தேமொழி
மணமகள்
வண்ணத் தூரிகைக் காவியங்கள் – 13 >>
பவள சங்கரி
பாற்கடல் நாயகி கற்பகவல்லி புறப்பட்டாள்!
அற்புதங்கள் புரியவே அருள்மழை பொழியவே
பொற்பதங்கள் பணிந்து கருத்தாய் வழிபடவே
நற்கதியருளி ஆனந்தமழை பொழியவே
பொற்சலங்கைகள் ஜல்ஜல்லென தாளமிட
கற்சிலையாய் வீற்றிருந்தவள் கலகலவென புறப்பட்டாள்!
நித்ய கல்யாணியே நிதம் வாருமம்மா
சத்ய சொரூபமாய் சாந்தமாய் வாருமம்மா
சிந்தை கலங்காமல் நின்பதம்பாட வாழ்த்தியருளுமம்மா
முந்தைவினை தீண்டாமல் முத்தாய் பதமருளுமம்மா
பந்தத்தில் கிடந்துழலாமல் பரிவாய் காத்தருளுமம்மா
பைந்தமிழ்ப்பாமாலை பாடியுனைத் துதிக்கும் வரமருளுமம்மா
அஞ்சி அஞ்சி நிற்பவருக்கு ஆறுதலாய் வாருமம்மா
கெஞ்சி கெஞ்சி தவமிருப்போரை காத்தருளுமம்மா
தஞ்சம் தஞ்சமென அலைந்தேனுக்கு அடைக்கலம் அருளுமம்மா
நஞ்சையும் புஞ்சையும் செழித்து வளர வாருமம்மா
பஞ்சமும் பசியும் பாரினில் அறவேஒழிய தயைதாருமம்மா
வஞ்சம் தீண்டாமல் வஞ்சியே காத்தருளுமம்மா
ரஞ்சனியே தாயே தயாபரயே ரட்சித்தருளுமம்மா!
பிரதமை திதியில் பிரியமாய்வந்து காத்தருளுமம்மா!

வேதம் படிப்பதால் கிடைக்கும் அத்தனை ஞானமும், நலனும், வளமும் விரதங்களால் கிடைக்கின்றன என்று புராணங்கள் கூறுகின்றன. ‘சிவனுக்கு ஒரு இராத்திரி சிவராத்திரி, அம்மனுக்கு ஒன்பது இராத்திரி, நவராத்திரி’ என்பார்கள். அன்னை பராசக்தியை புரட்டாசி மாதத்தில் ஒன்பது தினங்கள் முறையாக வழிபடும் அற்புத விரதம் நவராத்திரி விரதம். அன்னையின் விரதங்களுள் மிகச் சிறந்த ஒன்றாகும் இவ்விரதம். நலங்கள் யாவும் அள்ளித்தரும் நாயகியின் நவராத்திரி விரத மகிமையை கந்தபுராணமும் எடுத்துரைக்கிறது . நவராத்திரி வழிபாடு அன்னை சக்தியின் மகிமையை பார் புகழ விளங்கச்செய்யும். மனிதரின் வாழ்க்கை நலமான, கல்வி, செல்வம், வீரம் ஆகிய இம்மூன்றையும் வேண்டி அம்மனின் அவதாரங்களான சரசுவதி, இலக்குமி, துர்காதேவி என மூன்று சக்தி அம்சங்களையும் உளம் குளிர வழிபடுதலே இவ்விரதத்தின் நோக்கம். முதல் மூன்று நாட்களில் வீரத்தையும், தைரியத்தையும் வேண்டி அன்னை பராசக்தியை வழிபடுகிறோம். அடுத்த மூன்று நாட்கள் வாழ்வாதாரமான செல்வம் வேண்டி மகாலட்சுமியைத் துதிக்கிறோம். இறுதி மூன்று நாட்களும் கல்வி, ஞானம், சகல கலைகள் என அனைத்தும் வேண்டி சரசுவதி தேவியை வழிபடுகிறோம்.
பதினென் கரங்களுடன் செவ்வாடை தரித்து ஞானத்தின் பிரதிபிம்பமாக, அழகின் இன்ப ஊற்றாக, அட்ட இலட்சுமியாகக் காட்சியளிப்பவள் அன்னை. 1. ஜபமாலை, 2. கோடரி, 3. தண்டாயுதம், 4. அம்பு, 5. மின்னல், 6. தாமரை, 7. வில், 8. கலசம், 9. வளைதண்டம், 10. ஈட்டி, 11. வாள், 12. கேடயம், 13. சங்கு, 14. மணி, 15. மதுக்கிண்ணம், 16. திரிசூலம், 17. பாசக்கயிறு, 18. சுதர்சன சக்கரம் ஆகியவற்றை 18 ஆயுதங்களையும் அன்னையின் 18 திருக்கரங்கள் தாங்கி நிற்கிறது. வெள்ளை ஆந்தையை வாகனமாகக் கொண்டவள். 1. ஆதி லட்சுமி, 2. தான்ய லட்சுமி, 3. தைர்ய லட்சுமி, 4. கஜ லட்சுமி, 5. சந்தான லட்சுமி, 6. விஜய லட்சுமி, 7. வித்யா லட்சுமி, 8. தனலட்சுமி என அட்ட சக்திகளாக அருள்பாலிப்பவள் அன்னை. அமைதியான, மகிழ்ச்சியான வாழ்வு அமைய வேண்டுமானால் அன்னையின் அருள் இருந்தால் மட்டுமே அது சாத்தியம். ஆயினும் இந்த அட்ட இலட்சுமிகளில் எந்த இலட்சுமியின் அருளை இழக்க நேர்ந்தாலும் உயிர் வாழ இயலும். ஆனால் தைர்ய இலட்சுமி என்பவளின் அருளை இழக்க நேர்ந்தால் நம் வாழ்வு என்ன ஆகும் என்று சொல்ல வேண்டியதில்லை. தன்னம்பிக்கையைக் கொடுத்து, எத்துனை துன்பம் வந்தாலும் அதைத் தாங்கி நின்று மீண்டு வரும் மாயம் செய்பவள் தைரிய இலக்குமி! தாமரையாள், அலைமகள், திருமகள், செந்திரு என பல்வேறு அழகான நாமங்கள் சூடியவள் அன்னை. நன்னடத்தை, நல்லதொரு குறிக்கோள், சோம்பலின்மை ஆகியவைகளை உடையவர்களுக்கும், தன்னையும் சுற்றுப் புறத்தையும் தூய்மையாக வைத்திருப்பவர்களுக்கும் தன்னுடைய பூரண அருளைப் பொழிபவள் அன்னை. தாமரைத் தண்டு திரியில் விளக்கேற்றி, கோபூசை செய்து அன்னையை வழிபட உள்ளம் குளிர்வாள். இந்துக்களிடம் ஆலய வழிபாடும், இலட்சுமி கடாட்சமும் செல்வம் தரும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அனந்தபூர் மாவட்டத்தில் ஜீலம் நதிக்கரையின் ஓரத்தில் கிட்டத்தட்ட 1400 ஆண்டுகள் பழமையான இலட்சுமி தேவியின் சிலை ஒன்று கிடைத்துள்ளதாம். இதிலிருந்தே இலட்சுமி தேவியின் தொன்மை நன்று விளங்குகிறது.
பெரியோரை மதிப்போருக்கும், எப்போதும் உண்மையே பேசுபவர்களுக்கும், தன்னையும், தம் இருப்பிடத்தையும் சுத்தமாக வைத்திருப்பவர்களுக்கும், இரக்கமுள்ளவர்கள், புறம்பேசாதவர்கள், மற்றவர்களுக்கு உதவுபவர்கள், குழந்தைகளைத் துன்புறுத்தாதவர்கள், போன்றவர்களுக்குத் தம் அருளாசியை அள்ளி வழங்குபவள் அன்னை. லட்சுமி என்றாலே அழகு என்று தான் பொருள். எல்லா அழகான இடங்களிலும் லட்சுமி வாசம் செய்கிறாள். சுத்தமான மாட்டுத் தொழுவம், நீர் நிறைந்த ஆறு, குளங்கள், நிறைந்து நிற்கும் நெல் வயல், மகிழ்ச்சியான இல்லம் என இயற்கை அழகு கொஞ்சும் சகல இடங்களும் அன்னை உறையும் இடங்கள்தான். அதனால் இயற்கையைப் பேணிப் பாதுகாத்து அன்னையின் அருளைப் பூரணமாகப் பெற்று இன்ப வாழ்வை எய்துவோம்.
படத்திற்கு நன்றி:
தஞ்சை வெ. கோபாலன்
கச்சி திருஏகம்பமாலை
(எளிமையான சில பாடல்கள்)
கட்டி அணைத்திடும் பெண்டீரும் மக்களும் காலத்தச்சன்
வெட்டி முறிக்கும் மரம்போல் சரீரத்தை வீழ்த்திவிட்டால்
கொட்டி முழக்கி அழுவார் மயானம் குறுகி அப்பால்
எட்டி அடிவைப்பரோ இறைவா கச்சி ஏகம்பனே!
காலம் வந்ததும் உயிரைப் பறித்திடும் காலன் வந்து நம் உயிரை எடுத்துக் கொண்டு, உடலை வெட்டி சாய்த்த மரம்போல வீழ்த்தும்போது, தாலிகட்டிய மனைவியும், பிள்ளைகளும் ஆ, ஊ என்று முழக்கமிட்டு அழுவார், இடுகாட்டுக்கு வந்து ஈமக்கிரியை செய்வதன்றி நம்கூட மேலும் ஒரு அடி எடுத்து வைப்பரோ கச்சி நகர் வாழ் ஏகம்பநாதனே!
பொல்லாதவன் நெறி நில்லாதவன் ஐம்புலன்கள் தமை
வெல்லாதவன் கல்வி கல்லாதவன் மெய்யடியவர் பால்
செல்லாதவன் உண்மை சொல்லாதவன் நின் திருவடிக்கு அன்பு
இல்லாதவன் மண்ணில் ஏன் பிறந்தேன் கச்சி ஏகம்பனே!
நான் மிகப் பொல்லாதவன், நன்னெறிகளைக் கைக்கொண்டு வாழாதவன், புலன்களை வெல்லாமல் அவை போன போக்கில் போய் அழிந்தவன், கல்வி பயிலாதவன், மெய் அடியார்களைக் கண்டு வணங்காதவன், உண்மை பேசாதவன், இறைவா உன் திருவடியைப் பணியாதன் அப்படிப்பட்டவனாகிய நான் ஏன் இந்த மண்ணில் வந்து பிறந்தேன் கச்சி ஏகம்பநாதரே!
பிறக்கும் பொழுது கொடுவந்ததில்லை; பிறந்து மண்மேல்
இறக்கும் பொழுது கொடுபோவதில்லை; இடை நடுவில்
குறிக்கும் இச்செல்வம் சிவன் தந்ததென்று கொடுக்கறியாது
இறக்கும் *குலாமருக்கு என் சொல்வேன் கச்சி ஏகம்பனே! *(குலாமர்=கீழ்மக்கள்)
பிறந்தபோது எதையும் இந்த பூமிக்குக் கொண்டுவந்ததில்லை; இந்த பூமியில் வாழ்ந்து முடிந்த பின் போகும்போது எதையும் கொண்டு போகப்போவதுமில்லை; இடையில் கிடைத்த இந்த செல்வங்கள் எல்லாம் இறைவன் தந்தது என்று தானும் அனுபவித்துப் பிறருக்கும் தந்து அறவாழ்வு வாழாத கீழ்மக்களுக்கு நான் என்ன சொல்வேன் காஞ்சி ஏகம்பரநாதனே!
அன்ன விசாரம் அதுவே விசாரம்; அது ஒழிந்தால்
சொர்ண விசாரம் தொலையா விசாரம்; நற்றோகையாரைப்
பன்ன விசாரம், பலகால் விசாரம் இப்பாவி நெஞ்சுக்கு
என்ன விசாரம் வைத்தாய் இறைவா கச்சி ஏகம்பனே!
தினமும் சோற்றுக் கவலையே பெருங்கவலை, அதுதான் ஒரே கவலை. அது இல்லையென்றால் தங்கம் வாங்க வேண்டுமென்கிற கவலை அது முடிவில்லா கவலை, அழகிய பெண்களைக் கவரவேண்டுமெ என்கிற கவலை, பல நாளும் இந்தக் கவலை, இவை தவிர இந்தப் பாவிக்கு என்ன கவலை வைத்தாய் இறைவா காஞ்சி வாழ் ஏகாம்பரநாதனே!
கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி
நில்லாப் பிழையும், நினையாப் பிழையும் நின் அஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே!
செய்துவிட்ட தவறுகள்தான் எத்தனை? படிக்காத தவறு, நல்ல சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளாத தவறு, இறைவனை நினைந்து கசிந்துருகி வணங்காத தவறு, அவனை நினைக்காத தவறு, ஐயனின் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதாத தவறு, போற்றாத தவறு, வணங்காத தவறு இவை எல்லா தவறுகளையும் ஐயனே கச்சி ஏகம்பனே பொருத்தருள்வாய்!
காதென்று மூக்கென்று கண்ணென்று காட்டி என் கண்ணெதிரே
மாதென்று சொல்லி வரும் மாயைதன்னை *மறலி விட்ட (*மறலி=காலன்)
தூதென்று எண்ணாமல் சுகமென்று நாடும் இத்துர்புத்தியை
ஏதென்று எடுத்துரைப்பேன் இறைவா கச்சி ஏகம்பனே!
மாயை என்று உணராமல் எதிரில் வரும் காதல் மடமாதரை பல்விதமாகக் கொஞ்சி மகிழ்ந்து வந்ததைத் தவிர, அது எமன் நமக்கு அனுப்பியுள்ள தூது என்பதை நினைத்துப் பார்க்காமல் இதுவே சுகம் என்று கண்டதே காட்சியாய், கொண்டதே கோலமாய் வாழ்ந்த இந்த அறியாமையை என்னவென்று சொல்வேன் இறைவா கச்சி ஏகம்பனே!
ஊரும் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப் பெற்ற
பேரும் சதமல்ல, பெண்டிர் சதமல்ல, பிள்ளைகளும்
சீரும் சதமல்ல, செல்வம் சதமல்ல தேசத்திலே
யாரும் சதமல்ல நின்றாள் சதம் கச்சி ஏகம்பனே!
வாழும் இந்த ஊர், சொந்தம் கொண்டாடுகின்ற உற்றார் உறவினர், கடினமாக உழைத்து வாங்கிய நற்பெயர், மனைவி மக்கள், ஞானம், செல்வம் இவை எதுவும் நிரந்தரமானதல்ல, நம்மைச் சுற்றி வாழுகின்ற எதுவும் எவரும் நிரந்தரமானவர்கள் அல்ல, உன்னுடைய இரு தாமரைப் பாதங்கள் மட்டுமே நிரந்தரம் கச்சி ஏகம்பனே.
பொருள் உடையோரைச் செயலினும், வீரரைப் போர்க்களத்தும்,
தெருள்* உடையோரை முகத்தினும், தேர்ந்து தெளிவது போல் (*தெருள்=ஞானம்)
அருள் உடையோரைத் தவத்தில், குணத்தில், அருளில், அன்பில்,
இருள் அறு சொல்லினும் காணத்தகும் கச்சி ஏகம்பனே!
செல்வந்தனாக இருந்தால் அவனுடைய நற்செயல்களாலும், வீரனாக இருந்தால் போர்க்களத்திலும், நல்ல தெளிந்த ஞானமுடையவனாக இருந்தால் அவனுடைய முகத்திலும், பார்த்துத் தெரிந்து கொள்ள முடிவது போல, இறைவன் அருள் பெற்றவர்களை அவர்களுடைய தவத்திலும், குணத்திலும், அருளிலும், அன்பிலும், வஞ்சகமில்லா சொல்லிலும் பார்க்க முடியும் கச்சி ஏகம்பனே.
வாதுக்குச் சண்டைக்குப் போவார் வருவார், வழக்குரைப்பார்
தீதுக்கு உதவியும் செய்திடுவார், தினம் தேடி ஒன்று
மாதுக்கு அளித்து மயங்கிடுவார், விதி மாளும் மட்டும்
ஏதுக்கு இவர் பிறந்தார் இறைவா கச்சி ஏகம்பனே!
சதா ஊர் சண்டை, தெருச்சண்டை போடுவதோடு, மற்றவர்களைப் பற்றி குறைசொல்லிக் கொண்டிருப்பது, தீமையான காரியங்களுக்குத் துணை போவது, தினம் உழைத்த பொருளை இன்ப போகத்துக்குச் செலவிடுவது இவையெல்லாம் உயிர் உள்ள காலம் வரை செய்து கொண்டிருப்பவர்கள் எதற்காகப் பிறந்தாரோ தெரியவில்லையே இறைவா கச்சி ஏகம்பனே!
ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப்பெற்ற
தாயாரை வைவார், சதி ஆயிரம் செய்வார், சாத்திரங்கள்
ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்யார், தமை அண்டினோர்க்கு ஒன்றும்
ஈயார் இருந்தென்ன போயென்ன காண் கச்சி ஏகம்பனே!
விழித்திருக்கும் நேரமெல்லாம் பொய் ஒன்றே உயிர் மூச்சாய் சொல்லிடுவர், நல்லவர்களைப் பொழுதுக்கும் தூற்றிக் கொண்டிருப்பர், சுமந்து பெற்ற தாயாரைத் திட்டிக் கொண்டிருப்பர், சூதும் வாதும் ஆயிரக்கணக்காய் செய்து கொண்டிருப்பர், எந்த உயர்ந்த சாத்திரங்களையும் கற்று உணராதிருப்பர், பிறருக்குத் தேவைப்படும் போதும் ஆபத்துக் காலத்திலும் ஓடிப்போய் உதவாதவர், நம்மையே அண்டி நிற்போருக்கு எதையும் கொடுக்காத கஞ்சனாக இருப்பர் இவர்கள் உயிரோடு இருந்தால் என்ன, போய்ச்சேர்ந்தால் என்ன கச்சி ஏகம்பனே!
நாயாய் பிறந்திடில் நல்வேட்டையாடி நயம்புரியும்
தாயார் வயிற்றில் நரராய்ப் பிறந்து பின் சம்பன்னராய்க்
காயா மரமும், வறளாங் குளமும், கல்லாவும் அன்ன
ஈயா மனிதரை ஏன் படைத்தாய் கச்சி ஏகம்பனே!
நாய் ஜென்மமாகப் பிறந்திருந்தாலும் வேட்டைக்குச் சென்றிருக்கலாம்; தாயார் வயிற்றில் பத்து மாதங்கள் குடியிருந்து பிள்ளையென்று பிறந்து, வாழ்க்கை முழுவதும் காய்க்காத மரத்தைப் போலவும், வறண்டு போன குளத்தைப் போலவும், அசையாத பாறை போலவும் இருக்கின்ற கஞ்ச மகா பிரபுக்களை ஏன் படைத்தாய் கச்சி ஏகம்பநாதனே!
(இன்னும் உண்டு)
இன்னம்பூரான்
மஹாகவி பாரதியார் புதுவை மாந்தோட்டம் ஒன்றில் அமர்ந்து ‘குயில் பாட்டு’பாடினார். அந்த தோட்டம் மறைந்து விட்டது. குயில் என்னமோ பறந்து விட்டது. பாரதியார் அமரராகி விட்டார். பாடல் தங்கிவிட்டது. மறையாது. நமதுநினைவலைகளும் எங்கெங்கோ சஞ்சாரம் செய்பவை.
அவை பேசத்தொடங்கி விட்டன.
அழகிய சோலை. மலர்க்கொடிகள். பூத்துக்குலுங்கும் செடிகள், காயும் கனியுமாக தாவரமயம். அமர்ந்திருந்த கவிஞருக்கு ஆனந்தமாக இருந்தது. ஒட்டுமாங்கனி தொங்கும் கைக்கெட்டிய கிளையில் ஒரு பஞ்சவர்ணக்கிளி வந்து அமர்ந்தது. கொஞ்சம் மெளனம். அது மெல்லிய குரலில் இசை பாடத் தொடங்கியது. அமரிக்கையாக அவர் கேட்டுக்கொண்டிருந்தார். சிறகுகள் அடித்துக்கொண்டன. தன்னழகை பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்த கிளியிடம் பேச்சுக்கொடுக்க ஆசை, கவிஞருக்கு. காத்திருந்தார்.
***
என்ன பார்க்கிறாய்?
உன் அழகு என்னை கட்டி இழுக்கிறது.
அதற்குத் தான் என்னை படைத்தார்.
நான் உன்னை ஆராதிக்கவேண்டும் என்று தான் விரும்பினார், இல்லையா?
பூஜை சாமக்கிரியைகள் எல்லாம் தயாரா?
அவள் தன் அழகுக்கு மெருகேற்றிக்கொண்டிருந்தாள்.
இவருக்கோ லாஹிரி ஏறிக்கொண்டிருந்தது.
பஞ்சவர்ணம்! உன்னை ஆராதித்து ஒரு கவிதை படைக்கப்போகிறேன்.
ஓ! அப்படியா! நான் லாவண்யா. என்னழகைப்பார்.
அவள் ஒய்யாரமாகத் தன் கழுத்தை ஒடித்துக்கொண்டாள்.
இசை இன்பவெள்ளமாயிற்று.
சற்றே பறந்து மற்றொரு கிளையில் அமர்ந்தாள்.
ஊம்! கவிதை எங்கே?
கவிஞர் கவிதை இயற்றலாம் என்று எதுகை, மோனை தேடும்போது…
அப்பனே! எனக்கு சந்தேகமாக இருக்கிறது.
உன் சொல்லணியில் என் இசை தொனிக்குமோ?
இல்லை, கண்ணே.
சரி, போகட்டும் என் பஞ்சவர்ணங்கள் அழகை வீசி அடிக்குமே. அது வருமோ?
எப்படிம்மா அது இயலும்?
அதெல்லாம் போகட்டும். நான் சிறகடித்து, இறகை விரித்து உயர உயர பறப்பேனே?
அதுவாவது வருமோ?
என்னால் முடியாத காரியம், கண்ணே. எந்த கவிஞனும் இவற்றை பற்றி எழுதலாம்.
சொல்லணியில் அவற்றை தத்ரூபமாக எப்படி புகுத்து அமைக்க இயலும்?
அப்படியானால் கவிதையில் நான் எப்படி இருக்கமுடியும்?
கேலியாக சிரிக்கிறாள்.
இல்லை அழகியே. உன் மேல் எனக்கு எத்தனை அன்பு தெரியுமா?
என்ன பேச்சு இது?
சொல்லணிக்கும் அன்புக்கும் என்ன சம்பந்தம்?
பஞ்சவர்ணம் பறந்தாள், உயர, உயர.
களைத்துப்போன கவிஞர் கவிதை மறந்தார்; வீடு திரும்பினார்.
மனைவி கேட்டாள்.
என்ன செய்தீர்? ஒளியும், களைப்பும் கலந்து உள்ளனவே.
அன்புடன் அழகை ஆராதித்தேன்.
எது பறந்தது?
எது மறைந்தது?
எது நிறைந்தது?
தெரியவில்லை.
***
எனக்கு எழுத வராது. ஒரு தாக்கம். ஹரிவம்சராய் ‘பச்சன்’ அவர்கள் எழுதிய 16 வரி கவிதை ஒன்றை படித்ததின் தாக்கம். மையக்கருத்து அவருடையது. தழுவல் என் பொறுப்பு. ஆம். அவர் அமிதா பச்சனின் தந்தை தான். அதற்கும் அவருடைய ‘அன்பு’ என்ற கவிதைக்கும் என்ன சம்பந்தம்?
சு.ரவி
வணக்கம், வழியநலம்
இம்மாதம் ஐந்தாம் தேதிமுதல் நவராத்திரி தொடங்குகிறது.
நாள்களும் கோள்களும் நலமருள வேண்டும்
அம்பாள் நவ வெண்பாவும், அன்னை அகிலாண்டேஸ்வரி எண்ணெய் வண்ண ஓவியமும் இணைப்பில்
பார்க்க, படிக்க, ரசிக்க…
அம்பாள் நவவெண்பா
இரவி,மதி, செவ்வாய், புதன், வெள்ளி, மந்தன்,
சுரகுருவும், சுற்றும் நிழலுருவாம்-அரவினிரு
கூறும் நலம்சேர்க்கத் தேவியவள் மீதுநயம்
ஊறும் கவிதை உரை.
குவலயம் யாவும் குளிர்விழி யாலே
சிவலயம் ஆக்கிச் சிலிர்ப்பாள் – அவளருளால்
சுற்றிவரும் கோள்கள் சுகமளிக்கும்; பாதமலர்
பற்றிவிடு பாரமிலை பார்!
கோள்களொரு நாலைந்தும் கோடி நலமருளத்
தாள்கள் பணிந்தேன் தயாபரீ!- நாளுமென்
நாவீணை மீட்டிக் கவிதை இசைபொழிவாய்
தேவீ, பரதேவ தே!
ஞானப்பால் உண்டசிசு பாடும் பதிகத்தால்
வானத்துக் கோள்கள் வணங்கினவே! -நானுமுன்
பிள்ளையடீ, பிச்சி! பிறகெனக்குக் கோளகளினால்
இல்லையடீ அச்சம் இனி!
மேருவா சம்செய்யும் மின்னற் கொடியாளைப்
பேரவா கொண்டு கவிபாடக் – காருவா
வெள்ளுவா ஆகும் விரிவானின் கோள்களெலாம்
உள்ளுவார்க் கென்றும் உறவு!
பெம்மானைப் பாடியவள் பேரண்டக் கோளையெலாம்
அம்மானை ஆடி அகமகிழ்வாள் – அம்மானை
எண்ணும் அடியாரை நட்பாய் நவகோளும்
நண்ணும், புரியும் நலம்.
கவிதா மயமாய்க் கனலும் மலரை
பவதா ரிணியைப் பணிவாய் – நவகோளும்
ராசியே தானாலும் ராஜயோ க்ம்கூட்டி
ஆசி அருளும் அறி!
நீள்வட்டப் பாதை நியதியொடு சுற்றிவரும்
கோளெட்டும், ஒன்றும் நலமருளத் – தாள்தொட்டேன்
தர்க்காதி சாத்திரங்கள் தேடி அறியவொணா
துர்க்கா பரமேஸ் வரீ!
மேடமுதல் மீனம் இடையிட்ட பன்னிரண்டு
வீடுலவும் கோள்கள் நலமருளும் -காடுலவும்
காபாலி மீதடங்காக் காதலுறும் கற்பகக்
பாபாதம் நீபணிந்தக் கால்.
வெற்றி கொடுப்பாள் வினைதீர்ப்பாள், கோளகளுமைச்
சுற்றிவரச் செய்வாள் சுகமளிப்பாள்- நெற்றித்
திலகம் இறைக்கும் திருவொளியால் இந்த
உலகம் புரக்கும் உமை.
சக்தி சக்திதாசன்
அன்பினியவர்களே !
இனிமையான வணக்கங்களுடன் உங்களுடன் மீண்டும் இணைகிறேன்.
சத்தியத்தை தன் வாழ்வாக்கி, தன் வாழ்வின் சோதனைகளைச் சாதனையாக்கிய உலகம் போற்றும் உன்னதத் தலைவர் மகாத்மா காந்தி அவர்களின் ஜயந்தித் தினத்தன்று இம்மடலை வரைந்து கொண்டிருக்கிறேன்.
எந்தவொரு நாட்டின் அதிகாரத்திலிருந்து தமது நாட்டை விடுவிக்க பாரதத் தந்தை காந்தி போராடினாரோ அந்த நாட்டின் ஒரு பிரஜையாக இன்று இம்மடலை வரைந்து கொண்டிருக்கிறேன்.
மகாத்மா காந்தி காட்டிய அஹிம்சை வழி இன்று உலகெல்லாம் ஒரு உன்னத வழியாகப் போற்றப்படுவது வெள்ளிடை மலையாகத் தெரியாது போனாலும் இந்நாட்டின் பல ஆங்கிலேய நண்பர்களுடன் பேசும் போது அவர்மீது அவர்கள் கொண்டிருக்கும் மதிப்பை உணர முடிகிறது.
இன்று உலகின் பல பாகங்களில்லும் பல வழிகளில் பலநாடுகளில் யுத்தங்கள் நிகழ்ந்து கொண்டுதானிருக்கின்றன. யுத்தங்களின் வழி அழிந்து கொண்டிருக்கும் உயிர்களின் அவலங்களைப் பார்க்கும் போதுதான் மகாத்மா காந்தி பயணித்த பாதையின் காரணம் புரிகிறது.
அவர் நாட்டின் விடுதலைக்காய் செய்த சேவை ஒருபுறமிருக்க அவரது சொந்த வாழ்க்கையின் எளிமை உலகுவாழ் மக்களுக்கே ஒரு எடுத்துக் காட்டாக அமைகிறது.
ஆனால் இன்று காந்தி காட்டியவழி இன்றைய காலகட்டத்தில் எத்தகைய வகையில் மக்களால் பார்க்கப்படுகிறது என்று சிந்தித்துப் பார்க்கும் போது விடை மிகவும் கலங்களாகத்தான் இருக்கிறது.
மகாத்மா காந்தி எனும் தனிமனிதனின் வாழ்க்கையை இந்தியச் சுதந்திரப் போராட்டம் எனும் நிகழ்விலிருந்து அந்நியப்படுத்திப் பார்க்க முடியாது.
ஆனால் வாழ்வில் அவர் கற்றுக்கொண்ட அனுபவப் பாடங்களே தென்னாபிரிக்காவில் வக்கீலாக இருந்த அவரை இந்தியச் சுதந்திரப் போராட்டப் பாதைக்குத் திருப்பியது.
அவரது வாழ்க்கைச் சுயசரிதமான சத்திய சோதனையிலிருந்து ஒவ்வொரு மனிதனும் எடுத்துக் கொள்ள வேண்டிய பல அரிய அனுபவப் பாடங்கள் உண்டு ஆனால் அதை எத்தனை பேர் இன்றைய கால கட்டத்தில் உள்வாங்கிக் கொள்கிறார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
அவசரமான இன்றைய உலக்த்திலே நாம் மனிதம் பெரியதோர் வலயத்தை விட்டு எமது இனம், எமது நாடு, எமது மொழி எனும் குறுகிய வலயத்தை வரித்துக் கொண்டுள்ளோமோ என்று எண்ணத் தோன்றுகிறது.
மொழி, கலை, கலாச்சாரம் என்பனவற்றைக் கைவிட்டு விட வேண்டும் என்பதல்ல எனது வாதம். என்ன மொழி பேசுபவராக இருந்தாலும், எந்த இனத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் அனைவரும் மனிதர் எனும் உணர்வு கொஞ்சம் கொஞ்சமாக மழுங்கிக் கொண்டு போகிறதோ என்று எண்ணத் தோன்றுகிறது.
ஈழத்தில் பிறந்து இங்கிலாந்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நான் இந்தியாவிற்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுத்த மகாத்மா காந்தி அவர்களுக்கு ஏன் புகழாரம் சாத்துகிறேன் எனும் பாணியில் முகநூலில் நான் எழுதிய பதிவிற்கு ஒரு நண்பர் குறிப்பெழுதியிருந்தது என்னை ஆச்சரியத்திலாழ்த்தியது.
உண்மை எங்கிருந்தாலும், நல்லவை எங்கு நடந்தாலும், அதை இனம், மொழி, நாடு எனும் எல்லைகளுக்குட்படுத்தாமல் ஏற்றுக் கொள்ளுவதே ஒரு மனிதனின் மனிதத்தன்மையான செய்கை என்பதே என் எண்ணம்.
கூட்டிக் கழித்துப் பெருக்கிப் பிரித்துப் பார்த்தால் மகாத்மா காந்தி அவர்களின் வாழ்க்கை எமக்குப் போதிப்பதும் இதுவேதான்.
ஈழத்தில் எமது வீட்டு வரவேற்பறையில் ஆளுயர மகாத்மா காந்தி அவர்களின் உருவப் படம் ஒன்றை என் தந்தை மாட்டி வைத்திருந்தார்.
சிறுவனாயிருந்த நான் அவரிடம் ஏன் இப்படம் இங்கு மாட்டியிருக்கிறீர்கள் என்று வினவும் போது” மனிதாபிமானத்தின் அடையாளம் இது ” என்றார் என் தந்தை.
அன்றைய இளம் பிராயத்தில் இக்கூற்றின் கனம் எனக்குப் புரியவில்லை ஆனால் இன்று வயோதிபத்தின் வாசலில் நிற்கும் எனக்கு அதன் உள்ளார்த்தம் தெளிவாகப் புரிகிறது.
இந்த காந்தி ஜயந்தி தினத்தன்று நான் வரையும் இம்மடல் கூட அம்மாமனிதனுக்கு ஒரு ஆராதனையாகவே கொள்கிறேன்.
அன்பு வழி நடப்போம், அனைவரையும் நேசிப்போம்
மீண்டும் அடுத்தமடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்
லண்டன்
http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan
குறத்தியின் பயணம்
வானுயர்ந்த மலை முகட்டில், கொண்ட
குணமுயர்ந்த கலைக் குறத்தி, வீசும்
மணமுயர்ந்த மலர் சேர்க்க, கனிந்த
மனமுவந்து முகிலிடையே நடந்து சென்றாள்! 98
முகில் கடந்து நடந்த தினால்,
முகத்தில் நீர் மலர்ந்து நிற்கிறதே,
“நீரு பூத்த” மலர் முகத்தாள், தேனின்
சாறு பூத்த மலரெடுக்கக் காடுதோறும் அலைந்தனளே! 99
குறத்தி மாதுளங்கனி சேகரித்தல்
தாமரை மலர்ந்தது போல், வெடித்த
மாதுளை பிளந்திருக்க, சிதறிதய முத்துக்கள்
ஆங்காங்கே தெறித்து, நீர்க் குமிழிக்குள்
பவளம்போல் நிலமெங்கும் நிறைந்தி ருக்கும்! 100
சிதறிய முத்துக்கள் பவளம்போல் படர்ந்திருக்க,
முத்துச் சரத்தில் தோய்ந்து நடந்து,
இரத்தச் சிவப்பில் காலடி கொண்டு,
எஞ்சிய முத்துக்களை கனியொடு பறித்தாள்! 101
பறித்த கனியின் முத்தைக் குறத்தி
பற்களினிடையே கொறித்துக் கடிக்க,
பாதம் போல வாயும் சிவந்து
பேரெழில் பூத்துச் செம்மை கொண்டாள்! 102
குறத்தி நாவல் பழம் சேகரித்தல்
மரம் விட்டு மரம் தாவும்,
பறக்கும் பல்லி போல் தமது,
கரங்களை விரித்துக் குரங்குகள் நாவல்
மரத்தின் உச்சிக் கிளைகளில் தாவின! 103
மந்தியின் பாரத்தால் மெல்லிய கிளைகள்,
முதிராத மூங்கிலாய் வளைந்து நிமிர,
முதிர்ந்த கனிகளோ குலுங்கிக் குதித்து,
மண்ணில் விழுந்து காத்துக் கிடந்தன! 104
நாவல் பழங்கண்ட குறத்தியின் மனதுக்குள்,
ஆவல் அளபெடுத்து ஆஅவல் ஆஅகிவிட,
ஏவல் செய்பவர்க்குச் சேவகம் செய்பவள்போல்,
பணிந்து குனிந்து பழங்களை எடுத்தாள்! 105
குன்றக்குடி அடிகள்
29. நல்லன எடுத்துக் கூறி நட்பினைத் தோற்றுவிப்பீர்!
இயற்கையின் நியதி ஒன்றாக வாழ்தல்; ஒருமை நலத்துடன் வாழ்தல். வேறுபட்டவெல்லாம் ஒன்றுபட்ட நிலையிலேயே உலகம் இயங்குகிறது, உலகியற்கையில் காணப்பெறும் வேறுபாடுகள் ஒருமை நிலைக்கு ஈர்க்கும் ஆற்றலுக்கு இசைந்த வேறுபாடுகளேயாம்.
மானுடம் கூடிவாழப் பிறந்தது. ஆனால் அது கூடி வாழ்ந்த காலம் எது? எங்கே என்ற விவரம் அறியப்புகின் விடை எளிதில் கிடைக்காது. இந்த உலகில் மானுடம் சேர்ந்து வாழ்ந்ததை விடக் கலகப்போர் செய்து கொண்டு அழிந்த செய்திகளே வரலாற்றுப் புத்தக ஏட்டில் ஆயிரக் கணக்கான பக்கங்களை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. ஏன் இந்த அவலம்? மொழி, சமயம் பெற்றுங்கூட ஒருமையைக் கட்டிக் காப்பாற்ற முடியவில்லை.
ஒருவரிடம் ஒருவர், இல்லாத ஒருவரைப் பற்றிக் குற்றங் குறைகளைக் கூறுதல், வெறுப்பை வளர்க்கும்; பகைமையை வளர்க்கும்; பிரிவை உண்டாக்கும். ‘மற்றொருவனைப் பற்றி உன்னிடம் ஒருவன் வாய் திறந்தால் நீ உன் காதைப் பொத்திக்கொள்; கேட்காதே!” என்றார் குவாரல்ஸ்.
“Scandal breeds hatred; hatred begets division”
– Quarles
ஒருவர் ஒருவருக்குச் செய்யக்கூடிய உதவி என்பது அவர் பலரோடு நட்பாக இருப்பதற்குரிய வாயில்களை அமைத்துத் தருவதேயாம். இருவருக்கிடையில் நட்பை உருவாக்கும் பணிக்கு ஈடான அறம் வேறொன்றும் இல்லை. சிவபெருமான், சேரமான் பெருமாளுக்கும், சுந்தரருக்கும் நட்புண்டாக்கிய வரலாற்றை அறிக. ஒருவருடைய சிறந்த அம்சங்களை எடுத்துக் கூறி அறிமுகப்படுத்தப் பழகுவதற்குரிய வாயில்களை உருவாக்க வேண்டும். நல்ல நட்பைத் தேடிக்கொடுத்து விட்டால்கூட, திருந்த வேண்டியவர் இயல்பாகவே திருந்திவிடுவார்.
ஆதலால், மகிழ்ச்சி நிறைந்த நட்புறவை உண்டாகி வளர்த்தலே அறம். இந்த இனிய அறத்தை அறிந்து செய்ய இயலாதார் குற்றங் குறைகளை எடுத்துக்கூறி நண்பர்களைப் பிரிப்பர்; சமூகத்தில் பிரிவினைகளை உண்டாக்குவர். இத்தகையோர் நம்மை நாடி வந்து வாய் திறந்தால் நமது காதைப் பொத்திக் கொள்வது நல்லது. புறங்கூறிப் பொய்த்து உயிர் வாழ்பவர்கள். வல்லவர்கள், நமக்கு நல்லன செய்வது போலக் கூறுவார்கள்; சாத்திர ஆதாரங்களுடன் எடுத்துக் கூறுவர். காற்று இடைப்புகாது பழகிய நட்பு உடையாரைக்கூடப் பிரித்து விடுவர். எனவே விழிப்புடன் இருத்தல் வேண்டும்.
உலகில் உயர்ந்தது நட்பே! உலகில் உயர்ந்த அறம் ஒன்றி நின்று பழகுதலே! ஒன்றுதலுக்கு ஈடான அறம் இல்லை! இந்த அறம் நிகழ்ந்தாலே சமுதாயத்தில் திருத்தங்களும்கூடத் தோன்றும்; தீமைகள் சாயும்; நன்மைகள் பெருகும்.
ஆதலால், ஒருவரைப்பற்றி நன்றாக மட்டும் பேசக் கற்றுக் கொள்க! ஒருவரைப் பற்றிப் பிறிதொருவரிடம் நல்லன எடுத்துக்கூறி நட்பினைத் தோற்றுவித்து வளர்க்க முயல்வீர்! இதுவே வாழும் வழி!
“பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்”
(குறள் – 187)
_________________________________
REF: http://www.tamilvu.org/library/nationalized/pdf/47.KUNDRAKUDIADIGALAR/VAZAKAINALAM.pdf
இது ஒரு நாட்டுடைமையாக்கப்பட்ட நூல், நாட்டுடைமையாக்கப்பட்டது நிதியாண்டு 2007-2008 ல்
மின்பதிப்பாக்க உதவி: தேமொழி

கரம்பிடித் தாளெனைக் காணோர் தெய்வம்
வரமென்னத் தகுமென்றன் வண்ணமயி லாள்;
அறம்வளர் நெஞ்சுடை யாளென தாவிக்
குரமனை யாள்திரு மகளனை யாள்;
யதுகுலத் தேயுதித் தாளென் றேவி
மதுகை டபர்தமை தொடைக்களித் தாள்;
வஞ்சகர் தமைவெறுப் பாளிவள் மட்டும்
நஞ்சிலா யெண்ணிலாப் பொய்யுரைப் பாள்;
கண்ணிலே மணிபோல் வாளிவ ளேயான்
பண்ணிய தவப்பயத் துணைவி யென்றன்
னெண்ணிலாத் துயரழித் தேயோர் காதற்
பண்ணிலே பணிந்தெனக் கருள் தருவாள்;
எண்ணிலாக் குறும்பிழைப் பாள்காண் பிள்ளை
தண்ணிலாப் போல்நகை யுதிர்த்திடு வாள்;
கண்ணினாற்க் காவியங் கள்குழை ப்பாள் முழு
எண்ணமும் நாட்பட அவள்பதம் தான்.
பந்தள வில்புது வெண்ணெய் கொடென்றே
மந்திப ழித்திடும் சேட்டிதஞ் செய்தாள்
முந்தைய நாள்கதை நம்புவ தாற்றேன்
அந்தமி லாநிலை தந்தனள் கூடி;
கண்மணி கண்ணனி வள்கரம் கொண்டதும்
நண்ணிய நன்மைகள் எண்ணவும் ஆற்றேன்
சின்னவன் என்றெனை எள்ளிய தறியேன்
மண்ணெனை பொன்னெனப் பண்ணினள் பைந்தொடி.
பண்டஞ் சிறியது யான்பகிர்ந் தாலும்
அண்டத் துண்மைக ளன்புடன் காட்டுவள்
கண்டறி யாதன காட்டுவள் கான்முனி
விண்டறி யாதன மெய்பல சொல்வாள்;
தின்னற் கரியபொ ருள்மருந் தாகிலும்
கன்னற் பாகினில் போல் – வேதாந்தம்
சின்னக் குழவிம திபுரிந் துய்திட
கண்ணனி வள்தந் தாளில் லறமதில்;
பண்ணிய புண்ணியம் யாதோ அறியேன்
திண்ணிய மேன்மகள் கண்ணனைப் பற்றிட;
கன்னற் றேமொழி காதலி யென்னைப்
பின்னற் பிறவிக ளின்னலிற் காத்தனள்;
என்னத வம்செய் தேன்யா னிவளை
வன்னமு டன்வாழ் வில்மணந்தி டகாண்;
மண்ணும்மு லைமணி பொன்னும் விரும்பிய
சின்னவ னென்னையும் சிந்தையில் மாற்றினள்;
கண்மணி யிவளைக் கைக்கொண்டது முதல்
பண்ணிய சீர்மைகள் திண்ணிய பலபல;
அன்றவள் பணிந்தனள் இன்றென் முறையாம்
இல்லறம் கண்ணனி வள்செய நல்லறம்;
கைப்பிடித்தாள் எனைக் காதலிற் கட்டினாள்
மெய்ப்பிடித் தேனிது காந்தா சம்மிதம்;
தைப்பிறந்தா லெழும் ஞாயிறு கண்ணனெம்
மைப்பிடித்தா ளிருள் மாயை மருண்டது;
+++++++++++++++++++++++++++++++
வாழ்க!
பின் குறிப்பு: காந்தா சம்மிதம் – உபதேசத்தில், வணங்குதற்கு உரிய குரு ரூபத்தில் வந்து உபதேசிப்பது ஒரு வகை (பிரபு சம்மிதம்). நண்பனாக வந்து உபதேசிப்பது இன்னொரு முறை (சுஹ்ருத் சம்மிதம்/மித்ர பாவம்). மனைவியாக/கணவனாக/காதலியாக/காதலனாக வந்து உபதேசிப்பது மேலும் ஒரு முறை (காந்தா சம்மிதம்/காந்தா பாவம்).
பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ
கட்டுரையின் பகுதி 4 -இல் கூறியதை நினைவில் கொள்வோம் :
சைவ சமயமும் அறிவியலும் இரு பெருங் கடல்கள். இவற்றுள் மூழ்கி முத்தெடுப்பது எளிதன்று. நம் ஆய்வைக் குறுகிய வட்டத்துக்குள் கொண்டுவந்தால் ஒழிய இது சாத்தியம் ஆகாது. எனவே நம் ஆய்வுப் பொருளாக அண்டம், பிண்டம் என்ற இரு பிரிவுகளை மட்டும் எடுத்துக்கொள்வோம். அண்டத்துள் பிண்டம் அடங்கும் ; பிண்டத்துள் அண்டம் அடங்கும். இதனை, சட்டமுனிஞானம் என்னும் சித்தர்
“அண்டத்தி லுள்ளதே பிண்டம்
பிண்டத்தி லுள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமும் ஒன்றே
அறிந்துதான் பார்க்கும் போதே” என்பார்.
திருமூலர் காலத்தில் இருந்து இன்றுவரை சைவப் பெரியார்கள் கருத்து இதுவே..ஒன்றை அறிந்தால் மற்றதை அறியலாம். இதனைத்தான் திருமூலர்,
“பிண்டத்துள் உற்ற பிழக்கடை வாசலை
அண்டத்துள் உற்று அடுத்தடுத் தேகிடில்
வண்டிச் சிக்கு மலர்க்குழல் மாதரார்
கண்டிச் சிக்குநற் காயமு மாமே” என்கிறார்.
அண்டம் என்ற பிரபஞ்சத்தின் பின்புற வாசலாகப் பிண்டம் என்ற உடம்பு இருக்கிறது. இப் பிண்டத்தை மீண்டும் மீண்டும் ஆய்ந்தால் – அதில் தியானித்தால் பூவின் தேனை வண்டு சுவைப்பது போல் இந்தக் காயம் என்பதன் வழியாகப் பிரபஞ்சத்தின் தேனை ருசிக்க (இரகசியத்தை அறிய) முடியும்.
பிண்டத்தை ஆராய்ந்தால் அண்டத்தின் செய்திகள் தெரியவரும்.
பிண்டம் என்பது நம் உடல். இதுதான் மையப் புள்ளி. இதற்கு உள்ளே இருப்பது பிண்டம் இதற்கு வெளியே இருப்பது அண்டம். நம் உடலுக்கும் (நமக்கு வெளியே இருக்கும்) அண்டத்துக்கும் ஏதாவது ஒப்புமை, தொடர்பு … இருக்குமா? இருக்க முடியுமா! இருக்கிறது என்று அறுதி இட்டுக் கூறுகிறது (அக்காலச்) சைவ சமயம். இக்கால அறிவியல் இது பற்றி என்ன சொல்கிறது? நீங்களே பாருங்கள் :
– அளவிடற்கரிய அண்டம் (இது பற்றிப் பின்னர் பார்ப்போம்) மூடிய வடிவு (closed form) உடையது.. நம் உடலும் அப்படியே!!
– கோடி கோடிக் கணக்கான விண்மீன்கள் அண்டத்தில் உண்டு. உடலில் கோடி கோடிக் கணக்கான உயிரணுக்கள் (cells) உள்ளன (ஏறக்குறைய 100 டிரில்லியன்)
– அண்டம் சதா அசைந்துகொண்டே இருக்கிறது … மூலக்கூறுகள் அளவிலும் அணுத்துகள்கள் அளவிலும் (in motion on a molecular, cellular and atomic scale). உடலும் அப்படியே .
– அண்டம் வளர்ந்துகொண்டே, விரிவடைந்து கொண்டே போகிறது.கருவிலே உருவான நாள்தொட்டு இறக்கும் வரை உடலும் வளர்கிறது, விரிவடைந்துகொண்டே போகிறது.
– அண்டத்துக்கு ஆயிரம் ஆயிரம் (கருந்) துளைகள் (black-holes) ; உடலுக்கு? எலும்பு, தோல்… முதலியவற்றில் எத்தனை எத்தனை துளைகள்! குறிப்பாக ஒன்பது ஓட்டைகள் என்று சித்தர்கள் கேலி செய்வார்கள். (இஃது ‘ஓட்டை வீடு ஒன்பது வாயில்’ என்று கண்ணதாசன் பாடுவார்).
– அண்டம் முழுக்க மின்துடிப்புகள் (electrical implulses) ;உடலிலும் அப்படித்தானே!
– அண்டத்தில் உள்ள கருந்துளைகள் பொருளையும் ஆற்றலையும் (matter & energy) விழுங்கிக்கொண்டே உள்ளன ; உடலும் பொருளை (உணவை) யும் ஆற்றலையும் விழுங்கிக்கொண்டே இருக்கின்றது.
– ஆற்றல் படுகைகளால் (interwoven in energy layers called the fabric of space ) நெய்யப்பட்டுள்ளது அண்டம். ; உடலோ என்பு, தசைகள் நரம்புகளால்
நெய்யப்பட்டிருக்கின்றது.
– அண்டத்தில் 70 விழுக்காடு நீரணுக்களே (hydrogen) ; நம் உடலில் அதே விழுக்காடு உள்ள நீர் (அணுக்கள்) உண்டு!
– ஒருமையில் இருந்து பல்கிப் பெருகி உருவானது அண்டம் ; ஒற்றை உயிரணுவில் இருந்து உருவானதுதானே உடலும் .
எனவே நாமும் திருமூலரைப் பின் பற்றி முதலில் பிண்டத்தைப் பார்ப்போம்.
பிண்டம் என்பதற்கு ‘உடல்’, ‘கருப்பம்’, ‘சோறு’ என்று பொருள் தருகிறது நா.கதிரைவேற்பிள்ளை தொகுத்த தமிழ் அகராதி. இந்தப் பிண்டம், இந்த உடல் இந்தக் கருப்பம் (கரு) எப்படி உருவாகிறது? இதற்கு உரிய அறிவியல் விடையை, விளக்கத்தை அறியாதவர்களே அதிகம் பேர். கரு உருவாகும் அற்புதத்தை, வித்தையை அறியவேண்டுமானால் அறிவியல் துறைகள் பலவற்றின் அடிப்படை அறிவு மிகத் தேவை! அறிவியல் படித்தவர்களுக்கு இவை தெரிந்திருக்கும். மற்றவர்களுக்கு? அந்த மற்றவர்களுக்காக இங்கே அடிப்படை விளக்கங்கள் சில தரப்படுகின்றன.ஏற்கனவே அறிந்தவர்கள் இப்பகுதிகளை விடுத்து மேலே செல்லலாம். சரி, தேவைப்படும் அறிவியல் துறைகள் எவை? உயிரியல் (biology),சினையியல் (embriology), மகப்பேற்றியல் (Obstetrics.)…போன்றவை. தேவையான அளவு மட்டுமே இவை பற்றிய தகவல்கள் இங்கே தரப்படுகின்றன.
பருப்பொருள்களுக்கு அடிப்படையாக அமைவன அணுக்கள் ; உயிர்ப் பொருள்களுக்கு அடிப்படை : செல்கள். உயிரணுக்கள் எனத் தமிழில் சொல்லலாம். மனித உடம்பில் 100 trillion (10 to the power of 18=1018 = 1,000,000,000,000,000,000 அதாவது ஒன்றுக்குப் பிறகு 18 சுண்ணங்கள் இட்டு எழுதவேண்டும்) உயிரணுக்கள் (செல்கள்) உண்டாம்.
பல வகை உயிரணுக்கள் இருக்கின்றன. ஒவ்வோர் உயிரணுவும் முக்கியமான மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது.
உயிரணு மென்சவ்வு (Cell Membrane) – வெளியுறை
குழியுருவு (Cytoplasm) – பாய்பொருள்
கரு – (nucleus) – உயிரணுவின் கட்டுப்பாட்டு மையம். (மரபுத்தகவல்கள் அடங்கியுள்ள பகுதி).
பல வகை உயிரணுக்கள் இருக்கின்றன. உயிரணு ஒவ்வொன்றும் வெவ்வேறு தொழில் புரிகின்றன. தசைத் திசுக்களை ஒருவகை உயிரணு உருவாக்கினால் வேறொரு வகை உயிரணுக்கள் மூளைத் திசுக்களை உருவாக்கும் ; எனவே என்புத் தோல் போர்த்த இவ்வுடம்பின் நரம்பு, இரத்தம், சதை, உள்ளுறுப்புகள்… என ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை உயிரணுவால் உருவாக்கப்பட்டவையே என அறிக! இவை யாவற்றிலிருந்தும் வேறுபட்டு மாறுபட்டு இருப்பவை இனப்பெருக்கத்துக்கான செல்கள். இவற்றை ஆங்கிலத்தில் ‘gametes’ என்பர். ஆணில் உள்ள இந்தச் செல், விந்து (sperm, spermatozoa) எனப்படும் ; பெண்ணில் உள்ள இந்த இனப்பெருக்கச் செல்லுக்குச் சினை அல்லது ‘முட்டை (ova, ovum, oozite) என்று பெயர். ஆணும் பெண்ணும் கலவியில் ஈடுபடும்போது இவ்விரண்டு செல்களும் தம்முள் இணைந்தால் ‘கரு’ உருவாகும். இந்தக் கருவை ஆங்கிலத்தில் ‘zygote’ என்று அழைப்பர். இவ்விரண்டு செல்களுக்கும் ஏனைய உயிரணுக்களுக்கும் பெருத்த வேறுபாடு உண்டு என மேலே பார்த்தோம். அப்படி என்ன பெருத்த வேறுபாடு, மாறுபாடு?
எல்லாச் செல்களுக்கு உள்ளும் குரோமோசோம் (chromosomes) எனப்படும் நிறவணுக்கள் உண்டு. இவை செல்லின் நடுக் கருப்பகுதியில் (nucleus) பொதிந்து வைக்கப்பட்டிருக்கும். (இக் குரோசோம்களின் உள்ளே ‘genes’ – தமிழில் ‘மரபணுக்கள்’ உள்ளன. நம்மைப் பற்றிய தவல்கள் – நம் நடை, குண நலன்கள், பாவனை, பழக்க வழக்கங்கள்…- அடங்கிய பெட்டகம் இவை.)
நிறவணுக்களில் இரண்டு வகை உண்டு : ஒன்று X வடிவு உடையது ; இது பெண்மை ; மற்றது y உருவில் இருக்கும் ; இஃது ஆண்மை. ஒவ்வொரு செல்லுக்கு உள்ளும் நிறவணு இணைகள் 23 ஆக மொத்தம் 46 குரோசொம்கள் இருக்கும். எல்லாச் செல்களுக்கும் இது பொருந்தும். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் 22 இணைகளின் குரோசொம்கள் ஒரே மாதிரிதான் ; இவற்றை ‘autosommes’ என்பர். 23 -ஆவதாக இருக்கும்.குரோமோசொம்தான் பால் நிர்ணயிக்கும் குரோமோசோம் (sex chromosome) ஆகும். இஃதில் உள்ள இரண்டு குரோசோம்களில் இரண்டுமே XX ஆக இருப்பின் அதுதான் பெண் ஆகும் ; மாறாக, XY ஆக இருந்தால் அஃது ஆணாகும்.
பெண்ணின் சினை (முட்டை)க்குள் உள்ள 23 குரோமொசொம்களோடு ஆணின் விந்துவில் உள்ள 23 குரோமொசொம்கள் இணையும் போது செல் உருவாகத் தேவையான 46 குரோமொசொம்கள் எண்ணிக்கை நிறைவாகின்றது.. செல்லும் முழுமையாக உருவாகிறது. பின்னர் கருவாகிறது.
ஆணின் பருவ காலத்தில் குமரப் பருவத்தில் உருவாகத் தொடங்கும் விந்தணுக்கள்
கிழப் பருவம் வரை கூடத் தொடருகிறது.ஆண் தன் வாழ் நாளில் பலப் பல கோடி விந்தணுக்களை உருவாக்குகிறான். ஆனால் பெண்ணுக்கு இப்படி இல்லை!
ஒன்று முதல் இரண்டு மில்லியன் முட்டைகளோடு பெண் பிறக்கிறாள். காலம் செல்லச் செல்ல முட்டைகளை இழக்கிறாள்! பூப்பெய்தும் போது அவளிடம் இருக்கும் முட்டைகள் நாலு லட்சம்தான். பூப்புப் புறப்பாட்டில் இருந்து மூப்படைந்து மாதப் போக்கு நிற்கும் வரை மாதம் தோறும் ஆயிரம் முட்டைகளை அவள் இழக்கிறாள். இந்த ஆயிரம் முட்டைகளில் ஒன்றுதான் முதிர்ச்சி அடைந்து முழு முட்டை ஆகிறது. சூல் பையில் இருந்து வெளி வரும் இந்த முட்டையை பலோப்பியன் குழாய் வரவேற்கிறது.இந்தச் சமயத்தில் கலவி நேர்ந்தால் கருத் தரிக்கும். இல்லையானால் அந்த முட்டை சிதைவுற்று வெளியேற்றப்படும். இதனைத்தான் மாதப் போக்கு என்கின்றனர். ஆண்களிடம் பல கோடி விந்தணுக்களை உருவாக்கும் இயற்கை பெண்களுக்கு மட்டும் ஓர வஞ்சனை செய்வது ஏன்? இந்தக் கேள்விக்கு விடை காண்பவர்களுக்கு நோபல் பரிசு காத்திருக்கிறது.
முட்டையில் X என்ற ஒற்றை நிறவணு மட்டுமே இருக்கும். விந்தணுவிலோ X அல்லது Y என்று ஒற்றையாகவே நிறவணு இருக்கும். முட்டையில் உள்ள X உடன் விந்தணுவில் இருந்துவரும் X நிறவணு சேர்ந்தால், உருவாகும் கருவில் எல்லா நிறவணுக்களும் XX ஆக அமைந்து பெண் குழந்தை உருவாகும்.; அப்படி இல்லாமல் Y சேர்ந்தால் XY என ஆகி அது ஆணாக வளரும்.
எனவே குழந்தை ஆணா பெண்ணா என நிர்ணயிப்பது ஆணில் உள்ள குரோமோசோமே தவிரப் பெண் இல்லை. இதை உணராத மூட ஆண்கள், தம் மனைவியர் பெண் பிள்ளை பெறும் போது அவர்களை இழித்தும் பழித்தும் பேசுவதும் வதைப்பதும் அவர்கள் மனத்தைச் சிதைப்பதும் எவ்வளவு கொடுமை! X நிறவணுதான் முழுமையானது ; ஆகவே முழுக்க முழுக்க X நிறவணுவால் உருவான பெண்ணே முழுமையான படைப்பு ஆகிறாள். ஆண்தான் அரைகுறை படைப்பு. அறிவியல் புகட்டும் அருமையான பாடம் இது. ஆண்கள் மட்டும் இதனை முழுமையாக உணர்ந்து முழு மனத்துடன் ஏற்றுக்கொண்டால் பெண்களுக்கு இழைக்கப்படும் வன்கொடுமை குறையும் ; நாளடைவில் முற்றாக மறையும்.
இனி அடுத்த கட்டத்தைக் காண்போம் : பருவம் அடைந்த பெண் மாதம் தோறும் ஒரே ஒரு முட்டையை உருவாக்குகிறாள். கருப்பையின் இரு புறமும் கைகளை விரித்தால் போல் குழாய்கள் இரண்டு உள்ளன. இவற்றைப் பலோப்பியன் குழாய்கள் என்பர் (Fallopian tubes). இவற்றின் இறுதியில் சூலகங்கள் உள்ளன. முட்டை உருவாவது இங்கேதான். சூலகத்தில் உருவாகி முதிர்ச்சி பெறும் முட்டை, பலோப்பியன் குழாய் ஓரம் (விந்தணு வரவு நோக்கிக் காத்து) நிற்கும்,
வாயிற் படியருகே கணவன் வரவுக்குக் காத்திருக்கும் மனைவி போல. அந்த நேரத்தில் கலவி ஏற்படுமானால் என்ன நேரும்?
ஆண் வெளிப்படுத்தும் விந்து – நீர்மத்தில் (seminal fluid) நீச்சல் அடித்தபடி, வாலாட்டியபடி, ஆர்வமுடன் ஓடிவரும் பல்லாயிரக் கணக்கான விந்தணுக்கள் பெண் உறுப்பு வழியாகக் ‘கடை திறப்பு’ப் பாடியபடி, பாய்ந்தோடி முட்டையைத் தேடி வரும், கோட்டையை முற்றுகை இடும் போர் வீரர்களைப் போல. உண்மையிலேயே பொருத்தமான உவமை இது. பல்லாயிரக் கணக்கான விந்தணுக்கள் படைஎடுத்தாலும் முட்டையை நெருங்குபவை மொத்தமே 50, 60 விந்தணுக்கள் மட்டுமே. மற்றவை ? போரில் புறங்கொடா வீரர்களாய் மடிந்து போகும்.
விசித்திரக் கோட்டை இது! இதற்கு வாயில் ஏதும் இல்லை! முட்டையை நெருங்கிய விந்தணுக்கள் எல்லாமே உள்ளே புக முடியாதபடி முட்டையின் (கோட்டைச்) சுவர் காத்து நிற்கும். விந்தணுவின் தலைப் பகுதியில் வேதியல் பொருள் ஒன்று உள்ளது, (nuclear war-head ஏந்திய இராக்கெட் போல). இப்பொருள் கோட்டைச் சுவற்றில் துளை இட்டு வழி செய்து தரும். இதன் வழியாக ஏதாவது ஒரு விந்தணு மட்டுமே வெற்றி வீரனாய் உள்ளே நுழையும். அதன்பின், எந்த விந்துவும் உள்ளே புகமுடியாதபடிக் கோட்டைச் சுவர் மாறிவிடும். எத்தனை அற்புதமான, நுட்பமான கோட்டை இது!
இவ்வளவு நேரம், இவ்வளவு தூரம், விந்தணு வீரனை உந்தித்தள்ளி வர உதவிய வால் வெட்டுப்படும். உள்ளே நுழைந்த விந்தணுவில் உள்ள செல் ஒன்று ; முட்டையில் இருக்கும் செல் மற்றொன்று ; இவை இரண்டுமே நிறவணுக்களின் எண்ணிக்கை நிறைவடையாதவை. இவை இரண்டும் தம்முள் கலக்கின்றன. ஆண் விந்தணு தாங்கி வந்த X அல்லது Y நிறவணு முட்டைச் செல்லில் உள்ள X நிறவணுவுடன் இணையும் போது 23+23 =46 என்ற எண்ணிக்கை நிறைவாகிறது. இந்தக் கலப்பினால் ஒரே செல் உருவாகிறது.
இந்த ஒரு செல் இரண்டாகப் பிரிகிறது ; பிறகு அவை நாலாக , எட்டாக, பதினாறாக , முப்பத்திரண்டாக …. பெருகுகின்றன . அதாவது 1>2>4>16>32>64….. இந்த நிலையில் அது கருவாக மலருகிறது. அதன் உள்ளே புதிய உயிர் துளிர்க்கிறது. (கவனிக்க : இதுவரை இருந்த முட்டைக்கு உயிர் கிடையாது! அஃது உயிர் இல்லாதது! ஆகவே அது நகர இயலாது!) இப்படி உருவான கரு, உயிர் பெற்றிருப்பதால் மெல்ல நகரும் ; பெருகிக்கொண்டே நகரும் அல்லது நகர்ந்துகொண்டே பெருகும். இப்படி நகர்ந்து நகர்ந்து வந்து கருக் குழியில் (கருப் பையில்) விழும். அப்பையின் சுவற்றில் ஒட்டிக்கொள்ளும். அக்கருவைச் சுற்றிப் பனிக்குடம் உருவாகத் தொப்புள் கொடி பிடிக்கத் தொடங்கும் அந்தக் கரு, வளர்ச்சி அடையத் தொடங்குகிறது. முதுகெலும்பு, கை கால்கள், மூளை, இதயம்… என உறுப்புகள் உருவாகி வளர முழுக் குழந்தையாக வளர்ச்சி பெற்று வளர்ந்து… குழந்தையாக வந்து விழுகிறது. பிறந்து அழுகிறது!. கருவாக உருவாகிக் குழந்தையாக உருமாறி வந்து பிறப்பதன் வித்தை, விந்தை இதுதான் என இன்றைய அறிவியல் விளக்குகிறது.
இக்கால அறிவியல் விளக்கும் இந்த வித்தையை, விந்தையை அக்காலத் திருமூலர் எப்படி விளக்குகிறார் ?
அடுத்த கட்டுரையில் படிக்கத் தவறாதீர்கள்!
சு. ரவி
வணக்கம்,வாழியநலம்
அண்ணல் காந்திஜியின் ஜயந்திக்கான பகிர்வு.
தியானநிலையில் அமர்ந்திருக்கும் காந்திஜியின் இந்த ஓவியத்தை வரைந்ததும், மேலே அவருக்குப் பிடித்தமான “ரகுபதி ராகவ ராஜாராம்” பாடல் வரிகளை எழுதும் போது என்னை அறியாமல் ஏனோ அப்பாடலின் இரண்டாம் வரியான் “ஈஸ்வர அல்லா தேரே நாம்” என்ற வரிகளை எழுதிக் கையொப்ப்ம் இட்டு வரைந்த தேதியைப் பதிவு செய்தேன்..
என் மனைவி வஸந்தியிடம் அதைக்காட்டிய போது அவள் சுட்டிக் காட்டிய தேதிப் பொருத்தம் கண்டு வியந்தேன்.
ஆம், வரைந்த தேதி DEC 6th…
சு.ரவி
பார்க்க,ரசிக்க…
தனுசு
தடி ஊன்றிய கிழவன்
எங்கள் பாரதத்துப் பெருங்கிழவன்
சுதந்திரப்
பயிர் செழிக்க
பாடுபட்ட ஒப்பற்ற உழவன்
சாந்தியம் என்பது
இவனது கொள்கை
உலகம்
காந்தியம் என சொல்லும்
இவனது வாக்கை
இவன்
வெடி தூக்கிய கூட்டத்தை
வடிகட்டிப் படியவைத்து
அஹிம்சையில் கான் தீ என்ற காந்தி.
அவன் பெயர் உச்சரித்தால்
கிடைக்குது சாந்தி.
அரை ஆடையும்
பொக்கை வாயும்
இவன் கவர்ச்சியின் சின்னம்
சைவம் தின்ற
சிங்கம் என்பது
இவனைப்பற்றிய உலகத்தின் எண்ணம்
இவனின்
தடி கண்டு
ஓடி ஒளிந்தான் எதிரி
வெடிகுண்டு மார் துளைத்தும்
இவன் அஹிம்சையைப் போடவில்லை உதறி
ஐயன் இவன்
அவதரித்த நன்னாள் இன்று
அப்பன் இவனே
என்றழைக்கும்
ஒப்பற்ற பாரதம்
என்றென்றும் ஒன்று.
இலந்தை ராமசாமி அவர்கள் சிறந்த தமிழ்ப் புலவர். அருமையான கவிஞர். அவருடைய “பஜகோவிந்தம்” தமிழாக்கம் படிக்க படிக்க இனிக்கும். அதிலிருந்து நான்கு பத்திகளுக்கு நான் இசை அமைத்துப் பாடியிருக்கிறேன். கேட்டு மகிழுங்கள்!
அன்புடன்,
ஆர்.எஸ்.மணி
(கேம்ப்ரிட்ஜ், ஆன்டேரியோ, கனடா)
“ துதி கோவிந்தனை!”
(தமிழில் “பஜகோவிந்தம்”)
கவிதை: இலந்தை ராமசாமி
இசையமைத்துப் பாடியவர்: ஆர்.எஸ்.மணி
————————————————————————–
Youtube link:
http://www.youtube.com/watch?v=XnwYVibKkCc
துதி கோவிந்தனை! துதி கோவிந்தனை!
துதி கோவிந்தனை! – அட மூடா!
எதிர்நின்று யமன் அழைத்திடும் போது
இலக்கணக் கல்வி காப்பாற்றாது! (துதி கோவிந்தனை)
மூடனே விடுவாய் பணம் கொள்ளும் தாகம்
மூலம் மனத்தில் உணர்தல் விவேகம்
பாடு பட்டுழைத்து கிடைப்பதை உண்டு
பாங்குடன் வாழ்க நீ நிம்மதி கொண்டு (துதி கோவிந்தனை)
தாமரை இலைமேல் தண்ணீர் திவலை
சஞ்சலம் வாழ்க்கை என்றும் கவலை
சேமக் குறைவு, நோய் நொடி கலகம்
சிந்தை மயக்கம், இதுதான் உலகம்! (துதி கோவிந்தனை)
யார் உன் மனைவி? யார் உன் பிள்ளை?
ஆஹா வாழ்க்கை, விசித்திரக் கொள்ளை!
யார் உன் முன்னோர்? ஊரும் எங்கே?
அறிவாய் தம்பி, உண்மை இங்கே! (துதி கோவிந்தனை)
—————————————————————————————————————
தீனா வேணு
உண்டு ,உண்டு !
தெய்வம் உண்டு என்றே கூறிடுவேன் ,
இல்லை ,இல்லை ,
தெய்வம் இல்லை ,என்பது இல்லை என்பேன் ,
உழைப்பாளியின் வியர்வை உலர்த்தும் ,
காற்றில் தெய்வம் உண்டென்பேன் ,
உயிர் வழ நீர் சுரக்கும் ,கரும் முகிலில் தெய்வம் கண்டேன்
இருள் கிழித்து ஒளி வீசும் கதிரவனை தெய்வம் என்றே
கைகூப்பி
வணங்கிடுவேன் ,
நெற்கதிரை வளரச் செய்த நல் பூமிதனில் தெய்வம் கண்டேன் ,,
பனி படர்ந்த சோலையில் ,சுவையான கனி தந்து பசிதீர்த்த,
இயற்கை வளத்தில் இறைவன் கண்டேன் ,அழுகின்ற
மழலைக்கு பாலூட்டும் ,தாயவளின் பாசத்தில் உணர்ந்தேன்
தெய்வத்தை,,
பொருள் இல்லா ஏழைகளுக்கு பொருள் தந்து உதவுகின்ற அன்பு
கரங்களில் தெய்வம் கண்டேன்
தனக்கென்று வாழாத பிறருக்காக வாழுகின்ற ,
களங்கம் இல்லாத ,உள்ளம் அதை தெய்வம் வாழுகின்ற
ஆலயம் என்றே ,வணங்கிடுவேன் ,,,
உண்டு, உண்டு ,
தெய்வம் உண்டப்பா …..