நில்லாத நதிபோல – பாடல்
-இசைக்கவி ரமணன்
[mixcloud]http://www.mixcloud.com/Vallamai/%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%A4/[/mixcloud]
நில்லாத நதிபோல விரைகின்ற வாழ்க்கை
எல்லோர்க்கும் விதம்விதமாய் ஏதேதோ வேட்கை
இன்பமோ துன்பமோ எதுவுமே நில்லாதே
தன்போக்கில் தானறிவார் நீ போய்ச் சொல்லாதே
சொல்லாமல் வந்த உயிர் சொல்லாமல் போகும்
சொல்லிச் சொல்லி அந்த விதி சொக்கட்டான் ஆடும்
நீராடி வந்த தேகம் நெருப்போடே வேகும்
யாரோடும் உறவின்றி எங்கோ தனியே போகும்
கண்ணை மூடிப் பிறந்து கண்ணைத் திறந்தே பறந்து
மண்மீது நடந்து நடந்து மண்மீதே துவண்டு விழுந்து
எண்ணமென்னும் சிறகெடுத்து எங்கெங்கோ பறந்து திரிந்து
ஏங்கியது கிடைக்காமல் ஏனோ பட்டம் அலைந்து அறுந்து
என்னடா வாழ்க்கையிது இன்பமிதில் எங்கே?
எந்தக்கணம் ஆனாலும் காதில் கேட்கும் சங்கே!
விட்டுவிட்டுத் தெருவில் வந்தால் வீதியெல்லாம் வீடு
கட்டிக்கொண்டு காவல்செய்தால் வீடுகூடக் காடு
நாயகன் ஒருவனிங்கே நாடகம் ஆடுகிறான்
வாழ்வெனும் சட்டியிலே வறுத்து வறுத்துப் போடுகிறான்
ஆசை மணல்வீடு அலைகள் வந்து விழுங்குதடா
ஆனாலும் பிள்ளை மனம் மணலளையப் போகுதடா
நெஞ்சில் அவனைவைத்து நேரே நடைபோடு
பஞ்சமோ வெள்ளமோ எல்லாம் அவன் பாடு
நெஞ்சார மற்றவர்கள் நலம்வாழப் பாடு, ஒரு
நேரத்தில் சிறகெடுத்து நீ விடுவாய் கூடு
இன்பமும் துன்பமும் இணந்து வருவது தானே
இயற்கையின் நியதி – அதை யாருக்கு எப்போது
தருவது அந்த ஆண்டவன் கையில் !