Author: admin

  • மேலாண்மை பொன்னுச்சாமியின் மனப்பூ சிறுகதைத் தொகுப்பில் வாழ்வியல்

    -முனைவர் ச.கோபிநாத் 

    முன்னுரை

    சமுதாயம் என்பது மக்கள் தொகுதிகளின் இணைப்பு ஆகும். அதாவது, மக்கள் கூடி வாழ்வதாகும். அவ்வாறு கூடிவாழும் மக்கள் தங்களுக்குள் உறவினை வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்படி வளர்த்துக்கொள்ளும் சமுதாயம் உயிருள்ள சமுதாயமாகும். மக்கள் கூட்டம் ஒன்றுசேர்ந்து வாழ்வதற்கு ஏற்படுத்திக் கொள்ளும் அமைப்பே சமூகமாகும். இச்சொல்லிற்குச் சொல்லகராதி ‘மக்கள் திரள்’ என்று பொருள் தருகின்றது.

    “சமுதாயம் பொதுநல ஸ்தாபனம், சங்கம், கழகம்”1 என்று ஆங்கில அகராதி கூறுகின்றது. இத்தகைய சமுதாயத்தில் மனிதன் எவ்வாறான சிக்கல்களையும் விளைவுகளையும் எதிர்கொண்டு வாழ்கிறான் என்பதையும் அதிலிருந்து எவ்வாறு வெளியேறுகிறான் என்பதையும் ‘மனப்பூ’ என்ற சிறுகதைத் தொகுப்பின் வாயிலாக வெளிக்கொணர்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

    வறுமை

    மனிதனின் வாழ்க்கையில் மிகவும் கொடுமையானது வறுமையாகும். மனிதனுக்கு வறுமை வந்துவிட்டால் அவனின் எண்ணம், செயல்கள் மாற்றம் பெறுகிறது.

    “வறுமையே பாவங்களில் பொல்லாதது என்றும், வறிய நிலையில் வாழ்வதே கொடிய பாவ வாழ்க்கை என்றும் அந்தப் பாவத்தைப் போக்கிக் கொள்வதே முதல் கடமையாகக் கொள்ளவேண்டும்”2 என்பர். இதனால் வறுமையினை ஒழித்தல் அவசியம். ஆனால், இன்றைய அளவிலும் வறுமை என்பது ஒழிக்கப்படவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

    ”தனியொருவனுக்கு உணவில்லையெனில்
    ஜகத்தினை அழித்திடுவோம்”3

    பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
    தொகுத்தவற்றுள் எல்லம் தலை”4

    அதாவது, தனியொருவனுக்கு உணவு இல்லையெனில் இந்த உலகத்தை அழிக்க வேண்டும் என பாரதியும், அவ்வுணவைப் பகுத்து உண்ணுதல் வேண்டும் என்பதை வள்ளுவனும் நமக்கு எடுத்துக்கூறுகின்றனர். ‘மானத்தீ’ என்ற சிறுகதையில் ஆவுடைச்சி என்பவள் தன் மகனுக்கு ஒரு முறுக்குக்கூட வாங்கிக்கொடுக்க முடியாத அளவிற்கு வறுமை அவளைச் சூழ்ந்துள்ளது. வறுமையினைப் பயன்படுத்தி அவளைத் தன் வழிக்குக் கொண்டுவந்து விடலாம் என்று ஒருவன் நினைக்கிறான். ஆனால் ஆவுடைச்சி அவனை, “ச்சீ நாயே…. ஓடிப் போயிரு. இல்லேனா ஒரே போடுதான். அருவா ஒன்னை வகுந்துடும்”5 என்று அடித்துவிரட்டித் தன் மானத்தினைக் காத்துக்கொள்கிறாள்.

    சாதி

    சாதி, சமூகத்தின் கேடு எனலாம். அந்த அளவிற்கு நம் நாட்டில் சாதியின் உச்சம் உள்ளது. சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் “தன்னை உயர்ந்த சாதியாகவும் இன்னொரு மனிதனைத் தாழ்ந்த சாதியாகவும் கருதுபவன் மனநோயாளி”6 என்கிறார். இப்படித்தான் மனிதர்கள் மனிதர்களுக்குள் சாதியம் பார்க்கின்றனர். இந்த சாதிய முரணைத் ‘தீண்டாதே’ என்ற சிறுகதையில் ரெங்கலட்சுமி என்பவள், ஒரு வெள்ளத்தில் சிக்கிக்கொள்கிறாள். கீழ்ச்சாதியினைச் சேர்ந்த மாடத்தியின் மகன் ராக்கப்பன் காப்பாற்றப் போகிறான், அப்போது அவள்,

    “கையை மட்டும்தான் நீ தொடணும் அதுவும் முனிக்கையைத் (நுனிக்கையை) தீண்டணும்.

    ’அதெப்படிமா….. முடியும்?’
    ‘அது அப்படித்தான். என்னோட ஒடம்பைத் தீண்டாதே’

    வெள்ளத்திற்குள் நீந்துகிற அவனுக்குள் பற்றி எரிகிற நெருப்பு அவமான நெருப்பு, சாவின் விளிம்பிலுமா…. சாதி?7 என்ற நினைப்புடன் அவளை நெருங்கிச்செல்கிறான். ஆனால் ரெங்கலட்சுமி பிடித்திருந்த விளாரை நழுவவிட்டு உயிரினை விட்டுவிடுகிறாள்.

    உயிரைவிடச் சாதிதான் முக்கியம். அதிலும் கீழ்ச்சாதிக்காரன் நம்மைத் தொடக்கூடது என்பதை மனதில் நினைத்துக்கொண்டு உயிரை விட்டுவிடுகிறாள். இந்தச் சமூகத்தில் பெண்களைக்கூட சாதி வெறியராக மாற்றிவைத்து இருப்பதுதான் மிகப் பெரிய கொடுமையான நிகழ்வாகும். ஆனால் பெண் என்பவளை இந்தச் ‘சாதி, மதம்’ இரண்டும் காப்பாற்றாது என்பதுகூடத் தெரியாமல் பெண்கள் இவ்வாறு இருப்பது அறியாமையின் வெளிப்பாடாகவே தெரிகிறது.

    குழந்தைத் தொழிலாளர்கள்

    குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிராகப் பல வகையான சட்டங்களைக்கொண்டு வந்தாலும் அதனை முழுமையாக ஒழிக்க முடியவில்லை. நம்நாட்டில் உள்ள மக்கள் தொகையில் 75% பேர் வறுமைக்கோட்டிற்கும் கீழ் இருப்பதாகப் புள்ளி விவரம் கூறுகிறது. இந்த வறுமைதான் குழந்தைத் தொழிலாளர்களை உருவாக்குகின்றது. குழந்தைத் தொழிலாளர்கள் எப்படி உருவாகின்றனர் என்பதை ’ஏழாப்பு’ என்ற சிறுகதையில் ஆசிரியர் நேர்த்தியாகக் கூறியுள்ளார். ராசாத்தி என்பவர் ஏழாவது படிக்கும் போது தந்தையை இழந்துவிடுகிறாள். இதனால் தன் படிப்பினை இடையிலேயே நிறுத்திவிட்டு தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலைக்குச் செல்கிறாள்.

    “வாய் நிறைய சோறு. கன்னம் புடைத்திருக்கிறது. பதற்றமாய்க் கைகழுவினாள் ராசாத்தி. பாவாடையில் ஈரக்கையைத் துடைக்கிறாள். சுண்டெலியாய் ‘குடு குடு’ வென்று ஓடுகிறாள். மஞ்சள் பிளாஸ்டிக் டப்பாவையும், சிட்டையும் எடுக்கின்றாள்”8 அவள் தன்னை அறிந்துகொள்ளும் முன்னரே தொழிலாளியாக மாறிவிட்டாள் என்று தோன்றுகிறது.

    போதைப்பொருள்

    நம் சமூதாயத்தில் பல மனிதர்கள் உணவு இல்லாமல் கூட இருந்துவிடுவார்கள். ஆனால் போதை இல்லாமல் வாழ முடியாத அளவிற்கு மனிதர்கள் உருவாகியுள்ளனர். ‘போதை இல்லையெனில் வாழ்க்கை இல்லை’ என்ற நிலைதான் இங்கு உள்ளது. ஒருவன் போதைப் பொருளுக்கு அடிமையாகிவிட்டால் அவனின் எண்ணங்கள் மாற்றம் பெறுகின்றன.

    போதைக்கு அடிமையானவர்கள் குற்றங்களைச் செய்பவர்களாகவும் தன்னால் எதையும் செய்ய முடியும் என்ற நம்பிக்கை உடையவர்களாகவும் மாறிவரும் போக்கினை நம்மால் பார்க்க முடிகின்றது. போதைக்கு அடிமையான ஒருவன் என்னமாதிரியான செயல்களைச் செய்கிறான் என்பதை ‘குறுக்கு’ என்ற சிறுகதையில் கணேஷ் புகையிலைக்கு அடிமையாக, பூபாண்டி என்பவன் இருக்கிறான். சாதிக் கலவரம் அவ்வூரில் ஏற்படுகிறது. அதனால் கடைகள் அடைக்கப்படுகின்றன. புகையிலை வாங்க முடியாமல் கிறுக்கு பிடித்தவன் போல் திரிகிறான். எப்படியோ தேடிப்பிடித்து புகையிலை தின்று போதையினை ஏற்றிக்கொள்கிறான். பூபாண்டியன் சாதியினர் மாற்றுச் சாதியினர் வீட்டில் ஒரு கொலையாவது விலுக வேண்டும் என்று பேசிக்கொள்கின்றனர். இதனைக் கேட்ட பூபாண்டி,

    “ஓடிப்போய்….. பின்பக்கமாய்த் தழுவி, இடதுகையில் கழுத்தைச் சுற்றி, ஒரு கவ்வு கவ்வு கவ்வி…. இறுக்கிய வேகத்தில் வலதுகைச் சூரிக்கத்தியால் ஓங்கி… ஒரு சொருகு…. உருவிக்கொண்டு, ‘ச்சதக்,சதக்’ கென்று ரெண்டு குத்தி”9 கொலை செய்துவிடுகிறான்.

    போதைக்கு அடிமையான ஒருவன் எவ்வாறு நடந்துகொள்வான் என்பது இக்கதை மூலம் தெரியவருகிறது. சுய சிந்தனை, தன்னை இழத்தல், கையேந்தல் போன்றவை இவர்களைத் தொற்றிக்கொள்ளும் என்பது அறியமுடிகிறது.

    முடிவு

    நம் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது என்றெல்லாம் சொல்லப்படுகிறது. ஆனால், வறுமை, சாதி, குழந்தைத் தொழிலாளர், போதை பொருட்கள் இவற்றினை ஒழிக்க எந்த மாதிரியான நடவடிக்கையினை எடுத்துவருகின்றன எனக் கேள்விக்கு உட்படுத்தினால் மிஞ்சுவது கேள்வி மட்டுமே. அந்த அளவிற்கு இதனைப் பற்றிய விழிப்புணர்வை நாம் சரியாகச் செய்யவில்லை எனலாம். ஒரு நாடு வளர்ச்சி நாடாக வரவேண்டுமென்றால் இந்த நான்கில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். இது மட்டுமின்றி பெண் முன்னேற்றமும் முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் இந்த நான்கிலும் பெண் என்பவள் அவளுக்குத் தெரியாமலும், தெரிந்தும் இதில் அகப்பட்டுக்கொள்கிறாள். பெண் சிக்கலையும் சேர்த்துப் பார்த்தால் மட்டுமே சமுதாயத்தில் மனிதனின் வாழ்க்கை சிறப்பாக அமையும். அதன் மூலம் அந்நாடும் நல்ல வளர்ச்சிப் பாதையை நோக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடுமில்லை.

    குறிப்புகள்:

    1. இரா.மோகன், (ப.ஆ) இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் ஆய்வு மன்றம், ஆய்வுக்கோவை. ப.1956
    2. மு. வரதராசன், அறிஞர் பெர்னாட்ஷா. ப.80
    3. பாரதியார் கவிதைகள். ப.150
    4. திருக்குறள்.332
    5. மேலாண்மை பொன்னுச்சாமி, மனப்பூ. ப.138
    6. quotes.mowval.in
    7. மேலாண்மை பொன்னுச்சாமி, மனப்பூ. ப.62
    8. மேலது, ப.82
    9. மேலாண்மை பொன்னுச்சாமி, மனப்பூ. ப.43

    *****

    கட்டுரையாசிரியர் – உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை,
    செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,இராமநாதபுரம்.

     

     

    Share
  • தாவரங்களை சித்திரப்படுத்தும் – தமிழன்பன் கவிதைகள்

                                   ஆ. பிந்து,

                                   முனைவர்பட்டஆய்வாளர்,

                                       தமிழ்த்துறை,

                                   ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி,

                                    மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்.

                                             

    முன்னுரை

        கவிஞர் தமிழன்பன் 1933-ம் ஆண்டு சென்னிமலையில் பிறந்தவர்.  ‘ஈரோடு’ என்பதை தனது குறியீட்டு பெயராகக் கொண்ட தமிழன்பன் தொடக்க காலத்தில் மரபுக்கவிதையையும் பின்பு புதுக்கவிதைகளையும் எழுதி தமிழ்கவிதை உலகில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக்கொண்டவர். இவர் தனது கவிதைகளில் தாவரங்கள் குறித்து நிரம்ப பதிவு செய்துள்ளார். அவை குறித்து விவாதிப்பதாக இக்கட்டுரை அமைகிறது.

       சிறிய புல் பூண்டுகள் முதல் மரங்கள் வரை தாவர வகையில் அடங்குகின்றன. தாவரங்கள் சூரிய ஒளி, நீர், காற்று ஆகிய மூன்றையும்  தங்கள் வளர்ச்சிக்கு வேண்டிய அளவில் பெற்று தம்மை வளர்த்துக் கொள்கின்றன. தாவரங்களின் உலகம் என்பது ஒரு தனி உலகம் என்றே கூறலாம். புல், பூண்டு, செடி, கொடி, மரம் எனும் பசுமையான இவ்உயிரினத்தை ஆங்கிலத்தில் “Plant’ என்ற சொல் குறிக்கும்” என்பார் வேங்கடசாமி. (செடிகளின் செயலியல் பண்புகள், ப.1.)

    மரங்கள்

       மரங்களைத் ‘தரு’ என்றும் ‘விருட்சம்’ என்றும் கூறுவர். இவை பூ, காய், கனி, இலை, நிழல், பசுமை, என மரங்கள் தங்களுடைய ஒவ்வொரு அவயங்களையும் மக்களுடைய பயன்பாட்டிற்கு அளிக்கின்றன. இத்தகைய மரத்தின் மீது கவிஞர் அன்பு வைத்துக் கவிதைகளைப் படைத்துள்ளார். மரத்தை கடவுளை விட மேலானது என்று தமிழன்பன் தமது கவிதையில் குறிப்பிடுகின்றார்.

                “கேட்காமலே

                நிழல் தருகிற மரத்தை விடக்

                கடவுள் எப்படி மேலானவன்”

                                          (தமிழன்பன் ஆயிரம், ப.875).

          மரம் என்றாலே ஞாபகத்திற்கு வருவது கனிகள் தான். மரங்களை மனிதர்கள் அழிக்கின்றனர். எனினும் மக்களுக்கு நிழலையும், உணவுகளையும் அளித்து உதவுகின்றதென்பதை,

                “கொம்பனும் கம்பிகள்மேல்

                 குளிரிலைத் துணியைப் போர்த்தே

                 எம்மிடம் வருக வென்றாய்

                 எழிற்குடை மரமே ! எய்தி

                 உம்முடல் வெட்டி னோர்க்கும்

                 உதவினை நிழலே!  

                                         (தமிழன்பன் கவிதைகள் தொகுதி-2, ப-99)

    என்று எடுத்துரைத்துள்ளார்.

          கவிஞர் மரத்தின் மீது பாசம் கொண்டவராக காணப்படுகின்றார். தனது கவிதையில் வேப்பமரம், தென்னை மரம், அசோக மரம், கருங்காலி, ஆலமரம் என்று பல மரங்களை சுட்டிக்காட்டுகின்றார். காடுகள் மற்றும் மலைப்பகுதிகளில் வளரக்கூடிய கருங்காலி மரத்திலிருந்து குழல் கருவிகள் செய்து பாட்டு இசைப்பர். இதனை,

                “கருங்காலி குழல் செய்து பாட்டிசைக்கக்

                காடுதெரு நல்லமரம் !

                                   (தமிழன்பன் கவிதைகள் தொகுதி -1, ப.104)

    என்றும் தம் கவிதையில் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

    செடி கொடிகள்

          செடிகள் சிறிய அளவில் மட்டும் வளரக்கூடியவை. கொடிகள் என்பவை வேறு மரங்களைப் பற்றுக்கோடாகக் கொண்டு படர்ந்து வளருபவை. கவிஞர் செடி கொடிகள் நன்கு செழிப்பாக வளர்ந்து காற்றில் ஆடுவதை,

                “பருவச் செழிப்பும் உருவக் கொழிப்பும்

                 மருவிய தங்க மணிச்சிலை மங்கையர்

                 நூற்றுக் கணக்காய் நுண்ணிடை ஒசியக்

                 காற்று வெளியில் களிநட மாடினர் !

                 ஆடிய மங்கையர் அங்குள கொடிகள் !”

                                     (தமிழன்பன் கவிதைகள் தொகுதி -1, ப.171)

     என்று அழகுறச் சித்திரப்படுத்துகிறார்.

          மேலும் தனதுக் கவிதையில் எருக்கஞ் செடியைச் சுட்டிக் காட்டுகின்றார். அச்செடி வீடுகளில் வளர்ப்பதில்லை என்றும் வீதிகள் மற்றும் சுடுகாடு போன்ற இடங்களில் தானாக வளர்ந்து நிற்பதை,

                “தாவரக் குற்றவாளியா

                 காடு கடத்தப்பட்டு அடுக்கு வீடுகளுக்கிடையே

                 என் வீட்டெதிரில் இருக்கும்

                 இந்த எருக்கஞ் செடி ?

                 எல்லாச் செடிகளுக்குப் பாய்ச்சியபின்

                 மிஞ்சிய பச்சையை

                 இயற்கை

                 தண்ணீர் விட்டு விளாவியிருக்கிறது

                 இந்த எருக்கில்”

                               (தமிழன்பன் கவிதைகள் தொகுதி -1, பக்.623- 624)

    என்று விளக்கியிருக்கிறார். அந்தச் செடியிலுள்ள இலையின் பச்சை நிறம் மற்றச் செடிகளின் இலைகளில் காணப்படுவதை விட குறைவாகவே இருப்பதையும் பதிவு செய்கின்றார்.

    புல்

          தரையில் தானாகவே முளைத்து வளரும் செடி வகைகளில் ஒன்று.  “பச்சைப்பசேல்” என்று பார்ப்பதற்கு அழகாக இருக்கும். ஸ்ரீநிவாசன் என்பவர், “புல் என்றால் ஏதோ ஒரு சாதாரண தாவரம் என்று தான் அனைவரும் கருதுகிறார்கள். ஆனால் உண்மை அப்படி இல்லை. தாவர வகைகளில் புல் மிக முக்கியமான ஒன்று. தாவரவியலில் புல் இனத் தாவரங்கள் ஒன்றாக்கப்பட்டுப் புல் குடும்பம் என்று குறிப்பிடப்படுகிறது. இந்தக் குடும்பத்தில் 4500 இனங்கள் உண்டு” (தாவரஉலகில்! 100, ப.43) என்கிறார். தமிழன்பன் புல்லின் அழகை மக்கள் ரசித்துப் பார்ப்பதை,

                 “தான்

                 பூப்பதில்லை புல் …

                 தன்னைப்

                 பார்ப்பவரைப் பூத்துவிடச் செய்கிறதே

                 போதாதா?

                                     (தமிழன்பன் கவிதைகள் தொகுதி -4, ப.170)

    என்று கூறியுள்ளார்.

    தாவரங்களின் உறுப்புகள்

          மரம், செடி, கொடிகளில் வேர் தண்டு, இலை,பூ, காய், கனி போன்ற உறுப்புகள் காணப்படுகின்றன. இவற்றுள் வேரும் தண்டும் இலையும் தாவரங்களின் வளர்ச்சியில் முக்கிய அங்கமாகத் திகழ்கின்றன. தாவரங்களின் இனப்பெருக்கத்திற்குக் காரணமாக அமைவது பூக்கள், ஏனென்றால் தாவரங்கள் விதையின் மூலம் தான் இன்னொரு தாவரத்தை உண்டாக்குகின்றன.

          ஒரு செடி முளைத்து வளருவதற்கு அவசியமானது விதை. ஸ்ரீனிவாசன் என்பவர். “செடியின் ஆதி மூலம் விதை. செடியே விதைக்குள் இருக்கிறது என்றாலும் குற்றமில்லை தாவரத்தின் சிசுவிதையில் இருக்கிறது” (தாவரங்களின் இல்லறம், ப.35) என்று தெளிவுபடுத்தியிருக்கிறார். இலக்கியத்தில் விதையானது ‘காழ்’ மற்றும் ‘அரிசி’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழன்பன் பூமியில் புதைந்த விதை அழிந்து தாவரமாக வளரும் என்றுக் குறிப்பிட்டுள்ளார்.இதனை,

          “விதையின் இறப்பே செடியின் பிறப்பு!

                                  (தமிழன்பன் கவிதைகள் தொகுதி -4,ப.453).

    என்று தனது கவிதையில் பதிவு செய்துள்ளார்.

          தாவரங்கள் வளர்வதற்கு மிகவும் முக்கியமானவை வேர்கள். வேர்கள் பூமிக்கு அடியில் ஆழமாக சென்றால் தான் தாவரங்கள் பலமாக இருக்கும். இதனைத் தமிழன்பன்,

                      “விண்முட்டும் மரங்களுக்கும்

                       வேர்களில்தான் பலமெல்லாம்”

                                       (தமிழன்பன் கவிதைகள் தொகுதி -2,ப.327).

    என்று கூறியுள்ளார்.

          பூக்களின் அழகுக்கும் வாசனைகளுக்கும் பெரியவர் முதல் சிறியவர் வரை மயங்கி நிற்பவர். இதன் வாழ்நாட்கள் என்பது மிகவும் குறைவு. அந்த நாட்களிலே அவற்றின் மணம், அழகு, நிறம் போன்றவை மக்களைக் கவர்ந்து விடுகின்றன. இதனை வர்ணிக்கும் தமிழன்பன்,

                “கொடியின் வீட்டில் பிறந்தது !

                 குறைந்த நாட்கள் வாழ்ந்தது !

                 மடிந்து வீழும் முன்னரே

                 மதிப்பு பெற்றுக்கொண்டது!”

                                       (தமிழன்பன் கவிதைகள் தொகுதி -2,ப.572).

    என்று கூறி, மலரை போல மனிதனும் மதிப்புடன் வாழ வேண்டும் என அறிவுறுத்துகின்றார்.

    முடிவுரை

          இயற்கை என்பது மனிதனுக்கு கிடைத்த வரம் இந்த இயற்கையினுள் இருக்கின்ற தாவரங்கள் என்பது மனிதனுக்கு கிடைத்த வரப்பிரசாதம். அதனால் தான் தமிழன்பன் தனது கவிதையில் இவைகளின் அழகினை, பயனை திறம்பட பதிவு செய்கின்றார். அவை இக்கட்டுரையில்ஆராயப்பட்டுள்ளது.

    துணைநூற்பட்டியல்

    1. அமிர்தகணேசன். தி., (தொ.ஆ) –       ஈரோடு தமிழன்பன் ஆயிரம்

                                              விழிகள் பதிப்பகம்

                                              8/எம் 139, 7 ஆம் குறுக்குத்

                                              சென்னை- 41. மு.பதிப்பு – 2016.

    1. சக்கரவர்த்தி ராஜகோபால் ஆச்சாரியார் – தாவரங்களின் இல்லறம்

                                               அல்லயன்ஸ் பிரஸ்

                                              எம்.எஸ் 109, பிராடீஸ்ரோட்

                                              மயிலாப்பூர். மு.பதிப்பு -1947

    1. வேங்கடசாமி – செடிகளின் செயலியல் பண்புகள்                                            நியூசெஞ்சுரி புக்ஹவுஸ் (பி)லிட்.

                                          41-B சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,                                        அம்பத்தூர், சென்னை – 98.

                                                மு.பதிப்பு – 2012.

    1. ஜெயதேவன். வ.(தொ.ஆ)        –     ஈரோடு தமிழன்பன் கவிதைகள்                                            பூம்புகார் பதிப்பகம்,                                                       127 ப. எண்: 63,                                                          சென்னை- 108. மு.பதிப்பு – 2012.
    1. ஸ்ரீநிவாசன். N – தாவர உலகில்! 100

                                              70-தி. ஜெனரல் சப்ளைஸ் கம்பெனி

                                              மந்தை வெளி, சென்னை- 600 028.

    Share
  • அப்பா

    சேசாத்திரி பாஸ்கர்

    பள்ளி நாட்கள் எப்படிப்பட்டவர்க்கும் ஒரு இனிமையான் விஷயம். படிப்பவன், படிக்காதவன், ஏழை, பணக்காரன் , ஆளுமை எல்லாம் தாண்டி பள்ளிநாட்கள் ஒரு கூட்டு வாழ்க்கை. அதுவும் இரண்டு மாத விடுமுறை முடிந்து அடுத்த வகுப்பில் எல்லோரும், புதுஇடத்தில கூடும்போது ஏற்படும் சந்தோஷம் எந்த சினிமாவும், பணமும் , கொடுக்க முடியாதது.சின்ன சட்டை , அதில் பிய்ந்த பொத்தானை தைய்க்க வேண்டாம். அதனை அப்பாவோ , அம்மாவோ உள் வழியாக பின்னை வைத்து குத்தி ( தலையை குனியாதடா) ஊக்கு மாட்டி அனுப்பும் போதே தெரியும். ஒரு விளையாட்டில் அது படக்..

    இருந்தாலும் அவர்களின் அன்பு இன்றும் என் கண்ணில் நீர் வரவழைக்கும்.எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாத செயல்

    .இங்கு மாதாவும் பிதாவுமே குருவும் தெய்வமும். அறுபதுகளில் மயிலாப்பூரில் அம்பிகா ஸ்டோர்ஸ் புத்தக கடை மிக பிரசித்தம். அங்கு லேபில் வாங்கி அதனை கட்டு கட்டாய் வைத்து கொண்டு வகுப்பில் பீத்திகொள்ள அவ்வளவு ஆசை.என் தந்தை புத்தககங்களுக்கு நேர்த்தியாய் அட்டைபோட்டு நாலு பக்கமும் அதனை சோற்று பருக்கை வைத்து ஒட்டி அதனை வெயிலில் காய வைத்து அடுத்த நாள் அந்த அட்டையில் பெயரை கூர்ப்பான பௌண்டைன் பேனாவில் எழுதி துணிப்பையில் போட்டு கொடுப்பார் எனக்கு எந்த பக்கம் கிழிந்தாலும் கவலை இல்லை . அப்பா ஒட்டின லேபிளும் அவர் கையெழுத்தும் ஒன்றும் ஆக கூடாது. இன்று என் அலுவல் பணி சம்பந்தமாய் ஒரு புத்தக கடைக்கு சென்ற போது அந்த கடை வாசம் என் நினைவுகளை பள்ளிக்கு அனுப்பியது ஒரு புது புத்தகம் எடுத்து அதனை அழகாய் மடித்து சீட்டுகட்டு போல பக்கங்கள் புரட்டி வாசக்காற்று முகர்ந்தேன்.என் தந்தை வாசம் காற்றில் மலர்ந்தது.

    Share
  • செம்பதிப்பு வரிசையில் ஐங்குறுநூறு

    கல்பனா சேக்கிழார்

    உதவிப்பேராசிரியர்

    அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

    காலத்தை வென்று நிற்பவை சங்கப் பனுவல்கள். அவை தமிழ் மொழியின் அடையாளமாய், பண்பாட்டுக் கருவூலமாய்த் திகழ்வதால் காலம் தோறும் வெவ்வேறு வாசிப்புக்கு உட்பட்டுள்ளன. சுவடியில் இருந்தவை, அச்சு ஊடக வருகைக்குப் பிறகு மூலமாகவும், உரையோடு இணைத்தும் பல்வேறு பதிப்புகள் வெளிவந்துள்ளன. இருப்பினும்  செம்பதிப்பு (மூலப்பாடத் திறனாய்வு) அடிப்படையில் பதிப்பிக்கும் நோக்கில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் திட்டத்தினை வகுத்து, தமிழ் அறிஞர் பெருமக்களிடம் அப்பணியை ஒப்படைத்தது. அந்த வரிசையில் சங்கத் தொகை நூல்களுள் ஒன்றான ஐங்குறுநூறு, பேராசிரியர் கு.வெ. பாலசுப்பிரமணியம் அவர்களைப் பதிப்பாசியராகக் கொண்டு வெளிவந்துள்ளது.

    இப் பதிப்பு தொகுத்தோர், தொகுப்பித்தோன், ஐங்குறுநூறு – பதிப்பும் உரையும், மூலம், பாடத் தேர்வு, சுவடி விளக்கம், பதிப்பு விளக்கம், பாடல் – சிதைவும் முறிவும், கூற்றுகள் – சிதைவும் முறிவும், பாடல்கள் – சுவடித் திறப்பு, கூற்றுகள் – சுவடித் திறப்பு, பாடல்கள் – பிழைப்பாடப் பட்டியல், கூற்றுகள் – பிழைப்பாடப் பட்டியல், சங்க இலக்கியம் தொடரொப்புமை, பிற பதிப்புகள் – ஒப்பீடு, சொல்லடைவு, தொடரடைவு, கலைச் சொற்கள், கூற்றுகள் – பாடல் தொகை, பழைய உரை இடம் பெறாத பாடல்கள், மெய்ப்பாடுகளும் பயன்களும், தொல்காப்பிய இயைபுகள், மன்னர்களும் நாடுகளும் என்னும் தலைப்புகளாகப் பகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பகுப்பிலும் அதற்கான தரவுகள் தொகுத்து தரப்பட்டுள்ளன.

    இவற்றுள் பாடத்தேர்வு என்னும் பகுதி அரிதின் முயன்று பல்வேறு சுவடிகளுடனும், கையெழுத்துப் பிரதிகளுடனும் ஒப்பிட்டு, பாடவேறுபாட்டில் எப்பாடம் சரியானது எனத் தேர்ந்து சான்றுகளுடன் விளக்கப்பட்டுள்ளது. சான்றாக ஐங்குறுநூற்றின் பதினோராவது பாடலின் முதலடியில் ‘மனைநடு’ ‘மனைநெடு’ என இரு வேறுபட்ட பாடம் உள்ளது. இப்படத்தினை எடுத்துக்காட்டி, மனைநடு வயல் என்பது மனைக்கண் நடப்பெற்ற வயலைக் கொடி என்னும் பொருளுடையது. சங்க இலக்கியங்களில் பதினோரு இடங்களில் வயலை இடம்பெறுகிறது. இஃது இல்லத்தில் நட்டு வளர்க்கப்படும் கொடியாகும். வேலியிலும் பந்தரிலும் படர்வது. மேற்கண்ட நூல்களில் இல்லெழு வயலை, மனைநெடு வயலை, மனைநடு வயலை என்றே பாடங்கள் உள்ளன. தழையாடையகச் சுற்றிக் கொள்ளுவதற்குரிய இக்கொடி தலைவியால் இல்லத்தில் நடப்பெற்று வளர்க்கப்பெறுவது. இங்கு நெடுமைப் பொருளினும், நடு வயலை என்னும் வினைப் பொருண்மையே, செய்யுளில் உள்ளுறை அமையப் பொருந்தும். மனையின்கண் நட்ட வயலை புறத்தே சென்று வேழக் கரும்பைச் சுற்றினாற் போல மனைக்கு உரியனாகிய தலைவன் பரத்தையரைச் சார்ந்தான் என்ற உள்ளுறையை, நடு வயலை என்னும் பாடமே அளித்தலின் இதுவே ஏற்புடையது எனத் தரவுகளின் வழியாகவும் இலக்கண குறிப்பு அடிப்படையிலும், வாழ்வியலோடு இயைத்துப் பார்த்தும் இது சரியானப் பாடம் என நிறுவப்பட்டுள்ளது. ஒவ்வொரு திணைக்கும் நூறு நூறு பாடல்களைக் கொண்டுள்ள ஐங்குறுநூற்றிணை, திணைவாரியாக ஐந்து பகுதிகளாகப் பிரித்து ஐந்து நூலாகப்  பதிப்பிக்கப்பட்டு, ஒவ்வொரு நூலும் 700 பக்க அளவில் அமைந்துள்ளன. ஆய்வு நிலையில் இப்பதிப்பு ஆகச் சிறந்த பல்வேறு  பதிப்பு நுட்பங்களை உள்வாங்கியப் பதிப்பாக அமைந்துள்ளது.

    ஐந்து தொகுதிகள்

    செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்

    எண் 40, நூறடிச் சாலை, தரமணி

    சென்னை – 600113

    2017

    Share
  • ஐங்குறுநூற்றில் விளையாட்டுக்கள்

    -பி.சந்தனமாரி

    முன்னுரை:

    பண்டைக் காலத் தமிழ் வாழ்க்கை நிலையைப் பிரதிபலித்துக் காட்டுவது சங்க இலக்கியங்கள் ஆகும். இவ்விலக்கியங்கள் தமிழ் மக்களின் உணர்வையும் பாரம்பரிய வாழ்வையும் உணர்த்துவதாக அமைகின்றன. சங்ககால மக்கள் இயற்கையோடு இயைந்து வாழ்க்கை நடத்தினர். வாழ்க்கையைச் செம்மையாக வாழவிரும்பிய பழந்தமிழர் ஓய்வு நேரங்களைக் கழிக்கத் தேவையான பொழுதுபோக்குகளையும், விளையாட்டுக்களையும் உருவாக்கிக் கொண்டனர் அவ்வகையில் ஐங்குறுநூற்றில் இடம்பெற்றுள்ள விளையாட்டுக்களைப் பற்றி ஆய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

    பழந்தமிழரின் விளையாட்டுக்கள்:

    ஐவகை நிலங்களில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ப அவர்தம் விளையாட்டுக்கள் அமைந்திருந்தன. முல்லைநில மக்கள் புனலாடுதல்,பொழிலாடுதல் போன்ற விளையாட்டுக்களையும். நெய்தல் நில மக்கள் கடல், பொய்தல் விளையாட்டுக்களையும்.மருதநில மக்கள் அலவனாட்டல் என்ற விளையாட்டையும்,பாலைநில மக்கள் பைஞ்சாய் விளையாட்டையும் விளையாடியதாக ஐங்குறுநூற்றுப் பாடல்கள் சுட்டுகின்றன.

    விளையாட்டு சொற்பொருள் விளக்கம்:

    தமிழில் ஆடல், ஆட்டு, ஆட்டம், விளையாட்டு போன்ற சொற்கள் விளையாட்டைக் குறிக்கின்றன. விளை என்று கூறி விளையாட்டு என்ற சொல் ஒலிமாற்றம் அடைந்த பின்னர் விளையாட்டு என மாறியிருக்கலாம் என்று விளக்குகிறார் மு.வை. அரவிந்தன்.

    விளையாட்டுப் பொருள்கள்:

    ஐங்குறுநூற்றில் மகளிர் விளையாடிய விளையாட்டுக்களே பெருபான்மையாகச் சுட்டப்படுகின்றது. இளம் பெண்கள் பந்தாடுல், பாவையை வைத்து விளையாடுதல், கழங்காடுதல் முதலிய பொழுது போக்குகளில் பெரிதும் இன்பம் கணடனர் என்பதை,

    நீர் நசைக்கு ஊக்கிய உயவல் யானை
    இயம் புணர் தூம்பின் உயிர்க்கும் அத்தம்
    சென்றனள் மனற்,என் மகளே
    பந்தும் பாவையும் கழங்கும் எமக்கு ஒழித்தே.  
    (ஐங்.377)

    என்ற பாடல் மூலம் அறியலாகிறது. இங்கு பந்தாடல் என்பது பந்தை நூல்களால் வரிந்து காட்டப்படுவதாகும். கழங்கு என்பது கழற்சிக்காய் அல்லது சிறு கற்றுண்டுகளாகும். பாவை என்பது மரப்பாச்சி போன்ற பொம்மை வகைகளில் ஒன்றாகும். இளமகளிர் விளையாட்டுப் பொருள்களை வைத்துத் திண்ணையில் உட்கார்ந்து விளையாடுவதாக ஐங்குறுநூறு சுட்டுகின்றது.

    புனலாடல்:

    கார்காலம் தொடங்கியதும் தலைவனும் தலைவியும் புதுப்புனலில் ஆடி வருவதே புனலாடுதல் எனப்படும். இதனை நீர் விளையாட்டு என்றும் கூறுவர். தலைவன் தலைவியோடு புனலாடுவது மட்டுமல்லாமல் பரத்தையரோடும் புனல் விளையாட்டினை விளையாடி வருகின்றான். கார்காலத்தில் முதன்முதலாகப் பொழியும் மழையின் காரணமாக வரும் வெள்ளத்தில் நீராடி வருவது சிறப்பானதாகும். அவ்வெள்ளத்தில் தலைவன் தலைவியோடு ஆடாமல் பரத்தையரோடு நீராடி வருவதை,

    தலைப் பெயற் செம்புனல் ஆடித்
    தவநனி சிவந்தன முகிழ்ந! நின் கண்ணே.   (ஐங்.80) என்ற பாடல் மூலம் காணமுடிகின்றது. இங்கு தலைவன் பல பெண்களோடு நீராடி மகிழ்கின்றான். என்ற செய்தியை ஐங்குறுநூறு சுட்டகின்றது.

    கடல் விளையாட்டு:

    கடல் விளையாட்டு என்பது இளமகளிர் அவர்தம் தோழியாரோடு இணைந்து கடலில் இன்பத்தோடு விளையாடக் கூடியதாகும். இவ்விளையாட்டினை விளையாடும் மகளிர் அனைவரும் ஒன்று சேர்ந்து மணலில் பாவை செய்து, அப்பாவைக்கு மலர்களால்ஆன மாலைகளாகக் கோத்துச் சூடி மகிழ்ந்தனர். இப்பெண்கள் தம் விளையாட்டுப் பொம்மைக்கு பிறர் கொடுக்கும் மாலைகளைச் சூட மாட்டார் என்பதை,

    நொதுமலாளர் கொள்ளார் இவையே
    எம்மொடு வந்துகடல் ஆடு மகளிர்
    நெய்தல் அம்பகைத் தழைப் பாவை புனையார்.  
    (ஐங். 187)

    என்ற பாடல் வரிகள் மூலம் அறியமுடிகின்றது. இவ்விளையாட்டு மகளிர் அனைவரும் ஒன்றுகூடி விளையாடும் விளையாட்டாகும்.

    பொழிலாடுதல்:

    தலைவன் தலைவி இருவரும் களவு, கற்பு என்ற இருவகைக் காலங்களிலும் புனலாடதலும். பொழிலாடுதலும் என்பது இயல்பான ஒன்றாகும். பொழிலாடுதல் என்பது பல வகையான மலர்கள் மலர்ந்துள்ள சோலையில் தலைவனும் தலைவியும் மலர்களைப் பறித்து விளையாடுதலாகும்.  காயா, கொன்றை, நெய்தல், செம்முல்லை, பிடவம் போன்ற மலர்கள் மலர்ந்நு அழகுபெற்று விளங்குகின்றன. இதனை,

    காயா கொன்றை நெய்தல் முல்லை
    போதவிழ் தளவமொடு பிடவு அலர்ந்து கவனிப்
    பூ அணி கொண்டன்றால் புறவே
    பேர் அமர்க்கண்ணி ஆடுகம் விரைந்தே.  
    (ஐங். 412)

    என்ற பாடல் மூலம் காணலாகிறது. இங்கு ‘ஆடுகம் விரைந்தே’ என்று கூறுவது தலைவனுக்கும் தலைவிக்கும் பொழிலாடுதலில் மிகுதியான ஆர்வத்தை ஏற்படத்துகின்றன. என்பதைக் கூறலாம்.

    அலவனாட்டம்:

    பண்டைய மகளிர் நண்டுகளை அவை வாழும் வளையினின்றும் வெளிப்படச் செய்து அவற்றை அலைத்து விளையாடுவது மரபாகும். இதனை அலவனாட்டல் என்பர்.

    முள்ளிவேர் அளைக் களவன் ஆட்டி
    பூக்குற்றி எய்திய புனல்அணி ஊரன்.   
    (ஐங்.23)

    என்ற பாடலின் வழி அறியலாம். பண்டைய கால இளமகளிர் அனைவரும் ஒன்றுகூடி முட்செடியின் வேர்களுக்குகிடையே இருக்கும் வளைகளில் வாழும் நண்டுகளைப் பிடித்தும், பூக்களைப் பறித்தும் விளையாடி மகிழ்ந்தனர்.

    இலக்கு வளை தெளிர்ப்ப அலவ னாட்டி
    மகளிர் கடற்கரைக்குச் சென்று நண்டுகளைப் பிடித்து விளையாடிச் சென்றனர்.

    பைஞ்சாய் விளையாட்டு:

    பைஞ்சாய் என்பது கோரை வகையில் ஒன்றாகும். இக்கோரையாய் பாவை செய்து அதற்கு மலர்அணிந்து அழகு பார்ப்பதும். பாலுட்டுவதும் உண்டு. இது பேதைப் பருவ மகளிர் விளையாட்டுற்குரிய செயல்களாகும். மகப்பேறு அடைவதற்குகாக, தலைவி தலைவனோடு சேர்ந்துவாழ வேண்டும் என்று தோழி தலைவியிடம் கூறினாள். தலைவி அதனை மறுத்து ‘மகப்பேறு’ என்பது நான் இனிமேல் தான் அடைய வேண்டுமோ! நான் களவுக்காலத்திலேயே தலைவனுக்கும் பைஞ்சாய்க் கோரைப் பிள்ளையைப் பெற்றுதுண்டு என்று கூறினாள். இதனை

    ஓதமொடு பெயரும் துறைவற்கும்
    பைஞ்சாய்ப் பாவை ஈன்றனென் யானே.   (ஐங்.155)

    என்ற பாடல்வழி அறியமுடிகின்றது. பைஞ்சாய்ப் பாவைக்கு மாலைகள் அணிவதற்காக தலைவி தனித்தனியே மலர்களைக் கட்டுகின்றாள் என்று இதில் சுட்டப்படுகின்றது.

    பொய்தல் விளையாட்டு.

    பொய்தல் விளையாட்டு என்பதை காமக் குறிப்பில்லாத விளையாட்டு என்று கூறுவர். காமக்குறிப்பில்லாத போதை மகளிர் பலர் கூடி இவள் கணவன். மனைவி என்று தம்முள் கூறிக் கொண்டு சிறு வீடு கட்டிச் சோறாக்கியும்.உண்டு அடுகின்ற ஆட்டம் என்று கூறுவதும் உண்டு. இவ்விளையாட்டை ஆடும் மகளிர் ஆட்டம் சலிப்படைந்தால் குரவையும் ஆடுவர் என்பதை,

    நெய்தல் உண்கண் நேர்இறைப் பணைத் தோள்
    பொய்தல் ஆடிய பொய்யா மகளிர்.     
    (ஐங்.181)

    என்ற பாடல் மூலம் அறியமுடிகிறது. தாம் கண்டதை, கேட்டதை சிறிதும் மறைக்காமல் வெளிப்படையாகக் கூறும் பருவத்தர் ஆதலின் பொய்தலாடிய மகளிர் பொய்யா மகளிர் எனப்பட்டனர்.

    விளையாட்டு முறை:

    புழந்தமிழ் மக்கள் எப்பொருளினை வைத்து விளையாடினர் என்பதனை ஐங்குறுநூறு உணர்த்துகிறது. தலைவி விளையாடிய பொருள்களைப் பார்த்து நற்றாய் வருந்தவதாய்ப் பல இடங்களில் வருகின்றன.

    நீர்நசைக் கூக்கிய உயவல் யானை
    இயம்புணர் தும்பினு யிர்க்கு மதிதம்
    சென்றனள் மன்ற வென்மகளே
    பந்தும் பாவையுங் கழங்குமெமக் கொழித்தே.

    என்ற பாடல் வழி அறியலாம். பந்து, கழங்கு, வைத்து விளையாடி மகிழ்வது அவர்களுடைய பழக்கமாக உள்ளது. இதே போன்று தலைவனுக்கும் தலைவிக்கும் பிறக்கும் மகன் சிறுதேர்இனை உருட்டி விளையாடுகிறான் எனக் கூறப்படுகிறது.

    முடிவுரை:

    விளையாட்டு என்பது மகிழ்விற்கான செயல்பாடேயாகும். அவ்விளையாட்டு பொழுதுபோக்கிற்காக மட்டுமின்றி, உடல்நலம், மனநலம்,    பேணுபவையாகவும் அமைகின்றது. இதில் விளையாட்டுப் பொருள்கள், விளையாட்டு முறை, விளையாட்டின் வகைகள் போன்றவற்றை எடுத்துக் காட்டப்படுகின்றது. இவ்விளையாட்டுக்களை மக்கள் ஓய்வு நேரங்களைக் கழிப்பதற்கு விளையாடி மகிழ்கின்றனர்.

    பார்வை நூல்

    1. ச.வே. சுப்பிரமணியன் – ஐங்குறுநூறு
    2. புலியூர்க் கேசிகன் – சங்க இலக்கியம் எட்டுத்தொகை

    *****

    கட்டுரையாளர் – தமிழ் முனைவர்பட்ட ஆய்வாளர்
    அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி
    சிவகாசி

     

    Share
  • ஜெயமோகன் சிறுகதைகளில் புலப்படும் நிலைக்கலன்கள்           

    -போ.சக்திஜோதி

    முன்னுரை

    இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் சிறுகதைப் படைப்பாளர்களுள் குறிப்பிடத்தக்கவர் ஜெயமோகன். இவர் நாகர்கோயில் வட்டார மக்களின் வாழ்க்கை முறைகளையும், மொழிநடை, பழக்கவழக்கங்களையும் தனது சிறுகதையில் கையாண்டுள்ளார். மேலும் இவரது படைப்புகள் யதார்த்தச் சித்திரிப்பு, மிகையான புனைவு, புராணச்செய்திகளின் புனைவு, கட்டுரை அமைப்புக்கொண்ட கதைகள், படிமங்கள் முதலியவற்றை நிலைக்கலன்களாகக் கொண்டுள்ளமையை இக்கட்டுரை விளக்க இருக்கின்றது.

    மொழிநடை:

    உள்ளத்து உணர்வுகளையும், எண்ணங்களையும் வெளிப்படுத்த மொழி இன்றியமையாததாகிறது. இதனை மெய்ப்பிக்கும் வகையில் “சிறுகதையில் இடம்பெறும் மொழியானது, கருத்து வெளியீட்டையும் உணர்ச்சிப் புலப்பாட்டையுமே நோக்கமாகக் கொண்டுள்ளது. சிறுகதையினை ஆராயுங்கால் ஆசிரியரது படைப்பு நோக்கு வெற்றி காண அவர்    தேர்ந்தெடுத்த மொழிநடை உறுதுணையாக ஆக்கம் தருகிறதா அல்லவா என்பதனை ஆராய வேண்டும்”1  என்ற மேற்கோளுக்கு இணங்க ஜெயமோகன் தன் சிறுகதைகளில் கையாளப்பட்டுள்ள மொழிநடையின் அவசியத்தை அறியமுடிகின்றது. சான்றாக,                                                                                                                                                      ‘பெயல எழுப்பி தெக்குக் கண்டத்தில போயி மட்டையோ தேங்காயோ விழுந்து கெடக்கா என்னு பாக்கச்சொல்லு; சின்வள எழுப்பாண்ட…’
    ‘காலம்பற  என்ன திண்ணிய? மரச்சீனி உப்புக்கண்டம் போட்டு கடுங்காப்பி எடுக்கட்டா? என்றாள்.                                                  இவ்வரிகளின் மூலம் ஆசிரியர் அப்பகுதி மக்களின்  மொழியை அப்படியே பயன்படுத்தும் வட்டாரப்போக்கு புலப்படுகிறது. வேறு வட்டாரத்தைச் சார்ந்தவர்களாக  இருப்பினும் இம்மொழிநடையை விரும்பி வாசிப்பவர்களாகவே இருந்தனர்.

    யதார்த்தச் சித்திரிப்பு:

    தேவகிச்சித்தியின் டைரி’ என்ற சிறுகதையில் இரண்டு தம்பதியர் இருக்கின்றனர். இளையவனின் மணைவியான தேவகிக்கு டைரி எழுதும் பழக்கம் உள்ளது. அதை யாரும் அறியாதவாறு எழுதி வருகின்றாள். ஒரு நாள் அந்நிகழ்வு தெரிந்தவுடன் அந்த டைரியை யாரிடமும் காண்பிக்கும் முன்பு எரித்து விடுகிறாள். அதில் மறைக்கப்பட  வேண்டியவை எவையும் இல்லை என்று கூறுகிறாள். இருப்பினும் அவளை விவாகரத்து செய்யுமளவிற்குச் சென்றுவிட்டது. இந்நிகழ்வினை ஆராயும்பொழுது, ஒரு பெண் தனக்கென்று ரகசியமான கருத்துக்கள் என்று எதையும் மறைத்து வைப்பதற்கென்று இச்சமூகத்தில் உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்ற கருத்தைப் புலப்படுத்துவதை உணரமுடிகின்றது.

    வழிகாட்டி:

    பார்வையற்ற ஒருவர் தன்னுடைய கடுமையான பயிற்சியினாலும் முயற்சியினாலும் சிறந்தவராகத் திகழ முடியும் என்பதனை ஜெயமோகன் தன் சிறுகதை வழியே விவரித்துள்ளார். ‘மன்மதன்’ என்ற தலைப்பின் கீழுள்ள சிறுகதையில் பார்வையற்ற ஒருவர் கோயில் சிற்பங்களைப்பற்றி எடுத்துக்கூறும் வழிகாட்டியாக உள்ளார். அவரைக் கண்டவர்கள், இவரால் எவ்வாறு ஒரு வழிகாட்டியாக இருக்க முடியும் என்று எண்ணுபவர்களை வியப்பில் ஆழ்த்தும் வண்ணம், கோயில் சிற்பங்களின் வறலாறுகளை தெளிவாக எடுத்துக்கூறுகின்றர். இதன் மூலம் திறமைக்குத் தடைகள் கிடையாது என்ற கருத்தை பார்வையற்றோர்  வழி  மெய்ப்பித்துக்காட்டியுள்ளார்.

    புனை கதைகள்:

    ஜெயமோகன் பன்முகத்தன்மை கொண்ட சிறுகதைகளை ஒரே காலகட்டத்தில் எழுதியுள்ளமை சிறப்பிற்குரியது. இதன் காரணம் வாசகர்களின் ஆர்வத்தைத் தூண்டுவதற்காக அல்ல என்றும், அப்பொழுது என்ன தோன்றியதோ அதைப் படைப்பாகப் படைத்துக் காட்டியுள்ளதாகவும் அவரே குறிப்பிட்டுள்ளமையை அறிய முடிகின்றது. ஆசிரியர். புனைகதைகளில் மிகையான கற்பனைப்புனைவைப் பயன்படுத்தியுள்ளார் என்பதற்கு ‘நாகம்’ சிறுகதை சான்றாக அமைந்துள்ளது. நாகத்திற்கும்  ஒரு பெண்ணின்மீது காமம் ஏற்பட்டு அவளைத்தேடி வருகிறது. அப்பெண்ணும் அதை ஒரு நாகம் எனக் கருதி அச்சம் கொள்ளவில்லை. அவள் அந்நாகத்தை ஒரு விஷமுள்ள மண்புழு என்றே நினைக்கின்றாள். எனவே ஒரு நாகத்திற்கும் மானிடப் பெண்ணுக்குமான காம உணர்வுகளை வெளிப்படுத்துவதன் மூலம் ஜெயமோகனின் புனைவுத்திறன் மிகையை நம்மால் உணர முடிகின்றது.                                                                                                                        பேச்சிப்பாறையின் வளங்களைப் பற்றிச் சிங்கனும் சிங்கியும் குறிப்பிடுகையில், சங்க இலக்கியங்களில் காணப்படுகின்ற இயற்கை வளங்களோடு ஒப்பிடக்கூடியதாக உள்ளது. ‘படுகை’ என்ற தலைப்பிலமைந்த சிறுகதையில் மழை வளங்களினால் மக்கள் அனுபவிக்கும் செல்வச் செழிப்பினையும், மழை பொய்த்துப்போன காலத்தில் அம்மக்கள் படும் இன்னல்களையும் ஆசிரியர் படம்பிடித்துக் காட்டியுள்ளமையை அறியமுடிகின்றது.

    சமுதாயச் சூழல்:                                                                   ஒரு சிறிய நிலப்பரப்பில் வாழக்கூடிய மக்களின் வாழ்க்கை முறையைப் பின்பற்றி வாழும் மக்கள் தொகுதி சமுதாயம் எனப்படும். படைப்பாளி தன் சமூக வளர்ச்சிக்கான இலக்கியங்களையும் படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தன்னலம் கருதாமல் தொண்டு செய்யும் மனம் படைத்தவராகவும் திகழ்கிறார். சமுதாய வாழ்க்கை என்பது தன்னைச் சுற்றியுள்ள மக்களின் நிலையை பெரும்பான்மை குறிப்பிட்டிருந்தாலும், பிற வட்டார மக்களின் நிலையையும் எடுத்துக் கூறுவதாக இருத்தல் வேண்டும். அவ்வகையில் ஜெயமோகன் சிறந்து விளங்குவதை அவரது படைப்புக்களின் வழி நம்மால் உணரமுடிகின்றது. படைப்பாளி என்பவன் சாதாரண மக்களிடமிருந்து தனித்துவம்பெற்றுத் திகழ்வதால்  வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் சமுதாயம் தரும் பட்டறிவுகளை அப்படியே தம் படைப்புகளில் பதிவு செய்கிறார். இவ்வடிப்படையில் நோக்கும்பொழுது  படைப்பிலக்கியம் என்பது பலருடைய கூட்டு உற்பத்தியாகும். “நினைவானது மனத்தின் ஆசைகள், அபிலாசைகள், விருப்பு வெறுப்புகள் எப்படி தன் மனத்தில் தாங்கிப் பின் கனவு வழி வெளிப்படுமோ அப்படியே முத்திரை குத்தப்பெற வேண்டும்”2 என்ற கூற்று சமதாயத்திற்கும் படைப்புக்கும் உற்ற உறவை விளக்குகின்றது. சமுதாயத்தை நீக்கிவிட்டுப் படைப்பாளியை மட்டும் தனித்துப் பார்க்க இயலாது. சமுதாயம் கொடுக்கும் பட்டறிவு, மற்றும்அனுபவ அறிவு, அவனுக்குச் சமுதாயத்தின் மீதான வெளிப்பாடுகள், இவையே படைப்பாக உருவெடுக்கின்றன. ஜெயமோகன் தன்னுடைய பிறப்பிடமான நாஞ்சில் வட்டாரச்சமூகத்தின் தாக்கங்களையே பெரும்பான்மை படைத்திருப்பினும் மற்ற பகுதி மக்களின் வாழ்க்கை நிலையையும் படைத்துக் காட்டியுள்ளமையை மறுக்க இயலாது.

    ‘ஓலைச்சிலுவை’ என்னும் சிறுகதையில் நாகர்கோயில் பகுதியிலுள்ள பனையேறி நாடார்களின் வாழ்க்கை முறையைக் குறிப்பிட்டுள்ளார். அச்சமுதாயத்தில், ஒரு குடும்பத்தலைவன் தன்னுடைய தொழிலான பனையேறும் தெழிலில் ஈடுபடும்பொழுது,  பனைமரம் வழுக்கிக் கீழே விழுந்து இறந்துவிடுகின்றான். அவ்விழைவு அவனுடைய குடும்பத்தைப் பெரிதும் பாதிக்கின்றது. அவனுடைய குழந்தைகளின் வாழ்க்கையானது  செம்மைபெறாமல் திசைமாறிச் செல்வதினை வெளிப்படுத்தியுள்ளார். அவர்களின் குழந்தைகள் ஒரு வேளை உணவுக்குக்கூட வழியில்லாமல் தவிக்கும் நிலையினையும், ஆரம்பக் கல்வியினைக்கூடப் பெறமுடியாமல் படும்  இன்னல்களையும் படைப்பாளி பதிவு செய்துள்ளார்.

    ‘சேறு’ என்ற சிறுகதையில் பிள்ளைமார் சமுதாயத்தில் வசதியாக வாழ்ந்த குடும்பம், சிறிது காலகட்டத்தில் மிகுந்த வறுமையில் வாடுகின்றது.  ஒரு வீட்டில் கணவன் இறந்துவிட்டான், அவனுக்கு இரண்டு ஆண்குழந்தைகள். வீட்டுத்தலைவியானவள்  வேலைக்குச் சென்றும் பழக்கம் கிடையாது. சிறு பொருட்கள் வாங்கக்கூட கடைக்குச்சென்று பழக்கப்படாதவள். சூழ்நிலை காரணமாக வயல்வேலைக்குச் செல்கின்றாள். அந்த வேலையைச் சரியாகச் செய்யாத காரணத்தால், அவளுடன் வேலை பார்ப்பவர்களின் எள்ளலுக்கு ஆளாகின்றாள். இதனால் மனமுடைந்து வேலைக்குச் செல்லமுடியமால், தன் குழந்தைகளுக்குத் தேவையான பொருட்களை வாங்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுவதினை நம்மால் உணரமுடிகின்றது.

    முடிவுரை:                                                                                           ஜெயமோகன் மார்க்சியச் சிந்தனைவாதியாகவும், சமூகச் சிந்தனைகளையும் கொண்டு  இலக்கியத்தில் தனக்கென ஒரு தனித்த இடத்தினைப் பிடித்தவர்.  இவருடைய சிறுகதைகளின் நிலைக்கலன்களாகப்  பொதுவுடைமைச் சிந்தனையும், யதார்த்தமும்,  புனைவும் வெளிப்பட்டுள்ளமையை  இக்கட்டுரையின் வழி  விளங்கிக்கொள்ள முடிகின்றது.

    அடிக்குறிப்பு:

    1.மீனாட்சி முருகரத்தினம், கல்வியின் சிறுகதைக்கலை,

    2.தமிழவன்,மு.நூ.,ப.61

    *****

     கட்டுரையாளர் –  தமிழ்  முனைவர்பட்ட ஆய்வாளர் ,
    அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி
    சிவகாசி.

    Share
  • திருக்குறளில் ஆளுமை மேம்பாடு

    -இரா.சத்தியலட்சுமி

    முன்னுரை

    மக்களுடைய வாழக்கையை அகம் புறம் என்று பாகுபாடு செய்து அதன் பல்வேறு இயல்புகளை நுட்பமாக ஆராய்ந்த சங்க காலத்தையொட்டிப் புறப்பொருளின் ஒரு பகுதியாகிய அறத்தின் சிறப்பினை எடுத்துரைக்கும் அறநூல்கள் பல இயற்றப்பட்டன. அவை அமைப்பு முறையாலும்  அறிவுறுத்தும் கருத்துக்களாலும் தனிப்பட்டதோர் இலக்கிய வகைமையாகச் சிறப்புற்று விளங்குகின்றன. அவற்றைப் பிற்காலச் சான்றோர்கள் நீதி நூல்கள் என்னும் பெயரால் அழைக்கலாயினர். அவற்றுள் திருக்குறளும் ஒன்று.

    ஆளுமை

    ஆளுமை உணர்வு அனைத்து உயிர்களிடமும் காணப்படுகின்றது. அது அறிவு  உள்ள மனிதனிடம் மேலோங்கி நிற்கிறது. ”யுங்” முழுமையான ஆளுமையைத் தற்பவம் (self) என்று புலப்படுத்துகிறார்.

    ஃப்ராய்டு ஆளுமை குறித்து உணர்த்துகையில் நடத்தையியலும் (behaviourism) ஆளுமையியலும் இயைபுத்துறைகள் (associates) ஆகும் என்கிறார். நடத்தைகளுக்கான காரணிகளைக் கண்டறியும் போக்கில் ஆளுமை உளவியல் தோன்றிற்று என்பர். நனவிலியே மனித ஆளுமையைத் தீர்மானிக்கிறது என்று ஃப்ராய்டு குறிப்பிடுகிறார். குழந்தைப்பருவ அனுபவங்கள் மனித ஆளுமையின் பெரும்பங்கு வகிப்பதாகக் குறிப்பிடுவார்.

    மேலும் ஆளுமை மனிதனிடம் காணப்படும் ஒட்டுமொத்த குணங்களின் தொகுப்பாக அமைவது. இத்தகைய ஆளுமையைக் கொண்டு ஒருவரை அடையாளப்படுத்திட முடியும். இதனை ஒரு மனிதன் மனிதனாக வாழவும் மாமனிதனாக மேம்படவும் அவனுக்கு அடிப்படைத்தேவை ஆளுமைத்திறனாகும். (personality) இத்திறனை மேம்படுத்த (developement) மனிதன் பல களங்களில் செயல்பட வேண்டும். ஆளுமைத்திறன் என்பது ஒரு மனிதனுடைய குணங்களின் (characters) திறமைகளின் (talent) தொகுப்பாகும். 

    திருக்குறளின் தனிச்சிறப்பு:

    இலக்கியம் என்பது மனித இனத்தின் அனைத்துலக மொழியாகும். அது குறிப்பிட்ட பண்பாட்டு வரையறைகளையும் கட்டுப்பாடுகளையும் கடந்து அனைத்துலக நோக்கோடு மனிதனுடைய விருப்பு வெறுப்புகளையும் எண்ணங்களையும், எழுச்சிகளையும், வேட்கைளையும் குறிக்கோள்களையும் பிரதிப்பலிக்கிறது. இலக்கியத்தின் சிறப்பினை இலக்கியம் அளிக்கும் இன்ப நிலைபேறுடையதாக இருக்க வேண்டுமானால் மனித வாழ்க்கையை மேம்பாடுடையதாக்கும். அறநெறிக் கருத்துக்களும் அனுபவ உண்மைகளும் அதில் பெற்றுத்தான் ஆக வேண்டும். அப்பொழுதுதான் அது வாழும் இலக்கியமாக விளங்க முடியும் என்று டி.எஸ். எலியட் குறிப்பிடுகிறார். படைக்கப்பட்ட இலக்கியத்தில் முக்காலத்திற்கும் பயனுடையதாக முக்காலத்திற்கும் பொருந்துவதாக  திருக்குறள்  உள்ளது. 

    திருக்குறளில் ஆளுமை:

    திருக்குறள் மனிதனது ஆளுமைப்பண்பை மேம்படுத்துவதற்குத் தக்க வழிகாட்டியாக அமைந்துள்ளது. ஒவ்வொரு மனிதனிடத்தும் இறை அம்சம் பொருந்தியுள்ளது. அவன் தன்னை விலங்குகள் போன்றோ குற்றம்புரிந்தவன் என்றோ எண்ணி தாழ்த்திக் கொள்ள வேண்டியதில்லை நம்பிக்கையோடு வாழ வேண்டும்.  இதனை,

    வையத்திள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
    தெய்வத்துள் வைக்கப் படும்.     (குறள்.50)

    என்று கூறினார் திருவள்ளுவர். எனவே வாழ்வாங்கு வாழ அவன் தன் ஆளுமைப் பண்பை மேம்படுத்திக் கொள்வது அவசியம். அப்பொழுதுதான் அவன் தன்னிடம் உள்ள உயர்ந்த இறைப்பண்பை உணர்ந்து உயர்நிலையை அடைய முடியும்.

    ஒருவர் நமக்குத் தீங்கிழைத்ததாக நாம் கருதினால் உடனே அவருக்குப் பன்மடங்கு தீங்கிழைக்க விரும்புகிறோம். எவ்வளவோ நல்ல செயல்கள் சாதனைகள் செய்வதில் நம் நேரத்தை செலவிடுவதை விட்டுவிட்டு அவருக்குத் தீமை செய்வதிலேயே நமது சிந்தனையையும் செயல்திறனையும் வீணாக்கும்போது நமது மன அமைதி சீர்குலைகிறது.

    இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
    நன்னயம் செய்து விடல்.      (குறள்.314)

    என்றார் வள்ளுவர். நன்மை செய்ய நமக்கு மனம் வராவிட்டாலும் பழிவாங்கும் எண்ணத்தை விட்டுவிடுவதாலே நம் மனம் அமைதி பெற முடியும். நம் மனத்தைப் பிற செயல்களில் ஈடுபடுத்திக் கொள்ள முடியும். 

    கல்வி சிறப்பு:

    கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்னும் வாக்கிற்கிணங்க கல்வியின் அவசியத்தைப் பற்றி வள்ளுவரும்,

    கற்க கசடறக் கற்பவை கற்றப்பின்
    நிற்க அதற்குத் தக.    (குறள். 391) என்று குறிப்பிட்டதோடு, எண்ணும் எழுத்தும் வாழும் மனிதர்ளுக்கு உயிர். கல்வியினால் அறிவு பெருகும். ஆகையால் அனைவரும் கல்விகற்று வாழ்க்கையில் உயர வேண்டும் எனக் குறிப்பிடுகிறார்.

    சீரிய ஆளுமைப் பண்பு உடையவர்கள் எந்த ஒரு பிரச்சனையையும் துணிவோடு சமாளிக்க வேண்டும் என,

    அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
    எஞ்சாமை வேந்தர்க் கியல்பு  (குறள்-382)

    என்ற குறளில் தான் எதிர்கொள்ளும் எந்த ஒரு பிரச்சினையைக் கண்டும் அஞ்சி ஒளிந்துவிடாது துணிவோடு சமாளிப்பது  சிறந்த பண்பு எனக் கூறுகிறார். 

    மன ஒழுங்கு:

    தான் மேற்கொண்டிருக்கின்ற செயல்திட்டத்தின் மீது மனதை ஒருமுகப்படுத்தி அர்ப்பணிப்பு உணர்வோடு செயல்படுகின்ற தன்மை ஒரு தலைவனுக்குத் தேவையானதாக இருக்கிறது .இதனை,

    எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
    திண்ணியர் ஆகப் பெறின்.        (குறள்.666)என்ற குறளில் எண்ணியார் என்ற சொல் ஒருவரின் மன உறுதியைக் குறிக்கிறது. ஒரு செயலைச் செய்ய நினைப்பவர் மன உறுதிஉடைய ஆளுமைப் பண்பு கொண்டவராகத் தான் எண்ணிய எல்லா இலக்குகளையும் திட்டமிட்டப்படி தவறாது செய்து முடிப்பார்கள் என்று கூறுகிறார். மேலும்,

    கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
    தூக்கம் கடிந்து செயல்.     (குறள்.668) ஏற்றுக் கொண்ட தொழிலை மனங்கலங்காமல் காலந்தாழ்த்தாமல் சோர்வில்லாமல் முயற்சியோடும் தன் மன உணர்வோடும் செய்ய வேண்டும் என்று வள்ளுவர் தன் குறள்வழி எடுத்துக் கூறுகிறார்.

    மாபெரும் செயலைச் செய்துமுடிப்பதற்கு மனவலிமைதான் அடிப்படைக் காரணமாக அமைகிறது. எத்தகைய சூழலிலும் தளராத மன வலிமையை

    உள்ளம் இல்லாதவர் எய்தார் உலகத்து
    வள்ளியம் என்னும் செருக்கு.  (குறள்.598) என்னும் குறளில் ஊக்கம் இல்லாதவர்கள் இவ்வுலகத்தில் உயர்ந்த நிலையை அடைந்து விட்டோம் என்னும் பெருமையை ஒருபோதும் அடைய மாட்டார்கள் எனக் கூறுகிறார்.

    ஒருவர் ஆளுமைப்பண்பில் சிறந்து விளங்கினால் சமூகம் அவனைப் பாராட்டும். சமூகத்திற்கேற்ற முறையில் பண்புகள் சிறந்திருத்தல் நலம்.   இதனை,

    உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
    கல்லார் அறிவிலா தார்.      (குறள்.140) 

    என்னதான் பல துறைகளில் தேர்ச்சிபெற்று கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினாலும் உலகத்தோடு ஒத்துவாழக் கற்றிருக்க வேண்டும் என வள்ளுவர் எடுத்துக் கூறுகிறார். 

    தலைமைப் பண்பு:

    தனக்குக் கீழ் செயல்படுவர்களின் தனித்திறனை அறிந்து அவர்களுக்குரிய பணிகளை ஒதுக்கீடு செய்வது தலைமைக்குரிய தனித்திறனாகும். இதனை வள்ளுவர்,

    இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
    அதனை அவன்கண் விடல்.      (குறள்.517) என்ற குறளில் இந்தச் செயலை இந்த முறையில் இவன் செய்து முடிப்பான் என்று தெரிந்து அச்செயலை அவனிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறுகிறார்.

    சோர்வு இல்லாது அஞ்சாது சொல்வதற்கு வல்லனாகச் சொல்லின் செல்வனாக ஒருவன் திகழ்வானேயானால் அவனை யாராலும் வெல்ல இயலாது என்று அறுதியிட்டு கூறுகிறது குறள். இதனை,

    சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
    இகல்வெல்லல் யார்க்கும் அரிது.     (குறள்.647)

    என்ற குறளில் ஒருவன் பேச்சுத் திறனோடு விளங்கினால் எதையும் வெல்ல இயலும் எனக் குறிப்பிடுகிறார்.

    உறவு மேம்பாடுக்கான வழிகள்:

    மனித உறவுகளை மேம்படுத்த வேண்டிய ஒருவர்  சினம் என்னும் தீய பண்பை அறவே ஒழிக்க வேண்டும். சினம் என்னும் தீய குணம் உடையவர்களை தீய குணமே அழித்து விடும். அதுமட்டும் இல்லாமல் நீண்ட நாட்களாகப் பாசம் கொண்ட உற்றார் உறவினர் நண்பர் ஆகியோர் அவர்களிடம் இருந்து பிரித்து விடும் இதனை வள்ளுவர்,

    சினம்என்னும் சேர்ந்தாரைக் கொல்லி
    இனம்என்னும் 
    ஏமப் புணையைச் சுடும்.       (குறள். 306)

    என்ற குறளில் எடுத்துக் கூறுகிறார். மேலும் தீய செயல்கள் பிறர்க்கு மட்டும் இன்றி நமக்கும் தீய விளைவுகளையே ஏற்படுத்தும்; எனவே தீய எண்ணம் தீய செயல் போன்றவற்றை அறவே ஒழிக்க வேண்டும் இதனைத்

    தீயவை தீய  பயத்தலால்  தீயவை
    தீயனும் அஞ்சப் படும்.    (குறள்.202) என்று தன் குறள்வழி வள்ளுவர் எடுத்துக் கூறுகிறார். 

    முடிவுரை:

    மனிதன் ஆளுமைப் பண்போடு வாழ்வதற்குத் திருக்குறள் ஒரு வழிகாட்டி நூலாக அமைந்துள்ளது. அவற்றில் மனிதன் இறைத்தன்மை உடையவனாகவும், அவனுடைய சிந்தனையின் செல்வாக்கு, மனப்பாங்கு, கற்கும் கல்வியின் பெருமை, மனம் கலங்காத தன்மை, மன உறுதி, ஊக்கமுடைமை, பேச்சுத்திறன் போன்றவற்றில் ஆளுமை மேம்பாடு உடையவனாக விளங்க வேண்டும் என வள்ளுவர் தன் குறள்வழி எடுத்துக் கூறுகின்றார்.

    பார்வை நூல்

    1. எஸ். சுந்தரசீனிவாசன் – ஆளுமை மேம்பாடு
    2. பரிமேலழகர் உரை – திருக்குறள்

    *****

    கட்டுரையாளர் – தமிழ் முனைவர்பட்ட ஆய்வாளர்
    அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி
    சிவகாசி

     

    Share
  • பொருநராற்றுப்படையில் மனிதவள மேம்பாடு

    -மு.சுமதி

    முன்னுரை:

    மனிதவள மேம்பாடு எனப்படுவது இயற்கை வளங்களையும், கனிம வளங்களையும், முறையாகக் கையாண்டு தன் ஆற்றல்களைப் பயன்படுத்தி,  மேலும் விரிவடையச் செய்வதாகும். நாட்டில் உள்ள மக்களின் கல்வி, விவசாயம், தொழில், மருத்துவம், மக்களின் ஒற்றுமை, தொழில்நுட்பம், அரசியல், பொருளாதாரம், ஒழுக்கம், நிதி, நீதி, போர்வெற்றி, பெருந்தன்மை, விருந்தோம்பல் ஆகியவற்றை விளக்குவதாகும்.

    தேவைக் கோட்பாடு:

    மனித வளமானது பணியாளார்களின் உள்ளார்ந்த திறமைகள், அவர்கள் பெற்ற அறிவு மற்றும் ஆற்றல்கள் ஆகியவற்றைக் குறிக்கிறது. மனித இனம் மேம்பாடு அடைய வேண்டுமெனில் மனித உறவுகள் மேம்பட வேண்டும். மனித உறவுகளை மேம்படுத்த ஒவ்வொருவரின் மனமும் மேம்பட வேண்டும். ஒரு மனிதன் தன்னை மேம்படுத்திக் கொண்டு சமுதாயத்திற்குத் தொண்டாற்ற வேண்டுமென்றால் முதலில் அவன் உடல் நலத்துடன் இருப்பது இன்றியமையாததாகும். ஒரு மனிதன் பசியோடு காணப்பட்டால் அவன் திறமைகளை வெளிக்காட்ட முடியாது. எனவே பொருநர்கள் கரிகாற் பெருவளத்தானிடம் சென்று இசையை மீட்டிப் பாடல் பாடி அவனை இன்புறச் செய்து தங்கள் வறுமையைப் போக்கிக் கொள்ள முற்படுகிறார்கள்.

    பழுமரம் உள்ளிய பறவையின் யானுமவன்
    இழுமென் சும்மை இடனுடை வரைப்பின்  (பொருநர்-65) பழுமரத்தைப் பறவைகள் நாடிச் செல்வதைப் போலப் புரவலர்களை நாடி மக்கள் செல்வது இயல்பு என்று திருவள்ளுவரும் கூறியுள்ளார் இதனை,

    பயன் மரம் உள்ளப் பழுத்தற்றாற் செல்வம்
    நயனுடை யான்கட் படின்.    (குறள்.216) என்று விளக்குகிறது குறள். 

    பொருநர்களுக்கு விழாக்காலங்களில் மட்டுமே யாழை மீட்டி ஆடிப்பாடும் வேலை இருக்கும். திருவிழாக் காலங்களில் மட்டுமே அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும். திருவிழா முடித்தபின் அவர்கள் வள்ளலை நாடிச் செல்வர். அவ்வாறு கரிகாலனிடம் பெரும்பரிசு வாங்கி வந்த பொருநர் மற்றொரு பொருநரை ஆற்றுப்படுத்தி அவரின் வறுமை நிலையினை மாற்றிச் செல்வச் செழிப்போடு வாழ வழிகாட்டுகிறார். 

    விருந்தோம்பல்:

    மனிதவள மேம்பாட்டில் அடிப்படைக் கூறே தேவைக் கோட்பாடு தான். மனிதனின் முதல் தேவையே அவனுடைய வயிற்றுப் பசியை நீக்குவதாகும். விருந்தினர்களைப் போற்றுதல் சமுதாய உறவுநிலை செம்மையடைய வழிவகுக்கும். விருந்து என்ற சொல்லைத் தொல்காப்பியர் புதுமை என்று குறிப்பிடுகிறார். நமக்கு அறிமுகமல்லாத புதியவர்களுக்கு அதாவது விருந்தினர்களுக்குத் தேவையான உணவு, தங்கும் இடம் போன்றவற்றைச் செய்வதே விருந்தோம்பல் தம்மைநாடி வருபவரை இன்முகத்துடன் வரவேற்று உபசரித்தல் தமிழ் மரபு ஆகும்.

    பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
    தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.    (குறள்-322) என்ற குறள்வழி நின்று வாழ்ந்தவர்கள் சங்க காலத் தமிழர்கள். பரிசில்பெற வேண்டி வந்த பொருநரைக் கரிகாலன் அரண்மனையில் கண்டஉடன் விரைந்து வருகிறான். அவர் பாடலைக் கேட்ட  கரிகாலன் அவருக்கு வெகு அருகில் அமர்ந்தான்; தன் கண்களால் பொருநரை விழுங்கிவிடுவது போல் அன்புடன் பார்த்தான்; அந்தப் பார்வை பாணரின் உள்ளத்தைக் குளிர வைத்தது.

    பருகு அன்ன அருகா நோக்க மோடு
    உருகுபவை போல் என்பு குளிர் கொளீஇ (பொருநர் 78-79)ஒரு மனிதனின் தன்னிறைவுத்  தேவையென்பது பிறிதொரு மனிதனின் அடிப்படைத் தேவையை நிறைவேற்றுவதாகும்.

    தொழில்வள மேம்பாடு:

    ஒரு மனிதன் செய்யும் தொழிலால் மனிதவள மேம்பாடு ஏற்படலாம். ஆயர், உழவர், கூத்தர், கொல்லர்,  கம்மியர், வணிகர்.  தச்சர் ஆகியவற்றுள் தலையாயத் தொழிலாகக் கருதப்படுவது உழவுத் தொழில் ஆகும்.

    உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றுஎல்லாம்
    தொழுதுண்டு பின்செல் பவர்.    (குறள்.1033)என்று வள்ளுவரும் உழவுத் தொழிலைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். காவிரியின் நீர் வளமையால் கரிகாலனின் நாடு செழுமையோடு காணப்படுகிறது. அங்கு விவசாயம் மேலோங்கி நெற்பயிர்களின் குவியல் மேருமலை போல காட்சியளிக்கிறது.

    “   கூனிக் குயத்தின் வாய்நெல் அரிந்து
    சூடு கோடாகப் பிறக்கி நாள்தோறும்
    குன்று எனக்குவைஇய குன்றாக் குப்பை
    கடுந்தெற்று மூடையின் இடம்கெடக் கிடக்கும்
    சாலி நெல்லின், சிறைகொள் வேலி,
    ஆயிரம் விளையுட்டு ஆக ,
    காவிரி புரக்கும் நாடு கிழவோனே” வற்றாத காவிரி நீர்ப்பாசனத்தால் உழவர் நல்ல விளைச்சலைக் கண்டு பெருமைப்படுகின்றனர். காவிரி நாடு தன் நாடு என்று வீரமுழக்கம் அடையும் அளவிற்குக் கரிகாலனின் நாட்டு மக்கள் தொழிலால் மேம்பட்டுக் காணப்படுகிறார்கள்.

    பொருநர்கள் தம் யாழை மீட்டிப் பாட்டுப் பாடும் வல்லமை படைத்தவர்கள். பாணர்கள் தங்கள் தொழில் கருவியான யாழின் மேல் அதிக பற்றுடையவர்கள். பாலையாழ் மூலம் இசைக்கப்படும் இசையை அனைவரும் இரசிப்பர். வழிப்பறிக் கொள்ளையர்கள் கூட யாழின் இசையைக் கேட்டதும், தங்கள் கொலை, கொள்ளைத் தொழிலை மறப்பர். தங்கள் கைகளில் மறைத்து வைத்துள்ள கொடிய கொலைக் கருவிகளைக் கீழே போட்டு விடுவர்.

    ஆறுஅலை கள்வர் படைவிட அருளின்
    மாறுதலை பெயர்க்கும் மருவுஇன் பாலை. (பொருநர் 21-22) என்ற பாடலின் மூலம் பொருநர்கள் தம் தொழிலில் மேம்பட்டுக் காணப்பட்டதை அறிய முடிகிறது.

    புலமை மேம்பாடு:

    பொருநர்கள் இசைக் கலையை நன்கு அறிந்தவர்கள் அக்காலத்தில் கலைஞர்கள் பிற கலைஞர்களையும் மதித்தனர்.

    கோடியர் தலைவ கொண்டது அறிந
    அறியாமையின் நெறிதிரிந்து ஒராஅது
    ஆற்று எதிர்ப்படுதலும் நோற்றதன் பயனே
    போற்றிக் கேண்மதி புகழ் மேம்படுந (பொருநர் 57-60) பரந்த உள்ளம் கொண்ட பொருநர்கள் தாம் பெற்ற நன்மையைப் பிற பொருநர்களும் பெற வேண்டும் என்ற உயர்ந்த மேம்பாட்டுடன் காணப்பட்டனர். இவ்வாறு தனிமனிதன் உடல், உள்ளம், தொழில், புலமை, ஆகியவற்றால் மேம்பாடு அடையும்போது சமுதாயமும் தானாகவே மேம்படும் நிலை உருவாகும்.

    சமுதாய உணர்வினால் ஏற்படும் மனிதவள மேம்பாடு:

    ஒருவனுக்குத் தான் வாழும் சமுதாயத்தின் மேல் பற்றும், பாசமும், தன் சமுதாயத்தில் வாழும் மக்கள் மீது அக்கறையும் இருக்க வேண்டும். கரிகாற் சோழனக்குத் தன் நாட்டில் வாழும் மக்களிடம் மட்டுமல்லாமல் தன்னை நாடி வரும் வறிய கலைஞர்கள் மீதும் அக்கறை காணப்படுகிறது.

    வறியார்க்கொன்று ஈவதே ஈகை மற்றுஎல்லாம்
    குறிஎதிர்ப்பை நீர துடைத்து.   (குறள்.221)என்ற குறளுக்கேற்ப வறியவார்களிடம் ஈகைப் பண்போடு செயல்படும் ஆளுமைத் திறன் உடையவனாகக் கரிகாலன் காணப்படுகிறான்.

    வறியவர் செல்வந்தராக மேம்படுதல்:

    ஒரு மனிதர் வறுமை உடையவரா, செல்வந்தரா, என்ற நிலையினைப் பிரித்துக் காட்டுவது அவர்களுடைய ஆடை அணிகலன்களே ஆகும். பொருநர் கரிகாலனைக் காண வரும்போது கிழிந்த வேர்வையால் நனைந்த ஆடைகளுடன் வந்தார்.

    ஈரும் பேனும் இருந்து இறைகூடி
    வேரொடு நனைந்து வேற்றுஇழை நுழைந்த
    துன்னற் சிதாஅர் துவர நீக்கி  (பொருநர் 79-81) வறுமையால் வாடிநின்ற பொருநர்களின் ஆடைகளைக் களைந்து அதி அற்புதமான நூலிழையால் செய்யப்பட்ட புத்தம்புது ஆடைகளைக் கொடுத்து அணியச் செய்தான்; அந்த ஆடையில் பூ வேலைப்பாடு நெய்து தரத்தில் பாம்பின் தோலை ஒத்திருந்தது.

    நோக்கு நுழைகல்லா நுண்மைய பூக்கனிந்து
    அரவுஉரி அன்ன, அறுவை நல்கி,
    மழைஎன மருளும் மகிழ்செய் மாடத்து,
    இழைஅணி வனப்பின் இன்நகை மகளிர்
    போக்குஇல் பொலங்கலம் நிறைய பல்கால்
    வாக்குபு தரத்தர வருத்தம் வீட
    ஆர உண்டு பேரஞர் போக்கி
    செருக்கொடு நின்ற காலை (பொருநர் 82-89)

    விருந்தினர்களுக்கு ஆடைகள் மட்டும் நல்காமல் அரண்மனையில் உள்ள பணிப்பெண்களை நடனமாடி விருந்தினர்களின் மனம் மகிழ்ச்சி அடையுமாறு அவர்களுக்குப் பொன்னால் ஆகிய கிண்ணத்தில் கள் நிறையக் கொடுப்பார்கள். அவர்களின் கவலை அனைத்தும் மறந்து மனம் இன்பமடையும் பாணர்கள் இன்பமுற்று தங்கள் ஊருக்குப் புறப்படுகிறோம் என்று கூறினால் இன்னும் சிறிது நாள் தங்கும்படிச் சொல்வான் கரிகாலன். யானைகளையும் அதன் குட்டிகளையும் பரிசில்களையும் கொடுத்து அனுப்புவான்; விருந்தினர் கிளம்பும்போது அவர்களுடன் ஏழு அடி பின் சென்று இன்முகத்தோடு வழியனுப்புவான்.

    கரிகாலனின் நுண்ணறிவு மேம்பாட்டுத் திறன்:

    கரிகாலன் தன் அன்னையின் கருவில் இருக்கும்போதே அரசாளும் தகுதி பெற்றவன். கரிகாலனின் தந்தை இளஞ்சேட்சென்னி அவன் பிறப்பதற்கு முன்பே உயிர்நீத்தார். ஆகவே கரிகாலனுக்கு கருவில் வளரும் போதே அரசருக்குண்டான தகுதி கிட்டியது. பெரும்பாலான உளவியலாளர்கள், மரபுத்தன்மை, சுற்றுச்சூழல் ஆகிய இரண்டும் நுண்ணறிவு வளர்ச்சிக்கு உதவுவதாக நம்புகின்றனர். ஒருவரின் நுண்ணறிவுக்கு மரபுப்பண்பு மட்டும் 80 சதம் பொறுப்புடையது. மீதமுள்ள 20 சதம் நுண்ணறிவு வளர்ச்சியைப் புற உலகில் கல்வி, சூழ்நிலை இவற்றிடம் இருந்து கற்றுக் கொள்கிறார்கள். எனவே கரிகாலன் மன்னர் பரம்பரையை உடையவன் ஆதலால் சிறு வயதிலேயே அவனிடம் நுண்ணறிவு வெளிப்பட்டுக் காணப்படுகின்றது.

    கரிகாலனிடம் ஒரு வழக்கு தீர்ப்புக் கேட்டு வருகின்றது. வழக்கை உரைக்க வந்தவர்கள் இவன் சிறுவன் இவனால் எப்படி தீர்ப்பு கூற முடியும் என்று ஐயம் கொள்வதை அறிந்த கரிகாலன் வயது முதிர்ந்தவர்போல் வேடம் புனைந்து கொண்டு அறங்கூறு அவையத்து இருந்த வழக்கை ஆராய்ந்து முடிவு கூறினான். அம்முடிவு நீதியோடு பொருந்தி ஒத்திருந்ததைக் கண்டு அவ்வழக்காளரும் பிறரும் மகிழ்ந்தனர் என்ற செய்தியை,

    இளமை நாணி முதுமை எய்தி
    உரை முடிவு காட்டிய உரவோன் மருக   (மணிமேகலை.107- 108) என்று மணிமேகலையிலும்

    ‘உரை முடிவு காணான் இளமையோன் என்ற
    நரைமுது மக்கள் உவப்ப – நரை முடித்து
    சொல்லால் முறைசெய்தான் சோழன் குலவிச்சை
    கல்லாமற் பாகம் படும்’ (பழமொழி -21) என்ற பழமொழி நானூற்றில் வரும் பாடலாலும் அறிய முடிகிறது. 

    கரிகால் வளவனது பேராண்மை:

    தன் நாட்டு மக்களையும், இயற்கை வளங்களையும், பாணர்களையும் பாதுகாக்கும் கரிகாலன பிற மன்னர்களோடு போரிடும்போது அவனின் முகம் சீற்றம் அடையும்; கரிகாலனின் சீற்றத்திற்கு அசுரர்களை வென்ற முருகக் கடவுளின் சீற்றம் உவமையாகக் கூறப்படுகிறது.

    பவ்வ மீமிசைப் பகற்கதிர் பரப்பி
    வெவ்வெஞ் செல்வன் விசும்பு படர்ந்தாங்கு
    பிறந்து தவழ் கற்றதன் தொட்டு சிறந்த நன்
    நாடு செகிற் கொண்டு நாள்தொறும் வளர்ப்ப (பொருநர் 135-138) கதிரவன் காலையில் உதித்ததும் கடலின்மீது தன் சுடர்களைப் பரப்புவான் பின்னர் மெல்ல வானுக்குச் சென்று அங்கும் தன் கதிர்களைப் பரப்பி உலகிற்கு ஒளியைத் தருவான். கதிரவன் போன்று கரிகாலனும் பிறந்து தன் தாய்நாட்டைத் தன் பேராண்மையால் காத்தவன். பிற நாட்டையும் தன் வீரத்தால் தமக்குரிய நாடாக்கிக் கொண்டவன். பொருநர் ஆற்றுப்படையில் முடத்தாமக் கண்ணியார் கரிகாலனின் வீரத்திற்கு முருகனையும் அவனின் ஆட்சி எல்லைக்கு கதிரவனின் கதிர்களையும் உவமையாகக் கூறுவதிலிருந்து அவன் பேராண்மை படைத்தவன் என்பதை உணர முடிகிறது.

    கரிகாலன் சிறுவயதிலேயே போரில் பகைவரை வென்றவன் என்பதற்குத் தாய்ப்பால் அருந்தும் குட்டிப் பருவத்தில் இருக்கும் யாளி உவமையாகக் கூறப்படுகிறது. யாளி (அரிமா சிங்கம்) குடடிப் பருவத்திலேயே பெரிய யானையை வேட்டையாடிவிடும் அதைப் போலவே கரிகாலனும்

    வெண்ணித் தாக்கிய வெருவரு நோன்தாள்
    கண் ஆர்கண்ணி, கரிகால் வளவன்
    தாள்நிழல் மருங்கின் அணுகுபு குறுகித்
    தொழுதுமுன் நிற்குவிர் ஆயின்      (பொருநா் 147-150 ) பனம்பூ மாலையை அணிந்த சேரனையும் வேம்பு மாலையை அணிந்த பாண்டியனையும் வெண்ணி என்ற இடத்தில் போரிட்டு அவர்களை வென்றவன்; ஆத்தி மாலையை அணிந்த கரிகாலன் பகைவரின் சதியால் அவனின் கால்கள் தீக்கிரையாயின ஆகவே அவன் கரிகாலன் என்று அழைக்கப்பட்டான்.

    உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
    அச்சுஆணி அன்னார் உடைத்து. (குறள்.667) உருவத்தால் சிறியவர்கள் என்று யாரையும் இகழக் கூடாது. கரிகாலன் சிறு வயதிலிருந்தே நுண்ணறிவு கொண்டும் சேரர், பாண்டியர்களை அழித்துத்தன் நாட்டைக் காக்கும் பேராண்மை படைத்தவனாகவும் காணப்படுகிறான். கரிகாலன் சிறுவயதிலேயே பெரிய வினைகளைக் கொண்டு உய்க்கும் திட்பம் உடையவனாக, ஆளுமைப் பண்போடு சங்க இலக்கயங்களில் தனக்கென ஓர் இடம்பிடித்துள்ளான் என்பதில் ஐயமில்லை

    படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும்
    உடையான் அரசருள் ஏறு     (குறள். 381)

    அரசருள் தலைவன் ஆவதற்குத் தகுதி உடையவனிடம் நல்லபடை, நல்ல குடிமக்கள், நல் உணவு, தேவையான அளவுக்கு உற்பத்தி ஆகும். சூழல், நல்ல அமைச்சர் நம்பிக்கைக்குரிய நண்பர்கள், நல்ல இயற்கை அரணும், செயற்கை அரணும் இருத்தல் வேண்டும். இப்பண்புகள் அனைத்தும் ஒருசில மன்னர்களிடம் மட்டுமே காணப்படும். சங்க இலக்கியமான பொருநராற்றுப் படையில் கரிகாற் பெருவளத்தானிடம் திருக்குறள் கருத்தில் உள்ள அனைத்துப் பண்புகளும் நிறைந்து காணப்படுவதை அறிய முடிகிறது.

    முடிவரை:

    இவற்றான், கரிகாற் சோழன் என்ற மன்னன் தன்னை மட்டும் அல்லாமல் தன்னுடைய சமுதாயத்தையும் மேம்படுத்துபவனாகக் காணப்படுகிறான் என்பதையும், மனிதவள மேம்பாடு பற்றிய கோட்பாடு சங்க இலக்கியமாகிய பொருநராற்றுப்படையில் இடம் பெற்றிருப்பதால் அக்கால மக்களின் பண்பட்ட மனநிலையையும் நம்மால் அந்நூல்வழி அறிந்துகொள்ள முடிகிறது.

    பார்வை நூல்கள்

    1.பத்துப்பாட்டு மூலமும் உரையும் – முனைவர் இரா.மோகன்

    2. சங்க இலக்கியத் தேன் துளிகள் – சி.டி.சங்கர நாராயணன்.

    3. இலக்கியமும் நவீன வாசிப்பும் – சி.சரவணஜோதி

    *****

    கட்டுரையாளர் – தமிழ் முனைவர்பட்ட ஆய்வாளர்
    அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி
    சிவகாசி.

     

    Share
  • புறநானூற்றில் கருவிகள்

    வி.அன்னபாக்கியம் 

    முன்னுரை

    வேட்டையாடி வாழ்ந்த மக்கள் காலப்போக்கில் குழுக்களாக வாழத் தலைப்பட்டனர். அப்போது பிற குழுவிடமிருந்து தம் குழுவைக் காப்பாற்றப் போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்நிலையில்தான், இரும்புக்கருவிகளைப் பயன்படுத்தத் தொடங்கினர். அவ்வாறு அவர்கள் போருக்காகவும் பிற தொழிலுக்காகவும் பயன்படுத்திய கருவிகளின் தன்மையைச் சங்க இலக்கியம் மூலமே அறிய வாய்ப்பு இருக்கின்றது. அந்த அடிப்படையில் சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாகிய புறநானூற்றுப் பாடல்களில் இடம்பெற்றுள்ள பழந்தமிழர் பயன்படுத்திய போர்க்கருவிகளைத் தவிர பிற கருவிகளை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது. 

    கருவி விளக்கம்

    எந்த ஒரு செயலையும் செய்வதற்குத் துணையாகத் தூண்டுதலாக இருக்கும் சாதனம் கருவியாகும். கருவி என்பதற்கு, ”ஆயுதம், சாதனம், கேடகம், குதிரைமேலிருக்கும் தவிசு, குதிரைச் சம்மட்டி, உடை, துணைக்காரணம், யாழ்க்கருவி” என செந்தமிழ் அகராதி விளக்கம் தந்துள்ளது. தமிழ்மொழி அகராதி, ”ஆயுதப்பொது, உபகரணம், கவசம், காரணம், குதிரைக் கல்லணை, கூட்டம், தொடர்பு, நட்பு, மெய், வாய் முதலிய கருவி, மேகம், யாழ், வாச்சியம், வீணை” என விளக்கம் தந்துள்ளது.

    பொதுவாகக் கருவி என்ற சொல்லுக்கு, “ஆயுதப் பொதுப்பெயர்” என்ற பொருளையே எல்லா அகராதிகளும் தந்துள்ளன. பழந்தமிழர்கள் போர்க்கருவிகளைத் தவிர பிற தொழிற்கருவிகளையும் பயன்படுத்தியுள்ளனர். அவற்றை,

    1. தொழில் பயன்பாட்டுக் கருவிகள் (கலப்பை, அரிவாள்)
    2. வீட்டுப் பயன்பாட்டுக் கருவிகள் (ஊசி, உலக்கை)
    3. பிற பயன்பாட்டுக் கருவிகள் (அடார், சேறுகுத்தி, தட்டை, கரும்பின் எந்திரம்) என வகைப்படுத்தலாம்.

    தொழில் பயன்பாட்டுக் கருவிகள்

    நாட்டின் இன்றியமையாத தொழில்களுள் ஒன்று பயிர்த்தொழிலாகும். நிலத்தை உழுவதற்கும், தோண்டுவதற்கும் நெற்கதிர்களை அரிவதற்கும் சில கருவிகளைப் பயன்படுத்தியுள்ளனர். அவற்றில் கலப்பை மற்றும் அரிவாள் பற்றிய குறிப்பு மட்டும் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளன. 

    கலப்பை

    நிலத்தை உழுவதாகிய உழவுத்தொழிலுக்கு மிகவும் முக்கியமான கருவி “ஏர்” என அழைக்கப்படும் கலப்பை ஆகும். கலப்பை என்பதற்கு “உபகரணம், உழுபடை, கலப்பையுறுப்பு, யாழ்” 1 எனத் தமிழ்ப்பேரகராதி விளக்கம் தந்துள்ளது. தற்காலத்தில் உழவுத்தொழில் இயந்திரமயமானாலும்கூட நாட்டுப்புறங்களில் சில விவசாயிகள் இன்னும் கலப்பையையே பயன்படுத்தி வருவதைக் காணலாம். புறநானூற்றில் கலப்பையைக் குறிக்க, “உழுபடை, நாஞ்சில்“ என்ற இரண்டு சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

    ”பொருபடை தரூஉம் கொற்றமும் உழுபடை
    ஊன்றுசால் மருங்கின் ஈன்றதன் பயனே”       (புறம். 35 25-26)

    ”நாஞ்சில் அல்லது படையும் அறியார்”                (புறம். 20) என வரும் புறநானூற்றுப் பாடலடிகள் விளக்குகின்றன.

    போர்க்களத்தில் அம்பு தைத்து யானைகளின் துதிக்கையும், வாயும் துண்டாகி வீழ்ந்த காட்சியை நிலத்தை உழும் கலப்பைக்கு ஒப்புமைப்படுத்தியுள்ளதை,

    ”அம்புசென்று இறுத்து அரும்புண் யானைத்
    தூம்புடைத் தடக்கை வாயொடு துமிந்து
    நாஞ்சில் ஒப்ப நிலம்மிசைப் புரள”        ((புறம். 19  9-11)என்ற பாடலடிகள் விளக்குகின்றன. இதனால் கலப்பையின் முனைப்பகுதியானது யானை வாயின் கீழ்ப்பகுதி போலக் கூர்மையாக இருந்தமை தெரியவருகின்றது. இவ்வாறாக நிலத்தை உழுவதற்கு உழவர்களால் பயன்படுத்தப்படும் கலப்பைக்கு உழுபடை, உழவர்படை, நாஞ்சில் என்ற வேறு பெயர்கள் இருப்பதையும் கலப்பையின் உருவ அமைப்பினையும் அறிய முடிகின்றது.

    அரிவாள்

    பழந்தமிழர்கள் தாங்கள் பயிரிட்ட பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்வதற்காக ஒருவகை கருவியைப் பயன்படுத்தியுள்ளனர். அக்கருவியே அரிவாள் எனப்படும். அரிவாள் என்பதற்கு, வின்சுலோ அகராதியில், ”கொய்யுமாயுதம் மற்றும் ஈர்வாள்” 2 என்றும், பெருஞ்சொல்லகராதியில், ”நெற்கதிர் முதலியன அரியும் பிடியுள்ள கத்தி” 3 என்றும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளன.

    அரிவாள் ஆமையின் முதுகு போன்று வளைந்த வடிவமுடையதை,

    ”நெல்அரி தொழுவர் கூர்வாள் மழுங்கின்
    பிள்ளை மறத்தோடு அரிய, கல்செத்து
    அள்ளல் யாமைக் கூன்புறத்து உரிஞ்சும்”       (புறம். 379. 3-5) என்ற பாடலடிகள் விளக்குகின்றன.

    இந்த அரிவாள் நெல் அறுவடை செய்வதற்கும், பழங்களை அறுப்பதற்கும் பசுக்களின் பசியைப் போக்கும் புல் மற்றும் இலை, தழைகளை அறுப்பதற்கும் பயன்பட்டமையை,

      ”அணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் திட்ட” (புறம். 246 4)

    ”பசித்த ஆயத்து பயன்நிரை தருமார்
      பூவாக் கோவலர் பூவுடன் உதிரக்”     (புறம். 224 14-15)

    என்ற பாடலடிகள் விளக்குகின்றன. இவ்வாறாக புறநானூற்றுப் பாடல்கள் அரிவாளின் வடிவத்தையும் அதன் கூர்மையினையும் எடுத்துரைக்கின்றன. 

    வீட்டுப்பயன்பாட்டுக்கருவிகள்

    பழந்தமிழர்கள் வீட்டுப் பயன்பாட்டிற்காகக் கத்தரிக்கோல், விளக்கு, கத்தி, ஊசி போன்ற பொருட்களைப் பயன்படுத்தியுள்ளனர். புறநானூற்றில் ஊசி, உலக்கை பற்றிய தகவல்கள் காணப்படுகின்றன. 

    ஊசி

    பழங்காலத்தில் “ஊசி” என்னும் சொல் தைக்கும் கருவியைக் குறிக்கப் பயன்பட்டுள்ளது. ஊசி என்பதற்கு, ”இழைவாங்கி, கண்டூசி, நிறைகோலின் நடுமுள், கடிகாரத்தின் முள் மற்றும் எழுத்தாணி” 4 என வின்சுலோ அகராதி விளக்கம் தந்துள்ளது.

    புறநானூற்றுப்பாடல் ஒன்றின் வாயிலாக ஊசி என்னும் கருவி கட்டில் கட்ட பயன்படுத்தப்பட்ட உண்மை தெரிய வருகின்றது.

    ”சாறுதலைக் கொண்டென பெண்ஈற்று உற்றென
    பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக்
    கட்டில் நிணக்கும் இழிசினன் கையது
    போழ்தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ”      (புறம். 82)

    என்ற பாடல் வாயிலாக ஊசி என்னும் கருவி கட்டில் கட்டுவதற்கும் பயன்பட்டமையை அறியமுடிகின்றது. 

    உலக்கை

    வீட்டுப்பயன்பாட்டுக் கருவிகளில் ஒன்று உலக்கையாகும். உரலில் ஏதாவது பொருட்களை இடிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் கருவியாகும். இதன் இரு முனைகளிலும் இரும்பாலாகிய பூண்கள் மாட்டப்பட்டிருக்கும். இதனை இரும்புலக்கை எனலாம். பொதுவாக நெல் குற்றுவதற்கு உலக்கையைப் பயன்படுத்தியுள்ளனர்.

    வெண்ணிற நெல்லை பூண் கட்டப்பெற்ற பருத்த உலக்கையால் குற்றிய பின் கிடைத்த அரிசியால் உணவு சமைத்த செய்தியை,

    ”அடுமகள் முகந்த அளவா வெண்ணெல்
    தொடிமாண் உலக்கைப் பரூஉக்குற்று அரிசி”    (புறம். 399 1-2)

    என்ற பாடலடிகள் விளக்குகின்றன. இங்கு உலக்கை சமைப்பதற்குத் தேவையான அரிசியை உரலில் இட்டு குற்றுவதற்குப் பயன்பட்டதால் இது வீட்டுப் பயன்பாட்டுக் கருவிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.

    பிற பயன்பாட்டுக் கருவிகள்

    பழந்தமிழர்கள் அடார், சேறுகுத்தி, தட்டை, கரும்பின் எந்திரம் போன்ற  இரும்பாலாகிய சில கருவிகளையும் பயன்படுத்தியுள்ளனர். 

    அடார்

    விலங்குகளை அகப்படுத்தும் கருவி பொறி அடார் எனப்படும். அடார் என்பதற்கு, ”புலி முதலியவைகளை அகப்படுத்தும் பொறியாகிய கல்லடார்” 5 எனத் தமிழ்மொழி அகராதி விளக்கம் தந்துள்ளது. புறநானூற்றில் குடபுலவியார் எனும் புலவர் ”அடார்” என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்.

    பெரிய புலியைப் பிடிக்கும் வேடன் அதற்காக அமைத்த பெரிய கல் அடார் பற்றிய குறிப்பை,

    ”இரும்புலி வேட்டுவன் பொறி அறிந்து மாட்டிய
    பெருங்கல் அடாரும் போன்ம்” (புறம்.19 5-6)

    என்ற பாடலடிகள் விளக்குகின்றன. இப்பாடலுக்கு உரை எழுதிய ஔவை சு.துரைச்சாமிப்பிள்ளை, அடார் என்பது கற்பாறைகளின் இணைப்பாகும். மலை நாட்டவர் பாறைகள் நிறைந்த குன்றுப் பகுதியில் பொறி அமைத்து, அதன் வாயிலில் கற்பலகையால் கதவமைத்து, உள்ளே ஆடுகளைக் கட்டி வைத்திருப்பர். அதனைத் தின்னவரும் புலி உள்ளே நுழைந்து ஆடுகளைத் தாக்கும்போது, வாயில் கதவாகிய கற்பலகை விரைவாக தானே மூடிக் கொள்ளுமாறு வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த அடாரைப் புலிகளைப் பிடிப்பதற்காக மட்டுமின்றி மழை, வெயில், காற்று போன்ற சமயங்களில் வேட்டுவர்கள் மறைந்திருப்பதற்கும் பயன்படுத்தியுள்ளதாக விளக்கம் தந்துள்ளார். இதன்மூலம் வேட்டையாடும் பொழுது வேடன் பயன்படுத்தும் கருவியாக அடார் இருந்தமையை அறியமுடிகின்றது.

    சேறுகுத்தி

    புறநானூற்றில் சேறுகுத்தி என்னும் கருவி “தளம்பு“ என்ற சொல்லால் குறிக்கப்பட்டுள்ளது. அதாவது சேற்றினைக் குழப்பிக் கட்டிகளை உடைத்துச் செம்மை செய்யும் கருவியாகும். சேற்றினைக் குழப்பிக் கட்டிகளை உடைக்கச் செல்லுங்கால் சேற்றில் கிடக்கும் வாளைமீன் அக்கருவியின் இடையே விழுந்து அறுபட்டுத் துண்டாகிவிடும் என்பதை,

    ”மலங்குமிளிர் செறுவின் தளம்புதடிந்து இட்ட
    பழன வாளைப் பரூஉக்கண் துணியல்”         (புறம். 61 3-4) என்ற பாடலடிகள் விளக்குகின்றன.

    சோழன் நலங்கிள்ளியின் மகன் சேட்சென்னியின் நாட்டு இயல்பைப் பற்றிக் கூறும் போது தளம்பு என்ற கருவி இடம்பெற்றுள்ளது. 

    தட்டை

    குறிஞ்சி மற்றும் மருதநிலப் பகுதியில் விளையும் நெற்பயிரைப் பறவை இனங்கள் வந்து சேதப்படுத்தும்போது அவற்றை விரட்டுவதற்காகத் தினைப்புனம் காக்கும் காவலர் “கிளிகடி கருவி“ எனும் ஒரு வகையான கருவியைக் கையாண்டனர். புறநானூறு இக்கருவியைத் “தட்டை“ என்னும் சொல்லால் சுட்டியுள்ளது. தட்டை என்பதற்கு, ”அரிதாள், கவண், கிளிகடி கோல், திணைத்தாள், தீ பரந்த வடிவுள்ளது, மூங்கில், மொட்டை” 6 என தமிழ்மொழி அகராதி விளக்கம் தந்துள்ளது. மூங்கிலைக் கணுக்குக் கண் உள்ளதாக நறுக்கிப் பலவாகப் பிளந்து ஓசையுண்டாக ஒன்றிலே தட்டுகின்ற கருவியே தட்டையாகும். அவ்வாறு தட்டி ஓசையெழுப்பிய பொழுது நிகழ்ந்ததை,

    ”புனவர் தட்டை புடைப்பின் அயலது
    இறங்குகதிர் அலமரு கழனியும்
    பிறங்குநீர்ச் சேர்ப்பினும் புள்ஒருங்கு எழுமே”      (புறம். 49 4-6)

    என்ற பாடலடிகள் விளக்குகின்றன. அதாவது குறிஞ்சி, மருத நில வயல்களில் உள்ள பறவையினங்களும் அதனை அடுத்து நெய்தல் நிலத்தில் உள்ள பறவையினங்களும் அஞ்சி எழுந்துள்ளன. இதன் வாயிலாக தட்டை என்பது மூங்கிலால் செய்யப்பட்டதையும், வயல்களின் விளைச்சலைப் பறவையினங்களிடமிருந்து பாதுகாப்பதற்கு இக்கருவியைப் பயன்படுத்தியதையும் அறிய முடிகின்றது. 

    கரும்பின் எந்திரம்

    தற்காலத்தில் கரும்பின் எந்திரம் என்பது கரும்பின் சாறு பிழியும் எந்திரத்தைக் குறிக்கும். ஆனால் கரும்பின் எந்திரம் என்பதற்குக் கரும்பை ஆட்டும் ஆலை என புறநானூற்றுப் பழைய உரையில் விளக்கம் தரப்பட்டுள்ளது.

    ”மன்றில் பாயும் வன்புலத் ததுவே
    கரும்பின் எந்திரம் சீலைப்பின் அயல” (புறம்.322 5-6)

    என வெள்வேல் வீரனொருவனின் நாட்டுவளத்தைப் பற்றிப் பாடும்போது ஆவுர்கிழார் இச்சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்.

     முடிவுரை

    புறநானூறு பழந்தமிழர்களின் புறவாழ்க்கையைச் சிறப்பாக எடுத்துரைக்கும் நூலாகும். இந்நூலில் போருக்குப் பயன்பட்ட கருவிகளைத் தவிர அன்றாட வாழ்க்கையில் பயன்பட்ட தொழிற்கருவிகள், வீட்டுப்பயன்பாட்டுக் கருவிகள் மற்றும் பிற கருவிகள் பற்றிய செய்திகளும் பரவலாகக் காணப்படுகின்றன.

    அடிக்குறிப்புகள்

    1. நெல்லை.எஸ்.சங்கரலிங்க முதலியார், தமிழ்ப்பேரகராதி, ப.340
    2. எம். வின்சுலோ, தமிழ் ஆங்கில அகராதி, ப.36
    3. பெருஞ்சொல்லகராதி,(தொகுதி 1), ப.360
    4. எம். வின்சுலோ, முந்நூல், ப.163
    5. நா. கதிரைவேற்பிள்ளை, தமிழ்மொழி அகராதி, ப.35
    6. மேலது., ப.732

    *****

    கட்டுரையாளர் – தமிழ்த்துறை உதவிப்பேராசிாியர்,
    தி ஸ்டாண்டர்டு  ஃப்யா்ஒா்க்ஸ் இராஜரத்தினம் மகளிா் கல்லூாி, சிவகாசி.

     

    Share
  • சங்க இலக்கியச் சடங்குகளும் நம்பிக்கைகளும்

    -த. ஆதித்தன்

    உலகில் தாம் வாழும் சூழ்நிலைகளுக்கேற்ப ஒவ்வொரு பகுதியில் வாழும் மக்களும் சில பழக்கவழக்கங்களையும், நம்பிக்கைகளையும் கொண்டுள்ளனர்.  ஒரே பகுதியில் வெவ்வேறு இனக்குழுக்களைச் சார்ந்த மக்கள் சேர்ந்து ஒற்றுமையாக வாழ்ந்து வருவதைக் காண்கிறோம். அவ்வாறு வெவ்வேறு சமுதாய மக்கள் சேர்ந்து நெடுங்காலம் வாழ்ந்து வரும்போது அப்பகுதி மக்களின் நம்பிக்கைகளிலும் சடங்குகளிலும் சில பொதுமைக் கூறுகள் ஏற்படுவதுண்டு.  இருப்பினும் சமுதாயம் சார்ந்த சில நம்பிக்கைகளை அவர்கள் தனித்தன்மையோடு பின்பற்றி வருவதையும் அறிய முடிகிறது.  சமூகத்தோடு பின்னிப் பிணைந்துள்ள மக்களின் நம்பிக்கைகளும் அதைச்சார்ந்த சடங்குகள் பலவும் ஏதேனும் ஒரு வடிவத்தில் மக்களால் இன்றும் கடைப்பிடிக்கப்படுகின்றன.  இச்சடங்குகள் குறித்து, “வாழ்வின் தகுதிப் பெயர்வினை அடையாளப்படுத்தும் வகையில் நிகழ்த்தப்படும் முறையான செயல் முறைகளே சடங்குகள்.  இச்செய்முறைகள் ஒவ்வொரு தகுதிப் பெயர்வின் போதும் பல்வேறுவிதமான காரணங்களை நிலை நிறுத்திச் செல்கின்றன.  முன்னோரிடமிருந்து பெற்ற ஒவ்வொரு சடங்கும் அடுத்தடுத்த தலைமுறைக்காக மாற்றியளிக்கப்படுகின்றது.

    இம்மண்ணில் பிறக்கும் குழந்தைக்கு முன்னோர் மேற்கொண்ட பழக்கங்களைப் பெற்றோர் செய்வதும் பின்னர் அக்குழந்தை வளர்ந்து தான் புரிந்து கொண்டவற்றைத் தன் சந்ததிகளுக்குக் கற்றுக் கொடுப்பதும் மாறாத செய்முறையாகவே தொடர்கின்றது.  குழந்தை பிறந்தது தொடங்கி ஒவ்வொரு பருவ மாற்றத்தின்  அடையாளமாக அதன் உடல் வளர்ச்சிக்கும், மன வளர்ச்சிக்கும் தொடர்புடைய சடங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன.  பிறப்பு, பூப்பு, திருமணம், இறப்பு என ஓர் உலகம் நேர்க்கோட்டில் சென்று ஒட்டுமொத்தமாக அழிந்து விடுவதில்லை.  மாறாகப் பிறப்பு, பூப்பு, திருமணம், இறப்பு, மீண்டும் பிறப்பு… எனச் ‘சுழலேணி’ முறையில் வட்டமிட்டு உயர்ந்து செல்லும் இயங்கியலைக் கொண்டிருக்கிறது. வாழ்க்கை வட்டச் சடங்குகள் அனைத்தும் தம் குலங்கள் தழைத்து வாழவேண்டும் என்ற மனித வளத்தை முதன்மைப்படுத்தியே செய்யப்படுகின்றன.  அதனால்தான் மனிதனின் பிறப்பையும், வாழ்தலையும் மையமாகக் கொண்டு வாழ்க்கை என்ற வினைச்சொல் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது”1 என்று க.அ. ஜோதிராணி குறிப்பிடுகிறார்

    பொதுவாக மனிதன்,  பிறந்தது முதல் இறப்பது வரையிலும் பல்வேறு வகையான சடங்குகளைப் பின்பற்றுகிறான்.  அச்சடங்குகளைச் சமய நம்பிக்கை சார்ந்த சடங்குகள், வாழ்வியல் பழக்கவழக்கங்கள் சார்ந்த சடங்குகள் என இருவகையாகப் பிரிக்கலாம்.  இத்தகைய சடங்குகளும், நம்பிக்கைகளும் அந்த அந்தக் காலக் கட்டத்தில் தோன்றும் இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டு வருவதைக் காணலாம்.  அவ்வகையில்  நமது சங்க இலக்கிய நூல்களில் இருந்து சில சடங்குகளையும், நம்பிக்கைகளையும்  எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகிறது.

    நம்பிக்கைகள்

    பழங்காலம் தொட்டே மக்கள் பல்வேறு வகையான நம்பிக்கைகளைக்  கொண்டிருந்தனர். இயற்கையைப் போற்றி வழிபடுவதும் அந்த நம்பிக்கையின் பால்பட்டதே.  தொடர்ந்து மனித மனம் நம்புபவையே காலப்போக்கில் நம்பிக்கைகளாகவும் சடங்குகளாகவும் மாறிவிடுகின்றன.  இந்நம்பிக்கை குறித்த செய்திகள் சங்ககாலம் தொட்டு இன்று வரையிலும் இலக்கியங்களில் காணக்கிடைக்கின்றன. இந்நம்பிக்கைகள் குறித்து, “ஒவ்வொரு மனிதனும் ஆயிரக்கணக்கான நம்பிக்கைகளின் குவியலாகக் காணப்படுகின்றான்.  நன்மையைத் தேடும் மனதின் பற்றுக்கோடாக நம்பிக்கை துணைநிற்கிறது.  கடலிலே அகப்பட்டுத் தவிக்கும் ஒருவனுக்குக் கையில் கிடைத்த சிறிய மரக்கட்டையும் தெப்பமாகத் தெரியும்.  அதுபோல் அலைக்கழிக்கப்படும் மனது, நம்பிக்கைகளைப் பற்றிக் கொள்ளும்பொழுது புத்துணர்ச்சி பெறுகிறது”2 என்கிறார் எஃப் பாக்கியமேரி.

    இந் நம்பிக்கை தொடர்பான செய்திகள் சங்க இலக்கியங்கள் முதல் இன்று வரையிலான இலக்கியங்கள் வரை காணக் கிடைக்கின்றன. அவற்றுள் ஒன்று கடவுள் நம்பிக்கை.  உலகின் மிகத் தொன்மையான காலத்தில் இயற்கை வழிபாடே இருந்திருக்க வேண்டும்.  அதாவது இயற்கையின் சீற்றங்களுக்குப் பயந்த மனிதன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள எண்ணி அவ்வியற்கையை வழிபடத் தொடங்கினான் என்பர்.  சூரிய வழிபாடு, பிறைவழிபாடு போன்றவையும் இத்தகைய இயற்கை வழிபாட்டின் கூறுகளே ஆகும்.  சங்க இலக்கிய நூல்களுள் ஒன்றான குறுந்தொகையிலும் பிறைவழிபாடு குறித்த குறிப்பு இடம் பெற்றுள்ளது.

    “வளை உடைத்தனையது ஆகி, பலர் தொழ
    செவ்வாய் வானத்து ஐயெனத் தோன்றி
    இன்னாப் பிறந்தன்று, பிறையே; அன்னோ,”3 என்னும் பாடல் குறுந்தொகையில் அமைந்துள்ள கடம்பனூர்ச் சாண்டிலியனின் பாலைத் திணைப்பாடல் ஆகும்.  இப்பாடலில் பிறைத்திங்களுக்கு வண்ணத்தாலும் வடிவாலும் ஒத்ததாக உள்ள உடைந்த சங்குவளை உவமையாகச் சொல்லப்பட்டுள்ளது.  இத்தகைய பிறைநிலா மாலையில் செவ்வானத்தில் தோன்றும். அப்பொழுது பலராலும் தொழப்பெறும் பெருமையுடையது என்று கூறப்பட்டுள்ளது.  இதன் மூலம் பிறை நிலவை வழிபடும் நம்பிக்கை பழங்காலத்திலேயே தமிழ் மக்களிடம் இருந்துள்ளதை அறிய முடிகிறது.

    முற்பிறப்பு மற்றும் விதி என்பன மீதும் மக்களுக்குப் பரவலாக நம்பிக்கை உள்ளது.  இன்று தலைவிதி என்று கூறப்படுவதையே அன்றைய காலத்தில் ஊழ் என்று குறிப்பிட்டுள்ளனர் எனலாம்.  நல்வினை நல்ல ஊழினை அதாவது விதியினைக் கொடுக்கும் என்றும் தீவினை தீய விதியினைக் கொடுக்கும் என்றும் மக்கள் நம்பி வருகின்றனர்.  இந்நம்பிக்கை அன்று முதல் இன்றுவரை மக்களிடையே காணப்படுகிறது.

    பதினெண் மேற்கணக்கு நூல்கள், பதினெண்கீழ்க் கணக்கு நூல்கள் மட்டுமன்றிச் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி போன்ற காப்பியங்களிலும் இத்தகைய செய்திகள் இடம்பெற்றுள்ளன.  முற்பிறப்புப் பற்றியும் ஊழ்பற்றியும் இடம்பெற்றுள்ள செய்திகளை மட்டும் தனி ஆய்வுக்கு உட்படுத்த முடியும் என்கிற அளவிற்குப் பல செய்திகள் இடம் பெற்றுள்ளன.

    சிறுவயதில் பகைவர்கள் போன்று இருந்தவர்கள் தலைவனும் தலைவியும், வளர்ந்த பின்னர் அவர்களுள் காதல் உருவாக ஊழ்வினையே காரணம் என்னும் கருத்தமைந்த பாடல் ஒன்று குறுந்தொகையில் உள்ளது.

    “இவன் இவள் ஐம்பால் பற்றவும், இவள் இவன்
    புன்தலை ஓரி வாங்குநள் பரியவும்,
    காதற் செவிலியர் தவிர்ப்பவும் தவிராது
    ஏதில் சிறுசெரு உறுப மன்னோ;
    நல்லைமன் றம்ம பாலே- மெல் இயல்
    துணைமலர்ப் பிணையல் அன்ன இவர்
    மணம்மகிழ் இயற்கை காட்டி யோயே”4

    தலைவன் தலைவி இருவரும் இளம் வயதில் தெருவில் விளையாடும்போது அவளின் ஐவகையாகப் பின்னப்பட்ட தலைமுடியினை அவள் அறியாதவாறு அவன் பிடித்து இழுப்பான்.  அதனை அறிந்து அவள் அவனின் வெட்டப்பட்ட தலைமுடியினை வளைத்துப் பிடித்த வண்ணம் ஓடுவாள்.  இவ்வாறு அவர்கள் அயலாரைப் போன்று பகைபாராட்டி நிற்பர்.  அவர்கள் மீது அன்பு கொண்ட செவிலியர் அவர்களின் சண்டையை விலக்குவர்.

    இப்பொழுது இவர்கள் உள்ளத்தால் வெறுத்ததை அறவே மறந்து தொடுக்கப்பட்ட மாலை போல இணைந்து மகிழ்ச்சியுடன் இருப்பது விதியே என்பதாக மோதாசனார் குறுந்தொகையில் கூறியுள்ளார்.

    இதேபோன்று பல்லியின் ஓசையை வைத்துப் பலன்களைக் கணிக்கும் பழக்கமும் மக்களிடையே தொன்மையான நம்பிக்கையாக உள்ளது.  காகம் கரைந்தால் விருந்தினர் வருவார்கள் என்பதும் அத்தகைய நம்பிக்கையே ஆகும்.  இத்தகைய ஏராளமான நம்பிக்கைகள் உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே காணப்படுகின்றன.  அவை தொடர்ந்து மரபு வழியாகத் தொடரும் போது சடங்குகளாக மாறிவிடுகின்றன எனலாம்.

    திருமணச் சடங்கு

    திருமண அறிவிப்புத் தொடங்கித் திருமணம் முடியும் வரையிலும் பல சடங்குகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.  இவை குறித்த செய்திகள் சங்க இலக்கியங்களிலும் காணப்படுகின்றன.

    தம் மகள் திருமணத்தை ஊரார் அனைவரும் அறிய வேண்டும் என்பதற்காகப் பெற்றோரால் செய்யப்படும் சடங்கு ஒன்று கயமனார் பாடியுள்ள அகநானூற்றுப்  பாடலில் இடம் பெற்றுள்ளது.

    “ நனைவிளை நறவின் தேறல் மாந்தி,
    புனைவினை நல்இல் தருமணல் குவைஇ,
    ‘பொம்மல் ஓதி எம்மகள் மணன்’ என,
    ‘வதுவை அயர்ந்தனர் நமரே; அதனால்,அரும்புகளில் இருந்து பெறப்பட்ட கள்ளின் தெளிவை உண்டு மகழ்ந்திருந்தனர்.  வீடானது நன்றாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.  நல்ல சிறந்த வேலைப்பாடுகள் அமைந்தாகவும் அவ்வீடு காணப்பட்டது.  அங்குப் புதிதாகக் கொண்டு வரப்பட்ட மணலைக் குவித்துப் பரப்பி வைத்திருந்தனர்.  பொலிவான கூந்தலை உடைய தமது மகளுக்குத் திருமணம் என்ற உறுதியை அறிவிக்கும் விழாச் சடங்கு அவ்விடத்தில் நிகழ்ந்தது என இவ் அகநானூற்றுப் பாடல் தெரிவிக்கின்றது.

     கலித்தொகைப் பாடல் ஒன்று திருமணம் நடைபெறப்போகும் வீடு குறித்தும் அங்கு அமைக்கப்பட்டிருந்த மணப்பந்தல் குறித்தும்,

          “தருமணல் தாழப்பெய்து, இல் பூவல் ஊட்டி,
          எருமைப் பெடையோடு, எமர் இங்கு அயரும்
                           பெரு மணல் எல்லாம்…”6 என்று குறிப்பிடுகின்றது அதாவது கொண்டு வந்து குவிக்கப்பட்டிருந்த புதிய மணலைத் தரை முழுவதும் நன்றாகப் பரப்பினர்.  வீடு செம்மண்ணால் பூசப்பட்டிருந்த்து.  பெண் எருமையின் கொம்பினைத் தெய்வமாக வைத்து வழிபாடும் செய்யப்பட்டது.  இவ்வாறாகத் திருமண நிகழ்ச்சி நடைபெறுகிறது என இக்கலித்தொகைப் பாடல் தெரிவிக்கிறது.

    இறப்புச் சடங்கு

    உலகில் தோன்றிய உயிர்கள் அனைத்தும் உயிர் துறப்பது இயற்கை.  விலங்குகள், பறவைகள் உள்ளிட்ட அனைத்து உயிர்களும் தனது கூட்டத்தைச் சார்ந்த உயிரின் மறைவைக் கண்டு துயரப்படுவதைக் காணமுடிகிறது.  மனித சமூகமும் அதற்கு விதிவிலக்கல்ல.  ஒவ்வொரு பகுதியிலும் வாழ்கின்ற மனிதர்கள் இந்த இறப்பினை ஒட்டி ஒவ்வொரு வகையான சடங்குகளைப் பின்பற்றி வருகின்றனர்.  இவை பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களிலும் இடம் பெற்றுள்ளன.

    சங்க இலக்கியங்களுள் மிகச் சிறந்த வரலாற்று ஆவணமாகப் போற்றப்படுவது புறநானூறு ஆகும்.  அதில் சிறுகுழந்தைகள் மரணம் அடைந்தால் உடலை வாளால் பிளந்து அடக்கம் செய்தல், வீரர்களின் மரணத்தைப் போற்றும் வகையில் நடுகல் அமைத்தல் போன்ற பல மரணச் சடங்குகள் குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

    சேரமன்னன் கணைக்கால் இரும்பொறை போரில் தோல்வியடைந்தான்.  வெற்றி பெற்ற சோழன் செங்கணான், சேரனைக் குடவாயில் கோட்டத்துச் சிறையில் அடைத்தான்.  அப்பொழுது கடுமையான நீர்த்தாகத்தால் சிறைக்காவலரிடம் தண்ணீர் கேட்டான் இரும்பொறை.  அவன் காலம் தாழ்த்தித் தண்ணீர் கொண்டு வந்ததால் வருந்திய சேரன் தண்ணீர் அருந்தாமலேயே உயிர் நீத்தான் அப்போது தன்னுடைய நிலைக்குத் தானே இரங்கிப் பாடியதாக இப் புறநானூற்றுப் பாடல் அமைந்துள்ளது.

    “குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்,
    ஆள் அன்று என்று வாளின் தப்பார்;
    தொடர்ப் படுஞமலியின் இடர்ப்  படுத்து இரீஇய
    கேள் அல் கேளிர் வேளாண் சிறுபதம்
    மதுகை இன்றி, வயிற்றிதுத் தீத் தணிய,
    தாம் இரந்து உண்ணும் அளவை
    ஈன்மரோ, இவ் உலகத்தானே?”7

    இப்பாடல் பழங்காலத்தில் மன்னர்கள் போரின்போது விழுப்புண்பட்டு மடிவதையே பெருமையாகக் கருதினர் என்பதற்குத் தகுந்த சான்றாகத் திகழ்கிறது.  மேலும் சேரன் கணைக்கால் இரும்பொறையின் மானமிகு வாழ்வையும் எடுத்தியம்புகிறது.

    பாடலில், ‘பிள்ளை  இறந்து பிறந்தாலும் – தசைப் பிண்டமாகப் பிறந்தாலும் – அல்லது பிறந்த குழந்தை இறந்தாலும் அதனையும் ஒரு நபராகவே கருதி உயர்வு தருவர்.  அந்த இறந்த குழந்தையின் உடலையும் வாளால் பிளந்து வடுப்படுத்தி அடக்கம் செய்வர்.  அதேபோன்றே மன்னராக இருப்பவர் போரில் பகைவரின் வாளால் வடுப்பட்டு இறந்திடல் வேண்டும்.  அவ்வாறு இன்றிப் பிழைத்து விட்டால் நாயைச் சங்கிலியால் பிணைப்பதைப்போன்று விலங்கு பூட்டித் துன்புறுத்துவர் பகைவர்.  அத்தகைய பகைவரிடம் நீரை இரந்து கேட்டு வயிற்றுத் தீயை தணிக்க வேண்டாம்.  இவ்வுலகில் அத்தகைய இழிந்த இயல்புடையவரைஅரசர்களும் பெறுவார்களோ! என்று பாடியுள்ளார் சேரமான் கணைக்கால் இரும்பொறை.

    இதன்மூலம் சிறு குழந்தை இறந்தாலும் சரி, குழந்தை இறந்து பிறந்தாலும் சரி இறுதிச் சடங்கின்போது அவற்றிற்கு வடு ஏற்படுத்திப் புதைக்கும் முறை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட நம் தமிழ்ச் சமூகத்தில் இருந்துள்ளமையை அறியமுடிகிறது.

    வழிபாடு தொடர்பான சடங்குகள்

    மனிதன் ஆரம்பத்தில் இயற்கையை வழிபட்டிருக்கக்கூடும்.  பின்னர்ப் படிப்படியாகக் கடவுள் வழிபாடு வரை வந்துள்ளது.  இவ்வழிபாடுகள் அனைத்தும் என்று தொடங்கியது என்று அறுதியிட்டுக் கூற முடியாத அளவிற்கு மிகத் தொன்மையானதாக உள்ளன.

    உலகம் முழுவதும் உள்ள இலக்கியங்களில் புராணக்கதைகள், கடவுள் வழிபாடு போன்ற பதிவுகள் இடம் பெற்றுள்ளன.  தமிழ்மொழியில் இன்று கிடைக்கப்பெற்றுள்ள மிகப் பழமையான சங்க இலக்கியங்களிலும் இறைவழிபாடு குறித்தும் அவை தொடர்பான சடங்குகள் குறித்தும் சில செய்திகள் இடம் பெற்றுள்ளன.

    பத்துப்பாட்டில் முதலில் வைத்து எண்ணக் கூடியதாக,  திருமுருகாற்றுப்படை உள்ளது.  நலம் வேண்படுபவர்களை முருகக் கடவுளிடம் ஆற்றுப்படுத்துவதாக நக்கீரரால் படைக்கப்பட்ட நூலே திருமுருகாற்றுப்படை.  இதில் இறைவழிபாட்டுச் சடங்கு குறித்த குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.

    “ பைங்கொடி, நறைக்காய் இடை இடுபு, வேலன்
    அம்பொதிப் புட்டில் விரைஇ, குளவியொடு
    வெண்கூதாளம் தொடுத்த கண்ணியன்;
    நறுஞ்சாந்து அணிந்த கேழ்கிளர் மார்பின்
    கொடுந்தொழில் வல்வில் கொலைஇய கானவர்
    நீடுஅமை விளைந்த தேக்கண் தேறல்
    குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து
    தொண்டகச் சிறுபறைக் குரவை அயர”8 என்னும் அடிகளில், முருகக்கடவுளுக்குப் பூசை செய்யும் வேலன் பச்சிலைக் கொடியால், நல்ல மணமுடைய சாதிக்காயை இடை இடையே சேர்த்துக் கட்டுகிறான்.  அதனோடு அழகிய புட்டியைப் போன்ற வடிவுடைய தக்கோலக்காயையும் கலந்து காட்டு மல்லிகைப்பூ, வெண்டாளிப்பூ ஆகியவற்றையும் சேர்த்துக் கட்டுகிறான்.  இம்மாலையை அணிந்தவனாக வேலன் நிற்கிறான்.  அங்குவரும் குறவர்கள் நல்ல வாசனை வீசும் சந்தனத்தைப் பூசிய மார்பை உடையவர்கள்.  வேட்டை காரணமாகக் கொலைத் தொழிலைச் செய்பவர்கள் அந்தக் குறவர்கள்.  அவர்கள் நீண்ட மூங்கில் குழாய்களில் ஊற்றி நெடுநாள் வைத்து முற்றி விளைந்த தேனால் ஆன கள்ளின் தெளிவைத் தமது சுற்றத்தாரோடு சேர்ந்து உண்டு மகிழ்ந்திருந்தனர்.  தம் குறிஞ்சி நிலத்திற்குரிய வாத்தியக் கருவியாகிய  ‘தொண்டகம்’ எனப்பெறும் சிறுபறையை அடித்தனர்.  அதனது தாளத்திற்கு ஏற்பக் குரவைக் கூத்தாடினர் எனக் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் முருக வழிபாட்டுச் சடங்கில் குரவைக் கூத்து இடம் பெறுவது, குறவர்கள் அந்த ஆட்டத்தின்போது சிறுபறையை அடிப்பது, கள்அருந்தி மகிழ்ந்திருப்பது போன்ற செய்திகளைத் தெரிந்து கொள்ள முடிகிறது.

    சங்க இலக்கியங்களுள் ஒன்றான நெடுநல் வாடையிலும் இறைவழிபாடு பற்றி குறிப்பு உள்ளது.  மாலைக் காலத்தில் பெண்கள் தெய்வத்தை வணங்குவது குறித்துக் குறிப்பிடும் போது,

    “மடவரல் மகளிர் பிடகைப் பெய்த
    செவ்வி அரும்பின் பைங்கால் பித்திகத்து,
    அவ்விதழ் அவிழ் பதம் கமழ, பொழுது அறிந்து
    இரும்பு செய்விளக்கின் ஈர்ந்திரிக் கொளீஇ,
    நெல்லும் மலரும் தூஉய், கைதொழுது,
    மல்லல் ஆவணம் மாலை அயர”9  என்கிறார் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார். நெடுநல்வாடையில் குளிர்கால வர்ணனை இடம் பெறும் பகுதியிலேயே இவ்வடிகள் இடம்பெற்றுள்ளன.  பகலிலும் மழைமேகம் சூழ்ந்து இருளாகக் காட்சித் தருவதால் மாலைக் காலத்தை அறிய முடியாமல் மக்கள் தவிக்கின்றனர்.  அப்பொழுது மகளிர் பசுமையான காம்புகளைக் கொண்ட செம்முல்லை அரும்புகளை அழகிய பூந்தட்டுகளில் இட்டு வைக்கின்றனர்.  அவை மலர்ந்து மணம் வீசுவதைக் கொண்டு மாலை நேரம் வந்துவிட்டது என்பதனை அறிந்துக் கொள்கின்றனர்.

    இம்மாலைப் பொழுதில் இறைவனை வழிபடுகின்றனர்.  அதற்கு இரும்பினால் செய்யப்பட்ட விளக்கில், நெய்தோய்ந்த திரியைக்  கொளுத்துகின்றனர்.  நெல்லையும் மலரையும் தூவிக் கைக்கூப்பி இல்லுறை தெய்வத்தை வழிபடுகின்றனர்.  வளம்பொருந்திய ஆவண வீதிகளில் உள்ள வீடுகளில் இவ்வாறு இறை வழிபாடானது மாலை வேளையில் இடம் பெறுகிறது.  இவ்வாறு நெல்லையும் மலரையும் தூவிக் கைகளைக் குவித்து விளக்கேற்றி வழிபடும் முறையை நெடுநல்வாடை விவரிக்கின்றது.

    பழங்காலம் முதல் இன்றுவரை மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைகளையும், பின்பற்றி வருகின்ற சடங்குகளையும் இலக்கியங்கள் வாயிலாகவே தெளிவாக அறிந்து கொள்ள முடிகின்றது.

    இவற்றின் மூலம்,  மக்கள் தங்களுடைய நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் சார்ந்தே தத்தமது வாழ்க்கையை அமைத்துக் கொண்டுள்ளனர் என்பதையும் உணரலாம்.  இவ்வாறு தொடர்ந்து பின்பற்றிவரும் அதாவது மரபு வழியாகத் தொடரும் நம்பிக்கைகள் காலப்போக்கில் சடங்குகளாக மாறுகின்றன.

    சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்ற மக்களின் நம்பிக்கைகளையும், சடங்குகளையும் குறித்து நுணுகி ஆராய்ந்து மேலாய்வுகளை மேற்கொள்ளலாம்.  அவ்வாறு ஆராயும்போது சங்ககால  மக்களின் பண்பாட்டுக் கூறுகளைத் தெளிவாக அறிந்துகொள்ள இயலும்.

    சான்றெண்விளக்கம்

    1.ஜோதிராணி.க.அ, தமிழர் பண்பாட்டுத் தளத்தில் சடங்குகள், தன்னனானே, கோடம்பாக்கம், சென்னை-34, முதல் பதிப்பு – டிசம்பர் 2004,  பக்கம் எண்:9-10

    2.பாக்கியமேரி.எஃப், தமிழர் பண்பாடும் பயன்பாடும், அஞ்சனச்சிமிழப் பதிப்பகம், மயிலாப்பூர், சென்னை- 600 004, இரண்டாம் பதிப்பு – 2013. பக்கம் எண்:23

    3.குறுந்தொகை,  நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், அம்பத்தூர், சென்னை – 600 098, மூன்றாம் பதிப்பு – பிப்ரவரி 2007, பாடல் எண்: 307

    4. குறுந்தொகை, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், அம்பத்தூர், சென்னை – 600 098, மூன்றாம் பதிப்பு – பிப்ரவரி 2007, பாடல் எண்: 229

    5. அகநானூறு, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், அம்பத்தூர், சென்னை – 600 098, மூன்றாம் பதிப்பு – பிப்ரவரி 2007, பாடல் எண்: 221

    6. கலித்தொகை, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், அம்பத்தூர், சென்னை – 600 098, மூன்றாம் பதிப்பு – பிப்ரவரி 2007, பாடல் எண்: 114

    7.புறநானூறு,  நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், அம்பத்தூர், சென்னை – 600 098, மூன்றாம் பதிப்பு – பிப்ரவரி 2007, பாடல் எண்: 74

    8.பத்துப்பாட்டு-பகுதி1 (திருமுருகாற்றுப்படை, அடி:190-197),  பகுதி1 நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், அம்பத்தூர், சென்னை – 600 098, மூன்றாம் பதிப்பு – பிப்ரவரி 2007, பக்கம் எண்: 13

    9. பத்துப்பாட்டு – பகுதி 2(நெடுநல்வாடை, அடி:39-44, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், அம்பத்தூர், சென்னை – 600 098, மூன்றாம் பதிப்பு – பிப்ரவரி 2007, பக்கம் எண்: 178

    *****

    கட்டுரையாசிரியர் – இணைப் பேராசிரியர்
    அரிய கையெழுத்துச் சுவடித் துறை
    தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.
    பேச:9841152393
    மின்னஞ்சல்:kumaritathithan@gmail.com

     

     

    Share
  • குறுந்தொகைப் பாடல்களில் இயற்கை

    -கு. பூபதி 

    பழங்காலம் முதலே மனிதன் சூழலியலைப் பற்றி அனுபவப்பூா்வமாக அதிக கவனம் கொண்டிருந்திருக்கிறான். நாகரிகம் வளராத காலந்தொட்டே சமூகத்திலுள்ள ஒவ்வொரு மனிதனும், உயிர் வாழ்வதற்கு இயற்கையின் ஆற்றலையும் அவனைச்சுற்றியுள்ள தாவரங்கள், விலங்குகள் போன்ற சூழ்நிலைகளைப் பற்றிய அறிவும் இன்றியமையாததாகக் காணப்பட்டது. மனித சமுதாயத்தின் நாகரிகக்களம் ஒவ்வொரு காலகட்டத்திலும் பெரும் சிக்கல்களும், சிக்கல்களிருந்து கண்ட தீா்வுகளால் பெற்ற அறிவும் என படிமலா்ச்சி எய்த அது இலக்கியங்கள் வழியாகக் காலம்கடந்த ஆவணங்களாக பரிமாணம் கொண்டது, கொள்கின்றது. தொகை நூல்களுள் ஒன்றான குறுந்தொகைப் பாடல்கள் வழி  இயற்கை குறித்த பழந்தமிழா் பார்வையை அறிய முயல்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

    பல்லுயிர் ஓம்புதல்

    ஓம்புதல் என்பது பாதுகாத்தல் என்பது மட்டுமின்றி, உயிர்நேயத்தோடு பிற உயிர்களைப் போற்றுதலாகும்.

    “பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
    தொகுத்து வந்து ளெலாம் தலை” என உயிர் ஓம்பலை நாகரிக சமூகத்தின் தலைமைக் குணமாக்கிக் காட்டுகிறது வள்ளுவம். 

    தம்முயிர் போல நோக்கல்

    ஆண்குரங்கு இறந்த கைம்மைத் துன்பத்தைப் போக்க வழியறியாப் பெண் குரங்கு உயிர்விடத் துணிந்த போதும், தந்தயையிழந்த தன்குட்டி தாயையும் இழந்தால் தவிக்குமே என மனிதா்போலவே குரங்குக்கும் பிரிவுத்துன்பமும், குட்டிகளுக்காக உயிர்வாழும் தியாக உணர்வும் உள்ளதைக் குறுந்தொகைப் பாடல் படம்பிடித்துக் காட்டுகிறது.

    “கருங்கட்தாக்கலை பெரும்பிறி துற்றெனக்
    கைம்மை யுய்யாக் காமர் மந்தி
    கல்லா வன்பறழ் கிளைமுதற் சோ்த்தி
    ஓங்குவரை யடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்கும்
    சார னாட  நடுநாள்
    வாரல் வாழியோ வருந்துதும் யாமே”. (குறுந்-69)

    மரமேறுதல் முதலான தம் தொழிலைக் கல்லாத தன் குட்டியைச் சுற்றத்திடம் ஒப்படைத்துவிட்டு ஓங்கிய மலைப்பகுதியிலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொள்ளும் என பிற உயிர்களும் மனிதா்போலவே உயிரும், வலியும், உணர்வும் கொண்டவை என அழுத்தமாகக் கூறுகிறது இப்பாடல்.

    இயற்கை – இயைபுப் புலம்

    தலைவன் கடந்து செல்லும் நிலம், தலைவி ஆற்றியிருக்கும் சூழல் போன்ற பல உணா்வுப் பின்னணிகள், இயற்கைக் காட்சிகளுடன் காட்டப்படும்போது  அவை உணா்வினைப் பிறா் புரிந்துகொள்ள ஏதுவாகவோ, உணா்ச்சிகளை மிகுத்துக் காட்டவோ இயைபுப்புலமாக அமைகின்றன.  மனிதரின் உணா்வுக்கு ஒத்துச்செல்லும் பின்புலமோ அதற்கு எதிராக அமைந்து உணா்வை மிகுவித்துக் காட்டும் முரண் பின்புலமாகவோ அமையலாம்.

    காதலன் பிரிவால் தனிமை கொண்டு, நெஞ்சம் துன்பத்தால் ஓலமிடும் நெய்தல் தலைவிக்கு இணைப் பின்புலமாகிய அலையோசை எழுப்பும் இரவு நேரக்கடல் குறுந்தொகைப் பாடலில் காட்டப்படுகிறது.

    “யாரணங் குற்றனை கடலே பூழியா்
    சிறுதலை வெய்யைத் தோடுபரந் தன்ன
    மீனார் குருகின் காலைப் பெருந்துறை
    அவள்வீத் தாழைத் திரையலை
    நள்ளென் கங்குலுங் கேட்குறின் குரலே” (குறுந்-163)

    தாழையின் மலர் திரையால் அலைக்கப்படுவது தலைவன் உள்ளம் துன்பத்தால் அலைக்கழிக்கப்படுவதை உருக்காட்சியாக்குகிறது. தலைவன் வரைவிடை வைத்துப் பிரிந்த காலத்தில் தலைவி ஆற்றாள் என எண்ணிய தோழியை நோக்கித் தலைவி கூற்றாய் அமைந்த பாடலில் இது போலவே துன்பத்தில் உழலும் தலைவியின் மனத்தை அலைகளால் மோதப்படும் தாழையின் வெண்பூ பின்புலமாக அமைக்கப்பட்டுள்ளது.

    “பூவோடு புரையும் கண்ணும் வேயென

    வாரல் வனப் பெய்திய தோளும் பிறையென
    மதிமயக் குறூஉ நுதலு நன்றும்
    நல்லமன வாழி தோழி யல்கலும்
    தயங்குதிரை பொருத தாழை வெண்பூக்
    குருகென மலரும் பெருந்துறை
    விரிநீா்ச் சேர்ப்பனொடு நகாஅ ஊங்கே”. (குறுந்-226 )

    தாமரை மலரை ஒத்த கண்களும், மூங்கிலைப்போன்ற திரண்ட அழகைப் பெற்ற தோள்களும், பிறை என்று கருதும்படி அறிவை மயங்கச் செய்யும் நெற்றியும் உடைய பெண்ணே! இரவுதோறும் இடைவிடாது அலைக்கின்ற கடலைகளால் மோதப்பட்ட தாழை மலா்களின் வெள்ளிய பூவானது கரைகள் தோறும் வெள்ளை நாரைகள் நிறைந்திருப்பதைப் போன்ற பரந்த இடமாகிய பெரியதுறைகள் கொண்டது அந்நிலை இப்பொழுது கழிந்தது அன்றோ!

    “மானிட உணா்வுகளோடு இயற்கையின் எழிலை இயைபுறச் செய்தது பண்டைத் தமிழிலக்கிய மரபு” என்ற மு.வரதராசனாரின் கூற்று இங்கு எண்ணத்தக்கது.

    மரத்தை நட்பாய் எண்ணல்

    சூழல் கட்டமைப்பு எனப்படுவது ஒரு சிக்கலான ஒருமைப்பாடு என்றும், அதில் தாவரங்களும், விலங்கினங்களும் ஓரே வாழிடத்தில் கூட்டமாக ஒருமித்து வாழ்வதோடு மூலப்பொருட்களும் சக்தியும் ஒன்றுக்கொன்று பரிமாறிக் கொள்ளப்படுகிறது என்று உட்பரி என்னும் அறிஞா் விளக்குகிறார்.

    உயிர் வாழ்வதற்கும் உணவுச்சுழற்சிக்கும் தகவமைப்புக்கும் இத்தகைய ஒருமித்து வாழ்தல் இன்றியமையாததாயினும் உள்ளத்து உணா்வுகளையும் பிற உயிர்களுக்கும், தாவரங்களுக்கும்  ஏற்றிக் கருதுவது சங்கப்புலவா்களின் சூழல் பார்வையையும் உயிர்ம நேயத்தையும் காட்டுகிறது.

    “நமக்கொன் றுரையா ராயினுந் தமக்கொன்
    றின்னா விரவி னின்றுணை யாகிய
    படப்பை வேங்கைக்கு மறந்தனர் கொல்லோ
    துறத்தல் வல்லியோர் புள்வாய்த் தூதே. ” (குறுந்-266 )

    எனத் தலைவன் வரைந்து கொள்ளாமல் பிரிந்த காலத்தில் தனக்குத் தூது அனுப்பாவிட்டாலும் இரவுக்குறி வந்தொழுகிய காலத்தில் நம்மோடு இனிய துணையாக இருந்த வேங்கை மரத்திற்காவது புள்வாய்த் தூது அனுப்பலாகாதோ என ஏங்கும் தலைவியின் நிலை சுட்டப்படுகிறது. வேங்கை மரத்தை அஃறிணைப் பொருள் என எண்ணாமல் தனக்கும் தலைவனுக்கும் இனிய துணையென உயிரோடு உணா்வும் ஏற்றிக் கூறுவதுடன் வேங்கைக்குத் தூதாகப் பறவையைத் தோ்தல் சூழலியையும் நேயமும் வெளிப்படக்காட்டுகிறது.

    பல்லுயிர்க்கும் உலகுரிமை

    “ஆா்னியாஸ் என்ற அறிஞா், மாந்தன் இயற்கை உருவாக்கிய உணவுத் தொடரில் ஒரு கண்ணிதான். பிற கண்ணிகளுக்கு ஏதாவது ஊறு ஏற்படுமானால் அது மாந்தர் குலத்தையும் பாதிக்கும் என்கிறார். உலகும் அதில் உள்ள உயிர்களுமான இந்தச் சூழல் மண்டலம் மாந்தனுக்கு வாழ்வதற்கு எவ்வளவு உரிமை உள்ளதோ அந்த அளவிற்கு உரிமை மற்ற உயிர்களுக்கும் உண்டு”.என்கிறார்.

    “கான மஞ்ஞை யறையீன் முட்டை
    வெயிலோடு முசுவின் குருளை யுருட்டும்”  (குறுந்-38 )

    என்ற பாடல் மயில் அடைகாத்தற்குரிய அதன் முட்டையை பாறையின் மேல் நின்று கொண்டு குரங்குக் குட்டியானது முட்டையை உருட்டி விளையாடுகிறது. அந்நிலைகண்ட மயிலின் உயிர் ஊசலாடுகிறது. இருதலைக் கொள்ளி எறும்பாக மயிலின் தவிப்பு உள்ளது, அந்நிலையே தலைவியின் நிலையும். தலைவன் பிரிவில் மைதீட்டப்பெற்ற கண்களினின்றும் பெருகும் நீரோடு இருக்கும் தலைவியின் நிலை அவளின்  மனவலிக்குப் பின்புலமாக மயிலின் அடைகாக்கப்படாத முட்டையைக் காட்டுவது, அம்முட்டை பொறிக்காமல் போய்விடுமோ என்ற ஆதங்கத்தைக் காட்டுவாகக் கொள்ளலாம். 

    பெயா்நெறி

    பறவைகளுக்கும், விலங்குகளுக்கும், மனிதா்களுக்கும் ஆண்பால், பெண்பால் மற்றும் இளமைப் பெயா்களை விளக்கித் தொல்காப்பியம் இலக்கணம் வகுக்கிறது. திணை ஒழுங்கு பேணி இயற்றும் பாடல்களில் அஃறிணை உயிர்களுக்கு மனிதா்களுக்கு ஒப்பாகப் பெயரிடுதல் இலக்கண வழூஉ  அல்லாமல் நேயம் போற்றும் உத்தியாகவே குறுந்தொகைப் பாடல்களில் அமைகின்றது.

    “வங்காக் கடந்த செங்காற் பேடை
    எழாலுற வீழ்ந்தெனக் கணவற் காணாது
    குழலிசைக் குரல குறும்பல வகவும்
    குன்றுகெழு சிறுநெறி யரிய வென்னாது
    மறப்பருங் காதலி யொழிய
    இறப்ப லென்பதீண் டிளமைக்கு முடிவே”. (குறுந்-151 )

    என்ற பாடல் வழி, ஆண்வங்காப் பறவை நீங்கப் பெற்றமையால், தன்னுடைய கணவனாகிய ஆண்பறவையைக் காணாமல் தவிக்கும் பெண் பறவை எனக் காட்டப்படுகிறது. பறவையின் இணையைப் பாவையின் துணைவா்போலக் “கணவர்” என்ற சொல்லால் சுட்டிக்கூறுவது சிறுபறவையின் வலியும் தன்வலியை ஒத்ததே எனத் தலைவனின் உள்ளக்கிடக்கையைக் கூறுவதாக அமைகின்றது. மேலும்,

    “நோற்றோர் மன்ற தோழி தண்ணெனத்
    தூற்றுந் துவலைப் பனிக்கூடுந் திற்கட்
    புலம்பயி ரருந்த வண்ண வேற்றோடு
    நிலத்தூங் கணல வீங்குமுலைச் செருத்தல்.      (குறுந்-344 )

    என்ற பாடலில் விலங்குகளையும் “அண்ணல்” எனப் போற்றும் இயற்கையியந்த வாழ்வு போற்றும் பழந்தமிழ்ப் பண்பினைக் காட்டுகிறது.

    இயற்கைக்கும் உணா்ச்சிகள்

    உலகம் மனிதா்க்கானது. மனிதா்களுக்காகவே பிற உயிர்கள் யாவும் படைக்கப்பட்டன என்ற மயக்கத்தில் திளைக்கும் சுயநலம் ஓங்கக் கற்பிக்கும் இன்றைய மனிதா்களுக்கு சூழலியலாளா் கூறும் உண்மை நோக்கத்தக்கது.

    “இப்புவியில் வாழும் அனைத்து உயிர்களும் மதிப்பிற்குரியவை அவற்றின் பயன்பாட்டின் அடிப்படையில் அம்மதிப்பு அமைய வேண்டும் என்பதில்லை. அவை அவற்றிற்காகவே மதிக்கப்பட வேண்டும். ஏனெனில் இப்புவியில் பல உயிர்களின் பங்களிப்பை மனிதா்கள் இன்னும் அறிந்து கொள்ளவே இல்லை”. என்ற திரு சஞ்சீவராஜ் அவா்களின் கருத்து இங்கு நினைவு கூரத்தக்கது.

    உயிரற்ற பொருட்களுக்கும் உயிர் கொடுத்துப் பார்ப்பதுடன் உணா்ச்சியையும் ஏற்றிக் காட்டியுள்ளனா் சங்கப்புலவா்கள்.

    “யாரணங் குற்றனை கடலே பூழியா்
    சிறுதலை வெள்ளைத் தோடுபரந் தன்ன
    மீன்ஆர் குறுகின் கானலம் பெருந்துறை
    வெள்வீத் தாழை திரையலை
    நள்ளென் கங்குலும் கேட்கும் நின் குரலே”.

    என்ற பாடல்வழி கடலுக்கும் உணர்ச்சியுண்டு எனக்கருதும் தலைவியின் கூற்றைச் சுட்டுகிறது. தலைவனைப் பிரிந்த மயக்கத்தால் இரவும் பகலும் உறங்காமல் துயருரும் தலைவி, ஓயாமல் அரற்றும் கடலை நோக்கி நீ யார் பிரிவு பற்றி வருந்துகிறாய் என தன் நிலையோடு ஒப்ப, கடலின் நிலைக்கும் கலங்குகிறாள் தலைவி.

     

    முடிவுரை

    சூழல்பார்வை, சங்கப்பாடல்களில் இடம்பெற்றுள்ள இயற்கைப் புனைவுகள் வழி அக்கால மாந்தரின் இயற்கையோடியைந்த வாழ்வு விளக்கப்பட்டுள்ளது. மனிதா்களைப் போல பிற உயிர்களுக்கும் வாழ இவ்வுலகு உரிமையுடையது என்னும் அறிவியல் உண்மையை உள்வாங்கிக் கொண்டு, அதற்கும் மேலாக மரங்களைத் தோழமையாகவும், விலங்குகளையும் மாந்தரோடு ஒப்ப நோக்கியமையும், உயிரற்ற பொருள்களை உயிருள்ள பொருள் போல எண்ணுவதோடு, அவற்றுக்கு உணா்ச்சிகளையும் வழங்கிக் காட்டப்பட்ட குறுந்தொகைப் பாடல்கள் இயற்கை போற்றும் பாடல்களாகவும் திகழ்கின்றன.

    *****

    பயன்பட்ட நூற்கள்

    1. சங்க இலக்கியக் கட்டுரைகள், தமிழ்ப்பல்கலைக்கழக வெளியீடு, எப்ரல் 1984. பக்16.
    2. உயிர்ம நேயம், பாமயன், தமிழினி ஜீலை 2008, பக்.66. M.Woodbury (1954).
    3.Principles of General Ecology, MC Grew Hill Book Co, page.503.
    4. P. T. Sanjeeva Raj, Beware the loss of biodiversity, The Hindu, Sep 23, 2012. page.10

    *****

    கட்டுரையாளர் – பகுதிநேர முனைவர்பட்ட ஆய்வாளர்,
    முனைவர் ஆறுச்சாமி.செ. – நெறியாளர்
    உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், ஈச்சநாரி, கோவை-21.

     

    Share
  • புறநானூற்றுப் பாடல்களில்  அறவாழ்வியல்  கூறுகள்

    -முனைவர் பெ.தனலட்சுமி

    புறநானூற்றுப்பாடல்கள் அறங்கள் போதிப்பனவாகும். அறமின்றி உலகில்லை என்பதற்கு இந்த புறநானூற்றுப்பாடல்களில் நிறைய காட்டுகள் உள்ளன. அறநெறிமுதற்றே அரசின் கொற்றம் என்றும் அறநெறிபிழைத்தால் அதற்கு அறமே கூற்று என்றும் மக்களும் அரசனும் நம்பி வந்தனர். அறம் எங்கிருந்து வருகின்றது என்றால் அது வாழ்வியலில் இருந்துதான் என்கின்றனர் அறிஞர்கள். ஒருவன் அன்றாட வாழ்வில் அறநெறி தவறாமல் இருக்க வேண்டும் என்பதற்கும் , எதிர்கால இலட்சியப்பாதையைச் சரிவர அமைத்துக்கொள்ளலுக்கும் அறம் துணை செய்கின்றது. இம்மை மாறி மறுமையிலும் ஒருவனுக்குப் பிறப்பறுப்பது அறமே ஆகும். அறமின்றி வாழ்க்கை அர்த்தமற்றதாகிவிடுகின்றது.  ஆற்று மணலினும் பலவே என்பது  வாழ்ந்த மனிதர்களின் எண்ணிக்கையைக்  குறிக்கின்றது. நல்லவன் தீயவன் என்பது அவனது அறத்தின் அளவுகோலே ஆகும். அறமில்லாத வாழ்க்கை மரத்தினுக்கு ஒப்பானதாகும். அறத்தாறு இதுவென நுவலும் மறத்தாறு என்பது அற வழியில் நடப்பதுவே ஆகும். மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம் உண்டி கொடுத்தலும் உணவு படைத்தலும் உறையுள் தருதலும் மட்டும்தானா அறம் என்ற கேள்வி எழுகின்றது. அறம் என்பது அதுமட்டுமன்று. அறத்துக்கு விளக்கம் தருகையில் வாழும் வாழ்வில் நெறிபிறழாமல் வாழ்வதே அறத்துடனான வாழ்வு என்கிறது சான்றுகள். ஆனாலும் அறத்தினை இந்த அளவுகோல் மட்டுமே வைத்து அளந்துவிடமுடியாது.  அது நெகிழ்வுத்தன்மை வாய்ந்தது ஆகும். வாழும் நாள் சிலவே வாழும் மனிதர்களும் சிலவே. அதுவரை உற்றார் உறவினரோடு வாழ்தலும் உயிர்க்கொலை தவிர்த்து வாழ்தலும் வாழ்க்கை எனலாம். உயிர்க்கொலை புரியாமை உற்றாருக்குக் கெடுதல் நினையாமை போன்றன மேலும் சில வாழ்வியல் அறங்களுக்கு உதாரணமாகும். இவற்றையெல்லாம் வைத்துப் புறநானூற்றை மதிப்பீடு செய்து ஆராயலாம்.

    புறநானூற்று வாழ்வியலும் அறமும்

    ‘உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தோரே’ என்ற பாடல் உணவே இந்த உலகத்திற்கு முதன்மையானது என்பதை உணர்த்துகின்றது. அரசர்களுக்கும் புலவர்களுக்கும் உள்ள உறவு மனவுணர்வு அடிப்படையிலானதாக இருந்தது. எத்திசைச் செலினும் அத்திசைச்சோறே என்று மழுவுடைக் காட்டகத்து கையில் வாளொடு செல்லும் எவருக்கும் விறகு கிடைப்பது போலவே புலமையுள்ள எவருக்கும் எங்குச் சென்றாலும் வேண்டிய பொருள் கிடைக்கும் என்ற கோபத்துடன் புலவர் ஒருவர் பாடுகின்றார். மற்றொரு புலவர் அரசன் காலம் நீட்டித்தாலும் யானையின் கோட்டிடை வைத்த கவளம் போன்றது எமது பரிசுப்பொருள் என்று கூறுகின்றார். மானமும்  அறிவும் மனிதனுக்கு அழகு என்பது போல புலவர்கள் வாழ்ந்துள்ளனர். இன்னா செய்தாருக்கும் இனியவே செய்யவும் நம்பி வந்தவர்களுக்கு நன்மை செய்யவும்  நம்பிக்கையை எஞ்ஞான்றும் காப்பாற்றுவதும் புறநானூற்றின் பாடுபொருளாக இருக்கின்றது. வாய்மையன்றி ஒரு போதும் வாக்கில்லை. பொய்மை ஒருபோதும் எழவில்லை. உணர்வும் அறிவும் இணைந்த வாழ்க்கையும், அன்பும் அறிவும் ஆழ்ந்த பண்பும் பகைதவிர்ப்பும் பொன்னும்  பொருளும் போகத்திற்கு அடுத்தும் இருந்த காலம் சங்க காலம். மாணெழில் சிதையாமல் இருந்தது என்பது வாழ்க்கையின் அறிவூற்றிலும் பண்பின் மறக்காற்றிலும்தான் என்பது பாடல்கள் காட்டும் உண்மைத் தத்துவம். ‘ஞாலம் கருதினும் கைகூடும் காலம்கருதிச் செயலுக்குரிய திட்டமும் படைவீரமும் கொடுத்தல் தொழிலும், கோடான கோடி கொடுப்பினும் தன்னுடைய நா கோடாமையும் புறப்பாடலின் அகக்கூறாகும் (தமிழண்ணல் (2009:75). வானும் வையமும் மாறிய போதிலும் தம் வாழ்நாள் கொள்கையும் குறிப்பும் மாறாமையே சங்கப்பாடலின் சொத்தாக விளங்குகின்றது.

    நல்லதும் அல்லதும்

    நல்லதும் அல்லதும் இரண்டு பிரிக்கவியலாத நாணயப் பக்கங்களாகும். சான்றோர்கள் என்பவர்கள் யார் என்ற வினாவிற்கு விடையளித்தலில் நல்லது செய்யாவிடினும் அல்லது செய்யாதவர்களே யென்று பாடல் பகர்கின்றது. 

    ”நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்
    அல்லது செய்தல் ஓம்புமின் அதுதான்
    எல்லாரும் உவப்பது அன்றியும்
    நல்லாற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே” (பாடல்-195)

    அனைவரும் வாழ்ந்து முடிந்தபின்பு வரவுசெலவு கணக்கைப் பார்க்கின்றோம். நாம் பார்க்காவிட்டாலும்  மேலுலக நம்பிக்கையில் உள்ளோர் பார்க்கின்றனர். அவ்வாறு பார்க்கின்றபோது நீங்கள் நன்மை செய்திருக்காவிட்டாலும் தீமையாவது செய்யாமல் இருந்திருந்தால் அதுவே உங்களை நன்மைப் பாதையில்  கொண்டுசேர்க்கும் என்பதைப் பாடல் பகர்கிறது. ஈகையில் இரண்டு விதம் உண்டு. தன்னிடம் உள்ள பொருளைத் தருகிறேன் என்பதும், தன்னிடம் இல்லாதபொருளையும் தருகின்றேன் என்பவையும் அவை. உன்னிடம் உள்ள பொருளைத்தருகின்றேன்  என்றால் அதில் ஓர் அறம் உண்டு. உன்னிடத்து இல்லாத பொருளை எப்படித்தரமுடியும் அவ்வாறு தருகிறேன் எனச் சொன்னபின்பு தராமல் காலம் நீட்டித்தல் அறமாகாது.

    ஒல்லுவது ஒல்லும் என்றலும் யாவர்க்கும்
    ஒல்லாது இல்என மறுத்தலும் இரண்டும்
    ஆள்வினை மருங்கின்  கேண்மைப்பாலே
    ஒல்லாது ஒல்லும் என்றலும் ஒல்லுவது
    இல்என மறுத்தலும் இரண்டும் வல்லே
    இரப்போர் வாட்டல் அன்றியும் புரப்போர்... (பாடல்-196)

    தம்மால் கொடுக்கவியன்றதைக் கொடுக்க முடியும் எனச்சொல்லிக் கொடுக்கவேண்டும். கொடுக்கவியலாததை இல்லையென்று சொல்லி மறுக்கவேண்டும் இதுவே அறத்தின் வழியாகும். அதுவன்றி மேற்சொன்னது போல் இயலாத ஒன்றை இருப்பதாகச் சொல்லி ஏமாற்றுவது பொய்ப்புகழால் போற்றுவது தூற்றவதற்குச் சமமாகும். ஆக, வலியறிந்து முடியும் என்பதை முடியும் எனவும்  இயலாது என்பதை இயலாது எனவும் கூறினால் அது தர்மம். அறநெறி. ஆனால் வைத்துக்கொண்டே இல்லையென்று சொல்கின்ற நபர்களும் உண்டு. அவர்கள்  செய்வதும் வாழ்வியல் அறத்திற்கு எதிரானது என்கிறது புறநானூறு.  வேந்தனின் அறம் முக்கியமானதாகும். பிசிராந்தையாரை நுமக்கு ஆண்டுபலவாகியும் நரைவரவில்லையே எனக் கேட்கின்றபோது மாண்ட என்மனைவியோடு மக்கள் நிரம்பினர்; என் வழிகாட்டுதலின் படி நடந்தோரும் எனது ஏவல் படியே நடந்தனர்.  எங்கள் ஊரில் சான்றோர் பலர் வாழ்கின்றனர்; எனது மன்னனும் அல்லவை செய்யாதவன் என மொழிகின்றார்.

    …அல்லவை செய்யான் காக்கும் அதன்தலை
    ஆன்றவிந்து அடங்கிய கொள்கைச்
    சான்றோர் பலர்  யான்வாழும் ஊரே (பாடல்-191)

    தனிமனிதன் அல்லவை செய்தால் குடும்பம் குலையும். அரசன் அல்லவை செய்தால் நாடு நல்வழியில் சேராது என்பதற்குப் புறநானூற்றில் பல காட்டுகள் உள்ளன.

    ஊரும் உறவும், வியத்தலும் இகழ்தலும்

    யாவரும் ஓரினம் யாவரும் ஓர் நாடு. யாவரும் ஓரின மக்கள் என்பதில்தான் எத்தனை மகிழ்ச்சி. இன்ப துன்பம் என்பது நமக்கு நாமே விளைவிக்கும் ஓர் விளைபொருள். இதற்கு மற்றவர்கள் காரணம் கிடையாது. வாழ்க்கை இனிமையானது என்ற சொல்வதற்கும் இல்லை. துன்பமானது என்ற தூற்றுவதற்கும் இடமில்லை. எனவே அனைத்தும் சமமானதே ஆகும். பணத்திலும் பதவியிலும் பெரியவர் என்பதற்காக ஒருவனைப் புகழ்வதும், இது இவனிடம் இல்லை என்ற இகழ்வதும் தமிழ்ப்பண்பாடு அல்ல. வாழ்க்கை என்பது அதுவதன் ஓட்டத்தில் செல்லக்கூடியதாகும். அது வருகின்றபோது வந்தவழி தெரியவில்லை. போகின்றபோது சென்றவழியும் தெரிவது இல்லை (பெ.மாதையன் (2004) எனவே, அனைத்தையும் ஒன்றாகக் கருதவேண்டும் என்ற மனநிலையைத் தருவது புறப்பாடல்.

    …காட்சியில் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின்
    பெரியோரை வியத்தலும் இலமே
    சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே (பாடல்-192)

    எனவே, யாவரோடும், சுற்றத்தோடும் சேர்ந்து வாழும் வாழ்க்கை இனிதானது.  துறவு வாழ்க்கையைவிட இல்வாழ்க்கையே சிறந்தது என்று குறிக்கின்றது. இந்த  உலகம் இறைவனால் மிக அற்புதமாகப் படைக்கப்பட்டுள்ளது. வாழும் ஊர்ப்பகுதியில் ஓரிடத்தில் மணமலர்கள் சுபகாரியங்களுக்குப் படைக்கப்படுகின்றது. மற்றொரு வீட்டில் பிணத்திற்காகப் படைக்கப்படுகின்றது. இவையிரண்டும்  ஒரே நேரத்தில் நிகழ்கின்றது இதனைப்பார்த்தாவது வாழ்க்கையில் சில அறங்களைக் கடைப்பிடிக்கவேண்டும் என வழிகாட்டுகிறது புறநானூறு.

    ஈகையில் சிலர் கருமிகளாக இருப்பர். இவர்களது வாழ்வு பயன்றது. சில எலிகள் தாம் உண்பதற்காக நெல்லினை சேமித்துவைக்கும். அதுபோல மனிதர்களும் நெல்மணிகளாகச் சேர்த்துவைப்பர்.  இச்செயலைச் செய்பவர்கள் சிறியர். ஆனால், புலி தாம் தாக்கிப் பன்றி வலப்பக்கமாக வீழ்ந்தால் மட்டுமே உண்ணும் பண்பு கொண்டவை. இடப்பக்கமாக வீழ்ந்தால் அதனை உண்ணாமல் சென்றுவிடும். மாறாக, மலைப்பக்கத்தில் சென்று  அங்குவரும் களிற்றைத்தாக்கி அதுவும் வலப்பக்கத்தே வீழ்ந்தால் மட்டுமே உண்ணும் பண்புகொண்ட புலியினை ஒத்ததாக இருக்கும் பண்பு மனிதர்களிடத்துத் தேவைப்படுகின்றது. எனவேதான், புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது எனும் பழமொழி உருவாயிற்று. எனவேதான், தமிழர்களின் வீரத்தைப் புலிக் கூட்டம் என்று வருணனை செய்கின்றனர். இங்கே வியக்கும்படி வாழ்ந்த வாழ்வு தமிழர்களுடையது. எனவே, அறவாழ்வு, மறவாழ்வு என்றிரண்டிலும் தமிழர்கள் சிறந்து நின்றார்கள் என்பதற்கு இப்பாடல் சான்றாகிறது.(க.காந்தி (2003)

    உயிர் வாழ்வின் சிறப்புகள்

    உயிர் வாழ்க்கையனது பலவகைகளில் சிறப்புறுகின்றது. உயிரின் தன்மையறிந்த பின் மற்றொரு உயிரை மதிக்கவேண்டும் என்பதும், உயிர்களின் இழப்பு எத்தகைய வாட்டத்தை உண்டாக்கும் என்ற செய்தியும் புறநானூற்றில் உள்ளது. தொல்காப்பியர் உயிர்ப்பாகுபாட்டை ஆறு வகையாகப் பகுத்துள்ளார். எனினும் உயிரின் மதிப்பு அனைத்திற்கும் ஒன்றுதான். (வ.சுப.மாணிக்கம்(2007). நீரின்று அமையா யாக்கை, உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தோர் உண்டிமுதற்றே உணவின் பிண்டம், உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே, நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு உடம்பும் உயிரும் படைத்திசினோரே (பாடல்-18) என்றது புறம். உயிர் பிறத்தலும் உயிர்காத்தலும் உயிர் போக்கலும் உயிர் வாங்குதலும் என அனைத்து நிலைகளையும் புறநானூறு பேசுகின்றது. உயிர் வாழ்ந்தால் போதுமா? போதாது. காரணம் ஆயிரம் பொருட்கள் அனைத்து பதவிகள் இருந்தும் ஓர் மழலைச்செல்வம் இல்லையென்றால் வாழ்க்கை முழுமையாகாது. மழலைச்செல்வமே சிறந்த அறமாக்கத்திற்கு எடுத்துக்காட்டாகின்றது.  பயக்குறை இல்லாத வாழ்வு என்பது மழலைச்செல்வமற்றது.

    “படைப்புப் பலபடைத்துப் பலரேடு உண்ணும்
    உடைப்பெருஞ்செல்வர் ஆயினும் இடைப்படக்
    குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
    இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
    நெய்யுடை அடிசில் மெய்ப்படவிதிர்த்தும்
    மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
    பயக்குறை இல்லை தாம் வாழும் நாளே” (பாடல்-188)

    என்கிறது புறநானூறு. மழலை இல்லாத வாழ்வு மரம்போன்றதாகும். மேலும், நாழி அரிசிச்சோறும் உடுக்கின்ற இரண்டு உடையும் மட்டுமே யாவர்க்கும் பொதுவானது. மதுரைக்கணக்காயனார் மகனார் நக்கீரனார் படியுள்ள பாடல் நிலையாமைத் தத்துவத்தை எடுத்துரைத்து வாழ்வு அறத்தைப் போதிக்கின்றார். செல்வத்துப்பயன் என்பது ஈதலின் அடிப்படையாகும். தனக்கென மட்டும் சேமிக்கும் பொருள் தனக்கேகூடப் பயன்படாமல் போய்விடும். என்ற கருத்தை எடுத்துரைத்துப் பிறர்க்கென வாழும் வாழ்க்கையைக் கற்றுக்கொடுப்பது புறம். நாடெல்லாம் கட்டியாளும் அரசனாக இருந்தலும், வேட்டையாடித் திரியும்  வேடனாக இருந்தாலும் இருவருக்குள் உள்ள தேவை என்பது ஒன்றதான். இதற்குள் மேல் கீழ், என்ற பாகுபாட்டை விதித்து வேறுபடுத்தும் நோக்கு தேவைதானா? என்ற வினாவை எழுப்பி வாழ்க்கை அறம் கூறுகின்றது.

    உண்பது நாழி, உடுப்பவை இரண்டே
    பிறவும் எல்லாம் ஓரொக்கும்மே
    செல்வத்துப்பயனே ஈதல்,
    துய்ப்போம் எனின் தப்புந பலவே (பாடல்-189) எனவே, நிலையாமைத் தத்துவம், மழலைச்செல்வச் சிறப்பு போன்றவற்றை மிகத்தெளிவாக எடுத்துச்சொல்லி வாழ்க்கை அறம் புகட்டும் இந்த புறநானூற்று வரிகள் என்றும் நிலைத்திருப்பனவாகும். 

    கல்வி அறமும், உலக நியதியும்

    பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் எனும் அரசன் புலவனாக இருந்து பாடுகின்றான். அப்பாடல், கல்வியின் சிறப்பைப் போற்றிநிற்கின்றது. ஒருவருக்கொருவர் உதவி வாழ்தல் வேண்டும். தன்னிடம் உள்ள பொருளை மற்றவர்கள் கேட்கையில் கொடுத்து வாழ்தல் வேண்டும். தன் ஆசிரியரிடம் வெகுளாது, ஆசிரியரின் வெகுளிக்கும் முனியாது இருந்து கற்றல் வேண்டும். இது கற்றலுக்குரிய அறமாகும் (மு.சண்முகம் பிள்ளை(2004). அவ்வாறு கற்றுத்துறைபோகிய ஒருவனை அரசனும் விரும்புவான்.  ஒருகுடியில் பிறந்தாலும் மூத்தோன் என்றால் மதிப்பு வராது. அவருள் யார் கல்வியில் சிறந்து விளங்குகின்றார்களோ அவர்களுக்குத்தான் கற்றவர்கள் அவையில் சிறப்பு உண்டாகும். பல்வேறு வகையில் வேறுபாடுகளை இந்தச் சமூகம் சுமந்திருந்தாலும் கல்வியால் கீழ் உள்ளவன் மேலாக கருதப்படுவதும் கல்வி என்ற கருவியால் தான் என்பதை உணரமுடிகிறது.

    “உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
    பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே
    பிறப்பு ஓர்அன்ன உடன் வயிற்றுள்ளும்
    சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்
    ஒரு குடிப்பிறந்த பல்லோ ருள்ளும்
    மூத்தோன் வருக என்னாது அவருள்
    அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்
    வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்
    கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
    மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே” (பாடல்-183) என்ற பாடலடிகள் உணர்த்துகின்றது. அரசனுக்குச் செவியறிவுறூஉவாக எண்ணற்ற பாடல்களைப் புலவர்கள் பாடியுள்ளனர். பாண்டியன் குடிமக்களிடம்  நிறைய வரி வசூலிக்கின்றான் என்பதை  இலைமறைகாயாக உணர்த்துகின்றார். ‘அறிவுடை வேந்தன் நெறிஅறிந்து கொளினே, கோடி யாத்து நாடு பெரிது நந்தும்’ வயல் நிறைய நிறைந்துள்ள நெல்மணிகளை யானைகள் கூட்டாய்ச் சென்று அழிப்பதைப்போல வரி என்ற யானையை அவிழ்த்துவிட்டால் நாட்டுமக்கள் நிம்மதியிழப்பார்கள் என்ற கருத்தைப்  பாண்டியன் அறிவுடை நம்பியிடம் பிசிராந்தையார் பாடுகின்றார். மக்களது வாழ்வு சிறக்க அதிக வரிச்சுமையற்ற நாடு தேவைப்படுகின்றது. அதிக வரி விதிக்காமல் நாட்டை ஆள்வதே மக்களைத் துன்புறுத்தாத அறவழியாகும்.

    புகழ் அறம்

    புகழில் புதைந்த வாழ்க்கையை மக்கள் விரும்புவர். தோன்றிற் புகழொடு தோன்றுக அதுவல்லாமல் தோன்றாமல் இருப்பதே நன்று என்றார் வள்ளுவர். இளையோர் என்று இகழக்கூடாது என்றார் ஔவையார். அவன் வீரத்தில் சிறந்தவன். மைந்து என்ற சொல்லிற்கு இலக்கணமானவன். ஒருவர் இறந்தும் உயிர்வாழ்தல் புகழுக்கே உரியது. பாரி என்ற மன்னனை மக்கள் எல்லோரும் ஏத்திப்புகழ்கின்றனர். அந்த பாரி மட்டும்தானா இவ்வுலகில் உள்ளான். அவனை விட வள்ளல் ஒன்று உண்டு. அதுதான் இந்த உலகைக் காக்கும் மழை. அந்த மழையைவிடவா பாரி சிறந்தவன் என்கிறார் கபிலர்.  ஆனால் மழையைப் போன்றவன் பாரி. அதனால்தான் பாரிவள்ளல் என்கின்றோம். மாரி எவ்வாறு கைம்மாறு கருதாது மக்களுக்கு மழைதருகின்றதோ அதனைப்போன்ற பண்புள்ளவன் பாரி.

    ‘பாரி பாரி என்ற பலர் ஏத்தி
    ஒருவர் புகழ்வர் செந்நாப்புலவர்
    பாரி ஒருவனுமல்லன்
    மாரியும் உண்டு, ஈண்டு உலகு புரப்பதுவே’ (பாடல்-107)

    ஈதல் இசைபட வாழ்தல் மனிதர்களுக்கு அழகு. அதனைப்போன்று ஈத்துவக்கும் குணம் இருந்தால் மட்டுமே வாழ்நாளில் புகழின் உச்சியைச் சென்றடைய முடியும். அதியமான் நெடுமான் அஞ்சியை ஔவையார் பின்வருமாறு புகழ்கிறார். அவனை இளையன் என்று எண்ணாதீர்கள். அவன் பார்ப்பதற்கு இளையனாக இருந்தாலும் வீரத்தில் உங்களையெல்லாம் விடச் சிறந்தவன். பெரிய யானையாக இருந்தாலும் அதனைத் தண்ணீரில் எளிதில் வீழ்த்தும் தன்மை முதலைக்கு உண்டு. அதனைப் போல உருவு கண்டு  எள்ளாதீர்கள். உருவத்தால் ஒருவரை இகழ்வாக எண்ணுதல் கூடாது. இவனை மதியாது போர் தொடுப்பீராயின் முதலை தாக்கும் யானையைப் போல் ஆகிவிடுவீர்கள் என்பது ஔவையார் கொடுக்கும் செய்தி.

    “போற்றுமின் மறவீர் சாற்றுதும் நும்மை
    ஊர்க்குறுமாக்கள் ஆடக்கலங்கும்
    தாள்படு சில்நீர்க் களிறுஅட்டு வீழ்க்கும்
    ஈர்ப்புடைக் கராஅத்து அன்ன என்னை
    நுண்பல் கருமம் நினையாது
    இளையன் என்றுஇகழின் பெறல்அரிது ஆடே” (பாடல்-104) உருவு கண்டு எள்ளாமை இந்தப் பாடலில் ஒலிக்கின்றது. இளைய வயதில் புகழ்அடைந்தவர்கள் பலர் உளர். அவ்வகையில் பல புலவர்களும், அரசர்களும், சான்றோர்களும் நிற்கின்றனர். அதியமான் போன்ற அரசர்கள் சிறுவயதில் புகழ் அறத்தைத்  தொட்டவர்கள். நீரினும் இனியசாயலோடு நினைப்பினில் வாடும் அரசன், காட்டினில் வாழும் முனிவன் என அனைவரும் பொன்னுடம்பு மறைந்தாலும் புகழுடல் மறைவதில்லை.

     

    அறம்புரி கொள்கை நான்மறை

    அறம்புரி கொள்கையோடு வாழ்தல் மிகவும் அரிது. நான்மறையில் சிறந்தது அறம்புரி கொள்கையாகும். அதியமானுக்கும் தொண்டைமானுக்கும் போர் நடக்கவிருப்பதை அறிந்த ஔவையார் அதனைத்தடுக்க முற்படுகின்றார் . இது பாடாண்திணையில் அமைந்த பாடல் வாள்மங்கலத்தில் வைக்கப்பெறுவது. தொண்டைமானிடம் சென்ற ஔவையார் அவனது படைக்கலக் கொட்டிலைக் காட்ட அதனைக்கண்டு பாடுகின்றார். இங்கு தூது செல்லலின் உண்டான அறம் காட்டப்படுகின்றது. அதியமான் பேரில் உண்டான அன்பால். தொண்டைமானின் படைக்கலக்கொட்டிலில் உள்ள கருவிகள் புதியதாக உள்ளன. மாறாக அதியமானின் உலைக்கருவிகளோ, பகைவர்களைக் குத்தியும் கோடுநுனி சிதைந்தும், முனைமழுங்கியும் காணப்பெறுகின்றது என்கிறார்.

    ‘இவ்வே பீலியணிந்து மாலைசூட்டி
    கண்திரள் நோன்காழ் திருத்தி நெய்அணிந்து
    கடியுடை வியல் நகரவ்வே அவ்வே
    பகைவர்க் குத்தி கோடு நுனி சிதைந்து
    கொல் துறைக் குற்றிலமாதோ- என்றும் ‘(பாடல்-95)

    செல்வம் அதிகமாய் இருக்கையில் நிறைய வழங்கும் வள்ளல். செல்வம் குறைவாக இருக்கையில் இருப்பதை பிறருக்குப் பகிர்ந்தளித்து உண்ணும் தன்மை கொண்டவன் அதியமான் என்று ஔவையார் அதியனைப் புகழ்கின்றார். இந்த அறநெறி வாழ்வு என்பது என்றும் மேலுலகம் செல்வதற்கு வழிவகுக்க கூடியதாகும். (புலவர் ஆ.பழனியப்பன் 2001). எத்தகைய விழாவாக இருந்தாலும் படை அரசர்களுக்கு ஊன்கொடுத்துப் பரிமாறும் பண்புடையவன்.

    தொகுப்புரை

    புறநானூற்றுப் பாடல்கள் வாழ்வியல் அறங்களை எடுத்தோதுகின்றன. வாழ்வியலும் போர்மறமும், குழந்தைச்செல்வச் சிறப்பும் சங்கப்பாடல்கள் காட்டுவன போல் எவையும் காட்டுவனவல்ல. நல்லது செய்வதும் அல்லது செய்வதும் அதனால் வருகின்ற விளைவும் பாடல்களில் இடம்பெற்றுள்ளன. சமுதாயமும் வாழ்வியலும் ஒருங்கிணைந்து செல்ல அறம் முக்கியமானதாகும். அறத்தின் வழியே வாழ்க்கை பயணிக்கவேண்டும். மறந்தும் பிறன்கேடு சூழக்கூடாது. தீமை பயத்தல் என்றும் தீமையே தரும் என்பதை விளக்கப் புறப்பாடல்களில் சான்றுகள் பல உள்ளன. புகழ்அறம், கல்விஅறம் போன்றவை வாழ்வியல் அறத்தை மெருகூட்டுவனவாகும்.  அரசர்களிடையே மூளும் சண்டையும் அதனைச் சந்துசெய்துவைத்தலும் பண்பாட்டு அறமாக இருந்து வந்தது. இதனை நாளும் வளர்த்தும் வளர்வித்தும் வருவது நமது பண்டைய இலக்கியமாகும்.

    ——————–

    சான்றாதாரங்கள் 

    1. சங்கமரபு (2009), தமிழண்ணல், சிந்தாமணிப் பதிப்பகம், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை.
    2. சங்கத் தமிழர் வாழ்வியல் (2004), மு.சண்முகம் பிள்ளை, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை
    3. சங்கத்தமிழ் (2009), ச.அகத்தியலிங்கம், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை
    4. சங்க கால இனக்குழு சமுதாயமும், அரசு உருவாக்கமும் (2004), பெ.மாதையன், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை.
    5. தமிழர் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும் (2003), க.காந்தி, உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், சென்னை
    6. தமிழ்க்காதல் (2007), வ.சுப.மாணிக்கம், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம்
    7. பழந்தமிழ் இலக்கியம் ஓர் ஆய்வு (2001), புலவர் ஆ.பழனியப்பன், நியூ செஞ்சுரி பதிப்பகம், சென்னை

    *****

    கட்டுரையாளர் – தமிழ்த்துறை
    சாரதாமகளிர்  கல்லூரி
    சேலம்
    தமிழ்நாடு
    drdhanalakshmi.p@gmail.com
    contact No : +91-9578420292

     

     

    Share
  • அறிவா் யார்

    முனைவா் க. இந்துமதி

    உதவிப்பேராசிரியா் (தமிழ்த்துறை)

    கலசலிங்கம் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்

    கிருஷ்ணன்கோவில்

    முன்னுரை

                மனிதன் தான் வாழும் உலகில் ஒவ்வொரு காலகட்டத்திலும் யாரேனும் ஒருவரிடமிருந்தோ, ஏதேனும் ஒன்றிடமிருந்தோ கற்றுக் கொண்டே இருப்பவனாகிறான். இக்கற்றுக் கொள்ளும் பண்பு மனிதனின் குழந்தைப் பருவத்திலேயே துவங்குகிறது. கேட்டல், பார்த்தல், உணர்தல் என்பன கற்றலின் முக்கிய நிலைகளாகும். இக்கற்றலின் வழியே மனிதனின் சிந்தனையானது வளர ஆரம்பிக்கிறது. மனிதனின் பரிணாம வளா்ச்சியைப் போலவே அறிவும், சிந்தனையும் மாற்றம் பெற்று மனித குலம் வளா்வதற்கு உறுதுணையாகத் திகழ்கின்றன. இவ்வறிவும் அறிவு சார்ந்த பதிவுகளும் தொல்காப்பியத்தில் எவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளன எனவும் இலக்கிய, இலக்கணங்களில் அறிவா் எனக் குறிப்பிடப்படுபவா் யார்? என்ற வினாவிற்கு விடை தேடும் முகமாகவும் இவ் ஆய்வுக் கட்டுரை அமைகிறது.

    தொல்காப்பியத்தில் அறிவு

                தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியம் காலத்தால் முற்பட்டதால் மட்டும் பெருமையுடையதல்ல. 21-ஆம் நூற்றாண்டு ஆகியும் இன்றும் இதில் உள்ள களங்கள் பல்வேறு ஆய்வுப்பரப்பை உண்டாக்கிவருவதாலும் பெருமை உடையதாகிறது. எழுத்தும் சொல்லும் மட்டுமன்றி பொருளுக்கும் வரையறை தந்த தனிச்சிறப்பை உடையது தொல்காப்பியம். இப்பொருளதிகாரப் பகுதி, இலக்கிய வகைமையை, வடிவம் மற்றும் உத்தி முறைகளை விரிவாக்க கூறுகிறது. இவற்றில் இலக்கியப் படைப்பாக்க மாந்தா்களில் அறிவா் என்றொரு மாந்தா் குறிப்பிடப்பட்டுள்ளார். இவா் யார் என்ற கேள்விக்கான விடையைத் தேடுவதற்கு முன் தொல்காப்பியம் அறிவு என்ற சொல்லின் விளக்கமாகக் கூறுவனவற்றைக் காண்போம்.

    தொல்காப்பியத்தில் அறிவு

                தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அறிவு, அறிதல், அறிவன் என்ற பொருளிலான சொல்லாட்சிகள் அமைந்துள்ளன. அதில் சிலவற்றைக் காண்போம்.

                                        ”நாட்டம் இரண்டும் அறிவு உடம்படுத்தற்குக்

                                        கூட்டி உரைக்கும் குறிப்புரை ஆகும்”           (தொல்காப்பியம், 1042)

    ”அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்

                                        ஐவகை மரபின் அரசா் பக்கமும்

                                        இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும்

                                        மறுவில் செய்தி மூவகைக் காலமும்

                                        நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்”         (தொல்காப்பியம், 1021)

    ”நாற்றமும் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும்

                                        …………………………………………….

                                        ……………………. அவள் அறிவுறுத்துப்

                                        பின் வா என்றலும் ……………………”      (தொல்காப்பியம், 1060)

    ”கிழவோன் அறியா அறிவினள் இவள் என”  (தொல்காப்பியம், 1063)

    ”தாய் அறிவுறுதல் செவிலியோடு ஒக்கும் ”   (தொல்காப்பியம், 1084)

    ”தொல்லவை உரைத்தலும் நுகா்ச்சி ஏத்தலும்

                                        பல்லாற்றானும் ஊடலின் தணித்தலும்

                                        உறுதி காட்டலும் அறிவு மெய் நிறுத்தலும்”   (தொல்காப்பியம், 1114)

    ”செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும்

                                        அறிவும் அருமையும் பெண்பாலான”      (தொல்காப்பியம், 1155)

    ”வினையின் நீங்கிய விளங்கிய அறிவின்

                                        முனைவன் கண்டது முதல் நூலாகும் ” (தொல்காப்பியம், 1594)

    இவ்வாறாக தெரிந்து கொள்ளுதல், உண்மை அறிதல், தெரிவித்தல், காதலிலும் அறிவால் உடன்படுதல், காலம் அறிந்த அறிவன், அறிவித்தல், அறிவினை மெய்ம்மை நிறுத்தல் என்ற உணர் பொருளில் தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் அறிவு என்ற சொல் அமையப் பெற்றுள்ளது. மேலும் முனைவன், பெரியவா், சான்றோர், தொல்லோர் என்ற சொற்கள் இடம் பெற்றுள்ளன. இவை 1594, 1022, 1092, 1059, 1096 என்ற நூற்பாக்களில் இடம் பெற்றுள்ளன. தொல்காப்பியம் சுட்டும் அறிவுசார் பொருளுடைய சொற்கள், அறிதல் பொருளிலும் வயதிலும் அனுபவத்திலும் அறிவிலும் சிறந்து விளங்குபவரைக் குறிக்கும் நிலையிலும் அமைந்துள்ளன.

    தொல்காப்பியம் சுட்டும் அறிவர்

                பன்னிரு வாயில்களில் ஒருவராக அறிவரைச் சுட்டுகிறது தொல்காப்பியம். (தொல்காப்பியம், 1139). இளம்பூரணர், ‘அறிவர் எனப்படுவோர் மூன்று காலமும் தோன்ற நன்குணா்ந்தோரும், புலன் நன்குணா்ந்த புலமையோரும் ஆகலானும் காலத்தையும் ஐம்புலன் உணர்வையும் கண்டுணர்ந்தோர் அறிவா்’ என்று உரை விளக்கம் தருகிறார்.

    கூற்று நிலையில் அறிவா்

                அக வாழ்வில் செவிலிக்குரிய கூற்று முறைகள், அறிவா்க்கும் உரியது எனத் தொல்காப்பியம் சுட்டுகிறது. தலைவன்-தலைவி கற்பு வாழ்வில் இருவரின் மகிழ்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டவா் என்பதும், அறிவா் என்போர் தலைவியிடத்து தலைவனின் புறத்தொழுக்கத்தினைக் கூறுதல் இல்லை (தொல்காப்பியம்,1111) என்பதும் கூறப்பட்டுள்ளன.

                                        “எல்லா வாயிலும் இருவா் தேஎத்தும்

                                        புல்லிய மகிழ்ச்சிப் பொருள என்ப”     (தொல்காப்பியம், 1124)

    என்று வாயில்களின் பொதுவான பண்புகளைக் கூறும் போது அறிவரின் கூற்றும் உணா்த்தப்படுகிறது. கற்பினில் கூற்றுக்குரியவா்களில் அறிவரை, ‘நற்பொருள் உணரும் அறிவா்’ என்று பேராசிரியா் உரை கூறுகிறார். ‘தலைமகள் கூற்றைக் கேட்போருள் அறிவரும் ஒருவா். அறிவா் கூற்றை தலைவி, தோழி, செவிலி, நற்றாய் கேட்பா் என்றும் அகம் புறத்தில் அறிவா் கிளவி ஏற்கும்’ என்றும் பேராசிரியா் உரை அமைகிறது. நாவலா் சோமசுந்தர பாரதியார், ‘நாளும் கோளும் கண்டது போலக் கூறுபவர். கேட்போர் விரும்பும் எதிர்கால விளைவுகளை எடுத்துக்கூறும் கணிகன்; மூவகைக் காலமும் முறையின் ஆற்றிய அறிவா்; அறிவோடு அமையாது ஆற்றுதலும் கூறுதலால்’ என்று விளக்கம் தருகிறார். இதன் வழி அறிவா் எனப்படுவோர், அக வாழ்வில் நல் அறிவுரை கூறும் அறிவோராகவும் புற வாழ்வல் காலம் கணித்து உரைக்கும் கணியராகவும் இருந்திருக்கூடும். ஆனால் தொல்காப்பியப் பிரதியில் புறத்தில் அறிவர் என்ற சொல்லோ, கூற்றோ இடம் பெறவில்லை. இருப்பினும் உரையின் வழி கணியராகவும் வாழ்ந்திருப்பா் என்று கருத முடிகிறது.

                மேலும் தொல்காப்பிய உரைவளம், ‘அறிவா் என்பார் தம் அறிவால் மக்கள் அறிவைத் தீதின் நீக்கி நன்றின்பால் உய்ப்பவா் என்றும் துறவு உள்ளத்தை உடையவர் என்றும் தலைவனிடம் தலைவியை நீங்காது ஒழுகுக என நெறிப்படுத்துபவர்’ என்றும் விளக்கம் தருகிறது.

    பிற இலக்கண நூல்களில் அறிவர்

                தொல்காப்பியக் கூற்று மரபின் வளர்ச்சியாக அமையும் நம்பியகப்பொருளில் அறிவரின் இலக்கணம் கூறப்பட்டுள்ளது.

                                        “அறிவர் கிழவோன் கிழத்தி என்று இருவர்க்கும்

                                        உறுதி மொழிந்த உயர் பெருங்குரவர்”     (நம்பியகப்பொருள், 112)

    ‘தலைவனுக்கும் தலைவிக்கும் உறுதியைப் பயக்கும் உபதேசங்களைச் சொல்லும் மேம்பட்ட குருக்கள்’ என்று உரை கூறுகிறது. நீதி, உலகியல் அறிவு போன்றவற்றை தெளிவுற எடுத்துச் சொல்வர் எனக் கூற்று நிலையில் விளக்குகிறது. இதில் செவிலிக்குரிய கூற்று நெறி அறிவர்க்கும் பொருந்தும் என அகக் கூற்று மாந்தர்களின் வரிசையின்படி செவிலிக்கு அடுத்த நிலையில் அறிவா் கூற்று இடம் பெறுகிறது.

                                        “மறையோன் கூற்றும் அறிவா் கூற்றும்

                                        இறையோன் முதலா அனைவரும் கேட்ப”    (நம்பியகப்பொருள், 226)

    மறையோன் அதாவது வேதங்களைக் கற்ற அந்தணர்களுக்கு அடுத்த நிலையில் அறிவரை இடம் பெறச் செய்து, அவரின் கூற்றை தலைவன் முதலாக அனைவரும் கேட்பர் என விளக்குகிறது. இதன் வழி அறிவர் என்போர் கூற்றுரைக்கும் நிலையில் செவிலி, அந்தணா் வரிசையில் இடம் பெறுபவராகிறார்.

                மாறனகப்பொருளும் அறிவரை ஊடல் தீர்க்கும் வாயில்களுள் ஒருவராக, கற்பில் கூற்றுரைப்போருள் ஒருவராக, தலைவன்-தலைவி அக வாழ்வில் பேரின்ப அருள் வழங்கும் பெருங்குரவராக இயம்புகிறது. இலக்கண விளக்கம் அறிவா் தொழில்களாக,

    • இல்லறம் நிகழ்த்தும் நெறிமுறை கூறல்
    • தலைவியைக் கூடுதற்குரிய நாள் நிமித்தம் கூறல்
    • இல்வாழ்க்கை சிறக்கும் தன்மை எடுத்துரைத்தல்
    • வாயில் வேண்டல்

    என்பனவற்றைக் குறிப்பிடுகிறது. அத்துடன் தலைவி, தலைவனோடு வாய்ப்பு நிகழும் போதெல்லாம் கூற்று நிகழ்த்துவா் என்று விளக்கமளிக்கிறது. ‘மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவா்; அவரே குரவர் ஆவதற்கு உரியவா்’ என்றும் கூறுகிறது.

                முத்துவீரியம், அறிவா் என்ற தனிச்சொல்லைக் குறிப்பிடாது வாயிலவா் என்ற மரபார்ந்த சொல்லை மட்டுமே குறிப்பிடுகிறது. தனித்தனியாக வாயில்கள், அவா்களின் தொழில்கள் முதலியன முத்துவீரியத்தில் காணப்படவில்லை.

                சுவாமிநாதம், கூற்றுக்குரியோருள் அறிவரைச் சுட்டிச் செல்வதோடு நோய் அறிவோர் என்றும் அறிஞா் என்றும் இரு சொல்லைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது. ஆனால் பொருளதிகாரம் சுட்டும் அறிவர் வேறு; அறிஞா் வேறு என்பதைக் குறிப்பிட்டுக் காட்டாமல் இருவரையும் ஒன்றே எனக் குறிப்பிடுகிறது. ஏனெனில் 19-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இலக்கணமான சுவாமிநாதம், அறிஞர் என்ற சொல்லை அறிவில் சிறந்தவா் என்ற பொருளில் குறிப்பிட்டிருக்கலாம் என எண்ண முடிகிறது.

    சங்க இலக்கியங்களில் அறிவர்

                தொல்காப்பியப் பதிவுகள் பலவற்றின் இலக்கியச் சான்றாகக் கருதப்படும் சங்க இலக்கியங்களில் அறிவர் கூற்றுப் பாடல்கள் இல்லை. குறுந்தொகையின் 190-வது பாடலில் “அறிவர் கொல் வாழி தோழி” என அறிந்தவர் என்ற வினைப்பொருளில் அறிவர் என்ற சொல் அமைந்துள்ளது. ஐங்குறுநூற்றில் அந்தணர், அயலோர், கண்டோர் என்போரின் கூற்றுப்பாடல்கள் உள்ளனவே அன்றி, அறிவர் கூற்றுரைக்கும் பாடல்கள் இல்லை. பதிற்றுப்பத்தின் 4-வது பாடலில் “ஈா் அறிவு புரிந்து” என்ற வரிகளுக்கு, ‘இருவகை அறிவும் அமைந்து……….அருமறைப் பொருளை அறிவர் உரைப்பக் கேட்ப’ என்று உரை கூறுகிறது. கலித்தொகையிலும் அகநானூறிலும் அறிவா் கூற்றுப் பாடல்கள் இல்லை. “அறிவா் கேட்ப” எனவும், “அறிவா் உறுவிய அல்லல் கண்டருளி” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறாக சங்க இலக்கிய அகப் பாடல்களில் அறிவர் கூற்று பற்றி செய்திகள் ஆங்காங்கே அமைந்துள்ளனவே தவிர கூற்றுரைத்தல் நிலையில் முழுமையான பாடல் பதிவுகள் இல்லை.

    முடிவுரை

                மேற்கூறிய கருத்துக்களின் வழி அறிவா் என்போர்,

    • தலைவன்-தலைவி கற்பு வாழ்வில் இடம் பெறக்கூடிய மாந்தர் ஆவார்.
    • கற்பு வாழ்வில் இருவரின் ஊடலைத் தீர்க்கும் வாயில்களில் ஒருவர் ஆவார்.
    • இல்வாழ்வின் கடமைகளை இடித்துரைக்கும் நிலையில் செவிலிக்கு அடுத்த நிலையில் வைத்து எண்ணப்படுகிறார்.
    • வயதில் அனுபவத்தில் அறிவில் சிறந்தவராகவும், நாள், கோள்களை கணக்கிட்டுக் கூறும் கணியராகவும் இருந்திருக்கக் கூடும் எனலாம்.
    • அக வாழ்வானது பெரும்பாலும் பெண்ணைச் சுற்றியே பதிவு செய்யப்பட்டவையாக இருப்பதால் தோழி, செவிலி, நற்றாய் முதலிய பெண் மாந்தா் கூற்றுப் பாடல்கள் மிகுதியும் கிடைத்துள்ளன. அதனால் தொல்காப்பியக் கூற்று நிலையில் இருக்கும் அறிவரின் கூற்றுப்பாடல்கள் சங்க அக இலக்கியங்களில் காணப்படவில்லை. மாறாக வாயில்கள் என்ற பொது மாந்தர் கூற்றுப் பாடல்களே உள்ளன. இதன் வழி இனக்குழுச் சமுதாயத்தில் பெண் மையக் குடும்ப அமைப்பு நிலவியுள்ளதை அறிய முடிகிறது.
    • அந்தணருக்கு அடுத்த நிலையில் அறிவரின் கூற்றை அனைவரும் கேட்பர் என்பதன் மூலம் இனக்குழுச் சமுதாயத்தில் ஊா்ப்பெரியவர் என்ற முறையில் மக்களின் அக வாழ்விலும் சமுதாய நலன் கருதியும் அறிவுரைப்போராக அறிவா் விளங்கியுள்ளனா் என்பதை இக்கட்டுரையின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது.

    ***********************************

    பயன்பட்ட தரவுகள்

    1. ச.வே. சுப்பிரமணியன் (பதிப்பாசிரியர்), தமிழ் இலக்கண நூல்கள் முழுவதும், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், இரண்டாம் பதிப்பு ஜூலை 2009.
    2. இணையதள முகவரி, தமிழ் இணையக் கல்விக்கழகம், அண்ணா பல்கலைக்கழக வளாகம், சென்னை. www.tamilvu.org
    Share
  • அற இலக்கியங்கள் கட்டமைக்கும் பெண்ணும் பெண்சார் மதிப்பீடுகளும்

    -முனைவர் கல்பனா சேக்கிழார்

    பெண்ணை ஒடுக்குதல் என்பது நம் நாட்டில் மட்டும் நடந்த நிகழ்வு அன்று. உலகம் முழுதும் நடைபெற்ற நிகழ்வு. ஆதியில் பெண்வழி ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இருந்தது. குடும்பம் என்னும் அமைப்பு உருவாகாத காலத்தில் பெண்கள் தலைமையேற்று  அனைத்தையும்   நிர்வகிப்பவர்களாக இருந்தனர். காலப்போக்கில் உடைமைச் சமூகமும் அதன்வழி உருவான வாரிசுமையும் தோன்றியவுடன், பெண்களை அடிமைப்படுத்துதல் என்பது தொடங்கிவிட்டது. அத்துடன் மட்டுமல்லாமல் பெண்கள், வைசியர், சூத்திரர் பாவ யோனியில் பிறந்தவர்கள் (பக.கீதை:அத்.9, சுலோகம்.32) என அவர்களை இரண்டாம் தரமான சமூக மதிப்பீட்டையும் உருவாக்கியது. இதனை இது வலுக்கட்டாயமாக நிகழ்த்தப்பட்டதன்று, அதாவது வெற்றி பெற்றவர்களுக்கு முடிசூட்டும் வேலையைத் தோல்வி பெற்றவர்கள் தாராளச் சிந்தனையுடன் சூட்டி மகிழ்ந்தார்கள் என எங்கல்ஸ் குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகிவற்றின் தோற்றம் என்னும் நூலில் குறிப்பிடுவதுபோல் பெண்களுக்கான கருத்துகள் உருவாக்கப்பட்டு அவர்கள் ஏற்றுக்கொள்ளும் சூழலை எல்லாச் சமூகங்களுமே உருவாக்கியுள்ளன. அக்கருத்துக்களைப் பரப்பும் ஊடகங்களாக இலக்கியங்களைப் பயன்படுத்திக்கொண்டனர்.

    இலக்கிய, இலக்கணங்களின் வழியாகவே தொல்சமூகம் குறித்தான புரிதலையும், சமூக மதிப்பீடுகளையும் நாம் தொகுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. நமக்குக் கிடைத்துள்ள பழைமைப் பனுவல்கள் தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள்.  இப்பிரதிகள் நாகரிகம் அடைந்த தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாகவே உள்ளன. இவை தமிழ் நிலப்பரப்பினுள் வந்துகலந்த வைதிகப் பண்பாட்டுக்கூறுகளையும் உள்வாங்கியுள்ளன. அதன் தொடர்ச்சியாக வரக்கூடிய பதினெண் கீழ்க்கணக்கு வைதிகக் கருத்தியலோடு, சமணக்  கருத்தியல்களையும் உள்வாங்கியப் பனுவலாக  உருப்பெற்றுள்ளன.

    சங்க இலக்கியத்தில் பெண்ணிக்கிருந்த நெகிழ்வு அற இலக்கியங்களில் இறுக்கமாகவே இருக்கிறது. 40க்கும் மேற்பட்ட பெண்பாற் புலவர்கள் சங்க இலக்கியத்துள் பாடியுள்ளனர் . ஆனால் பதினென் கீழ்க்கணக்கில்  பெண்பாற் புலவர்கள் ஒருவரும் இலர். இதனைப் பார்க்கும் பொழுது, அறம் சார்ந்த சிந்தனைகள் பெண்ணுக்கு இல்லையா என்னும் கேள்வியெழுகிறது. மேலும் பதினெண் கீழ்கணக்குத் தொகுக்கப்பட்டதன் பின்னுள்ள  அரசியலும் அறிய இயலவில்லை.  இத்தொகுப்பினுள் உள்ள 11 அறநூல்களும் பண்பாட்டின் அடையாளமாக அதனைக் கட்டிகாப்பவளாகப் பெண்ணையே முன்னிருத்துகிறது.

    பெண்களை வெறும் நுகர்பொருளாகவும், பாலியல் இயந்திரமாகவும் பயன்படுத்தியதோடு, அவர்களுடைய புழங்குவெளியையும் வரையறுத்து அதனைச் சட்டமாகவும் உருவாக்கினர். பெண்கள் அதிலிருந்து மீள்வதற்கான முயல்வுகளைக் காலந்தோறும் நிகழ்த்தியுள்ளனர். அவற்றை அடக்கியும் ஒடுக்கியும் வைப்பதற்கான வேலைகளை ஆண் மையச் சமூகம் மோற்கொண்டது. அவளுக்கான விதி இதுதான் என மூளைச் சலவையும் செய்யப்பட்டது. 15-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு புதிய அறிவியல் கண்டுப்பிடிப்புகள், தொழில் வளர்ச்சி, உற்பத்திப் பெருக்கம் போன்றவை சமூகத்தில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியது. அச்சூழலில் பெண் தன்னுடைய இருப்புநோக்கிச் சிந்திக்கத் தொடங்கினாள். அதன் விளைவாகப் பெண்ணியச் சிந்தனைகள் மேற்குலகில் உருப்பெற்று, தராள வாதப்பெண்ணியம், சமதர்மப் பெண்ணியம் தீவிரவாதப்

    பெண்ணியம், தலித்தியப் பெண்ணியம் எனப் பல்வேறு நிலைகளில் போராடத்தொடங்கினர். இந்தியாவிலும் இதன் தாக்கம் ஏற்படத்தொடங்கியது. தமிழகத்திலும் அது சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

    எலைன் ஷோவால்டர்,

    • பெண்மை நிலை (Feminine Phase) – பண்பாடு சார்ந்தது
    • பெண்ணிய நிலை (Feminist Phase) – அரசியல் சார்ந்தது
    • பெண்நிலை (Female Phase) – உயிரியல்

    என மூன்று நிலைகளில் இலக்கியங்கள் பெண்களைக் கட்டமைப்பதாகக் கூறுகிறார். இதனடிப்படையில் அற இலக்கியங்கள் பெண்ணுக்கான வெளியையும்  குடும்ப சமூக மதிப்பீடுகளையும் எவ்வாறு உருவாக்கியுள்ளன என்பதை அறிய இக்கட்டுரை முயல்கிறது.

    சமூகத்தின் அனைத்துத் தளத்திலும் பெண்ணைச் சக உயிரியாகப் பாவிக்காமல்,  ஒரு சமூகத்தின் கட்டுமானப் பண்பாட்டுக் கூறுகள் யாவும் பெண் மீதே சுமத்தப்பெறுகின்றன. ஆண்வழிச் சமூகம் சுமத்தியுள்ள பண்பாட்டுக் கூறுகளைப் பேணுகின்றவர் ஒழுக்கமானவர் என்றும், அப்பண்பாட்டு நடத்தையிலிருந்து விலகிச் செல்பவர் ஒழுக்கம் கெட்டவர் என்றும், கற்புக்கோட்பாட்டின் வழி சமூக மதிப்பீடுகளை உருவாக்கி வைத்திருக்கிறது. இவ்வாறான ஆண்வழிச் சமூக அமைப்பின் ஒழுங்கிற்கும் நியதிகளுக்கும் உட்பட்டு, ஆணின் அதிகார எல்லைக்குள் ஓர் அடிமை போன்ற வாழ்வை மேற்கொண்டு ஆணுக்கு எல்லா வகையிலும் சேவகம் புரிவதையே பெண்ணுக்கான அறம் என்பதாகச் சமூகம் கற்பித்து வைத்திருக்கிறது (2010: 80).  வினையை ஆடவருக்கு உயிராகவும், பெண்களுக்கு அவ்வாடவரே உயிராகவும் ( குறுந்தொகை, 135) பெருமையும் வீரமும் ஆணுக்குரியதாகவும், அச்சம், மடம், நாணம் பெண்ணுக்குரியதாகவும் (தொல்காப்பியம், களவியல் 7,8) ஆண் அதிகாரம்/பெண் அடங்கிபோதல் என்ற பண்பாட்டு நிலையிலே இலக்கியங்கள் கட்டமைக்கின்றன.

    பாண்பாட்டுத் தளத்தில் கட்டமைக்கப்பட்ட கருத்தியல் அடிப்படையிலான அறங்கள் அணுக்கும் பெண்ணுக்கும் வெவ்வேறானவையாக அமைந்தன.

    ஆணுக்குப் பெருமை, வலிமை, அழகு, புகழ், அறிவு, கடமை, ஆள்வினை, உரிமை, செயலூக்கமான பாலியல், ஆட்சி அதிகாரம், செல்வம் ஆகியவை உயர் அறங்கள். பெண்ணுக்கு உடலின் மென்மை, அழகு, பணிவு, அடக்கம், அடங்கிய பாலியல், அச்சம், நாணம், மடம், கற்பு ஒழுக்கம், பொறுமை, சேவை, தியாகம் ஆகியவை உயர் அறங்கள்.

    பெண் என்பவர்

    பெண்ணை, இலட்சிய வாழ்க்கைத் துணைவி என்றோர் அசாதாரணமான சித்திரத்தை அறநூல்கள் வழங்குகின்றன. தாயுரிமை தூக்கி எறியப்பட்டது. பெண்ணினம் உலக வரலாற்று ரீதியில் பெற்ற தோல்வியாகும். ஆண் வீட்டிலும் ஆட்சியைக் கைப்பற்றினான்; பெண் இழிநிலைக்குத் தள்ளப்பட்டு அடிமைப்படுத்தப்பட்டாள். இவை முழுதும் ஏடறியா வரலாற்றுக் காலத்தைச் சேர்ந்த நிகழ்ச்சியாகளாகும். இவை மெய்யாகவே நிறைவேற்றப்பட்டன என்பதற்குப் பாஹொஃபென் திரட்டியுள்ள தாயுரிமை பற்றிய ஏராளமான எச்சங்களே சாட்சியாகும் என்பது ஏங்கல்ஸ் கூற்று.     

    மென்மை

    வை யெயிற்று ஐயள் மடந்தை (நற்றிணை,2) அனிச்சம் பூவை உவமையாக 1111,1120ஆம் குறட்பாக்களில் மோந்தாலே வாடிவிடும் மென்மைமிக்க பூவினும் மென்மையானவளாக பெண்ணைப் படைக்கிறார் வள்ளுவர். உடற் கூற்றியல் அடிப்படையில் ஆணைவிடப் பெண்ணே வலிமையானவராக இன்றைய அறிவியல் கூறுகிறது. 

    அழகு

    சங்க இலக்கியங்கள் அழகு என்பது பெண்ணுக்குரியதாகவே அவர்களின் புற அழகிற்கு முதன்மைக் கொடுத்து (பெண்களின் ஒவ்வொரு உறுப்பையும்) வருணிக்கின்றன. வள்ளுவரும் ஒளி பொருந்திய நுதல்(1088) மான் போன்ற அழகிய பார்வை (1089) அழகிய மயில் (1081) அமிழ்தின் இயன்ற தோள் (1106) முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம் வேல் உண்கண் வேய்த்தோள்(1113) மதியும் மடந்தை(1116) எனப் பெண்ணின் உடலுக்கு கொடுக்கும் முதன்மை பெண்ணின் அறிவுக்கு வழங்கவில்லை. 

    உடைமை

    பெண்ணின் இயல்புகளான குணங்கள் மறுக்கப்பட்டு உடைமைச் சமூகத்துக்கு ஏற்ற பெண்ணாக வள்ளுவம் கட்டமைக்கிறது. குறள் 1007  – இல் பொருள் இல்லாத வறியவருக்குப் பொருள் கொடுத்து உதவாதவனைக் கூறவந்தவர் மிக்க அழகு பொருந்திய பெண் தனிமையில் வாழ்ந்து முதுமையுற்றது போன்றது என்று எடுத்துக்காட்டுகிறார். ஒரு பெண் என்பவள் ஆணுக்குப் பயன்படுபவளாக இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். 

    கற்பு என்பது

    மனைவியாக அமைந்தவள் மாண்பினை உடையவளாகவும், கணவனின் வளத்திற்குத் தக்கவளாகவும் அமையவேண்டும். குடும்பத்திற்குத் தக்க சிறப்பில்லாத பெண் இல்லை என்றால் என்ன சிறப்பு இருந்தும் வீண். பெண்ணின் பெருமை கற்புடன் இருப்பது. கணவனைத் தொழுபவளுக்கு (வணங்குதலுக்கும் தொழுதலுக்கும் வேறுபாடு உண்டு, தாளை வணங்காத் தலை (9) , கொல்லான்…கைகூப்பி எல்லா உயிரும் தொழும் (260) வணங்குதல் – தலையின் செயல், தொழுதல் – கையின் செயல்) இயற்கையே கட்டுப்படும். தன்னையும் காத்து, கணவனையும் காத்து குடும்பப் புகழையும் காத்து ஓம்பவேண்டும். பெண் தன் கற்பினைத் தானே காக்க வேண்டும், சிறந்த மனைவியைப் பெறுவதே எல்லாவற்றையும் விடச் சிறப்பானது என வாழ்க்கைத்துணை நலம் கூறுகிறது.

    கற்புடை மனைவி இருக்கும் வீடே வீடாகும்; செல்வம் முதலியவற்றை விட இல்லக் கிழத்தியின் நற்குணமே இல்வாழ்க்கைக்கு முதன்மையானது (நாலடியார், 383) கற்புடைய பெண்களுக்கு நாணம் முதலியவை பெண்மையியல்புகள் அணிகளாகும் (நாலடி, 385); கற்புடைய மனைவி தூயர் ( நாலடி, 387); கற்புடைய மகளிர்க்கு தங் கணவர் மாட்டு அன்பு எந்நிலையிலும் குறையாது (நாலடி, 389). வினைத் திறன் அறியாத ஆண் மகனைக் காட்டிலும் கற்பமைந்த பெண்டிர் நல்லவர் ( நான்மணிக் கடிகை) தாரம் என்பவள் கணவன் குறிப்பறிந்து நடக்க வேண்டும் (முதுமொழிக் காஞ்சி,5, திரிகடுகம்,96, சிறுபஞ்ச மூலம், 15).

    உடைமை பொருள்

    பிறனில் விழையாமையில் பெண்ணைப் பிறன் பொருளாகக் (141) கூறுகின்றார் வள்ளுவர். மேலும் பிறன் இயலாள் என்றும் பிறன் வரையாள் என்றும் உடைமைப் பொருளாகவே பெண்ணைப் பதிவு செய்கிறார்.

    நிலைத்த மனம் இல்லார்

    கூடா நட்பு குறித்துக் கூறும்பொழுது உண்மையில்லாதவரிடம் கொள்ளும் நட்பு பெண்ணின் மனம் போல வேறுபடும் என்று கூறுகிறார். வரைவின் மகளிரில் பொருட்பெண்டிர் என்றும் அன்பில்லாதவர்கள், பண்பற்றவர்கள், நெஞ்சத்தை நிறுத்தியாளும் திறன் அற்றவர்கள், மாய மகளிர் என வரையறுக்கிறார். 

    காத்திருப்பவள்

    கணவன் பிரிவை எண்ணிக் கலங்கி  அழகு கெட காத்திருப்பவளாக(1157,1234) படைக்கிறார். 

    பெண் கொல்லும் படை

    ஆண்மகனை எதிர்த்து நிற்கும் பெண் எமன், அதிகாலையில் சமையல் அறைக்குச் செல்லாதவள் ஒருவனுடைய நோய், சமைத்ததைக் கணவனுக்கு எடுத்துப் படைக்காதவள் பேய், இப்படிப்பட்ட குணங்களை உடையவள் கணவனைக் கொல்லும் படை (நாலடி, 363) மனையாள் இல்லாத வீடு வீடன்று (நாலடி, 361)  கற்புடைய மகளிருக்குக் கடமை விருந்தோம்பல், இல்லத்தைக் காத்தல், மக்களைப் பெறல் இம்மூன்றும் (திரிகடுகம், 64). 

    முயன்று வினையாற்றாள்

    ஊழ் கூட்டாதவிடத்தும், அரிய காரியங்களைச் செய்தலில் தளர்வின்றிருந்து முயலும் ஆண்மை தாளாண்மையாகும். ஊழ் கூட்டி முடிப்பது பெண்டிரின் செயல் (194). 

    ஆண் செய்யக் கூடாதவை

    கற்புடைய மகளிரை அடித்தல் மனிதனின் அறியாமை (திரிகடுகம், 3) விருப்பம் இல்லாத பெண்களிடம் ஆண்கள் இன்பம் துய்ப்பது அருந்துயர் கொடுக்கும் (திரிகடுகம், 5). பெண்வழிச் சேரலில் பத்துக் குறளிலும் மனைவின் சொற்படி நடக்கும் ஒருவன் வாழத் தகுதியில்லாதவனாக உருவாக்கியுள்ளார் வள்ளுவர். 

    அறிவும் வேண்டும்

    அழகோடு, வாழ்க்கையை நடத்தும் நல்லறிவும் உடையவள் இல்வாழ்க்கைக்குரிய துணைவி ( நான்மணிக்கடிகை,54) பெண்ணிடம் அழகு இல்லாவிட்டாலும் மாட்சிமையுடைய இயல்புகள் இருக்கும் (திரிகடுகம்,64)

    ஆணும் பெண்ணும் எண்ணும் எழுத்தும் அறிந்திருக்கவேண்டும் என நாலடியாரும் ஏலாதியும் கூறுகின்றன.

    குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
    மஞ்சள் அழகும் அழகல்ல – நெஞ்சத்து
    நல்லயாம் என்னும் நடுவு நிலைமையால்
    கல்வி யழகே அழகு (நாலடியார், 14) 

    இடைவனப்பும் தோள்வனப்பும் ஈடின் வனப்பும்
    நடைவனப்பும் நாணின் வனப்பும் – புடைசால்
    கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோடு
    எழுத்தின் வனப்பே வனப்பு (ஏலாதி – 74) 

    பெண் – மதிப்பீடு

    மதிப்பு என்பதற்கு அளவிடுகை, கௌரவிக்கை, உவமைச் சால மதிப்பொழிந்த வல்லமார் மாண்டார் (தேவாரம்,1014) கருத்து, மண்ணுலகாளும் மதிப்பை யொழித்தே (பிரமோத்.8, 99) (தமிழ் லெக்ஸிகன், பகுதி,5,பக்.3057) மதிப்பீடு என்பது ஒன்றை அல்லது ஒருவரைப் பற்றிக் கொண்டிருக்கும் கண்ணோட்டம் அல்லது கருத்து (க்ரியா அகராதி.பக்.1071)  எனவும் அகராதிகள் விளக்கம் அளிக்கின்றன.

    ஆண்கள் படைத்துள்ள படைப்புகளில் பெண் குறித்தான மதிப்பீடுகள் பற்றிய ஆய்வை நிகழ்த்திய மேரி எல்மான் எழுதிய பெண்களைப் பற்றிய சிந்தனை என்ற நூலில் ஆண்கள் படைத்துள்ள படைப்புகளில் பெண்கள் என்போர் அடங்கிப் போகும் குணமுடையவர்களாக (passivity) உருவமற்றவர்களாக (formlessness) மன உளைச்சலுக்கு ஆட்பட்டவராக (instability) கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவர்களாக (confinement) கடமையுணர்வு உடையவர்களாக (piety) பொருள் பற்றுடையவர்களாக (materiality) ஆன்மீக நம்பிக்கை உடையவர்களாக (spirituality) பகுத்றிவுக்கு மாறானவர்களாக (irrationality) கவர்ச்சி மற்றும் சூன்யம் உடையவர்களாக (witch) அடங்காப் பிடாரிகளாக (shrew) குறை கூறுபவர்களாக (compliancy) என்ற முரண்பட்ட குணமுடையவர்களாகப் படைக்கப்பட்டுள்ளனர். சமூகம், பண்பாடு அரசியல் மற்றும் தனிப்பட்ட சூழல் என்று எல்லா நிலைகளிலும் ஆண் மேலாதிக்கம் வேரூன்றியிருப்பதால், அவர்கள் படைத்த இலக்கியங்களிலும் அதற்கு விதிவிலக்காக அமையவில்லை என்றார் எல்மன் ( 2010; பக்.81).

    அற இலக்கியங்கள் கூறிய கற்பு, காவல், கணவன்வழிபாடு ஆகியவை கட்டுப்பாடுகளும் பெண்ணின் பாலியல் செயல்பாட்டை அவளது கணவனை மட்டும் சார்ந்திருக்க அவளை ஒழுங்குபடுத்துகின்றன. பாலியலில் நடைமுறைப்படுத்தப்பட்ட இச்சார்பு நிலை பெண்களை, சிறு வயது முதல் சாகும் வரை ஆணைச் சார்ந்து வாழும் இயல்புடையவர்களாக ஆக்கியது. பெண்ணின் பாலியல் அறம் காவலால் சாத்தியமாகவும், அவர்களே நிறையாக இருக்கவேண்டும் என்றும் அற இலக்கியங்கள் வற்புறுத்துகின்றன.

    அற இலக்கியங்கள் முன்வைக்கும் பெண் குறித்தான மதிப்பீட்டைக் கீழ்க்கண்டவாறு வரையறுத்துக் கொள்ளலாம்.

    • இல்லறத்தை நல்லறமாகப் போற்றுபவர்
    • இல்லத்திற்கு இன்றியமையாதவர்கள்
    • கற்புடையோர் பெய்யென்றால் மழையும் பெய்யும்
    • விருந்தோம்பும் பண்புடையவர்கள்
    • கணவன் எவ்வழியோ அவ்வழி நடப்பவர்கள்
    • கணவனைத் தெய்வதிற்கு மேலாக உயிரைவிட மேலாகப் போற்றுபவர்
    • மென்மையுடையவர்கள்
    • பிரிவுத் துயரில் உழல்பவர்கள்
    • திருமணமே முதற்கடமை
    • உடைமைப் பொருள்
    • குடும்பத்தில், பொதுவெளியில் தம் கருத்தைக் கூற இயலாதவர்கள்
    • உறுதியான மனம் இல்லாதவர்கள்
    • கணவனை இழந்தால் வாழ்வே இல்லை என்று எண்ணுபவர்கள்
    • கணவனுக்குத் தேவையானதைச் செய்யாதவர்கள் கொல்லும் படை போன்றவர்கள்

    அற இலக்கியங்கள் கட்டமைக்கும் பெண்கள் ஆண் மையச் சமூகத்தில் ஆணுக்கான அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்யபவர்களாகவும், தம் விருப்பங்களை மனதுள் வைத்து பூட்டியவர்களாகவும் இருக்கிறார்கள். குடும்ப அமைப்பில் அவர்களுக்கான இடம் குறித்து மிகவும் சுருக்கப்பட்டதாவே அமைந்திருக்கிறது. சமூகவெளியில் அவர்களுடைய செயல்பாடுகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் சிலவிடத்துப் பெண் அறிவு சார்ந்த சிந்தனையும் வெளிப்பட்டுள்ளது.  வால்கா முதல் கங்கை வரை நூலில் வங்க எழுத்தாளர் ராகுல சாங்கிருத்தியாயன் தாய்வழிச் சமூகம் இருந்துள்ளதை தக்க சான்றுடன் எடுத்துரைப்பார். அந்த வகையில், 

    பெண்ணே அருகில் வா, நான் கூறுவதைக் கேள், பயனுள்ள விசயங்கள் மீது ஒருமுறை உனது ஆர்வத்தைத் திருப்பு. இயற்கை உனக்கு வழங்கிய இச்சமூகம் தட்டிப் பறித்த ஆதாயங்களைக் கருதிப்பார். நீ ஆணுடைய கூட்டாளியாகப் பிறந்து எப்படி அவனுடைய அடிமையானாய் என்பதை அறிவதற்கு அருகில் வா, செயற்கையான நிலைமைகளை எவ்வாறு இயற்கை என்று நினைத்து நீ அதனை விரும்பத் தொடங்கினாய் என்பதை அறிந்திட வா. நீண்ட கால அடிமைப் பழக்கம் உன்னைக் கீழ்மைப்படுத்தியதை அறிந்திட வா. சுதந்திரம், புகழ் ஆகியவற்றின் மேன்மைகள் கடினமானவை என்று ஒதுக்கிவிட்டுச் சொகுசான இழிவுகள் போதுமென்று எவ்வாறு தெரிவு செய்தாய் என்பதை அறிந்திட வா. நான் வரைகின்ற இந்தச் சித்திரம் உன்னை உன் கட்டுக்குள் வைக்கும் என்றால், இது பற்றி உணர்ச்சி கலவாமல் உன்னால் சிந்திக்க முடியும் என்றால் பயனற்ற உனது வேடிக்கை விளையாட்டுகளுக்குத் திரும்பிப் போய்விடு. இதற்கு மருந்து ஏதுமில்லை, இழிவுகள் பழகிவிட்டன (2010; பக்.23,24). 

    என்னும் கூற்றுக்கிணங்கப் பெண்கள் மெல்ல மெல்லத் தமக்கான இயல்பைவிட்டு ஆண் மையச் சமூகம் உருவாக்கிய கருத்திற்குள் தம்மைப் பழக்கிக்கொண்டு அதனை வழக்கமாக்கிக் கொண்டனர்.  எலைன் ஷோவால்டர் கூறுவதுபோலப் பெண்ணைச் சக உயிரியாகப் பாவிக்காமல், பெண்மை என்னும் பண்பாட்டு அடிப்படையிலேயே அற இலக்கியங்களைப் பெண்ணுக்கான புற உருவத்தைக் கட்டமைத்து, அவர்களின் அகத்தைப் புறந்தள்ளியுள்ளது.

    உசாத்துணை

    1. பக்தவசல பாரதி, சம்பத் இரா., (ப.ஆ) 1998. பெண்ணிய ஆய்வுகள், முதற்பதிப்பு, புதுச்சேரி: புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்.
    2. பக்தவசல பாரதி, 2011, பண்பாட்டு மானிடவியல், முதல் பதிப்பு, திருச்சி: அடையாளம் பதிப்பகம்.
    3. மகாராசன், 2010. பெண்மொழி இயங்கியல், முதற்பதிப்பு, சென்னை: தோழமை வெளியீடு.
    4. முருகேசபாண்டியன் ந., 2014. அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில், முதல் பதிப்பு, சென்னை: நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்.
    5. ஜர்மெய்ன் கிரீர், ராஜ்கௌதமன் (தமிழில்) 2011. பாலற்ற பெண்பால் பெண்பால் நபும்சகம், கோவை: விடியல் பதிப்பகம்.

    *****

    கட்டுரையாளர் – உதவிப்பேராசிரியர்
    தமிழியல்துறை
    அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
    அண்ணாமலை நகர் – 608002
    Mail – kalpanasekkizhar@gmail.com

         

    Share