Blog

  • சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன் – புத்தக மதிப்புரை

    த.க.தமிழ் பாரதன்

    கவிஞர் வைரமுத்து : கவிஞர். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஆறு முறை பெற்றுள்ளார். நிழல்கள்(1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலைப் பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் ஜனவரி 2009 வரை 5800 பாடல்களை எழுதியுள்ளார். இவர் வழங்கியப் பாடல்கள் புகழையும் பல விருதுகளையும் பெற்றுள்ளன.

    k

    விலை : 70
    பக்கங்கள் : 103
    முதல் பதிப்பு : 1985
    தற்போதைய பதிப்பு : 2011
    பதிப்பு : 20

    வெளியீடு: சூர்யா இலக்கியம், சென்னை
    பேசி : 91-44-24914747

    இன்று இந்தியாவில் உள்ள இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் விதத்தில் அமைந்திருக்கும் நூல் சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்.

    இந்த நூலின் நோக்கம், வெறுமையாக இருக்கும் இளைஞர்களின் நெஞ்சில் வாழ்க்கையைப் பற்றிய சில தீர்மானங்களை எழுதிக் கொடுத்து எதிர்காலத்தை நோக்கி நம்பிக்கையோடு நடைபோடச் செய்வதாக உள்ளது.

    இது இளைஞர்களுக்கு உரமான மொழியில் அவர்களோடு உரையாடுகிறது.

    “இல்லாத ஓர் ஊருக்கு யாரும் செல்லாத ஒரு வழியில் நீ தூக்கதில் நடப்பவனாய்த் தொடர்ந்து போய்க்கொண்டிருக்கிறாய். மயில் தோகைகளைப் பரப்பி மல்லிகைப்பூத் தெளித்த சாலை உனது கனவாக இருக்கிறது. ஆனால் காலில் ஆணியடித்துக் கொண்டு முட்களின் மீது நடப்பது தான் உனது எதார்த்தமாக இருக்கிறது”.

    என எளிய நடையில் தரணியில் தடம் மாறி நடக்கும் இளைஞர்களுக்கு எதார்த்தத்தை எடுத்துரைக்கிறார் ஆசிரியர்.

    மேலும், தன் வாழ்வில் நடந்த பல நிகழ்ச்சிகளை தனக்கே உரிய பாணியில் வெளிப்படுத்தியுள்ளார் வைரமுத்து.

    “நாளையின் நம்பிக்கைச் சுடர் நீதான் என்று உன்னைப் போலி வார்த்தைகளால் புகழ மாட்டேன்.
    ஏனென்றால் – எரிந்து கொண்டிருப்பவனே நீ தானே!”
    என்னும் வரிகளில் உண்மைக்கு உருவம் தருகிறார்.

    ஆறுதல் தர வேண்டிய இடங்களில் ஆதரவு வார்த்தைகளையும், அறிவுரை தர வேண்டிய இடங்களில் படிப்பவர்க்கு புரியும் வண்ணம், அருமையான எளிமையான உவமை மொழிகளை உறுதி படவும் தெரிவித்துள்ளார் வைரமுத்து அவர்கள்.

    “உன் முதுகுக்குப் பின்னால் பள்ளம் , முகத்துக்கு முன்னால் இருட்டு. கண்பார்வை உனக்கு இருக்கிறதா இல்லையா என்று சோதித்துப் பார்க்கக் கூட அந்த இருட்டு உனக்கு சந்தர்ப்பம் தரவில்லை. ஆட்டுவித்தால் ஆடும் பொம்மைகளாய் , சாவிகொடுத்தால் சுற்றும் சக்கரங்களாய் நம் இளைஞர்கள் மாறியுள்ளனர்”.

    தற்கால கல்வி முறையால் இளைஞர்கள் எதிர்காலம் கேள்விக்குரியாகிறது என்பதை அருமையாக விளக்குகிறார்.

    பிறிதொரு பக்கத்தில் “பொழுது என்பது போக்குவதற்கு அல்ல ஆக்குவதற்கு” எனவும், பொழுது போக்கு என்பதே தேவையில்லை என தெளிவுற கூறுகிறார்.

    இலட்சியம், கல்வி, கலை, உறவு, வீரம், எதிர்ப்பு, காதல், அடக்கம், புகழ், தாய்மண், என இன்றைய இளைஞர்களின் தேவைகளைப் புரிந்து 24 தலைப்புகளில் மாபெரும் கருத்துகளைச் சுமந்து நிற்கும் உளியாக நிற்கிறது ‘சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்’ புத்தகம்.

    Share
  • பிரெஞ்சிலக்கிய வரலாறு’ – புத்தக மதிப்புரை

    கலையரசி

    kalai

    இலக்கிய வரலாறு என்ற தலைப்பைப் பார்த்தவுடன், தலைமறைவாகும் எண்ணம் உடனே உங்களுக்குத் தோன்றுகிறதா?  ‘அச்சச்சோ! படு போர்! ஆளை விடுங்க,’ என்று திரும்பிப் பார்க்காமல் ஓடுபவரா  நீங்கள்.? ‘அது மெத்தப் படித்தோருக்கான நூல்; இலக்கிய கோட்பாடுகளைப் புரியாத மொழியில் ‘இஸம்’, ‘ரசம்,’ என்று ஏதேதோ சொல்லிக் குழப்புவார்கள்,’ என்ற கருத்துடையவரா நீங்கள்?

    பிரெஞ்சு இலக்கிய வரலாறு என்றால் அம்மொழியின் படைப்பாளர் களையும் படைப்புக்களையும், கால வரிசையில் தொகுத்துத் தருவது தான் ஆசிரியரின் வேலை;  அதில் சுவைக்க என்ன இருக்கிறது என்று  நினைப்பவரா?

    இந்தக் கேள்விகளுக்கு உங்கள் பதில் ‘ஆம்,’ எனில், இந்த மதிப்புரை உங்களுக்கானது தான். இதை ஒரு முறை வாசித்தால், தலைப்பை மட்டும் வைத்து நூலின் உள்ளடக்கத்தைத் தீர்மானிப்பது எவ்வளவு பெரிய தவறு என்று தெரியவரும்.

    பிரெஞ்சிலக்கிய வரலாற்றைத் தமிழில் கூறும் முதல் நூல் இது.  ஆசிரியர் பிரெஞ்சு மொழி வழிக் கல்வி பயின்றவர் என்பதால் அவ்விலக்கியத்தில் நல்ல பரிச்சயம் இருக்கிறது.  தமிழிலும் புலவர் பட்டம் பெற்றிருக்கிறார்.

    பிரெஞ்சு, தமிழ் இரண்டிலும் இவர் பெற்றுள்ள புலமை, பிரெஞ்சு படைப்புக்களிலிருந்து எடுத்துக்காட்டுத் தரும்போது, ஆங்காங்கே அதற்கிணையான கருத்துக்களைத் தமிழிலக்கியத்திலிருந்து மேற்கோள் காட்ட பெரிதும் துணை புரிகின்றது.  கவிதைகளைக் கூட மொழியாக்கம் என்று தெரியாதவாறு, தமிழ்க்கவிதை போல் உருமாற்றித் தாம் பெற்ற இன்பத்தை நாமும் துய்க்கப் பெரிதும் உதவியிருக்கிறார்.

    ஆ(ன்)த்ரே ஷெனிஏ (Andre Chenier 1762 – 1794)  என்ற கவிஞர் பாரீசு புரட்சியின் போது மிதவாதி என்பதால் தீவிரவாதிகளால் கைது செய்யப் பட்டு 1794 ல் கொலையுண்டார்.

    kala

    எந்த நேரமும் தலைவெட்டும் மேடைக்கு அழைக்கப்படலாம் என்ற நிலையில் அவர் பாடிய 88 அடி கொண்ட ஒரு கவிதையின் முதல் 24 அடிகளின் தமிழாக்கத்தைப் படித்துப் பாருங்கள்:

    “கடைசிக் கதிரைப் போல்,”

    “அழகிய தொருபகலின் அந்தத்துக்கு உயிரூட்டும்

    கடைசிக் கதிரொளியும் கடைமென் காற்றும்போல்

    கொலைமேடைக் கீழிருந்து கவிதைதனைப் புனைவதற்கு

    இன்னமும் நான் முயல்கின்றேன்.

    விரைவில் என்முறை வந்துவிடலாம்.

    பளபளக்கும் எனாமல் டயலின் மேலே

    அறுபது சுவடுகளே அமைந்துள்ள பாதையில்

    வட்டமாக உலாவும் மணிமுள்

    ஒலியெழுப்பும் தன்னுடைய காலடியை வைக்குமுன்

    கல்லறை உறக்கம் என்இமை தம்மை

    அழுத்தக் கூடும்.

    இந்தப் பயங்கரச் சுவர்களுக்கு இடையில்

    ஆவிகளைத் திரட்டும் கொடுங்கூற் றுவனின்

    செய்தியைத் தாங்கித் தூதன் ஒருவன்

    பழிப்புக்கு ஆளான படைவீரர் புடைசூழ

    வந்தென் பெயரைக் கூவியே இந்த

    நீண்ட ஒளியற்ற நடைப்பா தைகளை

    நடுங்க வைக்கலாம்,

    நானெழுதத் தொடங்கும் இந்தக் கவிதையடி

    தன்னிறுதி அசையை அடைவதற் குள்ளே.

    கொலை வெறியரைக் குறிவைத் தேநான்

    இந்த வேல்களைக் கூர்தீட்டு கின்றேன்,

    நீதிக்கு மிகமிக மெல்லிய ஆதரவாய்.

    கவிதையை அரைகுறையாய் அவன்முடிக்கக் கூடும்.

    கைகளில் தளையிட்டு எனையிழுத்துச் செல்லலாம்.

    அந்தச் சோகச் செய்தி வரும்முன்பு

    என்னை யறிந்திருந்த எல்லா நண்பரும்

    அப்போது என்றனுக்கு அந்நியர் ஆகிப்

    பார்வை யாளராய்க் கும்பல் கூடுவர். (பக் 163)

    (பி.கு.  பளபளக்கும் எனாமல் டயலின் . . . . . காலடியை வைக்குமுன் – ஒரு மணி நேரத்திற்குள்)

    கவிதையை வாசித்தவுடன் சில மணித்துளிகள் ஒன்றுஞ் செய்ய தோன்றாமல் மனம் கனத்துப் போய்விட்டது எனக்கு.  உங்களுக்கு?

    ‘வசந்தத்தின் வருகை,’ என்ற கவிதை:-

             “காலமானது காற்று குளிர்மழை

             என்ற போர்வை களைந்து

             பளிச்சென்ற அழகிய ஒளிவீசும்

             வெயில் பூவாடை யணிந்தது.” (பக்கம் 36)

    படிமம் ஒன்றைச் சுவைக்க வேண்டுமா?

    “கடல்களின் பட்டுக்கும் வடதுருவப் பூக்களுக்கும் மேலே

    குருதி ஒழுகும் இறைச்சிக் கட்டடம்” (பக் 229)

    (“கடல்கள் உடுத்தியுள்ள நீலப் பட்டாடைக்கும், வட துருவத்தில் நிமிர்ந்து நிற்கும் வெள்ளைப் பனிப்பாறைகளுக்கும் மேலே, இரத்தம் கசிகிற மாட்டிறைச்சி போல், செக்கச் சிவந்து தோன்றும் அந்தி வானம்”)

    இலக்கிய வரலாற்றில் நகைச்சுவை உண்டு என்றால் நீங்கள் நம்புவீர்களா?  சேச்சே! இருக்காது என்பீர்கள்.  சான்று காட்டினால்?

    இதோ எடுத்துக்காட்டு:-

    “என்னிரு தோள்மேல் கைகளை வைத்தே

    அழைத்துச் சென்றனர் மணப்பெண் போலக்

    கொஞ்சம் முரட்டுத் தனமாய்த் தானே.

    காவலர் பெற்றார் கெளதாரி ஒன்று;

    கொக்கும் முயலும் ஒக்கவே தந்தேன்;

    இருப்பினும் உள்ளேன் இங்கே இன்னும்”

    ஆசிரியரின் குறிப்பு:- (அவர் கைதான போது தப்புவதற்காகக் கையூட்டுக் கொடுத்தார்.  பயனில்லை.  (லஞ்சம் வாங்கியும் காரியத்தை முடிக்காதவர்கள் அக்காலத்திலேயே இருந்திருக்கிறார்கள்) (பக்:44)

    அல்போன்ஸ் தொதே(Alphonse Daudet) எழுதிய ‘தர்த்தாரே(ன்) த தராஸ்கோ(ன்)’ என்ற நகைச்சுவை புதினத்திலிருந்து கொடுக்கப்பட்டிருக்கும்  ஒரு காட்சியும் நல்ல நகைச்சுவைக்கு ஓர் எடுத்துக்காட்டு. (பக்கம் 209)

    தமிழில் வழங்கும் ‘உனக்கும் பே பே, உங்கப்பனுக்கும் பே பே,’ என்னும் பழமொழிக்கு மூலம், பிரெஞ்சு நாடகம் ‘பாத்தலே(ன்)’ என்பது இந்நூலை வாசித்த பிறகு தான் தெரிகிறது. அக்கதை சுருக்கம் தெரிய, பார்க்க

    பக்கம் 35.

    துவக்கத்தில் பிரான்சு மற்றும் அதன் மொழி வரலாறு பற்றிச் சுருக்கமாக எடுத்துரைக்கிறார் ஆசிரியர்.  ஆங்கிலத்தில் உள்ள அதே 26 எழுத்துக்களே பிரெஞ்சிலும் உள்ளன.  இவை ரோமன் எழுத்துக்கள் அல்லது லத்தீன் எழுத்துக்கள் எனப்படும்.  பிரெஞ்சில் எழுத்துக்களை விட ஒலி மிகுதி.  17 உயிர் 19 மெய் ஒலிகள் இம்மொழியில் உள்ளன.  தமிழின் ‘ழ’ வுக்கு ஓரளவு ஒப்புமை உடைய ஒலி ஒன்று உள்ளது.”

    ‘ழ’ தமிழுக்கு மட்டுமே உரியது என்று தானே, நம்மில் பெரும்பாலோர் இதுவரை நினைத்திருந்தோம்; அது தவறு!

    படைப்பாளர் மற்றும் படைப்புகளின் பெயர்களைத் தமிழில் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் கொடுத்திருப்பதால், அவற்றின் சரியான பிரெஞ்சு உச்சரிப்பைத் தெரிந்து கொள்ள முடிகிறது.

    நமக்குத் தெரிந்த ALEXANDRE DUMAS ஐ நாம் எப்படி உச்சரிப்போம்? அலெக்ஸாண்டர் டியுமாஸ் என்று தானே?  சரியான உச்சரிப்பு டியுமாசுமில்லை, பொடிமாசுமில்லை.  அலெக்சா(ன்)த்ரு துய்மா! (பக் 189)

    நூற்றாண்டு கால அடிப்படையில் எழுதப்பட்டுள்ள இந்நூலில், ஒவ்வொரு நூற்றாண்டிலும் பிரெஞ்சிலக்கிய வானில் உதித்த குறிப்பிடத்தக்க கவிமணிகள், அறிவியல் மற்றும் தத்துவ அறிஞர்கள், நாடகாசிரியர் நாவலாசிரியர் ஆகியோரின் வாழ்வு பற்றிய குறிப்புகளோடு

    அவர்களின் முக்கிய சிந்தனைகளையும் பகிர்ந்துள்ளார் ஆசிரியர்.

    எடுத்துக்காட்டுக்கு பெர்னார்தே(ன்) (Bernardin 1737 – 1814) புகழுக்குக் கட்டியம் கூறும், ‘போலும்  விர்ழினீயும்’ (Paul et Virginie) என்ற நூலில் இருந்து சில சிந்தனைகள்:-

    “ஆயிரம் ரோஜாக்களின் நறுமணம் ஒரு கணந்தான் இன்பம் அளிக்கும்.  ஆனால் அவற்றின் இடையேயுள்ள ஒரெயொரு முள்ளின் குத்து நெடுநேரம் வலி தரும்.”

    “செல்வர்களுக்கு இன்பங்களின் நடுவே நேரும் ஒரு துன்பம், பூக்களின் நடுவே ஒரு முள்; ஏழைகளுக்கோ இன்னல்களுக்கு மத்தியில் ஓர் இன்பம், முட்களுக்கு இடையே மலர்.”

    “திண்ணமாக வந்தே தீரும் என்று நாம் தெரிந்து கொண்ட ஒரு துயரம், அது நிகழும் வரை உள்ள எல்லா நாட்களையும் சோகமயம் ஆக்கிவிடும்.”

    பிரெஞ்சு படைப்புக்களிலிருந்து எடுத்துக்காட்டுத் தரும்போது ஆங்காங்கே அதற்கிணையான கருத்துக்களைத் தமிழிலக்கியத்திலிருந்து மேற்கோள் காட்டுவது ஆசிரியரின் இருமொழி புலமைக்குச் சான்று:-

    எ.கா:- 1.

    வொல்த்தேர் (Voltaire 1694-1778) கூறுகிறார்:-

    “வாழ்க்கை இனியதும் அல்ல, இன்னாததும் அல்ல; அதை அப்படியே ஏற்றுக்கொண்டு நம்மை நாம் மேம்படுத்திக் கொள்வது நல்லது.”

    கணியன் பூங்குன்றனார் 2000 ஆண்டுக்கு முன் கூறினார்:

    “……………..வாழ்தல்

    இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்

    இன்னாது என்றலும் இலமே.”  (பக்கம் 140)

    எ.கா:- 2

    உவமைகளை மிகையாக்கிப் புழங்கினர். 

    “காதலியின் கண்ணொளி சூரியனை இருட்டாக்கியது”

    “வெய்யோன் ஒளி தன்மேனியின் விரிசோதியின் மறைய”  (கம்பராமாயணம்)

    சூரியனின் ஒளி இராமனின் மேனி ஒளியால் மறைந்தது.  (பக்.60)

    எ.கா:-2 

    1. 150 ஆண்டுகளுக்கு முன் பிரெஞ்சியர் கண்டுபிடித்த குறியீட்டியல் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய சங்கத் தமிழில் இடம் பெற்றுள்ளது. அகநானூறு 160 – ஆமையொன்று முட்டையிட்டு அடும்பு என்னுங் கொடியால் அதை மறைத்தது. (நப்பசலையார்)

    தலைவி தன் களவொழுக்கத்தைப் பிறர் அறியாமல் மறைத்தாள் என்பது நாம் புரிந்து கொள்ள வேண்டிய செய்தி. (பக் 214)

    12 ஆம் நூற்றாண்டில் தான் பிரெஞ்சில் இலக்கியம் தோன்றியிருக்கிறது என்பதை இந்நூல் வாயிலாக அறியும் போது வியப்பு மேலிடுகிறது.  “இன்று பிரெஞ்சு எல்லாத்துறைகளிலும் பிரமாத வளர்ச்சியுற்ற செழுமை மிக்க மொழிகளுள் ஒன்றாக மிளிர்கிறது.  அதன் உரைநடை மிக விழுமிய தரம் உடையது.  “இத்தரத்தை எட்டுவதற்கு ஆங்கிலத்துக்கு 100 ஆண்டு தேவை என்று கணக்கிட்டுள்ளார் காலஞ் சென்ற தீர்ப்பாளர் எஸ் மகராசன்.”

    “சொல்லைத் தேய்த்துத் தேய்த்துச் சன்னக் கம்பிகளாய் இழுத்து இழுத்து நகாசு வேலை செய்யப்பட்ட மொழி பிரெஞ்சு”  (ஆதாரம்: தெய்வ மாக்கவி 1974) (பக் 12)

    பிரெஞ்சு உரைநடை மிக விழுமிய தரம் உடையது என்பதாலோ என்னவோ, அதன் வரலாற்றைக் கூறும் இந்நூலின் தமிழ் உரைநடையையும் மிக விழுமிய தரத்தில் படைத்திருக்கிறார் ஆசிரியர்.

    எடுத்துக்காட்டுக்குச் சில வரிகள்:-

    “பிரெஞ்சு உரைநடைக்கு வளம் தந்து வலுவான அடிப்படை அமைத்தவர் ராப்லே.  இந்த அடித்தளத்தின் மீது தான் அடுத்த நூற்றாண்டு( 17 ஆம் நூ)

    எழுத்தாளர்கள் எழில் மிகு மாளிகைகளை எழுப்புவார்கள்.”(பக் 46)

    “வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் அலசி ஆராய்ந்த அவரின் நூல்கள், மாந்த மன ஆராய்ச்சியாளர்க்கு மதிப்பிட முடியாப் புதையல்.”  (பக்:53)

    ‘இருண்டு கிடந்த கவிதையுலகில் ஒளி பாய்ச்சிய ஞாயிறு’  (பக் 55)

    “யாப்பைச் செப்பமாய் அமைத்துப் பாமர மொழிச் சொற்களை விடுத்து உரைநடையினின்று மாறுபட்ட கவிதை நடையில் எழுதிப் பிறர்க்கு ஒரு புது வழி காட்டியவர் அவர்.”  (பக் 196)

    “சிறந்த யாப்பில் செவிக்கின்பம் பயக்கும் அல்லது அறிவை மயக்கும் சொற்களைப் பொறுக்கி எடுத்துப் பயன்படுத்தியதுடன், அடுக்கு மொழிகளையும் ஆங்காங்கே கோத்துள்ளார்.” (பக் 198)

    உரைநடைக்கு மேலும் கொழுமை சேர்த்த லபுருய்யேர் (La Bruyere) பற்றிக் கூறும் போது, ‘அவருடைய நடை வளமானது, படிப்போரின் கவனத்தை தம் பக்கம் ஈர்த்துப் பிணிக்கும் ஆற்றல் கொண்டது,’ என்று எழுதியிருப்பது  இந்நூலாசிரியரின் நடைக்கும் கச்சிதமாகப் பொருந்துகிறது.

    சட்டமியற்றல், நிர்வாகம், நீதி ஆகிய மூன்று தனித்தனியே இருக்கவேண்டும் என்று முதன்முதலில் உலகுக்குச் சொன்னவர் பிரெஞ்சு அறிஞர் மோ(ன்)த்தேஸ்க்கிய (Montesquieu).

    இவரது இலக்கிய கொள்கையான “வாசிக்க வைப்பது போதாது; சிந்திக்கத் தூண்ட வேண்டும்” (பக்கம் 133) என்ற அறிவுரைக்கேற்ப, இந்நூல் படைக்கப்பட்டிருப்பது சிறப்பு.

    ஆசிரியர் தாய்மொழி மீது அளவற்ற பற்று கொண்டவர் என்பது ஏற்றம் பெற்றிருக்கும் பிரெஞ்சு மொழியோடு நம் மொழியை ஏக்கத்துடன் ஒப்பிட்டு, தமிழ் உன்னத நிலைக்கு வருவதற்கான ஆலோசனையை வழங்குவதிலிருந்து அறிகின்றோம்.

    பிரெஞ்சு மொழி ஆக்கத்துக்கும், வளர்ச்சிக்கும் வித்திட்ட பிரெஞ்சுக் கழகம் பற்றி வியந்து கூறும் போது, “இத்தகைய கழகம் தமிழகத்தில் தோன்றி அரசியல் நுழைய இடந்தராமல், மொழி வளர்ச்சிக்குப் பாடுபட்டால் கொஞ்சங் கொஞ்சமாக நலிந்து வரும் தமிழ் மொழி தலைநிமிரும்; வளம் பெற்று உயர்ந்து ஓங்கும்.”  (பக்கம் 59)

    ‘சுற்றுலாவி,’ (பக் 128) (சுற்றுலா சென்று) என்பது இவர் தமிழுக்கு அளித்த புதுச்சொல்.

    “நாகரிகத்தின் வளர்ப்புப் பண்ணையாகிய பிரான்ஸ் நாட்டின் பிரெஞ்சு மொழியின் இலக்கிய செல்வங்கள் பற்றிய வரலாற்றைத் தமிழுக்கு அளித்ததன் வாயிலாக ஞானசம்பந்தத்தின் கொடை ஞானக்கொடையா கிறது,” என்று பதிப்புச் செம்மல் ச.மெய்யப்பன் அவர்கள் முன்னுரையில்

    கூறியிருப்பது நூற்றுக்கு நூறு உண்மையே.

    இந்நூலை வாசித்து முடிக்கும் போது ஒட்டுமொத்த பிரெஞ்சு இலக்கியத்திற்குள் நீண்ட தூரம் பயணித்து ஒரு பறவை பார்வையுடன், அதன் சிறப்புக் கூறுகளைச் சுவைத்து மீண்ட திருப்தி நமக்கு ஏற்படுகின்றது.

    நூலின் பெயர்:- பிரெஞ்சிலக்கிய வரலாறு

    ஆசிரியர் பெயர்:-சொ.ஞானசம்பந்தன்

    பக்கம்:- 272

    வெளியான ஆண்டு:- நவம்பர் 2003

    உரிமை: ஆசிரியருக்கு

    விலை:- ரூ 90.00

    வெளியீடு:- மெய்யப்பன் பதிப்பகம்

              53, புதுத்தெரு, சிதம்பரம்-608001.

       எழுதிய பிற நூல்கள்:- லத்தீன் இலக்கிய வரலாறு

                             தமிழைத் திருத்தமாக எழுதுவது எப்படி?

                             மோப்பசான் கதைகள் (பிரெஞ்சு சிறுகதைகள்)

                             சிங்க வேட்டை (பிரெஞ்சு குறும்புதினம்)

                             மறைந்த நாகரிகங்கள்

    Share
  • வாழ்ந்து படிக்கும் பாடங்கள் – புத்தக மதிப்புரை!

    பா. சரவணக் குமார்

    ganesan

    நூலின் பெயர் – வாழ்ந்து படிக்கும் பாடங்கள்
    நூலின் ஆசிரியர் – என்.கணேசன்
    நூல் வெளியான ஆண்டு – 2013
    பக்க எண்ணிக்கை – 141
    விலை – ரூ-110/-
    பதிப்பக முகவரி – BLACKHOLE MEDIA PUBLICATION LIMITED,
    No7/1 3rd Avenue, Ashok Nagar,
    Chennai-600 083
    Tel : 044 43054779

    நூலின் ஆசிரியர் பற்றி:

    நூலின் ஆசிரியர் என்.கணேசன் அவர்கள் கோவையில் உள்ள ஒரு வங்கியில் பணிபுரிகிறார். வேலை மற்றும் குடும்ப கடமைகளின் மத்தியிலும் படிப்பவர்களை மேம்படுத்தும் விதமாக சிறு கதைகள், கட்டுரைகள் மற்றும் நாவல்களை தொடர்ந்து எழுதிவருகிறார். இவருடைய எழுத்துக்கள் தன்னம்பிக்கை, மன அமைதி, நற்பண்புகள், அறிவார்ந்த ஆன்மீகம் போன்ற நல்ல விஷயங்களை உணரச்செய்வதுடன் அவற்றை ஊக்கத்துடனும், உற்சாகத்துடனும் பின்பற்ற தூண்டுகிறது.

    இந்த நூல் யாருக்காக?

    சிலர் தங்கள் வாழ்க்கை பயணத்தில் சந்திக்கும் சில மனிதர்களாலும், இக்கட்டான சூழ்நிலைககளாலும் எதிர்பாரா சம்பவங்களாலும் மிக முக்கியமான தன்னம்பிக்கை, மன அமைதி,காலம் ஆகியவற்றை இழந்து விரக்தி அடைகிறார்கள். அதன் பின் என்ன வாழ்க்கை இது? எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது ? இதற்கு சுற்றி இருப்பவர்கள் காரணமா இல்லை என்னுடைய வாழ்க்கை முறை தான் காரணமா ? நான் காரணமென்றால் வாழ்கையைச் சரியாக வாழ்வது எப்படி ? போன்ற கேள்விகள் எழுகிறது. இந்த கேள்விகளுக்கு விடை தேடுபவர்களுக்கு இந்நூல் ஒரு விலைமதிப்பில்லா பொக்கிஷமாகும்.

    சிலர் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் அனைத்தையும் சமாளித்து வாழ்ந்து கொண்டிருந்தாலும் அந்த அனுபவங்கள் உணர்த்தும் உண்மைகளை தவற விட்டுவிடுகிறார்கள். அவர்களுக்கு இந்நூல் ஒரு வரப்பிரசாதம் ஆகும்.

    வாழ்கையை வாழத் தொடங்குபவர்களுக்கு இந்நூல் ஒரு வழிகாட்டியாகும்.

    இயல்பாகவே கற்றுக்கொள்ளும் திறனாலும்,வளர்ப்பு முறையாலும், சூழ்நிலையாலும் வாழ்க்கையை உணர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு இந்நூல் மற்றவர்களுக்கு அளிக்கக்கூடிய மிகச் சிறந்த பரிசாகும்.

    “வாழ்ந்து படிக்கும் பாடங்கள்” நூலைப் பற்றி:

    இந்நூலில் ஆசிரியர் வாழ்க்கையையும் பள்ளியையும் ஒப்பிட்டு விளக்குவது புரிந்து கொள்ள எளிதாக உள்ளது. எப்படி பள்ளியில் கற்றுக்கொள்ளும் பாடங்கள் நம்மை வெளிநிலையில்,உலகத்தில் மேம்படுத்துகிறதோ அதுபோலவே வாழ்க்கை கற்றுக்கொடுக்கும் அனுபவங்கள் நம்மை உள்நிலையில், வாழ்க்கையில் மேம்படுத்துகிறது என்று உணர்த்துகிறார். இந்த புரிதலால் வாழ்க்கையில் சந்தித்த, சந்திக்கப் போகின்ற அனைத்துமே நம்மை மேம்படுத்தும் பாடங்களே என்ற தெளிவு வாழ்க்கையை நம்பிக்கையுடனும், உற்சாகத்துடன் எதிர்கொள்ளும் மனநிலையைத் தருகிறது.

    நூல் முழுவதும் சிறு கதைகளின் மூலமாக உயர்ந்த உண்மைகளை உணர்த்துகிறார். எடுத்துக்காட்டாக ஒரு அறிவாளி பல நூல்களை படித்த, விஞ்ஞானம் தெரிந்த, பல மொழிகளைக் கற்ற, கர்வம் கொண்ட ஒருவர் ஒரு இடத்திற்குச் செல்ல ஆற்றைக் கடந்து பயணிக்க வேண்டி இருந்தது. படகு ஒன்றை வாடகைக்கு எடுத்து பயணித்தார் அப்பொழுது படிக்காத படகோட்டியிடம் இது தெரியுமா அது தெரியுமா என்று பெரிய பெரிய விஷயங்களைப் பற்றி கேட்டு அவன் அவற்றைப் பற்றி தெரியாது என்று கூறிய பின் அவன் வாழ்க்கையே வீண் என்று பலவிதங்களில் உணர்த்திக்கொண்டு வந்தார். திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தால் படகில் ஓட்டை விழுந்தது படகோட்டி அவரைப் பார்த்துக் கேட்டான், ”ஐயா இத்தனை தெரிந்த உங்களுக்கு நீச்சல் தெரியுமா” என்று, அந்த மெத்த படித்தவருக்கு நீச்சல் தெரிந்திருக்கவில்லை முடிவில் படகோட்டி பிழைத்தார் அந்த அறிவு ஜீவி இறந்தார். இக்கதையின் மூலம் கல்வி,செல்வம் பட்டம் பதவி இவைகளைவிட வாழ்க்கைப் பாடம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் நாம் நம் வாழ்க்கையில் எந்த விதமான விஷயங்களுக்கு அதிமுக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதை உணரச் செய்கிறார்.

    நம் வாழ்க்கையில் அனைத்துப் பாடங்களையும் அனுபவங்கள் மூலமே கற்றுக்கொள்வது என்றால் நம் வாழ்நாள் போதாது. ஆகையால் மற்றவர்களின் அனுபவங்கள் மூலம் சரியான படிப்பினையை பெற வழிசொல்கிறார். நம் பலவீனத்தைப் பற்றி அறிந்து கொண்டு அது நம் வாழ்கையே மூழ்கும் அளவிற்கு வளரவிடாமல் எச்சரிக்கையாக இருக்குமாறு புராண கதைகளின் உதாரணங்கள் மூலம் அறிவுறுத்துகிறார். சோதனைகளைக் கடக்காமல் சாதனைகள் இல்லை என்பதையும் சோதனைகளின் அளவை வைத்தே வெற்றியின் அளவு தீர்மானிக்கப்படுகிறது என்பதையும் வால்ட் டிஸ்னி போன்ற சாதனையாளர்களின் வாழ்கையை உதாரணப்படுத்தி புரிய வைத்துள்ளார். சரியான உழைப்பும் சலிப்பில்லாத மனமுமே உயர்ந்த வெற்றியை பெற்றுத்தருகிறது என்பதை நோபல் பரிசு பெற்ற மேரி கியூரி அம்மையார் வாழ்க்கையின் மூலம் அறியச்செய்கிறார்.

    கல்வியறிவுடன் சுயமாய் சிந்திக்கும் திறனும் இணையாவிட்டால் முழுமையான பயனில்லை என்பதை நினைவில் நிறுத்துகிறார். சில நேரங்களில் நம்மை அடுத்தவர்கள் குறைத்து மதிப்பிடுவதாக நாம் நினைக்கிறோம் ஆனால் உண்மை என்னவென்றால் நம்மை நாமே குறைவாக மதிப்பிடுவதுதான் என்பதை தெளிவுபடுத்துகிறார். அத்துடன் உடலில் குறைபாடுகளுடன் பிறந்த ஹெலன் கெல்லர் மற்றும் நிக் வூயிசிச் (Nick Vujicic) போன்றோரின் வாழ்க்கையில் புரிந்த சாதனைகளை பட்டியலிட்டு நமக்கு எந்த குறையும் இல்லை என்பதை உணரவைக்கிறார். (குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா என்ற மனதின் ஹம்மிங்!!! கேட்கிறது).

    மேலும் ஒவ்வொருவரும் தனித்தன்மையை உணர்தல், வாழ்க்கையை ரசித்து வாழ்தல் , தன்னம்பிக்கைக்கும் கர்வத்துக்கும் உள்ள வித்தியாசத்தை அறிந்து கொள்தல், நிகழ்காலத்ததை அனுபவித்து வாழ்தல், காது கொடுத்து கேட்டல், மனம் விட்டுப் பேசுதல், மற்றவர்களுக்கு மதிப்பளித்தல், நிறைவான வாழ்க்கைக்கு வழிகாட்டுதல், அதிர்ஷ்டத்தின் ரகசியம், திட்டமிட்டு வாழ்தல், மகிழ்ச்சிக்கும், கிளர்ச்சிக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அறியச்செய்தல், திறமை உழைப்பு காலம் மூன்றையும் சரியாக பயன்படுத்துதல், கோபத்தை பயன்படுத்துதல் மற்றும் அனைவருக்கும் உதவி செய்தல் போன்ற நற்பண்புகளை எளிதான உதாரணங்கள் மூலம் கற்றுக்கொடுக்கிறார்.

    அதிருப்தி குறித்து அதிருப்தி அடையாமல் அந்த அதிருப்தியை திருப்திப் படுத்திய காரணத்தினாலே சித்தார்த்தன் கௌதமபுத்தராக ஆனதும், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி மகாத்மா ஆனதுதையும் கூறி அதிருப்தியில் “அர்த்தமுள்ள அதிருப்தி” எது என்பதை தெளிவுபடுத்துகிறார். ஆதலால் நம்மிடமுள்ள அர்த்தமுள்ள அதிருப்தியை அறிந்து பூர்த்தி செய்ய முயற்சி எடுக்க தூண்டுகோலாக உள்ளது.

    இந்த நூலில் உள்ள 32 பாடங்களில் ஒவ்வொன்றாக உணர்ந்து படிக்க படிக்க மனம் அமைதியும், தெளிவும் அடைவதையும், தன்னம்பிக்கை அதிகரிப்பதையும் உணர முடிகிறது. இறுதியாக வரும் “எல்லாம் ஒருநாள் முடியும்” என்ற தலைப்பில் உள்ள பாடத்தில் “புனித நூல்கள், புராணங்கள், வேதங்கள், ஞானிகளின் நூல்கள் ஆகியவற்றை படிப்பதன் மூலம் அறிந்துகொள்ளும் கருத்துக்களின் சாரத்தை” எளிதாக புரிந்துகொள்ளும் படியும், மனதின் ஆழத்திலும் பதியவைத்து விடுகிறார்.

    நம் வாழ்க்கையில் மாற்ற முடிந்ததை மாற்றும் சக்தியையும், மாற்ற முடியாதவற்றை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தையும், இந்த இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டையும் இந்நூல் உணரச் செய்கிறது.

    நூலைப் படிக்கும் முன்னர்வரை
    வாழ்வைப் பார்த்தோம் பயமுடனே
    படித்தோம் இறையின் அருளுடனே
    வாழக் கற்றோம் மனநிறைவுடனே
    என்றும் தளரா மனமுடனே
    நித்தமும் நன்றி உணர்வுடனே
    வாழ்க்கையை வாழ்வோம் விழிப்புடனே.

    வாழக் கிடைத்த வாய்ப்பினிலே
    வாழ்ந்து படித்த பாடத்தினை
    வாழப் படைத்த ஆசிரியர்க்கும்
    தொடராய் வெளியிட்ட வல்லமைக்கும்
    நூலாய்க் கொடுத்த பிளாக் ஹோல்க்கும்
    வாழ்நாள் நன்றியை தெரிவிக்கிறோம்.

    வாழ்ந்து படிக்கும் பாடங்களை
    ஆழ்ந்து படித்து அறிந்திட்டு
    வாழப்போகும் வாழ்க்கைதனை
    மகிழ்ந்து வாழ வாழ்த்துகிறேன்.
    இறையிடம் அதையே பிரார்த்திக்கிறேன்.

    அன்புடன்,
    பா.சரவணக்குமார்

    Share
  • கொய்த நன்மலர்கள் – நூல் மதிப்புரை

    மதிப்புரை: மேகலா இராமமூர்த்தி

    நூலின் பெயர்: கொய்த நன்மலர்கள்

    நூலாசிரியர்: முனைவர் இராம. இராமமூர்த்தி

    நூலின் தன்மை: இலக்கியக் கட்டுரைகள்

    பதிப்பகம்: முத்துப் பதிப்பகம்

    நெ.27, வில்லியம் லே-அவுட்

    இரண்டாவது தெரு, கே.கே. ரோடு

    விழுப்புரம் – 605 602.

    முதற் பதிப்பு: திசம்பர் 2010

    பக்கங்கள்: 160

    விலை: ரூ. 110

    Picture1

    ஆசிரியர் குறிப்பு: தமிழ் இலக்கண இலக்கியங்களில் பெரும்புலமையும், பயிற்சியுமுடைய இந்நூலாசிரியர் முனைவர் இராம. இராமமூர்த்தி அவர்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் தமிழாசிரியராகவும், தமிழ்ப் பேராசிரியராகவும் பல்லாண்டு காலம் பணியாற்றிய சான்றோராவார். தமிழில் வித்துவான், முதுகலை, முனைவர் என்று பல பட்டங்கள் பெற்ற இவர் ஆற்றிவரும் சீர்மிகு பணிகள் தமிழன்னைக்குப் பொலிவும், அணியும், அழகும் சேர்த்துவருகின்றன. ’வீரசோழியம்’ எனும் சிறந்த இலக்கண நூலை இயற்றிய புலவர் ’புத்தமித்திரனார்’ பிறந்த ’பொன்பற்றி’ எனும் வளங்கொழிக்கும் சிற்றூரில் பிறந்தவர் இந்நூலாசிரியர்.

    சிறந்த சொற்பொழிவாளர், கவிஞர், எழுத்தாளர் என்று பன்முகங்கள் கொண்ட இந்நூலாசிரியர் தமிழ்ப்பணியொன்றே தம்வாழ்க்கையின் இலக்கென வாழும் தகைசால் கொள்கையர்.

    ————————————————————————————————————————————————

    கொய்த நன்மலர்களாய் மணம் பரப்புபவை: இந்நூல் இருபத்துமூன்று (23) இலக்கியக் கட்டுரைகளின் தொகுப்பாகும். ஓரிரு கட்டுரைகள் நீங்கலாக எஞ்சிய கட்டுரைகள் அனைத்துமே தமிழர்களின் பொற்காலம் என்று போற்றப்படும் சங்ககால நூல்களின் சிறப்பினைச் சுவைபடப் பேசுபவையே. இனி அவற்றை நோக்குவோம்.

    ’அறத்தொடு நிலையும் தமிழ் நாகரிகமும்’ என்ற தலைப்பிலானது முதற் கட்டுரை. குறிஞ்சித் திணையின் முக்கியக் கூறுகளில் ஒன்றான ’அறத்தொடு நிலை’ என்ன என்பது பற்றியும், அறத்தொடு நிற்பதற்குரிய மாந்தர் யார் என்பதனையும், அதற்கான சூழ்நிலையையும், அதன் பயனையும் சங்க இலக்கியத்தின் சுவை மிகுந்த பல்வேறு பாடல்கள் வாயிலாக அழகாக விளக்குகின்றது இக்கட்டுரை. நம் பண்டை மகளிர் களவு நெறி நின்று, கற்பு நெறி புகுந்து சிறக்க இவ்வறத்தொடு நிலை ஒரு பெரும் வாயிலாய் விளங்கியமையை இலக்கண இலக்கிய நூல்கள் நன்குணர்த்துகின்றன என்கிறார் ஆசிரியர். ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் நாகரிகத்தையும், அறத்தொடு நிலையின் தன்மையையும் உணர்த்தவேண்டியே குறிஞ்சி பாடுவதில் வல்லவராய்த் திகழ்ந்த கபிலர்பெருமான் ‘குறிஞ்சிப் பாட்டு’ என்ற நூலையே எழுதினார் என்ற அரிய செய்தியும் இக்கட்டுரையில் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

    ’இறைச்சியில் பிறக்கும் இலக்கிய இன்பம்’ என்பது இரண்டாவது கட்டுரையாகும். அகத்திணைப் பாடல்களில் கருப்பொருளின் துணைகொண்டு அகப்பொருட் செய்திகளைக் குறிப்பால் சுட்டுவது இறைச்சி எனப்படும். இவ்விறைச்சிப் பொருள் பெரும்பாலும் இயற்கை வருணனைகளாக அமைவது வழக்கம். கருத்துச் செறிவு மிகுந்த இறைச்சியில் தோன்றும் பொருட்சிறப்பு, இறைச்சிப் பொருள் சுட்டப்பெறும் இடங்கள், இறைச்சியின் தன்மையை விளக்கும் தொல்காப்பிய நூற்பாக்கள் முதலியவை இக்கட்டுரையில் எழிலுற எடுத்தாளப்பட்டுள்ளன. இத்துணைச் சிறப்புமிகு இறைச்சிப் பொருளின்பத்தைச் சங்கப் பாடல்களேயன்றி வேறு பாடல்களில் காணவியலாது என்று கூறும் ஆசிரியர், அதற்காகவேனும் தமிழ்மக்கள் சங்கப்பாடல்களைக் கற்றின்புற வேண்டும் என்ற தன் உள்ளக்கிடக்கையையும் இங்கு வெளிப்படுத்தியுள்ளார்.

    ’குறள் காட்டும் குறிப்பு’ என்பது மூன்றாவது கட்டுரை. முப்பாலுள், காமத்துப்பாலே வள்ளுவரின் கவியுள்ளத்தைத் தெற்றென உலகுக்குப் புலப்படுத்துவது; திட்பமும் நுட்பமும் வாய்ந்தது. அதிலுள்ள ‘குறிப்பறிவுறுத்தல்’ என்ற அதிகாரத்தில் இடம்பெற்றுள்ள உடன்போக்குத் துறையைப் பற்றிப் பேசுகின்றது இக்கட்டுரை. உடன்போக்கு என்பது காதல் கொண்ட தலைவனும் தலைவியும் மணந்துகொள்ளும்பொருட்டுப் பிறரறியாமல் ஊரைவிட்டுச் செல்வதாகும். தலைவி உடன்போக்குக் குறிப்புணர்த்தும் பாங்கை நனி நாகரிகத்துடன்  குறிப்பறிவுறுத்தல் அதிகாரத்திலுள்ள ஓர் குறள் நமக்குக் காட்டுவதை இந்நூலாசிரியர் மிக அழகாகக் காட்சிப்படுத்தியுள்ளார். வாமன வடிவிலுள்ள குறளின் பொருளை விரித்தால் அஃது நெடுமாலின் நீள்நிலமளந்த தோற்றத்தை ஒக்கும் என்பர் தமிழ்ச்சான்றோர். அத்தகைய திருக்குறளின் சிறப்பை, பொருளாழத்தைத் தமிழர் அறிந்துகொள்ள இக்கட்டுரை பேருதவி செய்யும் என்பது தெளிவு.

    அடுத்து இடம்பெற்றுள்ள கட்டுரை, பத்துப்பாட்டில் அடிகள் குறைந்ததும், அழகு மிகுந்ததுமாகிய ‘முல்லைப்பாட்டு’. முல்லை நிலத்துக்குரிய மாண்பும், இல்லிருந்து ஆற்றியிருத்தலாகிய அகவொழுக்கமும், தலைவனைப் பிரிந்த தலைவியின் பிரிவுத் துயரும், போர் மேற்சென்ற அரசன், தான்தங்கியிருக்கும் பாசறையின்கண் செய்கின்ற செயல்களும் இக்கட்டுரையில் விரிவாகப் பேசப்படுகின்றன. முல்லை நிலத்தைக் களமாகக் கொண்டு தீட்டப்பட்டுள்ள அற்புதமான சொல்லோவியமே புலவர் நப்பூதனாரின் முல்லைப்பாட்டு என்று கட்டுரையாசிரியர் உரைப்பது மிகவும் பொருத்தமே. முல்லை மலர் அளவிற்சிறியதாயினும் மணத்தில் சிறந்தது. அஃதொப்ப முல்லைப்பாட்டும் அளவிற்சிறிய நூலாயினும் சுவையில் சிறந்தது என்பதை ஆசிரியர் தெற்றெனப் புலப்படுத்தியுள்ளார்.

    ஐந்தாவதாக இடம்பெற்றுள்ள கட்டுரை ‘குறிஞ்சிப்பாட்டு’. செறுத்த செய்யுள் செய்செந்நாவின் வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்’ என்று புலவர் பெருமக்களால் போற்றிப் பாராட்டப்படும் கபிலர் எழுதிய நூல் இது. குறிஞ்சிப்பாட்டு நுவலும் பொருளும், இறைச்சி மற்றும் உள்ளுறையுவமங்களும் இக்கட்டுரையில் அழகுற எடுத்துக்காட்டப்பெறுகின்றன. இந்நூலில் ’ஒண்செங்காந்தள் முதல் பரேரம் புழகு’ ஈறாகத் தொண்ணூற்றொன்பது (99) வகையான மலர்களின் பெயர்களையும் குறிஞ்சிக் கபிலர் பட்டியலிட்டு நம்மை வியப்பிலாழ்த்தும் பாங்கைப் பாராட்ட வார்த்தைகள் ஏது? தமிழர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வினர் என்பதற்குக் குறிஞ்சிப்பாட்டினும் விஞ்சிய சான்று வேண்டுமா என்பது தமிழர்களாகிய நாம் நம்மையே கேட்டுக்கொள்ளவேண்டிய வினாவாகும். குறிஞ்சிப்பாட்டின் சிறப்பைச் சுருங்கக்கூறி விளங்கவைத்துள்ள நூலாசிரியரும் நம் பாராட்டுக்குரியவரே!

    அடுத்த கட்டுரை பத்துப்பாட்டினுள் ஒன்றான ’நெடுநல்வாடை’ பற்றியது. இந்நூல் ’கோல நெடுநல்வாடை’ என்று புகழப்படுகின்றது. நக்கீரர் புனைந்த நன்னூல் இது. போர் மேற்சென்ற தலைவனைப் பிரிந்த தலைமகட்கு நெடு(நீண்ட) வாடையாகவும், போரில் வெற்றி பெற்றுப் பாசறையில் பெருமிதத்தோடு தங்கியிருக்கும் வேந்தனுக்கு நல்வாடையாகவும் அமைதலினால் இந்நூல் நெடுநல்வாடையாயிற்று. இவ்வினிய நூலில் கோப்பெருந்தேவி தங்கியுள்ள அரண்மனையின் அமைப்பு, அவள் படுத்திருக்கும் கட்டிலின் அழகிய வேலைப்பாடுகள் ஆகியவை பண்டைத் தமிழர்தம் கட்டடக்கலைநூல் அறிவைப் பெரிதும் புலப்படுத்துவதாய் அமைந்துள்ளது. இந்நூல் அகத்திணையைச் சார்ந்ததா? புறத்திணையைச் சார்ந்ததா? என்ற இலக்கிய விவாதம் இன்றுவரைத் தமிழறிஞர் பெருமக்களிடையே முற்றுப்பெறாமல் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்க ஓர் சுவையான செய்தியாகும். பண்டைத் தமிழ்மக்களின் பல்வேறு திறன்கள் குறித்து அறிந்துகொள்ள இக்கட்டுரைப் பேருதவி புரியும்.

    கடியலூர் உருத்திரங்கண்ணனார் எனும் பெரும்புலவர் திருமாவளவன் மீது பாடிய ’பட்டினப்பாலை’ எனும் நூல்பற்றிய செய்திகள் அடுத்த கட்டுரையில் இடம்பெற்றுள்ளன. இந்நூலை இயற்றியமைக்காக அவர் பெற்ற பரிசில் ’பதினாறு இலட்சம் பொற்காசுகள்’ என்ற செய்தி நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றது. புகார் நகரச் சிறப்பும், வளமையும் இந்நூலில் நன்கு எடுத்தியம்பப்பட்டுள்ளது.  பரதவர், வணிகர், வேளாளர் போன்ற பல்வேறு மக்களின் பண்புநலன்களும், சிறப்பும் அழகாய்ப் பேசப்பட்டுள்ளது. மேலும், திருமாவளவன் என்ற பெயரான் அழைக்கப்படும் கரிகாற்சோழனின் போர்ச் சிறப்பும், அவனால் பகைவர் நாடு பாழாயினமையும் கவினுறக் காட்டப்பட்டுள்ளது. பட்டினம் என்று போற்றப்பட்டக் காவிரிப்பூம்பட்டினம் குறித்த செய்திகள் பாலைத் திணையை உரிப்பொருளாகக் கொண்டு கூறப்பட்டிருப்பதனாலேயே இந்நூலுக்குப் பட்டினப்பாலை என்ற பெயர் வந்தது என்று இந்நூலின் சிறப்பினைச் சுவைபடவும், நேர்த்தியாகவும் மொழிந்துள்ளார் கட்டுரையாசிரியர்.

    ’நெடுந்தொகை’ என்னும் பெயரால் அமைந்துள்ளது அடுத்த கட்டுரை. அகநானூற்றின் பிறிதொரு பெயரே நெடுந்தொகை என்பது. எட்டுத்தொகையிலுள்ள மற்ற நூல்களினும் அடிகளின் அளவால் (13-31 அடிகள்) இந்நூல் நெடியதாகலின் இதற்கு நெடுந்தொகை எனும் பெயர் வந்தது. இக்கட்டுரையில் அகநானூற்றுப் பாடல்களின் தனித்தன்மை, அதில் இடம்பெற்றுள்ள வரலாற்றுச் செய்திகள் ஆகியவை அலசப்பட்டுள்ளன. அகநானூற்றுப் பாடல்களின் எண்களே அப்பாடல்களின் திணையினைச் சுட்டும் பாங்கு ஈண்டுக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நூலைக் களிற்றியானைநிரை, மணிமிடைபவளம், நித்திலக்கோவை என்று மூன்றாகப் பகுத்துள்ளனர் புலவர் பெருமக்கள். உள்ளுறையுவமம், இறைச்சி எனப் பாடலுக்கு அணி சேர்க்கும் அனைத்து அம்சங்களும் மிகுந்திருப்பது அகநானூற்றின் அழகை அதிகப்படுத்துகின்றது என்கிறார் கட்டுரையாசிரியர்.

    ஒன்பதாவது கட்டுரையாகச் ’சிவகாமி சரிதை’ இடம்பெற்றுள்ளது. பேராசிரியர் சுந்தரம் பிள்ளையின் மிகச்சிறந்த படைப்பான ‘மனோன்மணீயம்’ என்ற நூலின் இடையில் வருவதே இச்சரிதை.  மனோன்மணீயம், லிட்டன் பிரபு எழுதிய, ‘The Secret Way’ என்ற நூலின் மொழிபெயர்ப்பானதுபோல, இச்சிவகாமி சரிதை ஆலிவர் கோல்ட்ஸ்மித் (Oliver Goldsmith) என்ற ஆங்கிலப் புலவர் யாத்த ‘The Vicar Of Wakefield’ என்ற நூலின் இடையில் இடம்பெற்றுள்ள ’Edwin and Angelina’ என்ற கதையின் தழுவலாகும். கதையின் தலைவி மனோன்மணியின் தோழியாக வரும் வாணி இக்கதைப் பாடலை, மனோன்மணியின் துயர்நீக்கப் பாடுவதாக இப்பகுதி அமைந்துள்ளது. இப்பாடலில் சித்தாந்த நுண்பொருளும் இலைமறைகாயாய் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ் மக்கள் அதிகம் அறிந்திராத இச்செய்திகளைத் தன் கட்டுரையில் வெளிப்படுத்தியுள்ள ஆசிரியரின் நுண்மாண் நுழைபுலம் போற்றுதலுக்குரியது.

    இக்கட்டுரையின் தொடர்ச்சியாகவே கருதும் வகையில் இடம்பெற்றுள்ளது ’மூலமும் மொழிபெயர்ப்பும்’ என்ற தலைப்பிலான பதினான்காவது கட்டுரை. இக்கட்டுரையில் மொழிபெயர்ப்புக் கலையின் சிறப்புக் குறித்துப் பேசப்பட்டுள்ளது. மூலநூல் ஆசிரியனினும் விஞ்சிய புலமைமிக்கோனே மொழிபெயர்ப்பு நூலைச் செம்மையாகச் செய்ய இயலும் எனும் உண்மையை ‘சிவகாமி சரிதை’ வாயிலாகவே நிறுவியுள்ளார் கட்டுரையாசிரியர். மனோன்மணீய ஆசிரியர் சுந்தரம் பிள்ளை போலவே இக்கட்டுரையாசிரியரும் தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறந்த புலமை பெற்றவர் என்பதற்கு இக்கட்டுரைத் தக்கதோர் சான்றாய்த் திகழ்கின்றது.

    அடுத்து வருவது ’புலவர் போற்றிய வாழ்வியல் நெறிகள்’ என்ற தலைப்பிலான கட்டுரை. இதில், சங்கப் புலவர்கள் அழகுணர்ச்சி மிக்கவர்களென்பதும், காதலன்பும், பிறவுயிர்கள்மாட்டு இரக்கவுணர்வும் நிறைந்தவர்கள் என்பதும் தக்க சான்றுகளுடன் விளக்கப்பட்டுள்ளது. மன்னர்களேயாயினும் தவறு செய்தவிடத்து, ஒழுக்கம் தவறுகின்றவிடத்து அத்தவறுகளைச் சுட்டிக்காட்டி இடித்துரைக்கவல்ல அஞ்சாநெஞ்சர்கள் புலவர் பெருமக்கள் என்பது கடையெழு வள்ளல்களில் ஒருவனான பேகனின் இல்லறவாழ்வை மையப்படுத்திச் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது. புலவர்களில் பலர் வறுமையுடையவர்களாய் இருந்தபோதிலும், பொருள்பெற்றுத் தம் வாழ்வை வளப்படுத்திக் கொள்வதையே வாழ்வின் குறிக்கோளாய்க் கொள்ளாமல் பிறரின் நல்வாழ்விலும் மிகுந்த அக்கறை செலுத்தியுள்ளனர் என்பதனை இக்கட்டுரை அங்கை நெல்லிக்கனியெனப் புலப்படுத்துகின்றது.

    ’பத்துப்பாட்டில் அகக் கோட்பாடுகள்’ என்பது கட்டுரைகளின் அழகிய அணிவகுப்பாய் விளங்கும் இந்நூலில் அடுத்து இடம்பெற்றுள்ள கட்டுரை. தொல்காப்பிய நெறியினின்றும் பிறழாமல், பண்டை நாளைப் புலவர்கள் அகத்திணைப் பாடல்களைப் புனைந்துள்ளனர் என்ற கருத்தினை இக்கட்டுரை தக்காங்கு நிறுவியுள்ளது. முதல், கரு, உரிப்பொருள்கள் பாடல்களில் அமைந்துள்ள இயல்பும், ஓர் அகப்பாடல் எவ்வாறு திணைக்குரியதாய் வகுக்கப்படுகின்றது என்ற கருத்தும் கட்டுரையில் நன்கு விளக்கப்பட்டுள்ளது. நெடுநல்வாடையின் திணையமைதி குறித்து விரிவாகவும், விளக்கமாகவும் ஆராயப்பட்டுள்ளது. பத்துப்பாட்டில் இடம்பெற்றுள்ள பிற அகப்பாடல்களின் அமைப்பும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. எனவே இக்கட்டுரை இலக்கியங்களை இலக்கணக் கண்களால் நோக்கி எடைபோட்டுள்ளது என்று கொள்வது சாலப் பொருந்தும்.

    ’மாட மதுரையில் ஓர் இரவு’ என்னும் கட்டுரை பன்னிரண்டாம் எண்ணுமுறையில் அமைந்துள்ளது. இஃது ஓங்கிய சிறப்பும், உயர்ந்த கேள்வியும் உடைய மாங்குடி மருதனார் எனும் புலவர் இயற்றிய பெருகு வளமதுரைக் காஞ்சியில் கூறப்பட்டுள்ள செய்திகளை விவரிக்கின்றது. மாட மதுரையில் ஞாயிறு மறைவது தொடங்கி, மீண்டும் அது குணதிசையில் தோன்றுவது வரையில், ஓரிரவில் நிகழும் நிகழ்ச்சிகளைத் தொகுத்தளிக்கும் அற்புதச் சொல்லோவியமாம் மதுரைக் காஞ்சி, கற்பார் மனத்தைப் பெரிதும் கவரும் தன்மையுடையது எனில் மிகையில்லை. இரவின் நான்கு யாமங்களிலும் நிகழும் நிகழ்ச்சிகளைச் சுட்டுவதன் வாயிலாக, மதுரை மாநகரின் அமைப்பும், மன்னன் நெடுஞ்செழியனின் ஆட்சிச் சிறப்பும், வணிகப் பெருக்கும் விளங்கக் கூறப்பட்டுள்ளது. புலியைப் போன்ற வீரர்கள் இரவில் கண் துஞ்சாது காவல்தொழிலில் சிறிதும் பிழையேற்படாவண்ணம் மதுரையைக் காத்து நிற்கின்றனர் என்ற செய்தி நமக்கு வியப்பையும், அவ்வீரர்கள்பால் பெருமதிப்பையும் ஒருங்கே ஏற்படுத்துவதாய் உள்ளது. ஈராயிரம் ஆண்டுகளாகவே மதுரை உறங்கா நகராகத்தான் திகழ்ந்துவருகின்றது என்பதனை இக்கட்டுரையும் உறுதிசெய்கிறது.

    அடுத்த கட்டுரை ‘சிலம்பு கழீஇ விழா’ என்பதாகும். பண்டைய தமிழகத்தில் இளமகளிர் சிலம்பு அணிதல் பெருவழக்காக அமைந்திருந்தது. இம்மகளிர் திருமணம் செய்துகொள்ளும் காலத்தில் முன்னரணிந்திருந்த சிலம்புகளைக் களைந்துவிட்டுப் புதிய சிலம்புகளை அணிவர். இவ்வாறு சிலம்பணியும் நிகழ்ச்சிகளை விழாவாக எடுத்துள்ளனர். இவ்விழா, பொதுவாகத் தலைவியின் பிறந்தவீட்டில் நடைபெறும். உடன்போக்கு நிகழ்ந்து வரைதல்(திருமணம்) நிகழுமாயின் கணவன் வீட்டிலும் சிலம்பணி விழா நிகழ்தலுண்டு. பழைய சிலம்பினைக் கழற்றுதலையே ’சிலம்பு கழீஇ விழா’ என்பர். இச்செய்திகள், அகநானூறு, நற்றிணை, ஐங்குறுநூறு போன்ற இலக்கியங்களில் பேசப்பட்டுள்ளன. நம் சங்கத் தமிழர் போற்றிய பல்வேறு நிகழ்ச்சிகளை, விழாக்களை நமக்கு அறிமுகப்படுத்தி நம் நனிநாகரிகத்தை நாம் உணர்ந்துகொள்ள – அறிந்துகொள்ள இக்கட்டுரை ஓர் வாய்ப்பாய் அமைந்துள்ளது.

    ‘களவியல் உரையில் உவமை நலம்’ என்பது அடுத்துவரும் கட்டுரை. இலக்கணவுலகில் இன்றும் வாழ்கின்ற நூல்கள் சிலவற்றுள் ’களவியல்’ என்று அழைக்கப்படும் ’இறையனார் அகப்பொருள்’ என்ற நூலும் ஒன்று. இந்நூல் இறைவனால் அருளப்பெற்றது என்றும், இந்நூற்கு நக்கீரர் உரைகண்டார் என்றும் கூறப்படுகின்றது. இவ்வுரை செம்மாந்த நடையுடையது. சிறந்த உவமைகள், மதிநுட்பம் வாய்ந்த தொடர்கள், தருக்க நடை போல்வன இவ்வுரையில் மிகுந்திருப்பது கற்பார்க்குக் கழிபேரின்பம் நல்குவதாய் உள்ளது. ’கொழுச்சென்ற வழித் துன்னூசி செல்லுமாறு போல’, ’வடகடலிட்ட ஒருதுளை ஒருநுகம், தென்கடலிட்ட ஒருகழி சென்று கோத்தாற் போல’ வேலேறுபடத் தேளேறு மாய்ந்தாற்போல’ போன்ற அருமையான உவமைகள் பலவற்றை அதன் பொருளோடும், பயன்பாட்டோடும் விளக்குகின்றது இக்கட்டுரை. நம் முன்னோர்களின் மொழிப் புலமையையும், கூர்த்த மதியையும் அறிந்துகொள்ள இக்களவியல் உரையிலுள்ள உவமைகள் உறுதுணை செய்யும்.

    அடுத்து இடம்பெற்றிருக்கும் இலக்கியக் கட்டுரை ‘கலித்தொகைக் கடவுள் வாழ்த்தும் சிவபெருமான் திருநடனமும்’ ஆகும். கற்றறிந்தார் ஏத்தும் கலித்தொகையானது நூற்றைம்பது கலிப்பாக்களால் அமைந்தது. இதன் கடவுள் வாழ்த்தைப் பாடியவர் நல்லந்துவனார் எனும் சீர்மிகு புலவர்பெருந்தகையாவார். இக்கடவுள் வாழ்த்து ’ஆறறி யந்தணர்க்கு அருமறை பல பகர்ந்து’ எனத் தொடங்கி ’அமர்ந்தானையாடி’ என நிறைவு பெறுகின்றது. இச்செய்யுள் சிவபெருமான் ஆடிய கொடுகொட்டி, பாண்டரங்கம், காபாலம் ஆகிய கூத்துக்களையும், உமாதேவியார் உடனிருந்தருளிய பாணியும், தூக்கும், சீருமாகிய தாள அறுதிகளையும் கூறுகின்றது. சிவபெருமான் கங்கை நீரைக் கரந்து அடக்கியவன், திரிபுரம் எரித்தவன், நஞ்சுண்டு கறுத்த நீலமணி போலும் மிடற்றினையும், எட்டுக் கைகளையும் உடைய ’எண்தோளீசன்’ எனப் பெருமானின் அருட்செயல்களை விதந்தோதுகின்றது இக்கடவுள் வாழ்த்து. தமிழரின் இறையுணர்வும் கலையுணர்வும் கைகோத்துக் காட்சியளிக்கின்றது இக்கட்டுரையில்.

    ‘விலங்கும் வேண்டாக் கைம்மை வாழ்க்கை’ எனும் கட்டுரைச் சங்க இலக்கியக் கட்டுரைகளின் வரிசையில் இறுதியாக இடம்பெற்றிருக்கின்றது. உலகில் தோன்றிய உயிரினங்களில் மிகப்பல இணையாகத் துணையோடு வாழவே விரும்புகின்றன. புள்ளினங்களில் சில, தம் துணையைப் பிரிய நேரிட்டால் உடனுயிர் துறக்குமென இலக்கியங்கள் கூறுகின்றன. இத்தகைய அரிய விலங்கினக் காதலை – கைம்மை வேண்டாது உடனுயிர் நீக்கும் பேரன்பினை எட்டுத்தொகையுள் ஒன்றான நல்ல குறுந்தொகை நயனுற நவில்கின்றது. தன் காதல் தலைவனான ஆண்குரங்கு இறந்துபட்டதால் பெண்குரங்கு தன் குட்டியைச் சுற்றத்தாரிடம் சேர்ப்பித்துவிட்டுக் கைம்மை வாழ்வை விரும்பாமல் உயிர்நீக்கும் எனும் செய்தியைக் குறுந்தொகைப் பாடலொன்றில் அதன் ஆசிரியரான கடுந்தோட் கரவீரனார் கூறி நம்மை அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் மூழ்கவைக்கிறார். அதன்வாயிலாய் அவர் (மனிதர்களுக்கு) உணர்த்தும் உள்ளுறை என்ன என்பதைக் கட்டுரையாசிரியர் மிகச் சிறப்பாக இக்கட்டுரையில் விளக்கியுள்ளார்.

    அடுத்து, சங்க இலக்கியம்சாராக் கட்டுரைகள் சிலவும் கொய்த நன்மலர்களாய் மணம் பரப்புகின்றன. அவற்றையும் சுருங்கக் காண்போம்.

    ’மாணவர் போற்றிய ஆசான்’ என்ற கட்டுரை ’தமிழ்த்தாத்தா’ என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் உ.வே.சாமிநாதைய்யர் அவர்களுக்கும் அவருடைய தலைசிறந்த மாணாக்கருள் ஒருவராய்த் திகழ்ந்த கி.வா. ஜகந்நாதன் அவர்களுக்கும் இருந்த குரு-சிஷ்ய பக்தியை நன்கு புலப்படுத்துகின்றது. கி.வா.ஜ அவர்கள் உ.வே.சாவிடம் குருகுல முறையில் கல்வி பயின்றவர். 1927-ஆம் ஆண்டு முதல் தம் குருநாதரின் இறுதிநாட்கள் வரையில் உடனிருந்தவர். பல்வேறு பணிகளிலும் துணைநின்றவர். நாடு போற்றும் நல்ல சொற்பொழிவாளராய்த் திகழ்ந்த கி.வா.ஜ அவர்கள் தம் ஆசானைப் போற்றித் ’தமிழ்த்தாத்தா’ என்ற நூலைச் செய்துள்ளார். அதில் தமிழ்த்தாத்தாவின் தன்னிகரில்லாப் பண்புநலன்கள் பலவற்றைப் பட்டியலிட்டுத் தம் குருவிடத்துத் தாம்கொண்ட அளவிறந்த காதலையும், அன்பையும் புலப்படுத்தியுள்ளார் என்பது இக்கட்டுரை நமக்கு அறியத்தரும் அற்புதத் தகவலாகும்.

    ’அம்மையார் பாடல்களும் யாப்பமைதியும்’ என்ற கட்டுரையும் அதனோடு நெருங்கிய தொடர்புடைய ’அம்மையார் பாடல்களில் ஆடவல்லானின் திருநடனக் காட்சிகள்’ என்ற மற்றொரு கட்டுரையும், காரைக்காலில் பிறந்து மூத்த நாயன்மார்களுள் ஒருவராய்ப் புகழ்பெற்ற காரைக்காலம்மையார் என்று அழைக்கப்படும் புனிதவதியாரின் பனுவல்களான திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், திருவிரட்டை மணிமாலை, அற்புதத் திருவந்தாதி ஆகியவற்றில் பயின்றுவந்துள்ள யாப்பின் வகைகளை விரிவாய் ஆராய்கின்றன. அம்மையார் பயன்படுத்தியுள்ள யாப்பு வகைகளாகக் கட்டுரையாசிரியர் சுட்டுவன பதிகம், கட்டளைக் கலித்துறை, வெண்பா முதலியன. அதுபோலவே அம்மையாரின் பனுவல்கள் அனைத்தும் சிவனார் ஆடிய பல்வேறு வகையான தாண்டவங்களையும், ஆடல்களையும் தவறாது சுட்டுகின்றன என்ற தகவலையும் நமக்குத் தருகின்றார் ஆசிரியர். அம்மையார் பாடல்களை ஆழமாக ஆராய்ந்துள்ளார் நூலாசிரியர் என்பதையே இக்கட்டுரை உறுதி செய்கின்றது.

    இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள பிறிதோர் கட்டுரை ‘அருட்பிரகாசரின் அன்பு நெறி’ எனும் தலைப்பிலானது. இஃது வள்ளலார் வகுத்த நெறிகளையும், வாழ்க்கைமுறைகளையும் பாங்குற விளக்கிச் செல்கின்றது. வள்ளலாரின் முக்கியக் கோட்பாடுகளான சீவகாருண்ய ஒழுக்கம், புலால் மறுத்தல், பலியிடுதலைத் தவிர்த்தல், உண்மை அன்பால் இறைவனைக் காணுதல் முதலியன, அவர் மக்களுக்கு வலியுறுத்தும் நெறி அன்பு நெறியே என்பதனைத் தெள்ளத்தெளிவாக விளக்குவதாக இந்நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். ’ஆருயிர்கட்கெல்லாம் நான் அன்புசெய்தல் வேண்டும்’ என்று வள்ளலார் இறைவனிடம் வேண்டுவதும் ‘அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே’ என்று இறைவனை அவர் விளிப்பதும் அருட்பிரகாசருள் ஆழப்பதிந்திருப்பது அன்பு நெறியே என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றது என்று ஆசிரியர் நிறுவுவது மிகவும் ஏற்புடைத்தே.

    இக்கட்டுரைத் தொகுப்பில் இறுதியாக நாம் காணவிருப்பது ‘பாரதியின் சீட்டுக்கவி’ எனும் கட்டுரை. மாந்தன் தோன்றிய காலந்தொட்டே தன் எண்ணங்களை மற்றவரோடு பகிர்ந்துகொள்ள விழைந்தான். அதன் வெளிப்பாடே பல்வேறு ஒலிக்குறிகள், சைகைகள் போல்வன. நீண்ட காலத்திற்குப்பின் நாகரிக வளர்ச்சியின் ஒரு கூறாகக் கடித இலக்கியங்கள் தோன்றின எனலாம். முறையான திருமுகப் பாசுரமாக – வேண்டுகோள் மடலாகக் காணப்பெறுவது பதினோராம் திருமுறையில் இடம்பெற்றுள்ள திருமுகப்பாசுரப் பாடலாகும். இது மதுரை சொக்கநாதப் பெருமான் பாணபத்திரருக்கு உதவி புரியவேண்டிச் சேரமான் பெருமாள் நாயனாருக்கு எழுதியதாகச் சுட்டப்படுகின்றது. இத்திருமுகச் செய்யுள்கள் பின்னாளில் ‘சீட்டுக் கவிகள்’ என்ற புதுப்பெயரைச் சூட்டிக்கொண்டன. அவ்வகையில் மகாகவி பாரதியார் எட்டையபுர சமஸ்தான மன்னனைப் புகழ்ந்து எழுதிய ’சீட்டுக் கவியும் ஓலைத் தூக்கும்’ எனும் தலைப்பில் அமைந்த கவிதைகளை நயம்பட ஆராய்ந்துள்ளது இக்கட்டுரை. யாருக்கும் தலைவணங்காத பாரதி ஓர் குறுநில மன்னனைப் புகழ்ந்து பாடியிருப்பது அவன் வறுமை காரணமாக நிகழ்ந்த ஒன்றே என்ற தன்திடமான நம்பிக்கையை இக்கட்டுரையில் வெளிப்படுத்தியுள்ளார் ஆசிரியர்.

    இவ்வாறு இலக்கிய மணமும், சுவையும் நிறைந்த பல்வேறு கட்டுரைகளைக் ’கொய்த நன் மலர்களாய்’ நம் கைகளில் நூல்வடிவில் தவழச் செய்துள்ளார் பெரும்புலவர், முனைவர். இராம. இராமமூர்த்தி அவர்கள். இம்மலர்களின் அற்புத மணத்தை அறிந்துகொள்ள – தெரிந்துகொள்ளத் தமிழ்கூறு நல்லுலகம் இந்நூலை அவசியம் வாங்கிப் படிக்கவேண்டும். அதுமட்டுமல்ல…வருங்காலச் சந்ததியினருக்கு நம் நனிநாகரிகத்தை, பண்பாட்டை உணர்த்துதற்கு இந்நூலைப் பொன்னேபோல் போற்றிப் பாதுக்காத்திடவேண்டும் என்பதே என் வேண்டுகோள்.

    Share
  • தன்னாட்சி – புத்தக மதிப்பு​ரை

    மதிப்பு​ரை: ரஞ்சனி நாராயணன்

    தன்னாட்சி : வளமான இந்தியாவை உருவாக்க

    ஆங்கில மூலம்: ஸ்வராஜ் எழுதியவர்: அர்விந்த் கெஜ்ரிவால்

    தமிழில் மொழிபெயர்ப்பு : கே.ஜி. ஜவர்லால்

    பதிப்பகம்: கிழக்குப் பதிப்பகம்

    விலை: ரூ. 80

    பக்கங்கள் : 120

    வெளியான ஆண்டு: 2012

    001 

    ஆசிரியர் குறிப்பு:

    தற்போது டெல்லியில் முதலமைச்சர் ஆக இருக்கும் திரு. அர்விந்த் கெஜ்ரிவால் எழுதிய ஸ்வராஜ் என்ற ஆங்கிலப்புத்தகத்தின் தமிழாக்கம் இந்த புத்தகம். தமிழில் மொழிபெயர்ப்பு செய்தவர் ‘இதயம் பேத்துகிறது’ என்கிற வலைத்தளத்தின் ஆசிரியர் திரு கே.ஜி. ஜவர்லால்.

    2011 ஆம் ஆண்டு அண்ணா ஹசாரேயின் தலைமையில் ஊழலை எதிர்த்து திரண்ட அணியில் முக்கியப்பங்கு திரு அர்விந்த் கெஜ்ரிவால் அவர்களுக்கு உண்டு. அதற்குப்பின் ஆம் ஆத்மி என்றொரு கட்சியை ஆரம்பித்து மிகக்குறைந்த காலத்தில் டெல்லியில் ஆட்சியைப் பிடித்திருக்கிறார். தகவல் அறியும் சட்டத்தை அமல்படுத்த இவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காக 2006 இல் இவருக்கு ராமோன் மாக்ஸேஸே விருது வழங்கப்பட்டது.

    ‘நம் நாட்டில் குறை சொல்பவர்கள் அதிகம். குறைகளை சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என்று எடுத்துச் சொல்பவர்கள் குறைவு. இந்தப் புத்தகத்தை தமிழில் மொழிபெயர்ப்பதன் மூலம் என் சமூகக் கடமை ஒன்றை நிறைவேற்றியிருப்பதாக உணருகிறேன்’ என்கிறார் மொழிபெயர்ப்பாளர் திரு ஜவர்லால்

    ‘நாளைய இந்தியா எப்படி இருக்கவேண்டும் என்பதற்கான திட்டம் இந்தப் புத்தகம். வேலையில்லா திண்டாட்டம், வன்முறை, ஊழல், பணவீக்கம், தீவிரவாதம், தீண்டாமை போன்ற பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு காண விழைபவர்களுக்கு இந்தப் புத்தகம் தூண்டுகோலாக அமையும்’ என்கிறார் இந்த புத்தகத்திற்கு முகவுரை எழுதியிருக்கும் திரு அண்ணா ஹசாரே.

    சரி, புத்தகத்திற்குள் செல்லலாமா?

    ஏன் இந்தப் புத்தகம்? என்று முதல் அத்தியாயத்தை  தொடங்கும் ஆசிரியர். ஒவ்வொரு அத்தியாயத்திலும் பல கேள்விகள் கேட்கிறார்.

    நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு தங்களின் பலத்தை நிரூபிக்க வேண்டிய சமயங்களில்  எம்பி- க்களுக்கு பணத்தை கொடுத்து (horse riding) தங்களுக்கு சாதகமாக வோட்டுப் போடவைக்க முயலுகிறது. எம்பிக்கள் இப்படி விலைபோக ஆரம்பித்தால் நம்முடைய வாக்குகளுக்கு என்ன மரியாதை?

     

    வருமான வரி ஏய்ப்பு செய்துவந்த ஒரு வெளிநாட்டு நிறுவனம் பிடிபட்டபோது அதன் முக்கிய அதிகாரி கூறினார்: ‘இந்தியா ஏழை நாடு. உங்களுக்கு உதவவே நாங்கள் வந்துள்ளோம். எங்களுக்கு இப்படி தொந்திரவு கொடுத்தால், எங்களுடைய பலத்தை காட்டி உங்கள் நாடாளுமன்றத்தில் எங்களுக்கு சாதகமாக சட்டங்களை நிறைவேற்றிக் கொள்ளுவோம்!’ வெளிநாட்டு சக்திகள் நம் நாடாளுமன்றத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டுள்ளனவா?

     

    போபால் விஷவாயு வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் தப்பிப்போக அரசியல்வாதிகளும், மூத்த தலைவர்களும் எவ்விதம் உதவினார்கள் என்று செய்திகளில் படித்தபோது, ஆசிரியரின் மனதில் எழுந்த கேள்விகள்: இந்தியா நம்பகமானவர்களின் கைகளில்தான் இருக்கிறதா? பத்திரமான வாழ்க்கையையும், நம்பிக்கையான எதிர்காலத்தையும் இதுபோன்ற அரசியல்வாதிகளிடம் எதிர்பார்க்கலாமா?

    நம் ஒவ்வொருவரின் மனதிலும் எழும் கேள்விகள் தாம் இவை.

    இரும்பு கனிமச் சுரங்கங்களை குத்தகைக்கு எடுக்கும் நிறுவனங்கள் டன் ஒன்றுக்கு ரூ 27 மட்டுமே ராயல்டி செலுத்துகின்றன. வெட்டி எடுத்த இரும்புக் கனிமத்தை டன் ஒன்றுக்கு ரூ 6000 விலைக்கு விற்கின்றன. வெட்டி எடுக்கவும் சுத்திகரிக்கவும் டன் ஒன்றுக்கு ரூ 300 ஆகிறது. நாட்டின் வளங்களை நேரடியாகக் கொள்ளை அடிப்பது அல்லவா இது?

    இப்படிக் கேள்விகள் கேட்பதுடன் நிற்கவில்லை ஆசிரியர். பலமைல்கள் நெடுந்தூரம் பயணம் செய்து பலரிடமும் பேசி, ஆழ்ந்து ஆய்வு செய்திருப்பதுடன், இவற்றுக்கான விடைகளையும் தருகிறார் இந்தப் புத்தகத்தில்.

    ‘பிரச்னையின் ஆணிவேர் என்னவென்றால், ஜனநாயகம் என்று நாம் சொல்லும் அமைப்பில் மக்களுக்கு எந்த உரிமையும் அதிகாரமும் இல்லை! 120 கோடி மக்களை வாட்டி வதைக்கும் பிரச்னைகள் என்ன? அவர்களது தேவைகள் என்ன? இதையெல்லாம் தில்லியிலும், இதரத் தலைநகரங்களிலும் உட்கார்ந்து கொண்டு தீர்மானிக்கிறார்கள்.

    இன்னொரு அநியாயமும் நம்நாட்டில் நடக்கிறது. அதாவது நமக்கு என்ன மாதிரியான சட்டங்கள் வேண்டும் என்று அரசு நம்மைக்கேட்பதில்லை. ஆனால் நீர், நிலம், காடுகள், கனிமவளங்கள் இவையெல்லாம் வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்களுக்கு பயன்படும் வகையில் சட்டங்கள் இயற்றப்படுகின்றன! சில சட்டங்கள் இயற்றப்படுவதற்குமுன் வெளிநாட்டு நிறுவனங்களுடனும், வெளிநாட்டு அரசுகளுடனும் ஆலோசனைகள் நடத்தப்படுகின்றன! நமது நாட்டின் நீர்வளங்கள், கனிமவளங்கள் எல்லாம் எப்படி பறிபோகின்றன என்று உதாரணங்களுடன் சொல்லுகிறார் ஆசிரியர். விவசாயம் மட்டுமே தெரிந்த ஒருவரின் நிலம் பறிமுதல் செய்யப்படுவதால், வேறு தொழில் தெரியாத அவரது குடும்பமே அழிந்துபோகிறது.

    இப்போதிருக்கும் பஞ்சாயத்து ராஜின் குறைபாடுகள் என்னென்ன என்று சொல்லும் அர்விந்த் அவற்றிற்கான தீர்வுகளையும் சொல்லுகிறார். மற்ற நாடுகளில் ஜனநாயகம் எப்படி இருக்கிறது என்று உதாரணங்களுடன் விளக்குகிறார். அமெரிக்காவில் மிடில் டௌன் என்ற இடத்தில் ஒவ்வொரு திங்கள்கிழமையும் மாலை ஐந்து மணிக்கு மக்கள் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அவர்களது கருத்துகளுக்கு ஏற்றவாறு அந்த ஊரின் நிர்வாகம் நடந்து கொள்ளுகிறது. அமெரிக்காவின் ஓரேகான் மாநிலத்தில் வால்மார்ட் நிறுவனம் தனது மையத்தை நிறுவ முயன்றபோது, அங்குள்ள சிறுவியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என்கிற காரணத்தை மக்கள் முன்வைத்ததால்  அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் நம் நாட்டில்?

    நம்நாட்டில் இருக்கும் நூறு கோடிப்பேர் எப்படி ஒரு விஷயம் குறித்து முடிவெடுக்க முடியும், சாத்தியமா? சாத்தியம் என்கிறார் ஆசிரியர். ஒவ்வொரு கிராமத்திலும் ஒட்டுமொத்த கிராமத்தின் ஒருங்கிணைந்த பிரதிநிதிகளைக் கொண்ட கிராம சபை அமைக்கப்பட வேண்டும். அந்த கிராமத்தின் முன்னேற்றத்துக்கு வேண்டிய திட்டங்களை கிராம மக்களைக் கலந்தாலோசித்து நிறைவேற்ற வேண்டும். இதுபோல ஒரு அமைப்பை (தன்னாட்சி) ஏற்படுத்தி ராலேகான் சித்தியில் ஏற்படுத்தி அந்த கிராமத்தின் அடையாளத்தையே மாற்றி இருக்கிறார் அண்ணா ஹசாரே. போபட்ராவ் பவார், ஹிவ்ரே பஸார் என்கிற கிராமத்தையும், தமிழ் நாட்டில் குத்தம்பாக்கம் என்கிற கிராமத்தை இளங்கோ என்கிற இளைஞரும் மாற்றி இருக்கிறார்கள்.

    கிராமங்களில் கிராம சபை போல நகரங்களில் சமுதாய அமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும். கிராம சபைக் கூட்டங்கள் சாதாரண ‘எப்படி இருக்கீங்க?’வில் தொடங்கவேண்டும் என்கிறார் சமூக ஆர்வலர் பி.டி. ஷர்மா. தங்கது சொந்த விஷயங்களையும் கஷ்ட நஷ்டங்களையும் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு ஒவ்வொருகிடையிலும் நெருக்கம் வரவேண்டும். இது மெல்ல மெல்ல சமூக விஷயங்களுக்கும் இயற்கையாக திசை திரும்ப வேண்டும். மக்கள் ஒன்று கூட வேண்டும். ஒருவரோடு ஒருவர் பேச வேண்டும். ஒரு உறவு/நட்பு ஏற்பட்ட்விட்டாலே பேச்சின் திசை தானாக உள்ளூர் பிரச்னைகளையும், நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்னைகளையும் நோக்கித் திரும்பும்.  வேற்றுமைகள் மறையும்.

    ‘நாட்டின் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டுமானால் நாம் இணைந்து செயல்பட வேண்டும்’ என்கிற வேண்டுகோளுடன் புத்தகத்தை முடிக்கிறார் அர்விந்த் கெஜ்ரிவால்.

    தற்போது திரு கெஜ்ரிவாலின் நடவடிக்கைகள் பலத்த விவாதங்களுக்கு ஆளாகியிருக்கின்றன. அவற்றையெல்லாம் சற்று நேரம் மறந்துவிட்டு, எந்தவிதமான முன்கூட்டிய எண்ணங்களுக்கும் இல்லாமல் இந்தப் புத்தகத்தை படித்துப் பாருங்கள். இந்தியாவின் வளம் நமது ஒருங்கிணைந்த கைகளில் என்று சொல்லும் இந்தப் புத்தகம் உங்களையும் கவரும். இவர் சொல்லும் தன்னாட்சிக்கு நீங்களும் வோட்டுப் போடுவீர்கள்!

    Share
  • த​லையில்லா ​தேவி

    விசாலம்

    தை மாதம் வந்தாலே அம்பாளுக்கு உற்சாகம் தான். எந்தக் கோயிலில் சென்றாலும் பெண்மணிகளின் கூட்டமும், அவர்கள் அழகாக அமர்ந்து லலிதா சஹஸ்ரநாமம் சொல்வதும். கூடவே லலிதா திரிசதி படிப்பதும் கேட்பவர்களைப் பரவசப்படுத்தும். தவிர, எல்லாப் பெண்மணிகளுக்கும் தாம்பூலமும் கொடுக்க அம்பாளின் ஆசிகள் நமக்கு பரிபூரணமாக கிடைத்த மன நிறைவு இருக்கிறதே, அதை அனுபவித்தால் தான் தெரியும். அம்பாளுக்கும் விதவிதமான புடவைகள் வந்து குவியும். அவளும் பக்தர்களுக்காக எல்லாம் மாறி மாறி கட்டிக்கொண்டு கொள்ளை அழகாக மடிசாரில் மின்னுவாள். அதுவும் தை வெள்ளிக்கிழமை அம்பாளுக்கு மிகவும் விசேஷமான தினம்.

    அந்த மாதத்தில் வரும் நாலு அல்லது ஐந்து வார வெள்ளிக்கிழமைகளில் கோயில் மண்டபம் முழுவதும் பெண்மணிகளால் நிரம்பி இருக்கும். மண்டபத்தில் சின்னச்சின்ன கட்டங்களில் மாக்கோலம் போடப்பட்டு அதன் அருகில் நம்பரும் எழுதியிருக்கும்.  கோயிலின் மண்டபத்தின் அளவைப் பொறுத்து நம்பரும் இருக்கும். யார் யார் விளக்கு பூஜைக்கு பெயர்  கொடுத்திருக்கிறார்களோ அவர்களுக்கு ஒரு டோக்கன் நுழைவு சீட்டுப் போல் நம்பர் இட்டு கொடுத்திருப்பார்கள். அவர்கள் அந்த டோக்கனுடன் பூஜைக்கு வரவேண்டும். அவர்கள் வரும் போது குத்து விளக்கு, வாழை இலை, தூபக்கால், திரி, எண்ணெய் என்று அவர்கள் கேட்ட ஐட்டங்களுடன் வர, ஒன்பது மணிக்கு பூஜை ஆரம்பிக்கும். சுமார் பன்னிரண்டு மணி வரை நடக்கும். ஒரே நேரத்தில் பல விளக்குகள் ஒளி வீச குத்துவிளக்கை அம்பாளாக பாவித்து அவளுக்கு அரக்கு அல்லது பச்சை புடவை சுற்றி பூவும் சூட்டி மஞ்சள் குங்குமம் இட்டு ரெடியாக “டண்டண்” என்று மணி அடிக்கும் ஒலி. எல்லோரும் தங்கள் கவனம் முழுவதும் அம்பாளிடம் செலுத்த அதுவே ஒரு தியானமாகிவிடும். பின் என்ன வாத்தியார் “கணானாம் த்வா கணபதிம்” என்று ஆனைமுகனை அழைக்க அவரும் மஞ்சள் பிள்ளையாராக வந்து அமர்ந்துவிடுவார். பின்னர் விக்னமில்லாமல் பூஜை நடக்க பிரார்த்தனை தொடங்க  பூஜை மேலே தொடரும்.

    ஆஹா! என்ன அழகு! அந்தச் சூழ்நிலை மறக்கமுடியாத ஒன்று. அதேபோல் பூஜை முடிவடையும் நேரம் எல்லோரும் கற்பூரம் காட்டி வழிபடும் நேரமும் மனதை விட்டு நீங்காது. அந்த ஊதுவத்தியின் வாசனை, சாம்பிராணியின் தனி மணம், பல பூக்களின் கதம்ப வாசனை எல்லாம் சேர்ந்து ஆன்மீக வழிக்கு நம்மை எடுத்துச்செல்வதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது.நான் தில்லியில் இருக்கும் போது வெள்ளிக்கிழமை தவறாமல் அம்பாள் கோயில் போய் வருவேன். மந்திர் மார்கில், பிர்லா மந்திர் அருகில் இருக்கும் காளி பாரி {kali bari} கோயிலை இன்றும் என்னால் மறக்கமுடியவில்லை. அங்கும் வெள்ளிக்கிழமை என்றால் கூட்டம் தாங்கமுடியாது.

    நான் பல தடவைகள் இங்கு போயிருக்கிறேன்.  இந்தக் கோயிலில் லட்சுமி, சரஸ்வதி இருந்தாலும் இங்கு இருக்கும் காளி தான் மிக விசேஷம். அந்தக் காளியின் கோவில் மிகப் பழமை வாய்ந்தது.

    3 Chinamasta123முகலாய வம்சத்தினர் அதன் அருகில் படை எடுத்தப்போதும்கூட கோவில் ஒரு சேதமாகாமல் தப்பித்தது. முகலாயர்கள் இந்தக் கோவில் வரை வந்தும் மனது மாறி திரும்பியதாகச் சொல்லுகிறார்கள். அங்கு பலவிதமான வர்ணப் படங்கள் {paintings} உள்ளன. எல்லாம் அம்பாளின் பல ரூபங்கள். அந்தப் படங்களில் ஒன்று என் மனதை மிகக் கவர்ந்தது. ஆனால் மிகவும் பயங்கரமான ஒன்று. இப்படியும் ஒரு அம்மனா? என்ன கொடூரம்! ரோமங்கள் குத்திட்டு நின்றன. அந்த அம்பாள் பெயர் சின்ன மஸ்தா. மகர சங்கராந்தி, தை செவ்வாய் வெள்ளி, வசந்த நவராத்திரி, சாரதா நவராத்திரி போன்ற நாட்களில் இவளுக்கும் தனி பூஜை உண்டு. சின்ன என்றால் துண்டித்தது; மஸ்தா என்றால் தலை என நினைக்கிறேன். சின்ன மஸ்தா தன்னுடைய ஒரு கையில் தன்னுடைய வெட்டியத் தலையையே வைத்திருக்கிறாள். தன் தலை அதுவும் அப்போதுதான் முண்டித்த தலை, இரத்த வெள்ளம் அருவி போல்; என்ன பயங்கரம்! தலையில்லாமல் முண்டமாக நிற்கிறாள். வெட்டப்பட்ட கழுத்திலிருந்து இரத்தம் பெருகி மூன்று ஊற்றுக்கள் வெளியே வந்து விழுகின்றன.  இடை பிங்கலை  சுழுமுனை  வழியாக வெளியே வந்து  இந்தக் குறுதி ஊற்றுக்கள் பாய்கிறது வெளியே!

    இவளுடைய கையில் வெட்டப்பட்டத் தலை மத்ய நாடியான சுஷம்னாவிலிருந்து வரும் இரத்ததைப் பருகுகிறது. இதைப் பற்றி அங்கு இருந்த ஒரு பண்டித்ஜியிடம் கேட்டேன். நாம் நமது இந்திரியத்தை அடக்க முற்படும் போது தலை உச்சி வரை அமுத நீர் ஓடி சஹஸ்ராரா சக்ராவைத் தொட ஆனந்த நிலை, சமாதி  நிலை ஏற்படுகிறது. இந்த நிலை ஏற்படுவதற்கு உதவுகிறாள் சின்னமஸ்தா.  இந்திரியங்களை ஒடுக்கினால் மட்டும் போதாது; மனதிலுள்ள  நான் என்ற மமதையும் நீக்க வேண்டும் என்பதைச் சுட்டிக் காட்டத் தன் தலையையே வெட்டி  தன் கையில் வைத்திருக்கிறாள், கரத்தில் ஒரு கத்திரிக்கோல் உள்ளது. இது  சம்சார பந்தததை வெட்டிக் கொண்டு நான் பிரம்மம் என்று உணர  வைத்திருக்கிறாள். இவள் மேலும் காம புருஷனையும் ரதியையும் காலின்  கீழ் மிதித்துக் கொண்டிருக்கிறாள். இதற்கு பண்டித்ஜி கொடுத்த விளக்கம் ஐந்து இந்திரியங்களுடன் மனதையும் சேர்த்து ஆறாக்கி சஷ்டி தேவி என்றும் இவளைக் கூறுகின்றனர். இவளே சக்தியில் வித்யுத் சக்தி என்ற மின் சக்தி உண்டு செய்கிறாள். இந்த மின் சக்தி குண்டலினி தியானத்தில் மெதுவாக மேலே ஏறி ஜீவாதார சக்தியாக மாறி பின் மின் அதிர்வைத் தருகிறது. ரிஷிகள் இந்த மின் அதிர்வை உணர்ந்து மேலும் மேலே சிரம் உச்சி வரை எடுத்துப் போக BLISS என்ற பேரானந்தம் கிடைக்கிறது.

    இந்த சக்தி உண்டாக்க  காரணமான அந்த சின்ன மஸ்தாவை வணங்குவோம்.

    யா தேவி  ஸர்வ பூதேஷு புத்தி ரூபேண ஸம்ஸ்திதா 

    நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை  நமஸ்தஸ்யை  நமோ நம:

    யாதேவி  ஸர்வ பூதேஷு  சக்தி ரூபேண சம்ஸ்திதா

    நமஸ்தஸ்யை  நம்ஸ்தஸ்யை  நமஸ்தஸ்யை நமோ நம:

    யதேவி ஸர்வ   பூதேஷு  சாந்தி ரூபேண  ஸம்ஸ்திதா 

    நமஸ்தஸ்யை  நமஸ்தஸ்யை  நமஸ்தஸ்யை  நமோ நம:

    படத்திற்கு நன்றி: http://my3yoga.blogspot.com/2012/07/dasha-maha-vidyalu.html

    Share
  • சுகம் சுகம் அது துன்பமான இன்பமானது மனம் பேதை மனம் – கவியரசு கண்ணதாசன்

    சுகம் சுகம் அது துன்பமான இன்பமானது மனம் பேதை மனம்

    1967ல் வெளியான தங்கை திரைப்படத்திற்காக கவியரசு கண்ணதாசன் எழுதி மெல்லிசை மன்னர் அமைத்த இசையில் பி.சுசீலாவின் சுகமான பாடலிது!

    புன்னகைஅரசி கே.ஆர்.விஜயா நடிகர்திலகம் சிவாஜிகணேசன் நடிப்பில் இயக்கம் தந்திருக்கிறார் ஏ.சி.திருலோகசந்தர்.

    இந்தப் பாடல் இடம்பெறும் இடத்தில் ஒரு இறுக்கம். அந்த இடத்தில் எப்படி இப்படி ஒரு பாடல் என்று எண்ணாதோர் இருக்க முடியாது!

    நாயகன் தவறான வழியில் செல்ல.. அதை தடுக்கிற நாயகியின்மீது கோபத்தின் கணைவீசி சொற்களை அள்ளிவீச.. அங்கே இருவருக்கும் இடையில் அனல் பறக்கிறது.

    மெல்லிசை மெதுவாக குரல் தருகிறது.. சுகம் சுகம் அது துன்பமான இன்பமானது மனம் பேதை மனம் .. கனிவான பெண்ணால் எந்தச் சூழ்நிலையையும் வென்றெடுக்க முடியும் என்று காட்டியிருக்கும் காட்சியிது!

    நெஞ்சம் அறியாமல் ஒரு வார்த்தை நீ என்றது
    என் பெண் உள்ளம் எதிரொலி போல் நான் என்றது
    நான் என்றும் நீ என்றும் ஏன் சொல்வது
    நான் வேறோ நீ வேறோ யார் சொன்னது

    பாடலின் பக்கபலம் இசை.. அதை நம்மிடம் சேர்க்கும் பொறுப்பில் குரல்.. திரையில் இடம்பெறும் பாத்திரங்கள் நம் மனதில் இடம்பெறுவதில் வியப்பில்லையே!

    உந்தன் நிழலாக நான் மாறும் நாள் வந்தது
    வரும் சுகம் துன்பம் சரிபாதி கேள் என்றது
    பூவாகிக் காயாகி கனியானது
    நீயாகி நானாகி நாமானது

    உணர்வுபூர்வமான கதையமைப்பில் உள்ளம்தொடும் பாடலுக்கு வழியுண்டு என்பதை நிரூபிக்கும் பாடல்! வரிகளில் உள்ள சுகம் நாயகனை தன்வழிப்படுத்தும் என்கிற நம்பிக்கையோடு நாயகி பாடும் பாவமென்ன? நளினமென்ன? சுகமான குரல் என்றால் சுசீலாவின் குரல் என்று சும்மாவா சொன்னார்கள்?

    சுகம் சுகம்
    சுகம் சுகம்
    சுகம் சுகம்
    அது துன்பமான இன்பமானது
    சுகம் சுகம்
    அது துன்பமான இன்பமானது
    மனம் பேதை மனம்
    அது மாறாத சொந்தமானது
    இனம் பெண்களின் இனம்
    அது பூப்போல மென்மையானது

    சுகம் சுகம்
    அது துன்பமான இன்பமானது

    நெஞ்சம் அறியாமல் ஒரு வார்த்தை நீ என்றது
    என் பெண் உள்ளம் எதிரொலி போல் நான் என்றது
    நான் என்றும் நீ என்றும் ஏன் சொல்வது
    நான் வேறோ நீ வேறோ யார் சொன்னது

    சுகம் சுகம்
    அது துன்பமான இன்பமானது
    மனம் பேதை மனம்
    அது மாறாத சொந்தமானது
    இனம் பெண்களின் இனம்
    அது பூப்போல மென்மையானது

    உந்தன் நிழலாக நான் மாறும் நாள் வந்தது
    வரும் சுகம் துன்பம் சரிபாதி கேள் என்றது
    உந்தன் நிழலாக நான் மாறும் நாள் வந்தது
    வரும் சுகம் துன்பம் சரிபாதி கேள் என்றது
    பூவாகிக் காயாகி கனியானது
    நீயாகி நானாகி நாமானது

    சுகம் சுகம்
    அது துன்பமான இன்பமானது
    ஆ ஆ ஹா ஹா ஹா ஆ ஆ ஆ ஆ

    P சுசீலா அம்மாவின் சுகமான ஒரு பாடல்.

    திரைப் படம்: தங்கை (1967)
    நடிப்பு: சிவாஜி, K R விஜயா
    இசை: M S விஸ்வனாதன்
    இயக்கம்: A C திருலோகசந்தர்

    http://www.divshare.com/download/16924027-d85

    Share
  • A new boys’ home which can house 100 underprivileged boys

                       

                                                           

    SEVALAYA

    (Registered Charitable Trust)

    F-B1, First Floor,old no 10 ,new no 24, Kesava Perumal west Street, Mylapore, Chennai 600004.

    Kasuva Village, Pakkam Po, Near Thiruninravur – 602024. Tamil Nadu, India.

    Vadanallur Village, Uthiramerur, Kanchipuram Dt., TamilNadu, India

    Phone: 044-24950204, 9444620289, 9444620286, 044-64611488.

    E-mail:   Sevalayamurali@gmail.com,   Sevalayaprm@sevalaya.org,   Visit us at: www.Sevalaya.org.

    ———————————————————————————————————-

                                                                PRESS REPORT

     alaya

    சேவாலயாவில் புதிய மாணவர் விடுதியின் திறப்பு விழா

    சேவாலயாவில் புதிய மாணவர் விடுதி, Foundation Page Pierre யின் உதவியுடன் 27 ஜனவரி 2014 அன்று திருநின்றவூர் அடுத்து உள்ள கசுவா கிராமத்தில் நிகழ்ந்தது.

    Page Pierre Foundation யைச் சேர்ந்த திரு. பேஜ் பியர் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கெடுத்தார். அவர்களுடன் Prof. Oyon பங்கு கொண்டனர்.

    இந்த மாணவர் விடுதியில் 100 மாணவர்கள் தங்கும் அளவிற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் விடுதியில் 14 அறைகளும் ஒரு  வழிப்பாட்டுக் கூடமும் உள்ளது.

    Page Pierre Foundation பல வருடங்களாக சேவாலயாவில் பல கட்டிடங்கள் நிறுவ உதவி செய்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    சிறப்பு விருந்தினர் தன்னுடைய உரையில் சேவாலயா பல வருடங்களாக சேவைகள அனைதையும் மிகவும் திறம் பட செய்து வருவதாகவும் தான் ஒவ்வொரு முறை இங்கு வரும் பொழுதும் சேவாலயா பல் முன்னேறங்களை நிகழ்த்தி வருவதைக் கண்டு மிகவும் பெருமைக் கொள்வதாகவும் கூறினார்.

    மேலும் அவருடையத் தொடர்பு சேவாலயாவுடன் இருந்துக்கொண்டிருக்கும் என்றும் கூறினார்.

    முன்னதாக பேசிய திரு. முரளிதரன் அவர்கள் சேவாலயாவில் Page Pierre Foundation மூலம் சேவாலயாவில் பல் நல்ல நிகழ்வுகள் நடந்துள்ளது என்றும் அவர்களுக்கு அதற்கு நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

    விழா நாட்டுப் பண்ணுடன் இனிதே நிறைவடைந்தது.

     alaya2

    சேவாலயாவுக்காக,

    (வி.முரளிதரன்)

    நிறுவனர் மற்றும் நிர்வாக அறங்காவலர்

    —————————————————————————————————————————————————–

     Board of Trustees

    Mr.V.Muralidharan (Founder & Managing Trustee)

    Mr.G.Ilayaraja, Ms.Jayanthi, Mr.Sarath Chandra Divella, Mr.E.Lakshmi Narayanan, Mr.Manu Kapila,

    Mr. K.C.Prem Babu ,Mr.G.Ramesh, Mr.R.Shankar, Mr.Thilak Iyer

    Advisory Committee: Dr.D.K.Oza IAS,(Retd)  Mr.R.Nataraj IPS (Retd),  Mr. Amarchand Jain,  Dr. Malavika Vinothkumar, Mr.David Appaswamy, Prof. Dr.S.V.Mani, Mr.Thomas Abraham, Mr.R.Sreenivasan

    Hony, Co-Ordinator:                                                                                                                           Hony.Correspondent:

    Mr.T.S.Venkataramani                                                                                                            Mrs. Bhuvaneshwari Muralidharan

    Share
  • சயாம் மரண ரயில் – புத்தக மதிப்புரை

    எம்.ரிஷான் ஷெரீப்,

    நூல் மதிப்புரை

     rishaan

     நூல்  – சயாம் மரண ரயில் (நாவல்)

    ஆசிரியர் – சண்முகம்

    பக்கம்:  304  

    விலை: ரூ. 150/-

    வெளியீடு: தமிழோசை பதிப்பகம்

    ___________________________________________________________________________________________

    எங்கும் சொல்லப்படாத மௌன மொழிகளின் கண்ணீர்

                தனது வாழ்விடத்திலிருந்து தமிழ் பேசும் மக்கள் புலம்பெயர்ந்து செல்லாத இடங்களேயில்லை என்றாக்கி விட்டன காலமும், போர்களும். எல்லாவற்றுக்கும் காரணங்களைத் தேடுகிறது வரலாறு. அவை சொல்லும் பாடங்கள் விலைமதிப்பற்றவை. பலரும், பல இன்னல்களை அனுபவித்து, பல இழப்புக்களைச் சந்தித்து, அந்த அனுபவங்கள் மூலம் கற்றுத் தரும் பாடங்கள், காலம் காலமாக எழுதி வைக்கப்பட வேண்டியவை. அவையே காலப்பதிவுகளாகி விடுகின்றன. தமிழ் பேசும் மக்களின் ஆதி பரம்பரைகள் எதிர்கொண்ட துயரங்களும், இழப்புக்களும் தற்கால சந்ததியினருக்கு அநேகமாகத் தெரிய வருவதில்லை. அவை காலத்தின் நீட்சிக்குள் மறைக்கப்பட்டிருக்கின்றன. இக் காலத்தில் பல தசாப்தங்களை வாழ்ந்து அனுபவித்த முதியவர்களுக்கும் கூட தமது எதிர்கால சந்ததியினருக்காக தாம் அனுபவித்த அல்லது தமது மூதாதையர் அனுபவித்த வாழ்க்கை குறித்த உண்மைக் கதைகளை பேரப் பிள்ளைகளுக்குச் சொல்ல நேரமிருப்பதில்லை அல்லது செவிமடுக்க பிள்ளைகளுக்கு நேரமில்லை.

                இன்றைய காலத்தில் ‘சயாம் – மரண ரயில் பாதை’யைப் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் தாய்லாந்திருந்து பர்மா வரைக்குமான ரயில்பாதை அமைப்பதற்காக எத்தனை ஆயிரம் தமிழ் பேசும் மக்கள் பலியிடப்பட்டார்களென்பதை எத்தனை பேர் அறிவர்? ஜப்பான் அரசால், ரயில் பாதை அமைக்கும் பணியில் பிரித்தானிய, அவுஸ்திரேலிய போர்க்கைதிகள் பல்லாயிரக்கணக்கில் ஈடுபடுத்தப்பட்ட போதும், சுரங்கம் தோண்டவும், மண் அள்ளவும் ஆசியத் தொழிலாளர்களே பயன்படுத்தப்பட்டுள்ளனர். மலேசியா, சிங்கப்பூர் போன்ற பகுதிகளில் தோட்டங்களில் வேலை செய்துவந்த தமிழர்கள், இவ் வேலைகளுக்காக ஏமாற்றப்பட்டுக் கொண்டு செல்லப்பட்டதோடு, பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் பலவந்தமாகப் பிடிக்கப்பட்டும், ஏமாற்றியும் கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்பதே வரலாறு சொல்லும் பகுதியாக இருக்கிறது. இவர்கள் அனைவருமே ஜப்பானியரால் கடுமையாக வேலை வாங்கப்பட்டுள்ளனர் என்பதனை செத்துப் பிழைத்து வந்த பலரும் உறுதிப்படுத்துகின்றனர். போதியளவு உணவுமின்றி, போதியளவு மருத்துவ வசதிகளுமின்றி மரணமடைந்த மற்றும் கொல்லப்பட்ட சக உறவுகளைப் பார்த்து, துன்பங்களை அனுபவித்து, மீண்டு வந்த ஒரு இளைஞனின் கதையோடு, ஒரு வரலாற்று ஆவணமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு தொகுப்பாக உள்ளது மலேசிய எழுத்தாளர் சண்முகத்தின் ‘சயாம் மரண ரயில்’ நாவல்.

                பஞ்சத்தின் காரணமாகவும், குடும்பத்தினருக்கு உதவுவதற்காக வேண்டியும் தனது வீட்டிலிருந்து வேலை தேடித் தப்பிச் செல்லும் இருபது வயது மாயா, சயாம் மரண ரயில் பாதைக்கு வந்து சேர்வதும், அங்கு அவன் சந்திக்க நேரும் மனிதர்களும், அவனது வாழ்க்கை கட்டமைக்கப்படும் விதமும், அங்கிருந்து மீண்டு வரும் விதமும் நாவலின் நகர்வினைத் தீர்மானித்திருக்கின்றன என்றபோதிலும், நாவல் எழுதப்பட்ட பின்னணிதான் இங்கு விசேடமானது. இந் நாவலை வாசிக்கவென கையிலெடுக்கும் எவரும் தூர விலத்திவிடாதபடி கட்டிப் போடுகிறது அப் பின்னணி. பலவந்தமாகப் பிடிக்கப்படும் தமிழர்கள் சயாம் மரண ரயில் பாதைக்குக் கொண்டு செல்லப்படுவதும், அங்கு நடைமுறையிலிருக்கும் ஜப்பான் அரசின் சட்டங்களும், விதிமுறைகளும், படுகொலைக்களங்களும் ஒரே தடவையில் முழுமையாக அந் நாவலை வாசித்து விடச் செய்கிறது. வாழ்வின் துயரங்களோடு, பல திருப்பங்களையும் கொண்டு எழுதப்பட்ட உண்மை நிகழ்வுகளின் தொகுப்பாக இந் நாவல் பார்க்கப்பட வேண்டியது அவசியம்.

                ஜப்பான்காரர்களின் சித்திரவதைகள், காட்டு பர்மியர்களின் மறைமுகத் தாக்குதலும், கொள்ளையும், சீனர்களின் மனிதாபிமானமற்ற நடைமுறைகள், வாந்திபேதி, மேக நோய் போன்றவற்றின் தீவிரத் தாக்குதல் போன்ற பல இன்னல்களை அம் மக்கள் எதிர்கொள்ள நேர்ந்தமையை தெளிவாக விளக்குகின்றது எழுத்தாளர் சண்முகத்தின் வரிகள். வெறுமனே கதையை மாத்திரம் சொல்லிச் செல்பவராக இல்லாமல் அவர் வரலாற்றின் பக்கங்களை மேற்கோள் காட்டி, அந்த ரயில் பாதையை படங்களோடு விளக்கியிருப்பதுவும், அக் காலத்தின் அரசியல் நிலைப்பாடுகளையும், வரலாற்று நிகழ்வுகளையும் இடைக்கிடையே கதையோடு சேர்த்து எழுதியிருப்பதுவும் நிலைமையின் தீவிரத்தையும், உண்மைத்தன்மையையும் உணர்த்துகிறது. ‘சயாம் மரண ரயில்’ – எங்கும் சொல்லப்படாத மௌன மொழிகளின் கண்ணீர் வரலாற்றினைக் கொண்டது. தமிழோசை பதிப்பகத்தால் 2007 ஆம் ஆண்டு வெளிவந்திருக்கும் இத் தொகுப்பு, தமிழ் பேசும் மக்கள் ஒவ்வொருவரது வீட்டிலும் வைத்துப் பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு ஆவணமென உறுதியாகச் சொல்லலாம்.

    – எம்.ரிஷான் ஷெரீப்,

    இலங்கை

    Share
  • டாலர் நகரம் – புத்தக மதிப்பு​ரை

    மதிப்பு​ரை – ரஞ்சனி

    டாலர் நகரம்

    எழுதியவர்: ஜோதிஜி

    பதிப்பகம்: 4தமிழ்மீடியா படைப்பாய்வகம்

    விலை: ரூ. 190

    பக்கங்கள் : 247

    வெளியான ஆண்டு: 2013

    Doller nagaram2

    ஆசிரியர் குறிப்பு:

    கடந்த ஐந்து ஆண்டுகளாக ‘தேவியர் இல்லம்’ என்ற வலைப்பதிவில் தன் மனதில் பட்டதை பட்டவர்த்தனமாகச் சொல்லி ‘நான் இப்படித்தான்; என் எழுத்து இப்படித்தான்’ என்று முத்திரை பதித்த பதிவர் திரு ஜோதி கணேசன் என்னும் ஜோதிஜி. தனது மனைவியுடனும், 3 பெண்குழந்தைகளுடனும் (இவர்களே இவரது தேவியர்கள்) திருப்பூரில் வசிக்கிறார். 4தமிழ்மீடியா இணைய தளத்தில் இவர் எழுதி வந்த ‘டாலர் நகரம்’ கட்டுரைத் தொடர் இப்போது புத்தகமாக வெளிவந்திருக்கிறது. இது இவரது முதல் புத்தகம். இவர் எழுதிய ‘ஈழம் வந்தார்கள் வென்றார்கள்’ சமீபத்தில் இ-புத்தகமாக வெளியிடப்பட்டு சுமார் 5,000 தரவிறக்கங்களை எட்டிப்பிடித்துள்ளது.

    புத்தகம்: டாலர் நகரம்

    டாலர் தேசம் என்று அமெரிக்காவைச் சொல்லுவது உண்டு. இது என்ன டாலர் நகரம்?  இந்தியாவின் ஏற்றுமதியில் பல கோடி டாலர்களை பெறுவதில் பெரும்பங்கு வகிக்கும் திருப்பூரைத் தான் இப்படிக் குறிப்பிடுகிறார், ஜோதிஜி. திருப்பூர் என்றால் உடனடியாக பனியன், ஜட்டிகள் என்று உள்ளாடைகள் நினைவுக்கு வரும்; அந்தக் காலத்தவர்களுக்கு திருப்பூர் குமரன் நினைவிற்கு வருவார். அந்தத் திருப்பூரின் இன்னொரு பக்கத்தை – தொழில் நகரம் என்று பக்கத்தை தனது டாலர் நகரம் மூலம் நமக்கு காட்டுகிறார் ஆசிரியர் இந்தப் புத்தகத்தில்.

    ஒரு சாதாரண தொழிலாளியாக 1992 – இல் திருப்பூர் வந்த ஜோதிஜி இப்போது திருப்பூரில் ஒரு பெரிய நிறுவனத்தில் பொது மேலாளர் ஆக இருக்கிறார். தனது வாழ்க்கையை சொல்லும்போதே தான் கண்ட, இப்போது காணும் திருப்பூரின் வரலாற்றையும் பதிவு செய்கிறார்.  புத்தகத்தைப் படிக்கும்போது இரண்டும் வேறல்ல என்று புரிகிறது.

    தொழில் வாழ்க்கையில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள போராடிய போராட்டங்கள், சந்தித்த அவமானங்கள், தாண்டிய தூரங்கள், ஏறிய படிகள், சறுக்கிய இடங்கள் என்று பலவற்றையும் பேசும் ஜோதிஜி, கூடவே திருப்பூரின் பஞ்சாலைகள், நூற்பாலைகள், ஏற்றுமதி, இறக்குமதி வணிகம், அவற்றில் நிகழும் அரசியல்கள், இந்த ஊருக்கு வேலை தேடி வரும் ஆண், பெண், குழந்தைகளின் அவலங்களையும் சொல்லிக் கொண்டு போகிறார். ஒரு கட்டத்தில் ஜோதிஜி என்கிற தனிமனிதர் மறைந்து திருப்பூர் மட்டுமே தெரிய ஆரம்பிக்கிறது. இந்த மாற்றம் மிகவும் இயல்பாக நடக்கிறபடியால் கடைசியில் நம் நினைவில் நிற்பது டாலர் நகரம் மட்டுமே.

    நூல் என்பது ஆடையாக மாறுவதற்கு எத்தனை எத்தனை துறைகள்? ஒவ்வொன்றும் ஒவ்வொரு உலகம். ஒவ்வொரு துறைக்குள் நூற்றுக்கணக்கான துறைகள். நெய்யப்பட்ட துணி வண்ண வண்ண ஆடைகளாக உருமாறும் நேரம் என்பது ஏறக்குறைய ஒரு குழந்தையின் பிரசவத்தைக் காண்பது போல என்று சொல்லும் ஜோதிஜி, ஒவ்வொருதுறை பற்றியும் மிகவும் விரிவாகப் பேசுகிறார்.

    திருப்பூர் என்பது வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு சொர்க்கம் என்று தோன்றும். இங்கு வந்துவிட்டால் எப்படியோ பிழைத்துக்கொள்ளலாம் என்று வந்துவிடுகிறார்கள். ஆனால் உள்ளே இருப்பவர்களுக்குத்தான் உண்மை நிலை தெரியும். தொழிலாளிகளுக்கு உழைப்பு, உழைப்பு  என்று போதை ஏற்றும் உழைப்பு. ஆனால் உழைப்பிக்கேற்ற கூலி கிடைக்காது. பெண்களின் நிலைமையை என்னவென்று சொல்ல? ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலை செய்யும் தொழில் நகரங்களில் நடக்கும் பாலியல் மீறல்கள் திருப்பூரிலும் உண்டு. இவற்றைத் தவிர ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஏற்றுமதி நிறுவனங்களில் இரவு பகல் பாராமல் வேலை செய்து கொண்டிருக்கும் குழந்தைகளை கணக்கில் கொண்டு வரமுடியாது. குடும்பத்துடன் இந்த ஊருக்கு வருபவர்களுக்கு குடும்பம் முழுவதுக்கும் வேலை கிடைக்கும், ஆனால் வாழ்க்கை?

    சமச்சீரற்ற முறையில் வளர்ந்திருக்கும் திருப்பூரின் திட்டமிடாத உள்கட்டமைப்புகள், அறிவிக்கப்படாத மின்தடைகள், மூடாத சாக்கடைக்குழிகள், முடிவே இல்லாமல் தொடரும் சாலை மராமத்து பணிகள், பெருநகரங்களின் சாபக்கேடான போக்குவரத்து நெரிசல், சாயப்பட்டறை முதலாளிகளின் சமூக பொறுப்பற்ற செயல்களால் விஷமாகிப் போன நொய்யலாறு என்று பல சீரழிவுகள் நம்மை திகைக்க வைக்கின்றன. வெளியில் பளபளக்கும் டாலர் நகரம் உள்ளே டல்லடிக்கிறது.

    மையத் தொழிலான ஆடை தொழிலை சார்ந்த துணைத்தொழில்களை நம்பி இங்கு நிறையப்பேர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆயிரம் ரூபாய் முதலீடு முதல் கோடி ரூபாய் முதலீட்டிற்கும் இங்கு வழி உண்டு. டெல்லி முதல் கன்யாகுமரி வரையுள்ள இந்தியர்கள் ஒன்று கூடி வாழும் ஊர் திருப்பூர் என்பது இந்த ஊரின் தனிச் சிறப்பு. தனது அயராத உழைப்பு என்ற மூலதனத்தை வைத்துக்கொண்டு உயர்ந்த ‘கருணா என்கிற கூலி’ பற்றிச் சொல்லும் ஆசிரியர் அப்படி உயர்ந்த வாழ்க்கையைத் தங்களது கூடா நட்பால் தொலைத்தவர்களைப் பற்றியும் சொல்லுகிறார்.

    ‘உலகமய பொருளாதார பாதிப்பின் நேரடி உதாரணமாக திருப்பூரைச் சொல்லலாம். தினந்தோறும் ஏறி இறங்கிக் கொண்டிருக்கும் வெளிநாட்டுப் பண மதிப்பு இங்குள்ள ஒவ்வொரு ஏற்றுமதியாளர்களையும் பாடாய்படுத்திக் கொண்டிருக்கிறது. டாலர் மதிப்பு ஏறும் என்று பெரும்பாலான ஏற்றுமதியாளர்கள் காத்திருந்து காத்திருந்து வங்கிக் கடன் வட்டி ஏறி கடைசியில் தற்கொலைக்கும் தயாராகிறார்கள் என்று செய்தி நம்மை கதி கலங்க வைக்கிறது. நிலையில்லாத டாலர் மதிப்பு மட்டுமல்ல; வங்கிகளின் கெடுபிடிகள், அரசாங்கத்தின் தெளிவற்ற கொள்கை என்று ஏற்றுமதியாளர்களுக்கு தினமும் நித்ய கண்டம், பூரண ஆயுசுதான்’.

    அந்நிய முதலீடு லட்சக்கணக்கான சிறு, குறு தொழில்களை முடக்கி விடும் அபாயம் உள்ளது. தமிழ் நாட்டில் பல பன்னாட்டு நிறுவனங்கள், உள்ளூர் பேரூராட்சி நகராட்சிகளுக்கு அடிப்படை வரி கூட கட்டாமல் இருந்து வருகின்றன. சட்டம் அனைவருக்கும் பொதுவானதாக இங்கு இருப்பதில்லை. 2012 ஆண்டு கடைசி பகுதியில் திருப்பூரில் ‘திருப்பூர் வெற்றிப்பாதையில் 2012’ என்ற கருத்தரங்கம் நடத்தப்பட்டது. பின்னலாடைத் தொழிலில் நேரிடையாக, மறைமுகமாக சம்மந்தப்பட்ட அத்தனை தொழில் முனைவோர்களும் தங்கள் குமுறல்களை கொந்தளிப்பாக அதிகாரவர்க்கத்தினரிடம் வெளிப்படுத்தினர்’.

    உழைக்கத் தயாராக இருக்கும் திருப்பூர்வாசிகளுக்கு மத்திய அரசு என்ன திட்டம் தீட்டி இவர்களை காப்பாற்றபோகிறதோ? என்ற தனது ஆதங்கத்துடன் புத்தகத்தை முடிக்கிறார், ஜோதிஜி. ஒரு பரபரப்பான திரைப்படத்தைப் பார்த்த உணர்வுடன் புத்தகத்தைப் படித்து முடிக்கும்போது நமக்குள்ளும் இதே கேள்விதான் எழுகிறது.

    26 அத்தியாயங்களில் ஒன்று கூட ‘போர்’ அடிப்பதில்லை என்பது இந்தப் புத்தகத்தின் மிகப்பெரிய ப்ளஸ் பாயிண்ட். ஆனந்த விகடன் இயர் புக் 2014 தேர்ந்தெடுத்த சிறந்த எட்டு புத்தகங்களில் இந்தப் புத்தகமும் ஒன்று. இதற்கு மேல் நான் என்ன சொல்ல?

    Share
  • தேவதாசியும் மகானும் – புத்தக மதிப்பு​​ரை

    மதிப்பு​ரை – தஞ்​சை​ வெ. ​கோபாலன்

    ​தேவதாசியும் மகானும்

    எழுதியவர்: திரு வெங்கடகிருஷ்ணன் ஸ்ரீராம்

    தமிழாக்கம்: திருமதி பத்மா நாராயணன்

    பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம்

    வி​லை: ரூ.175

    பக்கங்கள்: 216

    தமிழாக்க​ம் வெளியான ஆண்டு: டிசம்பர் 2012

     

    DSC00271

    ஆசிரியர் குறிப்பு:

    “தேவதாசியும் மகானும்” எனும் இந்த நூல் பெங்களூரு நாகரத்தினம்மாவின் வாழ்வும் காலமும் பற்றியது. இதனை ஆங்கிலத்தில் முதலில் எழுதிய ஆசிரியர் திரு வெங்கடகிருஷ்ணன் ஸ்ரீராம். 1966ஆம் வருஷம் பிறந்த இவர் இங்கிலாந்தில் பிறந்து சென்னையிலும் கொல்கொத்தாவிலும் பொறியியலில் பட்டம் பெற்றார். பின்னர் எம்.பி.ஏ. பட்டமும் பெற்றவர். விளம்பரத்துறை இவரது பணியை ஏற்றுக் கொண்டது. பின்னர் இவரது குடும்பத் தொழிலான Industrial Hydraulics and Software இவரை ஈர்த்துக் கொண்டது. ஆறு வயது முதல் கர்நாடக இசையில் ஈடுபாடு கொண்டு இசை வரலாற்றையும் தொடர்ந்து கற்றார். பாடகர் சஞ்சய் சுப்பிரமணியத்துடன் இணைந்து இசைக்கான இணைய தளம் நடத்தினார். பின்னர் இவ்விருவரும் சேர்ந்து இசை பற்றி வினாடி வினா புத்தகம் ஒன்றை எழுதினார்கள். இசை பற்றி ‘சுருதி’ தி இந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழ்களில் எழுதி வருகிறார். தற்போது சுருதியில் ஆசிரியர் குழுவிலும் பங்கு பெறுகிறார். இவரது மனைவியின் எயர் சாரதா. மகன்கள் அவினாஷ், அபிநவா./ இந்த நூலின் முதல் ஆங்கில நூல் பதிப்பு East West Books (Madras) P Ltd. சார்பில் 2007இல் வெளிவந்தது.

    தமிழ் மொழிபெயர்ப்பின் ஆசிரியர் திருமதி பத்மா நாராயணன். 1935இல் பிறந்த இவர் சென்னை வாசி. இவர் பல கதாசிரியர்களின் கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். அவர்களில் சிலர் லா.ச.ரா., இந்திரா பார்த்தசாரதி, ஆதவன், அ.முத்துலிங்கம் ஆகியோர் நாவல்கள், அசோகமித்திரன், சுந்தர ராமசாமி,க்ருஷாங்கினி, சோ.தர்மன், திலிப்குகார் ஆகியோரின் சிறுகதைகள். இவர் பல இதழ்களில் கதைகள் எழுதுகிறார்.

    DSC00300-001

    ஒரு மகானைப் போற்றி பிரபலப்படுத்திய தேவதாசிப் பெண்

    எவர் ஒருவரின் பாடல்கள் கர்நாடக இசைக் கலைஞர்களால் நாள்தோறும் பாடப்படுகின்றனவோ, அந்த பாடல்களை அல்லது கீர்த்தனங்களை இயற்றிய அந்த மகான், தமிழ் நாட்டின் பாரம்பரிய வழக்கத்தையொட்டி மக்களால் மறக்கப்படுவதற்கு இடம் கொடுக்காமல் அவர் புகழை உலகறியச் செய்த ஒரு தேவதாசிப் பெண்ணின் வரலாற்று நூல் இது. நூலின் தலைப்பு “தேவதாசியும் மகானும்”. ஆங்கில மூலத்தின் ஆசிரியர் திரு வெங்கடகிருஷ்ணன் ஸ்ரீராம், தமிழில் சுவை குன்றாமல் மொழியாக்கம் செய்திருப்பவர் திருமதி பத்மா நாராயணன்.

    நூலின் தலைப்பே சற்று வித்தியாசமாகத் தெரிகிறது. ஒரு தேவதாசிப் பெண்ணுக்கும் மகானுக்கும் என்ன சம்பந்தம்? இருக்கிறது. நம் நாட்டின் மரபுப்படியும் இது சாத்தியமே. தாங்கொணா துன்பங்களையும் அவமானங்களையும் தாங்கிக் கொண்டு அவற்றை அறவே மறந்து ஓர் அறம் சார்ந்த பணியில் ஈடுபட்டு, ஒரு பெண் நினைத்தால் சாதித்துக் காட்டமுடியும் எனும் வைராக்கியத்தை விவரிப்பது இந்த நூல். அந்த மகான் சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள். கர்நாடக இசை மூவரில் பிரதானமானவர். தேவதாசி என்று குறிப்பிடப்படுபவர் அந்த மகானுடைய சமாதியை திருவையாற்றின் காவிரிக் கரையில் தேடிக் கண்டுபிடித்து ஆங்கோர் சமாதிக் கோயிலை உருவாக்கி இன்று உலகெங்கிலுமிருந்தும் ஆயிரமாயிரம் இசை ரசிகர்கள் வந்து ஆண்டுதோறும் இசை அஞ்சலி நிகழ்த்த மூல முதல் காரணகர்த்தா பெங்களூர் நாகரத்தினம்மா எனும் சாதனைப் பெண்மணி.

    சுருங்கச் சொன்னால் பெங்களூர் திருமதி நாகரத்தினம்மாவின் வாழ்க்கை வரலாறு இந்த நூல். சென்ற நூற்றாண்டின் முதல் பகுதியில் தேவதாசிகளின் வாழ்க்கை முறை எப்படி இருந்தது, அவர்கள் அனுபவித்த சமுதாயக் கொடுமைகள் என்ன, அத்தனைக்கிடையிலும் அவர்களில் பெரும்பாலோர் மிகவும் கெளரவமான மதிக்கத்தக்க வகையில் வாழ்ந்த வரலாறு இந்த நூலில் காணக் கிடைக்கிறது. தேவதாசிகள் என்போர் ஆலயங்களில் இறைவனுக்காகப் பொட்டுக் கட்டுதல் எனும் சடங்கைச் செய்துகொண்டு, இறைவன் பணியில் ஈடுபடுவதோடு, இசை, நாட்டியம் ஆகிய கலைகளை மரபு கெடாமல் பாதுகாத்து இன்றைய இளம் தலைமுறையினரிடம் கொண்டு வந்து சேர்த்த பெருமைக்கும் உரியவர்கள் அவர்கள். அப்படிப்பட்ட தேவதாசி மரபில் உதித்த பெருந்தகைகள் ஏராளம். தங்கள் சொத்துக்கள் அனைத்தையுமே தாங்கள் பணிபுரியும் ஆலயத்தின் இறைவர்க்கென்றே ஈந்த கொடையாளர்களாகப் பலர் இருந்ததாக ஆய்வாளர் திரு பி.எம்.சுந்தரம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். தென் இந்தியாவில் ஆந்திரம், கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் இவர்கள் அதிகமாக வாழ்ந்திருக்கிறார்கள். குறிப்பாக காவிரி பாய்ந்து வளம் பரப்பும் சோழ வளநாட்டில் தடுக்கி விழுந்தால் ஒரு கோயிலின் பக்கம் விழும் அளவுக்கு ஆலயங்கள் அதிகம். அங்கெல்லாம் பணிபுரிந்த தேவதாசியர் அதிகம். அவர்களில் பெரும்பாலும் ஆடல் பாடலுக்குப் பெயர் போனவர்கள். பெண்கள் பிறந்தால் மகிழ்ச்சியடையும் வர்க்கம் அவர்கள் வர்க்கம். ஆண்கள் நாதஸ்வரம், தவில் போன்ற கலைகளில் வல்லவர்களாகத் திகழ்ந்து உலகப் புகழ்பெற்றிருக்கின்றனர்.

    “ஒரு தேவதாசிக்குப் பெண் குழந்தை பிறப்பது என்றுமே மகிழ்ச்சி தரும் நிகழ்வு” என நாகரத்தினம்மாவின் வாழ்க்கை வரலாற்றைத் தொடங்குகிறார் ஆசிரியர். மைசூர் மாநிலத்தில் புட்டலக்ஷம்மாவுக்கு அப்படிப் பிறந்தவர் நாகரத்தினம்மா. தாய் புட்டலக்ஷம்மா நஞ்சன்கூடு ஸ்ரீகண்டேச்சரம் கோயிலில் தேவரடியாராக பணிபுரிந்தார். அவர்கள் திருமணம் என்று செய்து கொள்ளாமலே ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவர்களோடு வாழும் உரிமை பெற்றிருந்தனர். அப்படி அவர் உரிமையோடு வாழ்ந்தது மைசூரில் சுப்பராவ் என்பவரோடு எனும் விவரங்களைத் தருகிறார் ஆசிரியர்.

    சுப்பராவோடு ஏற்பட்ட பிணக்கினால் மகள் நாகரத்தினம் ஒன்றரை வயதாக இருந்தபோது அவரை விட்டுப் பிரிந்தாள் புட்டலக்ஷ்மி. அதுகூட கொடுமை இல்லை; அத்தனை சொத்துக்களையும் பறித்துக் கொண்டு அவரை அடித்துத் துரத்தித் தெருக்களில் அலையவிட்ட கொடுமையும் நடந்தது. அப்படி அநாதையாகத் தெருவில் கைக்குழந்தையோடு விடப்பட்ட புட்டலக்ஷ்மியின் வைராக்கியம், தாய் சுமந்த துன்பங்களை உணர்ந்து மகள் கண்ணும் கருத்துமாக நாட்டியம், இசை இவற்றில் தேர்ந்த வரலாறு மிகவும் நயமாக விவரிக்கப்படுகிறது.

    வாழ்ந்த இடத்தில் ஆதரவை இழந்து, காஞ்சிபுரம் சென்று அங்கு எதிர்பார்த்த உதவி கிடைக்காத நிலையில் மீண்டும் பெங்களூர் வந்து மகளுக்குக் கலைகளையும் பன்மொழிக் கல்வியையும் கொடுத்து அவளையும் ஒரு வைராக்கிய மனுஷியாக வளர்த்த பெருமை புட்டலக்ஷ்மியைச் சேரும். வயதிலும், கலைகளிலும் வளர்ந்த நாகரத்தினம் எப்படியெல்லாம் யாருடைய ஆதரவையெல்லாம் கேட்டுப் பெற்றார் என்பது இந்நூலில் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

    வீணை தனம்மாள் அந்தக் காலத்தில் எத்தனை செல்வாக்கோடும் மரியாதையோடும் வாழ்ந்தார் என்ற விவரங்களை இந்நூலில் காணமுடிகிறது. தஞ்சை அரசவை நர்த்தகி வம்சத்தில் வந்தவர் இவர் என்பதும் இங்கு அறியக் கிடைக்கிறது. நாகரத்தினம்மாள் சென்னைக்கு வந்தபின் இந்த தனம்மாளின் ஆதரவு கிட்டியது. அந்த காலகட்டத்தில் நாகரத்தினம்மாளின் சங்கீதம் எப்படி இருந்தது என்பதை ஆசிரியரின் வாக்கால் பார்ப்பதென்றால், “நாகரத்தினம்மாவின் சங்கீதம் சற்றும் மரபு தவறாத சாஸ்திரிய சங்கீதமாக இருந்தது.” லய சுத்தம், குரலின் தனித்தன்மை, கம்பீரம் இவை வர்ணிக்கப்பட்டிருக்கிறது. யாருக்கும் தெரியுமோ தெரியாதோ, இவர் யதுகுல காம்போஜி ராகம் பாடாத கச்சேரியே இல்லை என்பதும் இங்கு தெரிவிக்கப்படுகிறது. அதோடு தன் சங்கீத ஞானத்தை வளர்த்துக் கொள்ள இராமநாதபுரம் சமஸ்தான இசைக் கலைஞர் பூச்சி சீனிவாச ஐயங்காரிடம் பயிற்சி பெற்ற விவரமும் கிடைக்கிறது.

    இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் இவர் தன்னுடைய இனிய சங்கீதத்தால் சென்னை நகரையே கலக்கியதாகக் குறிப்பிடப்படுகிறது. வருமானம் அதிகரிக்கவே சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியில் சொந்த வீட்டையும் வாங்கியிருக்கிறார். தஞ்சை மாவட்டத்தில் புகழ்வாய்ந்த திருவாரூர் தியாகேசர் ஆலயத்தில் நடனம் ஒரு முக்கிய அம்சம் என்பதும், அங்குள்ள சிவபெருமானே அஜப நடனம் ஆடிக் கொண்டிருப்பவர் என்பதும், அவர் பெயரில் இயற்றப்பட்ட தியாகேசர் குறவஞ்சி எனும் இசை நாட்டிய நாடகம் பற்றியும் இங்கு குறிப்பிடப்படுகிறது.

    இவர் பிறந்த மைசூர் மாநிலத்தில் 1909இல் ஆலயங்களில் தேவதாசிகளின் பணிகள் நிராகரிக்கப்பட்ட செய்தி தெரியவருகிறது. நாட்டியம் ஆடுவதை நிறுத்தியபின் நாகரத்தினம்மாள் உடல் பெருக்கத் தொடங்க இசையில் மட்டும் அவர் காட்டிய ஆர்வம் தெரியவருகிறது. பெயரைச் சுருக்கிக் கொள்ளும் வழக்கமும் இவரைப் பிடித்துக் கொள்ள கோலார் நாகரத்தினம் எனும் பெயரை கே.என்.ஆர். என்று ஆன விவரமும் அறியக் கிடைக்கிறது.

    இவரைப் பற்றிய ஒரு ஆராய்ச்சிக் குறிப்பையும் ஆசிரியர் குறிப்பிடுகிறார். அது “26 வருஷங்களில் நாகரத்தினம்மா 146 நகரங்களில் கச்சேரிகள் செய்துள்ளார்” அதுமட்டுமல்ல தமிழ்கூறு நல்லுலகில் அவர் செய்த கச்சேரிகளின் எண்ணிக்கை 1235 அவற்றில் சென்னை மாகாணத்தில் மட்டும் 849 கச்சேரிகள் எனும் செய்தியும் நமக்குக் கிடைக்கிறது. புகழ்பெற்ற எழுத்தாளர் வை.மு.கோதைநாயகி இவருடைய நெருங்கிய தோழி என்ற செய்தியும் தெரிகிறது.

    சென்னையில் செல்வத்தோடு தனிமையில் வாழ்ந்த ஒரு பெண்மணிக்கு எத்தனை இன்னல்கள் வந்து சேரும் என்பதை உணர முடிகிறது. இவர் தனிமையில் இருப்பதால் துணைக்கு மீனாட்சிசுந்தரம் எனும் ஆசிரியர் இவருக்கு பாதுகாப்பாக இருந்திருக்கிறார். தனிமையைப் போக்க இவர் நாயொன்றையும் கிளியொன்றையும் வளர்த்த விவரம் கிடைக்கப் பெறுகிறது. இந்த காலகட்டத்தில்தான் தியாகராஜ சுவாமிகளின் புகழ் பரவத் தொடங்கியது. 1921ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்து முன்னிரவொன்றில் இவர் கண்ட ஒரு கனவில் தியாகராஜ சுவாமிகள் கையைத் தூக்கி இவரை ஆசீர்வதிப்பது போல கண்டது இவர் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திவிட்டது. சந்தர்ப்பவசத்தால் அந்த சமயத்தில் திருவையாற்றில் சத்குரு தியாகராஜருடைய சமாதி சிதிலமடைந்து அடையாளம் தெரியாமல் இருக்கும் செய்தி வந்தடைந்ததாம்.

    தியாகராஜ சுவாமிகள் அமரத்துவம் அடைந்தபின் அவரது உடல் பாவாசாமி அக்ரகாரத்துக்கு அருகில் காவிரிக் கரையில் அடக்கம் செய்யப்பட்டதும் அவருக்கு சமாதி எழுப்பப்பட்டு அங்கு ஒரு சாதாரண கட்டடம் அமைக்கப்பட்டது பற்றியும், 1904 முதல் தில்லைஸ்தானம் ராம ஐயங்காரின் வாரிசுகள் அவருக்கு ஆராதனைகள் செய்யத் தொடங்கியது முதல் எல்லா விவரங்களும் விவரமாக எழுதப்பட்டிருக்கிறது. அதோடு மட்டுமல்ல தியாகராஜருக்கு ஆராதனை செய்வதில் பெரிய கட்சி, சின்ன கட்சி என்று இருவேறு கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு ஆராதனை செய்த காட்சிகளும் இதில் விரிகின்றன. அப்போதுதான் தியாகராஜரின் பெருமைகளை உணர்ந்து கொண்ட நாகரத்தினம்மாள் தன்னை அவர் பணியில் அர்ப்பணித்துக் கொள்கிறார்.

    தியாகராஜ சுவாமிகள் சமாதியின் நிலைமை குறித்து நாகரத்தினம்மாளுக்கு எடுத்துரைத்தவர்கள் முனிஸ்வாமி நாயுடு, நாகராஜ பாகவதர் ஆகியோர். திருவையாற்றை அடைந்து அங்கு போய் தியாகராஜரின் சமாதியைத் தேடி அலுத்துப் போன அழகை விரிவாக எடுத்துரைக்கிறார். சமாதி இருந்த இடம் கவனிப்பாரற்று மோசமான செயல்களுக்கு இருப்பிடமாக ஆகியிருந்தது கண்டு மனம் பதைக்கிறார். சுற்றிலும் முட்புதர்கள், மூங்கில் குத்துகள், விஷப்பாம்புகள் இருந்தது படம்பிடித்துக் காண்பிக்கப்படுகிறது.

    திருவையாற்றில் இவருடைய பணி ஒன்றும் அத்தனை சுலபமாக இருக்கவில்லை. பிரிந்து கிடந்த இரு கட்சியினர் இவரை முதலில் அண்டவிடவில்லை. பெண்கள் ஆராதனைகளில் பாடக்கூடாது என்ற எழுதப்படாத விதி கடைபிடிக்கப்பட்டது. அதை மாற்ற இவர் அவர்களிடம் போராடவில்லை, மாறாக பெண்களுக்கென்று தனியாக ஒரு ஆராதனை நடத்திய விதம், அதற்காக நாற்பத்தி இரண்டு ஊர்களிலிருந்து இசைக் கலைஞர்களான தேவதாசியரை வரவழைத்து காவிரியில் நீராடி, ஐயாறப்பர் ஆலயத்தில் வழிபாடு நடத்தி பகல் ஓய்வுக்குப் பின் சமாதியில் அவருக்கு ஆராதனை எடுத்த காட்சியை நேரில் வந்து காண வெட்கப்பட்டோ என்னவோ அருகில் இருந்த செவ்வாய்க்கிழமை படித்துறையில் நின்று உள்ளூர் மக்கள் வேடிக்கை பார்த்த வரலாறு சிரிப்பை வரவழைக்கக்கூடியதாக இருக்கிறது. மனிதருள் ஒரு பிரிவினரை எந்த அளவுக்கு அவர்கள் இளக்காரமாகப் பார்த்திருக்கிறார்கள் என்பது வருத்தமளிக்கிறது.

    ஏற்கனவே இருக்கும் இரு கட்சிகளோடு நாகரத்தினம்மாவின் பெண்கள் கட்சியும் சேர்ந்து கொள்ளவே தியாகராஜர் ஆராதனை மூன்று வெவ்வேறு இடங்களில் நடைபெற்றன. முதல் இரு கட்சிகளிலும் கச்சேரி செய்ய முடியாத ஆண் பாடகர்கள் நாகரத்தினம்மாவின் பெண்கள் கட்சியில் சேர்ந்து பாடத் தொடங்கினார்கள். ஐ.சி.எஸ்.அதிகாரி எஸ்.ஒய்.கிருஷ்ணசாமி, இசைக் கலைஞர் முசிறி சுப்ரமணிய ஐயர் ஆகியோர் தலையிட்டு மத்தியஸ்தம் செய்து மூன்றையும் ஒன்றாக்கினர். இந்த முயற்சியில் நாகரத்தினம்மாளின் சாதனை ஆராதனையில் பெண்களுக்கும் பாடும் உரிமையைப் பெற்றுத் தந்தது. பெண் உரிமை பேசுவோர் இந்த விஷயத்துக்காகவாவது இவர் புகழைப் பாடவேண்டும்.

    தியாகராஜ சுவாமிகளுடைய சமாதியை அமைக்க அவர் பட்டபாடு, தன்னுடைய நகைகளையெல்லாம் விற்று அதற்காகச் செலவு செய்தது, பல ஊர்களுக்கும் சென்று கச்சேரிகள் செய்து அதில் வரும் பணத்தையெல்லாம் சமாதி அமைக்க செலவழித்தது, திருவையாற்றிலேயே வந்து தங்கி தான் எடுத்த பணியை முடித்தது, அந்த மகானுடைய சமாதிக்கு எதிரிலேயே தன்னையும் அடக்கம் செய்யச் சொல்லி தன் பக்தியை வெளிப்படுத்தியது உட்பட இனி வரும் சந்ததியினர் உணர்ந்து போற்றத்தக்க வகையில் இந்த வரலாறு சொல்லப்பட்டிருக்கிறது. தொடக்க காலத்தில் திருவையாற்று வைதீகப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இவரிடம் பாட்டு சொல்லிக் கொள்ள தயங்கியிருக்கிறார்கள். என்ன கொடுமை!

    இந்த நூலை எழுத திருவையாறு, தில்லைஸ்தானம் ஆகிய இடங்களில் பலர் ஆசிரியருக்கு ஒத்துழைப்பு தந்திருக்கின்றனர், அவர்களுக்கெல்லாம் நன்றி பாராட்டியிருக்கிறார் ஆசிரியர். நிறைவாக, மன நிறைவோடு சொல்லவேண்டிய செய்தி, இந்த நூலின் ஆங்கிலப் பதிப்பு வெளியிட்ட உணர்வுகளைச் சற்றும் மாற்றாமல் அப்படியே, தமிழ் மொழியிலேயே நேரடியாக எழுதப்பட்ட நூலைப் போல மொழிபெயர்த்திருக்கிற திருமதி பத்மா நாராயணன் அவர்களுக்கும் ஆங்கில மூல நூலை எழுதிய வெங்கடகிருஷ்ணன் அவர்களின் கடின உழைப்புக்கும் தமிழ் மக்கள், இசைப்பிரியர்கள், இலக்கிய ஆர்வலர்கள் நன்றி சொல்லியே தீரவேண்டும்.

    Share
  • வரலாற்றின் வரலாறு – புத்தக மதிப்புரை

    மதிப்பு​ரை – தேமொழி 

     

    rasamaanikkanaar

     

    நூல்குறிப்பு:
    நூலின் பெயர்: வரலாற்றின் வரலாறு
    ஆசிரியர்: முனைவர். இரா. கலைக்கோவன்
    புத்தகப் பிரிவு: வாழ்க்கை வரலாறு
    பதிப்பகம்: டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம்
    சி- 87, பத்தாம் குறுக்குச் சாலை
    தில்லைநகர் மேற்கு
    திருச்சிராப்ப்பள்ளி – 620 018
    பதிப்பு: முதற் பதிப்பு
    பதிப்பு ஆண்டு: 2006
    மொத்தப் பக்கங்கள்: 160
    விலை: 100 ரூபாய்

    __________________________________

     

    முன்னுரை:

    தன்னிகரில்லாத் தமிழினம் பெற்ற
    தகையவர் கோடி இந்நாட்டில்
    அன்னவருள்ளும் அறிஞருக்கறிஞர்
    ஆயிரத்தொருவரே ஏட்டில்
    என்னிவன் பெருமை எனப் புவி வியக்க
    எண்ணிடும் சிலரிடை வந்து
    மன்னிய புகழில் வாழ்ந்தவர் எங்கள்
    ‘மா. ரா.’ எனும் புகழ்க் கோவே!
    – – கவியரசர் கண்ணதாசன்

    எனக் கவியரசர் பாராட்டியது போன்றே, தமிழ்மொழி பெருமைப் படும் வகையில் தமிழ்த் தொண்டாற்றியப் பல்வேறு அறிஞர்களுள் தனித்தன்மை வாய்ந்தவர் டாக்டர் மா. இராசமாணிக்கனார். இன்றியமையாத இவரது சோழர் வரலாறு, பல்லவர் வரலாறு, பல்லவப் பேரரசர், கால ஆராய்ச்சி, மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம், தமிழ்மொழி இலக்கிய வரலாறு போன்ற வரலாற்றாராய்ச்சி நூல்கள் வரலாற்றுக் கோணத்தில் இவர் ஆற்றிய தமிழ்ப் பங்களிப்பினைப் பறை சாற்றும்.

    ஆசிரியர் குறிப்பு:
    பொதுவாக சாதனையாளராகக் கருதும் எந்த ஒரு மனிதருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் அறிந்து அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கும் கற்பனைக்கு ஒரு முழுமையான உருவம் கொடுக்க விழைவது சராசரி மனித இயல்பு. தமிழக அரசினால் நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழறிஞர்களின் நூல்கள் வரிசையில் சிறப்பான இடம் பிடித்துள்ள தமிழறிஞர் டாக்டர் மா. இராசமாணிக்கனார் (http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-49.htm) அவர்களைப் பற்றி சென்ற தலைமுறையினர் மிகவும் அறிந்திருந்தாலும், இக்கால இளைய தலைமுறையினருக்கு அவரைப் பற்றியத் தகவல்களோ, அவர் தமிழுக்கு ஆற்றியத் தொண்டுகளின் முக்கியத்துவமோ அதிகம் தெரிய வாய்ப்பிருந்ததில்லை. அக்குறையை நீக்க இந்நூலை எழுதியவர் அவரது அன்பு மகனார், திருச்சியில் புகழ் பெற்ற கண் மருத்துவராய்ப் பணியாற்றும் முனைவர். மருத்துவர். இரா. கலைக்கோவன் அவர்கள்.

    முன்பின் தெரியாத மூன்றாம் மனிதர் ஒருவர் நேர்முகக் காணல்கள், நூலாராய்ச்சிகள் போன்ற பல வழிகளிலும் தகவல் சேகரித்து வாய்வழியாகக் கேட்டறிந்த செய்திகளை வாழ்கை வரலாறாக அறியத் தருவதைக் காட்டிலும், குடும்பத்தினர் தாங்களே நேரே கண்டுணர்ந்து, ஒருவருக்கொருவர் தங்களுக்குத் தெரிந்த ஆதாரங்களையும், செய்திகளையும் பகிர்ந்து தகவல்களைச் சரிபார்த்து வழங்கும் வாழ்க்கை வரலாறு முழுமையானதாகும். இரா. கலைக்கோவன் அவர்கள் நூலை எழுத்து வடிவத்தில் அளித்தாலும் அவருக்கு வேண்டிய உதவிகளை மற்ற சகோதர சகோதரிகள் அளித்து தங்கள் தந்தையின் தமிழ்த் தொண்டு அனைத்தையும் பிழையின்றி, எந்த ஒரு தகவலும் விட்டுப் போகாதவாறு ஆவணப்படுத்த உதவியதாக நூலாசிரியர் கூறுகிறார்.

    நூல் வழங்கும் செய்திகள்:
    நூலின் உள்ளுறையில்; வரலாற்றின் வரலாறு, இலக்கிய ஆய்வில் முத்திரைப் பதிவுகள், சைவ சமயப் பகலவன், வரலாற்றுத் தடங்களில், திருக்கோயில் ஆய்வுகளும் கல்வெட்டுப் புலமையும், இளையோரின் இனிய நண்பர், மனிதரில் தலையாய மனிதரே என்ற ஏழு அத்தியாயங்களின் மூலம் தமிழறிஞரின் வாழ்க்கை வரலாற்றை விளக்கமுற மிக எளிய நடையில் சுவையுற வழங்கியுள்ளார் ஆசிரியர். அத்துடன் சுவை சேர்க்கும் மேலதிகத் தகவல்களாக இராசமாணிக்கனாரின் வாழ்க்கைக் குறிப்புகள், குடும்பம், இராசமாணிக்கனாரின் நினைவு போற்றும் அமைப்புகள், காலநிரல்படி இராசமாணிக்கனாரின் நூல்கள், துணை நூற்பட்டியல், ஒளிப்படங்கள் ஆகிய இணைப்புகளும் தமிழறிஞரின் மறுபக்கத்தையும், அவரது படைப்புகள் அனைத்தையம் கொடுப்பதன் மூலமும் சிறப்பாக நிறைவு பெற்று அமைகிறது.

    வரலாற்றின் வரலாறு / டாக்டர் மா. இராசமாணிக்கனார் வாழ்க்கை வரலாறு:
    நிலம் அளந்து தரம் விதிக்கும் அலுவலகத்தில் வட்டாட்சியராகப் பணிபுரிந்த மாணிக்கம் என்பாருக்கும், தாயாரம்மாளுக்கும் கடைசி மகனாக கர்நூலில், 1907 ஆண்டு மார்ச் 12 ஆம் நாள் பிறந்தவர் இராசமாணிக்கனார். தந்தையின் தொழில் காரணமாக ஆந்திரா பகுதியில் பற்பல ஊர்களில் வாழ நேரிட்டதால் பிற்காலத்தில் தமிழறிஞகராக மாறிய இவர் நான்காம் வகுப்புவரை படித்தது என்னவோ தெலுங்குதான். பிறகு அவரது தந்தையாருக்கு மதுரைக்கு மாற்றல் ஏற்பட்ட பொழுது தீவிரமாக முயன்று தமிழ் கற்றுக் கொண்டார். தனது பத்து வயதிலேயே தந்தையைப் பறிகொடுத்து தஞ்சையில் வசித்த அண்ணன் குடும்பத்தின் ஆதரவில் வளர்ந்தார். கல்வி தடைபட்டு தடைப்பட்டுத் தொடர, இடையில் தையல் தொழிலிலும் ஈடுபட்டிருக்கிறார். பள்ளி படிப்பு முடிந்து இருபதாவது வயதில் சென்னை தியாகராயர் பள்ளியில் தமிழாசிரியறாகப் பணியைத் துவக்கினார்.

    தொடர்ந்து வித்துவான் பட்டம், பி. ஓ.எல், பட்டம், எல். டி பட்டம், எனத் தகுதிகளை வளர்த்துக் கொண்டார். பெரியபுராண ஆராய்ச்சியை ஆய்வு செய்து எம். ஓ.எல் பட்டம் பெற்றார். தனது நாற்பதாவது வயதில் சென்னை விவேகானந்தர் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக பணியாற்றத் துவங்கினார். “சைவ சமய வளர்ச்சி” என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றார். மதுரை தியாகராசர் கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராகப் பொறுப்பேற்றார். பிறகு 1959 ஆண்டு முதல் சென்னைப் பல்கலை கழகத்தின் துணைத் தமிழ்ப் பேராசிரியராகப் பதவியேற்று, தனது ஐம்பத்தி ஒன்பதாம் வயதில் (26.5.1967) இதயநோயால் மரணமடையும் வரை அங்கு பணியாற்றினார். தனது வாழ்நாளில் இவர் எழுதிய நூல்களின் பட்டியல் நூற்றினைத் தாண்டுகிறது. அத்துடன் பாட நூல்களாகவும், கட்டுரைகளாகவும், ஆராய்ச்சிக் கட்டுரைகள் என இவருடைய பற்பலப் படைப்புகளின் பட்டியலை நூலின் பின் இணைப்பில் காணலாம். அப்படைப்புகளின் தலைப்புகளைப் படிக்குங்கால் இந்த அறிஞரின் பரந்துபட்ட அறிவினைக் கண்டு வியக்காமல் இருக்க முடியாது. நூலாசிரியர் சிரத்தையுடன் அனைத்தையும் தொகுத்து வழங்கியிருப்பது பாராட்டுக்குரியது. தமிழாராய்ச்சி மாணவர்களுக்கு மிகவும் உதவக்கூடியது நூலின் இந்த இணைப்புப் பகுதி.

    வரலாற்றுத் தடங்களில் டாக்டர் மா. இராசமாணிக்கனார்:
    தமிழிலக்கியம் பயின்று, தமிழாசிரியராக வளர்ந்து, தமிழறிஞராக மலர்ந்த போதும் இராசமாணிக்கனாரின் படைப்புகள் பெரும்பான்மையும் வரலாற்று நோக்கில் அமைந்தவை. நூற்றுக்கும் அதிகமாக இவர் எழுதிய நூல்களில் நாற்பத்து மூன்று நூல்கள் வராலாற்றைப் பொருளாகவும், மற்றுமொரு பதொனொரு இலக்கிய நூல்கள் வரலாற்று நோக்கில் எழுதப்பட்டவையாகும். இப்பணியே இவரை தமிழறிஞர்கள் வரிசையில் தனித்துக் காட்டுவது. சங்ககால இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட ‘நாற்பெரும் வள்ளல்கள்’ என்ற தலைப்பில் 1930 இல் வெளிவந்த இவரது முதல் நூலே வரலாற்று நூல்தான்.

    டாக்டர் மா. இராசமாணிக்கனாரது ‘மொஹெஞ்சொதரோ – அல்லது சிந்துவெளி நாகரிகம்’ என்ற நூல் ஏழுமுறை மறுபதிப்பு செய்யப்பட்ட நூலாகும். மற்றறொரு சிறப்புமிக்க நூல் ‘பல்லவர் வரலாறு’. இந்நூலிற்காகக் களஆய்வுகள் பல மேற்கொண்டார். அறுபத்தாறு நூல்கள், இருபத்திமூன்று கல்வெட்டுத் தொகுதிகள், ஆராய்ச்சி இதழ்கள், திங்கள் இதழ்கள் எனப் பலப் பின்புலத் தகவல்களின் தொகுப்பாக உருவான நூலாகும் இவருடைய பல்லவர் வரலாறு. பல்லவர் நகரங்களை நேரிடையாகப் பார்வையிட்டு, கல்வெட்டுகளை ஆராய இவர் சென்ற ஊர்கள் காஞ்சிபுரம், மாமல்லபுரம், வல்லம், மண்டகப்பட்டு, பாகூர், திருச்சி, திருவதிகை போன்றவைகளாகும். இந்நூலிற்காக அறிஞர்களால் பெரிதும் போற்றபட்டார். பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை இந்நூலை ‘கல்கி’ ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியிடம் காட்ட, அவர் அதனை படிக்க எடுத்துச் சென்றுவிட்டாராம் . பிறகு மூன்று மாதங்கள் கழித்து அவரிடம் இந்நூல் என்னிடமே இருக்கட்டும், ‘சிவகாமியின் சபதம் ‘எழுதத் தேவைப்படுகிறது, நீங்கள் வேறு வாங்கிக் கொள்ளுங்கள் என்றும் கூறிவிட்டதாவும் நூலாசிரியர் தகவல் கூறுகிறார்.

    கடிகை என்று தமிழிலும், கடிகா என்றும் அழைக்கப்படும் கடிகாசலம் உண்மையில் காஞ்சி அல்ல. கடிகா என்பது கல்லூரியையும் அது இருந்த ஊரையும் குறிக்கும். இது வடஆர்க்காட்டுக் கோட்டத்தில் உள்ள கடிகாசலம் என்னும் சோழசிங்கபுரமே என்பது டாக்டர் மா. இராசமாணிக்கனார் தனது ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்து கூறியத் தகவல். இதற்கு இவர் கல்வெட்டு மற்றும் இலகியச் சான்றுகளையும் ஒப்பிட்டு வரையறுத்தார். இலக்கியம், கல்வெட்டு இரண்டையும் உரியவாறு ஒப்பிட்டு நோக்கினால் அவை இரண்டும் ஒன்றுபடும் இடங்கள் மிகுதியாக இருப்பதை ஆய்வாளர்கள் அறியமுடியும். ஆனால், இதற்கு இவ்விரு துறைகளிலும் ஆழ்ந்த பயிற்சி தேவை. டாக்டர் மா. இராசமாணிக்கனார் அவ்வாறு இருதுறைகளிலும் சிறந்து இருந்தது தமிழக வரலாற்றைப் பற்றியப் பல அறிய செய்திகளை நாம் அறிய பெரும் உதவியாக இருந்தது.

    பல்லவர் வரலாற்றைத் தொடர்ந்து இவர் வெளியிட்ட ‘சோழ வரலாறு’ நூலுக்கு கோயில்களின் கல்வெட்டுகளை ஆதாரமாகக் கொண்டார். தமிழ்நாடு வரலாற்றாசிரியர்கள் எவரும் கருதாத இப்புதிய சிந்தனைக் கோணத்தினால் மிகவும் பாராட்டப் பெற்றார். பிற்காலச் சோழ வரலாற்றை உள்ளவாறு உணரப் பேருதவி செய்தது, வரலாற்று மூலமாக அமைந்தது, தமிழக கோயில்களே எனவும் இராசமாணிக்கனார் கூறினார். காவிரிப்பூம்பட்டினத்திற்கு 1943 இல் களஆய்வுக்கு சென்ற டாக்டர் மா. இராசமாணிக்கனார், எங்கெங்கு தோண்டினும் கிடைப்பது பழைய செங்கற்கள், மட்பாண்ட சிதைவுகள் எனக் குறிப்பிட்டதுடன், அவற்றுள் சில அருகாமையில் உள்ள புதுவை அரிக்கமேட்டில் கிடைத்த மட்பாண்டச் சிதைவுகளை ஒத்திருந்ததையும், பத்தடி ஆழத்தில் கிடைத்த செங்கல்லின் அளவினையும் (நீளம் 9 அங்குலம், அகலம் 6 அங்குலம், கனம் ஒன்றரை அங்குலம் எனவும்) குறிப்பெழுதி வைத்துள்ளார். அத்துடன் சோழர் வரலாற்றை முழுமையாகக் கொண்ட இந்நூலில் இவர் நாயன்மார்களில் ஒருவராக சமயப் போர்வையில் சிக்கியிருந்த கோச்செங்கட்ச்சோழரை சோழ மன்னராகவும், பல்லவ அரசரான புத்தவர்மனுடன் போரிட்டவரே இந்த கோச்செங்கணான் எனவும் தெளிவுபடுத்தினார்.

    சுதந்திர இந்தியாவில் தமிழகமும் ஆந்திரமும் பிரிவினையால் எல்லைத் தகராறு பற்றிய விவாதங்கள் நிகழ்ந்த காலத்தில், ஆராய்ச்சி அடிப்படையில் ‘தமிழ்நாட்டு வட எல்லை’ என்ற நூலை எழுதினர். இந்நூல் ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டு சர்தார் வல்லபாய் பட்டேலுக்கும், சென்னை மேலவை மற்றும் கீழவை உறுபினர்களுக்கும் இலவசமாக வழங்கப் பட்டது. கால ஆராய்ச்சி, தமிழக ஆட்சி, தமிழகக் கலைகள், தமிழக வரலாறு, தமிழர் நாகரிகமும் பண்பாடும் என்பன போன்ற நூல்கள் பலவற்றையும் வரலாற்று நோக்கில் எழுதினர். தமிழகத்துக் கோயில்கள் (கோயில்களின் விமானம் என்பதைக் குறிக்க இறையிடம் என்ற கலைச்சொல்லை பயன்படுத்தினார்), தமிழ் நூல்களில் சிற்பக்கலை, கட்டடக் கலை, கல்வெட்டுகள், கல்வெட்டுகளும் சமுதாய வரலாறும், வழக்கு வீழ்ந்த நூல்களும் புலவர்களும், தமிழ் நூற்செய்திகளும் கல்வெட்டுகளும், பற்பல ஊர்ப்பெயராய்வுகள் எனக் கட்டுரைகள் பலவற்றை பல்வேறு ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதியுள்ளார்.

    இவருடைய பெரியபுராண ஆராய்ச்சி, சைவ சமய வளர்ச்சி எனும் இரண்டு ஆய்வு நூல்களும் தமிழ்நாட்டு கல்வெட்டுகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பெற்றவை. இதன் மூலம் ஒரு சமயத்தின் வளர்ச்சியையும் எழுச்சியையும் கல்வெட்டுகளின் பின்னணியில் உருவாக்கித் தந்த ஒரே தமிழறிஞர் என்ற பெருமையையும் டாக்டர் மா. இராசமாணிக்கனார் பெறுகிறார். வெகுக் குறைவான அளவிலேயே கல்வெட்டாய்வு,கோயிற்கலை ஆய்வில் சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழறிஞர்கள் ஈடுபடிருந்தனர். அவர்களில் களஆய்வு மேற்கொண்டோரும் குறைவு. அவர்களிலும் தமிழிலக்கியம் மற்றும் கல்வெட்டு ஆராய்ச்சி இரண்டினையும் ஒருங்கிணைத்து தமிழக, இலக்கிய வரலாற்றினை எழுதப் போந்தவர்கள் டாக்டர் மா. இராசமாணிக்கனார் தவிர வேறொருவர் இருந்திருக்கவில்லை என்பதனை உறுதிபட உரைக்கலாம். ஆயினும் இவ்வாறு கல்வெட்டு ஆய்வில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு களஆய்வுகள் பலவும் மேற்கொண்ட டாக்டர் மா. இராசமாணிக்கனார் யாரிடம் கல்வெட்டு படிப்பதற்குப் பயிற்சி எடுத்தார், எங்கனம் அக்கலையைக் கற்றார் என அறியக்கூடவில்லை என்று அவர் மகனாராம் இந்நூலாசிரியர் இரா. கலைக்கோவன் வியப்புறுகிறார்.

    வரலாற்றின் வரலாறு பற்றி நூலாசிரியர் கருத்து:
    தனது விரிவான முன்னுரையில் தனது அன்புத் தந்தையார் பற்றியும் அவரது அன்பைப் பற்றியும் குறிப்பிடுகிறார் இரா. கலைக்கோவன். அத்துடன் நூலாசிரியர் இரா. கலைக்கோவன் தனது புகுமுக வகுப்பில் அவருடைய வரலாற்று ஆசிரியர் வள்ளுவன் கிளாரன்சு மோத்தாவின் பொழிவுகளால் ஈர்க்கப்பட்டு, மருத்துவம் பயில்வதைக் குறிக்கோளாகக் கொண்ட தான் வரலாற்றில்தான் அதிக மதிப்பெண் பெற்றதாகவும் குறிப்பிடுகிறார். அறிவியலைவிட அதிக மதிப்பெண்கள் வரலாற்றிலா என வியந்து கேட்டோருக்கெல்லாம் இராசமாணிக்கனார் தனது மகன் அவருடைய வரலாற்று ஆசிரியரின் தாக்கத்தால் வரலாற்றில் அதிக மதிப்பெண் பெற்றதாக பெருமையுடன் குறிப்பிட்டதாகவும் கூறுகிறார். ஆனால் மா. இராசமாணிக்கனார் அப்பொழுது தனது மகனின் அறிவுத் தேடலில் தானே கொண்டிருந்த தாக்கத்தை அன்று சற்றும் அறிந்திருக்கவில்லை போலும்.

    மருத்துவராக மாறிய பின்னரும் தனது தந்தையின் அடிச்சுவடைப் பின்பற்றியே தமிழில் முனைவர் பட்டமும், தனது தந்தையின் தமிழ்ப் பங்களிப்பைப் போற்றும் விதமாக டாக்டர் மா. இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையம் என்ற நிறுவனத்தைத் தொடங்கியுள்ளார் நூலாசிரியர். தந்தையைப் போலவே கல்வெட்டுகள் காணுமிடமெல்லாம் சென்று அவற்றைப் பற்றியத் தகவல்களையும் சேகரித்து வருகிறார், அதன் மூலம் தமிழுக்கும் தமிழக வரலாற்றிற்கும் தனது பங்களிப்பைக் கொடுத்து வருகின்றார். தாம் அறிந்துகொண்டவற்றை வரலாறு.காம் (http://www.varalaaru.com) என்ற தளத்தில் தொகுத்து வழங்கி வருகிறார். கல்வெட்டாய்வு, வரலாற்றாய்வு அவற்றைப் பற்றியக் கட்டுரைகள், ஆய்வறிக்கைகள் கொண்ட இதழ்கள் மூலம் அத்தளத்தில் நாம் பல தவல்களைத் தெரிந்து கொள்ள இயலும்.

    “ஒரு மகனாய் அவரைப் புரிந்து கொண்டதைவிட, ஒரு வரலாற்று மாணவனாய் மாறியபோதுதான் அந்த மனிதரின் பாடுகள் புரிந்தது. எவ்வளவு குழப்பமான காலப் படப்பிடிப்புகள். காழ்ப்புணர்ச்சியும் கயமையும், மொழி, இனம், நாடு எனக் கோடுகள் கிழித்துக் கொண்டு, குழுச் சேர்த்து குதூகலிக்கும் சிறுமையும் நிரம்பிய ஆய்வுலகத்தில் நேர்மையும் துணிவும் மட்டுமே கருவிகளாய்ப் பயணப்பட்ட அந்த மனிதர் எத்தனை சோதனைகளைச் சந்தித்திருப்பார்! எவ்வளவு துன்பங்களை, ஏளனங்களைச் சுமந்திருப்பார்! இருந்தபோதும் ‘இதுதான் வாழ்க்கை’ என்ற முடிவுடன்தானே அவர் வரலாறு படைத்திருக்கிறார். அவரை மாணவர்கள் மறக்கலாம்! வரலாற்று ஆய்வாளர்கள் மறக்கலாம்! ஏன் தமிழ் கூட மறக்கலாம்! ஆனால் காலம் மறக்காது. உழைப்பாளிகளைக் காலம் என்றென்றும் மதித்தே வந்திருக்கிறது”, என்று வியந்து தனது தந்தையின் கடின உழைப்பைப் போற்றும்  முகமாக “வரலாற்றின் வரலாறு” என்னும் நூலாக இராசமாணிக்கனாரின் வாழ்வைப் பதிவு செய்ததாகவும் பகர்கின்றார் நூலாசிரியர். இது ஒரு ஆய்வறிஞரைப் பற்றி ஓர் ஆய்வாளர் எழுதிய நூல் என்பது படிப்போருக்கும் விளங்கும். அத்துடன் நூலுக்குக் என்ன ஒரு பொருத்தமான தலைப்பினையும் இரா. கலைக்கோவன் தேர்ந்தெடுத்துள்ளார் என்று வியக்காமலும் இருக்க முடியவில்லை.

    நூல் வழங்கும் பாடம்:
    தனது தந்தையின் வரலாற்றைக் குறிப்பிடும் பொழுது, இராசமாணிக்கனாரின் வழிகாட்டியாக விளங்கிய திண்டுக்கல் ஆசிரியர் ஒருவர் சிறு வயதில் இராசமாணிக்கனாரை திண்டுக்கல் குன்றின் மீது அமைந்திருக்கும் திப்பு சுல்தான் கோட்டைக்கு அழைத்துச் சென்றதையும், “படிக்கும் பிள்ளைகள் எந்த இடத்திற்குச் சென்றாலும் அந்த இடத்தைப் பற்றிய வரலாறு, அங்குள்ள கட்டடங்கள், விளைபொருள்கள், செய்பொருள்கள் இவற்றைப் பற்றி அறிய வேண்டும். இந்த அறிவு வேண்டற்பாலது. பலர் இவவற்றைக் கவனிப்பதே இல்லை” என்று கூறிய அறிவுரையே பின்னாளில் இராசமாணிக்கனார் ஒரு வரலாற்று அறிஞராக மலரக் காரணமாக அமைந்தது என்றும் குறிப்பிடுகிறார்.

    கல்வெட்டுகள் வழி வரலாற்றை அறிவது போலவே, இந்த வரலாற்று நூலைப் படிக்கும் பொழுதும், இராசமாணிக்கனாரும், அவர் மகனாரும் தங்கள் வாழ்க்கைப் பாதையைத் தேர்ந்தெடுத்ததற்கு அவர்களுக்கு வழிகாட்டியாக இருந்தவர்களே முக்கியக் காரணம் என்பதை நாமும் அறிந்து கொள்கிறோம். இதனால் ஆக்கபூர்வமான தலைமுறையை உருவாக்குவதில் வழிகாட்டிகளுக்குள்ள பொறுப்பை நூலாசிரியர் குறிப்பிடாமலே நாம் அறிந்து கொள்ளலாம். இந்நூல் வழியே இச்சான்றோர்களின் பணியினால் ஈர்க்கப்பட்டு மேலும் பலர் தமிழுக்கும், தமிழின் வரலாற்றிக்கும், தமிழகத்தின் வரலாற்றிற்கும் தங்கள் பணியைத் தொடர வழிவகுக்கும் வகையில் இந்த நூல் பங்காற்ற வேண்டும் என்பதே என் போன்ற வாசகர் பலரின் விருப்பமாகவும் இருக்கும்.

    “மாணவர் தென்னிந்திய வரலாற்றையும் தமிழ் நூல்களையும் கல்வெட்டுகளையும் படித்துத் தம் தாய்நாட்டுச் சிறப்பை நன்கு அறிய வேண்டும் என்பதே இந்நூல் எழுதப் பட்டதன் நோக்கமாகும்” எனக் குறிப்பிட்டார் இராசமாணிக்கனார் தனது ‘ஆற்றங்கறரை நாகரிகம்’ என்ற நூலின் முன்னுரையில். அவருடைய இக்கனவு அவரது மகனாரின் ‘வரலாற்றின் வரலாறு’ நூல் படிபவர்களால் நிறைவேறும் என நம்பிக்கைக் கொள்வோம்.

    வரலாற்றின் வரலாறு நூலின் முதல் அத்தியாயத்தை மட்டும் ஐந்து பகுதிகளாகக் கீழ் காணும் சுட்டிகளின் வழி சென்று படிக்கலாம்…
    http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=319
    http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=337
    http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=353
    http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=382
    http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=407

     

     

     

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 106

    மலர் சபா

    புகார்க்காண்டம் – 10. நாடு காண் காதை


    அவர்கள் பழவினை குறித்து
    சாரணன் அறிந்தபோதும்
    விருப்பு வெறுப்பு கடந்தவன்
    தவம் செய்தவன் என்பதால்
    தன்னை வணங்கி நின்ற அவர்களின்
    துன்பம் அறிந்திட்ட போதும்
    கலக்கம் கொள்ளவில்லை.

    குறிப்பால் அவர்களுக்கு உணர்த்த எண்ணியே
    கவுந்தியடிகளிடம் பேசலானான்;
    “மிக்க பெருஞ்சிறப்பினையுடைய கவுந்தியே!
    ஒழிக என்றாலும் யாராலும் ஒழிக்க முடியாத
    தீவினையைக் காண்பாயாக!
    விளைநிலத்தில் இட்ட வித்து
    விளைந்து தகுந்த பயன் தருவதுபோலவே
    இவர்களின் பழவினையும் வந்து
    அதன் பயனை இவர்கள் அனுபவிக்க நேரும்போது
    அதைத் தவிர்க்க முடியாது..
    இதனை இவர்கள் மூலமாக அறிந்து கொள்வாய்.

    கடுமையாகக் காற்று வீசுகின்ற
    திறந்த வெளியிடத்தில் ஏற்றிவைக்கப்பட்ட
    விளக்கின் சுடரானது
    காற்றில் அழிந்து மறைவதைப்போல
    பழவினைப் பயன் வந்து தக்கும்போது
    உடலைவிட்டு உயிர் பிரிவது உறுதி” என்று கூறினான்.

    அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:  168 – 175
    http://www.chennailibrary.com/iymperumkappiangal/silapathikaram5.html

    Share
  • இந்த வார வல்லமையாளர்!

    திவாகர்

    தமிழ்மொழி தேனினும் இனிய மொழி. பல்வகை சிறப்புகளைத் தன்னுள்ளே அடக்கிக்கொண்டும், காலத்துக்கேற்ற மாறுதல்களையும் தனக்கெனத் தனியாக உள்வாங்கிக் கொண்டும் எக்காலத்துக்கும் சிறந்த மொழியாகத் திகழ்கிறது என்பதில் கருத்து வேற்றுமையே கிடையாதுதான். அதே சமயத்தில் தமிழ் மொழியின் சிறப்பு அதன் பழைய இலக்கியங்களிலேயே அடங்கிக் கிடப்பதும், புத்தம் புதிய இலக்கியங்கள் என வரும்போது அதன் தன்மை இன்னமும் அதிகமாக வெளிப்படவில்லையென்றுதான் தற்சமயம் நமக்குப் படுகின்றது. எதிர்காலத்தில் இன்றைய தமிழ் உலகம் தமிழுக்குக் கொடுத்த சிறப்புகள் என்னென்ன என்பதை வாழ்வாங்கு வாழ்விக்குமா என்பதும் நமக்கு இப்போதைக்குத் தெரியாதுதான்.

    இன்றைய தமிழ் இலக்கியங்கள் எதிர்காலத்தில் பேசப்பட வேண்டும் என்று நினைத்து எழுதும் எண்ணம் நம் தமிழ் மண்ணில் இருப்பதை விட தமிழ்நாடு தவிர்த்த பிற மண்ணில் வாழும் தமிழரிடையே பரவலாக இருப்பதைக் காண்கிறேன். தமிழ் எல்லோருக்கும் பரவலாகவே வளைந்து கொடுக்கும் மொழி எனும்போது புலம்பெயர்ந்த மண்ணில் இருந்தாலும் தமிழில் நல்ல நூல்கள் சமீப காலங்களில் படைக்கப்பட்டுள்ளன. இவை காலம் கடந்து நிற்கவேண்டுமென்பதே நம் ஆசை. அதே சமயத்தில் இப்படி புலம்பெயர்ந்த மண்ணில் தோன்றும் தமிழ் நூல்களையும் எழுத்தாளர்களையும் தமிழ்நாடு எப்போதும் உற்சாகப்படுத்திக்கொண்டே இருக்கவேண்டும். இப்படி ஒரு உற்சாக விழாவாக சமீபத்தில் கோவையில் புலம் பெயர்ந்த படைப்பாளிகளின் மாநாடு ஒன்று நடந்ததும் அந்த மாநாட்டை ஏற்பாடு செய்த திரு மாலன் அவர்களையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

    இந்த நிகழ்ச்சியைப் பற்றியும், திரு மாலன் அவர்களின் செயல்பாடு குறித்தும் திருமதி பவளசங்கரி அவர்களின் கட்டுரை வல்லமையில் வெளியாகி உள்ளது. அதிலிருந்து சில பகுதி..

    Maalan//கருத்தரங்க அமைப்புக்குழுவின் தலைவர், அமெரிக்காவில் உள்ள ஃபுளோரிடா பல்கலைக்கழகத்தில் இதழியலில் முதுகலைப் பட்டம் பெற்ற *திரு மாலன்* தனது பதினாறாம் வயதில் , எழுத்து இதழ் மூலம் கவிதைக்கும், கவிதை மூலம் எழுத்துலகிற்கும் அறிமுகமானவர். இவரது கதைகள் ஆங்கிலத்திலும், இந்திய மொழிகளிலும் மட்டுமன்றி, சீனம், மலாய் ஆகிய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இவரது நாவல், ‘ஜனகணமன’ ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக வெளிவந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இவருடைய சிறுகதை, ‘தப்புக் கணக்கு’ பல பல்கலைக்கழகங்களில் பாடமாக உள்ளதோடு, திரு பாலுமகேந்திரா அவர்களால் குறும்படமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. தம்முடைய பரந்துபட்ட, இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோரின் தொடர்புகளை மிகச் சிறந்த முறையில், ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தி இக்கருத்தரங்கை வெற்றியின் உச்சத்திற்குக் கொண்டு சென்றிருக்கும் திரு மாலன் அவர்களின் வல்லமை பாராட்டிற்குரியது.
    “புலம் பெயர்ந்தவர்கள் பல சவால்களை எதிர்நோக்க வேண்டியிருப்பதால் அவர்களால் பெரியதொரு இலக்கியத்தைப் படைத்துவிட முடியாது, என்கின்ற நண்பர் ஜெயமோகனின் கருத்து எனக்கு ஏற்புடையதல்ல. அது போன்றே, உலக அரங்கில் தமிழ் இலக்கியத்தைப் புலம்பெயர் இலக்கியம் தலைமையேற்று வழி நடத்தும்’ என எஸ்.பொ. கூறுவதும் சற்று மிகையானக் கூற்று. ஆனால் இந்த நூற்றாண்டில் உலக அரங்கில் தமிழ் இலக்கியத்திற்கான அங்கீகாரத்தினைத் தாயகம் கடந்த தமிழும், தமிழர்களும் கணிசமாகப் பெற்றுத் தருவார்கள் என்ற நம்பிக்கை நிறையவே உண்டு” என்ற யதார்த்தமான வாதங்களைக் கருத்தில் கொண்ட இவருடைய செயல்பாடுகள் தமிழ் கூறும் நல்லுலகத்தினரால் என்றும் போற்றுதலுக்குரியது//

    இப்படிப் போற்றுதலுக்குரிய திரு மாலன் அவர்களை இந்த வார வல்லமையாளராக வல்லமை குழுவினரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். திரு மாலன் அவர்களுக்கு நம் வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் அதே நேரத்தில் தமிழ்நாடு தவிர பாரதத்திலேயே உள்ள பிற பாகங்களில் புலம் பெயர்ந்த தமிழர்களில் இலக்கியப் பணிகளையும் வெளிக்கொணர உதவுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

    கடைசி பாரா: தஞ்சை திரு வே. கோபாலன் அவர்களின் பின்னூட்டம் வல்லமையில்:
    64 வயது ஆன இந்திய குடியரசு இன்னமும் ஜனநாயக நெறிகளைப் பின்பற்றவில்லையென்றால், நம்மை நாமே ஆளும் தகுதி நமக்கு வரவில்லை என்று பொருள்.

    Share
  • ராமன் வரும் வ​ரை காத்திரு… (11)

    ராமஸ்வாமி ஸம்பத்

    மனக்கவலை நீங்கிய ராமனும் சுக்ரீவனும் அடுத்துச் செய்யவேண்டியதை ஆலோசித்தனர். அதன்படி ஒரு மாபெரும் வானர சேனையோடு அனைவரும் இலங்கை நோக்கிப் புறப்பட்டனர். கீழ்க்கடற்கரை ஓரம் அப்படை தண்டு கொண்டிருந்தபோது வானில் ராவணன் தம்பி விபீஷணனும் மேலும் நான்கு அரக்கர்களும் தோன்றி, “இலங்கேசனால் உதாசீனம் செய்யப்பட்ட நாங்கள் ராமனைச் சரண் அடைய நிச்சயித்துள்ளோம். அப்பிரபு எங்களை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகிறோம்” என்றனர்.

    இவர்கள் எப்படி இங்கு வந்தார்கள் என்பதனைப் பார்ப்போமா? அனுமன் கடல் தாண்டி இலங்காபுரியை எரித்து நாசம் செய்தது ராவணனைக் கலங்க வைத்தது. தன் தம்பிமார்களையும் இந்திரஜித் உள்ளிட்ட தம் மக்களையும் அமைச்சர்களையும் வரவழைத்து அவசர ஆலோசனை செய்தான். விபீஷணனைத் தவிர அனைவரும் ”ராம லக்ஷ்மணரையும் வானரப்படையையும் அவர்கள் தண்டு கொண்டிருக்கும் இடத்திற்கே சென்று நாசம் செய்ய வேண்டும்” என்றனர்.

    விபீஷணனோ, “ஸீதையை அபகரித்து வந்தது மாபெரும் குற்றமென்றும், நாமும் நம் அரக்கர் குலமும் நிச்சயமான அழிவிலிருந்து காப்பாற்றப்பட வேண்டும் என்றால், அதற்கு ஒரே வழி ராமபத்தினியை உரியவனிடம் ஓப்படைப்பதே” என்றான்.

    ராவணன் சினத்தில் உடல் துடிக்க, “விபீஷணா, சில நாட்களாகவே உன் நடப்பு சரியாக இல்லை. நம் எதிரியை சிலாகித்துப் பேசுகிறாய். நீ அந்த குரங்கைக் கொல்ல விடாமல் தடுத்ததால் இலங்கை நகரமே தீக்கிரையாகி விட்டது. உன் மகள் திரிஜடையை அனுப்பி ஸீதைக்கு ஆறுதல் சொல்ல வைக்கிறாய். உன் நோக்கம் என்ன?” என்று கர்ஜித்தான்.

    “அண்ணா, என் நோக்கம் தங்களையும் நம் அரக்கர் குலத்தையும் காப்பதே” என்ற விபீஷணனை ராவணன், “வேண்டுமானால் நீ ராமனிடம் அடைக்கலம் புகுந்து உன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சி செய். உன்னை என் தம்பியென்று சொல்லிக் கொள்ளவே எனக்கு வெட்கமாக இருக்கிறது” என்று சொல்லி மேலும் பல சுடுசொற்களால் அவனைச் சாடினான். அங்கு கூடியிருந்த அனைவரும் மன்னன் கூற்றினை ஆமோதித்தவாறு விபீஷணனை எள்ளி நகையாடினர். வருத்தத்தோடும் குனிந்த தலையோடும் அவன் அங்கிருந்து அகன்று தன் நண்பர்கள் நால்வரோடு ராமன் இருக்கும் இடத்தைச் சேர்ந்தான்.

    அபயம் கோரும் விபீஷணனை தம்முடன் சேர்த்துக் கொள்ளலாமா என்று சுக்ரீவனையும் ஜாம்பவானையும் மூத்த வானர வீரர்களையும் ராமன் கேட்டபோது அனுமனைத் தவிர அனைவரும் தேவையில்லை எனக்கூறினர். அனுமனோ வீபீஷணனின் நற்பண்புகளைச் சுட்டிக்காட்டி “அவன் வரவு நமக்கு நல்வரவே” என்றான்.

    முடிவில் ராமன் தன்னுடைய அடைக்கலம் அளிக்கும் பண்பினை ஒட்டி, “சரண் புகுந்தவரைக் காப்பது என் தர்மமாகும். ஒருவேளை ராவணனே மனம் திருந்தி என்னிடம் சரணடைந்தால், அவனையும் ஏற்றுக் கொள்வேன்” என்று கூறி, விபீஷணனை அழைத்து, லக்ஷ்மணனையும் சுக்ரீவனையும் அவ்வரக்கனுக்கு இலங்கை அரசனாக முடிசூட்டுமாறி பணித்தான்.

    பின்னர் அவனோடும் சுக்ரீவனோடும் எவ்வாறு கடல் கடந்து இலங்கை சேர்வது என்று ஆலோசித்தான். அதன்படி கடலரசனை வழிவிடுமாறு வேண்டுவது என முடிவு செய்தான். இன்று திருப்புல்லாணி என வழங்கும் இடத்தில் ராமன் தர்ப்பைகளைப் பரப்பி மூன்று நாள் உபவாசத்தோடு சமுத்திரராஜனைப் பிரார்த்தித்தவாறு இருந்தான். அதற்கு பலன் இல்லாமல் போகவே, கோபம்கொண்ட கோதண்ட ராமன் அக்கடலினை வற்றி தரைமட்டமாக்கத் தன் வில்லின் நாணேற்றினான். இந்த சீற்றத்தைக் கண்டு கடலரசன் நடுநடுங்கி, ராமனிடம் சரண் புகுந்து, “இயற்கை நியதிகளுக்குக் கட்டுப்பட்டவனான என்னை மன்னித்தருள்வீர். என்னால் தங்களுக்கு ஒரு உதவி செய்யமுடியும். அதாவது என்மீது பெருங்கற்களைக் கொண்டு அணை ஒன்றைக் கட்டுங்கள். அதனை நான் தாங்குகிறேன். அந்த அணைமீதே நீங்க்ள் யாவரும் நடந்து இலங்கை சேரலாம்” என்று கூப்பிய கரங்களோடு பகர்ந்தான். திருப்புல்லாணி அருகாமையில் உள்ள ஓரிடத்தைச் சுட்டிக்காட்டி அங்கிருந்து சேதுவை நிர்மாணிக்கலாம் என்றும் கூறினான்.

    வானர வீரர்களில் ஒருவனான நளன் என்பான் முன்வந்து, “ஐயனே! நான் விஸ்வகர்மனிடம் அணைகள்  கட்டுவதற்கான பயிற்சி பெற்றிருக்கிறேன். அனுமன் போன்ற வலிமை கொண்ட வானரர்கள் அருகில் உள்ள மலைகளிருந்து பெரும் பாறாங்கற்களை எடுத்து வந்தால் இப்பணி எளிதாக முடிந்துவிடும்” என்றான். அவன் மேற்பார்வையில் வானரர்கள் ராம நாமத்தை ஜபித்தவாறு பெரும் பாறாங்கற்களையும் வெட்டப்பட்ட மரங்களையும் அணைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட கடற்பாதையில் போட்டு சேதுவை உருவாக்குவதில் ஈடுபட்டனர். கடலரசன் கருணையால் அவைகள் ஒரு மிதவைப் பாலமாக அமைந்தன.

    இதையெல்லாம் வியப்போடு பார்த்துக் கொண்டிருந்த சேதுராமன் ‘இந்த பளுவான கற்கள் எவ்வாறு மிதக்கின்றன’ என நினைத்து ஒரு மாலைப் பொழுது யாருமில்லாத சமயம் தானும் ஒரு கல்லை அவ்விடத்தில் போட்டான். அது ‘தொபுக்கடீர்’ என்று தண்ணீரில் அமிழ்ந்தது. திடீரென்று யாரோ ‘களுக்’ என்று நகைப்பது கேட்டது. அனுமன்தான் அங்கு நகைத்தபடி நின்றிருந்தான். “ஏன் சிரிக்கிறாய் அனுமா?” என்று ராமன் கேட்க அனுமன், “ஐயனே! நீ கைவிட்டால் கல் என்ன  எவர்க்குமே அதோகதிதான்” என்றான்.

    சில நாட்களில் சேதுபந்தனம் முடிந்து வானரப் படை மொத்தமும் அந்த நீண்ட வீதியின்மேல் நடந்து இலங்கையை அடைந்தனர். ராமனை அனுமனும் லக்ஷ்மணனை அங்கதனும் சுமந்து அக்கரை சேர்ந்தனர். கடைசி முயற்சியாக ராமன் அங்கதனை தூதுவனாக ராவணனிடம் அனுப்பி “ஸீதையை என்னிடம் சமர்ப்பித்துச் சரண் புகுந்தால் போரினைத் தவிர்க்கலாம்” என்று சொல்ல வைத்தான். அகந்தைகொண்ட ராவணன் அதனை நிராகரிக்கப் போர் தொடங்கியது.

    (​தொடரும்)

    Share