சதீஷ் குமார் டோக்ரா

வல்லமை குழுமத்தில் திரு பழமைபேசி கீழ்கண்ட ஆங்கில வார்த்தைகளுக்கு இணையான தமிழ் வார்த்தைகள் கொடுத்து அவை  பொருத்தமான வார்த்தைகளா என்று குழும உறுப்பினர்களின் அபிப்பிராயத்தைக் கேட்டார்:

Objective

Something that you plan to achieve. எண்ணுவம்

Goal

Something that you hope to achieve. நோக்கம்

Aim

The thing that you try to achieve by doing something. குறிக்கோள்

Target

Something that you try to achieve. இலக்கு

அதன் தொடர்ச்சியாகக் கிளம்பிய விவாதத்தின் அடிப்படையில் பொதுவான சில விஷயங்களை இக்கட்டுரையில் எடுத்துரைக்கிறேன்.

நாம் ஒரு ஆங்கில வார்த்தைக்கு இணையாகப் பயன்படுத்தும் வார்த்தை அனைத்துச் சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்தக்கூடியதாக இருக்க வேண்டும் என்று நான் சொன்னதற்கு தேமொழி அவர்கள் இவ்வாறு சொல்லியுள்ளார்கள்:

“இந்த முயற்சி …பல சூழ்நிலைகளிலும் மாறாத பொருள் தரும் ஒரு சொல் பயன்பாடு பொதுவாக அறிவியல் பயன்பாட்டிற்கு என்று  மட்டும்தான் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இலக்கியம் என்று கருத்தில் கொள்ளும்பொழுது….

பல சொற்களை ஒரு பொருளுக்குப் பயன் படுத்துவதும்,

ஒரு சொல்லை பல பொருட்பட கூறுவதும் இலக்கிய  நயம் என்றும் போற்றப்படுகிறது.

பயன்படுத்திய பதமே மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படாது தவிர்ப்பதும், ஒரு சொல்லை சொற்சிலம்பம் ஆடுவது போல பலவகையில் பயன்படுத்துவது ஒரு மொழியின் வளத்திற்கு அறிகுறியாகும்.”

இது குறித்து நான் சொல்ல விரும்புவது யாதெனில் இலக்கிய ஆக்கங்களை மொழிபெயர்ப்பு செய்யும்போது தேமொழி அவர்கள் சொல்வது போல் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு வார்த்தைகளைக் கையாளுவது அழகு. ஒரே வார்த்தையைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்தினால் மனச்சோர்வு ஏற்படும். பலச்சுவை தான் இந்தச் சந்தர்ப்பத்தில் விதிமுறை.

அது மட்டும் அல்லாமல், ஒவ்வொரு மொழியிலும் கருத்துகளை எடுத்துரைக்கும் பாணி வேறுபடும். கீழ்கண்ட வாக்கியங்களைக் கவனியுங்கள்:

அவர் அங்கே உட்காரந்துகொண்டிருந்ததைப் பார்த்து வியந்தேன்.

I was surprised to see him sitting there.

ஆங்கில வாக்கியத்தில் அவர் உட்கார்ந்துகொண்டிருந்தபோது நான் அவரைப் பார்த்ததாகவும், தமிழில் அவர் உட்கார்ந்துகொண்டிருந்த செயலைப் பார்த்ததாகவும் பொருள்படுகிறது. ஆங்கில வாக்கியத்திற்கு இணையாக தமிழில் எழுத வேண்டுமானால் இவ்வாறு எழுதுவோம்: அவர் அங்கே உட்கார்ந்து கொண்டிருந்த போது அவரைப் பார்த்து வியந்தேன். அதே போல தமிழ் வாக்கியத்தை ஆங்கிலத்தில் அப்படியே சொல்ல வேண்டுமானால் I was surprised to see that he was sitting there என்று சொல்வோம். ஆனால், பொதுவாக நாம் அவ்வாறு சொல்வதில்லை.

ஆக, ஒரே எண்ணத்தைச் சொல்லும் விதம் ஆங்கிலத்திலும் தமிழிலும் வெவ்வேறாக இருக்கிறது. அதற்குக் காரணம் தமிழில் நாம் வேற்றுமைகளைப் பயன்படுத்தி அந்தந்த வார்த்தையை மாற்றியமைத்து இலக்கணத்தை வார்த்தையின் பாகமாகவே சேர்த்துவிடுகிறோம். கீழ்கண்டவற்றைப் பாருங்கள்:

நீங்கள் சொன்ன செயல்

நீங்கள் சொன்ன அது

நீங்கள் சொன்னது

நீங்கள் சொன்ன செயலைச் செய்தேன்

நீங்கள் சொன்ன அதைச் செய்தேன்

நீங்கள் சொன்னதைச் செய்தேன்

இவ்வாறு சமஸ்கிருதம், தமிழ், ருஷிய மொழி போன்ற வேற்றுமைகளின் அடிப்படையில் இலக்கணம் அமைந்துள்ள மொழிகளில் வார்த்தையின் இலக்கண வடிவத்தை மாற்றுவது சுலபம்.

ஆக, ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தனி அந்தரங்க செயலாற்றுவிதம் (internal logic) உண்டு. அத்துடன், ஏற்கனவே இருக்கின்ற வார்த்தைகளிலிருந்து புதிய வார்த்தைகள் உருவாகும்போது புதிய வார்த்தையின் அர்த்தம் தாய் வார்த்தையின் சாயலாகவே இருக்கும்.  உதாரணத்திற்கு மிகு எள்ற தமிழ் வார்த்தை to be full of , to be replete with என்பதைக் குறிக்கிறது. மிக மென்மையான உதடுகள் என்பதை நாம் very soft lips என்று மொழிபெயர்த்தாலும் தமிழில் இதற்கு  full of softness என்று பொருள்தான் வரும். மிக்க நன்றி என்பதை many thanks என்று மொழிபெயர்த்தாலும் தமிழில் அதன் பொருள்  full of thanks என்பதுதான். மிகைப்படுத்தல் என்ற வார்த்தையை நாம் exaggerate என்று மொழிபெயர்த்தாலும் நம் மனதில் நாம் உணருவது showing it as more full than it actually is என்பதுதான்.

மொழியியல் நிபுணர்கள் மொழியை உணருதல்  அல்லது feel of the language என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். அதே முறையில் நாம் ‘மிகு’ மற்றும் அதன் வடிவங்களைப் பயன்படுத்தும்போது  full of என்ற பொருளை உணருகிறோம்.

மொழிபெயர்ப்பு செய்யும்போது வார்த்தைக்கு வார்த்தைபெயர்க்கலாம். ஆனால், அப்படிச் செய்வதால் இலக்கியத்தின் சுவை போய்விடும். ஆகவே, பொதுவாக மொழிபெயர்ப்பாளர்கள் மூலத்தின் feel of the language யை பெயர்க்கப்படும் மொழியின் feel of the language ஆக மாற்றியமைக்க முயற்சிப்பார்கள். அவ்வாறு செய்யும்போது பெயர்க்கப்பட்ட வடிவம் மூலத்தை விலகிப்போக வாய்ப்பு இருக்கும்.

 மொழிபெயர்ப்பு செய்யும்போது வார்த்தைகளைச் சந்தர்ப்பத்திற்கேற்ப பயன்படுத்துவது சிறந்தது. அவ்வாறு செய்து ஒரே அர்த்தமுள்ள வெவ்வேறு வார்த்தைகளைப் பயன்படுத்தி இலக்கியத்திற்கு பலச்சுவை வழங்க இயலும். தேமொழி அவர்கள் சொன்னதில் எனக்கு நூற்றுக்கு நூறு உடன்பாடு உள்ளது.

ஆனால், திரு பழமை பேசியின் செய்தியால் கிளம்பிய விவாதம் மொழிபெயர்ப்பைப் பற்றி அல்ல, ஒரு மொழியிலுள்ள வார்த்தைகளுக்கு இணையான இன்னொரு மொழி வார்த்தைகளைப் பற்றியானது.

பசிக்கிறது என்பதைப் பலவாறாகச் சொல்லலாம்:

சாப்பாடு கொடுக்கமாட்டாயா?

பட்டினியாக் கிடக்கணுமா?

சோறு இல்லையா?

அன்னம் எங்கே? இத் இத்.

ஆனால் wheat க்கு இணையான தமிழ்வார்த்தை எது என்று கேட்டால் ‘கோதுமை’ என்றுதான் சொல்ல வேண்டுமே தவிர ஒரு தடவை ‘அன்னம்’  என்றும் இன்னொரு தடவை ‘சாப்பாடு’ என்றும் சொல்வதாகாது.

இது அறிவியலுக்கு மட்டும் அல்ல இலக்கியத்திற்கும் பொருந்தும்.

ஒரு ஆங்கில வார்த்தைக்கு ஒரு சந்தர்ப்பத்தில் ஒரு தமிழ் வார்த்தையும், இன்னொரு சந்தர்ப்பத்தில் இன்னொரு தமிழ் வார்த்தையும் இணையான வார்த்தையாக இருக்கலாம் என்பதை ஒப்புக் கொள்கிறேன். A love story ஒரு காதல் கதை என்பது போல mother’s love for her son என்பதை மகனுக்காக தாயின் காதல் என்று கூற முடியாது.

ஆகவே, சில ஆங்கில வார்த்தைகளுக்கு ஒரே ஒரு வார்த்தை இணையான வார்த்தையாகக் கண்டுபிடிக்க முடிவதில்லையென்றாலும், இணையான வார்த்தைகளைத் தேடும்போது அவசரப்பட்டு ஏதோ ஒரு வார்த்தையைத் தூக்கியெடுத்து இதுதான் ஆங்கில வார்த்தைக்கு இணையான தமிழ் வார்த்தை என்ற அணுகுமுறையையும் தவிர்க்க வேண்டும்.

ஒரு ஆங்கில வார்த்தைக்கு இணையான வார்த்தையைத் தேர்ந்தெடுக்கும்போது அது ஆங்கில வார்த்தை பயன்படும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்த முடியுமா என்பதைப் பார்க்க வேண்டும்.

அவர் என் வீட்டுக்கு வந்த நோக்கம் என்ன? What was his purpose in coming to my house? What was his aim in coming to my house? What was his intention in coming to my house? Why at all should he come to my house? என்றெல்லாம் மொழிபெயர்க்கலாம்.

ஆனால், “‘நோக்கம்’ என்ற வார்த்தைக்கு இணையான ஆங்கில வார்த்தை எது?” என்று ஒருவர் கேட்க, நாம் மிக மிக துல்லியமான வார்த்தையைத் தேர்ந்தெடுக்க வேண்டுமே தவிர வெறும் பொருளைப் புரிய வைக்கும் வார்த்தையை தேர்ந்தெடுக்கக் கூடாது.

‘வல்லமை’ விவாதத்தில் தோன்றிய இன்னும் ஒரு கேள்வியை விவாதிக்க விரும்புகிறேன்.

Goal என்ற வார்த்தைக்கு சமஸ்கிருத வார்த்தையான ‘கந்தவியம்’  என்பதைத் தேர்ந்தெடுக்கலாம் என்று நான் சொன்னதற்கு திருமதி பவளசங்கரி தழிழ் வார்த்தையாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார்கள்.

மொழி நம் அனைவரின் கூட்டுச்சொத்து. இதை விரிவுபடுத்துவதும், அழகுப்படுத்துவதும் நம் அனைவரின் கடமை. ‘வல்லமை’ குழுமத்தில் இம்முயற்சி அறிவாளிகளால் ‘நான்தான் ஜெயிப்பேன்’ என்ற போட்டி மனப்பான்மை இன்றி கற்றுக்கொள்ளும் மனப்பாங்குடன் நடைபெறுவதைக் கண்டு மனம் நெகிழ்கிறோம். அதே முறையில் நாம் ஒரு குழுவாகவே மற்ற மொழிகளுக்கு இணையான துல்லியமான வார்த்தைகளைத் தேர்ந்தெடுப்பதில் ஈடுபட வேண்டும். அப்படிச் செய்யும்போது வார்த்தை எந்த மொழியைச் சேரந்தது என்பதைப் பார்ப்பது அவசியம்தானா என்பதை விவாதிப்பதிலும் தவறு இல்லை.

இன்று எத்தனை பிறமொழி வார்த்தைகள் தமிழில் தமிழ் வார்த்தைகளாக இருக்கின்றன, எத்தனை தமிழ் வார்த்தைகள் பிறமொழிகளில் ஊடுருவி அந்த மொழியில் கரைந்து நம்மாலேயே இது தமிழிலிருந்து சென்ற வார்த்தை என்று அடையாளம் காண முடியாதவாறு மாறிவிட்டன என்பதைக் கண்டுபிடிப்பது கடினம்.  வாசகர்கள் என் கீழ்கண்ட கட்டுரையை வாசிக்க கோருகிறேன்:

http://dogratamil.com/index.php/2013-03-25-17-05-18?id=111

ருஷிய புரட்சிக்குப்பின் அப்போதைய சோவியத் அரசாங்கம் ருஷிய மொழியின் வளர்ச்சியைத் திட்டமிட ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழு அறிவியல் வார்த்தைகளுக்குப் புதிய ருஷிய வார்த்தைகளை உருவாக்குவதற்குப் பதிலாக ஆங்கில வார்த்தைகளுக்கு ருஷிய வடிவம் அளிக்கலாம் என்று முடிவு செய்தது. ஆகவே டெலிவிஷன் ருஷிய வடிவம் பெற்று செலிவீஸ்ர் ஆனது. லிட்ரேச்சர் (Literature) என்பது லிச்சராத்தூரா என்று மாறியது.

இன்றைய உலகத்தில் பிறமொழி வார்த்தைகளை தன்னுடையதாக்கும் மொழிகள் வலிமை பெற்று வளர்கின்றன. கடந்த 30 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான வார்த்தைகள் ஆங்கிலத்தில் சேர்ந்துள்ளன. இது குறித்து என் கீழ்கண்ட கட்டுரையைப் படிக்கக் கேட்டுக்கொள்கிறேன்:

http://dogratamil.com/index.php/component/content/article?id=156

அந்தக் கட்டுரையிலிருந்து இதோ ஒரு பகுதி:

மொழி காலத்திற்கு காலம் மாறிக் கொண்டே இருக்கும். புதியதாக உருவெடுக்கும் வார்த்தைகளும் ‘ஓஈடீ’யில் சேர்க்கப்படுகின்றன. சிம்ப்ஸனின் பணிக்காலத்தில் 60,000க்கும் மேற்பட்ட புதிய வார்த்தைகள் ‘ஓஈடீ’யில் சேர்க்கப்பட்டன.

சிம்ப்ஸன் சொல்கிறார்: மாறுவது ஒரு மொழியின் இயல்பு. மொழியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது மக்களின் விருப்பம். ஒருவரைக் கழுத்தைப் பிடித்து ‘நீ இப்படித்தான் பேச வேண்டும்’ என்று சொல்வது சரியாகாது.

சில பிறமொழி வார்த்தைகளை எடுத்துக்கொள்வதால் தமிழ் மொழியின் செய்தியறிவிப்புத் திறன் (power of communication) மேம்படும் என்றால் அவற்றை எடுத்துக் கொள்வதில் தவறேதும் இல்லை. உதாரணத்திற்கு பிஸி (busy) என்ற வார்த்தை நாம் சொல்ல விரும்புதை துல்லியமாக எடுத்துரைக்கிறது: “இப்பொழுது சற்று பிஸியாக இருக்கிறேன். அப்புறம் வாருங்கள்.”

ஆக, பிஸியை தமிழ் வார்த்தையாக மாற்றிவிடுவோமே!

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இணையான வார்த்தைகள் (Equivalent Words)

  1. ஆக, பிஸியை தமிழ் வார்த்தையாக மாற்றிவிடுவோமே!

    ~ சம்மதமே. மற்றவைக்குப் பிறகு வருகிறேன். நல்லதொரு சிந்தனை தொடர். The feel of the language makes all the difference. வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *