குறளின் கதிர்களாய்… (17)
செண்பக ஜெகதீசன்
பகல்வெல்லுங் கூகையைக் காக்கை யிகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது.
-திருக்குறள்- 481 (காலமறிதல்)
புதுக் கவிதையில்…
இரவுக்கரசன் கோட்டானும்
இலகுவாய்த் தோற்றிடும்,
பகலில் ஒரு
காக்கையிடம்..
பாடம் இதுதான்
ஆட்சியாளர்களுக்கும்,
காலமதை நன்கறிந்து
காயை நகர்த்தினால்தான்
கிடைக்கும் வெற்றி
களத்தில்…!
குறும்பாவில்…
காக்கை வென்றிடும் கூகையைப் பகலில்..
கதையிதுதான் ஆட்சியாளருக்கும,
காலமறியாது சென்றால்…!
மரபுக் கவிதையில்…
இருளிலும் தெரியும் கண்களாலே
இரவை ஆண்டிடும் கோட்டானும்
உருவில் சிறிய காக்கையிடம்
வந்தால் பகலில் தோற்றுவிடும்,
தெரிந்திடு உண்மை இதைத்தானே
தெளிவாய்ப் பொழுதைத் தெரிந்திட்டே
சரியாய்ச் செயலைச் செய்தால்தான்
சேரும் வெற்றி ஆட்சியர்க்கே…!
லிமரைக்கூ…
பகலில் தோற்கும் காக்கையிடம் கூகை,
பொழுதைத் தெரிந்தே
செய்யும் போரில் சூடிடலாம் வாகை…!
கிராமியப் பாணியில்…
பாருபாரு நேரம்பாரு
பாயத்தான் பதுங்கத்தான் நேரம்பாரு- சரியா
நேரம்பாரு..
ராப்போது ராசாதான் கூவபாரு- அது
பகலவந்து மாட்டிக்கிட்டா
தோத்திருமே காக்காக்கிட்ட- சின்னக்
காக்காக்கிட்ட..
ராச்சியத்து ராசாவுக்கும்
கதயிதுதான்- சொல்லும்
கருத்திதுதான்,
காலநேரம் பாத்துசெஞ்சா
செயம் வருமே- எல்லாமே
செயம் வருமே..
பாருபாரு நேரம்பாரு
பாயத்தான் பதுங்கத்தான் நேரம்பாரு- சரியா
நேரம்பாரு…!
-செண்பக ஜெகதீசன்…
கால நேரம் அறிந்தால் வெற்றி எனும் சூத்திரம் சொல்லும் குறளில் இன்று, சந்த ஓசை மிகுந்து வரும் கிராமிய பானி பாடல் எப்போதும் போல் முதலிடம் பிடிக்கிறது.
அருமை நண்பரே! குறிப்பாக மரபுக் கவிதை! வாழ்த்துக்கள்.
ஒவ்வொரு குறளும் சிறப்பு. ஒவ்வொரு கதிரும் சிறப்பு.
தொடர்ந்து பாராட்டி ஊக்கப்படுத்திவரும் திருவாளர்கள் தனுசு, சச்சிதானந்தம் ஆகியோருக்கும்,
வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்த அய்யா கோதண்டராமன் அவர்களுக்கும் மிக்க நன்றி…!