இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(125)

சக்தி சக்திதாசன்.

magna  carta
அன்பினியவர்களே !
இதோ அடுத்தொரு மடலில் உங்களின் முன்னே. அனைத்து உள்ளங்களும் நலமாக இருப்பீர்கள் எனும் நம்பிக்கையோடு பகிர்தலைத் தொடர்கிறேன்.

ஒரு நாடு எத்தனை தூரம் நாகரீகமடைந்திருக்கிறது என்பதற்கு அந்நாட்டினுடைய சட்ட திட்டங்களை எடுத்துப் பார்ப்பது அவசியமாகிறது.

மனைதர்களை மனிதர்களாக மதிப்பதும் அவர்களுக்குரிய அடிப்படை மனித உரிமைகள் சட்டவிதிகளின் மூலம் வரையறுக்கப்பட்டுள்ளதா? என்பதன் மூலமே அந்நாடு எத்தகைய சமூக முன்னேற்றத்திற்கு  தன்னை உள்ளாக்கியிருக்கிறது எனும் உண்மை தெளிவாகிறது.

இன்று காலை தொலைக்காட்சியில் காலை நிகழ்ச்சியைக் கண்ணுற்ற போது அதிலே கூறப்பட்ட ஒரு விடயம் என்னை வெட்கப்படவைத்தது.

அட! அது என்னப்பா விடயம்? நாமும் தெரிந்து கொள்ளலாமே எனும் ஆவல் உங்களுக்கு எழுவது இயற்கை.

அவசரப்படாதீர்கள், ஆர்வமிகுதியால் பரபரப்படையாதீர்கள், இதோ விடயத்திற்கு வருகிறேன்.

இங்கிலாந்தில் ஏறத்தாழ 40 வருடங்கள் வாழ்ந்த நான் இந்நாட்டின் சட்ட அமைப்புகளின் அடிப்படையை இதுவரைகாலமும் தெரிந்து கொள்ளாமல் வாழ்ந்து விட்டேனே எனும் எண்ணம் தான் என்னை நாணித் தலைகுனிய வைத்தது.

Magna_Carta_(British_Library_Cotton_MS_Augustus_II.106)ஆமாம் தொலைக்காட்சியில் “மக்னா கார்ட்டா (Magna Carta)”  எனும் ஒரு பத்திரத்தைப் பற்றிக் குறிப்பிட்டு அதன் உண்மையான அறுதியான பிரதி பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்படப் போகிறது எனும் கருத்துப் பரிமாறப்பட்டது.

பல சமயங்களில் இந்த “மக்னா கார்ட்டா”(Magna Carta) எனும் பெயர் கூறப்படுவதைக் கேட்டிருந்த போதும் அதன் உண்மையான விளக்கத்தைப் பற்றி அறியாமல் இருந்து விட்டேன்.

இந்த 40 வருட காலமும் எனது வாழ்க்கைக்கு அச்சாரமாகவிருந்த இந்நாட்டின் சரித்திரத்தில் இடம்பெற்ற ஒரு முக்கிய ஆவணத்தைப் பற்றி நான் அறியாமல் இருந்தது இந்நாட்டினை என் நாடாக நான் கருதாத காரணத்தினாலோ?

சரி, இனியாவது இதைப்பற்றிச் சிறிது கொள்ளலாம் எனும் நோக்கத்தோடு நான் அறிந்தவைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் மடலாக இம்மடல் அமைகிறது.

கி.பி 1209ம் ஆண்டளவில் இங்கிலாந்தின் அரசனாக ஜோன் என்பவர் அரசாண்ட காலம். அன்றைய காலத்தில் அரசருக்கெதிராக கிளர்ச்சி செய்வோர்கள்; இல்லை, அரசனின் பார்வையிலோ அன்றி அரசனின் ஆதரவாளரின் பார்வையிலோ அரசனுக்கு எதிராக செயற்படுவோர்; அன்றி எதிர்க் கருத்துகளைக் கொண்டுள்ளோர் எனக் கருதப்படுவோர் எவ்வித விசாரணைகளுமின்றித் தண்டிக்கப்பட்ட காலம்…

125.2அப்போதய நிலப்பிரபுக்கள் பலர் இச்செய்கையால் அதிருப்தி அடைந்திருந்தனர். அது மட்டுமின்றி அரசன் விதித்த  அதிகமான வரிகள், அத்துடன் அரசனால் முன்னெடுக்கப்பட்டு தோல்வியில் முடிந்த போர்கள் எனப் பல காரணிகள் இந்நிலத்துவ பிரபுக்களுக்கு அரசன் மீதும் அவன் கொண்டிருந்த தன்னிச்சையான அதிகாரத்தின் மீதும் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

அப்போதைய கத்தோலிக்க போப் ஆண்டவராக இருந்த “போப் இனொசன்ட் 3 (Pope Innocent III) என்பவரோடு அரசன் ஜானுக்கிருந்த உறவின் அதிருப்தி கூட இவ்வரசனின் மீதான வெறுப்புக்குக் காரணமாகவிருந்தன.

இப்பிரச்சனைகளின் காரணமாக இந்நிலப்பிரபுக்கள் இவ்வரசனுக்கெதிரான கிளர்ச்சியை 1209ம் ஆண்டிற்கும் 1212ம் ஆண்டிற்குமிடையில் பலமுரை நிகழ்த்தினர்.

அக்காலகட்டத்தில் மக்கள் ஆதரவில்லாத அரசர்களை இப்பிரபுக்கள் வேறு சிற்றரசர்களின் ஆதரவோடு வீழ்த்துவது வழக்கமாக இருந்தாலும் இம்முறை இக்கிளர்ச்சி வேறு வடிவமெடுத்திருந்தது…

இம்முறை இக்கிளர்ச்சியின் நோக்கம் அவ்வரசனைப் பதவியிலிருந்து இறக்குவது என்பதில்லாமல், இப்பிரபுக்கள் சில கோரிக்கைகளை முன்வைத்து அவற்றை அரசன் உத்தியோகபூர்வமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.

அரசன் ஜானினதும் , போப் ஆண்டவரின் பல இழுத்தடிப்புகளுக்கும் பின்னால் தமது கோரிக்கைகளைச் சாசனமாக்குவதில் நிலத்துவ பிரபுக்கள் வெற்றி கண்டனர்.

இவர்களது வெற்றிக்கு அப்போதைய பிரான்சு மன்னன் லூயியினதும், ஸ்கொட்லாந்து மன்னன் அலெக்ஸ்சாண்டரினதும் ஆதரவு இருந்ததே காரணம் என்று சொல்லப் படுகிறது.

இச்சாசனம் அப்போது “சுதந்திரச் சாசனம்” என்றழைக்கப்பட்டது. இதன் அடிப்படை சாராம்சமாக தனிமனித உரிமைகள் பாதுக்கக்கப்பட வேண்டும் என்றும், நாட்டிற்கென நீதிமுறைச் சட்டங்கள் வகுக்கப்பட்டு அதன் முன்னால் குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்டாலே ஒழிய மக்கள் யாரும் தண்டிக்கப்படமுடியாது என்பவை வலியுறுத்தப்பட்டன.

25 நிலப்பிரபுக்களைக் கொண்ட ஒரு சபை அமைக்கப்பட்டு அச்சபை இச்சாசனத்தை அங்கீகரித்தது. இச்சாசனத்தின் படி இதற்கு எதிராக அரசன் செயற்படுகிறார் என்று கண்டறியும் பட்சத்தில் அரசனின் சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும்.

தனது உரிமைகளை விட்டுக் கொடுக்க மறுத்த அரசன் ஜானுக்கும் நிலப்பிரபுக்களுக்கிடையிலான வேறுபாடு வலுவடைந்தது.

அரசனுடன் தமக்கு ஏற்பட்ட வேறுபாடுகள் தீர்க்கப்படமுடியாது என உணர்ந்த பிரபுக்கள் அரசனுக்கெதிரான உள்நாட்டு யுத்தத்தில் ஈடுபட்டார்கள். இப்போர் “முதலாவது பிரபுக்கள் யுத்தம் (First Barons War) “ என்றழைக்கப்பட்டது…

125.1இதுவரை மன்னனின் உரிமைகளை வறையறுப்பதையே நோக்கமாகக் கொண்டிருந்த பிரபுக்கள், இப்போது அரசனை பதவியிலிருந்து இறக்குவதை நோக்கமாகக் கொண்டு இங்கிலாந்தின் முடியை அப்போதைய பிரான்சு மன்னன் லூயி இடம் தாரைவார்த்தார்கள்.

ஆனால் அவர்களது சாசனத்தின் அவ்காசம் மூன்று மாதமே நீடித்தது. அப்போது 1216ம் ஆண்டு அரசன் ஜோன் இறந்தான்.

அதன் பின்னே இச்சாசனம் சட்டமூலமாக்கப்பட்டது. இச்சாசனமே “மக்னா கார்ட்டா” (*Magna Carta) என்றழைக்கப்பட்டது. இது ஒரு லத்தீன் சொல்லாகும் இதன் அர்த்தம் “சிறந்த சாசனம்” ஆகும்.

சரி, அப்படிப் பெருமையாக இத்தனை காலம் கழித்துப் பேசப்படும் இச்சாசனத்தைப் பற்றி நீ ஏன் அலட்டிக் கொள்கிறாய் என்கிறீர்களா?

இன்றைய இங்கிலாந்தின் அரசாங்க அரசியலமைப்பின் அடிப்படையே இச்சாசனம் தான். “குற்றவாளி என நிரூபிக்கப்படும்வரை அனைவரும் நிராபராதிகளே ” என்று கூறப்படும் சட்ட தாரக மந்திரத்தின் பிறப்பிடமே இச்சாசனம் தான்.

பிரித்தானியப் பேரரசின் காலனித்துவ நாடுகளாக இருந்த பெரும்பான்மையான நாடுகளின் அரசியலமைப்பும், சட்டமூலங்களும் இதன் பின்னனியில் தான் அமைந்திருக்கின்றன.

அடடா ! இதை அறிந்து கொள்ள எனக்கு சுமார் 40 வருடங்கள் எடுத்திருக்கின்றதா ?

போச்சுடா !

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

* Magna Carta (Latin for Great Charter), also called Magna Carta Libertatum or The Great Charter of the Liberties of England, is an Angevin charter originally issued in Latin. It was sealed under oath by King John at Runnymede, on the bank of the River Thames near Windsor, England, on 15 June 1215.[Wikipedia]

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.