தமிழ்த்தேனீ

                                    உ

                             கடவுள் துணை

அன்புள்ள மணிமொழிக்கு அன்புடன் தமிழ்நேசன் எழுதிக் கொள்வது

உங்கள் அனைவருக்கும்  எங்களது ஆசிகள்

அவ்விடத்தில்  உன்னுடைய கணவரும் எங்களது  மகனும் ஆன   திரு சித்திரைச்செல்வன் மற்றும்  எங்களது  பேரனும் , பேத்தியும்  உங்களின்  குழந்தைகளுமான  தயாநிதியும்    இளநகையும்  அனைவரும் நலம்தானே, மருமகளே நீயும்  நல்ல பெண்தான்  என்பதை நிரூபித்துவிட்டாய் . உனக்கும் எங்களது ஆசிகள் .

இவ்விடம் நானும்  லலிதாவும் நலம் உடலளவில் நலமாக இருக்கிறோம்,

என்னடா இப்படி உடலளவில் நலமாக இருக்கிறோம்  என்று எழுதியிருக்கிறேனே  என்பதைக் கூர்ந்து   கவனித்துப் புரிந்துகொண்டால்  எங்கள் இருவருக்கும்  உள்ளத்தளவிலும் நலம் கூடும்.

நிற்க  எப்போதோ நாங்கள் இருவரும்  உங்கள் காதலை ஏற்கவில்லை என்பதை இன்னமும் மனதில் வைத்துக் கொண்டு  அதன் பிறகு  நாங்கள் எத்தனையோ முறை உங்களை அன்பாலும் ,பாசத்தாலும்  நெருங்க முயன்றும், எங்களால் நெருங்க முடியவில்லை, நீங்கள் இருவருமே எங்களை நெருங்க விடவில்லை.

நாங்களும் மனிதர்களே  எங்களுக்கும் அன்பு பாசம் பந்தம் எல்லாமே உண்டு என்பதை நீங்கள் இருவருமே மறந்துவிட்டீர்கள். பரவாயில்லை காலம்  ஒருநாள் உங்களுக்கு எங்களின் உண்மையான பாசத்தையும் அன்பையும் உணர்த்தும், ஆனால் அப்போது நாங்கள் இந்த உலகத்தில் இருப்போமா  இல்லையா என்பது இறைவனே அறிவான்.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் நாங்கள் உங்கள் பேரில்  சரி சரி  எங்கள்  மகன் பேரில் வைத்திருந்த அன்பு மிகுதியின் காரணமாக அப்போதிருந்த மனநிலையில் உங்கள் காதலை  மறுத்திருக்கலாம்,

உங்கள் இருவருக்குமே தெரியும்  ஆஸ்தி , அந்தஸ்து , போன்றவைகளை எண்ணி நாங்கள் உங்கள் காதலை மறுக்கவில்லை. எங்கள் மகன் எங்களுடனே  கடைசீ வரை அன்புடனும் ,பாசத்துடனும்  இருக்கவேண்டும் என்று எண்ணியே காதல் எல்லாம் வேண்டாமே நல்ல பெண்ணாகப் பார்த்து நாங்களே மணமுடித்து வைக்கலாமே என்று எண்ணியே உங்கள் காதலை மறுத்தோம்.

அப்படியும் நீங்கள் இருவருமே உங்கள் காதலில் உறுதியாக இருப்பதைப் பார்த்து நாங்களாகவே முன்வந்து உங்கள் திருமணத்தை நடத்தி வைத்திருக்கலாம் நாங்கள் மறுக்கவில்லை,

நீங்களாகவே திருமணத்தை நடத்தியபோது  உன் பெற்றோரும்  நாங்களும்  மனம்விட்டுப் பேசி  உங்கள் திருமணத்தை நிறைவாக நடத்தியிருக்கலாம்.  உங்கள் பெற்றோரும் சம்மதிக்கவில்லை, எது எப்படி இருந்தாலும் என் மகனின்  மகிழ்ச்சியே  எங்கள் மகிழ்ச்சி  என்றுணர்ந்து   எங்கள் மனதைத் தேற்றிக் கொண்டு  நாங்கள் பலமுறை  உன் பெற்றோரிடம் பேச முயலும்போதெல்லாம் எந்தவிதப் பிடிமானமும் கொடுக்காமல் எங்கள் இருவரையும்  பலவிதமான  சொற்களால்  வருந்தச் செய்தார்கள்  உன் பெற்றோர்கள்.

இதுவரை இந்த செய்தியை உங்கள் மனம் புண்படுமே என்று எண்ணி. உங்கள் இருவரிடமும் கூறாமல் வைத்திருந்தோம். உங்களுக்கு திருமணமாகி  20 ஆண்டுகள் ஆயிற்று நீங்களும்  பெரியவர்களாகி பலவிதமான  அனுபவங்களைப் பெற்றுவிட்டீர்கள் என்றாலும்   எங்களுக்கு குழந்தைகள்  தானே  .

இங்கே ஒரு முக்கியமான செய்தியைக் கூறவேண்டும்  உங்கள் பெற்றோரும் இதையெல்லாம்  உணர்ந்திருக்கிறார்கள், சமீபத்தில் ஒரு திருமணவிழாவில் அவர்களை எதிர்கொள்ள நேரிட்டது.

அவர்களுக்கு தயக்கம் நாங்கள் மதித்துப் பேசுவோமா  என்று எங்களுக்குத் தயக்கம்  எல்லோர் முன்னிலையிலும்  மீண்டும் கடுஞ்சொற்களால் அவர்கள் எங்களை அவமானப் படுத்திவிடுவார்களோ  என்று.

ஆயினும் திடீரென்று உன்  அப்பா மயங்கிக் கீழே விழுந்ததும் நாங்கள் இருவரும் பதறிப் போய் உன் அப்பாவைக் கைத்தாங்கலாய் பிடித்து அவசர கால உதவியாக மருத்துவ மனைக்கு  அழைத்துப் போய் உடனடி வைத்தியம் செய்து  இறைவன் அருளால் உன் அப்பாவும்  ஆபத்திலிருந்து மீண்டார். மருத்துவர் சொன்னார் மிகச் சரியான நேரத்தில் அவரை மருத்துவமனைக்கு அழைத்துப் போனோம் அதனால்தான் காப்பாற்ற முடிந்தது என்று , மிகச் சரியான நேரத்தில் எங்களை அங்கே அனுப்பி உன் அப்பாவுக்கு உதவச் செய்த  இறைவனுக்கு நன்றி கூறுகிறோம்.

ஒரு முக்கியமான செய்தி  உன் பெற்றோரும் நாங்கள் இருவரும் இப்போது ராசியாகி மிக நன்றாக ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு  ஒருவருக் கொருவர்  அனுசரணையாக பழகி வருகிறோம் . இப்போதுதான் தெரிகிறது  அவர்கள் இருவரும் சற்றேறக் குறைய எங்கள் நிலையிலேதான் இருக்கிறார்கள் என்பது.

ஆமாம் அவர்களும் உங்கள் இருவரின் பிரிவாலே வாடிக்கொண்டிருக்கிறார்கள், நாங்களும்  வாடிக்கொண்டிருக்கிறோம்.

எங்களின் வாட்டத்தைப் போக்கவாவது  பழயனவற்றை மறந்து எங்களோடு இணைந்து  மீண்டும்  மகிழ்ச்சியாக வாழ நீங்கள் இருவரும் மனது வைப்பீர்கள்  என்னும்  அல்ப ஆசையோடு  இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

உண்மையைச் சொன்னால்  கிட்டத்தட்ட  பத்து ஆண்டுகளாக  கணிணியில் எழுதியே பழக்கமாகி விட்டபடியால்  கடிதமெழுத ஆரம்பித்து  சரியாக எழுத முடியாமல் கை நடுக்கத்தாலும்  உங்களைப் பிரிந்த மனம் ஏக்கத்தால்   வந்த நடுக்கத்தாலும்  சுய இரக்கத்தாலும்  பலமுறை  எழுதி எழுதி மனம் திருப்தி கொள்ளாததால்  பல காகிதங்களைக் கிழித்துப் போட்டு  கடைசியில் இந்தக் கடிதத்தை ஒருவழியாக எழுதி முடித்துவிட்டேன்.

சமீபத்தில் என் நண்பர் வாயிலாக ஒரு செய்தி கேள்விப்பட்டேன் ,அதை உங்களிடம் சொல்ல என் வயதும்  அறிவும் தடுக்கிறது ஆனாலும்  நாங்கள் பெற்ற அனுபவம்  சொல்லத் தூண்டுகிறது

என்னுடைய பேரன்  தயாநிதியும்  ஒரு பெண்ணுடன்  நட்பு கொண்டிருப்பதாகவும்  காதல் வயப்பட்டிருப்பதாகவும்  ஒரு நண்பர் ஆதாரபூர்வத்துடன்  சொன்னார். அதைக் கேட்டபிறகு  உங்கள் இருவரையும் எச்சரிக்கை செய்யாமல் விட்டுவிட்டால் எங்கள் மனசாட்சி எங்களை உறுத்தும் .ஆகவேதான் இந்தச் செய்தியை உங்களுக்கு நேரில் சொல்ல தயக்கமாய் உள்ளதால்  கடிதம் மூலம் எழுதுகிறேன்.

இந்தக் காலத்து இளைஞர்கள் நட்பு எது காதல் எது என்று  தெளிவாக இருக்கிறார்கள்  என்றாலும்   நீங்களும்  தயாநிதியை அன்போடு அழைத்து  மனம்விட்டுப் பேசி  அந்தப் பெண்ணுடன் இருப்பது நட்புதானா  அல்லது காதலா  என்பதை அவனையும் உணரச்செய்து  நீங்களும் உணர்ந்து  அதற்குத் தகுந்தவாறு  நட்பானாலும்  காதலானாலும்  வளரவிடுதலோ அல்லது தடை செய்தலோ  எது நல்லது என்று உங்கள் மனதுக்கு  தெரிகிறதோ  அதைத் தெளிவாக குழந்தைகள் மனம் புண்படாதவாறு  செய்யுங்கள்.  எங்களது பேத்தி  இளநகையையும்  கவனத்துடன் பார்த்துக் கொள்ளுங்கள்.

நாங்கள் பட்ட  கொடுமையான  அனுபவங்கள் உங்களையும் பாதிக்கக் கூடாது  என்னும் நல்ல எண்ணத்தில் எழுதப்பட்ட  இக்கடிதத்தை மதிப்பதோ அல்லது  நிராகரிப்பதோ எல்லாமே  உங்கள்  உரிமை.

எங்களது பேரனும்  பேத்தியும்   எங்கள்  குழந்தைகளாகிய   நீங்கள் இருவரும் எந்தவித மனக்கிலேசமும் இல்லாமல்  இனிதே வாழ எல்லாம் வல்ல இறைவனைப் ப்ரார்த்திக்கிறோம்

                                                          இப்படிக்கு

                                                       தாத்தா  +  பாட்டி

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க