கிரேசி மோகன்
Bhagavan with Laskhmi – the cow
“வெங்கட் ரமணர் விவேகபசு லஷ்மியை
தங்கக் கைகளால் தடவிஅன்பு -பொங்கிடும்
கண்ணால் நவநீத கைவல்யம் காட்டுகிறார்;
கண்ணன்போல் ரமணார்வம் COW”….கிரேசி மோகன்….
கிரேசி மோகன்
Bhagavan with Laskhmi – the cow
“வெங்கட் ரமணர் விவேகபசு லஷ்மியை
தங்கக் கைகளால் தடவிஅன்பு -பொங்கிடும்
கண்ணால் நவநீத கைவல்யம் காட்டுகிறார்;
கண்ணன்போல் ரமணார்வம் COW”….கிரேசி மோகன்….
-எம். ஜெயராம சர்மா- மெல்பேண்
இலக்கியத்தை இலக்கணத்தை
இங்கிதத்தை நானறிய
நிலைத்தவொரு அறிஞரென
நின்றிருந்தார் ’முவ’வே !
தலைக்கனமும் இல்லாமல்
தனதுநிலை பிறழாமல்
எடுத்தபணி செய்தனரே
எங்களது ’முவ’வும்!
தனித்தமிழால் கதைகள் சொன்னார்
தரமுடைய நாவல் தந்தார்
பொறுப்புடனே தமிழ் படித்தார்
பொறுமைநிறை ’முவ’வும்!
மொழிநூலை நான்கற்க
முன்னானார் ’முவ’வும்
தெளிவாகத் தமிழெழுத
சிறந்தகுரு ஆனாரே!
எங்கள்தமிழ் இலக்கியத்தை
எல்லோரும் அறிவதற்காய்
எழுதுகின்ற பணிதன்னை
ஏற்றவரும் ’முவ’வே!
பாரததத்தின் பிரதமரே
பணிகொடுத்து நின்றாரே
’முவ’வின் முயற்சியினால்
முத்தமிழைப் பலர்பார்த்தார்!
அமுதத் தமிழ்மொழியை
அரவணைக்க வழிசெய்த
அறிஞராம் ’முவ’வை
ஆண்டாண்டு போற்றிடுவோம் !
’முவ’வின் பெயர்கேட்டால்
யாவருமே தமிழ்படிப்பார்
தாமாகக் கற்றுணர்ந்து
தலைநிமிர்ந்து நின்றாரே!
சாவாத மருந்தெனவே
தரமுடைய நூல்களெலாம்
’முவ’வின் மதியினின்று
முகிழ்த்தெழுந்து வந்தனவே!
ஆலமரமாக அவரிருந்தாரப்போது
அவருடைய நிழலினிலே
அறிஞரெலாம் இருந்தனரே
ஞாலமெலாம் சென்றுஅவர்
நம்பெருமை சொன்னாரே
சீலநிறை ’முவ’வை
சிந்திப்போம் எந்நாளும்!
{இன்று (அக்டோபர் 10) மு.வரதராசனாரின் நினைவு நாள்.}
கோபாலன் வெங்கட்ராமன்
சுற்றறிக்கை.
மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக திருவையாறு காந்தி இயக்கம், தஞ்சை மாவட்ட அளவிலான கல்லூரி மாணவர்கள் கலந்து கொள்ளும் கருத்துரையாடல், காந்திய அறிஞர்களின் கருத்து விளக்கங்களும் கொண்ட ஒருநாள் பயிலரங்கம் வருகிற 18-10-2014 சனிக் கிழமை காலை 10 முதல் மாலை 5 வரை திருவையாறு மேட்டுத் தெருவில் உள்ள சரஸ்வதி அம்பாள் தொடக்கப் பள்ளியில் நடைபெறும். இந்த கருத்தரங்கில் காந்திய சிந்தனைகளையும், அவரது கோட்பாடுகளைப் பற்றியும் மாணவர்கள் விரிவாகத் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற நோக்கத்துடன் இது நடத்தப்படுகிறது. ஓரளவு மகாத்மா காந்தியடிகளின் வாழ்க்கையையும், கருத்துக்களையும் அறிந்த அல்லது அறிந்து கொள்ளும் ஆவலுள்ள மாணவர்கள் சிலரை ஒவ்வொரு கல்லூரியிலிருந்தும் அழைத்து இதில் கலந்து கொள்ள வைக்க வேண்டுமென்பது எங்கள் அவா.
இந்த ஒருநாள் கருத்தரங்கில் கலந்துகொள்ளும் மாணவர்கள் குறித்த விவரங்களைக் கீழ்கண்ட முகவரிக்கு 15-10-2014ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டுமாய் அன்போடு கேட்டுக் கொள்கிறோம். அனுப்பவேண்டிய முகவரி:
காந்தி இயக்கம், பாரதி இலக்கியப் பயிலகம்,
28/13, எல்.ஐ.சி.காலனி 5ஆம் தெரு, மருத்துவக் கல்லூரி சாலை,
தஞ்சாவூர் 613007. தொலைபேசி: 9486741885.
தலைப்பு: சமுதாயத்துக்குத் தேவையான காந்திய சிந்தனைகள்.
நாள்: 18-10-2014 சனிக்கிழமை நேரம்: காலை 10 முதல் மாலை 5வரை.
1. ஒவ்வொரு கல்லூரியிலிருந்தும் 4 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பலாம்.
2. மாணவர்கள் தங்கள் சொந்த செலவில் வந்து செல்ல வேண்டும். மதிய உணவும் இடைவேளை
தேநீரும் அளிக்கப்படும்.
3. கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு சான்றிதழ்களும், காந்திஜியின் நூலும் பரிசளிக்கப்படும்.
4. மாணவர்கள் மகாத்மா காந்தியடிகளின் சிந்தனைகளில் கீழ்கண்ட ஏதாவதொரு தலைப்பில் (5 பக்கங்களுக்குள்) ஒரு கட்டுரையை எழுதிக் கொண்டு வரவேண்டும். அந்த தலைப்பில் மாணவர் களின் கலந்துரையாடல் நடைபெறும்; தொடர்ந்து காந்திய அறிஞர்கள் அவைகளுக்குத் தகுந்த விளக்கங்களை அளிப்பார்கள்.
தலைப்புகள்:
1. காந்திஜி – சோதனைகளும் சாதனைகளும்.
2. தென்னாப்பிரிக்காவில் காந்திஜி.
3. இந்திய சுதந்திப் போராட்டத்தில் காந்திஜியின் பங்களிப்பு.
4. உலக அமைதிக்குத் தேவை காந்திய கொள்கைகளே!
கல்லூரி முதல்வர்களும், துறைத் தலைவர்களும், இப்பயிலரங்கின் முக்கியத்துவம் கருதி தங்கள் கல்லூரியிலிருந்து மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பங்கேற்கச் செய்ய வேண்டுமாய் அன்போடு கேட்டுக் கொள்கிறோம். நன்றி.
தஞ்சாவூர்,
9-10-2014. தலைவர், காந்தி இயக்கம்.
–சு.கோதண்டராமன்.

கணானாம் த்வா கணபதிம் ஹவாமஹே
கவிம் கவீனாம் உபமஸ்ரவஸ்தமம்
ஜ்யேஷ்டராஜம் ப்ரம்மணாம் ப்ரம்மணஸ்பதே
ஆனச் ச்ருண்வன் ஊதிபிஸ் ஸீத ஸாதனம்.
இது விநாயகருக்கு உரியதாக தற்போது பயன்படுத்தப்படும் மந்திரம் (ரிக் 2.23.1.) இதில் கூறப்படும் பிரம்மணஸ்பதி யார், விநாயகரா அல்லது வேறு தெய்வமா?
இந்த சூக்தத்தில் 19 மந்திரங்கள் உள்ளன. அவற்றில் 13 ப்ருஹஸ்பதியைப் போற்றுகின்றன. இடை இடையே வரும் 6 பிரம்மணஸ்பதியைப் போற்றுகின்றன. இவர்கள் இருவரும் ஒன்றா, வேறு வேறா? வேறு வேறாயின் ஏன் ஒரே சூக்தத்தில் இவர்களைச் சேர்த்து வைக்க வேண்டும்?
ப்ருஹஸ்பதி என்ற சொல்லுக்கு பெரும் தலைவர் என்று பொருள். ப்ரம்மணஸ்பதி என்பது மந்திரத்தின் தலைவர் எனப் பொருள்படும்.
ரிக் வேதம் முழுவதும் பல வேறு இடங்களில் வரும் மந்திரங்களிலிருந்து இவர்களுடைய குணாதிசயங்களைத் தொகுத்துப் பார்க்கலாம். அறிவுள்ளவர், பகைவர்களை அழிப்பவர், பாவங்களைப் போக்குபவர், மக்களைக் காப்பவர், செல்வம் கொடுப்பவர் என்ற அடைமொழிகள் இருவருக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. இது எல்லாத் தேவர்களுக்கும் சொல்லப்படுவதுதான்.
தோத்திரங்களின் தலைவர் என்ற சிறப்பு இருவருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆம். ப்ருஹஸ்பதியும் ப்ரம்மணாம் ஜனிதா (ஸ்தோத்திரங்களின் தந்தை) எனப்படுகிறார். எனவே இருவரும் ஒன்று என்று ஆகிறது.
இந்தத் தெய்வம் இந்திரன்தான் என்று கருதுவதற்கும் இடம் இருக்கிறது. வலனைக் கொன்று பசுக்களை விடுவித்த சிறப்பு ப்ரம்மணஸ்பதிக்கும் சொல்லப்படுகிறது. வேறு ஒரு மந்திரத்தில் அந்தப் பெருமை ப்ருஹஸ்பதிக்கும் கொடுக்கப்படுகிறது. மேலும், வேறு ஒரு மந்திரத்தில், பூமியை நிலை நிறுத்தினார் என்ற இந்திரனின் சிறப்பு ப்ருஹஸ்பதியின் பெயரால் பேசப்படுகிறது.
ப்ரம்மண ராஜா (தோத்திரங்களின் ராஜா) என்ற பெயர் இந்திரனுக்குக் கொடுக்கப்படுகிறது. அத்ரிபித் (மலைகளை உடைத்தவர்), விருத்திரனை வென்றவர், நகரங்களை அழித்தவர் என்ற இந்திரனின் சிறப்புகள் ப்ருஹஸ்பதிக்கும் கொடுக்கப்படுகின்றன.
எனவே ப்ருஹஸ்பதி என்பதும் பிரம்மணஸ்பதி என்பதும் இந்திரனுக்கு வழங்கப்படும் வேறு பெயர்கள்தான் என்று நாம் முடிவு கட்டும் வேளையில், ப்ருஹஸ்பதியும் இந்திரனும் இரு வேறு தெய்வங்கள் என்று கருதச் செய்யும் மந்திரமும் ஒன்று இருக்கிறது. ப்ருஹஸ்பதியும் இந்திரனும் ஆகிய நீங்கள் இருவரும் விண்ணின் செல்வத்திற்கும் மண்ணின் செல்வத்திற்கும் அதிபதியாக இருக்கிறீர்கள் என்று சொல்கிறது ஒரு ரிக் (7.97.10).
அக்னிக்கே உரிய நீலப்ருஷ்ட (கரு நிற முதுகு உள்ளவர்) என்ற அடைமொழியால் ப்ருஹஸ்பதி அழைக்கப்படுகிறார்.
மொத்தத்தில் பெயர்கள் வேறு பட்டாலும், தனித் தனி தெய்வமாகப் போற்றப்பட்டாலும் எல்லாமே ஒன்றேயான ஸத்தான பரம்பொருளைத் தான் குறிக்கின்றன என்பதை இவை காட்டுகின்றன.
முதலில் குறிப்பிட்ட மந்திரத்தில் கணபதி (கூட்டத்தின் தலைவன்) என்ற சொல் இருப்பதால் அதை விநாயகருக்கு உரியதாகப் பிற்காலத்தில் ஆக்கினர்.
படம் உதவிக்கு நன்றி: http://commons.wikimedia.org/wiki/File:Brihaspati.jpg
கே. ரவி
“அப்ப, கணம் என்பது ஒரு நிமிடத்தை விடக் குறைவான நேர அளவா?” சிகாமணி கொட்டாவி விட்டுக் கொண்டே கேட்டதும் தலையில் அடித்துக் கொள்கிறேன். தலைதானே சிகாமணியின் தலைமைச் செயலகம்!
கிழிஞ்சுது கிருஷ்ணாவதாரம். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு விஷயத்தைக் கோட்டை விட்டுவிட்டாயே, சிகாமணி! கணம் என்பது ஓர் அளவவே இல்லை. அது ஒரு புள்ளி. கணிதத்தில் புள்ளிக்கு எப்படிச் சுற்றளவு, ஆரம் எதுவும் கிடையாதோ, அப்படித்தான் கணமும். இடத்துக்குப் புள்ளி எப்படியோ, காலத்துக்குக் கணம் அப்படி. ஆனால், சாதாரண அளவுகோல்களுக்குச் சிக்காத புள்ளியும், கணமும் ‘நுட்ப உடல்’ என்று மேலே நான் குறிப்பிட்ட சாதனத்துக்கு வெகு சுலபமாக அகப்பட்டு விடுகின்றன. நுட்பத்தின் பரிமாணங்களே வேறு.
கவிதை ஜனிக்கும் கணங்களில், நான் வேறு வேறு பரிமாணங்களில் நுட்பமாக அனுபவம் பெற நேரிடுகிறது. நுட்பமாக என்றால்…? இதை எப்படி உரைநடையில் சொல்லி விளங்க வைக்க முடியும்? அதனால்தான், கவிதையிலேயே சொல்ல முற்பட்டேன்:
பாடலைக் கேட்க : https://soundcloud.com/vallamai/sets/www-vallamai-com
முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது வேதாளம்
கருவத் திற்கோர் உருவம் அளித்துக்
கருவுக் குள்ளே வைத்து வளர்த்திவ்
வுலகுக் கென்னை அழைத்தாலும்
கால்கள் கைகள் விழிகள் எனக்
காவல் அமைத்துக் கொடுத்தாலும்
காதல் நட்பு சுற்றமெனப்
பாடல் நூறு படித்தாலும்
முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது வேதாளம்
ஓலமெழுப்பும் கடலோரத்தில்
ஒற்றை மரத்தின் வெற்று நிழலில்
உடைந்த நிலவை உரசிப் போகும்
கருமேகக் காட்சிகளில்
மழை ஓய்ந்த மாலைப் பொழுதில்
மல்லாந்த படித்துடிக்கும்
பூச்சிகளின் உயிர்ப் போராட்டங்களில்
பேச்சிழக்க வைத்துவிடும்
பெருவெளியின் ஒருநினைப்பில்
அட
அனுபவத்திற் குள்ளேயும் ஓர் அதல பாதாளம் – என
மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது வேதாளம்
வானப் பரப்பை வாரிச் சுருட்டி
வார்த்தைக ளுக்குள் ளேவைத் துருட்டிக்
கணமென் றிங்கோர் அணுவைப் பிளந்து
கனவுப் பொருளாய் மாறி நுழைந்து
யார்யார் தலையோ சிதறி வெடிக்கக்
கதைகள் நூறு சொல்லி முடிக்க
மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொண்டது வேதாளம் – அட
அனுபவத்திற் குள்ளேயும் ஓர் அதல பாதாளம்
“புரிந்து விட்டது!” குதிக்கிறான் சிகாமணி, ‘யுரேகா’ என்று கத்திக் கொண்டே ஓடிய ஆர்க்கிமிடீஸைப் போல, ஆனால், நல்ல வேளை, நிர்வாணமாக இல்லை.
அவன் சொல்கிறான்: “வாத்யாரே. புரிந்து விட்டது. கம்ப்யூட்டர், அதாம்பா, கணினி. அதற்கு ஹார்ட் வேர், ஸாஃப்ட் வேர் என்று இரண்டு உறுப்புகள் உண்டென்கிறோமே, அதாவது, புலன்களால் கண்டு, தீண்டி அறியப்படும் திண்பொருள், புலன்களுக்கு அகப்படாத மென்பொருள்! அது போல் நமக்குத் திட்ப உடல், நுட்ப உடல் என இரண்டு உடல்கள் உண்டென்கிறாய். அவ்வளவுதானே?”
எவ்வளவு அனாயசமாகச் சொல்லி விட்டான். இதை விளக்கத்தான் நான் இவ்வளவு நேரம் சிரமப்பட்டுக் கொண்டிருந்தேன். புத்தி சிகாமணி புத்திசாலிதான்! அவன் வேறு எப்படி இருக்க முடியும்!
திண்பொருள், மென்பொருள். அடேடே! சரிதான் என்று தோன்றுகிறது.
கண் என்பது திண்பொருள், பார்வையோ மென்பொருள். கண்ணிருந்தும் பார்வை இல்லாதவர்கள் உண்டே.
கவிதை திண்பொருள், அதன் கற்பனை அல்லது ப்ரதீபா மென்பொருள்.
உடல், அதாவது ஸ்தூலமாகிய திட்ப உடல் திண்பொருள், அதையியக்கும் சக்தி அல்லது மனம் என்று சில சமயம் குறிக்கப்படும் சாதனமாகிய நுட்பவுடல், மென்பொருள். நுட்பவுடலும் மனமும் ஒன்றா, வேறுவேறா என்ற விவாதத்தை இங்கே ஆரம்பிக்க வேண்டாம். அதைப் பிறகு வைத்துக் கொள்வோம்.
மேலே உள்ள கவிதை என்ன சொல்கிறது?
‘கணம்’ என்பது காலத்தின் அணு. அதைப் பிளக்க முடியும். அதற்குள் கனவாக மாறித்தான் நுழைய முடியும். இதையெல்லாம் விளக்க முடியுமா?
அது போகட்டும். மேலே உள்ள கவிதை 1980-ல் வந்தது. அப்போது எனக்கு வயது 27. அந்த வயதில் வரவேண்டிய கவிதையா இது! எவ்வளவுதான் கை, கால் அமைத்துக் கொடுத்தாலும், உலகம் என்ற பொம்மையை, பொம்மலாட்டத்தைக் காட்டிச் சமாதானம் செய்தாலும், வேதாளம், மீண்டும் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக் கொள்கிறதாமே! எப்படி? எது வேதாளம்? எது முருங்கை மரம்? விக்கிரமாதித்தன் உண்டா? எப்படி அலைஅலையாய்க் கேள்விகளை எழுப்புகிறது இந்தக் கவிதை!
போதும் இதற்கு மேல் நானே என் கவிதைக்கு பாஷ்யம், வியாக்யானம் எல்லாம் எழுதக் கூடாது, உஷ்!
எனக்கு மேற்சொன்ன கவிதையின் அர்த்தத்தில் உள்ள நாட்டத்தை விட, அதில் வரும் ‘மழை ஓய்ந்த மாலைப் பொழுதில்’ என்ற வரியை, ‘மழைய்ய் ஓய்ய்ந்த மாலைப் பொழுதில்’ என்று வாசகர்கள் படிக்க வேண்டுமே என்ற கவலைதான் அதிகம்!
மொத்தத்தில் அவரவர்க்கு எதில் விருப்பம் அதிகமோ அதில்தான் நாட்டம் செல்லும். இயற்கைதானே! இசைக் கச்சேரியில், தனக்குத் தெரிந்த ஒரு பாடலைப் பாடகர் பாடும் பொழுது, ரசிகரின் கவனம் அதிகம் ஈர்க்கப்படுவதை அன்றாடம் பார்க்கிறோமே.
நான் எழுதிய நூல்களை எல்லாம் எனக்குத் தெரிந்தவர்களுக்கு, அதாவது, அவர்களுக்கு என்னைத் தெரிந்திருக்கா விட்டாலும், நூல்கள் பயிலும் நாட்டம் உள்ளவர்கள் அவர்கள் என்று நான் தேர்வு செய்தவர்களுக்கு, அனுப்புவது வழக்கம். காசு கொடுத்துக் கடையில் என் நூல்களை யார் கேட்டு வாங்கிப் படிக்கப் போகிறார்கள் என்று என் நூல்களை எந்தக் கடையிலும் விற்பனைக்காக நான் வைத்ததே இல்லை. நம் வாசகர்கள் மீது எனக்கு அப்படியொரு நம்பிக்கை!
அப்படி நான் அனுப்பிய நூல்களை முழுதும் படித்து, உடல் முடியாத நிலையிலும் எனக்குக் கடிதங்கள் எழுதிய சில பெரியவர்களை நான் நினைத்துப் பார்க்கிறேன். உடனே நினைவுக்கு வருபவர், மிகச் சமீபத்தில் அமரரான அருட்செல்வர், தொழிலதிபர், பொள்ளாச்சி நா.மகாலிங்கம். அவர் ஏறக்குறைய ஐம்பது ஆண்டுகளாக நடத்திவரும் வள்ளலார்-காந்தி விழாவன்று விழாமேடையிலேயே, விழா நடக்கும் போதே, காந்தி ஜெயந்தியான அக்தோபர் 2-ஆம் தேதி அவருடை ய உயிர் பிரிந்த செய்தி, அவருக்கு அந்தப் பெரிய மஹான்கள் இருவரிடத்திலும் இருந்த பக்திக்குச் சான்றாகிறது.
1971 அல்லது 72 என்று நினைக்கிறேன், பொள்ளாச்சியில் அருட்செல்வர் ஒரு திருமண மண்டபம் திறந்த போது அவர் அழைப்பை ஏற்று நான் அந்த விழாவில் கலந்து கொள்ளப் பொள்ளாச்சி சென்றிருந்தேன். அங்கே சென்ற பிறகு எனக்கு உடல்நலக் குறைவால் காய்ச்சல் ஏற்பட்டது. அதை அறிந்த மகாலிங்கம் அவர்கள், சென்னைக்குப் புகைவண்டியில் போக வேண்டாம் என்று என்னைத் தடுத்துத் தன்னுடனே தன் காரில் சென்னைக்கு அழைத்து வந்த அன்பை என்னென்பது! அன்று ஓரிரவு முழுவதும் காரில் அவர், எழுத்தாளர் திரு.பகீரதன், நான் ஆகிய மூவரும் இலக்கியம், ஆன்மிகம் என்று ஓயாமல் பல செய்திகள் பேசிக் கொண்டே வந்ததை மறக்க முடியாது. வரும்வழியில் ஏதோ ஓர் ஊரில் சக்தி சுகர்ஸ் ஓய்வு விடுதியில் தங்கிவிட்டு, காலையில் புறப்பட்டதும், வண்டியை திசைத்திருப்பிப் பாண்டிச்சேரி நோக்கி விடச்சொன்னார். பகீரதன் ஏனென்று கேட்டதும், ரவிக்கு நான் சித்தி வளாகத்தைக் காட வேண்டும் என்று சொல்லி என்னை அங்கே அழைத்துச் சென்று, வள்ளலார் ஜோதியில் கலந்து மறைந்த அறையை தரிசிக்க வைத்து, அதன்பிறகு பாண்டிச்சேரியில் அரவிந்தர் ஆசிரமத்துக்கும் அழைத்துச் சென்று, மாலையில் சென்னைக்குக் கொண்டுவந்த சேர்த்த அவருடைய அன்புள்ளத்தை என்னென்று சொல்ல!
நான் எழுதிய சில நூல்களை 2007-ல் அருட்செல்வருக்கு அனுப்பினேன். சில நாட்களிலேயே அவரிடம் இருந்து ஒரு நீண்ட கடிதம் வந்தது. அதில் என் கட்டுரைகள் பற்றிக் குறிப்பிட்டு விட்டு, ‘உன்னோடு நான்’ என்ற என் கவிதைத் தொகுப்பில் இருந்து, அவர் மனத்தைத் தொட்ட ஒரு கவிதையைக் குறிப்பாகப் பாராட்டி எழுதியிருந்தார். அது எண்சீர் விருத்தங்கள் பத்து அடங்கிய நீண்ட கவிதை. அதன் முதல் விருத்தத்தை மட்டும் இங்கே தருகிறேன். அதன் முதல்வரியே அருட்செல்வரை ஈர்த்திருக்கும்:
நாதமய மானஅருட் சோதி யேவுன்
நாடகத்தில் என்வேடம் என்ன அப்பா
போதுமினி பொய்மாயப் பூட கங்கள்
போட்டுடைக்க வேண்டும்நீ உண்மை யெல்லாம்
வேதனையின் வெறியாட்டம் ஓய்ந்து போக
வேதவொலி கேட்கட்டும் விரைந்து சொல்க
சாதகங்கள் வெற்றிபெறக் கூடு மென்றால்
சத்யயுகம் மலரட்டும் தேவ தேவா
‘அருட்பெருஞ் சோதி’ என்ற மந்திரத்திலேயே சதா லயித்திருந்த அந்த நல்ல உள்ளத்தை, ‘அருட்சோதியே’ என்ற விளியுடன் தொடங்கிய கவிதை ஈர்த்தது இயற்கைதானே! அந்தப் பத்து விருத்தங்களில் ஒன்றைக் குறிப்பிட்டு அவர் நிறைவாக எழுதியிருந்த வரிகள் என்னை நெகிழ வைத்தன:
அந்தத்தை எண்ணிநான் அஞ்ச வில்லை
அந்தாதிப் பாட்டொன்றும் புதிய தில்லை
வந்தவரைக் கடைசிவரை வாழ வைக்கும்
வையகமாய் சத்யயுகம் மலர வேண்டும்
எனும் கவிதை வரிகள், உங்கள் கவிதைத் தொகுப்பெனும் குன்றின் உச்சியில் படர்ந்துள்ள கதிரவனின் ஒளி போன்று அமைந்துள்ளதை அகம் நிறைந்து வாழ்த்துகிறேன்.
அந்தத்தை எண்ணி அஞ்சாமல், தம் இறுதி மூச்சு வரை, நல்ல விஷயங்கள் பற்றிப் பல இதழ்களில் எழுதிக் கொண்டும், பல நல்ல பணிகள் ஆற்றிக் கொண்டும், 90 வயதுக்கு மேல் வாழ்ந்த அருட்செல்வரின் நினைவைப் போற்றுகிறேன்.
என் நூல்களை அனுப்பியதுமே படித்து விட்டுத் தம் கருத்துகளைக் கடிதங்களாக எனக்கு அனுப்பிய சான்றோர்
பெருமக்கள் பலரில், இன்னொரு கிழவரை நான் குறிப்பிட்டே ஆக வேண்டும். அவர் சாதாரணக் கிழவர் இல்லை. சாமான்ய மக்களுக்கும் நீதிதேவதைக் கோயிலின் ஆலயக் கதவுகளைத் திறந்து விட்ட நீதிக்கிழார்; உச்சநீதிமன்ற நீதியரசராக இருந்த போது பல புரட்சித் தீர்ப்புகள் மூலம் நீதித்துறைக்கே புதுப்பொலிவும், உந்துசக்தியும் தந்தவர்; நூறு வயதை நெருங்கிய முதுமையிலும் கூர்மையாகச் சிந்திக்கும் ஆற்றல் சற்றும் குறைவு படாமல் இன்னும் பத்திரிகைகளில் தம் நெஞ்சுக்குச் சரியென்று படும் கருத்துகளை எழுதி வரும் இளைஞர், நீதியரசர் திரு.வி.ஆர்.கிருஷ்ணய்யர்.
நான் எழுதிய “Law, Logic and Liberty ” என்ற சட்டத் திறனாய்வு நூலைப் படித்துவிட்டு, 2000-ஆம் ஆண்டில் அவர் எனக்கொரு கடிதம் எழுதியிருந்தார்.
என் மேஜை மீது இந்த நூல் ஒரு குறிப்புநூலாக இருக்கும் (“It will be a reference book on my table”)
இப்படி அவரே தீர்ப்பு வழங்கிய பிறகு வேறு யாரிடம் சென்று நான் சான்றிதழ் பெற வேண்டும்?
“கடிதம் எழுதும் வழக்கமில்லை கவிதை எழுத முடியும்” என்று சற்றே கர்வம் தொனிக்கப் பாடிய நான் எழுதிய நூல்களைப் படித்துவிட்டு எத்தனைப் பெருமக்கள் எனக்குக் கடிதங்கள் எழுதித் தங்கள் மேலான கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறார்கள்! இன்னும் பல பெரியவர்கள்! அவர்களைப் பற்றியும் எழுதுகிறேன்.
(தொடரும்)
-ரா.பார்த்தசாரதி
சிவப்பும் கருப்பும் நிறமுடைய பெட்டி
உங்கள் கடிதங்களைத் தாங்கும் பெட்டி 
வேலையில்லாப் பட்டதாரிகள் எதிர்பார்க்கும் நண்பனாய் இருந்தேன்
கல்லூரி மாணவனுக்கும் நான் ஒரு பாலமாய் இருந்தேன்
காதலர்களுக்கு என்றும் ஒரு தூதுவனாய் இருந்தேன்
நல்ல, கெட்ட செய்திகளையும் அறிவிப்பவனாய் இருந்தேன்
சிறு சேமிப்புக்கு என்றும் துணையாய் இருந்தேன்
மழையிலும் வெயிலிலும் உங்கள் கடிதங்களைச் சுமந்து சென்றேன்
காகிதம் மூலம் உங்கள் கருத்துக்களை எடுத்துச் செல்பவன்
பண்டிகை வந்தாலோ உங்கள் வாழ்த்துக்களை அனுப்பும் சேவகன்
தந்திகளை ஒதுக்கிய நீங்கள் என்னை ஒதுக்கி விடாதீர்கள்!
கணினி வந்ததால் எங்களை நசுக்கிவிடாதீர்கள்!
கணினி மூலம் கடிதங்களும் கருத்துக்களும் பரிமாற்றமே
கிராமத்திலும் நகரத்திலும் கணினியால் எங்களுக்கும் ஏற்றமே
மக்கள் எங்களை நண்பனாய், சேவகனாய்க் கருதுவதே நன்று
எங்களை உற்ற சேவகனாய் நினையுங்கள் உலகத் தபால் தினத்தன்று!
கிரேசி மோகன்
சூரி நாகம்மாளின் ‘’ரமணாஸ்ரம லேகுலு’’(ஸ்ரீரமணாஸ்ரமத்திலிருந்து கடிதங்கள்) என்ற புத்தகத்தில் ‘’தெலுங்கு பாகவதத்தில் சுகமஹரிஷி பரீஷித்துக்கு முக்தி மார்கம் விளக்கும் சந்தர்ப்பத்தில் வைராக்கியத்தை உரைக்கும் ‘’பத்யம்’’ அதன் தமிழ் பொழிப்புரை….
’’பச்சைப் புல்பூண்டிருக்க
பஞ்சணை எதற்கு….
பிச்சைக்கை ரெண்டிருக்க
பாத்திரம் எதற்கு….
கச்சுக்கு மரவுரி தர்ப்பை
கச்சிப்பட்டாடை ஏன்….
குச்சுக்கு குகையிருக்க
கூடமாட மாளிகையேன்….
பிக்ஷைக்கு புண்யவதி
பானமாய் மகாநதி….
இச்சகத்தில் இவ்வளவு
இருந்தும் ஜீவனமாய்….
எச்சைக்காய் எவன்கீழோ
இருப்பதேன் கோவணமே(தபஸ்வி)….கிரேசி மோகன்….
–சக்தி சக்திதாசன்.

அன்பினியவர்களே !
இதோ அடுத்தொரு மடலில் உங்களின் முன்னே. அனைத்து உள்ளங்களும் நலமாக இருப்பீர்கள் எனும் நம்பிக்கையோடு பகிர்தலைத் தொடர்கிறேன்.
ஒரு நாடு எத்தனை தூரம் நாகரீகமடைந்திருக்கிறது என்பதற்கு அந்நாட்டினுடைய சட்ட திட்டங்களை எடுத்துப் பார்ப்பது அவசியமாகிறது.
மனைதர்களை மனிதர்களாக மதிப்பதும் அவர்களுக்குரிய அடிப்படை மனித உரிமைகள் சட்டவிதிகளின் மூலம் வரையறுக்கப்பட்டுள்ளதா? என்பதன் மூலமே அந்நாடு எத்தகைய சமூக முன்னேற்றத்திற்கு தன்னை உள்ளாக்கியிருக்கிறது எனும் உண்மை தெளிவாகிறது.
இன்று காலை தொலைக்காட்சியில் காலை நிகழ்ச்சியைக் கண்ணுற்ற போது அதிலே கூறப்பட்ட ஒரு விடயம் என்னை வெட்கப்படவைத்தது.
அட! அது என்னப்பா விடயம்? நாமும் தெரிந்து கொள்ளலாமே எனும் ஆவல் உங்களுக்கு எழுவது இயற்கை.
அவசரப்படாதீர்கள், ஆர்வமிகுதியால் பரபரப்படையாதீர்கள், இதோ விடயத்திற்கு வருகிறேன்.
இங்கிலாந்தில் ஏறத்தாழ 40 வருடங்கள் வாழ்ந்த நான் இந்நாட்டின் சட்ட அமைப்புகளின் அடிப்படையை இதுவரைகாலமும் தெரிந்து கொள்ளாமல் வாழ்ந்து விட்டேனே எனும் எண்ணம் தான் என்னை நாணித் தலைகுனிய வைத்தது.
ஆமாம் தொலைக்காட்சியில் “மக்னா கார்ட்டா (Magna Carta)” எனும் ஒரு பத்திரத்தைப் பற்றிக் குறிப்பிட்டு அதன் உண்மையான அறுதியான பிரதி பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படப் போகிறது எனும் கருத்துப் பரிமாறப்பட்டது.
பல சமயங்களில் இந்த “மக்னா கார்ட்டா”(Magna Carta) எனும் பெயர் கூறப்படுவதைக் கேட்டிருந்த போதும் அதன் உண்மையான விளக்கத்தைப் பற்றி அறியாமல் இருந்து விட்டேன்.
இந்த 40 வருட காலமும் எனது வாழ்க்கைக்கு அச்சாரமாகவிருந்த இந்நாட்டின் சரித்திரத்தில் இடம்பெற்ற ஒரு முக்கிய ஆவணத்தைப் பற்றி நான் அறியாமல் இருந்தது இந்நாட்டினை என் நாடாக நான் கருதாத காரணத்தினாலோ?
சரி, இனியாவது இதைப்பற்றிச் சிறிது கொள்ளலாம் எனும் நோக்கத்தோடு நான் அறிந்தவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் மடலாக இம்மடல் அமைகிறது.
கி.பி 1209ம் ஆண்டளவில் இங்கிலாந்தின் அரசனாக ஜோன் என்பவர் அரசாண்ட காலம். அன்றைய காலத்தில் அரசருக்கெதிராக கிளர்ச்சி செய்வோர்கள்; இல்லை, அரசனின் பார்வையிலோ அன்றி அரசனின் ஆதரவாளரின் பார்வையிலோ அரசனுக்கு எதிராக செயற்படுவோர்; அன்றி எதிர்க் கருத்துகளைக் கொண்டுள்ளோர் எனக் கருதப்படுவோர் எவ்வித விசாரணைகளுமின்றித் தண்டிக்கப்பட்ட காலம்…
அப்போதய நிலப்பிரபுக்கள் பலர் இச்செய்கையால் அதிருப்தி அடைந்திருந்தனர். அது மட்டுமின்றி அரசன் விதித்த அதிகமான வரிகள், அத்துடன் அரசனால் முன்னெடுக்கப்பட்டு தோல்வியில் முடிந்த போர்கள் எனப் பல காரணிகள் இந்நிலத்துவ பிரபுக்களுக்கு அரசன் மீதும் அவன் கொண்டிருந்த தன்னிச்சையான அதிகாரத்தின் மீதும் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
அப்போதைய கத்தோலிக்க போப் ஆண்டவராக இருந்த “போப் இனொசன்ட் 3 (Pope Innocent III) என்பவரோடு அரசன் ஜானுக்கிருந்த உறவின் அதிருப்தி கூட இவ்வரசனின் மீதான வெறுப்புக்குக் காரணமாகவிருந்தன.
இப்பிரச்சனைகளின் காரணமாக இந்நிலப்பிரபுக்கள் இவ்வரசனுக்கெதிரான கிளர்ச்சியை 1209ம் ஆண்டிற்கும் 1212ம் ஆண்டிற்குமிடையில் பலமுரை நிகழ்த்தினர்.
அக்காலகட்டத்தில் மக்கள் ஆதரவில்லாத அரசர்களை இப்பிரபுக்கள் வேறு சிற்றரசர்களின் ஆதரவோடு வீழ்த்துவது வழக்கமாக இருந்தாலும் இம்முறை இக்கிளர்ச்சி வேறு வடிவமெடுத்திருந்தது…
இம்முறை இக்கிளர்ச்சியின் நோக்கம் அவ்வரசனைப் பதவியிலிருந்து இறக்குவது என்பதில்லாமல், இப்பிரபுக்கள் சில கோரிக்கைகளை முன்வைத்து அவற்றை அரசன் உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.
அரசன் ஜானினதும் , போப் ஆண்டவரின் பல இழுத்தடிப்புகளுக்கும் பின்னால் தமது கோரிக்கைகளைச் சாசனமாக்குவதில் நிலத்துவ பிரபுக்கள் வெற்றி கண்டனர்.
இவர்களது வெற்றிக்கு அப்போதைய பிரான்சு மன்னன் லூயியினதும், ஸ்கொட்லாந்து மன்னன் அலெக்ஸ்சாண்டரினதும் ஆதரவு இருந்ததே காரணம் என்று சொல்லப் படுகிறது.
இச்சாசனம் அப்போது “சுதந்திரச் சாசனம்” என்றழைக்கப்பட்டது. இதன் அடிப்படை சாராம்சமாக தனிமனித உரிமைகள் பாதுக்கக்கப்பட வேண்டும் என்றும், நாட்டிற்கென நீதிமுறைச் சட்டங்கள் வகுக்கப்பட்டு அதன் முன்னால் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டாலே ஒழிய மக்கள் யாரும் தண்டிக்கப்படமுடியாது என்பவை வலியுறுத்தப்பட்டன.
25 நிலப்பிரபுக்களைக் கொண்ட ஒரு சபை அமைக்கப்பட்டு அச்சபை இச்சாசனத்தை அங்கீகரித்தது. இச்சாசனத்தின் படி இதற்கு எதிராக அரசன் செயற்படுகிறார் என்று கண்டறியும் பட்சத்தில் அரசனின் சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும்.
தனது உரிமைகளை விட்டுக் கொடுக்க மறுத்த அரசன் ஜானுக்கும் நிலப்பிரபுக்களுக்கிடையிலான வேறுபாடு வலுவடைந்தது.
அரசனுடன் தமக்கு ஏற்பட்ட வேறுபாடுகள் தீர்க்கப்படமுடியாது என உணர்ந்த பிரபுக்கள் அரசனுக்கெதிரான உள்நாட்டு யுத்தத்தில் ஈடுபட்டார்கள். இப்போர் “முதலாவது பிரபுக்கள் யுத்தம் (First Barons War) “ என்றழைக்கப்பட்டது…
இதுவரை மன்னனின் உரிமைகளை வறையறுப்பதையே நோக்கமாகக் கொண்டிருந்த பிரபுக்கள், இப்போது அரசனை பதவியிலிருந்து இறக்குவதை நோக்கமாகக் கொண்டு இங்கிலாந்தின் முடியை அப்போதைய பிரான்சு மன்னன் லூயி இடம் தாரைவார்த்தார்கள்.
ஆனால் அவர்களது சாசனத்தின் அவ்காசம் மூன்று மாதமே நீடித்தது. அப்போது 1216ம் ஆண்டு அரசன் ஜோன் இறந்தான்.
அதன் பின்னே இச்சாசனம் சட்டமூலமாக்கப்பட்டது. இச்சாசனமே “மக்னா கார்ட்டா” (*Magna Carta) என்றழைக்கப்பட்டது. இது ஒரு லத்தீன் சொல்லாகும் இதன் அர்த்தம் “சிறந்த சாசனம்” ஆகும்.
சரி, அப்படிப் பெருமையாக இத்தனை காலம் கழித்துப் பேசப்படும் இச்சாசனத்தைப் பற்றி நீ ஏன் அலட்டிக் கொள்கிறாய் என்கிறீர்களா?
இன்றைய இங்கிலாந்தின் அரசாங்க அரசியலமைப்பின் அடிப்படையே இச்சாசனம் தான். “குற்றவாளி என நிரூபிக்கப்படும்வரை அனைவரும் நிராபராதிகளே ” என்று கூறப்படும் சட்ட தாரக மந்திரத்தின் பிறப்பிடமே இச்சாசனம் தான்.
பிரித்தானியப் பேரரசின் காலனித்துவ நாடுகளாக இருந்த பெரும்பான்மையான நாடுகளின் அரசியலமைப்பும், சட்டமூலங்களும் இதன் பின்னனியில் தான் அமைந்திருக்கின்றன.
அடடா ! இதை அறிந்து கொள்ள எனக்கு சுமார் 40 வருடங்கள் எடுத்திருக்கின்றதா ?
போச்சுடா !
மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்
* Magna Carta (Latin for Great Charter), also called Magna Carta Libertatum or The Great Charter of the Liberties of England, is an Angevin charter originally issued in Latin. It was sealed under oath by King John at Runnymede, on the bank of the River Thames near Windsor, England, on 15 June 1215.[Wikipedia]
http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan
-கவிஞர் காவிரிமைந்தன்
’பெற்ற மகனை விற்ற அன்னை’ என்பது திரைப்படம். எதுகை மோனையுடன் தலைப்பைச் சூட்டியிருக்கும் இயக்குனருக்குக் கவித்துவ ஈடுபாடு அதிகம்போலும்! மெல்லிசை மன்னர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைப்பில் ஏ.எம்.ராஜா மற்றும் பி.சுசீலா பாடிய பாடல்!
தாலாட்டுப் பாடல்போல இசையும் கவிதையும் காட்சி தந்த போதிலும் இது ஒரு காதல் பாடல் என்பதில் மாற்றமில்லை! எத்தனை முறை இந்தப் பாடலைக்கேட்டிருப்போம் என்கிற கணக்கு மட்டும் என் வசம் இல்லை! அத்தனை முறை கேட்கும்போதும் இசையின்பம் பொழிய…இனிய குரல்கள் செவியில் வந்து மோதிய அதிசயம் நடந்துகொண்டுதானிருக்கிறது!
நேசமாக பேசிடாமல் பாசம் வளருமா?
ஆசை தீரக் கொஞ்சிடாமல் இன்பம் மலருமா?
அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா… காதல் கண்கள் உறங்கிடுமா… காதல் கண்கள் உறங்கிடுமா?
தென்றல் உறங்கிய போதும்… என்று ஒரு அதீதக் கற்பனையை எழுப்பி
அதைப் பல்லவியாக்கி… கவிஞர் கானமழை பொழியக் கவிதையொன்றை யாத்திருக்கிறார். செந்தமிழில் தோய்ந்த வார்த்தைகள் சிங்காரமாய்க் கண்சிமிட்ட … பொருள் பொதிந்த பாடலாய் காதலைக் கண்முன்னே காட்டுவதில் வெற்றி மேல் வெற்றியே!
அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா… காதல் கண்கள் உறங்கிடுமா?
ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடிக் கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா காதல் கண்கள் உறங்கிடுமா…காதல் கண்கள் உறங்கிடுமா?
திரைப்படத்தின் தலைப்பைப் போலவே தாள ஜதி சொல்லும் வண்ணம் பாடல் உருவாக்கப்பட்டிருக்கிறது என்றால் மறுக்க முடியுமா?
படம்: பெற்ற மகனை விற்ற அன்னை
பாடியவர்கள்: A.M. ராஜா, P. சுசீலா
பாடலாசிரியர்: மருதகாசி
தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா… காதல் கண்கள் உறங்கிடுமா… காதல் கண்கள் உறங்கிடுமா?
தென்றல் உறங்கிய போதும் திங்கள் உறங்கிய போதும்
கண்கள் உறங்கிடுமா… காதல் கண்கள் உறங்கிடுமா… காதல் கண்கள் உறங்கிடுமா?
ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடிக் கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா… காதல் கண்கள் உறங்கிடுமா… காதல் கண்கள் உறங்கிடுமா?
நீல இரவிலே தோன்றும் நிலவைப் போலவே.. நிலவைப் போலவே
வாலைக் குமரியே நீயும் வந்த போதிலே…வந்தபோதிலே
நேசமாகப் பேசிடாமல் பாசம் வளருமா?
ஆசை தீரக் கொஞ்சிடாமல் இன்பம் மலருமா?
நேசமாகப் பேசிடாமல் பாசம் வளருமா?
ஆசை தீரக் கொஞ்சிடாமல் இன்பம் மலருமா?
அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா…காதல் கண்கள் உறங்கிடுமா…காதல் கண்கள் உறங்கிடுமா?
ஆ…ஆ….ஆ…ஆ…….
இதய வானிலே இன்பக் கனவு கோடியே …கனவு கோடியே
உதயமாகியே ஊஞ்சல் ஆடும் போதிலே…ஆடும் போதிலே
வானம்பாடி ஜோடி கானம் பாட மயங்குமா?
வாசப்பூவும் தேனும் போல வாழத் தயங்குமா?
வானம்பாடி ஜோடி கானம் பாட மயங்குமா?
வாசப்பூவும் தேனும் போல வாழத் தயங்குமா?
அன்பை நினைந்தே ஆடும் அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா…காதல் கண்கள் உறங்கிடுமா…காதல் கண்கள் உறங்கிடுமா?
ஒன்று கலந்திடும் நெஞ்சம் உறவை நாடிக் கெஞ்சும்
கண்கள் உறங்கிடுமா…காதல் கண்கள் உறங்கிடுமா…காதல் கண்கள் உறங்கிடுமா?
கிரேசி மோகன்
வாசுதேவ மயம் ஜகத்….
“ஏசுதேவன், அல்லா, எருதேறி வெண்ணீறு
பூசுதேவன், நான்முகன், பொற்பில்வேல் -வீசுதேவன்
வீசுகாதன் வேழன் ,வியனோ வியன்கேசவ்,
வாசுதேவன் என்றே வணங்கு”….கிரேசி மோகன்….
பொற்பில்வேல்-மலையில் வேல் முருகன்….
வியனோ வியன்கேசவ் -வியத்தகு ஓவியன் கேசவ்….
— எம்.ஜெயராமசர்மா.
பல்வேறு காரணங்களால் தமிழர்கள் தமது நாட்டைவிட்டு அன்னிய நாடுகளில் வாழ்ந்து வருகிறார்கள். நாட்டைவிட்டு வாழ்ந்து வந்தபோதிலும் அவர்களில் பலர் தங்களது மொழியை கலாச்சாரத்தை மறக்காமல் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க அம்சம் எனலாம். அவர்களின் வாழ்க்கை என்னவோ அன்னிய நாட்டிலே அமைந்துவிட்டாலும் கூட அவர்கள் தாங்கள் பிறந்து வளர்ந்து வாழ்ந்த இடத்தையோ, அங்கிருக்கும் உறவுகளையோ மறக்காமலும் இருக்கிறார்கள். அவர்களைப்பற்றிய சுகங்கள் துக்கங்கள் எல்லாம் அன்னிய நாட்டில் வாழ்கின்றவர்மனத்தில் ஏதோ ஒரு பக்கத்தில் இருக்கத்தான் செய்கிறது. அந்த எண்ணம் அவர்களைவிட்டு என்றுமே அகலமாட்டாது. இதைத்தான் தொப்புள் கொடி உறவு என்பதா? அல்லது பாசப்பிணைப்பு என்பதா? எப்படியும் எடுத்துக் கொள்ளலாம்தானே!
இந்தளவு விளக்கம் ஏன் என்று நீங்கள் எண்ணுவது எனக்குப் புரியாமல் இல்லை. ஒரு முக்கிய விஷயத்தை தொட விரும்பியதால்தான் இந்த விளக்கம் எல்லாம். புலம்பெயர் வாழ்க்கையை நடத்தும் திரு கே.எஸ்.சுதாகர் ‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’ என்னும் சிறுகதைத்தொகுதியை எங்கள் கைகளிலே தவழ விட்டிருக்கிறார். அந்தத் தொகுதியில் உள்ள கதைகளை வாசிப்பவர்களுக்காகவேதான் இந்தவிளக்கம் சொல்ல நேர்ந்தது.
பன்னிரெண்டு சிறுகதைகள் கொண்டதே இந்தத்தொகுதி. இதில் இலங்கையைக் களமாகக் கொண்ட கதைகள், இலங்கையையும் அன்னியநாட்டையும் களமாக இணைத்து நிற்கும் கதைகள், அன்னிய நாட்டை மட்டும் களமாகக் கொண்ட கதைகள் என இக்கதைகள் எழுதப் பட்டிருக்கின்றன.
‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’ சிறுகதைத்தொகுதிக்கு ஒரு விமர்சனம் தேவைதானா? என்னுள் எழுந்து நின்ற கேள்வி! நல்ல விஷயத்தை வாசித்தால், நல்ல விஷயத்தைப் பார்த்தால், அதைப்பற்றி மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லவே வேண்டும். சுவையான ஒரு உணவை உண்ணுகின்றோம். அதனைப்பற்றிக் கட்டாயம் நம் கருத்தைச் சொன்னால் குறைந்தா போய்விடுவோம். ஆனால் பலபேர் எந்தவிதமான அவிப்பிராயமும் அற்றவர்களாக இருந்துவிடுவதும் உண்டு. பிடித்தால் பிடித்திருக்கிறது. ஏன் பிடித்திருக்கிறது? என்ன என்ன விதத்தில் சுவையை ஏற்படுத்தித் தந்திருக்கிறது? இதை மனம் திறந்து சொல்லிப் பாருங்கள்! சமைத்தவரும் சந்தோஷப்படுவார். சுவைத்தவர்களும் சுகத்தை அடையலாம்தானே!
கதைத்தொகுதியைப் பற்றிச்சொல்ல வந்துவிட்டு சாப்பாடுபற்றிச் சொல்லுகிறேன் என்று மனத்துள் நினைக்காதீர்கள்! கதைகளும் எங்களுக்கு நல்ல சுவையான உணவுதானே! “செவிக்கு நல்ல உணவு கிடைத்தால்“ அது மகிழ்ச்சிதானே! அந்த மகிழ்ச்சிதான் என்னுள் எழுந்த விமர்சனம் ஆகும்.
கே.எஸ்.சுதாகரை விமர்சனம் செய்வதா அல்லது அவரது கதைகளை விமர்சனம் செய்வதா? வள்ளுவரை விமர்சனம் செய்தால் குறளை விமர்சனம் செய்தமாதிரி. குறளை விமர்சனம் செய்தால் வள்ளுவரும் அதில் வந்துவிடுவார். ஆனால் நான் — சுதாகரைப் பற்றியும் சொல்லப்போகிறேன். அவரது கதைகளைப் பற்றியும் சொல்ல ஆசைப்படுகின்றேன். சுதாகர் கலைத்துறை சம்பத்தப்பட்டவர் அல்ல. அவர் படித்தது பொறியியல் துறை. பெரும்பாலும் கலைத்துறை சார்ந்தவர்களே எழுத்துத் துறையில் புகுந்து வெளுத்துக்கட்டுவார்கள். ஆனால் விதிவிலக்கானவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். சுஜாதாவை தமிழ் எழுத்துலகில் மறந்துவிடமுடியாது. அவர் விஞ்ஞானத்துறையைச் சார்ந்தவர். பேராசிரியர் நந்தி, பேராசிரியர் சிவசேகரம், டாக்டர் இந்திரகுமார், டாக்டர் ஞானசேகரன் இவர்கள் துறை வேறாக இருந்தபோதும் அவர்களும் கலை இலக்கியத்துறையில் தம்மை இணைத்துக் கொண்டவர்களாகவே விளங்குகிறார்கள். இவர்களது வரிசையிலே பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பட்டதாரியான சுதாகரும் இணைந்து கொள்கின்றார்.
சுதாகரை நேரே பார்ப்பார்களுக்கு—இவரா இக்கதைகளை எல்லாம் எழுதியிருப்பார்? என்னும் ஐயம் கூட ஏற்பட்டுவிடும். அந்த அளவுக்கு ஒன்றுமே தெரியாதவர் போல இவரின் தன்மை காணப்படும். அந்த அளவுக்கு அடக்கமானவர். “அடக்கமுடையார் அறிவிலர் என்றெண்ணிக் கடக்கக் கருதவும் வேண்டாம்“ என்பது இவரைப் பார்த்தால் பொருத்தமாக இருக்கும் என்றே தோன்றும்.
அநேகமான நூல்கள் வரும்பொழுது அதில் இடம்பெறும் ஏதாவது ஒரு விஷயத்தின் பெயரே தலைப்பாகப் போடுவது வழக்கமாக இருக்கிறது. ஆனால் சுதாகரின் ‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’ என்னும் பெயரில் எந்தக்கதையையும் நீங்கள் உள்ளே காணவே முடியாது. இது ஒரு வித்தியாசமான சிந்தனை. பொறியியலாளராக இருந்து பொறுமையுடன் நல்ல கதைகளைத் தந்தமைக்கு ஒரு பாராட்டு. புதியமுறையில் தலைப்பைத் தேர்ந்து வைத்தமைக்கு மேலும் ஒரு பாராட்டு.
சுதாகரின் கதைகளைப்பற்றி விமர்சனம் செய்வதற்கு முன் …. அவரது தமிழ் பற்றியும் அதனை அவர் எவ்வாறு கையாண்டுள்ளார் என்பதைப்பற்றியும் சொல்லியே ஆகவேண்டும். அவர் படித்தது ஆங்கிலத்தில். ஆனால் அவரின் தமிழ்நடையோ நல்லதோர் தமிழ்ப்புலமை கொண்டவரது நடைபோன்று அமைந்திருக்கிறது. இது அவரின் தமிழ் வாசிப்பால்ல வந்ததோ அல்லது அவர் வாழ்ந்த குடும்பச் சூழலாலோ எனத் தெரியாது. இதுவும் அவரின் வெற்றிக்கு ஒரு காரணம் எனலாம்.
வாசிக்கின்றவர்கள் மனத்தில் அலுப்புத்தட்டாமல் செய்கிறது அவரது தமிழின் போக்கு. சம்பவங்களை அவர் சொல்லும் பொழுது வாசகர்களையும் கூடவே கூட்டிச் சென்று விடுகிறார். அவரின் கதை மாந்தர்கள் அழுதால் நமக்கும் அழுகை வருகிறது. அவர்கள் கோபப்பட்டால் நமக்கும் கோபம் வந்து விடுகிறது. அவர்களது — சிரிப்பு, அவலம், அன்பு, பாசம், பரிவு — எல்லாம் எங்களுடனும் வந்து ஒட்டிக்கொள்கிறது. கதையல்ல … நிஜம் என்னும் ஒரு வித உள்ளுணர்வை ஏற்படுத்திவிடுகிறது. இந்த மாயத்துக்குக் காரணம் சுதாகர் கையாண்ட எழுத்து நடையாகும்.
கதைக்கு, கவிதைக்குக் கட்டாயம் கற்பனை வேண்டும். ஆனால் கற்பனையே முழுவதும் ஆகிவிட்டால் அந்தக்கதை உயித்துடிப்பு சற்றுக்குறைந்தது போலக்கூட ஆகிவிடலாம். சுதாகரும் கற்பனை வளம் மிக்கவரானாலும் அவரின் கதைகளில் அவரும் வருகின்றார். அவர் அனுபவித்த வாழ்க்கையும் வந்து நிற்பதையும் காணலாம். நடந்த சம்பவங்கள் நல்ல எழுத்தாளின் கற்பனையில் கலக்கும் பொழுது யாவரையும் தன்னுள் ஈர்க்கும் வல்லமையைப் பெற்றுவிடும். அப்படி ஒரு ஈர்ப்பை தனது கதைகள் வாயிலாக சுதாகர் வரச்செய்துள்ளார். இது அவரது எழுத்து ஆளுமையையே காட்டி நிற்கிறது எனலாம்.
புலம் பெயர்ந்து வருபவர்கள் படும் சோதனையும், வேதனையும், விரக்தியும்… சுதாகரின் கதைகளில் நாம் பார்க்கலாம். புலம்பெயர்வால் … உறவுகளின் இன்பத்திலோ, துன்பத்திலோ, கூடப் பங்கு கொள்ள முடியாதநிலை ஏற்படத்தான் செய்யும். அப்படி ஏற்படும் பொழுது அதற்குள் அகப்பட்டவர் மனம்படும் பாட்டை சுதாகர் காட்டும் பாங்கு அவருக்கே உரித்தான உத்தியாகும்.
புலம்பெயர்ந்தவர்கள் அந்த நாட்டவரைப்பார்த்து பயப்படுவது இயல்புதானே! அது மட்டுமல்ல அவர்களை முழுவதுமாக நம்பியும் விடுவார்கள். இதனால் அங்குள்ளவர்கள் நேர்மையின் பிறப்பிடம், இருப்பிடம், எனவும் எண்ணியும் விடுகிறார்கள். ஆனால் அவர்களும் நம்மைப் போன்றவர்கள்தான். நிறத்தால் வேறுபட்டு இருந்தாலும் எல்லாரும் ஒன்றுதான். ஏமாற்றுதல், பணம்பண்ணுதல், பித்தலாட்டம் செய்தல், யாவும் எங்கும் உள்ள இயல்பான குணங்கள்தான். இதனைக் காட்டுகிறது ’விளக்கின் இருள்’ என்னும் முதலாவது கதை. ‘ரியல் எஸ்டேட்‘ வியாபாரம் ஆஸ்திரேலியாவில் கொடிகட்டிப்பறக்கிறது. மக்களை எப்படியெல்லாம் மயக்குமொழி பேசி மடக்க முடியுமோ அப்படியெல்லாம் மடக்கி தமது வலைக்குள் விழப்பண்ணிவிடுவார்கள். வீடுவாங்கியவர்கள் பின்னர் படும் அவஸ்த்தையினை கண்டுகொள்ளவே மாட்டார்கள். வீடு வாங்கிய பகுதிகளில் ஏதாவது விபரீதங்கள் ஏற்பட்டாலும் வியாபாரம் செய்தவர்களோ அல்லது அது சம்பத்தப்பட்ட அதிகாரிகளோக் கூட காணாததுபோலவே இருந்தும் விடுவார்கள். வாங்கிய வீட்டில் இருக்கவும் முடியாமல், அதனை விற்கவும் முடியாமல் வாங்கியவர்கள் படும் வேதனையை நரகவேதனை என்றுதான் எடுக்கவேண்டும். அந்த வேதனையினை வெளிப்படுத்தும் பாங்கில்த்தான் “ விளக்கின் இருள் “ கதை எழுதப்பட்டிருக்கிறது.
வீடு வாங்கினாலே எல்லோருக்கும் மகிழ்ச்சிதான். ஆனால் வீடுவாங்கிய சிலநாளில் …. அங்கு வசிப்பதே பெரிய ஆபத்து என்று வந்தால் எப்படி இருக்கும்? கஷ்டப்பட்டு உழைத்துச் சேமித்த பணத்தை வைத்து வங்கியில் கடன் பட்டு வீடு வாங்கியவர்கள் படும், பட்ட, மனக் குமுறலை — உண்மையின் அடிப்படையில் சொல்லி நிற்கும் கதைதான் “ விளக்கின் இருள் ‘ கதையாகும். என்ன என்ன புதைத்தார்களோ தெரியாது. எப்படி முன்னர் இருந்ததோ தெரியாது. ஆனால் வீடுகளைக் கட்டிக்குவித்து விடுவது நடைமுறையாக இருக்கிறது. அதனை வியாபாரம் செய்கின்றவர்களும் கொஞ்சமேனும் — அதனைக் கருத்தில் கொள்ளாமல் செயல்படுகின்றனர். மாட்டிக்கொள்பவர்கள் வீடுகளை வாங்கியவர்கள்தான்.
இந்தக்கதை அறிவு பூர்வமான அணுகுமுறை கொண்ட ஒரு கதையாகும். இனிமேல் வீடு வாங்க இருப்பவர்களுக்கு நல்ல ஒரு அறிவுறுத்தலைத் தரும் வகையில் இக்கதை எழுதப்பட்டிருக்கின்றது. மிகச்சிறந்த கதை என இதனை எடுத்துக் கொள்ளலாம். இந்தப் புத்தகத்தின் முதற்கதையாக அதாவது திறவு கோலாக இக்கதையை முதல் வைத்தமைக்குக் கட்டாயம் சுதாகரைப் பாராட்டியே ஆகவேண்டும்.
பேராதனைப் பல்கலைக்கழகம் படிப்பின் உச்சமாயும் இருக்கும். மற்றும் பலவேளை இடிப்பின் உச்சமாயும் மாறிவிடும். இனத்துவேஷம் கல்விக்குள் நுழையக்கூடாது. நுழைந்துவிட்டால் அது ஒரு புற்று நோய்தான். அன்றும் இருந்தது. இன்றும் அது அங்கு இருக்கிறது.
பல்கலைக்கழகம் என்றாலே கிண்டலும் கேலியும் மலிந்து காணப்படுவது இயல்பு. அவற்றை “இரண்டு சம்பவங்களில்“ அனுபவித்து சுதாகர் வெளிப்படுத்தி இருகிறார். பல்கலைகழக மாணவர்கள் ஒன்று சேர்ந்தால் பேசும் வார்த்தைகள் கூட வில்லங்கமானதாகவே இருக்கும். அவையெல்லாம் அனுபவமாக பரவிக்கிடக்கிறது. சண்டைக்காரன் கூட சமயத்தில் மாறி உதவிக்கரம் நீட்டுவதும் உண்டு என்பதை மிகவும் நயத்தோடு காட்டியிருப்பதை படிப்பவர்கள் கண்டுகொள்ளலாம். இக்கதையை வாசித்ததும் — முன்பு பல்கலைக்கழகத்தில் இருந்த காலமே படமாக மனத்தில் ஓடியது. தங்களின் அரசியல் ஆதாயத்துக் காக அன்று முதல் இன்றுவரை படிக்கும் மாணவர்களைப் பகடைக் காயாக்குவது அரசியல் வாதிகளின் ஒரு ராஜதந்திரமாகவே இருந்து வருகிறது. அதனை ”இரு சம்பவங்களில்” சுதாகர் சுட்டிக்காட்டுகின்றார்.
புலம்பெயர்ந்தவர்களுக்கு வேலை தேடும் படலம் என்பதே ஒரு திருவிளையாடற் படலம்தான். முன் அனுபவம், பின் அனுபவம், உள்ளூர் அனுபவம் என்று வேலை தேடுபவர்களை கதிகலங்கச் செய்துவிடுவார்கள் வேலை கொடுக்கும் நிலையில் உள்ளவர்கள். அதனை அனுபவித்தரால்தான் இப்படி ஒரு கதையை எழுதமுடியும். அந்தக் கதைதான் “இருவேறுபார்வைகள்“. இந்தக்கதையை நகர்த்திச்செல்லும் பொழுது அதனை நோயாளி ஒருவர் வைத்தியரோடும் வைத்திய நிலையத்தோடும் படும் அவதிகளைத் தொடுத்து– வேலைக்கான அனுபவத்தை விளக்கிக்காட்டும் பாங்கை ரசிக்காமால் இருக்கவே முடியாது. இது நல்ல ஒரு உத்தியாக அமைகிறது.
இலங்கையும் புலம்பெயர் பகுதியும் கதைக்களமாக அமையும் கதைதான் “காட்சிப்பிழை”. இடம் மாறினாலும் வயது ஏறினாலும் .. இருக்கும் நிலையில் மாற்றம் வந்தாலும் இயற்கைக் குணம் என்பது மனிதனை விட்டு மாறவே மாட்டாது. அது நல்லதாக இருந்தால் அதனை வரவேற்கலாம். ஆனால் அது ஆணவநிலை ஆனால் எப்படி அனுமதிப்பது? இலங்கையில் இருந்த குணம் எங்கு போனாலும் மாறிவிடவில்லை. தான் என்னும் முனைப்பு சாகும் தறுவாயில்கூட மாறமறுப்பதையும் — அதே நிலையில்த்தான் இளமையும் மாறாது இறுமாப்புடன் நிற்பதையும் இக்கதை காட்டி நிற்கிறது.
ஒவ்வொருவரும் காணும் காட்சி அவரவர் பிழைகளை அடையாளப்படுத்தியே விடும். அப்படி ஒரு நிலையைத்தான் “காட்சிப்பிழை“ தெரிவிக்கிறது. அதில் வரும் “தெமட்டக்கொட” அங்கிள்கள் இன்னும் நம்மிடையே இருக்கின்றார்கள். அவர்கள் இக்கதையைப் படிக்கட்டும். ஏன் … பாலகிருஷ்ணர்களும் படித்தாலும் நல்லதுதானே!
இலங்கையின் துயரம் —- எவ்வளவு தூரத்துக்குப் போனாலும் நம்மனதை விட்டு அகலே மாட்டாது. கண்ணீரும், கம்பலையும், கலந்த சோகம்தான் பலரது வாழ்வாகி விட்டது தமிழர் வாழ்வில். அந்தச் சோகத்தைச் சொல்லவே முடியாது என்றாலும் ஒரு துளியை துணிவாக சொல்லிவிடுகிறார் சுதாகர். அதுதான் “ஒர்கடிதத்தின் விலை”. தமிழ்த்தாயின் வேதனை, சோதனை இக்கட்டான சூழ்நிலை … யாவற்றையும் இக்கதை மிகவும் திறம்பட எடுத்துச் சொல்கிறது. வாசித்துப் பாருங்கள்! அழாமல் இருக்கவே மாட்டீர்கள்.
கண்டபாவனையில் கொண்டைமுடித்தல், கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழி பொல்லாச் சிறகை விரித்தாடிய நிலை, இதைப்பற்றி நாம்ள் அறிந்திருப்போம்.இப்படி இருப்பவர்கள் நம்மில் அநேகம் பேர். விடுப்புப் பார்ப்பதும், மற்றவர் எதைச் செய்தாலும் அதற்கு எதிராகப் போட்டி போடுவதும், பின்பு தேவையில்லாமல் மூக்கு உடைபடுவதும் காணக்கூடிய சம்பவங்களே. இதில் தெரியாதவர்கள் சிக்கல் பல்பட்டாலும் அதை வேறுவிதமாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால் நெருக்கமான குடும்பங்களே ஏட்டிக்குப் போட்டியாக எண்ணம் கொண்டு செயல்பட நினைப்பதும் அந்த நினைப்பால் சிலவேளை அவமானமும், மனக்குமுறலும், வந்து சேருவதையும் … நகைச்சுவையோடு தரும் கதைதான் ’சேர்ப்பிறைஸ் விசிட்’. கதை முழுவதும் சிரிப்பாய்க் குவிகிறது. இதனை ஒரு நகைச்சுவைக் குறும்படமாக எடுத்தாலும் மிகச்சிறந்த வரவேற்பைப் பெறும்.
நிர்ப்பந்தம் காரணமாக வெளிநாடுவருபவர்கள் ஒரு வகையினர். வேலையைத் தேடிக்கொண்டு வெளிநாடு வருபவர்கள் மற்றொருவகயினர். நாட்டின் அசாதாரண நிலையினால் தம்நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடு வந்தவர்கள் தாம் படித்த படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காமல் தங்களது குடும்பத்தாருடன் படும் சோகவரலாறு சொல்லுந்தரமன்று. அந்தச் சோகவரலாற்றை தனக்கே உரித்தான பாணியில் ஓரளவு உண்மையும் கற்பனையும் கலந்து சொல்லுவதுதான் “பறக்காத பறவைகள்“ எந்த வேலை கிடைத்தாலும் அதனை ஏற்றுச்செய்யும் மனோ நிலை வந்தேயாக வேண்டும் என்று இக்கதையைப் படிப்பவர்கள் அறிந்துகொள்வார்கள்.
காலநிலை முற்றிலும் மாறுபட்டது. அதனைச் சமாளித்தே ஆகவேண்டும். பேப்பர் போடுவது தொடக்கம் பாரம் தூக்குவது வரை எதையும் எப்போதும் செய்வதற்குத் தயாரானால்த்தான் தன்னையும் பார்த்துக் குடும்பத்தையும் பார்க்கமுடியும். இதில் ரோஷம், மானம், பார்க்கவே கூடாது. எனது படிப்பென்ன நானிருந்த நிலை என்ன என்ற எண்ணம் அந்த நேரத்திலும் வந்துவிடவே கூடாது. அப்படி வந்தால் வருமானம் பாடு திண்டாட்டம்தான். அரசாங்கம் கொடுக்கும் உதவிப்பணத்தில் அடங்கி ஒடுங்கிப் போகவேண்டியதுதான். இதுதான் வெளி நாட்டு உண்மை வாழ்க்கை நிலை என்பதை தனக்கே உரித்தான தமிழ்நடையைக் கையாண்டு காட்சிப்படுத்துகின்றார் சுதாகர்.
வேலைதேடும் படலம், வேலைகிடைத்ததும் அதில் வரும் அடுத்தபடலம், அந்தவேலை கூடநிரந்தரமற்றது என்று ஏங்கவைக்கும் பரிதாபப் படலம், இவற்றுக்கிடையே ….. பிள்ளை பற்றியோ, மனைவி பற்றியோ, ஏன் தன்னைப்பற்றியோ எண்ணமுடியாத ஒரு சிக்கலான நிலை அத்தனையும் சொல்லிநிற்பதுதான் “பறக்காதபறவைகள்”. ஆசைமகள் அன்போடு கேட்ட பறவை பற்றி சொல்ல மறந்த– சொல்லவே முடியாமல் உருவாகிய இக்கட்டான நிலைதான் இந்தக்கதை. பறக்க முடியாப் பறவைகள் ஆகிவிட்டோம் என்று குடும்பத்தின் தலைவன் சொல்லும் பொழுது கூடவே நாமும் அந்தக்குடும்பத்துக்குள் நுழைந்துவிடுகிறோம்
வெளிநாட்டில் வாழ்ந்தால் சந்தோஷமாக வாழலாம் என்பதும் ஒருவித கனவுதான். அந்தக்கனவு உண்மையானது அல்ல. இங்கும் பல் உருவங்களில் பிச்சுப் பிடுங்கல் களும் வரத்தான் செய்யும். பெரும்பாலும் பொருளாதாரம் சம்பந்தப்பட்டதாகவே இந்தச் சச்சரவுகள் ஏற்படுகின்றன. கணவன் வேலைசெய்ய மனைவி வேலை செய்யாது வீட்டில் இருக்கும் பொழுது தேவையற்ற செலவுகள் செய்யக் கணவன் சம்மதியான். மனைவிக்குத் தேவையானது என நினைப்பது கணவனுக்குத் தேவை அற்ற ஒன்றாக கண்ணில்படும். அங்கே வாக்குவாதம் வரும். அது சிலவேளை விஸ்வரூபம் எடுத்தாலும் ஆச்சரியம் அல்ல. அப்படி ஒரு விஸ்வரூபம் எடுத்த நிலையைத்தான் “ ஒருவகை உறவு “ கதை காட்டுகிறது.
கணவன் மனைவி உறவு இறுக்கமானது. அந்த உறவுகூட பொருளாதாரம் சம்பந்தம் படும் பொழுது எப்படி முறுக்கமாக மாறுகிறது என்பதை அனுபவமாக்கி தரும் கதைதான் “ ஒருவகைஉறவு”. கணவன் மனைவி முறுகல் முற்றி கடைசியில் குடும்பமே இரண்டுபட்டு நிற்கும் நிலையை சுதாகரின் எழுத்து படமாக்கித்தருகிறது. சிவாஜியும் பத்மினியும் போட்டி போட்டு நடித்த பல நல்ல தமிழ்ப்படங்கள் வந்திருக்கின்றன. அதில் இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்காது பாத்திரமாகவே வாழ்ந்து ( நடிப்பால் ) காட்டியிருப்பார்கள். அப்படித்தான் இந்தக் கதையின் நாயகியும் நாயகனும் சுதாகர் என்னும் கைதேர்ந்த எழுத்தாளரால் உருவாக்கப் பட்டிருக்கிறார்கள். நடைமுறை வாழ்க்கையின் தோற்றம் இப்படித்தான் இருக்கும் என்பதை காட்டி இருக்கும் இக்கதையும் ஒரு முத்துத்தான். பெரும்பாலான ஆண்களும் பெண்களும் சமயத்தில் இப்படி ஆகிவிடுகிறார்கள் என்பதை மிகவும் அற்புதமாகச் சித்திரித்துள்ளார் சுதாகர் அவர்கள்.
இலங்கையும் வெளிநாடும் சங்கமிக்கும் சோகக்கதைதான் “அசலும் நகலும்“ இது நடந்து முடிந்த கதையல்ல. இப்போதும் இக்கதை ஈழத்தைப் பொறுத்தவரை தொடர்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
வெளிநாட்டில் இருப்பவர்கள் எல்லாம் இருந்தும் …. பல வேளைகளில் எதுவுமே இல்லாதவர்கள் ஆகியும் விடுவார்கள். ஆனால் வெளிநாட்டில் உள்ள உறவுகளின் நட்புகளும், சுற்றி இருப்போரும் — சோகத்தைக்கூட சுறு சுறுப்பான கேளிக்கையாக்கியும் விடுவார்கள். அதையே நவநாகரிகம் என்று எடுத்தும் கொள்வார்கள். அவர்கள் மத்தியில் எல்லாமே ஒருவித நாடகம்தான். ஆனால் ஊரில் இருப்பவர்களோ பழைய பஞ்சாங்கங்கள் ஆகவே இருந்துவிடுவார்கள். எல்லாமே கானல் நீர்தான் என்பதை “ அசலும் நகலும் “ சொல்கிறது. நன்மைக்கோ தின்மைக்கோ ஊருக்கு வரமுடியாத ஒரு சோகமும் ஊரில் உள்ளவர்கள் அங்குள்ள அசாதாரண சூழலில் சிக்குண்டு சாவிலும் கூட — தனிமைப்படுத்தப்பட்டுத் தத்தளிக்கும் பரிதாபமும் படமாக ஓடுகிறதுதான் “ அசலும் நகலும் “ கதையாகும்.
கிண்டலும் கேலியுமாக ஆரம்பித்து சீரியசாகி நிற்கும் கதைதான் “கற்றுக் கொள்வதற்கு” கற்றுக்கொள்வதற்கு — என்று தலைப்பு வைத்ததுகூட மிக மிகப் பொருந்தம்தான். சிலரை நாம் சாதாரணமாக எடை போட்டுவிடுவோம். ஆனால் அவர்களோ நம் நினைவுக்கு அப்பால் செயற்படுபவர்களாக இருப்பார்கள் அதைப் பார்க்கும் பொழுது நம்மையே நாம் நம்பமுடியாத ஒரு நிலைக்குள் வந்து நிற்போம். அப்படி ஒரு நிலையைத்தான் இக்கதையில் காண்கின்றோம். பின்தங்கியவர்கள் படிப்பறிவற்றவர்கள், என்று ஒதுக்கிவிட முடியாது. அவர்களும் சில விஷயங்களில் நம்மைவிடத் தீவிரமானவர்களாக இருந்தும் விடுவார்கள். அப்பொழுது நாம் நினைப்போம் … இவர்களிடம் கற்றுக்கொள்வதற்கு .. நிறைய இருக்கிறது … என்ற உண்மை நிலையாகும். கதைக்களமும், கருப்பொருளும் , புதிதாக இருப்பதால் இந்தக் கதை ஒரு புதுக்கதைதான். ஏனென்றால் நாங்கள் அனைவரும் நல்லபடி “ கற்றுக் கொகோள்வதற்கு”.
அக்கா என்பவள் குடும்பத்தின் அம்மாதான். அருமையான, அன்பான, பாசமான, பரிவான,பு ரிந்த உணர்வுள்ள, அக்கா வாய்த்தால் –அதைவிட மேலான குடும்பம் இருக்கவே முடியாது. அப்படியான ஒரு அக்காவை தேடிக்கொண்டுவந்து விடுகிறார் சுதாகர்.” எதிர்கொள்ளல்” கதையில்தான் அந்த அக்கா வருகிறார். அக்காவை பன்மையில் சுட்டுவதற்குக் காரணம் அவர் தாயாக, தந்தையாக, உற்றநல்ல துணையாக வருவதே காரணமாகும்.
பழனி என்றொரு தமிழ்ப் படம் வந்தது. அதைப்பார்த்தால் அழதாவர்கள் இருக்கவே முடியாது. அதே போல் துலாபாரம் என்றொரு படமும் வந்தது மனத்தை அழவைத்தபடம். அதே போன்ற ஒரு உணர்வுதான் “ எதிர்கொள்ளல் “ கதையை வாசித்ததும் வரும். பாசமிக்க அக்காவும் — பரிதவிக்கும் தம்பியும்– கதிகலங்கி நிற்கும் கணவனும்… நஎம்முடனே வந்துவிடுகிறார்கள். தம்பியாலும் எதிர் கொள்ள முடியவில்லை. அக்காவின் கணவனாலும் எதிர் கொள்ள முடியவில்லை. படிக்கும் எங்களாலும் அந்தச் சோகத்தை எதிர்கொள்ளும் தைரியமும் வரவே இல்லை.
நாட்டுச்சூழல் வாட்டுவதும், துன்பத்தைக் கூட கிட்ட நின்று பார்க்க முடியாத வெளி நாட்டு வாழ்க்கையின் பரிதாபமும், “ எதிர்கொள்ளல்” கதையிலே சங்கமிக்கிறது. அதே நேரம் அக்கறையான செய்தி ஒன்றையும் இக்கதை வாயிலாக நமக்கெல்லாம் சொல்லி நிற்கிறார் சுதாகர். தம்பியும் அழுகிறான். அத்தானும் கலங்குகிறார். வாசிக்கும் நாம் எம்மாத்திரம். நாங்களும் கண்கலங்குகின்றேம். அப்படி ஒரு உருக்கத்தைக் காட்டுவதுதான் “எதிர்கொள்ளல்” கதையின் சிறப்பாகும்.
இந்தக் கதைத் தொகுப்பில் நிறைவாக இருக்கும் கதைதான் “புதியவருகை”. வெளி நாட்டில் நடக்கும் பிரசவம் பற்றி இவ்வளவு சுவையாகவும் விஸ்த்தாரமாகவும் எப்படித்தான் சுதாகரால் சொல்ல முடிந்ததோ என நினைக்கையில் பிரமிப்பே ஏற்படுகிறது. ஒரு மருத்துவரோ அல்லது மகப்பேற்றுத் தாதியோ சொல்லுவது போல இந்தக் கதையின் போக்கு செல்கிறது. ஒரு பிரசவத்தைப் பார்த்த உணர்வுதான் ஏற்படுகிறது. குழந்தை பற்றியும், பிரசவம் பற்றியும் உள்ள கருத்து நிலையும் சூசமாகச் சொல்லப் படுகிறது. கதையோடு நாங்களும் போகிறோம். பிள்ளைகள் பற்றியும், குடும்பம் பற்றியும் ஒப்பீடும் நடத்தப்படுகிறது.
ஒரு புதுக்கரு இக்கதையில் உருவாகி நிற்கிறது. ஏனென்றால் இது பிரசவம் பற்றிய நோக்குத்தானே! வெள்ளைக்கார மாது ஒரு நல்ல பாத்திரம். அந்தப்பாத்திரம் கதையோடு ஓடிவரும் விதம் சுதாகரின் நகாசுவேலை என்றுதான் சொல்ல வேண்டும். வெள்ளைக்கார மாது இந்தக்கதையில் ஏன் என்று எண்ணும் பொழுது … அந்த மாதுதான் கதையை நிறைவு செய்யும் கைங்கரியத்தில் பங்கேற்கிறார் என்பதும் புலப்படுகிறது.
புதுக்கரு. புதுக்கதை. புதிய முடிவு. இதுதான் “புதிய வருகை” பன்னிரெண்டு முத்துக்களைக் கொண்டு கோர்க்கப்பட்ட அழகிய — இலக்கியம் என்னும் ஆரம்தான் சுதாகரின் “சென்றிடுவீர் எட்டுத்திக்கும் “ என்ற கதைத் தொகுதியாகும். பன்னிரெண்டும் பலவற்றை சொல்லி நிற்கின்றன.
இலக்கியம் படைப்பது என்பது ஒரு பிரசவம்தான். கருவைச் சுமப்பதும், அதனை நல்ல முறையில் பெற்றெடுப்பதும் சாதாரண காரியமல்ல. அப்படியொரு பிரசவம்தான் இக்கதைத் தொகுதியும். கருவைச் சுமந்து அதை நல்லமுறையில் காத்து அழகிய பிள்ளையாக அனைவருக்கும் விரும்பக் கூடிய பிள்ளையாகத் தந்த சுதாகரை மனமாரப் பாராட்டியே ஆகவேண்டும்.
அவசரம், அவசரம், எதற்குமே நேரம் போதவில்லை என்ற நிலையில் உள்ள சூழலில் பொறுமையாக பொருள்பொதிந்த கதைகளை எப்படித்தான் இவரால் எழுதமுடிந்ததோ என்பதே ஆச்சரியம்தான் என்றாலும் கிடைத்த நேரத்தை நல்ல முறையில் பயன்படுத்தி நல்ல கதைகளை தந்த எழுத்து மன்னன் சுதாகரை வாழ்த்துகிறேன். அவர் இன்னும் இது போன்ற பல நல்ல படைப்புகளைப் படைக்கவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி மீண்டும் எனது மனம் உவந்த வாழ்த்துக்களைக் கூறி நிறைவு செய்கின்றேன்
-சு. கோபாலன்
பால காண்டம்
1.அயோத்தி நாட்டில் ஆதவகுலத் திலகமாய் அவதரித்தாயே – இராமா!
2.அன்னை கோசலை தந்தை தசரதன் அன்புக் கண்மணியே – இராமா!
3.இலக்குவன் பரதன் சத்துருக்கனன் மூவர்க்கும் முதல்வனே – இராமா!
4.குலகுருவாம் வசிஷ்டரிடம் கலைகள் யாவும் கற்றவனே – இராமா!
5.வேள்வி காத்திட விசுவாமித்திரர் உன்னை அழைத்தாரே – இராமா!
6.கேள்வி கேட்காது அவர்பின் இலக்குவனோடு சென்றாயே – இராமா!
7.வில்லில் நாணேற்றி வல்லரக்கி தாடகையை வதைத்தாயே – இராமா!
8.தொல்லை தர வந்த அரக்கர் யாவரையும் அழித்தாயே – இராமா!
9.முறையாய் வேள்வி முடித்த நிறைவை முனிவர்க்கு அளித்தாயே – இராமா!
10.விசுவாமித்திரர் உடன்வர இலக்குவனுடன் மிதிலை ஏகினாயே – இராமா!
11.செல்லும் வழியில் கல்லாயிருந்த அகலிகையை உயிர்ப்பித்தாயே – இராமா!
12.கையேந்திய வில்லால் தாடகையின் உயிரழித்துக் கைவண்ணம் காட்டினாயே – இராமா!
13.காலால் கல்லைத் தீண்டி அகலிகைக்கு உயிரளித்து கால்வண்ணம் காட்டினாயே – இராமா!
14.முக்கண்ணன் வில்லை ஒருகணத்தில் எடுத்து நிறுத்தி முறித்தாயே – இராமா!
15.அக்கணமே மிதிலையின் அரசகுமாரி மைதிலியின் மணமகனானேயே – இராமா!
16.நிலமகள் அருளிய திருமகளாம் சீதையின் கரதலம் பற்றி மணந்தாயே – இராமா!
17.பரசுராமனிடமிருந்த திருமால் வில்லை வளைத்து அவன் செருக்கடக்கினாயே – இராமா!
அயோத்தியா காண்டம்
18.தந்தை தசரதன் தலைமகனாம் உனக்கு முடிசூட்ட விழைந்தாரே – இராமா!
19.அரசி கைகேயி சதியால் ஈரேழு ஆண்டுகள் கானகமேகிட நேர்ந்ததே – இராமா!
20.இல்லாளுடனும் இளையவனோடும் இன்முகத்துடன் வனவாசம் சென்றாயே – இராமா!
21.கங்கை வடகரை அடைந்து வேடுவன் குகனுடன் தோழமை கொண்டாயே – இராமா!
22.அன்புடன் அவனை அணைத்துப் பாசமிகு தம்பியாய் ஏற்றாயே – இராமா!
23.தென்கரை சேர்ந்து எழில்மிகு சித்திரக்கூடம் சென்றடைந்தாயே – இராமா!
24.நடந்தவை அறிந்த பரதன் உனை அயோத்தி திரும்ப அழைத்திட வந்தானே – இராமா!
25.பரதனின் மரவுரியும் மாசுமிகு மேனியும் கண்டு மனம் உருகினாயே – இராமா!
26.தந்தையின் மறைவைத் தம்பியிடமிருந்து அறிந்து உளம் உடைந்தாயே – இராமா!
27.அயோத்தி திரும்பிட பரதனின் வேண்டுகோளை ஏற்க மறுத்தாயே – இராமா!
28.பரதன் வேண்டிய உந்தன் பாதுகைகளை அவனுக்கு அருளினாயே – இராமா!
29.பரதன் சென்ற பின் தென்திசை நோக்கிச் சீதை, இலக்குவனுடன் சென்றாயே – இராமா!
ஆரண்ய காண்டம்
30.அத்திரி முனிவரையும் அவர் பத்தினி அனுசூயையும் கண்டு வணங்கினாயே – இராமா!
31.தண்டக வனத்தில் விராதன் எனும் வல்லரக்கனை வீழ்த்தி அவன் சாபம் நீக்கினாயே – இராமா!
32.அரக்கரிடமிருந்து முனிவர்களைக் காத்திட அவருடனே பத்தாண்டு காலம் வாழ்ந்தாயே- இராமா!
33.முனிவர்கள் சொற்படி அடுத்து மாமுனி அகத்தியரிடம் மற்ற இருவருடனும் சென்றாயே – இராமா!
34.அகத்திய முனிவர் அன்புடனும் ஆசியுடன் அளித்த அற்புத ஆயுதங்களைப் பெற்றாயே – இராமா!
35.அமைதியாய் அழகுடன் பாயும் கோதாவரிக் கரையிலமைந்த பஞ்சவடி சேர்ந்தாயே – இராமா!
36.இலக்குவன் அமைத்த அழகிய குடிலில் துணையவள் சீதையுடன் இன்புற வாழ்ந்தாயே – இராமா!
37.இராவணன் இளையவள் சூர்ப்பணகை உன்மேல் காமமுற்று உனைக் காண வந்தாளே – இராமா!
38.தகாத அவள் செயல் கண்டு வெகுண்ட இலக்குவன் அவள் அங்கங்களைக் கொய்தானே – இராமா!
39.உன்னுடன் சமர் புரிய வந்த அவள் சகோதரர் கரன், தூடணன் திரிசரனை வதைத்தாயே – இராமா!
40.பின்னமுற்ற முகத்தோடு சூர்ப்பணகை இராவணனிடம் உம்மைப்பற்றி முறையிட்டாளே – இராமா!
41.இராவணனிடம் சீதையின் அழகை வர்ணித்து அவன் மனத்தில் காமத்தை தூண்டினாளே – இராமா!
42.காமம் தலைக்கேறிய இராவணன் சீதையைக் கவர்ந்திட சூழ்ச்சி செய்யத் துணிந்தானே – இராமா!
43.மாமன் மாரீசனை மனதைக் கவரும் மாய மானாக உன்னிருப்பிடம் அனுப்பி வைத்தானே – இராமா!
44.மானின் அழகில் மயங்கிய சீதையும் அது தனக்கு வேண்டுமென உன்னிடம் வேண்டினாளே – இராமா!
45.இலக்குவன் தடுத்தும் கேளாது மானைத் தேடி அதன்பின் நெடுந்தூரம் சென்றாயே – இராமா!
46.உன்னம்பால் தாக்குண்ட மாரீசன் ‘சீதா! இலக்குமணா’ என வஞ்சகமாய்க் கூவி விழுந்தானே – இராமா!
47.சூதறியாத சீதை இலக்குவனைக் கடுஞ்சொற்களால் சாடி உனைத் தேடிவர அனுப்பினாளே – இராமா!
48.இலக்குவனும் செய்வதறியாது அவ்விடம் நீங்கி உனைத்தேடி கானகத்துள் சென்றானே – இராமா!
49.இலக்குவனும் நீயும் இல்லாது சீதை பர்ண(க)சாலையில் தனித்து இருக்க நேர்ந்ததே – இராமா!
50.அச்சமயம் வஞ்சக இராவணன் கபட முனிவனாய் வந்து சீதையைக் கவர்ந்து சென்றானே – இராமா!
51.சிறகடித்துப் பறந்து வந்து சீதையைக் காத்திட இராவணனிடம் சடாயு கடும் சமர் புரிந்தானே – இராமா!
52.சிறகொடித்துச் சிதைத்து சடாயுவைக் கொடும் இராவணன் மண்ணின் மேல் வீழ்த்தினானே – இராமா!
53.சாகும் நிலையிலும் உன்னிடம் நிகழ்ந்தவை யாவும் கூறியபின் சடாயு உயிர் நீத்தானே – இராமா!
54.சடாயுவுக்கு ஈமக்கடன்கள் செய்து தந்தை தசரதன் பெறாத பேற்றை சடாயுவுக்குத் தந்தாயே – இராமா!
55.கவந்தன் எனும் அரக்கனின் தோள்களைக் கொய்து அவன் சாப விமோசனம் அருளினாயே – இராமா!
56.அவன் ருசியமுக மலைவாழ் வானரக்கோன் சுக்ரீவன் பற்றி உன்னிடம் கூறி மறைந்தானே – இராமா!
57.சபரி எனும் பக்தை அபரிமிதப் பரிவுடன் சுவைத்துக் கொடுத்த கனிகளை உவந்து ஏற்றாயே – இராமா!
கிஷ்கிந்தா காண்டம்
58.கவந்தன் கூறிய வழி சென்று ருசியமுக மலையை இலக்குவனுடன் அடைந்தாயே – இராமா!
59.அண்ணன் வாலிக்குப் பயந்து ஒளிந்து வாழும் சுக்ரீவனை அனுமன் மூலம் சந்தித்தாயே – இராமா!
60.வான்வழி சென்ற சீதை நிலமீதெறிந்த அணிகலன்களைச் சுக்ரீவன் காட்டிடக் கண்டாயே – இராமா!
61.சுக்ரீவனும் வாலியும் சமர் புரியுங்கால் மறைந்திருந்து அம்பெய்து வாலியை வதைத்தாயே – இராமா!
62.உரிய முறையில் சுக்ரீவனுக்கு இலக்குவன் மூலம் வானரக்கோனாய் முடிசூட்டினாயே – இராமா!
63.பெரிய வானர சேனையைச் சீதையைத் தேட ஈரிரு திசைகளிலும் சுக்ரீவன் அனுப்பினானே – இராமா!
64.தென்திசை நோக்கி அனுமன், சாம்பவான், அங்கதன் மூவரும் சென்றனரே – இராமா!
65.மகேந்திர மலையில் அனுமன் மூலம் தம்பி சடாயுவின் மரணத்தை சம்பாதி அறிந்தானே – இராமா!
66.வானர வீரர் உன்நாமம் உச்சாடனம் செய்திட எரிந்த சம்பாதியின் சிறகுகள் துளிர்த்தனவே – இராமா!
67.வான்வழியே சீதையை இராவணன் இலங்கைக்குத் தூக்கிச்சென்றதைச் சம்பாதி கூறினானே – இராமா!
68.வீரமாருதியே இலங்கை சென்று சீதையைக் கண்டுவர ஏற்றவனென சாம்பவான் கூறினான்-இராமா!
சுந்தர காண்டம்
69.உன்னை மனதில் துதித்து விண்ணில் குதித்து அனுமன் இலங்கை சென்றடைந்தானே – இராமா!
70.இலங்கை முழுதும் அலசித் தேடி அசோக வனத்தில் சீதையை அனுமன் கண்டானே – இராமா!
71.வல்லரக்கியர் நடுவே மேகம் மறைத்த மதிபோல் பொலிவிழந்து சீதை இருந்தாளே – இராமா!
72.சீதை தன்னை மாய்த்துக்கொள்ள முயல்கையில் அனுமன் அவள் முன் தோன்றினானே – இராமா!
73.நீ அனுப்பிய கணையாழியை அனுமன் தந்திடச் சீதை மட்டற்ற மகிழ்ச்சியில் மூழ்கினாளே – இராமா!
74.அனுமனின் செயலால் மிகமகிழ்ந்து சிரஞ்சீவியாய் வாழ்கவென அகமார வாழ்த்தினாளே – இராமா!
75.தனது சூடாமணியை அடையாளமாய் உன்னிடம் அளித்திட அனுமனிடம் சீதை தந்தாளே – இராமா!
76.பேருருவம் எடுத்துப் பேரெழில் மிக்க அசோகவனந்தனை அனுமன் முற்றிலும் அழித்தானே – இராமா!
77.சினம் கொண்ட இராவணன் சிறைப் பிடிக்க அனுப்பிய அரக்கர் சேனையை வதைத்தானே – இராமா!
78.தசமுகன் தனயன் மேகநாதன் பிரயோகித்த பிரம்ம அத்திரத்திற்குத் தானே கட்டுண்டானே – இராமா!
79.தசமுகனிடம் கொண்டு செல்லப்பட்ட அனுமன் சீதையை விட்டுவிட அவனிடம் கூறினானே – இராமா!
80.அனுமனைக் கொன்றிட இராவணன் இட்ட ஆணையை அவன் தம்பி விபீடணன் தடுத்தானே – இராமா!
81.இராவணன் ஆணையால் வாலுக்கு வைத்த தீயால் அனுமன் இலங்கையை எரித்தானே- இராமா!
82.’கண்டேன் சீதையை’ எனும் செய்தியை உன்னிடம் கடுகி வந்து அனுமன் விண்டானே – இராமா!
83.‘கண்டிலேன் உனைப்போல்” என அளவிலா ஆனந்தம் கொண்டு அனுமனை அணைத்தாயே – இராமா!
84.சீதை அனுப்பிய சூடாமணியை அனுமன் காட்டிடச் சீதையையே கண்டதுபோல் மகிழ்ந்தாயே – இராமா!
85.மாபெரும் வானர சேனையுடன் பன்னிருநாள் நடந்து தென் திசைக்கடலை அடைந்தாயே – இராமா!
யுத்த காண்டம்
86.சரணம் அடைய வந்த விபீடணனுக்குக் கருணையுடன் அடைக்கலம் அளித்து ஏற்றாயே – இராமா!
87.குகனோடு ஐவரானோம் சுக்ரீவனோடு அறுவரானோம் உன்னோடு எழுவரானோம் என்றாயே – இராமா!
88.வானரப்படை சேதுவில் கட்டிய அணை வழியே யாவருடனும் இலங்கைக்கரை அடைந்தீரே – இராமா!
89.போரைத் தவிர்க்கக் கருதி அங்கதனை இராவணனுடன் சமரசம் பேச அனுப்பினாயே – இராமா!
90.இலங்கை வேந்தன் அதை ஏற்க மறுத்திட அவனுடன் சமர் புரிய ஆயத்தமானாயே – இராமா!
91.நான்முகன் தந்த வேலை தசமுகன் இலக்குவன் மேல் வீசிட அவனும் மூர்ச்சையானானே – இராமா!
92.அதன்பின் நீயே இராவணனுடன் நேரே பொருதி அவனை நிலை குலையச் செய்தாயே – இராமா!
93.களத்தில் இராவணன் வில் தேர் கொடி குடை ஏதுமின்றி நிராயுதபாணியாய் நின்றானே – இராமா!
94.உளத்தில் கருணை கொண்ட நீ ‘இன்று போய் நாளை வா போருக்கு’ என அருளினாயே – இராமா!
95.அதன்பின் வந்து கடுஞ்சமர் புரிந்த கும்பகருணனின் சிரம் கொய்து கடலுள் வீழ்த்தினாயே – இராமா!
96.அதிகாயன், கும்பகருணன், கும்பன், நிகும்பன் என இராவணனின் இரத்த உறவினர் மடிந்தனரே – இராமா!
97.அதனால் கொதித்த தசமுகன் தலைமகன் மேகநாதன் களமிறங்கிக் கடும் போர் புரிந்தானே – இராமா!
98.அவன் ஏவிய பிரம்ம அத்திரத்தால் இலக்குவன் வானரப்படையினர் கட்டுண்டு வீழ்ந்தனரே – இராமா!
99.அனுமன் சஞ்சீவினி எனும் அரிய மூலிகை கொணர்ந்து யாவரையும் உயிர்ப்பித்தானே – இராமா!
100.முடிவில் மேகநாதனை இலக்குவன் கரத்தையும் சிரத்தையும் கொய்து வீழ்த்தினானே – இராமா!
101.பத்தாம் நாள் போரில் பத்துத்தலை இராவணனை நான்முகனின் அம்பெய்து அழித்தாயே – இராமா!
102.விபீடணனுக்கு இலங்கை வேந்தனாய் இலக்குவன் மூலம் முறையாக முடிசூட்டினாயே – இராமா!
103.சீதாதேவியை அக்னிப்பரீட்சைக்கு உள்ளாக்கி அவள் கற்பை உலகுக்கு உணர்த்தினாயே – இராமா!
104.புட்பக விமானத்தில் யாவருடனும் பரத்துவாசமுனி ஆசிரமம் அடைந்து ஆசி பெற்றாயே – இராமா!
105.நந்திக்கிராமம் விரைந்து பரதனையும் அன்னையரையும் யாவரையும் கண்டு மகிழ்ந்தாயே – இராமா!
106.அனைவரும் அயோத்தி அடைந்து மறுநாள் உந்தன் பட்டாபிஷேகத்திற்கு ஆயத்தமாயினரே – இராமா!
107.அனுமன் அரியணை தாங்க பரதன் குடை பிடிக்க இலக்குவ சத்துருக்கனர் சாமரம் வீசிட- இராமா!
108.மந்திர மங்கல ஒலிகள் முழங்கிடக் குலகுரு வசிட்டர் உனக்கு முடிசூட்டினாரே – இராமா!
மங்களம்
இளையவர் மூவரும் சுற்றி உடனிருக்க
இனியவள் சீதையோடு இராமன் வீற்றிருக்க
அனுமன் அண்ணலின் திருவடியில் அமர்ந்திருக்க
அனைவரும் வணங்கி வாழ்வில் வளம் பெறுவோமே.