-மு.சுமதி

முன்னுரை:

மனிதவள மேம்பாடு எனப்படுவது இயற்கை வளங்களையும், கனிம வளங்களையும், முறையாகக் கையாண்டு தன் ஆற்றல்களைப் பயன்படுத்தி,  மேலும் விரிவடையச் செய்வதாகும். நாட்டில் உள்ள மக்களின் கல்வி, விவசாயம், தொழில், மருத்துவம், மக்களின் ஒற்றுமை, தொழில்நுட்பம், அரசியல், பொருளாதாரம், ஒழுக்கம், நிதி, நீதி, போர்வெற்றி, பெருந்தன்மை, விருந்தோம்பல் ஆகியவற்றை விளக்குவதாகும்.

தேவைக் கோட்பாடு:

மனித வளமானது பணியாளார்களின் உள்ளார்ந்த திறமைகள், அவர்கள் பெற்ற அறிவு மற்றும் ஆற்றல்கள் ஆகியவற்றைக் குறிக்கிறது. மனித இனம் மேம்பாடு அடைய வேண்டுமெனில் மனித உறவுகள் மேம்பட வேண்டும். மனித உறவுகளை மேம்படுத்த ஒவ்வொருவரின் மனமும் மேம்பட வேண்டும். ஒரு மனிதன் தன்னை மேம்படுத்திக் கொண்டு சமுதாயத்திற்குத் தொண்டாற்ற வேண்டுமென்றால் முதலில் அவன் உடல் நலத்துடன் இருப்பது இன்றியமையாததாகும். ஒரு மனிதன் பசியோடு காணப்பட்டால் அவன் திறமைகளை வெளிக்காட்ட முடியாது. எனவே பொருநர்கள் கரிகாற் பெருவளத்தானிடம் சென்று இசையை மீட்டிப் பாடல் பாடி அவனை இன்புறச் செய்து தங்கள் வறுமையைப் போக்கிக் கொள்ள முற்படுகிறார்கள்.

பழுமரம் உள்ளிய பறவையின் யானுமவன்
இழுமென் சும்மை இடனுடை வரைப்பின்  (பொருநர்-65) பழுமரத்தைப் பறவைகள் நாடிச் செல்வதைப் போலப் புரவலர்களை நாடி மக்கள் செல்வது இயல்பு என்று திருவள்ளுவரும் கூறியுள்ளார் இதனை,

பயன் மரம் உள்ளப் பழுத்தற்றாற் செல்வம்
நயனுடை யான்கட் படின்.    (குறள்.216) என்று விளக்குகிறது குறள். 

பொருநர்களுக்கு விழாக்காலங்களில் மட்டுமே யாழை மீட்டி ஆடிப்பாடும் வேலை இருக்கும். திருவிழாக் காலங்களில் மட்டுமே அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படும். திருவிழா முடித்தபின் அவர்கள் வள்ளலை நாடிச் செல்வர். அவ்வாறு கரிகாலனிடம் பெரும்பரிசு வாங்கி வந்த பொருநர் மற்றொரு பொருநரை ஆற்றுப்படுத்தி அவரின் வறுமை நிலையினை மாற்றிச் செல்வச் செழிப்போடு வாழ வழிகாட்டுகிறார். 

விருந்தோம்பல்:

மனிதவள மேம்பாட்டில் அடிப்படைக் கூறே தேவைக் கோட்பாடு தான். மனிதனின் முதல் தேவையே அவனுடைய வயிற்றுப் பசியை நீக்குவதாகும். விருந்தினர்களைப் போற்றுதல் சமுதாய உறவுநிலை செம்மையடைய வழிவகுக்கும். விருந்து என்ற சொல்லைத் தொல்காப்பியர் புதுமை என்று குறிப்பிடுகிறார். நமக்கு அறிமுகமல்லாத புதியவர்களுக்கு அதாவது விருந்தினர்களுக்குத் தேவையான உணவு, தங்கும் இடம் போன்றவற்றைச் செய்வதே விருந்தோம்பல் தம்மைநாடி வருபவரை இன்முகத்துடன் வரவேற்று உபசரித்தல் தமிழ் மரபு ஆகும்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.    (குறள்-322) என்ற குறள்வழி நின்று வாழ்ந்தவர்கள் சங்க காலத் தமிழர்கள். பரிசில்பெற வேண்டி வந்த பொருநரைக் கரிகாலன் அரண்மனையில் கண்டஉடன் விரைந்து வருகிறான். அவர் பாடலைக் கேட்ட  கரிகாலன் அவருக்கு வெகு அருகில் அமர்ந்தான்; தன் கண்களால் பொருநரை விழுங்கிவிடுவது போல் அன்புடன் பார்த்தான்; அந்தப் பார்வை பாணரின் உள்ளத்தைக் குளிர வைத்தது.

பருகு அன்ன அருகா நோக்க மோடு
உருகுபவை போல் என்பு குளிர் கொளீஇ (பொருநர் 78-79)ஒரு மனிதனின் தன்னிறைவுத்  தேவையென்பது பிறிதொரு மனிதனின் அடிப்படைத் தேவையை நிறைவேற்றுவதாகும்.

தொழில்வள மேம்பாடு:

ஒரு மனிதன் செய்யும் தொழிலால் மனிதவள மேம்பாடு ஏற்படலாம். ஆயர், உழவர், கூத்தர், கொல்லர்,  கம்மியர், வணிகர்.  தச்சர் ஆகியவற்றுள் தலையாயத் தொழிலாகக் கருதப்படுவது உழவுத் தொழில் ஆகும்.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றுஎல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்.    (குறள்.1033)என்று வள்ளுவரும் உழவுத் தொழிலைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். காவிரியின் நீர் வளமையால் கரிகாலனின் நாடு செழுமையோடு காணப்படுகிறது. அங்கு விவசாயம் மேலோங்கி நெற்பயிர்களின் குவியல் மேருமலை போல காட்சியளிக்கிறது.

“   கூனிக் குயத்தின் வாய்நெல் அரிந்து
சூடு கோடாகப் பிறக்கி நாள்தோறும்
குன்று எனக்குவைஇய குன்றாக் குப்பை
கடுந்தெற்று மூடையின் இடம்கெடக் கிடக்கும்
சாலி நெல்லின், சிறைகொள் வேலி,
ஆயிரம் விளையுட்டு ஆக ,
காவிரி புரக்கும் நாடு கிழவோனே” வற்றாத காவிரி நீர்ப்பாசனத்தால் உழவர் நல்ல விளைச்சலைக் கண்டு பெருமைப்படுகின்றனர். காவிரி நாடு தன் நாடு என்று வீரமுழக்கம் அடையும் அளவிற்குக் கரிகாலனின் நாட்டு மக்கள் தொழிலால் மேம்பட்டுக் காணப்படுகிறார்கள்.

பொருநர்கள் தம் யாழை மீட்டிப் பாட்டுப் பாடும் வல்லமை படைத்தவர்கள். பாணர்கள் தங்கள் தொழில் கருவியான யாழின் மேல் அதிக பற்றுடையவர்கள். பாலையாழ் மூலம் இசைக்கப்படும் இசையை அனைவரும் இரசிப்பர். வழிப்பறிக் கொள்ளையர்கள் கூட யாழின் இசையைக் கேட்டதும், தங்கள் கொலை, கொள்ளைத் தொழிலை மறப்பர். தங்கள் கைகளில் மறைத்து வைத்துள்ள கொடிய கொலைக் கருவிகளைக் கீழே போட்டு விடுவர்.

ஆறுஅலை கள்வர் படைவிட அருளின்
மாறுதலை பெயர்க்கும் மருவுஇன் பாலை. (பொருநர் 21-22) என்ற பாடலின் மூலம் பொருநர்கள் தம் தொழிலில் மேம்பட்டுக் காணப்பட்டதை அறிய முடிகிறது.

புலமை மேம்பாடு:

பொருநர்கள் இசைக் கலையை நன்கு அறிந்தவர்கள் அக்காலத்தில் கலைஞர்கள் பிற கலைஞர்களையும் மதித்தனர்.

கோடியர் தலைவ கொண்டது அறிந
அறியாமையின் நெறிதிரிந்து ஒராஅது
ஆற்று எதிர்ப்படுதலும் நோற்றதன் பயனே
போற்றிக் கேண்மதி புகழ் மேம்படுந (பொருநர் 57-60) பரந்த உள்ளம் கொண்ட பொருநர்கள் தாம் பெற்ற நன்மையைப் பிற பொருநர்களும் பெற வேண்டும் என்ற உயர்ந்த மேம்பாட்டுடன் காணப்பட்டனர். இவ்வாறு தனிமனிதன் உடல், உள்ளம், தொழில், புலமை, ஆகியவற்றால் மேம்பாடு அடையும்போது சமுதாயமும் தானாகவே மேம்படும் நிலை உருவாகும்.

சமுதாய உணர்வினால் ஏற்படும் மனிதவள மேம்பாடு:

ஒருவனுக்குத் தான் வாழும் சமுதாயத்தின் மேல் பற்றும், பாசமும், தன் சமுதாயத்தில் வாழும் மக்கள் மீது அக்கறையும் இருக்க வேண்டும். கரிகாற் சோழனக்குத் தன் நாட்டில் வாழும் மக்களிடம் மட்டுமல்லாமல் தன்னை நாடி வரும் வறிய கலைஞர்கள் மீதும் அக்கறை காணப்படுகிறது.

வறியார்க்கொன்று ஈவதே ஈகை மற்றுஎல்லாம்
குறிஎதிர்ப்பை நீர துடைத்து.   (குறள்.221)என்ற குறளுக்கேற்ப வறியவார்களிடம் ஈகைப் பண்போடு செயல்படும் ஆளுமைத் திறன் உடையவனாகக் கரிகாலன் காணப்படுகிறான்.

வறியவர் செல்வந்தராக மேம்படுதல்:

ஒரு மனிதர் வறுமை உடையவரா, செல்வந்தரா, என்ற நிலையினைப் பிரித்துக் காட்டுவது அவர்களுடைய ஆடை அணிகலன்களே ஆகும். பொருநர் கரிகாலனைக் காண வரும்போது கிழிந்த வேர்வையால் நனைந்த ஆடைகளுடன் வந்தார்.

ஈரும் பேனும் இருந்து இறைகூடி
வேரொடு நனைந்து வேற்றுஇழை நுழைந்த
துன்னற் சிதாஅர் துவர நீக்கி  (பொருநர் 79-81) வறுமையால் வாடிநின்ற பொருநர்களின் ஆடைகளைக் களைந்து அதி அற்புதமான நூலிழையால் செய்யப்பட்ட புத்தம்புது ஆடைகளைக் கொடுத்து அணியச் செய்தான்; அந்த ஆடையில் பூ வேலைப்பாடு நெய்து தரத்தில் பாம்பின் தோலை ஒத்திருந்தது.

நோக்கு நுழைகல்லா நுண்மைய பூக்கனிந்து
அரவுஉரி அன்ன, அறுவை நல்கி,
மழைஎன மருளும் மகிழ்செய் மாடத்து,
இழைஅணி வனப்பின் இன்நகை மகளிர்
போக்குஇல் பொலங்கலம் நிறைய பல்கால்
வாக்குபு தரத்தர வருத்தம் வீட
ஆர உண்டு பேரஞர் போக்கி
செருக்கொடு நின்ற காலை (பொருநர் 82-89)

விருந்தினர்களுக்கு ஆடைகள் மட்டும் நல்காமல் அரண்மனையில் உள்ள பணிப்பெண்களை நடனமாடி விருந்தினர்களின் மனம் மகிழ்ச்சி அடையுமாறு அவர்களுக்குப் பொன்னால் ஆகிய கிண்ணத்தில் கள் நிறையக் கொடுப்பார்கள். அவர்களின் கவலை அனைத்தும் மறந்து மனம் இன்பமடையும் பாணர்கள் இன்பமுற்று தங்கள் ஊருக்குப் புறப்படுகிறோம் என்று கூறினால் இன்னும் சிறிது நாள் தங்கும்படிச் சொல்வான் கரிகாலன். யானைகளையும் அதன் குட்டிகளையும் பரிசில்களையும் கொடுத்து அனுப்புவான்; விருந்தினர் கிளம்பும்போது அவர்களுடன் ஏழு அடி பின் சென்று இன்முகத்தோடு வழியனுப்புவான்.

கரிகாலனின் நுண்ணறிவு மேம்பாட்டுத் திறன்:

கரிகாலன் தன் அன்னையின் கருவில் இருக்கும்போதே அரசாளும் தகுதி பெற்றவன். கரிகாலனின் தந்தை இளஞ்சேட்சென்னி அவன் பிறப்பதற்கு முன்பே உயிர்நீத்தார். ஆகவே கரிகாலனுக்கு கருவில் வளரும் போதே அரசருக்குண்டான தகுதி கிட்டியது. பெரும்பாலான உளவியலாளர்கள், மரபுத்தன்மை, சுற்றுச்சூழல் ஆகிய இரண்டும் நுண்ணறிவு வளர்ச்சிக்கு உதவுவதாக நம்புகின்றனர். ஒருவரின் நுண்ணறிவுக்கு மரபுப்பண்பு மட்டும் 80 சதம் பொறுப்புடையது. மீதமுள்ள 20 சதம் நுண்ணறிவு வளர்ச்சியைப் புற உலகில் கல்வி, சூழ்நிலை இவற்றிடம் இருந்து கற்றுக் கொள்கிறார்கள். எனவே கரிகாலன் மன்னர் பரம்பரையை உடையவன் ஆதலால் சிறு வயதிலேயே அவனிடம் நுண்ணறிவு வெளிப்பட்டுக் காணப்படுகின்றது.

கரிகாலனிடம் ஒரு வழக்கு தீர்ப்புக் கேட்டு வருகின்றது. வழக்கை உரைக்க வந்தவர்கள் இவன் சிறுவன் இவனால் எப்படி தீர்ப்பு கூற முடியும் என்று ஐயம் கொள்வதை அறிந்த கரிகாலன் வயது முதிர்ந்தவர்போல் வேடம் புனைந்து கொண்டு அறங்கூறு அவையத்து இருந்த வழக்கை ஆராய்ந்து முடிவு கூறினான். அம்முடிவு நீதியோடு பொருந்தி ஒத்திருந்ததைக் கண்டு அவ்வழக்காளரும் பிறரும் மகிழ்ந்தனர் என்ற செய்தியை,

இளமை நாணி முதுமை எய்தி
உரை முடிவு காட்டிய உரவோன் மருக   (மணிமேகலை.107- 108) என்று மணிமேகலையிலும்

‘உரை முடிவு காணான் இளமையோன் என்ற
நரைமுது மக்கள் உவப்ப – நரை முடித்து
சொல்லால் முறைசெய்தான் சோழன் குலவிச்சை
கல்லாமற் பாகம் படும்’ (பழமொழி -21) என்ற பழமொழி நானூற்றில் வரும் பாடலாலும் அறிய முடிகிறது. 

கரிகால் வளவனது பேராண்மை:

தன் நாட்டு மக்களையும், இயற்கை வளங்களையும், பாணர்களையும் பாதுகாக்கும் கரிகாலன பிற மன்னர்களோடு போரிடும்போது அவனின் முகம் சீற்றம் அடையும்; கரிகாலனின் சீற்றத்திற்கு அசுரர்களை வென்ற முருகக் கடவுளின் சீற்றம் உவமையாகக் கூறப்படுகிறது.

பவ்வ மீமிசைப் பகற்கதிர் பரப்பி
வெவ்வெஞ் செல்வன் விசும்பு படர்ந்தாங்கு
பிறந்து தவழ் கற்றதன் தொட்டு சிறந்த நன்
நாடு செகிற் கொண்டு நாள்தொறும் வளர்ப்ப (பொருநர் 135-138) கதிரவன் காலையில் உதித்ததும் கடலின்மீது தன் சுடர்களைப் பரப்புவான் பின்னர் மெல்ல வானுக்குச் சென்று அங்கும் தன் கதிர்களைப் பரப்பி உலகிற்கு ஒளியைத் தருவான். கதிரவன் போன்று கரிகாலனும் பிறந்து தன் தாய்நாட்டைத் தன் பேராண்மையால் காத்தவன். பிற நாட்டையும் தன் வீரத்தால் தமக்குரிய நாடாக்கிக் கொண்டவன். பொருநர் ஆற்றுப்படையில் முடத்தாமக் கண்ணியார் கரிகாலனின் வீரத்திற்கு முருகனையும் அவனின் ஆட்சி எல்லைக்கு கதிரவனின் கதிர்களையும் உவமையாகக் கூறுவதிலிருந்து அவன் பேராண்மை படைத்தவன் என்பதை உணர முடிகிறது.

கரிகாலன் சிறுவயதிலேயே போரில் பகைவரை வென்றவன் என்பதற்குத் தாய்ப்பால் அருந்தும் குட்டிப் பருவத்தில் இருக்கும் யாளி உவமையாகக் கூறப்படுகிறது. யாளி (அரிமா சிங்கம்) குடடிப் பருவத்திலேயே பெரிய யானையை வேட்டையாடிவிடும் அதைப் போலவே கரிகாலனும்

வெண்ணித் தாக்கிய வெருவரு நோன்தாள்
கண் ஆர்கண்ணி, கரிகால் வளவன்
தாள்நிழல் மருங்கின் அணுகுபு குறுகித்
தொழுதுமுன் நிற்குவிர் ஆயின்      (பொருநா் 147-150 ) பனம்பூ மாலையை அணிந்த சேரனையும் வேம்பு மாலையை அணிந்த பாண்டியனையும் வெண்ணி என்ற இடத்தில் போரிட்டு அவர்களை வென்றவன்; ஆத்தி மாலையை அணிந்த கரிகாலன் பகைவரின் சதியால் அவனின் கால்கள் தீக்கிரையாயின ஆகவே அவன் கரிகாலன் என்று அழைக்கப்பட்டான்.

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சுஆணி அன்னார் உடைத்து. (குறள்.667) உருவத்தால் சிறியவர்கள் என்று யாரையும் இகழக் கூடாது. கரிகாலன் சிறு வயதிலிருந்தே நுண்ணறிவு கொண்டும் சேரர், பாண்டியர்களை அழித்துத்தன் நாட்டைக் காக்கும் பேராண்மை படைத்தவனாகவும் காணப்படுகிறான். கரிகாலன் சிறுவயதிலேயே பெரிய வினைகளைக் கொண்டு உய்க்கும் திட்பம் உடையவனாக, ஆளுமைப் பண்போடு சங்க இலக்கயங்களில் தனக்கென ஓர் இடம்பிடித்துள்ளான் என்பதில் ஐயமில்லை

படைகுடி கூழ்அமைச்சு நட்புஅரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு     (குறள். 381)

அரசருள் தலைவன் ஆவதற்குத் தகுதி உடையவனிடம் நல்லபடை, நல்ல குடிமக்கள், நல் உணவு, தேவையான அளவுக்கு உற்பத்தி ஆகும். சூழல், நல்ல அமைச்சர் நம்பிக்கைக்குரிய நண்பர்கள், நல்ல இயற்கை அரணும், செயற்கை அரணும் இருத்தல் வேண்டும். இப்பண்புகள் அனைத்தும் ஒருசில மன்னர்களிடம் மட்டுமே காணப்படும். சங்க இலக்கியமான பொருநராற்றுப் படையில் கரிகாற் பெருவளத்தானிடம் திருக்குறள் கருத்தில் உள்ள அனைத்துப் பண்புகளும் நிறைந்து காணப்படுவதை அறிய முடிகிறது.

முடிவரை:

இவற்றான், கரிகாற் சோழன் என்ற மன்னன் தன்னை மட்டும் அல்லாமல் தன்னுடைய சமுதாயத்தையும் மேம்படுத்துபவனாகக் காணப்படுகிறான் என்பதையும், மனிதவள மேம்பாடு பற்றிய கோட்பாடு சங்க இலக்கியமாகிய பொருநராற்றுப்படையில் இடம் பெற்றிருப்பதால் அக்கால மக்களின் பண்பட்ட மனநிலையையும் நம்மால் அந்நூல்வழி அறிந்துகொள்ள முடிகிறது.

பார்வை நூல்கள்

1.பத்துப்பாட்டு மூலமும் உரையும் – முனைவர் இரா.மோகன்

2. சங்க இலக்கியத் தேன் துளிகள் – சி.டி.சங்கர நாராயணன்.

3. இலக்கியமும் நவீன வாசிப்பும் – சி.சரவணஜோதி

*****

கட்டுரையாளர் – தமிழ் முனைவர்பட்ட ஆய்வாளர்
அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி
சிவகாசி.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *