தூக்கும் பாவும்: சிறப்பும் பொதுவும்

0

– முனைவர் ம.பிரபாகரன்

யாப்பிலக்கண வரலாற்றில் முதன்முதலில் யாப்பருங்கல விருத்தியுரை, சங்கயாப்புடையார்,  செப்பலோசை ஏந்திசைச் செப்பல், தூங்கிசைச் செப்பல், ஒழுகிசைச் செப்பல் என்று மூன்று வகைப்படும் என்று கூறுவதாகக்  கூறுகிறது.  இது குறித்த சங்க யாப்பு சூத்திரங்களாவது:
                   “வெண்சீர் வெண்டளை யான்வரும் யாப்பை
                      ஏந்திசைச் செப்பல் என்மனார் புலவர் 

                       இயற்சீர் வெண்டளை யான்வரும் யாப்பைத்
                      தூங்கிசைச் செப்பல் என்மனார் புலவர்     

                     வெண்சீர் ஒன்றலும் இயற்சீர் விகற்பமும்
                     ஒன்றிய பாட்டே ஒழுகிசைச் செப்பல்

 என்றார் சங்க யாப்புடையார். (பக். 227, யாப்பருங்கலம் விருத்தியுரையுடன், இரா.இளங்குமரன் பதிப்பு, கழகம், சென்னை: 1976)  இவ்விடத்தில்  ஓசை தொடர்பாகச் சில செய்திகள் விவாதிக்கப்படவேண்டியுள்ளது. இவ்விவாதமே இக்கட்டுரையின் பொருளாகிறது.  ஏந்திசைச் செப்பல் முதலான ஓசைகள் தளை அடிப்படையில் அமைந்தவை. இவ்வோசை குறித்த செய்திகளை யாப்பருங்கலம் தளை ஓத்தில் அமைக்காமல் செய்யுளியலில் எடுத்துக் கூறியுள்ளது. இதற்கு உரைவரைந்த யாப்பருங்கல விருத்தியுரைகாரரும் இந்த ஏந்திசை முதலான ஓசைகளைத் தளை ஓத்தில் சிறிதும்  குறிப்பிடாமல் செய்யுளியலில் வைத்தே விளக்குகிறார்.  எழுத்தோத்தில் உறுப்புக்களைத் தொகுத்துக் கூறும்போது அமிதசாகரர், 

      ”எழுத்தசை சீர்தளை அடிதொடை தூக்கோடு
       இழுக்கா நடைய தியாப்பென மொழிப (சூ.1)   என்று கூறுவார்.  இச்சூத்திரத்தில் கூறியவற்றுள்ளுள் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை ஆகியவற்றிற்கு முறையே எழுத்தோத்து, அசையோத்து, தளையோத்து, அடியோத்து, தொடையோத்து என்று தனித்தனி ஓத்து அமைக்கும் அமுதசாகரர் ஏன் தூக்கு என்னும் உறுப்பிற்கு தூக்கோத்து என்று தனி ஓத்து அமைக்கவில்லை என்பது இத்தொடர்பில் எழும் மற்றொரு வினாவாகும். தளையைக் கூறும் இடத்திலேயே ஓசையைக் கூறுவது பொருத்தமானதாகும். தளையோத்தில் ஓசையை விளக்காததற்குக் காரணம் என்ன? என்ற கேள்வி எழும்பினால்   தூக்கு என்ற ஓர் உறுப்புக் கூறியுள்ளதால் தூக்கோத்தில் ஓசையை விளக்குவார் என்று சமாதானம் கூறிக்கொள்ளலாம். ஆனால் தூக்கோத்து என்று  ஒரு ஓத்தே நூலில் இல்லை. அப்படியெனில் அமிதசாகரர் ஏன் தூக்கை செய்யுள் உறுப்பில் ஒன்றாகக் கூறினார்?

நிற்க. யாப்பருங்கலத்தை எழுதிய அமிதசாகரர்தான் யாப்பருங்கலக் காரிகையையும் எழுதியுள்ளார். அந்நூலில் அவர் எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை என்ற ஆறு உறுப்புக்களையே கூறியுள்ளார். அமிதசாகரிடம் ஏன் இந்த மாற்றம் காணப்படுகிறது? யாப்பருங்கலத்தில் செய்யுள் உறுப்பு எழுத்து முதலாக தூக்கு ஈறாகக் மொத்தம் ஏழு உறுப்புக்களைக் கூறும் அமிதசாகரர் யாப்பருங்கலக்காரிகையில் ஏன் எழுத்து முதலாக தொடை ஈறாக ஆறு உறுப்புக்களையே கூறுகிறார்?  அவர் ஏன் இப்படி குழப்புகிறார்? உண்மையில் அவர் குழப்பவில்லை. யாப்பருங்கலத்தில் அவர் செய்யுள் உறுப்புக்களுள் தூக்கை ஒன்றாகக் கொண்டதற்குக் காரணம்  நற்றத்தனாரும், பல்காயனாரும் தூக்கை ஓர் உறுப்பாகக் கூறியுள்ளதனால் ஆகலாம். யாப்பருங்கல விருத்தியின் மூலம் அறிய வரும் இது குறித்த இவ்விருவரின் சூத்திரங்களாவன:

             ”யாப்பெனப் படுவ தியாதென வினவின்
               தூக்கும் தொடையும் அடியுமிம் மூன்றும்
       நோக்கிற் றென்ப நுணங்கி யோரே”   என்றார் நற்றத்தனார்.

             ”இமிழ்கடல் வரைப்பின் எல்லையின் வழாஅத்
               தமிழியல் வரைப்பில் தானினிது விளங்கி
               யாப்பியல் தானே யாப்புற விரிப்பின்
              எழுத்தசை சீர்தளை அடிதொடை தூக்கோடு
              இழுக்கா மரபின் இவற்றொடு பிறவும்
              ஒழுக்கல் வேண்டும் உணர்ந்திசி னோரே என்றார் பல்காயனார். (பக். 16, 17; மேலது)

 மேலே கண்ட  இருசூத்திரங்களில் தூக்கு ஓர் உறுப்பாகக் கொள்ளப்பட்டிருப்பினும் இரண்டாவது சூத்திரமான பல்காயனாரின் உறுப்புக் கோட்பாடே யாப்பருங்கலத்தோடு ஒத்து அமைகிறது. ஏனெனில் பல்காயனாரே எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, தூக்கு என்ற ஏழ் உறுப்புக்களையும் கூறுகிறார். இவ்வேழு உறுப்புக்களும்தான் யாப்பருங்கலத்திலும் கூறப்பெற்றுள்ளது. இத்தொடர்பில் பல்காயனாரை அமிதசாகரர் பின்பற்றினாரா? அல்லது அமிதசாகரைப் பல்காயனார் பின்பற்றினாரா?.  யாப்பருங்கலம் 10-ஆம்  நூற்றாண்டைச் சார்ந்தது; ஆனால் யாப்பருங்கல விருத்தியுரை 11-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சார்ந்தது  என்பதால் இவ்வுரையில் எடுத்துக்காட்டபெற்றுள்ள நற்றத்தனார், பல்காயனார் ஆகியோர் சூத்திரங்கள் யாப்பருங்கலத்திற்குப் பின்னரும் எழுதப்பட்டிருக்க வாய்ப்புண்டு. அல்லது யாப்பருங்கலத்திற்கு முன்னரும் எழுதப்பட்டிருக்கலாம்; அல்லது யாப்பருங்கலத்தாரும், பல்காயனாரும், நற்றத்தனாரும் சமகாலத்தைச் சேர்ந்தவராகவும் இருக்க வாய்ப்புண்டு. அங்ஙனம்  அமிதசாகரரும் பல்காயனாரும் சமகாலத்தவராக (நற்றத்தனார் குறித்து தனியே விவாதிக்கிறோம்) இருந்தவர்களாக நாம் கொண்டால் இவர்கள் இருவரும்  தூக்கையும் சேர்த்து யாப்பு  உறுப்புக்கள் ஏழு என்று வேறு ஏதேனும் பொதுமூலத்தைப் பின்பற்றிக்  கூறிருக்கலாம்.

நற்றத்தனாரைப் பொறுத்தவரை தூக்கு, தொடை, அடி ஆகிய மூன்றிற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கிறார். இதில் தூக்கு என்ற உறுப்பை அவர் முதலில் வைத்துக் கூறுவதைக் கவனிக்க. தூக்கு என்னும் உறுப்பிற்கு முதன்மை கொடுத்து முதலில் நூல் இயற்றியவர் நற்றத்தனாரா? அல்லது அவர் வேறு ஏதேனும் ஒரு மூலநூலை பின்பற்றிக் கூறினாரா? யாப்பருங்கல விருத்தி தரும் சூத்திரங்களை மட்டும்  வைத்துக்கொண்டு நம்மால் இவற்றையெல்லாம் உறுதியாகக் கூற இயலாது. அமிதசாகரர் தூக்கை நற்றத்தனார், பல்காயனார் ஆகியோரைப் பின்பற்றித்தான் யாப்பு உறுப்பாகக் கூறினாரா? நற்றத்தனார் தூக்கை முதல் உறுப்பாகக் கூறியிருக்க ஏன் அமிதசாகரர் பல்காயத்தைப் போலத் தூக்கைக் கடைசி உறுப்பாகக் கொள்கிறார்? எங்கனமாயினும் தூக்கை ஓர் உறுப்பாக அமைத்துக் கொள்வதில் அமிதசாகருக்கு நற்றத்தம் ஓர் உந்துதலாக இருந்திருக்கலாம்; அல்லது யாப்பருங்கலம் நற்றத்ததிற்கு உந்துதலாக இருந்திருக்கலாம். ஆனால் தூக்கையும் சேர்த்து யாப்பு உறுப்புக்கள் ஏழு என்று கூறுவதில் யாப்பருங்கலம் பல்காயத்தையே பின்பற்றுகிறது அல்லது பல்காயம் யாப்பருங்கலத்தையே பின்பற்றுகிறது. ஆக இங்கு நமக்கு எழும் சிறிய குழப்பம் பல்காயம் முந்தையதா? யாப்பருங்கலம் முந்தையதா? (நற்றத்தம் முந்தையதா?) என்பதாகும். பல்காயம் முந்தையது என்று ஒத்துக்கொண்டு ஆய்ந்தால் நாம் யாப்பருங்கலத்திற்குப் பதிலாக பல்காயத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தூக்கு பற்றிய ஆராய்ச்சியை நடத்தலாமே? என்ற கேள்வி எழும். யாப்பருங்கலம்தான் முந்தையது  என்றால் யாப்பருங்கலத்தை அடிப்படையாகக் கொண்டு இத்தூக்கு குறித்த ஆராய்ச்சியை நடத்தலாம். ஏனென்றால் காலநோக்கில் தூக்கையும் சேர்த்து ஏழு உறுப்புகள் என்று கூறும் முதல் நூல் எது என்பதே முக்கியமானது. ஏனெனில் அம்முதல் நூலே இவ்வுறுப்புக் கோட்டை முதன்முதலில் உருவாக்கியிருக்கும். இது ஒரு பக்கம் இருக்க இக்கட்டுரை தூக்கு பற்றியதாக இருப்பதால் நற்றத்ததையும் நாம் பரிசீலிக்க வேண்டியுள்ளது. தூக்கைக் கடைசி உறுப்பாகச் சேர்த்து பல்காயமும், யாப்பருங்கலமும் கூறுகின்றன என்பது முக்கியமானததுதான். ஆனால் தூக்கை முதல் உறுப்பாகக் கூறும் நற்றத்தம் இவ்விரு நூல்களைவிட முதன்மை பெறுகிறது என்பதில்  ஐயமில்லை.  நற்றத்தம் யாப்பருங்கலத்திற்கு முன்னரோ அல்லது பின்னரோ அமைய வாய்ப்புண்டு என்பதை முன்னர் பார்த்தோம். எனினும் யாப்பருங்கலத் தூக்குக் கோட்பாட்டைக் கணிப்பதில் நற்றத்தம் துணைமைச் சான்றாகவே நமக்குப் பயன்படும். நாம்  தூக்கு பற்றிய இந்த ஆராய்ச்சியை யாப்பருங்கலத்தை அடிப்படையாகக் கொண்டே செய்கிறோம். ஏனெனில் பல்காயம் யாப்பருங்கலத்தை விட முந்தையது; யாப்பருங்கலம் அதைப் பின்பற்றியது என்ற ஒரு வாய்ப்பை (Possibility) நாம் ஏற்றுக்கொண்டு ஏன் பல்காயம் தூக்கை ஏழு உறுப்புக்களில் ஒன்றாகக் கூறிவிட்டு, அதை விளக்க தூக்கோத்து என்ற ஒன்று அமைக்காமல் செய்யுளியலில் வைத்து விளக்குகிறது? என்று ஆராய்ச்சி செய்ய முடியாது. ஏனெனில் பல்காயம் நமக்கு முழுமையாகக் கிடைக்கவில்லை. அது எழுத்து, அசை, சீர், தளை, அடி, தொடை, தூக்கு என்ற ஏழு உறுப்புக்களைக்  கூறியுள்ளமை மட்டுமே நம்மால் அறிய முடிகிறது. அந்நூலில் யாப்பருங்கலத்தைப் போல எழுத்தோத்து, அசையோத்து, சீரோத்து, தளையோத்து, அடியோத்து முதலியவையும், இயல்களும் அமைந்திருந்ததா என்று அறிய முடியவில்லை. எனவே நாம் பல்காயத்தை அடிப்படையாக வைத்து இவ்வாராய்ச்சியை செய்ய இயலாது. பல்காயமும், யாப்பருங்கலமும் தூக்கை விளக்குவதில்  ஒரு பொது மூலத்தைப் பின்பற்றியுள்ளன என்ற வாய்ப்பை நாம் ஏற்றுக் கொண்டாலும் பல்காயத்திற்கு நாம் எழுப்பிய கேள்விகள் பெரும்பாலும் அந்தப் பொது மூலத்திற்கும் பொருந்துகிறது அதாவது  அந்தப் பொது மூலம் எது? அவற்றில் எத்தனை இயல்கள் அமைந்திருந்தன? என்பன  போன்ற பிரச்சனைகள் வரும். பல்காயத்திற்காவது சூத்திரங்கள் கிடைக்கின்றன. ஆனால் நாம் ஊகம் செய்த பொது மூலத்தைப் பற்றி எந்தத் தகவலும் தெரியவில்லை. எனவே நாம் தூக்குப் பற்றிய ஆராய்ச்சியை நமக்கு கிடைக்கும் யாப்பருங்கலத்தில் இருந்துதான் செய்ய வேண்டியிருக்கிறது; செய்ய முடிகிறது.   யாப்பருங்கலத்தை அடிப்படையாகக் கொண்டு நாம் இந்த ஆராய்ச்சியை செய்தாலும், தூக்குப் பற்றிய யாப்பருங்கலத்தின் சிந்தனை- பல்காயம் யாப்பருங்கலத்தை விட முந்தையது அல்லது இரண்டும் ஒரு பொது மூலத்தைப் பின்பற்றியுள்ளன என்ற வாய்ப்புக்களின் நோக்கில்-   பல்காயத்தின் சிந்தனையையோ அல்லது நாம் கருதிய  பொது மூலத்தின் சிந்தனையையோ  மீட்டுருவாக்கப் பயன்படும் என்று நாம் கருதுகிறோம்.

யாப்பருங்கலமே தூக்கு பற்றிய இச்சிந்தனையை முதலில் கூறியது என்ற வாய்ப்பை நாம் ஏற்றுகொண்டாலும் தூக்கு குறித்த யாப்பருங்கல மரபின் நுட்பமான சிந்தனைகளை நாம் அறிந்து கொள்ளமுடியும். எனவே நாம் விரும்பினாலும் விரும்பாவிடிலும் யாப்பருங்கலத்தை அடிப்படையாகக் கொண்டே அதாவது யாப்பருங்கலத்தை முதல் நூலாகக் கொண்டே இவ்வாராய்ச்சியைச் செய்ய வேண்டியிருக்கிறது; செய்கிறோம்.

யாப்பருங்கலத்தில்  ‘தூக்கை’ச் செய்யுள் உறுப்பாகக் கூறும் அமிதசாகரர்  அதை ஏன் செய்யுளியலில் விளக்குகிறார் என்பதை  யாப்பருங்கல விருத்தியுரைகாரர் எழுத்தோத்து உரையில் தரும், (இக்கட்டுரையில் முன்னர் கண்ட   ஆசிரியர்களான)   நற்றத்தனார், பல்காயனார் ஆகியோரின்   சூத்திரங்கள்  உணர்த்துகின்றன:

தூக்கு எனினும் பாட்டு எனினும் ‘ பா ‘ எனினும் ஒக்கும்.

                  ”தூக்கு பாட்டும் பாவும் ஒன்றென
                    நோக்கிற் றென்ப நுணங்கி யோரே  என்றார் பல்காயனார் ஆகலானும்,

                 ” பாவென மொழியினும் தூக்கினது பெயரே   என்றார் நற்றத்தனார் ஆகலானும் எனக் கொள்க. (பக். 17,18; மேலது)

இங்கு தூக்கு எனினும் பா எனினும் ஒக்கும் என்று விருத்தியுரைகாரர் பல்காயனார் மற்றும் நற்றத்தனார் ஆகியோரது சூத்திரங்களை எடுத்துக்காட்டி விளக்குவதைக் காண்க. எனவே அமிதசாகரர் தூக்கை ஒரு செய்யுளுறுப்பாக எடுத்துக்கூறியிருந்தாலும்  தூக்கு என்பது பாவே என்பதனால் தூக்கோத்து என்று ஒரு தனி இயல் அமைக்காமல் ‘ பா ‘வை விளக்கும் செய்யுளியலிலேயே தூக்கையும் அதாவது பாக்களுடைய ஓசையையும் விளக்குகிறார் என்று கொள்ள வேண்டும். இத்தொடர்பில் எழும் மற்றொரு கேள்வி  தூக்கைச் செய்யுளுறுப்பாக விளக்காமலேயே அதைச் செய்யுளியலில்  விளக்கியிருக்கலாமே? என்பதாகும்.  விளக்கியிருக்கலாம்.  ஆனால் செய்யுளில் ஓசை என்பது மிகவும் முக்கியமானதாகையால் அதன் முக்கியத்துவத்தைக் காட்ட முன்னோர்களைப் பின்பற்றி அமிதசாகரர் தூக்கைச் செய்யுள் உறுப்புகளுள் ஒன்றாகச் சுட்டிக்காட்டினார் எனலாம்.

யாப்பருங்கலத்திற்குப் பிறகு யாப்பருங்கலக்காரிகையை எழுதும்போது செய்யுள் உறுப்புக்களில் ஒன்றாகச் சுட்டாததற்கு காரணம் என்ன? என்ற கேள்வியும் இத்துடன் எழும். அமிதசாகரர்  ஏற்கெனவே யாப்பருங்கலத்தில் தூக்கை ஓர் உறுப்பாகக் கூறிவிட்டதால் யாப்பருங்கலக்காரிகையில் அதனை மீட்டும் ஓர் உறுப்பாகக் கூறவேண்டிய அவசியம் இல்லை என்று கருதியிருக்க வேண்டும். அப்படியெனில் எழுத்து முதலான பிற உறுப்புக்களையும் அவர் யாப்பருங்கலக்காரிகையில் விளக்காமல் விட்டிருக்கலாமே என்று ஒருவர் கேட்கலாம். எழுத்து முதலான ஆறு உறுப்புக்களும் தனித்தனி உறுப்புக்கள்; ஓசை என்பது இவை அனைத்தும் சேர்வதால் உருவாவதாகும். அதாவது எழுத்து முதலானவை பகுதிகள் எனில் ஓசை என்பது முழுமையாகும். எனவேதான் அமிதசாகரர்  தூக்கு என்பதைப் பிற உறுப்புக்களைப் போல கொள்ளவில்லை. இதை அறிய அமிதசாகரின் தூக்கு பற்றிய சிந்தனையின் பரிணாம வளர்ச்சியை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

யாப்பருங்கல முதற்சூத்திரத்தில், தூக்கு என்பது மற்ற உறுப்புக்களைப் போலாது ஓசையின் முழுமை நோக்கிய ஒன்றாக  இருப்பதால்  முக்கியத்துவம் உணர்த்தப்பட வேண்டும் என்று கருதிய அமிதசாகரர் தூக்கை ஓர் உறுப்பாக அறிவிக்கிறார்.  பாவே ஓசையாக இருப்பதால் தனி உறுப்பாக கூற வேண்டிய அவசியம் இல்லை  என்று அவர்  நினைத்திருந்தாலும் எல்லா பாக்களது ஓசையும் ஒரே ஓசை அன்று. எனவே பொதுவாகத் தூக்கைப் பா என்று கூறினாலும் அது வேறுபாட்டைத் தம்முள் அடக்கியதாகும். எனவே சிறப்புநிலையில் தூக்கு பாக்களுக்கு எவ்வளவு இன்றியமையாதது என்பதை அறிவுறுத்த தூக்கை முதலில் உறுப்பாகக் கூறுகிறார். இது அவரின் முதல்நிலை. அடுத்து,  தூக்கோத்து அமைத்தாலும் செய்யுளியலில் மீண்டும் அவற்றைக் கூறவேண்டிய நிலை ஏற்படும்; எனவே இது கூறியது கூறல் என்னும் குற்றத்தின் பாற்படும். எனவே தூக்கோத்தைத் தன் நூலில் ஒரு தனி இயலாக அமைப்பதைத் தவிர்க்கிறார். இது இரண்டாம் நிலை. மூன்றாவது யாப்பருங்கலக்காரிகையை எழுதும்போது யாப்பருங்கலத்தின் பயிற்றுமுறைக்கும்  யாப்பருங்கலக்காரிகையின் பயிற்றுமுறைக்கும் இடையேயுள்ள  வேற்றுமையினாலும் அதாவது   யாப்பருங்கலக் காரிகை தொன்மை யாப்புநூலில் பயிற்சி இல்லாதவர்களுக்குப் பயிற்சி ஏற்பட  எழுதப்பட்டமையால் அதில்  செய்யுள் உறுப்புக்களில் நுட்பமான  தூக்கை ஒன்றாகக் கூறவேண்டிய தேவையின்மையாலும், அவர்   தூக்கை ஓர் உறுப்பாகக் கூறாமல் விடுவது மூன்றாவது நிலை.  (யாப்பருங்கலம் யாருக்காக எழுதப்பட்டதோ அவர்களிருந்தும், யாப்பருங்கலக் காரிகை படித்த மாணவர்கள் வேறானவர்கள்  அதாவது யாப்பருங்கலம் யாப்பு தொடர்பான ஆராய்ச்சி மாணவர்களுக்கும், யாப்பருங்கலக்காரிகை யாப்பு தொடர்பான தொடக்கநிலை மாணவர்களுக்கும் எழுதப்பட்டிருக்க வேண்டும்). இதை நாம் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும்.  இத் தொடர்பில்  யாப்பருங்கலத்தில் விளக்கப்பட்டு யாப்பருங்கலக்காரிகையில் விளக்கப்பாடாத கூறுகள் எவை எவை என்பதும் யாப்பருங்கலத்தின் விளக்குமுறையும் யாப்பருங்கலக்காரிகையின் விளக்குமுறையும் எத்தன்மையன என்பதும்  ஒப்பிட்டு  விளக்கப்பட வேண்டியதாகவும் உள்ளது. இது வேறொரு கட்டுரைக்கான செய்தி ஆதலால் இதை இங்கு விரிவாகச் செய்ய முடியாது. எனினும் இங்கு   யாப்பருங்கலத்தையும், யாப்பருங்கலக்காரிகையையும்  ஒப்பிட்டு ஓர் உதாரணத்தை மட்டும்  சுட்டிக்காட்டமுடியும். அமிதசாகரர் யாப்பருங்கலக் காரிகையில்  முதற்காரிகையில்  அசைக்கு உறுப்பாகும் 13 எழுத்துக்களை மட்டும் சுட்டிக்காட்டிவிட்டு அடுத்து அசைகளின் வகைகளாகிய நேரசை, நிரையசை ஆகியவற்றை விளக்கச் சென்றுவிடுகிறார். ஆனால் அவர் யாப்பருங்கலத்தில் அப்படி அசைக்கு உறுப்பாகும் எழுத்துக்களின் எண்ணிக்கையை மட்டும் கூறிவிட்டு அசைகளை விளக்கச் சென்று விடாமல்  சில எழுத்துகளுக்குரிய சிறப்புவிதிகளையும் கூறுகிறார். இதை யாப்பருங்கலக்காரிகை, யாப்பருங்கலம் ஆகியவற்றின் எழுத்துக்கள் குறித்த காரிகையையும் சூத்திரங்களையும் எடுத்துக்காட்டுவதின் வழி தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்:

யாப்பருங்கலக் காரிகை:

குறினெடி லாவி குறுகிய மூவுயி ராய்தமெய்யே              மறுவறு மூவின மைதீ ருயிர்மெய் மதிமருட்டுஞ்           சிறுநுதற் பேரமர்க் கட்செய்ய வாயைய நுண்ணிடையாய்
அறிஞ ருரைத்த வளபு மசைக்குறுப் பாவனவே (கா.4)

இங்கு அசைக்கு உறுப்பாக மொத்தம் 13 எழுத்துக்கள் கூறப்பெற்றிருப்பதைக் காண்க. எழுத்துக்களின் விளக்கம்  பற்றிய சூத்திரம் யாப்பருங்கலக்காரிகையில்  இது ஒன்றே ஆகும்.

யாப்பருங்கலம்:

                    உயிரே மெய்யே உயிர்மெய் யென்றா
                    குறிலே நெடிலே அளபெடை யென்றா
                    வன்மை மென்மை இடைமை யென்றா
                   சார்பில் தோன்றும் தன்மைய வென்றா
                   ஐஒள மகரக் குறுக்கம் என்றாங்கு
                   ஐம்மூ வெழுத்தும் ஆம்அசைக் குறுப்பே (சூத்.2)

இங்கு அசைக்கு உறுப்பாக 15 எழுத்துக்கள் கூறப்பெற்றிருப்பதைக் காண்க. இச்சூத்திரம் யாப்பருங்கலக்காரிகையைப் போல அசைக்கு உறுப்பாக உள்ள எழுத்துக்களைத் தொகுத்துகூறும் சூத்திரம் ஆகும். இதற்குப் பிறகு  யாப்பருங்கலம்  சில எழுத்துக்களின் சிறப்பு விதிகளை மேலும் இரண்டு சூத்திரத்தில் கூறுகிறது:

                 தனிநிலை ஒற்றிவை தாமல  கிலவே
                 அளபெடை அல்லாக் காலை யான (சூத். 3)

                 தளைசீர் வண்ணம் தாம்கெட வரினே
                குறுகிய இகரமும் குற்றிய லுகரமும்
               அளபெடை ஆவியும் அலகியல் பிலவே (சூத்.4)

இவ்விரு சூத்திரச் செய்திகளும் யாப்பருங்கலக் காரிகையில் இல்லாததை கண்டு கொள்ள முடிகிறது. இதற்கான காரணம் மேலே விளக்கப்பெற்றது.  நாம் மேலே காட்டியுள்ளமை போன்று  யாப்பருங்கலத்தில் வரும்  அனைத்து இயல்களையும் யாப்பருங்கலக் காரிகையில் உள்ள இயல்களோடு  ஒப்பிட்டுக் காண வேண்டியது முக்கிய தேவையாகும்.

தூக்கு, பாதொல்காப்பியம், யாப்பருங்கல மரபு ஒப்பீடு:

 தொல்காப்பியத்தில் தூக்கு என்பதும் பா என்பதும் தனித்தனி உறுப்புக்களாகச் சுட்டபெற்றிருக்க, யாப்பருங்கலத்தில் பா என்பதை விடுத்து தூக்கை மட்டும் உறுப்பாக ஏன் அமிதசாகரர் கொண்டிருக்கிறார்? என்பதும் இத்தொடர்பில் முக்கியத்துவம் பெறும் வினாவாகும். தூக்கு குறித்தும் பா குறித்தும் தொல்காப்பியத்தில் என்ன கூறப்பெற்றுள்ளது என்பதை முதலில் அறிந்து கொள்வோம்:

                அகவ லென்ப தாசிரிய யம்மே (செய். சூத். 79)
                அஃதன் றென்ப வெண்பா யாப்பே  (80)
              துள்ளலோசை கலியென மொழிப     (81)
                 தூங்க லோசை வஞ்சி யாகும்          (82)
                 மருட்பா வேனை யிருசா ரல்லது
                தானிது வென்னுந் தன்மை யின்றே  (83)
               அவ்வியல் பல்லது பாட்டாங்குக் கிளவார் (84)
              தூக்கியல் வகையே யாங்கென மொழிப ( 85)

            மேற்கண்ட நூற்பாக்கள் தூக்கு பற்றிய தொல்காப்பிய நூற்பாக்கள். தொல்காப்பியம் தூக்கு என்பதற்கு எந்த விளக்கத்தையும் தரவில்லை. மேலேகண்ட வண்ணம் தூக்கு என்பதன் வகைகளையே தருகிறது. அதாவது ஆசிரியத்திற்கு அகவல் ஓசை; வெண்பாவிற்கு அகவல் அல்லாத ஓசை; கலிக்குத்துள்ளலோசை; வஞ்சிக்குத் தூங்கலோசை; மருட்பாவிற்கு ஆசிரியம், வெண்பா ஆகியவற்றின் கலப்பு ஓசையே யன்றி அதற்கென்று தனித்த ஓசை இல்லை; இதோடு கூட  இவ்வோசைகள் இல்லாமல் பாட்டினை யாரும் கூற மாட்டார்கள் என்ற ஒரு கூடுதல் குறிப்பினையும் (84) தொல்காப்பியம் தருகிறது. தூக்கு என்பதற்கு ஏன் தொல்காப்பியம் வரையறை தரவில்லை. அப்படித் தராமல் ஏன் தூக்கின் வகைகளை மட்டும் கூறிச் செல்கிறது? இது குறித்து,  பா என்பதற்கு தொல்காப்பியம் என்ன விளக்கம் தருகிறது என்பதைப் பார்த்துவிட்டு அவ்விளக்கத்தையும் உட்படுத்தி விவாதிப்போம்; பா குறித்து தொல்காப்பியம் என்ன கூறுகிறது?:

தொல்காப்பியம்,

ஆசிரியம் வஞ்சி வெண்பாக் கலியென
 நாலியற் றென்ப பாவகை விரியே (செய். 103)

என்று நான்குவகைப் பாக்களின் விரியைக் கூறிவிட்டு,
பாக்களின் பொருண்மை பற்றி அடுத்த சூத்திரத்தில்,

அந்நிலை மருங்கின் னறமுத லாகிய                         மும்முதற் பொருட் முரிய வென்ப (104)

                    என்று கூறுகிறது. அடுத்த இரு சூத்திரங்களில் விரித்துக் கூறிய பாவகையை தொகுத்துக் கூறுகிறது:

              பாவிரி மருங்கினைப் பண்புறத் தொகுப்பின்                        ஆசிரி யப்பா வெண்பா வென்றாங்கு                                        ஆயிரு பாவினு ளடங்கு மென்ப ” (105)                                  ஆசிரிய நடைத்தே வஞ்சி யேனை
            வெண்பா நடைத்தே கலியென  மொழிப ( 106)

இதற்கடுத்தடுத்த  சூத்திரங்கள் பாக்களின் பொருண்மைகுறித்துப் பேசி செல்கின்றன. தூக்கிற்கு எழுப்பிய அதே வினாவை நாம் பாவிற்கும் எழுப்ப வேண்டியதிருக்கிறது: ஏன் தூக்கினைப் போல் தொல்காப்பியம் பாவிற்கும் விளக்கம் தராமல் பாவின் விரியையும், தொகையையும் தருகிறது. தொல்காப்பியர் தூக்கு என்பதற்கும் பா என்பதற்கும் இடையே என்ன வித்தியாசத்தைக் காட்டுகிறார்? தூக்கு என்பதையும் பா என்பதையும் ஏன் தனித்தனி உறுப்பாகக் காட்டினார்? ஏனெனில்  தொல்காப்பியர் செய்யுட்களில்  ஓசைகளின் வேறுபாட்டைத் அதாவது செய்யுளின் ஓசைகளைச் சிறப்புத்தன்மையில் குறிக்கத் தூக்கு என்பதையும் பொதுத் தன்மையில்  குறிக்கப் பா என்பதையும் பயன்படுத்துகிறார்.  அதாவது அகவல், அகவல் அல்லாதவை, துள்ளல், தூங்கல் ஆகிய ஓசையின் வெவ்வேறு வகைகளைத்  தனித்தனியே சுட்ட  தூக்கு என்ற உறுப்பைப் படைக்கிறார்; இதனையே நாம்  ”சிறப்பு நிலை” என்கிறோம். ஓசைகளை அகவல் முதலிய தனித்தன்மை கொண்டல்லாமல் அதாவது சிறப்புநிலையில் சுட்டாமல்  ஓசையின் வெவ்வேறு வகைகளின் மொத்தத்துவத்தைக் குறிக்க  ஆசிரியம், வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்ற பெயர்களைக் கையாள்கிறார்  . இதை நாம் ”பொதுநிலை” என்று கூறுகிறோம்.   தூக்கு ஓசையின் தனித்தன்மையை அறிவுறுத்த உருவாக்கப்பட்டுள்ளது என்பதையும், பா செய்யுளின் மொத்தத் தன்மையை அறிவுறுத்த படைக்கப்பட்டது என்பதையும்  பேராசிரியர் தரும் விளக்கங்கள் மூலம் இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. அவர் கூறுவதாவது:

 தூக்கு:

 அகவலோசைக்கண் தூக்குவருங்கால் இருசீர் முதலா எண்சீர்காறும் பரந்துபட்ட அகவலோசையை நாற்சீர்க்கண்ணே துணித்துக்கொள்ள, அஃது ஆசிரியத் தூக்காமென்றவாறு. இருசீரால் துணிப்ப ஆசிரிய வோசையாகாது; முச்சீரால் துணிப்பினும் ஆசிரியவோசையாம்; என்னை? ஈற்றயலடி முச்சீர்த்தாமெனவும் இடையும் வரையாரெனவும் கூறினமையின் அஃதேல் அடிவகையானே அறுதியுணர்த்துமாகலின் தூக்கு எவன் செய்யுமெனின் – அவ்வடியினையுந் தூக்கானன்றி உணர்த்தலாகாது; என்னை? இருசீர் முதலாகப் பலசீர் தொடர்ந்த வழித் தூக்கு அறுப்புக்கொண்டன்றி இத்துணைச்சீர்கொண்ட அடி இஃதென்பது அறியலாகாமையின். அல்லதூஉம், ஆசிரியத்துள் எண்சீர் தொடர்ந்தும் பாச்சென்றவழி அதற்கு வருமெனப்பட்ட முச்சீரடியும் ஐஞ்சீரடியுமாகாது நாற்சீரடி இரண்டென்று அறிதற்குக் கருவி தூக்கென்பது கொள்க. அல்லாக்கால் 

         உள்ளார் கொல்லோ தோழி முள்ளுடை
         யலங்குகுலை யிந்தின் சிலம்பிபொதி செங்காய்

என்றவழி, ‘ உள்ளார்’, ‘ முள்ளுடை ‘ என்பன அடியெதுகையாக முச்சீரடியும் ஐஞ்சீரடியு மெனக்கொண்டு மயக்கமாமென்பது.

   நரந்த நாறுந் தன்கையாற்
   புலவுநாறு மென்றலை தைவரு மன்னே

    என்றவழி, எண்சீரான் இரண்டு நாற்சீரடி வந்தனவென்று கோடுமன்றே தூக்கின்றாயினென்பது (பக். 379, சி.கணேசய்யர் பதிப்பு, தொல்காப்பியம் செய்யுளியல் பேராசிரியர் உரை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை: 2007)

 இங்குப் பேராசிரியர் குறிப்பிடும் துணித்தல் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அடிகளைத் துணித்து நிறுத்துதல் என்பது பாக்களின் ஓசைக்கு மிகவும் இன்றியமையாதது. அடிகளைத் துணித்து நிறுத்துவதன் மூலமே குறிப்பிட்ட ஓசைகளைப் பெற முடியும் என்று பேராசிரியர் மேலே கண்ட பகுதியில் கூறுவது ஓசையின் சிறப்பு நிலையைக் குறிப்பதாகும். எண்சீர் தொடர்ந்து  அகவற்பா சென்ற வழித் தூக்கு என்ற உறுப்பு இல்லை என்றால் அங்கு ஆசிரிய ஓசையைப் பெற முடியாது.  அங்கு நான்கு சீரில் துணித்து அகவலோசையைப் பெற தூக்கு முக்கியம்.  அடிகளைத் துணித்தல் என்பதே தூக்கின் தனித்தன்மை அல்லது சிறப்புத்தன்மை அதனாலேயே தூக்கு தனி உறுப்பாகத் தொல்காப்பியராலும் நற்றத்தனாராலும், பல்காயனாராலும், யாப்பருங்கலத்தாராலும் கருதப்பட்டது. எனினும் பின்னால் நற்றத்தனாரும் பல்காயனாரும் தூக்கும் பாவும் என்ற ஒன்றே என்று முரண்படுவதையும் யாப்பருங்கல விருத்தி மூலம் அறிய முடிகிறது. அது ஏற்கெனவே சுட்டிக்காட்டப்பட்டது. 

பா என்பதற்கான பேராசிரியர் விளக்கம்: 

பாவென்பது, சேட்புலத்திருந்த காலத்தும் ஒருவன் எழுத்துஞ் சொல்லும் தெரியாமல் பாடமோதுங்கால் அவன் சொல்லுகின்ற செய்யுளை விகற்பித்து இன்ன செய்யுளென்று உணர்தற்கேதுவாகிய பரந்துபட்டுச் செல்வதோர் ஓசை. (பக்.205; மேலது)

 இவ்விளக்கம் நமக்கு உணர்த்துவது:  சேட்புலத்தில் இருந்தில் இருந்து   ஒருவர் பாடம் ஓதும்போது  அவர் பாடம் ஓதுவது   இன்னச் செய்யுள் என்பதை ஓசையின் மொத்ததுவத்தை வைத்துப்   அதைக் கேட்பவர் புரிந்து கொள்கிறார் . இவ்விளக்கத்தில்   பேராசிரியர் ஓசையின் மொத்தத்துவமாகிய ‘ பா’ வைப் பரந்து பட்டுச் செல்வதோர் ஓசை என்று குறிக்கிறார். இது நாம் ஏற்கெனவே குறிப்பிட்ட ஓசைக்குரிய பொது நிலையாகும்.

இறுதியாக,  தொல்காப்பியர் ஓசையின் சிறப்புத்தன்மையையும், பொதுத்தன்மையையும் விளக்கப் பயன்படுத்திய  உத்தியைத்தான் அமிதசாகரர் தன் யாப்பருங்கல நூலில் பின்பற்றுகிறார். தூக்கும், பாவும் வேறு என்ற சிந்தனையை அவர் தொல்காப்பியர் வழியாகப் பெற்றிருந்தாலும் தூக்கையும் பாவையும் குறிக்க ஏன் இரு சொற்களைப் பயன்படுத்த வேண்டும்? இரண்டையும் இரண்டாகக் கருதி ஏன் தனி விளக்கம் தந்து கொண்டிருக்க வேண்டும்? அதனால் பயன் என்ன? அதனால்  கால விரயம்தான் மிஞ்சும்;  பாக்களைக் கூறும் போதே தூக்கு கிடைக்கும் அதனால் தூக்கிற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை; அதை ஓர் உறுப்பாகவும் குறிக்கத் தேவையில்லை; தூக்கை ஓர் உறுப்பாகக் கூறி யாப்பு உறுப்புக்களின் எண்ணிக்கையைப் பெருக்காமல் தூக்கே பா என்று கூறுவதே சிறந்தது என்ற சிந்தனை வலுபெற்ற காலக்கட்டத்தைச் சார்ந்தவராக அவர் இருந்ததால் அவர் வாழ்ந்த காலகட்டத்தின் தூக்கு பற்றிய தர்க்கத்தையும் புறக்கணிக்க முடியாமலும் அதே நேரத்தில் தூக்கை முற்றிலும் விட முடியாமலும் இரண்டிற்கும் நடுவே ஊஞ்சல் ஆடிய அமிதசாகரரின் தூக்கு பற்றிய சிந்தனையைத்தான் அவரது நூலில் நாம் காண்கிறோம்.  அதாவது தூக்கு ஓர் உறுப்பாகக் குறிக்கப்பட வேண்டும் அதற்கான அறிவியல் அடிப்படையில் அமைந்த நியாயம் அவரை தூக்கைச் செய்யுள் உறுப்புக்களில் ஒன்றாக யாப்பருங்கலத்தில் குறிக்கச் செய்தது; ஆனால் தூக்கு எனினும் பா எனினும் ஒக்கும் என்ற அவரது காலகட்டத்தின் தர்க்கம் அவரை தூக்கிற்கென்று ‘ தூக்கோத்து’ என்ற தனி ஓத்து அமைக்கவிடாமல் தடுத்து, அதனை செய்யுளியலிலேயே விளக்கும்படிச் செய்தது. எனினும் இது ஆய்விற்குரியது.

ஆய்விற்குப் பயன்பட்ட நூல்கள்:

  1. அமிதசாகரர் – யாப்பருங்கலம் விருத்தியுரையுடன் , இரா.இளங்குமரன் பதிப்பு, கழகம், சென்னை: 1976.
  2. அமிதசாகரர் – யாப்பருங்கலக்காரிகை, குணசாகரர் இயற்றிய உரையுடன், உல்ரிக்கே நிகோலஸ் ஆங்கில மொழிபெயர்ப்பு, EFEO, புதுச்சேரி: 1993.
  3. தொல்காப்பிய மூலம் பாடவேற்பாடுகள்: ஆழ்நோக்காய்வு, கே.எம்.வேங்கடசுப்பையா, ச.வே.சுப்பிரமணியன், ப.வெ.நாகராசன், பன்னாட்டுத் திராவிட மொழியியற் பள்ளி, திருவனந்தபுரம்: 1996.

    4. தொல்காப்பியர் – தொல்காப்பியம் செய்யுளியல்
பேராசிரியர் உரை, சி.கணேசய்யர் பதிப்பு,  உலகத்
தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை: 2007

*****

ஆய்வாளர்
பிரெஞ்ச் ஆசியவியல் பள்ளி (EFEO),
புதுச்சேரி.

 

 

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.