சிலம்பு காட்டும் கோவலனின் மறுபக்கம் – 3

4

மேகலா இராமமூர்த்தி

இல்லோர் செம்மல்

பொதுவாக மனமிருப்போரிடம் பணமிருப்பதில்லை; பணமிருப்போரிடம் மனமிருப்பதில்லை என்று கூறுவர்; அதனைப் பொய்யாக்கிவிடுகின்றது கோவலனிடம் காணப்படுகின்ற அருளுள்ளம்! பணமும், குணமும் நிறைந்த பண்பாளனாகவே சிலப்பதிகாரத்தில் அவன் அடையாளப்படுத்தப்படுகின்றான்.

புகார் நகரில் நடைபெற்ற மற்றுமோர் நிகழ்வு கோவலனின் பத்தரை மாற்றுப் பொன் மனத்தைப் பளிச்செனக் காட்டுவதாய் அமைந்துள்ளது; அதனையும் காண்போமா?

புகார் நகரத்தில் வாழ்ந்துவந்த கற்பிற் சிறந்த பெண்ணொருத்தி அவப்பெயர் எய்துவதற்கு ஏதுவாக, அறிவற்ற கீழ்மகன் ஒருவன் அப்பெண்ணின் ஒழுக்கத்தைப் பற்றி அவள் கணவனிடம் பொய்ப்பழி கூறுகின்றான். அதுகண்டு, புகார் நகரின்கண் தீயோரை அழிப்பதற்காகவே வாழ்ந்து வந்ததாகக் கூறப்படும் பெரிய பூதமானது அக்கீழ்மகனைத் தன் கையிலுள்ள பாசக்கயிற்றால் கட்டியது. அவன் அச்சம் கொண்டு அரற்றினான்; அழுதான்; ஒன்றும் பயனில்லை. அவனுடைய தாய் தன் மகன் பூதத்திடம் மாட்டிக்கொண்டு உயிர்விடப் போகிறானே என்று அஞ்சிக் கண்ணீர் பெருக்கினாள். அப்போதும் பூதம் அக்கொடியோனை விடவில்லை.

இந்நிகழ்வினை அறிந்த கோவலன் அவ்விடத்திற்கு விரைந்து வருகின்றான். பூதத்தின் கையிலிருந்த பாசக்கயிற்றினையும், அதில் மாட்டிக் கொண்டு உயிர்விடும் தறுவாயில் இருந்த மனிதனையும் காண்கின்றான்; உள்ளம் உருகுகின்றான். சற்றும் தாமதியாது அப்பூதத்தின் கையில் இருந்த பாசக்கயிற்றில் தன்னை வலியச் சென்று மாட்டிக்கொண்டு, ’தீயோரை அழிக்கும் நல்ல பூதமே! என்னுயிரை எடுத்துக்கொள்! இம்மனிதனை உயிரோடு விட்டுவிடு!’ என்று மன்றாடுகின்றான். பிறர் துன்பம் கண்டு பொறாத எத்தகைய உயர்ந்த உள்ளம் கோவலனுடையது!!

ஆயினும் தன் கொள்கையில் சிறிதும் தளராத அப்பூதமோ, ’கோவலா! நீ கேட்டுக்கொண்டபடி என்னால் செய்ய இயலாது; தீயவன் ஒருவன் செய்த தவற்றுக்காக நல்லவன் ஒருவனுடைய உயிரை நான் எடுத்துக்கொள்வேனானால் எனக்கு நற்கதி கிடைக்காது(!). ஆகவே அத்தகைய தவற்றினை நான் செய்வதற்கில்லை என்று கூறிவிட்டுக் கோவலன் கண்ணெதிரிலேயே அக்கீழ்மகனைப் புடைத்து உண்டது. கோவலன் பூதத்திடம் வைத்த வேண்டுகோளையும் அதனை மறுத்து அப்பூதம் கோவலனிடம் கூறிய மறுமொழியையும் நாமும் சற்றுச் செவிமடுப்போமா?

”………………………………………………………………………………………………………………..

கட்டிய பாசத்துக் கடிதுசென் றெய்தி

என்னுயிர் கொண்டீங் கிவனுயிர் தாவென
நன்னெடும் பூதம் நல்கா தாகி
நரக னுயிர்க்கு நல்லுயிர் கொண்டு
பரகதி யிழக்கும் பண்பீங் கில்லை
ஒழிகநின் கருத்தென உயிர்முன் புடைப்ப….” (அடைக்கலக் காதை: 81-86)

 Picture1

சிறிதுநேரம் செய்வதறியாது திகைத்துநின்ற கோவலன் தன் மனத்தைத் தேற்றிக் கொண்டு, அங்கே அழுதவண்ணம் நின்றுகொண்டிருந்த, பூதத்தால் கொல்லப்பட்ட அம்மனிதனின் தாயை அழைத்துக்கொண்டு அவள் இல்லம் செல்கின்றான். மகனை இழந்த தாய்க்குத் தானே மகனாகி அத்தாயையும், அவளுடைய இதர சுற்றத்தினரையும் பசிப்பிணியிலிருந்து விடுவித்து, அவர்கள் சிறப்பாக வாழும் வகையில் செல்வத்தையும் ஏராளமாக வாரி வழங்கி வறியோரின் தலைவனாக – ’இல்லோர் செம்மலாக’த் திகழ்ந்து பலகாலம் அவர்களைக் காத்து நிற்கின்றான்.

அழிதரு முள்ளத்து அவளொடும் போந்தவன்
சுற்றத் தோர்க்கும் தொடர்புறு கிளைகட்கும்
பற்றிய கிளைஞரின் பசிப்பிணி யறுத்துப்
பல்லாண்டு புரந்த இல்லோர் செம்மல்” (அடைக்கலக் காதை: 87-90) என்கிறார் அடிகள்.

இவ்வாறு, தன் நண்பன் கோவலனின் அற்புதக் குணங்களை ஒவ்வொன்றாகப் பட்டியலிடும் மாடலன் தொடர்ந்து, ‘அறிவில் முதிர்ந்தவனே! நானறிந்த வகையில் இப்பிறவியில் நீ செய்தவையெல்லாம் நற்செயல்களேயன்றி வேறொன்றுமில்லையே!! அவ்வாறிருக்கத் திருமகளை ஒத்த மாணிக்கத் தளிரான கண்ணகியுடன் நீ தனியே மதுரை நோக்கிப் புறப்பட்டது முற்பிறவியில் செய்த தீவினைப் பயனோ? என்று வருந்திப் புலம்புகின்றான்.

இதோ அவ்வரிகள்…

இம்மைச் செய்தன யானறி நல்வினை
உம்மைப் பயன்கொல் ஒருதனி யுழந்தித்
திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது
விருத்தகோ பால நீயென வினவ….” (அடைக்கலக் காதை: 91-94)

அடைக்கலக் காதையில் மாடலனால் வியந்து பேசப்படும் கோவலனின் நற்பண்புகள், உயர்ந்த கொள்கைகள், எளியோர்மீது அவன் காட்டும் அளவிறந்த கருணை ஆகியவை கோவலன் மீதான நம் மதிப்பீட்டையே முழுவதும் மாற்றிவிடுவதாக அமைந்துவிடுகின்றது அல்லவா!

கோவலனின் இனிய குணங்களை எடுத்தியம்ப இளங்கோவடிகள் பயன்படுத்தியுள்ள ‘கருணை மறவன்’, ’செல்லாச் செல்வன்’, ’இல்லோர் செம்மல்’ போன்ற அற்புதமான சொல்லாட்சிகள் அடிகளின் தமிழ்ப் புலமையை உள்ளங்கை நெல்லிக்கனியெனத் தெளிவாய்ப் புலப்படுத்தி நம்மை மகிழ்விக்கின்றன.

முடிவாக, சிலப்பதிகாரக் காப்பியத்தின் தலைவனான கோவலனின் குணங்கள், குறைகள் இரண்டையும் சீர்தூக்கிப் பார்த்தால் குறைகளினும் அவனுடைய நற்குணங்களே விஞ்சி நிற்கின்றன என்பது மேற்கூறிய நிகழ்வுகள் வாயிலாகப் பெறப்படுகின்றது. அருளாட்சி செய்கின்ற அக்கோமகனின் மறுபக்கம் நம் நெஞ்சில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி அதுகாறும் அவன் செய்திருந்த தவறுகளையும் மறக்கச் செய்து தொழத்தக்க ஒருவனாகவே அவனை எண்ணச்செய்துவிடுகின்றது.

காப்பியக் கதையோட்டத்தின் சுவைகெடா வண்ணம் விறுவிறுப்பாக ஒவ்வொரு காட்சியையும் மிகச் சாதுரியமாகச் செதுக்கியிருக்கும் ’கவிச்சிற்பி’ இளங்கோ, கோவலனின் கருணையுள்ளத்தை, வள்ளல் குணத்தைச் சரியான தருணத்தில் வெளிப்படுத்தி உண்மையான காவியத் தலைவனாக அவனை உயர்த்திக்காட்டியுள்ள பாங்கு மிகுந்த பாராட்டுக்குரியதுதான் இல்லையா?

கருணை மறவனையும், காப்பிய ஆசிரியரையும் வாழ்த்தி விடைபெறுவோம்!!

(முற்றும்)

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “சிலம்பு காட்டும் கோவலனின் மறுபக்கம் – 3

  1. கருணை மறவனின் பண்பு நலன்களை, இளங்கோவின் அடியொற்றித் தாங்கள் விளக்கியுள்ள விதம் அருமை. நன்றி சகோதரி.

    சிலப்பதிகாரத்தில் வரும் மேலும் சில முக்கியமான பாத்திரங்களின் சிறப்பை இதே பாணியில் மேற்கோள்களுடன் விளக்கினால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும் என்று வேண்டுகிறேன்.

  2. கோவலனை கருணை உள்ளவானாக காட்டிய தொடர் அதற்குள் முடிந்தது எதிர் பார்க்காதது. இதனை நான் தொடர்ந்து படித்து வந்தேன். சிலப்பதிகாரத்தில் சொல்லாத கோவலனை பற்றிய விவரங்கள் வாரா வாராம் வரும் என்றே எதிர் பார்த்தேன்.

    கருணை மறவனையும், காப்பிய ஆசிரியரையும் வாழ்த்தி விடைபெறுவதோடு எழுத்தாளர் மேகலா அவர்களையும் வாழ்த்துவோம், புறநானுறு, சிலப்பதிகாரம் போல் இன்னும் பல சங்க காப்பியங்களை இதே பானியில் வெளியிட வேண்டுகிறேன். சரளமாக வரும் தாங்களின் எழுத்து நடை அதற்கு மேலும் பலம் சேர்க்கும்.

  3. நரக னுயிர்க்கு நல்லுயிர் கொண்டு
    பரகதி யிழக்கும் பண்பீங் கில்லை
    என்பதற்கு “நற்கதி கிடைக்காது(!)” ஆச்சரியக் குறியிட்ட உங்கள் குறும்பை இரசித்தேன் மேகலா. 

    “இம்மைச் செய்தன யானறி நல்வினை
    உம்மைப் பயன்கொல் ஒருதனி யுழந்தி”  என்ற மாடலனுக்கு கோவலன் அத்தனை நற்செயல்களை செய்தது தெரிந்தது.  ஆனால் மனைவியின் மனதை வருத்தமுறச் செய்து, குடும்பத்தை ஏழ்மை நிலைக்குத் தள்ளிய, முறையற்று  மாதவியின் பால் கொண்ட கூடா நட்பு தீவினை என்று ஏனோ தோன்றவில்லை.  கோவலனை ஊழ்வினை உருத்து வந்து ஊட்டவில்லை, தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதற்கிணங்க  முற்பகல் செய்தது பிற்பகலில் திரும்பி வந்துத் தாக்கிவிட்டது.  

    சிலப்பதிகார சதுக்கபூதம் இக்காலத்தில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது.  பொல்லாங்கு சொன்னதற்கு கொன்ற பூதம் முகத்தில் அமிலம் வீசுபவர்களையும் ஒரு கை பார்த்துவிடும் அல்லவா .

    தொடர் முடிந்ததில் வருத்தம்தான்  மேகலா.  தனுசு சொன்னது போல வெவ்வேறு  இலக்கியங்களில்  வெவ்வேறு பாத்திரங்கள் என்றோ, இலக்கியங்களை ஒப்பிட்டோ (வல்லமையில் உங்கள்  முதல் கட்டுரையான சிலம்பும் குறளும் கருத்து ஒப்பீடு போன்று) தொடர்ந்து கொண்டே இருங்கள்.

    அன்புடன்
    ….. தேமொழி 

  4. கட்டுரையை இரசித்துப் படித்துத் தம் கருத்துரைகளை அழகாய்ப் பதிவுசெய்துள்ள நண்பர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி!
    //கோவலனை ஊழ்வினை உருத்து வந்து ஊட்டவில்லை, தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதற்கிணங்க முற்பகல் செய்தது பிற்பகலில் திரும்பி வந்துத் தாக்கிவிட்டது. //
    தாங்கள் கருத்தை நானும் உடன்படுகிறேன் தேமொழி. மனைவியைத் தவிக்கவிட்டு மற்றொரு பெண்ணோடு (அவள் எத்துணை நல்லவள் ஆயினும்) வாழ்வது என்பது கண்டிக்கத்தக்கதே. அதன் விளைவும், முந்தைய பிறவியில் கோவலன் செய்த முறையற்ற கொலைச் செயலின் தீவினைப் பயனும் சேர்ந்தே அவனை வீழ்த்தியது எனலாம்.
    ஆயினும் தவறுதல் மனித இயற்கை; தன் தவற்றை உணர்ந்து வருந்துதல் அறம்; அவ்வாறு வருந்துவோரை மன்னித்தல் மனிதப் பண்பு அல்லவா? அப்படிப் பார்க்கையில் தன் ஒழுக்கக் குறைவை நினைந்து மிகவும் வருந்திக் கண்ணகியிடம் கோவலன் கண்ணீர்மல்க மன்னிப்புக் கோரும் கட்டம் (அவன் மரணத்திற்குச் சற்று முன்பு கண்ணகியிடம் சிலம்பு விற்றுவருகிறேன் என விடைபெறும் போது) நம் கண்களிலும் நீரை வரவழைக்கும் உருக்கமான ஓர் காட்சியாக இளங்கோவடிகளால் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றது. வாய்ப்புக் கிடைக்கும்போது அருமையான அப்பகுதியையும் நம் வல்லமை வாசகர்களோடு பகிர்கின்றேன்.

    அன்புடன்,
    மேகலா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.