நான்காமவத்தையும் அகநானூறும் – உரையாசிரியர்களின் உரைகளை முன்வைத்து ஓர் ஆய்வு

0

-பேரா. பீ.பெரியசாமி

1:0. முன்னுரை

நான்காமவத்தையாவன, பாராட்டெடுத்தல், மடந்தபவுரைத்தல் ஈரமில் கூற்றம், ஏற்றலர் நாணல், கொடுப்பவை கோடல் எனும் நான்குமென தொல்காப்பியர் கூறியுள்ளார். (தொல்.மெய்.16) இதனை விளக்க உரையாசிரியர்களின் உரையும் அகநானூற்றுப் பாடல்களும் குறித்து இப்பகுதி ஆரயவுள்ளது.

1:1 பாராட்டெடுத்தலும் அகநானூறும்

பாராட்டெடுத்தலாவது, தலைமகள் நின்றநிலையுங் கூறிய கூற்றையும் தனித்த வழியும் எடுத்துமொழிதல்”. (இளம். மெய்.16) எனவும், புணர்ச்சி நிகழ்ந்த பின்னர்த் தலைமகனை இயற்பட நினைவுங் குறிப்பும்இது பாராட்டென்னாது எடுத்தலென்றதனால் அதனை உள்ளமெடுத்தன் மேற்கொள்க. இது தலைமகற்கும் ஒக்கும்.”( பேரா. மெய்.15) எனவும், புணர்ந்த பின் தலைமக்கள் ஒருவர் மற்றவரின் நல்லியல்பினை வியப்பதாகும்.”( பாரதி. மெய்.16) எனவும், புணர்ச்சி நிகழ்ந்த பின்னர்த் தனது ஆராக்காதலுணர்வு மாறாமை விளங்கத் தலைவியின் நலம் முதலியவற்றையும் தலைவியின் பண்பு முதலியவற்றைப் புனைந்து தனது மீளா வேட்கையைத் தலைவன் விதந்து கூறலின் பாராட்டல் என்னாது பாராட்டு எடுத்தல் என்றார். இஃது இருவர்க்கும் ஒக்குமாயினும், “காமத் திணையிற் கண்ணின்று வழுஉம் நாணு மடணும் பெண்மைய வாகலின் குறிப்பினும் இடத்தினும் அல்லது வேட்கை நெறிப்பட வாரா அவள்வயி னான” (கள.18) என்பது மரபு பற்றிய விதியாகலின் தலைவி பாராட்டுதல் அவள் உள்ளத்தே நிகழுமென அறிக. தலைவன் பாராட்டுதல் வெளிப்படையாக நிகழும் என்க.” (பாலசுந். மெய்.16)எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர்.

பாராட்டெடுத்தலென்பது, இயற்கைப் புணர்ச்சி நடந்தபின் தலைவனைத் தலைவியும் தலைவியைத் தலைவனும் பாராட்டுதல் இயல்பு. தலைமக்களின் அழகு, அறிவு, செய்கை, இயல்பு என ஒருவருக்கொருவர் பாராட்டிக் கொள்ளுதல் அவர்களின் காதல் பரிமாற்றத்தில் ஒன்று. இது காதல் அன்பைப் புலப்படுத்துவது. இதனை விளக்க பாரதி குறுந்.3, 193, குறள்.1130 ஆகிய பாடல்களையும்;  பாலசுந்தரம், குறுந்.2, 3 ஆகிய பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை. 

1:2 மடந்தபவுரைத்தலும் அகநானூறும்

மடந்தபவுரைத்தலென்பது, பெண்டிரது இயல்பாகிய மடப்பங்கெடச் சில கூறுதல். அது தலைமகன் கூற்று நிகழும் வழியதற்கு மாற்றங் கொடுத்தலன்றித் தன் வேட்கை தோன்றக் கூறுஞ் சொல்” (இளம். மெய்.16) எனவும், விளையாடும் பருவத்து நிகழ்ந்த அறிமட நீங்கக் காமப் பொருட்கண்ணே சிறிதளவு தோன்றுதலும்உரைத்த லென்றதனால் அக்காலத்துப் பாங்கிக்குச் சில கூற்றுமொழி கூறவும் பெறுமென்பது கொள்க. அவை மேலை யோத்துக்களுட் கூறப்பட்டன. மடந்தபவுரைத்தற்கு ஏதுவாகிய கருத்து ஈண்டு மெய்ப்பாடெனப்படும்.” (பேரா. மெய்.16) எனவும், பேதைமை யொழியப் பேசுதல் முன் காமஞ்சாலாக் காலமெல்லாம் களவறியாத் தலைவி களவிற் றலைவனை மணந்தபின் முன்னைய குழவி நீர்மை கழிய தேர்ந்துரையாடத் தேறுதலியல்பு. அந்நிலைதான் மடம் தபுதல் (மடம்=கள்ளமற்ற பிள்ளைத் தன்மை. தபுதல் =கெடுதல், நீங்குதல்) அவ்வறிமடநிலையிற் றேர்த் துரையாடலே மடம்தப உரைத்தலெனக் குறிக்கப்பட்டது.” (பாரதி. மெய்.16) எனவும். உரையாசிரியர்கள் உரைகொள்வர்.

தலைவி புணர்ச்சிக்குமுன் இருந்த நிலையிலிருந்து மாறிப் பேச்சில் ஒரு முதிர்ச்சி வெளிப்படல்; அவளுடைய மடப்பம் கெடச் சிலவற்றை வெளிப்படுத்துதல். அதாவது தன்னுடைய புணர்ச்சி வேட்கையைத் தலைவனிடம் தன் மடங்கெடக் கூறுதலே மடந்தபவுரைத்தலாகும். இதனை விளக்க பாலசுந்தரம், ஐங்.20, 144 ஆகிய பாடல்களை எடுத்தாண்டுள்ளார். இதனை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடல் எதனையும் எடுத்தாளவில்லை. 

1:3  ஈரமில் கூற்றம் ஏற்றலர் நாணலும் அகநானூறும்

ஈரமில் கூற்றம் ஏற்றலர் நாணலென்பது, ஊராருஞ் சேரியாருங் கூறும் அருளில்லாத கூற்றைக் கேட்டு அவர் ஆயிற்றென நாணுதல்.”( இளம். மெய்.16) எனவும், அங்ஙனம் அறிமடங்கெடச் சொற்பிறந்தவழி இன்றளவுந் தமராற் கூறப்படாத கடுஞ்சொல் உளவாமன்றே, அவற்றை முனியாது ஏற்றுக்கொண்டு புறத்தார்க்கு இது புலனாங்கொலென்று நாணுதலும்.” (பேரா. மெய்.16) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர்.

களவுக்காலத்தின்போது தலைவியின் ஒழுக்கம் குறித்து ஊராரும் சேரியாரும் அருளில்லாத வார்த்தைகளைப் பேசுவதைக் கேட்டு நாணமடையும் தலைவியின் நிலையினை எடுத்துக் கூறுவதே ‘ஈரமில் கூற்றம் ஏற்றலர் நாணல்’. இதனை விளக்க பாரதியும் பாலசுந்தரமும் குறுந்.97ஆம் பாடலையும்;  மேலும், பாலசுந்தரம்,

கௌவை தூற்றும் வெவ்வாய்ச் சேரி
அம்பல் மூதூர் அலர்நமக் கொழியச்
சென்றனர் ஆயினும் செய்வினை யவர்க்கே
வாய்க்கதில் வாழி தோழி…… ” (அகம்.347)

எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளார். இதில், நம் ஊரிலுள்ள கொடிய வாயுடைய பெண்களது பழிச்சொல்லும் நமக்கு உண்டாக்கச் செய்துவிட்டு அவர் நம்மைப் பிரிந்து சென்றார். இருப்பினும் அவர் மேற்கொண்ட செயல் கைகூடுக எனத் தலைவி தோழிக்குச் சொல்லினாள், என்பதில் இம்மெய்ப்பாடு வெளிப்பட்டுள்ளது.

1:4 கொடுப்பவை கோடலும் அகநானூறும்

கொடுப்பவை கோடலென்பது, கண்ணியாயினுந் தழையாயினும் பிறவாயினும் தலைமகன் கொடுத்தவற்றைக் கோடல். மனத்தினான் உரிமை பூண்டாலல்லது பிறன்பொருள் வாங்காமையின் இதுவுமோர் மெய்ப்பாடாக தப்பட்டது.”( இளம். மெய்.16)  எனவும், தலைமகனாற் கொடுக்கப்பட்ட தழையுங் கோதையுங் தாரும் கண்ணியுந் தோண் மாலையு முதலாயின கொண்டு கையுறை பாராட்டுதல்” (பேரா. மெய்.16) எனவும் உரையாசிரியர்கள் உரை கொள்வர்.

கொடுப்பவை கோடலென்பது தலைமகன் தலைமகள்பால் தனக்குள்ள அன்பினைப் காதலினைப் புலப்படுத்தும் நோக்கோடு தலைவிக்குக் கொடுக்கும் கண்ணி, தழை, தார், கோதை முதலியவற்றை மறுக்காமல் ஏற்றுக்கொள்ளுதல். இதனை விளக்க பாரதி, குறுந்.214ஆம் பாடலையும்; பாலசுந்தரம் நற்.80 ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடலை எடுத்தாளவில்லை. 

1:5  கையுறை மறுதல்

நான்காம் அவத்தையினை விளக்கப் பேராசிரியரும் குழந்தையும்,

ஒருநாள் வந்து பலநாள் வருத்து
நின்னையே போலுநின் றழையே யென்வயின்
னிற்பா ராட்டியுஞ் சொற்கொள லின்றியும்
யாயெதிர் கழறலிற் போலர் நாணியு
மயல்கூர் மாதர்க்குத் துயர்மருந் தாயினு
நோய்செய் தன்றாற் றானே
நீதொடக் கரிதலி னோரிடத் தானே(இ.வி.ப.௫௩௩)

இது கையுறை மறுத்தது. இதனுள் ‘நிற்பாராட்டி’ என்பது பாராட்டெடுத்தல்,  ‘சொற்கொளலின்றி’ என்பது மடந்தபவுரைத்தல்; என்னை? கொளுத்தக் கொள்ளாதுவிடின் அது மடனாகாமையின்.  ‘யாயெதிர் கழறலிற் பேரலற் நாணி’ என்பது ஈரமில் கூற்ற மேற்றலர் நாணல், ‘துயர்மருந்தாயினும்’  என்பது கொடுப்பவை கோடல். இத்தழை நின்கைப்பட்டவழிக் கரிந்து காட்டி நின்மெய்வெப்பங் கூறுதலின் இதனை அவள் காணின் ஆற்றாளாமெனப் பின்னொடுகாலத்து மறுத்தாளென்பது.”(பேரா. குழந்தை, மெய்.16)

இதில், ஒருநாள் போலப் பலநாளும் வந்து வருத்தும், நின்னை யொக்கும் நினது தழையும் என்னிடத்து நின்னைப் பாராட்டியும் யான் சொல்லுஞ் சொல்லை ஏற்றுக் கொள்ளாதும் தாய் எதிரே கழறி யுரைத்தலினாலே பெரிய அலருக்கு நாணியும் மயக்கமடைகின்ற மாதினுக்கு அவள் துயரை நீக்கும் மருந்தாயினும்; ஓரிடத்து நீ தொடக்கரிதலினாலே (அவளுக்கு) நோயைச் செய்தற்கேதுவாயது. நோய் செய்தது அதனால் நின்றழையும் நின்னையொக்கும் என முடிக்க என்பதில் கையுறை மறுத்தல் வெளிப்படுள்ளது. 

1:6. முடிவுரை

நான்காமவத்தையாவன, பாராட்டெடுத்தல், மடந்தபவுரைத்தல், ஈரமில் கூற்றம் ஏற்றலர் நாணல், கொடுப்பவை கோடல் எனும் நான்குமாகும். இவற்றுள் ஈரமில் கூற்றம் ஏற்றலர் நாணல் என்பதனை விளக்க மட்டும் உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இது சரியாகப் பொருத்தியாளப்பட்டது. ஏனையவற்றை விளக்க உரையாசிரியர்களால் அகநானூற்றுப் பாடல் எடுத்தாளப்படவில்லை.

*****

கட்டுரையாசிரியர்,
தமிழ்த்துறைத்தலைவர்,
D.L.R. கலை மற்றும் அறிவியல் கல்லூரி
விளாப்பாக்கம், ஆற்காடு

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *