குறத்தியின் பயணம்

 

வானுயர்ந்த மலை முகட்டில், கொண்ட

குணமுயர்ந்த கலைக் குறத்தி, வீசும்

மணமுயர்ந்த மலர் சேர்க்க, கனிந்த

மனமுவந்து முகிலிடையே நடந்து சென்றாள்!                         98         

 

முகில் கடந்து நடந்த தினால்,

முகத்தில் நீர் மலர்ந்து நிற்கிறதே,

“நீரு பூத்த” மலர் முகத்தாள், தேனின்

சாறு பூத்த மலரெடுக்கக் காடுதோறும் அலைந்தனளே!                                                99

 

 

குறத்தி மாதுளங்கனி சேகரித்தல்

 

தாமரை மலர்ந்தது போல், வெடித்த

மாதுளை பிளந்திருக்க, சிதறிதய முத்துக்கள்

ஆங்காங்கே தெறித்து, நீர்க் குமிழிக்குள்

பவளம்போல் நிலமெங்கும் நிறைந்தி ருக்கும்!                                                                   100

 

சிதறிய முத்துக்கள் பவளம்போல் படர்ந்திருக்க,

முத்துச் சரத்தில் தோய்ந்து நடந்து,

இரத்தச் சிவப்பில் காலடி கொண்டு,

எஞ்சிய முத்துக்களை கனியொடு பறித்தாள்!                                                                        101

 

பறித்த கனியின் முத்தைக் குறத்தி

பற்களினிடையே கொறித்துக் கடிக்க,

பாதம் போல வாயும் சிவந்து

பேரெழில் பூத்துச் செம்மை கொண்டாள்!                                                                                102

 

குறத்தி நாவல் பழம் சேகரித்தல்

 

மரம் விட்டு மரம் தாவும்,

பறக்கும் பல்லி போல் தமது,

கரங்களை விரித்துக் குரங்குகள் நாவல்

மரத்தின் உச்சிக் கிளைகளில் தாவின!                                                                                      103

 

மந்தியின் பாரத்தால் மெல்லிய கிளைகள்,

முதிராத மூங்கிலாய் வளைந்து நிமிர,

முதிர்ந்த கனிகளோ குலுங்கிக் குதித்து,

மண்ணில் விழுந்து காத்துக் கிடந்தன!                                                                                      104

 

நாவல் பழங்கண்ட குறத்தியின் மனதுக்குள்,

ஆவல் அளபெடுத்து ஆஅவல் ஆஅகிவிட,

ஏவல் செய்பவர்க்குச் சேவகம் செய்பவள்போல்,

பணிந்து குனிந்து பழங்களை எடுத்தாள்!                                                                 105

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “குறவன் பாட்டு – 13

  1. முகில் கடந்து நடந்த தினால்,
    முகத்தில் நீர் மலர்ந்து நிற்கிறதே,
    “நீரு பூத்த” மலர் முகத்தாள், கொண்ட
    இந்த அழகு குறத்தி சில மனங்களை தவிக்க விட்டு போகிறாள் பழங்களை சேகரித்த பயணத்தில்.

  2. @@தனுசு

    //இந்த அழகு குறத்தி சில மனங்களை தவிக்க விட்டு போகிறாள் பழங்களை சேகரித்த பயணத்தில்.//

    தங்களது இரசனைக்கும் வாசிப்புக்கும் நன்றி நண்பரே!

  3. சிதறி விழுந்தவை மாதுளை முத்துக்கள் மட்டுமல்ல,
    சிறந்த கவிதை முத்துக்களும்தான்…!

  4. @@ திரு.செண்பக ஜெகதீசன்,

    // சிதறி விழுந்தவை மாதுளை முத்துக்கள் மட்டுமல்ல,
    சிறந்த கவிதை முத்துக்களும்தான்…!//

    தொடர்ந்து கவிதைகளை வாசித்து, தங்களது பொன்னான நேரத்தைச் செலவிட்டு கருத்துரை வழங்கி வருவதற்கு நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.