’’அர்ஜுன உவாச’’….!
———————————————-
சண்டித் தனமாய் சகத்தில் உழல்கின்ற
நொண்டிக் குதிரைநான் நாரணா -அண்டி
வருவாய் அருகே குருவாகிக் காட்டு
பரிமேல் அழகா பரிவு….கிரேசி மோகன்….!
’’அர்ஜுன உவாச’’….!
———————————————-
சண்டித் தனமாய் சகத்தில் உழல்கின்ற
நொண்டிக் குதிரைநான் நாரணா -அண்டி
வருவாய் அருகே குருவாகிக் காட்டு
பரிமேல் அழகா பரிவு….கிரேசி மோகன்….!
பெருவை பார்த்தசாரதி
==============================
மனிதப்பிறவி என்பது அரிதாகும் அதைவிடவும்..
…….மனத்திலெழும் சிந்தனா சக்தியென்பது அற்புதமாம்.!
கனியுமாமங்கே கருத்துடன் செறியும் எண்ணம்..
…….காலத்தேயது வெளிப்படும் காதுக்கினிய பேச்சாக.!
இனியசொல்லே இல்லாமல் இடைவிடாமல் பேசும்..
…….இயல்புள்ள மனிதருமிங்கே உண்டு இவர்தவிர்த்து.!
தனிமையிலே பேசினால்நம் தன்னிலை அறியலாம்..
…….தக்கதோர் இடமதற்கு பொருத்தமா யமையவேணும்.!
முனிவனும் யோகியும் முற்றுமெதையும் துறந்தாலும்..
…….தனிமையில் சிந்தித்ததால் தன்னிகரற்று விளங்கினர்.!
மனித வளமென்று சொல்வதெல்லாம் எதைவைத்து..
…….மனிதரின் மனதிலெழுமுயர் எண்ணங்கள் வைத்தே.!
பனிப்படலம் விலகவங்கு பகலவன் தோன்றியது..
…….போலேநம் மனவழுக்ககல நற்சிந்தனை வேண்டும்.!
இனியவை நாற்பது இன்னாநாற்பதெனும் காவியமும்..
…….இன்புற இறுதிநிலையென இதைத்தான் இயம்பியது.!
அண்டசராசரத்தில் அனுதினம் ஆயிரம் நிகழ்வுகள்..
…….ஆண்டவனை அடிபணிய ஆங்கோர் சந்தர்ப்பமாம்.!
பண்டிகை விழாவெனில் மண்டபத்தில் கூடிநின்று..
…….பலருடன் பேசும்மனம் விசாலமடைய வழியதுவாம்.!
கொண்டாடும் இடத்தினிலே கூடியிருக்கும் பலரும்..
…….கொத்துமலர் கொண்டு வாழ்த்திப்பேச நலமுண்டாம்.!
கண்டவருடன் கண்டதையும் பேசாமல் ஒதுங்கித்..
…….தனிமையிலே பேசித்தன் சுகத்தை காப்போருமுண்டு.!
தன்னையறியவே தனிமையில் பேசினர் சித்தர்கள்..
…….தன்னுடலழகும் தகும் புறத்தோற்றமும் தவிர்த்தார்.!
தன்சிந்தையை தன்சுற்றத்தை தன்னியல்பை நீக்கி..
…….தனிமைத்தவம் கொண்டார்தன் ஐம்புலன்க ளடக்க.!
தன்வாழ்வை இயற்கை யோடிணைத்து வித்தகரானார்..
…….தமிழிலக்கியம் செழிக்கத் தன்னையு மர்ப்பணித்தார்.!
பின்னரிந்த உண்மையறியாத மாந்தரும்–சித்தரைப்..
…….பித்தனென்றே பேசினர்..வாழ்வியல் தத்துவமறியா.!
==============================================================
நன்றி:: தினமணி கவிதைமணி வெளியீடு::12-02-18
நன்றி:: கூகிள் இமேஜ்
க. பாலசுப்பிரமணியன்
அறவழி நில்லாத வாழ்க்கையின் பயனென்ன ?
அறம் சார்ந்த வாழ்க்கையை எப்பொழுது தொடங்கவேண்டும்? உணர்ச்சிகளால் உந்தப்பட்டு உலக மாயைகளில் உழன்று குடும்ப வாழ்க்கையில் முழுதான கவனம் செலுத்தி, வருங்காலத்திற்காக சொத்து சேமித்து வைக்கும் நேரத்திலா? அல்லது வாழ்ந்து முடித்துவிட்டோம் என்று எண்ணி எல்லாம் துறந்த நிலையிலே மனம் இருக்கும் நேரத்திலா? இந்தக் கேள்விக்கு எங்கே சரியான பதில் கிடைக்கும்?
வாழ்ந்து அனுபவிக்கவேண்டும் என்ற ஆசையில் நாம் உலக மாயையில் இங்கும் அங்குமாகப் பறந்து கொண்டிருக்கின்றோம். தேவையுள்ள பொருள்களை மட்டுமின்றி தேவையற்ற பொருள்களையும் சேர்த்து பொருட்சுமை மட்டுமின்றி மனச்சுமையிலும் மூழ்கிக்கொண்டிருக்கின்றோம். அறத்தை மறந்து வாழ்கின்ற வாழ்க்கை எப்படி இருக்கும்? அவர்களின் குணாதியங்களை எப்படி வர்ணிக்கலாம் ? பட்டினத்தாரின் இந்தப் பாடல் அதற்கு ஒரு உதாரணமாக விளங்குகின்றது.
ஓயாமற் பொய்ச்சொல்வர் நல்லோரை நிந்திப்ப ருற்றுப்பெற்ற
தாயாரை வைவர் சதியா யிரஞ்செய்வர் சாத்திரங்கள்
ஆயார் பிறற்குப காரஞ்செய் யார்தமை யண்டினர்க்கொன்
றீயா ரிருந்தென்ன போயென்ன காண்கச்சி யேகம்பனே
இந்த குணாதிசயங்களுடன் அறத்தைப் பற்றி சற்றும் நினையாதவர்கள் வாஸ்க்கை எப்படிப்பட்டது? “இன்றிருப்பார் நாளையில்லை என்னும் பெருமை படைத்த இவ்வுலகில்” கிடைத்த சிறிய வாழ்வில் நல்ல பல செயல்களை செய்யாமல் அதைத் தள்ளிப் போட்டு வாழ்க்கை வீணடிப்பவர்களுக்கு என்ன புத்திமதி கூற முடியும்? திருமூலரின் இந்தப் பாடல் அதற்கு பதில் அழிப்பது போல் அமைந்துள்ளது.
கிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கே
விழக்கண்டுந் தேறார் விழியிலா மாந்தர்
குழக்கன்று மூத்தெரு தாய்ச்சில நாளில்
விழக்கண்டுந் தேறார் வியனுல கோரே
எல்லாப் பொருள்களும் தோன்றி மறைகின்ற நிலையில் இருக்கும் நிலையை அறியாத மனம் எல்லாம் தனதே என்ற கருத்தை வைத்துக்கொண்டு அறத்தை செய்யாமல் வீணாக வீழ்கின்றதே என்ற திருமூலரின் கருத்து எவ்வளவு உண்மையானது. !
அறத்தைச் சாராத வாழ்க்கையை வாழ்ந்து தேவையற்ற பொருள்களை மிகுதியாகச் சேர்த்து வைத்து பிற்காலத்தில் “இந்தப் பொருளை எங்கு விட்டுச் செல்வேன்? இதை யார் பாதுகாப்பார்கள்?” என்ற கவலையை மனதில் கொண்டு கூற்றுவனின் அழைப்பினை ஒதுக்கமுடியாமல் அவதிப்படுகின்ற உள்ளங்கள் தான் எத்தனை! உடலை விட்டு நீங்கும் நேரத்தில் இந்த அறிவு கிடைத்து என்ன பிரயோசனம்? இந்த மாயையில் அகப்பட்டு அவதிப்படும் நெஞ்சங்களை நோக்கிப் பட்டினத்தார் பாடுகின்றார்:
வீடிருக்கத் தாயிருக்க வேண்டுமனை யாளிருக்கப்
பீடிருக்க வூணிருக்கப் பிள்ளைகளுந் தாமிருக்க
மாடிருக்கக் கன்றிருக்க வைத்த பொருளிருக்கக்
கூடிருக்க நீபோன கோலமென்ன கோலமே.
எவ்வளவு ஆழமாக உண்மைகளை நம் முன்னே எடுத்து நிறுத்துகின்றார் பட்டினத்தார்!
இந்தக் கருத்தை வலுப்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளது திருமூலரின் இந்த வரிகள்
குடமுடைந்தால் அவை ஓடு என்று வைப்பர்
உடல் உடைந்தால் இறைப்பொதும் வையாரே !
பட்டினத்தாரைத் தொடர்ந்து இந்தப் புலம்பலை நாம் பத்திரகிரியாரிடமும் பார்க்கின்றோம்.
வேடிக்கை யுஞ்சொகுசு மெய்ப்பகட்டும் பொய்ப்பகட்டும்
வாடிக்கை யெல்லா மறந்திருப்ப தெக்காலம் ?
பட்டுடை பொற்பணியும் பாவனையுந் தீவினையும்
விட்டுவிட் டுன்பாதம் விரும்புவதெக்காலம் ?
இவ்வாறு உலக மாயையில் விழுந்து எல்லாம் எனக்கே என்ற எண்ணம் கொண்டு தன் உண்மை நிலையை அறியாது ஆசைப்படும் நெஞ்சங்களுக்கு தாயுமானவரின் இந்த வரிகள் உண்மை நிலையை விளக்கும்
ஆசையும் பெருங்காற்றூடு இலவம்பஞ்சு
எனவும் மனது அலையும் காலம்
மோசம் வரும்; இதனாலே கற்றதும்கேட்
டதும்தூர்ந்து, முக்திக்கு ஆன
நேசமும்நல் வாசமும் போய்ப் புலனாய் இல்
கொடுமை பற்றி நிற்பர்: அந்தோ
தேகபழுத்து அருள்பழுத்த பராபரமே !
நிராசை இன்றேல் தெய்வம் உண்டோ?
(தொடரும்)
– ஆ.செந்தில் குமார்
விலங்கோடு விலங்காக
வேட்டையாடி வாழ்ந்து வந்தான்!
குகையே இவன் குடியிருப்பு!
கூரிய கல்லே ஆயுதம்!
விலங்கு மனிதனை
விளங்க வைத்தது வேளாண்மை!
நாடோடி வாழ்க்கையைக் கைவிட்டு
நாகரிக வாழ்க்கையில் நிலைத்தான்!
நதிக்கரைகள்தான்
நாகரிகத்தின் தொட்டில்கள்!
உழவனே அந்த நாகரிகத்தின்
உயர் வளர்ச்சிக்கு உதவியவன்!
நிலத்தைப் பண்படுத்தினான்
வேளாண்மை வளர்ந்தது!
மனத்தைப் பண்படுத்தினான்
பண்பாடு செழித்தது!
கால்நடைகளைப் பழக்கினான்
உழைப்பின் சுமை குறைந்தது!
கற்பனையை உயர்த்தினான்
வாழ்வின் இனிமை உயர்ந்தது!
இக்கால மனிதன் இயற்கையைச் சிதைத்து
இன்பம் காண்கிறான்!
அறிவியலின் துணைகொண்டு
அகிலத்தை ஆள்கிறான்!
கற்கால மனிதன் காட்டில்
அரைநிர்வாணமாய் இருந்தான்!
இக்கால மனிதன் அதையே
நாகரிகம் என்கிறான்!
கற்கால மனிதனிடம்
பண்பாடு இருக்கவில்லை!
இக்கால மனிதனிடமும்
அது இருப்பதில்லை!
கற்கால மனிதன்
அறிவில் வளர்ந்தான்…
நாகரிகம் பிறந்தது!
பண்பாடு பிறந்தது!
இடைக்கால மனிதன்
அறிவில் வளர்ந்தான்…
நாகரிகம் வளர்ந்தது!
பண்பாடு வளர்ந்தது!
இக்கால மனிதன் அறிவில்
வளர்ந்துகொண்டேயிருக்கிறான்…
நாகரிகம் தேய்கிறது!
பண்பாடு தேய்கிறது!
வருங்கால மனிதன் அறிவின்
உச்சத்தில் இருப்பான்…
நாகரிகம் மறையும்!
பண்பாடு மறையும்!
அவனும் மறைவான்!
உலகமே அழிந்து மறையும்!
இவ்வார வல்லமையாள்ர்களாக விஞ்ஞானி சுமிதா மித்ராவை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது. இவர் அமெரிக்க பேடண்ட் அலுவலகத்தின் பாராட்டுக்கும், அங்கிக்காரத்துக்கும் தேர்ந்தெடுக்கபட்டுள்ளனர்
சுமிதா மித்ரா நானோபார்ட்டிகிள்ஸ் எனப்படும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல்சொத்தைகளை அடைக்கும் வழியை கண்டுபிடித்துள்ளார். இது தற்போது இருக்கும் தொழில்நுட்பத்தை விட பலமடங்கு மேம்பட்டதாகவும், மக்களுக்கு பலனளிக்கும் வகையில் இருக்கும் எனவும் தெரிகிறது
3எம் எனும் கம்பனியில் வேலை செய்தபோது இதை கண்டுபிடித்த்து இதுவரை சுமார் 60 கோடிக்கும் மேற்பட்டோருக்கு இது பலனளித்துள்ளது.
இது தவிர பல்சொத்தைகளை அடைக்கும் பசைகள், நானோகாம்பொசிட் வகை தொழில்நுட்பம் ஆகியவற்றையும் சுமிதா மித்ரா கண்டுபிடித்துள்ளார். 3எம் கம்பனியில் இருந்து ஓய்வுபெற்று சொந்தமாக தொழில்நுட்ப கம்பனி ஒன்றை துவக்கி நடத்தி வருகிறார்

இவர் அமெரிக்காவில் வசித்தாலும் இவரது சொந்த ஊர் கல்கத்தா ஆகும். கல்கத்தா ரெசிடென்ஸி கல்லூரி மாணவி ஆவார். இவரது கணவர் சாம் மித்ரா ஆவார். தன் கணவருடன் இணைந்து தான் வசிக்கும் மின்னியபொலிஸ்- செயிண்ட்பால் நகரில் உள்ள பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு இலவசமாக அறிவியல் குறித்து உரை நிகழ்த்துவதில் தன் விடுமுறைகளை இவர் செலவிடுகிறார்
அறிவியல், மாணவர் மேல் கொண்ட அன்பு, உழைப்பு, ஊக்கம் ஆகியவற்றுக்கு முன்னுதாரணமாக விளங்கும் சுமிதா மித்ராவை இவ்வார வல்லமையாளராக அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். வல்லமையாளர் சுமித்ரா மித்ராவுக்கு நம் நல்வாழ்த்துகள்
இவரை பரிந்துரைத்த அண்ணாகண்ணன் அவர்களுக்கு நம் நன்றி
(இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )
-மேகலா இராமமூர்த்தி
சோடிப் புறாக்களைத் தேடிப்பிடித்துக் கலைநயத்தோடு படமெடுத்து வந்திருக்கின்றார் திரு. ஆய்மன் பின் முபாரக். இணையற்ற இவ்விணையர் குறித்துக் கவினோடு கவியெழுதுங்கள் என்று இக்காட்சியைப் போட்டிக்குத் தெரிவுசெய்து தந்திருக்கின்றார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவரும் என் நன்றிக்குரியோர்.
”இருநிலா இணைந்து பாடி
இரையுண்ணும் செவ்வி தழ்கள்
விரியாத தாமரை போல்
ஓர்இணை மெல்லி யர்கள்
கருங்கொண்டை கட்டி ஈயம்
காயாம்பூக் கொத்து மேலும்
ஒருபக்கம் இருவா ழைப்பூ
உயிருள்ள அழகின் மேய்சல்!” என்று புறாக்களின் எழிலைத் தன் ’அழகின் சிரிப்பில்’ அருமையாய் வடித்துத் தந்திருக்கின்றார் பாவேந்தர்.
ஒழுக்கம் விழுப்பந் தரலான் அதனைத் தம் வாழ்வில் உயிரினும் மேலாய்க் கடைப்பிடிக்கும் புறாக்களின் நனிநாகரிகத்தை மானுடரும் பின்பற்றுதல் நன்று.
இனி கவிஞர்களின் முறை…
”சாதி மதம் பாராது, சாதகத்தைச் சாராது வேசமில்லாப் பாசத்தோடு இணைந்திருக்கும் இவ்இனிய புறாக்கள் உண்மைக் காதலுக்குத் தக்கதோர் சான்றாய்த் திகழ்கின்றன” எனப் புகழ்கின்றார் திரு ஏ.ஆர். முருகன், மயிலம்பாடி.
இணைந்த உயிர்கள்!!
#மாசிமாதம் ஓரிரவு…
மகிழ்ச்சி ததும்பும் தேனிலவு!
ஜோடி போட்ட மாடப்புறா
சொக்கவைக்கும் காதல்நிலா!!
#வண்ணப்பறவைகள் ரெண்டு
வற்றாத பேரன்பு கொண்டு
காதலின் உச்சத்தைக் கண்டு
காட்டிடும்தோரணை கற்கண்டு!!
#விரும்பும் துணையின் அருகிலே
விசனம் மறந்த நிலையிலே
விழிகள் பேசும் மொழியிலே
விழுந்தன மனங்கள் மையலிலே!!
#சாதி மதம் பார்க்கவில்லை
சாதகத்தைத் தேடவில்லை
சம்மதிக்கும் உள்ளங்களைச்
சாய்க்கத்தடைகள் உலகிலில்லை!!
#உண்மை அன்பு மலர்ந்துவிட்டால்
உடைப்பதென்ன சுலபமா??
உயிர்கள்இங்கு இணைந்துவிட்டால்
உளிகள் கூட உறவுதான்!!
#வேசமில்லாப் பாசத்துக்கு
மோசமென்றும் கிடையாதே!!
மோட்சம் பூமியில் உள்ளதெனும்
சூட்சுமம் அறிவோர் மெய்க்காதலரே!!!
*****
”கடவுள் பேதம் எமக்கில்லை; எங்கும் குடியிருப்போம்! சாதி பேதமும் எமக்கில்லை; எவரையும் காதலிப்போம்!” என்று பேதமற்ற உயர்ந்த வாழ்வின் மாட்சியைப் பேசும் உன்னதப் புறாக்களைக் காட்சிப்படுத்தியுள்ளார் திரு. செண்பக ஜெகதீசன்.
தெரிந்திடுவீர் எம் காதல்…
கடவுள்களில் பேதமில்லை எங்கும் இருப்போம்
கோபுரத்தில் வாழுகிறோம் குடும்பத் தோடே,
அடுத்துள்ள தேவாலயம் மசூதியும் வீடே
அங்கிருந்தே இரைதேடிச் செல்வோம் காடே,
இடையில்வரும் காதலிலே இணைந்தே செல்வோம்
இடைஞ்சலாக எவருமெங்கள் இனத்தில் இல்லை,
நடைமுறையில் மனிதர்போல் நாங்க ளில்லை
நாட்டுப்புறா எம்காதல் தெரியும் தானே…!
*****
”ஆண் பெண் புறாக்கள் ஒன்றிணைந்து காதலர் தினம் கொண்டாடுகின்றனவோ?” என்று வேடிக்கையாய் வினவும் கவிஞர் திரு. பழ. செல்வமாணிக்கம், ”பணம் பார்த்து வருவதன்று காதல்! நல்ல குணம் பார்த்து வருவதே உண்மைக்காதல்! உயிரைத் தருவதன்று காதல்! உயிராய் வாழ்வதே காதல்” என்று காதலின் மகத்துவத்தைச் சகத்துக்கு உணர்த்துகின்றார்.
உண்மைக் காதல்
நெருங்கி நிற்கும் இரண்டு வண்ணப் புறாக்கள்!
காதல் வானில் சிறகடித்துப் பறக்கும்!
அருமைப் புறாக்கள்!
ஆண் புறாவின் அருகில் மயங்கி நிற்கும்!
பெண் புறா!
இந்த பெண் புறாவின் இணையென்ற மகிழ்வில்
ஆண் புறா!
காதலர் தினத்தை கொண்டாடுகின்றனவோ!
இந்தப் புறாக்கள்!
இல்லை! இல்லை!
உண்மை காதலருக்கு ஒவ்வொரு நாளும் காதலர் தினம் தானே!
அழகைப் பார்த்து வருவது மனிதக் காதல்!
மனதைப் பார்த்து வருவது உண்மைக் காதல்!
வசதியைப் பார்த்து வருவது மனிதக் காதல்!
குணத்தைப் பார்த்து வருவது உண்மைக் காதல்!
அன்பின் வடிவம் காதல்!
புரிதலின் பொருளே காதல்!
தோழமை என்பது காதல்!
ஒற்றுமை என்பது காதல்!
விட்டுக் கொடுப்பது காதல்!
“நான் “ மறைவது காதல்!
“நாம்” என்று தெளிவது காதல்!
சுயநலம் மறப்பது காதல்!
உன் துயர், எனதென நினைப்பது காதல்!
யாசித்துப் பெறுவதா காதல்!
தானாய் மலர்வது காதல்!
மாலையால் இணைவதா காதல்!
மனதால் இணைவதே காதல்!
உயிரைத் தருவதா காதல்!
உயிராய் வாழ்வது காதல்!
*****
”உண்மைக் காதலுக்கோர் உதாரணமாய், பகுத்துண்ணும் தன்னலமற்ற குணத்துக்கோர் சான்றாய் வாழும் புறாக்களை மனிதன் பந்தயத்துக்குப் பயன்படுத்துகின்றான் நேயமின்றி. அந்தோ! மாந்தன் விளைவிக்கும் குந்தகமறியாது அந்தகனிடம் அகப்பட்டுக்கொள்கின்றதே அருமைப் புறா!” என்று வருந்துகின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.
மனிதனும் புறாவும்..!
மாடத்தில் மட்டுமே கூடுகட்டி வாழும்
……….மனிதனோடு பழகும் பண்பு கொண்டது..!
ஆடலுடன் பாடலும் செய்யும் அதையே
……….அதிசயித்து நமைப் பார்க்கத் தோன்றும்.!
கூடயிருக்கும் குஞ்சுப் புறாவுக்குத் தன்
……….குரல்வளைச் சேர்த்த உணவு ஊட்டும்..!
ஊடல் கொள்ள இணையாய் ஒன்று
……….உரு வானால் வேறொன்றை நாடாது..!
துணையாய்த் தேடி வந்த சோடியுடன்
……….தன் தலைசாய்த்து வட்டமிட்டு ஆடும்..!
இணையிடும் முட்டையை தன்னல மின்றி
……….இரவுபகல் அடை காக்கும் குணமாம்..!
பிணைக் கைதி போலதனை அடைத்து
……….பின்னர்ச் சோடி பிரித்து பறக்கவிடுவார்.!
கிணற்றுத் தவளைபோல வாழு மதற்குக்
……….கிட்டுமா இனியும் சுதந்திர வாழ்க்கை..!
பந்தயத்தில் பறக்கவிட புறா வளர்ப்போர்
……….பாங்கா யதனைக் காப்பார் பணமாக்க..!
பந்தமென வரும்போது ஒன்றாகக் கூடியே
……….பாங்காகப் பிரித் துண்ணும் தானியத்தை.!
குந்தகமும் ஆபத்தும் நிறைந்த வாழ்வில்
……….குணமுள்ள பறவை யெனப் புகழுண்டு..!
அந்தகனை அடையாளம் காணத் தெரியா
……….அகப்பட்டுக் கொள்வ ததன் விதியோ..!
*****
மாமிசம் உண்டு வந்ததோ பெண்புறா என்று அதன்மீது காதல்கொண்ட ஆண்புறா அதனை ஐயுற்றுக் கடிந்துகொள்வதை அழகிய கவிதையாக்கியிருக்கின்றார் திரு. எஸ். கருணானந்தராஜா.
சேவல்-
என்னடி ஹப் அடிக்குது? எதைத் திண்டு தொலைச்சே
கீழ் மாடி மேசையிலே கெடக்குதே பழங்களெல்லாம்
கூடத்துக் கோணியெல்லாம் குவிஞ்சிருக்கே தானியங்க
அதையெடுத்துத் தின்னாம ஆட்டுக்கறி தின்னியா?
குவிச்சிருந்த விதவிதமாப் பழத்தையெல்லாம் விட்டுப்பிட்டு
கவுச்சியில ஆசப்பட்ட போக்கத்த புழுப் பொறுக்கி
அடச்சே! உன்னால பெரிய பேஜாராப் போச்சு
இந்த நாத்தத்தோட எப்படியுன்னை
நான் பக்கத்தில வச்சுக்கிறது.
ஓடு போ சீக்கிரம் சொண்டைக் கழுவிட்டு வா!
பேடு-
எதுக்காம்?
சேவல்-
ஏன் உனக்குத் தெரியாதா
புதுசாக் கேக்கிறியே! அதுக்குத்தான்.
பழம் மணக்கும் சொண்டோட
பக்கத்த வந்து நில்லு.
இழவுக் கவுச்சி மணம் எனக்குச் சகிக்காது
ஓடு போய் வாய ஒடனே கழுவிட்டுவா
ஒட்டி உரசிக்கலாம் உயிரைக் கலந்துக்கலாம்.
*****
புறவின் சிறப்புக்களைப் படிப்போர் இரசிக்கும்வண்ணம் துடிப்போடு கவி வடித்துத் தந்திருக்கும் கவிஞர்கள் அனைவருக்கும் என் பாராட்டும் நன்றியும்!
இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தெரிவு பெற்றிருக்கும் கவிதை அடுத்து..
புறாக்கள் சொல்லும் பாடம்
பிறன்மனை நோக்காமை பேராண்மை!
பகன்றது வள்ளுவன் சொல்லாண்மை!
தன்னிணை மண்ணில் வாழும்வரை
தரங்கெட் டடுத்ததை நாடாமல்
உயரிய வாழ்க்கை வாழ்ந்திடுதே
உலகில் உள்ள புறாக்கூட்டம்!
மனிதா உனக்கு உரைக்கிறதா?
மனதில் ஏதேனும் பதிகிறதா?
கூட்டங்கூட்டமாய் வாழ்ந்திடுமே! புறாக்கள்…
கூடி உண்டு களித்திடுமே!
காக்கை குருவி எங்கள் சாதி!
கவி பாடினான் பாரதி!
மனிதா… மனிதா… நீ…
சகமனிதனுடன் மோதி…
சுடுகாட்டிலும் சாதி!
சுட்டிக்காட்டுவதென்ன நீதி???
கீழ்மேல் என்றெல்லாம் பாராது
காழ்ப்புணர்ச்சி தம்முள் இருக்காது
சமாதானத் தூதுவன் நம்
சமுதாயத்திற்குச் சொல்லிடும் பாடமிது!
தன்னலம் கொண்ட மனிதரெல்லாம்…
தரணியில் படைத்த சாதிமதங்கள்…
கூட்ட உணர்வைக் கொண்டுளது!
கூட்டு உணர்வைக் கொண்டுளதா???
கூட்டங்கூட்டமாய் ஒற்றுமைபேணி வாழ்கின்றன புறாக்கள். மனிதனோ ஒற்றுமையில் நாட்டமின்றிச் சக மனிதனோடு எப்போதும் மோதி, சுடுகாட்டிலும் பார்க்கின்றான் சாதி! இஃதென்ன நீதி?
வள்ளுவன் மாந்தருக்குரைத்த ஒழுக்கத்தையும், பிறன்மனை நோக்காப் பேராண்மையையும் பின்பற்றி நடப்பதென்னவோ பறவையினத்தைச் சேர்ந்த புறாக்களே! என்று புறவினத்தின் பெருமையினைப் பரக்கப்பேசும் – உரக்கப்பேசும் இக்கவிதையினை யாத்த திரு. ஆ. செந்தில்குமார் இவ்வாரத்தின் சிறந்த கவிஞராகத் தேர்வுசெய்யப்படுகின்றார். அவருக்கு என் பாராட்டு!
எம். ஜெயராமசர்மா … மெல்பேண் .. அவுஸ்திரேலியா
விண்ணுக்கும் காதல் மண்ணுக்கும் காதல்
மண்ணிலுள்ள மனிதருக்கு மனமெல்லாம் காதல்
ஆண்டவனின் அருங்கொடையாய் அமைந்திருக்கும் காதல்தனை
அனைவருமே வாழ்த்திநின்று ஆனந்தம் அடைந்திடுவோம் !
மானிட இனத்துக்கு மருந்தாக இருப்பதுதான்
வரமாக வந்திருக்கும் காதலெனும் உணர்வாகும்
காதலுடன் வாழுகின்றார் காலமெலாம் வாழுகின்றார்
காதலினை போற்றிநின்று களிப்புற்று நின்றிடுவோம் !
காதலிலே பலவகைகள் காணுகிறோம் வாழ்க்கையிலே
காதலிலே மோதல்வரும் களிப்புமங்கே சேர்ந்துவரும்
மோதலுடன் காதல்வந்தால் முடிவல்ல எனநினைப்பீர்
காதலது தளைப்பதற்கு கால்கோளே அதுவன்றோ !
காதலில்லா வாழ்வினைநாம் கசப்பென்றே எடுக்கவேண்டும்
காதலென்னும் பயிர்வளர்ந்தால் கனிவுமங்கே துளிர்த்துவிடும்
காதலித்துப் பாருங்கள் கண்டிடுவீர் பேரின்பம்
ஆதலினால் காதல்தனை அனைவருமே வாழ்த்திடுவோம் !
காதல்பற்றிக் காவியங்கள் கருத்துடனே வந்திருக்கு
காதலிக்கும் காதலர்கள் காதலுடன் வலம்வருவார்
காதலுடன் நாம்படித்தால் காதலுடன் வாழ்ந்திடலாம்
காதலுடன் யாவரையும் கைகுலுக்கி நின்றிடுவோம் !
மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
+++++++++++
அந்த வார்த்தை உச்சரி!
கண்ணே!
அந்த வார்த்தை உச்சரி!
வந்திடும் உனக்கு விடுதலை!
அந்த வார்த்தை சொல்லிச் சொல்லி
என்னைப் போல இருந்திடு !
சிந்திக்கும் எனது வார்த்தையை
முந்தி நீயும் சொல்லிடு!
காதலென்று
அந்த வார்த்தை உன்
காதில் பட்ட துண்மையா?
வார்த்தை கேட்டுத் தினம்
துள்ளு தென்மனம்
அள்ளும் அந்திப் பொழுதிலே.
காதலெனும் அந்த வார்த்தை
எனக்கு
ஆதியிலே புரிய வில்லை !
புரிந்த தின்று
அந்த இனிய வார்த்தையே !
சென்று போன இட மெல்லாம்
செவியில் பட்டது
அந்த இனிய வார்த்தையே !
நல்ல நூலில் இருந்தது !
தொல்லை நூலில் இருந்தது !
அந்த வார்த்தை
காதலென்று
எந்த நேரம் சொல்லிடு !
உள்ளும் உணர்ச்சி உண்மை யென்று
துள்ளும் எந்தன் நெஞ்சமே!
ஒவ்வொரு மனிதனுக்கும்
ஒளிகாட்டச்
செல்வ தென்பணி யப்பா!
எடுத்துச் சொல்
அந்த வார்த்தை,
வழிகாட்டும் உனக்கும் எனக்கும்
அந்த வார்த்தை!
எப்போதும்
எந்தன் நினைவில் இருக்குமே!
அந்த வார்த்தை
காதல் ! காதல் !! காதலே !!!
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

சாய் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனைக் கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (24.02.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்
நிர்மலா ராகவன்
நல்லதொரு தாம்பத்தியம் என்றால், இரு சாராரும் பிணைப்பால் நன்மை பெறுவதாக இருக்கவேண்டும்.
நமக்கு நெருங்கியவர்கள் மகிழ்ச்சியையும், அமைதியையும் அளிப்பவர்களாக இருக்க வேண்டுவது அவசியம். மாறாக, `இப்படிச் செய்தால் அவர் என்ன சொல்வாரோ?’ என்ற பயமெழ, எந்த காரியம் செய்யுமுன்னரும் தயக்கம் ஏற்பட்டால், மன இறுக்கத்தைத் தவிர்க்க முடியாது.
கதை
முனைவர் பட்டம் வாங்கிய ஸாரா ஒரு மலாய் பெண். அவள் இருமுறை பத்திரிகையில் எழுதியவற்றிற்குப் நல்ல வரவேற்பு இருந்தது.
“ஏன் அதற்குப்பின் நீங்கள் எழுதவேயில்லை?” என்று கேட்டேன்.
“அவை வெளிவந்தபோது, பல தினங்கள் என் கணவர் என்னுடன் பேசவேயில்லை,” என்று பதிலளித்தாள். குரலில் வருத்தமில்லை. லேசான சிரிப்புடன், “ஆண்கள் அப்படித்தான்!” என்றாள்.
ஸாராவைப் பொறுத்தவரை, குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டுமானால் கணவர் ஆத்திரப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
அவர் அவளைக் கட்டுப்படுத்தக் கையாண்ட வழி அவளை அலட்சியப்படுத்துவது.
`உங்களுக்குப் பிடிக்கிறதோ, இல்லையோ, நான் எழுதிக்கொண்டுதான் இருப்பேன்!’ என்று ஆரம்பத்திலேயே ஸாரா திட்டவட்டமாகக் கூறியிருந்தால், கணவர் தொடர்ந்து எதிர்த்திருக்கமாட்டார்.
மனைவி தன்னைவிட அதிக வளர்ச்சியடைந்தால் தன்னை மதிக்க மாட்டாளோ என்ற பொறாமை கலந்த பயத்துடன், நண்பர்கள் கேலி செய்வார்களே என்பதும் சேர்ந்து ஒரு சில ஆண்களை இப்படி ஆட்டுவிக்கிறது.
அலட்சியம் காட்டுவது, ஆத்திரப்படுவது, மட்டம் தட்டுவது — இதெல்லாம் ஒருவரைக் கட்டுப்படுத்தும் ஆயுதங்கள். உடல் வதையைவிட உணர்ச்சிபூர்வமான வதையால்தான் பாதிப்பு அதிகம்.
முதலில் அடங்கிப்போனால், `என்னை எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம். உங்களுக்கு அந்த உரிமை இருக்கிறது!’ என்று அனுமதி கொடுத்தாற்போல் ஆகிவிடும் அபாயமுண்டு.
கதை
தன்னைவிட மனைவி பெரிய பதவியில் இருந்ததை ஆரம்பத்தில் பெருமையாக நினைத்த சந்திரன் தன் தொழிலில் தோல்வியுற்றதும் மாறிப்போனார். மனைவி தன்னைக் குறைத்து மதிப்பிட்டுவிடப்போகிறாளே என்றஞ்சி, தன் அதிகாரத்தை நிலைநாட்டிக்கொள்ள முயன்றார். வார்த்தைக்கு வார்த்தை, `முட்டாள்’ என்று அவளைப் பழித்தார் — பலர் முன்னிலையில்.
தனிமையில், பேச்சாலோ, அழுகையாலோ எதிர்த்தால், “உனக்கு எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளத் தெரியாது. சும்மா ஜோக்தானே!” என்றுவிடுவார், அலட்சியமாக. அவரைப் பொறுத்தவரை, அவருக்கு மட்டும்தான் உணர்ச்சிகள் உண்டு.
அவள் அவரது வார்த்தைகள் தன் காதில் விழாததுபோல் இருக்கத் தலைப்பட்டாள். முகத்தில் எந்தவித உணர்ச்சியும் காட்ட மாட்டாள். தான் கோபித்துக் கத்தினாலோ, எதிர்த்துப் பேசினாலோ நிலவரம் இன்னும் மோசமாகிவிடும் என்று புரிந்து, அடங்கிப்போனாள். அதனால் பல வகையான உடல் உபாதைகள் ஏற்பட்டதைத் தவிர்க்க முடியவில்லை.
கணவர் எப்போதாவது அவளைப் புகழ்வார். பரிசுப்பொருட்கள் வாங்கியளிப்பார். இதனால் அவருக்கு அவளைக் கட்டுப்படுத்தும் நோக்கம் கிடையாது என்பதில்லை. தனக்குக் குற்ற உணர்ச்சி ஏற்படாது பார்த்துக்கொள்கிறார். அவ்வளவுதான். பிறருக்கும் உணர்ச்சிகள் இருக்கலாம் என்பது இவரைப் போன்றவர்களுக்குப் புரிவதில்லை.
தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொள்ளத் தெரியாது, பிறரைக் கட்டுப்படுத்த நினைப்பவர் வீரரல்ல. இவர் பயந்தவர். ஒருக்கால் இவர் தவறு செய்தாலும், செய்யவே இல்லை என்று முதலில் சாதித்துவிட்டு, பிறகு பழியை வேறு ஒருவர்மேல் சுமத்துவார்.
ஆணோ, பெண்ணோ, தம்பதியரில் ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்துதலில் வித்தியாசம் கிடையாது. யார் கை ஓங்கி இருக்கிறது, யார் அதிகமாக விட்டுக்கொடுத்துப்போவார் என்பதில்தான் சூட்சுமம் அடங்கியிருக்கிறது.
கதை
பத்து வயதுக்குமேல் வித்தியாசமாக இருந்த தம்பதிகளில் இளையவளான அருணா ஓயாமல் கணவரைப் பழிப்பாள். அவர் தனக்கு நிகரில்லை, வழுக்கை வேறு என்று ஏதேதோ குறைகள் அவளுக்கு.
தன்மேல்தான் குறை என்று மனைவிக்கு விட்டுக்கொடுத்தே பழகியவருக்கு இறுதியில் பொறுக்கவே முடியாது போய்விட, உணவு உட்கொள்ளவே மறுத்தார் — மரணம்தான் தனக்கு விடுதலை அளிக்கவல்லது என்று முடிவு செய்தவர்போல.
எல்லா ஆண்களும் இப்படி இருப்பதில்லை. பலர், `அவள் அப்படித்தான்! எல்லாவற்றிற்கும் கத்துவாள்,’ என்று அலட்சியப்படுத்திவிட்டு வெளியே போய்விடுவார்கள். நண்பர்களுடனாவது உல்லாசமாக இருக்கலாமே! இதனால் இவர்களுடைய சுதந்திரம் குறைந்து போவதில்லை.
இவனா தலைவன்?!
குடும்பத்தில் மட்டுமின்றி, பொது அமைப்புகளில் இருப்பவர்களும் தம்மைத்தாமே தலைவன் என்று நினைத்துக்கொள்வது வழக்கம்.
`நான் சொல்வதுதான் சரி. ஏனெனில் நான் தலைவன்!’
தலைவன் என்ற ஆணவம் இருப்பதால் பிறர் என்ன செய்யவேண்டும் என்பதையும் தானே நிர்ணயிக்கும் உரிமையை எடுத்துக்கொள்வார். தன் கீழ் இருக்கும் அனைவரும் தன் விருப்பப்படிதான் நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார். யாராவது மறுத்தால், `தலைவரது’ கோபத்துக்கு ஆளாகத் தயாராக இருக்கவேண்டும்.
எப்படிக் கண்டுபிடிப்பது?
கட்டுப்படுத்துபவர்களுக்குச் சில பொதுவான குணங்கள் உண்டு.
பிறர் பேசுவதைக் கேட்பதைவிடத் தாமே பேசுவது அதிகம். (ஆசிரியர்கள் விதிவிலக்கு!)
கோபம், எதிலும் எதிர்மறையான அணுகுமுறை, கூசாமல் பொய்யுரைப்பது இதெல்லாம் இவர்களுக்குக் கைவந்த கலை.
பிறரிடம் ஓயாது தப்பு கண்டுபிடிப்பார். ஆனால், அவர் செய்த தவற்றை யாரேனும் சுட்டிக் காட்டினால், அவர் தன்னை மோசமாக நடத்துவதுபோல் பாவனை செய்வார்.
தனக்குப் பயந்து நடக்காதவர்களை, அடிமையாக இருக்க விரும்பாதவர்களை இகழ்வார். (`அவங்க ஒருமாதிரி! ராங்கி பிடிச்சவங்க!’)
பிறருக்குத் தன்மேல் பரிதாபம் உண்டாக்க முயற்சி செய்வார். (`நான் உங்களுக்காக எவ்வளவு செய்யறேன்!’)
இந்தத் தலைவரைச் சார்ந்திருந்தால் நமக்குத்தான் நன்மை என்று பிறரும் அவருக்குப் பிடிக்காதவர்களிடமிருந்து ஒதுங்கிவிடுவர். தனிமைப்படுத்தப்பட்டவர் பொறுக்க முடியாது, தாழ்ந்துபோவதும் உண்டு.
தப்பிக்க வழி உண்டா?
நம்மைப் பலகீனமாக ஆக்க பெருமுயற்சி எடுப்பவர்களுடன் மோதுவதோ, மாற்றுவதோ இயலாத காரியம். ஆனால், நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ள முடியும். நம்மை அடிமைப்படுத்த நினைக்கும் இம்மாதிரியான `விஷ ஜந்து’க்களிடமிருந்து ஒதுங்கிவிட வேண்டும். பிடிக்காததை ஏற்பானேன்!
மகிழ்ச்சியாக இருக்கத் தெரியாதவர்கள்தாம் பிறர் மகிழ்ச்சியைப் பறிக்க நினைக்கிறார்கள். இது புரிந்தால், நாம் கோபப்பட்டு, நம்மையே வருத்திக்கொள்ளத் தேவையில்லை. அவர்கள்மேல் பரிதாபம்கூட கொள்ள முடியும். பாவம், உடல் வளர்ந்தும், சிறுபிள்ளைத்தனம் மாறாது, வளர்ச்சி குன்றிப்போய் இருக்கிறவர்கள்!
தானும் வாழ்ந்து, பிறரையும் வாழவைத்தால் மகிழ்ச்சி இரட்டிப்பாக ஆகும் என்பது புரியாதவர்கள்!
தொடருவோம்
-முனைவா்.பா.பொன்னி
இலக்கியம் காலத்திற்கு ஏற்ற வடிவத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. காலத்திற்கு ஏற்ற வடிவத்தில் தன்னை வெளிப்படுத்தும்போது அது தன் காலத்தையும் பதிவு செய்யத் தவறுவதில்லை. மனிதா்கள் வெவ்வேறு காலங்களில் வாழ்ந்தாலும் அவா்களின் குறிப்பிட்ட சில பண்புகளும், நம்பிக்கைகளும், சடங்குகளும் மாறாதிருப்பது கண்கூடு. பெரியாழ்வார் பாசுரங்களில் சுட்டப்படும் சிலசடங்கு முறைகள் சங்க காலம் தொட்டு இன்று வரையும் நடைமுறையில் இருப்பதனைக் காணமுடிகிறது. பண்பாட்டு மானுடவியல் அடிப்படையில் இச்சடங்குகளை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
மானுடவியல்
மனித இனத்தைப் பற்றி ஆராயும் துறை மானிடவியல் ஆகும். Anthropology என்ற சொல்லுக்கு the study of the man என்பது பொருள். மனிதனைப் பற்றி ஆராயும் அறிவுத்துறை மானிடவியல் எனப்படுகிறது. மேலும் “மானிடவியல் என்பது மானிடத் தோற்றம், உடலியல் தோற்றம், பண்பாட்டு வளர்ச்சி, இனவகைப்பாடு, சமுதாய முறைமைகள், மனித நம்பிக்கைகள் எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒரு மரபு சார்ந்த வெளிப்பாடு என்று சொல்லலாம்” ( கழகத்தமிழ் அகராதி கழகவெளியீடு ப.108 ) என்று அகராதி விளக்கம் அளிக்கிறது.
மேலும் “மானிடவியல் என்னும் அறிவியல் துறை, மனித இனம் அதன் பண்பாடு, சமூகங்களின் அமைப்புகள், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், உறவுமுறைகள், மொழிகூறுபாடுகள் ஆகியவற்றை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு முழுமனிதனை அடையாளம் காணமுயலுகின்றது” (ப.மருதநாயகம் தமிழா் மானுடவியல் ப.93 ) என்று குறிப்பிடுவா்.
மானுடவியலின் வகைகள்
மானுடவியலின் எல்லை பரந்து விரிந்தது. ஆகவே ஆய்வாளா்கள் ஒரு குறிப்பிட்ட பரப்பினை மட்டுமே தோ்ந்தெடுத்து ஆய்வினை மேற்கொள்கின்றனா்.இதன் அடிப்படையில் மானுடவியலை நான்கு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கின்றனா்.அவை
எனும் நான்கு வகையாகும். இவற்றுள் பண்பாட்டு மானிடவியல் அடிப்படையில் பெரியாழ்வார் பாசுரங்களில் இடம் பெறும் சடங்குகளை ஆராய இயலுகின்றது.
பண்பாட்டு மானிடவியல்
உலகம் முழுவதிலும் எண்ணிலடங்கா வகைகளில் பரவி வாழும் சமுதாயங்களின் பண்பாட்டை காலப் பரிமாணங்களுடன் ஆராயும் மானிடவியல் பிரிவே பண்பாட்டு மானிடவியலாகும்.
“பண்பாட்டு மானிடவியல் என்பது பின்பற்றப்பட்ட அல்லது வளா்க்கப்பட்ட அல்லது ஏற்றுக் கொள்ளப்பட்ட சமூக ஒழுகலாறுகளை விவரிப்பதாகும்” ( இரா.முருகன் சங்கப்பாடல்களில் தொல்குடிக்கூறுகள் ப.6 ) என்பா்.
பண்பாடு
பண்பாடு என்பது மக்களால் மரபுவழியாகப் பின்பற்றப்பட்டு வருவது. தலைமுறை தலைமுறைகளாக மனிதா்களின் நடத்தை முறைகளைப் பற்றிக் குறிப்பிடுவது. “ பண்பாடு என்பது கற்றுக் கொள்வதற்கான ஆற்றலும் தான் கற்றதை அடுத்த சந்ததியினருக்கு எடுத்துச் செல்லம் ஆற்றலும் மனிதருக்கு இயல்பாகக் கைவரப் பெற்றவை. இந்த ஆற்றல்களின் விளைவாக அவனுக்கு ஏற்படக் கூடிய அறிவு நம்பிக்கை அவனுடைய நடவடிக்கை ஆகியவற்றின் கலவையே பண்பாடு ( அல்லது கலாச்சாரம் ) எனப்படுகிறது ” ( பிரிட்டானியா தகவல் களஞ்சியம் ப.161 ) என்று பிரிட்டானியா தகவல் களஞ்சியம் விளக்கம் தருகிறது.
முந்தைய தலைமுறையில் பின்பற்றப்பட்ட பழக்கவழக்கம், சடங்குகள் ,நம்பிக்கைகள் போன்றவை மரபு வழியாகப் பின்பற்றப் பட்டு வருவதனைப் பண்பாடு எனலாம்.
சடங்குகள்
மனிதனின் வாழ்வோடு பல சடங்குகள் உள்ளன. பிறப்பு, பெயா் சூட்டுதல், காதுகுத்துதல், பூப்படைதல், திருமணம், வளைகாப்பு, இறப்பு ஆகியவற்றோடு தொடா்புடைய சடங்குகள் மக்கள் வாழ்வில் பின்னிப் பிணைந்து காணப்படுகின்றன.
சடங்கு என்பது சாஸ்திர விதி பற்றியும் வழக்கம் பற்றியும் அனுஷ்டிக்கும் கிரியை ” ( தமிழ் பேரகராதி ப.24 ) என்பா். பொதுவாக சடங்குகள் என்பன மனிதனோடும் இனக்குழுவோடும் தொடர்புடையனவாக அமைவன. இதனையே “குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் தொடா்ந்து மக்களால் கைக்கொள்ளப் படுமாயின் அவை சடங்குகள் எனப் பெயா்பெறுகின்றன ”( சு.சண்முக சுந்தரம் நாட்டுப்புற இயல் ஆய்வு ப. 123 ) என்பா். பெரும்பான்மையான சடங்குகள் அச்சத்தின் விளைவாகவே மேற்கொள்ளப்படுவதாக அமைகின்றன. பெரியாழ்வார் பாசுரங்களில் காப்பிடுதல், ஐம்படைத்தாலி அணிவித்தல், காதுகுத்துதல் போன்ற சடங்கு முறைகளைக் காணமுடிகிறது.
காப்பிடுதல்
யசோதனை பாவனை ஏற்றுப் பாடும் பெரியாழ்வார் யசோதையாகவே மாறி கண்ணனுக்குக் கண்ணேறு வராதபடிக் காப்பிட எண்ணுகிறார். நடைமுறை வாழ்விலும் குழந்தைகளுக்குக் கண்ணேறு கழிப்புச் செய்வதுண்டு. சில கண்களுக்குத் தீமை விளைவிக்கும் சக்தி உண்டு. எனவே அத்தகையோரது கண்பட்டால் குழந்தைக்கு நோய்நொடி வரும் என்று நம்புகின்றனா். எனவே தான் கல்லடி பட்டாலும் கண்ணடி படக் கூடாது என்பா்.( சு.சக்தி வேல் நாட்டுப்புற இயல் ஆய்வு ப 12 ) கண்ணனுக்குக் கண்ணேறு பாடாமல் இருப்பதற்காகவும் அந்திப்பொழுதில் தீய சக்திகள் அவனை நெருங்காமல் இருப்பதற்காகவும் யசோதை கண்ணனைக் காப்பிட்டுக் கொள்ள அழைப்பதாகப் பெரியாழ்வார் பாடியுள்ளார்.
”மன்றில்நில் லேலந்திப் போது மதில்திரு வெள்ளறை நி்ன்றாய்
நன்றுகண் டாயென்றன் சொல்லு நானுன்னைக் காப்பிட வாராய்” ( பெரியாழ்வார் திருமொழி 2 – 8 2 ) என்ற அடிகளில் அந்தி வேளையில் கெட்ட தேவதைகள் நாற்சந்தியில் நிற்கும் என்ற நம்பிக்கை வழிப்பட்ட சடங்கினை அறியமுடிகிறது.
இருக்கு வேதம் கூறிக்கொண்டு நல்ல நீரினை சங்கிலே கொண்டு வந்து பிராமணா்கள் இரட்சையிட வந்துள்ளார்கள். இரட்சையிட அந்தி விளக்கை ஏற்றுவேன் என்று யசோதை கூறுகிறாள்.
இருக்கொடு நீர்ச்சங்கிற் கொண்டிட்
டெழில்மறை யோர்வந்து நின்றார்
தருக்கேல்நம் பிசந்தி நின்று
தாள்சொல்லுக் கொள்ளாய் சிலநாள்
திருக்காப்பு நானுன்னைச் சாத்தத்
தேசுடை வெள்ளறை நின்றாய்
உருக்காட்டு மந்தி விளக்கின்
றொளிகொள்ள ஏற்றுகேன் வாராய் (பெரியாழ்வார் திருமொழி 2 – 8 9 )
என்ற பாசுரத்தால் அந்தணா்கள் அந்திப்பொழுதில் விளக்கேற்றி சங்கிலே நீர்கொண்டு மந்திரம் கூறிக்காப்பிடுவா் என்பதனை அறியலாகின்றது.குழந்தைகளுக்கு கண்ணேறு பட்டு விடக் கூடாது என்ற அச்சத்தின் விளைவாக காப்பிடப்படுவதனை இதன் வழி அறியலாகின்றது. இன்றும் கண்ணேறு படக் கூடாது என்பதற்காகக் கோவில்களில் கயறு வாங்கிக் கட்டும் பழக்கம் இருப்பதனைக் காணலாம்.
ஐம்படைத்தாலி அணிவித்தல்
குழந்தைகளுக்கு பயம் இல்லாமல் இருப்பதற்காகத் தாயத்து கட்டும் பழக்கம் இன்றும் மக்களிடையே நிலவுகின்றது. அரையிலோ கழுத்திலோ இதனைக் கட்டுகின்றனா். சங்க காலத்தில் சிறுவா்க்குப் புலிப்பல்லைக் கோர்த்து பொன்னால் ஆன தாலியை அணிவித்தமையை,
………………………….. பொன்னோடு
புலிப்பல் கோத்த புலம்பு மணித்தாலி ( அகம் 7 17 – 18 )
என்ற பாடலடிகளின் வழி அறியமுடிகிறது.“பழங்காலத்தில் புலிப்பல் தாலி அணிந்தமையே காலப்போக்கில் ஐம்படைத்தாலியாக மாற்றம் பெற்றதாக உறுதி செய்யலாம்.மேலும் இது சிறுவா்க்குரிய காப்பணியாகக் கருதப்பட்டதையே இலக்கியங்கள் சுட்டுகின்றன”( க.காந்தி தமிழா் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும் ப .12 ) என்பா். கண்ணன் கழுத்தில் ஆமைத்தாலி இருந்தமையை,
அக்கு வடமுடுத் தாமைத் தாலி பூண்ட அனந்த சயனன்
( பெரியாழ்வார் திருமொழி 1 – 8 2 ) என்பதாலும்,
தாலிக்கொ ழுந்தைத் தடங்கழுத் தில்பூண்டு ( பெரியாழ்வார் திருமொழி 2 – 6 1 )என்பதாலும்,
எழிலார் திருமார்வுக் கேற்கு மிவையென்று
அழகிய ஐம்படையும் ஆரமுங் கொண்டு
வழுவில் கொடையான் வயிச்சி ரவணன்
தொழுதுவ னாய் நின்றான் தாலேலோ ( பெரியாழ்வார் திருமொழி 1 – 4 5 )
என்பதாலும் அறியலாம். ஐம்படைத்தாலி என்பது காத்தற்கடவுளான திருமாலின் சங்கு, சக்கரம், கதை, வில், வாள் என்னும் ஆயுதங்கள் போலே பொன்னால் செய்யப்படுவது. திருமாலின் ஆயுதங்களையே காப்பாகக் குழந்தைக் கண்ணனுக்கு யசோதை அணிவிக்கிறாள்.கண்ணனின் மார்பில் ஐம்படைத்தாலி இருந்தமையை,
மங்கல வைம்படையும் தோன்வளை யும்குழையும்
( பெரியாழ்வார் திருமொழி 1 – 6 10 )
என்பதாலும் தெரியலாம். ஐம்படைத்தாலி அணிதல் என்னும் வழக்கம் சங்ககாலம் தொட்டு இன்று வரை நடைமுறையில் இருப்பதையும் அறியலாகின்றது.
காதுகுத்துதல்
ஆண்குழந்தையாக இருந்தாலும் பெண் குழந்தையாக இருந்தாலும் காதுகுத்தும் மரபு தமிழா்களிடையே தொன்றுதொட்டு நிலவி வருகிறது. “குழந்தைக்குச் சிறுகாயம் ஏற்படாவிட்டால் எமன் குழந்தையைத் தூக்கிச் சென்று விடுவான் என்ற நம்பிக்கையின் காரணமாகக் காதுகுத்தும் வழக்கம் தமிழகத்தில் தோன்றி இருக்க வேண்டும். காதுகுத்தும் வழக்கம் தமிழ்நாடு மட்டுமின்றி ஆசியா, எகிப்து போன்ற நாடுகளிலும் காணப்படுகின்றது. காதுகுத்தும்போது ஏதேனும் உலோகத்தையும் அணிவிப்பா். தீமை தரும் ஆவிகள் தலை, வாய், மூக்கு, காது ஆகிய உறுப்புகள் வழியாக எளிதில் புகுந்து விடும் என்ற நம்பிக்கையில் காதில் துளையிட்டுத் தீய ஆவிகளை விரட்டும் சக்தியாக ஏதேனும் ஓா் உலோகத்தை அணிவித்தால் காது வழியாகத் தீய ஆவி நுழைவதைத் தடுத்து விடலாம் என்ற நம்பிக்கையில் இப்பழக்கம் ஏற்பட்டு இருக்கலாம். காது குத்தும் சடங்கிற்கு இத்தகைய நம்பிக்கைகள் அடிப்படைக் காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.”( சு.சக்திவேல் நாட்டுப்புற இயல் ஆய்வு ப -.195 )
பெரியாழ்வார் பாசுரங்களிலும் பெரியாழ்வார் யசோதையாக மாறி கண்ணனைக் காதுகுத்த அழைக்கும் பாசுரங்களைக் காணமுடிகிறது.
போய்ப்பா டுடையநின் தந்தையும் தாழ்த்தான்
பொருதிறல் கஞ்சன் கடியன்
காப்பாரு மில்லை கடல்வண்ணா உன்னைத்
தனியேபோ யெங்கும் திரிதி
பேய்ப்பால் முலையுண்ட பித்தனே கேசவ
நம்பீஉன் னைக்காது குத்த
ஆய்ப்பாலா் பெண்டுக ளெல்லாரும் வந்தார்
அடைக்காய் திருத்திநான் வைத்தேன் ( பெரியாழ்வார் திருமொழி 2 – 3 1 )
என்ற பாசுரத்தில் பெரியாழ்வார் பேய் முதலான தீயசக்திகள் கண்ணனை நெருங்கக் கூடாது என்பதற்காகவும் தனியே விளையாடச் செல்வதால் ஏற்படும் கேடுகளில் இருந்து காப்பதற்காகவும் காதுகுத்த வேண்டியதன் முதன்மையை விளக்கிச் செல்கிறார்.காதுகுத்தும் போது வெற்றிலை, பாக்கு வைப்பதனையும் குறிப்பிடுகிறார்.
”தலைநிலாப் போதேஉன் காதைப் பெருக்காதே
விட்டிட்டேன் குற்றமே யன்றே” (பெரியாழ்வார் திருமொழி 2 – 3 7 )
என்ற பாசுர அடிகளில் குழந்தைகளுக்கு தலை நிற்பதன் முன்னமே காதுகுத்துவது வழக்கம் என்பதனை அறியலாகின்றது.
குழந்தைகளுக்கு தீய சக்திகளால் ஏற்படும் தீங்கினைத் தவிர்க்க மாலைவேளைகளில் வழிபாடு செய்வதும் கோவில்களில் சென்று காப்பு வாங்கிக் கட்டுவதும் இன்றும் நாம் நடைமுறை வாழ்வில் காணக் கூடிய ஒன்றாகும். கழுத்தில் தாயத்து அணிவிப்பது, காது குத்துவது ஆகியவை இன்றும் நம்மிடையே காணப்படுகின்றன.சங்க காலத்தில் காதுகுத்துவது பழக்கமாக இல்லாவிட்டாலும் அழகிற்காக சங்ககால மக்கள் மலா்களைக் காதில் அணிகலன் போல சூடியுள்ளனா். தற்காலத்தில் மருத்துவ பயன் கருதி காதுகுத்தும் வழக்கம் மேற்கொள்ளப்படுகின்றது. எவ்வாறாயினும் மனித மனங்களின் அடிப்படையில் ஏற்படக் கூடிய பயத்தின் விளைவாகவே சடங்கு முறைகள் வளா்ச்சி அடைகின்றன என்றால் அது மிகையாகாது. பெரியாழ்வார் பாசுரங்களிலும் அச்சத்தின் விளைவாக மேற்கொள்ளக் கூடிய சடங்குமுறைகளே குறிப்பிடப்பட்டிருப்பதனை இதன்வழி அறியலாகின்றது.
*****
துணைநூற்பட்டியல்
*****
கட்டுரையாளர்
உதவிப்பேராசிரியா் மற்றும் துறைத்தலைவர்
தி ஸ்டாண்டா்டு ஃபயா் ஒா்க்ஸ் இராசரத்தினம் மகளிர் கல்லூரி (தன்னாட்சி)
சிவகாசி.
க. பாலசுப்பிரமணியன்
வாழ்க்கைப் பயணமும் சவால்களும்
ஒரு முறை ஒரு இளைஞன் தன்னுடைய வாழக்கையில் ஏற்பட்ட பல சோதனைகளைக் கண்டு துயருற்று இறைவனிடம் சென்று முறையிடுகின்றான். “இறைவா.. ஏன் இந்த ஒர வஞ்சனை? எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு துயர் கொடுக்கின்றாய்? ஒரு நாள் கூட நான் மகிழ்ச்சியை அறிந்ததில்லையே? என்னுடை உறவினரைப் பார். அவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கின்றனர். என்னுடைய நண்பன் கூட எப்பொழுதும் சிரித்துக்கொண்டும் ஆடிக்கொண்டும் இருக்கின்றான். அவன் முகத்தில் துயரத்தின் நிழல் கூடத் தெரியவில்லையே . துயரத்தை மட்டும் சுமப்பதற்கு என்னைப் படைத்தாயா? இது நியாயமா? உனக்கு இது தகுமா? இது தான் உன்னுடைய நடுநிலைப்பாடா?”
இளைஞனின் துயரக்குரல் இறைவனையே சற்று அசைத்து விடுகின்றது. இறைவனும் இளைஞன் முன் தோன்றி :”மகனே. ஒரு வேலை செய். இன்று மாலை நான் இந்த ஊரில் இருக்கிற எல்லா இளைஞர்களையும் அவர்களுடைய துயரத்தை ஒரு மூட்டையில் கட்டி இந்தக் கோவில் மண்டபத்தில் வந்து வைத்துவிடச் சொல்கின்றேன். அதற்குப்பின் நீ வந்து உனக்கு எந்த மூட்டை வேண்டுமோ எதில் சுமை குறைவாக இருக்கின்றதோ அதை எடுத்துக்கொள்ளலாம்” எனக் கூறி மறைகின்றார்.
அந்த இளைஞனும் அன்று மாலை சொன்ன நேரத்தில் தன்னுடைய துயரச் சுமைமூட்டையைத் தூக்கிச் சென்று அந்தக் கோவில் வளாகத்தில் வைத்துவிடுகின்றான். அவனைப் போலவே மற்றவரும் அங்கே வந்து தங்கள் சுமைகளை இறக்கி வைக்கின்றனர். சிறிது நேரம் கழித்து, இறைவன் கூறிய நேரத்தில் அவன் அங்கே சென்று தனக்கு வேண்டிய மூட்டையைத் தேடுகின்றான். அவனுக்கு ஒரே ஆச்சரியமாக இருக்கின்றது. எல்லா மூட்டைகளையும் விட அவனது மூட்டைதான் மிகவும் சிறிதாகவும் எளிதில் தூக்கக்கூடியதாகவும் இருக்கின்றது.
வாழ்க்கையின் உண்மையே இதுதான். பல நேரங்களில் நாம் வாழ்க்கையில் நமக்குத்தான் அதிகப் பிரச்சனைகளும் அதிகத் துயரங்களும் வந்து சேருகின்றது என்று நினைக்கின்றோம். உண்மையில் அது நம் மனதிற்கு நாம் கொடுக்கும் ஒரு எண்ணமே. ஒரு உருவகமே. இந்த மாதிரியான நினைப்புக்கள், கருத்துக்கள் பல நேரங்களில் நம்மை வெற்றிப்பாதையிலிருந்து கீழே விழுவதற்கும் தன்னம்பிக்கையை இழந்துவிடுவதற்கும் துணை போகின்றன. வாழ்க்கையில் சவால்களைச் சந்திக்கும் பொழுதுதான் முன்னேற்றப்பாதையில் செல்ல தைரியமும் துணிச்சலும் கிடைக்கின்றது.
பல நாட்களுக்கு முன்னே படித்த ஒரு கதை நினைவுக்கு வருகின்றது. ஒரு தோட்டக்காரன் தன்னுடைய நிலத்திலே சில விதைகளைத் தூவிச் செல்லுகின்றான். இரண்டு விதைகள் அருகில் விழுகின்றன. இவற்றில் ஒன்று தன்னுடைய மேலுறையைக் கிழித்துக்கொண்டு எட்டிப் பார்க்கிறது.
உடனே பக்கத்திலிருந்த விதையோ “ஏய், என்ன முட்டாள்தனம் செய்கின்றாய். உள்ளேயே அடங்கிக் கிட. நீ வெளியே வந்தால் இந்த மண்ணோடு உறவாட வேண்டியிருக்கும். மேலும் வெய்யில், மழை காற்று போன்ற பல இடர்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். அமைதியாக இருக்கும் இடத்திலேயே இரு. சுகமாக இருக்கலாம்.”
ஆனால் இந்த விதையோ அதைக் காதில் வாங்கி கொள்ளாமல் இன்னும் கொஞ்சம் மேலே நோக்கியது. “அடேடே ! இதுதான் வெளிச்சமா?” விதைக்கு ஆச்சரியமாக இருந்தது. இன்னும் கொஞ்சம் தலையை வெளியே நீட்டியது.
“ஐயோ! உந்தன் முடிவை நீயே தேடிக்கொள்கின்றாய் நீ மேலே சென்றால் காற்றும் மழையும் உன்னைத் தாக்கும்”இந்த விதையோ கேட்கவில்லை. இன்னும் கொஞ்சம் மேலே — காற்று, மழை, வெய்யில் போன்ற பல இடர்களைத் தொடர்ந்து எதிர்கொண்டது. ஒரு நாள் அது ஒரு பெரிய மரமாகிக் காய்கனிகளுடன் நின்றது.
“நான் அப்பொழுதே சொன்னேன் கேட்டாயா? எத்தனை பாரத்தைச் சுமந்து கொண்டு நிற்கின்றாய்.” என்று அந்த விதை இதை ஏளனம் செய்தது.
அந்த நேரத்தில் பக்கத்தில் சென்ற பறவை ஒன்று கீழே இறங்கி உணவைத் தேடும் பொழுது இந்த விதையைப் பார்த்து ஒரே கணத்தில் அதை உண்டு ஜீரணித்தது.
வாழ்க்கையும் அது போலத்தான். உழைத்து ஓடாவதா அல்லது துருப்பிடித்துத் தேய்வதா? முடிவு நம் கைகளின் தான். போராட்டங்களுக்கும், சவால்களுக்கும் பயந்து நின்றால் வாழ்க்கையில் நம்மால் முன்னேற முடியாது. வெய்யிலில் காய்வதும், மழையில் நனைவதும், புயல் காற்றை எதிர்கொள்வதும் இயற்கை நமக்குக் கற்றுக் கொடுக்கும் பாடம். துணிவே துணை என்று முதல் படியில் இருப்பவர்களுக்கு மீதிப்படிகள் இசைந்து விடும்.
ஒரு தத்துவ மேதை கூறுகின்றார் “உன்னுள் இருக்கும் சக்தி உன்னைத் தாக்கும் சக்திகளை விட மிக வலிமையானது என்ற நம்பிக்கை உனக்கு இருக்க வேண்டும்.” ஒரு கப்பல் கடலில் செல்லும் பொழுது அடிக்கடி உயர்ந்து எழும் அலைகளையும் அசாதாரணமான வானிலையையும் சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால் நங்கூரம் போடப்பட்ட கப்பலுக்கோ கவலை இல்லை.
“துறைமுகத்தில் கப்பல்கள் பாதுக்காப்பாக இருக்கும். ஆனால் அவைகள் அதற்காகக் கட்டப்படுவதில்லை ” என்பது உண்மையான கருத்து. வாழ்க்கைக் கடலில் நமது வாழ்வு என்ற கப்பல் செல்லும் பொழுது எதிர்பாராத சவால்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால் பயணத்தைக் தொடங்கிவிட்டால் அது ஒரு இனிய பயணமாகத்தான் இருக்கும். ஒரு வினோதமான பயணமாகத்தான் இருக்கும். துணிந்து செல்பவனுக்கு வெற்றி முன்னாலேயே நிச்சயிக்கப்படுகின்றது. முயற்சி செய்யலாமே!
வாழ்ந்து பார்க்கலாமே !

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
http://video.pbs.org/video/
https://www.youtube.com/watch?
https://www.youtube.com/watch?
சூரிய குடும்ப ஈர்ப்புப் பிணைப்பில்
சுழல் கோள்கள்
சுற்றிடும் விந்தை யென்ன ?
ஒன்பது கோள்களில் பூமி மட்டும்
நீர்க் கோளான தென்ன ?
நீள் வட்ட வீதியில் அண்டங்கள்
மீள் சுற்றும் நியதி என்ன ?
பூமியில் மட்டும்
புல்லும், புழுவும், புறாவும், பசுவும்
ஆறறிவு மானிடமும்
பேரளவில் பெருகிய தென்ன ?
பூமியின் உட்கரு திரவமா ?
உலோகத் திரட்சியா ?
அணு உலை இயங்குவ தென்ன ?
யுரேனஸ் கோள் அச்சும்
சரிந்து போய்ச் சாய்ந்த தென்ன ?
பரிதி மண்டலத்தில்
வக்கிரமாய்ச் சுழன்று
சுக்கிரன் மட்டும்
திக்குமாறிப்
போன தென்ன ?
தன்னச்சில் சுழாமல் வெண்ணிலா
முன்னழகைக் காட்டிப்
பின்னழகை
மறைப்ப தென்ன ?
+++++++++++++++++
பூமியின் உட்கரு பற்றிப் புதியதோர் கோட்பாடு
4.2 பில்லியன் ஆண்டுகட்கு முன்பு விருத்தியான நமது பூமியின் உட்கரு இப்போது விஞ்ஞானிகள் நினைத்துள்ளது போல், பௌதிக விதிப்படி உலோகத் திடவ உட்கருவாய் [Solid Metallic Core] இருக்க வாய்ப்பில்லை என்று புதியதோர் கோட்பாடு “பூமி அண்டக் கோள் விஞ்ஞான வெளியீடில்” [Earth and Planetary Science Letters Journal] 2018 பிப்ரவரி 9 தேதி வெளிவந்துள்ளது. அதாவது ஒரு பில்லியன் ஆண்டுகட்கு முன்பு ஒருநாள் பூமியின் உட்கருவுக்கு திடீர் அதிர்ச்சி நேர்ந்தது. திரவ நிலையில் கோள வடிவில் இருந்த உலோக உட்கரு, உஷ்ணம் தணிர்ந்து, 760 மைல் [1220 கி.மீ] விட்ட உருண்டையாக, வெகு விரைவில் இப்போதுள்ளதுபோல் திரட்சிப் படிவமானது [Crystallized Rapidly]. இதுதான் இப்போது உலகக் குழு விஞ்ஞானிகளால் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ள கோட்பாடு.
ஆனால் இப்போது புதிய கோட்பாடில் அமெரிக்க விஞ்ஞானி ஜேம்ஸ் வான் ஓர்மன் [Case Western Reserve University, Cleveland, OHIO, USA] கூறுவது என்னவென்றால், பிறந்த பேபி பூமியின் உட்கரு முழுதும் தூய ஓரினத் திரவம் இருந்திருக்குமாயின், அது திடவ வடிவு உருண்டையில் திரட்சியாகக் குளிர்ந்து போக உஷ்ணத் தணிப்பாக்கம் புரிய ஒரு சாதனம் இல்லை. கடந்த நெடுங்கால மாய். பூமியின் உட்கரு உலோகம் முழுக்க முழுக்க திரவ நிலையில்தான் இருந்து வந்துள்ளது. சில பூதளவியல் வாதிகள் கூறுவதுபோல் உட்கரு உலோகத் திரட்சியைச் சுற்றிலும் , இரண்டு, மூன்று அடுக்கு இரும்பும், எளிய மூலகங்கள் [Iron & Lighter Elements] கொண்ட போர்வைகள் இருந்தன என்பதும் தவறே என்று சொல்கிறார் ஜேம்ஸ் ஓர்மன்.
பூமியின் உட்கரு திடீரெனக் குளிரத் துவங்கி , வெப்பசக்தி இழந்து, பூகாந்த தளம் மெலிந்தது. உட்கரு முற்றிலும் தணிந்து திடப்பொருளாய் ஆனதும், பூகாந்த சக்தி ஆற்றல் பெற்று, சூரியப் புயலிலிருந்தும், அகிலக் கதிர்களிலிருந்தும், பூகோளச் சூழ்வெளி பாதுகாக்கப் பட்டது. இந்த நிகழ்ச்சி பூமி தோன்றி ஆரம்ப காலத்தில் நேர்ந்திருக்க வேண்டும் என்று பெரும் பான்மையான விஞ்ஞானிகள் நம்பி இருக்க வேண்டும் என்று ஜேம்ஸ் ஓர்மன் கூறுகிறார். ஆனால் ஆராய்ச்சியாளர் அழுத்தமாய் அறிவிப்பது : ஆரம்பத்தில் கூறப்பட்ட பூமியின் நிலைப்பகத் தோற்ற மாடலில் [The Standard Model of Earth] உட்கரு உலோகம் எப்படித் திடீரெனக் குளிர்ந்து படிவமானது [Crystallized], உட்கருவின் பூத அழுத்தத்தில், பேரளவு பளுவுக்கு உஷ்ணத் தணிவு எதனால் உண்டாக்க முடியும் என்று கேள்வி எழுப்புகிறார். இந்த விளக்கம் இல்லாததால் இப்போது விஞ்ஞானம் சொல்வது, பூமியின் உட்கரு உலோக உருண்டை யாக இருக்க வாய்ப்பில்லை என்பதே.
இத்தகைய பூதக் குளிர்ச்சி [Super Cooling Event] பூமியின் உட்கரு அழுத்தத்தில் தூய நிலையில் 1000 டிகிரி கெல்வின் [726 டிகிரி C (1340 டிகிரி F] மேலாகக் கொண்ட மூலச்சாதன நுழைவு இல்லாமல் தானாக நிகழ முடியாது என்று ஜேம்ஸ் ஓர்மன் கூறுகிறார். அந்த சாதனம் சுமார் 12 மைல் [20 கி.மீ] விட்டமுடன் உள்ள துளியாக [Droplet to be released into the Core] இருக்கவேண்டும். இந்த புதிய கோட்பாட்டை மற்ற உலகக் குழு விஞ்ஞானிகள், தாங்களும் ஆராய்ந்து உடன்பாடு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார்.
பூமி உட்கருவின் ஆழம் : 5100 கி,மீ [
பூமி உட்கரு உஷ்ணம் : 5000 C
பூமி உட்கரு அழுத்தம் : 364 GPa

எறிகற்கள் [Meteors] தாக்கிக் கோள்கள் உருவாயின என்பது மெய்யான முத்திரை அறிவிப் பில்லை. அந்த சிறு துணுக்குகள் கோள்களின் வடிவ விளைவால் உண்டான உதிரியே தவிர, அவை கோள்களை உருவாக்கிய செங்கற்கள் [Building Blocks] அல்ல. தற்போதைய இப்புதிய கோட்பாடு சூரியக் கோள்கள் தோன்றியதாக முன்னர் கருதப் பட்ட கொள்கையைத் திருத்தி விடும். அதாவது பூர்வீக சூரிய தோற்ற ஏற்பாடு நாம் எதிர்பார்த்ததை விடப் பெரும் மோதல் கொந்தளிப்பில் உண்டானதாகத் தெரிய வருகிறது.
பிரான்டன் ஜான்சன் [Post doctorate, MIT Dept of Earth]
யுலிஸிஸ் சூரிய விண்ணுளவியின் கருவிகள் இன்னும் சீராகப் பணியாற்றிச் சூரியப் புயல், அகிலக் கதிர்கள், சக்தி வாய்ந்த துகள்கள், சூரிய காந்த அரங்கம் பற்றிய தகவலைத் தொடர்ந்து அனுப்பி வருகின்றன. . . . ஏவிய நாளிலிருந்து (அக்டோபர் 1990) எந்தக் கருவியும் இதுவரைப் பழுதாகவில்லை !
ரிச்சர்டு மார்ஸ்டன், யுலிஸிஸ் சூரிய விண்ணுளவித் திட்ட மேற்பார்வை விஞ்ஞானி (European Space Agency) [ஏப்ரல் 15, 2008]

பூர்வச் சூரியக் கோள்கள் தோற்றத்தின் மாறுபட்ட கோட்பாடு
பூர்வீகச் சூரியக் கோள்கள் தோன்றியதால் உண்டான எச்சத் துணுக்குகளே முரண் கோள்கள் [Asteroids] என்னும் கோட்பாடு இப்போது [2015 ஜனவரி 15] இயற்கை விஞ்ஞான நூல் வெளியீட்டின் அறிவிப்புப்படி உறுதியாகி வருகிறது. முரண் கோள்கள் சூரியக் கோள்களின் உருவாக்கத் தோற்றத்துக்கு மூலப் பொருட்கள் அல்ல. சூரியக் கோள்கள் தோன்றத் தேவை யான மூலச் செங்கற்கள் [Building Blocks] நாமறிந்த முரண் கோள்கள் அல்ல என்பதே புதிய முடிவு; அமெரிக்காவின் பர்டே [Purdue] பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர், பிரான்டன் ஜான்சன் கூறுவது, ” நான்கு பில்லியன் ஆண்டுக்கு முன்பே பூர்வச் சூரியக் கோள் பிறப்புக் கருவில் [Planetary Embryos] ஆரம்பத்திலே வித்துகள் இருந்தன,” என்று.
முரண் கோள் முறிவுகள் பூமியில் விழும்போது எறிகற்களாய்ச் [Meteorites] சிதறுகின்றன. கடந்த 100 ஆண்டுகளாய் உறைந்த திரவ உருண்டையான கோலிப் பாறைகள் [Beads like Chondrules] எறிகற்களில் காணப்பட்டன. அவை இருப்பதற்குக் காரணம் தெரியாமல் இதுவரை மர்மமாகவே இருந்தது. இப்போது விளைவுகளைத் தாக்கல் மாடலில் [Computer Impact Model] இட்டுப் பார்த்தால் செம்மையாகப் பொருந்துகின்றன.
முடிவுகள் இவைதான் :
1. முரண் கோள்கள் [Asteroids] பரிதிக் கோள்கள் உருவாக்கத்தில் விளந்த கிளைப் பொருட்கள். அவை கோள்கள் வடிக்கத் தேவையான மூலச் செங்கற்கள் அல்ல.
2. உண்டையான கோலிகள் [chondrules] மோதலில் தோன்றிய பளிங்குகளே. சூரியக் கோள் வடிவாக அவை தேவைப்படா. அவையும் கோள்கள் உருவாகத் தேவையான மூலச் செங்கற்கள் அல்ல.

நமது சூரிய மண்டலம் எப்போது தோன்றியது ?
வானியல் விஞ்ஞானிகளும், பூதளவாதிகளும் (Astronomers & Geologists) பூமியின் வயதைக் கணித்து அதிலிருந்து பரிதி மண்டலத்தின் தோற்ற வயதை அறியப் பல்வேறு முறைகளைக் கையாள்கிறார். நாமறிந்த பூமிப் பாறைகளின் கதிரியக்கத் தேய்வு வீதங்களைப் “பாறைக் கதிரளப்புக் காலக் கணிப்பு” மூலம் (Radiometric Dating of Rocks) கணக்கிட்டுச் சூரிய குடும்பம் சுமார் 4.6 பில்லியன் ஆண்டுக்கு முன்பு தோன்றியிருக்கலாம் என்று கருதுகிறார்கள். பூமியின் பூர்வீகப் பாறை வயது கதிரியக்கத் தேய்வு வீதக் கணிப்பில் 3.9 பில்லியன் ஆண்டுகள் என்பது தெரிய வருகிறது ! பூதளத் தட்டு நகர்ச்சிகள் (Plate Tectonics) தூண்டி பூமியில் எழும் பூகம்ப எரிமலை நிகழ்ச்சிகளால் பூர்வீகப் பாறைகள் நிலைமாறி அவற்றைக் காண முடியாமல் சிதைத்து விடுகின்றன !
பூமியின் பூர்வீகப் பாறைகளைத் தவிர விண்வெளிக் கற்கள், எரிகற்கள், நிலவிலிருந்து அல்லது செவ்வாய்க் கோளிலிருந்து வீழும் விண்கற்கள் மிகத் துல்லியமாகப் பரிதி மண்டல வயதுக் காலத்தை நிர்ணயம் செய்ய உதவுகின்றன. அந்த மாதிரிகளின் கதிரியக்கத் தேய்வு வீதத்தைக் கணித்ததில் அவை 4.6 பில்லியன் ஆண்டு வயதைக் கொண்டவை என்று அறியப்பட்டு, பரிதி மண்டலம் அந்த வயதை ஒட்டி உண்டாகி இருக்க வேண்டும் என்று யூகிக்கப்படுகிறது.

நமது சூரிய மண்டலம் எப்படி உண்டானது ?
விஞ்ஞான வரலாற்றில் எத்தனையோ கருத்துக்கள் மாறிப் போனாலும், பரிதி மண்டலம் எப்படி உண்டானது என்னும் கருத்து கடந்த 250 ஆண்டு காலமாக மாறவில்லை. 1755 ஆம் ஆண்டில் ஜெர்மன் வேதாந்தி இம்மானுவெல் கென்ட் (Immanuel Kant) (1724-1804) முதன்முதலில் தனது நிபுளா கோட்பாடைக் (Nebular Hypothesis) கூறினார்: அதன்படி பேரளவு வாயு முகில் கொண்ட ஆதிச்சூரிய நிபுளா, பரிதி மண்டலத்தின் சூரியனாகவும், மற்ற அண்டக் கோள்களாகவும் உண்டாக மூலாதாரப் பொருளானது ! 1796 இல் பிரெஞ்ச வானியல் நிபுணர் பியர் சைமன் லாப்பிலாஸ் (Pierre Simon Laplace) (1749-1827) அதே மாதிரிக் கோட்பாடை எடுத்துக் கூறினார். ஆனால் ஆழ்ந்த விண்வெளியை நோக்கி அவரால் அதற்குச் சான்றுகளை எடுத்துக் காட்ட முடியவில்லை !

இம்மானுவெல் கென்ட் விளக்கிய நிபுளா கோட்பாடில் இருப்பது இதுதான் : பேரளவுக் கொள்ளளவு வாயு நிறையும் தூசி துணுக்குகளும் திணிவு ஈர்ப்பு (Mass Gravity) விசையால் சேர்ந்து சுற்ற ஆரம்பித்தன. திணிவு நிறை பெருகப் பெருக ஈர்ப்பு சக்தி மிகையாகி வாயுத் திணிவை இறுக்கிச் சுருக்கி (Gravitational Contraction) வாயுக் கோள்களாகவும், திடக்கோள்களாகவும் உருவாயின.
இப்போது வானியல் விஞ்ஞானிகள் அவற்றை விபரமாகச் சொல்ல முடிகிறது. அதாவது முதலில் சூரிய மண்டலத்தின் வாயு முகில் மூலக்கூறு (Molecular Gas Cloud) முறிந்த போது அதன் விரிவு 100 AU (Astronomical Unit) [1 AU = Average distance between Sun & Earth (93 மில்லியன் மைல் /150 மில்லியன் கி.மீ.)] ஆகவும், திணிவு நிறை பரிதியைப் போல் 2 அல்லது 3 மடங்கு இருந்ததாகவும் யூகிக்கிறார்கள். அத்தகைய வாயு முகில் ஈர்ப்பு முறிவைத் (Cloud’s Gravitational Collapse) தூண்டி விட்டிருப்பது அருகில் இருந்த சூப்பர்நோவாவின் (Supernova) மின்னல் வெடிப்பில் நேர்ந்த அழுத்த அலையாக இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. வாயு முகில் குவிந்து விழுந்த பிறகு பலமுறைகளில் திணிவு சேர்ப்பு விரைவானது. முகில் திணிவின் உஷ்ணம் அதிகரித்து அது சுழலத் தொடங்கியது. வாயுப் பிண்டம் தங்கி அது வட்டத் தட்டு வடிவாக மட்டமானது. மிகையான ஈர்ப்பு சேமிப்புச் சக்தி (Gravitational Potential Energy) வெப்பமாக மாறி வாயு முகில் அடர்த்தி (Density) அதிகமானது. அதுவே கோள்களின் உட்கரு உலோகமாகப் பின்னால் திரட்சி யானது.

பரிதியின் அண்டக் கோள்கள் உண்டான தெப்படி ?
வட்டவியல் திணிவு நெம்பு நிலைப்புப்படி (Conservation of Angular Momentum) வடிவம் சிறுகச் சிறுகச் சுழலும் மட்டமான தட்டின் வேகம் மிகையானது. மென்மேலும் விழுந்து சேரும் வாயுவும், தூசி துணுக்குகளும் சேர்ந்து கொண்டு முன்னோடிக் கோள் தட்டு (Proto-Planetary Disk) மையம் தடித்து ஓரம் மெலிவாகித் தமிழகத்தின் “ஆப்பம்” போல் (Pancake) உருவாகியது. நடுவில் மகா ஈர்ப்புச்சக்தி வாய்ந்த உட்கரு எழுவதும் அப்பால் விளிம்பு நோக்கிச் செல்லச்செல்ல வலுகுன்றிய கோள்கள் உருவாவதும் எப்படி என்று விளக்கிச் சொல்லலாம் ? பேரளவு வாயுப் பிண்டம் செழித்த நிபுளாவைச் சுற்றிலும் அதன் பூத ஈர்ப்பு மண்டலம் காந்த சக்தியால் சூடாக உள்ளது ! அந்த ஈர்ப்பு வாயுத் துணுக்குகளுக்கு சுழற்சியை உண்டாக்கித் தன் பூத ஈர்ப்புக் குழியில் சுற்றத் தூண்டுகிறது. அவ்விதம் சிறுகச் சிறுக்கச் சேர்ந்துதான் சுழலும் கிருஷ்ணச் சக்கிரம் போல் அசுர வடிவாகி வட அமெரிக்க வேனிற்தள ஹர்ரிக்கேன் (Tropical Hurricanes) சூறாவளிகள் உருவாகின்றன !
பேரளவு இயக்கம் மையத்தில் உண்டாகி முன்னோடிச் சேய் விண்மீன் (Infant Proto-Star) விரைவாக வாயுத் திணிவைத் திரட்டி சூரியனாகியது. அதன் பிறகு 50 மில்லியன் ஆண்டுகளாக பரிதி போதுமான வாயு நிறையைச் சுருட்டிப் பூரண எரிநிலை அடைந்து பிணைவு சக்தி தூண்டப் பட்டு சுயவொளி விண்மீனாக மாறியது. தட்டின் விளிம்புகளில் மேலும் வாயுத் துணுக்குகள் சேமிப்பாகி அங்குமிங்கும் கண்ட இடங்களில் சிறிதும் பெரிதுமாக வாயுவிலும் திடப் பிண்டத்திலும் கோள்கள் உண்டாயின.
பரிதி வெப்ப அணுக்கரு சக்தியால் தூண்டப் பட்டதும் அது அசுரப் புயலை எழுப்பித் தூசிகளையும் துணுக்குகளையும் தட்டிலிருந்து வெளியேற்றியது. அப்போது பூத வாயுக் கோள்கள் மென்மேலும் பெருக்க இயலாது போயின. தட்டில் தங்கிய மீத வாயுக்கள் பேரளவு வெப்பத்தாலும், ஈர்ப்பு விசையாலும் மூலகமாற்றம் நிகழ்ந்து குளிர்ந்து திரண்டு சிலிகேட்களும், உலோகங்களும் (Silicates & Metals) உண்டாயின. துணுக்குகளும், தூசிப் பனிகளும் மற்ற கோள்களின் முன்னோடிகளைக் கட்டி மென்மேலும் பெருக்க வைத்துப் பேரளவு அண்டங்களாக்கின.
பரிதி மண்டலத்தின் புறக் கோள்கள் பனி அண்டங்களாய்க் கட்டுமான மாகின. வாயுக் கோள்களின் உட்கரு அடர்த்தியாகி வாயு முகில்கள் அவற்றை இறுகிப் போர்த்திக் கொண்டன. புறக்கோள்களைச் சுற்றிலும் பல துணைக்கோள்கள் உண்டாகிச் சுற்றத் தொடங்கின. வாயு முகில்கள் வீசி எறியப்பட்டு வால்மீன்களாக “ஓர்ட் முகில்” மந்தையில் (Oort Cloud of Comets) சிக்கின. ஓர் அசுரப் பிண்டம் பூமியை மோதி நிலவு உண்டானது. செவ்வாய்க் கோளுக்குச் சந்திரன்கள் ஏற்பட்டுச் சுற்ற ஆரம்பித்தன. இவை அனைத்தும் இம்மானுவெல் கான்ட் 250 ஆண்டுகளுக்கு முன்பு கூறிய நிபுளாக் கோட்பாடைத்தான் முற்றிலும் மெய்ப்பிக்கின்றன.

பரிதி மண்டலப் படைப்பில் காணும் சில புதிர்கள் !
அண்டக் கோள்கள் ஏன் பரிதியை ஒரே தளமட்டத்தில் நீள்வட்ட வீதிகளில் சுற்றுகின்றன ? அவற்றின் சீரொழுக்க இயக்க முறைக்கு என்ன காரணம் உள்ளது ? அகக்கோள்களும், புறக்கோள்களும் சூரியனை ஏன் எதிர்க் கடிகார முறையில் சுற்றி வருகின்றன ? சூரியனையும் மற்ற கோள்கள் போலின்றித் தன்னச்சில் சுக்கிரன் மட்டும் ஏன் நேர்க் கடிகார வக்கிர திசையில் சுற்றி வருகிறது ? பூமியின் நிலவு தன்னச்சில் சுழாது ஏன் ஒரே முகத்தைக் காட்டிக் கொண்டு புது மாதிரிச் சுற்றி வருகிறது ? தன்னச்சில் கோள்களும் எதிர்க் கடிகாரச் சுழற்சியில் சுழல்வது ஓர் விந்தைதான். கோள்களின் துணைக் கோள்களும் எதிர்க் கடிகாரச் சுழற்சியில் சுற்றுவதும் ஒரு விந்தைதான். இந்த விந்தைகள் அனைத்தும் நிபுளாக் கோட்பாடு கூறும் “சுழற்தட்டு அமைப்பு” விதியைப் பெரும்பாலும் நிரூபிக்கின்றன.

யுலிஸிஸ் சூரிய விண்ணுளவியின் பணி தொடர்கிறது !
ஏப்ரல் 15, 2008 ஆம் தேதி அண்டவெளித் தேடல் விஞ்ஞானிகள் 1990 ஆண்டு முதல் பதினேழு ஆண்டுகளாய்ப் பரிதியைச் சுற்றி ஆராய்ந்து வரும் “யுலிஸிஸ் சூரிய விண்ணுளவியைப்” (Ulysses Solar Probe) பூமி ஆட்சி அரங்கிலிருந்து தளர்த்தி ஓய்வாக இருக்கவிட்டு 2013 ஆண்டில் மீண்டும் ஆய்வு செய்ய மாற்றியுள்ளார் ! அப்போதுதான் மறுபடியும் பரிதியின் அடுத்த உச்சநிலைக் கதிராட்டம் தொடங்கும் ! அதுவரை விண்ணுளவியின் ராக்கெட் உந்தல் எரிசக்தியை வீணாக்காமல் சேமித்து வைத்து சில இயக்கங்களையும் முடக்கி உளவி ஓய்வெடுத்துக் கொள்ள ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது ! பரிதியிலிருந்து 125 மில்லியன் மைல் தூரத்தில் பரிதியை மையமாகக் கொண்டு சுற்றிவரும் நீள் வட்ட வீதியில் (Helio Centric Orbit) உறங்கி வரும் கருவிகளைச் சூரிய கனல் வெப்பமே எழுப்பிவிடும் தகுதி பெற்றது. இப்போது ஓய்வெடுக்கும் உளவி பரிதியை விட்டு அப்பால் நகன்று 250 மில்லியன் தொலைவை 2010 ஆண்டில் அடைந்து விடும்.
[தொடரும்]
தகவல்:
Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Astronomy Magazine.
1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
2. 50 Greatest Mysteries of the Universe – How did the Solar System form ? (Aug 21, 2007)
3. Astronomy Facts File Dictionary (1986)
4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
6. Cosmos By Carl Sagan (1980)
7. Dictionary of Science – Webster’s New world [1998]
8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
10 National Geographic Picture of Our Universe By Roy Gallant: (1986)
11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
15 http://www.thinnai.com/?
16 http://www.thinnai.com/?
17 Solar System Formation By Jeff Scott (October 16, 2005)
18. Spaceflight Now -Breaking News. Controllers Working to Keep “Ulysses Sun Orbiter Alive” By :Stephen Clark (www.spaceflightnow.com/news/
19. http://www.spacedaily.com/
20. http://www.spacedaily.com/
21. https://www.reference.com/
22. https://en.wikipedia.org/
23. https://www.livescience.
24. http://earth-chronicles.
25. https://en.wikipedia.org/
******************
S. Jayabarathan [jayabarathans@gmail.com] February 18, 2018 [R-1]
Preview YouTube video The origin of mankind, ufos, planetary travel, venus, mars, where we have been
-முனைவர் பா. மனோன்மணி
“மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்”1 என்றார் பாரதி, “மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா”2 என்றார் கவிமணி. “பெண்ணடிமை தீருமட்டும் பேசுந் திருநாட்டு மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே”3 என்றார் பாவேந்தர். இவ்வாறு பெண்மைக்குச் சிறப்புச் சேர்ப்பவையாகக் கருதப்படும் இவ்வடிகள் யாவும் ஆண் மையக் கருத்தாக்க ஆதரவுக் குரல்கள் அவ்வளவே. ஆனால் இளங்கோவடிகள் கொடுத்தது ஆதரவுக் குரல் அன்று. பெண்மைக்கான குரலை அவளே எழுப்ப வேண்டும் என்ற படி நிலை வளர்ச்சியில் அவளது உயர்வை, அவளுக்கான ஊக்கத்தை அவளிடமிருந்தே வளர்த்துச் செல்ல வேண்டும் என்ற உயரிய நோக்கை எடுத்துரைப்பதாக அமைகிறது. இக்கருத்தினையே இக்கட்டுரை காப்பிய அகச் சான்றுகளோடு ஆய்ந்துரைக்க முயல்கிறது.
சிலப்பதிகாரம்
முத்தமிழ்க் காப்பியம், உரையிடை இட்ட பாட்டுடைச் செய்யுள், மூவேந்தர் காப்பியம் என்றெல்லாம் பேசப்படும் சிலப்பதிகாரப் பிரதியே முழுமையான பெண்ணியக் குரலுக்கான முதல் பிரதி என்று கூறின் மிகையாகாது. அரசனை எதிர்த்து ‘வண்ணச்சீரடி மண்மகளும்’ அறியாத வகையில் வளர்க்கப்பட்ட ஒரு பெண் சொற்போர் தொடுத்து வெற்றி கண்டதைச் சிலப்பதிகாரம் எடுத்துரைக்கிறது. புரட்சி என்பது எளிதில் தோன்றுவது அன்று. முப்பது என்று சொன்னால் அஞ்சிவிடுவாளோ என்று எண்ணி ‘ஈரைங்காதம்’ என்று தேற்றிப் பக்குவமாகக் கண்ணகி கணவனால் அழைத்துச் செல்லப்படுகிறாள். அவளே பின்னர்த் தேற்றுவார் இன்றிக் கோவலன் இருக்கும் இடத்திற்கு, ‘தெய்வமும் உண்டு கொல்’, ‘சான்றோரும் உண்டு கொல்’, ‘பெண்டிரும் உண்டு கொல்’ என்று நாடே அறிய ஊரே அறியத் தன் பிரச்சனைப் பிரச்சாரத்தினைத் தானே முன் நடத்திச் செல்கிறாள். ‘இவள் பேயோ’, ‘தெய்வமோ’ என்றெல்லாம் தொடக்கத்தில் கண்டோர் மருளும் வகையில் அவள் புலம்பல் ஊரெங்கும் ஒலிக்கிறது. அவளின் புலம்பலைக் கண்டு அஞ்சிய நாட்டு மக்கள் உண்மையில் ஏதோ நிகழவிருக்கிறது என்பதை உணர்கின்றனர். இந்நிலையில் தொடர் வளர்ச்சிப்படி நிலையில் கண்ணகி ஒரு புரட்சிப் பெண்ணாக வளரும் கருத்தோட்டத்தோடு ஒன்றச் செய்து பயணிக்கும் வகையில் இளங்கோ படைத்துச் செல்கிறார்.
நாடகப் பாங்கு
சிலப்பதிகாரம் நாடகத் தமிழையும் உள்ளடக்கியது என்பதற்குப் படைப்பின் ஒரு கூறாக இடம்பெற்றுள்ள கனவுப் பகுதிகளும் சான்று பகரும். கனவு மனத்தில் விரியும் காட்சி. நாடகம் காட்சியாக விரிக்கப்படும் நனவு. அவ்வகையில் இக்காப்பியத்தில் படைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கனவும் காட்சியாக விவரிக்கப்படுவதில்லை. கூற்றாக நிகழ்த்தப்படுகிறது. கண்ணகி கனவு காண்பவளாகப் படைக்கப்படவில்லை; கோவலன் கனவு காண்பவனாகப் படைக்கப்படவில்லை; அரசமா தேவி கனவு காண்பவளாகப் படைக்கப்படவில்லை. மூவரின் கனவுகளுமே கூற்றுகளாக இடம்பெறுகின்றன.
கண்ணகி தேவந்தியிடம் தன் கனவினைக் கூறும்பொழுது கனவு விவரிக்கப்படுகிறது. தேவந்தி ‘பெறுக கணவனோடு’ என்றதும் கண்ணகி தான் கண்ட கனவினை எடுத்துரைக்கிறாள்.
“……………………………………………பெறுகேன்
கடுக்குமென் நெஞ்சம் கனவினால் என்கை
பிடித்தனன் போயோர் பெரும்பதியுள் பட்டேம்
பட்ட பதியில் படாதது ஒரு வார்த்தை
இட்டனர் ஊரார் இடுதேளிட் டென்தன்மேல்
கோவலற்கு உற்றதோர் தீங்கென் றதுகேட்டுக்
காவலன் முன்னர்யான் கட்டுரைத்தேன் காவலனோடு
ஊர்க்குற்ற தீங்குமொன் றுண்டால் உரையாடேன்
தீக்குற்றம் போலும் செறிதொடீஇ தீக்குற்றம்
உற்றேனொடு உற்ற உறுவனோடு யானுற்ற
நற்றிறம் கேட்கின் நகையாகும் பொற்றொடீஇ” (கனா.தி.உ.9:44-54)
சிலப்பதிகாரத்தின் அடைக்கலக் காதையைத் தெ.பொ.மீ ‘செம்பாதியாக நிற்கும் அடைக்கலக் காதை’ என்பார். இக்காதையில் கோவலன் மாடல மறையோனால் கருணை மறவன், செல்லாச் செல்வன், இல்லோர் செம்மல் என்று புகழப்படுகின்றான். அப்பொழுதுக் கோவலன் தன் கனவினை மாடலன் மற்றும் கவுந்தியடிகளிடம் கூறுவதாக விவரிக்கப்படுகிறது.
“ ….…………….. குறுமகன் தன்னால்
காவல் வேந்தன் கடிநகர் தன்னில்
நாறுஐங் கூந்தல் நடுங்குதுயர் எய்தக்
கூறைக்கோட் பட்டுக் கோட்டுமா ஊறவும்
அணித்தகு புரிகுழல் ஆயிழை தன்னொடும்
பிணிப்பற்றுத் தேர்தம் பெற்றி எய்தவும்
மாமலர் வாளி வறுநிலத்து எறிந்து
காமக் கடவுள் கையற் றேங்க
அணிதிகழ் போதி அறவோன் தன்முன்
மணிமேகலையை மாதவி அளிப்பவும்
நனவு போல நள்ளிருள் யாமத்துக்
கனவு கண்டேன் கடிதீங்கு உறுமென” (அடை.கா.15:95-106)
அரசமாதேவி தான் கண்ட கனவினைத் தன் தோழிகளிடம் விளக்கிக் கூறுகிறாள்.
“ஆங்குக்
குடையொடு கோல்வீழ நின்று நடுங்கும்
கடைமணி இன்குரல் காண்பென்காண் எல்லா
திசையிரு நான்கும் அதிர்ந்திடும் அன்றிக்
கதிரை இருள்விழுங்க காண்பென்காண் எல்லா!
விடுங்கொடி வில்லிர வெம்பகல் வீழும்
கடுங்கதிர் மீனிவை காண்பென்காண் எல்லா!”(வழ.கா.20: 1-7)
“செங்கோலும் வெண்குடையும்
செறிநிலத்து மறிந்துவீதரும்
நங்கோன்தன் கொற்றவாயில்
மணி நடுங்க நடுங்கும் உள்ளம்
இரவுவில்லிடும் பகல்மீன்விழும்
இரு நான்கு திசையும் அதிர்ந்திடும்
வருவதோர் துன்பமுண்டு
மன்னவற்குயாம் உரைத்துமென” (வ.கா.20:8-11)
மூவரின் கனவுகள் மட்டுமன்றி நான்காவதாக ஒரு கனவும் சிலம்பில் உண்டு. அது அஃறிணையின் கனவினைச் சுட்டுவதாகும். மலர் ஒன்றின் கனவினை இளங்கோவடிகள் கானல் வரியில் பதிவு செய்கிறார். அதுவும் கூற்றாக அமைவதாகும். சிலம்புக் கனவு நாடகப் பாங்கில் அமைந்துள்ளது என்பதற்கு இதுவும் கூடுதல் சிறப்பு. இளங்கோவடிகள், கழிபரப்பில் கண்போல் மலர்ந்த நெய்தல் மலரின் மாலை நேர இயல்பான குவிதலைக் காண்கிறார். அதன் மீது தலைவியின் இரங்கலை ஏற்றுமிடத்து அதன் இயல்பான குவிதலின்மீது உறக்கத்தையும், உறக்கம் வந்தால் கனவு வரும் என்பதையும் ஏற்றியுரைக்கிறார். இதில் கண் துயிலாததால் உறக்கம் கொள்ளாத தலைவி நெய்தல் மலரிடம் நீ காணும் கனவில் கானலில் வந்து செல்லும் தலைவனைக் ‘கண்டறிதியோ’ என்று அம்மலரிடம் இறைஞ்சி நிற்பதாக அமைக்கிறார்.
“புன்கண்கூர் மாலைப் புலம்பு மென் கண்ணே போல்
துன்பம் உளவாய் துயிலப் பெறுதியால்
இன்கள்வாய் நெய்தால் நீ எய்தும் கனவினுள்
வன்கணார் கானல் வரக் கண்ட றிதியோ!”(சிலம்பு. கானல் வரி.7:33)
ஆகக் கனவுகள் என்பவை உயர்திணை, அஃறிணை என்ற இரண்டு தன்மையானும் கூற்றுகளாக நிகழ்த்தப்படுபவை என்பது தெளிவு. அரசமாதேவி தான் கண்ட கனவினை அரசவைக்கு வந்து சொல்லும் பொழுது பாண்டிய மன்னன் சிங்கம் போல் வீற்றிருந்தான் என்று இளங்கோவடிகள் காட்சிப்படுத்துகிறார்.
“கோப்பெருந் தேவிசென்றுதன் தீக்கனாத் திறமுரைப்ப
அரிமான் ஏந்திய அமளிமிசை இருந்தனன்
திருவீழ் மார்பின் தென்னவர் கோவே” (வ.கா.20: 21-23)
என்பன அவ்வடிகள். இக்காட்சியும் கூற்றுக்கான பதிவு என்பது பயிலும் தோறும் புலனாகும். மேலும்,
“செய்தவம் இல்லாதேன் தீக்கனாக் கேட்ட நாள்
எய்த வுணரா திருந்தேன்மற் றென்செய்தேன்
மொய்குழல் மங்கை முலைப்பூசல் கேட்டநாள்
அவ்வை உயிர் வீவும் கேட்டாயோ தோழீ
அம்மாமி தன்வீவும் கேட்டாயோ தோழீ” (வஞ்சிக் காண்டம்,வாழ்த்துக் காதை.29:5)
என்று கண்ணகி கோயிலின் முன் தேவந்தி அவள் உரைத்த கனவினை நினைத்துப் புலம்புமிடத்தும் கூற்றாக இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. ‘முன் செய்த நல்ல தவம் இல்லாதேன் யான்! நீ கண்ட தீக் கனாவைக் கூறிய அந்நாளில் அதைப் பற்றிச் சிறிதும் ஆராய்ந்து பாராதொழிந்தேன். ஐயோ என்ன காரியம் செய்தேன்!’ என்பது அதற்கான விளக்கம் ஆகும்.
கண்ணகிக் கனவு
கண்ணகியின் இயங்கு நிலைகள் யாவும் அவள் மனத்திலிருந்து உதித்தவை. யாரும் சொல்லி அவள் செயல்படவில்லை என்பதைக் கனவு உத்தியின் வழி இளங்கோ ஆழமாக முன்வைக்கிறார். அவள் மனம் அவள் கனவு என்ற நிலையில் அவளை அவளது கனவு நெறிப்படுத்துகிறது. கணவன் இறந்து கிடக்கிறான்; என்ன செய்வது என்று அறியாத அவளுக்கு(கண்ணகிக்கு) அவளது கனவே வழிகாட்டுகிறது. இதனை,
“என்றாள் எழுந்தாள் இடர்உற்ற தீக்கனா
நின்றாள் நினைந்தாள் நெடுங்கயல்கண் நீர்சோர
நின்றாள் நினைந்தாள் நெடுங்கயல் நீர்த்துடையாச்
சென்றாள் அரசன் செழுங்கோயில் வாயில்முன்” (வழ.கா.19:72-75)
என்ற அடிகள் எடுத்துரைக்கும். கனவு ஒரு பெண்ணை வழி நடத்துகிறது. இங்குக் கவனிக்க வேண்டியது யாருடைய பலனையும் எதிர்பார்க்காது யாருடைய உருவடிப்பும் இல்லாத அப்பழுக்கற்ற தன்னிலையின் அதாவது பெண்ணின் சுய சிந்தனை வெளிப்பாட்டின் செயல்பாடு என்பதை இப்பதிவு தூண்டி நிற்கிறது. ஏனெனில் கண்ணகி தான் கண்ட கனவினைத் தேவந்தியிடம் உரைத்தபோது அவள் உரைத்த பரிகாரங்களையும் விலக்கியவள் அவள் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றிக் “கோவலன் கனவு காண்பதற்கு முன்பே கண்ணகி கனவு கண்டாள். அக்கனவைத் தேவந்தியிடம் கூறினாள். ஆனால் அதனைக் கணவனைக் கண்டவுடன் மறந்தே போயினாள். கணவன் வானவர் குழாத்துள் புகுந்த பின்னர் தான் அதனை நினைத்துக் கொண்டாள். கனவினை மறந்த நிலை அவள் கற்பின் பெருந்திறம். கோவலன் தன் கனவினை மறவாது நினைத்திருந்த நிலை தன் மனமாற்றத்தின் பயனாகத் தன் வாழ்வின் விளைவினை மன உறுதியோடு எதிர்பார்த்து வரவேற்று நிற்கிற அவன் உயர்வின் பெருஞ் சிறப்பாகும்”4 என்று தெ.பொ.மீ. குறிப்பிடுவார்.
பின்வருவதை முன்னர் உணர்த்துதற்காக நிமித்தம், அசரீரி உள்ளிட்ட இன்ன பிற நம்பிக்கை சார் கூறுகளைக் காட்டிலும் கனவு உத்தியினைக் கையாண்டுள்ளது ஆசிரியரின் தனிச்சிறப்பைப் புலப்படுத்துகிறது. காரணம் கனவு ஒன்றே தனி மனித மனம் சார்ந்த சுதந்திர வெளிப்பாட்டிற்கான வெளியாக உள்ளமையாகும். கண்ணகியின் சுய சிந்தனை வெளிப்பாடு, கோவலனின் சுய சிந்தனை வெளிப்பாடு, அரசமாதேவியின் சுய சிந்தனை வெளிப்பாடு என்ற நிலைகளில் கனவினைப் பொருள் கொள்ளுதல் காப்பியப் போக்கிற்கும் பாத்திர அறக்கட்டமைப்பின் தன்மைக்கும் பொருந்துவதாகும்.
உரைசால் பத்தினியின் உயர்வுக்கான கண்ணகியின் கனவும்: ஊழ்வினை கவ்வக் காத்துக் கொண்டிருக்கும் கோவலனின் கனவும்; அரசியல் பிழைக்கக் காரணமான பாண்டியனைக் கூற்றுவன் பற்றக் காத்துக்கிடக்கும் பாண்டிமாதேவியின் கனவும் எனச் சிலம்பின் மையக்கருத்துக்கள் கனவுக் காட்சிகளிலும் இணைத்துச் செல்லும் மாண்பு இலக்கியக் கட்டமைப்பின் உட்கூறுகளிலும் விரவிக்கிடக்கிறது. இது இளங்கோவடிகளுக்கே அன்றி வேறு எப்படைப்பாளருக்கும் இல்லாத தனிச்சிறப்பாகும்.
சுருங்கக் கூறின் கண்ணகியின் காதல் வெளியாக, கோவலனின் பெருமையை வெளிக் கொணர்வதற்கான தளமாகக் கனவு பயன்படுத்தப்பட்டுள்ளது.
தலைப்புப் பொருத்தப்பாட்டில் கனா
“கனாத்திறம் உரைத்த காதை” எனும் தலைப்பு, கோவலன் கண்ட கனாக் காதைக்கு வைக்கப்படவில்லை. அரசமாதேவி கண்ட கனாக் காதைக்கு வைக்கப்படவில்லை. கண்ணகி கண்ட கனாவிற்கே தலைப்பாய் வைக்கப்படுகிறது. காரணம் அங்கு தான் புலவனின் இலட்சியம் வெளிப்பட்டு நிற்கிறது. கனாத்திறம் என்பது வெற்றியை நோக்கியதாக இருக்க வேண்டும். கண்ணகி கண்ட கனா வெற்றியில் முடிகிறது.
“தற்காத்துத் தற்கொண்டான் பேணி தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்”5 என்ற குறள் மொழிக்கு ஏற்பத் தன்னைக் காத்துக்கொள்ள கணவன் வருகையை எதிர்நோக்கி நிற்கிறாள். தற்கொண்டானைப் பேணச் சிலம்பினைக் கொடுக்கிறாள். தகைசான்று சொற்காக்கக் குற்றமற்றவன் என்பதை நிறுவ அரசன் முன் சென்று கட்டுரைகிறாள். அதுமட்டுமன்றிச் சோர்வற்ற நிலையில் சேரநாடு வரை தனியே சென்று நிறைவாக வானுலகையும் அடைகிறாள். வானுலகு என்பது இங்குப் புகழுலகு என்பதாகப் பதிவுசெய்யப்படுகிறது. ஆகக் கோவலன் கனவும் அரசமாதேவியின் கனவும் அழிவை நோக்கிப் பயணிப்பவை. கண்ணகியின் கனவே புதுமைக்கான ஆக்கத்தை நோக்கிப் பயணிக்கக் கூடியது என்பது தெளிவு. அதுமட்டுமன்றிக் கனவின் திறம் அடுத்தக்கட்டத்தை நகர்த்திச் செல்வதாக இருக்கும் பண்புடையது. அவ்வகையில் பொருள் கொண்டதனால் என்னவோ கண்ணகி கனா எடுத்துரைக்கும் காதைக்குக் “கனாத் திறம் உரைத்த காதை” என்கிறார். இப்பொருத்தப்பாட்டை ஏனைய இரண்டு கனவுகள் இடம்பெற்ற காதைகளிலும் பார்க்க முடியும்.
ஒன்று அடைக்கலக் காதை. இக்காதை கண்ணகி கோவலன் இருவரும் மாதரியிடம் அடைக்கலமாகக் கொடுக்கப்படுவதனால் மட்டும் பொருத்தப்பட்டது அன்று. மணிமேகலை என்னும் மங்கை நல்லாளை மாதவி புத்ததேவனிடம் அடைக்கலம் ஆக்கியமைக்காகக் கண்ட கோவலனின் கனவும் காரணமாகிறது. அது போல் அரசமாதேவி வழக்குரைக்க வரும் இடத்தில் அரசுக்கட்டிலில் அமர்ந்து கனவினை எடுத்துரைக்கிறாள். இது பிரச்சனை ஒன்றை விடைதேடி வழக்காடு மன்றத்திற்குக் கொண்டுவந்து தீர்த்துக் கொள்வதற்கு இணையானதாகும். அரசமாதேவி அந்தப்புரத்தில் கணவனோடு கனவினைப் பற்றிப் பகிர்ந்துகொள்ள இல்லை. அரசுக் கட்டிலில் சிங்கம் போன்று வீற்றிருக்க அத்தருணத்திலேயே சொல்லப்பட்டதாகப் படைக்கப்படுகிறது. எனவே சூழலுக்குத்தகக் காதைகளுக்குப் பெயர் சூட்டக் கனவுக் கூறுகளும் அடிப்படைகளாக அமைந்திருப்பதைப் பெறமுடிகிறது.
பெண்ணியத்தின் வளர்ச்சிப்படி நிலையில் பெண்மை
என்றைக்கும் பெண் குழந்தைகளின் மீது பெற்றோர் தனிக் கவனம் செலுத்துவதுண்டு. அவ்வகையில் வளர்க்கப்பட்ட முன்னோர்களின் அடையாளப் பாத்திரம்தான் கண்ணகி. இதற்கு இன்றைய சூழல் விலக்குடையதன்று. ஒரு படிநிலை வளர்ச்சியில்தான் அறிவு, தொழில், முன்னேற்றம், கல்வி, புரட்சி என யாவும் வளர்ச்சியுறும். அவ்வகையில் கண்ணகி என்ற தனி மனிதப் பெண்ணின் முன்னேற்றமும் அத்தகையதான படிநிலை வளர்ச்சியில் வளர்ந்ததையே இளங்கோ உணர்த்தி நிற்கிறார். மண்மகள் அறியாதவள்; கணவனையன்றி வேறு ஒன்றையும் தொழாதவள்; பிற கோட்பாடுகளைப் பகுத்து ஆராய்ந்து ‘பீடு அன்று’ என்று கூறும் தெளிவுடையவள்; கோவலனின் வாட்டம் அறிந்து ‘சிலம்பு உள கொண்ம்’ என்று கூறும் உரிமை உடையவள்; உடன் வா என்றதும் மறுக்காது செல்லும் பண்பாட்டை அறிந்தவள்; கணவனுடன் இருக்கும் வாய்ப்புக் கிடைத்தபோது சமைத்து உடன் அமர்ந்து உணவு பரிமாறி மகிழ்ச்சி கொண்டவள்; ‘முது நரியாகுக’ என்று கவுந்தி சபித்தப் போது கருணை காட்டக் கூடிய தெளிவு மிக்கவள்; எல்லாவற்றுக்கும் மேலாகத் தனது உரிமைக் கணவனை இழந்தப் போது உரிமைக்காக நீதிக்காகப் போராடும் துணிவு கொண்டவள். இத்தகைய துணிவு அவளுக்கு வரக் காரணங்கள் இயல்பாகவே அவள் கொண்டிருந்த நம்பிக்கையும் அவள் கண்ட கனவும் ஆகும்.
புரட்சி என்பதும் பெண்ணியம் என்பதும் கூட்டம் கூடி மேடை ஏறிப் பேசுவதற்கான விடயம் மட்டுமன்று. அது நெஞ்சில் ஊன்றிச் செயலில் நிகழும் உணர்வு வெளிப்பாடு. அத்தகைய வெளிப்பாட்டினையே கண்ணகி கண்ட சிலம்புக் கனாவின் வழி இளங்கோவடிகள் ஊக்கிச் செல்கிறார். பெண்களுக்கான உரிமையைப் பெண்ணே பெறப் போர்க் கொடிதூக்க வேண்டும் என்பது இன்றைய சூழல். அப்படி இருக்க ஆண் படைப்பாளரான இளங்கோவடிகள் உருவாக்கிய பெண் படைப்பு எங்ஙனம் புரட்சிக்கு வித்திடுவதாகும் என்று கேள்வி எழுப்பின், கற்பு என்ற கட்டமைப்பை உருவாக்கியது ஆண் மையம் தானே. அம் மையம் தான் கற்பினை அழிக்கும் முயற்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. எனவே அதற்கான எதிர்க் குரலும் அங்கிருந்து வருவதுதானே பொருத்தமுடையது என்ற அடிப்படையில் தொடக்கக் காலகட்டத்தின் இம்முயற்சி என்றும் நிலைபெறுடைய நிலையில் ஏற்கத்தக்கதாகவும் எதார்த்தமானதாகவும் அமைகிறது.
அடிக்குறிப்புகள்:
*****
கட்டுரையாளர்
இணைப் பேராசிரியர், தாகூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
குரோம்பேட்டை, சென்னை – 45