Blog

  • சீதாயணம் நாடகம் -12

     

    படக்கதை -12

    [சென்ற வாரத் தொடர்ச்சி]

    சீதாயணம் படக்கதை -12

    நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா

    வடிவமைப்பு :  வையவன்

    ஓவியம் :  ஓவித்தமிழ்

    jeya1

     

     jeya2

    **********

    தகவல்

    1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958]

    2. Valmiki ’s Ramayana, Dreamland Publications, By: Ved Prakash [2001] and Picture Credit    to Kishan Lal Verma

    3.  Mahabharatha By: Rosetta William [2000]

    4. The Wonder that was India By: A.L. Basham [1959]

    5. The Ramayana & The Mahabharata  By: Romesh C. Dutt  [1969]

    6.  Ramayana [Torchlight Publishing] By: Krishna Dharma  [2004]

    7.   http://jayabarathan.wordpress.com/seethayanam/

    ​  [நெஞ்சின் அலைகள்]​

     

     

    ​8.  ​http://www.vallamai.com/?p=21424   [வல்லமை வலைப் பக்கம்]

     

    **************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com ] (October 2, 2013)  [R-2]

    http://jayabarathan.wordpress.com/

     

    Share
  • உணவை வீணாக்கும் அமெரிக்கர்கள்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    எல்லாப் பொருள்களையும் வீணாக்குவதில் அமெரிக்கர்கள் வல்லவர்கள்.  அதிலும் உணவுப் பதார்த்தங்களை வீணாக்குவதில் இவர்களை யாரும் மிஞ்ச முடியாது.  அமெரிக்காவில் எல்லா இடங்களிலும் எல்லாக் காய்கறிகளும் பழங்களும் விளைவதில்லை.  அந்தந்த இடங்களில் விளையும் பொருள்களை வாங்குங்கள் என்று அவ்வப்போது விளம்பரங்கள் வந்தாலும் ஒரு இடத்தில் விளையும் பொருள்களை நாடு முழுவதும் அனுப்புவது அமெரிக்காவில் சாதாரணமாக நடைபெறும் ஒன்று.  இந்தியாவில் அப்படியில்லை.  தென் தமிழ்நாட்டில் விளையும் காய்கறிகள் கூட கர்நாடகாவில் உள்ள மைசூரில் கிடைப்பதில்லை.  காய்கறிகளையும் பழங்களையும் தூர இடங்களுக்கு எடுத்துச் செல்வதில் பண விரயமும் பொருள் விரயமும் நிறைய ஏற்படும்.  அதனால் இந்தியாவில் அப்படிச் செய்வதற்கு நமக்குக் கட்டுப்படியாகாது.  ஆனால் அமெரிக்காவில் அதைப் பற்றி எல்லாம் யார் கவலைப்படுகிறார்கள்? வருஷம் முழுவதும் எல்லாக் காய்கறிகளும் பழங்களும் கிடைத்துக்கொண்டிருக்கும்.  சீசனுக்குத் தகுந்தபடி விலையில் கொஞ்சம் மாற்றம் இருக்கும்.  அவ்வளவே.  இப்படிக் கொண்டு செல்வதில் நிறைய வீணாகின்றன என்கிறார்கள்.  இதில் ஆரம்பித்து அவற்றைச் சேமிப்பது, பின் வாடிக்கையாளர்கள் அவற்றை வாங்கித் தங்கள் குளிர்பெட்டியில் சேமிப்பது, பின் அவற்றைச் சமைப்பது என்று பல நிலைகளில் அவை வீணாவது தொடர்கிறது.  அது போதாது என்று சமைத்த உணவை வீணாக்குவதிலும் அமெரிக்கர்கள் வல்லவர்கள்.

    டிசம்பர் மாதம் பிறந்துவிட்டால் எங்கு பார்த்தாலும் பார்ட்டிகள்.  ஏன் அதற்கு முன்பே நவம்பரிலேயே நன்றி தெரிவிக்கும் பண்டிகைக்கும் வழக்கத்தை விட அதிகமாக உண்ணும் பழக்கம் ஆரம்பித்துவிடுகிறது.  டிசம்பரில் வரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு எங்கு பார்த்தாலும் பார்ட்டிகள் நடக்கும்.  பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், டிபார்ட்மெண்ட் கடைகள், அடுக்குமாடிக் கட்டடங்கள், மருத்துவமனைகள் என்று எங்கும் பார்ட்டிகள்.  எல்லா நிறுவனங்களும் தங்களிடம் வேலைபார்ப்பவர்களுக்கு இப்படிக் கிறிஸ்துமஸையொட்டிபார்ட்டி கொடுக்க வேண்டும் என்ற எழுதப்படாத விதி ஒன்று இருக்கிறது.  இதற்கு மேல் அந்தந்த டிப்பார்ட்மெண்ட மேனேஜர்கள் தங்களுக்குக் கீழ் வேலைபார்ப்பவர்களுக்கு பார்ட்டி கொடுக்கும் வழக்கமும் இருக்கிறது.

    அமெரிக்காவில் நிறைய வளம் இருக்கிறது.  உலகின் பல மூலைகளிலுமிருந்து மனிதர்கள் அமெரிக்காவில் குடியேறி இருக்கிறார்கள்.  அதனால் பல வகை உணவுகள் கிடைக்கின்றன.  அவற்றை அமெரிக்கர்கள் உண்டுமகிழ்வதில் தவறேதுமில்லை.  ஆனால் அம்மாதிரி பார்ட்டிகளில் வீணாக்கப்படும் உணவின் அளவைப் பார்க்கும்போதுதான் நெஞ்சம் பதறுகிறது.

    டிசம்பர் மாதம் ஒவ்வொரு வெள்ளியன்றும் அவரவர்கள் வசதிக்கேற்றவாறு ஏதாவது ஒரு வெள்ளியில் மாலை ஆறு மணிக்கு இந்த வகைப் பார்ட்டிகளை நடத்துவார்கள்.  நாங்கள் வசிக்கும் எங்கள் அடுக்கு மாடிக் குடியிருப்பிலும் ஒவ்வொரு வருடமும் பார்ட்டி நடத்துவார்கள்.  கிறிஸ்துமஸை ஒட்டி பல வாடகைதாரர்கள் வெளியூர்களுக்குச் சென்றுவிடுவதால் டிசம்பர் மாத முதல் வெள்ளியன்றே பார்ட்டி கொடுக்கும் வழக்கம் இங்கு இருக்கிறது.  பல வகை சாண்ட்விச்சுகள்,பாலாடைக்கட்டிகள்,(cheese),சாலட்கள், கார பிஸ்கட்டுகள், இனிப்பு பிஸ்கட்டுகள், கேக்குகள் என்று பல வகையான அயிட்டங்கள் இருக்கும்.  அசைவர்களுக்கென்று தனியாகச் சில அயிட்டங்கள் இருக்கும்.

    பார்ட்டி நடக்கும் இடத்திற்குள் நுழைந்தவுடனேயே என் கண்களில் படும் எனக்குப் பிடிக்காத விஷயம் உணவுகளைப் பரிமாறிக்கொள்ள வசதியாக வைக்கப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் தட்டுகள், கரண்டிகள், முள்கரண்டிகள் மற்றும் பிளாஸ்டிக் தம்ளர்கள்.  ஒருவர் இவற்றில் எத்தனை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.  அதற்கு மேல் காகித நாப்கின்கள்.  ஒரு பிளேட்டை எடுத்து உபயோகித்துவிட்டு இன்னும் கொஞ்சம் உணவு வேண்டுமானால் இன்னொரு பிளேட்டை எடுத்துக்கொள்வார்கள்.  அதே பிளேட்டை மறுபடி எடுத்துச் சென்றால் உணவைப் பரிமாறிக்கொள்ளும்போது எப்படியாவது இவர்கள் பிளேட்டில் உள்ள எச்சில் உணவு – அதாவது அதில் கிருமிகள் இருக்கலாம் என்பதால் – பொதுவாக உள்ள உணவில்சேர்ந்துவிட வாய்ப்பு இருப்பதால் இந்த ஏற்பாடாம்!  அதன் பிறகு இனிப்பு வகைகளை எடுத்துக்கொள்ள சிறிய பிளாஸ்டிக் தட்டுகள். எல்லோரும் வயிறார உண்டு முடித்த பிறகு குப்பைக் கூடை பிளாஸ்டிக்தட்டுகள் வகையறாக்களோடு  நிறைந்திருக்கும்.  இத்தனை பிளாஸ்டிக் தட்டுகளும் தம்ளர்களும் குப்பைகளைப் போடும் புதைகுழிகளில் போய்ச் சேரும்.   இவை மக்காத குப்பைகள் என்பதால் ஆண்டுக் கணக்காக அங்கேயே இருந்து சுற்றுச்சூழலை பாதிக்கும் அபாயம் உண்டு.

    தட்டுகளில் பரிமாறிக்கொண்ட உணவுகளை எல்லாம் சாப்பிட்டு முடிக்க வேண்டும் என்று அமெரிக்கர்கள் நினைப்பதில்லை.  (இந்தியாவிலேயே பலர் அப்படி நினைப்பதில்லை.  அப்புறம் வளம் கொழிக்கும் அமெரிக்காவைப் பற்றி என்ன சொல்வது?)  முடிக்க விரும்பியதை மட்டும் முடித்துவிட்டு மீதியை அப்படியே கீழே போடுவார்கள்.

    இம்மாதிரி பார்ட்டிகளில் சில அயிட்டங்களாவது மிஞ்சிவிடும்.  அவற்றைத் தங்கள் வீட்டிற்கு எடுத்துப் போக பல அமெரிக்கர்கள் விரும்புவதில்லை.  இந்தியாவில் என்றால் அங்கு வேலைபார்க்கும் ஏழைகள் அவற்றை எடுத்துச் செல்வார்கள்.  ஏனெனில் அவர்களால் உணவுகளை எளிதில் வாங்க முடியாது.  அமெரிக்காவில் பார்ட்டிகளில் பரிமாறப்படும் உணவுகளை வாங்க முடியாதவர்கள் என்று யாரும் இல்லை.  தங்களுக்குப் பிடித்த அயிட்டம் என்று ஏதாவது இருந்தாலொழிய மற்றவற்றை எடுத்துச் செல்ல மாட்டார்கள்.  உணவு தயாரித்து இம்மாதிரி பார்ட்டிகளுக்குக் கொடுப்பதற்கென்று சில கம்பெனிகள் இருக்கின்றன.  அந்தக் கம்பெனி ஆட்கள் உணவுகளைக் கொண்டுவந்து மேஜைகளில் பரப்பிவிட்டுப் பின் கடைசியாக பரிமாறிய பாத்திரங்களை எடுத்துச் செல்வார்கள்.  என்ன மிஞ்சியிருந்தாலும் அவற்றை அப்படியே குப்பையில் கொட்டிவிடுவார்கள்.  விருந்திற்கு வந்தவர்களும் ஒரு முறை சாப்பிட்டதை மறு முறை வீட்டிற்கு எடுத்துப் போய்ச் சாப்பிட விரும்ப மாட்டார்கள்.  இவ்வளவு வீணாகிறதே, அதில் கொஞ்சமாவது வீணாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டாமா என்று ஒருவரும் நினைப்பதில்லை.  என்னால் முடிந்த அளவு நான் வீட்டிற்கு எடுத்து வருவதுண்டு.  அதை குளிர்பெட்டியில் வைத்து இரண்டு நாட்கள் சாப்பிட்டால் என்ன குறைந்துவிடும்?

    இத்தனை உணவுப் பொருள்கள் வீணாகின்றனவே, இதை என்னால் சகிக்க முடியவில்லையே, நான் பார்ட்டிக்கே வந்திருக்கக் கூடாதோ?  அப்படி வந்திருக்காவிட்டால் இதையெல்லாம் பார்த்திருக்கத் தேவையில்லையே என்று என் கணவரிடம் ஆதங்கப்பட்டேன்.  அமெரிக்காவில் இப்படி உணவுகள் வீணாக்கப்படுவதை நினைத்து வேதனைப்பட்டுக்கொண்டிருந்தபோதே இந்தியாவில் இம்மாதிரி பார்ட்டிகளில் மிஞ்சியதை சாப்பிடுவதற்காக எத்தனை ஏழைகள் காத்திருப்பார்கள் என்ற வேதனை தரும் நினைவும் கூடவே வந்தது.  இப்படி மிஞ்சிய உணவைச் சாப்பிடுவதற்கு ஆட்கள் இல்லாமல் இருப்பது உணவை வீணாக்குவதை விட மேல் அல்லவா என்ற நினைப்பும் எனக்கு ஏற்பட்டது.  இவை இரண்டும் ஒன்றாக இருப்பதற்குச் சாத்தியமே இல்லையா?.

    Share
  • ராமன் வரும் வரை காத்திரு……

    ராமஸ்வாமி ஸம்பத்   

    முன்னுரை

    அன்றாட வாழ்க்கையில் நமக்குப் பிடிக்காத விஷயம் ஒன்று உண்டென்றால் அது காத்திருப்பதே. ஒருவருக்காகவோ அல்லது ஒரு நிகழ்விற்காகக் நாம் காத்திருக்கும்போது காலம் விரயம் ஆவதுபோல் தோன்றுவது சகஜமான ஒரு அனுபவம். காதலனுக்காகக் காத்திருக்கும் காதலி, கணவன் வரவை  வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கும் மனைவி, பிள்ளை இன்னும் பள்ளியிலிருந்து வரவில்லையே என்று ஏங்கும் அன்னை, பேருந்தினையோ ரயில் வண்டியையோ எதிர்பார்க்கும் பயணி, அரசாங்க அலுவலகத்தில் ஒரு சான்றிதழுக்காக தவிக்கும் ஒரு சாதாரண மனிதன், மருத்துவ மனையில் வைத்தியருக்காகத் தவமிருக்கும் நோயாளி, எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு பெரும் கோயிலில் இறைவன் தரிசனத்திற்குக் காத்த்திருக்கும் பக்தன் – இவர்கள் யாராக இருப்பினும் அவர்களுக்கு ‘க்ஷணம் க்ஷணம் நிரீக்ஷணம்’  தான். ஆவலோடு ஆரம்பிக்கும் காத்திருப்பு சடுதியில் சலிப்பாகவும் பின்னர் எரிச்சலாக மாறுவதும் இயற்கையே. மொத்தத்தில் காத்திருப்பது என்பது வேதனையே. அப்படிப்பட்ட அனுபவம் ஒன்று அடியேனின் இக்குருந்தொடருக்கு அடிகோலியிருக்கிறது.

    ஏறக்குறைய முப்பத்தைந்து ஆண்டுகளுக்குமுன்  ஒரு நாள், ஆந்திராவில் உள்ள குண்டூர் நகரத்தின் அருகாமையில் அமைந்திருக்கும் ஸ்ரீ காளி வனாஸ்ரமத்தில் அடியேன் குருநாதர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஹனுமத் காளி வரபிரஸாத பாபுஜி மஹராஜ் அவர்களைக் காண விஜயவாடாவிலிருந்து நானும் என் உற்ற நண்பன் சிரஞ்ஜீவியும் சென்றிருந்தோம். ஆஸ்ரமத்தின் மாலை பிரார்த்தனையில் கலந்து கொண்டபின் குருமஹராஜ் அவர்களுக்கு நாங்கள் வந்திருக்கும் செய்தியைத் தெரியப்படித்து விட்டு, அவர் அறையின் வெளியே அழைப்புக்காகக் காத்திருந்தோம்.

    சற்று நேரத்திற்குப் பின், சிஷ்யர் ஒருவர் வந்து, “குருமஹராஜ் முதலில் உங்களை உணவு அருந்துமாறு பணிக்கிறார்; பின்னர் சந்திக்கலாம் என சொல்லச் சொன்னார்” என்றார்.

    எட்டு மணி அளவில் இரவு உணவு முடிந்து, நாங்கள் இருவரும் தியான மந்திரத்தில் காத்திருந்தோம். காலம் கடந்து இரவு பதினொன்று மணியை எட்டியது. ஸத்குருவிடமிருந்து எங்களைச் சந்திப்பது பற்றி ஒரு தகவலும் இல்லை. நள்ளிரவு நெருங்கிய அளவில், எங்களுக்கு குருநாதரைச் சந்திக்க முடியுமா என்ற ஐயம் ஏற்பட்டது. ‘சரி, இன்னொரு நாள் வரலாம்’ என நினைத்தாலும், அவர் உத்தரவு இல்லாமல் அவ்விடத்தைவிட்டு அகல எங்கள் மனம் ஒப்பவில்லை.

    திடீரென்று, “உங்களை வெகு நேரம் காக்க வைத்துவிட்டேனா?” என்ற குருநாதரின் இனிமையான குரல் கேட்டது. பாபுஜி மஹராஜ் தியான மந்திரத்தில் அப்போதுதான் நுழைந்து கொண்டிருந்தார்.

    “உங்கள் நேரம் விலை மதிப்பற்றதல்லவா? மன்னிக்கவும். என்ன செய்வது? எனக்கும் சில அனுஷ்டானங்கள் இருக்கின்றன அல்லவா? அதனால்தான் தாமதம். ஒரு வேடிக்கை பார்த்தீர்களா? அமைச்சர்களையும் பெரும் பதவியில் உள்ளவர்களையும் காண மணிக்கணக்கில் காத்திருக்கும்போது நமக்கு அலுப்பு தட்டுவதில்லை. ஆனால் ஏழுமலையான் தரிசனத்திற்குக் காத்திருக்கும்போது மட்டும் நமக்கு ‘போர்’ அடிக்கிறது” என்று குருநாதர் சொன்னதும், எங்களுக்குச் சற்று வெட்கமாக இருந்தது. வதனத்தில் குறுநகையோட எங்கள் அருகில் வந்து பரிவுடன் ஆசீர்வதித்து, “உங்களுக்கு வசிஷ்ட மாமுனிவர் வாழ்க்கையிலிருந்து ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன்” என்றார். ஸத்குரு மஹராஜ் கதை சொல்கிறார் என்றால் அதில் நமக்கு அவசியம் தெரிய வேண்டிய ஒரு மாபெரும் உண்மை பொதிந்திருக்கும். அவர் மெல்லத் தொடர்ந்தார்….

    ஒரு சமயம் வசிஷ்டர் தன் மானசீகத் தந்தையான பிரமதேவரிடம் சென்று, ‘ஐயனே! தங்கள் ஆணைப்படி சூரிய வம்சத்தோன்றலான இக்ஷ்வாகு மன்னன் முதல் ககுஸ்தன், மாந்தாதா, முசுகுந்தன், திரிசங்கு, ஹரிச்சந்திரன், சகரன், பகீரதன், அம்பரீஷன், ருதுபர்ணன், திலீபன் உள்ளிட்ட அறுபதிற்கும் மேற்பட்ட அயோத்தி அரசர்களுக்கு ஆசானாக செயல் புரிந்துவிட்டேன். புத்திர பாக்கியம் இல்லாத திலீபனும் என் ஆசிரம பசு காமதேனுவின் கன்றான நந்தினிக்கு ஒரு மண்டலம் பணிவிடை செய்து சாபம் நீங்கி ரகு என்னும் உத்தம புத்திரனுக்கு தந்தையாகும் பாக்கியம் பெற்றுவிட்டான். இத்துடன் என் கடமை முடிந்து விட்டது என நினைக்கிறேன். எனக்கும் இப்புவி வாழ்க்கை அலுத்து விட்டது. தயவு செய்து என்னை தங்கள் சத்தியலோகத்திற்குத் திரும்ப அழைத்துக் கொள்ளுமாறு வேண்டுகிறேன்” என்றார்.

    பிரமதேவரின் முகத்தில் ஒரு இளநகை ஓடியது. “மைந்தா, ஆக்கப் பொறுத்தவனுக்கு ஆறப் பொறுக்கவில்லை என்று சொல்வார்கள். உன் விஷயத்தில் அது உண்மை போலும். உனக்காகக் காத்திருக்கும் ஒரு கிடைத்தற்கரிய மாபெரும் பேறு பற்றி உனக்குத் தெரியவில்லை. ஆதலால் அந்தப் பேறினை எதிர்நோக்கி ரகுவம்சத்தில் வரப்போகும் இன்னும் சில தலைமுறைகளுக்கு நீ ஆசானகத் திகழவேண்டும்” என்றார்.

    “அப்படி என்ன பெரும் பேறு தந்தையே?”

    “உன் ஆணைப்படி விரதம் இருந்த திலீபனுக்குப் பிறந்த ரகுவின் குலத்தில் ஆதிவிஷ்ணுவே அவதரித்து உன்னால் ‘ராமன்’ எனும் பெயர் சூட்டப்பட்டு உனக்கு சீடனாக அமையப் போகும் நல்வாய்ப்பினை கைவிடலாமா?”

    “திருமால் எனக்கு சீடனா? அந்த சர்வக்ஞனுக்கு நான் ஆசானா? இது என்ன கொடுமை பிரபூ?”

    ”ஆம், இது திருமாலின் லீலா வினோதம். தான் எடுக்கப்போகும் மானிட அவதாரத்தில் உன்னைப் பெருமை படுத்த அவர் நிர்ணயித்துள்ளார். பூலோகத்தில் உன் கடமை இன்னும் முடியவில்லை. ஆகவே, ராமன் வரும் வரை காத்திரு”…..

    இவ்வாறு வசிஷ்டரின் கதையைக் கூறிமுடித்த குரு மஹராஜ், ”பிரமதேவன் ஆணைப்படி வசிஷ்டர் ராமன் வரும் வரை காத்திருந்தார். ரகுவிற்கு அஜன் பிறந்தான்.  அஜனுக்கு தசரதன் மைந்தனான். மக்கட்பேறு இல்லாத தசரதனுக்கு புத்திர காமேஷ்டி யாகத்தின் மூலம் ராமன் மற்றும் பரதன், லக்ஷ்மணன், சத்ருக்கினன் புதல்வர்களாக வாய்த்தனர். அந்நால்வரும் வசிஷ்டருக்கு சீடர்களாயினர். பல்லாண்டுகளாக ராமன் வரும் வரை காத்திருந்த அவர்தம் பெருமைதான் என்னே!  எப்பொழுதும், இறைவனைக் குறித்தோ ஆன்மீக விஷயத்திலோ காத்திருப்பதைப்பற்றி சலிப்பு தட்டக்கூடாது. ஏனெனில் அதுவும் ஒருவகையில் தவமே. வெகு காலம் காத்திருந்து அதன் முடிவில் ஒருவன் அடையும் ஆனந்தம் அளவிடர்க்கரியது” என்று எங்கள் உள்ளத்தில் ஏற்பட்ட தவறான எண்ணத்தை நீக்கினார் ஸத்குருநாதர்.

    மோதிரக்கையால் குட்டுபட்ட எங்களுக்கு அதன் பின் ஒரு மணி நேரம் தன் ஆணிமுத்து போன்ற நல்லுரையை நல்கி, “நேரம் ஆகிவிட்டதே என்று கவலைப்பட வேண்டாம். உங்களுக்காக நெடுஞ்சாலையில் ஒரு ‘லாரி’  காத்திருக்கிறது. அதில் ஏறி நீங்கள் சுகமாகப் பயணிக்கலாம்” என்று கூறி விடை கொடுத்தார். அவர் சொன்னது போல எங்களுக்காக விஜயவாடா செல்லும் ‘லாரி’ ஒன்று ஆசிரமத்தின் அருகே காத்திருந்தது.

    செல்லும் வழியில் பாபுஜி மஹராஜ் சொன்ன வசிஷ்டரின் கதையைப்பற்றி விவாதித்தவாறு நாங்கள் விஜயவாடா சேர்ந்தோம்.

    வீடு திரும்பிய என்னுள் எண்ண அலைகள் மோதியவாறு இருந்தன…..

    ’வசிஷ்டர் மட்டுமா ராமன் வருகைக்குக் காத்திருந்தார்? ராமாயண காவியத்தில் எத்தனை பேர் அவ்வண்ணலின் வருகைக்காகவும் ராம காரியத்திற்குத் துணைபோவதற்கும் காத்திருந்தனர்? உண்மையில் ஆதிகவி வால்மீகி இயற்றிய காவியமே அத்தகைய காத்திருப்போர் கதைகளின் தொகுப்பே அல்லவா…?’

    அதனைச் சற்று அசை போடுவோமா?

    (​தொடரும்)

    Share
  • தாயில்லாமல் நானில்லை – கவிஞர் ஆலங்குடி சோமு

    கவிஞர் ஆலங்குடி சோமு

     

    தாயில்லாமல் நானில்லை

     

    பொற்காலப் பாடல்களின் பூக்கோலங்கள் எனும் தலைப்பில் வெள்ளி தோறும் வருகின்ற இந்தத் தொடரில் …  பல்வேறு பாடலாசிரியர்களின் பாடல்கள் இடம் பெறவிருக்கின்றன.  சென்ற வாரம் புலவர் புலமைப்பித்தன்.  இந்த  வாரம்  கவிஞர் ஆலங்குடி சோமு.

    தாயின் காலடியில் உள்ளதடா சொர்க்கம் என்று நபிகள் நாயகம் கூறுகிறார்.  அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்கிறது நன்னெறி! தாய் எந்த உயிருக்கும் ஆதாரமானவள்!  தாயை வணங்குதல் தரணியில் சிறந்ததென சான்றோர் முதலாய் சரித்திரம் சொல்லும்!  தாய்க்கு ஈடாக இவ்வுலகில் ஏதும் கிடையாது என்பதும் யாவரும் அறிந்ததே!

    அன்பு, கருணை, பரிவு, பாசம் இவைகளின் மொத்தப்படைப்பு தாய்மை!  ‘அவள் அன்னை மட்டுமல்ல!  வாழ்வின் ஆதாரம்!  கடவுள் ஒவ்வொரு உயிருடனும் இணைந்திருக்க இயலாத காரணத்தால் ‘தாயை’ படைத்தான் இறைவன் என்பார்.

    மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தாயன்பு மிக்கவராய் வாழ்ந்தார் என்பது மட்டுமின்றி தனது ஒவ்வொரு திரைப்படத்திலும் ‘தாய்’ என்கிற உறவுக்கு பெரிதும் முக்கியத்துவம் அளித்து தனது கோடான கோடி ரசிகர்களின் இதயங்களிலெல்லாம் தாய் மீது பாசம் மேலிட காரணமானார் என்பதுவும் மிகையில்லை!

    எம்.ஜி.ஆர் பிக்ஸர்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்ட அடிமைப் பெண், கே. சங்கர் இயக்கத்தில் வெற்றிப் படைப்பாக வரலாற்றுப் பின்னணியில் வரையப்பட்ட கதை, திரைக்கதையில் முதல் பாடல் தாயைப் பற்றி அமைய வேண்டுமென எண்ணி பல்வேறு பாடலாசிரியர்களை வரவழைத்து எழுதிப்பெற்றார். வரையப்பட்ட பாடல்கள் ஒவ்வொன்றுக்கும் வழக்கம்போலவே அதற்கான பணத்தை அள்ளித்தந்தார். ஆனாலும் தான் திருப்தியடைகிற அளவு பாடல் வரப்பெறாமல் மேலும் மேலும் கவிஞர்களை எழுத வைத்தார்.  40 பாடல்கள் எழுதப்பெற்ற பின் 41வது பாடலாக கவிஞர் ஆலங்குடி சோமு அவர்கள் எழுதிய இப்பாடல் வரிகளில் ஒரு தெய்வ தரிசனம் கண்டார்.  அதையே படத்தில் இடம் பெறச் செய்தார்.

    தாயில்லாமல் நான் இல்லை
    தானேஎவரும் பிறந்ததில்லை
    எனக்கொரு தாய் இருக்கின்றாள்
    என்றும் என்னை காக்கின்றாள் (தாயில்லாமல்)

    • ·       
      ஜீவநதியாய் வருவாள்
      என்தாகம் தீர்த்து மகிழ்வாள்
      தவறினை பொறுப்பாள்
      தர்மத்தை வளர்ப்பாள்
      தரணியிலே வளம் சேர்த்திடுவாள் (தாயில்லாமல்)

    தூயநிலமாய் கிடப்பாள்
    தன்தோளில் என்னைசுமப்பாள்
    தன்மையில்லாமல் நான் மிதித்தாலும்
    தாய்மையிலேமனம்கனிந்திடுவாள் (தாயில்லாமல்)

    மேகவீதியில் நடப்பாள்
    உயிர்மூச்சினிலே கலந்திருப்பாள்
    மலைமுடி தொடுவாள்
    மலர்மணம் தருவாள்
    மங்கலவாழ்வுக்கு துணைஇருப்பாள்
    மலர்மணம்தருவாள் (தாயில்லாமல்)

    ஆதிஅந்தமும் அவள்தான்
    நம்மை ஆளும் நீதியும் அவள்தான்
    அகந்தையை அழிப்பாள் ஆற்றலைகொடுப்பாள்
    அவள்தான் அன்னை மகாசக்தி(தாயில்லாமல்)

    அந்த தாய் இல்லாமல் நான் இல்லை
    தானே எவரும் பிறந்ததில்லை
    எனக்கொரு தாய் இருக்கின்றாள்
    என்றும் என்னை காக்கின்றாள்
    தாயில்லாமல் நான்இல்லை

     

    திரைக்கதையின்படி, தன்னைப் பெற்ற தாயை முதன் முறையாகப் பார்க்கச் செல்லும் காட்சி!  அத் தாயின் காலில் அடிமை விலங்கு பிணைக்கப்பட்டிருக்கிறது!  அதை அகற்றும் முயற்சியில் தனயன் ஈடுபட, தாயோ.. இந்த நாட்டில் எத்தனையோ பெண்கள் அடிமைகளாக்கப்பட்டு அவர்களின் கால்களில் அடிமை விலங்கு பூட்டப்பட்டிருக்கிறது.. அவைகளை எல்லாம் அகற்றிவிட்டு கடைசியாக உன் அன்னையின் விலங்கை அகற்ற வா மகனே.. என்று ஆணையிடுகிறார்.

    அம்மாவின் காலடியில் ஆசிபெற்று மகன் தன் கடமையாற்றப் புறப்படுகிற உணர்ச்சிகரமான கட்டம்! உயிரூட்டும் பாடல் வரிகள் திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் இசையில் ஓங்கார நாதத்துடன் பாடிட டி.எம்.செளந்திரராஜன்! 

    திரையில் ஐந்து வடிவங்களாய் தோன்றும் எங்கள் எம்.ஜி.ஆர்.. அங்கே அன்னையின் முகம் விண்ணில் தோன்றி வாழ்த்துச் சொல்ல.. தாயைப் போற்றி.. அவள் சக்தியை எடுத்துரைக்க.. இந்த ஒற்றைப்பாடலுக்கு சக்தி உண்டு என்று எந்த சபையிலும் என்னால் கூற முடியும்!

    எம்.ஜி.ஆர் பாடல்களில் இந்தப்பாடல்.. தாய்க்காக தனயன் முழக்கும் ராஜபாட்டை!

    எம்.ஜி.ஆர் – தாய் பற்றி எடுத்துக்கூறிய எத்தனையோ சிகரங்களில் இப்பாடல் நிச்சயம் ஒரு இமயம்!

    http://www.youtube.com/watch?v=2K096xYEtsY

     

    மேற்கண்ட பாடல் பற்றிய தங்கள் உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கிறேன்.  இன்னும் இன்னும் இனிய பல தகவல்களோடு உங்கள் வாசலில்  காத்திருப்பேன்.

     

     

    அன்புடன்..

    காவிரிமைந்தன்

    Thai Illamal Naan Illai HD Song
    Share
  • வாழ்க்கை நலம் – 40

    குன்றக்குடி அடிகள்

    40. ஒப்புரவு வாழ்க்கை

     

    சமுதாய அமைப்பில் ஒவ்வொருவரும் மற்றவர்களைச் சார்ந்து வாழ்கின்றனர். ஆதலால், ஒவ்வொருவரும் பிறிதொருவருக்குச் சமுதாயத்தில் பலருக்குக் கடமைப்பட்டிருக்கின்றனர். இந்தக் கடமைப்பாட்டினை அறிந்து கொண்டு ஒவ்வொருவரும் மற்றவர்களுடன் இசைந்து கூடி நட்புறவுப் பாங்கில் வாழ்தல் வேண்டும்.

    தம்தம் நிலையை வற்புறுத்தாமல் மற்றவர்கள் நிலையறிந்து அவர்களுடன் கூடி வாழ்தல் ஒத்தறிந்து வாழ்தல். பூத பௌதிக மாற்றங்களால் உடல் நலம் கேடுறாது பார்த்துக் கொள்வதுபோல நம்மைச் சுற்றியிருக்கும் மனிதர்களை நமது உணர்வு, ஒழுங்கு, ஒழுக்கங்களுக்குப் பாதிப்பு ஏற்படாமலும் மற்றவர்களுடைய நலனுக்குப் பாதிப்பு ஏற்படாமலும் வாழ்தல் ஒத்தறிந்து வாழும் வாழ்க்கை; ஒப்புரவு வாழ்க்கை, தீமை பயக்கும் வாயில்களை அடைத்துவிடும். நல்வாழ்க்கைக்குரிய இயல்புகளை குணங்களைத் தந்து ஊக்குவிக்கும்.

    ஊருணி, ஊராருக்கு உண்ணும் தண்ணீர் தருவதால் “ஊருணி” என்று பெயர் பெற்றது. ஊரார் ஊருணித் தண்ணீரை அள்ளிக் குடிப்பதால் “ஊருணி” என்று புகழ் பெற்றது.

    பல ஊருணிகளில் ஊற்று வளம் இருப்பதில்லை. அதுபோல் அறிவுடையானிடம் செல்வம் இருப்பின் அச்செல்வம் ஊராருக்குப் பயன்படும். ஆயினும் அறிவறிந்த ஆளுமை இன்மையால் செல்வம் அவனிடம் ஊற்றுப் போலப் பெருகி வளராது. இருக்கும் வரையில் கொடுப்பான். பின் அவனும் ஓர் இரவலனாகி விடுவான். அதனால்தான் நம் நாட்டில் வாழ்ந்த புலவர்கள் வறுமையில் வாழ்ந்தார்கள் போலும்!

    ஊருணியை ஊர் பயன்படுத்தாது போனால் மேலும் ஊருணி கெடும். அதுபோல அறிவுடையோனின் செல்வம் வழங்கப் பெறாது போனால் அழிந்து போகும். ஆதலால், ஊருணி நீரைப் போல இழந்து போகாமல் மேலும் செல்வ வளம் பெற உழைப்பு வேண்டும். அறிவறிந்த ஆள்வினைதான் செல்வத்தை வளர்க்கும்; பாதுகாக்கும்! மற்றவர்க்கு வழங்கி வாழ்வதில் உலகந்த்ழீஇய புகழ் கிடைக்கும்.

    இந்த உலகத்தில் எல்லாரும் உண்டு உடுத்து மகிழ்ந்து வாழ இயலும். ஆனால் நம் ஒவ்வொருடைய பேராசையின் காரணமாக இருந்து வரும் இல்லாத நிலை ஏன்? பேராசைதான் காரணம்! பேராசை இழப்பில்தான் மகிழ்ச்சி தொடங்குகிறது. ஆதலால், எல்லாரும் வாழ உரிமை உடையவர்கள் என்ற கருத்து முதலில் ஏற்கப் பெறுதல் வேண்டும்.  பாவேந்தன் பாரதிதாசன் சொன்ன,

    “உலகன் உண்ண உண்! உடுத்த உடுத்து!”
    என்ற பெருநெறியே, ஒப்புரவு நெறி!

    இந்த ஒப்புரவு நெறி சார்ந்த வாழ்க்கைக்கு ஈடாக ஒரு வாழ்க்கை நெறி இந்த உலகத்திலும் இல்லை! தேவர் உலகத்திலும் இல்லை! ஆம்! ஒருவரை ஒருவர் சார்ந்தும் இணைந்தும் உறவு கொண்டாடி வாழ்தலே ஒப்புரவு வாழ்க்கை!

     

     

    _________________________________
    REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
    இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட  நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது  நிதியாண்டு 2007-2008 ல்

    மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

     

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!…88

    சக்தி சக்திதாசன்

     

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்களுடன் உங்கள் முன்னே அடுத்த மடலுடன் .

    “எதிர்பார்ப்புகள்” மிகவும் இலகுவான, சுலமாகப் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு வார்த்தை. ஆனால் அதனுள் அடங்கி இருக்கும் அர்த்தங்களோ ஆயிரமாயிரம் !

    ஒரு வார்த்தையாக அதனுள் அடங்கி இருக்கும் அர்த்தங்களின் வாயிலாக அந்தச் சொல் காலத்துக்கு காலம் ஒரே தொனியில் அதை உச்சரிப்போரின் உதடுகளில் இருந்து ஒலித்தாலும் காலத்தின் மாற்றத்தின் வடுக்கள் அந்த வார்த்தையில் ஒட்டிக் கொள்ளாமல் இருந்து விடவில்லை.

    ஆமாம் காலத்தின் மாற்றத்தினோடு எதிர்பார்ப்புகளின் அர்த்தமும் அதன் ஆழமும் மாறிக்கொண்டேதான் போகின்றது.

    இந்த மாற்றம் எமது சமுதாயத்தின் எதிர்கால வளர்ச்சிகளை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்லப் போகின்றதா? இல்லை கலாச்சார சீரழிவுக்குள் எம்மை இட்டுச் செல்லப் போகின்றதா? என்பது ஒரு கேள்விக்குறியே !

    இல்லை இதுவெல்லாம் ஒவ்வொரு காலகட்டத்திலும் அத்தகைய காலத்தின் தேவைகளுக்கேற்ப அந்தந்த இளம் தலைமுறைகளினால் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான் இதை ஒரு பெரிய விடயமாகத் தூக்கிப் பிடிப்பதே தவறு எனும் வாதமும் ஓரங்களில் ஒலிக்கத்தான் செய்கிறது.

    எது எப்படி இருப்பினும் வாழும் காலத்தில் எமது வாழ்க்கையில் மாற்றத்தை இவ்விளம் தலைமுறைகளின் எதிர்பார்ப்புகள் ஏற்படுத்துமாகின் அதனைப் பற்றிய ஒரு அலசல் தேவைப்படுவது யதார்த்தமே !

    அரசாங்களின் கடன்கள், அவ்வரசாங்கங்கள் தங்கள் நாட்டு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பல வடிவங்களில் முதன்நிலைப்படுத்தப்ப்பட்டு அந்நாட்டு நிதிநிலைமைகளை நிர்ணயிக்கின்றன.

    சிலநாட்களின் முன்னால் நான் எனது ஆபிஸிக்கு காலையில் சென்று கொண்டிருக்கும் போது அக்கார் வானொலியில் வந்த ஒரு விளம்பரத்தை செவிமடுக்கும் போது உள்ளத்தில் ஏற்படுத்திய அதிர்வலைகளின் வழியாகவே இம்மடல் வந்து விழுகிறது.

    ஆமாம் மக்களின் தேவைக்காக உடனடியாக கடன் கொடுப்போம். அக்கடனைப் பெறுவது எவ்வளவு இலகுவானது என்பதைப் பற்றி அனைவரையும் கவரும் வண்ணம் அழகாக ஒரு விளம்பரம் அவ்வானொலியில் அந்நிறுவனத்தினால் நிகழ்த்தப்பட்டது.

    அப்போதுதான் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கையில் இது எத்த்ஹ்ஹ்ஹ்ஹ்ஹனை பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது என்பது புரிந்தது.

    வாழ்க்கையின் அத்தியாவசிய தேவைகளுக்காக கடன் பெறுவதை ஓரளவு ஏற்றுக் கொள்கிறோம் என்றாலும் கூட அலங்காரமான் பொருட்களுக்காக நவீன வசதிகளுக்காக இன்றைய சந்தையில் இளம் தலைமுறையைக் கவரும் வகையில் காணப்படும் பொருட்களுக்காக இக் கடனைப் பெற்றுத் தம்மை மீளா வறுமையில் ஆழ்த்தும் பலரைப் பற்றிய செய்திகளை அன்றாடம் ஊடகங்களின் வாயிலாகக் கேள்வியுறுகிறோம்.

    தெருவிலே காணும் பல இளய தலைமுறையின் கைகளிலே கைக்கணணி, நவீன கைத்தொலைபேசி, நவீன ஒலிபரப்பு சாதனங்கள் என பலதரப்பட்ட சாதனக்களைக் கண்ணுறுகிறோம்.

    இவைகள் ஏதோ மிகவும் மலிவு விலையில் விற்கப்படுபவை அல்ல அதைக் கையாளும் இளைஞர்கள் அனைவரும் அதனை வாங்கக்கூடிய அளவிற்கு செல்வத்தில் திளைப்பவர்களும் இல்லை.

    பின் எவ்வாறு இவ்வளவு இலகுவாக இவை அவர்களின் கைகளை வந்தடைகின்றன. ஒன்று அவர்களது பெற்றோர் அவர்களின் ஆசைகளைப் பூர்த்தி செய்வதற்காக தமது தகுதிக்கு மீறிய வகையில் கடன்களைப் பெற்று அவர்களது ஆசைகளை நிறைவேற்றுகிறார்கள் அன்றி அவ்விளைஞர்கள் சட்டத்திற்கு முரணான வகையில் இப்பொருள்களை அடைந்து கொள்கிறார்கள்.

    அவர்களின் கைகளில் இத்தகைய நவீன பொருட்கள் தவழ் வேண்டும் என்பது அவர்களுடௌய வட்டத்தின் எதிர்பார்ப்பாக இன்றைய காலகட்டத்தில் இருப்பதே மிகவும் கவலைக்குரிய விடயமாகிறது.

    அது மட்டுமின்றி அதைப் பெற்றுக் கொடுப்பதற்கான வசதியற்றவர்களுக்கு அவர்களின் தகுதியைக் கூட ஆராயாமல் அளவிற்கு அதிகமான வட்டியுடன் கடன் கொடுப்பதற்கு அவ்வானொலி விளம்பரதாரர்களைப் போன்ற நிறுவனங்கள் தயாராக இருப்பது அதைவிடக் கொடுமையான செயல்.

    அன்றைய காலங்களிலும் மக்களிடம் எதிர்பார்ப்புகள் இருக்கத்தான் செய்தன ஆனால் அவ்வெதிர்பார்ப்புகளை அடைவதற்கு அவர்கள் திட்டம் தீட்டி அதற்கான வசதியைப் பெற்றுக் கொள்வதற்காக நியாயமாக உழைத்தார்கள். அதனால் தமது எதிர்பார்ப்புகளை அடைந்ததும் அதற்கான உரிய மதிப்பை அளித்தார்கள்.

    ஆனால் இன்றைய நிலை . . . . .

    எதிர்பார்ப்பவைகளை எதுவித பிரயத்தனமும் இல்லாமல் நினைத்த மாத்திரத்தில் அடைந்து விட வேண்டுமென்னும் பேராசையால் உந்தப்பட்டு இருக்கும் ஒரு தலைமுறையாக காலத்தின் மாற்றம் இன்றைய இளம்தலைமுறையை உருவாக்கி விட்டதோ என்று அச்சப்பட வேண்டி உள்ளது.?

    தேவைகளின் வித்தியாசங்கள், புரியப்படாமலே ஒரு சந்ததி உருவாகிறதோ? எதற்கும் விதிவிலக்குகள் உண்டு அதேபோல தமது தேவைகளுக்காக நியாய எல்லைகளுக்குள் உழைக்கும் உத்தமான இளம் தலைமுறைகளும் உள்ளனர் எனபதும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்றே .

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • சிலம்பு காட்டும் கோவலனின் மறுபக்கம் – 3

    மேகலா இராமமூர்த்தி

    இல்லோர் செம்மல்

    பொதுவாக மனமிருப்போரிடம் பணமிருப்பதில்லை; பணமிருப்போரிடம் மனமிருப்பதில்லை என்று கூறுவர்; அதனைப் பொய்யாக்கிவிடுகின்றது கோவலனிடம் காணப்படுகின்ற அருளுள்ளம்! பணமும், குணமும் நிறைந்த பண்பாளனாகவே சிலப்பதிகாரத்தில் அவன் அடையாளப்படுத்தப்படுகின்றான்.

    புகார் நகரில் நடைபெற்ற மற்றுமோர் நிகழ்வு கோவலனின் பத்தரை மாற்றுப் பொன் மனத்தைப் பளிச்செனக் காட்டுவதாய் அமைந்துள்ளது; அதனையும் காண்போமா?

    புகார் நகரத்தில் வாழ்ந்துவந்த கற்பிற் சிறந்த பெண்ணொருத்தி அவப்பெயர் எய்துவதற்கு ஏதுவாக, அறிவற்ற கீழ்மகன் ஒருவன் அப்பெண்ணின் ஒழுக்கத்தைப் பற்றி அவள் கணவனிடம் பொய்ப்பழி கூறுகின்றான். அதுகண்டு, புகார் நகரின்கண் தீயோரை அழிப்பதற்காகவே வாழ்ந்து வந்ததாகக் கூறப்படும் பெரிய பூதமானது அக்கீழ்மகனைத் தன் கையிலுள்ள பாசக்கயிற்றால் கட்டியது. அவன் அச்சம் கொண்டு அரற்றினான்; அழுதான்; ஒன்றும் பயனில்லை. அவனுடைய தாய் தன் மகன் பூதத்திடம் மாட்டிக்கொண்டு உயிர்விடப் போகிறானே என்று அஞ்சிக் கண்ணீர் பெருக்கினாள். அப்போதும் பூதம் அக்கொடியோனை விடவில்லை.

    இந்நிகழ்வினை அறிந்த கோவலன் அவ்விடத்திற்கு விரைந்து வருகின்றான். பூதத்தின் கையிலிருந்த பாசக்கயிற்றினையும், அதில் மாட்டிக் கொண்டு உயிர்விடும் தறுவாயில் இருந்த மனிதனையும் காண்கின்றான்; உள்ளம் உருகுகின்றான். சற்றும் தாமதியாது அப்பூதத்தின் கையில் இருந்த பாசக்கயிற்றில் தன்னை வலியச் சென்று மாட்டிக்கொண்டு, ’தீயோரை அழிக்கும் நல்ல பூதமே! என்னுயிரை எடுத்துக்கொள்! இம்மனிதனை உயிரோடு விட்டுவிடு!’ என்று மன்றாடுகின்றான். பிறர் துன்பம் கண்டு பொறாத எத்தகைய உயர்ந்த உள்ளம் கோவலனுடையது!!

    ஆயினும் தன் கொள்கையில் சிறிதும் தளராத அப்பூதமோ, ’கோவலா! நீ கேட்டுக்கொண்டபடி என்னால் செய்ய இயலாது; தீயவன் ஒருவன் செய்த தவற்றுக்காக நல்லவன் ஒருவனுடைய உயிரை நான் எடுத்துக்கொள்வேனானால் எனக்கு நற்கதி கிடைக்காது(!). ஆகவே அத்தகைய தவற்றினை நான் செய்வதற்கில்லை என்று கூறிவிட்டுக் கோவலன் கண்ணெதிரிலேயே அக்கீழ்மகனைப் புடைத்து உண்டது. கோவலன் பூதத்திடம் வைத்த வேண்டுகோளையும் அதனை மறுத்து அப்பூதம் கோவலனிடம் கூறிய மறுமொழியையும் நாமும் சற்றுச் செவிமடுப்போமா?

    ”………………………………………………………………………………………………………………..

    கட்டிய பாசத்துக் கடிதுசென் றெய்தி

    என்னுயிர் கொண்டீங் கிவனுயிர் தாவென
    நன்னெடும் பூதம் நல்கா தாகி
    நரக னுயிர்க்கு நல்லுயிர் கொண்டு
    பரகதி யிழக்கும் பண்பீங் கில்லை
    ஒழிகநின் கருத்தென உயிர்முன் புடைப்ப….” (அடைக்கலக் காதை: 81-86)

     Picture1

    சிறிதுநேரம் செய்வதறியாது திகைத்துநின்ற கோவலன் தன் மனத்தைத் தேற்றிக் கொண்டு, அங்கே அழுதவண்ணம் நின்றுகொண்டிருந்த, பூதத்தால் கொல்லப்பட்ட அம்மனிதனின் தாயை அழைத்துக்கொண்டு அவள் இல்லம் செல்கின்றான். மகனை இழந்த தாய்க்குத் தானே மகனாகி அத்தாயையும், அவளுடைய இதர சுற்றத்தினரையும் பசிப்பிணியிலிருந்து விடுவித்து, அவர்கள் சிறப்பாக வாழும் வகையில் செல்வத்தையும் ஏராளமாக வாரி வழங்கி வறியோரின் தலைவனாக – ’இல்லோர் செம்மலாக’த் திகழ்ந்து பலகாலம் அவர்களைக் காத்து நிற்கின்றான்.

    ”அழிதரு முள்ளத்து அவளொடும் போந்தவன்
    சுற்றத் தோர்க்கும் தொடர்புறு கிளைகட்கும்
    பற்றிய கிளைஞரின் பசிப்பிணி யறுத்துப்
    பல்லாண்டு புரந்த இல்லோர் செம்மல்” (அடைக்கலக் காதை: 87-90) என்கிறார் அடிகள்.

    இவ்வாறு, தன் நண்பன் கோவலனின் அற்புதக் குணங்களை ஒவ்வொன்றாகப் பட்டியலிடும் மாடலன் தொடர்ந்து, ‘அறிவில் முதிர்ந்தவனே! நானறிந்த வகையில் இப்பிறவியில் நீ செய்தவையெல்லாம் நற்செயல்களேயன்றி வேறொன்றுமில்லையே!! அவ்வாறிருக்கத் திருமகளை ஒத்த மாணிக்கத் தளிரான கண்ணகியுடன் நீ தனியே மதுரை நோக்கிப் புறப்பட்டது முற்பிறவியில் செய்த தீவினைப் பயனோ? என்று வருந்திப் புலம்புகின்றான்.

    இதோ அவ்வரிகள்…

    ”இம்மைச் செய்தன யானறி நல்வினை
    உம்மைப் பயன்கொல் ஒருதனி யுழந்தித்
    திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது
    விருத்தகோ பால நீயென வினவ….” (அடைக்கலக் காதை: 91-94)

    அடைக்கலக் காதையில் மாடலனால் வியந்து பேசப்படும் கோவலனின் நற்பண்புகள், உயர்ந்த கொள்கைகள், எளியோர்மீது அவன் காட்டும் அளவிறந்த கருணை ஆகியவை கோவலன் மீதான நம் மதிப்பீட்டையே முழுவதும் மாற்றிவிடுவதாக அமைந்துவிடுகின்றது அல்லவா!

    கோவலனின் இனிய குணங்களை எடுத்தியம்ப இளங்கோவடிகள் பயன்படுத்தியுள்ள ‘கருணை மறவன்’, ’செல்லாச் செல்வன்’, ’இல்லோர் செம்மல்’ போன்ற அற்புதமான சொல்லாட்சிகள் அடிகளின் தமிழ்ப் புலமையை உள்ளங்கை நெல்லிக்கனியெனத் தெளிவாய்ப் புலப்படுத்தி நம்மை மகிழ்விக்கின்றன.

    முடிவாக, சிலப்பதிகாரக் காப்பியத்தின் தலைவனான கோவலனின் குணங்கள், குறைகள் இரண்டையும் சீர்தூக்கிப் பார்த்தால் குறைகளினும் அவனுடைய நற்குணங்களே விஞ்சி நிற்கின்றன என்பது மேற்கூறிய நிகழ்வுகள் வாயிலாகப் பெறப்படுகின்றது. அருளாட்சி செய்கின்ற அக்கோமகனின் மறுபக்கம் நம் நெஞ்சில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி அதுகாறும் அவன் செய்திருந்த தவறுகளையும் மறக்கச் செய்து தொழத்தக்க ஒருவனாகவே அவனை எண்ணச்செய்துவிடுகின்றது.

    காப்பியக் கதையோட்டத்தின் சுவைகெடா வண்ணம் விறுவிறுப்பாக ஒவ்வொரு காட்சியையும் மிகச் சாதுரியமாகச் செதுக்கியிருக்கும் ’கவிச்சிற்பி’ இளங்கோ, கோவலனின் கருணையுள்ளத்தை, வள்ளல் குணத்தைச் சரியான தருணத்தில் வெளிப்படுத்தி உண்மையான காவியத் தலைவனாக அவனை உயர்த்திக்காட்டியுள்ள பாங்கு மிகுந்த பாராட்டுக்குரியதுதான் இல்லையா?

    கருணை மறவனையும், காப்பிய ஆசிரியரையும் வாழ்த்தி விடைபெறுவோம்!!

    (முற்றும்)

    Share
  • சிறுகூடற்பட்டி முதல் சிகாகோ வரை..

    பொன்னை விரும்பும் பூமியிலே..

     

     

    மண்ணில் பிறந்த மனிதருக்கு இயல்பான ஆசைகள் மூன்று.. மண், பெண், பொன் என்பார்கள். இந்த மூன்றிலிருந்தும் விடுபட்டு வாழ்பவர்கள் ஞானியாகிறார்கள். எனினும் அஃது அத்தனை எளிதன்று!

    ஆசைகள் சிறகடிக்க.. சிறகடிக்க.. நாமும் கற்பனை வானத்தில் பறக்கிறோம். கைகூடவில்லையெனும்போது கதறியழுகிறோம். அளவான ஆசையை வைத்து வாழ்பவனே வளமாக வாழ்கிறான். எல்லாம் மனதின் பாகுபாட்டின் விளைவுகளே!

    காலையும் மாலையும் அந்திவானம் சிவப்பதும் அழகுதானே! செக்கர் வானம் சிவப்பது உழைப்பாளிகளின் இரத்தத்துளிகளாய் ஒரு கவிஞனுக்குப் படுகிறது! அந்த வானம் சிவப்பது தன் காதலியின் கன்னமென இன்னொரு கவிஞனுக்குப் படுகிறது. பொருள் ஒன்றுதான். எடுத்து ஆளும்விதம்தான் மாறுபடுகிறது! இதயம் இடம் மாறும் அதிசயம் காதலில் நடப்பதுண்டு என்றாலும் இடம் பார்த்தே காதல் வருகிறது என்பதே உண்மை. இப்படிப் பலபேர் இருந்துவிட்டுப் போகட்டும்! என்னை விரும்புவது நீயல்லவா? நீ பொன்னுக்காகவோ.. பொருளுக்காகவோ.. என்னை விரும்பவில்லையே! என்னை எனக்காகவே நீ விரும்புகிறாய்! அன்பு மலரே.. என் ஆனந்த மலரே.. இன்பம் நீயே.. என்று காதலன் தன் காதலியைக் கொண்டாடும் இன்பம் இருக்கிறதே கேளுங்கள்..

    ஆலயமணியில் உருவான திரைப்பாடல்.. நடிகர் திலகத்துடன் அபிநய சரஸ்வதி – இணைய கண்ணதாசன் – விஸ்வநாதன் ராமமூர்த்தி வெற்றிக் கூட்டணியில் விளைந்த முத்தமிழ்ப் பாடலிது! தென்றலோடு நடந்துபோகும் சுகம் காணுங்கள்!

    பொன்னை விரும்பும் பூமியிலே
    என்னை விரும்பும் ஓருயிரே
    புதையல் தேடி அலையும் உலகில்
    இதயம் தேடும் என்னுயிரே
    பொன்னை விரும்பும் பூமியிலே
    என்னை விரும்பும் ஓருயிரே
    புதையல் தேடி அலையும் உலகில்
    இதயம் தேடும் என்னுயிரே

    ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே
    ஆலயமணியின் இன்னிசை நீயே(2)
    தாய்மை எனக்கே தந்தவள் நீயே
    தங்க கோபுரம் போல வந்தாயே
    புதிய உலகம் புதிய பாசம்
    புதிய தீபம் கொண்டு வந்தாயே
    (பொன்னை விரும்பும் பூமியிலே)

    பறந்து செல்லும் பறவையைக் கேட்டேன்
    பாடிச் செல்லும் காற்றையும் கேட்டேன்(2)
    அலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன்
    அழைத்து வந்தார் என்னிடம் உன்னை
    இந்த மனமும் இந்த குணமும்
    என்றும் வேண்டும் என்னுயிரே
    (பொன்னை விரும்பும் பூமியிலே)

    ஆலமரத்தின் விழுதினைப் போலே
    அணைத்து நிற்கும் உறவு தந்தாயே(2)
    வாழைக் கன்று அன்னையின் நிழலில்
    வாழ்வது போலே வாழவைத்தாயே
    உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு
    உள்ளம் ஒன்றே என்னுயிரே

    (பொன்னை விரும்பும் பூமியிலே)
    பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
    இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
    இசை: எம்.எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி
    திரைப்படம்: ஆலயமணி

    http://www.youtube.com/watch?v=5c6fQL-diJg

    http://www.youtube.com/watch?v=5c6fQL-diJg

    கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் எளிமைக்கு சான்று. அது பற்றிய செய்திகள்.. விவரங்கள்.. இனிமை.. சொல்லாட்சி.. இவை பற்றிய வாசகர்களின் பின்னூட்டங்களுக்காக காத்திருக்கிறேன்.
    அன்புடன்
    காவிரிமைந்தன்

    Share
  • குறளின் கதிர்களாய்… (17)

     

     செண்பக ஜெகதீசன்

     

    பகல்வெல்லுங் கூகையைக் காக்கை யிகல்வெல்லும்

    வேந்தர்க்கு வேண்டும் பொழுது.

    -திருக்குறள்- 481 (காலமறிதல்)

     

    புதுக் கவிதையில்…

     

    இரவுக்கரசன் கோட்டானும்

    இலகுவாய்த் தோற்றிடும்,

    பகலில் ஒரு

    காக்கையிடம்..

     

    பாடம் இதுதான்

    ஆட்சியாளர்களுக்கும்,

    காலமதை நன்கறிந்து

    காயை நகர்த்தினால்தான்

    கிடைக்கும் வெற்றி

    களத்தில்…!

     

    குறும்பாவில்…

     

    காக்கை வென்றிடும் கூகையைப் பகலில்..

    கதையிதுதான் ஆட்சியாளருக்கும,

    காலமறியாது சென்றால்…!

     

    மரபுக் கவிதையில்…

     

    இருளிலும் தெரியும் கண்களாலே

    இரவை ஆண்டிடும் கோட்டானும்

    உருவில் சிறிய காக்கையிடம்

    வந்தால் பகலில் தோற்றுவிடும்,

    தெரிந்திடு உண்மை இதைத்தானே

    தெளிவாய்ப் பொழுதைத் தெரிந்திட்டே

    சரியாய்ச் செயலைச் செய்தால்தான்

    சேரும் வெற்றி ஆட்சியர்க்கே…!

     

    லிமரைக்கூ…

     

    பகலில் தோற்கும் காக்கையிடம் கூகை,

    பொழுதைத் தெரிந்தே

    செய்யும் போரில் சூடிடலாம் வாகை…!

     

    கிராமியப் பாணியில்…

     

    பாருபாரு நேரம்பாரு

    பாயத்தான் பதுங்கத்தான் நேரம்பாரு- சரியா

    நேரம்பாரு..

     

    ராப்போது ராசாதான் கூவபாரு- அது

    பகலவந்து மாட்டிக்கிட்டா

    தோத்திருமே காக்காக்கிட்ட- சின்னக்

    காக்காக்கிட்ட..

     

    ராச்சியத்து ராசாவுக்கும்

    கதயிதுதான்- சொல்லும்

    கருத்திதுதான்,

    காலநேரம் பாத்துசெஞ்சா

    செயம் வருமே- எல்லாமே

    செயம் வருமே..

     

    பாருபாரு நேரம்பாரு

    பாயத்தான் பதுங்கத்தான் நேரம்பாரு- சரியா

    நேரம்பாரு…!

     

            -செண்பக ஜெகதீசன்…

     

    Share
  • கவிஞர் வாலி

    மாதவிப் பொன்மயிலாள் தோகை விரித்தாள்..

    இருபெரும் கவிஞர்களென்று இதயம் திறந்து பாராட்ட வேண்டுமென்றால் கவியரசு கண்ணதாசன் அவர்களையும் காவியக்கவிஞர் வாலி அவர்களையுமே சேரும்! திரைப்பாடல்கள் வரிசையிலே எளிய இனிய தமிழை ஏந்தி வந்த இவ்விருவரும் பல நேரங்களில் கவிஞர் வாலி எழுதிய பாடல்கள் கவிஞர் கண்ணதாசனால் இயற்றப்பட்டது என்கிற எண்ணம் மக்கள் மத்தியில் பலருக்கு உண்டு. இதுபற்றி மேடையிலே கவிஞர் வாலி அவர்கள் “எனது பாடலை தங்கத்தோடுதான் ஒப்பிடுகிறார்களே தவிர, தகரத்தோடு அல்ல” என்று பெருமை பொங்க குறிப்பிட்டார்.

    இருமலர்கள் என்னும் திரைச்சித்திரத்தில் ஒரு பாடல் காட்சி! சித்திரம்போல் இருவர் கல்லூரியில் நடைபெறும் கலைவிழா ஒன்றில் – காதலன் காதலியாக நடிக்க வேண்டம். பாத்திரப்படைப்புகளாக.. பொறுப்பேற்றவர்கள் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களும் நாட்டியப் பேரொளி பத்மினி அவர்களும் ஆவர். இக்காட்சியில் இடம்பெற்ற பாடல் .. மாதவிப் பொன்மயிலாள்.. தோகை விரித்தாள்.. கவிஞர் வாலியின் கைவண்ணம் மின்னுகிறது பாருங்கள்..

    ஆம்.. சங்ககாலப் புலவர்களின் சமகால வாரிசோ என்று எண்ண வைக்கும் இனிய வரிகள்.. இலக்கியத்தரம் மிகுந்த அற்புதப் பாடலாய் அமைந்திருந்த இப்பாடல் படமாக்கப்பட்டிருந்த விதமும் நம்மை ஒரு இலக்கிய காலத்திற்குள் கடத்திச் சென்றுவிடுகிறது. மெல்லிசை மன்னரின் இன்னிசையில் விளைந்த அனைத்து கீதங்களும் இன்ப நாதங்கள்!!

    குறிப்பாக கதையின் நாயகி பத்மினி அவர்களின் முகபாவனைகள், நாட்டியம் என மனக் கண்ணில் இன்றும் நீங்காத பாடலாய் நிலைபெறுகிறது. திரைப்பாடலிலும் இத்தனை இலக்கிய ரசம் பொங்கி வழிய முடியுமென இதோ வாலியின் வரிகள் வரிந்துகட்டிக் கொண்டு வருகின்றன பாருங்கள்!

    வானில் விழும் வில்போல் புருவம் கொண்டாள்.. இளம்
    வயதுடையாள் இனிய பருவம் கண்டாள்..
    கூனல் பிறைநெற்றியில் நிலவாட.. அந்த நிலவொளியில்
    நிழலாட.. அந்த விழி வழி ஆசைகள் வழிந்தோட..
    மாதவிப் பொன்மயிலாள் தோகைவிரித்தாள்.. வண்ண மையிட்ட ..

    முதலில் குறிப்பிட்டதைப் போல திரைப்படம் வெளியானபோது, அமோக வெற்றி பெற்றது மாதவிப் பொன்மயிலாள் பாடல்! இப்பாடல் கவிஞர் கண்ணதாசனால் எழுதப்பட்டது என்றே கவிஞர் கண்ணதாசன் இல்லத்திற்கு ரசிகர்கள் கடிதங்கள் வந்து குவிந்தன. கடிதங்களைப் படித்த கண்ணதாசன் இந்தப் பாடல் நான் எழுதவில்லையே.. தம்பி வாலி எழுதியது! அவற்றையெல்லாம் ஒரு மூட்டைகட்டி வாலியின் வீட்டில் கொண்டுபோய் கொடுக்கச் சொல்லி தனது உதவியாளரிடம் உத்தரவிட்டதுடன் கவிஞர் வாலிக்கு தொலைபேசியில் அழைப்புவிடுத்து இந்தப் பாடலைப் பற்றி மனம் திறந்து பாராட்டினார் என்பதும் அத்துடன் தனது பரிசாக ‘ரம்’ எனப்படும் மதுவகை பானம் ஒன்றையும் அனுப்பியதும் கவிஞர் கண்ணதாசன் அவர்களின் மேதாவிலாசத்திற்கு ஒரு சான்று!

    http://www.youtube.com/watch?v=8OH8Fdl0ack

    பாடல்: மாதவிப் பொன் மயிலாள்
    திரைப்படம்: இரு மலர்கள்
    பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
    இயற்றியவர்: கவிஞர் வாலி
    இசை: எம்.எஸ். விஸ்வநாதன்
    ஆண்டு: 1967

    மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் – வண்ண
    மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
    மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் – வண்ண
    மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
    காதல் மழை பொழியும் கார்முகிலாய்
    காதல் மழை பொழியும் கார்முகிலாய் – இவள்
    காதலன் நானிருக்கப் பேரெழிலாய்
    காதல் மழை பொழியும் கார்முகிலாய் – இவள்
    காதலன் நானிருக்கப் பேரெழிலாய் – இங்கே
    மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் – வண்ண
    மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
    வானில் விழும் வில் போல் புருவம் கொண்டாள் – இளம்
    வயதுடையாள் இனிய பருவம் கண்டாள்
    வானில் விழும் வில் போல் புருவம் கொண்டாள் – இளம்
    வயதுடையாள் இனிய பருவம் கண்டாள்
    கூனல் பிறை நெற்றியில் குழலாட – கொஞ்சும்
    குளிர் முகத்தில் நிலவின் நிழலாட
    கூனல் பிறை நெற்றியில் குழலாட – கொஞ்சும்
    குளிர் முகத்தில் நிலவின் நிழலாட – கலை
    மானின் இனம் கொடுத்த விழியாட
    ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ
    ஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆஆஆ
    மானின் இனம் கொடுத்த விழியாட – அந்த
    விழி வழி ஆசைகள் வழிந்தோட – நல்ல
    மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் – வண்ண
    மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
    காதல் மழை பொழியும் கார்முகிலாய் – இவள்
    காதலன் நானிருக்கப் பேரெழிலாய் – இங்கே
    மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் – வண்ண
    மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள் – நல்ல
    மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் – வண்ண
    மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
    காதல் மழை பொழியும் கார்முகிலாய் – இவள்
    காதலன் நானிருக்கப் பேரெழிலாய் – இங்கே
    மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் – வண்ண
    மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
    கரிதநிதபமகரி ஸரிகாமபதநி மாதவிப் பொன் மயிலாள்
    கரிதநிதநிபதநிஸ்ரிநீ தபதமபமகரி
    ஸரிகாமபதநி மாதவிப் பொன் மயிலாள்
    ஸ்ரிரிகமநீ நிஸ்ஸ்ரிகதா தநிநிஸ்ரி பாதமாபமகரிஸ
    ரிகமநி ஸ்ரிக மபதமா பதநி ஸ்ரிக நிரிஸ்தநி நித
    மாபதநிஸ்கரி மாதவிப் பொன் மயிலாள்
    தகிட தகிட திமி தகிட தகிட திமி தகிட தகிட திமி தகிட தகிட திமி
    தா ஜிம் கிடதகதரிகிடதோம் தா ஜிம் கிடதகதரிகிடதோம்
    தா ஜிம் கிடதகதரிகிடதோம் தாததிம்த தத்திம் தத்திம்
    பதநிஸ்நித தணதஜம் தபஜுணுத ஜம் ஜம்
    பதநி பதப ஜம் தஜம் தமதணகு ஜம் ஜம்
    பமபதீம் தகிட நிதம ஜம் ஸ்ரித ஸ்நித சுகம் தகிட கரிநிதஜம்
    பதநிஸ் தஜம் ஸ்ரிகம தகிடதஜம் கரிநீ ததரித ஜம்
    ரிகமபா பதா தஜம் தணம் ஸ்கரி நிரிஸ் தணதா ப ஜணும்
    ஸ்ரிகமாபதநீஸ்ரி கரிநீத தரிகிணதோம்
    ஸ்ரிகாமபதாநிஸ் ரிஸ்நீத தரிகிணதோம்
    ரிககாரி நிஸ்தாநி கரிநீத தரிகிணதோம் தரிகிணதோம் தரிகிணதோம்
    மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் வண்ண
    மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
    மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள்

    http://youtu.be/8OH8Fdl0ack

    http://youtu.be/8OH8Fdl0ack

    கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் எளிமைக்கு சான்று.  அது பற்றிய செய்திகள்.. விவரங்கள்.. இனிமை..  சொல்லாட்சி.. இவை பற்றிய வாசகர்களின் பின்னூட்டங்களுக்காக காத்திருக்கிறேன்.
     
     
    அன்புடன் 
    காவிரிமைந்தன் 
    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    அண்ணா கண்ணன்

    சித்திரம் பேசுதடி என்றன் சிந்தை மயங்குதடி என்ற வரிகளுக்கு இணங்க, ஓவியமும் நிழற்படங்களும் நம் உள்ளத்தை என்றும் கொள்ளை கொள்ளக் கூடியவை. புதிய திறமைகளை ஊக்குவிப்பதில் வல்லமை எப்போதும் முன் நிற்கிறது. அவ்வகையில் சிறந்த நிழற்படக் கலைஞர்களைக் கவுரவிக்க உள்ளோம்.

    திவாகர் அவர்கள் பயணத்தில் இருப்பதால், இந்த வார வல்லமையாளரை வல்லமை பிளிக்கர் படக் குழும நிர்வாகி சாந்தி மாரியப்பன் (அமைதிச் சாரல்) தேர்ந்தெடுக்கிறார். அடுத்த இரண்டு வாரங்களும் சாந்தியே தேர்ந்தெடுக்க உள்ளார்.

    இனி, சாந்தியின் மடல் –

    முதல் தேர்வு: வனிலா பாலாஜி.

    இயற்கையான ஒளியை மிகச் சிறப்பாகக் கையாள்வது இவரது தனித் தன்மை. வீட்டினுள் எடுத்தவையாக இருந்தாலும் கூட அவரது படங்களில் காணப்படும் அழகு சொல்லி முடியாது.

    71516183@N03_r

    இந்தப் படத்தில் மரப்பாச்சிப் பொம்மைகளின் மேல் படிந்திருக்கும் மெல்லிய ஒளி ஒரு தெய்வீகத் தன்மையைக் கொடுக்கிறது. அருமையான காட்சியமைப்பு, முரண்பாடான வண்ணங்கள், nice arrangement, மிக மிகத் துல்லியமான படப்பிடிப்பு என்று எல்லாமும் இந்தப் படத்திலிருந்து கண்களை எடுக்க விடாமல் கட்டிப் போடுகின்றன.

    vanila balaji
    http://www.flickr.com/photos/vanilabalaji/11099741773/in/pool-1922937@N20

    மேலும் படங்களை இவரது ஃப்ளிக்கர் பக்கத்தில் கண்டு ரசிக்கலாம்.
    http://www.flickr.com/photos/vanilabalaji/with/11338932554

    சாந்தியின் தேர்வினை வழிமொழிந்து, வனிதா பாலாஜி அவர்களை இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுக்கிறோம். அவரது திறனும் புகழும் மேன்மேலும் உயர வாழ்த்துகள். உரியவரைத் தேர்ந்தெடுத்த சாந்திக்குப் பாராட்டுகள்.

    கடைசி பத்தியில் விசாலம் அம்மா –

    தில்லியில் பஹுவாய் மந்திர் கட்டிருக்கும் விதம் மிக வியப்பைத் தருகிறது தாமரை மலர் போன்று அமைப்பு ஒரு இடத்திலும் மின்சாரம் இல்லை சுற்றி வாய்க்கால் போன்று நீரோடடம். உள்ளே தியானம் செய்ய ஏற்ற இடம் உள்ளே மிகவும் சில்லென்று ஏசி போட்டாற் போல் இருக்கிறது இது நல்ல வெயில் காலத்திலும் தான். எங்கும் பச்சைப்பசேர் என்ற புல் வெளி. இந்த வெளி சக்தியைச் சேமிக்கும் போது எனக்கொன்று தோன்றுகிறது .ஏன் நாம் நம்மிடம் இருக்கும் சக்தியையும் சேமிக்கக்கூடாது? படபடவென்று பேசி சக்தியை இழக்கிறோம் கோபத்தில் சக்தியை இழக்கிறோம் .அளவு கடந்த மோகத்திலும் அல்லது காமத்திலும் சக்தி விரயமாகிறது நம் உடலில் இருக்கும் சக்தியை விரயமாக்காமல் தக்க வைத்துக்கொள்ள அங்கு நல்ல விஷயங்களுக்கு வழி உண்டாகிறது, மௌனத்தில் தியானம் சீக்கரம் பலன் தருகிறது “.மௌனகுருவே நடராஜா நீலகண்டனே ” என்று அந்த ஞானகுரு தக்ஷிணாமூர்த்தியைத் தியானிப்போம்.

    Share
  • சொந்த சிறை

    பவள சங்கரி

    இப்புடி ஒரு நேரத்துல இதெல்லாமா யோசிப்பாங்க!

    “இருந்தாலும் என்ர மாமன் செய்யிறது சரியில்லயே.. எத்தன பாடுபடுத்திச்சு என்னய.. நான் ஒருத்தி இல்லேனா தெரியும் சேதி.. கை குழந்தையை வச்சுக்கிட்டு அல்லாடும் போது தான தெரியும் இந்த ராசுவோட அருமை. நல்லா இருக்கும்போது என்னைய கண்டுக்காம இன்னைக்கு என்னை காப்பாத்துறதுக்கு மூச்சு முட்ட உசிர கையில புடிச்சிக்கிட்டு ஓடுறியே.. உனக்கு எம்மேல பாசம் இல்லாமயா இப்புடி ஒரு காரியத்தை பன்னற.. நீ நெம்ப நல்லவிகதான் மாமா.. ஆனா.. “

    உடலெல்லாம் உணர்வற்று மரத்துப்போன நிலையில் மனம் மட்டும் அரை மயக்கத்தில் விழித்த நிலையில் எதை எதையோ பிதற்றிக்கொண்டு வந்து கொண்டிருக்கிறது, ராசுமணிக்கு. கழிப்பறை, மின்சார வசதி போன்ற அடிப்படைத் தேவைகளுக்கேத் திண்டாடும் இந்த குக்கிராமத்தில் ஒரு பள்ளிக்கூடம் வேண்டும் என்று போராடி சாதித்து, அதற்காகத் தம் உயிரையும் கொடுக்கத் தயாராக இருப்பவன் வீரய்யன். ஆசை, ஆசையாக மாமன் மகளை மணந்துகொண்டு அவளையும் சீமாட்டியாக வாழ வைக்க வேண்டும் என்றுதான் போராடுகிறான். எல்லாம் என்ன சினிமா கதையா.. ஒரே பாடலில் நினைத்ததெல்லாம் நடந்து முடிந்து ஊரே சுவர்க்கபுரியாக மாறுவதற்கு. இந்த ஆரம்பப் பள்ளியை ஊரில் தொடங்குவதற்குள் அவன் பட்டபாடு சொல்லி முடியாது. பதினான்கு கிலோமீட்டர் அன்றாடம் நடந்து சென்று தான் படித்துவிட்டு வந்து பட்டபாடெல்லாம் இப்போதைய குழந்தைகளுக்கு இருக்கக் கூடாது, அவர்களும் நாலெழுத்துப் படித்து நன்றாக இருக்க வேண்டும் என்று ஆரம்பித்த போராட்டம் இன்று வரை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. அதற்காக ஒத்தாசையாக இல்லாவிட்டாலும் உபத்திரவமாக இல்லாமல் இருக்கச் சொல்லி, காலில் விழுந்து கும்பிட்டுக்கூட கேட்டாகிவிட்டது. ராசுவும் புரிஞ்சிக்கிற வழியைக் காணோம். அன்றாடம் சண்டை, சந்தேகம், குதர்க்கமான பேச்சு.. சே.. வாழ்க்கையே சலிப்பாகத்தான் போகிறது, வீராவிற்கு. வயிற்றில் குழந்தையை சுமக்கும் ஒரு தாய் போலவா நடந்துகொள்கிறாள். இன்னும் சின்னக் குழந்தையாட்டம் தொட்டதெற்கெல்லாம் அடம் பிடித்துக்கொண்டு, சொல்வதையும் புரிந்து கொள்ளாமல் கேட்பார் பேச்சைக் கேட்டுக்கொண்டு, எப்பொழுது பார்த்தாலும் வாக்குவாதம் செய்துகொண்டே இருந்தால் ஒரு மனிதன் எத்தனை நாளைக்குத்தான் பொறுமையாக இருக்க முடியும். இதோ, வயிற்றில் எட்டு மாத குழந்தையை வைத்துக்கொண்டு கொஞ்சம்கூட பொறுப்பில்லாமல் இப்படி ஒரு சாதாரண விசயத்திற்காக சண்டை போட்டு இன்று கீழே விழுந்து படாத இடத்தில் ஏதும் அடிபட்டு விட்டதோ என்னமோ தெரியவில்லை. திடீரென்று இரத்தப் போக்கு ஆரம்பித்துவிட்டது. மயங்கி விழுந்த ராசுவிற்கு தண்ணீர் தெளித்தும் தெளியவே இல்லை. பதறியடித்துக்கொண்டு ஊரில் இருக்கும் இரண்டே இரண்டு குதிரை வண்டியும் , மாட்டு வண்டிகளும், பக்கத்து ஊரில் நடக்கும் திருவிழாவிற்கு சென்றுவிட்டது. மினி பஸ் காலையில் 11 மணிக்கு மட்டுமே ஒரே ஒரு முறை வரும். இரவு 8 மணிதான் ஆகிறது, தெருவே மயான அமைதியாக இருப்பது போல தோன்றுகிறது. இந்த நேரத்தில் செய்வதறியாது, யோசிக்கவும் நேரமில்லாமல், அன்பு மனைவியை தோளில் தூக்கிப்போட்டுக் கொண்டு 14 கி.மீ. தள்ளி இருக்கிற மகப்பேறு மருத்துவமனைக்கு ஓடிக்கொண்டிருக்கிறான் இந்த வீரா, கூடவே மனப்பாரத்தையும் சுமந்தபடி.

    “ஏ மாமா நீயே நினச்சிப்பாரு.. விவரம் தெரிஞ்சு, நானே பாவாடை கட்டுன நாளுலயிருந்து உன்னையத்தான அந்த நாடாவுல முடிஞ்சு வச்சுக்கிட்டு இருக்கேன், உனக்கு ஏன் அது புரிய மாட்டீங்கிது.. எப்பப் பார்த்தாலும் ஊருக்காக, பள்ளிக்கூடப் பிரச்சனையின்னு சுத்திக்கிட்டே திரியறயே, என்ர மாமன் எனக்கு மட்டும்தான் சொந்தம்னு இருக்கோனுமின்னு நான் நினச்சது தப்பா.. நீ வெறுங்கால்ல கஷ்டப்பட்டு அத்தனை தூரம் நடந்து பள்ளிக்கூடம் போறது மனசு பொறுக்காமத்தானே என்ர சிலுவாட்டுக்காசெல்லாம் போட்டு, சாமியண்ணகிட்ட சொல்லி உனக்கு செருப்பு தச்சுக் கொடுத்தேன். அன்னாடம் களியே தின்னு வாய் செத்துப்போய்க் கடக்கறியேன்னுதானே நான் மச்சு ஊட்டுக்கு வேலைக்குப்போய் உனக்கு நல்லஞ்சோறும், கறி குழம்பும் வாங்கியாந்து கொடுதேன். இதெல்லாம் சின்ன வயசிலருந்து பாத்துப் பாத்து பண்ணுனதெல்லாம் சொல்லிக்கிட்டா இருக்க முடியும் சொல்லு….”

    அந்த குக்கிராமத்தில் சிப்பம் போடவும், துண்டு முடியவும் இப்படி சின்ன சின்ன கூலி வேலைக்குப் போகிறதை தவிர வேற என்ன செய்ய முடியும். கூலியாகக் கிடைக்கிற அந்த கொஞ்ச பணத்துல மேல் செலவும், கேப்பைக் களியும்தான் செய்து சாப்பிட முடியும். இதில் படிப்பதற்கு ஆசைப்படுவது கொஞ்சம் அதிகம்தான் என்றாலும், அவனை எப்படியாவது ஒரு வாத்தியார் வேலைக்குப் படிக்க வைக்க வேண்டும் என்பது அந்த அப்பாவின் ஆசையாக இருந்தது.

    ”ஏஞ்சாமி, ஒழுங்கா படிச்சுப்போட்டு, எப்படியாச்சும் ஒரு வாத்தியார் வேலய வாங்கி, நம்ம ஊர்ல ஒரு பள்ளிக்கூடம் வரதுக்கு வழி பண்ணு ராசா.. இந்த ஊரு பேருதா பிள்ளை நிலா, ஆனா இங்க இருக்குற புள்ளைகளெல்லாம், வெய்யில்லயும், முள்ளுக்காட்டுக்குள்ளாறயும் அலைஞ்சு திரிஞ்சு வேலை செய்தும் நொந்து போய் கிடக்குதுக.. கால் வவுறு கஞ்சிக்கு பாவம் கால்கடுக்க நின்னுகிட்டு கிடக்குதுக. கூலி வேலயத் தவுர வேற ஒன்னும் தெரியாம நாங்கதேன் இதா.. இம்புட்டுப் பாடுபட்டுகிடக்கறோம். . இனிமேப்பட்டாவது நம்ம புள்ளைக கஷ்டம் படாம இருக்கோணும். இளமைல கொடியது வறுமையப்பா.. இனிமேப்பட்டு வர தலைமுறைனாச்சும், ஏதொவொரு நல்ல, வருமானம் வர தொழிலுக்குப் போவணும். வவுறார சோறாவது நேரத்துக்குக் கிடைக்கோணும் என்னப்பெத்த ராசா, நீதான் அதுக்கு வழி பண்ணோனும் சாமி” என்று அப்பா கண் கலங்கி பேசுறது நெஞ்சே பொளக்குற மாதிரி இருக்கும்..

    அதற்குத் தகுந்தாற்போல வீராவும் சிரத்தையாக 15 மைல் தினமும் முதலில் நடந்து போயும், பின்னால் அப்பா மிகவும் சிரமப்பட்டு வாங்கிக் கொடுத்த ஒரு பழைய சைக்கிள் மூலமும் படித்துவிட்டு வந்தான். எப்படியோ பத்தாம் வகுப்பு முடித்தவுடன், நல்ல மார்க்கு வாங்கி பாஸ் பண்ணியிருந்ததால் அவன் பள்ளிக்கூட தலைமை ஆசிரியரே அவனை ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் சேர்த்துவிட்டார்கள். வீட்டு நிலைமை தெரிந்து கர்ம சிரத்தையாக படித்து சாதி அடிப்படையில் மிகவும் தாழ்த்தப்பட்ட பிரிவு என்பதால் உடனே வேலையும் கிடைத்துவிட அந்த ஊருக்கே நல்ல காலம் பிறந்தது அவனால். ஒரு நான்கு ஆண்டுகால போராட்டத்தின் பலனாக அந்த ஊரில் ஒரு ஆரம்பப் பள்ளி வந்துவிட்டது. பிள்ளைநிலா என்று பெயர் கொண்ட அந்த ஊர் அன்றுதான் பிள்ளைகளுக்காக வாழும் ஊரானது. அந்த ஊரிலேயே நாலெழுத்து படித்தவன் என்ற பெருமையில் யாருக்கும், பெட்டிசன் எழுதுவது, ரேஷன் கார்டு விண்ணப்பப் படிவம், முதியோர் உதவித் தொகை வாங்கிக் கொடுப்பது போன்ற வேலைகளும் செய்து கொண்டிருந்தான். இன்று கழிவறை கட்டுவதற்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தி நல்ல பலனும் கிடைத்திருந்தது. இதிலெல்லாம் ராசுவிற்கு மாமன் செய்யும் காரியத்தால் ரொம்ப பெருமைதான். ஆனால் அவ்வப்போது கிறுக்கு பிடித்ததுபோல நடந்துகொள்வாள். எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் மச்சு வீட்டிற்கு வேலைக்குப் போய்க்கொண்டுதான் இருந்தாள். ஆறு மாதம் ஆனவுடன் வீராதான் அவளைக் கட்டாயப்படுத்தி வேலைக்குப் போவதை நிறுத்தச் சொன்னான். அதற்குப் பிறகுதான் அவள் போக்கு ரொம்ப மோசமாகிவிட்டது. வீட்டில் சும்மா இருக்க முடியவில்லை அவளால். அக்கம் பக்கத்தில் வேலை செய்பவர்களிடம் போய் உட்கார்ந்துகொண்டு எதையாவது பிரச்சனையை கிளப்பிக்கொண்டு இருக்க ஆரம்பித்தாள்.

    “மாமா, பள்ளியூடத்துல, எவளோ புதுசா வேலைக்கு வந்திருக்காளாமே.. ஏம் மாமா உனக்கு ஆம்பள வாத்தியானே கிடக்கலியாக்கும்.. இல்ல.. நீயே தேடிப்புடிச்சு இப்புடி வெள்ளத்தோலு தொரசாணிய கொண்டாந்தியாக்கும்..”

    நரம்பில்லாத நாக்கு இப்படி பச்சை, பச்சையாக பலதும் பேச, எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் அடங்காமல் இன்னும் மோசமாக பேசிக்கொண்டிருக்க, பொறுக்காதவனாக ஓங்கி ஒரு அறை விட்டான் வீரா.. அவ்வளவுதான், அடுத்த மூனு நாள் அவ செய்த ரகளை இவ்வளவுதான்னு இல்லை. ஊரைக்கூட்டி வைத்துக்கொண்டு ஒப்பாரி வைத்து அழுது, பெற்றவர்களையும் வரவழைத்து நியாயம் கேட்கச் சொல்லி ஏகப்பட்ட ரகளை செய்துவிட்டாள். இவனுடைய பேச்சு அங்கு துளியும் எடுபடவில்லை. எல்லோரும் அவளுக்கே ஒத்து ஊதிக்கிட்டு இருக்க, வெறுத்துப்போய் அந்த இடத்தைவிட்டு தள்ளிப்போனான். வயிற்றில் குழந்தை வேறு உண்டானவுடன் அவளுடைய பிடிவாதமும், வாய்ப்பேச்சும் சொல்ல முடியாத அளவிற்கு மோசமாகப் போனது. என்னதான் மாமன் மகளாக இருந்தாலும், தன் மீது அளவிற்கதிகமாக அன்பு வைத்திருப்பவள் என்றாலும், தன்மானத்தைத் தீண்டும் அளவிற்கு பேசினால் எந்த ஒரு கணவனால் தாங்கிக்கொள்ள முடியும்.

    கழிப்பறை வசதிகூட ஒழுங்காக இல்லாத ஒரு கிராமத்திற்கு டவுனில் படித்து, சொகுசாக வாழ்ந்து பழகியவர்கள் வேலைக்கு வரவேண்டும் என்று வேண்டுதலா வைத்துக்கொள்கிறார்கள். ஒற்றை ஆசிரியர் மட்டும் இருக்கும் பள்ளியையெல்லாம் அடுத்த ஊர் பள்ளியோடு இணைக்க வேண்டும் என்று எளிதாக சட்டம் போடுபவர்களுக்கு, மதிய உணவிற்காகவாவது உள்ளூர் பள்ளியில் ஒதுங்கும் நிலை பற்றி யோசிக்க முடியவில்லை. வர வாத்தியாருங்க எல்லாம் மூனு மாசம் கூட நிலைச்சு நிக்கிறதில்ல. எங்க பள்ளிக்கூடம் போயிடுமோன்னு மனசு கிடந்து தவிக்கறப்பல்லாம் அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம், அதுக்கு குறுக்கால நிற்கிறவங்களை தட்டிக் கேட்பதிலும் தவறில்லை என்றே இருந்தது வீராவிற்கு. இந்தப் பள்ளிக்கூடத்தை எப்படியும் கட்டிக்காத்துவிட வேண்டும் என்ற வெறியே வந்துவிட்டது அவனுக்கு. நேரங்கழித்து வீட்டிற்கு வரும்போதெல்லாம் சாப்பாடு கிடைப்பதும்கூட அரிதானது. பல நாட்கள் வயிறு முட்ட தண்ணீர் குடித்துவிட்டு சுருண்டு கிடக்க வேண்டியிருந்தது அவனுக்கு. எந்த நேரத்தில் அவளுக்குக் கோபம் வரும் எதைத் தூக்கி அடிப்பாள் என்று தெரியாத இந்த நேரத்தில் வயிற்றில் குழந்தை. அந்தக் குழந்தையை சேதாரம் இல்லாமல் பெற்றெடுக்க வேண்டுமே என்று கோவிலில் வேண்டுதலோடு, தன் அத்தையையும் கெஞ்சிக்கேட்டு கூட வந்து தங்கச் செய்ததால் பயம் இல்லாமல் பள்ளிக்குச் செல்ல முடிந்தது. இப்படி ஒரு வெறி பிடித்த அன்பா ஒருத்தி கணவன் மீது வைப்பாள். தன்னையும் துன்புறுத்திக்கொண்டு , மற்றவர்களுக்கும் தொல்லை கொடுத்துக்கொண்டிருக்கிறாள்.

    “என்ர மாமன் எப்பவுமே இவ்ளோ கோபமா இருந்ததே இல்ல.. இப்பவெல்லாம் என்னக் கண்டாலே அதுக்குப் புடிக்காமப் போச்சு. அதுக்கெல்லாம் காரணம், அந்த வெள்ளத் தோலுக்காரிதான். அவளாலதான் மாமன் என்னயவே இப்புடி போட்டு அடிக்குது.. இனிமே நாம யாருக்காக பொழச்சிக் கடக்கணும்.. உசிருக்குசிரான மாமனே என்னை வெறுத்து ஒதுக்குனப்பறம் இனிமே நான் இருந்தா என்ன, செத்தா என்ன.. மாமா… என்ன இப்புடியே உட்டுப்போடு மாமா.. இன்னும் ஏன் தூக்கிட்டு சொமக்குற.. மாமா.. மாமா.. வாயில் வார்த்தை ஏதும் வரவில்லையே.. என்ன ஆச்சு எனக்கு.. நான் பேசறது யாருக்கும் கேக்கலையா.. உடம்பும் காத்தாட்டமா இருக்கு. ஒன்னியும் பிரியலியே.. மாமா.. மாமா..”

    வேகமாக ஓடுகிற ஓட்டத்தில் இருதயம் துடித்த துடிப்பு, ஒரு வேளை எகிறி வாய் வழியாக வெளியே வந்தே விழுந்துடுமோ என்று பயம் வந்தாலும், எப்படியும் மருத்துவமனைக்குப் போய் சேர்ந்தே ஆகவேண்டும் என்ற வெறியில் எதைப் பற்றியும் நினைக்காமல் ஓடிக்கொண்டிருக்கிறான் வீரா.. சுய நினைவு சுத்தமாக இல்லை ராசுக்கு. துவண்டு போய் கிடப்பது தெரிகிறது. ஏற்கனவே ஒல்லிப் பிச்சானாக இருப்பவள், அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டு ஒழுங்காகச் சாப்பிடவில்லையோ என்னவோ, இன்னும் இளைத்துப்போய் இருக்கிறாள். ஒரு வழியாக ராசிபுரம் மகப்பேறு மருத்துவமனை அருகில் வந்து சேர்ந்துவிட்டான். எல்லைச்சாமி, முனிதான் என் தங்கத்தைக் காக்க வேண்டும் ஐயனே, என்று வாய் ஓயாமல் சொல்லிக்கொண்டே வந்து சேர்ந்துவிட்டான். நல்ல வேளையாக டியூட்டி டாக்டர் இருந்ததால் ராசுவை அவரிடம் ஒப்படைத்துவிட்டு, பெஞ்சியில் அப்படியே சாய்ந்தவன், இனி நடக்கப்போவது எல்லாம் அவன் கையில் என்று மேலே மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டிருந்தான். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் ராசுவைப் பார்க்க உள்ளம் பொறுக்கவில்லை.

    நர்சு வந்து டாக்டர் உள்ளே கூப்பிடுவதாகக் கூறியபோது, வீராவின் கால்கள் நடுக்கம் எடுத்துவிட்டது. பிரசவ அறைக்குள் நான் எப்படி.. என்று இழுத்துக்கொண்டு வர மறுத்த வீராவை கட்டாயப்படுத்தித்தான் அந்த நர்சு உள்ளே கூட்டிச் செல்ல வேண்டியிருந்தது.

    “என்னப்பா.. என்ன ஆச்சு, எப்படி அடிபட்டுச்சு. உன் மனைவி இப்ப உயிருக்குப் போராடிக்கிட்டு இருக்கா தெரியுதா உனக்கு.. என்ன நடந்திச்சின்னு சொல்லு.. கிட்டத்தட்ட 14 கிலோ மீட்டர் உன் மனைவியையும் தூக்கிட்டு ஓடியே வந்திருக்கே. அதுலயே தெரியுது உன் மனைவி மேல நீ எவ்வளவு பாசம் வச்சிருக்கேன்னு. அப்படியிருக்கும்போது ஒரு நிறைமாத கர்பிணியை எப்படி இப்படி கேர்லஸ்ஸா விட்டீங்க. “

    “சார், என்னை வெளிய விட்டுருங்க சார். என்னால இதெல்லாம் பாக்க முடியல.. வெளியே வாங்க சார் சொல்றேன்.. எல்லாம் என் நேரம், விதி சார்”

    “இல்லையில்லை, நீங்கள் இங்கே இருக்கலாம். வெளிநாட்டிலெல்லாம் இது சர்வ சாதாரணமா நடக்கிற ஒரு விசயம். நாங்க இங்கே கட்டாயப்படுத்துவதில்லை என்றாலும், இப்ப உங்க மனைவி இருக்கிற நிலையில் நீங்கள் இங்கு இருப்பது நல்லது. அவங்க எங்களோட ஒத்துழைப்பு கொடுக்க மாட்டேங்கிறாங்க.. உயிர் பிழைக்கிற ஆசையே இல்லை அவங்களுக்கு. அவங்களோட ஒத்துழைப்பு இருந்தா மட்டும்தான், இரண்டு உயிரையும் காப்பாற்ற முடியும்.. ஏதாவது பேசுங்க, அவங்ககிட்ட நீங்க எப்படி அன்பா பேசுவீங்களோ அப்படி பேசுங்க.. என்ன நடந்ததுன்னு அவங்க கோவிச்சிக்கிட்டாங்களோ அதைப்பத்தின உங்க சமாதானத்தைச் சொல்லுங்க.. “

    “சார், என்னோட சமாதானத்தைச் சொல்ல என்ன இருக்கு.. எல்லாம் என் விதி. நான் உசுரா நினைக்கிற என் ராசாத்தியே என்னைப் புரிஞ்சிக்கலைங்கறதுதான் என் கெட்ட நேரம்.. ” சொன்னவன் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தான்.

    மருத்துவர் அவனை சமாதானம் செய்துவிட்டு, தைரியமாக இருக்கச் சொன்னார். தண்ணீர் கொஞ்சம் கொடுத்து குடிக்கச் சொல்லி தட்டிக் கொடுத்தார் . வீரா ஓரளவிற்குத் தெளிவாக இருந்தாலும், மனைவி நல்லபடியாக பிழைத்து வரவேண்டுமே என்ற கவலையும் அதிகமாகவே இருந்தது. மனம் திறந்து பேச ஆரம்பித்தான்.

    “எங்க ஊரில் பள்ளிக்கூடம் ஆரம்பிக்க எவ்வளவு சிரமம் இருந்ததுன்னு யாரைக் கேட்டாலும் சொல்லுவாங்க. மூனு வருஷ போராட்டம்ங்க. அதுக்கப்பறம் ஆசிரியர் இங்க யாரும் நிலைச்சு நிக்கலீங்க. நானும் எவ்வளவோ மன்றாடிப் பார்த்துட்டேன். வரவங்கெல்லாம் கொஞ்ச நாள் இருந்துட்டு மாற்றல் வாங்கிட்டோ , இல்லேனா வேலையையே ராஜினாமா பண்ணிட்டுக்கூட போயிடறாங்க. ஒற்றை ஆசிரியர் பள்ளி என்பதால் இதையும் மூடிட்டாங்கன்னா, அதுக்கப்பறம் எங்க ஊர் குழந்தைகள் கட்டாயம் அவ்வளவு தூரம் பக்கத்து ஊருக்குப் போயெல்லாம் படிக்க மாட்டாங்க. ரொம்ப கவலையா இருந்தப்பதான், நம்ம ஊர்க்காரர் ஒருவர் முனியப்ப சாமி கோவிலுக்கு வந்திருந்தார். நம்ம இந்திய இராணுவத்தில வேலை பார்ப்பவர். ஏதோ வேண்டுதல் நிறைவேற்றுவதற்காக வந்திருந்தார். நான் எட்டாம் வகுப்பு படித்தபோது எனக்கு சீனியர் அவர். 10 ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார். ஊரைப் பற்றி பேசிக்கொண்டிருந்தபோது நம் பள்ளியில் ஆசிரியர் பிரச்சனை பற்றி சொன்னேன். அவரும் கொஞ்சம் கூட யோசிக்காமல் அருகில் இருந்த மனைவியிடம், அவர் டீச்சர் டிரெய்னிங் எடுத்தவர் என்பதால், தான் வரும்வரை தன் ஊர் பள்ளியில் ஆசிரியை பணியை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொன்னபோது கொஞ்சம் யோசித்தவர், கணவன் சொல்லை தட்டாததோடு, உண்மையான நிலைமையைப் புரிந்துகொண்டு, தான் இந்த ஊரிலேயே தங்கி பணியாற்றுவதாக ஒப்புக் கொண்டார். இங்கு வந்த நேரம் ஏற்கனவே போலியோ நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர்கள் குழந்தைக்கு அடிக்கடி உடம்புக்கு தொந்திரவு வந்ததால், மருத்துவமனைக்கு கூட்டிச் செல்வது, குழந்தையை பார்த்துக்கொள்வது போன்ற சில உதவிகள் செய்ய வேண்டியிருந்தது. உடன் பிறவா ஒரு சகோதரி நம் கண் முன்னால் சிரமப்படும் போது, அதுவும் ஒரு நல்ல காரியத்திற்காக என் பேச்சை நம்பி வந்து இந்த கிராமத்தில் இப்படி ஒரு குழந்தையை வைத்துக்கொண்டு அல்லல்படும்போது உதவாமல் இருக்க நான் அத்தனை கல் நெஞ்சக்காரன் இல்லை சார். அதுவும், நாம் இங்கு நிம்மதியாக சாப்பிட்டு, நிம்மதியாத் தூங்கி எழுந்திரிக்க வேண்டி, அங்கு மழையிலும், பனியிலும் நம் நாட்டிற்காக, எல்லையில் காத்து நிற்க, இங்கு அந்த மவராசனோட குடும்பம் துன்பப்படுவதை சும்மா வேடிக்கைப் பார்க்க முடியுங்களா.. அந்த குடும்பத்திற்கு நம்மால் ஆன உதவியைச் செய்ய வேண்டியது அவசியம் இல்லீங்களா? அந்த ஒரு குறைந்தபட்ச மனசாட்சி கூட இல்லாமல் எப்படிங்கய்யா இருக்க முடியும், நீங்களே சொல்லுங்க.
    நானும் ராசுவிடம் விவரமாக சொல்ல முயன்ற போதெல்லாம் அவள் என் பேச்சை காது கொடுத்து கேட்கத் தயாராகவே இல்லை. தானே ஒரு விசயத்தை கற்பனை செய்து மனதில் உறுதியாக வைத்துக்கொண்டு, வேறு எதையும் உள்வாங்காமல் இன்று இப்படி ஒரு நிலைக்கு வந்துவிட்டாள். இவ்வளவு தூரம் ஆன பிறகு, அந்த அமலா டீச்சரும், ரொம்பவும் மனம் உடைந்து போய்விட்டார்கள். அவர்கள் நான் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் ஊரைவிட்டுப் போய்விடுவது என்று முடிவு செய்துவிட்டார்கள். இனி இந்தப் பள்ளியை ஆண்டவன் தான் காக்க வேண்டும். நான், இப்போது உயிருக்குப் போராடும் மூன்றாவது உயிரான எங்கள் பள்ளிக்கூடத்தைப் பற்றிக் கவலைப்படுவேனா, அல்லது என் உயிரே இங்கே போகத் துடிப்பதை வேடிக்கைப் பார்க்கப் போறேனா.. இது இரண்டையும் என்னால தாங்க முடியாது சார். விதிப்படி நடப்பது நடக்கட்டும்” என்று விரக்தியாகச் சொல்லி அழுகையைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறியவனை மருத்துவர் ஒரு ஓரமாக இருந்த சேரில் போய் உட்காரச் சொன்னார்.

    திடீரென்று ராசுவின் இருதயத் துடிப்பு சீராகக் காட்டும் மானிட்டரைப் பார்த்து டாக்டரின் முகத்தில் நிம்மதி பிறந்தது.. எப்படியும் அமலா டீச்சரை ஊரை விட்டுபோகாமல் நிறுத்தி, பள்ளியை நல்லபடியாக நடக்கச் செய்ய வேண்டும் என்று ராசு துடித்த துடிப்பை அந்த மானிட்டர் துல்லியமாகக் காட்டியது!

    முற்றும்

    Share
  • வார ராசி பலன்: 16- 12-2013-22-12-2013

    காயத்ரி பாலசுப்ரமணியன்
    மேஷம்: இந்த வாரம் மேற்கொள்ளும் பயணம் ஆதாயத்தை ஏற்படுத்தும் விதமாக அமைவதால் வியாபாரிகள் மகிழ்ச்சியுடன் செயலாற்றுவார்கள். பெண்கள் பணியின் தன்மை அறிந்து செயல்பட்டால், பணிகள் தடங்கலின்றி நடைபெறும் . கலைஞர்கள் மற்றவர் கூறும் குறைகளையும், விமர்சனங்களையும் பொருட்படுத்தாது, பணியில் இறங்கி தங்கள் இடத்தைத் தக்க வைத்துக் கொள்வர். பொது வாழ்வில் உள்ளவர் கள் செயல்படுத்தும் திட்டங்களில், அடுத்து வரும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தினால், தவறுகளைக் களைந்து, முன்னேற முடியும்.மாணவர்கள் விரும்பிய பொருள் கிடைப்பதில் இழுபறி இருக்கும் .
    ரிஷபம்:வியாபாரத்தில் கடுமையான போட்டி இருந்தாலும், புத்திசாலித் தனமாக செயல்படும் வியாபாரிகளுக்கு வெற்றி உறுதி. வயதானவர்கள் உடல்நலக்குறைவிற்கு, சொந்த வைத்தியம் மேற்கொள்ளாமல், தகுந்த மருத்துவ சிகிச்சை எடுத்தல்,நல்லது. மாணவர்கள் அதிக நேரம் கண் விழித்து பணிகளை முடிக்க வேண்டியிருக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் விளைவுகளை யோசித்தபின் கடினமான செயலில் இறங்குவது அவசியம். பெண்கள் சுய பச்சாதாபத்திற்கு இடமளிக்காதீர்கள். உங்கள் திறமைகள் உங்களை வழி நடத்தும்.பணியில் இருப்பவர்கள் குறுக்கு வழிகளைக் கையாளாமலிருந்தால், உங்கள் கௌரவம் பாதிப்படையாமல் இருக்கும்.
    மிதுனம்:மாணவர்கள் கவனம் மற்றும் கருத்துச் சிதறலின்றி பணிகளை மேற்கொள் ளுங்கள். அதிக மதிப்பெண்களை பெற்று மகிழலாம். இந்த வாரம் கலைஞர்கள் அநாவசிய செலவுகளுக்காக கடன் படும் நிலை வராதவாறு, விழிப்புடனிருப்பது அவசியம். பெண்கள் விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கை கைக்கொண்டால், விரும்பிய வாழ்க்கை உங்கள் வசமாகும். தங்கள் திறமை மேல் நம்பிக்கை வைத்து செயலாற்றும், சுயதொழில் புரிபவர்களுக்கு புதிய வாய்ப்பும், புகழும் தேடி வரும். உங்கள் தொழிலுக்கு முன்னுரிமை தந்தாலும், குடும்பத்தை கவனிப்பதில் குறை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். குடும்ப வாழ்க்கை அமைதியாகத் திகழும்.
    கடகம்: பெண்கள் உங்களால் நிறைவேற்றக்கூடிய காரியங்களுக்கு மட்டும் வாக்குறுதி கொடுப்பது நல்லது. கை வினை கலைஞர்கள் சிரமங்களுக்கு நடுவே தங்கள் நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்வார்கள். பொது வாழ்வில் உள்ளவர்கள் சில எதிர்ப்பு களையும், எதிரிகளையும் சமாளிக்க பக்குவமாக நடந்து கொள்ளுதல் அவசியம். மாணவர்கள், நல்ல இதயங்களை புண்படுத்தாமல் இதமாக நடப்பது நன்மையைத் தரும். இந்த வாரம் வியாபாரிகள் கணக்கு வழக்குகளை அலசிப் பார்த்து நிறை குறைகளை உணர்ந்து செயலாற்றினால், அதிக லாபம் பெறலாம். கலைஞர்கள் பத்திரங்களில் பேரில் கடன் வாங்குவதை தள்ளிப் போடுவது நல்லது.
    சிம்மம்: உயர் அதிகாரிகளின் சினத்திற்கு ஆளாகாதவாறு பணிகளை உடனுக்குடன் முடித்து விடுங்கள். வியாபாரிகள் தோள் கொடுத்து பாடுபடும் பணியாளர்களின் தேவைகளை உடனுக்குடன் கவனிப்பது அவசியம். பெண்கள் தினசரி வேலைகளைத் தள்ளிப் போடாமல் செயல்பட்டால், பிள்ளைகளுடன் செலவிட நேரம் ஒதுக்கலாம். பொது வாழ்வில் உள்ளவர்கள் பொது நிகழ்ச்சி மற்றும் விழாக்களில் சர்ச்சைக்குரிய கருத்து பரிமாற்றங்களில் இருந்து ஒதுங்கி இருங்கள். மன நிம்மதி பறி போகாமல் இருக்கும். மாணவர்கள் , பேச்சைக் குறைத்து, தன்னுடைய செயலில் தீவிரம் காட்டி வந்தால், கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
    கன்னி: பணியிடத்தில், கருத்து வேறுபாடும், தேவையற்ற மோதல்களும் தோன்றும் வாய்ப்பிருப்பதால், இயன்றவரை அமைதியாய் இருந்தால், அல்லல்கள் அருகே வராது. பெண்கள் வேலையாட்களை நம்பாமல், அத்தியாவசியமான வேலைகளை நீங்களே செய்து விடுவது நல்லது. வியாபாரிகள் முதலீடுகளில் அகலக் கால் வைப்பதைத் தவிர்த்து விடுவதோடு புதிய பணியாளர்களை அமர்த்துவதில் விழிப்புடன் இருப்பது அவசியம். மாணவர்கள் ஆசிரியர்களின் வழிகாட்டுதல் படி நடந்தால், யாவும் சிறப்பாக நடக்கும். இந்த வாரம் கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களை பெறவும், அதனைத் தக்கவைத்துக் கொள் ளவும், தீவிரமாக உழைப்பார்கள்.
    துலாம்: கூட்டுத் தொழிலில் உள்ளவர்கள் பங்குதாரர்களின் தரும் நல்ல ஆலோசனைகளை ஏற்றுக் கொண்டால், நஷ்டங்களைக் குறைத்துக் கொள்ளலாம். சுயதொழில் புரிபவர்கள் புதிய முயற்சிகளில் தைரியத்தோடு துணிந்து நின்றால், பாதி வெற்றி கிடைத்து விடும். மீதி வெற்றியை உங்கள் உழைப்பு நல்கும். கலைஞர்களுக்கு செலவுகள் சிலசமயம் கை மீறி செல்லும் வாய்ப்பிருப்பதால், எதிலும் கவனமாக இருப்பது அவசியம். இந்த வாரம் பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு, உதவி செய்தவர்களே சில சமயம் உபத்திரவங்களைத் தருவார்கள். மாணவர்கள் ரசாயனம் தொடர்பான செய்முறைகளில், எச்சரிக்கையாய் இருந்தால், சிறு காயங்களைத் தவிர்க்க முடியும்.
    விருச்சிகம்: தலைசுற்றல், மயக்கம் ஆகியவை வாராதவாறு முதியவர்கள் உணவில் கட் டுப் படாய் இருப்பது நல்லது. உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்லதை சிலர் தடுக்க முயல்வார்கள். எனவே மாணவர்கள் கண்ணும் கருத்துமாக செயல்பட வேண்டும். வியா பாரிகள் பண சம்பந்தமான விஷயங்களை உங்களின் நேரடிப் பார்வையில் வைத்துக் கொள்ளுங்கள்.பல தொல்லைகளைக் கட்டுக்குள் வைக்கலாம். இந்த வாரம் நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நம்பிக்கையின் அடிப்படையில் தான் நல்ல உறவு மலரும் என்பதைப் புரிந்து கொள்ளும் பெண்கள் ஈடுபடும் காரியங்களுக்கு உறவுகளும் துணையாய் நிற்கும்.
    தனுசு: பெண்கள் செலவுக் கடிவாளத்தை சற்று இறுக்கினால், பணமுடை ஏற்படாது. வியாபாரிகள் சரக்கு போக்கு வரத்தில் உள்ள ஓட்டைகளை அடைத்தால், வீண் விரையத்தைத் தவிர்க்கலாம். புதிய இடங்களில் மாணவர்கள் காட்டும் சொல்சிக்கனம் பிரச்னைகளை பெரிதாகாமல் தடுக்கும்.சுயதொழில் புரிபவர்கள் சுணக்கமின்றி, தீவிர முயற்சி செய்தால், நல்ல முன்னேற்றம் காணலாம். கலைஞர்கள் எல்லாம் தெரியும் என்கிற மனப்பான்மை உங்களின் முன்னேற்றத்திற்குத் தடையாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த வாரம் பணியில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் கூடுவதால் மன அழுத்தமும் சற்றே அதிகமாகும்.
    மகரம்: கலைஞர்கள் ஒப்பனைப் பொருட்களின் மூலம் ஒவ்வாமை ஏற்படாதவாறு, தரமான பொருட்களை பயன்படுத்துதல் நல்லது. பெண்கள் அக்கம்பக்கத்தாருக்கு ஆலோசனை வழங்குமுன், ஒரு முறைக்கு இரு முறை யோசிப்பது அவசியம். ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளாவர்கள் முறையான சிகிச்சையோடு எளிய பயிற்சிகளையும் சேர்த்துக் கொள்வதன் மூலம் நல்ல ஆரோக்கியம் பெறலாம். மாணவர்கள் நண்பர்களிடம் குதர்க்கமான பேச்சைத் தவிர்த்தால், மனக் கசப்பும், நட்பில் விரிசலும் ஏற்படாது.மனக் குழப்பம் உங்களின் திறமையை பாதிக்காதவாறு திடமாகச் செயல்படுங்கள். பல வெற்றிகளைப் பெறலாம்.
    கும்பம்: வியாபாரிகள் கொடுக்கல், வாங்கல், காசோலை வழங்குதல், ஆகியவற்றில் முறையாக செயல்பட்டு உங்கள் கௌரவம் நிலைக்குமாறு செய்து கொள்ளுங்கள். இந்த வாரம் மாணவர்கள் செய்ய மறந்த வேலைகளுக்காக அபராதம் கட்ட நேரிடலாம். எனவே விழிப்புடன் இருப்பது நல்லது. பெண்கள் அற்ப காரணங்களுக்காக, பிறரிடம் சண்டை, வாக்கு வாதத்தில் இறங்க வேண்டாம். சாமர்த்தியமாக இருந்தால் கலைஞர்கள் வருவதை சிக்கென பிடித்துக் கொண்டு, வரவை அதிகரித்துக் கொள்ளலாம். பணியில் இருக்கும் பெண்கள் தக்க சமயத்தில், உங்களின் சிரமங்களை, எடுத்துச் சொல்லி, தீர்வுகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
    மீனம்: இந்த வாரம் மாணவர்கள் நட்பு வட்டம் தரும் தொந்தரவுகளை சகித்துக் கொள்ள வேண்டியிருக்கும். பெண்கள் உடல்நிலையில் தகுந்த கவனம் செலுத்தி வந் தால், மருத்துவச் செலவுக்கு அவசியமிராது. வேலை செய்யும் இடத்தில் சிறு பூசல்க ளை வளர விடாமல் எச்சரிக்கையாக இருங்கள். அமைதியாக வேலைகளை செய்யலாம். உயர் பதவியில் இருப்பவர்கள் பணியாளர்களின் ஒத்துழைப்பை முழுமையாகப் பெற பாடுபட வேண்டியிருக்கும். பெற்றோர்கள் பிள்ளைகளின் போக்கை எண்ணி கவலைப்பட நேரிடலாம். உங்கள் வேலையில் சலிப்பு எழாதவாறு சிறு மாற்றங்களை அவ்வப்போது செய்து கொள்ளுங்கள்.

    Share
  • 18. அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம்

    18. அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – லூவ்ரெ அருங்காட்சியகம் Louvre Museum (3), பாரிஸ், ப்ரான்ஸ்

    ​சுபாஷிணி ட்ரெம்மல்

    இப்போது நாம் லூவ்ரே அருங்காட்சியகத்தில் எகிப்திய பண்டைய நாகரீகச் சின்னங்கள் அரும்பொருட்கள் இருக்கும் பகுதிக்குச் செல்கின்றோம்.

    1798-1801 ஆண்டு காலவாக்கில் நெப்போலியன் போனபார்ட்டின் எகிப்திய வருகை அவனுக்கு அந்த தேசத்தின் பண்டைய கலைப் பொக்கிஷங்களின் மேல் அளவற்ற ஆர்வத்தையும் மயக்கத்தையும் உண்டாக்கியிருக்கும் என்றே நினைக்கின்றேன். ஆனாலும் அவன் பயணம் முடிந்து திரும்புகையில் கொண்டு வந்தவையாக இங்கு கணிசமான எகிப்திய தொல்லியல் சான்றுகளோ ஏனைய ஆவணங்களோ இல்லை. மாறாக இங்கிருப்பவை பெரும்பாலும் அதற்கும் முன்பே மன்னன் 18ம் லூயிஸ் காலத்தில் சேர்த்தவையும் மேலும் தனியார் சேகரிப்பாக இருந்து பின்னர் இந்த அருங்காட்சியகத்துக்கு வந்து சேர்ந்தவையும் என்றே குறிப்பிடலாம்.

    மன்னன் லூயிஸின் காலத்தில் சேகரிக்கப்பட்ட எகிப்திய அரும்பொருட்கள் ஏராளம். இன்றிருக்கும் நக்தோர்ஹெப் சிலையும் சேக்மட் சிலையும் அப்போது கொண்டு வரப்பட்டவையே. 1824லிருந்து 1827 வரை பற்பல சேகரிப்புக்களிலிருந்து என ஏறக்குறைய 9000 அரும்பொருட்கள் இங்கே கொண்டு வரப்பட்டதாம். இவை அனைத்தையும் பாதுகாக்கவும் ஆராய்ச்சி செய்யவும் ஒரு தனித்துறையை லூவ்ரே அருங்காட்சியகத்தில் அப்போதைய மன்னன் அமைத்திருக்கின்றார்.

    இக்காலகட்டத்தில் லூவ்ரே அருங்காட்சியகத்தின் ஆதரவில் தொல்லியல் ஆய்வறிஞர் மரியேட் எகிப்துக்குப் பயணமானார் அங்கே அவர் கண்டெடுத்தவையே செராப்பியம் சக்காரா இவையிரண்டு கலைசிற்பத் தொகுதிகளும். இங்கே அவர் தொடர்ந்து களப்பணிகளை நடத்திக் கொண்டிருந்தார். 1852 முதல் 1853 வரை நடத்திய களப்பணிகளில் 5964 அரும்பொருட்கள் எகிப்தில் கண்டெடுக்கப்பட்டன. அவையனைத்தையுமே ஒன்று விடாமல் பாரிஸுக்கு அனுப்பி வைத்தார் மரியெட். களப்பணி முடிந்து பாரிஸ் திரும்பியதும் இவரே லூவ்ரே அருங்காட்சியகத்தில் எகிப்திய பண்டைய அரும்பொருட்கள் பகுதியின் அமைப்பாளராக பணியிலிருந்தார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. அகழ்வாய்வின் போது உயிரைப் பணையம் வைத்து களப்பணிகளில் ஈடுபட்டவர் மரியட். அப்படித் தேடி கண்டெடுத்த விலைமதிப்பற்ற அப்பொருட்களின் அருமை பெருமை அறிந்து அவை சரியாகப் பாதுகாக்கப்பட வேண்டும், இதனால் ப்ரான்ஸ் நாட்டிற்கும் பெருமை ஏற்படும் என்ற எண்ணம் அவருக்கு மனம் நிறைய இருந்திருக்க வேண்டும்.

    இக்காலகட்டத்தில் ஆங்கிலேய, ஜெர்மானிய, ப்ரென்ச் தொல்லியல் அறிஞர் குழுக்கள் சில எகிப்தில் வரிசையாக பல அகழ்வாய்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்தன. உதாரணமாக அபு ரோசா அகழ்வாய்வு, ஆசூய்ட் அகழ்வாய்வு, பாவிட் அகழ்வாய்வு, மெடாமுட் அகழ்வாய்வு என சிலவற்றை குறிப்பிடலாம். இதன் அடிப்படையில் தொடர்ந்து சில அரும்பொருட்கள் லூவ்ரெவிலும் வந்து சேர்ந்தன.

    லூவ்ரெவின் எகிப்திய அரும்பொருட்கள் பகுதியில் இருக்கும் சில அற்புதப் படைப்புகளைக் காண்போம்.

    1

    மூன்று கடவுள்கள் இருக்கும் வகையில் ஒரே க்ரனைட் கல்லில் செதுக்கப்பட்ட ஒரு சிற்பம் இது. தரையில் வைக்கப்பட்டிருக்கின்றது. ஒரு அரசன் (ராம்ஸஸ் II அல்லது மெர்னெபத் ஆக இருக்கலாம்) இடது புறத்திலிருக்க, கழுகுத் தலை கொண்ட இறைவடிவமான ஹோருஸ் வலது புறமிருக்க நடுவிலே கடவுள் ஓஸிரிஸ் நிற்கும் வகையில் அமைந்த சிற்பம் இது. ஏறக்குறைய கிமு 1279-1203 வாக்கில் உருவாக்கப்பட்ட ஒரு சிற்பம் இது. 1.34 மீட்டர் உயரமும் 0.78 மீட்டர் அகலமும் கொண்ட ஒரு வடிவம். 1818ம் ஆண்டில் இது லூவ்ரே அருங்காட்சியகத்திற்காக வாங்கப்பட்டது.

     2

    மன்னர் 3ம் ராம்ஸஸின் உடலை வைத்திருந்த கல்லறை கற்பெட்டி. இந்தக் கற்பெட்டியைச் சுற்றிலும் ஹிரோக்லிப்ஸ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அருங்காட்சியகத்தின் குறிப்பின்படி இது Book of Amduat நூலின் 7ம், 8ம் அத்தியாயங்களைக் கொண்டிருக்கின்றது என்பது தெரிய வருகின்றது. இக்கற்பெட்டியின் உள்ளே Book of Gates நூலின் முதல் அத்தியாயம் ஹிரோக்லிப்ஸ் எழுத்துருவில் கீறப்பட்டிருக்கின்றது. இதன் காலம் கிமு 1184-1153. இது கண்டெடுக்கப்பட்ட இடம் அரச பள்ளத்தாக்கு (Valley of King, Tomb of Ramses III). 1826ம் ஆண்டில் இது லூவ்ரே அருங்காட்சியகத்திற்காக வாங்கப்பட்டது.

    அக்தெதொப் மஸ்தாபா - சக்காரா சேகரிப்பு.
    அக்தெதொப் மஸ்தாபா – சக்காரா சேகரிப்பு.

    இதில் ஒரு ஊழியன் ஆட்டினைப் பிடித்து இழுத்துச் செல்வது போல வடிக்கப்படுள்ளது. இது ஒரு பெரிய பாறையின் மேல் தீட்டப்பட்ட தொடர் சித்திரத்தின் ஒரு பகுதி மட்டுமே. இச்சித்திரங்களோடு ஹிரோக்லிப்ஸ் எழுத்துக்களும் ஆங்காங்கே இருப்பதைக் காணலாம். இச்சித்திரத்தின் கதையினை விளக்கும் முகமாக அவை கீறப்பட்டிருக்க வேண்டும்.

    இவை மட்டுமின்றி, 3ம் ராம்ஸஸ் கட்டிய கோயில்களின் சில சுவர் பகுதிகள், மன்னன் எக்னத்தோன் கட்டிய கோயில்களின் சில சுவர் பகுதிகள், அரசர்கள் பள்ளத்தாக்கில் நிகழ்த்திய தொல்லியல் ஆய்வுகளின் போது கிடைத்த மம்மிகள், அவற்றோடு சேர்த்து வைக்கப்பட்டிருந்த பொன்னும் மணிகளும், வைர வைடூரியங்களினாலான ஆபரணங்கள், வாகனங்கள், வீட்டு அலங்காரப் பொருட்களாகிய நாற்காலி, ஜாடிகள், மேசை என பல பொருட்கள் இங்கே அடுத்தடுத்து என நமது கண்களுக்கு விருந்தாகிப் போகும்.

    மன்னர்கள் அல்லது ராஜ குடும்பத்தைச் சேர்ந்தோர் இறந்து போனால் அவர்களின் உடலை பதப்படுத்தி மம்மியாக்கி அதனை ஒரு பேழைக்குள் வைத்து அப்பேழைக்குள் அந்த மனிதரின் பொருட்களையும் சேர்த்து வைத்து புதைப்பது அக்கால எகிப்திய வழக்கம். இப்படி மம்மியாக செய்யப்படுபவர்களின் அந்தஸ்திற்கேற்ப பேழைகளின் தன்மைகள் அமையும். உதாரணமாக துரதிஷ்டவசமாக மிக இளம் வயதிலேயே இறந்து போன தூத்தான்சாமூனின் மம்மியும் அம்மம்மியோடு கூடவே கண்டுபிடிக்கப்பட்ட ஏனைய பொருட்களும் இப்பகுதி அகழ்வாய்வில் கண்டுபிடிக்கப்பட்ட போது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தங்கத்தினாலான பேழைக்குள் மன்னனின் மம்மி உடல் இருந்தது. மூன்று பேழைகள், தேர்கள், படுக்கைகள், என வரிசை வரிசையாக பல பொருட்களை அம்மன்னன் இறந்தும் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சேர்த்தே வைத்துப் புதைத்து விட்டார்கள்.

    இது நடந்தது சில ஆண்டுகளுக்கு முன். இது போல பல மன்னர்களின் இறந்த உடலின் மம்மியோடு கண்டெடுக்கபப்ட்ட விலைமதிக்க முடியாத ஆபரணங்களும், அரும்பொருட்களும் மண்ணுக்குள் புதையுண்டு போகாமல் ஐரோப்பா மட்டுமின்றி அமெரிக்காவின் பல அருங்காட்சியகங்களிலும் வீற்றிருந்து பெருமை சேர்த்துக் கொண்டிருக்கின்றன.

    தொடரும்..

    Share
  • இணையான வார்த்தைகள் (Equivalent Words)

    சதீஷ் குமார் டோக்ரா

    வல்லமை குழுமத்தில் திரு பழமைபேசி கீழ்கண்ட ஆங்கில வார்த்தைகளுக்கு இணையான தமிழ் வார்த்தைகள் கொடுத்து அவை  பொருத்தமான வார்த்தைகளா என்று குழும உறுப்பினர்களின் அபிப்பிராயத்தைக் கேட்டார்:

    Objective

    Something that you plan to achieve. எண்ணுவம்

    Goal

    Something that you hope to achieve. நோக்கம்

    Aim

    The thing that you try to achieve by doing something. குறிக்கோள்

    Target

    Something that you try to achieve. இலக்கு

    அதன் தொடர்ச்சியாகக் கிளம்பிய விவாதத்தின் அடிப்படையில் பொதுவான சில விஷயங்களை இக்கட்டுரையில் எடுத்துரைக்கிறேன்.

    நாம் ஒரு ஆங்கில வார்த்தைக்கு இணையாகப் பயன்படுத்தும் வார்த்தை அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும் என்று நான் சொன்னதற்கு தேமொழி அவர்கள் இவ்வாறு சொல்லியுள்ளார்கள்:

    “இந்த முயற்சி …பல சூழ்நிலைகளிலும் மாறாத பொருள் தரும் ஒரு சொல் பயன்பாடு பொதுவாக அறிவியல் பயன்பாட்டிற்கு என்று  மட்டும்தான் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இலக்கியம் என்று கருத்தில் கொள்ளும்பொழுது….

    பல சொற்களை ஒரு பொருளுக்குப் பயன் படுத்துவதும்,

    ஒரு சொல்லை பல பொருட்பட கூறுவதும் இலக்கிய  நயம் என்றும் போற்றப்படுகிறது.

    பயன்படுத்திய பதமே மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படாது தவிர்ப்பதும், ஒரு சொல்லை சொற்சிலம்பம் ஆடுவது போல பலவகையில் பயன்படுத்துவது ஒரு மொழியின் வளத்திற்கு அறிகுறியாகும்.”

    இது குறித்து நான் சொல்ல விரும்புவது யாதெனில் இலக்கிய ஆக்கங்களை மொழிபெயர்ப்பு செய்யும்போது தேமொழி அவர்கள் சொல்வது போல் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு வார்த்தைகளைக் கையாளுவது அழகு. ஒரே வார்த்தையைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்தினால் மனச்சோர்வு ஏற்படும். பலச்சுவை தான் இந்தச் சந்தர்ப்பத்தில் விதிமுறை.

    அது மட்டும் அல்லாமல், ஒவ்வொரு மொழியிலும் கருத்துகளை எடுத்துரைக்கும் பாணி வேறுபடும். கீழ்கண்ட வாக்கியங்களைக் கவனியுங்கள்:

    அவர் அங்கே உட்காரந்துகொண்டிருந்ததைப் பார்த்து வியந்தேன்.

    I was surprised to see him sitting there.

    ஆங்கில வாக்கியத்தில் அவர் உட்கார்ந்துகொண்டிருந்தபோது நான் அவரைப் பார்த்ததாகவும், தமிழில் அவர் உட்கார்ந்துகொண்டிருந்த செயலைப் பார்த்ததாகவும் பொருள்படுகிறது. ஆங்கில வாக்கியத்திற்கு இணையாக தமிழில் எழுத வேண்டுமானால் இவ்வாறு எழுதுவோம்: அவர் அங்கே உட்கார்ந்து கொண்டிருந்த போது அவரைப் பார்த்து வியந்தேன். அதே போல தமிழ் வாக்கியத்தை ஆங்கிலத்தில் அப்படியே சொல்ல வேண்டுமானால் I was surprised to see that he was sitting there என்று சொல்வோம். ஆனால், பொதுவாக நாம் அவ்வாறு சொல்வதில்லை.

    ஆக, ஒரே எண்ணத்தைச் சொல்லும் விதம் ஆங்கிலத்திலும் தமிழிலும் வெவ்வேறாக இருக்கிறது. அதற்குக் காரணம் தமிழில் நாம் வேற்றுமைகளைப் பயன்படுத்தி அந்தந்த வார்த்தையை மாற்றியமைத்து இலக்கணத்தை வார்த்தையின் பாகமாகவே சேர்த்துவிடுகிறோம். கீழ்கண்டவற்றைப் பாருங்கள்:

    நீங்கள் சொன்ன செயல்

    நீங்கள் சொன்ன அது

    நீங்கள் சொன்னது

    நீங்கள் சொன்ன செயலைச் செய்தேன்

    நீங்கள் சொன்ன அதைச் செய்தேன்

    நீங்கள் சொன்னதைச் செய்தேன்

    இவ்வாறு சமஸ்கிருதம், தமிழ், ருஷிய மொழி போன்ற வேற்றுமைகளின் அடிப்படையில் இலக்கணம் அமைந்துள்ள மொழிகளில் வார்த்தையின் இலக்கண வடிவத்தை மாற்றுவது சுலபம்.

    ஆக, ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தனி அந்தரங்க செயலாற்றுவிதம் (internal logic) உண்டு. அத்துடன், ஏற்கனவே இருக்கின்ற வார்த்தைகளிலிருந்து புதிய வார்த்தைகள் உருவாகும்போது புதிய வார்த்தையின் அர்த்தம் தாய் வார்த்தையின் சாயலாகவே இருக்கும்.  உதாரணத்திற்கு மிகு எள்ற தமிழ் வார்த்தை to be full of , to be replete with என்பதைக் குறிக்கிறது. மிக மென்மையான உதடுகள் என்பதை நாம் very soft lips என்று மொழிபெயர்த்தாலும் தமிழில் இதற்கு  full of softness என்று பொருள்தான் வரும். மிக்க நன்றி என்பதை many thanks என்று மொழிபெயர்த்தாலும் தமிழில் அதன் பொருள்  full of thanks என்பதுதான். மிகைப்படுத்தல் என்ற வார்த்தையை நாம் exaggerate என்று மொழிபெயர்த்தாலும் நம் மனதில் நாம் உணருவது showing it as more full than it actually is என்பதுதான்.

    மொழியியல் நிபுணர்கள் மொழியை உணருதல்  அல்லது feel of the language என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். அதே முறையில் நாம் ‘மிகு’ மற்றும் அதன் வடிவங்களைப் பயன்படுத்தும்போது  full of என்ற பொருளை உணருகிறோம்.

    மொழிபெயர்ப்பு செய்யும்போது வார்த்தைக்கு வார்த்தைபெயர்க்கலாம். ஆனால், அப்படிச் செய்வதால் இலக்கியத்தின் சுவை போய்விடும். ஆகவே, பொதுவாக மொழிபெயர்ப்பாளர்கள் மூலத்தின் feel of the language யை பெயர்க்கப்படும் மொழியின் feel of the language ஆக மாற்றியமைக்க முயற்சிப்பார்கள். அவ்வாறு செய்யும்போது பெயர்க்கப்பட்ட வடிவம் மூலத்தை விலகிப்போக வாய்ப்பு இருக்கும்.

     மொழிபெயர்ப்பு செய்யும்போது வார்த்தைகளைச் சந்தர்ப்பத்திற்கேற்ப பயன்படுத்துவது சிறந்தது. அவ்வாறு செய்து ஒரே அர்த்தமுள்ள வெவ்வேறு வார்த்தைகளைப் பயன்படுத்தி இலக்கியத்திற்கு பலச்சுவை வழங்க இயலும். தேமொழி அவர்கள் சொன்னதில் எனக்கு நூற்றுக்கு நூறு உடன்பாடு உள்ளது.

    ஆனால், திரு பழமை பேசியின் செய்தியால் கிளம்பிய விவாதம் மொழிபெயர்ப்பைப் பற்றி அல்ல, ஒரு மொழியிலுள்ள வார்த்தைகளுக்கு இணையான இன்னொரு மொழி வார்த்தைகளைப் பற்றியானது.

    பசிக்கிறது என்பதைப் பலவாறாகச் சொல்லலாம்:

    சாப்பாடு கொடுக்கமாட்டாயா?

    பட்டினியாக் கிடக்கணுமா?

    சோறு இல்லையா?

    அன்னம் எங்கே? இத் இத்.

    ஆனால் wheat க்கு இணையான தமிழ்வார்த்தை எது என்று கேட்டால் ‘கோதுமை’ என்றுதான் சொல்ல வேண்டுமே தவிர ஒரு தடவை ‘அன்னம்’  என்றும் இன்னொரு தடவை ‘சாப்பாடு’ என்றும் சொல்வதாகாது.

    இது அறிவியலுக்கு மட்டும் அல்ல இலக்கியத்திற்கும் பொருந்தும்.

    ஒரு ஆங்கில வார்த்தைக்கு ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு தமிழ் வார்த்தையும், இன்னொரு சந்தர்ப்பத்தில் இன்னொரு தமிழ் வார்த்தையும் இணையான வார்த்தையாக இருக்கலாம் என்பதை ஒப்புக் கொள்கிறேன். A love story ஒரு காதல் கதை என்பது போல mother’s love for her son என்பதை மகனுக்காக தாயின் காதல் என்று கூற முடியாது.

    ஆகவே, சில ஆங்கில வார்த்தைகளுக்கு ஒரே ஒரு வார்த்தை இணையான வார்த்தையாகக் கண்டுபிடிக்க முடிவதில்லையென்றாலும், இணையான வார்த்தைகளைத் தேடும்போது அவசரப்பட்டு ஏதோ ஒரு வார்த்தையைத் தூக்கியெடுத்து இதுதான் ஆங்கில வார்த்தைக்கு இணையான தமிழ் வார்த்தை என்ற அணுகுமுறையையும் தவிர்க்க வேண்டும்.

    ஒரு ஆங்கில வார்த்தைக்கு இணையான வார்த்தையைத் தேர்ந்தெடுக்கும்போது அது ஆங்கில வார்த்தை பயன்படும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்த முடியுமா என்பதைப் பார்க்க வேண்டும்.

    அவர் என் வீட்டுக்கு வந்த நோக்கம் என்ன? What was his purpose in coming to my house? What was his aim in coming to my house? What was his intention in coming to my house? Why at all should he come to my house? என்றெல்லாம் மொழிபெயர்க்கலாம்.

    ஆனால், “‘நோக்கம்’ என்ற வார்த்தைக்கு இணையான ஆங்கில வார்த்தை எது?” என்று ஒருவர் கேட்க, நாம் மிக மிக துல்லியமான வார்த்தையைத் தேர்ந்தெடுக்க வேண்டுமே தவிர வெறும் பொருளைப் புரிய வைக்கும் வார்த்தையை தேர்ந்தெடுக்கக் கூடாது.

    ‘வல்லமை’ விவாதத்தில் தோன்றிய இன்னும் ஒரு கேள்வியை விவாதிக்க விரும்புகிறேன்.

    Goal என்ற வார்த்தைக்கு சமஸ்கிருத வார்த்தையான ‘கந்தவியம்’  என்பதைத் தேர்ந்தெடுக்கலாம் என்று நான் சொன்னதற்கு திருமதி பவளசங்கரி தழிழ் வார்த்தையாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார்கள்.

    மொழி நம் அனைவரின் கூட்டுச்சொத்து. இதை விரிவுபடுத்துவதும், அழகுப்படுத்துவதும் நம் அனைவரின் கடமை. ‘வல்லமை’ குழுமத்தில் இம்முயற்சி அறிவாளிகளால் ‘நான்தான் ஜெயிப்பேன்’ என்ற போட்டி மனப்பான்மை இன்றி கற்றுக்கொள்ளும் மனப்பாங்குடன் நடைபெறுவதைக் கண்டு மனம் நெகிழ்கிறோம். அதே முறையில் நாம் ஒரு குழுவாகவே மற்ற மொழிகளுக்கு இணையான துல்லியமான வார்த்தைகளைத் தேர்ந்தெடுப்பதில் ஈடுபட வேண்டும். அப்படிச் செய்யும்போது வார்த்தை எந்த மொழியைச் சேரந்தது என்பதைப் பார்ப்பது அவசியம்தானா என்பதை விவாதிப்பதிலும் தவறு இல்லை.

    இன்று எத்தனை பிறமொழி வார்த்தைகள் தமிழில் தமிழ் வார்த்தைகளாக இருக்கின்றன, எத்தனை தமிழ் வார்த்தைகள் பிறமொழிகளில் ஊடுருவி அந்த மொழியில் கரைந்து நம்மாலேயே இது தமிழிலிருந்து சென்ற வார்த்தை என்று அடையாளம் காண முடியாதவாறு மாறிவிட்டன என்பதைக் கண்டுபிடிப்பது கடினம்.  வாசகர்கள் என் கீழ்கண்ட கட்டுரையை வாசிக்க கோருகிறேன்:

    http://dogratamil.com/index.php/2013-03-25-17-05-18?id=111

    ருஷிய புரட்சிக்குப்பின் அப்போதைய சோவியத் அரசாங்கம் ருஷிய மொழியின் வளர்ச்சியைத் திட்டமிட ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழு அறிவியல் வார்த்தைகளுக்குப் புதிய ருஷிய வார்த்தைகளை உருவாக்குவதற்குப் பதிலாக ஆங்கில வார்த்தைகளுக்கு ருஷிய வடிவம் அளிக்கலாம் என்று முடிவு செய்தது. ஆகவே டெலிவிஷன் ருஷிய வடிவம் பெற்று செலிவீஸ்ர் ஆனது. லிட்ரேச்சர் (Literature) என்பது லிச்சராத்தூரா என்று மாறியது.

    இன்றைய உலகத்தில் பிறமொழி வார்த்தைகளை தன்னுடையதாக்கும் மொழிகள் வலிமை பெற்று வளர்கின்றன. கடந்த 30 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான வார்த்தைகள் ஆங்கிலத்தில் சேர்ந்துள்ளன. இது குறித்து என் கீழ்கண்ட கட்டுரையைப் படிக்கக் கேட்டுக்கொள்கிறேன்:

    http://dogratamil.com/index.php/component/content/article?id=156

    அந்தக் கட்டுரையிலிருந்து இதோ ஒரு பகுதி:

    மொழி காலத்திற்கு காலம் மாறிக் கொண்டே இருக்கும். புதியதாக உருவெடுக்கும் வார்த்தைகளும் ‘ஓஈடீ’யில் சேர்க்கப்படுகின்றன. சிம்ப்ஸனின் பணிக்காலத்தில் 60,000க்கும் மேற்பட்ட புதிய வார்த்தைகள் ‘ஓஈடீ’யில் சேர்க்கப்பட்டன.

    சிம்ப்ஸன் சொல்கிறார்: மாறுவது ஒரு மொழியின் இயல்பு. மொழியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது மக்களின் விருப்பம். ஒருவரைக் கழுத்தைப் பிடித்து ‘நீ இப்படித்தான் பேச வேண்டும்’ என்று சொல்வது சரியாகாது.

    சில பிறமொழி வார்த்தைகளை எடுத்துக்கொள்வதால் தமிழ் மொழியின் செய்தியறிவிப்புத் திறன் (power of communication) மேம்படும் என்றால் அவற்றை எடுத்துக் கொள்வதில் தவறேதும் இல்லை. உதாரணத்திற்கு பிஸி (busy) என்ற வார்த்தை நாம் சொல்ல விரும்புதை துல்லியமாக எடுத்துரைக்கிறது: “இப்பொழுது சற்று பிஸியாக இருக்கிறேன். அப்புறம் வாருங்கள்.”

    ஆக, பிஸியை தமிழ் வார்த்தையாக மாற்றிவிடுவோமே!

    Share