-பெருவை பார்த்தசாரதி

எந்திரசக்தி அறிந்திராத அந்தக் காலத்திலேயே
…….எழும்பி நின்ற விண்ணைமுட்டும் கோபுரமுண்டு..!
மந்திரசக்தியால் நல்மழையும் காற்றும் பெற்று
…….மண்நீர்வளம் காத்ததாகவும் சரித்திரமும் உண்டு..!
தந்திரசக்தி ஏதுமின்றியே விண்ணும் மண்ணும்
…….தரும் கொடைக்குத்தான் காரணம் ஏதுமுண்டா..?
இந்திரிய மைந்தையடக்கி வாழ்நாளை நீட்டிக்கும்
…….எங்கும் எதிலும் ஓர்சக்தியிருப்பதை உணர்வீரா.!

அண்டத்தில் அனைவரிடமும் மறைந் திருக்கும்
…….அற்புத சக்தியறிய இறையருளும் வேண்டும்..!
கண்டம்விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையை
…….கருத்தாகக் கணபதியை வழிபட் டெழச்செய்வர்.!
கொண்டவற்றை வைத்துக் கொண்டு குவலயமே
…….கொண்டாடும் சாதனை ஆக்குமோர் சக்திதான்.!
உண்டதெலாம் இரைப்பையுனுள் செல்வது முதல்
…….எங்கும் எதிலுமோர் உந்துசக்தி ஒளிந்திருக்கும்..!

ஆயகலைகள் அறுபத்து நான்கையும் அறிகின்ற
…….ஆவி பொருள் தேகமூன்றும் கொடுத்தவனவனே.!
மாயசக்தியாய்த் தாயின் கருப்பையில் கருவாகும்
…….மகத்தான உயிருக்கு உருக் கொடுப்பவனவனே.!
நாயகனாய் நின்றிவ் வையத்து வாழுமுயிர்களின்
…….நெஞ்சத்தினுள் நண்ணுகின்ற நின்னருள் வடிவே.!
மாயவனாக மறைந்து மண்தலமும் விண்தலமும்
…….எங்கும் எதிலும் நிறைகின்ற மறைப் பொருளே.!

*****

நன்றி:: தினமணி கவிதைமணி வெளியீடு::25-02-18
நன்றி:: கூகிள் இமேஜ்

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.