நடராஜன் கல்பட்டு

அன்பு மணிமொழி,

உன் கடிதம் கிடைத்தது. “இத்தனை நாட்களாய் ஏன் மவுனம்?” என்று கேட்கிறாய். காரணம் இன்றி எதுவும் நிகழாது இவ்வுலகில்.

உனது கடிதம் இவ்வளவு நாளாய் என் மனதுள் அடக்கி வைத்திருந்த ஒன்றினை மடை திறந்த வெள்ளமாய்ப் பெருகிடச் செய்து விட்டது. உன்னிடம் பகிர்ந்து கொள்ளாது யாரிடம் சொல்வேன் இத்தனை நாட்களாய் என் மனதுள் அடக்கி வைத்திருந்தவற்றை?

மறந்திடவில்லை நான் உன்னோடு பழகிய நாட்களை. ஒரு நாளா இரண்டு நாளா? பதினோறு ஆண்டுகள் ஒரே பள்ளியில் படித்தோமே நாம்.. ஒன்றாய்ச் செல்வோம் பள்ளிக்கு. நன்றாய்ப் படித்தோம். உன் வீட்டிலே உனக்கு நாட்டியம் கற்றுத் தந்தார்கள். எதைச் சொல்ல வந்தாலும் நீ அபிநயத்துடந்தான் பேசுவாய் என்று கிண்டலடிப்பேன் நான். என் வீட்டில் எனக்கு பாட்டு சொல்லிக் கொடுத்து வந்தார்கள் என்பதால் நான் எதையும் இசை வடிவில் சொல்வேன் என்பாய் நீ பதிலுக்கு.

நினைவிருக்கிறதா உனக்கு? எனக்கு பாட்டு சொல்லித் தர வந்தவர் ஒரு முறை எத்தனை திருத்தினாலும் ஒரு சங்கதியைத் தப்பாய் நான் பாடிய போது கோபம் அடைந்து என்னை அடிக்கத் தன் குடையை உயர்த்த, அருகில் இருந்த என் பெரிய அண்ணன் பாய்ந்து வந்து அவர் கைக் குடையைப் பிடுங்கி வாசலில் தூக்கி எறிய அவர் அன்றோடு நின்றது? அன்று நீயும் இருந்தாய் எங்கள் வீட்டில்.

அதன் பின்னர் உங்கள் அப்பாவிற்கு பங்களூருக்கு மாற்றலாகிட நாம் இருவரும் கண்ணீர் சிந்திப் பிரிந்தோம். ஆனாலும் நீ விடுமுறை நாட்களில் ஊருக்கு வரும்போதெல்லாம் நாம் சந்திப்போம். மணிக் கணக்கில் பேசிக் கொண்டிருப்போம் விஷயம் இருக்கிறதோ இல்லையோ. அம்மா கையில் டிபன் தட்டோடு வந்து ஒரு அதட்டல் போடும் போது தான் நாம் இந்த உலகத்துக்கு வருவோம்.

நீ பங்களூரு சென்ற பின் நான் வேறு இருவரிடம் பாட்டு கற்றுக் கொண்டேன். அதில் ஒருவர் அண்ணாமலை சர்வ கலா சாலையில் படித்த சங்கீத பூஷணம். உனக்குதான் தெரியுமே சங்கீதம் என்றால் எனக்கு உயிர் என்று.

நான் ப்ளஸ் ஒன் முடித்த போதே என் அப்பா என்னை “ஒன் ப்ளஸ் ஒன்” ஆக்கிடும் முயற்சியில் ஈடுபட ஆரம்பித்தார், அதான் என் கல்யாணத்திற்காக மாப்பிள்ளை தேட ஆரம்பித்தார். எனக்கு அந்த சின்ன வயதிலேயே கல்யாணம் செய்து கொள்வதில் சிறிதும் இஷ்டம் இல்லை. நாம் சொல்வதை வீட்டில் யார் கேட்பார்கள்?

“காலா காலத்தில் கல்யாணம் பண்ணி விட வேண்டும்” என்பது அம்மாவின் ராம ஜபம். அப்பாவோ வசதியான பையனைப் பிடிக்க வேண்டும் என்பதிலே குறி. என் விருப்பம் என்ன என்பதைப் பற்றி இருவருக்கும் சிறிதும் அக்கறை இல்லை.

உனக்கும் தெரியும் என் படிப்பு பாதியில் நின்றதும், என் கல்யாணம் நடந்ததும். நீயும் வந்திருந்தாய் என் கல்யாணத்திற்கு.

மாப்பிள்ளையைப் பார்த்த போது நீ என்ன சொன்னெ? “நீ குடுத்து வெச்சவடீ. பேருக்கேத்தாப்புளெ ராஜாவாட்டம் தாண்டீ இருக்கார் அவர்” அப்பிடீன்னு சொன்னெ.

“ஒனக்கென்னடீ. புருஷனுக்கு மெட்ராஸுலெ வேலெ. பழசெல்லாம் மறந்தூடுவையா? எங்களெல்லாம் நீ நெனெப்புலெ வெச்சுப்பையா இல்லியா?” இந்தக் கேள்விகள் நீயும் மத்த ஃப்ரெண்டுசுமாக் கேட்ட கேள்விகள்.

“எப்டிடீ மறப்பேன் ஒங்களெ எல்லாம்?” திருப்பிக் கேட்டேன் நான்.

“ஒன் சங்கீதம் என்னடீ ஆகும்? அவருக்கும் புடிக்குமா கர்னாடக சங்கீதம்?” அப்பிடீன்னு நீ கேட்டே.

“சங்கீதம் ஒண்ணும் ஆகாது. அதுலெ எனக்கிருக்கற ஆர்வம் ஒரு நாளும் கொறையாது. அவருக்கு கர்னாடக சங்கீதம் புடிக்குமா புடிக்காதான்னு அங்கே போனப்புறந்தான் தெரியும்” என்றேன் உன் கேள்விக்கு பதிலாய்.

என் மெட்ராஸ் வாசம் ஆரம்பித்தது. வீட்டில் என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் என் மனதுக்குள் ஏதாவது பாடிக் கொண்டே இருப்பேன்.

ஒரு நாள் ராத்திரி ஏழரை மணிக்கு எம். எஸ். சுப்புலக்ஷ்மி அம்மாவோட கச்சேரி. அவர் இசைக்கு இந்த ஒலகத்துலெ ஏது ஈடு? ஆனந்தமாய் ஆரம்பிச்சாரு, “வாதாபி கணபதிம் பஜே” ன்னு ஹம்ஸத்வனி ராகத்துலெ. என்னை அப்படியே ஏதோ ஒரு வேறெ ஒலகத்துக்கு இழுத்துண்டு போச்சு அந்த இசை.

வாசல் கதவு தட்டுற சத்தம் கேட்க போய்க் கதவைத் திறந்தேன். “எத்தெனெ வாட்டி தட்றது? என்ன பண்ணிண்டு இருக்கே?” என்றார் என் வீட்டுக்காரர்.

“ரேடியோலெ பாட்டு”. சொல்ல வந்ததெ சொல்லி முடிக்கலே நான். நேரா ரேடியோ கிட்டே போன அவர் அதோட சுவிச்செ அணைச்சார். அந்த ரேடியோவெத் தூக்கி வாசல்லெ போட்டார். பின் தன்னோட ஆபீஸ் பேகிலேந்து ஏதோ ஒண்ணெ எடுத்து தன் காதிலெ மாட்டிண்டு, கட்டை விரல்களை கூரையைப் பாத்தாப்புளெ வெச்சிண்டு, மத்த விரலுங்களெ மடக்கிப் பிடிச்சிண்டு ஜிங்கு ஜிங்குனு குதிக்க ஆரம்பிச்சார்.

“ரேடியோலெ எம்.எஸ். கச்சேரி கேட்டுண்டு இருந்தேன். அதெப் போயி அணெச்சிட்டீங்களே?” ன்னேன்.

“ஒனக்கு சரிகமபதநிஸ தான் புடிக்கும்னா ஒனக்கும் வாங்கித் தறேன் இது போல ஒண்ணு. நீயும் காதுலெ மாட்டிண்டு கேளு” ன்னார் அவர்.

ஒரு நாள் சாயந்திரம் தியாகராஜரின் மோஹன ராக கீர்த்தைனையான “நன்னு பாலிம்ப நடச்சி வச்சீரீ ஓ” ங்கெற பாட்டெ பாடிண்டு இருந்தேன். சாயங்கால நெரமாச்சேன்னு வாசக் கதவெ மூடாமெ வெச்சிருந்தேன். எங்கம்மா சொல்லுவா, “மாலெ வேளெலெ வாசக் கதவெ மூடி வெச்சா வீட்டுக்கு வர லெக்ஷ்மி அப்பிடியே வீட்டுள்ளெ வராமெத் திரும்பப் போயிடுவா” ன்னு.

ஆபீசிலேந்து அன்னிக்கி சீக்கிரம் வந்த அவர் உள்ளெ வந்ததும் கத்தினார், “என்ன பாட்டு இது அர்த்தம் புரியாமெ? நிறுத்தறயா அதெ?” ன்னார்.

“தியாகராஜரெப் பாக்க ராமர் அவர் வீட்டுக்கே வராறாம். ‘என்னெக் காப்பாத்தறதுக்காக நடந்தே வந்தியா ராமா?’ ன்னு கேட்டு பாடறார் அவர்னு சொன்னேன்.

“நீ இப்பிடி வாசக் கதெவெத் திறந்து வெச்சிண்டு பாடினையானா ராமர் மட்டும் இல்லெ. ராவணனும் வருவான். நிறுத்துடீ ஒன் பாட்டெ” ன்னு எரிஞ்சு உழுந்தார்.

உனக்கும் தெரியும் “மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்” ன்னு கவிஞர் கண்ணதாசன் பாடினார்னு.

கணவன் அமைவதெல்லாம் யாரு கொடுக்கற வரமாண்டீ?

இப்பொ புரியறதாடீ நான் ஏன் இத்தென நாளா ஒனக்கு கடுதாசு எதுவும் போடலேன்னு?

கண்ணீருடன்,
கமலா

21-02-2013
சென்னை – 64.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *