றும் அன்பும் மிகுதியும் ஒத்திருக்க வேண்டும்” (குழந்தை, மெய்.25).
எனக் குழந்தை கூறியுள்ளார். இவர் கருத்துப்படி இவ்விடத்துக் கூறப்படும் பத்து மெய்ப்பாடுகளும் தலைமகளுக்கு சிறப்புடையதாகும். இது பொருந்தாது ஏனெனில் இது தலைமக்கட்கான ஒப்புமை எனவே இருவர்க்கும் சிறந்தமையாகும்.
1:1:1. பிறப்பு
பிறப்பென்பது, “ஒத்த பிறப்பு – குடிமையொடு பிறப்பிடை வேற்றுமை என்னையெனின், பிறப்பென்பது குடிப்பிறத்தல்” (பேரா. மெய்.25) எனவும், “தோன்றிய குடிநிலை” (பாரதி, மெய்.25) எனவும், ”நற்குடிப்பிறத்தல்” (குழந்தை, மெய்.25) எனவும், “குலப்பிறப்பு. அஃதாவது ஒழுக்க நிலையான் அமைந்த அந்தணர் முதலிய நாற்குலம். “நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக் குலத்தின்கண் ஐயப்படும்” என்பதனான் ஒழுக்கம், குலம் பற்றி விளக்குதல் புலனாகும்.” (பாலசுந். மெய்.25) எனவும், “அந்தணர், அரசர், வணிகர், வேளாளர், ஆயர், வேட்டுவர், குறவர், நுளையர் என்றார்போல வரும் குலம்” (தாசன், மெய்.25) எனவும், “குடிப்பிறப்பு”” (இராசா, மெய்.25) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர்.
பிறப்பென்பது தலைமக்களின் ஒத்த பிறப்பு. இதனை விளக்கப் பேராசிரியர், கலி.39, 94 ஆகிய பாடல்களையும், குழந்தையும் பாலசுந்தரமும், கலி.39 ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடல் எதையும் எடுத்தாளவில்லை.
1:1:2. குடிமை
குடிமையென்பது, “ஒத்த ஒழுக்கம்; அதற்குத்தக்க (குடிபிறத்தல்) ஒழுக்கங் குடிமை எனப்படும்; குடிபிறந்தாரது தன்மையைக் குடிமையென்றானென்பது; அதனை ஊராண்மையெனவுஞ் சொல்லுப.” (பேரா. மெய்.25) எனவும், “ஒழுக்கநிலை; “ஒழுக்க முடைமை குடிமை” என்பதனாலும், பிறப்பு வேறு கூறுவதாலும், இது குடிமை ஒழுக்கம் குறிக்கும்.” (பாரதி, மெய்.25) எனவும், “பண்பாடு. அதாவது குலனுடையார்க்குரியவை எனச் சான்றோர் வகுத்துக்கொண்ட சால்பு. குலம், குடிமை, என்பன ஒரோவழி ஒத்த பொருளினவாய் வரும் எனினும் இரண்டிற்கும் வேறுபாடு உண்டு என்பதனை இலக்கண வகையான் உணர்த்தற்பொருட்டுக் குலத்தைப் பிறப்பென்று சிறப்பித்தோதினர் என அறிக. குலஒழுக்கம் செயற்பண்பையும் குடிமை என்பது குணப்பண்பையும் குறித்து வருமெனக் கொள்க.” (பாலசுந்., மெய்.25) எனவும், “குலத்தினுள்ளும் சிறப்பாகிய ஒழுக்கம் பற்றிய குடிவரவு.(குடிவரவு குடிமை எனப்படும்).” (தாசன், மெய்.25) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர்.
குடிமையென்பது உயர்குடிப் பிறத்தலின் வழி எய்திய ஒழுக்கம். இதனை விளக்க பேராசிரியரும் குழந்தையும் நற்.3 ஆம் பாடலையும், பாலசுந்தரம் நற்.1 ஆம் பாடலையும், தாசன் குறள்.972–ஐயும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடல் எதையும் எடுத்தாளவில்லை.
1:1:3. ஆண்மை
ஆண்மையென்பது “ஒத்த ஆண்மை; ஆண்மை புருடர்க்காம் – அஃது ஆள்வினையெனப்படும். இது தலைமகட்கொப்பதன்றாலெனின், குடியாண்மை யென்புழி ஆண்மை யென்பது இருபாற்கும் ஒக்குமாதலின் அமையுமென்பது” (பேரா. மெய்.25) எனவும், “ஆளுந்திறம்; இது காதலர்க் கின்றியமையா ஒப்பு வகையுள் ஒன்றெனப் படுதலின், இருபாலர்க்கும் பொதுவாதல் தேற்றம் மனையாட்டி, அயலில்லாட்டி, பெண்டாட்டி, வினையாட்டி என்பனவற்றாலும் பெண்பாலார்க்கு ஆட்சியுண்மை துணியப்படும்” (பாரதி, மெய்.25) எனவும், “ஆளுமைத்திறன் ஆண்தன்மை வேறு; ஆளுதல் தன்மை வேறு இதன் முதனிலை உரிச்சொல் ”ஆள்” அதன் முன்னிலை உரிச்சொல் ‘ஆண்’ என்று அறிக. இயற்றலும் ஈட்டலும் தலைவற்கு ஆளுமை. காத்தலும் வகுத்தலும் தலைவிக்கு ஆளுமை. பிறவற்றையும் இவ்வாறே பகுத்துணர்ந்து கொள்க” (பாலசுந்., மெய்.25) எனவும், “ஆண்மைத் தன்மை அஃதாவது ஆள்வினையுடைமையும் வலிபெயராமையும். ‘முட்டின்று முடித்தல்’ என்பதனால் தலைமகள்மாட்டுப் பெண்மையும் கொள்ளப்படும். அது பெண்டிர்க்குரிய நாணம்” (தாசன், மெய்.25) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர்.
ஆண்மையென்பது ஆண்களுக்கான ஆள்வினையுடைமையும் பெண்களுக்கான நால்வகை குணங்களும் சிறந்திருத்தலாகும். இதனை விளக்க பாலசுந்தரம் கலி.11 ஆம் பாடலையும், பேராசிரியரும் குழந்தையும்,
”கேள்கே டூன்றவுங் கிளைஞ ராரவுங்
கேளல் கேளிர் கெழீஇயின ரொழுகவு
மாள்வினைக் கெதிரிய வூக்கமொடு புகல்சிறந்து” (அகம்.93)எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில், தன் சுற்றத்தாரது கேட்டைப் பாதுகாக்கவும் அவர்களுண்ணவும் சுற்றமில்லாத சுற்றத்தாரை (நண்பர்களை) நண்பு செய்து ஒழுகவும் தம் ஆள்வினைக்கு எதிர்ப்பட்ட உள்ளத்தொடு விரும்பி வந்தோமென வினைமுற்றி மீளலுறும் தலைமகன் இடைச்சுரத்துத் தன் நெஞ்சிற்குக் கூறியது. இதனை, “தன் ஆண்டினைக்குத் தக்க, “பெண்மையான் அவள் ஆற்றியிருந்தாள்” என்பதூஉம், கருதிய கருத்தினாற் காமக் குறிப்பும் பிறந்தமை” என்பர் பேராசிரியர்.” (புலியூர்க் கேசிகன், அகநானூறு, களிற்றியானைநிரை, ப.179) என புலியூர்க் கேசிகனும், “பேராசிரியர், ”பிறப்பே குடிமை” என்ற சூத்திரத்து ஆண்மையால் தலைமகனொடு தலைமகள் ஒத்தமைக்குக் ”கேள்கே டூன்றவும் இறைஞர் ஆரவுமட்…… புகல் சிறந்து” என்ற அடிகளைக் காட்டி, இன்ன காரணத்திற் பிரிந்து போந்து வினைமுடிந்தன மாயினும், அவளை முயங்குகம் சென்மோ என்றமையின், தன் ஆள்வினைக்குத் தக்க பெண்மையான் அவள் ஆற்றியிருந்தா ளென்பதூஉம் கருதிய கருதினாற் காமக் குறிப்புப் பிறந்தமையின், அஃது ஆண்மையாயிற்று.” (மா.பரமசிவம், அகநானூறு, ப.9) என மா.பரமசிவனும் கூறியுள்ளனர். இவற்றில் ஆணுக்குரிய வினைமேற் செல்லலும் பெண்மைக்குரிய ஆற்றியிருத்தலும் வெளிப்பட்டுள்ளமையால் ஆண்மையாயிற்று.
1:1:4. ஆண்டு
ஆண்டென்பது, “ஒத்த பிராயம்; யாண்டென்பது ஒத்தவாறென்னையெனின், பன்னீர் யாண்டும் பதினாறியாண்டுமே பெண்மையும் ஆண்மையும் பிறக்கும் பருவமென்பது ஒத்தினுள் ஒப்பமுடிந்தமையின் அதுவும் ஒப்பெனவே படும்” (பேரா. மெய்.25) எனவும், “பருவம்; அதாவது வயது” (பாரதி, மெய்.25) எனவும், “காமக் குறிப்புத் தோன்றிய பருவம்” (குழந்தை, மெய்.25) எனவும், “அகவை அஃது ஈண்டுப் பருவத்தை ஆகுபெயரிலக்கணத்தான் உணர்த்தி நின்றது. அஃதாவது தலைவற்குப் பதினாறு ஆண்டும் தலைவிக்குப் பன்னிரண்டாண்டும் நிரம்பி நிற்கும் வரைவிற்குரிய பருவமாம். இங்ஙனம் தலைவன் அகவையிற் காற்கூறு குறைதல் ஒப்புமை யகவை (ஆண்டு) என்றுணர்க. இதனை “மிக்கோனாயினும் கடிவரை யின்றே” எனக் களவியலுள் கூறியுணர்த்தியமை கண்டு கொள்க” (பாலசுந்., மெய்.25) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர்.
ஆண்டென்பது திருமணத்திற்குரிய பருவமெய்தும் வயது. இதனை விளக்க பேராசிரியரும் குழந்தையும் கலி.18 ஆம் பாடலையும், பாலசுந்தரம் ஐங்.256 ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடலை எடுத்தாளவில்லை.
1:1:5. உருவு
உருவென்பது, “ஒத்த உருவு…’உருவு நிறுத்த காமவாயி’ லென்பது பெண்மை வடிவும் ஆண்மை வடிவும் பிறழ்ச்சியின்றி அமைந்தவழி அவற்றுமேல் நிகழும் இன்பத்திற்கு வாயிலாகிய அன்பென்றவாறு…….. உருவென்பது குறிப்பின்றாகலின் மெய்ப்பாடா மாறென்னையெனின், அவ்வுருப்பற்றி மனத்தின்கட் பிறப்பதோர் தருக்குண்டன்றே அதனான் அது மெய்ப்பாடெனப்படும்” (பேரா. மெய்.25) எனவும், “வடிவம்; அதாவது “மூப்போ டிளமைமுரணா” வனப்பு” (பாரதி, மெய்.25) எனவும், “உருவும், அன்பும் அதாவது பெண்மை வடிவும், ஆண்மை வரவும் நன்கு அமைந்த வழி அவற்றின்கண் நிகழும் இன்பத்திற்கு அன்பு வாயின் போறலின், அன்பு காமவாயில் எனப்பட்டது. அன்பு, வடிவுபற்றி யல்லது தோன்றாமையின், உருவும் அதன்கட் டோன்றும் அன்பும் என இரண்டாகப் பகுக்கப்பட்டது. உருவின்கண் நிலைபெற்ற காமத்திற்கு வாயில் போன்ற அன்பென்க” (குழந்தை, மெய்.25) எனவும், “வனப்பு அஃதாவது தோற்றமும் எழிலும் ஏற்றமுற விளங்கும் நிலை” (பாலசுந்., மெய்.25) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர்.
உருவென்பது காதலுக்குரிய வனப்பும், வடிவும் அன்பும் நிறைவெய்தல். இதனை விளக்க பேராசிரியர், குறள்.632, கலி.108 ஆகிய பாடல்களையும், குழந்தை கலி.108 ஆம் பாடலையும், பாலசுந்தரம் ஐங்.299 ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடலை எடுத்தாளவில்லை.
1:1:6 நிறுத்த காமவாயில்
நிறுத்தகாமவாயிலென்பது, “ஒத்த அன்பு” (பேரா. மெய்.25) எனவும், “நிலைத்த காதல் நிலை” (பாரதி, மெய்.25) எனவும், “நிலைநிறுத்தப்பட்ட புணர்ச்சிக்கு வாயில் அஃதாவது ஒருவர்மாட்டு ஒருவர்க்கு நிகழும் அன்பு” (தாசன், மெய்.25) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். நிறுத்தகாமவாயிலென்பது, இருவர்மாட்டும் பயின்று வரும் காமத்திற்கேதுவாகிய அன்பு. இதனை விளக்க பாலசுந்தரம் குறுந்.70 ஆம் படலையும், பேராசிரியரும் குழந்தையும்,
“நின்மக ளுண்கண் பன்மா ணோக்கிச்
சென்றோன் மன்றவக் குன்றுகிழ வோனே
பகன்மா யந்திப் படுசுட ரமையத்
தவன்மறை தேஎ நோக்கி மற்றிவன்
மகனே தோழி யென்றனள்” (அகம்.48)எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில், நின்மகளது மையுண்ட கண்களைப் பலதரம் மாட்சிமைப்பட நோக்கி அக்குன்று நாட்டுக்குரியோன் சென்றான். பகல் நீங்கும் அந்தியாகிய சுடர்படுகின்ற காலத்து அவன் மறைந்த திக்குநோக்கித் தோழீ! இவன் ஒரு சிறந்த ஆடவனே என வியந்து கூறினாள் என்பதன்வழி இதில் தலைவி தலைவன்மேற் கொண்ட காதல் வெளிப்பட்டுள்ளமையின் நிறுத்தகாம வாயிலாயிற்று.
1:1:7. நிறை
நிறையென்பது, “ஒத்த நிறை; நிறையென்பது மறைபிறரறியாமை (கலி.133) நெஞ்சினை நிறுத்தல்” (பேரா. மெய்.25) எனவும், “சால்பு அடக்கமெனினும் ஒக்கும். அஃதாவது மறை பிறரறியாமல் நெஞ்சினை நிறுத்தல்” (பாலசுந்., மெய்.25) எனவும், “உள்ளத்தை ஒருவழி நிறுத்தும் நிலை” (இராசா, மெய்.25) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். நிறையென்பது பிறர் அறிய கூறக்கூடாதவற்றை மறைத்தொழுகுதல். இதனை விளக்க பேராசிரியர் கலி.133, 37 ஆகிய பாடல்களையும், குழந்தை கலி.37 ஆம் பாடலையும், பாலசுந்தரம் குறுந்.9, கலி.47 ஆகிய பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடலை எடுத்தாளவில்லை.
1:1:8. அருள்
அருளென்பது, “எல்லாவுயிர்க்கும் இடுக்கண் செய்யாத அருளுடையராயிருத்தல் அதுவுங் காமத்திற்கு இன்றியமையாததோர் குறிப்பு” (பேரா. மெய்.25) எனவும், “பிறவுயிர்க் குண்டான துன்பங் கண்டிரங்குதல், துன்பஞ் செய்யாமை” (குழந்தை, மெய்.25) எனவும், “ஒருவர் ஒருவரின் குறையினை நிறையாக ஏற்றொழுகும் மனமாட்சி அருளுடைமை என்னும் பொதுக்குணம் ஈண்டுச் சிறப்புப் பொருள் படநின்றது. பொறை வேறு; குறையை நிறையாகக் கொள்ளும் பண்புவேறென அறிக” (பாலசுந்., மெய்.25) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர்.
அருளென்பது எல்லாவுயிரிடத்தும் அன்போடு நெருங்குதல். இதனை விளக்க பாலசுந்தரம் கலி.88, குறுந்.196 ஆகிய பாடல்களும், பேராசிரியரும் குழந்தையும்,
“தாதுண் பறவை பேதுற லஞ்சி
மணிநா வார்த்த மாண்வினைத் தேரன்” (அகம்-4)எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில், தாதை உண்ணுகின்ற பறவை (வண்டு) வருந்துதலுக்கு அஞ்சி மணியின் நாவை ஒலி எழுப்பாவண்ணம் கட்டிய மாட்சிமைப்பட்ட தொழிலமைந்த தேரையுடையவன். என்பதில் தன் தேரின் ஒலி வண்டினையும் துன்புறுத்த கூடாது என்ற உயர்ந்த நோக்குடையவனாக தலைவன் கூறப்படமையான் இஃது அருளானது.
1:1:9. உணர்வு
உணர்வென்பது, “ஒத்த அறிவு; …. உணர்வென்பது அறிவுடைமை; அஃதாவது உலகியலாற் செய்யத்தகுவது அறிதல்” (பேரா. மெய்.25) எனவும், “அறிவு; உணர்ச்சி எனினும் அமையும்” (பாரதி, மெய்.25) எனவும், “ஒருவர் ஒருவர்தம் உள்ளக் குறிப்பை அறிந்தொழுகும் நுண்ணறிவு” (பாலசுந்., மெய்.25) எனவும், “உணர்வினை மதித்தல்” (இராசா, மெய்.25) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர்.
உணர்வென்பது ஒருவர் குறிப்பை மற்றொருவர் அறிந்தொழுகும் அறிவு. இதனை விளக்க பாலசுந்தரம் குறள்.1100 ஐயும், பேராசிரியர், தொல்.பொருள்.259 ஆம் நூற்பாவையும், மேலும் பேராசிரியரும் குழந்தையும்,
“தன்னசை யுள்ளத்து நந்நசை வாய்ப்ப.” (அகம்.22)
எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில், “தனது வேட்கை நிறைந்த உள்ளத்தின்கண் எமது வேட்கையும் வாய்ப்ப என்பது பேராசிரியர் கருத்து. (காவலரறியாமல்) தன்னை நச்சுதலையுடைய உள்ளத்தில் எம்முடை நசை (வேட்கை) வாய்ப்ப என்பது அகநானுற்றுக் குறிப்புரைகாரர் கருத்து.” (கணேசையர், தொல்காப்பியம், பொருளதிகாரம், பேராசிரியர் இரண்டாம் பாகம், ப.க0க) என கணேசையர் கூறியுள்ளார். இது உள்ளத்துணர்வின் பாற்பட்டது.
1:1:10. திரு
திருவென்பது, “ஒத்த செல்வம்; திருவென்பது, பொருளுடைமையும் பொருள் கொணர்ந்து துய்த்தலுமின்றி எஞ்ஞான்றுந் திருத்தகவிற்றாகியதோர் உள்ள நிகழ்ச்சி; அது வினையுள்ளுடைமையெனவும் படும்” (பேரா. மெய்.25) எனவும், “செல்வம்; இது பொருள் பற்றியதன்று; உள்ள மலர்ச்சி; ”செல்வ மென்பது சிந்தையினிறைவே” என்பதனாலும் இப்பொருட்டாதலறிக” (பாரதி, மெய்.25) எனவும், “தெய்வந்தன்மை, அஃதாவது கண்டாராற் போற்றப்பெறும் தெய்வப் பொலிவு. திருத்தகவிற்றாயதோர் உள்ள நிகழ்ச்சி என அவர் கொள்கைக்கேற்பப் பொருள் கூறுவார் பேராசிரியர். அஃது ஒப்புமைப் பண்பாதற்கு ஏலாமையறிக” (பாலசுந்., மெய்.25) எனவும், “நல்லதையே எண்ணும் உளநிலை” (இராசா, மெய்.25) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர்.
திருவென்பது நிறைவெய்தும் மனநிகழ்வு. இதனை விளக்கப் பேராசிரியரும் குழந்தையும் கலி.143ஆம் பாடலையும், பாலசுந்தரம் திணைமாலை.71ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடலை எடுத்தாளவில்லை.
இதுகாறும் கூறப்பட்ட பத்து மெய்ப்பாடுகளும் தலைமக்கட்குரித்தான ஓப்புமைகளாகும். இதனை,
“இதுகளவியலுட் கூறப்பட்ட தலைவற்குந் தலைவிக்கும் உளதாகும் ஒப்புப் பாகுபாடு உணர்த்துதல் நுதலிற்று” (இளம்., மெய்.25) என இளம்பூரணரும்,
“மெய்ப்பாட்டிற்குரிய பொருளாக ஓதப்பெற்ற பொருள் யாவும் பண்பும் செயலுமே ஆதலின் அவற்றிற்கு அடிப்படையாய குடிமையையும் பிறப்பையும் ஒப்பினது வகையுள் தலைமையுடையவை என்பது தோன்ற முதற்கண் வைத்தோதினார் என்க. ‘ஒத்த கிழவனும் கிழத்தியும்’ (கள-2) என்ற ஒப்புமையை விதந்து கூறுகின்றது. ஐந்திணை மருங்கின் காமக் கூட்டமாவது, துணையமை நல்யாழ்த் துணைமை யோரயல்பெனவும் (களவு-1) அத்துணைவராவார் ஒத்த கிழவனும் கிழத்தியுமெனவும் அவர்தாம் ஒன்றியுயர்ந்த பாலதாணையாற் காண்ப. (களவு-2) எனவும், அவருள் தலைமகன் பெருமையும் உரனுமாகிய குணங்களையுடையான் (கள.7) எனவும் தலைவி அச்சமும் மடனும் நாணுமாகிய குணங்களையுடையாள் (களவு-8) எனவும் கூறி அவர்தாம் இருவகைக் கைகோளானும் ஒழுகும். ஒழுக்கமே ‘மன்னிய வினை’ என்றும் ஆசிரியர் புலப்படுத்திப் புகுமுகம் புரிதல் முதலாகக் கலகம் ஈறாக ஓதப் பெற்றவை களவிற்குரிய நிமித்தமாம் என்றும் முட்டுவயிற்கழறல் முதலிய எட்டும் வரைந்தெய்தும் அழிவில் கூட்டத்திற்குரிய நிமித்தமாம் என்றும் தெய்வமஞ்சல் முதலிய பத்தும் கற்பிற்குரிய பொருள்களாம் என்றும் கூறி அவையும் அவைபோல்வன பிறவுமெல்லாம் எண்வகை மெய்ப்பாட்டிற்குரிய அடிப்படைப் பொருள்களாம் எனவும், இதுகாறும் எடுத்தோதினார் அங்ஙனம் மன்னியவினை பற்றி வரும் பொருள்கள் யாவும் மேற்கூறிய கிழவனும் கிழத்தியும் அத்தகைய சால்புடையராகிய வழியே நிகழுமாதலின் அச்சால்புடைமைக்கு அடிப்படை இவை என்பது விளங்கும். எனவே அகத்திணைக்கண் எண்முறை நிலையாய மெய்ப்பாடுகள் தோன்றுதற்கு அடிப்படைப் பொருள்கள் புகுமுகம் புரிதல் முதலாயவை என்பதும் புகுமுகம் புரிதல் முதலாய பொருள்கள் நிகழ்தற்கு அடிப்படை தலைமக்கட்குரிய குணங்கள் என்பதும் அக்குணங்கள் அமைதற்குரிய அடிப்படை பிறப்பு முதலாய ஒப்புமைகள் என்பதும் தெளிவாம். அவற்றுள் குணங்கள் தலைமக்கட்குரிய இலக்கணமாக நிற்றலின் அவற்றைக் களவியலுள் விதத்து கூறி, பிறப்பு முதலாய இப்பத்தும் தலைமக்கட்குரிய இலக்கணமன்மையான் ஆண்டுக் கூறாமல் மெய்ப்பாட்டுப் பொருள் தோன்றுதற்குக் காரணமாதல் பற்றி ஈண்டு அமைத்தார் என்க” (பாலசுந்., மெய்.25) என பாலசுந்தரமும்,
“இப்பத்தும் ஒத்த அன்பராய்த் தம்முள் கூடும் தலைவன் – தலைவி ஆகிய இருவர்பாலும் இருக்க வேண்டும் ஒப்புநிலைகளாகும்” (இராசா, மெய்.25)) என இராசாவும் கூறியுள்ளனர்.
1:2. முடிவுரை
- தலைமக்கட்குரித்தானதாகக் கூறப்படும் பத்து மெய்ப்பாடுகளும் குழந்தை கருத்துப்படி தலைமகளுக்கு சிறப்புடையதாகும். இது பொருந்தாது ஏனெனில் இது தலைமக்கட்கான ஒப்புமை எனவே இருவர்க்கும் சிறந்தமையாகும்.
- தலைமக்கட்குரிய ஒப்புமைகளாகக் கூறப்படும் பத்துமெய்ப்பாடுகளுள் ஆண்மை, நிறுத்தகாம வாயில், அருள், உணர்வு எனும் நான்கினை மட்டும் விளக்க அகநானூற்றுப் பாடல்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. மேலும் இவையனைத்தும் உரையாசிரியர்களால் பொருந்த ஆளப்பட்டுள்ளன.
*****
கட்டுரையாளர்,
தமிழ்த்துறைத்தலைவர்,
D.L.R. கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
விளாப்பாக்கம், ஆற்காடு -
தன்வந்திரி பீடத்தில் யாகத் திருவிழா
மூன்று நாட்கள் 36 ஹோமங்கள் துவங்கியது.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி மாசி மகம் பௌர்ணமி முன்னிட்டு சகல பாக்யமும் தரும் பாக்ய சூக்த ஹோமத்துடன் முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு 36 விதமான யாகங்கள் யாகத் திருவிழா நடைபெறுகின்றன.
மேற்கண்ட வைபவம் நேற்று 26.02.2018 திங்கட் கிழமை மாலை 6.00 மணியளவில் மங்கள இசை, வேத பாராயணம், மஹா கணபதி பூஜை, சர்வ தேவதா ஆக்வாண பூஜை, கோலக்ஷ்மி பூஜை, தீப லக்ஷ்மி பூஜை, யாகசாலை பிரவேசம், மஹா சங்கல்பம், கலச பூஜை, மஹா கணபதி ஹோமம், ஸ்ரீவித்யா ஹோமம், சதுர்வேத உபச்சாரம் ஆகிய விசேஷ பூஜைகள் மற்றும் ஹோமங்களுடன் துவங்கியது.
இதனை தொடர்ந்து இன்று 27.02.2018 செவ்வாய் கிழமை காலை 7.00 மணி முதல் கோபூஜை மங்கள இசை, வேத பாராயணம், மஹா கணபதி பூஜை, வாஸ்து ஹோமம், ஸ்ரீவித்யா ஹோமம், நவாவரண பூஜை, நவக்கிரக ஹோமம், சனி சாந்தி ஹோமம், ஸ்ரீ வாசவி ஹோமம், ஆயுஷ் ஹோமம், பாக்ய சூக்த ஹோமம், காளி யாகம், சூலினி துர்கா ஹோமம், வாஸ்து ஹோமம், மண்ய சூக்த ஹோமம், சத்ரு சம்ஹார ஹோமம், ஸ்ரீ அன்னபூரணி ஹோமம், சொர்ண பைரவர் ஹோமம், சதுர்வேத உபச்சாரம், தீபாராதனை, ஆகிய் பூஜைகளும் ஹோமங்களும் இரண்டு காலமாக நடைபெற்றது.
மேலும் செவ்வாய் கிழமை பூசம் நட்சத்திரத்தில் வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு பெண்கள் மாதவிடாய் பிரச்சினைகள் அகல பெண்களின் தாயாகவும் வைத்திய ஈஸ்வரியாகவும் விளங்குகின்ற ஸ்ரீ மரகதாம்பிகைக்கு மங்களகௌரி ஹோமத்துடன் மாதுளம் பழம் சாறு கொண்டு மஹா அபிஷேகம் நடைபெற்று ஸ்வாமிகள் திருக்கரங்களால் பக்தர்களுக்கு ஹோம பிரசாததுடன் கஷாயம் பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்த யாகத்தில் ஸ்ரீ வடபாதி சித்தர், தொழிலதிபர் Dr.J.லட்சுமணன், துர்காபவன் உடமையாளர் திரு. உதயசங்கர், ஸ்ரீபெரும்புதூர் இராமானுஜம், விழுப்புரம் சம்பத் குமார், குடியாத்தம் விஜயகுமார் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பிரார்த்தனை செய்தனர்.
இதனை தொடர்ந்து நாளை 28.02.2018 புதன் கிழமை காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரை கோபூஜை மங்கள இசை, வேத பாராயணம், மஹா கணபதி பூஜை, ஸ்ரீவித்யா ஹோமம், நவாவர்ண பூஜை, கார்த்தவீர்யார்ஜுனர் ஹோமம், சுதர்சன ஹோமம், தன்வந்திரி ஹோமம், லக்ஷ்மி நரசிம்மர் ஹோமம், ஸ்ரீ ராமர் ஹோமம், கருட ஹோமம், பாக்ய சூக்த ஹோமம் மூன்றாம் கால பூர்ணாஹூதி, சதுர்வேத உபச்சாரம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்.
மாலை 4.30 மணி முதல் லக்ஷ்மி குபேரர் ஹோமம், சுக்ர சாந்தி ஹோமம், தத்தாத்ரேயர் ஹோமம், அஷ்ட பைரவர் சஹித காலபைரவர் ஹோமம், அஷ்டதிக்பாலகர் ஹோமம், ருத்ர ஹோமம், பாக்ய சூக்த ஹோமம் நான்காம் கால பூர்ணாஹூதி, சதுர்வேத உபச்சாரம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் போன்ற பல்வேறு பூஜைகளும் ஹோமங்களும் நடைபெறுகிறது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.
-
கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்








