Author: admin

  • கூடார வல்லி!

    -நிலவளம் கு.கதிரவன்

    முன்னுரை :-

    வேயர் குலக்கொடியாம் ஆண்டாளும், மற்ற தோழியர்களும் பாவை நோன்பிற்காகத் தேவைப்படும் சங்கம், பறை, பல்லாண்டிசைப்பார், கோல விளக்கு, கொடி, விதானம் போன்றவற்றைக் கேட்டவர்கள் 27ஆம் பாடலான இப்பாசுரத்தில் நோன்பை முடித்தபின் தேவையானவற்றைக் கண்ணனிடம் கேட்கிறார்கள். 26 பாசுரங்கள் வரை மார்கழி நோன்பு, அதன் சிறப்பு, நோன்பு காலத்தில் கடைபிடிக்கப்பட வேண்டிய வழிமுறைகள்,மற்றும் நோன்பு காலத்தில் செய்யத் தகாத செயல்கள் எவையெவை? என்பது  விரிவாக விளக்கப்பட்டது.  ” கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா ” என்னும் இப்பாசுரம் பாவை நோன்பினை பாவையர்கள் முடித்துக் கொள்வதையும், முடித்துக் கொண்டதன் பயனாக கோரும் சம்மானங்களைப் பற்றியும் விரிவாக பேசுகிறது.

    கூடாரவல்லி:-

    ”கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா”  – என்னும் பாசுரத்திற்கு போகும் முன்னர் கூடார வல்லி நாளின் சிறப்பினைப் பற்றி சுருக்கமாக காண்போம்.

    கூடாரை வெல்லும் என்பது மருவிக் கூடார வல்லியானது.  கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா என்னும் பாசுரத்தைப் பாடியதும் திருமால் கோதைக்குத் திருமண வரம் தந்ததாக ஐதீகம்.  கூடார வல்லி என்ற நாளில் கோதை தன்னை கோபிகையாகப் பாவித்துக் கண்ணனை வேண்டி மற்ற கோபியர்களுடன் மாதம் முழுவதும் நோன்பிருந்த ஆண்டாள் அந்தக் குறை ஒன்றும் இல்லாத கோவிந்தனுடன் கூடிய நாள். தன்னிடத்தில் பக்தியில்லாதவர்களைக் கூட வெற்றி கொள்பவன் கோவிந்தன்.  தன்மேல் பக்தி கொண்டவர்களிடம் தோற்பவனும் அவனே.  மற்ற பாசுரங்களில் மார்கழி நோன்பிருக்கும் நியமங்களையும், செய்யத் தக்க, செய்யத் தகாத செயல்கள் யாது? என்பதைப் பற்றி பேசிய ஆண்டாள், இப் பாசுரத்தில் நோன்பை முடித்துக் கொள்ளும் முகத்தான், கண்ணனாகிய கோவிந்தனிடம் சன்மானம் கேட்கிறாள்.  எப்படிப்பட்ட சன்மானம்? இந்த உலகத்தில் உள்ளவர்கள் எல்லாம் மெச்சும் வண்ணம் கண்ணனையே சம்மானமாக கேட்கின்றாள்.  பரமனும் மனம் மகிழ்ந்து தூய்மையான பக்தையான கோதைக்கு தன்னையே அர்ப்பணிக்கின்றார்.

    ருக்மணி, சீதா, ஆண்டாள் கல்யாண வைபவங்களில் ஆண்டாள்-அரங்கர் கல்யாணம் உயர்வானது. கண்ணன் ருக்மணியையும், ராமன் சீதாப் பிராட்டியையும் தத்தம் அவதாரங்களில் முறையே திருமணம்  செய்து கொண்டனர்.  ஆனாள் இப்பூவுலகில் மானிடராக அவதரித்த ஆண்டாள், தெய்வத்தையே திருமணம் செய்து கொள்வதற்கு எவ்வளவு கடுமையான பக்தி வேண்டும்?  அதனால்தான் ஆண்டாள்-அரங்கர் கல்யாணம் மிகவும் உயர்வானது என பூர்வாசிரியர்கள் கூறுகின்றனர்.

    இன்றைய நாளில் ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள் சன்னிதியில் ஆண்டாள் சிம்மாசனத்தில் ஸ்ரீதேவி-பூதேவியுடன் ஸ்ரீபெரியபெருமாள் எழுந்தருளி, அவருடன் ஸ்ரீ ஆண்டாள், ரங்கமன்னார், கருடாழ்வார், மற்ற ஆழ்வார்கள், ஆசாரியர்கள் எழுந்தருளி சேவை சாதிப்பர்.

    கூடார வல்லியான இந்தச் சிறப்பான நன்னாளில் பெருமாளுக்கு அக்கார அடிசில் என்ற பால்சோறு நைவேத்யம் செய்யப்படுகிறது.  திருமண வரம் வேண்டும் கன்னிப் பெண்கள் விரதமிருந்து இன்று ஆண்டாள்-அரங்கரை சென்று சேவித்தால் திருமண  வரம் கைகூடுவது உறுதியாகும்.

    பாசுரம் :-

    கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா உந்தன்னைப்
    பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்
    நாடு புகழும் பரிசினால் நன்றாகச் சூடகமே
    தோள்வளையே தோடே செவிப்பூவே
    பாடகமே என்றனைய பல்கலனும் யாம்அணிவோம்
    ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
    மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
    கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

    பாசுரத்தின் பொருள் :-

     தன் அடி பணியாதவர்களையும் வெற்றி கொள்ளக் கூடிய சீர்மையான கல்யாண குணங்களைக் கொண்ட கோவிந்தனே!! உன்னை  வாயாரப் பாடி, வாய் படைத்த பயன் பெற்றமையால் நாங்கள் பெறும் வெகுமாதியானது யாதெனில், இந்த உலகமே புகழக் கூடிய பரிசினை உன்னிடமிருந்து பெற்று, எங்களை நாங்களே கை வளை, தோள் வளை, காதுகளுக்கு அணிந்து கொள்ளும் தோடும், செவிப்பூவான கர்ணப்பூவினையும், கால்களில் அணியக்கூடிய பாடகமாகிய பாத கடகத்தையும், இது போன்ற பல ஆபரணங்களையும் அணிந்து கொள்வோம்.  அதன் பின்னர் புதிய ஆடையை உடுத்திக் கொண்டு, நெய்யினால் மூடப்பட்ட பால் சோற்றினை உன்னோடும், நப்பின்னை பிராட்டியோடும், மற்ற தோழியர்களோடும்  சேர்ந்து, கூடியிருந்து குளிர்ந்து உண்போம். வந்திடுவாய் கண்ணா என்று கோதைப் பிராட்டி கூறுகிறாள்.

    விளக்கவுரை:-                         

    இப் பாசுரத்தில் கோவிந்த நாமத்தினையும், அத்தகையை கோவிந்தனுக்கு கூடியவர் யார்? கூடாதார் யார்?, பாவையர்கள் அணிந்து கொள்ளும் பல்கலன்கள், நோன்பை முடிப்பதற்கு கண்ணனிடம் கேட்கும் வெகுமதிகள், விரதம் முடித்த பின்னர் கூடியிருந்து உண்ணும் அக்கார அடிசிலாகிய பாற்சோறு போன்ற பல்வேறு செய்திகளை ஆண்டாள் விளக்குகிறார்.

    கூடாரை வெல்லும் சீர்மை:-

    தம்மோடு மாற்றுக் கருத்து கொண்டவர்களை, தன்னோடு இல்லாதவர்களை, தன்னை ஏற்றுக் கொள்ளாதவர்களைக் கூட எதிரி, பொல்லாதவர் என்று கடுமையாகக் கூறாமல் கூடாரை என்று மென்மையான சொல்லை ஆண்டாள் கையாளுகிறார். மாற்றாறை மாற்றழிக்க வல்லானை என்று பாடியவள் அல்லவா?  அப்படிப்பட்ட சர்வேஸ்வரனான நாராயணன் நாமத்தினை சங்கீர்த்தனம் செய்யாதவர்கள், அவன் திவ்ய கல்யாண குணங்களை பாடிப் புகழாதவர்கள் என அனைவரையும் தன்னுடைய சீர்மைக் குணங்களால் எளிதில் வெற்றி கொள்பவன் கோவிந்தன்.  அதாவது கூடாரை வெற்றி கொண்டு அருள்  பாலிப்பான்.  கூடினவர்களிடம் தான் தோற்று அருள் புரிவான்.  அரக்கர்களை வதம்செய்து திருத்துவான்.  அடியவர்களிடம் தோற்று மகிழ்விப்பான். அம்பினால் தோற்கச் செய்வான். அன்பினில் வசப்படுவான்.  அவனே அரங்கன்.  அவனே கோவிந்தன்.  அவனே பரமேஸ்வரன்.

    இப்படி அடியார்களை வதைக்கும் பகைவர்களையும், அரங்கனின் அருமை தெரியாமல் எதிர்க்கும் விரோதிகளையும் வெற்றி கொள்வான்.  பள்ளி கொண்ட அரங்கனின் திருமுற்றத்து அடியார்கள், மால்கொள் சிந்தையரான மெய்யடியார்கள், பேராளன் பேரோதும் பெரியோர்களை  ஒருக்காலும் பிரிய மாட்டேன் என்றிருக்கும் அடியார்களிடம் தோற்று மகிழச் செய்வான்.

    கோவிந்தன் நாமம் :-

    ஸ்ரீ ஆண்டாள் முந்தைய இருபத்தாறு பாசுரங்கள் வரை, பரமாத்மாவின் பல்வேறு திருவவதாரங்களைப் பற்றி பேசி பரவசப் பட்டவள், இப் பாசுரத்தில் மட்டும் கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா என்று கோவிந்த நாம சங்கீர்த்தனத்தை கூறுகிறார். இதைத் தொடர்ந்து இருபத்தெட்டாவது பாசுரத்தில் ” குறைவொன்றுமில்லாத கோவிந்தா ”, என்றும், இருபத்தொன்பதாவது பாசுரத்தில் ” இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா”, எனவும் தொடர்ந்து மூன்று பாசுரங்களில் கோவிந்தன் புகழ் பாடுகிறார்.  காரணம் பாவை நோன்பு முடிந்துவிட்டது.  பறை என்கின்ற கைங்கர்ய ஞானத்தைப் பெற வேண்டும்.  ஆடை அணிகலன்களைப் பெற வேண்டும்.  தவிரவும் நோன்பு முடித்த பின்னர் கண்ணனோடும், நப்பின்னை பிராட்டியோடும் சேர்ந்து பாற்சோறு உண்ண வேண்டும்.  இவற்றை அளிப்பவன் சர்வேஸ்வரனான பகவான் கோவிந்தன் மட்டுமே.  அவனால் மட்டுமே முடியும். அளிப்பவனும் அவனே. அளித்துக் காப்பவனும் அவனே.

    கோ- என்றால் உயிர்கள், விந்தன்- என்றால் காப்பாற்றுபவன். நம்மை எல்லாம் அருகில் இருந்து காப்பவனே கோவிந்தன். மேலும், கோவிந்தா என்றால் எல்லா இடத்திலும், எல்லா காலத்திலும் நம்மோடு நீக்கமற நிறைந்திருப்பவன் என்று பொருள்.  இதைத்தான் ஸர்வத்ர கோவிந்த நாம சங்கீர்த்தனம் என்று கூறும்பொழுது, அனைவரும், கோவிந்தா, கோவிந்தா என்று அவன் நாமத்தைக் கூறுகின்றனர்.  கோவிந்தா என்பதற்கு பல பொருள் உண்டு. பகவானின் தசாவதாரங்களை குறிப்பது கோவிந்தா.  கோவிந்தா என்றால் வாக்கு, பசு,மாடு, கன்று, பூமி, மோட்சம் அளிப்பவர், நீர், ஆயுதம், பர்வதம் என்னும் மலை, புலன்கள், புலன்களை அடக்கி ஆள்பவர், வேதமோதுவதால் அடையக் கூடியவர்., கூப்பிடு தூரத்தில் இருப்பவர், துதிக்கும் அல்லது துதிக்கப்படுபவர் என்று பல அர்த்தங்களை பூர்வாசிரியர்கள் கூறுகின்றனர்.

    ஆதிசங்கரர் தனது பஜகோவிந்தத்தில், கோவிந்தா என்ற திருநாமம், மனிதன் வாழ வேண்டிய முறை, அது ஒரு தத்துவ உபதேசம், நமக்கு விவேகத்தையும், வைராக்கியத்தையும் அளிக்கும் ஞானச் சொல் என்று கூறுகிறார்.  எனவே கோவிந்தா என்றால் பாவம் விலகும். மோட்சத்திற்கான தடைகள் விலகும்.

    கலியுகத்தில் பகவானை தரிசிப்பதற்கு ஒரே வழி நாம சங்கீர்த்தனம் இசைப்பதுதான். அவன் நாமம் இசைக்கும்போது நமக்கு மிக அருகில் வருகின்றான் கோவிந்தன்.  இப்படி பகவானின் பஞ்ச நாமாக்களான, ராமா, கிருஷ்ணா, கோவிந்தா, நாராயணா, நரசிம்மா என்பதில் நடுநாயகமாக இருக்கும் கோவிந்த நாமத்தை ஆண்டாள் சிறப்பித்துக் கூற காரணம் நாமெல்லாம் அவன் திருநாமத்தை கூறி உய்வடைய வேண்டும்.  தினசரி நாம சங்கீர்த்தனத்தை இசைத்து அவன் அன்பைப் பெற வேண்டும் என்பதற்காகத்தான்.

    நாடு புகழும் பரிசு:-

    ”உன்றன்னைப் பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம், நாடு புகழும் பரிசினால் நன்றாக” – என்று பாடுகிறார் ஆண்டாள். வாயினால் பாடி, கேசவனைப் பாட, முகில்வண்ணன் பேர்பாட, மைத்துனன் பேர்பாட என்று மற்ற பாசுரங்களில் நாம சங்கீர்த்தனத்தில் பாடி மகிழ்ந்தவள் கோதை.  அப்படிப் பாடிய நானும், தோழியரும் உன்னிடமிருந்து  கைங்கர்ய ஞானம் என்ற பறையை பெற்றுக் கொண்ட பின்னர்,  இந்த உலகமே புகழும் வண்ணம், எவ்வித அபிப்ராய பேதமும் இல்லாமல், எல்லோரும் ஏற்கும்படியான உயர்ந்த சபையில் பெறப்படும் பரிசினை பெறப் போகிறேன் கண்ணா என்கிறாள் ஆண்டாள்.

    உலகமே ஆமோதிக்கும்படியான, புகழும்படியான பரிசு எப்படிப்பட்டதாக இருக்கும்? அப்பரிசு எவ்வகையில் உயர்ந்ததாக இருக்கும்? ராமர் பட்டாபிஷேகத்தின்போது, சீதாப்பிராட்டி அனுமனுக்கு அளித்த முத்து மாலையைப் போன்றோ, பலராமனாக இருக்கின்றபோது ராமர் பட்டாபிஷேக காட்சியைக் காண்பதற்காக, அனுமனை அழைத்து வர பெரிய திருவடியான கருடாத்மனையே தனது தோளில் சுமந்து வர அனுப்பினாரே பரமாத்மா. அப்படிப்பட்ட ஒன்றாக இருக்குமா? திரௌபதிக்கு தக்க சமயத்தில் வஸ்திரம் தந்து காத்தாரே அப்படிப்பட்டதா? பஞ்ச பாண்டவர்களுக்கு யுத்த வெற்றி வழங்கி தர்மத்தை நிலைநாட்டினாரே அப்படிப்பட்ட பரிசா? அல்லது அதற்கும் மேலானதாகவா? என்று  நாம் ஆச்சர்யிக்கும் வகையில் கேட்கிறாள் கோதை.

    பல்கலனும் யாமணிவோம் :-

    பரமாத்மாவிடம் நாடு புகழும்படியான பரிசினை தந்தருள வேண்டும் என்று கேட்ட ஆண்டாள் தொடர்ந்து, இந்த நோன்பு முடிந்த பின்னர் நாங்கள் அணியத் தக்க புதிய ஆடைகளை நீ தந்து நாங்கள் அணிய வேண்டும். அதோடு கையில் அணியக் கூடிய காப்பும், தோளில் அணியக் கூடிய வளைகள், காதுகளில் அணிந்து கொள்ளும் தோடு, காதின் மேலே அணியும் செவிப்பூ என்னும் கர்ணப்பூ,  காலுக்கு அணியக் கூடிய பாத கடகம் என்னும் பாடகம் இவற்றோடு மேலும் புதுப்புது அணிகலன்களை கிருஷ்ணனாலும், நப்பின்னை பிராட்டியாலும் வழங்கப்பட்டு அவைகளை நாங்கள் அணிந்து கொள்வோம் என்று பூரிக்கிறார்கள்.

    அக்கார அடிசில் :-

    “ஆடையுடுப்போம், அதன்பின்னே பாற்சோறு, மூடநெய் பெய்துமுழங்கை வழிவார ”-  இதுகாறும் இயம நியமங்களோடு பாவை நோன்பு இருந்தாகிவிட்டது.  இன்று நோன்பை முடித்துக் கொள்ளும் நாள். இன்றைக்கு விரதத்தை முடிப்பதற்காக ஸ்ரீ கிருஷ்ணனுக்கு நைவேத்யம் செய்து பின்னர் நாம் பிரசாதத்தை உண்ண வேண்டும்.  எப்படிப்பட்ட பிரசாதம்? அதை எப்படி உண்பதாம்? சொல்கிறாள் ஆண்டாள்.  அதாவது அரிசி ஒருமடங்கும், பால் இரண்டு மடங்கும் சேர்த்து வேகவைத்து, பாலிலே வெந்த சோறு மறையும் வண்ணம், ”நெய்யிடை நல்லதோர் சோறும்” என்றாரே பெரியாழ்வார், அப்படி நெய்மிதக்க இனிப்புச் சோறு தயாரித்து, படையலிட்டு பின்னர் அதை அள்ளி, நெய்யெல்லாம் முழங்கையில் ஒழுகும் வண்ணம் ரசித்து, சுவைத்து  உண்பார்களாம்.  ஸ்ரீ ஆண்டாளுக்கு மிகவும் உவப்பான இப்பாற் சோறுதான் அக்கார அடிசில் என்றழைக்கப்படுகிறது.  நூறுதடா அக்கார அடிசில் உனக்கு சமர்ப்பிப்பேன் என்று திருமாலிருஞ்சோலை பெருமானிடம் வேண்டிக் கொண்ட ஆண்டாள், அது நிறைவேறுவதற்குள் ரங்கமன்னாருடன் இரண்டறக் கலந்ததனால் அவ்வாக்கு ஆண்டாள் மானிடராய் இருக்கும் வரை நிறைவேறவில்லை.  பின்னர் வந்த ஸ்ரீ ராமானுஜர்தான் நூறுதடா அக்கார அடிசிலைப் பெருமாளுக்கு படையலிட்டு ஆண்டாள் வாக்கை நிறைவேற்றியவர்.  இதனால் ராமானுஜர், கோதை பிராட்டியால் ” எங்கள் அண்ணலே வாரும் ” என்று அழைக்கப்பட்டார்.

     கூடியிருந்து குளிர்வோம் :- 

    ”நைவேத்யம் பகவானுக்கு இல்லை, பக்தருக்கத்தான் “ – என்று கூறுவார் காஞ்சி மஹாப் பெரியவர். அதனால் விரதம் இருந்தாலும் பிரசாதத்தை மறுக்கக் கூடாது என்று கூறுவார்கள்.  அதனால் கண்ணன் கொடுத்த பரிசை ஆண்டாள் உண்டு நோன்பை நிறைவு செய்து கொள்கிறாள்.  தான் மட்டும் தன்னிச்சையாக உண்ணவில்லை.  கண்ணனை அழைக்கிறாள், நப்பின்னைப் பிராட்டியை அழைக்கிறாள். கூடியுள்ள தோழிமார்களை எல்லாம் அழைத்து, நாமே கண்ணனின் சோறாகவும், கண்ணனே நமக்கு சோறாகவும் கூடியிருந்து உண்டு பேரின்பம் காண்போம்!!  வாருங்கள் என்று   கூட்டத்தை அழைக்கிறாள். சமபந்தி போஜனா முறையை அன்றே நமக்கு அறிமுகப்படுத்தியவள் கோதை நாச்சியார்.  இப்படி கூடியிருந்து குளிர்ந்து நோன்பை முடித்த பின்னர், கோதைக்கு தன்னையே பரிசாக, இவ்வுலகம் ஏற்கும் வண்ணம் அளித்தாராம் அரங்கன்.

    பாசுர உள்ளுறை :-

    மேலோட்டமாகப் பார்த்தால் நோன்பு முடித்தல், பாவையர் அணிந்துகொள்ளும் அணிகலன்கள், பாற்சோறு என்பதாகத்தான் நம்மால் அறிய முடிகிறது.  ஆனால் உள் பொருளாக, மறையாக ஞான தத்துவத்தை நமக்கு போதிக்கிறாள் ஆண்டாள்.

    1. பல்கலன் என்று சொல்வது ஞானம், பக்தி, வைராக்யத்தைக் குறிக்கும்.
    2. சூடகம் என்பது நம்மையெல்லாம் ரட்சித்துக் காக்கும் கடவுளை காப்பாக உருவகப்படுத்துகிறது.
    3. ஸ்ரீவைஷ்ணவர்கள் தங்கள் தோளில் அணியும் சங்கு, சக்கர முத்திரைகள் தோள்வளையாக கூறப்படுகிறது.
    4. த்வயம் என்று சொல்லக் கூடிய பக்தி செவிப்பூவாக உணர்த்தப்படுகிறது.
    5. காலுக்கணியும் பாடகம் என்பது சரணாகதியை போதிக்கிறது.
    6. அடியார்கள் பரமனுக்கு உரிமையானவர் என்பதைக் கூறுகிறது ஆடை என்ற சொல்.
    7. பகவத் கைங்கர்யத்தைப் பாங்காய் விளக்குகிறது பாற்சோறு.
    8. மூட நெய்பெய்து என்ற சொல்லாடலால், ஆத்மார்த்தமாக அகந்தையின்றி செய்யப்படும் பகவத் சேவையை வலியுறுத்துகிறது.
    9. இறுதியில் கூடியிருந்து குளிர்வோம் என்பதன் மூலம் மோட்ச சித்தியை அடைவோம் வாருங்கள் என அழைக்கும் வண்ணத்தில் உள்ளுறையாக உணர்த்தப்பட்டுள்ளது.

    முடிவுரை :-

    ஸ்ரீ ஆண்டாளின் திருப்பாவை முப்பது பாசுரங்களில், இப்பாசுரம் மிகவும் தனித்துவம் வாய்ந்ததாகும். இதை பக்தி சிரத்தையுடன் பாராயணம் செய்தால் பக்திச் செருக்கு, ஞானச் செருக்கின்றி வைராக்யத்துடன் வாழலாம்.  மேலும் திருமணமாகாத பெண்கள் விரதமிருந்து, இப்பாடலை பாராயணம் செய்தால் விரைவில் திருமணம் கைகூடும்.  அவர்களுக்கு எவ்விதத் தடைகளும், எதிரிகளும் இருக்கமாட்டார்கள். வாருங்கள் நாமும் அரங்கனுக்கு அக்கார அடிசில் நைவேத்யம் செய்து ஸ்ரீஆண்டாள்-அரங்கன் பேரருளைப் பெறுவோம்.

                                      ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்!!

    Share
  • குறுந்தொகையில் பாலைநில உணவுகள் சுட்டும் சூழலமைவு

    -முனைவர் பா. உமாராணி

    மனித வாழ்க்கை மாறிக்கொண்டே இருக்கும் தன்மையுடையது. அது காலத்திற்குக் காலம் தன்னைச் செம்மைப்படுத்தியும், மெருகுபடுத்தியும் வாழும் இயல்பினையுடையது. அதனடிப்படையில் நோக்கும்போது மனித வாழ்க்கையை அடிநாதமாகக் கொண்டு படைக்கப்படும் இலக்கியங்களும் காலத்திற்குக் காலம் தன்னை மெருகுபடுத்திக் கொண்டு வந்துள்ளதை நாம் அவதானிக்க முடிகிறது. எனினும் இன்றளவும் பழமையின் வேர்கள் ஆழ ஊன்றியதாய் அமைந்த தமிழர்தம் வாழ்வியலை எத்தகையதொரு பின்னணியில் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது என்பதை இன்னும் நாம் உணராமலிருக்கிறோம்.

    ஒரு சமூகம் தான் கட்டமைக்கப்பட்ட ஆதிசூழலில் தன் வேர்களை அனைத்து நிலைகளிலும் பதியவைத்துக் கொண்டே வந்துள்ளது என்பதை சங்கப்பாடல்கள் வழி அறியமுடிகிறது. பழந்தமிழர்கள் தம் வாழ்வியலை, அதனோடு தொடர்புடைய பழக்கவழக்கங்களை இலக்கியங்களில் ஏடேற்றிவந்துள்ளனர். இதனை அடிப்படையாகக் கொண்டே இன்றைய தமிழ் சமூகப்பரப்பை, விரிந்த அதன் பண்பாட்டுச் சூழலை உய்த்துணர முடிகிறது. இத்தகையதொரு சிறப்பினையுடைய சங்கப் பாடல்களில் மனித உணர்வுகளைத் தௌ்ளிதின் விளக்கும் தன்மையுடையதும், நுணுகிக் காணும் தன்மையுடையதுமான குறுந்தொகைப் பாடல்கள் பாலைநில மக்களின் வாழ்வியலை, வாழ்வியலோடு தொடர்புடைய உணவுச் சூழலை எவ்வாறு பதிந்துள்ளது என்பதை இக்கட்டுரை ஆய்கிறது.

    பாலைத் திணை சுட்டும் உணவுகள்

    குறுந்தொகையில் பாலைநில உணவுகள் என்பவை பெரும்பான்மையும் இறைச்சியும், வெப்பத்தைத் தாங்கும் தன்மையுடையதுமான சிறுதானிய உணவுகளுமேயாகும். இயற்கையின் ஆளுமையையும் அதன் கூறினையும் ஒருங்கே உணர்ந்தவர்கள் சங்கத் தமிழர்கள். அவர்களின் உணவுகள் இயற்கையோடு தொடர்புடையனவாகவும், இயற்கைசார்ந்த சமூகச் சூழலை முன்வைப்பனவாகவும் அமைந்துள்ளன. பாலைநில உணவுச் சூழலை நாம் இரு நிலைகளில் காணலாம்.

    1.விலங்குகளின் உணவு
    2.மனிதா்களின் உணவு

    என்ற இரண்டு உணவுச் சூழலை முன்வைத்தோம் என்றால் அதில் உணவினைப் பதியவைத்தல் என்ற தன்மையிலிருந்து விலகி சமூகச் சூழலை முன்வைப்பதற்காகவே உணவுச் சூழல் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதை உணரலாம்.

    விலங்குகளின் உணவு – சூழலமைவு

    தலைவன், தலைவியின் துயரினை மிகுத்து ஓதும் விதமாகப் பாலைத் திணையில் விலங்குகள் குறித்த உணவுப் பதிவுகள் அமைந்துள்ளன. தலைவனுக்கோ, தலைவிக்கோ ஏற்படும் பிரிவாற்றமையையும், அவர்களின் உள்ளத்தின் வேதனையையும் மிகுவித்துக் கூறும் விதமாக விலங்குகளின் உணவுச் சூழல் பதியப்பட்டுள்ளது. பிரிவாற்றாமையின் காரணமாக தலைவனோ, தலைவியோ அடையும் துயரினை விலங்குகளின் உணவுக்கான செய்திகளோடு தொடா்புபடுத்திக் கூறும்போது பெரும்பாலும் ஆண் விலங்குகள் தங்கள் பிணையோடு இருக்கும் அன்பினிற்கினிய செய்திகளை முன்வைத்தே கூறப்பட்டுள்ளது. இயற்கையில் நிகழும் இக்காட்சிகளைக் கண்ணுறும் தலைவன், தலைவியின் துயரினை உணா்ந்து கொள்வான் என்று ஆற்றுப்படுத்தும் பாடல்களாகப் பெரும்பாலான பாலைத்திணைப் பாடல்கள் அமைந்துள்ளன.

    தலைவன் தலைவியைப் பிரிந்து வினைமேற் செல்கின்றான். குறிப்பிட்ட பருவத்தே வருவதாகக் கூறிச்சென்ற தலைவன் பருவம் வந்தும் வாராமையை உணா்த்தும் விதமாகப் பல பாடல்கள் அமைந்துள்ளன. இத்தகு பாடல்கள் தலைவியின் உள்ளத்தே தோன்றும் வேதனைகளை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளன. வழியின் ஏதம் போன்றவற்றைக் குறிக்காமல் பருவம் வந்தும் பொருள்மேல் தலைவன் கொண்ட ஈர்ப்பினை முன்வைத்துக் கூறும் இப்பாடல்கள் தலைவியின் தன்னிரக்க நிலையினை முன்வைக்கின்றன. மேலும் தலைவன் சென்ற வழியினையும், வினைமுடித்து தலைவன் திரும்பி வருவான் என்பதையும் கூறி தலைவியை ஆற்றுப்படுத்தும் பாடல்களும் இடம்பெற்றுள்ளன. இதனை,

         “உள்ளார் கொல்லோ? தோழி உள்ளியும்
         வாய்ப் புணா்வு இன்மையின் வாரார் கொல்லோ
         மரற் புகா அருந்திய மாஎருத்து இரலை
         அரற்கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய
         யாஅ வரி நிழல் துஞ்சும்
         மாயிருஞ் சோலை மலை இறந்தோரே”  (232)

    என்ற பாடல் உணா்த்துகிறது. பாலை நிலத்தில் வேறு உணவு ஏதுமில்லாததால் வருந்திய மான், தான் உண்ணலாகாத மரலை உணவாக உண்டது. யானை பசியினால் உண்பதற்கு ஒடித்துச் சென்ற யாமரத்தின் நிழலில் அது உறங்கும். இங்ஙனம் உண்பதற்கும், உறங்குவதற்கும் இடா்ப்படுவதை ‘மாஇருஞ் சோலை’ என்ற தொடா் குறிக்கும். இத்தகு பாலைப் பகுதியில் மழைபெற்றுத் பயிர்கள் தளிர்த்தால் அங்குவாழும் உயிர்கள் உயிர்பெறும். அதுபோல தலைவனின் தலையளி பெற்றுத் தலைவியும் மகிழ்வாள் என்று பொருள்பட இப்பாடல் அமைந்துள்ளது.

    தலைவன் வினைமேற்சென்ற வழியானது விலங்கினங்கள் அன்போடு தன் பிணையுடன் வதியும் காட்சியினை உடையபகுதி. அதனைக் கண்ணுற்ற தலைவன் தன் நிலையறிந்து திரும்பி வரமாட்டானா? என்ற பெண்ணின் ஏக்கம் தொனிக்கும் குரலாக சில பாலைத் திணைப் பாடல்களில் விலங்குகளின் உணவு குறித்த பதிவுகள் அமைந்துள்ளன. சான்றாக,

    “நசை பெரிது உடையா் நல்கலும் நல்குவா்
    பிடிபசி களைஇய பெருங்கை வேழம்
    மென்சினை யாஅம் பொளிக்கும்
    அன்பின – தோழி! – அவா் சென்ற ஆறே”   (37)

    என்ற பாடல் தலைவன் பிரிந்துசென்ற வழியானது ‘பெண் யானையின் பசியை நீக்குவதற்காகப் பெரிய கையையுடைய ஆண்யானையானது, மெல்லிய கிளைகளையுடைய யா மரத்தின் பட்டையை உரித்து, அதன் நீரைப் பிடியினைப் பருகச் செய்யும் அன்புடை இடமாக உள்ளது. எனவே தலைவனும் இடைச்சுரத்தின் கண் கண்ட காட்சிகளினால் நின் நிலையறிந்து விரைந்து வருவான் என தோழி தலைவிக்கு ஆறுதல் அளிக்கின்றாள்.

    தலைவன் குறித்துச் சென்ற பருவத்தினை நினைவூட்டும் விதமாகவும் (பா.169),  தலைவன் முன்னா் தலைவியுடன் இருக்கும் காலத்தில் இனிமையுடையவனாக இருந்ததையும், பிரிவுக் காலத்தில் அதனை நினைத்து தலைவி ஆற்றியிருக்கும் தன்மையினையும் முன்வைக்கும் விதமாக (பா. 252, 209, 213) பல பாடல்கள் அமைந்துள்ளன. தலைவனைப் பிரிந்து தலைவி ஆற்றியிருக்கும் காலத்தில் தன் அழகும் இளமையும் பயனற்றுப் போவதையும் இத்திணைப் பாடல்கள் சுட்டுகின்றன. தலைவன் தன் அழகினையும், இளமையினையும் நினையாது சென்ற செய்கையானது,

    “கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
    நல்ஆன் தீம்பால் நிலத்து உக்கா அங்கு
    எனக்கும் ஆகாது என்னைக்கும் உதவாது
    பசலை உணீஇயா் வேண்டும்
    திதலை அல்குல் என் மாமைக் கவினே”  (27)

    என்று வௌ்ளிவீதியார் குறிப்பிடுகின்றார். தன் அழகும், இளமையும் யாருக்கும் பயன்படாமல், தனக்கும் பயனில்லாமல் கழியும் வலியினை இப்பாடல் முன்வைக்கிறது.

    தலைவன் மணந்து கொள்ளாமல் காலநீட்டிப்புச் செய்கிறான். இதனால் தலைவி அவன் பிரிவினைத் தாங்க இயலாமல் வருந்துகின்றாள். அங்ஙனம் அவன் காலம் நீட்டித்தவழி தலைவிக்கு உடல்சார்ந்த இடா்ப்பாடுகளும், உள்ளம் சார்ந்த இடா்ப்பாடுகளும் தீமை விளைவிப்பதோடு, அலா் ஏற்படவும் காரணமாக அமைகின்றது. பெற்றோர் மணத்திற்கு உடன்படாத நிலையில் தலைவி தனக்கு அலா் போன்ற துன்பங்களிலிருந்து காத்துக்கொள்ள உடன்போக்கு நிகழ்த்துவதையும் (பா.149, 255…) இப்பாடல்கள் முன்வைக்கின்றன. மேலும் செலவழுங்கல் என்னும் தன்மையில் அமையும் பாடல்களும் (பா. 249,211…) காணப்படுகின்றன. விலங்குகளின் உணவு குறித்த பதிவுகள் தலைவியின் தன்னிரக்கத்தை மிகுவிக்கும் பகுதிகளாக அமைவதை இப்பாடல்கள் வழி அறியமுடிகிறது.

    மனிதா்களின் உணவு

    வினைமேல் சென்ற தலைவன் திரும்பி வருவதற்கான நிமித்தங்கள் கிடைத்தவழி தலைவி தலைவனுக்காக தெய்வத்தை வழிபட்டு இடும் பலி உணவாக காக்கைக்குச் சிறப்புச் செய்வதையும் இத்திணைப் பாடல்கள் முன்வைத்துள்ளன. மனிதா்கள் உண்ணும் உணவு பலிச்சோறாக விலங்குகளுக்குப் படைக்கப்படுவதை,

         “திண்தோ் நள்ளி கானத்து அண்டா்
         பல்ஆ பயந்த நெய்யின் தொண்டி
         முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோறு
         எழுகலத்து ஏந்தினும் சிறிது – என் தோழி
         பெருந்தோள் நெகிழ்த்த செல்லற்கு
         விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே”  (210)

    என்ற பாடல் உணா்த்துகின்றது. இதில் ‘திண்ணிய தேரினையுடைய நள்ளி என்பவனுடைய காட்டிலுள்ள இடையா்கள் வளா்த்த பலபசுக்கள் தந்த நெய்யோடு, தொண்டி என்னும் ஊரிலுள்ள வயல்களில் பருவம் தப்பாது விளைந்த வெண்ணெல் அரிசியால் ஆக்கிய விரும்பத்தக்க சோற்றினை, ஏழு கலங்களில் நிறைத்துத் தோளில் தாங்கி நின்றாலும் தன் தோழியாகிய தலைவியின் பெருந்தோளை நெகிழச்செய்த துன்பத்தை நீக்குவதற்கு விரிந்தினா் வருவதைக் கரைந்துகூறிய காக்கைக்கு இடும் பலி உணவு சிறிய அளவினதேயாகும்’ என்று கூறுவதிலிருந்து தலைவியின் வருத்தமும், வேதனையும் புலப்படுத்தப்படுகின்றது.

    விருந்தினரைப் போற்றும் முகமாக உணவுப் பொருட்கள் பற்றிய குறிப்பு இத்திணைப் பாடல்களில் காணப்படுகிறது. வினைமேல் சென்ற தலைவன் திரும்பிவந்து தலைவியுடன் வதியவேண்டி அறிவுரை வினவுதலும், அதன் பொருட்டுத் துறவோர்க்கு எதிர்தலாகிய அறத்தைப் புரிவதற்கு வழிகோலுதலையும் முன்வைக்கும் விதமாக,

         “ஆசுஇல் தெருவின் ஆசுஇல் வியன்கடை
      செந்நெல் அமலை வெண்மை வௌ்இழுது
         ஓர்இல் பிச்சை ஆர மாந்தி
         அறிசர வெய்ய வெப்பத் தண்ணீர்
         சேமச் செப்பில் பெறீஇயரோ, நீயே
         ‘மின்னிடை நடுங்கும் கடைப்பெயல் வாடை
         எக்கல் வருவது?’ என்றி
         அக்கால் வருவா் எம் காதலோரே”  (277)

    என்ற பாடல் குறிப்பிடுகிறது. ‘பொய், கொலை, களவு, கள், காமமாகிய குற்றங்கள் கடிந்தார் உறையும் தெருவில் நாயில்லாத அகன்ற வாயிலில் செந்நெல் சோற்றுத் திரளை, நரை எருமையின் வெண்ணெயோடு, எட்டு இல்லங்களில் சென்று எண்கவளம் பிச்சையாகப் பெறாமல் எம்முடைய ஒரு மனையின் கண்ணே அப்பிச்சை முழுவதும் பெறுவதுடன், இனிய நீரினையும் பெற முடியும். ஆதலால் தலைவன் வரும் காலத்தைக் குறித்து கூற வேண்டுகிறாள் தோழி.’ மனிதா்கள் உண்ணும் உணவு வகைகளான வரகு, நெல், கரும்பு, பால், மீன், மான் இறைச்சி, இறைச்சி உணவுகள் போன்றவற்றைச் சுட்டும் பாடல்களாக (282, 331, 352, 356, 396,398) பல பாடல்கள் அமைந்துள்ளன. இப்பாடல்கள் அனைத்தும் தலைவன், தலைவியரின் பிரிவுத்துயரினை எடுத்தோதும் விதமாகவே அமைக்கப்பட்டுள்ளன. தனித்த உணவுப் பதிவுகளாக அமையாமல் பலியிடுதல், அறிவா்க்கு உணவு வழங்கல், விருந்து படைத்தல் என்ற நிலைக்களன்களில் இப்பாடல்கள் அமைந்துள்ளன. இவையன்றி பல பாடல்களில் விலங்குகள் தம் உணவுகளைத் துணையோடு உண்ணும் காட்சிப்படுத்தல் காணப்படுகிறது. இக்காட்சிகள் தலைவன் தன் நெஞ்சுக்குக் கூறுவதாகவும், தலைவி தோழியிடம் கூறும் முகமாகவும், தோழி தலைவியை ஆறுதல்படுத்தும் நோக்கிலும் புனையப்பட்டுள்ளன.

    இயற்கையில் காணப்படும் உணவுகளை அவற்றின் நிலச்சூழலோடு தொடா்புடையதாகவும், மனித மனத்தின் உணா்வுகளோடு பிணைத்துக் காணுவதாகவும் ஒருசேரப் படைத்துக்காட்டுகின்ற தன்மையினைச் சங்கப் பாடல்கள் வழி அறியமுடிகிறது. அத்தகு ஒரு சூழலையே பாலைத்திணைப் பாடல்களும் முன்வைத்துள்ளன.

    *****

    பார்வை நூல்கள்:

    1. அகத்திணைக் கொள்கைகள், ந. சுப்புரெட்டியார்
    2. திணை சங்கல்பம், ஐயப்ப பணிக்கா்
    3. குறுந்தொகை, நியூ செஞ்சுரி புக்கவுஸ்

    *****

    கட்டுரையாளர்
    உதவிப் பேராசிரியர்
    கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம்
    கோவை – 21.

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    Share
  • ‘இறுதி மணித்தியாலம்’ மொழிபெயர்ப்புக் கவிதைத் தொகுப்பு குறித்து ஒரு திறனாய்வு

    – எழுத்தாளர் மேமன்கவி

    உலக மொழிப் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்க்கும் முயற்சிகள் ஈழத்தில் 1950 ஆம் ஆண்டு தொடக்கம் நடைபெற்று வருகின்றன. ஆனால் சிங்கள இலக்கியப் படைப்புக்களை சிங்களத்திலிருந்து நேரடியாக தமிழில் மொழிபெயர்க்கும் முயற்சி என்பது 1970 ஆண்டுகளின் மத்தியம் தொடக்கம் பரவலாகியது எனலாம்.

    சமீபத்தில் சமகால நவீன சிங்களக் கவிஞர்கள் பத்துப் Writer Memon Kaviபேரின் சுமார் 70 கவிதைகள் அடங்கிய தொகுப்பாக எம். ரிஷான் ஷெரீப்பின் மொழிபெயர்ப்பில் வம்சி வெளியீடாக ‘இறுதி மணித்தியாலம்’ எனும் தலைப்பில் ஒரு தொகுப்பு இக் காலகட்டத்தில் நமக்குக் கிடைத்திருக்கிறது. இத் தொகுப்பில் அடங்கியிருக்கும் கவிதைகள் அனைத்தும் நேரடியாக சிங்களத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட கவிதைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இத் தொகுப்பின் முதல் சிறப்பு என்று சொல்வதானால், irudhi manithiyalam final copyஇத் தொகுப்புக்கு இவர் தெரிவு செய்திருக்கும் கவிஞர்கள் அனைவரும் சிந்தனையில் ஒன்றுபட்டவர்களாக இருக்கிறார்கள் என்பதுதான். மேலும் மாற்றுக் கருத்தாளர்களாக இவர்கள் அடையாளப்படுத்தப்பட்டவர்கள். மனித உரிமைகள் பேணுதல், சகல இனங்களுக்கான உரிமைகளை மதித்தல், மேலும் இனம், மதம், சாதி, மொழி பேதமற்ற நிலையில் சகல இனங்களுடன் ஊடாட விரும்புகின்றவர்களாக இக் கவிஞர்கள் இருக்கிறார்கள். அத்தோடு தாம் சார்ந்த சமூகக் கட்டமைப்பைக் கடுமையாக விமர்சிக்கின்றவர்களாகவும் இருக்கிறார்கள்.

    இத் தொகுப்பில் அமைந்துள்ள கவிதைகள் மேலும் இரு விதங்களிலும் சிறப்பு பெறுகின்றன.

    முதலாவது, அவற்றை மொழிபெயர்த்திருக்கும் முறைமை. அக் கவிதைகளைத் தமிழ் மயப்படுத்தாமல், தமிழில் சிங்களக் கவிதையை வாசிக்கிறோம் என்ற உணர்வினை ஏற்படுத்தும் வகையில் அவற்றை மொழிபெயர்த்திருக்கும் முறைமை. மூலமொழிக் கவிதைகளில் வெளிப்பட்ட இருண்மையைக் கூட அதே சொற்களுடன்  மொழிபெயர்த்திருப்பது என்பதை ஒரு சிறப்பாக நான் பார்க்கிறேன்.

    இரண்டாவது, அக் கவிதைகளில் கவிஞர்கள் பேசியிருக்கும் விடயங்கள். மேலெழுந்தவாரியாகப் பேசும்பொழுது இந்த நாட்டின் சிங்களம் – தமிழ்மொழி பேசும் மக்கள் பிரச்சினைகள் பொதுவானவை என்று சொல்லப்படுவதுண்டு. இக் கருத்து போர்க்காலச் சூழலில், உயிர் -உடைமை இழப்பு, காணாமல் போனவர்கள், விதவைகள், அநாதைகள்   போன்றவற்றின் உருவாக்கம் என்ற வகையில் பொதுவானவையாக இருக்கலாம். ஆனால் மேலும் சில அம்சங்களில் மூவின மக்களின் பிரச்சினைகள் வெவ்வேறானவை என்பது தெரியவரும். அவை ஒரே மாதிரியாகத் தெரிந்தாலும், அந்தப் பிரச்சினைகளுக்குக் காரணமான காரணிகள் எதிர்நிலையாகவும், தாம்சார்ந்த சமூகத்தை மட்டுமே சார்ந்தவையாகவும் அமைந்திருப்பதைக் காணலாம். அத்தகைய கவிதைகள் இத் தொகுப்பில் நிறைந்தே காணப்படுகின்றன.

    ஈழத்துச் சூழலைப் பொறுத்தவரை மேலும் பல பிரச்சினைகள் பற்றி அவை சார்ந்த அனுபவங்களைக் கொண்டு சிங்களக் கவிஞர்கள் பேசி வந்துள்ளார்கள் என்பது இத் தொகுப்பின் கவிதைகள் மூலம் தெரிகிறது.  1977ஆம் ஆண்டின் சிங்கள இளைஞர்களின் கிளர்ச்சி, பொருளாதாரக் கொள்கை மாற்றங்கள், அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் அதன் காரணமாக ஏற்பட்ட விளைவுகள் பற்றியெல்லாம் கலைத்துவமாகவும், தர்க்கபூர்வமாவும் சிங்கள நவீன கவிஞர்கள் பேசி வந்துள்ளார்கள் என்பது  இத் தொகுப்பின் கவிதைகள் மூலம் தெரிகிறது.

    அத்தோடு பெண்ணியம் சார்ந்த குரலையும், அழகாகவும், ஆழமாகவும் நுண்ணிய முறையில் சிங்களக் கவிதைகள் பேசியிருக்கின்றன என்பதை எடுத்துக்காட்டும் வகையிலான கவிதைகளும் இத் தொகுப்பில் அடங்கியிருக்கின்றன. இத்தகைய பல அனுபவங்களை வெளிப்படுத்தும் சிங்களம் மற்றும் தமிழ்ச் சிறுகதைகள், நாவல்கள் என பலவற்றை நாம் வாசித்திருப்பினும், அந்த அனுபவங்கள் தரும் உணர்ச்சிகளையும், உணர்வுகளையும் கவிதைகளில் வாசிக்கின்ற பொழுது, சிலிர்ப்பான ஒரு வாசிப்பு அனுபவத்திற்கு ஆளாக்கப்பட்டு, அப் பிரச்சினைகளைப் பற்றி நம்மை ஆழ்ந்து சிந்திக்க வைக்கிறது.

    சம கால நவீன சிங்களக் கவிதையின் போக்கையும், வளர்ச்சியையும் தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பத்தையும் இத் தொகுப்பு தந்திருக்கிறது. இத் தொகுப்பில் அமைந்துள்ள வீச்சுமிக்க ஒவ்வொரு கவிதையைப் பற்றியும்  தனித்தனியாகவும் விரிவாகவும் பேசலாம். பேசவேண்டும் போல் தோன்றுகிறது. ஆனால் விரிவஞ்சி இரண்டு கவிதைகளைப் பற்றி அதுவும் சுருக்கமாகப் பேசலாம் என நினைக்கிறேன்.

    ஒன்று, இத் தொகுப்பில் அமைந்துள்ள தக்ஷிலா ஸ்வர்ணமாலியின் அயல்வாசிஎனும் கவிதை. இக் கவிதை இரு மொழி சமூகத்தின் இடையிலான உறவாடல், இருப்பு நிலை பற்றியெல்லாம் பேசுகிறது. ஒரு சிங்களப் பெண்ணின் குரலில் வெளிப்படும் இக் கவிதை இப்படித் தொடங்குகிறது.

    ”நுரை நிறக் கண்களுடைய ரகு
    ஆழப் புதைந்த விழிகள்’   எனத் தொடங்கி இடையில், 

    பணம் வேண்டாமெனச் சொன்ன மாதம்
    வாங்கி வந்தான் ரகு

    சிறு வண்ணப் பூக்களிட்ட சேலையொன்றையும்
    நிறைய வளையல்களையும்

    சேலை உடுக்கத் தெரியாதென்றதும்
    அணிவித்து விட்ட ரகு

    அழகு பார்த்தான் வளையல்களையுமிட்டு
    ‘பொட்டு?’ நான் கேட்டேன்.

    ‘இல்லாவிட்டாலும் பரவாயில்லை’ என்றான் ரகு”   என நகரும் அக் கவிதை இப்படி முடிகிறது.

    பிறக்கக் காத்திருந்த குழந்தையின் தந்தை
    தோடம்பழ பெட்டியினைத் தலையில் வைத்தபடி
    அன்றாட உழைப்புக்காக நடந்து கொண்டிருக்கையில்
    புறக்கோட்டையில் வெடித்த குண்டில்
    மரித்துப் போன நாளன்று
    துயருற்ற அளவுக்கு
    கவலை தோன்றியது
    இறுதியாக ரகு
    என்னைப் பார்த்தபோது.

    இக் கவிதை என்ன பேசியது? எதைப் பற்றிப் பேசியது? என்ற கேள்விகளுக்கு உதாரணமாகக் காட்டிய மேற்குறித்த வரிகள் பதில் அளிக்கின்றன.

    அடுத்து இத் தொகுப்பில் அமைந்த கவிதையான  டீ. திலக பியதாஸவின் யுத்த களமொன்றின் இறுதிக் கணம் எனும் கவிதையைப் பற்றி பார்க்கலாம். இக் கவிதைக்கான முதல் வாசிப்பின்பொழுது உடனடியாக எனக்கு, புலம்பெயர் சூழலில் இயங்கும் ஈழத்தவரான ஆங்கிலத்தில் எழுதும் சுரேஷ் கனகராஜா அவர்கள் எழுதிய கவிதை ஒன்று நினைவுக்கு வந்தது. அதன் தலைப்பு கோப்ரல் பிரேமரத்னாவின் அஞ்சலிப்பா‘. அக் கவிதை இறந்து போன ஒரு கோப்ரலுடன் ஒரு தமிழர் பேச, பியதாஸாவின் இக் கவிதை ஓர் இராணுவ வீரர் அவருடன் போரிடும் எதிரிப் படைவீரனைப் பற்றியும், அத் தருணத்தில் நிகழப் போகும்  மரணத்தைப் பற்றியும் சிந்திக்கும் வகையில் அமைகிறது.

    இக் கவிதையின் சில வரிகளை மாத்திரம் உதாரணம் காட்டினால் மட்டும், இக் கவிதை வெளிப்படுத்தும் மனோநிலையை முழுமையாக வெளிப்படுத்தியதாக இருக்காது என்பதனால் முழுக் கவிதையையும் இங்கே தருகிறேன்.

    ”எனக்கு முன்னால்
    என்னைக் குறிபார்த்தவாறு
    ஆயுதமொன்றை  நீட்டியிருக்கும்
    எதிரிப்படை வீரனை நோக்கி
    நானொரு துப்பாக்கிக் குண்டை
    விடுவிக்கவே வேண்டுமா?
    அவ்வாறு நான் செய்யாதுவிடின்

    துப்பாக்கி ரவையொன்று வரும்
    என்னுடலைத் தேடி
    துளைத்துச் செல்லும் முகமாக 

    ஆகவே வெற்றி அவனுக்கா, எனக்கா?
    அவன் முந்திக் கொண்டால்

    நாளைச் செல்லக் கூடும்
    அவனது பெற்றோரைப் பார்த்து வர
    அல்லது அவன் வரும் வரைக்கும்
    கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கும்
    மனைவி பிள்ளைகளிடம். 

    அவ்வாறாயின், உடனடியாக
    இந்த ஆயுதத்தை இயக்க வேண்டியது நானா?
    அப்பொழுதுதான் எனக்கு நாளை

    சம்பளத்தோடு சில மாதங்கள்
    விடுமுறை கிடைக்கும்
    செல்ல முடியும்

    நான் வரும் வரை
    கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கும்
    பெற்றோர், மனைவி, பிள்ளைகளை
    பார்த்து வர நாளை
    ஆகவே முந்திக் கொள்ளும்
    முதல் துப்பாக்கி ரவையில்
    எழுதப்பட்டிருப்பது அவனது பெயரா
    அல்லாதுவிடின் எனது பெயரா? 

    இக் கவிதையில் எங்கும் இன அடையாளச் சொல்லாடல்கள் இல்லை என்ற வகையில் உலகப் பொதுவான போர்க் கலாசாரத்தின் இக்கட்டான தருணங்களைப் பேசுவதாகத் தெரியும். ஆனால் ஆழ்ந்து கவனித்தால் சில சொல்லாடல்கள் மூலம் இக் கவிதையில் ஒலிக்கும் குரலுக்குரியவர் யார்  என்றும் அவர் முன்னால் நிற்கும் எதிரிப் படைவீரன் எவர் எனவும் தெரிய வரும்.

    ஆக, தமிழில் சிங்களக் கவிதைகள் படிக்கிறோம் என்ற உணர்வினை ஏற்படுத்தும் வகையில் சிறப்பான முறையில் இக் கவிதைகளைத் தமிழில்  தந்திருக்கும் எம்.ரிஷான் ஷெரீப்பின் இம் முயற்சியானது, ஈழத்தில் சிங்கள மொழிக் கவிதைகளின் நேரடி மொழிபெயர்ப்பு முயற்சிகளில்  மிகக் கவனத்திற்குரிய முயற்சியாக இத் தொகுப்பு அமைகிறது.

    ஈழத்துக் கவிதை (கவனிக்க – ஈழத்துத் தமிழ்க் கவிதை மட்டுமல்ல) வளர்ச்சியினைப் பற்றி (இந்தியக் கவிதை என்றால் மலையாளம், தெலுங்கு என அனைத்து மொழிகளையும் இணைத்துப் பேசுவது மாதிரி) பேசுவதற்காகவும் இத் தொகுப்பு பயன்படும் என்பதோடு ஈழத்துக் கவிதை முயற்சிகளை (தமிழ் மட்டுமல்ல) ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க முயலும் மொழிபெயர்ப்பாளர்களுக்கும் இத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள ரிஷான் ஷெரீப்பின் மொழிபெயர்ப்புக் கவிதைகள் பயன்படும் என்று சொல்வதோடு, பயன்படவேண்டும். பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதே எனது அவாவாகவும் இருக்கிறது.

    இறுதியாக, தமிழக – ஈழத்து நவீன, பின்-நவீன கவிஞர்களுக்கு ஒரு வேண்டுகோள் அல்ல உத்தரவு.

    கட்டாயமாக இத்தொகுப்பினை வாசியுங்கள்!

     

     

    Share
  • அகநானூற்றில் அழுகையெனும் மெய்ப்பாடு! (தொல்காப்பிய மெய்ப்பாட்டியலை முன் வைத்து…)

    -பேரா.பீ. பெரியசாமி  

    முன்னுரை

    தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் ஆறாவது இயலாக மெய்ப்பாட்டியல் அமைந்துள்ளது. இலக்கிய மாந்தர்கள் periyasamiஉள்ள உணர்ச்சியால் தூண்டப்படும்போது எவ்வாறு சொற்படுத்த வேண்டும் என்பதை அறிய மெய்ப்பாட்டியல் துணைபுரியும். மெய்ப்பாட்டியல் என்றால் என்ன என்பது பற்றிய விளக்கப் பொருண்மை நூற்பாவைத் தொல்காப்பியர் அமைக்கவில்லை. மெய்ப்பாட்டியல் அகவொழுக்கத்திலும், புறவொழுக்கத்திலும் புலப்படும் மெய்ப்பாடுகளைக் கூறுகிறது. செய்யுளுக்குரிய உறுப்புகளுள் இன்றியமையாதது மெய்ப்பாடு ஆகும்.  தொல்காப்பியனார் “உணர்ச்சி” என்னாது “மெய்ப்பாடு” எனச் செய்யுள் உறுப்பைக் குறித்ததன் நோக்கம் நுட்பம் வாய்ந்தது.  உணர்ச்சி என்ற சொல்லைத் தொல்காப்பியனார் யாண்டும் குறிக்கவில்லை.  பாடலில் உணர்ச்சியைக் குறித்தால் அதைப் படிப்போர் எளிதில் அறிதல் இயலாது.  ஒருவர் உணர்ச்சியுறுகின்றார் என்றால் அவர் உற்ற உணர்ச்சியை அவரால் மட்டுமே எளிதில் உணரமுடியும்.  காண்போர் அறிய இயலாது.  மெய்ப்பாடுகளால் மட்டுமே உணார்ச்சியை எளிதில் அறிந்துகொள்ள இயலும். அவற்றுள் அழுகை எனும் மெய்ப்பாடு அகநானூற்றில் இடம்பெற்றுள்ளவிதத்தை இக்கட்டுரை ஆராயவுள்ளது.

    அழுகை மெய்ப்பாடு

    மனித மனத்தின் ஆழமான, நீங்காத உணர்வு அழுகை ஆகும். அழுகை பிறர் தன்னை எளியன் ஆக்குதலாற் பிறப்பது. உயிரானும், பொருளானும் இழத்தல், தளர்ச்சி, தன்நிலையிற் தாழ்தல், நல்குரவு என்ற பொருண்மையில் அழுகை எனும் மெய்ப்பாடு தோன்றும். இதனை, நாவலர். பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டார் அழுகை மெய்ப்பாட்டைப் பற்றிக் குறிப்பிடுமிடத்து, “அவலச்சுவை என்பது வடமொழியில், “சோகரஸம்” என்று குறிப்பிடப்படும். அவலம் எனினும் அழுகை எனினும் ஒக்கும்” (கட்டுரைத் திரட்டு, ப.107) எனப் பேராசிரியர் வழி நின்று அவலச் சுவைக்கு விளக்கம் தருகின்றார். படிப்பவரது உள்ளத்தை உருக்கும் தன்மையதாய் அமைவது அழுகை எனும் மெய்ப்பாடாகும். இம்மெய்ப்பாடு கேட்போரை எளிதில் ஈர்க்கச் செய்யும் தகுதியுடையது. இதனை, “வாழ்க்கையில் கவலையை வளர்க்கும் துன்பம் கலையுலகில் கவலையைத் தீர்க்கும் மருந்தாக உள்ளது என்னும் அவலம் உள்ளச் சுமையைக் குறைப்பதற்கு உறுதுணையாகிறது” (இலக்கிய ஆராய்ச்சி, ப – 69) என்று  மு. வரதராசனார் கூறுவார்.

    கி. ஈஸ்வரி அவர்கள் அழுகையின் தோற்றுவாயினை, “அவலத்தை இரக்கம், துன்பம் எனப் பகுத்துப் பார்க்கும்போது, இரக்கத்தின் அடிப்படையில் தோன்றுவது ‘அவலம்’ என்றும், துன்பத்தின் அடிப்படையில் தோன்றுவது ‘அழுகை’ என்றும் தெரிகிறது.” (இலக்கிய மணிகள், ப.52) என்கிறார்.  இதனை, “துன்பத்தின் இன்பமே கவிதைக்கும் கற்பார்க்கும் அவைக்கும் ஆதலின், சங்கச் சான்றோர்கள் பாலைத் துறைகளை விரும்பிப் பலர் பாடினர்” (தமிழ்க்காதல், ப – 98) என வ.சு.ப. மாணிக்கம் கூறுவார். அழுகையானது தனிமனித வாழ்வில் ஏற்படுவதுடன் முடிவெடுக்க இயலாத தன்மையும் கொண்டது. அழுகையெனும் மெய்ப்பாடானது இளிவு, இழவு, அசைவு, வறுமை ஆகிய காரணங்களால் பிறக்கும். இதனை தொல்காப்பியர்,

    இழிவே இழவே அசைவே வறுமையென
    விளிவில் கொள்கை அழுகை நான்கே”(நூ.5) என்பார்.

    இவற்றுள், இளிவு, வறுமை என்பது சங்க இலக்கியங்களில் ஓரளவிலேயே சுட்டப்படுகின்றன. வறுமை என்பது களைய வேண்டிய தொன்றே எனச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. இளிவு வரினும் அவை மாறும் தன்மையைக் கொண்டதெனலாம். இதனை, “உணர்ச்சிகள் தோன்றுவதற்குச் சூழலும் மனமும்தான் காரணமாக அமைகின்றன. உயிர்கள் அனைத்தும் இன்புற்றிருக்கவே விழைகின்றன.  இவ்விழைவிற்கு மாறாக எழும் நிகழ்ச்சிகள் அவலத்தைத் தோற்றுவித்தன. அவலத்தை மிகுவிக்கவோ குறைக்கவோ மனநிலையும் சூழலும் காரணமாக அமைகிறது.” (குறுந்தொகையில் அவலச்சுவை, ப.6) என துரைராஜி கூறியுள்ளார்.

    ஆய்வாளர்களின் பார்வையில் அழுகை

    மேலைநாட்டு ஆய்வாளர்கள் அழுகையினை அவலம், டிராஜடி என்பர். இதனை, “துன்ப உணர்வைத் தருகின்ற கருணைரசம், அதன் தன்மையினின்று நீங்கிச் சுவையை ஊட்டுகிறது என்பர் அவிநவகுப்தர். இங்ஙனம் அது சுவையைத் தருவது இலக்கியத்திலும் நாடகத்திலும் எனலாம்.” (Comparative Aesthetics, Vol.I, P.215 ) என்பர்.

    “நிலையற்ற மானிட வாழ்வில் உயர்ந்த நிலையில் அவலத்தைப் பற்றிச் சிந்திக்கையில் மதிப்பிற்குரிய, மிக நெருங்கிய அன்புடையவர் தம் இழப்பும், விபத்துக்கள் ஆகியனவும் அவலமாகும் எனவுரைப்பர்.” (Tragedy and Sanskrit Drama, P – 1) “அறியாமையாலும் ஓரளவு அவலம் ஏற்படுவதுண்டு. சான்றாக ஒரு பித்தனால் அமைதியும் மரியாதைக்குரிய ஒருவன் எதிர்பாராமல் சொல்லப்படுவது அவலத்தை விளைவிப்பதாகும்.” (The Harvest of Tragedy, PP.18-19) “இரண்டாவதாக அவலமாவது நல்வினைப் பயன் தீவினையாக மாறுவதாகும். காண்போரும் இரக்கமும், அச்சமும் மிகுந்த நிலையினை மனதிற் கொண்டே அதனைக் காண்கின்றனர்.” (Principles of Tragedy, p.37)  “அவலத்தைப் படைக்கும் கவிஞன் தனது ஆன்மாவினின்றும் உறும் எல்லா மனிதருக்கும் ஏற்புடையதாக அதனை அமைக்கின்றான். அது மகிழ்ச்சியைத் தரத்தக்கதல்ல எனினும் சிந்திக்க இன்பத்தைத் தருவதாகும்” (The harvest of Tragedy, P – 201)  என்பார்.  ஹேனன் என்பவார், “தவிர்க்க இயலாத வகையில், மிக உயர்ந்த நிலையிலிருந்து மனிதனது வீழ்ச்சியும், இழப்பும் அவலமென்று கூறுவர். அந்நிலை மிகச் சாதாரணமாக ஏற்படுவதன்றென்பர். மேலும், அது ஒருவனுக்கு எளிதாய் ஏற்படுவதில்லை. பிறரால் உண்டாக்கப்படுவதுமில்லை. அது மனிதனுடைய செயல்களினால் தாமே விளைவதாகும்.” (Shakespearean Tragedy, p.6) என்பர்.

    அழுகை என்பது தன்னிலையிலிருந்து தாழ்வதனால் ஏற்படுகின்றது. இது இயல், இசை, நாடகம் எனும் அனைத்திலும் வெளிப்படக் கூடியது. மேலும், மற்றவர்களின் மீது நாம் அன்புகொண்டு பழகும்போது அவர்களை இழக்க நேரிட்டாலோ அல்லது அவர்கள்  இறந்துவிட்டாலோ நம்மிடம் அழுகை எனும் மெய்ப்பாடு இயல்பாகவே வெளிப்படுகின்றது.

    உளவியலார் பார்வையில் அழுகை

    அழுகை ஏற்படுவதற்கான காரணமாக, “ஒருவனுடைய நெருங்கிய தோழன் காட்டிக் கொடுக்கும் போதோ மிகவும் நெருங்கிய ஒருவன் இறக்கும்போதோ ஒருவன் முழுவதும் நிலைகுலைவதைக் காணலாம்.” (Psychology and Effective Behaviour, p.176) என கோலிமேன் கூறியுள்ளார்.

    அழுகை என்னும் சொல்லுக்கு அகராதி விளக்கம்

    மதுரைத் தமிழ்ப் பேரகராதி “அவலத்திற்கு ஓரலங்காரம், அஃது துயரத்  தோன்றக் கூறுவது எனவும் கிலேசம், கேடு, நோய், மிடி, வருத்தம், பயன்படாதொழிவது, பலவீனம், மாயை, வறுமை, துக்கமாய் முடிவது, கவலை எனவும் பொருள் விளக்கம் கூறும்.” (ப.156.) பிங்கலர் “அழுகையைப் பற்றிக் குறிப்பிடுமிடத்துள் கலக்கம், உரோதனம், கலுழ்ச்சி, அரற்றல், இரங்கல், விம்மல், பொருமல், ஏங்கல், இராவனம் ஆகியவற்றை அழுகையின் கூறுகளாகக் கொள்வர். நோய்க்குரிய பல சொற்களில் அவலத்தையும் ஒன்றெனச் சுட்டுகிறது.” (ப.394) “சதுரகராதியில் அவலம் என்ற சொல்லிற்கு, “நோய், வருத்தம்” என்ற பொருள் அமைகிறது.” (ப.13) 

    அகநானூற்றில் அழுகை

    இளிவு

    இளிவு என்பது ‘தாழ்நிலை’. அதாவது, பிறரால் இகழப்பட்டு எளியராகும் தன்மை என்பர். இதனை, “வென்றிகொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே”(அகம். 36(23)) எனும் அகநானூற்று பாடலில் தலைவன் பரத்தையர் சேரியில் தங்கியிருந்து ஒருநாள் மீண்டு இல்லம் வந்தான். அப்போது தலைவி அவனிடம் ஊடல் கொண்டு, தன் வெற்றிப்புகழ் எங்கும் பரவுமாறு  பகைவர் படைகளைக் கொன்று களவேள்வி செய்த காலத்துச் செழியன் வெற்றிவீரர்கள் எழுப்பிய ஆரவாரத்தினைக் காட்டிலும், உன் பரத்தைமை பற்றி ஊரார் பேசும் அல் பெரியதாக இருந்தது என தலைவனை இகழ்கிறாள். இதனால் தலைவனின் ‘தாழ்நிலை’ புலப்படுகின்றது. இதன்வழி இளிவு எனும் மெய்ப்பாடு வெளிப்படுகின்றது.  மேலும், 71(13-15), 73(5-8), 146(13), 340, 189(14-15) ஆகிய வரிகள் இளிவு குறித்த அழுகை மெய்ப்பாடு அமைய பெற்றுள்ளன.

    இழவு

    இழவு என்பது ‘இழத்தல். அதாவது தாய், தந்தை முதலாய சுற்றத்தாரையும், இன்பம் விளைவிக்கும் நுகர்ச்சி முதலியவற்றையும் இழத்தல். இதனை,

    மாண்நலம் நுகரும் துணை யுடையோர்க்கே”(அகம். 37 (18)) எனும் அகநானூற்று பாடல், தலைவன் வினைவயின் பிரிந்தான்; சென்றவன் குறித்த பருவத்தில் திரும்ப வரவில்லை. ஆதலால், தலைவி பிரிவாற்றாது வருத்தமுற்றாள்; அதனைக் கண்ட தோழி தலைவன் வருமளவும் ஆற்றியிருத்தலே நன்று என்று வற்புறுத்திய பொழுது தலைவி தன் நெஞ்சிற்கு,  அழகிய இந்த இளவேனில் காலம் மாண்புடைய பெண்மை நலத்தினைத் துய்க்கும் துணையைப் பிரியாதோர்க்கே உரியது; அது கழிந்ததே! நம்முடைய தலைவன் நம்மை மறந்து அங்கே தங்கியிருப்பவர் அல்லர்; ஆயினும், அதனால் நாம் பெற்றது என்ன? இப்பருவத்தில் பிரிந்து வாழ்பவர் ஆற்றியிருத்தல் கூடுமோ? எனக் கூறுகின்றாள். இதில் பருவத்தை (நுகர்ச்சியை) இழந்ததை நினைத்து தலைவி அழுவதினால் இஃது இழவின் பாற்பட்டது. மேலும், 19(9-19), 176(21-26), 73(16 -17), 120 (8-9), 192(12-13), 208(14-16), 338(6-10) ஆகிய பாடல் அடிகள் இழவு குறித்த அழுகைமெய்ப்பாடு அமைய பெற்றுள்ளன. 

    அசைவு

    அசைவு என்பது ‘தன்நிலை தாழ்தல்’. அதாவது, முந்தைய நல்ல நிலைமையிலிருந்து வேறுபட்டு வருந்துதல் அசைவு. இதனை,

    “……………..  ……….. என் உயிர்
    விலங்கு வெங் கடு வளி எடுப்பத்
    துளங்கு மரப் புள்ளின் துறக்கும் பொழுதே?” (அகம். 71(15 -18)) எனும் அகநானூற்று பாடல் தலைவன் பொருள்தேடிப் பிரிந்து சென்றுள்ளான். பிரிவாற்றாது தலைவி வருந்தினாள்; தலைவியை ஆற்றுவிக்கும் தோழி ‘ நீ இவ்வாறு ஆற்றாது வருந்தினால் ஆற்றுவித்தற்கரிய யான் என் கடமையை ஆற்ற இயலாது போகும்; நீ உயிர்விடும் முன்னர் என் உயிர் தானே என் உடம்பை விட்டுப் பிரிந்து போதற்குரிய காலம் வந்து விட்டது என்றே கருதுகிறேன்’ எனத் தோழி தலைவியை நோக்கிக் கூறுகின்றாள். இதில் தன்நிலையான ஆற்றுவித்தல் என்பதிலிருந்து தாழ்ந்து தலைவியின் ஆற்றாமையைக் கருதி தன் உயிரும் போகும் காலம் வந்துவிட்டது என தோழி கூறுவதில் ‘அசைவு’ எனும் மெய்ப்பாடு வெளிப்படுகின்றது. மேலும், 32(11-12), 69(12-20), ,95(3-5), 175(18), 233(1-2), 299 ஆகிய வரிகள் அசைவு குறித்த அழுகைமெய்ப்பாடு அமைய பெற்றுள்ளன. 

    வறுமை

    வறுமை என்பது ‘போகம் துய்க்கப் பெறாமை’. அதாவது இயலாமை. இதனை,
    மென்தோள் பெறநசைஇச் சென்ற என் நெஞ்சே” (அகம்.9(26)) எனும் அகநானூற்று பாடல் வினைமேற் சென்ற தலைவன் வினை முடித்து மீண்டு வரும்போது, விரைந்துச் செல்லும் தேரினை மேலும் விரைவு படுத்துவதற்காகத் ‘தன் நெஞ்சம் தனக்கு முன்பே தன் தலைவிபாற் சென்று விட்டது’ என்று தேர்ப்பாகனிடம், நாணொடு செறிந்த கற்பினையும் ஒளி பொருந்திய நெற்றியினையும் அழகிய இனிய சொல்லினையும் இளமையையும் உடையாளது மெல்லிய தோளை அடைவதற்கு விரும்பி விரைந்து சென்றது என்று கூறுகின்றான். இதிலிருந்து தலைவியைக் காண இயலாத இயலாமையில் தலைவன் இருக்கின்றான் என்பது புலப்படுகின்றது. இதில் வறுமை (தலைவியை அடைய இயலாத நிலை) எனும் மெய்ப்பாடு வந்துள்ளது. மேலும், 19(9-19), 28(14), 123(7), 161(9-14), 164(9), 200(1-3), 337(12) ஆகிய வரிகள் வறுமை குறித்த அழுகைமெய்ப்பாடு அமைய பெற்றுள்ளன. 

    முடிவுரை

    மெய்ப்பாடு என்பது செய்யுள் உறுப்புக்களில் ஒன்று. உள்ளத்து நிகழ்ச்சி புறத்தே வெளிப்படுதல் மெய்ப்பாடு. மெய்ப்பாட்டியல் என்பது உளவியலோடு தொடர்புடையது. மெய்ப்பாடே உலக மக்களின் முதல்மொழி. தொல்காப்பியம் பொதுவான மெய்ப்பாடுகள் எனச் சுட்டிய நகை முதலான எட்டையும் முதலில்வைத்துப் பிறகு அவை தோன்றும் களங்கள் குறித்துப் பேசுகிறது. எட்டு மெய்ப்பாடுகள் ஒவ்வொன்றிற்கும் நான்கு நான்கு உணர்ச்சிகளைக் குறிப்பிடுகின்றார் தொல்காப்பியர்.  நானான்கு எனத் தொல்காப்பியனார் கூறுவது, ஒவ்வொரு மெய்ப்பாடும் நான்கு நான்கு உணர்ச்சிகளால் தோன்றும் என்பதையே; இது முப்பத்து இரண்டாய் விரிகின்றது. மனித மனத்தின் ஆழமான, நீங்காத உணர்வு அழுகை ஆகும். அழுகை பிறர் தன்னை எளியன் ஆக்குதலாற் பிறப்பது. உயிரானும், பொருளானும் இழத்தல், தளர்ச்சி, தன்னிலையிற் தாழ்தல், நல்குரவு ஆகியவற்றால் அழுகை எனும் மெய்ப்பாடு தோன்றுகின்றது.

    *****

    கட்டுரையாசிரியர்
    தமிழ்த்துறைத்தலைவர்
    DLR கலை மற்றும் அறிவியல் கல்லூரி
    விளாப்பாக்கம்

     

    Share
  • இனவரைவியல் நோக்கில் லக்ஷ்மி சரவணக்குமாரின் கானகன் நாவல்

    -ம. சசிகலா

    இனவரைவியல் என்பது குறிப்பிட்ட ஓர் இனத்தைப் பற்றி முழுமையாக அறிந்துகொள்ள உதவும் துறையாகும். இது பண்பாட்டு மானுடவியலின் ஒரு பிரிவாக இருந்து, பின்னர் தனித்தன்மை கொண்ட புலமாக வளர்ந்துள்ளது. மானுடவியல் அறிஞரான மாலினோஸ்கி (Bronisław Malinowski) “குறிப்பிட்ட இன மக்களின் உறவு நிலைகள், அவர்களுடைய வாழ்க்கை, அவர்களின் சிந்தனை உலகம் ஆகியவற்றை அவ்வினத்தாரின் உணர்வோடு வெளிப்படுத்துவதே இனவரைவியல்” என்கிறார். தமிழ் மானுடவியலாளர் பக்தவத்சல பாரதி “ஒரு தனித்த சமூகத்தின் பண்பாட்டைப் பற்றி மானுடவியலாளர்கள் அச்சமூகத்தாரோடு நீண்டகாலம் ஒன்றி வாழ்ந்து ஆய்வு செய்து அதனை எழுத்தில் எழுதியளிக்கும் தனிவரைவு நூலே இனவரைவியல்” என்று விளக்கமளிப்பார்.

    சமகாலத்தில் பலவிதமான கலைக் கோட்பாடுகளும் அறிவியல் சிந்தனைகளும் இலக்கியத்தோடு ஒப்பிட்டு ஆய்வு செய்யப்படுவதுபோலவே இனவரைவியலும் இலக்கியத்தோடு ஒப்பிட்டு ஆய்வு செய்யப்படுகிறது. இத்தகைய இருதுறை ஒப்பீட்டு ஆய்வுகள் வாசகருக்கு ஒரே நேரத்தில் இரண்டு புலங்கள் குறித்த புரிதலை ஏற்படுத்த வல்லவை. மேலும் இலக்கியம், இனவரைவியல் இரண்டுமே மானுட வாழ்வியல், பண்பாட்டுக்கூறுகளைப் பேசுபொருளாகக் கொண்டுதான் இயங்குகின்றன. இந்த வகையில் இவை இரண்டும் தமக்குள் நெருக்கம் கூடிய துறைகளாகும். அதேசமயம் தற்காலத் தமிழிலக்கியத்தில் இனவரைவியல் நாவல்களின் பங்களிப்பும் கணிசமான அளவில் இருந்துவருகிறது.

    இக்கட்டுரையில் இனவரைவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் கானகன் நாவலை எழுதிய லக்ஷ்மி சரவணக்குமார் நீலநதி, வசுந்தரா என்னும் நீலவர்ணப் பறவை, யாக்கை, மச்சம் ஆகிய நான்கு சிறுகதைத் தொகுப்புகளையும் மோக்லியைத் தொலைத்த சிறுத்தை என்னும் ஒரு கவிதைத் தொகுப்பையும் உப்புநாய்கள், கானகன் என்னும் இரண்டு நாவல்களையும் எழுதிய எழுத்தாளராவார். இதுவன்றி, 2012ஆம் ஆண்டு வெளிவந்த அரவான் மற்றும் தற்போது வெளிவரவிருக்கிற காவியத்தலைவன் ஆகிய படங்களுக்கு உதவி இயக்குநராகவும் அவர் பணியாற்றியிருக்கிறார்.

    மிகச் சமீபத்தில் வெளிவந்த லக்ஷ்மி சரவணக்குமாரின் கானகன் நாவல் கதைப்போக்கில் பளியர் என்னும் இனத்தைப் பற்றிப் பேசுவதாக அமைந்துள்ளது. அந்நாவலின் முன்னுரையில் பளியர் இன மக்களுடனான சந்திப்புகள் மற்றும் தகவல் சேகரிப்புகள் மூலமே பளியர் சமூகம் பற்றிய விவரணைகளைப் பதிவு செய்திருப்பதாக நாவலாசிரியர் குறிப்பிடுகிறார். இந்தக் கூற்று தன்னளவில் இந்த நாவலை இனவரைவியல் நாவல் என நாவலாசிரியர் உரிமை கோரிக்கொள்ளும் கூற்றாக அமைகிறது. இந்நிலையில் இந்த நாவல் உண்மையிலேயே இனவரைவியல் நாவல்தானா என்பதைக் கண்டறிய முற்படுவதாக இக்கட்டுரை அமைகிறது. ஏற்கனவே கள ஆய்வின் மூலம் பளியர் சமூகம் பற்றிய தரவுகளைத் திரட்டிய பிற அறிஞர்களின் கருத்துக்களை இந்நாவலில் பயின்றுவரும் பளியர் பற்றிய குறிப்புகளுடன் ஒப்பிடுவதன்மூலம் இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகிறது.

    கானகன் நாவல் ஒரு வருடத்திற்குள்ளாக நிகழ்ந்துமுடியும் சில வேட்டைகளைப் பற்றிய நாவல். இந்நாவலில் மூன்று கூறுகள் முக்கியத்துவம் பெறுவனவாக அமைகின்றன. அதில் ஒன்று: தங்கப்பன். இரண்டாவது: வாசி, மூன்றாவது: அரசியல், வாழ்நிலை மற்றும் சூழலியல் மாற்றத்தின் நெருக்கடிகளை எதிர்கொள்ளும் பளியக்குடி. வேட்டையாடியான தங்கப்பனுக்கும் தன்னை வனம் காக்கும் குடியிலிருந்து வந்தவன் என நம்பிக்கொண்டிருக்கும் பளியனான வாசிக்கும் இடையிலான போராட்டம்தான் இந்தக் கதை.

    காடு பற்றிய கதைக் களம் கொண்ட நாவல்களுக்குத் தமிழில் முன்னுதாரணங்கள் உண்டு என்றபோதும் பளிகர் இனம் பற்றிய கவனத்தைக் கோரும் கானகன் நாவல் தனக்கென தனித்துவமான சில வாழ்வியல் அனுபவங்களைக் கொண்டதாக இருக்கிறது. பட்டாம்பூச்சிகளைத் துர்ச்சகுனத்தின் குறியீடாகப் பார்ப்பது, பளியக்குடிப் பெண்கள் மருத்துவச்சியின் துணையை விரும்பாது தமக்குத் தாமே பிரசவம் பார்த்துக்கொள்வது, புலி வழிபாடு, பளிச்சி வழிபாடு, பிரத்யேகமான உணவுப் பழக்கவழக்கங்கள் போன்ற பல வழக்காறுகளையும் இந்நாவல் தன் கதைப் போக்கினூடாகப் பதிவு செய்கிறது.

    பளியர் தமிழ்நாட்டிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளின் உயர்ந்தப் பகுதிகளில் வாழும் மக்கள் ஆவார். தென்னிந்தியாவின் மிகப் பழமையான சமூகங்களில் பளியர் சமூகமும் ஒன்று. இவர்கள் தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களாவர். பளியர் வாழிடத்தின் ஒவ்வொரு குடியிலும் 40 முதல் 50 குடும்பங்கள் வசிப்பதான குறிப்புகளை ஆய்வாளர்கள் தருகின்றனர். லக்ஷ்மி சரவணக்குமார் தன் சொந்த ஊரான மதுரைக்குப் பக்கத்தில் உள்ள தேனி அகமலைப் பளியக்குடியை, அதிலும் குறிப்பாக அப்பகுதியில் வாழும் மொக்கநிலைப் பளியக்குடியைத் தன் நாவலின் களமாகக் கொள்கிறார். அதைச் சுற்றியுள்ள தேனி, அகமலை, கொடுவிலார்பட்டி, தவளைநாடு, மேல்நாயக்கன் பட்டி, கீழ்நாயக்கன்பட்டி போன்ற பிற பளியக் குடிகள் பற்றிய குறிப்புகளைத் தருவதோடு அவற்றிடையே நிலவும் சமூகவியல் தொடர்புகளையும் சில குறிப்புகள் மூலம் உணர்த்திச் செல்கிறார். உதாரணமாக, பளியர் தம்முடைய தெய்வமாக வழிபடும் புலியைத் தங்கப்பன் வேட்டையாடியதான செய்தியை மொக்கைநிலை பளியக்குடியிலிருந்து எல்லா பளியக்குடிக்கும் தகவல் சொல்லிவிடும் பகுதியைக் குறிப்பிடலாம். அப்பகுதி பின்வருமாறு:

    “மொக்கநிலை பளியக்குடிதான் அகமலை வட்டத்தில் பெரிய பளியக்குடி.  இன்னய தேதியில் நாப்பத்திரண்டு குடும்பங்கள் வாழும் அந்தக் குடி ஆட்கள் இந்தக் குளிர்காலத்தில் நிகழ்ந்த முதல்பெரும் வேட்டையை முந்தையப் பின்னிரவில் தெரிந்து கொண்டதிலிருந்து கலக்கத்துடனிருந்தனர். அகமலை, நவமலை, நாகமலை, வெள்ளி மலை என தவளைநாடு முழுக்க இருக்கும் பளியக்குடிக்கு தகவல் அனுப்ப அதிகாலையிலேயே மூத்த பளியன் பூசணியின் பேரன் கட்டையன் கிளம்பி போய்விட்டான்.” (ப.30)

    கானகன் நாவல் இவ்வினத்தாரைப் பளியர் என்றே குறிப்பிடுகிறது என்றபோதும் நாவலின் முன்னுரையில் நாவலாசிரியர் இவ்வினத்தைப் பளிகர் என்னும் சொல்லால் குறிப்பிடுகிறார். ஆனாலும் பளியர் என்னும் உச்சரிப்பே சரியானதாகும். இந்தப் பளியர் என்னும் சொல் பழையர் என்னும் சொல்லிலிருந்து வந்ததாகவும் பழனியர் என்னும் சொல்லிலிருந்து வந்ததாகவும் வெவ்வேறு குறிப்புகள் கிடைக்கின்றன.

    இக்குடி வெளியுலகத் தொடர்புகளை அறுத்துக்கொண்டு அடர்ந்த மலைவனங்களில் வாழ்ந்து வந்ததற்கான ஆய்வாளர்களின் குறிப்புகள் உண்டு. ஆனாலும் கடந்த ஐம்பது வருடங்களுக்கும் மேலான அரசியல் மற்றும் சூழலியல் மாற்றங்கள் இவர்களை வெளியுலகத் தொடர்பு கொண்டவர்களாகவும் தம்முடைய வாழ்வாதார அடையாளங்களை இழந்துவிட்டவர்களாகவும் மாற்றியிருக்கிறது. அரசு மற்றும் தன்னார்வ நிறுவனங்கள் அவர்களுக்கென சில குடியிருப்புகளை அமைத்துத் தந்திருக்கின்றன. இந்தச் சூழலில் வெளியுலகோடும் ஒட்ட இயலாமல் தமது பூர்வ அடையாளத்தையும் காத்துக்கொள்ள முடியாமல் திண்டாடும் இனமாக இக்குடி தத்தளித்துக் கொண்டிருப்பதை ‘நாம் பளியர்’ என்னும் ஆவணப்படம் விளக்குகிறது. இத்தகைய வாழ்நிலை மற்றும் புவிச் சூழலியல் மாற்றம், அதன் பின்னணி அரசியல் ஆகியவற்றை இந்நாவல் தன் புனைவினூடாகப் பதிவு செய்துள்ளது.

    ஜே.இ.டிராசி பளியர்களுக்கு வேட்டை பற்றியும் பயிர்த்தொழில் பற்றியும் ஏதும் தெரியாது என்று பதிவு செய்கிறார். ஆனாலும் அவர்களுக்கு வேட்டைத் தொழில் தெரியாது என்பது நம்பும் தன்மையதாக இல்லை. ஆயிரமாயிரமாண்டுகளாய் வனத்திற்குள்ளேயே வாழ்ந்த இனத்துக்கு வேட்டையாடுதலைக் குறித்துத் தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. இவருடைய கருத்துக்கு மாறாக ஜெனரல் பார்டன் பளியர்கள் வேட்டை விலங்குகளைத் தேடிக் காண்பதில் திறமை படைத்தவர்கள் என்கிறார். மேலும் அவர் ஆங்கிலேய ஆட்சிக் காலத்திலேயே பளியர்கள் துப்பாக்கி வைத்திருந்ததாகப் பதிவு செய்கிறார். ஆனாலும் நாவலில் வேட்டைக்காரனான தங்கப்பனிடம் துப்பாக்கி இருப்பததாகவும் அவனுடன் வந்து சேர்வதற்கு முன்பு பளியக்குடியில் இருந்த காலம்வரை அவனுடைய மனைவியான செல்லாயியேகூட துப்பாக்கியை அறியாதவளாக வில் அம்பு வைத்துக்கொண்டு தான் வேட்டைக்குப் போனாள் என்றும் குறிப்பிடப்படுகிறது. மேலும் இந்நாவல் அத்யாவசியத் தேவை ஏற்பட்டாலன்றி வேறு எதற்காகவும் வேட்டையை மேற்கொள்ளாதவர்களாக, இயல்பில் வேட்டைக்கு எதிரானவர்களாக, வனக் காவலர்களாகப் பளியர்களைச் சித்திரிக்கிறது. வேட்டையாடுதல் குறித்த பளியர்களின் இத்தகைய நடவடிக்கைகளைப் புவனராஜன் என்பவரும் உறுதி செய்கிறார்.

    கொட்டைகள், வேர்கள், மலைச்சரிவுகளின்மேலே திரட்டும் பிசின் ஆகியவற்றைச் சேகரித்தல் பளியர்களின் தொழிலாக ஆய்வாளர்களின் குறிப்புகளில் காணக்கிடைக்கின்றன. தேனெடுத்தல் அவர்களின் பிரதானத் தொழிலாக இருக்கிறது. இத்தகைய குறிப்புகளை நாவலிலும் காணமுடிகிறது. அதேசமயம் எட்கர் தர்ஸ்டனின் நூலில் பளியர்கள் பயிர்த் தொழில் செய்வதில்லை என்பதான குறிப்பு உண்டு.  இதற்கு மாறாக விக்கிபீடியா தகவல் களஞ்சியம் மிகச் சமீப காலத்தில் பளியர்கள் மற்றவர்களைப் போலவே மாறி வனப்பொருட்களை விற்றும் விவசாயம் செய்தும், தேனீக்கள் வளர்த்தும் வாழ்ந்து வருவதான குறிப்பைத் தருகிறது. நாவலில் அவர்கள் தினை முதலான சிறு பயிர்களைப் பயிரிடுபவர்களாகச் சித்திரிக்கப்படுகின்றனர். மேலும் கஞ்சாத் தோட்டங்களுக்கு வேலைக்குப் போக ஆரம்பித்த காலச் சூழல் நாவலில் பதிவு செய்யப்படுகிறது. ஆய்வாளர்கள் பளியர்கள் மீன்பிடித் தொழிலிலும் ஈடுபட்டதாகக் குறிப்பிடுகின்றனர். நாவல் பளியக்குடியில் பெண்கள் மட்டும் மீன்பிடிப்பதான குறிப்பைப் பதிவுசெய்கிறது.

    பளியர்கள் காலநிலை மற்றும் சூழ்நிலைக்கேற்ப குடிசைகளிலும் பொடவுகளிலும் வாழ்வதாக நாவல் பதிவு செய்கிறது. மழை வரும்போது பொடவுக்கு ஓடுவதும் மழை இல்லாத நாட்களில்  குடிசையில் படுத்துக் கொள்வதுமாய் அவர்களின் இரவுகள் கழிந்து கொண்டிருந்தன.”(ப.226) என்னும் குறிப்பை நாவலில் காணமுடிகிறது. மேலும் பொடவுகளில் ஓவியம் வரையப்பட்டிருப்பதான குறிப்புகளையும் அது முன்வைக்கிறது. பொடவு என்பது தங்குவதற்கு ஏதுவான குகை போன்ற வளைந்த அமைப்பை உடைய பாறைப் பகுதி ஆகும்.

    இந்தப் பொடவு என்பதை ஆய்வாளர்கள் புடவு என்னும் சொல்லால் குறிக்கின்றனர். புவனராஜன் பளியர்களின் குடியிருப்பில் குகைப் பாறை ஓவியங்கள் இருப்பதை உறுதி செய்கிறார். இத்தகைய குகைப்பாறை ஓவியங்கள் உள்ள புடவு சிற்பக்கல் புடவு என்னும் பெயரால் அழைக்கப்படுவதாக அவர் குறிப்பிடுகிறார்.

    பளியர்கள் தினை மாவு, தேன், வாழைப்பழம், கிழங்கு, கஞ்சி முதலானவற்றை உணவாக உட்கொள்வதாக நாவல் பதிவுசெய்கிறது. அதிலும் குறிப்பாகத் தேன் உணவு அவர்களுக்கு விருப்பமான ஒன்று என்னும் குறிப்பு நாவலில் உண்டு. காட்டு வள்ளிக்கிழங்கு, இலை, தேன் முதலானவற்றைப் பளியர்கள் உணவாக உட்கொள்வதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். தேன் பளியர்களின் பெருவிருப்பிற்குரிய உணவு என்பதையும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். …….. ”மரப்பொந்து ஒன்றில் தேன் கூட்டினைக் காண நேர்ந்தால் அது இவர்களுக்குச் சிறந்த சுவை விருந்தாகும். புகையூட்டித் தேனீக்களை ஓட்டிய உடனே அவர்கள் வெறி கொண்டவர்களாகத் தேன் கூட்டினைப் பறித்து அவ்விடத்திலேயே மெழுகு முதலியவற்றோடு கூட விழுங்கத் தொடங்குவர்.”(ப.468) என்று குறிப்பிடுகிறார். மேலும் இறைச்சியைப் பொருத்தவரை மிளா, மான் ஆகியனவற்றைப் பளியர்கள் புசிப்பதை நாவல் பதிவு செய்கிறது. பளியர்கள் மாட்டுக் கறியை உண்பதில்லை என்னும் குறிப்பை ஆய்வாளர்களின் தரவுகளின்மூலம் அறியமுடிகிறது. பளியக்குடி பெண்ணான செல்லாயியைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டதுபோலவே தங்கப்பன் சேர்த்துக் கொண்ட இன்னொரு மனைவியான சகாயமேரி மாட்டுக் கறி உண்பதான குறிப்பு நாவலில் உண்டு என்றபோதும் பளியர்கள் மாட்டுக்கறி உண்ணுதல் அல்லது உண்ணாமை குறித்த தெளிவான குறிப்பேதும் நாவலில் இல்லை.

    ஜெ.இ.டிராசி பளியர்கள் வீட்டு விலங்குகளை வளர்ப்பதில்லை என்னும் குறிப்பைத் தருகிறார். இதற்கு மாறாக, ஜி.எஃப்.டிபென்ஹ என்னும் ஆய்வறிஞர் ஓரிரு தெரு நாய்களைத் தவிர வேறு விலங்குகள் எதையும் பளியர்கள் வளர்ப்பதில்லை என்பதாகப் பதிவு செய்கிறார். இதற்கு மாறாகக் கானகன் நாவல் பளியக்குடி மக்கள் நாய், ஆடு முதலான வீட்டு விலங்குகளை வளர்ப்பதான செய்தியைப் பதிவு செய்கிறது.

    பளியர்களின் முருக வழிபாடு, கறுப்புசாமி வழிபாடு முதலான ஆண் தெய்வ வழிபாடுகளை ஆய்வாளர்கள் பதிவு செய்கின்றனர். இவை பற்றி நாவலில் குறிப்புகள் ஏதுமில்லை. இடத்திற்கு இடம் இத்தகைய வழிபாடுகள் மாறும் தன்மையனவாய் இருப்பது இதற்கான காரணமாயிருக்கிறது எனத் துணியலாம். அதேசமயம் புவனராஜன் பளிச்சியம்மன் என்னும் பெண் தெய்வ வழிபாடும் முன்னோர் வழிபாடும் பளியர்களிடம் இருப்பதைப் பதிவு செய்கிறார். மேலுமவர் சித்திரை மாதத்தில் நடக்கும் பளிச்சியம்மன் திருவிழா பற்றியும் பதிவு செய்கிறார். இத்தகைய பளிச்சியம்மன் வழிபாடு மற்றும் திருவிழா பற்றி நாவல் பின்வருமாறு பதிவு செய்கிறது:

    “தவளை நாட்டுப் பளியக் குடியின் கட்டுப்பாட்டிலிருக்கும் முப்பது பளியக்குடிக்கும் குலசாமி கோயில் கம்பத்திற்கு மேலாகக் காட்டுக்குள்ளிருக்கிறது, பளிச்சியின் வீடு. கண்ணகியை வணங்க வரும் அத்தனை பேரும் பளிச்சியைத் தாண்டித்தான் போக வேண்டும். எங்கும் ஆதரவன்றி திக்கற்றுப் போனவளை வனமகள் பளிச்சி அரவணைத்துக் கொண்டாளென பளியர்களின் கதைகள் சொல்கின்றன. கண்ணகி அவளுக்குத் தத்துப் பிள்ளை. சித்திரை மாதத்தில் பளிச்சிக்கும் வழிபாடு நடக்கும். கொலசாமியைக் கும்பிடக் கூடும்போதுதான் பெரும்பாலும் அவர்கள் சமூகத்து முக்கிய சமாசாரங்கள் குறித்து முடிவெடுப்பார்கள்.”

    இதன்மூலம் பளிச்சியம்மன் திருவிழா பளியக்குடியின் பண்பாட்டுக் கூறாக மட்டுமின்றி பல்வேறு இடங்களில் வாழும் பளியக் குடிகளின் சமூக உறவை நீட்டித்துக் கொள்வதற்கான கண்ணியாகவும் விளங்குவதை நாவல் பதிவுசெய்கிறது. இதுவன்றி, பளியர்களின் முன்னோர் வழிபாடு குறித்தும் நாவல் பதிவு செய்வதாயுள்ளது.

    மறைத்திரு எஃப். டஹ்மன் அவர்கள் பளியர்களின் சேவல் பலியிடும் சடங்கு குறித்துக் கூறுகிறார். அத்தகைய சடங்கு நாவலில் பதிவு செய்யப்படுகிறது. அதனை, டஹ்மன் கூறுவது போலவே அறிவாளால் வெட்டி நிகழ்த்தப்படுவதாக இல்லையென்றாலும் பளிச்சியேறிய வாசி அதன் குரல்வளையைக் கடித்து பலியை நிகழ்த்துவதாக நாவல் பதிவு செய்கிறது. மறைத்திரு எஃப். டஹ்மனின் கருத்தை ஒப்புநோக்கும்போது இந்நாவல் பளியர்களின் சேவல் பலியிடும் சடங்கை நேர்மையாகப் பதிவு செய்யும் அதேநேரம் சேவலின் குரல்வளையைக் கடிப்பதான நிகழ்வு பளியர்களின் நடைமுறையாக அன்றி நாவலின் சுவாரஸ்யம் கருதி இணைக்கப்பட்ட ஒன்றாக இருக்கலாம் எனக் கருத இடமுண்டு. பளியர்கள் பில்லி, சூன்யம், மாந்திரீகம் ஆகியவற்றில் தேர்ந்தவர்கள் என்பதாகச் சுற்றியுள்ள குடிகள் நம்புவதாக ஆய்வாளர்கள் பதிவு செய்கின்றனர். அதுபற்றிய குறிப்புகள் ஏதும் நாவலில் இல்லையெனினும் பளியர்களின் குறி சொல்லும் வழக்காறு பற்றி இது பதிவு செய்கிறது. பளியர்கள் தனித்துவமான மூலிகை மருத்துவத்தைக் கைக்கொண்டிருப்பதை ஆய்வாளர்கள் பதிவு செய்கின்றனர். நாவலுக்குள் வனமிருகமொன்று அடித்துக் காயப்படுத்திய வேட்டையாடியைப் பளியர் இனத் தலைவர் மூலிகைச் சாறு போட்டு வைத்தியம் பார்ப்பதான குறிப்பு காணப்படுகிறதேயன்றி மூலிகை மருத்துவம் குறித்து தெளிவான விவரணைகள் ஏதுமில்லை. அம்மூலிகை பளிச்சி மரத்தின் இலை என்பதாகச் சொல்லி இந்நாவல் அந்த வைத்திய நிகழ்வைக் கடந்துவிடுகிறது.

    வனத்திலுள்ள புலி, யானை முதலான விலங்குகள் பளியர்கள் செல்லும் பாதையிலேயே வந்தாலும் கூட அவர்களை ஒன்றும் செய்வதில்லை என்பதான குறிப்பு நாவலில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. புவனராஜன் தன் கட்டுரையில், நூற்றுக்கணக்கான ஏக்கரில் தாண்டிக்குடி மலையில் வசிக்கும் வேறு குடிமக்கள் செய்துவரும் வெள்ளாமைகள் விலங்குகளால் அழிவைச் சந்திக்கும். அதற்காக, தாண்டிக்குடி மக்கள் தனித்த திறன்மிக்க பளியர்களை அழைத்து காவலிற்கு நியமிக்கும்போது எந்த விலங்கினாலும் வெள்ளாமைச் சேதம் ஏற்படுவதில்லை என்பதாகப் பதிவு செய்யப்படும் செய்தி இவ்விடத்தில் ஒப்புநோக்கத்தக்கது.

    பளியக்குடியினர் எதிர்ப்பு குணம் குறைந்த இனமாக அடிமையாக இருக்கும் மனோபாவம் கொண்ட இனமாகக் காலம் காலமாக இருந்துவந்ததை நாவல் பதிவு செய்கிறது. ஆய்வாளர்களும் பளியர்கள் பிற இனத்தாருக்கு அடிமையாகவே இருந்து பழகிப் போனவர்கள் என்பதைப் பதிவு செய்கின்றனர். பளியர்களின் திருமணம் பெரிய அளவிலான திருமணச் சடங்குகள் ஏதுமின்றி உறவினர்கள் அனைவரையும் விருந்துக்கு அழைத்து மணமக்கள் இணையப் போவதைத் தெரிவிக்கும் எளிய நிகழ்வாக நிகழக்கூடியது. வாசியின் திருமண முன்னேற்பாடுகள் குறித்த பகுதியில் இத்தகைய பளியர் திருமண நிகழ்வின் எளிய வழக்கை நாவலாசிரியர் பதிவு செய்கிறார்.

    பளியக்குடிப் பெண்கள் பிற இரண்டாம் மனிதரை உடன் சேர்க்காமல் தம்முடைய பிரசவத்தைத் தாமே பார்த்துக் கொள்வதான வழக்கை நாவல் பதிவு செய்கிறது. மேலும் பிள்ளை பிறப்பதற்கு மூன்று நாளும் பிள்ளை பிறந்ததற்குப் பிறகு மூன்று நாளும் பளியக் குடிப் பெண்கள் தம்முடைய உடலை இரண்டாம் மனிதர் தொட அனுமதிப்பதில்லை என்பதாகவும் நாவலுக்குள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதுகுறித்து ஆய்வாளர்களின் தரவுகளில் ஏதும் குறிப்புகளில்லை. அதேசமயம் பளியக்குடி பெண்கள் பிரசவத்திற்கென எந்த மருத்துவமனைக்கும் செல்வதில்லை என்பதான குறிப்பை நாம் பளியர் என்னும் ஆவணப்படத்தின்மூலம் அறியமுடிகிறது.

    நாவலில் வேட்டையாடியான தங்கப்பனின் மூன்று மனைவிகள் குறித்து விலாவாரியான குறிப்புகள் தரப்பட்டுள்ளபோதும் பளியர் தலைவனின் மனைவி பற்றித் தெளிவான குறிப்புகளேதுமில்லை. அதேசமயம் ஆய்வாளர்கள் பளியர் இனத்தில் தலைவர் மட்டும் இரண்டு மனைவியரைத் துணையாகக் கொள்ளும் வழக்காறு உண்டு என்பதைப் பதிவுசெய்கின்றனர். இதுவன்றி, இரவு நேரங்களில் பளியர் குடியில் விலங்குகளிடமிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டி நெருப்பு மூட்டி இரவு முழுக்க அது அணையாமல் ஒருவர் மாற்றி ஒருவராக அதைக் கவனித்துக்கொள்ளும் வழக்காறும் உண்டு என்பதையும் ஆய்வாளர்களின் தரவுகளிலிருந்து அறியமுடிகிறது. இதுவும் நாவலில் காணக் கிடைக்கவில்லை.

    இவ்விடத்தில் கவனிக்க வேண்டியது ஒன்றுண்டு. இவ்வாய்வின் துணைமை ஆதாரமாக அமைந்த தர்ஸ்டனின் தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் நூல் ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் தொகுக்கப்பட்டது. அதற்கு முந்தைய ஆண்டுகளில் ஆய்வு செய்த ஆய்வறிஞர்களின் கருத்துக்களைத் தொகுப்பதாக அது அமைந்துள்ளது. அவற்றுக்கு நேர்மாறாக, புவனராஜனின் கட்டுரையோ சென்ற ஆண்டு பதிவிடப்பட்டதாக இருக்கிறது. மேத்யூ மேக்லெனின் நாம் பளியர் ஆவணப்படமேகூட 2009 ஆம் ஆண்டு ஆவணப்படுத்தப்பட்டதாகத்தான் இருக்கிறது. அதை விடவும் முக்கியமாக நாவலாசிரியர் பளியர்கள் வாழும் களத்திற்குச் சென்றது 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு. ஆனால் இந்நாவலின் கதை நிகழும் காலம் 1980களின் முற்பகுதி. இத்தகைய காலம்சார் கூறுகளைக் கருத்தில் கொண்டுதான் நாவலில் சித்திரிக்கப்படும் செய்திகளின் தன்மையை நம்மால் உணர முடியும்.

    ஒரு குறிப்பிட்ட இனத்தின் வழக்காறுகளைப் பதிவுசெய்ய முற்படும் நாவல் அவ்வினத்தின் எல்லா வழக்காறுகளையும் ஒன்று விடாமல் பதிவு செய்ய வேண்டுமென எதிர்பார்ப்பது சாத்தியத்திற்கு அப்பாற்பட்ட ஒன்று. ஒரு நாவல் தன்னளவில் பேச எடுத்துக்கொண்ட வழக்காறுகளை நேர்மையாகப் பதிவு செய்திருக்கிறதா என்பது இவ்விடத்தில் நமக்கு முக்கியமாகிறது. அதன்படி, பெரும்பகுதி நேர்மையாகவே கானகன் நாவலாசிரியர் பளியக் குடியின் வழக்காறுகளைப் பதிவு செய்துள்ளதை அறிய முடிகிறது. மேற்குறித்த கருத்துக்களைக் கவனத்தில் கொண்டு நோக்கினோமானால் கானகன் நாவல் ஓர் இனவரைவியல் நாவலாகக் கருதத்தக்க தகுதியை உடையது என்னும் முடிவுக்கு வரலாம்.

    *****

    கட்டுரையாளர்
    முனைவர் பட்ட ஆய்வாளர்
    சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலம்
    புதுவைப் பல்கலைக்கழகம்

    Share
  • தீராத விளையாட்டுப் பிள்ளை

    நிலவளம் கு.கதிரவன்

    முன்னுரை :-

    இன்றைய தொழில்நுட்ப உலகத்தில் நமது தினசரி வாழ்க்கைமுறையானது எந்திர நுட்பவியலை அடிப்படையாகக் கொண்டே படிப்படியாக மாறிப்போனது. காலை எழுந்தது முதல் இரவு உறக்கத்திற்கு செல்லும்வரை நமது வேலையின் சரிபாதிக்கும் மேலான அளவினை திறன் கருவிகளைக் கொண்டும், எந்திரங்களை துணையாகக் கொண்டும் கட்டமைத்துக் கொண்டோம். கணிப்பொறி தொடங்கி திறன் பேசிகள் வரை இன்று சிறுவர்கள் முதற்கொண்டு பதின்ம வயதினரைத் தொடர்ந்து முதியோர் வரையில் பயன்படுத்துவது சர்வ சாதாரணமாகிவிட்டது. அதிலும் திறன்பேசிகளுக்கு அனைவரும் அடிமையாகவே ஆகிவிட்டனர். சிறுவர்களுக்கு விளையாட்டு என்பதே அருகிவிட்டது. சரி. இவையெல்லாம் காலத்தின் மாற்றங்கள். அதற்குத் தகுந்தாற்போல் நாம் நம்மையும், நம்முடைய குழந்தைகளையும் பயனுள்ள வழியில் எவ்வாறு மாற்றிக் கொள்வது என்பதைப் பற்றி விவாதிக்கிறது இக் கட்டுரை.

    aHR0cDovL3d3dy5saXZlc2NpZW5jZS5jb20vaW1hZ2VzL2kvMDAwLzA5Ny8zODQvb3JpZ2luYWwvcm9ib3QtaXBhZC5qcGc=

    தீராத விளையாட்டுப் பிள்ளை :-

    நான் வீட்டில் ஓய்வாக புத்தகம் படித்துக் கொண்டிருக்கும்போது, ”தீராத விளையாட்டுப் பிள்ளை – கண்ணன், தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை” என்ற பாரதியின் பாடல் வரியைக் கேட்டு எட்டிப் பார்த்தால், பக்கத்து வீட்டு நண்பர் வீட்டிற்குள் வந்து கொண்டிருந்தார். என்னப்பா, ஒரே உற்சாகம் போல? என்று கேட்டேன். ஏம்பா, என்னோட வயித்தெரிச்சல கேட்கற? நாம படிக்கிற காலத்துல நம்ம அப்பா அம்மாக்கள் எல்லாம் நேரங்காலம் தெரியாம விளையாடற நம்மள கூப்பிட, விளையாடுற இடத்துக்கே வந்துடுவாங்க. இந்தக் காலத்து பசங்கள வெளியில போயி விளையாடுங்கடானு சொன்னாக் கூட போவேனானு இருக்கானுங்க. எப்பவும் போனும் கையுமாவே இருக்கானுங்கனு” சளித்துக் கொண்டார்.

    எந்த எதிர்மறை நிகழ்வையும் நேர்மறையாக மாற்றிக் கொள்வது நம்மோட கையிலதான் இருக்கு. திறன் பேசியை சதாசர்வ நேரமும் நோண்டிக்கிட்டு இருக்கான்னா, அதைக் கொண்டே பயனுள்ள விளையாட்டுக்களை விளையாட மடை மாற்றம் செய்யலாம் என்றேன். என்னப்பா சொல்ற? என்று வியந்த நண்பருக்கு விளக்கினேன்.

    ரோபோ கருவி கலப் பெட்டி( Robot Kits ):-

    நாம் அனைவரும் இந்த 21 ம் நுற்றாண்டில் நம்மை முன்னேற்றிக் கொள்ள தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வருகிறோம். படிக்கின்ற நமது பிள்ளைகளும் அத்தகைய தொழில் நுட்பத்தை பயன்படுத்தியே கல்வி கற்கின்றனர். விளையாடுகின்றனர். ஆனால் இன்றைய பெற்றோர்கள் நமது பிள்ளைகள் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதோடு அத்தகைய தொழில் நுட்பத்தை எவ்வாறு உருவாக்குவது, வளர்த்தெடுப்பது மற்றும் ஒரு ரோபோ செய்வதற்கு இணையாகவோ அல்லது அதைவிட ஒருபடி மேலே சென்று அந்த பணியை செய்ய வேண்டும் என நினைக்க வேண்டும். ரோபோக்கள் வந்த பின்னர் நமது வேலைகள் சுருங்கிவிட்டது. நமக்கு இணையாகவோ அல்லது அதற்கு மேலாகவோ ஒரு ரோபோட் செய்துவிடுகிறது.

    பெரிய பெரிய ரோபோக்கள் உருவாக்குவதற்கு உயர்படிப்பு படிப்பதற்கு முன்னரே இன்றைய சிறுவர்கள் முதல் பதின்ம வயதுடைய இளைஞர்களுக்கு திறன் பேசியைக் கொண்டே ரோபோக்களை உருவாக்கி, விளையாட ரோபோ கருவி கலப் பெட்டி ( Robot Kits ) வயதுக்கேற்றவர்களுக்கு உரிய விலையில் சந்தைக்கு வந்துவிட்டது.

    சோதனை மற்றும் ஆராய்ச்சியின் அடிப்படையில் பல்வேறு வயதினருக்கு பல்வேறு விலையில், திறன் நிலைக்கு ஏற்றவாறு ரோபோட் கருவிகளை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

    சில ரோபோ கிட்கள் மழலையர் பள்ளிக்கூட அளவில் போதுமானவை என்றாலும் முக்கியமாக பதின்ம வயதினரே இதற்கு இலக்கு. சந்தைக்கு வந்துள்ள ரோபோ கிட்கள் தடுப்பு அடிப்படையிலான நிரலாக்க மொழிகளை ( Block based programming language ) பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகை மொழியானது குழந்தைகளின் செயல்பாடுகளின் அடிப்படையில் கருத்துக்களை கற்றக் கொள்ள உதவுகிறது. வயதுக்கேற்ற நிலையில் குறியீட்டு மொழிகள் பயன்படுத்தப்படுவது இதற்கு அடிப்படையாகிறது.

    ஐந்து வயது முதல் பத்து வயதிலான குழந்தைகளுக்கு என தனியாக ரோபோட் கிட்கள் விற்பனை செய்யப்படுகிறது. பூனை வடிவ ரோபோட், கால்பந்து ஆடும் ரோபோட், பியானோ வாசிக்கும் ரோபோட் என அந்த வயதுக்கு ஒத்த நிலையில் தேர்ந்தெடுத்து கருவிகளை கட்டமைப்பு செய்து ரோபோக்களை உருவாக்கி, அதை இணைய இயங்குதள அமைப்புடன்( IOS) திறன் பேசி( Smart Phone ) வழியாகவோ அல்லது டேப்லெட்கள்( Tablet ) வழியாகவோ இயக்கும் விதமாக வடிவமைத்துக் கொள்ளலாம். குழந்தைகளே ரோபோ உதிரி பாகங்களைக் கொண்டு குறிப்பிட்ட ரோபோட்களை உருவாக்கி பயன்படுத்தும்போது அவர்களின் சிந்தனைத் திறன், படைப்பூக்கம் வளர உதவுகிறது.

    உதாரணமாக பத்து வயதுக்கு மேற்பட்டோருக்கு 291 வகையான பாகங்கள் கொண்ட ரோபோட் கிட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதில் சிலந்தி வடிவிலான ரோபோட் பாகங்கள் தனித் தனியாக உள்ளது. உடல் பாகங்கள், 10 கால்கள் என அனைத்தையும் வழிமுறையோடு இணைத்து இதை உருவாக்கலாம். இதனோடு அகச்சிவப்பு சென்சார்கள்( Infrared Sensors ), தொடு திரை, ஸ்பீக்கர், போன்றவற்றை இணைத்துக் கொள்ளலாம். இந்த சிலந்தியிடம் சுடுவதற்கு உரிய பொம்மை துப்பாக்கியை இணைத்து நாம் உறங்கும் அறையில் உலாவ விட்டால் எதிர்ப்படும் தேவையற்ற வஸ்துக்களை சுடுகிறது.

    விளையாட்டு ரோபோட் கிட்கள் தவிர, கல்வி சம்பந்தமான ரோபோக்கள், இயற்பியல் மற்றும் உளவியல் ரீதியிலான கிட்களும் நமக்கு எளிதில் பல்வேறு விலையில் கிடைக்கிறது.

    இத்தகைய ரோபோட் கிட்களை மைக்ரோ சாஃப்ட், அமேஸான், ஐபிஎம் போன்ற நிறுவனங்கள் தயாரித்து குழந்தைகளின் அறிவியல் திறன் மேம்பட விற்பனை செய்கிறது.

    தீராத விளையாட்டுப் பிள்ளை என்ற பாடலில் கண்ணனின் பல்வேறு குறும்புகளைக் கூறும் பாரதியார், தொடர்ந்து வரும் வரியில், ”புல்லாங்குழல் கொண்டு வருவான்-அமுது பொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்” என்றும் கண்ணனின் திறமையை சிலாகித்துக் கூறியுள்ளார் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

    முடிவுரை :-

    குழந்தைகள் என்றால் குறும்புகள் இருக்கத்தான் செய்யும். இன்றைய டிஜிட்டல் உலகத்தில் அனைத்துக் கருவிகளையும் கையாளும் திறனையும் இளைஞர்கள் பெற்றுள்ளார்கள். அறிவியல் முன்னேற்றத்தின் வழியாக கிடைக்கும் வசதிகளை நாம்தான் நன்மைக்கான தொடர்பில் பயன்படுத்த நமது குழந்தைகளை மாற்றம் செய்ய வேண்டும். அந்த வகையில் சிறு வயதிலேயே விளையாடுவதற்கு பொம்மைகள் வாங்கிக்கொடுப்பது போன்று, இது போன்ற சிந்தனைத் திறன் வளர்க்கும் கருவிப் பெட்டிகளையும் வாங்கிக் கொடுத்து சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் படைப்பூக்கத்தை வளர்த்தெடுக்க ஒவ்வொருவரும் முன் வர வேண்டும்.

    Share
  • தூக்கும் பாவும்: சிறப்பும் பொதுவும்

    – முனைவர் ம.பிரபாகரன்

    யாப்பிலக்கண வரலாற்றில் முதன்முதலில் யாப்பருங்கல விருத்தியுரை, சங்கயாப்புடையார்,  செப்பலோசை ஏந்திசைச் செப்பல், தூங்கிசைச் செப்பல், ஒழுகிசைச் செப்பல் என்று மூன்று வகைப்படும் என்று கூறுவதாகக்  கூறுகிறது.  இது குறித்த சங்க யாப்பு சூத்திரங்களாவது:
                       “வெண்சீர் வெண்டளை யான்வரும் யாப்பை
                          ஏந்திசைச் செப்பல் என்மனார் புலவர் 

                           இயற்சீர் வெண்டளை யான்வரும் யாப்பைத்
                          தூங்கிசைச் செப்பல் என்மனார் புலவர்     

                         வெண்சீர் ஒன்றலும் இயற்சீர் விகற்பமும்
                         ஒன்றிய பாட்டே ஒழுகிசைச் செப்பல்

     என்றார் சங்க யாப்புடையார். (பக். 227, யாப்பருங்கலம் விருத்தியுரையுடன், இரா.இளங்குமரன் பதிப்பு, கழகம், சென்னை: 1976)  இவ்விடத்தில்  ஓசை தொடர்பாகச் சில செய்திகள் விவாதிக்கப்படவேண்டியுள்ளது. இவ்விவாதமே இக்கட்டுரையின் பொருளாகிறது.  ஏந்திசைச் செப்பல் முதலான ஓசைகள் தளை அடிப்படையில் அமைந்தவை. இவ்வோசை குறித்த செய்திகளை யாப்பருங்கலம் தளை ஓத்தில் அமைக்காமல் செய்யுளியலில் எடுத்துக் கூறியுள்ளது. இதற்கு உரைவரைந்த யாப்பருங்கல விருத்தியுரைகாரரும் இந்த ஏந்திசை முதலான ஓசைகளைத் தளை ஓத்தில் சிறிதும்  குறிப்பிடாமல் செய்யுளியலில் வைத்தே விளக்குகிறார்.  எழுத்தோத்தில் உறுப்புக்களைத் தொகுத்துக் கூறும்போது அமிதசாகரர், 

          ”எழுத்தசை சீர்தளை அடிதொடை தூக்கோடு
           இழுக்கா நடைய தியாப்பென மொழிப (சூ.1)   என்று கூறுவார்.  இச்சூத்திரத்தில் கூறியவற்றுள்ளுள் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகியவற்றிற்கு முறையே எழுத்தோத்து, அசையோத்து, தளையோத்து, அடியோத்து, தொடையோத்து என்று தனித்தனி ஓத்து அமைக்கும் அமுதசாகரர் ஏன் தூக்கு என்னும் உறுப்பிற்கு தூக்கோத்து என்று தனி ஓத்து அமைக்கவில்லை என்பது இத்தொடர்பில் எழும் மற்றொரு வினாவாகும். தளையைக் கூறும் இடத்திலேயே ஓசையைக் கூறுவது பொருத்தமானதாகும். தளையோத்தில் ஓசையை விளக்காததற்குக் காரணம் என்ன? என்ற கேள்வி எழும்பினால்   தூக்கு என்ற ஓர் உறுப்புக் கூறியுள்ளதால் தூக்கோத்தில் ஓசையை விளக்குவார் என்று சமாதானம் கூறிக்கொள்ளலாம். ஆனால் தூக்கோத்து என்று  ஒரு ஓத்தே நூலில் இல்லை. அப்படியெனில் அமிதசாகரர் ஏன் தூக்கை செய்யுள் உறுப்பில் ஒன்றாகக் கூறினார்?

    நிற்க. யாப்பருங்கலத்தை எழுதிய அமிதசாகரர்தான் யாப்பருங்கலக் காரிகையையும் எழுதியுள்ளார். அந்நூலில் அவர் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்ற ஆறு உறுப்புக்களையே கூறியுள்ளார். அமிதசாகரிடம் ஏன் இந்த மாற்றம் காணப்படுகிறது? யாப்பருங்கலத்தில் செய்யுள் உறுப்பு எழுத்து முதலாக தூக்கு ஈறாகக் மொத்தம் ஏழு உறுப்புக்களைக் கூறும் அமிதசாகரர் யாப்பருங்கலக்காரிகையில் ஏன் எழுத்து முதலாக தொடை ஈறாக ஆறு உறுப்புக்களையே கூறுகிறார்?  அவர் ஏன் இப்படி குழப்புகிறார்? உண்மையில் அவர் குழப்பவில்லை. யாப்பருங்கலத்தில் அவர் செய்யுள் உறுப்புக்களுள் தூக்கை ஒன்றாகக் கொண்டதற்குக் காரணம்  நற்றத்தனாரும், பல்காயனாரும் தூக்கை ஓர் உறுப்பாகக் கூறியுள்ளதனால் ஆகலாம். யாப்பருங்கல விருத்தியின் மூலம் அறிய வரும் இது குறித்த இவ்விருவரின் சூத்திரங்களாவன:

                 ”யாப்பெனப் படுவ தியாதென வினவின்
                   தூக்கும் தொடையும் அடியுமிம் மூன்றும்
           நோக்கிற் றென்ப நுணங்கி யோரே”   என்றார் நற்றத்தனார்.

                 ”இமிழ்கடல் வரைப்பின் எல்லையின் வழாஅத்
                   தமிழியல் வரைப்பில் தானினிது விளங்கி
                   யாப்பியல் தானே யாப்புற விரிப்பின்
                  எழுத்தசை சீர்தளை அடிதொடை தூக்கோடு
                  இழுக்கா மரபின் இவற்றொடு பிறவும்
                  ஒழுக்கல் வேண்டும் உணர்ந்திசி னோரே என்றார் பல்காயனார். (பக். 16, 17; மேலது)

     மேலே கண்ட  இருசூத்திரங்களில் தூக்கு ஓர் உறுப்பாகக் கொள்ளப்பட்டிருப்பினும் இரண்டாவது சூத்திரமான பல்காயனாரின் உறுப்புக் கோட்பாடே யாப்பருங்கலத்தோடு ஒத்து அமைகிறது. ஏனெனில் பல்காயனாரே எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, தூக்கு என்ற ஏழ் உறுப்புக்களையும் கூறுகிறார். இவ்வேழு உறுப்புக்களும்தான் யாப்பருங்கலத்திலும் கூறப்பெற்றுள்ளது. இத்தொடர்பில் பல்காயனாரை அமிதசாகரர் பின்பற்றினாரா? அல்லது அமிதசாகரைப் பல்காயனார் பின்பற்றினாரா?.  யாப்பருங்கலம் 10-ஆம்  நூற்றாண்டைச் சார்ந்தது; ஆனால் யாப்பருங்கல விருத்தியுரை 11-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சார்ந்தது  என்பதால் இவ்வுரையில் எடுத்துக்காட்டபெற்றுள்ள நற்றத்தனார், பல்காயனார் ஆகியோர் சூத்திரங்கள் யாப்பருங்கலத்திற்குப் பின்னரும் எழுதப்பட்டிருக்க வாய்ப்புண்டு. அல்லது யாப்பருங்கலத்திற்கு முன்னரும் எழுதப்பட்டிருக்கலாம்; அல்லது யாப்பருங்கலத்தாரும், பல்காயனாரும், நற்றத்தனாரும் சமகாலத்தைச் சேர்ந்தவராகவும் இருக்க வாய்ப்புண்டு. அங்ஙனம்  அமிதசாகரரும் பல்காயனாரும் சமகாலத்தவராக (நற்றத்தனார் குறித்து தனியே விவாதிக்கிறோம்) இருந்தவர்களாக நாம் கொண்டால் இவர்கள் இருவரும்  தூக்கையும் சேர்த்து யாப்பு  உறுப்புக்கள் ஏழு என்று வேறு ஏதேனும் பொதுமூலத்தைப் பின்பற்றிக்  கூறிருக்கலாம்.

    நற்றத்தனாரைப் பொறுத்தவரை தூக்கு, தொடை, அடி ஆகிய மூன்றிற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறார். இதில் தூக்கு என்ற உறுப்பை அவர் முதலில் வைத்துக் கூறுவதைக் கவனிக்க. தூக்கு என்னும் உறுப்பிற்கு முதன்மை கொடுத்து முதலில் நூல் இயற்றியவர் நற்றத்தனாரா? அல்லது அவர் வேறு ஏதேனும் ஒரு மூலநூலை பின்பற்றிக் கூறினாரா? யாப்பருங்கல விருத்தி தரும் சூத்திரங்களை மட்டும்  வைத்துக்கொண்டு நம்மால் இவற்றையெல்லாம் உறுதியாகக் கூற இயலாது. அமிதசாகரர் தூக்கை நற்றத்தனார், பல்காயனார் ஆகியோரைப் பின்பற்றித்தான் யாப்பு உறுப்பாகக் கூறினாரா? நற்றத்தனார் தூக்கை முதல் உறுப்பாகக் கூறியிருக்க ஏன் அமிதசாகரர் பல்காயத்தைப் போலத் தூக்கைக் கடைசி உறுப்பாகக் கொள்கிறார்? எங்கனமாயினும் தூக்கை ஓர் உறுப்பாக அமைத்துக் கொள்வதில் அமிதசாகருக்கு நற்றத்தம் ஓர் உந்துதலாக இருந்திருக்கலாம்; அல்லது யாப்பருங்கலம் நற்றத்ததிற்கு உந்துதலாக இருந்திருக்கலாம். ஆனால் தூக்கையும் சேர்த்து யாப்பு உறுப்புக்கள் ஏழு என்று கூறுவதில் யாப்பருங்கலம் பல்காயத்தையே பின்பற்றுகிறது அல்லது பல்காயம் யாப்பருங்கலத்தையே பின்பற்றுகிறது. ஆக இங்கு நமக்கு எழும் சிறிய குழப்பம் பல்காயம் முந்தையதா? யாப்பருங்கலம் முந்தையதா? (நற்றத்தம் முந்தையதா?) என்பதாகும். பல்காயம் முந்தையது என்று ஒத்துக்கொண்டு ஆய்ந்தால் நாம் யாப்பருங்கலத்திற்குப் பதிலாக பல்காயத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தூக்கு பற்றிய ஆராய்ச்சியை நடத்தலாமே? என்ற கேள்வி எழும். யாப்பருங்கலம்தான் முந்தையது  என்றால் யாப்பருங்கலத்தை அடிப்படையாகக் கொண்டு இத்தூக்கு குறித்த ஆராய்ச்சியை நடத்தலாம். ஏனென்றால் காலநோக்கில் தூக்கையும் சேர்த்து ஏழு உறுப்புகள் என்று கூறும் முதல் நூல் எது என்பதே முக்கியமானது. ஏனெனில் அம்முதல் நூலே இவ்வுறுப்புக் கோட்டை முதன்முதலில் உருவாக்கியிருக்கும். இது ஒரு பக்கம் இருக்க இக்கட்டுரை தூக்கு பற்றியதாக இருப்பதால் நற்றத்ததையும் நாம் பரிசீலிக்க வேண்டியுள்ளது. தூக்கைக் கடைசி உறுப்பாகச் சேர்த்து பல்காயமும், யாப்பருங்கலமும் கூறுகின்றன என்பது முக்கியமானததுதான். ஆனால் தூக்கை முதல் உறுப்பாகக் கூறும் நற்றத்தம் இவ்விரு நூல்களைவிட முதன்மை பெறுகிறது என்பதில்  ஐயமில்லை.  நற்றத்தம் யாப்பருங்கலத்திற்கு முன்னரோ அல்லது பின்னரோ அமைய வாய்ப்புண்டு என்பதை முன்னர் பார்த்தோம். எனினும் யாப்பருங்கலத் தூக்குக் கோட்பாட்டைக் கணிப்பதில் நற்றத்தம் துணைமைச் சான்றாகவே நமக்குப் பயன்படும். நாம்  தூக்கு பற்றிய இந்த ஆராய்ச்சியை யாப்பருங்கலத்தை அடிப்படையாகக் கொண்டே செய்கிறோம். ஏனெனில் பல்காயம் யாப்பருங்கலத்தை விட முந்தையது; யாப்பருங்கலம் அதைப் பின்பற்றியது என்ற ஒரு வாய்ப்பை (Possibility) நாம் ஏற்றுக்கொண்டு ஏன் பல்காயம் தூக்கை ஏழு உறுப்புக்களில் ஒன்றாகக் கூறிவிட்டு, அதை விளக்க தூக்கோத்து என்ற ஒன்று அமைக்காமல் செய்யுளியலில் வைத்து விளக்குகிறது? என்று ஆராய்ச்சி செய்ய முடியாது. ஏனெனில் பல்காயம் நமக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை. அது எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, தூக்கு என்ற ஏழு உறுப்புக்களைக்  கூறியுள்ளமை மட்டுமே நம்மால் அறிய முடிகிறது. அந்நூலில் யாப்பருங்கலத்தைப் போல எழுத்தோத்து, அசையோத்து, சீரோத்து, தளையோத்து, அடியோத்து முதலியவையும், இயல்களும் அமைந்திருந்ததா என்று அறிய முடியவில்லை. எனவே நாம் பல்காயத்தை அடிப்படையாக வைத்து இவ்வாராய்ச்சியை செய்ய இயலாது. பல்காயமும், யாப்பருங்கலமும் தூக்கை விளக்குவதில்  ஒரு பொது மூலத்தைப் பின்பற்றியுள்ளன என்ற வாய்ப்பை நாம் ஏற்றுக் கொண்டாலும் பல்காயத்திற்கு நாம் எழுப்பிய கேள்விகள் பெரும்பாலும் அந்தப் பொது மூலத்திற்கும் பொருந்துகிறது அதாவது  அந்தப் பொது மூலம் எது? அவற்றில் எத்தனை இயல்கள் அமைந்திருந்தன? என்பன  போன்ற பிரச்சனைகள் வரும். பல்காயத்திற்காவது சூத்திரங்கள் கிடைக்கின்றன. ஆனால் நாம் ஊகம் செய்த பொது மூலத்தைப் பற்றி எந்தத் தகவலும் தெரியவில்லை. எனவே நாம் தூக்குப் பற்றிய ஆராய்ச்சியை நமக்கு கிடைக்கும் யாப்பருங்கலத்தில் இருந்துதான் செய்ய வேண்டியிருக்கிறது; செய்ய முடிகிறது.   யாப்பருங்கலத்தை அடிப்படையாகக் கொண்டு நாம் இந்த ஆராய்ச்சியை செய்தாலும், தூக்குப் பற்றிய யாப்பருங்கலத்தின் சிந்தனை- பல்காயம் யாப்பருங்கலத்தை விட முந்தையது அல்லது இரண்டும் ஒரு பொது மூலத்தைப் பின்பற்றியுள்ளன என்ற வாய்ப்புக்களின் நோக்கில்-   பல்காயத்தின் சிந்தனையையோ அல்லது நாம் கருதிய  பொது மூலத்தின் சிந்தனையையோ  மீட்டுருவாக்கப் பயன்படும் என்று நாம் கருதுகிறோம்.

    யாப்பருங்கலமே தூக்கு பற்றிய இச்சிந்தனையை முதலில் கூறியது என்ற வாய்ப்பை நாம் ஏற்றுகொண்டாலும் தூக்கு குறித்த யாப்பருங்கல மரபின் நுட்பமான சிந்தனைகளை நாம் அறிந்து கொள்ளமுடியும். எனவே நாம் விரும்பினாலும் விரும்பாவிடிலும் யாப்பருங்கலத்தை அடிப்படையாகக் கொண்டே அதாவது யாப்பருங்கலத்தை முதல் நூலாகக் கொண்டே இவ்வாராய்ச்சியைச் செய்ய வேண்டியிருக்கிறது; செய்கிறோம்.

    யாப்பருங்கலத்தில்  ‘தூக்கை’ச் செய்யுள் உறுப்பாகக் கூறும் அமிதசாகரர்  அதை ஏன் செய்யுளியலில் விளக்குகிறார் என்பதை  யாப்பருங்கல விருத்தியுரைகாரர் எழுத்தோத்து உரையில் தரும், (இக்கட்டுரையில் முன்னர் கண்ட   ஆசிரியர்களான)   நற்றத்தனார், பல்காயனார் ஆகியோரின்   சூத்திரங்கள்  உணர்த்துகின்றன:

    தூக்கு எனினும் பாட்டு எனினும் ‘ பா ‘ எனினும் ஒக்கும்.

                      ”தூக்கு பாட்டும் பாவும் ஒன்றென
                        நோக்கிற் றென்ப நுணங்கி யோரே  என்றார் பல்காயனார் ஆகலானும்,

                     ” பாவென மொழியினும் தூக்கினது பெயரே   என்றார் நற்றத்தனார் ஆகலானும் எனக் கொள்க. (பக். 17,18; மேலது)

    இங்கு தூக்கு எனினும் பா எனினும் ஒக்கும் என்று விருத்தியுரைகாரர் பல்காயனார் மற்றும் நற்றத்தனார் ஆகியோரது சூத்திரங்களை எடுத்துக்காட்டி விளக்குவதைக் காண்க. எனவே அமிதசாகரர் தூக்கை ஒரு செய்யுளுறுப்பாக எடுத்துக்கூறியிருந்தாலும்  தூக்கு என்பது பாவே என்பதனால் தூக்கோத்து என்று ஒரு தனி இயல் அமைக்காமல் ‘ பா ‘வை விளக்கும் செய்யுளியலிலேயே தூக்கையும் அதாவது பாக்களுடைய ஓசையையும் விளக்குகிறார் என்று கொள்ள வேண்டும். இத்தொடர்பில் எழும் மற்றொரு கேள்வி  தூக்கைச் செய்யுளுறுப்பாக விளக்காமலேயே அதைச் செய்யுளியலில்  விளக்கியிருக்கலாமே? என்பதாகும்.  விளக்கியிருக்கலாம்.  ஆனால் செய்யுளில் ஓசை என்பது மிகவும் முக்கியமானதாகையால் அதன் முக்கியத்துவத்தைக் காட்ட முன்னோர்களைப் பின்பற்றி அமிதசாகரர் தூக்கைச் செய்யுள் உறுப்புகளுள் ஒன்றாகச் சுட்டிக்காட்டினார் எனலாம்.

    யாப்பருங்கலத்திற்குப் பிறகு யாப்பருங்கலக்காரிகையை எழுதும்போது செய்யுள் உறுப்புக்களில் ஒன்றாகச் சுட்டாததற்கு காரணம் என்ன? என்ற கேள்வியும் இத்துடன் எழும். அமிதசாகரர்  ஏற்கெனவே யாப்பருங்கலத்தில் தூக்கை ஓர் உறுப்பாகக் கூறிவிட்டதால் யாப்பருங்கலக்காரிகையில் அதனை மீட்டும் ஓர் உறுப்பாகக் கூறவேண்டிய அவசியம் இல்லை என்று கருதியிருக்க வேண்டும். அப்படியெனில் எழுத்து முதலான பிற உறுப்புக்களையும் அவர் யாப்பருங்கலக்காரிகையில் விளக்காமல் விட்டிருக்கலாமே என்று ஒருவர் கேட்கலாம். எழுத்து முதலான ஆறு உறுப்புக்களும் தனித்தனி உறுப்புக்கள்; ஓசை என்பது இவை அனைத்தும் சேர்வதால் உருவாவதாகும். அதாவது எழுத்து முதலானவை பகுதிகள் எனில் ஓசை என்பது முழுமையாகும். எனவேதான் அமிதசாகரர்  தூக்கு என்பதைப் பிற உறுப்புக்களைப் போல கொள்ளவில்லை. இதை அறிய அமிதசாகரின் தூக்கு பற்றிய சிந்தனையின் பரிணாம வளர்ச்சியை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

    யாப்பருங்கல முதற்சூத்திரத்தில், தூக்கு என்பது மற்ற உறுப்புக்களைப் போலாது ஓசையின் முழுமை நோக்கிய ஒன்றாக  இருப்பதால்  முக்கியத்துவம் உணர்த்தப்பட வேண்டும் என்று கருதிய அமிதசாகரர் தூக்கை ஓர் உறுப்பாக அறிவிக்கிறார்.  பாவே ஓசையாக இருப்பதால் தனி உறுப்பாக கூற வேண்டிய அவசியம் இல்லை  என்று அவர்  நினைத்திருந்தாலும் எல்லா பாக்களது ஓசையும் ஒரே ஓசை அன்று. எனவே பொதுவாகத் தூக்கைப் பா என்று கூறினாலும் அது வேறுபாட்டைத் தம்முள் அடக்கியதாகும். எனவே சிறப்புநிலையில் தூக்கு பாக்களுக்கு எவ்வளவு இன்றியமையாதது என்பதை அறிவுறுத்த தூக்கை முதலில் உறுப்பாகக் கூறுகிறார். இது அவரின் முதல்நிலை. அடுத்து,  தூக்கோத்து அமைத்தாலும் செய்யுளியலில் மீண்டும் அவற்றைக் கூறவேண்டிய நிலை ஏற்படும்; எனவே இது கூறியது கூறல் என்னும் குற்றத்தின் பாற்படும். எனவே தூக்கோத்தைத் தன் நூலில் ஒரு தனி இயலாக அமைப்பதைத் தவிர்க்கிறார். இது இரண்டாம் நிலை. மூன்றாவது யாப்பருங்கலக்காரிகையை எழுதும்போது யாப்பருங்கலத்தின் பயிற்றுமுறைக்கும்  யாப்பருங்கலக்காரிகையின் பயிற்றுமுறைக்கும் இடையேயுள்ள  வேற்றுமையினாலும் அதாவது   யாப்பருங்கலக் காரிகை தொன்மை யாப்புநூலில் பயிற்சி இல்லாதவர்களுக்குப் பயிற்சி ஏற்பட  எழுதப்பட்டமையால் அதில்  செய்யுள் உறுப்புக்களில் நுட்பமான  தூக்கை ஒன்றாகக் கூறவேண்டிய தேவையின்மையாலும், அவர்   தூக்கை ஓர் உறுப்பாகக் கூறாமல் விடுவது மூன்றாவது நிலை.  (யாப்பருங்கலம் யாருக்காக எழுதப்பட்டதோ அவர்களிருந்தும், யாப்பருங்கலக் காரிகை படித்த மாணவர்கள் வேறானவர்கள்  அதாவது யாப்பருங்கலம் யாப்பு தொடர்பான ஆராய்ச்சி மாணவர்களுக்கும், யாப்பருங்கலக்காரிகை யாப்பு தொடர்பான தொடக்கநிலை மாணவர்களுக்கும் எழுதப்பட்டிருக்க வேண்டும்). இதை நாம் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும்.  இத் தொடர்பில்  யாப்பருங்கலத்தில் விளக்கப்பட்டு யாப்பருங்கலக்காரிகையில் விளக்கப்பாடாத கூறுகள் எவை எவை என்பதும் யாப்பருங்கலத்தின் விளக்குமுறையும் யாப்பருங்கலக்காரிகையின் விளக்குமுறையும் எத்தன்மையன என்பதும்  ஒப்பிட்டு  விளக்கப்பட வேண்டியதாகவும் உள்ளது. இது வேறொரு கட்டுரைக்கான செய்தி ஆதலால் இதை இங்கு விரிவாகச் செய்ய முடியாது. எனினும் இங்கு   யாப்பருங்கலத்தையும், யாப்பருங்கலக்காரிகையையும்  ஒப்பிட்டு ஓர் உதாரணத்தை மட்டும்  சுட்டிக்காட்டமுடியும். அமிதசாகரர் யாப்பருங்கலக் காரிகையில்  முதற்காரிகையில்  அசைக்கு உறுப்பாகும் 13 எழுத்துக்களை மட்டும் சுட்டிக்காட்டிவிட்டு அடுத்து அசைகளின் வகைகளாகிய நேரசை, நிரையசை ஆகியவற்றை விளக்கச் சென்றுவிடுகிறார். ஆனால் அவர் யாப்பருங்கலத்தில் அப்படி அசைக்கு உறுப்பாகும் எழுத்துக்களின் எண்ணிக்கையை மட்டும் கூறிவிட்டு அசைகளை விளக்கச் சென்று விடாமல்  சில எழுத்துகளுக்குரிய சிறப்புவிதிகளையும் கூறுகிறார். இதை யாப்பருங்கலக்காரிகை, யாப்பருங்கலம் ஆகியவற்றின் எழுத்துக்கள் குறித்த காரிகையையும் சூத்திரங்களையும் எடுத்துக்காட்டுவதின் வழி தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்:

    யாப்பருங்கலக் காரிகை:

    குறினெடி லாவி குறுகிய மூவுயி ராய்தமெய்யே              மறுவறு மூவின மைதீ ருயிர்மெய் மதிமருட்டுஞ்           சிறுநுதற் பேரமர்க் கட்செய்ய வாயைய நுண்ணிடையாய்
    அறிஞ ருரைத்த வளபு மசைக்குறுப் பாவனவே (கா.4)

    இங்கு அசைக்கு உறுப்பாக மொத்தம் 13 எழுத்துக்கள் கூறப்பெற்றிருப்பதைக் காண்க. எழுத்துக்களின் விளக்கம்  பற்றிய சூத்திரம் யாப்பருங்கலக்காரிகையில்  இது ஒன்றே ஆகும்.

    யாப்பருங்கலம்:

                        உயிரே மெய்யே உயிர்மெய் யென்றா
                        குறிலே நெடிலே அளபெடை யென்றா
                        வன்மை மென்மை இடைமை யென்றா
                       சார்பில் தோன்றும் தன்மைய வென்றா
                       ஐஒள மகரக் குறுக்கம் என்றாங்கு
                       ஐம்மூ வெழுத்தும் ஆம்அசைக் குறுப்பே (சூத்.2)

    இங்கு அசைக்கு உறுப்பாக 15 எழுத்துக்கள் கூறப்பெற்றிருப்பதைக் காண்க. இச்சூத்திரம் யாப்பருங்கலக்காரிகையைப் போல அசைக்கு உறுப்பாக உள்ள எழுத்துக்களைத் தொகுத்துகூறும் சூத்திரம் ஆகும். இதற்குப் பிறகு  யாப்பருங்கலம்  சில எழுத்துக்களின் சிறப்பு விதிகளை மேலும் இரண்டு சூத்திரத்தில் கூறுகிறது:

                     தனிநிலை ஒற்றிவை தாமல  கிலவே
                     அளபெடை அல்லாக் காலை யான (சூத். 3)

                     தளைசீர் வண்ணம் தாம்கெட வரினே
                    குறுகிய இகரமும் குற்றிய லுகரமும்
                   அளபெடை ஆவியும் அலகியல் பிலவே (சூத்.4)

    இவ்விரு சூத்திரச் செய்திகளும் யாப்பருங்கலக் காரிகையில் இல்லாததை கண்டு கொள்ள முடிகிறது. இதற்கான காரணம் மேலே விளக்கப்பெற்றது.  நாம் மேலே காட்டியுள்ளமை போன்று  யாப்பருங்கலத்தில் வரும்  அனைத்து இயல்களையும் யாப்பருங்கலக் காரிகையில் உள்ள இயல்களோடு  ஒப்பிட்டுக் காண வேண்டியது முக்கிய தேவையாகும்.

    தூக்கு, பாதொல்காப்பியம், யாப்பருங்கல மரபு ஒப்பீடு:

     தொல்காப்பியத்தில் தூக்கு என்பதும் பா என்பதும் தனித்தனி உறுப்புக்களாகச் சுட்டபெற்றிருக்க, யாப்பருங்கலத்தில் பா என்பதை விடுத்து தூக்கை மட்டும் உறுப்பாக ஏன் அமிதசாகரர் கொண்டிருக்கிறார்? என்பதும் இத்தொடர்பில் முக்கியத்துவம் பெறும் வினாவாகும். தூக்கு குறித்தும் பா குறித்தும் தொல்காப்பியத்தில் என்ன கூறப்பெற்றுள்ளது என்பதை முதலில் அறிந்து கொள்வோம்:

                    அகவ லென்ப தாசிரிய யம்மே (செய். சூத். 79)
                    அஃதன் றென்ப வெண்பா யாப்பே  (80)
                  துள்ளலோசை கலியென மொழிப     (81)
                     தூங்க லோசை வஞ்சி யாகும்          (82)
                     மருட்பா வேனை யிருசா ரல்லது
                    தானிது வென்னுந் தன்மை யின்றே  (83)
                   அவ்வியல் பல்லது பாட்டாங்குக் கிளவார் (84)
                  தூக்கியல் வகையே யாங்கென மொழிப ( 85)

                மேற்கண்ட நூற்பாக்கள் தூக்கு பற்றிய தொல்காப்பிய நூற்பாக்கள். தொல்காப்பியம் தூக்கு என்பதற்கு எந்த விளக்கத்தையும் தரவில்லை. மேலேகண்ட வண்ணம் தூக்கு என்பதன் வகைகளையே தருகிறது. அதாவது ஆசிரியத்திற்கு அகவல் ஓசை; வெண்பாவிற்கு அகவல் அல்லாத ஓசை; கலிக்குத்துள்ளலோசை; வஞ்சிக்குத் தூங்கலோசை; மருட்பாவிற்கு ஆசிரியம், வெண்பா ஆகியவற்றின் கலப்பு ஓசையே யன்றி அதற்கென்று தனித்த ஓசை இல்லை; இதோடு கூட  இவ்வோசைகள் இல்லாமல் பாட்டினை யாரும் கூற மாட்டார்கள் என்ற ஒரு கூடுதல் குறிப்பினையும் (84) தொல்காப்பியம் தருகிறது. தூக்கு என்பதற்கு ஏன் தொல்காப்பியம் வரையறை தரவில்லை. அப்படித் தராமல் ஏன் தூக்கின் வகைகளை மட்டும் கூறிச் செல்கிறது? இது குறித்து,  பா என்பதற்கு தொல்காப்பியம் என்ன விளக்கம் தருகிறது என்பதைப் பார்த்துவிட்டு அவ்விளக்கத்தையும் உட்படுத்தி விவாதிப்போம்; பா குறித்து தொல்காப்பியம் என்ன கூறுகிறது?:

    தொல்காப்பியம்,

    ஆசிரியம் வஞ்சி வெண்பாக் கலியென
     நாலியற் றென்ப பாவகை விரியே (செய். 103)

    என்று நான்குவகைப் பாக்களின் விரியைக் கூறிவிட்டு,
    பாக்களின் பொருண்மை பற்றி அடுத்த சூத்திரத்தில்,

    அந்நிலை மருங்கின் னறமுத லாகிய                         மும்முதற் பொருட் முரிய வென்ப (104)

                        என்று கூறுகிறது. அடுத்த இரு சூத்திரங்களில் விரித்துக் கூறிய பாவகையை தொகுத்துக் கூறுகிறது:

                  பாவிரி மருங்கினைப் பண்புறத் தொகுப்பின்                        ஆசிரி யப்பா வெண்பா வென்றாங்கு                                        ஆயிரு பாவினு ளடங்கு மென்ப ” (105)                                  ஆசிரிய நடைத்தே வஞ்சி யேனை
                வெண்பா நடைத்தே கலியென  மொழிப ( 106)

    இதற்கடுத்தடுத்த  சூத்திரங்கள் பாக்களின் பொருண்மைகுறித்துப் பேசி செல்கின்றன. தூக்கிற்கு எழுப்பிய அதே வினாவை நாம் பாவிற்கும் எழுப்ப வேண்டியதிருக்கிறது: ஏன் தூக்கினைப் போல் தொல்காப்பியம் பாவிற்கும் விளக்கம் தராமல் பாவின் விரியையும், தொகையையும் தருகிறது. தொல்காப்பியர் தூக்கு என்பதற்கும் பா என்பதற்கும் இடையே என்ன வித்தியாசத்தைக் காட்டுகிறார்? தூக்கு என்பதையும் பா என்பதையும் ஏன் தனித்தனி உறுப்பாகக் காட்டினார்? ஏனெனில்  தொல்காப்பியர் செய்யுட்களில்  ஓசைகளின் வேறுபாட்டைத் அதாவது செய்யுளின் ஓசைகளைச் சிறப்புத்தன்மையில் குறிக்கத் தூக்கு என்பதையும் பொதுத் தன்மையில்  குறிக்கப் பா என்பதையும் பயன்படுத்துகிறார்.  அதாவது அகவல், அகவல் அல்லாதவை, துள்ளல், தூங்கல் ஆகிய ஓசையின் வெவ்வேறு வகைகளைத்  தனித்தனியே சுட்ட  தூக்கு என்ற உறுப்பைப் படைக்கிறார்; இதனையே நாம்  ”சிறப்பு நிலை” என்கிறோம். ஓசைகளை அகவல் முதலிய தனித்தன்மை கொண்டல்லாமல் அதாவது சிறப்புநிலையில் சுட்டாமல்  ஓசையின் வெவ்வேறு வகைகளின் மொத்தத்துவத்தைக் குறிக்க  ஆசிரியம், வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்ற பெயர்களைக் கையாள்கிறார்  . இதை நாம் ”பொதுநிலை” என்று கூறுகிறோம்.   தூக்கு ஓசையின் தனித்தன்மையை அறிவுறுத்த உருவாக்கப்பட்டுள்ளது என்பதையும், பா செய்யுளின் மொத்தத் தன்மையை அறிவுறுத்த படைக்கப்பட்டது என்பதையும்  பேராசிரியர் தரும் விளக்கங்கள் மூலம் இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. அவர் கூறுவதாவது:

     தூக்கு:

     அகவலோசைக்கண் தூக்குவருங்கால் இருசீர் முதலா எண்சீர்காறும் பரந்துபட்ட அகவலோசையை நாற்சீர்க்கண்ணே துணித்துக்கொள்ள, அஃது ஆசிரியத் தூக்காமென்றவாறு. இருசீரால் துணிப்ப ஆசிரிய வோசையாகாது; முச்சீரால் துணிப்பினும் ஆசிரியவோசையாம்; என்னை? ஈற்றயலடி முச்சீர்த்தாமெனவும் இடையும் வரையாரெனவும் கூறினமையின் அஃதேல் அடிவகையானே அறுதியுணர்த்துமாகலின் தூக்கு எவன் செய்யுமெனின் – அவ்வடியினையுந் தூக்கானன்றி உணர்த்தலாகாது; என்னை? இருசீர் முதலாகப் பலசீர் தொடர்ந்த வழித் தூக்கு அறுப்புக்கொண்டன்றி இத்துணைச்சீர்கொண்ட அடி இஃதென்பது அறியலாகாமையின். அல்லதூஉம், ஆசிரியத்துள் எண்சீர் தொடர்ந்தும் பாச்சென்றவழி அதற்கு வருமெனப்பட்ட முச்சீரடியும் ஐஞ்சீரடியுமாகாது நாற்சீரடி இரண்டென்று அறிதற்குக் கருவி தூக்கென்பது கொள்க. அல்லாக்கால் 

             உள்ளார் கொல்லோ தோழி முள்ளுடை
             யலங்குகுலை யிந்தின் சிலம்பிபொதி செங்காய்

    என்றவழி, ‘ உள்ளார்’, ‘ முள்ளுடை ‘ என்பன அடியெதுகையாக முச்சீரடியும் ஐஞ்சீரடியு மெனக்கொண்டு மயக்கமாமென்பது.

       நரந்த நாறுந் தன்கையாற்
       புலவுநாறு மென்றலை தைவரு மன்னே

        என்றவழி, எண்சீரான் இரண்டு நாற்சீரடி வந்தனவென்று கோடுமன்றே தூக்கின்றாயினென்பது (பக். 379, சி.கணேசய்யர் பதிப்பு, தொல்காப்பியம் செய்யுளியல் பேராசிரியர் உரை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை: 2007)

     இங்குப் பேராசிரியர் குறிப்பிடும் துணித்தல் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அடிகளைத் துணித்து நிறுத்துதல் என்பது பாக்களின் ஓசைக்கு மிகவும் இன்றியமையாதது. அடிகளைத் துணித்து நிறுத்துவதன் மூலமே குறிப்பிட்ட ஓசைகளைப் பெற முடியும் என்று பேராசிரியர் மேலே கண்ட பகுதியில் கூறுவது ஓசையின் சிறப்பு நிலையைக் குறிப்பதாகும். எண்சீர் தொடர்ந்து  அகவற்பா சென்ற வழித் தூக்கு என்ற உறுப்பு இல்லை என்றால் அங்கு ஆசிரிய ஓசையைப் பெற முடியாது.  அங்கு நான்கு சீரில் துணித்து அகவலோசையைப் பெற தூக்கு முக்கியம்.  அடிகளைத் துணித்தல் என்பதே தூக்கின் தனித்தன்மை அல்லது சிறப்புத்தன்மை அதனாலேயே தூக்கு தனி உறுப்பாகத் தொல்காப்பியராலும் நற்றத்தனாராலும், பல்காயனாராலும், யாப்பருங்கலத்தாராலும் கருதப்பட்டது. எனினும் பின்னால் நற்றத்தனாரும் பல்காயனாரும் தூக்கும் பாவும் என்ற ஒன்றே என்று முரண்படுவதையும் யாப்பருங்கல விருத்தி மூலம் அறிய முடிகிறது. அது ஏற்கெனவே சுட்டிக்காட்டப்பட்டது. 

    பா என்பதற்கான பேராசிரியர் விளக்கம்: 

    பாவென்பது, சேட்புலத்திருந்த காலத்தும் ஒருவன் எழுத்துஞ் சொல்லும் தெரியாமல் பாடமோதுங்கால் அவன் சொல்லுகின்ற செய்யுளை விகற்பித்து இன்ன செய்யுளென்று உணர்தற்கேதுவாகிய பரந்துபட்டுச் செல்வதோர் ஓசை. (பக்.205; மேலது)

     இவ்விளக்கம் நமக்கு உணர்த்துவது:  சேட்புலத்தில் இருந்தில் இருந்து   ஒருவர் பாடம் ஓதும்போது  அவர் பாடம் ஓதுவது   இன்னச் செய்யுள் என்பதை ஓசையின் மொத்ததுவத்தை வைத்துப்   அதைக் கேட்பவர் புரிந்து கொள்கிறார் . இவ்விளக்கத்தில்   பேராசிரியர் ஓசையின் மொத்தத்துவமாகிய ‘ பா’ வைப் பரந்து பட்டுச் செல்வதோர் ஓசை என்று குறிக்கிறார். இது நாம் ஏற்கெனவே குறிப்பிட்ட ஓசைக்குரிய பொது நிலையாகும்.

    இறுதியாக,  தொல்காப்பியர் ஓசையின் சிறப்புத்தன்மையையும், பொதுத்தன்மையையும் விளக்கப் பயன்படுத்திய  உத்தியைத்தான் அமிதசாகரர் தன் யாப்பருங்கல நூலில் பின்பற்றுகிறார். தூக்கும், பாவும் வேறு என்ற சிந்தனையை அவர் தொல்காப்பியர் வழியாகப் பெற்றிருந்தாலும் தூக்கையும் பாவையும் குறிக்க ஏன் இரு சொற்களைப் பயன்படுத்த வேண்டும்? இரண்டையும் இரண்டாகக் கருதி ஏன் தனி விளக்கம் தந்து கொண்டிருக்க வேண்டும்? அதனால் பயன் என்ன? அதனால்  கால விரயம்தான் மிஞ்சும்;  பாக்களைக் கூறும் போதே தூக்கு கிடைக்கும் அதனால் தூக்கிற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை; அதை ஓர் உறுப்பாகவும் குறிக்கத் தேவையில்லை; தூக்கை ஓர் உறுப்பாகக் கூறி யாப்பு உறுப்புக்களின் எண்ணிக்கையைப் பெருக்காமல் தூக்கே பா என்று கூறுவதே சிறந்தது என்ற சிந்தனை வலுபெற்ற காலக்கட்டத்தைச் சார்ந்தவராக அவர் இருந்ததால் அவர் வாழ்ந்த காலகட்டத்தின் தூக்கு பற்றிய தர்க்கத்தையும் புறக்கணிக்க முடியாமலும் அதே நேரத்தில் தூக்கை முற்றிலும் விட முடியாமலும் இரண்டிற்கும் நடுவே ஊஞ்சல் ஆடிய அமிதசாகரரின் தூக்கு பற்றிய சிந்தனையைத்தான் அவரது நூலில் நாம் காண்கிறோம்.  அதாவது தூக்கு ஓர் உறுப்பாகக் குறிக்கப்பட வேண்டும் அதற்கான அறிவியல் அடிப்படையில் அமைந்த நியாயம் அவரை தூக்கைச் செய்யுள் உறுப்புக்களில் ஒன்றாக யாப்பருங்கலத்தில் குறிக்கச் செய்தது; ஆனால் தூக்கு எனினும் பா எனினும் ஒக்கும் என்ற அவரது காலகட்டத்தின் தர்க்கம் அவரை தூக்கிற்கென்று ‘ தூக்கோத்து’ என்ற தனி ஓத்து அமைக்கவிடாமல் தடுத்து, அதனை செய்யுளியலிலேயே விளக்கும்படிச் செய்தது. எனினும் இது ஆய்விற்குரியது.

    ஆய்விற்குப் பயன்பட்ட நூல்கள்:

    1. அமிதசாகரர் – யாப்பருங்கலம் விருத்தியுரையுடன் , இரா.இளங்குமரன் பதிப்பு, கழகம், சென்னை: 1976.
    2. அமிதசாகரர் – யாப்பருங்கலக்காரிகை, குணசாகரர் இயற்றிய உரையுடன், உல்ரிக்கே நிகோலஸ் ஆங்கில மொழிபெயர்ப்பு, EFEO, புதுச்சேரி: 1993.
    3. தொல்காப்பிய மூலம் பாடவேற்பாடுகள்: ஆழ்நோக்காய்வு, கே.எம்.வேங்கடசுப்பையா, ச.வே.சுப்பிரமணியன், ப.வெ.நாகராசன், பன்னாட்டுத் திராவிட மொழியியற் பள்ளி, திருவனந்தபுரம்: 1996.

        4. தொல்காப்பியர் – தொல்காப்பியம் செய்யுளியல்
    பேராசிரியர் உரை, சி.கணேசய்யர் பதிப்பு,  உலகத்
    தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை: 2007

    *****

    ஆய்வாளர்
    பிரெஞ்ச் ஆசியவியல் பள்ளி (EFEO),
    புதுச்சேரி.

     

     

     

     

     

     

     

    Share
  • புது வாழ்க்கை!

    -த.ஆதித்தன் 

    கனகத்திற்குத் துக்கம் தாங்கவில்லை. நகரத்தில் இருந்து ஊருக்கு வந்திருந்த மருமகள் தனது வீட்டிற்கு வராமல் இருந்திருந்தால்கூட இவ்வளவு கவலைப் பட்டிருக்கமாட்டாள். எதிர்வீட்டு பாலு, பக்கத்துக் கடை அண்ணாச்சியிடம் எல்லாம் வந்து நலம் விசாரித்தவள் அப்படியே ஒரு எட்டு வந்து தன்னையும் பார்த்துவிட்டுப் போயிருக்கலாமே என்ற ஆதங்கம்தான் அவளை வாட்டியது. பேரக்குழந்தைகளை வேறு பார்க்கவேண்டும் போல் இருந்தது.

    மருமகள் திலகாவைத் தனது மகள்போல் தான் பார்த்துக்கொண்டாள் கனகம். வறுமை வாட்டிய போதும் மருமகள், பேரக்குழந்தைகளுக்குத் துன்பம் தெரியாமல் பார்த்துக்கொள்வாள். ஊரார் மெச்சும் மாமியார் மருமகளாகவே வாழ்ந்தனர்.

    இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கணவர் விபத்தில் இறந்தபிறகு வேறு திருமணம் வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்துவந்தாள் திலகா. பக்கத்து வீட்டுச் சித்ரா சென்னையில் வேலைபார்க்கும் செல்வத்தை நல்ல பையன் எனத் திலகாவிற்கும் கனகத்திற்கும் அறிமுகப்படுத்தினாள். சென்ற மாதம்தான் அனைவரும் சேர்ந்து செல்வத்தோடு திலகாவிற்கு மறுமணம் செய்து வைத்தனர்.

    ஒரு மாதத்திற்குள் திலகா மாறிவிட்டதைக் கனகத்தால் ஜீரணிக்கவே முடியவில்லை. புது வாழ்க்கையும், சுகமும் இந்த அளவிற்கா மாற்றிவிடும். திலகாவிற்கு ஃபோன் பண்ணினாள், “மாமி நல்லா இருக்கிறீங்களா?” என்றாள் திலகா.

    “நல்லா இருக்கிறோம். பேரப்பிள்ளைங்க நீங்க எல்லாரும் நல்லா இருக்கீங்களா?” என்ற கனகத்திடம், “ம்…. உடம்பைப் பாத்துக்குங்க மாமி, ஊர்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா?” என வெகு இயல்பாக கேட்டாள் திலகா. கனகத்தால் இதற்குமேலும் அடக்க முடியவில்லை. “ரெண்டு நாளுக்கு முன்னால நீ ஊருக்கு வந்துட்டு போனத சொன்னாங்க…. என் மேல என்ன கோபம் திலகா? இந்த வயசான உசிரையும் பார்த்துட்டு போயிருக்கலாம்ல்ல….” என்றாள்.

    “நேரமில்ல மாமி அதுதான் வந்துட்டோம்…. அப்புறமா ஃபோன் பண்ணுறேன் மாமி” என்றபடி ஃபோனை வைத்த திலகாவிற்கு அழுகை பீறிட்டது. ஊருக்கு சென்றிருந்தபோது மாமியார் வீட்டிற்கும் போய் வரலாம் என்று புது கணவனிடம் சொன்னதும்,” பழைய நினைப்பும் அவன்மேலுள்ள பாசமும் இன்னமும் மாறல போல…….” என்று அவன் கூறிய வார்த்தைகள் என்னமோ செய்தது அவளை.

    Share
  • நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் சங்க இலக்கியம் கற்பித்தல்

    -முனைவர். ஹெப்சி ரோஸ் மேரி. அ

    நவீன உலகில் மனித வாழ்வோடு பின்னிப் பிணைந்து உறவாடிக்கொண்டிருக்கும் கருவியாகத்  தொழில்நுட்பம் செயல்படுகிறது. இதற்கு மிகச் சிறந்த சான்றாக விளங்குவது மனிதனின் ஆறாம் விரலாகக் கருதப்படும் தொலைபேசி. தொழில்நுட்பங்கள்  நுழையாத இடமே இல்லை என்று கூறும் அளவிற்குத் தொழில்நுட்ப சாதனங்கள் எல்லாத் துறையையும் ஆக்கிரமித்துக் கொண்டன.  இத்தகைய தொழில்நுட்பங்களும் தொழில்நுட்ப சாதனங்களின் பெருக்கமும் ஒருபுறமிருந்தாலும் அவ்வளர்ச்சியில் பங்குபெறாத, கண்ணேறிட்டுப் பார்க்காத சமூகமும் நம்மைச் சுற்றி காணப்படத்தான் செய்கின்றது.  தொழில்நுட்பங்கள் பெருகிவரும் இன்றைய சூழலில் கல்வித்துறையும் இத்தொழில்நுட்பங்களுடன் இணைந்து பல எட்டாக்கனிகளைத் தனதாக்கியுள்ளன. மொழிதவிர்த்த ஏனைய கல்வித்துறையில் தொழில்நுட்பங்கள் வேரூன்றிக் காய்காய்த்துக் கனியத் தொடங்கிய நிலையில் தமிழ்மொழியும் இதில் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகிறது. பழம்பெருமைகளைப் பறைசாற்றிக் கொண்டிருக்கும் நாம் அப்பழமையான இலக்கியங்களைப் பழமையான கல்விமுறையிலேயே கற்றும் கற்பித்தும் வருகின்றோம். பழமையான இலக்கியங்களை நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக் கற்பிக்க வேண்டிய தூரம் வெகுதூரம் என்பது கசப்பான உண்மையாகும்.  இக்கட்டுரை சங்க இலக்கியத்தை நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எவ்வாறு கற்பிக்கலாம் என்பதை எடுத்தியம்புகிறது.

    மரபுசார்ந்த  கல்வி முறைகள்

    கல்வி முறைகளில் சிறந்திருந்த ஆதிமனிதன் குருகுலக் கல்வி முறையை மேற்கொண்டான்.  மன்றங்களில் தொடங்கிய கல்வி முறையில் சாதியம் புகுந்து கோயில்களில் வைத்துக் கல்வி கற்பிக்கப்பட்டது.  எல்லாருக்குமாக இருந்த கல்வி ஒரு குறிப்பிட்ட வகுப்பினருக்கு எனச் சுருங்கியது.  பின்னர் ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் இது ஒழிக்கப்பட்டு எல்லாரும் கல்வி கற்கும் முறை உருவானது.  நன்னூல் கூறும் கல்வி முறையைப் பார்க்கும்போது( நன் 40, 41 )  சோழர் காலத்துக் கல்வி முறை இதில் பதிவாகியுள்ளது என்பது உறுதி.  அதாவது, வினாவை எழுப்பி அதற்கு பதில்கூறும் ஒருவகைக் கல்வி முறையே இருந்தது.  சான்றாக  மு.வை அரவிந்தன் உரையாசிரியர்கள் என்னும் தம் நூலில் ( 1996:6,7) மேற்கோளாகக் காட்டும் உரைப்பகுதி இதற்குத் தக்க சான்றாக அமையும். “கட்டுவிச்சியை வினவ, அவள் அறியாதவள் போல இக்கருமம் முடித்தற் பொருட்டு இவ்வகை சொன்னாள். என்னை? வரைவு பொருட்டுத் தலைமகன்போக அவன் வரைவு நீட்டித்தலான் இவளது ஆற்றாமையான் உண்டாகிய நோயை முருகனால் வந்தது என்று வினவலாமோ? இஃது அங்ஙனம் ஆயின் குறி என்பது பொய்யேயாம் என்பது கடா. அதற்கு விடை : குறியும் பொய்யன்று இவளும் பொய் கூறினாள் அல்லள்”  என்னும் திருக்கோவையார் பேராசிரியர் உரையைப் பார்க்கும்போது கேள்வி கேட்டு விடையளிக்கும் கல்வி முறையே அன்றைய சமூகத்தில் இருந்தது எனத் தெரிகின்றது.

    மேலும் நன்னூலில் இடம்பெரும் “செவி வாயாக நெஞ்சு களனாக” பாயிரம் 49 என்னும் தொடர், காதால் கேட்டு மனத்தில் நிறுத்தும் முறையை உணர்த்துகிறது. அதாவது மனப்பாடம் செய்யும் முறை வழக்கில் இருந்தது என்பதைத் தெளிவுபடுத்துகிறது.  இம்மரபு பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை நீடித்திருந்ததையும் இதற்கான காரணத்தையும் சீனி வேங்கடசாமி பின்வருமாறு விளக்குகிறார். “கணக்காயரிடம் பொருள்அறியாது மனப்பாடம் செய்த மாணவர்கள் பிறகு தகுந்த புலவரிடம் சென்று அவர்களிடம் தாம் மனப்பாடம் செய்த நூல்களுக்கு உரை கேட்பர்.  அச்சுப் புத்தகம் இல்லாத காலத்தில் ஏட்டுச் சுவடிகளும் கிடைப்பது அருமையாக இருந்த காலத்தில்  இம்முறை ஏற்றதாக இருந்தது. மாணவர்கள்  உருப்போட்டு ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, நன்னூல், நிகண்டு போன்ற  நூல்களைக் கற்றனர்” என்று குறிப்பிடுகிறார்.  (2001:51) மாணவர்கள் ஆசிரியனிடம் பாடம் கேட்கும்போதும் ஒருவகையான கசப்பு உணர்வை பெற்றனர் என்பதை உ.வே.சா தமது என்சரிதம் என்னும் நூலில் ’அம்பலவாண முனிவரிடம் தம் ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை பெற்ற கசப்பான அனுபவத்தைப்          ( 1956:44) பதிவாக்கியுள்ளார்.  ஆங்கிலேயர் ஆட்சியில் பல கல்வி நிறுவனங்களும், பல்கலைக்கழகங்களும் அச்சுக்கூடங்களும் தோன்றின.  அச்சுநூல்கள் பரவலாக வெளிவரத் தொடங்கின. இதனால் மனப்பாடக் கல்வி மறைந்தது. சமய எல்லைகளைக் கடந்து பலவகையான இலக்கண இலக்கியங்களைப் பயிலவும் அவற்றைப் பிற இலக்கியங்களுடன்  ஒப்பிட்டுப் பார்க்கும் கல்வி முறையும் நடைமுறைக்கு வந்தது.

    கல்வித்துறையில் நவீன தொழில் நுட்பங்கள்

    பழங்காலக் கல்விமுறை ஆசிரியனை மையமிட்ட கல்விமுறையாக இருந்தது.  நவீனக் கல்வி முறை  ஆசிரியரை மையமிட்ட கல்வி முறையிலிருந்து மாணவனை மையமிட்ட கல்வி முறைக்கு மாறிக் கொண்டிருக்கிறது. மாணவனை மையமிட்ட கல்வி முறைக்கு நகரும்போது கற்பித்தலில் முக்கியப்பங்கு வகித்த ஆசிரியரின் இடம் கேள்விக்குறியாக ஆக்கப்படுவதும், ஆசிரியரின் இடத்தைக் கருவிகள் பிடித்துக் கொள்வதும் இயங்கியல் நிலை என்பதை உணர வேண்டிய கட்டாயத்தில்நாம் இருக்கிறோம். மரபான வகுப்பறைக் கல்வியில் நீண்ட காலமாகப் பயன்பாட்டில் இருந்து வரும் கருவிகள் கரும்பலகைகளும் வெண்கட்டிகளும். ஆசிரியனின் குரலால் மட்டுமே தகவல்களையும், சூத்திரங்களையும், கருத்துக்களையும், விளக்கங்களையும், வழிமுறைகளையும் சொல்லி, மாணவர்களின் மனத்தில் பதியவைக்க முடியாத நிலையில் கரும்பலகையும் வெண்கட்டிகளும் பயன்பாட்டில் வந்தன.  இந்நிலை தற்காலம்வரை தொடர்கிறது. ஆசிரியரின் உடல் நலம் கருதி வண்ணப் பலகைகளும் எழுதுகோல்களும் பின்னர்ப் பயன்பாட்டுக்கு வந்தன.

    இன்று கற்றல் கற்பித்தலில்  தொழில் நுட்பக்கருவியான  கணினி முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இக்கணினி வகுப்பறைகளில்  புதிய பயன்பாடுகளை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. இது கற்பிக்கும் ஆசிரியர்களின் வேலைப் பளுவை இலகுவாக்குவதோடு கற்பித்தல் உத்தியையும் மாற்றி மாணாக்கர்களின் கற்றல் முறையையும் மாற்றிவிடும் கருவியாகவும் செயல்படுகிறது.

    ஓர் ஆசிரியன் ஒரு மடிக் கணினியையும் தனது பயன்பாட்டிற்கெனக் குரல் பதிவானையும் (Voice Recorder), தகவல் சேமிப்பானையும் (Pen Drive) வாங்கி வைத்துக் கொண்டால் நூலகம், வகுப்பறை, தேர்வுக்கூடம் என அனைத்திலும் நவீனத்தொழில் நுட்பத்தின் உதவியோடு கற்பிக்கும் தொழிலைச் செய்துவிட முடியும். ஆசிரியரின் நேரடி வருகை இல்லாமலேயே கூட இக்கருவிகள் அவரது இடத்தை நிரப்பிவிடும் தன்மை கொண்டவை. கணினியின் திரவப் படிகத் திரை வகுப்பறையில் இருக்கும் கரும்பலகையின் மாற்று வடிவமாக விளங்கத் தக்கது. அதனை இணையத்தின் மூலம் இணைத்து விடும் நிலையில் அதுவே ஒரு நூலகம். சாதாரண நூலகம் அல்ல உலக நூலகங்கள் அனைத்தோடும் இணைத்துக் கொள்ளும் மாபெரும் நூலகம். அந்நூலகத்தில் அச்சிட்ட நூல்கள் மட்டுமே கிடைக்கும் என்பதில்லை. குரல் வடிவ நூல்களும் காட்சி வடிவ நூல்களும் கூடக் கிடைக்கின்றன.

    அது மட்டுமல்லாமல் இப்போது கற்பித்தலில் வல்லுநர்களை வரவழைத்து அவரிடம் பாடம்கேட்கும் முறைக்கு மாறாக, இணையவழி வகுப்பறைகளில் வல்லுநரும் மாணாக்கரும் இருக்கும் இடத்தில் அப்படியே அமர்ந்து கொள்ளலாம். பாடம் நடத்தலாம்; பங்கேற்கலாம். தேர்வு எழுதலாம்; மதிப்பீடு செய்யலாம். தேர்ச்சி பெற்ற பேராசிரியர்களாகவும் வல்லுநர்களாகவும் விளங்குபவர்களின் குறிப்புகளைக் குரல் பாடமாகவும், நகரும் காட்சிப் படிமங்களாகவும் மாற்றிவிட்டால், அவரது இன்மைக்குப் பின்வரும் அடுத்த தலைமுறை மாணவனும் அவரிடம் பாடங்கேட்க முடியும்.

    கற்பித்தலின் மற்றொருகூறு சக்தி மையம் அல்லது பவர் ஆகும். இது கறபித்தல்-கற்றல் வினையில் முக்கியப் பங்காற்றும் தன்மை கொண்டது. கரும்பலகையில் எழுதிப்போட்டுப் பாடம் நடத்துவதற்குப் பதிலாக வண்ண வண்ண எழுத்துக்களோடும் படங்களோடும் கூடிய பாடங்களை வெண்திரையில் வழங்கலாம். தேவையான காலஅளவில் நிறுத்தித் தங்கள் விருப்பம் போலப் பக்கங்களைப் புரட்டிக் காட்டிப் பாடம் நடத்தலாம். அல்லது ஒவ்வொரு பக்கமும் இத்தனைக் கால அளவிற்குத் தெரிய வேண்டும் என முடிவு செய்து நகர்த்தும் வாய்ப்புகளும் உண்டு. நகரும் குறிப்புகளுக்கேற்ற விளக்கங்களை ஆசிரியர் நேரடியாக இருந்து விளக்கவும் செய்யலாம். அல்லது அவற்றைக் குரலாகப் பதிவு செய்துவிட்டு இயக்கவும் செய்யலாம்.  இத்தகைய தொழில் நுட்பங்களை நாம் எட்டிவிட்டோம் என்பது பெருமைக்குரிய ஒன்றாகும். 

    தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திச் சங்க இலக்கியத்தைக் கற்றல்

    தொழில்நுட்பச் சாதனங்கள் கல்வித்துறையில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளதை நாம் கண்டோம்.  இனி இத்தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எவ்வாறு சங்க இலக்கியத்தைக் கற்கலாம் என்பதைக் காண்போம். இன்று இணையம் வழியாகக் கல்வி கற்கவும் தேர்வு எழுதவும் பட்டம் பெறவும் உதவும் வழியில் பல திறந்தநிலைப் பல்கலைக்கழகங்கள் தோன்றியுள்ளன. அவ்விணையம் வழியாகப் பாடம்கேட்கும்போது ஆசிரியர் ஒருவர் நின்று பாடம்எடுக்கும் முறை காணப்படுகிறதே ஒழிய நாம் மேற்கூறிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திய ஒரு வகுப்பைக் காண்பது இயலாத ஒன்றாகப் காணப்படுகிறது.. அதாவது அவ்விணையம் வழியாகவும் மரபுசார்ந்த கல்வி முறையே புகுத்தப்படுகிறது. ஆசிரியர் தகவலாளராகவும் மாணவர்கள் தகவல் பெறுபவர்களுமாகவே காணப்படுகின்றனர். அரசு கல்வி நிறுவனங்களிலும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திய வகுப்புகள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. அரசின் உதவித்தொகையில் பல ஸ்மார்ட் வகுப்பறைகள் இன்று அரசு கல்லூரிகளில் பள்ளிகளிலும்  நிறுவப்பட்டிருப்பினும் அது பயன்படுத்துவாரின்றியே காணப்படுகின்றன. ஒரு சில தனியார் கல்லூரிகளில் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன.  இதற்குக் காரணம் முறையான பயிற்சி இல்லாமையும் ஆங்கிலப் புலமை இல்லாததுமே காரணமாகும்.

    கான்பூசியசின் கருத்துப்படி “நான் கேட்கிறேன் மறக்கிறேன், நான் பார்க்கிறேன் நம்புகிறேன், நான் செய்கிறேன் புரிந்து கொள்கிறேன்” மாணவர்கள் கண்டு, கேட்டு, உணர்ந்து கற்கும் ஒரு கல்வி முறை அவசியமாகிறது.  அத்தகைய ஒரு கல்வி முறையைக் கொடுக்க நவீனத் தொழில்நுட்பங்கள் பெருமளவிற்கு உதவிசெய்கின்றன. இத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சங்க இலக்கியத்தைக் கற்பிக்கும் முறையை இங்குக் காண்போம்.சங்க இலக்கியப் பாடல்களை இசையோடு பாடி மாணவர்களைக் கேட்க வைக்கலாம்.

    • சங்கப்பாடல்களில் வரும் காட்சிகளை வரைந்து ஓவியங்களாக்கிக் காட்சிப்படுத்தலாம்.
    • இணைய நூலகம் வழியாகச் சங்க மொழியை, அதன் பொருளைப் புரிந்துகொள்ள வைக்கலாம்.
    • சங்கப் பாடல்களில் வரும் காட்சிகளை மாணவர்களை வைத்தே நடித்துக் காட்டலாம்.
    • சங்கப் பாடல்களில் வரும் வரலாற்றுப் பதிவுகளைக் கதை போன்று கூறி மாணவர்களுக்குப் புரியவைக்கலாம்.
    • சங்கப் பாடல்களில் பயின்று வரும் அணி, உவமைகளை எடுத்துவிளக்கி தொடர்களில் பயின்றுவரும் இலக்கண அமைதிகளையும் அக்கால மொழி அமைப்பையும் எடுத்துரைத்து விளக்கலாம்.
    • சங்கப்பாடல்களில் பயின்றுவரும் மரம், செடிகொடிகள், பூ வகைகள் விலங்குகள் இவற்றைக் காட்சிப்படுத்தி கற்பிக்கலாம்.
    • சங்கப் பண்பாடுகளையும் கலைகளையும் நிகழ்த்திக்காட்டலாம்.

    இம்முறைகளைப் பயன்படுத்தினால் சங்கப்பாடல்களை எளிதில் புரிந்து கொள்வதோடு அப்பாடல்களின் பொருளும் காட்சிகளும் மாணவனின் மனத்தைவிட்டு நீங்காமல் என்றும் நின்று நிலைக்கும் தன்மையோடும் காணப்படும் என்பதில் ஐயமில்லை.

    தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மரபு நிலையில் கற்பித்தல்

    மரபு முறையாகக் கற்பித்தலில் சங்க இலக்கியப் பாடல்களைக் கூறி அதன் திணை, துறை ஆகியவற்றை விளக்கி சிறப்புக்கூறுகளான முன்னம், உள்ளுறை, இறைச்சி, அணிநயம் போன்றவற்றை எடுத்தியம்பி இலக்கியத்தின் ரசனையைப் பெருக்கலாம். 

    முன்னம்

    சங்க அகத்திணைப் பாடல்களுக்கு யார் கூற்று, யாரிடம் கூறியது என்ன காரணத்திற்காகக் கூறியது என்பனவற்றை விளக்கிக் கொடுக்கப்பட்டுள்ள அடிக்குறிப்பே முன்னம் எனப்படுகிறது. இதைத் தொல்காப்பியர்,

    இவ்விடத்து இம்மொழி இவர் இவர்க்கு உரிய என்று
    அவ்விடத்து அவரவர்க்கு உரைப்பதை முன்னம் (தொல் 1463)

    என்று விளக்கியுள்ளார். குறுந்தொகையில் வரும் பாடல்கள் அனைத்தும் கூற்றுகளாக வருவதால் ‘முன்னம்’ என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் கற்பித்தல் மிக மிக அவசியமாகிறது.  குறுந்தொகையில் தலைவன் கூற்றாக 61 பாடல்களும் தலைவி கூற்றாக 180 பாடல்களும் தோழி கூற்றாக 141 பாடல்களும்  நற்றாய் கூற்றாக 9 பாடல்களும் பரத்தை கூற்றாக 5 பாடல்களும் பிறர் கூற்றாக 5 பாடல்களும் அமைந்துள்ளன. முன்னம் பற்றிய அடிக்குறிப்புகள் பிற்காலத்தில் தொகுத்தவர்கள் எழுதி இருக்கலாம். பாடலைப் படிக்கும்போது யார் யாரிடம் கூறியது என்ற முன்னம் மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

    எ.கா:

    செங்களம் படக்கொன்று அவுணர்த் தேய்த்த
    செங்கோல் அம்பிற் செங்கோட்டி யானைக்
    கழல் தொடிச் சேஎய் குன்றம்
    குருதிப் பூவின் குலைக் காந்தட்டே. ( குறு.1)

    போர்களத்தில் இரத்த வெள்ளம் பெருக அவுணர்களைக் கொன்றழித்த, குருதிதோய்ந்த அம்பினையும் குருதிபடிந்த கொம்புகளுடைய யானையையும் உடைய முருகன் இருக்கும் குன்றம் இரத்தம் போன்ற காந்தள் பூக்கள் நிறைய உடையது என்று கூறி தலைவனிடம் தோழி கையுறை மறுத்தது என்று துறை வகுத்தனர் சான்றோர்கள். இப்பாடலின் காட்சிகளைக் கண்களுக்குப் புலப்படும் காட்சிகளாகக் காட்டலாம்.

    இதே பாடலுக்கு நச்சினார்க்கினியர் ‘இது தோழி தலைவியை இடத்துய்த்து நீங்கியது’  என்ற துறை வகுத்துள்ளார்.  அதாவது முருகனது குன்றின் மேல் குருதிபோலப் பூக்கும் காந்தள் பூக்கள் நிறைய உள்ளன.  நான் அப்பூக்ளைப் பறித்துவரச்செல்கிறேன் நீ இங்கேயே இரு” என்று கூறித் தோழி தலைவியைப் பிரிகிறாள்.  எனக் கூறியிருப்பதும் பொருத்தமே ஆகும்.  இவ்வாறு ஒவ்வொரு பாடலையும் வேறுபட்ட முன்னத்தின் அடிப்படையில் கற்பித்தால் பாடலின் நயம் சிறக்கும் என்பதில் ஐயமில்லை. பல உரையாசிரியர்களின் உரைகளைக் கொண்டு ஒரேஇடத்தில் இவ்வுரைகளைக் கண்டும் சங்க இலக்கியத்தைக் கற்பிக்கலாம்.

    உள்ளுறை

    உள்ளுறை என்பது தெய்வம் ஒழிந்த கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்டு உள்ளுறுத்துக் கூறும் உவமையாகும்.  அதாவது புலவன் தான் கருதிய பொருளை உட்பொருளாக வைத்து வெளிப்படையாக உவமையை மட்டும் கூறுதலாகும். குறுந்தொகையில் பல பாடல்களில் இதுபோன்ற உள்ளுறை உவமம் வந்துள்ளமையைக் காணலாம்.

    வேரல் வேலி வேர்கோட் பலவின்
    சாரனாட செவ்வியை யாகுமதி
    யாரஃ தறிந்திசி னோரே சாரற்
    சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கி யாங்கிவள்
    உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே. ( குறு.18)

    சிறிய கொம்பில் பெரிய பழம் தொங்குவது போல இத்தலைவியின் உயிர் மிகச் சிறுமையை உடையது காமநோய் மிகப் பெரியது. அதனை அறிந்தவர் யார்? ஒருவரும் இல்லை. இவள் உயிர்விடுதல் நேரவும் பெறும் அல்லாமல் பிறர் வரைந்தும் கொள்வர் என்ற உள்கருத்தை மிகத் சாதுரியமாகச் சொல்லிச் செல்கிறார் புலவர்.  இதேபோன்ற குறுந்தொகைப் பாடல் ஒவ்வொன்றிலும் மேம்போக்காகக் கூறப்பட்டிருக்கும் உவமைகளுக்குள் ஓர் ஆழ்ந்த பொருள் மறைந்திருப்பதை வெளிக்கொணர்ந்து கற்பிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

    இறைச்சி

    இறைச்சி என்பது கருப்பொருள்களின் ஒரு பகுதியாகிய ஆடு, மாடு, மான், மயில் முதலிய விலங்குகளையும் பறவைகளையும் குறிப்பதாகும்.

    எ.டு:

    நசை பெரிது உடையர் நல்கலும் நல்குவர்
    பிடிபசி களைஇய பெருங்க வேழம்
    மென்சினை யாஅம் பொளிக்கும்
    அன்பின் தோழி அவர் சென்ற ஆறே. (குறு: 37)

    தலைவன் சென்ற வழியானது யானை தன் பிடியின் பசியை நீக்குவதற்காக யாமரத்தின் பட்டையை உரித்து அதிலுள்ள ஈரச்சுவையைப் பருகச் செய்யும் அன்பைப் புலப்படுத்தும் காட்சிகளை உடையது.  என்று கூறுவதன் மூலம் தலைவன் அந்தக் காட்சிகளைக் கண்டு தலைவியின் நினைவு ஏற்பட்டு விரைவாக வந்து சேர்வான் என்ற பொருள் கொள்ளப்படுகிறது. இப்பாடலில் வரும் யாஅ மரத்தின் தன்மைகளை விளக்கியும் அதன் சிறப்புக்களைத் தொழில்நுட்பம் வாயிலாக எடுத்துரைத்தும் இப்பாடலைக் கற்பிக்கலாம்.

    இன்று வளர்ச்சி அடைந்துள்ள பல துறைகளின் அடிப்படையிலும் சங்க இலக்கியத்தைக் கற்பிக்கலாம்.  இலக்கியக் கல்வியின் நோக்கம் மாறுபடுவதற்கேற்ப இலக்கியத்தின் பொருளும் விரிவடைந்து கொண்டே செல்கிறது.  மக்களின் வாழ்க்கைத்தரம் சமூக உறவுநிலை பொருளாதாரம் நாடுகள் பற்றிய செய்திகள் போன்ற சமூகவியல் செய்திகளும் இலக்கியங்களில் பரவலாகக் காணப்படுகின்றன.

    எ.டு:

    கோடுஈர் இலங்குவளை ஞெகிழ நாடொறும்
    பாடில கலிழுங் கண்ணொடு புலம்பி
    ஈங்கிவ ணுறைதலும் உய்குவமாங்கே. ( குறு: 11)

    என்ற பாடலில் வடுகர் பற்றிய செய்திகளும் கட்டி என்ற மன்னன் பற்றியும் மொழிதெரியாத நாட்டின் குறிப்புக்களும் பொருள்தேடி வேற்று நாட்டிற்குச் செல்லும் குறிப்பும் உள்ளன.  மேலும் இப்பாடலில் முல்லைநில மக்களின் சமூக வரலாற்றுச் செய்திகளும் பதிவாகியுள்ளன.  நிலவியல் அமைப்புகளைக் காட்சிப்படுத்தி விளக்கலாம்.

    உளவியல்

    இலக்கியங்களை உளவியல் அடிப்படையில் அணுகி பல முடிவுகளைக் கண்டறிந்து கூறுவது புதிய ஆய்வு முறையாகும். குறுந்தொகையில் மனித உணர்வுகளை அப்பட்டமாகப் பிரதிபலிக்கும் பல பாடல்கள் உள்ளன.  நீண்ட நாள் பிரிவு கழிந்து தலைவன் வந்துவிட்டான் என்ற செய்தியைத் தோழி தலைவியிடம் கூறுகிறாள். அந்த இன்ப அதிர்ச்சியை ஒரு தலைவி எப்படி வெளியிடுகிறாள் என்பதை மிக அருமையாக இப்பாடல் காட்டுகிறது.

    நீ கண்டனையோ? கண்டோர்க் கேட்டனையோ?
    ஒன்று தெளிய நசையினம் மொழிமோ
    வெண்கோட் டியானை சோணை படியும்
    பொன்மலி பாடலி பெறீஇயர்
    யார் வாய் கேட்டனை காதலர் வரவே.  (குறு: 75)

     நீ பார்த்தாயா? பார்த்தவர்கள் கூறக் கேட்டாயா? யாராயிருந்தாலும் அவர்களுக்கும் பாடலிபுரத்தைப் பரிசாக அளிப்பேன் என் காதலர் வரவை யார் கூறினார்கள் என்று ஒரு பெண் ஆர்வமாகக் கேட்கும் வடிவில் அமைந்துள்ளதைக் காணலாம்.  தலைவியின் மன நிலையைக் காட்சிகளாக எடுத்துரைக்கலாம்.

    தொழில் நுட்பங்கள் பெருகிவரும் இக்காலத்தில் அவற்றைப் பயன்படுத்தி விளக்குவதால் சங்க இலக்கியத்தைக் கற்பவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வுபெறும். தொழில்நுட்பத்தின் துணைகொண்டு எளிதில் கற்கலாம். சங்கத்தமிழின் மொழி நடையையும் எளிதில் புரிந்துகொள்ள இவை வழிசெய்யும். பழமையான இலக்கியங்களைக் கற்பிப்பதற்குத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தும்போது அதன் சாத்தியங்கள் விரிவடையும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

    பயன்பட்ட நூல்கள்

    1. உ.வே.சா- குறுந்தொகை, உவேசா நூல் நிலையம், சென்னை
    2. சுப்பிரமணியன். நா – சங்ககால வாழ்வியல், நீயூ சென்சுரி புக் , சென்னை.
    3. ராமசாமி. அ – தமிழ் இலக்கியம் கற்பித்தலும் நவீனத் தொழில் நுட்பமும்

    *****

    கட்டுரையாளர்,
    உதவிப்பேராசிரியர்,
    கேரளப் பல்கலைக்கழகம்

     

     

    Share
  • தேயிலைத் தோட்டத்தைத் தேடி…..

     

    புல்லின் மீது பனித்துளி தூங்க
    புள்ளினம் எல்லாம் கீதம் இசைக்க
    கல்மலை யிடையே கதிரவன் உதிக்க
    துள்ளித் திரிய மந்திகள் விரைந்தன!

    தோட்டத் தொழிலுக்கு செல்வோர் எல்லாம்
    வீட்டில் பொழுது புலருமுன் எழுந்து
    தாட்டைக் கட்டி ஆயத்தம் ஆகி
    ஓட்டமும் நடையாய்ப் பணியிடம் சேர்ந்தனர்!

    ஓங்கி யுயர்ந்த மலையிடை எல்லாம்
    எங்கும் நிறைந்த தேயிலைத் தோட்டம்!
    தங்கிய பனித்துளி இலைகளை நனைக்க
    சங்கு ஒலித்தது பணிகளைத் துவங்க!

    கிளைகள் படர்ந்து வளர்ந்த செடியில்
    வளைக்கரம் கொண்ட மகளிர் எல்லாம்
    இலைகளைப் பறித்து தாட்டில் நிறைக்க
    சிலைபோல் நின்று துரையும் பார்ப்பான்!

    செடியில் பறித்த கொழுந்து எல்லாம்
    மடியில் கட்டிய தாட்டில் நிறைய
    நெடிய சாலுக்கிடையே சுமந்துச் சென்று
    எடையைப் பார்க்க சாக்கில் தினிப்பர்!

    சாக்கில் நிறைத்த கொழுந்தை எல்லாம்
    சரியாக நிறுத்தி எடையைப் பார்த்து
    சாலையில் நிற்கும் வண்டியில் ஏற்றி
    ஆலைக் கனுப்பி பக்குவம் செய்வர்!!!
    -ஆ. செந்தில் குமார்

    குறிப்பு :-

    தாட்டு – பறித்த தேயிலைக் கொழுந்தை நிரப்புவதற்காக அணிந்து கொள்ளும் சாக்கினால் தைக்கப்பட்ட உடை

    சாக்கு – கோணிப்பை

    துரை – மேளாளர், ஆங்கிலேயர் காலத்தில் துரை , ஐயா என்று சொல்லப்பட்ட பழக்கம் இன்றும் சில இடங்களில் தொடரப்படுகிறது.

    சங்கு – இராட்டையில் ( தேயிலை ஆலை ) நேரத்திற்கு ஒலிக்கப்படும் Hooter சப்தம்.

    சால் – தேயிலைச் செடி வரிசையாக நடப்பட்ட ஒழுங்குமுறை.

    Share
  • மீட்பர் இயேசு

     

    images (2)
    °°°°°°°°°°°°°°°°°°

    காட்சிக் கினிய கண்கவர் அழகொடு
    மாட்சி பொருந்திய வல்லமை யுடைய
    தாட்சி யோடு வானோர் பணிய
    மாட்டுத் தொழுவத்தில் ஏசு பிறந்தார்!

    ஞானம் கொண்ட மரியாள் மைந்தன்
    வானத் தளவு கருணை கொண்டு
    தேனினை யொத்தநல் கருத்து களோடு
    போதனை செய்து காலம் கழித்தார்!

    பன்னிரு சீடர் பக்கத்தில் இருக்க
    பரிவுள்ளம் கொண்டு மானிட குலத்தின்
    பாவச் செயல்களைப் போக்கி மீட்டு
    பரிசுத்தம் அடைய வழிவகை செய்தார்!

    போதனை விரும்பா உரோம அரசு
    யூத மதத் தலைவரொடு சேர்ந்து
    யூதாசையணுகி முப்பது வெள்ளி கொடுத்து
    ஏசுவைக் கொல்லத் திட்டம் தீட்டினர்!

    காசுக் காசைப் பட்டு யூதாசு – ஏசுவைக்
    காட்டிக் கொடுத்து பாவம் செய்தான்!
    குற்ற மில்லா இறைவனின் தூதனை
    கொடிய சிலுவையிலறைந்து கொன்றனர் பாவிகள்!

    சிலுவையில் மரித்துப் பின்மூன்றாம் நாளில் – தன்
    சீடர்கள் முன்பு உயிர்த்து எழுந்து
    காட்சி தந்து பின்னர் மறைந்தார்! – பல
    கோடி மக்களின் உள்ளத் துறைந்தார்!!

    – ஆ. செந்தில் குமார்.

    Share
  • Yoga, India’s Gift to the World!

    -DR.C.N.VIJAYAKUMARI

    The International Yoga Day on June 21 is a reminder to the whole world of the vital role Yoga, if practiced daily, can play in an individual’s, and a nation’s life. A voluntary discipline, tailored to an individual’s needs, Yoga aims at the total growth – physical, mental, intellectual and spiritual – of a person.

    As the opening prayer above, a salutation to Sage Pathanjali who compiled the Yoga Sutra, indicates Yoga helps remove the impurities from a practitioner’s mind (thoughts), speech (words) and body (deeds). The daily practice of Yoga helps remove the internal and external impurities and bring in an order, balance and calm in an individual practitioner.

    As Lord Krishna told Arjuna in the Bhagavath Geeta, Yoga is dexterity, balance and coolness combined. Rife with tension, anxieties and lifestyle diseases, living today has become a terrible rat race. A peaceful, happy and contented existence has become almost a thing of the past. It’s here Yoga comes to our rescue.

    Our forefathers, over centuries, have figured out the unique relation between nature and man and have thought up a very simple system of physical, mental and spiritual discipline which we call Yoga today. Yoga aims at overall ‘swasthya,’ disease-free health of a practitioner. In 196 sutras (aphorisms), Sage Pathanjali’s Yoga Sutra, guides us through a series of physical, mental and spiritual practices that has mainly three parts, namely, pranayama, asanas and meditation. Breath is the bridge between our body and mind. Our entire life is conceived and planned first at the mental level. Body just executes the directive from the mind.

    Our forefathers knew this long time ago that the human body is but only an aide to the mind. Everything in our life happens first at the mental level. Without the mind, body is helpless. This awareness is central to the entire Yoga discipline. In that sense, Yoga is not just a physical exercise alone. It’s physical, mental, intellectual and spiritual. If practiced daily, the pranayamaasana and dhyana, will put the practitioner onto the right path of Swasthya. The practitioner has to take care of his/her food and rest too. He/she may not indulge in too much of either.

    So, our forefathers had thought up a perfect system that guaranteed our physical, mental, intellectual and spiritual growth. A daily yoga practitioner is ready to tackle any adversity. Nothing scares him/her. Yea, he/she will always be cool and active. And, most importantly, a daily Yoga practitioner will always be contented. He/she will have no interest in the daily rat race going on around.

    Yoga is especially a great health tool to our young ones. Living in often volatile and violent environments, many of our young ones are crying for help. The help these young ones need first and foremost is awareness about themselves, their surroundings, their potentialities and possibilities. A young person, practicing Yoga daily, will be completely at ease with his surroundings because nothing scares him/her. He/she can always find a solution through cool and bold thinking. He/she is aware of himself/herself. A daily Yoga/pranayama practitioner slowly gets steadiness of mind by restraining respiration and asana practices. When one learns to control breathing, one learns to control one’s mind, and through the mind, one’s body. It’s that simple. Daily pranayama and Yoga helps keep one’s youthfulness even when one hits 70.

    Yoga/Pranayama practitioners must be disciplined in their eating, sleeping and recreational activities, too. They must eat right, sleep/rest right and play right. Too much of any of these can cut their achievements from the daily Yoga/Pranayama/dhyana practices. As the United Nation’s World Health Organization says overeating is more dangerous than starvation.

    Remember what Lord Krishna told Arjuna in the Bhagavad Geetha:
    yuktahara-viharasya
    yukta-cestasya karmasu
    yukta-svapnavabodhasya
    yogo bhavati duhkha-ha

    At a time, harmful fast-foods are the “in thing” for the youth; satvik vegetarian food can keep a person healthier in the long run. Satvik food also helps one improve one’s emotional health. Clean eating guarantees a clean body and a clearer mind.

    Mahatma Gandhi and Sri Aurobindo and several others were well known for promoting the daily practice of Yoga and satvik lifestyle. Who can forget that famous picture of a smiling Gandhiji, sitting in Gomukha Asana and turning the charka wheel. Similarly there are several asanas, Padma Asana, for instance, one can use in their daily life, whether they are watching a television or doing some household chores. The famous Yoga Vasishta contains Sage Vasishta’s advice and counseling to Lord Rama when he was young. Bhagavad Geetha, too, is a counseling treatise containing advices Lord Krishna gave to his dear disciple Arjuna.

    One needs hardly an hour for the daily practice of Yoga/pranayama/dhyana. That is not too much for one’s self-improvement and a contented, happy living. An individual’s overall growth is what daily Yoga and pranayama practices, one of the greatest contributions from India to the world. Air, health and contentment have no caste or creed or religion. Yoga is secular in the sense it helps all people living anywhere in the world. A healthy individual contributes to a healthy family, society, nation and a world. Everybody, irrespective of religion and other man-made divisions benefit from practicing Yoga and Pranayama. Who doesn’t want peace and happiness in this world?

    Ref:

    1. Bhagavad Geetha
    2. Yoga Sutra by Sage Patanjali
    3. Hatha yoga Pradipika (trans. by Pancham Sinh, 1914)
    4. Yoga Vasistha by Sage Vasishta 

    *****

    The Writer is an:
    ASSISTANT PROFESSOR
    DEPARTMENT OF SANSKRIT
    UNIVERSITY OF KERALA
    KARYAVATTOM.P.O
    PIN 695581
    Email.vijayaisavasyam@gmail.com

    Share
  • காவியத் தலைவன் கர்ணன்

     

    karna (2)
    °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

    Senthil

    ஈகரையும் காணாத கங்கையில்
    ஈன்றவள் புறக்கணித்து – நெஞ்சில்
    ஈரமின்றி மிதக்கவிட!
    ஈனவர் கௌரவர்
    ஈர்த்தனர் கர்ணனையே!
    ஈர்த்தவர் என்றாலும்
    ஈரப்பற்று மிகுதியால்
    ஈன்றவராய் கொண்டானே!
    ஈகையும் வீரமும்
    ஈர் கண்னெனக் காத்தானே!

    ஈவோன் துரோணரும்
    ஈடன் கர்ணனை
    ஈடறவு எனப் புறக்கணித்தார் – எனினும்
    ஈடிலான் ஆதவனை
    ஈவோனாய்க் கொண்டானே!
    ஈவோன் பரசுராமர்
    ஈகையாளன் மடிதுயில
    ஈயின வண்டொன்று
    ஈட்டியெனத் துளைத்தபோதும்
    ஈட்டி மரமென் றசையாதிருந்தானே!

    ஈடர் பாண்டவர் அணிசேர
    ஈன்றவள் வந்தழைத்த போதும்
    ஈறிய நெஞ்சம் கொண்டான்
    ஈர்தாரை விலகேன் என்றான்!
    ஈயாடவில்லை குந்தி முகத்தில்!
    ஈடினையில்லா குருசேத்திரத்தில்
    ஈண்டெனப் போர் மூண்டது!
    ஈசுவை கொண்ட கௌரவர்க்கும் 

    ஈகையாளர் பாண்டவர்க்கும்!
    ஈடற்ற வெற்றி பாண்டவர்க்கு!

    ஈ என இரந்தோர்க்கு
    ஈயேன் எனச் சொன்னதில்லை!
    ஈடிகை மார்பில் தைத்த
    ஈரம் கூடக் காயவில்லை!
    ஈகையின் துணைக்கொண்டு
    ஈத்தக் கொடையனைத்தும் 
    ஈ என கண்ணன் கேட்டபோதும் 
    ஈண்டெனக் குருதி கொடுத்தானே!
    ஈடில்லா இறைவனின்
    ஈரடி நிழல் சேர்ந்தானே!

      – ஆ. செந்தில் குமார்.

     

    பொருள் :-
    ஈகரை – இரண்டு கரைகள்
    ஈன்றவள் – தாய்
    ஈரம் – இரக்கம்
    ஈனவர் – இழிந்தோர்
    ஈர்த்தல் – சேர்த்துக்கொள்ளுதல்
    ஈரப்பற்று – அன்பு
    ஈன்றவர் – பெற்றோர்
    ஈகை – கொடை
    ஈர் – இரண்டு
    ஈவோன் – ஆசிரியர், குரு
    ஈடன் – ஆற்றலுடையவன்
    ஈடறவு – பெருமைக் கேடு
    ஈடிலான் – இறைவன்
    ஈரிய நெஞ்சம் – அன்பு நெஞ்சம்
    ஈசுவை – பொறாமை
    ஈடிகை – அம்பு
    ஈ – கொடு
    ஈத்த – கொடுத்த
    ஈரடி – இரண்டு திருப்பாதங்கள்
    ஈண்டென – விரைவாக

    Share
  • மெய்ஞ்ஞானம் பிறந்ததம்மா!

    -நிலவளம் கு.கதிரவன்

    முன்னுரை

    kathirஆயர் குல விளக்காம் ஸ்ரீ ஆண்டாள் அருளிய திருப்பாவை பாடல்கள் முப்பதும் சரணாகதித் தத்துவத்தைப் போற்றுவதாகும்.  எட்டாம் பாடலான ’கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு’ என்ற பாடலின் பொருளையும், விளக்கத்தையும், இப்பாடலில் பொதிந்துள்ள உள்ளுறை கருத்துக்களையும் நாம் காணப்போகிறோம்.    

    அவதாரிகை                                          

    திருப்பாவை பாசுர வரிசையில் எட்டாவது வரிசையில் வரும் கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு என்ற பாசுரம் தமோ குணம் நீங்கி சத்வ குணம் வருவதையும், அத்தகைய சத்வ குணத்தினால் அஞ்ஞானம் விலகும். மெய்ஞானம் பிறக்கும் என்பதை ஆண்டாள் நமக்கு உள்ளுறையாக விளக்குகிறாள். மேலும் இப்பாசுரம் ஸ்வாமி நம்மாழ்வார் எழுப்பப் பாடுவதாகவும், சிலர் பூதத்தாழ்வாரை எழுப்பப் பாடுவதாகவும் கூறுவர். தவிரவும் ஆசார்ய சம்பந்தம், மோட்சம் போன்ற அம்சங்களையும் இப்பாசுரம் ஆய்ந்து விளக்குகிறது.                       

    திருப்பாவை எட்டாம் பாசுரம்

    கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
    மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
    போவான் போக்கின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
    கூவுவான் வந்துநின்றோம் கோதுகலமுடைய
    பாவாய்! எழுந்திராய் பாடிப்பறைகொண்டு
    மாவாய் பிளந்தானை மல்லரைமாட்டிய
    தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
    ஆவாவென்றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய்! 

    பாசுரப் பொருள் விளக்கம் 

    இப்பாசுரத்தில் எழுப்பப்படும் பெண் பகவான் கிருஷ்ணரால் மிகவும் விரும்பப்பட்டவள்.  ஆகையாலே கோதை அவள் இல்லம் சென்று, கீழ்வானம் வெளுத்துவிட்டது, எருமைகள் எல்லாம் சிறுவீடு மேய சென்றுவிட்டது என்பதால் நாங்கள் உன்னை எழுப்புவதற்காக கோஷ்டியாக வந்துள்ளோம்.  நீ ஏன் இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறாய்? திருவேங்கட யாத்திரை செல்லும் குழுவினரையும் உனக்காக நிறுத்தி வைத்துள்ளோம்.  கிருஷ்ணரால் மிகவும் விரும்பப்பட்ட பெண்ணே சீக்கிரம் எழுந்திரு.  கேசி என்ற அசுரன் குதிரை உருவத்திலும், பகாசுரன் கொக்கு வடிவத்திலும் வந்தபோது அவர்களின் வாயைக் கிழித்தவனும், சாணுரன், முஷ்டிகன்  என்ற மல்லர்களை மாய்த்தவனுமான, தேவர்களுக்கெல்லாம் அதிபதியாக விளங்கக் கூடிய எம்பெருமானின் மகாத்மியங்களை பாடிக்கொண்டு அவனை நாம் சேவிப்போம்.  அப்படி சேவித்தால் எம்பெருமான் நம்மிடம் வந்து, நமது குறைகளை ஆராய்ந்து, அனுதாபப்பட்டு நமக்கு அருள்செய்வான்.  எனவே எழுந்திரு தோழியே எனத் தோழியின் வீட்டுக் கதவை கூடியிருந்து தட்டியெழுப்புகின்றனர்.    

    தோழியை எழுப்புதல் 

    பாவை நோன்பிற்காக வீட்டில் உறங்கிக் கொண்டிருக்கும் பெண் பிள்ளையை, கீழ்வானம் வெளுத்து, சூரிய  உதயம் ஆகிறது.  இன்னும் நீ எழுந்திருக்கவில்லையா? என்று ஆண்டாளும், தோழியர்களும் அழைக்கிறார்கள்.  இங்கு கீழ்வானம் என்பது ஆகாயத்தைக் குறிக்கும். அதேபோன்று ஒவ்வொரு ஜீவாத்மாவுக்குள்ளும் இருக்கும் மனத்தின் உள் வெளியை குறிக்கிறது.  அந்த உள்வெளி சுத்தமாக இருந்தால்தான் சுடர்விட்டு ஒளிரும். பரமாத்மாவைக் கண்டுகொள்ள முடியும், என உள்ளுறையாக கூறப்பட்டுள்ளது.    

    கீழ்வானம் வெளுத்ததைத் தொடர்ந்து, எருமைகள் எல்லாம் சிறுவீடு மேயச் சென்றுவிட்டன. சிறுவீடு மேய்வது என்பது பனித்துளி படர்ந்த புற்களை மேய விடிந்தும், விடியாத காலையில் புறப்பட்டுச் செல்லும் நேரமாகும்.  எருமைகள் சென்றதைத் தொடர்ந்து மற்ற பிள்ளைகளும் செல்லத் தொடங்கிவிட்டனர். போவதற்காக போகின்றவர்கள் அதாவது பரமனைக் காணப் போவதாகிய செயலே போதுமானது என்றும், அப்பரமனே உபாயமும், உபேயமுமாகக் கொண்டு செல்கின்றனர்.  அவர்களை நிறுத்தி உனக்காக காத்திருக்கச் சொல்லியிருக்கின்றோம்.  அப்படி அவர்களை நிறுத்தி வைத்துவிட்டு, உன் வீட்டுவாசலில் உன்னை எழுப்புவதற்காக காத்துக் கொண்டிருக்கின்றோம்.  பகவான் கிருஷ்ணனால் விரும்பப்பட்டவளும், உன்னால் விரும்பப்பட்ட கிருஷ்ணனுமாகிய அப்பெருமானின் கல்யாண குணங்களைப் பாடி, பறைகொண்டு சேவிக்கலாம்.  அதனால் நீ எழுந்திரு தோழி என்று எழுப்புகிறார்கள்.  

    தோழியின் பதில் 

    ஆண்டாளும், மற்றவர்களும் எழுப்பும்போது, தோழி சொல்கிறாள்.  கீழ்வானம் வெளுக்கவில்லை. பொழுதும் விடியவில்லை.  கிருஷ்ணனைச் சென்று சேர்வதற்காக எப்போது பொழுது விடியும் என்று கிழக்குத் திசையையே பார்த்துப் பார்த்து உங்கள் முகத்தினொளியின் பிரதிபலிப்பே கீழ்வானம் வெளுத்ததுபோல் தெரிகின்றது.  அதே போன்று நீங்கள் எருமைகள் என்று நினைத்துக் கொண்டு இருக்கின்றீர்களே அது எருமைகள் அல்ல, உங்கள் முகத்தின் ஒளிபடரப் படர இருளானது விலகிக் கொண்டே செல்லும்.  அந்த இருள் திரளானது உங்களுக்கு எருமைகள் போல் தெரிகிறது. எனவே இன்னும் பொழுது புலரவில்லை. இப்படிக் கூறியவளை இடைமறித்து, சரி.  பொழுது புலரவில்லை என்று கூறுகிறாய்.  அப்படியென்றால் விடியலுக்கு வேறு என்னதான் அடையாளமாக நீ கேட்கிறாய் என்றார்கள் பிற தோழியர்கள்.  அதற்கு அவள், ஆய்ப்பாடியில் ஐந்து லட்சம் குடியில் உள்ளவர்களில் எத்தனைபேர் இங்கு வந்துள்ளார்கள்?  அப்படி அனைவரும் வரவில்லையெனில் மற்றவர்கள் இன்னும் உறங்கிக் கொண்டுதானே இருக்கின்றார்கள்.  இச் செயலே தெரியவில்லையா? இன்னும் விடியவில்லை என்று மறுமொழியிட்டாள் தோழி.  

    தோழிக்கு பதில்     

    தவறாகப் புரிந்து கொண்டிருக்கின்றாய் தோழி.  நாங்கள் முன்னமே சொன்னதுபோல்தான், விடியலைக் கண்டு எருமைகள் சிறுவீடு சென்றுவிட்டன, அதைத் தொடர்ந்து மற்ற பெண் பிள்ளைகள் அனைவரும் பகவானைச் சேவிக்க சென்றுவிட்டனர் என்றும், அதைத் தொடர்ந்து,  பறை கொண்டு பாடப்படும் அத்தகைய பரம்பொருள் எப்படிப்பட்டவன் தெரியுமா? குதிரை வடிவம் கொண்டு வந்த கேசி என்ற அசுரனைப் பிளந்து அழித்தவன்.  அதேபோன்று கொக்கு வடிவம் கொண்டு வந்த பகாசுரனை அவன் வாயைக் கிழித்து கொன்றவன்,  கம்சன் அவையில் ஏவப்பட்ட மல்லர்களான சாணூரனையும், முஷ்டிகனையும் வதம் செய்தவன்.  அப்பேரருளாளனான எம்பெருமான் தேவர்களுக்கெல்லாம் அதிபதியாக இருக்கக் கூடியவனும், வரந்தருவார்க்குள் எல்லாம் மிகச் சிறந்த தெய்வமான சர்வேஸ்வரன் ஸ்ரீமன் நாராயணனை நாம் சென்று சேவித்தால்,  அவன் மனம் இரங்கி, நமது குறைகளை ஆராய்ந்து  அருள் புரிவான்.  எப்படியென்றால் நாம் அவர்கள் இருக்கும் இடம் சென்று அருள்பாலிக்கக் காத்திருக்க வேண்டியவர்கள், அதையே பெரும்பேறாகக் கருதியிருக்கும் அவர்கள், நாம் இருக்கும் இடம்தேடி வருகிறார்கள் என்றால், அவர்களின் குறைகள்தான் என்னவோ? என்றெண்ணி மனம் இரங்கி நமக்கு அருள்செய்வான்.  அதனால் சீக்கிரம் எழுந்திரு தோழி என எழுப்புகிறார்கள். 

    பாசுர உள்ளுறை

    1. கீழ்வானம் வெள்ளென்று என்று கூறும்பொழுது மேல்வானம் பரமபதத்தில் உள்ள சர்வேஸ்வரனையும், கீழ்வானமான இப்பூமியில் அடியார்கள் வாழ்வதையும் கொண்டு, கீழ்வானம் தூய்மையாக இருந்தால்தானே பரமன்வந்து அமர்வான். கீழ்வானம் வெளுத்தது என்றால்,மோட்ச சிந்தனையைத் தேடும் சீடன் உபாயம் அறியாமல், அகஇருளில் உழலும் இவர்களுக்கு ஆச்சார்ய சம்பந்தத்தினால் சத்வ குணம் தலையெடுப்பதையும், ஞான வெளிச்சம் கிடைப்பதையும் கூறலாம்.
    1. எருமை சிறுவீடு என்ற வரியில், எருமையானது மிக மெதுவாக நகரும்.பசுக்கள் போன்று விரைவாக செல்லாது.  எருமையானது சிறுவீடு செல்வதற்கு முன், சிறு குளம், குட்டை என எல்லாவற்றிலும் விழுந்து பின்னர்ப் போகவேண்டிய இடத்திற்கு செல்லும்.  ஆனால் மிக்குள்ள பிள்ளைகளானவர்கள்  பக்தியோகத்தை அனுசரிக்க தங்களின் தகுதியின்மையை உணர்ந்ததால் சரணாகதி மார்க்கத்தைத் தேர்ந்தெடுத்து சீக்கிரமாக செல்லும்.  அதாவது தமோ குணம் மிககவர்கள் ஸம்சார பந்தத்தில் உழன்று பின்னர் தமது இறுதிக் காலத்தில் மோட்சத்திற்குச் செல்வர்.  ஆனால் பசுக்கள் போன்ற சுறுசுறுப்பு மிக்குள்ள பிள்ளைகள் சத்வகுணம் பெற்று சீக்கிரமே மோட்சத்தை அடைகிறார்கள். 
    1. கோதுகலமுடைய என்ற வரியில் கிருஷ்ணனால் மிகவும் விரும்பப்பட்ட பதுமை போன்றவளே என்று கூறுகிறாள் ஆண்டாள். பராசர பட்டர் கிருஷ்ணனுடைய குதூகலமே நம்மாழ்வாராக வடிவெடுத்தது என்று இதற்கு உவமை கூறுகிறார்.அதாவது க்ருஷ்ண த்ருஷ்ணா என்றதும் க்ருஷ்ணனிடத்தில் த்ருஷ்ணை, க்ருஷ்ணனுடைய த்ருஷ்ணை.  அதாவது நம்மாழ்வார் எம்பெருமானிடத்தில் குதுகலம் கொண்டார்.  எம்பெருமானும் தன்னிடத்திலே குதுகலம் கொண்டார் என்பதை க்ருஷ்ண, த்ருஷ்ண என்று உவமையாக கூறுவதைக் கொண்டால், தோழியானவள் க்ருஷ்ணன் மீது ஆசை கொண்டாள்.  க்ருஷ்ணனும் தோழிமீது ஆசை கொண்டான் என்று பொருள் கொள்ளலாம்.
    1. இப்பாசுரத்தில் தேவாதி தேவன் என்று பரமாத்மாவை விளிக்கிறாள் ஆண்டாள்.அதாவது நித்யசூரிகளுக்கெல்லாம் மேலானவர்.  வரந்தருவோர்க்கெல்லாம் மேலானவர் என்ற பொருளில் விளக்குகிறார்.  கீதையில் பரமாத்மா, ”தனஞ்செயனே, என்னைக் காட்டிலும் மேலானது வேறொன்றுமில்லை. நூலிலே மணிக் கோவை போல அண்டங்கள் அனைத்தும் சர்வேஸ்வரன் என்ற நுலான சூத்திரத்தால் என்மீதுதான் கோக்கப்பட்டு இருக்கின்றன”.   எனவே அப்படிப்பட்ட பரமாத்மாவை நாம் பற்றினால் நம் குற்றம் குறைகளைக் கருணையுடன் ஆராய்ந்து பெருங் கருணையுடன் அருளுவான்.  இங்கு ஆராய்தல் என்பது கோபியரின் கர்ம, ஞான, பக்தி யோகங்களை அல்ல.  தாஸ்ய பாவமான பரிபூரண சரணாகதியே ஆகும். 
    1. போவான் போகின்றாரை என்ற வரியில், போவதற்காக போகின்றவர்கள்,அதாவது பரமனைக் காணப் போவதான செயலே போதுமானது.அதுவே இலக்கு.  உபாயமும், உபேயமும் அவனே. இதற்கு பெரியவாச்சான் பிள்ளை, போவான் போகின்றவர்கள், அர்ச்சிராதி மார்க்கம் போலே, அக்ரூராயனம் போலே, திருவேங்கட யாத்திரை போலே போவதையே பிரயோஜனமாகக் கொண்டவர்கள் என்கிறார்.  அதாவது அர்ச்சிராதிகதி என்பது ஸ்ரீவைகுண்டத்திற்கு போவதைப்போலே, அக்ரூராயனம் என்பது கண்ணனைப் பார்க்க ஆயர்பாடிக்கு போவது போலே, திருங்கட யாத்திரை   என்பது  திருமலைக்கு யாத்திரை செல்வது போலே என   வியாக்யானம் அருள்கிறார்.
    1. கீழ்வானம் வெள்ளென்று என்பது சூரிய உதயத்தின்போதுதான் இருக்கும். அதுபோல கலியுகத்தின் தொடக்கத்தில் நம்மாழ்வார் அவதரித்த பின்னர்தான் அடியார்கள் ஞானஒளி பெற்றனர்.அதுவரை அஞ்ஞான ஒளியில் அகங்கார, மமகாரத்துடன் இருந்தனர்.  அதே போன்று புளிய மரத்தடியில் உதித்தவரான நம்மாழ்வார் நீண்டநாள் எழுந்திராமல் இருந்து, மதுரகவியாழ்வாரால் எழுப்பப்பட்டவர்.  அதேபோன்று அனைத்துத் திவ்ய தேசங்களிலும் இவர் மட்டும் அமர்ந்திருக்க, ஏனைய ஆழ்வார்கள் அர்ச்சாவதாரமாக நின்றபடியே சேவை சாதிப்பர். அதனைக் குறிக்கும் விதமாக எழுந்திராய் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும் கொள்ளலாம். 

    முடிவுரை 

    கலியுகமான இக்காலத்தில் சரணாகதி மார்க்கம் ஒன்று மட்டுமே இறைவனை அடையும் வழியாகும்.  இப்பாசுரம் விளக்குவது போல சத்வ குணம் ஓங்கினால் மெய்ஞ்ஞானம் பிறக்கும்.  அஞ்ஞானம் தானாக விலகிச் சென்றுவிடும்.  அஞ்ஞானம் விலகினால் பகவான் அருள் கிடைக்கும்.  இதற்குப் பிராட்டியார் அருள்  வேண்டும்.  அதனால் சேர்ந்து நாம சங்கீர்த்தனம் செய்ய வேண்டும்.  அப்படி நாம சங்கீர்த்தனம் செய்யச்  செய்ய நமது அகங்கார, மமகாரங்கள் எல்லாம் நம்மைவிட்டுச் செல்லும். இதுவே இப்பாசுரம் உள்ளுறையாக நமக்கு அருளும் அறிவுரையாகும்.  பின்பற்றி உய்வோம்.                              

                 எம்பெருமானார் திருவடிகளே சரணம்!!
                 வரவரமுநியே நம!!

     

     

    Share
  • தமிழா! தமிழா!!

     
    °°°°°°°°°°°°°°°°°°°°

    தமிழா! தமிழா!! நீ இதுவரை
    அடிமைப்பட்டது போதும்! நீ
    அவதிப்பட்டது போதும்! போதும்!!
    அச்சப்பட்டது போதும்! நீ
    அறியாமைப்பட்டது போதும்! போதும்!!

    உன்னுள் ஓடும் குருதியனைத்தும்
    உறிஞ்சப்பட்டது போதும்! வலிகள் உன்னால்
    உணரப்பட்டது போதும்! போதும்!! நீ என்றுமே
    நசுக்கப்பட்டது போதும்!
    நலிவுபட்டது போதும்! போதும்!!

    சாதிமதச் சாக்கடையால் கண்கள்
    கட்டப்பட்டது போதும்! தலைகள்
    வெட்டப்பட்டது போதும்!போதும்!! கரங்களிரண்டும்
    கறைப்பட்டது போதும்! கீழோனென்று உன்னால்
    வெறுக்கப்பட்டது போதும்! போதும்!!

    மீனவச்சொந்தம் மாற்றானால்
    கொல்லப்பட்டது போதும்!
    கொடுமைப்பட்டது போதும்! போதும்!!
    விரட்டப்பட்டது போதும்!
    வஞ்சிக்கப்பட்டது போதும்! போதும்!!

    சொந்த மண்ணில் நீ
    சுட்டு வீழ்த்தப்பட்டது போதும்!
    சுரண்டப்பட்டது போதும்! போதும்!!
    சிதைக்கப்பட்டது போதும்! நாடின்றி
    சிதறப்பட்டது போதும்! போதும்!!

    இதுவரையும் தமிழா நீ
    ஒடுக்கப்பட்டத் தளையறுக்க
    விடுக்கப்பட்ட கோரிக்கைகட்கு செவி
    மடுக்கப்படாத நிலையெண்ணி
    வருத்தப்பட்டது போதும்! போதும்!!

    இனியேனும்
    தமிழன் என்ற உணர்வு கொண்டு
    தரணியெங்கும் தலை நிமிர்ந்து
    ஒன்றுபடுவாய் தமிழா! தமிழா!!
    துன்பப்பட்டது போதும் தமிழா! எதையும்
    வென்றெடுப்பாய் தமிழா! தமிழா!!

    – ஆ.செந்தில் குமார்.

    Share