நான் அறிந்த சிலம்பு – 199
-மலர் சபா
மதுரைக் காண்டம் – 07: ஆய்ச்சியர் குரவை
படர்க்கைப் பரவல்
மூன்று உலகங்களையும்
தன் இரண்டு அடிகளுக்குள் அடக்கி அளந்ததால்
சிவந்த பாதங்கள் மேலும் சிவக்கும் வண்ணம்,
தன் தம்பியாகிய இலக்குவனோடு
காட்டிற்குச் சென்றவன்;
‘சோ’ என்னும் அரணும்
அதனுள்ளே இருந்த அரக்கர்களும் 
அழிந்து போகச் செய்தவன்;
பழமையான இலங்கை நகரின்
காவலையும் அழித்தவன்;
இத்தகைய சிறப்புடைய
திருமாலின் புகழையும் சிறப்பையும்
கேட்காத செவியும் ஒரு செவியா?!
தேவர்கள் எல்லார்க்கும் பெரியவன்;
மாயங்களில் வல்லவன்;
உலகங்கள் யாவையும் படைக்கின்ற
உந்திக் கமலத்தை உடையவன்;
கண்களும் திருவடிகளும் கைகளும்
அழகிய வாயும்
சிவந்து விளங்கும் கரிய நிறமுடையவன்;
இவனைக் காணாத கண்களும்
என்ன கண்களோ?!
கண்டது இமைத்திடும் கண்களும்
என்ன கண்களோ?!
அறியாமை கொண்ட மனத்தினை உடைய
மாமன் கம்சன் புரிந்த
வஞ்சகச் செயல்களில் இருந்து தப்பி,
அவனை வென்றவன்;
நான்கு திசைகளிலும் உள்ளவர் போற்ற,
பின்தொடர்ந்து வந்த வேதங்கள் முழங்க,
பாண்டவர்களுக்காகத் துரியோதனனிடம்
தூது சென்ற ஆயக் கண்ணனைப்
போற்றாத நாவும் என்ன நாவோ?!
‘நாராயணா’ என்று கூறாத
நாவும் என்ன நாவோ?!
வாழ்த்து
நாம் குரவைக் கூத்தில் போற்றிய கடவுள்
நமது ஆநிரைகளுக்கு நேரக்கூடிய
துன்பத்தைப் போக்கிடுக!
வெற்றி தரும் இடியைப் படையாகக் கொண்ட,
இந்திரனின் தலையில் உள்ள
முடியணியை அணிந்ததால்
கொண்ட வெற்றியையும்,
தொடி அணிந்த தோளினையும் உடைய
பாண்டியனின் குறுந்தடியால் அறையப்படும்
வெற்றி முரசானது
வேற்றரசர்கள் நடுங்கும்படி
நாள்தோறும் பகைவர்களைக் கொன்று
வெற்றியைக் குவித்து விளங்குவதாக…
என்றே வாழ்த்தினர்.
ஆய்ச்சியர் குரவை முற்றியது; அடுத்து வருவது ‘துன்ப மாலை‘
அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram9.html
படத்துக்கு நன்றி: கூகுள்
