
உலக பெண்கள் தின வாழ்த்துக்களுடன்
எஸ் வி வேணுகோபாலன்
சமத்துவ ஒப்பனை அல்லது
சமத்துவ பாவனை அல்லது
சமத்துவம் அசாத்தியம் எனும் சவால் அல்லது
சமத்துவம் எதற்கு எனும் துருவல் அல்லது
சமத்துவப் பேச்சே பிரச்சனைதான் எனும் புகார்……
இன்னபிற எசப்பாட்டுக்கெல்லாம் சளைக்காது
தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறது
சர்வதேச மகளிர் தின கீதம்
*கிளாரா ஜெட்கின் நினைவைக் கொண்டாடும்
கொள்ளுப் பேத்திகளும் கொள்ளுப் பேரன்களும்
புதுப்பித்துக் கொள்கின்றனர்
புதிய சமூகத்திற்கான கருவிகளை !
புன்னகையால் புறந்தள்ளுகின்றனர்
நிலைகுலைந்து போவோரது சாப மொழியை !
இல்லத்தில், பொதுவெளியில், பணியிடத்தில்
அடக்கவும், ஒடுக்கவும், முடக்கவும் பட்ட
அவலங்களுக்கு எதிரான தீர்மானமான குரல்களோடு
ஏந்திக் கொள்கின்றனர்
பாலின சமத்துவத்தின் பல்லக்கை
உன்னதப் பெருமிதம் சூடும் தோள்களோடும்
உற்சாகத் தாளமிடும் கால்களோடும் !
**********************
க. பாலசுப்பிரமணியன்
சொல்லெல்லாம் என்றும் சதாசிவமே !
சொல்லுக்குள் பொருளெல்லாம் சக்தி மயமே !
கண்ணுக்குள் காட்சியெல்லாம் சதாசிவமே ,
கண்ணின் ஒளியாக நிற்பதென்றும் சக்திமயமே !!
நாதவடிவில் நிலைப்பதெல்லாம் சதாசிவமே
நாதத்தின் மூலத்தில் நிற்பதுவோ சக்திமயமே !
உயிர்மூச்சில் ஒலிப்பதுவோ சதாசிவமே
உயிராக அதனுள் நிற்பதுவோ சக்திமயமே !!
அசையும் அசையாப் பொருளெல்லாம் சதாசிவமே,
அந்த அசைவின் இசையோ சக்திமயமே !!
இருந்தும் இல்லாமலிருப்பதுவோ சதாசிவமே,
இல்லாப் பொருளிலும் இருப்பதுவோ சக்திமயமே!!
ஓமென்னும் சொல்லில் உயர்ந்து நிற்பது சதாசிவமே,
அம்மென்னும் சொல்லில் அழகாய் வடிவது சக்திமயமே !!
உடலில் உயிர்ப்பொருளாய் என்றும் சதாசிவமே,
உயிருக்கு பொருளாய் உணர்வாயிருப்பது சக்திமயமே !!
தென்முகம் நோக்கும் திருஅருணை மூர்த்தியை,
உண்முகம் காண, உயர்த்திடும்,முக் -கண்முகம்
வெற்பாய் ரமணவழி: வில்வத்தின் கீழ்அகந்தை
அற்ப முகிலன் அடைவு ….கிரேசி மோகன்….
தாயுமானவன் திருப்புகழ்
——————————
ஸ்வாமி ஓம்காராநந்தர் தாயுமானவர் சொற்பொழிவு கேட்டு விட்டு விடியவிடிய(2009ல்)எழுதியது….அன்று அடியேனுக்கு மறக்க முடியாத சிவராத்திரி…..
——————————————————————————————————————————————————–
அகம்புறம் தாயுமான அன்பே -மிகப்பசியாய்
பிள்ளைக் கறியுண்ட பித்தா உனதுலீலைக்(கு)
எல்லைதனை யாரறிவா ரே”….
”நோயுமாவான் சாய்ந்திடும் பாயுமாவான் மாற்றிடும்
மாயமாவான் புத்தொளிர் காயமாவான் -நாயன்மார்
நேயமாவான் வெவ்வினையால் காயமானால் காப்பாற்ற
தாயுமாவான் தந்தை தவித்து”….
”வேதங்கள் அர்ச்சிக்கும் பாதாம் புயம்பற்ற
போதா உனக்கில்லை பாழ்மனமே -தீதில்
இராப்பகல் தோறும் இருந்தென்ன கண்டாய்
சிராப்பள்ளி ஈசனைச் சேரு”….
————————————————————————-
சங்கர சங்கர சம்போ சிவ சங்கர சங்கர சங்கர சம்போ மெட்டு….ஸ்வாமிஜி பாடியதைக் கேட்டு….
சாதாரணன் போல வந்தான் -ஏதும்
ஓதாமல் சில நேரம் சும்மா இருந்தான்
வேதா ரண்யம் ஊர் என்றான் -இதில்
சூதில்லை அம்மகாதேவன் தான் என்றான்….(1)
உண்டென்று ஒன்றுண்டு கேளாய் -அதை
உண்டு நான் உமிழ்கிறேன் ஒவ்வொரு நாளாய்
விண்டவர் கண்டிலர் கண்டாய் -அதைக்
கண்டு நீ கொண்டாட காட்சிகள் உண்டாய்….(2)
பதி பசு பாசங்கள் மூன்றும் -முறையே
விதி மதி வினை என்ற விவகாரமாகும்
நிதி உந்தன் நெஞ்சிலே காண்பாய் -அது
புதிதல்ல மணம்வீசும் பூத்த மலரான்மா….(3)
புதிரான பூலோகக் கல்லை -நீ
பொய்யென்றும் மெய்யென்றும் பேரிடத் தொல்லை
அதுவென்றும் இதுவென்றும் இல்லை -சுத்த
அதுவே இதுவாக ஆனந்த எல்லை….(4)
பண்டைநாள் வந்ததோர் பூச்சி -அது
பலவாய்ப் பெருகிடப் பாரென்று ஆச்சி
கொண்டதோர் கோலமே காட்சி -அதை
உண்டில்லை கண்டிடும் உறுதி ஆராய்ச்சி….(5)
செத்ததோர் பாம்பிந்த தேகம் -சுக
துக்கமிதில் காண்பது செல்லாத லாபம்
அத்தைக்கு மீசைமேல் மோகம் -அத்தை
சித்தப்பன் பார்த்திட சிரைத்திடும் யோகம்….(6)
வேடனார் வேடத்தில் இறைவன் -அவனே
விருந்தாகி நீயுண்ண வலைவீசும் இரைவன்
பாடெல்லாம் அவனென்று பறைவாய் -ஜீவ
பாவத்தில் பசுபாசம் மெழுகாகக் கரைவாய்….(7)
பார்முதல் பூதம்நீ அல்ல -பஞ்ச
புலன்களை ஆண்டிட முயலாதே வெல்ல
யாரந்த நானென்று உள்ளே -உன்னிப்
பாரவன் ஆன்மனாய் ஆகுவான் மெல்ல….(8)
அன்பே சிவமென்ற ஜோதி -அதன்
ஆதார சக்தியே அருளென்ற பாதி
பண்பான பக்தர்கள் மீதி -இந்தப்
பாங்குணர்ந் தோற்க்கில்லை பூலோக வ்யாதி….(9)
போக்கத்த சொப்பனம் நனவு -ஆழ்ந்த
தூக்கத்தில் நிற்பவன் யாரென்று வினவு
சாக்கிதால் சஞ்சலம் தீரும் -ரமண
வாக்கிதை மேற்கொள்ள வழிவந்து சேரும்….(10)
இறப்பதும் பிறப்பதும் யாரு -இங்கு
இருக்கையில் ஆராய்ந்து யோசித்துப் பாரு
உறக்கமே இறப்பென்ற மாயை -உணர
உறங்காமல் உறங்கிடப் போடான்மப் பாயை….(11)
நம்பிக்கை அறிவாக நீளும் -அவ
நம்பிக்கை அறியாமை அதுகுப்பைக் கூளம்
எம்பிக்கை போடட்டும் தாளம் -ஆன்ம
ஏகாந்த வாசியின் ஏற்றமே மூலம்….(12)
இல்லாத இகம்சொப்ப னங்கள் -அதில்
இன்பத்தைத் துய்ப்போர்கள் இருள்பெற்ற மாக்கள்
உள்ளது ஓராயி ரங்கள் -உதறி
உணர்ந்திடு உணர்வென்னும் உச்சிப் பனங்கள்….(13)
சும்மா இருந்திடல் சுகமே -என்று
சொன்னார்கள் முன்னோர்கள் சிவமாகு அகமே
நம்மால் இயன்றது நகமே -அது
நாளாக நாளாக நம்பிக்கை முகமே….(14)
துன்மார்கப் பாதையில் துன்பம் -அந்த
சன்மார்கமே சச்சிதா னந்த இன்பம்
தென்மார்கம் பார்த்திடும் அன்பன் -மவுன
தத்துவம் தோள்கொடுத் தேவுதவும் நண்பன்….(15)
ஓயாது துழைத்திடும் பெண்மை -சக்தி
ஓங்கார நாதத்தின் ரீங்காரத் தன்மை
தாயாகி அன்பர்க்கு நன்மை -நல்கும்
தத்துவம் அவளந்த பித்தர்க்கும் அம்மை….(16)
போகாத ஊருக்கு போக -இங்கு
சாகாது சாகிறோம் ஜனனித்து நோக
தேகான்ம பாவம் முடிக்க -சிவ
தேசிகன் சரணார விந்தம் பிடிக்க….(17)
செல்லாதா காசிந்த மேனி -இது
இல்லாத போதுமி ருப்பவன் ஞானி
கல்லாலின் கீழுற்ற கோலம் -அது
சொல்லாமல் காட்டிடும் சித்தாந்த ஜாலம்….(18)
பல்லாண்டு பல்லாண்டு வாழி -அந்த
பரசிவம் ஒன்றுதான் பவுருஷம் தோழி
உள்ளாண்ட போதவன் போதம் -வெளி
உலகத்தில் விளையாட வேடிக்கை பூதம்….(19)
சூலாயுதம் கொண்ட கையை -சக்தி
வேலாயுதன் வந்த விழிகர்ப்பப் பையை
ஆலால கண்டத்து மெய்யை -எண்ண
அதுநெஞ்சில் ஊற்றிடும் ஆனந்த நெய்யை….(20)
பொன்னார் மேனியன் இடையில் -வரிப்
புலித்தோல் பூண்டவன் ஏறுவான் விடையில்
உன்னார்வம் அவனெதிர் பார்ப்பான் -கொள்ள
உண்ணா முலையோடு வந்தருள் சேர்ப்பான்….(21)
சங்கர சங்கர சம்போ சிவ சங்கர சங்கர சங்கர சம்போ….
——————————————————————————-
இன்னம்பூரான்
150 வருடங்களுக்கு மேலாக தனது பாரம்பரியத்தையும், சுயாதீனத்தையும், அடை காக்கும் பெட்டையை போல பொத்தி, பொத்தி பாதுகாக்கும் இந்திய தணிக்கைத்துறை, எனக்கு செவிலித்தாய். அதன் வெண்குடை எனக்கு நிழல் தந்த வேப்பமரம். உலகெங்கும், யதேச்சாதிகாரம் ஆளும் நாடுகளில் கூட தணிக்கை அறிக்கைகள் மீது தனி கவனம் உண்டு. அதை எப்படி பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதில் மலைக்கும், மடுவுக்கும் உள்ள தாரதம்யம் இருப்பதில் வியப்பு ஒன்றும் இல்லை. இந்தியா போன்ற குடியரசுகளில் கூட ஆளும் கட்சிகள், தணிக்கை நிரூபித்த குற்றச்சாட்டுகளை, உதாசீனம் செய்வதை நான் அறுபது ஆண்டுகளுக்கு மேல் கண்டு வருகிறேன். இதே வல்லமை இதழில் என் அனுபவங்களை ‘தணிக்கைத்துறையின் தணியா வேகம்’ என்ற தொடரிலும், 2ஜி ஆடிட் ரிப்போர்ட், பொய்யை மெய் என்று மொய் எழுதும் ரசவாதம், கான்ட்ராக்ட்களை அளிப்பதில் மோசடி, ஆகியவற்றை ‘தணிக்கை என்றதொரு முட்டுக்கட்டை’ என்ற தொடரிலும் எழுதி வந்தேன். அவற்றின் பின்னணி, வாக்களிக்கும் குடிமக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் போது, தணிக்கைத்துறையின் பரிந்துரைகளை நன்கு அறிந்து செயல்படவேண்டும் என்ற ஆர்வம். வாசகர்கள் குறைய குறைய, அந்த ஆர்வம் மங்கியது. என்னை கைது செய்ய வந்த அனுபவத்தைக் கூட, அரைகுறையாக, நட்டாற்றில் விட்டு விட்டேன்.
விட்ட குறையை நிறைவு செய்ய நான் விரும்புவதற்கு மூன்று காரணங்கள் உளன.
தேர்தல் வருகிறது பல மாநிலங்களில். சிலர் இந்த தொடரால் பயன் பெறக்கூடும்.
நன்கு படித்து பல துறைகளில் திறனுடன் பணி புரிந்த நண்பர்கள் வினவும் வினாக்கள், தணிக்கைத்துறையின் சுயரூபத்தை, அவர்கள் காணவில்லை என்ற தோற்றத்தை உருவாக்குகின்றன: அவற்றில் சில. ஏன் இந்த இந்த அட்டூழியத்தை ஆடிட் ஒழிக்க வில்லை? ஆடிட் ரிப்போர்ட்டை ஏன் பொது மன்றத்தில் வைப்பதில்லை? அரசு ஆணையிட்டால் ஆடிட் ஆடித்தானே ஆகவேண்டும்! எல்லாம் வேஸ்ட் ஸார்!!!
நான் எழுதும் தளங்களில் புதிய இளைய தலைமுறை வரவுகள்.
இன்றைய தணிக்கை பிரகடன ஆவணத்துடன், பிராரம்பம் தொடங்குகிறது.
*கர்நாடகா மாநிலத்து வரவு ஆவணங்களை ஆய்வு செய்ததின் வெளிப்பாடு:
அனுமதியில்லாமல் வெட்டி எடுத்து அனுப்பிவித்த தாதுப்பொருள் [மினரல்]: 79 லக்ஷம் டன்;
நஷ்டம்: 118.75 கோடி ரூபாய்;
17 சாவடிகளில் 4ல் மட்டும் கணினி;
52 ஆர்.டி.ஓ. அலுவலகங்கள் வாங்க விட்டுப்போன வரி: ரூ. 309.81 கோடி;
ஆடிட் விரட்டி, விரட்டி கண்டு பிடித்த வரி ஏமாற்றல் அங்கே: ரூ.302.19 கோடி;
22,002 ஊர்திகள் வரி ஏமாற்றியதில் நஷ்டம்: ரூ. 45.31 கோடி.
13.71 லக்ஷம் வண்டிகளிடமிருந்து வாங்க விட்டுப்போன பசுமை வரி: 52 கோடி ரூபாய்க்கு மேல்.
நான் எடுத்துக்காட்டியவை ஒரு சிறு துளி. எல்லா செலவுகளையும் ஆடிட் செய்ய ஒரு பெரிய படையே வேண்டும். இவை செலெக்ட் டெஸ்ட் ஆடிட் மூலம் கிடைத்த அவலங்கள். ஆடிட் ரிப்போர்ட்டை முழுமையாக படிக்க விரும்பினால், அதையும் இணைக்க முடியும்.
சுருங்கச்சொல்லின், தணிக்கை பற்றிய விழிப்புணர்ச்சி ஏற்பட்டாலே, ஊழல் மன்னர்கள் நடுங்கிச்சாவார்கள். பார்க்கலாம்.
-#-
சித்திரத்துக்கு நன்றி:http://euromaidanpress.com/wp-content/uploads/2014/11/auditor.jpg
ஆவணத்துக்கு நன்றி: ஹிந்து இதழ்: மார்ச் 5 , 2016.
இன்னம்பூரான்
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

ராஜ எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (12.03.2016) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.
புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்
முனைவர்.சுபாஷிணி
என் அனுபவத்தில் இதுவரை ஏறக்குறைய நானூறுக்கும் மேற்பட்ட அருங்காட்சியகங்களுக்குச் சென்றிருப்பேன். அவை அனைத்திலும் நினைத்த மாத்திரத்தில் ஒரு சில அருங்காட்சியகங்கள் மனக்கண்ணில் வந்து நிற்கும். அதனை வரிசைப்படுத்தினால் அவ்வரிசையில் முதலில் இடம் பெறுவதாக அமைவது எகிப்தில் இருக்கும் கைரோ அருங்காட்சியகம் தான்.
இந்த அருங்காட்சியகத்திற்குச் செல்வதற்கு நான் சற்று கூடுதலான பிரயத்தனம் செய்திருக்கின்றேன் என்று குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும். 2009ஆம் ஆண்டில் நைல் நதியில் சூடான் வரை பயணித்து விட்டு ஹூர்காடாவில் நான் சுற்றுப்பயணம் பதிவு செய்திருந்த நிறுவனம் பயணத்தை தற்காலிகமாக முடித்திருந்தனர். ஹூர்காடா பகுதியில் செங்கடல் ஓரத்தில் ஓய்வெடுக்கும் வகையில் ஐந்து நாட்களை ஒதுக்கியிருந்தனர். எங்கள் பயணக்குழுவில் வந்திருந்த ஒரு சிலராக சேர்ந்து மூன்று நாட்களுக்கு கைரோ சென்று வருவது என முடிவெடுத்தோம். ஹூர்காடாவிலிருந்து இரவு நேர பஸ் எடுத்தால் ஏழு மணி நேரப்பயணத்தில் எகிப்தின் தலைநகரான கைரோவை அடைந்து விடலாம். அப்படி ஒரு ஏற்பாட்டை செய்து கொண்டு எட்டு பேர் கொண்ட குழுவினர் ஹூர்காடா நோக்கி பயணப்பட்டோம்.
கைரோவில் இருந்த மூன்று நாட்கள் குறிப்பிடத்தக்க இடங்களைச் சுற்றிப்பார்த்தோம் என்றாலும் அதில் மனதில் வெகுவாக கவர்ந்தவை பிரமிட்களும் கைரோ அருங்காட்சியகமும் தான்.
கைரோ அருங்காட்சியகம்
அதில் கைரோ தேசிய அருங்காட்சியகத்தில் எகிப்திய நாகரிகத்தின் மையப் புள்ளிகளாக இருந்த பண்டைய மன்னர்கள் அவர்கள் துணைவியர் ஆகியோர் உடல்கள் பாடம் செய்யப்பட்டு மம்மிக்களாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளமையை பார்வையிட்டு வந்தது மனதில் மறக்க முடியாத வகையில் இன்றும் பதிந்திருக்கின்றது.
இளமை காலத்தில் பள்ளியில் படித்த காலத்திலிருந்தே எகிப்திய மம்மிக்களைப்பற்றி கேள்விப்பட்டு அவற்றை நேரில் பார்ப்போமா என்று யோசித்ததுண்டு. அந்த வாய்ப்பு நிஜத்தில் எனக்குக் கிட்டியபோது அடைந்த மகிழ்ச்சிக்கு எல்லையில்லை என்பேன். அது என்ன செத்த பிணங்களான மம்மிக்களை பார்ப்பதில் ஒரு ஆர்வம் என சிலர் நினைக்கலாம். அவை வெறும் செத்த பிணங்கள் என்று நாம் கூறிவிட முடியாது. மாறாக அவை இன்றைக்கு 5000 ஆண்டு பழமையான மனிதர்களை நம்முன்னே கொண்டு வந்து வைக்கும் ஒரு அற்புத அனுபவம். இந்த அற்புத அனுபவத்தை நேரில் உணரும் போது உண்மையில் நாம் மெய் சிலிர்க்காமல் இருக்கமுடியாது. இல்லையென்றால் எதற்காக மில்லியன் கணக்கில் எகிப்தின் இந்த கைரோ அருங்காட்சியகத்திற்கு ஒவ்வொரு வருடமும் பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர் என்ற கேள்வி எழும் தானே!
மாமன்னன் முதலாம் செட்டியின் பராக்கிரமங்களைக் கூறும் கர்னாக் கோயில் வாசலில்
கைரோ அருங்காட்சியகத்தில் மம்மி சேகரிப்புக்களுக்காக இரண்டு அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அறையிலும் தலா 12 மம்மிக்கள் என காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அதில் முதல் அறையில் பண்டைய எகிப்தின் பாரோக்கள் என அழைக்கப்படும் பேரரசர்களின் மம்மிக்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. இரண்டாவது அறையில் மேலும் சில பாரோக்களுடன் அவர்களது மனைவி மற்றும் பண்டைய எகிப்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிலரின் மம்மிக்கள் வைக்கப்பட்டுள்ளன. நூல்களில் படித்து பாரோக்களின் பராக்கிரமத்தை அறிந்த நமக்கு அவர்களின் உடலை நேரில் பார்க்கின்றோம் என்பது திகைக்க வைக்கும் ஒரு நிகழ்வுதானே. அதிலும் என்னை ஈர்த்தது மன்னன் 2ம் ராம்ஸளின் பாடம்செய்யப்பட்ட மம்மி உடல். இவர் பண்டைய எகிப்தை 67 ஆண்டுகள் ஆண்ட பேரரசர். அடுத்ததாக மன்னன் முதலாம் ராம்ஸசின் மகனும் மன்னன் 2ம் ராம்ஸசின் தந்தையுமான முதலாம் செட்டியின் மம்மியைக் குறிப்பிடுவேன்.
ஒன்றை கவனித்தீர்களா?
இந்த மன்னர்களின் பெயர்கள் நமக்கு பரிச்சயமான பெயர்கள் போல் தானே ஒலிக்கின்றன? எகிப்து தொடர்பான பலதரப்பட்ட ஆய்வுகள் தென்னிந்திய மானுடவியல் ஆய்வுகள் செய்வோருக்கு மிகச் சுவாரசியமான தகவல்களை நிச்சயம் வழங்கும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.
சரி. யார் இந்த இரண்டாம் ராம்ஸஸ்? இவரை ஏன் முக்கியமாக அதிலும் முதலாம் ராம்ஸஸை விட முக்கியமாக இங்கே நான் குறிப்பிட்டுச் சொல்கின்றேன் எனக் கேள்வி எழலாம். 2ம் ராம்ஸஸைப் பற்றிச் சொல்கின்றேன்.
மாமன்னன் ராம்ஸஸின் பதப்படுத்தப்பட்ட மம்மி
பேரரசன் 2ம் ராம்ஸஸ் கி.மு 1279 முதல் கி.மு 1213 வரை பரந்த எகிப்தை ஆண்ட மாமன்னன். கீழே இன்றைய சூடான் மேற்கே சிரியா என மிக விரிவான நிலப்பகுதி இவரது ஆட்சிக்குட்பட்டிருந்தது. மிக இளம்வயதிலேயே இவரது தந்தையார் முதலாம் செட்டி இவரை இளவரசராக நியமித்திருந்தார் என்பதுவும் தொடர்ச்சியாக தமது பதின்ம வயதினிலேயே ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக் கொண்டார் என்றும் புக் ஆஃப் டெத் நூலில் உள்ள குறிப்புக்களிலுருந்து அறிகின்றோம். இவர் நீண்ட ஆண்டுகாலம் ஆட்சி செய்து தமது 90 அல்லது 91 வயதில் உயிர் நீத்தார். தமது ஆட்சிப்பொறுப்பின் காலத்தில் நைல் நதிக்கரையில் எகிப்திய அரசின் பிரமாண்டமான தலைநகரமான பை-ராம்ஸஸை உருவாக்கினார். இவர் இறந்த சமயத்தில் இவரது உடல் மம்மியாக பாடம் செய்யப்பட்டு மன்னர்கள் பள்ளத்தாக்கில் (Valley of King) வைக்கப்பட்டிருந்தது. தற்சமயம் அது கைரோ அருங்காட்சியகத்தில் உள்ளது. 2ம் ராம்ஸஸ் கட்டிய கட்டுமானங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. பல கோயில்களை கட்டிய புகழ் இவருக்கிருந்தாலும் சூடானில் நைல் நதிக்கரையோரத்தில் இன்றைக்கு 4000 ஆண்டுகள் வாக்கில் 2ம் ராம்ஸஸ் அமைத்த அபு சிம்பெல் ஆலயம் ஒரு மைல்கல். இன்று அது எகிப்தின் எல்லை பகுதிக்கு யுனெஸ்கோ மற்றும் ஏனைய சில ஐரோப்பிய நாடுகளின் உதவியோடு கொண்டு வரப்பட்டு அழகாக அமைக்கப்பட்டிருக்கின்றது.
அபு சிம்பல் ஆலயம்
2ம் ராம்ஸஸின் அதிகாரப்பூர்வ மனைவி நெஃபடாரி மிக புகழ்மிக்க ஒரு அரச ஆளுமையாக கருதப்பட்டவர். எகிப்தில் ஜெர்மானிய தொல்லியல் துறை நிகழ்த்திய ஒரு அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட இவரது தங்கத்தினால் ஆன கழுத்து வரைக்குமான உருவச்சிலை ஜெர்மனியில் பெர்லின் நகரில் இருக்கும் புதிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு உள்ளது. எகிப்து இச்சிலையை ஓரிரு முறை கேட்டும் கூட இச்சிலை ஜெர்மனியினால் திருப்பி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. அபு சிம்பல் ஆலயத்தில் பேரரசன் ராம்ஸஸின் உருவச் சிலை போலவே நெஃபட்டாரியின் உருவச் சிலையும் இருக்கின்றது. மன்னன் 2ம் ராம்ஸஸ் ஆணையிட்டு தன் மகாராணிக்காக கட்டிய ஆலயத்தின் வாசலில் நெஃபட்டாரியின் உருவச் சிலையையும் காணலாம்.
மாமன்னன் முதலாம் செட்டியின் உருவப்படம்
பேரரசன் 2ம் ராம்ஸஸின் தந்தை முதலாம் செட்டி ஏறக்குறைய பதினொரு அல்லது பதினைந்து ஆண்டுகள் மட்டுமே ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர் என்றாலும் இவர் காலத்தில் குறிப்பிடத்தக்க அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. எகிப்திய மொழியில் இவரது பெயரான செட்டி என்பது சேத் எனும் கடவுளின் பெயரை ஒத்து அமைவது. நைல் நதிக்கரையோர ஆலயங்களில் ஒன்றான கார்னாக் கோயிலில் முதலாம் செட்டியின் பராக்கிரமங்களை விளக்கும் ஹீரோக்ளிப்ஸ் ஆவணங்கள் சுவற்றில் வரிசையாகப் பதிக்கப்பட்டிருக்கின்றன. அவைமட்டுமன்றி மன்னர்கள் பள்ளத்தாக்கில் இவரது சமாதி இருக்கும் நீண்ட அறையில் இவரது ஆட்சிக் காலத்து வரலாற்றுச் செய்திகள் சுவர் முழுக்க ஹீரோக்ளிப்ஸ் குறியீடுகளால் வழங்கப்பட்டுள்ளன. மன்னர் முதலாம் செட்டியின் சமாதியை புதையுண்ட மணல் பகுதியிலிருந்து முதலில் கண்டெடுத்தவர் ஆஸ்திரியாவில் பிறந்த இத்தாலிய பூர்வீகத்தைக் கொண்ட Giovanni Battista Belzoni என்ற உலகப் புகழ்பெற்ற தொல்லியல் ஆய்வறிஞர். இப்பொழுது மாமன்னன் முதலாம் செட்டியின் மம்மியாக்கப்பட்ட உடல் கைரோ அருங்காட்சியகத்தில் உள்ளது.
இந்த மம்மிக்களைப் பார்க்க கைரோ அருங்காட்சியகத்தினுள்ளே செல்வோம்.
தொடரும்…
நிர்மலா ராகவன்
கேள்வி: எக்காலத்திலோ தக்கதென சான்றோர் சொல்லிவிட்டுப்போன கருத்துகள் தற்காலத்துக்கும் உகந்தைவைதானா?
விளக்கம்:
பழையன கழிதலும் புதியன புகுதலும் மனித வாழ்க்கையின் தன்மை. இதை ஏற்காது, நம்மில் பலர் பழமைவாதிகளாக இருப்பதில்தான் பெருமை கொள்வார்கள். மூதாதையர் காலத்து நடைமுறைகளையும், பழமொழிகளையும் மேற்கோள் காட்டி, காலத்துக்கு ஒவ்வாத தம் நடத்தையை நியாயப்படுத்திக்கொள்ள முனைவார்கள். காலம் அதேபோல் இன்றும் இல்லையே!
முன்னேற்றம் என்பது நல்லதொரு மாற்றத்தை நாமே ஏற்படுத்திக்கொள்வது. முன்னேற்றம் என்பதன் பொருளே மனிதனுக்கு மனிதன் மாறுபடும் — பணக்காரராக ஆவது, புகழுடன் விளங்குவது, கல்வியில் சிறப்பது இப்படி.
`போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து’ என்பதைச் சிலர் வலியுறுத்த, பலரும் கைப்பிடித்து வருகின்றனர். நமது வாழ்க்கைத்தரம் ஒரே நிலையில் இருக்கவேண்டும். மேன்மேலும் புகழ், பொருளுக்கெல்லாம் ஆசைப்படக்கூடாது என்று மனதைத் தேற்றிக்கொள்வார்கள் இவர்கள். புதிய பாதைகளில் என்னென்ன இடர்பாடுகள் எதிர்ப்படுமோ என்ற பயமும் இதற்கு அடிப்படைக் காரணமாக இருக்கலாம்.
வயதில் மூத்தவர்கள் சொல்வதை அப்படியே கேட்டு நடந்து, `ஏன் நான் மட்டும் முன்னேற்றமே அடையாமல், பின்தங்கியே இருக்கிறேன்?’ என்று வாடுபவர்கள் பலர்.
சிறு வயதில், பெற்றோர் சொல்வதைக் கேட்க வேண்டியதுதான். ஆனால், அது ஒருவருடைய இயற்கையான திறன்களை மழுங்கடித்து, மனநலனையே பாதிக்கும் அளவுக்கு இருந்தால், எதற்குப் பொறுத்துப்போவது?
கதை: ஒரு பையனுக்குச் சிறுவயது முதலே சித்திரம் வரைவதில்தான் ஆர்வம். அதிகம் பேசாது, ஓயாது வரைவான். பார்ப்பதையெல்லாம் மிகக் குறுகிய காலத்தில் அப்படியே வரையும் திறன் அவனுக்கு வாய்த்திருந்தது.
அவனுடைய தந்தையைப் பொறுத்தவரை அவன் நேரத்தைப் பள்ளிப்படிப்பில் மட்டும்தான் செலவழிக்க வேண்டும். மற்ற செயல்கள் எல்லாம் வீண். அவன் காகிதத்தையும், பென்சிலையும் எடுத்தாலே இரைவார். பையன் பயந்து, பீரோவுக்குப் பின்னால் ஒளிந்து வரைய ஆரம்பித்தான். கண் பார்வை கெட்டது. அப்பா வெளியில் போனால் தைரியமாக வரைவான். அவர் வீட்டுக்குள் நுழைவதைப் பார்த்து குடும்பத்தினர் எல்லாரும், `அப்பா!’ என்று அடக்கிய குரலில் எச்சரிப்பார்கள். உடனே ஒளிந்து வரைவது வழக்கமாகப் போயிற்று.
தாயோ, `பருவ வயதில் பெண்களையே வரைகிறானே!’ என்று கவலைப்பட்டு அரற்றினார்களாம். `அது தவறோ?’ என்று, இயற்கையாக எழுந்த கற்பனையை அதன்பின் விலக்க, `பெண்கள்’ என்றாலே குழப்பம்தான் எழ ஆரம்பித்தது.
தனக்கு மிகவும் பிடித்த காரியத்தைச் செய்ய ஏதோ தீய பழக்கத்தில் ஈடுபட்டதைப்போல அவன் மறைத்துச் செய்தது அவனுடைய தன்னம்பிக்கையைக் குலைத்து, பிற்காலத்தில் இல்லற வாழ்வையே நரகமாக்கியது.
`நான் அப்படித்தான் வரைவேன்!’ என்று நீங்கள் உங்கள் அப்பாவை எதிர்த்திருக்க வேண்டும்,’ என்றேன். காலங்கடந்து, வருத்தத்துடன் தலையை அசைத்தார் அந்த மனிதர். இயற்கையாக அவருக்கு அமைந்திருந்த திறனில் உலகப்புகழ் பெற்றிருக்க முடியும். அது தெரிந்திருந்தும், தந்தைக்காக விட்டுக்கொடுத்தது எவ்வளவு கொடுமை!
கலைஞர்கள் மென்மையான குணம் படைத்தவர்கள். அவர்கள் மனதை நொறுக்குவது பிறருக்குப் பலத்தை அளிப்பதுபோல் இருக்கும். அதனால் முனைந்து செய்வார்கள்.
எழுதுவதும் அப்படித்தான். ஆண்கள் என்ன எழுதினாலும், எவ்வளவு ஆபாசமாக எழுதினாலும் வாசகர்கள் பொறுத்துப் போகிறார்கள். ஆனால், ஒரு பெண் கதாநாயகனை வர்ணித்தோ, ஆண்-பெண் உறவைப்பற்றி விரிவாக எழுதினாலோ சர்ச்சைக்குள்ளாகிறாள். கற்பனை என்பது இருபாலருக்கும் பொது. இதில் என்ன ஆண், பெண் வேறுபாடு?
பெண்களுக்கு மொழிவன்மை ஆண்களைவிட அதிகம் என்கிறது உளவியல். ஆண்குழந்தைகளோ, கைகளால் செய்வது எதையும் பெண்களைவிடச் சிறப்பாகச் செய்வார்கள். இது புரியாது, பொறாமையாலோ, இல்லை, `எங்கே நம்மை மிஞ்சிவிடுவாளோ!’ என்ற பயத்தாலோ எதிர்க்கும் ஆண்களின் கண்டனத்தைப் பொருட்படுத்தாது எழுதும் பெண்கள்தாம் தொடர்ந்து எழுதமுடியும்.
நான் எழுத ஆரம்பித்தபோது, கற்பழிப்பைப்பற்றி ஒரு கதை எழுதி, `எங்கம்மா இதை அனுப்ப விடமாட்டா. நீங்க என்ன சொல்றேள்?’ என்று என் கணவரின் ஒப்புதலைக் கேட்டேன். `கற்பனைதானே? அதனால் என்ன!’ என்றுவிட்டார். அதைப் பிரசுரித்த பத்திரிகை ஆசிரியர், `இது கற்பனைக்கதைதான். உண்மைச் சம்பவமில்லை’ என்று அடியில் ஒரு குறிப்பு எழுதப்போக, பலர் என் கணவரை விசாரித்தார்களாம், `அது என்ன ஸார், அடியிலே அப்படி எழுதியிருக்காங்க?’ என்று!
இறப்பைப்பற்றியும்தான் எவ்வளவோ எழுதியிருக்கிறேன். அது என்னவோ, நான் பல தடவை செத்துப்பிழைத்தவள் என்று எவரும் நினைப்பதில்லை!
ஒருமுறை, `திருக்குறளில் பெண்கள்’ என்ற தலைப்பில் உரையாற்ற என்னை அழைத்திருந்தார்கள்.
பேசி முடித்ததும், ஒருவர் எழுந்து, `திருவள்ளுவர் பெண்களின் பேச்சைக் கேட்டு ஆண்கள் நடக்கக்கூடாது’ என்று சொல்லியிருக்கிறார். அதை நீங்கள் கவனிக்க வேண்டும்!’ என்று விண்ணப்பித்தார்.
`அந்தக் காலத்தில் பெண்கள் கல்வியறிவு அற்றவர்களாக இருக்கவேண்டிய கட்டாயம். வெளியுலகைப்பற்றி அதிகம் தெரியாமலிருந்திருக்கலாம். இப்போதும் அப்படியா?’ என்று நான் பதிலளித்தபோது, சற்றும் எதிர்பாராவிதமாக பெண்கள் தலைக்குமேல் கையை உயர்த்தித் தட்டி, தம் ஆதரவைத் தெரிவித்தார்கள்!
நல்ல வேளை, `பெண்ணுக்குப் படிப்பு எதற்கு?’ என்ற காலம் போய்விட்டது.
உயர்கல்வி பெற்று, உத்தியோகமும் பார்க்கும் ஒரு பெண்ணைப் பார்ப்போம். வாழ்வில் முன்னேற அவசியமானது கல்வி. ஆணோ, பெண்ணோ, தன்னை நாடுபவர்களுக்கு சுய நம்பிக்கையையும், சொந்தக்காலில் நிற்கும் துணிவையும் அளிப்பது கல்விதான். களவாடவோ, அழிக்கவோ முடியாதது.
ஆனால், படித்த பெண் தனது வருவாயில் பெரும்பகுதியைக் கணவனிடம் கொடுத்துவிடுவது பதிபக்தியா?
அப்படிச் செய்தால், மனைவியின்மீது ஆண் கொண்டுள்ள அதிகாரமும், ஆக்கிரமிப்பும் இன்னும் அதிகமாகாதா!
`கணவனே கண் கண்ட தெய்வம்’ என்று ஏதோ மந்திரம்போல, பழைய திரைப்படத்தின் தலைப்பை மூதறிஞர் உரைபோல கெட்டியாகப் பிடித்துக்கொள்பவர்களைக் கேட்கிறேன், கொடுமைப்படுத்துவது தெய்வத்தின் தன்மையாகுமா?
`எனக்குத் திரைப்படங்கள் பிடிக்காது. அதனால், நீயும் பார்க்க்க்கூடாது!’ என்று மிரட்டும் ஆண் எதில் சேர்த்தி?
`அவருக்குப் பிடிக்காவிட்டால் என்ன? நீபாட்டில் போயேன்!’ என்று ஒரு மாதுவிடம் கூற, `கணவர் திட்டினால்?’ என்று பயந்தாள். அவரை மீறிப்போனால், அவள் கெட்டவளாகி விடுவாளா?
ஆக்ககரமாக எதுவும் செய்யத் துணிவோ, அறிவோ இல்லாதவர்களுக்குத்தான் சில பழமொழிகளினால் பலம். நமது துன்பங்களை நாமே களைய முன்வராது போனால், வேறு யார்தான் அதில் அக்கறை காட்டுவர்?
ஒரு குடும்பத்தைச் செவ்வனே நடத்திச்செல்ல வேண்டிய பொறுப்பு ஆண், பெண் இருவருக்குமே இருக்கிறது. இதை ஒருவர் உணரத் தவறும்போது, மற்றொருவர் தக்க முறையைக் காட்ட வேண்டுவது அவசியம். கணவனின் வருவாய்க்கு மேலேயே செலவு செய்யும் பெண்ணாகட்டும், மனைவி என்பவள் தன் தாழ்மை உணர்வுகளுக்கெல்லாம் வடிகால் என்பதுபோல் அவளை கீழ்த்தரமாக நடத்தும் கணவனாகட்டும், இவர்களுக்குத் தக்க முறையைக் காட்டுவது ஒருவருக்கொருவர் செய்யும் கடமை, உபகாரம்.
`குடும்பத்தில் சச்சரவு எதற்கு?’ என்று விட்டுக்கொடுத்துவிட்டு, கையில் காசில்லாததால், வேறு வழியின்றி கணவனின் அடி, உதைகளை ஏற்று, `பொறுமையுடையார் பூமி ஆழ்வார்,’ என்று பிதற்றுவது மடமை.
கோலாலம்பூரில் ஆதரவற்ற பெண்கள் மையத்தில் கணவரால் வதைக்கப்பட்டவர்கள் ஏழ்மை நிலையிலிருந்த பல தமிழ்ப்பெண்களும், படித்து உத்தியோகம் பார்க்கும் மலாய்ப்பெண்களும் மட்டும்தாம் என்பது எனக்கு ஆச்சரியத்தை விளைவித்தது. இவர்கள் மருத்துவர்களின் பரிந்துரைக்குப்பின் காவல் துறையினரால் அங்கு கொண்டு விடப்பட்டவர்கள். (வசதியான குடும்பத்திலிருந்து வரும் தமிழ்ப்பெண்களை எப்படியெல்லாம் வதைத்தாலும், கணவரைக் காட்டிக்கொடுக்க மாட்டார்கள். அப்புறம் குடும்ப கௌரவம் என்ன ஆகிறது?)
மலேசியாவில் மலாய், சீனர், இந்தியர் ஆகிய மூன்று இனங்களும் பிரதானமாக விளங்குகின்றனர்.
`சீனப்பெண்களை கணவன்மார்கள் வதைப்பதே இல்லையா?!’
இல்லத் தலைவி என் ஆச்சரியத்தைக் கண்டு, நிலைமையை விளக்கினாள்: “சீனப்பெண்களுக்குச் சிறு வயது முதலே சொல்லிக் கொடுப்பார்கள்,` நீ சம்பாதிப்பது எல்லாவற்றையும் அப்படியே தூக்கி உன்னை மணப்பவனிடம் கொடுத்துவிடாதே. அவன் மது, மாது, மாஜோங் (சூதாட்டம்) என்று எல்லாவற்றையும் அழித்துவிடுவான். புத்திசாலித்தனமாக அதில் சிறு பங்கையாவது எங்கேயாவது பதுக்கி வை!’ என்று”.
என் சீன மாணவி (17) ஒருத்தியும் அதை உறுதிப்படுத்தினாள்: “எங்கப்பா ரொம்ப மோசம். அம்மாவை அடிப்பார். எனக்குப் பதினஞ்சு வயசானபோது, `நீங்க எல்லாம் கொஞ்சம் பெரியவங்களா ஆகணும்னுதான் இத்தனை வருஷமா பொறுத்துட்டு இருந்தேன். இப்போ, தனியா போறேன்,’ என்று சொல்லிவிட்டு அம்மா எங்கேயோ போய்விட்டாள்”.
மலேசியாவில், மற்ற இரண்டு இனப்பெண்களில் பலர் தம் சம்பாத்தியம் முழுவதையும் கணவரிடம் கொடுத்துவிட்டு, மகிழ்ச்சியற்ற குடும்ப வாழ்க்கையிலிருந்து விடுபடத் தெரியாது மாட்டிக்கொள்வார்களாம். (விவாகரத்து கோருவதில் இந்தியப்பெண்கள் முதலிடம் வகிக்கிறார்கள் என்பது சில ஆண்டுகளுக்குமுன் என் வேண்டுகோளுக்கு இணங்கி, எனக்குக் கொடுக்கப்பட்ட புள்ளிவிவரம்).
`நீங்கள் எழுதுவதுபோல் பெண்கள் சுதந்திரமாக நடந்தால், குடும்பத்தில் சண்டை வருமே!’ என்று ஒருவர் சந்தேகம் தெரிவித்தார்.
எத்தனை காலம்தான் சண்டை போடுவார்கள்! மாற்ற முடியாது என்று புரிந்துபோனதும், தானே விட்டுக்கொடுத்து விடுவார்கள். முடியாவிட்டால் விலகி, அவரவர் வழியைப் பார்த்துக்கொண்டு போகவேண்டியதுதான்.
வாழ்க்கை எவ்வளவு நரகமாக இருந்தாலும், `விதி’ என்று ஏற்றுக்கொள்வது அறிவுடமையாகுமா? அளவுக்கு மீறிய பொறுமையுடன் எந்த அநியாயத்தையும் சகித்துக்கொண்டிருந்தால், வாழ்வில் பிடிப்பு குன்றி, நாளடைவில் நடைப்பிணமாக ஆகிவிடும் அபாயம் இருக்கிறதே!
நம் வாழ்வினை மேம்படுத்திக்கொள்வது நம் கையில்தான் இருக்கிறது. நம் திறமைக்கு ஏற்ப, நமக்கு விருப்பமான துறையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு, யார் எதிர்த்தாலும், பழித்தாலும் சட்டைசெய்யாது, தீவிர முயற்சியுடன் அதில் இறங்கினால் வெற்றி காண்பது உறுதி. முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்.
தொடருவோம்
செ. இரா.செல்வக்குமார்
நோபல்பரிசாளர் பி.வா. ஆண்டர்சன் அவர்களுடன் பேராசிரியர் க.பாசுக்கரன்
இந்தக் கிழமையின் வல்லமையாளர் வியப்பூட்டும் ஓர் அறிவியலாளர்.
மிக எளிய குடும்பத்தில் பிறந்து உலகப்புகழ் எட்டியிருக்கும் இவருடைய வியத்தகு வாழ்க்கை நமக்கெல்லாம் மிகுந்த உள்ளூக்கம் தரக்கூடியது. .
தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் விளாத்திக்குளம் என ஓர் ஊர் உள்ளது. அதன் அருகே கரிசற்குளம் (கரிசல்குளம்) என்று ஒரு சிற்றூர். அங்கேதான் வாழ்ந்துவந்தனர் இவருடைய குடும்பத்தினர். ஒரு சமயம் பெரிய பஞ்சம் ஒன்று ஏற்பட்டதால் இவருடைய தந்தையார் திரு. கணபதி அவர்கள் குடும்பத்தோடு மதுரையில் குடியேறினார். கணபதி அவர்கள் 2-ஆம் வகுப்புவரைதான் படித்திருக்கின்றார். இந்தவார வல்லமையாளரான பேராசிரியரும் முனைவருமான க. பாசுக்கரன் (க’. பா’ஸ்க’’ரன்) அவர்களுடன் உடன்பிறந்தவர்கள் 7 பேர். மொத்தம் 10 பேர் கொண்ட இவருடைய குடும்பத்தினர் வெறும் 2-அறை கொண்ட சிறிய வீட்டில் வசித்தனர். எளிய பொருளாதார வசதி படைத்த இவர் குடும்பத்தில் 8-ஆவது வரை ஒருவர் படித்தால் உடனே வேலைக்குப்போவதே வழக்கம். பாசுக்கரன் அவர்கள் 5-ஆவது வகுப்பு படிக்கும்வரை வீட்டில் மின்விளக்கு கிடையாது. மதுரையில் புனிதமேரி பள்ளியில் படித்த இவர் மண்ணெண்ணெய் விளக்கிலும் தெருவிளக்கிலுமே படித்தார். ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்த மதிப்பெண் பெற்று எப்படியோ தேறி வந்தார். கணக்குப்போடுவதும் ஆங்கிலத்திலும் தமிழிலும் பிழையில்லாமல் எழுதுவதும் கடினமாக உணர்ந்தார். ஆனாலும் ஆசிரியர் பாடம் நடத்துவதைக் கூர்ந்து கேட்டு வந்தார். பள்ளிப்படிப்பு வரை தமிழ்வழியில் பயின்ற இவர் பி.யூ.சி என்னும் (இன்றைய படிப்பில் பிளசு-2 –வின் இறுதியாண்டு) படிப்பில்தான் முதன்முதலாக ஆங்கிலவழி படித்தார். முதலில் கடினமாகவே இருந்தது. பி.யூ.சி-யில் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று மதுரை தியாகராசர் கல்லூரியில் இயற்பியல் படிப்பில் இளநிலையில் (B.Sc) சேர்ந்தார். ஒருமுறை இவர் 70% மதிப்பெண் பெற்றதைப் பார்த்து, ‘’நீ இன்னமும் நல்ல மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்’’ என்று இவருடைய துறைத்தலைவர் பேராசிரியர் செயராமன் அவர்கள் இவரிடம் கூறினார். அதைக் கேட்டதுமுதல் இவர் பாடத்தில் உற்றுகவனிக்கத் தொடங்கி மிகுந்த அக்கறை எடுத்தார். அதன் பயனாய் பட்டப்படிப்பில் முதல்வகுப்பில் முதல் மாணவனாகத் தேர்ச்சிப் பெற்றார்.

அதன்பின் ஏறுமுகம்தான். அடுத்து அமெரிக்கன் கல்லூரியில் இயற்பியலில் முதுநிலை பட்டம் பெற்றார். பல்கலைக்கழகத்திலேயே முதலிடம் பெற்றார். பெங்களூரில் உள்ள இந்திய அறிவியற்கழகத்தில் (Indian Institute of Science,) சேர்ந்து திண்மநிலை இயற்பியலில் (Solid State Physics) முனைவர்ப்பட்டம் பெற்றார். இவர் குடும்பத்தில் பட்டப்படிப்பே படிக்காதவர் நடுவில் இவர் புகழ்மிகு உயர்கல்விக்கழகத்தில் முனைவர்ப்பட்டம் பெற்றிருக்கின்றார். நோபல் பரிசு பெற்ற அப்துசு சலாம் (Abdus Salam) அவர்கள் இத்தாலி நாட்டின் வடகிழக்கேயுள்ள திரீசித்தே ( Trieste) என்னும் நகரில் 1964 ஆம் ஆண்டு நிறுவிய அனைத்துலக கொள்கைய இயற்பியல் நடுவத்தில் (International Centre for Theoretical Physics (ICTP)) குளிர்கால பயிற்சிப் பட்டறை ஒன்றில் பங்குகொள்ள இவருக்கு அரிய வாய்ப்பு கிட்டியது. இந்த நிறுவனம் ஐ.சி.டி.பி (ICTP) எனப்பரவலாக அறியப்படுகின்றது. பிறகு அங்கேயே (ஐ.சி.டி.பி –யில்) வேலையும் கிடைத்தது. இதுவொரு திருப்புமுனை!! அங்கே வந்தார் அமெரிக்காவில் உள்ள பிரின்சிட்டன் பல்கலைக்கழகத்தில் (Princeton University) பேராசிரியராக இருந்த நோபல் பரிசுபெற்ற அறிவியலாளர் பிலிப்பு வாரன் ஆண்டர்சன் (Philip Warren Anderson) என்பார். இவர் மீகடத்தித்துறை (superconductor) ஆய்வில் மிகுபுகழ் எட்டியவர். அவருடன் நடந்த அறிவியல் கருத்துறவாட்டத்தின் பயனாய் அமெரிக்காவில் பிரின்சிட்டன் பல்கலைக்கழகத்திலேயே வருகைதரு பேராசிரியராகச் செல்ல வாய்ப்பு கிட்டியது. இந்தியாவின் மிக உயர்ந்த அறிவியல் விருதாகிய சாந்தி சொரூப்பு பட்டுநாகர் விருதை (Shanti Swarup Bhatnagar Prize) இவர் 1990 இல் வென்றிருக்கின்றார். அதற்கும் முன்பாக நோபலியர் அப்துசு சலாம் அவர்களின் ஐ.சி.டி.பி நிறுவனத்தின் முதல் விருதாகிய ஐ.சி.டி.பி பரிசை 1983 இல் வென்றார். இப்பரிசு 40 வயதுக்கும் குறைவான வளரும் நாட்டு அறிவியலாளர் ஒருவருக்கு வழங்கப்பெறும் விருது. இவர் நோபல் பரிசு பெற்ற ஆண்டர்சன் அவர்களுடன் இணைந்து ஆய்விதழ்களில் ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார்.
சிலவகைப் பொருள்களில் எதிர்மின்னிகளைத் (electron) தனித்து இயங்கும் உருப்படிகளாகக் கருதாமல் அவற்றினிடையே வலுவான ஒத்தியங்கும் நுண்பிணைப்பு கொண்ட ( developed the resonating valence bond theory) தன்மை உடையதாகக் கருதப்படும் அமைப்புகள் பற்றிய ஆய்வில் பாசுக்கரன் அவர்கள் உலகளவில் முன்னணி ஆய்வாளர் இத்துறையில் இவர் நோபலியர் பி.வா. ஆண்டர்சன் அவர்களுடன் சேர்ந்து கருத்தியக் கொள்கைகளை உருவாக்கியிருக்கின்றார். இக்கருத்துகள் உயர்வெப்ப மீகடத்தித்துறையில் (high temperature superconductor) மிகவும் முக்கியமானவை. இவருடைய படைப்புகளுக்காக இவருக்கு நோபல்பரிசு கிடைத்தாலும் கிடைக்கக்கூடும். இவர் கனடாவில் வாட்டர்லூ நகரில் உள்ள புகழ்மிக்க பெரிமீட்டர் கழகம் (Perimeter Institute) என்னும் கொள்கைய இயற்பியல் (Theoretical Physics) ஆய்வுக்கழகத்தில் வருகைதரு அறிவியலாளராக வந்துபோய்க்கொண்டு இருக்கின்றார். இதுமட்டுமல்லாமல் அமெரிக்கா, சப்பான், பிரேசில், பிரித்தானியா, இடாய்ச்சுலாந்து (செருமனி) போன்ற பலநாடுகளுக்குச் சென்று அறிவியல் ஆய்வுரைகள் வழங்கிவருகின்றார். இந்திய அக்காதெமி ஆஃபு சயன்சு, இந்திய நேசனல் சயன்சு அக்காதெமி போன்ற அமைப்புகள் இவரை சிறப்பாளராக (Fellow) அறிவித்துப் பெருமைப்படுத்தியுள்ளன. இவர் சென்னையில் இந்திய அறிவியற்கணிதக் கழகத்தில் (The Institure of Mathematical Science) பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றிருக்கின்றார். இவர் தமிழ்மொழிக்கும் அரிய தொண்டு ஆற்றிவருகின்றார் என்பது சிறப்பாகக் குறிப்பிடத்தகக்து. முழுமை அறிவியல் உதயம் என்னும் இதழில் ஐன்சுட்டீனின் பொதுச்சார்பியல் கொள்கையின் (Einstein’s General Theory of Relativity) 100-ஆவது ஆண்டுநிறைவை ஒட்டி விரிவான பெருங்கட்டுரைத் தொடர் ஒன்றைத் தமிழில் அண்மையில் எழுதியுள்ளார். இத்தொடரின் கடைசி கட்டுரை எழுதியவுடன் தற்செயலாய் இதற்கு முத்தாய்ப்பு வைத்தாற்போல் பொருளீர்ப்பு அலைகளை (Gravitational waves) பிப்பிரவரி 11, 2016 அன்று LIGO என்னும் ஆய்வுநிறுவனத்தார் செய்முறையில் கண்டுநிறுவினார்கள்.
தெருவிளக்கில் படித்து உலக அளவில் அறிவியலாளராக உயர்ந்த, நோபல் பரிசாளருடன் இணைந்து கட்டுரை எழுதிய, பெருமைமிகு விருதுகள் பலபெற்ற பேராசிரியர் க. பாசுக்கரன் அவர்களை இந்தவார வல்லமையாளாராக அறிவித்து மகிழ்கின்றோம். அவருக்கு நம் பாராட்டுகள்.
நூற்துணையும் குறிப்புகளும்:
[1] புதிய தலைமுறை இதழ் (23, ஆகத்து 2010)
[2] தமிழ்விக்கிப்பீடியா கட்டுரை க. பாசுக்கரன் (https://ta.wikipedia.org/s/2yzm)
[3] ஆங்கில விக்கிப்பீடியா [https://en.wikipedia.org/wiki/Ganapathy_Baskaran
[4] முழுமை அறிவியல் உதயம் இதழ்.
[5] செ.இரா.செல்வக்குமாரிடம் நேரில் தெரிவித்த செய்திகள்.
-மலர் சபா
மதுரைக் காண்டம் – 07: ஆய்ச்சியர் குரவை
படர்க்கைப் பரவல்
மூன்று உலகங்களையும்
தன் இரண்டு அடிகளுக்குள் அடக்கி அளந்ததால்
சிவந்த பாதங்கள் மேலும் சிவக்கும் வண்ணம்,
தன் தம்பியாகிய இலக்குவனோடு
காட்டிற்குச் சென்றவன்;
‘சோ’ என்னும் அரணும்
அதனுள்ளே இருந்த அரக்கர்களும் 
அழிந்து போகச் செய்தவன்;
பழமையான இலங்கை நகரின்
காவலையும் அழித்தவன்;
இத்தகைய சிறப்புடைய
திருமாலின் புகழையும் சிறப்பையும்
கேட்காத செவியும் ஒரு செவியா?!
தேவர்கள் எல்லார்க்கும் பெரியவன்;
மாயங்களில் வல்லவன்;
உலகங்கள் யாவையும் படைக்கின்ற
உந்திக் கமலத்தை உடையவன்;
கண்களும் திருவடிகளும் கைகளும்
அழகிய வாயும்
சிவந்து விளங்கும் கரிய நிறமுடையவன்;
இவனைக் காணாத கண்களும்
என்ன கண்களோ?!
கண்டது இமைத்திடும் கண்களும்
என்ன கண்களோ?!
அறியாமை கொண்ட மனத்தினை உடைய
மாமன் கம்சன் புரிந்த
வஞ்சகச் செயல்களில் இருந்து தப்பி,
அவனை வென்றவன்;
நான்கு திசைகளிலும் உள்ளவர் போற்ற,
பின்தொடர்ந்து வந்த வேதங்கள் முழங்க,
பாண்டவர்களுக்காகத் துரியோதனனிடம்
தூது சென்ற ஆயக் கண்ணனைப்
போற்றாத நாவும் என்ன நாவோ?!
‘நாராயணா’ என்று கூறாத
நாவும் என்ன நாவோ?!
வாழ்த்து
நாம் குரவைக் கூத்தில் போற்றிய கடவுள்
நமது ஆநிரைகளுக்கு நேரக்கூடிய
துன்பத்தைப் போக்கிடுக!
வெற்றி தரும் இடியைப் படையாகக் கொண்ட,
இந்திரனின் தலையில் உள்ள
முடியணியை அணிந்ததால்
கொண்ட வெற்றியையும்,
தொடி அணிந்த தோளினையும் உடைய
பாண்டியனின் குறுந்தடியால் அறையப்படும்
வெற்றி முரசானது
வேற்றரசர்கள் நடுங்கும்படி
நாள்தோறும் பகைவர்களைக் கொன்று
வெற்றியைக் குவித்து விளங்குவதாக…
என்றே வாழ்த்தினர்.
ஆய்ச்சியர் குரவை முற்றியது; அடுத்து வருவது ‘துன்ப மாலை‘
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram9.html
படத்துக்கு நன்றி: கூகுள்
–செண்பக ஜெகதீசன்
அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும். (திருக்குறள் -1047: நல்குரவு)
புதுக் கவிதையில்…
வறுமை கொடிதுதான்,
வந்தால் அது
அறமல்லாத வழியில்,
அன்னை கூட
மகனைப்
பெற்றதை மறந்து
பிறரைப்போலப் பார்ப்பாள்…!
குறும்பாவில்…
அறவழியிலல்லாமல் வறுமை வந்தால்,
அன்னை கூட மகனை
அயலானாய்த்தான் கருதுவாளே…!
மரபுக் கவிதையில்…
பெற்ற தாயவள் பிள்ளையினைப்
பிடிக்கும் வறுமையில் விடமாட்டாள்,
தொற்றிடும் வறுமை வந்ததவன்
தீய வழியெனத் தெரிந்துவிட்டால்,
முற்றிலும் மகனை வெறுத்தேதான்
மனதைப் பாறாங் கல்லாக்கி
மற்றவர் முன்பும் மதிக்காமல்
மாற்றான் போல நினைப்பாளே…!
லிமரைக்கூ…
புறவழியில் வறுமை வந்தது,
பிள்ளையை வேறாயப் பார்க்கக்
காரணம் தாய்மனம் நொந்தது…!
கிராமிய பாணியில்…
கொடியதுகொடியது வறுமகொடியது
வாழ்வுலவரும் வறுமகொடியது,
பெத்ததாயும் உடமாட்டா
புள்ளயத்தான் வறுமயிலவாட…
ஆனா,
கெட்டவழில வறுமவந்தா
எட்டிக்கூட பாக்கமாட்டா
புள்ளய
பெத்ததாயும் பாக்கமாட்டா,
புள்ளயாத்தான் பாக்கமாட்டா
பெறத்தியாராப் பாப்பாளே…
அதால
கொடியதுகொடியது வறுமகொடியது
வாழ்வுலவரும் வறுமகொடியது…!
மீ.விசுவநாதன்
நண்பரெலாம் காணும் பேறு
நான்காண வில்லை என்னும்
எண்ணத்தை விட்டு விட்டேன் !
இருக்கின்ற நல்ல நூல்கள்
கண்திறக்கும் பண்பு கூட்டும்
காலத்தை வென்று நிற்கும்
வண்மைகளை பெற்று வந்து
வம்சத்தை வாழ்த்தும் என்பேன்!
பாரதியை நித்தம் கொஞ்சம்
படித்தாலே ஞானம் கூடும் !
ஈரடியாய் உள்ள அந்தத்
திருக்குறளைத் தொட்டு விட்டால்
பேரறிவைப் பெற்று உள்ளம்
பெரியதாக மாற்றங் காணும் !
சாரமிதைக் கண்டு விட்டேன்
சாகாத யோகம் பெற்றேன் !
(06.03.2016)
(அறுசீர் அரையடி வாய்ப்பாடு:
காய், மா, மா)
– தேமொழி.
மொய்கொண் டெழுந்த அமரகத்து மாற்றார்வாய்ப்
பொய்கொண் டறைபோய்த் திரிபவர்க் கென்கொலோ?
மையுண் டமர்ந்தகண் மாணிழாய்! சான்றவர்
கையுண்டும் கூறுவர் மெய்.
(முன்றுறையரையனார், பழமொழி நானூறு)
பதம் பிரித்து:
மொய்கொண்டு எழுந்த அமரகத்து, மாற்றார் வாய்ப்
பொய் கொண்டு, அறைபோய்த் திரிபவர்க்கு என்கொலோ?-
மை உண்டு அமர்த்த கண் மாணிழாய்!-சான்றவர்,
கை உண்டும், கூறுவர் மெய்.
பொருள் விளக்கம்:
ஒருவருக்கொருவர் கொண்ட பகையினால் தோன்றிய போரில், எதிரி வழங்கும் பொய்யான உறுதிமொழியில் மயங்கி, பொருளாசை கொண்டு எதிரியுடன் இணைந்து இரண்டகம் செய்பவரை என்னவென்பதோ? அழகிய மைதீட்டிய கண்களையும் அணிகலன்களையும் கொண்டவரே; சான்றோர் (எனப்படுபவர் தனது) வாழ்வாதாரமே அடுத்தவரை நம்பி இருந்தாலும்கூட அவருக்காகச் சார்புநிலையினை மேற்கொள்ளாது நடுநிலை வழுவாது உண்மை மட்டுமே உரைப்பர். ‘அறைபோய்த் திரிபவர்’ என்பது கையூட்டு பெற்று எதிரணியில் சேர்ந்து தீமைக்கு உடன் போவாரைக் குறிக்கிறது.
பழமொழி சொல்லும் பாடம்: சான்றோர் பிறரைச் சார்ந்து வாழவேண்டிய சூழ்நிலையிலும் அவர்களுக்காகச் சார்புநிலை கொள்ளாது, நடுநிலை தவறாது மெய்யுரைப்பர். நடுநிலை மாறாத சான்றோர் சிறப்பினைக் கூறுமிடத்து வள்ளுவர்,
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி. (குறள்: 115)
ஏற்றத் தாழ்வுகள் வாழ்க்கையில் இயல்பாக இருப்பினும், எந்த நிலையிலும் மனதில் நடுநிலை மாறாது செயல்படுவது சான்றோருக்கு அழகு என்கிறார். மேலும்,
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி. (குறள்: 118)
எப்பக்கமும் சாராது, சமநிலை கொண்ட துலாக்கோல் போல நடுவுநிலைமை போற்றுவது சான்றோர்க்கு அழகு என்றும் அறிவுறுத்துகிறார்.
-மேகலா இராமமூர்த்தி
இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்குரிய புகைப்படத்தின் உரிமையாளர் திரு. பிரேம்நாத் திருமலைசாமிக்கும், அவரின் புகைப்படத்தைப் போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்துள்ள வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும் வல்லமை இதழின் நன்றி!
’இல்லறமல்லது நல்லறமில்லை’ என்பது முதுமொழி. ’அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை’ என்பது வாழ்வியல் அறிஞர் வள்ளுவரின் வாய்மொழி. இவ்வினிய இல்லறத்தைத் தொடங்கிவைப்பது இருமனங்கள் இணையும் திருமணம் எனும் மங்கல நிகழ்வு.
’உழுந்து தலைப்பெய்த கொழுங்களி மிதவையோடு’ மிக எளிமையாய்த் தமிழர் திருமணம் நிகழ்ந்ததோர் பொற்காலம்! அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல் உள்ளிட்ட பல்வேறு வதுவைச் சடங்குகளை உள்ளடக்கியதாய் அது விரிவடைந்தது பிற்காலம்!
திருமணம் என்பது இலட்சக்கணக்கான பொருட்செலவில் நிகழும் ஆடம்பரச் சடங்காய், வரதட்சணை எனும் பெயரில் பெண்ணை விலைபேசும் வியாபாரமாய் மாறிவிட்டிருப்பது தற்காலம்! இந்நிலை மாறி, திருமணம் காதலின் அடிப்படையில், எளிமையும், இனிமையும் நிறைந்ததாய் மாறும் காலம் எக்காலம்?
***
இவ்வாரக் கவிதைப்போட்டியை அணிசெய்திருக்கும் மணியான கவிதைகளைப் படித்துச் சுவைக்கும் நேரமிது!
மறக்கமுடியாத இனிய நிகழ்வுகளை உள்ளடக்கிய திருமணச் சடங்குகளை அழகிய சொல்மலர்களெடுத்து விளக்கியிருக்கின்றார் திரு. க. கமலகண்ணன்.
அக்னியைச் சுற்றி
அம்மி மிதித்து
அருந்ததியைப் பார்த்து
அனைத்து உறவுகளும்
அருகிலே இணைந்திருக்க
அருமையான தருணத்தில்
அட்சதையைக் கரங்களால்
அனைவரும் தூவ இனி
அன்பு மனைவி இவள் என்று
அருகில் அமர்ந்து மங்கள தாலியை
அணிவிக்க மறக்க முடியாத நினைவுகளை
அத்துணை சுலபத்தில் மறக்க முடியுமா
அந்த அம்மி காத்திருக்கிறது
அழகிய மணமகளின் கால் மிதிக்க
அக்னி அம்மி குத்துவிளக்கு மரக்காலில் நெல்
அனைத்துடன் ஒளிஓவியக் கருவிகளும்
அற்புத நிமிடங்களைப் பதிவு செய்ய
அன்புடன் இணைந்து கொண்டது இப்போது
அளவில்லா ஆனந்தம் எப்போதும்
அரிய நினைவுகளை நினைவுகூர…
***
சமையல் உபகரணமாயிருந்த அம்மி, சடங்கு உபகரணமாகிக் கரணம் (திருமணம்) முடிந்ததும் மூலையில் முடங்கிக் கண்ணீர் வடிக்கின்றது என்று வேதனையுறுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.
சமையல் உபகரணம்
சடங்கு உபகரணமாகி,
வேலை முடிந்ததும்
மூலையில் வைக்கப்படுகிறது..
அம்மி மிதித்தவர்களும்
அங்கே வேடிக்கை பார்த்தவர்களும்,
அகன்றுவிட்டனர்
அதை
அம்போ என விட்டுவிட்டு..
மெல்லியலார் கைகளால்
மிளகரைத்த காலத்தையும்,
மின் உபகரணங்கள் வரவால்
மறக்கப்பட்டு
புறந்தள்ளப்பட்ட கதையையும்
எண்ணிக்
கண்ணீர் வடித்துக் காத்திருக்கிறது–
அடுத்த
கல்யாணத்திற்காக…!
***
’அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும் சம்பிரதாயமெல்லாம் பொருள்பொதிந்தவையே; வெறும் பொழுதுபோக்கல்ல’ என்கிறார் திரு. மெய்யன் நடராஜ்.
அம்மி மிதித்து அருந்ததி பார்க்கின்றச்
சம்பிர தாயச் சடங்கினைக் – நம்முன்னோர்
உண்டாக்கி வைத்ததெலாம் ஒப்புக்கு அல்லவே
கண்ணுற்றால் அர்த்தங்கள் நூறு.
***
’வல்லமைமிகு வட்டெழுத்தே இல்லறம் எனப் போற்றுவர் பண்பாட்டுக் காவலர்; அந்நல்லறத்தை உணராத அறிவிலிகளோ அதனை நீர்மேல் எழுத்தெனச் சாற்றுவர்’ என்கிறார் திருமிகு. மலர்விழி மங்கையர்க்கரசி.
இரட்டைநாயனமாய் எங்கும்
இணைந்த இசைச்சங்கமமே
குடும்பகீதம் என்றே உணர்த்திநிற்பன
இரட்டைக் குத்துவிளக்குகளே!
தொல்காப்பியன் சொன்ன
மெய்ப்பாடெட்டையும் அன்புநீர்பெய்து
அருஞ்சுவைதுவையலாய் நிகழ்வுகள்
வழங்கி நீடூழிவாழ்வதே நல்லறஇல்லறமே
ஈதுணர்த்தும் அம்மிக்கல் குழவி.
நிறைநாழி நெல்நிறைத்தல்
பறைசாற்றிப் பாரம்பரியம்போற்றி
விதைநெல்லாய் வாழ்ந்துசிறக்கவே!
அடியிரண்டு இணைநிற்கும்பாதங்கள்
ஆளுக்கொன்றாய் அறுத்தோடி விலகாது
அருகருகே அன்பாலிணைத்த இருகோடுகளே!
இப்போது அறிவிலிகள்
அரற்றுவர் தண்ணீரில்எழுத்தெனவே
எப்போதும் பண்பாட்டுக்காவலர்
போற்றுவர் வல்லமைமிகு வட்டெழுத்தேயது!
***
படத்தில் காணக்கிடைக்கும் மங்கலப்பொருள்கள் ’இல்லறத்தில் இல்லாததொன்றில்லை’ என்பதையே குறிப்பால் உணர்த்துகின்றன என்பது திரு. மதிபாலனின் கருத்து.
துன்பத்தை தூளாய் ஆக்கி
துயரத்தை அரைக்கும் அம்மி
இன்பத்தை எடுத்துக் காட்ட
இதம்தரும் மல்லி கைப்பூ
அன்பென்னும் ஒளியை வீச
அழகான விளக்கி ரண்டு
என்னதான் இங்கே இல்லை
இருவரும் சேர்ந்து வாழ !
***
திருமணவாழ்வு, அம்மியில் அரைபடும் அவல வாழ்வாயில்லாமல் செம்மையாய்ச் சீராய் அமைதலே நலம்; ஆதலால் நீக்கிடுக தேவையற்ற சுயநலம்” என விளம்புகின்றார் திருமிகு. வேதா இலங்காதிலகம்.
சிந்திய அறுகரிசி சிதறிய பூக்களுமாயிது
எந்த வகையிலோ மனக்கோல முடிவிது.
பந்தங்கள் நிற்பது சீதனப் பொருட்களின்
பக்கமாயும் இருக்கலாம் என்றும் கொள்கிறேன்.
அம்மியில் அரைபடும் வாழ்வாக பலரது
செம்மையாம் திருமண வாழ்வு அமைகிறது.
அம்மையப்பன் போல பத்திரமாக நடுவிலது
அமைவாகும் புகைப்படக்கருவியேன் புரண்டு கிடக்கிறது!
குளப்பத்தின் பின்னரான ஒரு ஓய்வா!
அளப்பரிய புயலுக்குப் பின்னான அமைதியா!
விளக்கங்கள் அம்மி, அருந்ததி, விளக்கிற்கெனவோ
வளமாகப் பலவுண்டு, வழக்கிலிவையெங்கே போகிறதோ!
அலைந்த ஆதிவாழ்வு அமரிக்கையாய் தாலிக்கட்டுக்குள்ளானது.
அந்த நிலைமாறி ஆதி நிலைக்கின்றிது
தலைகீழாகிறது தடுப்பாரெவரோ! வழி எதுவோ!
விலையற்ற கலாச்சாரம் பேணிக் காக்கப்படவேண்டும்!
***
ஆணும் பெண்ணும் இல்வாழ்வில் இணையப் பாலமாய் விளங்கும் ’ஆயிரங்காலத்துப் பயிரான’ திருமணத்தில் நிகழ்த்தப்பெறும் சடங்குகளின் உட்பொருளை நுட்பமாய்த் தன் கவிதையில் நுவலுகின்றார் திருமிகு. சரஸ்வதி ராஜேந்திரன்.
எதிர்கால ஒழுக்கத்திற்கு
அக்னி சாட்சி
படியைத்தாண்டமாட்டேன் என்பதே
அம்மி மிதித்தல்
நிரந்தர கற்பு நட்சத்திரமாக மின்ன
அருந்ததி பார்த்தல்
பாலோடுசேர்ந்தபழம்போல் சுவைபெற
பால் பழம் சாப்பிடல்
பூ மணம் போல் புகழ் பரப்புவோம்என
பூமணம் இடுவது
ஒரு முடிச்சு கணவனுக்கு
இரண்டாவது முடிச்சு
தாய் தந்தையருக்கு
மூன்றாவது முடிச்சு
தெய்வத்துக்கு அடங்கி போக
மூன்று முடிச்சு
பெண்ணுக்கு தற்காப்பு வேண்டும்அது
காப்பு கட்டல்
இதன் அர்த்தம் புரிந்து
ஆணும் பெண்ணும்
இணைந்து வாழ்தலே நல்ல இல்லறம்
வருவது ஒருமுறை
அருமை புரிந்து வாழ்வது நடை முறை
***
வாழ்க்கையெனும் பெருங்கடலை ’நம்பிக்கை’ எனும் துடுப்பின் உதவிகொண்டு மணமகனும் மணமகளும் கடக்கவேண்டும் என நல்லுரை பகர்கின்றார் திரு. நீலமேகம் ராமலிங்கம் சஹஸ்ரநாமன்.
அன்றே அய்யன் திருவள்ளுவர்
மனத்தை மலராக உவமையாக்கினார்
இரு மனங்களும் சேருவது திருமணம்
மணமகன் உயிராகவும் , அச்சாணியாகவும்
மணமகள் உடலாகவும், சக்கராமாகவும்
வாழ்க்கை என்ற இல்லறக் கடலை
நம்பிக்கை என்ற துடுப்புடன் கடக்கட்டும்
தங்கம் தற்சமயத்தில் பலரக்கும் எட்டாதொன்று
பூவோ அனைவருக்கும் எட்டுமொன்று
அம்மியை மிதக்கிறமோ , இல்லையோ
மம்மியை (தன் அம்மாவை) மதிக்க வேண்டும்
அருந்ததியை பார்க்கிறமோ , இல்லையோ
அன்பு, அடக்கம், கருணை, கடமை
ஆணவமின்மை, பொறுமை, கோபமின்மை
என்ற நற்குணங்குணங்கள் இருப்பவர்களாக
இருத்தல் அவசியம்…
***
சிந்தனைக்கு விருந்தாய் நல்ல கவிதைகளைப் படைத்திருக்கின்றீர்கள் கவிஞர்களே! பாராட்டுக்கள்!
***
இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வாகியிருப்பது யார் என்பதை அடுத்து அறிந்துவருவோம்!
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது என்பது தெய்வ(ப்புலவரின்) வாக்கு. இன்றோ பல திருமணங்கள் அன்பும் பண்புமின்றிச் சந்தேகப் புயலிலும் வரதட்சணைச் சூறாவளியிலும் சிக்கிச் சின்னாபின்னமாகி வருவதை நாளுக்குநாள் நீதிமன்றங்களில் நீண்டுநிற்கும் மணவிலக்கு வழக்குகள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன! அப்படியானால் அம்மியும் அருந்ததியும் மணவிழாவில் இடம்பிடிப்பதன் நோக்கந்தான் என்ன? மனிதர்களின் கல்மனத்தையும், மின்னிமறையும் நட்சத்திர இயல்பையும் உணர்த்தத்தானோ? என வேதனையோடு இன்றைய நடப்பைப் பேசும் ஒரு கவிதை நெஞ்சைத் தொடுகின்றது!
எத்தனை சாட்சிகள்
இருந்தால் என்ன…
ஆயிரங் காலத்துப்பயிர்
சந்தேகப் புயலிலும்
வரதட்சணை சுனாமியிலும்
பொருந்தா மனப் புழுதியிலும்
அகந்தைபிடித்தாட்டும் பனிப்பொழிவிலும்
சின்னாபின்னப்பட்டுப் போகிறதே…
அம்மி மிதித்தல்
அவ்வப்போது மனம் கல்லாதல்,
அருந்ததி பார்த்தல்
மின்னி மறையும நட்சத்திரமாய்த்
தொலைந்து போதல்,
குத்துவிளக்கேற்றி வைத்து
அடியிலிருக்கும்
இருளையே மனதில் நிறைத்தல்,
மூன்று முடிச்சு
முடிந்தால் கழுத்தை இறுக்கும்,
பெண்ணிற்கோ
அவசியப்படாத அடையாளமாய்…
எல்லாம் மங்கலமே…
சிதறு தேங்காயாய்
வாழ்க்கையைப் பிரித்து மேய்ந்து
முகநூல்களிலும், இணையங்களிலும்
பேருக்கு வாய்க்கும்
பொருந்தா நட்பின்
சந்தர்ப்பவாதங்களினாலும், காமத்தாலும்
பிரிவதற்கென்றே
குடும்ப
வழக்கு மன்றங்களில்
அலைந்து கொண்டிருப்போர்க்கு
இவை யாவும்
அஃறிணைப் பொருட்களே…
’மனப்பொருத்தமில்லா மணவாழ்வு, (நறு)மணமில்லா வருத்தமிகு வாழ்வே!’ என்பதை உணர்த்தியிருக்கும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. இளவல் ஹரிஹரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவிக்கின்றேன்.
***
தன் மணவாழ்வின் மங்கல நிகழ்வுகளை மணம்வீசும் மலரும் நினைவுகளாய் மீட்டிப்பார்க்கும் மங்கை இவள்!
மஞ்சள் குங்குமங் கலந்தே
நெஞ்சக் குடிலினுள் நீ
குடி புகுந்த வேளையதை
சூடி விட்ட மல்லிகையும்
கூடி நின்ற ஆன்றோரின்
தேடி வந்த அட்சதையும்
வாழ்க என்ற வாழ்த்துகளும்
சூழ்ந்து வந்த சுற்றமும்
அம்மி மிதிக்கையிலே
அம் மெட்டி நீ சூட்டும்
அழகிய நினைவுகளும்
ஒழுக்கத்தில் அருந்ததியை
முழுவதுமாய் கொண்டிரு
என்றுன் கை பிடித்து
வான் ஒளிரும் நட்சத்திரமொன்றை
பகலவனின் பகலொளியில்
அகத்தினிலே வேண்டியதும்
அக்கினியின் சாட்சியத்தில்
இக் கன்னியின் கழுத்தில்
மாங்கல்யம் சூட்டியதும்
மங்காது என்னுள்ளே இன்று
மீண்டும் இனிமையுடன்…
காணும் மணவிழாவில்
தேனாய்த் தித்தித்தே
மனதை நிறைக்கிறது…
’நினைத்தாலே இனிக்கும்’ தன் திருமண நாளை மங்கையொருத்தியின் வார்த்தைகளாய்த் தேர்ந்தசொற்களில் விவரித்திருக்கும் திருமிகு. புனிதா கணேசனின் இக்கவிதைக்கு என் பாராட்டுக்கள்!