Featuredஇலக்கியம்கட்டுரைகள்

பட்டினத்தடிகளின் பாடல்கள் – 2ஆம் பகுதி

தஞ்​சை வெ. கோபாலன்

கச்சி திருஏகம்பமாலை
(எளிமையான சில பாடல்கள்)

கட்டி அணைத்திடும் பெண்டீரும் மக்களும் காலத்தச்சன்
வெட்டி முறிக்கும் மரம்போல் சரீரத்தை வீழ்த்திவிட்டால்
கொட்டி முழக்கி அழுவார் மயானம் குறுகி அப்பால்
எட்டி அடிவைப்பரோ இறைவா கச்சி ஏகம்பனே!

காலம் வந்ததும் உயிரைப் பறித்திடும் காலன் வந்து நம் உயிரை எடுத்துக் கொண்டு, உடலை வெட்டி சாய்த்த மரம்போல வீழ்த்தும்போது, தாலிகட்டிய மனைவியும், பிள்ளைகளும் ஆ, ஊ என்று முழக்கமிட்டு அழுவார், இடுகாட்டுக்கு வந்து ஈமக்கிரியை செய்வதன்றி நம்கூட மேலும் ஒரு அடி எடுத்து வைப்பரோ கச்சி நகர் வாழ் ஏகம்பநாதனே!

பொல்லாதவன் நெறி நில்லாதவன் ஐம்புலன்கள் தமை
வெல்லாதவன் கல்வி கல்லாதவன் மெய்யடியவர் பால்
செல்லாதவன் உண்மை சொல்லாதவன் நின் திருவடிக்கு அன்பு
இல்லாதவன் மண்ணில் ஏன் பிறந்தேன் கச்சி ஏகம்பனே!

நான் மிகப் பொல்லாதவன், நன்னெறிகளைக் கைக்கொண்டு வாழாதவன், புலன்களை வெல்லாமல் அவை போன போக்கில் போய் அழிந்தவன், கல்வி பயிலாதவன், மெய் அடியார்களைக் கண்டு வணங்காதவன், உண்மை பேசாதவன், இறைவா உன் திருவடியைப் பணியாதன் அப்படிப்பட்டவனாகிய நான் ஏன் இந்த மண்ணில் வந்து பிறந்தேன் கச்சி ஏகம்பநாதரே!

பிறக்கும் பொழுது கொடுவந்ததில்லை; பிறந்து மண்மேல்
இறக்கும் பொழுது கொடுபோவதில்லை; இடை நடுவில்
குறிக்கும் இச்செல்வம் சிவன் தந்ததென்று கொடுக்கறியாது
இறக்கும் *குலாமருக்கு என் சொல்வேன் கச்சி ஏகம்பனே! *(குலாமர்=கீழ்மக்கள்)

பிறந்தபோது எதையும் இந்த பூமிக்குக் கொண்டுவந்ததில்லை; இந்த பூமியில் வாழ்ந்து முடிந்த பின் போகும்போது எதையும் கொண்டு போகப்போவதுமில்லை; இடையில் கிடைத்த இந்த செல்வங்கள் எல்லாம் இறைவன் தந்தது என்று தானும் அனுபவித்துப் பிறருக்கும் தந்து அறவாழ்வு வாழாத கீழ்மக்களுக்கு நான் என்ன சொல்வேன் காஞ்சி ஏகம்பரநாதனே!

அன்ன விசாரம் அதுவே விசாரம்; அது ஒழிந்தால்
சொர்ண விசாரம் தொலையா விசாரம்; நற்றோகையாரைப்
பன்ன விசாரம், பலகால் விசாரம் இப்பாவி நெஞ்சுக்கு
என்ன விசாரம் வைத்தாய் இறைவா கச்சி ஏகம்பனே!

தினமும் சோற்றுக் கவலையே பெருங்கவலை, அதுதான் ஒரே கவலை. அது இல்லையென்றால் தங்கம் வாங்க வேண்டுமென்கிற கவலை அது முடிவில்லா கவலை, அழகிய பெண்களைக் கவரவேண்டுமெ என்கிற கவலை, பல நாளும் இந்தக் கவலை, இவை தவிர இந்தப் பாவிக்கு என்ன கவலை வைத்தாய் இறைவா காஞ்சி வாழ் ஏகாம்பரநாதனே!

கல்லாப் பிழையும் கருதாப் பிழையும் கசிந்துருகி
நில்லாப் பிழையும், நினையாப் பிழையும் நின் அஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையும் துதியாப் பிழையும் தொழாப் பிழையும்
எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சி ஏகம்பனே!

செய்துவிட்ட தவறுகள்தான் எத்தனை? படிக்காத தவறு, நல்ல சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளாத தவறு, இறைவனை நினைந்து கசிந்துருகி வணங்காத தவறு, அவனை நினைக்காத தவறு, ஐயனின் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதாத தவறு, போற்றாத தவறு, வணங்காத தவறு இவை எல்லா தவறுகளையும் ஐயனே கச்சி ஏகம்பனே பொருத்தருள்வாய்!

காதென்று மூக்கென்று கண்ணென்று காட்டி என் கண்ணெதிரே
மாதென்று சொல்லி வரும் மாயைதன்னை *மறலி விட்ட (*மறலி=காலன்)
தூதென்று எண்ணாமல் சுகமென்று நாடும் இத்துர்புத்தியை
ஏதென்று எடுத்துரைப்பேன் இறைவா கச்சி ஏகம்பனே!

மாயை என்று உணராமல் எதிரில் வரும் காதல் மடமாதரை பல்விதமாகக் கொஞ்சி மகிழ்ந்து வந்ததைத் தவிர, அது எமன் நமக்கு அனுப்பியுள்ள தூது என்பதை நினைத்துப் பார்க்காமல் இதுவே சுகம் என்று கண்டதே காட்சியாய், கொண்டதே கோலமாய் வாழ்ந்த இந்த அறியாமையை என்னவென்று சொல்வேன் இறைவா கச்சி ஏகம்பனே!

ஊரும் சதமல்ல, உற்றார் சதமல்ல, உற்றுப் பெற்ற
பேரும் சதமல்ல, பெண்டிர் சதமல்ல, பிள்ளைகளும்
சீரும் சதமல்ல, செல்வம் சதமல்ல தேசத்திலே
யாரும் சதமல்ல நின்றாள் சதம் கச்சி ஏகம்பனே!

வாழும் இந்த ஊர், சொந்தம் கொண்டாடுகின்ற உற்றார் உறவினர், கடினமாக உழைத்து வாங்கிய நற்பெயர், மனைவி மக்கள், ஞானம், செல்வம் இவை எதுவும் நிரந்தரமானதல்ல, நம்மைச் சுற்றி வாழுகின்ற எதுவும் எவரும் நிரந்தரமானவர்கள் அல்ல, உன்னுடைய இரு தாமரைப் பாதங்கள் மட்டுமே நிரந்தரம் கச்சி ஏகம்பனே.

பொருள் உடையோரைச் செயலினும், வீரரைப் போர்க்களத்தும்,
தெருள்* உடையோரை முகத்தினும், தேர்ந்து தெளிவது போல் (*தெருள்=ஞானம்)
அருள் உடையோரைத் தவத்தில், குணத்தில், அருளில், அன்பில்,
இருள் அறு சொல்லினும் காணத்தகும் கச்சி ஏகம்பனே!

செல்வந்தனாக இருந்தால் அவனுடைய நற்செயல்களாலும், வீரனாக இருந்தால் போர்க்களத்திலும், நல்ல தெளிந்த ஞானமுடையவனாக இருந்தால் அவனுடைய முகத்திலும், பார்த்துத் தெரிந்து கொள்ள முடிவது போல, இறைவன் அருள் பெற்றவர்களை அவர்களுடைய தவத்திலும், குணத்திலும், அருளிலும், அன்பிலும், வஞ்சகமில்லா சொல்லிலும் பார்க்க முடியும் கச்சி ஏகம்பனே.

வாதுக்குச் சண்டைக்குப் போவார் வருவார், வழக்குரைப்பார்
தீதுக்கு உதவியும் செய்திடுவார், தினம் தேடி ஒன்று
மாதுக்கு அளித்து மயங்கிடுவார், விதி மாளும் மட்டும்
ஏதுக்கு இவர் பிறந்தார் இறைவா கச்சி ஏகம்பனே!

சதா ஊர் சண்டை, தெருச்சண்டை போடுவதோடு, மற்றவர்களைப் பற்றி குறைசொல்லிக் கொண்டிருப்பது, தீமையான காரியங்களுக்குத் துணை போவது, தினம் உழைத்த பொருளை இன்ப போகத்துக்குச் செலவிடுவது இவையெல்லாம் உயிர் உள்ள காலம் வரை செய்து கொண்டிருப்பவர்கள் எதற்காகப் பிறந்தாரோ தெரியவில்லையே இறைவா கச்சி ஏகம்பனே!

ஓயாமல் பொய்சொல்வார், நல்லோரை நிந்திப்பார், உற்றுப்பெற்ற
தாயாரை வைவார், சதி ஆயிரம் செய்வார், சாத்திரங்கள்
ஆயார், பிறர்க்கு உபகாரம் செய்யார், தமை அண்டினோர்க்கு ஒன்றும்
ஈயார் இருந்தென்ன போயென்ன காண் கச்சி ஏகம்பனே!

விழித்திருக்கும் நேரமெல்லாம் பொய் ஒன்றே உயிர் மூச்சாய் சொல்லிடுவர், நல்லவர்களைப் பொழுதுக்கும் தூற்றிக் கொண்டிருப்பர், சுமந்து பெற்ற தாயாரைத் திட்டிக் கொண்டிருப்பர், சூதும் வாதும் ஆயிரக்கணக்காய் செய்து கொண்டிருப்பர், எந்த உயர்ந்த சாத்திரங்களையும் கற்று உணராதிருப்பர், பிறருக்குத் தேவைப்படும் போதும் ஆபத்துக் காலத்திலும் ஓடிப்போய் உதவாதவர், நம்மையே அண்டி நிற்போருக்கு எதையும் கொடுக்காத கஞ்சனாக இருப்பர் இவர்கள் உயிரோடு இருந்தால் என்ன, போய்ச்சேர்ந்தால் என்ன கச்சி ஏகம்பனே!

நாயாய் பிறந்திடில் நல்வேட்டையாடி நயம்புரியும்
தாயார் வயிற்றில் நரராய்ப் பிறந்து பின் சம்பன்னராய்க்
காயா மரமும், வறளாங் குளமும், கல்லாவும் அன்ன
ஈயா மனிதரை ஏன் படைத்தாய் கச்சி ஏகம்பனே!

நாய் ஜென்மமாகப் பிறந்திருந்தாலும் வேட்டைக்குச் சென்றிருக்கலாம்; தாயார் வயிற்றில் பத்து மாதங்கள் குடியிருந்து பிள்ளையென்று பிறந்து, வாழ்க்கை முழுவதும் காய்க்காத மரத்தைப் போலவும், வறண்டு போன குளத்தைப் போலவும், அசையாத பாறை போலவும் இருக்கின்ற கஞ்ச மகா பிரபுக்களை ஏன் படைத்தாய் கச்சி ஏகம்பநாதனே!

(இன்னும் உண்டு)

Print Friendly, PDF & Email
Share

Comments (3)

  1. Avatar

    அருமையான பணி. பலநாட்கள் இந்த பக்கம் வர இயலாதது என் இழப்பு.

  2. Avatar

    அருமையான பாடல்கள்! எளிமையான விளக்கங்கள்! ஆசிரியருக்கும், வலைத்தளத்திற்கும் நன்றியும் பாராட்டும்! தொடரட்டும் இந்த இலக்கிய ஆன்மீகப் பணி!

  3. Avatar

    மிக அருமை. பணியை தொடருங்கள்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க