உலகத் தபால் தினம்!
-ரா.பார்த்தசாரதி
சிவப்பும் கருப்பும் நிறமுடைய பெட்டி
உங்கள் கடிதங்களைத் தாங்கும் பெட்டி
வேலையில்லாப் பட்டதாரிகள் எதிர்பார்க்கும் நண்பனாய் இருந்தேன்
கல்லூரி மாணவனுக்கும் நான் ஒரு பாலமாய் இருந்தேன்
காதலர்களுக்கு என்றும் ஒரு தூதுவனாய் இருந்தேன்
நல்ல, கெட்ட செய்திகளையும் அறிவிப்பவனாய் இருந்தேன்
சிறு சேமிப்புக்கு என்றும் துணையாய் இருந்தேன்
மழையிலும் வெயிலிலும் உங்கள் கடிதங்களைச் சுமந்து சென்றேன்
காகிதம் மூலம் உங்கள் கருத்துக்களை எடுத்துச் செல்பவன்
பண்டிகை வந்தாலோ உங்கள் வாழ்த்துக்களை அனுப்பும் சேவகன்
தந்திகளை ஒதுக்கிய நீங்கள் என்னை ஒதுக்கி விடாதீர்கள்!
கணினி வந்ததால் எங்களை நசுக்கிவிடாதீர்கள்!
கணினி மூலம் கடிதங்களும் கருத்துக்களும் பரிமாற்றமே
கிராமத்திலும் நகரத்திலும் கணினியால் எங்களுக்கும் ஏற்றமே
மக்கள் எங்களை நண்பனாய், சேவகனாய்க் கருதுவதே நன்று
எங்களை உற்ற சேவகனாய் நினையுங்கள் உலகத் தபால் தினத்தன்று!