தலைமக்கட்கு உரித்தான மெய்ப்பாடுகளும் அகநானூறும் – உரையாசிரியர்களின் உரைகளை முன்வைத்து ஓர் ஆய்வு

0

-பேரா. பீ.பெரியசாமி

1:0. முன்னுரை

தலைமக்கட்கு உரித்தான, உரித்தாகாத குணங்களைத் தொல்காப்பியர் மெய்ப்பாட்டியலில் கூறியுள்ளார். (தொல்.மெய்.25-26) அவற்றையும் அவற்றை விளக்க உரையாசிரியர்கள் எடுத்தாண்டுள்ள அகநானூற்றுப் பாடல்களையும் குறித்து இவ்வியலில் ஆராயப்படவுள்ளது.

1:1. தலைமக்கட்குரித்தான குணங்களும் அகநானூறும்

தலைமக்கட்குரித்தான குணங்களாகத் தொல்காப்பியர், பிறப்பு, குடிமை, ஆண்மை, ஆண்டு, உருவு, நிறுத்த காமவாயில், நிறை, அருள், உணர்வு, திரு என்னும் பத்தையும் கூறியுள்ளார். (தொல்.மெய்.25) அவற்றையும் அவற்றை விளக்க உரையாசிரியர்கள் எடுத்தாண்டுள்ள அகநானூற்றுப் பாடல்களையும் குறித்து இப்பகுதி ஆராயவுள்ளது.

இவ்விடத்துக் கூறப்படும் மெய்ப்பாடுகளனைத்தும் தலைமக்களிடத்து அமைய வேண்டுமென்பதையும் அவையெல்லாம் எவ்வாறமையும் என்பதையும் பேராசிரியர்,

”இவையெல்லாம் இருவர்க்குந் தம்மின் ஒக்கும் பகுதியெனவும் இவைபற்றி மெய்ப்பாடு பிறக்குமெனவுங் கூறியவாறு ‘வகை’ யென்றதனான் ஆண்மைவகை பெண்மை வகையெனவுங், குடிமைவகை யென்பது இருவர்க்கும் இளமைப் பருவத்தே தங்கிய ஒழுக்கமெனவும், பிறப்பினது வகை யென்பது அந்தணர்க்கு நான்கும் அரசர்க்கு மூன்றும் வணிகர்க்கு இரண்டும் வேளாளர்க்கு ஒன்றுமெனவுங் கூறுக. இனி, ‘ஏவன்மரபின் ஏனோர்’ (தொல்.பொருள்.24) பாங்கினும் ‘அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்’ (தொல்.பொருள்.23) தம்மின் ஒத்த பிறப்புக் காரணமாக உள்ளத்து வருங் காமக்குறிப்பு முதலாயினவுங் கொள்க. இவ்வெண்ணப்பட்டன ஒத்துவரினன்றி அறிவுடையார்கட் காமக்குறிப்பு நிகழாமையின் இவற்றையும் ஈண்டு மெய்ப்பாடென்றோதினானென்பது, அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும் வரும் இக்குறிப்பு முதலாயினவற்றை இலேசினாற் கொண்டான்;  அவை பிறழ்ந்து வருமாகலினென்பது” (பேரா.மெய்.25) எனக் கூறியுள்ளார். மேலும் பாரதி,

”ஈற்றேகாரம் அசை மற்றைய ஏயும் ஒடுவும் எண்ணிடைச் சொற்கள் முன் களவியலில், ”ஒன்றே வேறே என்றிரு பால்வயின், ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப” எனும் சூத்திரத்தில், தலைக்காட்சியில் முளைத்த காதல் நிலைத்து வளர்தற் கின்றியமையாதது தலைமக்களின் ஒப்பு என வாளா சுட்டியதால், இங்கு அவ்வொப்பின் வகை விரித்து விளக்கப்பட்டது. இது, களவியலிலேனும் அன்றித் தகவுபெற அகப்பகுதியிலேனும் கூறின் அமையும் ஆண்டுக் கூறாமையால் ஒத்தக் காதலை வெளிப்படுத்தும் மெய்ப்பாடுகள் கூறி முடித்து, அவை நிலைத்த மெய்க்காதற்கே யுரியலாதலின், அக்காதல் நிலைக் குரியதென முன்தொகுத்துக் கூறிய ஒப்பு இங்கு வகுத்து விளக்கப்பட்டது இவை தாமே மெய்ப்பாடாகாமை இவற்றின் தன்மையில் தெளியப்படும்” (பாரதி, மெய்.25) எனக் கூறியுள்ளார். களவியலில் காதலர்களின் இயல்பைக் கூறிய தொல்காப்பியர், இவ்விடத்தே அவர்களுக்கான ஒப்புமையை விளக்கியுள்ளார். மேலும் குழந்தை,

தலைமகனது பிறப்பு முதலாயின தன் பிறப்பு முதலியவற்றோடு ஒத்ததாயின் தலைமகட்குக் காமக்குறிப்புத் தோன்றும். பிறப்பு முதலியன பற்றி மனத்தின்கட் பிறக்கும் தருக்குணர்ச்சி மெய்ப்பாடெனப்படும். இது, தலைமகற்கும் உண்டேனும், ‘ஒப்பினது வகை’  என்றதனால், தலைமகட்கே உரிமை கொள்ளப்படும். ஒருவர்க்குள்ள பிறப்பு முதலியன மற்றவர்க்கும் இருக்கின் அவ்வொப்பினால் இருவர்க்கும் காமக் குறிப்புத் தோன்றுமேனும், தலைமகனே தலைமகளைக் காண்பானாகையால் தலைமகள்பாலே இவ்வொப்புமைக் கேதுவாகிய உள்ள வுணர்ச்சி தோன்றித் தலைமகனைக் காதலிக்க வேண்டுதலின் அவளுக்கே சிறப்புடையன இவையென்பதாம்.  இப்பத்தில் குடிமை, ஆண்டு, உரு, அன்பு, அருள் என்பன இருவரும் எதிர்ப்பட்டதும் ஒத்துப் பார்க்கப்படும் மற்றவை பின்னர் வெளிப்படும். இப்பத்தினுள், உருவும், அவற்றுவழித் தோன்றும் அன்பும் மிகுதியும் ஒத்திருக்க வேண்டும்” (குழந்தை, மெய்.25).

எனக் குழந்தை கூறியுள்ளார். இவர் கருத்துப்படி இவ்விடத்துக் கூறப்படும் பத்து மெய்ப்பாடுகளும் தலைமகளுக்கு சிறப்புடையதாகும். இது பொருந்தாது ஏனெனில் இது தலைமக்கட்கான ஒப்புமை எனவே இருவர்க்கும் சிறந்தமையாகும்.

1:1:1. பிறப்பு

பிறப்பென்பது, “ஒத்த பிறப்பு – குடிமையொடு பிறப்பிடை வேற்றுமை என்னையெனின், பிறப்பென்பது குடிப்பிறத்தல்” (பேரா. மெய்.25) எனவும், “தோன்றிய குடிநிலை” (பாரதி, மெய்.25) எனவும், ”நற்குடிப்பிறத்தல்” (குழந்தை, மெய்.25) எனவும், “குலப்பிறப்பு. அஃதாவது ஒழுக்க நிலையான் அமைந்த அந்தணர் முதலிய நாற்குலம். “நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக் குலத்தின்கண் ஐயப்படும்” என்பதனான் ஒழுக்கம், குலம் பற்றி விளக்குதல் புலனாகும்.” (பாலசுந். மெய்.25) எனவும், “அந்தணர், அரசர், வணிகர், வேளாளர், ஆயர், வேட்டுவர், குறவர், நுளையர் என்றார்போல வரும் குலம்” (தாசன், மெய்.25) எனவும், “குடிப்பிறப்பு”” (இராசா, மெய்.25) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர்.

பிறப்பென்பது தலைமக்களின் ஒத்த பிறப்பு. இதனை விளக்கப் பேராசிரியர், கலி.39, 94 ஆகிய பாடல்களையும், குழந்தையும் பாலசுந்தரமும், கலி.39 ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

1:1:2. குடிமை

குடிமையென்பது, “ஒத்த ஒழுக்கம்; அதற்குத்தக்க (குடிபிறத்தல்) ஒழுக்கங் குடிமை எனப்படும்; குடிபிறந்தாரது  தன்மையைக் குடிமையென்றானென்பது; அதனை ஊராண்மையெனவுஞ் சொல்லுப.” (பேரா. மெய்.25) எனவும், “ஒழுக்கநிலை; “ஒழுக்க முடைமை குடிமை” என்பதனாலும், பிறப்பு வேறு கூறுவதாலும், இது குடிமை ஒழுக்கம் குறிக்கும்.” (பாரதி, மெய்.25) எனவும், “பண்பாடு. அதாவது குலனுடையார்க்குரியவை எனச் சான்றோர் வகுத்துக்கொண்ட சால்பு. குலம், குடிமை, என்பன ஒரோவழி ஒத்த பொருளினவாய் வரும் எனினும் இரண்டிற்கும் வேறுபாடு உண்டு என்பதனை இலக்கண வகையான் உணர்த்தற்பொருட்டுக் குலத்தைப் பிறப்பென்று சிறப்பித்தோதினர் என அறிக. குலஒழுக்கம் செயற்பண்பையும் குடிமை என்பது குணப்பண்பையும் குறித்து வருமெனக் கொள்க.” (பாலசுந்., மெய்.25) எனவும், “குலத்தினுள்ளும் சிறப்பாகிய ஒழுக்கம் பற்றிய குடிவரவு.(குடிவரவு குடிமை எனப்படும்).” (தாசன், மெய்.25) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர்.

குடிமையென்பது உயர்குடிப் பிறத்தலின் வழி எய்திய ஒழுக்கம். இதனை விளக்க பேராசிரியரும் குழந்தையும் நற்.3 ஆம் பாடலையும், பாலசுந்தரம் நற்.1 ஆம் பாடலையும், தாசன் குறள்.972–ஐயும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

1:1:3. ஆண்மை

ஆண்மையென்பது “ஒத்த ஆண்மை; ஆண்மை புருடர்க்காம் – அஃது ஆள்வினையெனப்படும். இது தலைமகட்கொப்பதன்றாலெனின், குடியாண்மை யென்புழி ஆண்மை யென்பது இருபாற்கும் ஒக்குமாதலின் அமையுமென்பது” (பேரா. மெய்.25) எனவும், “ஆளுந்திறம்; இது காதலர்க் கின்றியமையா ஒப்பு வகையுள் ஒன்றெனப் படுதலின், இருபாலர்க்கும் பொதுவாதல் தேற்றம் மனையாட்டி, அயலில்லாட்டி, பெண்டாட்டி, வினையாட்டி என்பனவற்றாலும் பெண்பாலார்க்கு ஆட்சியுண்மை துணியப்படும்” (பாரதி, மெய்.25) எனவும், “ஆளுமைத்திறன் ஆண்தன்மை வேறு;  ஆளுதல் தன்மை வேறு இதன் முதனிலை உரிச்சொல் ”ஆள்” அதன் முன்னிலை உரிச்சொல் ‘ஆண்’ என்று அறிக. இயற்றலும் ஈட்டலும் தலைவற்கு ஆளுமை. காத்தலும் வகுத்தலும் தலைவிக்கு ஆளுமை. பிறவற்றையும் இவ்வாறே பகுத்துணர்ந்து கொள்க” (பாலசுந்., மெய்.25) எனவும், “ஆண்மைத் தன்மை அஃதாவது ஆள்வினையுடைமையும் வலிபெயராமையும். ‘முட்டின்று முடித்தல்’ என்பதனால் தலைமகள்மாட்டுப் பெண்மையும் கொள்ளப்படும். அது பெண்டிர்க்குரிய நாணம்” (தாசன், மெய்.25) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர்.

ஆண்மையென்பது ஆண்களுக்கான ஆள்வினையுடைமையும் பெண்களுக்கான நால்வகை குணங்களும் சிறந்திருத்தலாகும். இதனை விளக்க பாலசுந்தரம் கலி.11 ஆம் பாடலையும், பேராசிரியரும் குழந்தையும்,

கேள்கே டூன்றவுங் கிளைஞ ராரவுங்
கேளல்
கேளிர் கெழீஇயின ரொழுகவு
மாள்வினைக்
கெதிரிய வூக்கமொடு புகல்சிறந்து”   (அகம்.93)

எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில், தன் சுற்றத்தாரது கேட்டைப் பாதுகாக்கவும் அவர்களுண்ணவும் சுற்றமில்லாத சுற்றத்தாரை (நண்பர்களை) நண்பு செய்து ஒழுகவும் தம் ஆள்வினைக்கு எதிர்ப்பட்ட உள்ளத்தொடு விரும்பி வந்தோமென வினைமுற்றி மீளலுறும் தலைமகன் இடைச்சுரத்துத் தன் நெஞ்சிற்குக் கூறியது. இதனை, “தன் ஆண்டினைக்குத் தக்க, “பெண்மையான் அவள் ஆற்றியிருந்தாள்” என்பதூஉம், கருதிய கருத்தினாற் காமக் குறிப்பும் பிறந்தமை” என்பர் பேராசிரியர்.” (புலியூர்க் கேசிகன், அகநானூறு, களிற்றியானைநிரை, ப.179) என புலியூர்க் கேசிகனும், “பேராசிரியர், ”பிறப்பே குடிமை” என்ற சூத்திரத்து ஆண்மையால் தலைமகனொடு தலைமகள் ஒத்தமைக்குக் ”கேள்கே டூன்றவும் இறைஞர் ஆரவுமட்…… புகல் சிறந்து” என்ற அடிகளைக் காட்டி, இன்ன காரணத்திற் பிரிந்து போந்து வினைமுடிந்தன மாயினும், அவளை முயங்குகம் சென்மோ என்றமையின், தன் ஆள்வினைக்குத் தக்க பெண்மையான் அவள் ஆற்றியிருந்தா ளென்பதூஉம் கருதிய கருதினாற் காமக் குறிப்புப் பிறந்தமையின், அஃது ஆண்மையாயிற்று.” (மா.பரமசிவம், அகநானூறு, ப.9) என மா.பரமசிவனும் கூறியுள்ளனர். இவற்றில் ஆணுக்குரிய வினைமேற் செல்லலும் பெண்மைக்குரிய ஆற்றியிருத்தலும் வெளிப்பட்டுள்ளமையால் ஆண்மையாயிற்று.

1:1:4. ஆண்டு

ஆண்டென்பது, “ஒத்த பிராயம்; யாண்டென்பது ஒத்தவாறென்னையெனின், பன்னீர் யாண்டும் பதினாறியாண்டுமே பெண்மையும் ஆண்மையும் பிறக்கும் பருவமென்பது ஒத்தினுள் ஒப்பமுடிந்தமையின் அதுவும் ஒப்பெனவே படும்” (பேரா. மெய்.25) எனவும், “பருவம்; அதாவது வயது” (பாரதி, மெய்.25) எனவும், “காமக் குறிப்புத் தோன்றிய பருவம்” (குழந்தை, மெய்.25) எனவும், “அகவை அஃது ஈண்டுப் பருவத்தை ஆகுபெயரிலக்கணத்தான் உணர்த்தி நின்றது. அஃதாவது தலைவற்குப் பதினாறு ஆண்டும் தலைவிக்குப் பன்னிரண்டாண்டும் நிரம்பி நிற்கும் வரைவிற்குரிய பருவமாம். இங்ஙனம் தலைவன் அகவையிற் காற்கூறு குறைதல் ஒப்புமை யகவை (ஆண்டு) என்றுணர்க. இதனை “மிக்கோனாயினும் கடிவரை யின்றே” எனக் களவியலுள் கூறியுணர்த்தியமை கண்டு கொள்க” (பாலசுந்., மெய்.25) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர்.

ஆண்டென்பது திருமணத்திற்குரிய பருவமெய்தும் வயது. இதனை விளக்க பேராசிரியரும் குழந்தையும் கலி.18 ஆம் பாடலையும், பாலசுந்தரம் ஐங்.256 ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடலை எடுத்தாளவில்லை.

1:1:5. உருவு

உருவென்பது, “ஒத்த உருவு…’உருவு நிறுத்த காமவாயி’ லென்பது பெண்மை வடிவும் ஆண்மை வடிவும் பிறழ்ச்சியின்றி அமைந்தவழி அவற்றுமேல் நிகழும் இன்பத்திற்கு வாயிலாகிய அன்பென்றவாறு…….. உருவென்பது குறிப்பின்றாகலின் மெய்ப்பாடா மாறென்னையெனின், அவ்வுருப்பற்றி மனத்தின்கட் பிறப்பதோர் தருக்குண்டன்றே அதனான் அது மெய்ப்பாடெனப்படும்” (பேரா. மெய்.25) எனவும், “வடிவம்; அதாவது “மூப்போ டிளமைமுரணா” வனப்பு” (பாரதி, மெய்.25) எனவும், “உருவும், அன்பும் அதாவது பெண்மை வடிவும், ஆண்மை வரவும் நன்கு அமைந்த வழி அவற்றின்கண் நிகழும் இன்பத்திற்கு அன்பு வாயின் போறலின், அன்பு காமவாயில் எனப்பட்டது. அன்பு, வடிவுபற்றி யல்லது தோன்றாமையின், உருவும் அதன்கட் டோன்றும் அன்பும் என இரண்டாகப் பகுக்கப்பட்டது. உருவின்கண் நிலைபெற்ற காமத்திற்கு வாயில் போன்ற அன்பென்க” (குழந்தை, மெய்.25) எனவும், “வனப்பு அஃதாவது தோற்றமும் எழிலும் ஏற்றமுற விளங்கும் நிலை” (பாலசுந்., மெய்.25) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர்.

உருவென்பது காதலுக்குரிய வனப்பும், வடிவும் அன்பும் நிறைவெய்தல். இதனை விளக்க பேராசிரியர், குறள்.632, கலி.108 ஆகிய பாடல்களையும், குழந்தை கலி.108 ஆம் பாடலையும், பாலசுந்தரம் ஐங்.299 ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடலை எடுத்தாளவில்லை.

1:1:6 நிறுத்த காமவாயில்

நிறுத்தகாமவாயிலென்பது, “ஒத்த அன்பு” (பேரா. மெய்.25) எனவும், “நிலைத்த காதல் நிலை” (பாரதி, மெய்.25) எனவும், “நிலைநிறுத்தப்பட்ட புணர்ச்சிக்கு வாயில் அஃதாவது ஒருவர்மாட்டு ஒருவர்க்கு நிகழும் அன்பு” (தாசன், மெய்.25) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். நிறுத்தகாமவாயிலென்பது, இருவர்மாட்டும் பயின்று வரும் காமத்திற்கேதுவாகிய அன்பு. இதனை விளக்க பாலசுந்தரம் குறுந்.70 ஆம் படலையும், பேராசிரியரும் குழந்தையும்,

நின்மக ளுண்கண் பன்மா ணோக்கிச்
சென்றோன்
மன்றவக் குன்றுகிழ வோனே
பகன்மா
யந்திப் படுசுட ரமையத்
தவன்மறை
தேஎ நோக்கி மற்றிவன்
மகனே
தோழி யென்றனள்”    (அகம்.48)

எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில், நின்மகளது மையுண்ட கண்களைப் பலதரம் மாட்சிமைப்பட நோக்கி அக்குன்று நாட்டுக்குரியோன் சென்றான். பகல் நீங்கும் அந்தியாகிய சுடர்படுகின்ற காலத்து அவன் மறைந்த திக்குநோக்கித் தோழீ! இவன் ஒரு சிறந்த ஆடவனே என வியந்து கூறினாள் என்பதன்வழி இதில் தலைவி தலைவன்மேற் கொண்ட காதல் வெளிப்பட்டுள்ளமையின் நிறுத்தகாம வாயிலாயிற்று.

1:1:7. நிறை

நிறையென்பது, “ஒத்த நிறை;  நிறையென்பது மறைபிறரறியாமை (கலி.133) நெஞ்சினை நிறுத்தல்” (பேரா. மெய்.25) எனவும், “சால்பு அடக்கமெனினும் ஒக்கும். அஃதாவது மறை பிறரறியாமல் நெஞ்சினை நிறுத்தல்” (பாலசுந்., மெய்.25) எனவும், “உள்ளத்தை ஒருவழி நிறுத்தும் நிலை” (இராசா, மெய்.25) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். நிறையென்பது பிறர் அறிய கூறக்கூடாதவற்றை மறைத்தொழுகுதல். இதனை விளக்க பேராசிரியர் கலி.133, 37 ஆகிய பாடல்களையும், குழந்தை கலி.37 ஆம் பாடலையும், பாலசுந்தரம் குறுந்.9, கலி.47 ஆகிய பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடலை எடுத்தாளவில்லை.

1:1:8. அருள்

அருளென்பது, “எல்லாவுயிர்க்கும் இடுக்கண் செய்யாத அருளுடையராயிருத்தல் அதுவுங் காமத்திற்கு இன்றியமையாததோர் குறிப்பு” (பேரா. மெய்.25) எனவும், “பிறவுயிர்க் குண்டான துன்பங் கண்டிரங்குதல், துன்பஞ் செய்யாமை” (குழந்தை, மெய்.25) எனவும், “ஒருவர் ஒருவரின் குறையினை நிறையாக ஏற்றொழுகும் மனமாட்சி அருளுடைமை என்னும் பொதுக்குணம் ஈண்டுச் சிறப்புப் பொருள் படநின்றது. பொறை வேறு; குறையை நிறையாகக் கொள்ளும் பண்புவேறென அறிக” (பாலசுந்., மெய்.25) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர்.

அருளென்பது எல்லாவுயிரிடத்தும் அன்போடு நெருங்குதல். இதனை விளக்க பாலசுந்தரம் கலி.88, குறுந்.196 ஆகிய பாடல்களும், பேராசிரியரும் குழந்தையும்,

தாதுண் பறவை பேதுற லஞ்சி
மணிநா
வார்த்த மாண்வினைத் தேரன்”   (அகம்-4)

எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில், தாதை உண்ணுகின்ற பறவை (வண்டு) வருந்துதலுக்கு அஞ்சி மணியின் நாவை ஒலி எழுப்பாவண்ணம் கட்டிய மாட்சிமைப்பட்ட தொழிலமைந்த தேரையுடையவன். என்பதில் தன் தேரின் ஒலி வண்டினையும் துன்புறுத்த கூடாது என்ற உயர்ந்த நோக்குடையவனாக தலைவன் கூறப்படமையான் இஃது அருளானது.

1:1:9. உணர்வு

உணர்வென்பது, “ஒத்த அறிவு; …. உணர்வென்பது அறிவுடைமை;  அஃதாவது உலகியலாற் செய்யத்தகுவது அறிதல்” (பேரா. மெய்.25) எனவும், “அறிவு;  உணர்ச்சி எனினும் அமையும்” (பாரதி, மெய்.25) எனவும், “ஒருவர் ஒருவர்தம் உள்ளக் குறிப்பை அறிந்தொழுகும் நுண்ணறிவு” (பாலசுந்., மெய்.25) எனவும், “உணர்வினை மதித்தல்” (இராசா, மெய்.25) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர்.

உணர்வென்பது ஒருவர் குறிப்பை மற்றொருவர் அறிந்தொழுகும் அறிவு. இதனை விளக்க பாலசுந்தரம் குறள்.1100 ஐயும், பேராசிரியர், தொல்.பொருள்.259 ஆம் நூற்பாவையும், மேலும் பேராசிரியரும் குழந்தையும்,

தன்னசை யுள்ளத்து நந்நசை வாய்ப்ப.”    (அகம்.22)

எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில், “தனது வேட்கை நிறைந்த உள்ளத்தின்கண் எமது வேட்கையும் வாய்ப்ப என்பது பேராசிரியர் கருத்து. (காவலரறியாமல்) தன்னை நச்சுதலையுடைய உள்ளத்தில் எம்முடை நசை (வேட்கை) வாய்ப்ப என்பது அகநானுற்றுக் குறிப்புரைகாரர் கருத்து.” (கணேசையர், தொல்காப்பியம், பொருளதிகாரம், பேராசிரியர் இரண்டாம் பாகம், ப.க0க) என கணேசையர் கூறியுள்ளார். இது உள்ளத்துணர்வின் பாற்பட்டது.

1:1:10. திரு

திருவென்பது, “ஒத்த செல்வம்; திருவென்பது, பொருளுடைமையும் பொருள் கொணர்ந்து துய்த்தலுமின்றி எஞ்ஞான்றுந் திருத்தகவிற்றாகியதோர் உள்ள நிகழ்ச்சி; அது வினையுள்ளுடைமையெனவும் படும்” (பேரா. மெய்.25) எனவும், “செல்வம்; இது பொருள் பற்றியதன்று;  உள்ள மலர்ச்சி; ”செல்வ மென்பது சிந்தையினிறைவே” என்பதனாலும் இப்பொருட்டாதலறிக” (பாரதி, மெய்.25) எனவும், “தெய்வந்தன்மை, அஃதாவது கண்டாராற் போற்றப்பெறும் தெய்வப் பொலிவு. திருத்தகவிற்றாயதோர் உள்ள நிகழ்ச்சி என அவர் கொள்கைக்கேற்பப் பொருள் கூறுவார் பேராசிரியர். அஃது ஒப்புமைப் பண்பாதற்கு ஏலாமையறிக” (பாலசுந்., மெய்.25) எனவும், “நல்லதையே எண்ணும் உளநிலை” (இராசா, மெய்.25) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர்.

திருவென்பது நிறைவெய்தும் மனநிகழ்வு. இதனை விளக்கப் பேராசிரியரும் குழந்தையும் கலி.143ஆம் பாடலையும், பாலசுந்தரம் திணைமாலை.71ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடலை எடுத்தாளவில்லை.

இதுகாறும் கூறப்பட்ட பத்து மெய்ப்பாடுகளும் தலைமக்கட்குரித்தான ஓப்புமைகளாகும். இதனை,

“இதுகளவியலுட் கூறப்பட்ட தலைவற்குந் தலைவிக்கும் உளதாகும் ஒப்புப் பாகுபாடு உணர்த்துதல் நுதலிற்று” (இளம்., மெய்.25) என இளம்பூரணரும்,

“மெய்ப்பாட்டிற்குரிய பொருளாக ஓதப்பெற்ற பொருள் யாவும் பண்பும் செயலுமே ஆதலின் அவற்றிற்கு அடிப்படையாய குடிமையையும் பிறப்பையும் ஒப்பினது வகையுள் தலைமையுடையவை என்பது தோன்ற முதற்கண் வைத்தோதினார் என்க. ‘ஒத்த கிழவனும் கிழத்தியும்’ (கள-2) என்ற ஒப்புமையை விதந்து கூறுகின்றது. ஐந்திணை மருங்கின் காமக் கூட்டமாவது, துணையமை நல்யாழ்த் துணைமை யோரயல்பெனவும் (களவு-1) அத்துணைவராவார் ஒத்த கிழவனும் கிழத்தியுமெனவும் அவர்தாம் ஒன்றியுயர்ந்த பாலதாணையாற் காண்ப. (களவு-2) எனவும், அவருள் தலைமகன் பெருமையும் உரனுமாகிய குணங்களையுடையான் (கள.7) எனவும் தலைவி அச்சமும் மடனும் நாணுமாகிய குணங்களையுடையாள் (களவு-8) எனவும் கூறி அவர்தாம் இருவகைக் கைகோளானும் ஒழுகும். ஒழுக்கமே  ‘மன்னிய வினை’ என்றும் ஆசிரியர் புலப்படுத்திப் புகுமுகம் புரிதல் முதலாகக் கலகம் ஈறாக ஓதப் பெற்றவை களவிற்குரிய நிமித்தமாம் என்றும் முட்டுவயிற்கழறல் முதலிய எட்டும் வரைந்தெய்தும் அழிவில் கூட்டத்திற்குரிய நிமித்தமாம் என்றும் தெய்வமஞ்சல் முதலிய பத்தும் கற்பிற்குரிய பொருள்களாம் என்றும் கூறி அவையும் அவைபோல்வன பிறவுமெல்லாம் எண்வகை மெய்ப்பாட்டிற்குரிய அடிப்படைப் பொருள்களாம் எனவும், இதுகாறும் எடுத்தோதினார் அங்ஙனம் மன்னியவினை பற்றி வரும் பொருள்கள் யாவும் மேற்கூறிய கிழவனும் கிழத்தியும் அத்தகைய சால்புடையராகிய வழியே நிகழுமாதலின் அச்சால்புடைமைக்கு அடிப்படை இவை என்பது விளங்கும். எனவே அகத்திணைக்கண் எண்முறை நிலையாய மெய்ப்பாடுகள் தோன்றுதற்கு அடிப்படைப் பொருள்கள் புகுமுகம் புரிதல் முதலாயவை என்பதும் புகுமுகம் புரிதல் முதலாய பொருள்கள் நிகழ்தற்கு அடிப்படை தலைமக்கட்குரிய குணங்கள் என்பதும் அக்குணங்கள் அமைதற்குரிய அடிப்படை பிறப்பு முதலாய ஒப்புமைகள் என்பதும் தெளிவாம். அவற்றுள் குணங்கள் தலைமக்கட்குரிய இலக்கணமாக நிற்றலின் அவற்றைக் களவியலுள் விதத்து கூறி, பிறப்பு முதலாய இப்பத்தும் தலைமக்கட்குரிய இலக்கணமன்மையான் ஆண்டுக் கூறாமல் மெய்ப்பாட்டுப் பொருள் தோன்றுதற்குக் காரணமாதல் பற்றி ஈண்டு அமைத்தார் என்க” (பாலசுந்., மெய்.25) என பாலசுந்தரமும்,

“இப்பத்தும் ஒத்த அன்பராய்த் தம்முள் கூடும் தலைவன் – தலைவி ஆகிய இருவர்பாலும் இருக்க வேண்டும் ஒப்புநிலைகளாகும்” (இராசா, மெய்.25)) என இராசாவும் கூறியுள்ளனர்.

1:2. முடிவுரை

  1. தலைமக்கட்குரித்தானதாகக் கூறப்படும் பத்து மெய்ப்பாடுகளும் குழந்தை கருத்துப்படி தலைமகளுக்கு சிறப்புடையதாகும். இது பொருந்தாது ஏனெனில் இது தலைமக்கட்கான ஒப்புமை எனவே இருவர்க்கும் சிறந்தமையாகும்.
  2. தலைமக்கட்குரிய ஒப்புமைகளாகக் கூறப்படும் பத்துமெய்ப்பாடுகளுள் ஆண்மை, நிறுத்தகாம வாயில், அருள், உணர்வு எனும் நான்கினை மட்டும் விளக்க அகநானூற்றுப் பாடல்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. மேலும் இவையனைத்தும் உரையாசிரியர்களால் பொருந்த ஆளப்பட்டுள்ளன.

*****

கட்டுரையாளர்,
தமிழ்த்துறைத்தலைவர்,
D.L.R. கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
விளாப்பாக்கம், ஆற்காடு

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *