சிறுகூடற்பட்டி முதல் சிகாகோ வரை..
பொன்னை விரும்பும் பூமியிலே..
மண்ணில் பிறந்த மனிதருக்கு இயல்பான ஆசைகள் மூன்று.. மண், பெண், பொன் என்பார்கள். இந்த மூன்றிலிருந்தும் விடுபட்டு வாழ்பவர்கள் ஞானியாகிறார்கள். எனினும் அஃது அத்தனை எளிதன்று!
ஆசைகள் சிறகடிக்க.. சிறகடிக்க.. நாமும் கற்பனை வானத்தில் பறக்கிறோம். கைகூடவில்லையெனும்போது கதறியழுகிறோம். அளவான ஆசையை வைத்து வாழ்பவனே வளமாக வாழ்கிறான். எல்லாம் மனதின் பாகுபாட்டின் விளைவுகளே!
காலையும் மாலையும் அந்திவானம் சிவப்பதும் அழகுதானே! செக்கர் வானம் சிவப்பது உழைப்பாளிகளின் இரத்தத்துளிகளாய் ஒரு கவிஞனுக்குப் படுகிறது! அந்த வானம் சிவப்பது தன் காதலியின் கன்னமென இன்னொரு கவிஞனுக்குப் படுகிறது. பொருள் ஒன்றுதான். எடுத்து ஆளும்விதம்தான் மாறுபடுகிறது! இதயம் இடம் மாறும் அதிசயம் காதலில் நடப்பதுண்டு என்றாலும் இடம் பார்த்தே காதல் வருகிறது என்பதே உண்மை. இப்படிப் பலபேர் இருந்துவிட்டுப் போகட்டும்! என்னை விரும்புவது நீயல்லவா? நீ பொன்னுக்காகவோ.. பொருளுக்காகவோ.. என்னை விரும்பவில்லையே! என்னை எனக்காகவே நீ விரும்புகிறாய்! அன்பு மலரே.. என் ஆனந்த மலரே.. இன்பம் நீயே.. என்று காதலன் தன் காதலியைக் கொண்டாடும் இன்பம் இருக்கிறதே கேளுங்கள்..
ஆலயமணியில் உருவான திரைப்பாடல்.. நடிகர் திலகத்துடன் அபிநய சரஸ்வதி – இணைய கண்ணதாசன் – விஸ்வநாதன் ராமமூர்த்தி வெற்றிக் கூட்டணியில் விளைந்த முத்தமிழ்ப் பாடலிது! தென்றலோடு நடந்துபோகும் சுகம் காணுங்கள்!
பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே
பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே
ஆயிரம் மலரில் ஒரு மலர் நீயே
ஆலயமணியின் இன்னிசை நீயே(2)
தாய்மை எனக்கே தந்தவள் நீயே
தங்க கோபுரம் போல வந்தாயே
புதிய உலகம் புதிய பாசம்
புதிய தீபம் கொண்டு வந்தாயே
(பொன்னை விரும்பும் பூமியிலே)
பறந்து செல்லும் பறவையைக் கேட்டேன்
பாடிச் செல்லும் காற்றையும் கேட்டேன்(2)
அலையும் நெஞ்சை அவரிடம் சொன்னேன்
அழைத்து வந்தார் என்னிடம் உன்னை
இந்த மனமும் இந்த குணமும்
என்றும் வேண்டும் என்னுயிரே
(பொன்னை விரும்பும் பூமியிலே)
ஆலமரத்தின் விழுதினைப் போலே
அணைத்து நிற்கும் உறவு தந்தாயே(2)
வாழைக் கன்று அன்னையின் நிழலில்
வாழ்வது போலே வாழவைத்தாயே
உருவம் இரண்டு உயிர்கள் இரண்டு
உள்ளம் ஒன்றே என்னுயிரே
(பொன்னை விரும்பும் பூமியிலே)
பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன் – ராமமூர்த்தி
திரைப்படம்: ஆலயமணி
http://www.youtube.com/watch?v=5c6fQL-diJg
http://www.youtube.com/watch?v=5c6fQL-diJg
கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல்கள் எளிமைக்கு சான்று. அது பற்றிய செய்திகள்.. விவரங்கள்.. இனிமை.. சொல்லாட்சி.. இவை பற்றிய வாசகர்களின் பின்னூட்டங்களுக்காக காத்திருக்கிறேன்.
அன்புடன்
காவிரிமைந்தன்