செண்பக ஜெகதீசன்

அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்.  (திருக்குறள் -1047: நல்குரவு) 

புதுக் கவிதையில்… 

வறுமை கொடிதுதான்,
வந்தால் அது
அறமல்லாத வழியில்,
அன்னை கூட
மகனைப்
பெற்றதை மறந்து
பிறரைப்போலப் பார்ப்பாள்…! 

குறும்பாவில்…

அறவழியிலல்லாமல் வறுமை வந்தால்,
அன்னை கூட மகனை
அயலானாய்த்தான் கருதுவாளே…! 

 மரபுக் கவிதையில்…

பெற்ற தாயவள் பிள்ளையினைப்
     பிடிக்கும் வறுமையில் விடமாட்டாள்,
தொற்றிடும் வறுமை வந்ததவன்
   தீய வழியெனத் தெரிந்துவிட்டால்,
முற்றிலும் மகனை வெறுத்தேதான்
  மனதைப் பாறாங் கல்லாக்கி
மற்றவர் முன்பும் மதிக்காமல்
   மாற்றான் போல நினைப்பாளே…! 

லிமரைக்கூ… 

புறவழியில் வறுமை வந்தது,
பிள்ளையை வேறாயப் பார்க்கக்
காரணம் தாய்மனம் நொந்தது…! 

கிராமிய பாணியில்… 

கொடியதுகொடியது வறுமகொடியது
வாழ்வுலவரும் வறுமகொடியது,
பெத்ததாயும் உடமாட்டா
புள்ளயத்தான் வறுமயிலவாட… 

ஆனா,
கெட்டவழில வறுமவந்தா
எட்டிக்கூட பாக்கமாட்டா
புள்ளய
பெத்ததாயும் பாக்கமாட்டா,
புள்ளயாத்தான் பாக்கமாட்டா
பெறத்தியாராப் பாப்பாளே… 

அதால
கொடியதுகொடியது வறுமகொடியது
வாழ்வுலவரும் வறுமகொடியது…!

 

 

1 thought on “குறளின் கதிர்களாய்…(111)

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க