முனைவா் க. இந்துமதி

உதவிப்பேராசிரியா் (தமிழ்த்துறை)

கலசலிங்கம் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்

கிருஷ்ணன்கோவில்

முன்னுரை

            மனிதன் தான் வாழும் உலகில் ஒவ்வொரு காலகட்டத்திலும் யாரேனும் ஒருவரிடமிருந்தோ, ஏதேனும் ஒன்றிடமிருந்தோ கற்றுக் கொண்டே இருப்பவனாகிறான். இக்கற்றுக் கொள்ளும் பண்பு மனிதனின் குழந்தைப் பருவத்திலேயே துவங்குகிறது. கேட்டல், பார்த்தல், உணர்தல் என்பன கற்றலின் முக்கிய நிலைகளாகும். இக்கற்றலின் வழியே மனிதனின் சிந்தனையானது வளர ஆரம்பிக்கிறது. மனிதனின் பரிணாம வளா்ச்சியைப் போலவே அறிவும், சிந்தனையும் மாற்றம் பெற்று மனித குலம் வளா்வதற்கு உறுதுணையாகத் திகழ்கின்றன. இவ்வறிவும் அறிவு சார்ந்த பதிவுகளும் தொல்காப்பியத்தில் எவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளன எனவும் இலக்கிய, இலக்கணங்களில் அறிவா் எனக் குறிப்பிடப்படுபவா் யார்? என்ற வினாவிற்கு விடை தேடும் முகமாகவும் இவ் ஆய்வுக் கட்டுரை அமைகிறது.

தொல்காப்பியத்தில் அறிவு

            தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியம் காலத்தால் முற்பட்டதால் மட்டும் பெருமையுடையதல்ல. 21-ஆம் நூற்றாண்டு ஆகியும் இன்றும் இதில் உள்ள களங்கள் பல்வேறு ஆய்வுப்பரப்பை உண்டாக்கிவருவதாலும் பெருமை உடையதாகிறது. எழுத்தும் சொல்லும் மட்டுமன்றி பொருளுக்கும் வரையறை தந்த தனிச்சிறப்பை உடையது தொல்காப்பியம். இப்பொருளதிகாரப் பகுதி, இலக்கிய வகைமையை, வடிவம் மற்றும் உத்தி முறைகளை விரிவாக்க கூறுகிறது. இவற்றில் இலக்கியப் படைப்பாக்க மாந்தா்களில் அறிவா் என்றொரு மாந்தா் குறிப்பிடப்பட்டுள்ளார். இவா் யார் என்ற கேள்விக்கான விடையைத் தேடுவதற்கு முன் தொல்காப்பியம் அறிவு என்ற சொல்லின் விளக்கமாகக் கூறுவனவற்றைக் காண்போம்.

தொல்காப்பியத்தில் அறிவு

            தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அறிவு, அறிதல், அறிவன் என்ற பொருளிலான சொல்லாட்சிகள் அமைந்துள்ளன. அதில் சிலவற்றைக் காண்போம்.

                                    ”நாட்டம் இரண்டும் அறிவு உடம்படுத்தற்குக்

                                    கூட்டி உரைக்கும் குறிப்புரை ஆகும்”           (தொல்காப்பியம், 1042)

”அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்

                                    ஐவகை மரபின் அரசா் பக்கமும்

                                    இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும்

                                    மறுவில் செய்தி மூவகைக் காலமும்

                                    நெறியின் ஆற்றிய அறிவன் தேயமும்”         (தொல்காப்பியம், 1021)

”நாற்றமும் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும்

                                    …………………………………………….

                                    ……………………. அவள் அறிவுறுத்துப்

                                    பின் வா என்றலும் ……………………”      (தொல்காப்பியம், 1060)

”கிழவோன் அறியா அறிவினள் இவள் என”  (தொல்காப்பியம், 1063)

”தாய் அறிவுறுதல் செவிலியோடு ஒக்கும் ”   (தொல்காப்பியம், 1084)

”தொல்லவை உரைத்தலும் நுகா்ச்சி ஏத்தலும்

                                    பல்லாற்றானும் ஊடலின் தணித்தலும்

                                    உறுதி காட்டலும் அறிவு மெய் நிறுத்தலும்”   (தொல்காப்பியம், 1114)

”செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும்

                                    அறிவும் அருமையும் பெண்பாலான”      (தொல்காப்பியம், 1155)

”வினையின் நீங்கிய விளங்கிய அறிவின்

                                    முனைவன் கண்டது முதல் நூலாகும் ” (தொல்காப்பியம், 1594)

இவ்வாறாக தெரிந்து கொள்ளுதல், உண்மை அறிதல், தெரிவித்தல், காதலிலும் அறிவால் உடன்படுதல், காலம் அறிந்த அறிவன், அறிவித்தல், அறிவினை மெய்ம்மை நிறுத்தல் என்ற உணர் பொருளில் தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் அறிவு என்ற சொல் அமையப் பெற்றுள்ளது. மேலும் முனைவன், பெரியவா், சான்றோர், தொல்லோர் என்ற சொற்கள் இடம் பெற்றுள்ளன. இவை 1594, 1022, 1092, 1059, 1096 என்ற நூற்பாக்களில் இடம் பெற்றுள்ளன. தொல்காப்பியம் சுட்டும் அறிவுசார் பொருளுடைய சொற்கள், அறிதல் பொருளிலும் வயதிலும் அனுபவத்திலும் அறிவிலும் சிறந்து விளங்குபவரைக் குறிக்கும் நிலையிலும் அமைந்துள்ளன.

தொல்காப்பியம் சுட்டும் அறிவர்

            பன்னிரு வாயில்களில் ஒருவராக அறிவரைச் சுட்டுகிறது தொல்காப்பியம். (தொல்காப்பியம், 1139). இளம்பூரணர், ‘அறிவர் எனப்படுவோர் மூன்று காலமும் தோன்ற நன்குணா்ந்தோரும், புலன் நன்குணா்ந்த புலமையோரும் ஆகலானும் காலத்தையும் ஐம்புலன் உணர்வையும் கண்டுணர்ந்தோர் அறிவா்’ என்று உரை விளக்கம் தருகிறார்.

கூற்று நிலையில் அறிவா்

            அக வாழ்வில் செவிலிக்குரிய கூற்று முறைகள், அறிவா்க்கும் உரியது எனத் தொல்காப்பியம் சுட்டுகிறது. தலைவன்-தலைவி கற்பு வாழ்வில் இருவரின் மகிழ்ச்சியைக் குறிக்கோளாகக் கொண்டவா் என்பதும், அறிவா் என்போர் தலைவியிடத்து தலைவனின் புறத்தொழுக்கத்தினைக் கூறுதல் இல்லை (தொல்காப்பியம்,1111) என்பதும் கூறப்பட்டுள்ளன.

                                    “எல்லா வாயிலும் இருவா் தேஎத்தும்

                                    புல்லிய மகிழ்ச்சிப் பொருள என்ப”     (தொல்காப்பியம், 1124)

என்று வாயில்களின் பொதுவான பண்புகளைக் கூறும் போது அறிவரின் கூற்றும் உணா்த்தப்படுகிறது. கற்பினில் கூற்றுக்குரியவா்களில் அறிவரை, ‘நற்பொருள் உணரும் அறிவா்’ என்று பேராசிரியா் உரை கூறுகிறார். ‘தலைமகள் கூற்றைக் கேட்போருள் அறிவரும் ஒருவா். அறிவா் கூற்றை தலைவி, தோழி, செவிலி, நற்றாய் கேட்பா் என்றும் அகம் புறத்தில் அறிவா் கிளவி ஏற்கும்’ என்றும் பேராசிரியா் உரை அமைகிறது. நாவலா் சோமசுந்தர பாரதியார், ‘நாளும் கோளும் கண்டது போலக் கூறுபவர். கேட்போர் விரும்பும் எதிர்கால விளைவுகளை எடுத்துக்கூறும் கணிகன்; மூவகைக் காலமும் முறையின் ஆற்றிய அறிவா்; அறிவோடு அமையாது ஆற்றுதலும் கூறுதலால்’ என்று விளக்கம் தருகிறார். இதன் வழி அறிவா் எனப்படுவோர், அக வாழ்வில் நல் அறிவுரை கூறும் அறிவோராகவும் புற வாழ்வல் காலம் கணித்து உரைக்கும் கணியராகவும் இருந்திருக்கூடும். ஆனால் தொல்காப்பியப் பிரதியில் புறத்தில் அறிவர் என்ற சொல்லோ, கூற்றோ இடம் பெறவில்லை. இருப்பினும் உரையின் வழி கணியராகவும் வாழ்ந்திருப்பா் என்று கருத முடிகிறது.

            மேலும் தொல்காப்பிய உரைவளம், ‘அறிவா் என்பார் தம் அறிவால் மக்கள் அறிவைத் தீதின் நீக்கி நன்றின்பால் உய்ப்பவா் என்றும் துறவு உள்ளத்தை உடையவர் என்றும் தலைவனிடம் தலைவியை நீங்காது ஒழுகுக என நெறிப்படுத்துபவர்’ என்றும் விளக்கம் தருகிறது.

பிற இலக்கண நூல்களில் அறிவர்

            தொல்காப்பியக் கூற்று மரபின் வளர்ச்சியாக அமையும் நம்பியகப்பொருளில் அறிவரின் இலக்கணம் கூறப்பட்டுள்ளது.

                                    “அறிவர் கிழவோன் கிழத்தி என்று இருவர்க்கும்

                                    உறுதி மொழிந்த உயர் பெருங்குரவர்”     (நம்பியகப்பொருள், 112)

‘தலைவனுக்கும் தலைவிக்கும் உறுதியைப் பயக்கும் உபதேசங்களைச் சொல்லும் மேம்பட்ட குருக்கள்’ என்று உரை கூறுகிறது. நீதி, உலகியல் அறிவு போன்றவற்றை தெளிவுற எடுத்துச் சொல்வர் எனக் கூற்று நிலையில் விளக்குகிறது. இதில் செவிலிக்குரிய கூற்று நெறி அறிவர்க்கும் பொருந்தும் என அகக் கூற்று மாந்தர்களின் வரிசையின்படி செவிலிக்கு அடுத்த நிலையில் அறிவா் கூற்று இடம் பெறுகிறது.

                                    “மறையோன் கூற்றும் அறிவா் கூற்றும்

                                    இறையோன் முதலா அனைவரும் கேட்ப”    (நம்பியகப்பொருள், 226)

மறையோன் அதாவது வேதங்களைக் கற்ற அந்தணர்களுக்கு அடுத்த நிலையில் அறிவரை இடம் பெறச் செய்து, அவரின் கூற்றை தலைவன் முதலாக அனைவரும் கேட்பர் என விளக்குகிறது. இதன் வழி அறிவர் என்போர் கூற்றுரைக்கும் நிலையில் செவிலி, அந்தணா் வரிசையில் இடம் பெறுபவராகிறார்.

            மாறனகப்பொருளும் அறிவரை ஊடல் தீர்க்கும் வாயில்களுள் ஒருவராக, கற்பில் கூற்றுரைப்போருள் ஒருவராக, தலைவன்-தலைவி அக வாழ்வில் பேரின்ப அருள் வழங்கும் பெருங்குரவராக இயம்புகிறது. இலக்கண விளக்கம் அறிவா் தொழில்களாக,

  • இல்லறம் நிகழ்த்தும் நெறிமுறை கூறல்
  • தலைவியைக் கூடுதற்குரிய நாள் நிமித்தம் கூறல்
  • இல்வாழ்க்கை சிறக்கும் தன்மை எடுத்துரைத்தல்
  • வாயில் வேண்டல்

என்பனவற்றைக் குறிப்பிடுகிறது. அத்துடன் தலைவி, தலைவனோடு வாய்ப்பு நிகழும் போதெல்லாம் கூற்று நிகழ்த்துவா் என்று விளக்கமளிக்கிறது. ‘மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவா்; அவரே குரவர் ஆவதற்கு உரியவா்’ என்றும் கூறுகிறது.

            முத்துவீரியம், அறிவா் என்ற தனிச்சொல்லைக் குறிப்பிடாது வாயிலவா் என்ற மரபார்ந்த சொல்லை மட்டுமே குறிப்பிடுகிறது. தனித்தனியாக வாயில்கள், அவா்களின் தொழில்கள் முதலியன முத்துவீரியத்தில் காணப்படவில்லை.

            சுவாமிநாதம், கூற்றுக்குரியோருள் அறிவரைச் சுட்டிச் செல்வதோடு நோய் அறிவோர் என்றும் அறிஞா் என்றும் இரு சொல்லைக் குறிப்பிட்டுக் காட்டுகிறது. ஆனால் பொருளதிகாரம் சுட்டும் அறிவர் வேறு; அறிஞா் வேறு என்பதைக் குறிப்பிட்டுக் காட்டாமல் இருவரையும் ஒன்றே எனக் குறிப்பிடுகிறது. ஏனெனில் 19-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இலக்கணமான சுவாமிநாதம், அறிஞர் என்ற சொல்லை அறிவில் சிறந்தவா் என்ற பொருளில் குறிப்பிட்டிருக்கலாம் என எண்ண முடிகிறது.

சங்க இலக்கியங்களில் அறிவர்

            தொல்காப்பியப் பதிவுகள் பலவற்றின் இலக்கியச் சான்றாகக் கருதப்படும் சங்க இலக்கியங்களில் அறிவர் கூற்றுப் பாடல்கள் இல்லை. குறுந்தொகையின் 190-வது பாடலில் “அறிவர் கொல் வாழி தோழி” என அறிந்தவர் என்ற வினைப்பொருளில் அறிவர் என்ற சொல் அமைந்துள்ளது. ஐங்குறுநூற்றில் அந்தணர், அயலோர், கண்டோர் என்போரின் கூற்றுப்பாடல்கள் உள்ளனவே அன்றி, அறிவர் கூற்றுரைக்கும் பாடல்கள் இல்லை. பதிற்றுப்பத்தின் 4-வது பாடலில் “ஈா் அறிவு புரிந்து” என்ற வரிகளுக்கு, ‘இருவகை அறிவும் அமைந்து……….அருமறைப் பொருளை அறிவர் உரைப்பக் கேட்ப’ என்று உரை கூறுகிறது. கலித்தொகையிலும் அகநானூறிலும் அறிவா் கூற்றுப் பாடல்கள் இல்லை. “அறிவா் கேட்ப” எனவும், “அறிவா் உறுவிய அல்லல் கண்டருளி” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறாக சங்க இலக்கிய அகப் பாடல்களில் அறிவர் கூற்று பற்றி செய்திகள் ஆங்காங்கே அமைந்துள்ளனவே தவிர கூற்றுரைத்தல் நிலையில் முழுமையான பாடல் பதிவுகள் இல்லை.

முடிவுரை

            மேற்கூறிய கருத்துக்களின் வழி அறிவா் என்போர்,

  • தலைவன்-தலைவி கற்பு வாழ்வில் இடம் பெறக்கூடிய மாந்தர் ஆவார்.
  • கற்பு வாழ்வில் இருவரின் ஊடலைத் தீர்க்கும் வாயில்களில் ஒருவர் ஆவார்.
  • இல்வாழ்வின் கடமைகளை இடித்துரைக்கும் நிலையில் செவிலிக்கு அடுத்த நிலையில் வைத்து எண்ணப்படுகிறார்.
  • வயதில் அனுபவத்தில் அறிவில் சிறந்தவராகவும், நாள், கோள்களை கணக்கிட்டுக் கூறும் கணியராகவும் இருந்திருக்கக் கூடும் எனலாம்.
  • அக வாழ்வானது பெரும்பாலும் பெண்ணைச் சுற்றியே பதிவு செய்யப்பட்டவையாக இருப்பதால் தோழி, செவிலி, நற்றாய் முதலிய பெண் மாந்தா் கூற்றுப் பாடல்கள் மிகுதியும் கிடைத்துள்ளன. அதனால் தொல்காப்பியக் கூற்று நிலையில் இருக்கும் அறிவரின் கூற்றுப்பாடல்கள் சங்க அக இலக்கியங்களில் காணப்படவில்லை. மாறாக வாயில்கள் என்ற பொது மாந்தர் கூற்றுப் பாடல்களே உள்ளன. இதன் வழி இனக்குழுச் சமுதாயத்தில் பெண் மையக் குடும்ப அமைப்பு நிலவியுள்ளதை அறிய முடிகிறது.
  • அந்தணருக்கு அடுத்த நிலையில் அறிவரின் கூற்றை அனைவரும் கேட்பர் என்பதன் மூலம் இனக்குழுச் சமுதாயத்தில் ஊா்ப்பெரியவர் என்ற முறையில் மக்களின் அக வாழ்விலும் சமுதாய நலன் கருதியும் அறிவுரைப்போராக அறிவா் விளங்கியுள்ளனா் என்பதை இக்கட்டுரையின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது.

***********************************

பயன்பட்ட தரவுகள்

  1. ச.வே. சுப்பிரமணியன் (பதிப்பாசிரியர்), தமிழ் இலக்கண நூல்கள் முழுவதும், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், இரண்டாம் பதிப்பு ஜூலை 2009.
  2. இணையதள முகவரி, தமிழ் இணையக் கல்விக்கழகம், அண்ணா பல்கலைக்கழக வளாகம், சென்னை. www.tamilvu.org

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.