இராம நாம தாரகம்
-சு. கோபாலன்
பால காண்டம்
1.அயோத்தி நாட்டில் ஆதவகுலத் திலகமாய் அவதரித்தாயே – இராமா!
2.அன்னை கோசலை தந்தை தசரதன் அன்புக் கண்மணியே – இராமா!
3.இலக்குவன் பரதன் சத்துருக்கனன் மூவர்க்கும் முதல்வனே – இராமா!
4.குலகுருவாம் வசிஷ்டரிடம் கலைகள் யாவும் கற்றவனே – இராமா!
5.வேள்வி காத்திட விசுவாமித்திரர் உன்னை அழைத்தாரே – இராமா!
6.கேள்வி கேட்காது அவர்பின் இலக்குவனோடு சென்றாயே – இராமா!
7.வில்லில் நாணேற்றி வல்லரக்கி தாடகையை வதைத்தாயே – இராமா!
8.தொல்லை தர வந்த அரக்கர் யாவரையும் அழித்தாயே – இராமா!
9.முறையாய் வேள்வி முடித்த நிறைவை முனிவர்க்கு அளித்தாயே – இராமா!
10.விசுவாமித்திரர் உடன்வர இலக்குவனுடன் மிதிலை ஏகினாயே – இராமா!
11.செல்லும் வழியில் கல்லாயிருந்த அகலிகையை உயிர்ப்பித்தாயே – இராமா!
12.கையேந்திய வில்லால் தாடகையின் உயிரழித்துக் கைவண்ணம் காட்டினாயே – இராமா!
13.காலால் கல்லைத் தீண்டி அகலிகைக்கு உயிரளித்து கால்வண்ணம் காட்டினாயே – இராமா!
14.முக்கண்ணன் வில்லை ஒருகணத்தில் எடுத்து நிறுத்தி முறித்தாயே – இராமா!
15.அக்கணமே மிதிலையின் அரசகுமாரி மைதிலியின் மணமகனானேயே – இராமா!
16.நிலமகள் அருளிய திருமகளாம் சீதையின் கரதலம் பற்றி மணந்தாயே – இராமா!
17.பரசுராமனிடமிருந்த திருமால் வில்லை வளைத்து அவன் செருக்கடக்கினாயே – இராமா!
அயோத்தியா காண்டம்
18.தந்தை தசரதன் தலைமகனாம் உனக்கு முடிசூட்ட விழைந்தாரே – இராமா!
19.அரசி கைகேயி சதியால் ஈரேழு ஆண்டுகள் கானகமேகிட நேர்ந்ததே – இராமா!
20.இல்லாளுடனும் இளையவனோடும் இன்முகத்துடன் வனவாசம் சென்றாயே – இராமா!
21.கங்கை வடகரை அடைந்து வேடுவன் குகனுடன் தோழமை கொண்டாயே – இராமா!
22.அன்புடன் அவனை அணைத்துப் பாசமிகு தம்பியாய் ஏற்றாயே – இராமா!
23.தென்கரை சேர்ந்து எழில்மிகு சித்திரக்கூடம் சென்றடைந்தாயே – இராமா!
24.நடந்தவை அறிந்த பரதன் உனை அயோத்தி திரும்ப அழைத்திட வந்தானே – இராமா!
25.பரதனின் மரவுரியும் மாசுமிகு மேனியும் கண்டு மனம் உருகினாயே – இராமா!
26.தந்தையின் மறைவைத் தம்பியிடமிருந்து அறிந்து உளம் உடைந்தாயே – இராமா!
27.அயோத்தி திரும்பிட பரதனின் வேண்டுகோளை ஏற்க மறுத்தாயே – இராமா!
28.பரதன் வேண்டிய உந்தன் பாதுகைகளை அவனுக்கு அருளினாயே – இராமா!
29.பரதன் சென்ற பின் தென்திசை நோக்கிச் சீதை, இலக்குவனுடன் சென்றாயே – இராமா!
ஆரண்ய காண்டம்
30.அத்திரி முனிவரையும் அவர் பத்தினி அனுசூயையும் கண்டு வணங்கினாயே – இராமா!
31.தண்டக வனத்தில் விராதன் எனும் வல்லரக்கனை வீழ்த்தி அவன் சாபம் நீக்கினாயே – இராமா!
32.அரக்கரிடமிருந்து முனிவர்களைக் காத்திட அவருடனே பத்தாண்டு காலம் வாழ்ந்தாயே- இராமா!
33.முனிவர்கள் சொற்படி அடுத்து மாமுனி அகத்தியரிடம் மற்ற இருவருடனும் சென்றாயே – இராமா!
34.அகத்திய முனிவர் அன்புடனும் ஆசியுடன் அளித்த அற்புத ஆயுதங்களைப் பெற்றாயே – இராமா!
35.அமைதியாய் அழகுடன் பாயும் கோதாவரிக் கரையிலமைந்த பஞ்சவடி சேர்ந்தாயே – இராமா!
36.இலக்குவன் அமைத்த அழகிய குடிலில் துணையவள் சீதையுடன் இன்புற வாழ்ந்தாயே – இராமா!
37.இராவணன் இளையவள் சூர்ப்பணகை உன்மேல் காமமுற்று உனைக் காண வந்தாளே – இராமா!
38.தகாத அவள் செயல் கண்டு வெகுண்ட இலக்குவன் அவள் அங்கங்களைக் கொய்தானே – இராமா!
39.உன்னுடன் சமர் புரிய வந்த அவள் சகோதரர் கரன், தூடணன் திரிசரனை வதைத்தாயே – இராமா!
40.பின்னமுற்ற முகத்தோடு சூர்ப்பணகை இராவணனிடம் உம்மைப்பற்றி முறையிட்டாளே – இராமா!
41.இராவணனிடம் சீதையின் அழகை வர்ணித்து அவன் மனத்தில் காமத்தை தூண்டினாளே – இராமா!
42.காமம் தலைக்கேறிய இராவணன் சீதையைக் கவர்ந்திட சூழ்ச்சி செய்யத் துணிந்தானே – இராமா!
43.மாமன் மாரீசனை மனதைக் கவரும் மாய மானாக உன்னிருப்பிடம் அனுப்பி வைத்தானே – இராமா!
44.மானின் அழகில் மயங்கிய சீதையும் அது தனக்கு வேண்டுமென உன்னிடம் வேண்டினாளே – இராமா!
45.இலக்குவன் தடுத்தும் கேளாது மானைத் தேடி அதன்பின் நெடுந்தூரம் சென்றாயே – இராமா!
46.உன்னம்பால் தாக்குண்ட மாரீசன் ‘சீதா! இலக்குமணா’ என வஞ்சகமாய்க் கூவி விழுந்தானே – இராமா!
47.சூதறியாத சீதை இலக்குவனைக் கடுஞ்சொற்களால் சாடி உனைத் தேடிவர அனுப்பினாளே – இராமா!
48.இலக்குவனும் செய்வதறியாது அவ்விடம் நீங்கி உனைத்தேடி கானகத்துள் சென்றானே – இராமா!
49.இலக்குவனும் நீயும் இல்லாது சீதை பர்ண(க)சாலையில் தனித்து இருக்க நேர்ந்ததே – இராமா!
50.அச்சமயம் வஞ்சக இராவணன் கபட முனிவனாய் வந்து சீதையைக் கவர்ந்து சென்றானே – இராமா!
51.சிறகடித்துப் பறந்து வந்து சீதையைக் காத்திட இராவணனிடம் சடாயு கடும் சமர் புரிந்தானே – இராமா!
52.சிறகொடித்துச் சிதைத்து சடாயுவைக் கொடும் இராவணன் மண்ணின் மேல் வீழ்த்தினானே – இராமா!
53.சாகும் நிலையிலும் உன்னிடம் நிகழ்ந்தவை யாவும் கூறியபின் சடாயு உயிர் நீத்தானே – இராமா!
54.சடாயுவுக்கு ஈமக்கடன்கள் செய்து தந்தை தசரதன் பெறாத பேற்றை சடாயுவுக்குத் தந்தாயே – இராமா!
55.கவந்தன் எனும் அரக்கனின் தோள்களைக் கொய்து அவன் சாப விமோசனம் அருளினாயே – இராமா!
56.அவன் ருசியமுக மலைவாழ் வானரக்கோன் சுக்ரீவன் பற்றி உன்னிடம் கூறி மறைந்தானே – இராமா!
57.சபரி எனும் பக்தை அபரிமிதப் பரிவுடன் சுவைத்துக் கொடுத்த கனிகளை உவந்து ஏற்றாயே – இராமா!
கிஷ்கிந்தா காண்டம்
58.கவந்தன் கூறிய வழி சென்று ருசியமுக மலையை இலக்குவனுடன் அடைந்தாயே – இராமா!
59.அண்ணன் வாலிக்குப் பயந்து ஒளிந்து வாழும் சுக்ரீவனை அனுமன் மூலம் சந்தித்தாயே – இராமா!
60.வான்வழி சென்ற சீதை நிலமீதெறிந்த அணிகலன்களைச் சுக்ரீவன் காட்டிடக் கண்டாயே – இராமா!
61.சுக்ரீவனும் வாலியும் சமர் புரியுங்கால் மறைந்திருந்து அம்பெய்து வாலியை வதைத்தாயே – இராமா!
62.உரிய முறையில் சுக்ரீவனுக்கு இலக்குவன் மூலம் வானரக்கோனாய் முடிசூட்டினாயே – இராமா!
63.பெரிய வானர சேனையைச் சீதையைத் தேட ஈரிரு திசைகளிலும் சுக்ரீவன் அனுப்பினானே – இராமா!
64.தென்திசை நோக்கி அனுமன், சாம்பவான், அங்கதன் மூவரும் சென்றனரே – இராமா!
65.மகேந்திர மலையில் அனுமன் மூலம் தம்பி சடாயுவின் மரணத்தை சம்பாதி அறிந்தானே – இராமா!
66.வானர வீரர் உன்நாமம் உச்சாடனம் செய்திட எரிந்த சம்பாதியின் சிறகுகள் துளிர்த்தனவே – இராமா!
67.வான்வழியே சீதையை இராவணன் இலங்கைக்குத் தூக்கிச்சென்றதைச் சம்பாதி கூறினானே – இராமா!
68.வீரமாருதியே இலங்கை சென்று சீதையைக் கண்டுவர ஏற்றவனென சாம்பவான் கூறினான்-இராமா!
சுந்தர காண்டம்
69.உன்னை மனதில் துதித்து விண்ணில் குதித்து அனுமன் இலங்கை சென்றடைந்தானே – இராமா!
70.இலங்கை முழுதும் அலசித் தேடி அசோக வனத்தில் சீதையை அனுமன் கண்டானே – இராமா!
71.வல்லரக்கியர் நடுவே மேகம் மறைத்த மதிபோல் பொலிவிழந்து சீதை இருந்தாளே – இராமா!
72.சீதை தன்னை மாய்த்துக்கொள்ள முயல்கையில் அனுமன் அவள் முன் தோன்றினானே – இராமா!
73.நீ அனுப்பிய கணையாழியை அனுமன் தந்திடச் சீதை மட்டற்ற மகிழ்ச்சியில் மூழ்கினாளே – இராமா!
74.அனுமனின் செயலால் மிகமகிழ்ந்து சிரஞ்சீவியாய் வாழ்கவென அகமார வாழ்த்தினாளே – இராமா!
75.தனது சூடாமணியை அடையாளமாய் உன்னிடம் அளித்திட அனுமனிடம் சீதை தந்தாளே – இராமா!
76.பேருருவம் எடுத்துப் பேரெழில் மிக்க அசோகவனந்தனை அனுமன் முற்றிலும் அழித்தானே – இராமா!
77.சினம் கொண்ட இராவணன் சிறைப் பிடிக்க அனுப்பிய அரக்கர் சேனையை வதைத்தானே – இராமா!
78.தசமுகன் தனயன் மேகநாதன் பிரயோகித்த பிரம்ம அத்திரத்திற்குத் தானே கட்டுண்டானே – இராமா!
79.தசமுகனிடம் கொண்டு செல்லப்பட்ட அனுமன் சீதையை விட்டுவிட அவனிடம் கூறினானே – இராமா!
80.அனுமனைக் கொன்றிட இராவணன் இட்ட ஆணையை அவன் தம்பி விபீடணன் தடுத்தானே – இராமா!
81.இராவணன் ஆணையால் வாலுக்கு வைத்த தீயால் அனுமன் இலங்கையை எரித்தானே- இராமா!
82.’கண்டேன் சீதையை’ எனும் செய்தியை உன்னிடம் கடுகி வந்து அனுமன் விண்டானே – இராமா!
83.‘கண்டிலேன் உனைப்போல்” என அளவிலா ஆனந்தம் கொண்டு அனுமனை அணைத்தாயே – இராமா!
84.சீதை அனுப்பிய சூடாமணியை அனுமன் காட்டிடச் சீதையையே கண்டதுபோல் மகிழ்ந்தாயே – இராமா!
85.மாபெரும் வானர சேனையுடன் பன்னிருநாள் நடந்து தென் திசைக்கடலை அடைந்தாயே – இராமா!
யுத்த காண்டம்
86.சரணம் அடைய வந்த விபீடணனுக்குக் கருணையுடன் அடைக்கலம் அளித்து ஏற்றாயே – இராமா!
87.குகனோடு ஐவரானோம் சுக்ரீவனோடு அறுவரானோம் உன்னோடு எழுவரானோம் என்றாயே – இராமா!
88.வானரப்படை சேதுவில் கட்டிய அணை வழியே யாவருடனும் இலங்கைக்கரை அடைந்தீரே – இராமா!
89.போரைத் தவிர்க்கக் கருதி அங்கதனை இராவணனுடன் சமரசம் பேச அனுப்பினாயே – இராமா!
90.இலங்கை வேந்தன் அதை ஏற்க மறுத்திட அவனுடன் சமர் புரிய ஆயத்தமானாயே – இராமா!
91.நான்முகன் தந்த வேலை தசமுகன் இலக்குவன் மேல் வீசிட அவனும் மூர்ச்சையானானே – இராமா!
92.அதன்பின் நீயே இராவணனுடன் நேரே பொருதி அவனை நிலை குலையச் செய்தாயே – இராமா!
93.களத்தில் இராவணன் வில் தேர் கொடி குடை ஏதுமின்றி நிராயுதபாணியாய் நின்றானே – இராமா!
94.உளத்தில் கருணை கொண்ட நீ ‘இன்று போய் நாளை வா போருக்கு’ என அருளினாயே – இராமா!
95.அதன்பின் வந்து கடுஞ்சமர் புரிந்த கும்பகருணனின் சிரம் கொய்து கடலுள் வீழ்த்தினாயே – இராமா!
96.அதிகாயன், கும்பகருணன், கும்பன், நிகும்பன் என இராவணனின் இரத்த உறவினர் மடிந்தனரே – இராமா!
97.அதனால் கொதித்த தசமுகன் தலைமகன் மேகநாதன் களமிறங்கிக் கடும் போர் புரிந்தானே – இராமா!
98.அவன் ஏவிய பிரம்ம அத்திரத்தால் இலக்குவன் வானரப்படையினர் கட்டுண்டு வீழ்ந்தனரே – இராமா!
99.அனுமன் சஞ்சீவினி எனும் அரிய மூலிகை கொணர்ந்து யாவரையும் உயிர்ப்பித்தானே – இராமா!
100.முடிவில் மேகநாதனை இலக்குவன் கரத்தையும் சிரத்தையும் கொய்து வீழ்த்தினானே – இராமா!
101.பத்தாம் நாள் போரில் பத்துத்தலை இராவணனை நான்முகனின் அம்பெய்து அழித்தாயே – இராமா!
102.விபீடணனுக்கு இலங்கை வேந்தனாய் இலக்குவன் மூலம் முறையாக முடிசூட்டினாயே – இராமா!
103.சீதாதேவியை அக்னிப்பரீட்சைக்கு உள்ளாக்கி அவள் கற்பை உலகுக்கு உணர்த்தினாயே – இராமா!
104.புட்பக விமானத்தில் யாவருடனும் பரத்துவாசமுனி ஆசிரமம் அடைந்து ஆசி பெற்றாயே – இராமா!
105.நந்திக்கிராமம் விரைந்து பரதனையும் அன்னையரையும் யாவரையும் கண்டு மகிழ்ந்தாயே – இராமா!
106.அனைவரும் அயோத்தி அடைந்து மறுநாள் உந்தன் பட்டாபிஷேகத்திற்கு ஆயத்தமாயினரே – இராமா!
107.அனுமன் அரியணை தாங்க பரதன் குடை பிடிக்க இலக்குவ சத்துருக்கனர் சாமரம் வீசிட- இராமா!
108.மந்திர மங்கல ஒலிகள் முழங்கிடக் குலகுரு வசிட்டர் உனக்கு முடிசூட்டினாரே – இராமா!
மங்களம்
இளையவர் மூவரும் சுற்றி உடனிருக்க
இனியவள் சீதையோடு இராமன் வீற்றிருக்க
அனுமன் அண்ணலின் திருவடியில் அமர்ந்திருக்க
அனைவரும் வணங்கி வாழ்வில் வளம் பெறுவோமே.