Featuredஆய்வுக் கட்டுரைகள்

கவிதை என்னும் அழகியல் : வாசிப்புச் சமூகத்தை முன்வைத்து

பிரதீப் குமார்.பி. முனைவர் பட்ட ஆய்வாளர் (தமிழ்), தமிழ்த்துறை, அரசுக் கல்லூரி சித்தூர்.

நெறியாளர் : ப.முருகன்

நவீன கவிதை என்னும் சொல்லாடல் கொண்டிருக்கும் பொருள் உண்மையில் கவிதையில் சொல்லிய முறையை மையமிட்ட ஒன்றானதாகவே இதுவரை கருதப்பட்டு வருகிறது. அது யாரை நோக்கிச் சொல்லப்படுகின்றது என்பதைப் பற்றியோ, வாசகன் என்ற ஒரு வெளி குறித்த அறிவுப் பரம்பரையைப் பற்றியோ ஆன விவாதங்கள் முற்காலங்களில் நிகழவில்லை. ஆனால் தொல்காப்பியம், கூற்றுக் கோட்பாடும், கேட்போன் பயில்வோன் என்ற தன்மைகளைப் பற்றிய வாசக மையைச் சிந்தனையும் ஆங்காங்கே குறித்துச் செல்கிறது. இந்நிலையில் புரிந்து கொள்ளுதல் என்ற தன்மையைக் கொண்டும் கவிதையை அணுக வேண்டும் என்ற முன்னறிவோடு, வாசக ஏற்பியல் கோட்பாடு (Reader Reception Theory) எங்ஙனம் கவிதைக்கான அழகியலைத் தீர்மானிக்கின்றது என்பதைப் பற்றிய உரையாடலை இக்கட்டுரை மேற்கொள்கிறது. காரணம் கவிதை என்ற ஒழுங்கியல் தான் புழங்குகின்ற தளத்தைச் சுற்றிலும் புதுமாதிரியான அர்த்தப்படுத்தல்களை தரவல்லது. விளக்குமுறையும், வைப்பு முறையும் இதற்கு சான்றுகள். அதேவேளை கருத்தாக்கம் பெறும் புதிய ஊடாட்டங்கள், குறிப்பாக பெண் கவிஞர்களின் எழுச்சி, கவிதை எனும் அரங்கு உலகமயமாக்கப்பட்டதின் விளைவு, குறியீடுகளைக் கடந்து மேலெழுந்து வந்த பின்னோக்க சமுதாய மக்களின் ஆக்ரோஷமான பதிவுகள், மொழியின் இலகு தன்மை போன்றவை கவிதை என்னும் இயல்பு உணர்ச்சியை மொழியைக் கடந்த பரவுதலுக்கு காரணமாக்கியது.

நவீன கவிதையின் இயங்குமுகம் அழகியல் என்ற சூழலியல் தத்துவத்தையோ, மேற்கு உலகத்தின் அமைப்பியல்வாதம் முதலியவற்றையோ முற்றிலும் நிராகரிக்கவும் இல்லை; தனதாக்கிக் கொள்ளவும் இல்லை. கவிதை தன் மையத்திலிருந்து புதிய புதிய பொருண்மை சார்ந்த அடையாளங்களையோ, ஏன் மற்றுமொரு கவிதையையோ தான் தர முயற்சிக்கிறது; தந்திருக்கிறது. ஒவ்வொரு பிரதியும் படைப்பாக்கம் பெறும்போதே மற்றொரு பனுவலை தன்னோடு ஒட்டுண்ணியாய் கொண்டிருப்பது போல ஒவ்வொரு கவிதையும் வாசிப்பு மற்றும் ரசனைச் சமூகத்தைப் பொறுத்து மறுகட்டமைக்கப்படுகிறது அல்லது அதோடு நிறுத்தப்படுகிறது.

கவிதைக்கான ஏற்றுக்கொள்ளபடுதலின் அழகியல் (Aesthetics Reception) அதன் திறனாய்வுக் களமென்றாலும் கூட அறிவுப் புலத்தைத் தாண்டிய ஒரு உளவியல் இணைப்பும் இதோடு காணப்படுகிறது. கவிஞன் செயல்படுத்த நினைக்கின்ற அல்லது சொல்லத் தயாரெடுக்கின்ற காட்சிப் படிமம், அதன் யதார்த்தங்களையும் கடந்து வாசகனின் அறிவுப் பாரம்பரியத்தோடு கொள்ளும் வாதப் பிரதிவாதங்களில் மற்றுமொரு பிரதியை மீள்கண்டுபிடிப்பு செய்கிறது. இந்தச் சூழமைவில் செயல்படுகின்ற வாசக உளவியல், கவி உளவியலையும் தாண்டிய பிம்பங்களை பனுவலின் (பிரதி) மீது கட்டமைக்க முனைகிறது. ஆக திறனாய்வு என்னும் அளவுகோல் வாசக உளவியலையும், படைப்பாக்க உளவியலையும் முன்னிறுத்திக் கொண்டே செயல்பட வேண்டியது அவசியமாகிறது.

கவிதையோடு மறைந்திருக்கின்ற படைப்பாக்க உளவியலின் இடையிட்டுரைத்தலானது (Interpellation) வாசகத் தளத்தில் நிகழும் வாசிப்பு முறை, பொருள் எடுத்தாளும் முறை, மீள் உருவாக்கம் (Re-Productive) முதலியவற்றில் வாசக உளவியலோடு சரிவிகித அளவில் செல்வாக்கு செலுத்துகிறது. ஒருவகையில் கூறினால் மேலாதிக்கம் செய்யும் தலைமையில் (Hegemony) படைப்பாக்க உளவியல் செயல்படுகிறது எனலாம். உலக இலக்கியங்களில் கவிதைக்கு மனித நாகரீகத்தின் அளவிற்கான காலப்பழக்கம் உண்டு. இருப்பினும் நீண்ட வரலாறு கொண்ட ஓர் இலக்கிய வகைமை (Literary Genre) இத்தனை ஆண்டுகால பரிணாமங்களில் சரியாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறதா என்ற கேள்வியை முன்வைத்தால், கவிதை வெறும் ரசனைக்கான பண்டமாகவே நுகரப்பட்டிருக்கிறது என்பதைத் தான் பதிலாகத் தர வேண்டியிருக்கும். கவிதை இதுவரையிலும் அதன் படைப்பாளியை முன்னிறுத்தியே தான் விமர்சிக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் இன்றைய பின்நவீனத்துவச் சூழலில், கவிதையின் அர்த்தத் தாண்டுதலுக்குத் தன் மரபார்ந்த கட்டமைப்புகளை மீறி, வாசகப் புரிதலின் இயங்கியலோடு கொண்டிருக்கின்ற உறவை தெளிவுபடுத்த வேண்டியிருக்கிறது. அதற்கு முக்கிய வெளியாக இருப்பது, வாசக அறிவுப் புலமே.

பல்கோணத் தன்மை : புரிதலும் – முரண்களும்

கவிதை மனித உழைப்பின் பிறிதொரு விளைவான மொழியினை மூலப் பொருளாகக் கொண்டு விளைந்த ஒரு செயல்பாடாகும். ஆதலால் ‘கவிதை மனித உழைப்பிலிருந்து விளைந்தது’ என்கிறார் ஜார்ஸ் தாம்சன். மனித உடலானது தான் பரிச்சயப்படுத்திக் கொண்ட பொருட்களைக் குறியிட்டு, பெயரிடுவதன் மூலம், பொருட்களின் மீதான விரிவான அதிகாரக் களத்தைக் கட்டமைத்துக் கொள்கிறது. இந்நிகழ்வின் உடனிகழ்வாக மொழியும் மொழி சார்ந்த சொல்லாடல்களும் மனித இருப்பை நிர்ணயம் செய்வதற்கான ஒரு வெளியை (Space) உற்பத்தி செய்து கொள்கிறது. இந்நிலையில் பொருட்களின் ‘தானேயான அம்சம்’ இருப்பழிந்து ‘அங்கீகரிக்கப்பட்ட அம்சம்’ – பெயர் அல்லது குறியீடு மட்டுமே எஞ்சுகிறது. சான்றாக, ‘மரம்’ என்ற பொருளைக் குறிக்க உருவான ‘மரம்’ என்ற சொல், ‘ம-ர-ம்’ என்ற ஒலி குறிப்பதே மரம் என்ற பொருளை குறிக்கும் சொல்லாக மாற்றியமைக்கப்படுகிறது. அதேவேளை, ‘மரம்’ என்ற ஒலிக்குறிப்பு இல்லாதவிடத்தும் ‘மரம்’ என்ற பொருண்மை இருக்கும். ஆனால் ‘மரம்’ என்பது பற்றியான கருத்துகள், அதன் இருப்பு போன்றவை மனிதப் பிரபஞ்சத்திற்குள் இருக்காது. அதனால் மரம் குறித்த புனைவுகள், அறிவுகள் உருவாகி இருக்காது. ஆக ஒரு பொருண்மை இருந்த போதும், அது குறித்த பொதுக்கருத்து (Concept) இல்லாத போது அப்பொருண்மை மனித உடலின் வெளியே இயக்கமற்ற, இருத்தலற்ற ஒன்றாகவே கருதப்படும். எனவே இங்கு பொருளின் மீதான அதிகாரக் களம், அறிவுருவாக்கத்தின் மூலம் கருத்துகளின் அதிகாரக் களமாக விரிவடைகிறது.

படைப்பு மனம் உருவாக்கித் தருகின்ற மொழி அல்லது சொல்லுருவங்கள் அதற்கேயான புழங்குதள அரசியலை தன் பின்னணியில் கொண்டிருக்கின்றது. இதைப் புரிந்து கொள்ளும் படியான பிரதி சார்ந்த உரையாடல்களும் விமர்சனங்களும் அதிகாரத்தின் மற்றொரு கருத்து நிலையை வாசிப்பின் ஊடே கண்டடைகிறது. “மனம் சார்ந்தும் X உடல் சார்ந்தும் பிளவுண்ட மொழியானது உடல் X மனம் என்கிற முரணை முன்னுக்குக் கொண்டு வந்து மனதை, உடல் மீது ஆதிக்கம் செய்யும் தொழில் நுட்பமாகக் கட்டமைத்த மூலகங்களின் ஒன்றாகவே கவிதையின் செயல்பாட்டை அறிய முடிகிறது” (ஜமலான்:ப.62). ஸ்விஸ் மொழியியல் அறிஞரான ஃபெர்டினன்ட் சசூர், மொழி என்பது வேறுபாடுகளின் அமைப்புமுறை என்கிறார். அதுமட்டுமல்லாது மொழிக்குறி பற்றி, ‘அதன் மிகத் துல்லியமான சிறப்புப் பண்பு என்பது, மற்றவை எப்படி இல்லையோ அப்படி இருப்பது தான்’ என்கிறார். இந்தக் கோட்பாடு வாசகப் புரிதலுக்கும் பொருந்தும். ஆனால் இந்த வேறுபாட்டை வாசனும், படைப்பாளனும் தனித்தனி அலகுகளைக் கொண்டு பரிச்சயப்படுத்திக் கொள்கிறார்கள். அவ்வளவே. இதன் விளைவாகக் கவிதை என்னும் பனுவல் பல்கோணத் தன்மை அடைகிறது.

கவிதைக்கான நுகர்வின் வீச்சைப் பற்றிப் புரிந்து கொள்ள, வாசகனின் மனம் கவிதையின் மனத்தோடு பிணைக்கப்படுவதால் ஏற்படும் உணர்வெழுச்சிகளைக் கொண்டு கவிதை அளந்தறியப்பட்டது. இதனூடே இரசனை முறை என்கிற நாகரீகம் சார்ந்த கருத்துப் புனைவு, பின்னப்படுத்தப்பட்டு; வளர்த்தெடுக்கப்பட்டு, அதனைப் பொதுமைப்படுத்துவதன் மூலமாக அழகியல் போன்ற சமூக ஒழுங்குமுறை சார்ந்த வன்முறைக் கருவிகள் கட்டமைக்கப்படுகிறது. இதுவே கலாச்சாரம், நாகரீகம் என்பதாக பிற்பாடு அமைப்பாக்கம் பெறுகிறது. மதம் எவ்வாறு அறவியலைத் தன் நனவிலி தள ஒழுங்கமைவாகக் கொண்டிருக்கிறதோ அதுபோல கவிதை, ‘அழகியலை’க் கொண்டிருக்கிறது.

சமூக அனுபவத்தை தனிமனிதன் என்னும் ஒழுங்கமைப்பைக் கொண்டு அளந்து, அர்த்தப்படுத்துவதே கவிதை அழகியல் கோட்பாடாகும். தனக்கான அனுபவக் கிடங்காக கவிதை பற்றிய மதிப்பீடுகள் உருவாவதில் இதுபோன்ற ஒழுங்கமைவின் சாரங்கள் மிகுந்துள்ளதை மறுக்க இயலாது. மேலும் இது மனதின் சுய அனுபவமென்னும் அதிகாரத்தின் நிகழ் தகவுக்கு உட்பட்டு தேர்ந்து கொள்ளக் கூடிய ஒன்றாக உள்ளது. கவித்துவம் என்று சொல்லப்படும் ஒரு புனைவு வெளியை இது கட்டமைக்கின்றது. இவ்வெளியுடன் தன்னை இணைத்துக் கொள்ளும் படைப்பாக்க மனது, ஒரு கற்பனாவயப்பட்ட உன்மத்த நிலையை அடைகிறது. மனித அக உணர்வுகளை இந்த உன்மத்த நிலையிலிருந்து கொண்டு பிரதியாக்கம் நிகழ்த்துகையில் மொழியின் இலகு தன்மை நெகிழ்வுறுகிறது. இது சில வேளைகளில் ஆகச்சிறந்த (Masterpiece) படைப்பாக மாறவும் செய்கிறது.

கவிதை ‘அனுபவம்’ என்கிற சுதந்திரமற்ற இருப்பையே பேசுபொருளாகக் கொண்டு இயங்குகிறது. இதன் வழி உருப்பெறும் ‘தனிமனிதன்’ என்கிற பிம்பமானது ஒப்பிடற்கரிய நிலையை அடைகிறது. சமூக வரையறைகளுக்கு அப்பால் இருக்கும் இத்தனிமனிதன் – தனது இருப்பை காத்துக் கொள்ள வேண்டி உருவாக்கும் துணை பிம்பங்களின் ஊடாக அது பேசப்படும் கவிதையை சாகாத்தன்மையான ஒன்றாக மாற்றுகிறது. “இன்றைய அகவுணர்வு சார்ந்த கவிதைகளில் ‘தனி மனிதன்’ என்பவனின் சுயம், பிரக்ஞை பற்றிய ஒருவகை அதீத, நுட்பமான சித்தரிப்புகளைக் காணலாம். இவை பேசும் மனிதத் தன்னிலையானது ‘நுண்ணுணர்வு’ பிரக்ஞை, உள்ளுணர்வு, பொறி போன்ற நுட்பமான கருத்திய மொழிகளால் பின்னப்படுவையே.” (ஜமாலன்:பக்.64-65)

கவிதையின் அறிதல் (Familiarization) ஏற்படுத்தும் புதிய உணர்வுகள் கவிதையின் புதிய சொல்லாக்கங்களினால் ஏற்படுகிறது. நமக்கு ஏற்கனவே அறிமுகமான, அர்த்தப்படுத்தப்பட்டுவிட்ட ஒரு பொருளின் மீது புதிய வகை உணர்வு ஆக்கங்களை உள்ளடக்கியபடி எழுதப்படும் கவிதையானது இதுவரை பரிச்சயமான ஒரு பொருண்மையை மற்றொரு பரிணாமத்திலிருந்து பார்க்க வகை செய்கிறது. இந்தப் புதிய நுவல் முறையால் கிளர்ந்தெழும் வாசகன், புதிய அனுபவத்தால் ஈர்க்கப்படுகிறான். ஆனால் ஏற்கனவே தனக்கான அணுகுமுறைகளுடன் / தன்னிலை இயல்புடன் ஒரு கவிதையை வாசகன் அணுகுகையில் முரண்களின் மோதல் களமாக வாசகத் திறனாய்வு அமைகிறது.

“பிரதியின் அர்த்தம் பற்றிய எந்த விவாதமும் கேட்பது / படிப்பது என்ற செயற்பாங்கினால் தான் சாத்தியம் ஆகிறது. ஏனெனில் ஒரே பிரதி பலவிதமாகப் படிக்கப்பட முடியும். ஆனால் உண்மையில் இந்தச் செயலைப் புரிபவன் வாசகன் தான். பிரதியின் மொழி ஒழுங்கமைவில் புகுந்து பிரதியின் அர்த்தத்தை இருப்பு நிலைக்குக் கொண்டு வருபவன் வாசகனே. அவன் அர்த்தத்தை வெளியே கொண்டு வராவிட்டால் அர்த்தம் பிரதிக்கு உள்ளே மறைந்து தான் இருக்கும் என்பது குறிப்பு” (கோபிசந்த் நாரங்: ப.272). ஆக பிரதிக்குள் காலியாக இருக்கும் சில இடங்களை வாசகன் தான் இட்டு நிரப்ப முடியும் என்பது முடிவாகிறது. வெற்றிடங்களை நிரப்ப வாசகன் தேர்ந்தெடுக்கும் பதிலீடுகள் எவை என்பது குறித்த விவாதங்களின் வழி வாசக விமர்சனக் கோட்பாடு உருவாகிறது. ஆனால் சட்டதிட்டமான ஒரு வகுப்பினுள் இதை அடக்க இயலாது. ஏனெனில் இந்த விமர்சனத்தில் பல்திறப்பட்ட மனப்பான்மைகள் செயல்புரிவதால் இந்தச் சிக்கல் ஏற்படுகிறது.

கவிதைக்களம் : வாசிப்பின் ஊடுபாவுகள்

உலகின் எந்த மொழியாயினும் அது சொல்லினது பொருள் மாறுபாடுகளின் (Differences) அடிப்படையிலேயே கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பது அமைப்பியல்வாதிகளின் கருத்து. மனிதர்கள் மொழிக்குள் வாழ்கிறார்கள். அவர்களது மொழி என்னவாக இருக்கிறதோ அதுவாக அவர்கள் ஆகிறார்கள். இதன் பொருள் உலக யதார்த்தங்கள் (Reality) மொழியின் மூலமாகத்தான் அவர்களுக்குள் கலக்கின்றன என்பதுதான். தான் இயங்குகின்ற தளத்தோடு சேர்ந்த இணைவுகளோடு வாழப் பழகிக் கொண்ட ஒரு மனிதன் தன்னுடைய முன் அனுபவங்களின் வாயிலாக தனக்கு முன் வருகின்ற கருத்துக்களை எதிர்கொள்கிறான். ஆனால் மொழியோ எந்த விதிகளுக்குள்ளும் அடக்க முடியாதபடி காட்டு விலங்காய் மனிதர்கள் உலகில் வினைபுரிகிறது. இதன் விளைவாக வரலாறு, பண்பாடு எல்லாமே மனிதர்களின் அறிவால் புரிந்து கொள்ள முடியாத புதிர்களாய் நின்று, அவர்களுக்குள் வலியையும் பயத்தையும் பெருக்குகின்றன. இந்த வலிகளையும் பயங்களையும் எதிர்கொள்ளுகிற தளத்தில் தான் மனிதர்களுக்கான இலக்கிய உற்பத்தி நடந்திருக்கிறது. யதார்த்தங்களை மீறீய பதிவுகளை இலக்கிய ஆக்கங்களின் உள்ளீடாகப் நிறுத்துவதின் வழி வாழ்வியலுக்கும் மொழியின் அடைவுகளுக்குமான இணக்க நிலை என்றும் சரிவிகிதமின்றியே இருந்து வந்திருக்கிறது. இந்தப் பின்புலத்தில், ஒரு பிரதியை அணுகும் வாசகனுக்கு ஏற்படுகின்ற முரணியக்கங்கள் மற்றுமொரு பிரதியை உருவாக்குகின்றது. இந்தப் பிரதி மூலப் பிரதியின் வாசிப்பினை ஒத்திருக்க வேண்டிய ஒரு அவசியமுமில்லை.

மொழி காலந்தோறும் தனக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொண்டே வந்திருக்கிறது. அவ்வகையில் தொண்ணூறுகளில் தமிழ்க் கவிதைகளில் இடம்பிடித்த தலித்தயம் சார்ந்த பார்வைகள், மாற்றுச் சாதியம் என்ற தளம் நோக்கி நகர்ந்தது. ஈ.வே.ரா. பெரியாரின் மாற்றுச் சிந்தனை, இதற்கு அடிப்படையாகியது. தனித் திராவிடக் கருத்துநிலைகளிலிருந்து விலகி நின்று ஒட்டுமொத்தச் சமூக இணைவிற்கான தனிமனிதச் சிந்தனை மாற்றம், அதன் வழியான சமச்சீரான சமூக உருவாக்கம் என்பவற்றைப் பதிவு செய்ய முயலுகின்ற நிலை தோற்றம் கொண்டது. கணையாழி, புதிய பார்வை, சுபமங்களா போன்ற சிற்றிதழ்கள் இதனைக் கையெடுத்தன. வர்க்க மற்றும் மனுதர்ம சாஸ்திரங்கள், கோட்பாடுகளாக்கப்பட்ட ஆதிக்க மேலாண்மைகள் ஆகியவற்றினால் விலங்கிடப்பட்ட மனித இனம் குறித்தும் (இதனுள் பால்பேதம் இல்லை என்பது இங்கு நினைவு கொள்ள வேண்டும்); அதன் இருப்பு குறித்தும் தொண்ணூறுகளின் கவிதைகள் பேசின. பிற்பாடான தமிழ் சிற்றிதழ் வளர்ச்சி இந்த உரையாடலை மேலை நாட்டுக் கோட்பாடுகளோடு இணைத்துக் காண முயன்றதன் விளைவாக சில பின்நவீன உணர்வுநிலைக் கவிதைகள் உருவாகின. மேற்கத்தியக் கோட்பாடுகள் முன் வைக்கின்ற கட்டுடைப்பு மற்றும் மையம் தகர்த்தல் ஆகிய கருத்தாக்கங்களைப் பேச முயலுகின்ற கவிதைத் தளங்கள் உருவாக்கப்பட்டன; உருவாயின. “மற்றெந்த இந்திய மொழிகளைவிடவும் தமிழில் நவீனத்துவத்தின் தடத்திலான பாதிப்பு அதிகமானது. யதார்த்தவியல் சார்ந்த எழுத்துகளுக்கும் மொழி ரீதியாக இறுக்கமான படைப்புகளுக்குமாக பழகிப் போனது நம் வாசிப்பு” (க.மோகனரங்கன்: ப.63). கட்டிதட்டிப் போன வாசிப்பு நிலைகளிலிருந்து கொண்டு கவிதையின் வேறொரு பரிணாமத்தை அடையாளப்படுத்தும் உரையாடல் களங்களும் / வாசகனை மையமிட்ட திறனாய்வு அணுகுமுறைகளும் தமிழ் சூழலில் அன்று உருவாக்கப்பட்டது.

நவீனம் தாண்டிய கவிதை, படைப்பாளியின் சட்டகத்தை மீறி படைப்பாளி, படைப்பு, வாசகன் என முப்பரிமாண நிலைப்பாட்டில் உயிர்ப்புமிக்க மொழியின் செயல்பாடாக மாறுகிறது. ஒற்றை அர்த்தம் என்பதைத் தாண்டி வாசகனின் அர்த்தப்படுத்தல்களில் மிக அதிக கவனத்தை குவிக்கிறது. நுகர்விய சந்தைப் பொருளாக மட்கிப்போகாமல், பயன்பாட்டுக்கு பின்பும், புதுப்புது உலகங்களை அவனிடம் கொண்டு வந்து சேர்க்கிறது. பிரதியின் பின்னணியில் கவிதையின் மேற்பரப்புத்தளம் ஆழ்நிலைத் தளத்தோடு, இருதள இயக்கமாகவும், பிரதியின் சூழல் பின்னணியில் பல்வித அர்த்தப் பரிமாணங்களோடு பன்னொலிமப் பண்பினையும் சொல்வெளியில் அது படைக்கிறது. ஆதலால் இங்கு ஒற்றைப் பிரதிகூட பல்விதக் குரல்களுடன் வெவ்வேறு அலகுகளின் ஊடிழைப்பனுவலாக மாறிவிடுகிறது.

இருப்பின் (Existence) குரலை, ஒற்றைப்போக்காக அல்லாமல் பன்மைத்துவ அடையாளமாக அணுகுதல் அதன் சூழல் சார்ந்த படைப்பின் அடையாள அரசியலாக கருதலாம். இதுவே அடையாளம் ததும்பும் புதுவெளிகளை கவிதைப் படைப்புலகில் பல மட்டங்களில் உருவாக்கிக் காட்டுகிறது. உயர்குடி மனோபாவமும், நகர்புற நடுத்தர வர்க்கத்தின் முணுமுணுப்புகளும் விலக்கப்பட்டு அடித்தள மக்கள் மொழியும் தொன்ம, வழக்காறுகளும், குறிமப் பண்புகளோடு நவீன கவிதையில் விகசிக்கிறது. நவீனத்துவத்தில் மிகத் தீவிரமாக ஒலித்த தனிமனித பிரக்ஞை நவீனம் தாண்டிய கவிதைவெளியில் கூட்டுமனப் பிரக்ஞையாக முகிழ்க்கிறது. இந்த மீள்பரிணாமம் (Transformation) வாசிப்பின் ஊடே பிரதி கடந்து செல்கையில் நிகழ்கிறது.

படைப்பாளியின் ஆதிக்கத்தை நிராகரிக்கும் வாசக மைய விமர்சனம் (Reader oriented criticism) பன்முகத் தன்மை கொண்ட விளக்கங்களுடன் பிரதியின் வாசிப்பில் வாசகனைத் தனது பங்காளியாக்கிக் கொள்கிறது. அதுமட்டுமல்ல, வாசிப்பின் சில கணங்களில் படைப்பாளிக்கு மாற்றாக வாசகனை ஆளுமை மிக்க பதிலியாக முன்வைக்கிறது. அதாவது நிரந்தரமான ஆளுமையாக, அதீதமான அர்த்தத்தின் பிறப்பிடமாக வாசகனை நிலைநாட்டுகிறது.

“வால்டர் ஜே.ஸ்லாடோஃப், With Respect to Readers என்ற நூலில் இவ்வாறு எழுதுகிறார் : வரலாற்றின் வெவ்வேறு காலங்களில் வாசகர்கள் எவ்வாறு பிரதியை வாசிக்க வேண்டும் என்ற எந்தக் கட்டுப்பாடும் கொண்டு வர முடியாது. பிரதியின் உருவம் சார்ந்த சிறப்புத் தன்மைகள், தம்மீதான எதிர்வினைகள் இவ்வாறு தான் இருக்கும் அல்லது விளக்கங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு உத்திரவாதம் அளிக்க முடியாது. ஏனெனில் வாசகனுக்கு அதன் அர்த்தத்தை தன் போக்கில் கிரகித்துக் கொள்ள உரிமை உண்டு. ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னுடையதான இயல்பு, அனுபவம், பயிற்சி, முற்சார்புகள் மற்றும் மதிப்பு சார்ந்த முன்னுரிமைகள் உண்டு.” (கோபிசந்த நாரங்க்: ப.266) சரியாகச் சொன்னால் புரிதலின் செயல்பாடு பார்வையாளன் (இங்கு வாசகன்) பார்க்கிற கோணத்தைப் பொறுத்தது. பார்க்கும் கோணம் மாறுவதால் புரிதலின் அர்த்தமும் மாறுகிறது.

கவிதை முதலில் தன் வடிவத்துடன் புற உலகோடு தொடர்பு கொள்கிறது. தனது வகைமை இத்தகையது என்ற வியாக்கியானத்தோடு தன்னை வெளிப்படுத்தத் தயாராகிறது. தன்னை நிறுவிக் கொள்கிறது. கவிஞன் அல்லது வாசகன் அல்லது உலகம் பற்றிய மற்ற பொருள்களுடனான உறவு பிறகு தான் ஏற்படும். “கவிதை பிற இலக்கிய வகைமைகளிலிருந்து தன்னை மையப்படுத்துவதில் அதன் வடிவம் மிக முக்கியமானதாக அமைகிறது. உரை நடையோடு ஒப்பு நோக்குகையில் கவிதை காலம் சார்ந்தும் இயல்பூக்கம் பெறுவதற்கு இதுவே காரணமாகிறது. காலத்திற்கொத்த வடிவம் கவிதையின் இருப்பை தக்கவைத்துக் கொள்ளவதில் காரணியாகிறது.” (ஆனந்த்: பக். 10)

முடிவுரை

கோட்பாடுகள் என்ற சொல்லாடலும் அதைச் சுற்றிய விவாத விமர்சனங்களும் அய்ரோப்பிய இலக்கியங்களின் பரிச்சயத்தாலே தான் தமிழகச் சூழலில் அறிமுகமானது. குறிப்பாக 80களுக்குப் பிறகு. நவீனத்துவத்தின் இயலாமைகளைக் கேள்விக்குள்ளாக்கும் பின் நவீனத்துவ சிந்தனைகள் இங்கு விவாதங்களுக்கு ஆளானதும் மேற்சொன்ன அறிமுகத்திற்குப் பிற்பாடான இலக்கியச் சூழலில்தான் எனலாம். இதன் வழி, கவிதை என்ற இலக்கிய வகைமை தனக்கு முந்தைய மரபிலிருந்தும் யாப்பு முறையிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டது. இலக்கியங்கள் மேலார்ந்த வாழ்வியலைப் பேசுவன என்ற பொதுவான கருத்து நிலையிலிருந்து விலகி, இலக்கியம் ஒதுக்கி வைத்திருப்பவற்றைப் பேசுவதற்கான களத்தை பின்நவீனத்துவக் கோட்பாடுகள் ஏற்பாடு செய்தன. ஒழுங்கான இலக்கியத்திலிருந்தே ஒழுக்கமற்றவைகளைக் கண்டுபிடித்தது இவ்வகையான விமர்சனப் போக்குகள் என்பதே அதன் முரண்.

தமிழ்கவிதைச் சூழலில், ‘சமூகவெளி’ பரவலான பொது அனுபவ வெளியைச் சார்ந்து இயங்கியது. நேரடிப் பிரகடனம், ஒற்றைத் தள புரிதல், வாழ்வியலின் புறப்பிரச்சனைப்பாடுகளை மையப்படுத்துதல், புனைவியல் சொல்லடுக்குகளை உற்பத்தி பண்ணுதல், நிறுவனம் சார் அரசின் ஒடுக்குமுறை மீது எதிர்ப்புணர்வை காட்டுதல் என்பதான வெவ்வேறு வகைப்பட்ட தளங்களில் இதன் போக்குகள் வெளிப்பட்டன. மற்றுமொரு முக்கியப்போக்காக வெளிப்பட்ட ‘தன் அனுபவவெளி’ பிறருக்கு தட்டுப்படாத தனித்த மாறுபட்ட படைப்புலகமாகத் தென்பட்டது. பிரபஞ்சம் சார்ந்த எல்லா உயிர்களிடத்தோடும், பொருட்களோடும் உறவாடும் மர்மத்தன்மை பொருந்திய நுண் அனுபவங்கள் படைப்பில் பிரதியாக்கம் செய்யப்பட்டன. குழந்தைகளின் உலகத்தோடும், காதலோடும், தாய்மையின் பரிதவிப்போடும், தொலை தூரமாகிவிட்ட உறவுகளின் சிதைவுகளோடும் உரையாடலை நிகழ்த்தின.

காட்சிப்பதிவுகளின் ஊடே தன் உள்ளக்கிடக்கையை பதிவு செய்தல் தான் கவிதையின் இயல்பு. கவிதை செயல்படுகின்ற காட்சித் தளத்தில் நிறுத்தப்படுகின்ற காட்சிப் படிவங்கள், கவிதைப் பொருள் மீறின ஒன்றை அடையாளப்படுத்துகையில் வாசகனுக்குத் தகுந்தபடி மீள் பொருண்மைகள் பகிர்ந்து அளிக்கப்படுகின்றன. ஒவ்வொரு காலகட்டத்திலும் எப்படிப்பட்ட சொல்லாடல்கள் உருவாக்கப்படுகின்றன என்பதே அச்சூழலின் படைப்புச் சக்திக்கான அடையாளமாக இருக்கிறது. கவிதையில் வாசகர் இயங்கிக்கொண்டிருக்கும் போது இது போன்ற பல மாறுபட்ட தளங்கள் வந்து கொண்டேயிருக்கும். உதாரணமாக வாசகர், ‘அலை’ என்ற சொல்லை தேர்வு செய்யும் போது குறிப்பானுக்கும் குறியீடுக்கும் வேறுபாடிருக்கும் என்பதன் அடிப்படையில் கவிதை இயங்கத் துவங்குகிறது.

நவீனம் தாண்டிய கவிதை, படைப்பாளியின் சட்டகத்தை மீறி படைப்பாளி, படைப்பு, வாசகன் என முப்பரிமாண நிலைப்பாட்டில் உயிர்ப்புமிக்க மொழியின் செயல்பாடாக மாறுகிறது. ஒற்றை அர்த்தம் தாண்டி வாசகனின் அர்த்தப்படுத்தல்களில் மிக அதிக கவனத்தை குவிக்கிறது. நுகர்விய சந்தைப் பொருளாக மட்கிப்போகாமல், பயன்பாட்டுக்கு பின்பும், புதுப்புது உலகங்களைக் கொண்டு வந்து சேர்க்கிறது. பிரதியின் பின்னணியில் கவிதையின் மேற்பரப்புத்தளம் ஆழ்நிலைத்தளத்தோடு, இருதள இயக்கமாகவும், பிரதியின் சூழல் பின்னணியில் பல்வித அர்த்தப் பரிமாணங்களோடு பன்னொலிமப் பண்பினையும் சொல்வெளியில் படைக்கிறது. இங்கு ஒற்றைப் பிரதிகூட பல்விதக்குரல்கள் வெவ்வேறு அலகுகளின் ஊடிழைப்பனுவலாக மாறிவிடுகிறது. பிரதி கட்டமைக்கின்ற படைப்பாளி – வாசகன் இருவருக்குமிடையேயான பொருந்தாமையின் வெற்றிடம் (Vacuum of Dissonance) தான் ஒவ்வொரு பிரதியினுடையவும் / பனுவலினுடையவும் யதார்த்தமான அகமி எனலாம்.

படைப்புகளின் வழி நின்று தோற்றம் கொள்ளுகின்ற சமீபகால ஆய்வுகள் காலங்காலமாக படைப்பு நோக்கில் செயல்படவில்லை. மாற்றாக அது படைப்பாளனை குருபிம்பமாக்கும் செயல்பாட்டின் ஊடுவிளைவாக இயங்குகிறது. இதிலிருந்து விலகி, பிரதியின் மீதான வாசிப்பும் அதன் அடுத்த கட்டமான திறனாய்வும் பிரதி உருவாக்குகின்ற யதார்த்த பிரதியினை அடையாளம் காட்ட முனைந்தால் மட்டுமே வாசக ரசனைச் சுழற்சி முழுமையடையும்.

துணை நின்றவை :

  1. ஜமாலன், மொழியும் நிலமும்,
  2. க.மோகனரங்கன், சொல் பொருள் மௌனம், யுனைட்டெட் ரைட்டர்ஸ், சென்னை.
  3. கோபிசந்த நாரங்க்,அமைப்பு மைய வாதம் மற்றும் கீழைக்காவிய இயல், சாகித்ய அகாதமி, சென்னை.
  4. ஆனந்த், கவிதை எனும் வாள்வீச்சு, காலச்சுவடு, சென்னை.
Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க