திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் -50
க. பாலசுப்பிரமணியன்
இறைவனின் திருவருளைப் பெற வழிதான் என்ன?
“அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை” என்பது வள்ளுவம். வாழ்க்கையில் பல இன்பங்களையும் துன்பங்களையும் அனுபவித்து பொருள் சேர்த்து உயரிய நிலையை அடைந்ததாக நமக்கு நாமே அறிவித்துக் கொண்ட பின்னும் மனம் ஒரு நிலையில் இருப்பதில்லை. இவையெல்லாம் இறைவன் திருவருளை நமக்குத் பெற்றுத்தறுமா என்றால் “நிச்சயமாக இல்லை’ என்ற பதிலே கிடைக்கின்றது. அப்படியென்றால் அவனிடமே சென்று முறையிட்டாலென்ன? அவனை எங்கே காண முடியும்? இந்தக் கேள்விகளெல்லாம் நம் மனதில் எழுகின்றது. இதற்கு பதில் அளிக்கும் வகையில் திருஞான சம்பந்தர் கூறுகின்றார்; “நினைப்பவர் மனத்துள்ளான்” என்று.
பூசலாரின் மனக்கோயிலிலே அவன் வாசம் செய்யவில்லையா?
திருமூலர் தன்னுடைய அனுபவ அறிவின் மூலம் நமக்கு விளக்குகின்றார் :
விண்ணிலும் வந்த வெளியிலன் மேனியன்
கண்ணிலும் வந்த புலனல்லன் காட்சியன்
பண்ணினில் வந்த பயனல்லன் பான்மையன்
எண்ணிலா னந்தமும் எங்கள் பிரானே
எங்கும் நிறைந்து எல்லா விதமான ஆனந்தத்திருக்கும் காரணமாக இருப்பவனன்றோ அவன்?
“என் மனத்துள் உள்ளே வரும் பெருமான்” என்று கூறி மாணிக்கவாசகரோ தன் மனக்கதவுகளை எப்பொழுதும் இறைவனுக்காகத் திறந்து வைத்திருந்தார்.
நாம் இறைவனை நினைத்து வாழ்ந்தாலும், நினைக்கவிட்டாலும் அவன் நிச்சயமாக நம்மை ஏற்று அருள்புரிபவனே என்ற அசையாத நம்பிக்கை திருநாவுக்கரசருக்கு இருந்தது. அந்த நம்பிக்கையை இந்தப் பாடல் மூலமாக நமக்கு வெளிப்படுத்த்துகின்றார்
தொழுது தூமலர் தூவி துதித்து நின்று
அழுது காமுற்று அரற்று கின்றாரையும்
பொழுது போக்கிப் புறக்கணிப் பாரையும்
எழுத்தும் கீழ்க்கணக்கு இன்னம்பர் ஈசனே
இறைவனுடைய இந்த அளவில்லாக் கருணை நம்மை காத்துக்க்கொண்டிருக்கும் பொழுது நாம் நல்ல நினைவுகளோடும் அறம் போற்றும் மனத்தோடும் வாழவேண்டாமா? அவன் அளவில்லாக் கருணையை நமக்கு விளக்கும் திருமூலர் கூறுகின்றார் :
இங்குநின் றானங்கு நின்றனன் எங்குளன்
பொங்கிநின் றான்புவ னாபதி புண்ணியன்
கங்குல்நின் றான்கதிர் மாமதி ஞாயிறு
எங்குநின் றான்மழை போலிறை தானே .
திருமூலர், மாணிக்க வாசகர், திருஞான சம்பந்தர், காரைக்கால் அம்மையார், பட்டினத்தார், பத்திரகிரியார் போன்ற பல அடியார்களின் பாதைகள் வெவ்வேறாக இருந்தாலும் அவர்களின் இறை சிந்தனையின் அடிப்படை இறைவனை நம்முடைய இதயத்தின் உள்ளேயே அறிந்து, அவனை அங்கேயே நிறுத்தி, போற்றி, அவன் சிந்தனையிலேயே இடைவிடாத நிலையான இன்பத்தையும் ஆனந்தத்தையும் காண்பதாகும். இதனால்தான் காரைக்கால் அம்மையார் சொல்கின்றார் “என்போல்வார் சிந்தையிலும் இங்குற்றான்; காண்பார்க்கு எளிது.”
ஆகவே இந்த அடியார்களின் கருத்தை நாமும் மனதில் கொண்டு அகத்திலும் புறத்திலும் எங்கும் நிறைந்தவனாக இருக்கும் இறைவனை உணர்ந்து போற்றி பயன்பெறுவோம்.
“ஒருவனே போற்றி ஒப்பில் அப்பனே போற்றி வானோர்
குருவனே போற்றி எங்கள் கோமளக் கொழுந்து போற்றி “
(நிறைவு)