மனிதர்கள் எதனால் வாழ்கிறார்கள்?—(What Men Live By) (8)

லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)
தமிழாக்கம்- சற்குணா பாக்கியராஜ்

வருடங்கள் வந்து மறைந்தன. மைக்கேல், சைமன் வீட்டிற்கு வந்து ஆறு வருடங்களாகி விட்டன. மைக்கேலின் வாழ்க்கையில் ஒரு மாற்றமும் இல்லை. அவசியத்திற்கு மாத்திரம் பேசினான். இந்த ஆறு வருடங்களில் இரண்டு முறைதான் புன்னகைத்திருந்தான். முதல் முறை மெட்ரீனா உணவு கொடுத்த போதும், இரண்டாவது செல்வந்தர் பூட்ஸ் தைக்க வந்த போதும்தான். சைமன் மைக்கேலிடம் எங்கிருந்து வந்தாயென்று கேட்பதேயில்லை. அவன் தன் வீட்டிலிருந்து போய் விடக்கூடாதே என்றுதான் கவலைப்பட்டான்.

ஒரு நாள் காலை, என்றும் போல் மைக்கேலும் சைமனும் சன்னல் அருகிலிருந்து செருப்புத் தைத்துக் கொண்டிருந்தனர். சைமனின் பிள்ளைகளும் அருகேயிருந்து விளையாடிக் கொண்டிருந்தனர். தீடிரென்று ஒரு மகன், விளையாடுவதை நிறுத்தி விட்டு, மைக்கேலை அணுகி, “மாமா, கொஞ்சம் வெளியே பாருங்கள். ஒரு அம்மா இரண்டு சிறுமிகளைக் கூட்டிக் கொண்டு நம் வீட்டை நோக்கி வருகிறார்கள். ஒரு சிறுமி நொண்டிக் கொண்டு வருகிறாள்”, என்றான். உடனே மைக்கேல் செய்து கொண்டிருந்த வேலையை விட்டு விட்டுச் சன்னல் வழியாகத் தெருவைப் பார்த்தான். சைமனுக்கு ஒரே ஆச்சரியம். இத்தனை ஆண்டுகளும் மைக்கேல் தெருவைப் பார்த்ததில்லை. சைமனும் தெருவைப் பார்த்தான். ஒரு பெண்மணி இரண்டு சிறுமிகளின் கைகளைப் பிடித்துக் கொண்டு அவர்களின் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தாள். ஒரு சிறுமி நொண்டிக் கொண்டு நடந்ததைத் தவிர இரண்டு பேரும் பார்வைக்கு ஒன்று போலிருந்தனர். இரண்டு சிறுமிகளும் உரோமக் கோட்டுகளும் சால்வைகளும் அணிந்திருந்தனர்.

அந்தப் பெண்மணி, இரண்டு சிறுமிகளோடு சைமனின் குடிசைக்குள் நுழைந்து, மேசை அருகில் உட்கார்ந்தாள். இரண்டு சிறுமிகளும் புதிய மனிதர்களைக் கண்டு பயந்து அந்தப் பெண்மணியின் முழங்கால்களின் அருகே நின்று கொண்டனர். சைமன் அந்தப் பெண்மணியை வாழ்த்தி விட்டு “நான் உங்களுக்கு என்ன உதவி செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.

“இந்தச் சிறுமிகளுக்கு வசந்தக் காலத்திற்கு அணியச் சப்பாத்துகள் வேண்டும்” என்றாள்.

“நாங்கள் இதுவரையிலும் இவ்வளவு சிறிய சப்பாத்துகள் தைத்ததில்லை. ஆனால் தைக்க முடியும். எனக்கு உதவி செய்யும் மைக்கேல் இந்தச் சிறுமிகளின் சப்பாத்துகளைத் தைப்பானென்று கூறி விட்டு மைக்கேலைத் திரும்பிப் பார்த்தான். மைக்கேல் அந்தச் சிறுமிகளையே பார்த்துக் கொண்டிருந்தான். இரண்டு சிறுமிகளும் அழகாகவும் ஆரோக்கியமாகவும் காணப்பட்டார்கள். ஆனால் அவன் அந்தச் சிறுமிகளைப் பார்த்துக் கொண்டிருந்த விதம் அவர்களை அவனுக்கு முன்பே தெரிந்திருக்கக் கூடும் போலிருந்தது. சைமனுக்குப் புதிராக இருந்தது. அவன் அதை வெளிக்காட்டாமல் அந்தப் பெண்மணியிடம் சிறுமிகளின் காலளவு எடுக்க வேண்டுமென்றான். அவள் ஊனமுற்ற சிறுமியை மடியில் இருத்தி, இவளுடைய கால்களின் அளவுகள் போதும். ஒரு அளவு ஊனமுற்ற காலுக்கும், மற்ற கால் அளவில் மூன்று சப்பாத்துகள் தைக்கலாம். ஏனென்றால் இவர்கள் இரட்டைக் குழந்தைகள். இரண்டு பேருடைய காலளவுகளும் ஒன்றுதான் என்றாள். சைமனும் காலளவுகளை எடுத்துக் கொண்டு “இந்த அழகிய சிறுமி பிறக்கும் போதே இப்படித்தான் பிறந்தாளா?”என்று கேட்டான்.

“இல்லை, இவள் தாய் காலை நசுக்கி விட்டாள்”.

இதுவரையிலும் அமைதியாக இருந்த மெட்ரீனா “அப்படியானால் இவர்கள் உன்னுடைய குழந்தைகளில்லையா?” என்று கேட்டாள்.

“நான் இவர்களின் தாய் அல்ல, சொந்தமுமல்ல”, நான் இவர்களைத் தத்து
எடுத்திருக்கிறேன்”.

“அப்படியா, நீ இந்தக் குழந்தைகளிடம் இத்தனைப் பிரியம் வைத்திருக்கிறாயே!”, என்றாள் மெட்ரீனா.

“எப்படி அன்பு வைக்காமல் இருக்க முடியும்? நான்தான் இவர்களுக்குப் பாலூட்டி வளர்த்தேன். எனக்கு ஒரு மகன் இருந்தான். அவன் இறந்து விட்டான். என் மகனை விட நான் இவர்களை நேசிக்கிறேன்”.

“அப்படியானால் இவர்கள் யாருடைய குழந்தைகள்?”

தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.