சிலம்புக் கனாவில் பெண்ணிய நோக்கும் நாடகப் பாங்கும்

-முனைவர் பா. மனோன்மணி

“மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்”1  என்றார் பாரதி, “மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா”2 என்றார் கவிமணி. “பெண்ணடிமை தீருமட்டும் பேசுந் திருநாட்டு மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே”3  என்றார் பாவேந்தர். இவ்வாறு பெண்மைக்குச் சிறப்புச் சேர்ப்பவையாகக் கருதப்படும் இவ்வடிகள் யாவும் ஆண் மையக் கருத்தாக்க ஆதரவுக் குரல்கள் அவ்வளவே. ஆனால் இளங்கோவடிகள் கொடுத்தது ஆதரவுக் குரல் அன்று. பெண்மைக்கான குரலை அவளே எழுப்ப வேண்டும் என்ற படி நிலை வளர்ச்சியில் அவளது உயர்வை, அவளுக்கான ஊக்கத்தை அவளிடமிருந்தே வளர்த்துச் செல்ல வேண்டும் என்ற உயரிய நோக்கை எடுத்துரைப்பதாக அமைகிறது. இக்கருத்தினையே இக்கட்டுரை காப்பிய அகச் சான்றுகளோடு ஆய்ந்துரைக்க முயல்கிறது.

சிலப்பதிகாரம்

முத்தமிழ்க் காப்பியம், உரையிடை இட்ட பாட்டுடைச் செய்யுள், மூவேந்தர் காப்பியம் என்றெல்லாம் பேசப்படும் சிலப்பதிகாரப் பிரதியே முழுமையான பெண்ணியக் குரலுக்கான முதல் பிரதி என்று கூறின் மிகையாகாது. அரசனை எதிர்த்து ‘வண்ணச்சீரடி மண்மகளும்’ அறியாத வகையில் வளர்க்கப்பட்ட ஒரு பெண் சொற்போர் தொடுத்து வெற்றி கண்டதைச் சிலப்பதிகாரம் எடுத்துரைக்கிறது. புரட்சி என்பது எளிதில் தோன்றுவது அன்று. முப்பது என்று சொன்னால் அஞ்சிவிடுவாளோ என்று எண்ணி ‘ஈரைங்காதம்’ என்று தேற்றிப் பக்குவமாகக் கண்ணகி கணவனால் அழைத்துச் செல்லப்படுகிறாள். அவளே பின்னர்த் தேற்றுவார் இன்றிக் கோவலன் இருக்கும் இடத்திற்கு, ‘தெய்வமும் உண்டு கொல்’,  ‘சான்றோரும் உண்டு கொல்’, ‘பெண்டிரும் உண்டு கொல்’ என்று நாடே அறிய ஊரே அறியத் தன் பிரச்சனைப் பிரச்சாரத்தினைத் தானே முன் நடத்திச் செல்கிறாள். ‘இவள் பேயோ’, ‘தெய்வமோ’ என்றெல்லாம் தொடக்கத்தில் கண்டோர் மருளும் வகையில் அவள் புலம்பல் ஊரெங்கும் ஒலிக்கிறது. அவளின் புலம்பலைக் கண்டு அஞ்சிய நாட்டு மக்கள் உண்மையில் ஏதோ நிகழவிருக்கிறது என்பதை உணர்கின்றனர். இந்நிலையில் தொடர் வளர்ச்சிப்படி நிலையில் கண்ணகி ஒரு புரட்சிப் பெண்ணாக வளரும் கருத்தோட்டத்தோடு ஒன்றச் செய்து பயணிக்கும் வகையில் இளங்கோ படைத்துச் செல்கிறார்.

நாடகப் பாங்கு

சிலப்பதிகாரம் நாடகத் தமிழையும் உள்ளடக்கியது என்பதற்குப் படைப்பின் ஒரு கூறாக இடம்பெற்றுள்ள கனவுப் பகுதிகளும் சான்று பகரும். கனவு மனத்தில் விரியும் காட்சி. நாடகம் காட்சியாக விரிக்கப்படும் நனவு. அவ்வகையில் இக்காப்பியத்தில் படைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கனவும் காட்சியாக விவரிக்கப்படுவதில்லை. கூற்றாக நிகழ்த்தப்படுகிறது. கண்ணகி கனவு காண்பவளாகப் படைக்கப்படவில்லை; கோவலன் கனவு காண்பவனாகப் படைக்கப்படவில்லை; அரசமா தேவி கனவு காண்பவளாகப் படைக்கப்படவில்லை. மூவரின் கனவுகளுமே கூற்றுகளாக இடம்பெறுகின்றன.

கண்ணகி தேவந்தியிடம் தன் கனவினைக் கூறும்பொழுது கனவு விவரிக்கப்படுகிறது. தேவந்தி ‘பெறுக கணவனோடு’ என்றதும் கண்ணகி தான் கண்ட கனவினை எடுத்துரைக்கிறாள்.

“……………………………………………பெறுகேன்
கடுக்குமென் நெஞ்சம் கனவினால் என்கை
பிடித்தனன் போயோர் பெரும்பதியுள் பட்டேம்
பட்ட பதியில் படாதது ஒரு வார்த்தை
இட்டனர் ஊரார் இடுதேளிட் டென்தன்மேல்
கோவலற்கு உற்றதோர் தீங்கென் றதுகேட்டுக்
காவலன் முன்னர்யான் கட்டுரைத்தேன் காவலனோடு
ஊர்க்குற்ற தீங்குமொன் றுண்டால் உரையாடேன்
தீக்குற்றம் போலும் செறிதொடீஇ தீக்குற்றம்
உற்றேனொடு உற்ற உறுவனோடு  யானுற்ற
நற்றிறம் கேட்கின் நகையாகும் பொற்றொடீஇ”  (கனா.தி.உ.9:44-54)

சிலப்பதிகாரத்தின் அடைக்கலக் காதையைத் தெ.பொ.மீ ‘செம்பாதியாக நிற்கும் அடைக்கலக் காதை’ என்பார். இக்காதையில் கோவலன் மாடல மறையோனால் கருணை மறவன், செல்லாச் செல்வன், இல்லோர் செம்மல் என்று புகழப்படுகின்றான். அப்பொழுதுக் கோவலன் தன் கனவினை மாடலன் மற்றும் கவுந்தியடிகளிடம் கூறுவதாக விவரிக்கப்படுகிறது.

“ ….…………….. குறுமகன் தன்னால்
காவல் வேந்தன் கடிநகர் தன்னில்
நாறுஐங் கூந்தல் நடுங்குதுயர் எய்தக்
கூறைக்கோட் பட்டுக் கோட்டுமா ஊறவும்
அணித்தகு புரிகுழல் ஆயிழை தன்னொடும்
பிணிப்பற்றுத் தேர்தம் பெற்றி எய்தவும்
மாமலர் வாளி வறுநிலத்து எறிந்து
காமக் கடவுள் கையற் றேங்க
அணிதிகழ் போதி அறவோன் தன்முன்
மணிமேகலையை மாதவி அளிப்பவும்
நனவு போல நள்ளிருள் யாமத்துக்
கனவு கண்டேன் கடிதீங்கு உறுமென” (அடை.கா.15:95-106)

அரசமாதேவி தான் கண்ட கனவினைத் தன் தோழிகளிடம் விளக்கிக் கூறுகிறாள்.

“ஆங்குக்
குடையொடு கோல்வீழ நின்று நடுங்கும்
கடைமணி இன்குரல் காண்பென்காண் எல்லா
திசையிரு நான்கும் அதிர்ந்திடும் அன்றிக்
கதிரை இருள்விழுங்க காண்பென்காண் எல்லா!

விடுங்கொடி வில்லிர வெம்பகல் வீழும்
கடுங்கதிர் மீனிவை காண்பென்காண் எல்லா!”(வழ.கா.20: 1-7)

“செங்கோலும் வெண்குடையும்
செறிநிலத்து மறிந்துவீதரும்
நங்கோன்தன் கொற்றவாயில்
மணி நடுங்க நடுங்கும் உள்ளம்
இரவுவில்லிடும் பகல்மீன்விழும்
இரு நான்கு திசையும் அதிர்ந்திடும்
வருவதோர் துன்பமுண்டு
மன்னவற்குயாம் உரைத்துமென” (வ.கா.20:8-11)

மூவரின் கனவுகள் மட்டுமன்றி நான்காவதாக ஒரு கனவும் சிலம்பில் உண்டு. அது அஃறிணையின் கனவினைச் சுட்டுவதாகும். மலர் ஒன்றின் கனவினை இளங்கோவடிகள் கானல் வரியில் பதிவு செய்கிறார். அதுவும் கூற்றாக அமைவதாகும். சிலம்புக் கனவு நாடகப் பாங்கில் அமைந்துள்ளது என்பதற்கு இதுவும் கூடுதல் சிறப்பு. இளங்கோவடிகள், கழிபரப்பில் கண்போல் மலர்ந்த நெய்தல் மலரின் மாலை நேர இயல்பான  குவிதலைக் காண்கிறார். அதன் மீது தலைவியின் இரங்கலை ஏற்றுமிடத்து அதன் இயல்பான குவிதலின்மீது உறக்கத்தையும், உறக்கம் வந்தால் கனவு வரும் என்பதையும் ஏற்றியுரைக்கிறார். இதில் கண் துயிலாததால் உறக்கம் கொள்ளாத தலைவி நெய்தல் மலரிடம் நீ காணும் கனவில் கானலில் வந்து செல்லும் தலைவனைக் ‘கண்டறிதியோ’ என்று அம்மலரிடம் இறைஞ்சி நிற்பதாக அமைக்கிறார்.

“புன்கண்கூர் மாலைப் புலம்பு மென் கண்ணே போல்
துன்பம் உளவாய் துயிலப் பெறுதியால்
இன்கள்வாய் நெய்தால் நீ எய்தும் கனவினுள்
வன்கணார் கானல் வரக் கண்ட றிதியோ!”(சிலம்பு. கானல் வரி.7:33)

ஆகக் கனவுகள் என்பவை உயர்திணை, அஃறிணை என்ற இரண்டு தன்மையானும் கூற்றுகளாக நிகழ்த்தப்படுபவை என்பது தெளிவு. அரசமாதேவி தான் கண்ட கனவினை அரசவைக்கு வந்து சொல்லும் பொழுது பாண்டிய மன்னன் சிங்கம் போல் வீற்றிருந்தான் என்று இளங்கோவடிகள் காட்சிப்படுத்துகிறார்.

“கோப்பெருந் தேவிசென்றுதன் தீக்கனாத் திறமுரைப்ப
அரிமான் ஏந்திய அமளிமிசை இருந்தனன்
திருவீழ் மார்பின் தென்னவர் கோவே” (வ.கா.20: 21-23)

என்பன அவ்வடிகள். இக்காட்சியும் கூற்றுக்கான பதிவு என்பது பயிலும் தோறும் புலனாகும். மேலும்,

“செய்தவம் இல்லாதேன் தீக்கனாக் கேட்ட நாள்
எய்த வுணரா திருந்தேன்மற் றென்செய்தேன்
மொய்குழல் மங்கை முலைப்பூசல் கேட்டநாள்
அவ்வை உயிர் வீவும் கேட்டாயோ தோழீ
அம்மாமி தன்வீவும் கேட்டாயோ தோழீ” (வஞ்சிக் காண்டம்,வாழ்த்துக் காதை.29:5)

என்று கண்ணகி கோயிலின் முன் தேவந்தி அவள் உரைத்த கனவினை நினைத்துப் புலம்புமிடத்தும் கூற்றாக இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. ‘முன் செய்த நல்ல தவம் இல்லாதேன் யான்! நீ கண்ட தீக் கனாவைக் கூறிய அந்நாளில் அதைப் பற்றிச் சிறிதும் ஆராய்ந்து பாராதொழிந்தேன். ஐயோ என்ன காரியம் செய்தேன்!’ என்பது அதற்கான விளக்கம் ஆகும்.

கண்ணகிக் கனவு 

கண்ணகியின் இயங்கு நிலைகள் யாவும் அவள் மனத்திலிருந்து உதித்தவை. யாரும் சொல்லி அவள் செயல்படவில்லை என்பதைக் கனவு உத்தியின் வழி இளங்கோ ஆழமாக முன்வைக்கிறார். அவள் மனம் அவள் கனவு என்ற நிலையில் அவளை அவளது கனவு நெறிப்படுத்துகிறது. கணவன் இறந்து கிடக்கிறான்; என்ன செய்வது என்று அறியாத அவளுக்கு(கண்ணகிக்கு) அவளது கனவே வழிகாட்டுகிறது. இதனை,

“என்றாள் எழுந்தாள் இடர்உற்ற தீக்கனா
நின்றாள் நினைந்தாள் நெடுங்கயல்கண் நீர்சோர
நின்றாள் நினைந்தாள் நெடுங்கயல் நீர்த்துடையாச்
சென்றாள் அரசன் செழுங்கோயில் வாயில்முன்” (வழ.கா.19:72-75)

என்ற அடிகள் எடுத்துரைக்கும். கனவு ஒரு பெண்ணை வழி நடத்துகிறது. இங்குக் கவனிக்க வேண்டியது யாருடைய பலனையும் எதிர்பார்க்காது யாருடைய உருவடிப்பும் இல்லாத அப்பழுக்கற்ற தன்னிலையின் அதாவது பெண்ணின் சுய சிந்தனை வெளிப்பாட்டின் செயல்பாடு என்பதை இப்பதிவு தூண்டி நிற்கிறது. ஏனெனில் கண்ணகி தான் கண்ட கனவினைத்  தேவந்தியிடம் உரைத்தபோது அவள் உரைத்த பரிகாரங்களையும் விலக்கியவள் அவள் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றிக் “கோவலன் கனவு காண்பதற்கு முன்பே கண்ணகி கனவு கண்டாள். அக்கனவைத் தேவந்தியிடம் கூறினாள். ஆனால் அதனைக் கணவனைக் கண்டவுடன் மறந்தே போயினாள். கணவன் வானவர் குழாத்துள் புகுந்த பின்னர் தான் அதனை நினைத்துக் கொண்டாள். கனவினை மறந்த நிலை அவள் கற்பின் பெருந்திறம். கோவலன் தன் கனவினை மறவாது நினைத்திருந்த நிலை தன் மனமாற்றத்தின் பயனாகத் தன் வாழ்வின் விளைவினை மன உறுதியோடு எதிர்பார்த்து வரவேற்று நிற்கிற அவன் உயர்வின் பெருஞ் சிறப்பாகும்”4 என்று தெ.பொ.மீ. குறிப்பிடுவார்.

பின்வருவதை முன்னர் உணர்த்துதற்காக நிமித்தம், அசரீரி உள்ளிட்ட இன்ன பிற நம்பிக்கை சார் கூறுகளைக் காட்டிலும் கனவு உத்தியினைக் கையாண்டுள்ளது ஆசிரியரின் தனிச்சிறப்பைப் புலப்படுத்துகிறது. காரணம் கனவு ஒன்றே தனி மனித மனம் சார்ந்த சுதந்திர வெளிப்பாட்டிற்கான வெளியாக உள்ளமையாகும். கண்ணகியின் சுய சிந்தனை வெளிப்பாடு, கோவலனின் சுய சிந்தனை வெளிப்பாடு, அரசமாதேவியின் சுய சிந்தனை வெளிப்பாடு என்ற நிலைகளில் கனவினைப் பொருள் கொள்ளுதல் காப்பியப் போக்கிற்கும் பாத்திர அறக்கட்டமைப்பின் தன்மைக்கும் பொருந்துவதாகும்.

உரைசால் பத்தினியின் உயர்வுக்கான கண்ணகியின் கனவும்: ஊழ்வினை கவ்வக் காத்துக் கொண்டிருக்கும் கோவலனின் கனவும்; அரசியல் பிழைக்கக் காரணமான பாண்டியனைக் கூற்றுவன் பற்றக் காத்துக்கிடக்கும் பாண்டிமாதேவியின் கனவும் எனச் சிலம்பின் மையக்கருத்துக்கள் கனவுக் காட்சிகளிலும் இணைத்துச் செல்லும் மாண்பு இலக்கியக் கட்டமைப்பின் உட்கூறுகளிலும் விரவிக்கிடக்கிறது. இது இளங்கோவடிகளுக்கே அன்றி வேறு எப்படைப்பாளருக்கும் இல்லாத தனிச்சிறப்பாகும்.

சுருங்கக் கூறின் கண்ணகியின் காதல் வெளியாக, கோவலனின் பெருமையை வெளிக் கொணர்வதற்கான தளமாகக் கனவு பயன்படுத்தப்பட்டுள்ளது.

தலைப்புப் பொருத்தப்பாட்டில் கனா

 “கனாத்திறம் உரைத்த காதை” எனும் தலைப்பு, கோவலன் கண்ட கனாக் காதைக்கு வைக்கப்படவில்லை. அரசமாதேவி கண்ட கனாக் காதைக்கு வைக்கப்படவில்லை. கண்ணகி கண்ட கனாவிற்கே தலைப்பாய் வைக்கப்படுகிறது. காரணம் அங்கு தான் புலவனின் இலட்சியம் வெளிப்பட்டு நிற்கிறது. கனாத்திறம் என்பது வெற்றியை நோக்கியதாக இருக்க வேண்டும். கண்ணகி கண்ட கனா வெற்றியில் முடிகிறது.

“தற்காத்துத் தற்கொண்டான் பேணி தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்”5 என்ற குறள் மொழிக்கு ஏற்பத் தன்னைக் காத்துக்கொள்ள கணவன் வருகையை எதிர்நோக்கி நிற்கிறாள். தற்கொண்டானைப் பேணச் சிலம்பினைக் கொடுக்கிறாள். தகைசான்று சொற்காக்கக் குற்றமற்றவன் என்பதை நிறுவ அரசன் முன் சென்று கட்டுரைகிறாள். அதுமட்டுமன்றிச் சோர்வற்ற நிலையில் சேரநாடு வரை தனியே சென்று நிறைவாக வானுலகையும் அடைகிறாள். வானுலகு என்பது இங்குப் புகழுலகு என்பதாகப் பதிவுசெய்யப்படுகிறது. ஆகக் கோவலன் கனவும் அரசமாதேவியின் கனவும் அழிவை நோக்கிப் பயணிப்பவை. கண்ணகியின் கனவே புதுமைக்கான ஆக்கத்தை நோக்கிப் பயணிக்கக் கூடியது என்பது தெளிவு. அதுமட்டுமன்றிக் கனவின் திறம் அடுத்தக்கட்டத்தை நகர்த்திச் செல்வதாக இருக்கும் பண்புடையது. அவ்வகையில் பொருள் கொண்டதனால் என்னவோ கண்ணகி கனா எடுத்துரைக்கும் காதைக்குக் “கனாத் திறம் உரைத்த காதை” என்கிறார். இப்பொருத்தப்பாட்டை ஏனைய இரண்டு கனவுகள் இடம்பெற்ற காதைகளிலும் பார்க்க முடியும்.

ஒன்று அடைக்கலக் காதை. இக்காதை கண்ணகி கோவலன் இருவரும் மாதரியிடம் அடைக்கலமாகக் கொடுக்கப்படுவதனால் மட்டும் பொருத்தப்பட்டது அன்று. மணிமேகலை என்னும் மங்கை நல்லாளை மாதவி புத்ததேவனிடம் அடைக்கலம் ஆக்கியமைக்காகக் கண்ட கோவலனின் கனவும் காரணமாகிறது. அது போல் அரசமாதேவி வழக்குரைக்க வரும் இடத்தில் அரசுக்கட்டிலில் அமர்ந்து கனவினை எடுத்துரைக்கிறாள். இது பிரச்சனை ஒன்றை விடைதேடி வழக்காடு மன்றத்திற்குக் கொண்டுவந்து தீர்த்துக் கொள்வதற்கு இணையானதாகும். அரசமாதேவி அந்தப்புரத்தில் கணவனோடு கனவினைப் பற்றிப் பகிர்ந்துகொள்ள இல்லை. அரசுக் கட்டிலில் சிங்கம் போன்று வீற்றிருக்க அத்தருணத்திலேயே சொல்லப்பட்டதாகப் படைக்கப்படுகிறது. எனவே சூழலுக்குத்தகக்  காதைகளுக்குப் பெயர் சூட்டக் கனவுக் கூறுகளும் அடிப்படைகளாக அமைந்திருப்பதைப் பெறமுடிகிறது.

பெண்ணியத்தின் வளர்ச்சிப்படி நிலையில் பெண்மை

என்றைக்கும் பெண் குழந்தைகளின் மீது பெற்றோர் தனிக் கவனம் செலுத்துவதுண்டு. அவ்வகையில் வளர்க்கப்பட்ட முன்னோர்களின் அடையாளப் பாத்திரம்தான் கண்ணகி. இதற்கு இன்றைய சூழல் விலக்குடையதன்று. ஒரு படிநிலை வளர்ச்சியில்தான் அறிவு, தொழில், முன்னேற்றம், கல்வி, புரட்சி என யாவும் வளர்ச்சியுறும். அவ்வகையில் கண்ணகி என்ற தனி மனிதப் பெண்ணின் முன்னேற்றமும் அத்தகையதான படிநிலை வளர்ச்சியில் வளர்ந்ததையே இளங்கோ உணர்த்தி நிற்கிறார். மண்மகள் அறியாதவள்; கணவனையன்றி வேறு ஒன்றையும் தொழாதவள்; பிற கோட்பாடுகளைப் பகுத்து ஆராய்ந்து ‘பீடு அன்று’ என்று கூறும் தெளிவுடையவள்; கோவலனின் வாட்டம் அறிந்து ‘சிலம்பு உள கொண்ம்’ என்று கூறும் உரிமை உடையவள்; உடன் வா என்றதும் மறுக்காது செல்லும் பண்பாட்டை அறிந்தவள்; கணவனுடன் இருக்கும் வாய்ப்புக் கிடைத்தபோது சமைத்து உடன் அமர்ந்து உணவு பரிமாறி மகிழ்ச்சி கொண்டவள்; ‘முது நரியாகுக’ என்று கவுந்தி சபித்தப் போது கருணை காட்டக் கூடிய தெளிவு மிக்கவள்; எல்லாவற்றுக்கும் மேலாகத் தனது உரிமைக் கணவனை இழந்தப் போது உரிமைக்காக நீதிக்காகப் போராடும் துணிவு கொண்டவள். இத்தகைய துணிவு அவளுக்கு வரக் காரணங்கள் இயல்பாகவே அவள் கொண்டிருந்த நம்பிக்கையும் அவள் கண்ட கனவும் ஆகும்.

புரட்சி என்பதும் பெண்ணியம் என்பதும் கூட்டம் கூடி மேடை ஏறிப் பேசுவதற்கான விடயம் மட்டுமன்று. அது நெஞ்சில் ஊன்றிச் செயலில் நிகழும் உணர்வு வெளிப்பாடு. அத்தகைய வெளிப்பாட்டினையே கண்ணகி கண்ட சிலம்புக் கனாவின் வழி இளங்கோவடிகள் ஊக்கிச் செல்கிறார். பெண்களுக்கான உரிமையைப் பெண்ணே பெறப் போர்க் கொடிதூக்க வேண்டும் என்பது இன்றைய சூழல். அப்படி இருக்க ஆண் படைப்பாளரான இளங்கோவடிகள் உருவாக்கிய பெண் படைப்பு எங்ஙனம் புரட்சிக்கு வித்திடுவதாகும் என்று கேள்வி எழுப்பின், கற்பு என்ற கட்டமைப்பை உருவாக்கியது ஆண் மையம் தானே. அம் மையம் தான் கற்பினை அழிக்கும் முயற்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. எனவே அதற்கான எதிர்க் குரலும் அங்கிருந்து வருவதுதானே பொருத்தமுடையது என்ற அடிப்படையில் தொடக்கக் காலகட்டத்தின் இம்முயற்சி என்றும் நிலைபெறுடைய நிலையில் ஏற்கத்தக்கதாகவும் எதார்த்தமானதாகவும் அமைகிறது.

அடிக்குறிப்புகள்:

  1. பாரதியார் கவிதைகள் “விடுதலை” பா.2.
  2. கவிமணி கவிதைகள் “பெண்களின் உரிமைகள்” – tamilvu.org பா.730.
  3. பாரதிதாசன் கவிதைகள் “சஞ்சீவி பர்வதத்தின் சாரல்” – ப.3.
  4. தெ.பொ.மீ. களஞ்சியம் சிலப்பதிகாரம்: குடிமக்கள் காப்பியம், காவ்யா வெளியீடு, சென்னை, இரண்டாம் பதிப்பு – 2011, பக்.80-81.
  5. திருக்குறள் – குறள்:56.

*****

கட்டுரையாளர்
இணைப் பேராசிரியர், தாகூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
குரோம்பேட்டை, சென்னை – 45

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *